அத்தியாயம் - 3

ப்போ எதுக்குடி கேஃபே-க்கு போகனும்னு அடம் பிடிக்கிற?”-ரோஹினி

“இன்னிக்கு மகேஷ் அங்கிள் பர்த்டே பார்ட்டி ரோனி. நான் கிஃப்ட் எல்லாம் ப்ரிபேர் பண்ணி வைச்சிருக்கேன். கொடுக்க வேண்டாமா?”-அதிதி

“அப்ப உங்கப்பாவோடேயே போயிருக்க வேண்டியது தான?, என்னை ஏன்டி அலைய வைக்கிற?”

“ஜீனு இன்னிக்குக் கொஞ்சம் பிஸிம்மா”

“ஆ,ஊன்னா அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்துடுவியே?”

“யுவனி மம்மி-டாடி மாதிரி நீங்க 2 பேரும் ஒரே வீட்ல இருந்தா.. எனக்கு இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காது. ப்ச், ஏன் நானும்,ஜீனுவும் ஒரு வீட்லயும், நீயும், ஆதியும் ஒரு வீட்லயும் இருக்கோம் ரோனி?”

- தன் ஸ்கூட்டியில் முன்புறம் ஆதியை நிற்க வைத்து,பின்னால் அதிதியுடன் ஜீவனின் காஃபேயை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ரோஹினி மகளின் கேள்வியில் ஒரு நிமிடம் விழித்து, என்ன சொல்லி சமாளிக்கவென்று யோசித்தாள்.

எதிர்பார்த்த கேள்வி தான்! ஆதி, சிறுவன். இதையெல்லாம் கூர்ந்து நோக்கும் வயது கிடையாது. அவ்வப்போது இரவுகளில் ‘ஜீனுட்ட போகனும்’ என்று அழுவதோடு சரி!, ஒரு சாக்லெட்டைக் கையில் கொடுத்தால், தின்று விட்டுச் சமாதானமாகி விடுவான்.

ஆனால் அதிதி அப்படியல்ல. 11 வயது சிறுமி. வயதுக்கு வருவதென்றால் என்னவென்று கேள்வி கேட்டவள்! இவர்களிருவரிடையே நிலவும் வேறுபாட்டை உணராமலா இருந்திருப்பாள்?, ஏன் வேறு,வேறு வீட்டில் வசிக்கிறோம் என்பதை யோசிக்கக் கூடத் தொடங்கியிருப்பாள். குழந்தைகள் முன்னே இருவரும் பெரிதாக சண்டையிட்டுக் கொண்டதுமில்லை,கொஞ்சிக் கொண்டதுமில்லை. அதனால் இதுவரை வித்தியாசமாய் எதுவும் தோன்றவில்லை போலும்!

“ம்க்கும்,” எனத் தொண்டையைச் செறுமியவள்.. “ஆதி,நின்னுட்டே தூங்காத” என்று மகனை அதட்டி விட்டு “அம்மாவோட இண்ஸ்டிடியூட்,ஆதியோட ஸ்கூல் ரெண்டுமே கே.கே.நகர்ல இருக்குல்ல அதி?, அதனால தான் நாங்க 2 பேரும் வேற வீட்ல இருக்கோம்” என்றாள்.

என்ன புரிந்ததோ “ஹ்ம்ம்ம்ம்” என்றாள் அதிதி.

பேச்சை மாற்ற எண்ணி “என்ன கிஃப்ட் வாங்கியிருக்க மகேஷூக்கு?” என்று வினவினாள். “சர்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்..” என்று அவள் கையை விரிக்கையில் கேஃபே வந்து விட்டது.

கேஃபேயில் வேலை செய்யும் மகேஷின் பிறந்த நாளை பணியாளர்களுடன் சேர்ந்து விமர்சையாகக் கொண்டாடியது ஜீவனின் குடும்பம். சாரி!, கொண்டாடினர்,ஜீவன்-அதிதி மற்றும் ரோஹினி-ஆதி.

