அத்தியாயம் - 4
உயிர் கொண்ட ரோஜாவே!
தேன் பூவே பூவே வா தென்றல் தேட…
பூந்தேனே தேனே வா தாகம் கூட..
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்..
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்…
நூறு ராகம் நெஞ்சோடு தான்….
வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்.. என்னை ரசிக்கச் சொல்லித் தூண்டினாலும்.. அந்தத் தென்னந்தோப்பின் நடுவே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த நான், என் கவனம் முழுதையும்.. கையிலிருந்த Motorola c113-ல் மீது பதித்திருந்தேன்.
“ஹலோ… ஹலோ.. பவி.. கேட்குதா?,”
“………………”
“பஸ் ஏறிட்டியா?, எங்க இருக்க நீ இப்போ?”
“……..”
“ஹலோ! ஹலோ! லைன்ல இருக்கியா? எனக்கு சரியாக் கேட்கல”
“இப்போ கேட்குதா?” – உச்சஸ்தாதியில் அவள் குரல் காதைக் கடிக்க..
“ப்ச், எதுக்குக் கத்துற?, காது கிழியுது” – என எரிச்சல் பட்டேன் நான்.
“கேட்கல,கேட்கலன்னு இவ்ளோ நேரமா நீங்க கத்தலயா?”
“சரி, எங்க இருக்க இப்போ?”
“வீட்ல தான்”
“வீட்லயா? என்னடி அசால்ட்டா சொல்ற? எப்போ கிளம்புவ?”
“ப்ச், இப்போதைக்குக் கிளம்ப முடியும்ன்னு தோணல! அப்பா வேற இன்னிக்கு ஃபுல்-ஆ வீட்ல தான் இருப்பேன்னு சொல்லி என் தலைல குண்டைத் தூக்கிப் போட்டுட்டார்”
“ஏய்.. என்ன? விளையாட்றியா?, பார்க்குறதே மாசத்துக்கு ஒரு தடவை தான்! இதுல பாதி நாள் ஏதாது சாக்கு சொல்லி டிமிக்கி கொடுத்துட்ற! என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல?”
“உங்களைத் தான்! அது கூடத் தெரியாமலா.. என்னை லவ் பண்றீங்க?” – நகைப்புடன் அவள் குரல் ஒலிக்க..
“ரொமாண்ட்டிக் டயலாக் பேசுற நேரமாடி இது?” – கடுப்பாகிப் போனது எனக்கு.
“இதுக்கெல்லாம் நேரம்,காலமா பார்க்க முடியும்?, எல்லாம் ஒரு ஃப்ளோ-ல வர்றது தான்!” – இன்னமும் அவள் குரல் சிரிப்புடனே ஒலிக்க..
“பவி..த்..ரா.. கடுப்பேத்தாத” – எனக் கோபம் கொண்டேன் நான்.
“என்ன உங்களை கடுப்பேத்திட்டேன் இப்போ?” – அவளும் குரல் உயர்த்த..
“ப்ச், கோபப்படாதடி! உன் முகத்தைப் பக்கத்துல பார்த்து.. உட்கார்ந்து பேசி.. ஒன்றரை மாசத்துக்கு மேல ஆச்சு தெரியுமா?, தினமும் பஸ்ல பத்து நிமிஷம் தூர நின்னு பேசிக்கிறதோட சரி!, உனக்கு இந்த மாதிரி ஆசை,ஏக்கம்.. எதுவுமே இல்லையா?” – என்ற என் குரல் தன்னாலேயே தழைந்து போனது.
“ஹாஹாஹா….”
“சிரிக்காத!”
“சரி சிரிக்கல! சொல்லுங்க”
“பவி…”
“ம்ம்ம்”
“கன்னத்துல புதுசா பரு வந்திருக்குன்னு நைட் பேசும் போது சொன்னேல?, எனக்கு அதைப் பார்க்கனும்! நேர்ல வா”
“..............”
“என்னை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்குறது தான் வேலையா உனக்கு?” – அவஸ்தையாய் வெளி வந்த என் குரலுக்குப் பதிலாய்..
“என்னால வர முடியாதுன்னு சொன்னா.. என்ன பண்ணுவீங்க?” – என்றாள் அவள்.