“அங்கிள், நான் உங்களுக்கு ஒரு கிஃப்ட் கொண்டு வந்திருக்கேன்”-என்ற அதிதி ஓடிச் சென்று எடுத்து வந்தாள்.

“ஓப்பன் பண்ணுங்க அங்கிள்”-என்று குதித்தவளைக் கண்டு சிரித்தபடியே பிரித்தான் மகேஷ்.

அது ஒரு பெயிண்ட்டிங். வெண்ணைத் தாழி கிருஷ்ணனை அழகாக வரைந்திருந்தாள். ‘சூப்பர்,சூப்பர்’ என்று அனைவரும் பாராட்ட.. ஜீவன் மற்றும் ரோஹினியின் பார்வை மட்டும் பெயிண்டிங்கின் மீதே பதிந்திருந்தது. ஏனெனில் அதைச் சற்று உற்று நோக்கும் போது.. ஜீவனின் முகச் சாயல் தெரிந்தது. அன்னையைப் போலவே அவளுக்கும் பெயிண்ட்டிங்,டிராயிங்கில் ஆர்வம் அதிகம்.

சொல்லப் போனால், மகளின் இந்தத் திறமையைக் கண்டு இருவரும் பூரிக்க வேண்டிய தருணம் இது. ஆனால் ஒருவரையொருவர் நோக்கியபடி வாய் விட்டுச் சொல்ல முடியாத எதையோ, மென்று விழுங்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்த ஒரு மணி நேரமும் அனைவரின் பேச்சும் பெயிண்ட்டிங்கைப் பற்றியே இருக்க.. ஆதிக்கு சாண்ட்விச்சை ஊட்டி, அவனைத் தூங்க வைக்கத் தொடங்கியிருந்தான் ஜீவன்.

காஃபேயின் முதல் தளத்தில் கூடியிருந்தனர் அனைவரும். அந்தத் தளத்தையொட்டிய பால்கனியில்.. முன்னுச்சி முடியுடன் விளையாடிய கடற்காற்றை அனுபவித்தபடிக் கண் மூடி நின்றிருந்தாள் ரோஹினி.

திடீரெனக் கன்னத்தில் சில்லென ஏதோ பதிய.. திடுக்கிட்டுக் கண் திறந்தவளிடம் “100% ஃப்ரூட் ஜூஸ். குடிங்க” என்று நீட்டினான் ஜீவன்.

“அதைக் கையிலயே கொடுக்க வேண்டியது தான?, ஏன் கன்னத்துல வைக்கிறீங்க?”

அவன் எதுவும் பேசாமல் அவளருகே நின்று கடலை நோக்கியபடி ஜூஸை உறிஞ்சினான். பின்..

“இந்த 5 வருஷத்துல நல்லா பொய் சொல்லக் கத்துக்கிட்டீங்க”-என்றான்.

“ஏன்?”

“எல்லாத்தையும் மறந்துட்டேன்,அப்படி,இப்படின்னு டயலாக் அடிச்சீங்க. இப்போ ஒரு பெயிண்டிங்கை பார்த்ததுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க?”

“நான் ஃபீல் பண்றேன்னு உங்கக்கிட்ட சொன்னேனா?”

“என் மேல இருக்கிற செக்ஸூவல் அட்ராக்ஷனைக் கூடத் தான் நீங்க ஓப்பனா ஒத்துக்கல. நீங்க சொல்லாட்டி அதெல்லாம் உங்களுக்கு இல்லன்னு ஆயிடுமா?”

“இப்போ எதுக்கு இந்தப் பேச்சு?”

“சரி, அந்தப் பேச்சு வேண்டாம். இதைக் கேளுங்க, 12 வருஷத்துக்கு முன்னாடி நீங்க கொடுத்த பெயிண்டிங்கை நான் இன்னும் பத்திரமா வைச்சிருக்கேன். தெரியுமா?”

“………………………”

“வயசானா மறதி வந்துடும்ன்னு சொல்றாங்க. ஆனா.. அந்த பெயிண்டிங்கைக் கொடுத்தப்போ ‘என்னைப் பிடிச்சிருக்கு’-ன்னு நீங்க சொன்னது இன்னும் என் கண் முன்னாடி நிக்குது. மஸ்டர்ட் கலர் சுடிதார் போட்டிருந்தீங்க. தலையில மல்லிகைப் பூவெல்லாம் வைச்சுக்கிட்டு! அப்போவெல்லாம்.. கண்ணுக்கு இவ்ளோ பட்டையா மை தீட்ட மாட்டீங்க”

உதட்டைக் கடித்தபடி மௌனமானாள் அவள்.

மேலே ஏதோ கூற வந்தவனை “அண்ணா…., எல்லாரும் பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாங்க. காதுல ரத்தம் வராத குறை, நீங்க வாங்க ப்ளீஸ்.. நீங்க வந்து கிட்டாரைக் கையில் எடுத்தாத் தான் இந்தப் பசங்க அடங்குவானுங்க” என்றபடி வந்து நின்றான் மகேஷ். ஜூஸூடன் வேறு பக்கம் திரும்பியவளை நோக்கி விட்டு அவனோடு சென்றான் ஜீவன்.

அடுத்த பத்தாவது நிமிடம் கிட்டார் ஒலி அவளது செவியை மெல்லத் தீண்ட… ஜீவனது குரலோ அவள் உயிரைத் தொட்டது.

“ஆசை ஓர் புல்வெளி…. அதில் ஆண்,பெண் இரு பனித்துளி…

பூ மீது தூங்கிடும்… ஒரு பூங்காற்று போலவே!

ஓர் ரீங்காரமே… இரு நெஞ்சில் மௌனமாகக் கேட்குமே…

ஆகாயம் மழையில் நீராடும்… கூந்தலும்,மீசையும்……

-“இவருக்கு எல்லாஆஆஆம் ஞாபகம் இருக்காம்! புழுகுமூட்டை! அது மஸ்டர்ட் கலர் சுடிதார் இல்ல இடியட், ஆரஞ்ச் கலர்!” என்று முணுமுணுத்த ரோஹினியின் இதழ்கள், இதுவரை நாம் காணாத உல்லாசப் புன்னகையில் வளைய.. அவளது எண்ணங்களும் பன்னிரெண்டு வருடம் பின்னோக்கி வளைந்தது.

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் அந்தப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையொன்றில் லேசாய்த் தலை சாய்த்தபடிக் கண் மூடி உறங்க முயன்று கொண்டிருந்தான் ஜீவன். அவனருகே வாய் ஓயாமல் பேசியபடி அவனது முயற்சியைத் தடுத்துக் கொண்டிருந்தார் செல்வம், அவனது சொந்தத் தாய் மாமா. அவனை விட ஆறே வயது மூத்தவர்!

“மாப்ள, என்ன டா நான் பேசிட்டே இருக்கேன்?, நீ பாட்டுக்க உறங்குற?”

“கேட்டுட்டு தான் இருக்கேன். சொல்லுங்க”

“அந்தப் பொண்ணு ஃபோட்டோவை நீ பார்த்தியா இல்லையாடா?, என்ன சொல்றான் என் மவன்னு கேட்டு உங்கப்பன் என் உயிரை வாங்குறாரு!, என்ன மாப்ள, உனக்குப் பிடிச்சிருக்கா, இல்லையா?”

“நான் இன்னும் ஃபோட்டோவே பார்க்கல மாமா. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா, முக்கியமா உங்கக்காவுக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகே!”

“எங்கக்கா கூடவா அந்தப் பொண்ணு குடும்பம் நடத்தப் போகுது?, பொண்ணு நல்லா வெள்ளையா,லட்சணமா இருக்கு. மாப்ள, நம்ம குடும்பத்துக்கு அவ்ளோ கலரா பொண்ணு கிடைக்குறது பெரிய விசயம்ல்ல??” – பெரிய ஜோக்கை சொல்லி விட்டவர் போல இடிஇடியெனச் சிரித்தார் செல்வம்.