“நிஜமா வர மாட்டியா?” – நெஞ்சைக் கவ்விய ஏமாற்றத்துடன்.. அடிக்குரலில் நான் வினவ..
“ப்ச், வரமுடியாதுன்னு சொன்னா.. என்ன பண்ணுவீங்க? பதில் சொல்லுங்க”-என்றாள் அவள்.
“என்னத்தப் பண்றது?, அப்டியே மல்லாக்கப் படுத்து தென்னை மரத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டே… என் பத்தினிப் பெண்ணைக் காணோம்ன்னு என் ஏக்கத்தையெல்லாம் கவிதையா பாடிட்டு.. அந்தி சாயுற நேரம்.. வீட்டைப் பார்த்துப் போக வேண்டியது தான்”
“கோபம் வராதா என் மேல?, வர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டேனேன்னு?”
“ம்ஹ்ம்.. வராது”
“ஏன்?”
“உன் மேல கோபப்பட்டு என்ன ஆகப் போகுது?, நீ காரணமில்லாம வர முடியாதுன்னு சொல்லியிருக்க மாட்ட! இதைக் கூடப் புரிஞ்சுக்கத் தெரியாத ஆளா நான்?, இன்னிக்கு இல்லாட்டி என்ன?, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்! காலம் நிறைய கிடக்கு நமக்கு!”
“அடேங்கப்பா! அவ்ளோ நல்லவனா நீங்க?”
“அது தெரியாது! ஆனா.. நல்ல காதலனா இருக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன்! அது மட்டும் தெரியுது”
“நிஜமாவே நீங்க.. நல்ல காதலன் தான்!” – மெல்லிய அவளது குரல் வெகு அருகில்.. என் முதுகுக்குப் பின்னே ஒலிக்க.. சடாரெனத் திரும்பி நோக்கினேன்.
எனக்கே எனக்கான வெட்கத்தைத் தன் கண்களில் தேக்கியபடி... லேசாகக் கலைந்திருந்தத் தலை முடியோடு… துப்பட்டா காற்றிலாட.. சன்ன சிரிப்புடன்.. ஓவியமாய் நின்றிருந்தாள் அவள்.
கண்டதும்.. கட்டியணைத்துக் கொள்ளத் தோன்றியது!
ஆனாலும் அடக்கமாய் நின்றேன்!
என் பார்வை மாற்றம்.. அவளிடத்தில் என்ன உணர்த்தியதோ.. நெளிந்த புருவங்களுடன் “என்னாச்சு?” என்றாள்.
ஒன்றுமில்லையெனத் தலையாட்டிய என்னிடம்.. அவள் கண்களைச் சுருக்கி, தாடையை உயர்த்தி மீண்டும் என்னவென்று சைகையாய் வினவ..
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிக் குரலை வெளிக் கொணர முயற்சித்த நான்.. “கிட்ட வந்து.. கட்டிக்கனும்ன்னு தோணுது. வரட்டுமா?” – என்றேன்.
அசைவற்று நின்று போன இமைகளுடன் என் முகத்தை ஒரு நொடி நோக்கியவள்.. பின் தன் கண்களிலிருந்துத் தெறித்து விழுந்த வெட்கச் சிதறல்களால்.. அத்தோப்பு முழுவதற்கும் ஒளி கடத்தியபடி.. கூந்தலைச் சாட்டையாய் சுழற்றிய வண்ணம்.. சிரிப்புடன் மறுபுறம் திரும்பி..
“வேண்டாம்! நீங்க அங்கேயே இருங்க” எனக் கூறி.. நகர்ந்து சென்றாள்.
மரத்தடியில் அமர்ந்து கொண்டு தோள்ப்பையைக் கீழே வைத்தவள்.. “நல்லா சொன்னீங்க தோப்புக்கு வழி! வரிசையா தென்னை மரமா இருக்கு, எதுக்குள்ள போறதுன்னே தெரியல எனக்கு! அப்புறம் எதிர்ல வந்த ஒரு பாட்டிக்கிட்ட உங்க சித்தப்பா பேரைச் சொல்லி வழி கேட்டு வந்தேன்” என்றாள்.
பேச்சை மாற்றும் அவளது உத்தியை உதைத்துத் தள்ளி “நான் உன் பக்கத்துல உட்கார்ந்து பேசனும்ன்னு சொன்னேன்” – என்று.. பத்தடித் தள்ளித் தூர அமர்ந்திருந்தவளிடம் நான் கூற..