“சத்தமா சிரிக்காதீங்க மாமா, பஸ்ல எல்லாரும் பயப்படறாங்க பாருங்க”

“பொண்ணு நல்லா தான் இருக்கு! ஆனா அவங்கப்பன் கெடாமீசை சரியான கோட்டிப்பய மாப்ள! மாப்பிள்ளை பேர்ல வீடு இருக்கா,நிலம் இருக்கான்னு கேள்வி கேட்குறான்! விட்டாளா எங்கக்கா… ‘நீங்க பொண்ணுக்கு என்ன சேர்த்து வைச்சிருக்கீங்கன்னு’ கேட்டா பாரு ஒரு கேள்வி….” என மீண்டும் அவர் வெடிச் சிரிப்பை உதிர்க்கத் தொடங்கிய தருணம் பின்னாலிருந்து யாரோ ஊசி போல எதையோ வைத்து சுரீரென அவர் இடுப்பிலேயே குத்த “ஆஆஆஆஆ” என்றுத் திரும்பிப் பார்த்தார்.

அவர்களது பின்னிருக்கையில் சுடிதார் அணிந்த பெண்களிருவர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருத்தி, இவர் திரும்பியதும் தலையைக் குனிந்து கொண்டுக் கையிலிருந்த பர்ஸால் முகத்தை லேசாக மறைத்துக் கொண்டாள். உடன் அமர்ந்திருந்தவளோ ஒன்றுமே நடவாதது போல் எங்கோ பார்க்க.. ஒரு நிமிடம் குழம்பியவர், மீண்டும் திரும்பி இருவரையும் நோக்கினார். மறுபடி அந்த பர்ஸ் பெண், அவரைக் கண்டு முகத்தை மறைத்துக் கொள்ள, சட்டென மூளையில் மின்னல் வெட்டியது அவருக்கு.

பளீர் சிரிப்புடன்.. “டேய்ய்ய்ய்ய் மாப்ள…” என்றழைத்தவர் “உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கோ இல்லையோ, அதுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருச்சு போல டா” என்றார்.

கண்களைத் திறந்து அவரை நோக்கியவன் “என்ன உளர்றீங்க?” என்றான்.

“டக்குன்னு பார்க்காத, பின் சீட்ல உட்கார்ந்திருக்கிற ரெண்டு பொண்ணுங்கள்ல ஒருத்தி தான், அந்த ரோஹினி”

“என்ன மாமா சொல்றீங்கஅஅஅ?”

“நீ ஏம்லே பதறுற?”

“பதறாம?, அந்தப் புள்ள ஏன் மாமா இந்த பஸ்ல உட்கார்ந்துருக்கு?”

“ஏன், நீ மட்டும் தான் இந்த பஸ்ல வரனும்னு எழுதி வைச்சிருக்கா?, மாப்ள, நல்ல சான்ஸ் டா இது. நீ அந்தப் புள்ளய அமுக்கிப் போட்டு, 2 வார்த்தை பேசிரு”

“உளறாதீங்க மாமா, எனக்குப் பயமாயிருக்கு”

“பயமா இருக்கா?, அட வெண்ணை”

“எனக்கு முன்ன,பின்னப் பொண்ணுங்களோட பேசிப் பழக்கமே இல்ல மாமா”

“பழக்கமில்லையா?, பெருசா காலேஜெல்லாம் போனயே மாப்ள?, உன்னை காதல் மன்னன்னு-லாம் நினைச்சு வைச்சிருந்தேனேடா?”

“உளறாம, அமைதியா உக்காருங்க. அடுத்த ஸ்டாப்ல இறங்கி,வேற பஸ்ல ஊருக்குப் போகலாம்”

“மாப்ள, நீயெல்லாம் எப்படிடா கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்தப் போற?”

“எல்லாம் நடக்கும் போது பார்க்கலாம், நான் இறங்குறேன்” – என்றவன் சட்டென சீட்டை விட்டு எழுந்து முன்னே நடந்தான்.