பதில் பேசாமல்.. விரல்களைக் கோர்த்தபடி.. லேசாக விழி உயர்த்தி.. என்னை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்நியோன்யம் நிறைந்திருந்த பார்வை அது!
என்னை ஆட்கொண்ட பார்வை அது!
என் மிச்ச சொச்ச உயிரையும் உறுவிப் போடும் வல்லமை கொண்ட பார்வை அது!
ஓராயிரம் அணைப்பையும்,ஈராயிரம் முத்தங்களையும் ஏந்தி வந்து.. என்னில் சேர்த்த பார்வை அது!
“பூவை சூட்டும் கூந்தலில் எந்தன்..
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்……”
கண் முன்னே அவள்! காதுக்குள் இளையராஜா!
தலை முதல் கால் வரை இனிமை இதமாய்ப் பரவியது! அனுபவித்தேன்! முற்றிலுமாய்!
அவளது மௌனத்தை உணர்ந்தபடி.. நானும் அவளெதிரே அமர்ந்தேன், அவள் உருவாக்கிய பத்தடி தூரத்தைப் பின்பற்றி!
அவள் பார்வைக்கு நான் கொடுத்த பதில் பார்வையால்.. சற்று நேரத்தில்.. தன்னாலேயே.. அவள் தலை தாழ்ந்து போக..
“சாப்பிட்டீங்களா?” என்றாள் இடையே நிலவிய அமைதியைக் குலைத்து.
“சாப்ட்டுட்டு தான் இருக்கேன்” – அவளையே நோக்கியபடி நான் கூற..
கோபமாய் என்னை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
சிரிப்புடன் அவளை நோக்கி.. “சரி விடு! ஆமா, ஏதோ பாட்டிக் கிட்ட வழி கேட்டேன்னு சொன்னியே! அந்தப் பாட்டி உன்னை வேற எதுவும் கேட்கலயா?” என்றேன்.
“அய்யோ! அதை ஏன் கேட்குறீங்க? எதுக்குப் போற, ஏன் போறன்னு கிழவி ஏகப்பட்டக் கேள்வி கேட்டுச்சு”
“நீ என்ன சொன்ன?”
“யமுனா கூட படிக்க வந்திருக்கேன்னு சொல்லி.. என் புத்தகப்பையைக் காட்டுனேன். அப்புறம் தான் விட்டுச்சு”
“ஹாஹாஹா!”
“உங்க சித்தப்பா, தங்கச்சின்னு எல்லார் பேரையும் இழுத்து விட்ருக்கேன். எதுவும் பிரச்சனை ஆயிடாதுல்ல?”
“ஆகாது! ஆனாலும்.. நான் பார்த்துக்குறேன்”
“ஹ்ம்ம், தைரியமான ஆளு தான்” – புருவத்தை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினாள் அவள்.
“இப்படித் தான் என்னை டெம்ப்ட் பண்ற நீ!” – குறை கூறிய என்னைக் கண்டு, ஒரு நொடி புரியாமல் விழித்தவள்.. பின் முறைத்து..
“நீங்க இப்படியே தான் பேசிட்டிருக்கப் போறீங்களா?”-எனக் கேட்டபடியேத் தன் பைக்குள்ளிருந்து நோட்டு,பேனாவைக் கையில் எடுத்தாள்.
“ஏய்.. என்ன பண்ற நீ?” – அதிர்ச்சியாய்க் கேட்ட என்னிடம்..
“பாட்டிக் கிட்ட படிக்கப் போறேன்னு சொல்லியிருக்கேன்! பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது! அதான்.. ரெக்கார்ட் எழுதப் போறேன்” –என்றாள்.
“அடிப்பாவி!”
“நீங்க பேசுங்க! நான் ரெக்கார்ட் எழுதிட்டே பதில் சொல்றேன்”
“ஏய்ய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டி”
“என்ன ஓவர்?, உங்களுக்குப் படம் வரையத் தெரியும் தான? வாங்க இங்க”
“உன் பக்கத்துலயா?”
“ஆமா”
“வேண்டாம். நான் இங்கயே இருக்கேன்”
“ஏன்?”
“ஆளே இல்லாத தென்னந்தோப்பு, சிலுசிலுன்னு காத்து.. கூடவே ஒரு அழகான பொண்ணு! விஸ்வாமித்திரரால கூட இந்த மாதிரி சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ண முடியாது! நான் வேற.. அல்ரெடி ஒரு மாதிரி இருக்கேன்! விட்ரு என்னை”
“ப்ச்!அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. வாங்க இங்க”
“ம்ஹ்ம்! நான் வர மாட்டேன்”
“இப்போ வரப் போறீங்களா? இல்லையா?” – அவள் வற்புறுத்தியதும் எழுந்து சென்று அவளருகே அமர்ந்தேன்.
ரெக்கார்டு நோட்டையும்,புத்தகத்தையும் என்னிடம் நீட்டியவள் “இந்தப் படம் தான். வரைஞ்சு கொடுங்க” என்றாள்.
“எல்லாம் நேரம்! உலகத்துல எல்லாரும் இப்படித் தான் லவ் பண்றானுங்களா? இல்ல நான் மட்டும் தான் இப்படியா?” – எனப் புலம்பியபடியே நோட்டைக் கையில் வாங்கி வரையத் துவங்கினேன் நான்.
“வெண்பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்..
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு…”
வானொலியில் ஒலித்த பாடலோடு கூடச் சேர்ந்து பாடியபடி நான் படம் வரைய.. கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டுத் தானும் எழுதிக் கொண்டிருந்தவள்.. அவ்வப்போது நிமிர்ந்து.. என்னைப் பார்த்துச் சிரிப்பது தெரிந்தது.
வரைவதை நிறுத்தி விட்டு நான் அவளை நிமிர்ந்து நோக்க.. நமுட்டுச் சிரிப்புடன் தலை குனிந்து கொண்டாள் அவள்.
“என்ன?”
“ஒன்னுமில்ல” என்றவளின் இதழ்கள் சிரிப்பை அடக்குவது தெரிந்தது.
“எதுக்கு சிரிக்குற இப்போ?”
“ஹாஹாஹாஹா” – அடக்கமாட்டாமல் சிரித்தவளைப் புரியாமல் நோக்கி..
“ஏய்ய்.. என்னடி?” என்றேன் நான்.
“இல்ல, ஆனாலும் நீங்க இவ்ளோஓஓஓஓ நல்ல்ல்ல்லவரா இருக்கக் கூடாது, நான் நோட்டைக் கொடுத்து வரையச் சொன்னா.. ஒன்னாங்க்ளாஸ் பையன் மாதிரி நான் சொன்னதை அப்படியே செய்வீங்களா?,” பாவனையாய்க் கூறியபடி அவள் பொங்கிப் பொங்கி சிரிக்க..
கடுப்பாகிப் போய்.. “என்னடி நக்கலா?” என்றேன் நான்.
“பார்க்கனும்,பேசனும்,லவ் பண்ணனும்ன்னு டயலாக் அடிச்சிட்டு.. இப்போ படம் வரைஞ்சிட்டிருக்கீங்க??, பயங்ங்ங்கரமான.. நல்லவரா இருப்பீங்க போலயே!!”
அவள் சீண்டலில் கொதித்தெழுந்த நான்.. “பாவம், சின்னப் பொண்ணாச்சேன்னு அடங்கிப் போனா.. என்னையே நக்கலடிப்பியா நீ?” என சீற…
“அடேங்கப்பா!!! அப்டின்னா.. ரொம்ம்ம்ம்பக் கெட்டவரா நீங்க?” எனப் புருவம் உயர்த்தியவளிடம்..
“ஆமா! ரொம்ப ரொம்பக் கெட்டவன்” என்றேன்.
“ஓஹோஓஓஓஓஓஓ”
“என்ன ஓஹோ??? நான் எவ்ளோ கெட்டவன்னு சாம்பிள் காட்டுனா தான் டி நீ அடங்குவ” எனக் கூறி.. நோட்டின் மீதிருந்த.. அவள் கையைப் பற்ற நான் முயல..
என்னிடமிருந்துத் தப்பிக்க அவசரமாய்த் தன் கைகளைப் பின்னே கட்டிக் கொண்டவள்.. “வேண்டாம்,வேண்டாம்,தெரியாம சொல்லிட்டேன்! சாரி, சாரி.. ப்ளீஸ்…” எனக் கத்தினாள்.