“டேய்….. டேய்….” என்றவரும் அவனோடு எழுந்து பஸ் நின்றதும் இறங்கிக் கொண்டார். “போ,மாப்ள கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணிட்ட” என்றபடியேத் திரும்பியவர் அந்தப் பெண்களிருவரும் கூட அவர்களுடனே இறங்கி விட்டதைக் கண்டு பக்கெனச் சிரித்தார்.

“முன்னாடியெல்லாம் பசங்க தான் புள்ளைகளை வெரட்டுவாங்க, இப்போ புள்ளைக அந்த வேலையைப் பார்க்குதுக போல?”

“என்ன மாமா சொல்றீங்க?”

“அங்க பாரு மாப்ள” – அவர் காட்டிய திசையில் நோக்கியவன், தங்களுக்குள் குசு,குசுவென ஏதோ பேசியபடி இவர்களையே குறு,குறுவென பார்த்துக் கொண்டிருந்தப் பெண்களைக் கண்டு பதறிப் போனான்.

“நடங்க மாமா, போவோம்”

“அட இரு மாப்ள, என்ன தான் பண்றாளுகன்னு பார்ப்போம். நம்மை ஏன் ஃபாலோ பண்றாளுக?, உன் கிட்ட அந்தப் பொண்ணு பேச விரும்புதோ என்னவோ டா”

“பேசுறதா?? அய்யய்யோ!, என்னால முடியாது மாமா”

“இரண்டு பொண்ணுங்கள்ல பச்சை சுடிதார் போட்டிருக்கிற பொண்ணு தான் ரோஹினி. படத்தைப் பார்க்கலன்னியே!, இப்ப நேர்லயே பாரு மாப்ள”

“சும்மா இருங்க மாமா” – என்றவனுக்கு லேசாக வியர்க்கத் தொடங்க.. ஒற்றை விரலால் அதைச் சுண்டி எறிந்தவன் பஸ்ஸூக்காகக் காத்திருந்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே ரோஹினியோடு வந்த பெண் இவர்களின் அருகே வந்தாள்.

“மாப்ள, அந்தக் கோணவாய் நம்மக்கிட்ட தான் டா வருது”

“நீங்களே பேசி அனுப்பிடுங்க மாமா” – இருவரும் முணுமுணுக்கையில் அருகே வந்து விட்டாள் அவள்.

“நீங்க தான ஜீவனாந்தம்?” – அந்தப் பெண் ஜீவனைப் பார்த்து நேராகக் கேட்க.. ஒரு நிமிடம் விழித்துப் பின் தன் மாமனை நோக்கினான் அவன்.

“இவன் தான். அதுக்கென்ன இப்போ?”

“அங்க நிற்கிறாளே!, அவ ரோஹினி. அவளை உங்களுக்குப் பொண்ணு பார்த்திருக்கிற விசயம் உங்களுக்குத் தெரியுமா?”

“அந்தப் பொண்ணா இது?” – மாமாவின் அண்டப்புழுகு.

“ஆமாம். அவ இவரோட கொஞ்சம் தனியா பேசனுமாம்”

“ஓஹோ!, இதுக்குத் தான் எங்களையே ஃபாலோ பண்ணிட்டிருக்கீங்களா?, உங்களுக்கு எப்படியோ தெரியலம்மா, ஆனா நாங்க எங்க பையனை அப்படி வளர்க்கல. எதுவாயிருந்தாலும், பெரியவங்க பேசி முடிவு பண்ணட்டும். அதுவரைக்கும் பொறுத்திருங்க”

சற்றுத் தள்ளி நின்றபடி, இவர்கள் பேசுவதைக் கேட்ட ரோஹினிக்குக் கெட்ட கோவம் வந்து விட்டது போலும்! தங்,தங்கென நடந்து அருகே வந்தவள்.. கைகளைக் கட்டிக் கொண்டு ரௌத்திரத்துடன் செல்வத்தை நோக்கினாள்.