“அதெல்லாம் முடியாது! நீ என்னைக் கேலி பண்ணி சிரிப்ப?, நான் அதைக் கேட்டுட்டு அமைதியா போகனுமா?, அப்புறம் எதுக்கு நான் ஆம்பளைன்னு மீசை வைச்சிருக்கேன்?, எனக்கு இப்போ உன் கையைப் பிடிச்சு இழுத்துக் கிஸ் பண்ணியே ஆகனும்” – என்றேன் நான்.
“ஹாஆஆஆஆஆன்” எனப் பெரிதாய் விழிகளை விரித்தவள்.. “அதுக்கு வேற ஆளைப் பாருங்க! இந்த விளையாட்டுக்கு நான் வரல!” – எனக் கூறி.. அவசரமாய் எழுந்த வேளை.. திடீரென மழை தூறத் துவங்கியது.
“அய்யய்யோ என் ரெக்கார்ட் நோட்” என அலறியவளைக் கண்டு வேகமாக நோட்டை மூடிக் கையில் எடுத்துக் கொண்டு..
“வா,வா.. அங்க போயிடலாம்” எனக் கத்தியபடியே அருகிலிருந்தக் குடிசைக்குள் நான் ஓட.. அவளும் என்னைத் தொடர்ந்து ஓடி வந்து நின்றாள்.
“இவ்ளோ நேரம் வெயில் அடிச்சிட்டு தான இருந்தது?, ஏன் திடீர்ன்னு மழை?, இப்போ நான் எப்படி வீட்டுக்குப் போறது?, பயமா இருக்கு எனக்கு”
அவளது நோட்டுப் புத்தகங்களைப் பைக்குள் பத்திரப்படுத்தி விட்டு.. நனைந்திருந்த தலையைச் சிலுப்பியபடி நின்றிருந்த நான்..
“புலம்பாத! மழை நின்னுடும் இப்போ! நான் தான் கூட இருக்கேனே! அப்புறம் என்ன பயம்?” என்று கூற..
“ஹ்ம்ம்ம்” –எனக் கலக்கத்துடனே பதிலளித்தாள் அவள்.
நொடியில் சுருங்கிப் போன அவள் முக மாற்றத்தைப் பொறுக்க முடியாது.. அவள் புறம் திரும்பி..
“என்ன?” என்று நான் கேட்க..
“ம்ஹ்ம்” எனத் தலையசைத்தாள் அவள்.
“பயமே உன்னைப் பார்த்துத் தான் டா-ன்னு சொல்ல வர்றியா?” – அடித்துப் பெய்து கொண்டிருந்த மழையை நேர்ப் பார்வையாய் நோக்கியபடி அடிக்குரலில் நான் கேட்க..
தானும் மழையைப் பார்த்தபடி நின்றிருந்தவள்..
“உங்களைப் பார்த்து நான் பயப்படுவேன்னு யார் சொன்னா?” – எனக் கெத்தாகக் கேட்டாள்.
அந்தக் குடிசை வாசல் முழுக்க தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால்.. கிட்டத்தட்ட என் தோளை உரசியபடி வெகு அருகில் நின்றிருந்தவளைத் திரும்பி நோக்கினேன் நான்.
“ஏன் பயப்பட மாட்ட?”
“அது.. அப்படித் தான்!”
“அவ்ளோ நம்பிக்கையா என் மேல?”
“அப்ப்ப்ப்ப்ப்ப்பிடி…. சொல்லிட முடியாது”
“ஏய்ய்..”
என் புறம் திரும்பாமல் மழையைப் பார்த்தபடி சிரிப்புடன் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தவளின் வலது கன்னம் முழுக்க.. என் பார்வை வட்டத்துக்குள்!
நெற்றியில் தொடங்கிக் கன்னம் வரை வழிந்தக் கூந்தல் கற்றையொன்றைக் காதோரமாய் செருகி வைத்திருந்தாள். அப்படியும் அடங்காது.. அவள் கன்னத்தை உரசிய முடிகளைப் பொறாமையுடன் வெறித்தன என் விழிகள்!
அடர்த்தியாய் நீண்டிருந்த புருவத்தின் நுனியில்.. புள்ளியாய் ஒரு மச்சம்! என்னை விரல் தீண்டிட அழைத்தது!
கன்னத்து எலும்பில்.. எடுப்பாய் அமர்ந்திருந்தது புதிதாய் வெடித்திருந்த பருவொன்று.
சிரிப்பில் விரிந்த உதடுகள்.. கன்னத்தில் வரிகளைத் தோற்றுவித்திருக்க.. என் பார்வையை உயர்த்தி அவள் கண்களை நோக்கினேன்.
நீள் இமைகளின் கீழ்.. வட்டமாய் விழிகள்.. குடைக் காளானாய் விரிந்திருந்தது.
கருமணிகளை லேசாகத் தாழ்த்தி.. என் பார்வையை உணர்ந்தவளின் கண்கள் சிரிப்பை நிறுத்திப் படபடக்கத் துவங்க..
நீர் சலசலக்க.. துடுப்பை அசைத்தபடி.. வேகமாய்.. நீந்திச் செல்லும் தங்க மீனொன்றை அருகில் நின்று காணும் உணர்வு எனக்கு!
பார்வையை விலக்கிக் கொள்ளத் தோன்றாமல்.. அசையாது நான் நிற்க.. என் புறம் திரும்பி.. மெல்ல நிமிர்ந்து.. இமைகளை உயர்த்தி.. என்னை நோக்கினாள் அவள்.
மொட்டு விரிந்த மலராய்… மண்ணைப் பிளந்து கொண்டு மேலெழும்பும் முளையாய்…. அவள் கண்கள் எனை நோக்க… அசந்து போய் நின்றேன் நான்!
மார்போடு அணைத்திருந்த நோட்டை இறுகப் பற்றியபடி…. வெட்கம் விலக்கி.. தயக்கம் உடைத்து.. என் முகத்தை முழுதாய் நோக்கியவள்… என் பார்வையோடு தன்னைக் கலந்தாள்.
வான்மழையும்,வானொலியும் மட்டுமே ஒலி எழுப்பிக் கொண்டிருந்த… அந்தத் தேவ வினாடியில்.. இருவரும் ஒருவரையொருவர் பார்வையால் உணர்ந்தபடி.. அசைவற்று நின்றிருந்தோம்.
“எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. எட்டாங்க்ளாஸ் படிக்கும் போது.. பக்கத்து வீட்டு கோபி என் கைல ஒரு புக்கைக் கொடுத்தான், தனியா உட்கார்ந்து படிக்க சொல்லி!”
நான் பேசத் தொடங்கியதும்.. தூக்கி நின்ற.. புருவங்களைத் தளர்த்தியபடி எனை நோக்கினாள் அவள்.
“பக்கத்துக்குப் பக்கம் அசிங்க,அசிங்கமா எழுதியிருந்த பிட்டு புக் அது! என்னடா கண்றாவி இதுன்னு அவன் கிட்டக் கேட்டப்போ.. ஆம்பளைக்கும்,பொம்பளைக்கும் இடைல இது தான் டா மாப்ள நடக்கும்ன்னு பெரிய ஞானி மாதிரி பதில் சொன்னான்”
“அடச் சை”
“அப்போ இருந்து மனசுக்குள்ள ஏடாகூடமான கற்பனை தான்!” – மெல்லிய குரலில் கூறிய என்னை அவள் பல்லைக்கடித்தபடி பார்க்க..
“முறைக்காத! வயசு அப்டி! நான் என்ன பண்றது?” - என்றேன் சமாதானமாய்!
உதட்டைச் சுழித்தபடி.. மழையின் புறம் திரும்பிக் கொண்டவளைக் காதலாய் நோக்கி…
“அந்தக் கற்பனையெல்லாம் உன்னைப் பார்க்குறதுக்கு முன்னாடி வரைக்கும் தான்” என்றேன் நான்.
என் குரலின் தீவிரத்தில்.. மீண்டும் என் புறம் நோக்கியவள்.. விழிகளை விரித்துப் பார்க்க..
“பொண்ணு,காதல்,முத்தம்,காமம்.. இதெல்லாத்துக்கும் என்னென்னவோ கனவு இதுவரை இருந்திருந்தாலும்.. உன்னைப் பார்த்ததுக்கப்புறம்.. ராத்திரி கண்ணை மூடும் போது.. என் கற்பனைல நிற்குறது ஒன்னே ஒன்னு தான்” எனக் கூறி நிறுத்தினேன்.