அவளது செய்கையில் ஆடிப் போன இருவரும், செய்வதறியாமல் விழித்துக் கொண்டு நிற்க, புஸ்,புஸ்-என கோப மூச்சை வெளியிட்டவள்..

“நீங்க எங்கப்பாவைக் கோட்டிப்பயன்னு சொன்னதுக்கே நான் பயங்கர கோவத்துல இருக்கேன்! இப்போ என் வளர்ப்பைப் பத்தி வேற தப்பா பேசுறீங்களா?” என்று வினவினாள்.

தன் பெரிய கண்களை அநியாயத்திற்கு உருட்டி, இதழ்களை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு அவள் கேட்டக் கேள்விக்கு, செல்வம் பயந்தாரோ இல்லையோ, ஜீவன் மொத்தமாய் அரண்டு போனான்.

“மாமா.. மாமா.. போயிடலாம் மாமா, யாராவது பார்த்தா பிரச்சனையாய்டப் போகுது” –ஜீவன்.

“என்ன பிரச்சனையாகும்?, ஹ்ம்?, நான் இங்கப் பேசிட்டிருக்கேன். நீங்க என்ன அவரைப் பார்க்குறீங்க?” – இப்போது ஜீவன் புறம் திரும்பி விட்டாள் அவள்.

பேருந்து நிறுத்தத்தில் அருகில் நிற்பவர்கள் தங்களை விநோதமாக நோக்குவதைக் கண்ட ஜீவன் அவளைச் சற்றும் சட்டை செய்யாமல் “மாமா….” என்று அடிக்குரலில் செல்வத்தை அழைத்தான்.

“என்னம்மா ரொம்பத் தான் மிரட்டுற?, இன்னும் கல்யாணமே முடிவு பண்ணல, அதுக்குள்ள அவனை அதட்டுற?, உன்னை நம்பி எப்படிம்மா பையனைக் கொடுக்கிறது?"

“மாமா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன்”

“உங்கப் பையன் தான் வேணும்னு இங்க யாரும் அழுதுட்டு கிடக்கல, சார், உங்களோட நான் ஒரு 10 நிமிஷம் பேசனும், கொஞ்சம் இப்டி வர்றீங்களா?” – ஜீவனை நேராக நோக்கி சட்டமாக அவள் கேட்ட விதம், அவனது அடி வயிற்றைப் பிசைய.. பேருந்தின் ஹார்ன் ஒலியில் ‘அப்பாடா தப்பித்தோம்’ என்றெண்ணிக் கொண்டு “பஸ் வந்துடுச்சு” என்று விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.

ஆனால் அவள் அத்தோடு அவனை விடவில்லை.

மறுநாள் திருநெல்வேலி டௌனில் நண்பனைச் சந்தித்து விட்டு பெட்டிக் கடையொன்றில் அவன் ‘ஸ்லைஸ்’ குடித்துக் கொண்டிருந்த போது அவனருகே வந்து நின்றாள், அதே கோப முகத்துடன்!.

குடித்துக் கொண்டிருந்த பானம் புரையேற… லொக்,லொக்கென இருமியவனுக்குக் கண்களில் நீர் சேர்ந்து விட்டது. பாக்கெட்டிலிருந்த கர்சீப்பை எடுத்து வாயை மூடிக் கொண்டு இருமியவனை, அவள் விடாது நோக்கிக் கொண்டிருந்தாள்.

ஒருவாறு சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவனிடம் “எனக்கும் ஒரு ஸ்லைஸ் சொல்லுங்க” என்றாள்.

அவள் தைரியத்தை எண்ணி வியந்தபடி “அண்ணாச்சி, இன்னொன்னு கொடுங்க”-என்று கடைக்காரரிடம் கூறியவன், அவர் கொடுத்ததை வாங்கி அவளிடம் நீட்டினான்.