பதிலற்று… என்னை நோக்கிக் கொண்டிருந்தவளிடம் விரல் உயர்த்தி.. அவள் கண்களைக் காட்டி..
“உன் கண்ணு!” என்றேன்.
“……………….”
“உன் கண்ணைத் தாண்டி எதையும்… இதுவரை… யோசிக்க முடிஞ்சதே இல்ல! ஏனோ… என் காதலும்,காமமும் அந்தக் கண்ணோடயே திருப்தி பட்டுப் போயிடுது“
“………..” – துடித்த இமைகளை இறக்கித் தரையை நோக்கியவளிடம்..
“இதே பார்வை தான்! தினம் என்னைத் தூங்க விடாம பண்ணுது” – கரகரத்தக் குரலுடன் நான் கூற..
“…………” – பதிலற்று நின்றாள் அவள்.
“பவி………..”
“……………”
“ஒரே ஒரு தடவை உன் கண்ணுக்கு முத்தம் கொடுக்கட்டுமா?”
என் கேள்வியில் திகைத்து… தாழ்த்தியிருந்தத் தலையைத் தரையோடு ஒட்ட வைத்து விடும் நோக்கத்தோடு.. அவள் அநியாயத்திற்குக் குனிந்து நிற்க.. அவள் புறம் நெருங்கி..
“நிமிர்ந்து பாரு பவி..” என்றேன் நான்.
அணைத்திருந்தப் புத்தகத்தை.. நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு.. மெல்ல மெல்ல முகத்தை நிமிர்த்தியவள்.. என்னை.. என் கண்களை.. அதில் தெரிந்தக் காதலை,ஆசையைக் கண்ட நொடி…. இறுக இமை மூடிக் கொள்ள…
மெல்லிய சிரிப்போடு அவள் விழிகளை நோக்கி நான் குனிந்த வேளை ‘தொப்பென்கிற’ சத்தம்!
என் செல்ஃபோனில் தெறித்த மழைத்துளியைக் கண்டு.. என் கடந்த காலத்திலிருந்து வெளி வந்த நான்.. அவசரமாய் நிமிர்ந்து… கையைத் திருப்பி.. கடிகாரத்தை நோக்கினேன்.
காலை 9.20.
அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று.. எதிரேயிருந்த அந்தப் பல்கலைக்கழக வாசலை நான் நோக்கிய நிமிடம்.. பென்ஸ் கார் ஒன்று வந்து நின்றது.
பரபரப்போடு… நான் காத்திருந்த சமயம்.. காரிலிருந்து இறங்கினாள் அவள்.
முகம் தெரியவில்லை! நீள்சிகை நிறைத்திருந்த அவள் முதுகு மட்டுமே தெரிந்தது.
இன்றோடு மூன்றாவது நாள்! நான் அவளைத் தொடர்வது! ஆனாலும்.. அவள் முகம் காண முடியவில்லை!
ஜீன்ஸ் அணிந்திருந்தாள். முட்டி வரையிலான ஜாக்கெட் குளிருக்கு இதமாக அவளை அணைத்திருந்தது.
கையிலிருந்தப் பையைத் திறந்து எதையோ சரி பார்த்து விட்டு நிமிர்ந்தவள்.. குனிந்து.. காருக்குள் அமர்ந்திருந்த நபரிடம் ஏதோ கூறினாள்.
அடுத்த நிமிடம்.. காரின் மறுபக்கக் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான் ‘அவன்’.
உணர்ச்சி பிரதிபலிக்காத கண்களுடன் நான் வெறித்து நோக்கினாலும்.. என் இதயத்தை எரித்துக் கொண்டிருந்த ஜ்வாலையொன்று.. என் உயிரைக் கருக்கி.. மூச்சை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தது.
உடல் முழுக்க நான் உணர்ந்த உஷ்ணத்தின் விளைவால்.. வியர்த்துப் போன உள்ளங்கையை இறுக்கி.. அவனையே பார்த்தபடி….. ஜடமாய் நின்றேன் நான்.
அவன்… வேறு யாருமல்ல!
என் காதலியின்.. இல்லை, என் முன்னாள் காதலியின் இந்நாள் கணவன்!
********************************** Intermission :P :P *********************************