கடகடவென ஒரே மூச்சில் வாயில் ஊற்றியவள்.. “என்னைப் பார்த்தா.. உங்களுக்கு பேய்,பூதம் மாதிரி இருக்கா?, அப்படி ஓடுறீங்க?” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

தயங்கியவாறே “வ..வந்து.. நான் கொஞ்சம் ‘ஷை’ டைப்! அதுமட்டுமில்லாம, எனக்கு அவ்வளவா பொண்ணுங்க கூடப் பேசிப் பழக்கமில்லங்க. தனியா பேசக் கொஞ்சம் தயக்கம்! அதான்.. சாரி.” என்றான்.

“இஞ்சினியரிங்கெல்லாம் படிச்சிருக்கிறதா சொன்னாங்க. காலேஜ்ல ஒரு பொண்ணு கிட்டக் கூட பேசுனதில்லையா?”

“இல்லங்க, நான் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்”

“ஹைட்,வெயிட்டா, போலீஸ் க்ராப்போட இருக்கிற நீங்க ‘ஷை’ டைப்ன்னு சொன்னா.. இந்தப் பொடுசு கூட நம்பாது. என்ன அள்ளி விட்றீங்களா?”

“அய்யோ!, சத்தியமா இல்லங்க. பாருங்க,இந்த க்ளைமேட்க்குக் கூட எனக்கு எவ்ளோ வேர்த்திருக்குன்னு! நிஜமாவே.. எனக்குக் கொஞ்சம் பயம் தான்-ங்க!”

“ஹ்ம்ம்ம்ம்”

“ஏதோ பேசனும்ன்னு சொன்னீங்களே?”

“ஆமா, இந்தக் கல்யாண விவகாரத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியும் தான?, உங்கப்பா தான் பரிசம் போடுறதுல குறியா இருக்குறாரே! உங்கக்கிட்ட சொல்லாமலா இருந்திருப்பார்?”

“ஆமாங்க, உங்க ஃபோட்டோவைக் கொடுத்துப் பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“நான் இன்னும் எதுவும் சொல்லலங்க”

“என்ன சொல்றதா இருக்கீங்க?”

“எ..எ..என்ன சொல்லனும்??”

“குட் க்வஸ்டின்! பிடிக்கலன்னு சொல்லனும்”

“ஏன்-ங்க?”

“என்ன ஏன்?, பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்ன்னு நினைச்சிருந்தீங்களோ?”

“அ..அப்படி சொல்லிட முடியாது. எங்கம்மாவுக்குப் பிடிச்சிருந்தா.. எனக்கும் ஓகேன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன்”

“ஹ!, உங்களை எனக்குப் பிடிக்காம போறதுக்கு ரெண்டாவது ரீசன் கிடைச்சாச்சு”

“முதல் ரீசன் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“ம்ம்ம், வேற என்ன?, நீங்க ஒரு போலீஸ் ஆஃபிசர்ன்றது தான்!”

“ஏன்-ங்க?, போலீஸ்ன்னா பிடிக்காதா?”

“ம்ஹ்ம்ம், போலீஸ்,ஆர்மி,ஏர்-ஃபோர்ஸ்,நேவி-ன்னு யூனிஃபார்ம் போட்ட வேலைக்காரங்க யாரையுமே பிடிக்காது”

“ஆனா உங்கப்பா எக்ஸ்-சர்வீஸ் மேன்னு என் வீட்ல சொன்னாங்களே?”

“ஆமாம், அதனால தான் இந்த வேலையை இவ்ளோ வெறுக்கிறேன் நான்”

“இதென்னங்க அபத்தமா இருக்கு?”

“அபத்தம் தான். ஷ்ஷ்ஷ்ஷ்.., ‘ஷை’ டைப்ன்னு பீத்திக்கிட்டு இவ்ளோ பேசுறீங்க?, நான் இந்த விளக்கம் கொடுத்ததே பெரிய விஷயம். இதுக்கு மேல எதுவும் கேட்க உங்களுக்கு ரைட்ஸ் இல்ல. என்னைப் பிடிக்கலன்னு சொல்லிடுங்க. அவ்ளோ தான்”

“சரிங்க. அப்படியே சொல்லிட்றேன்” – அவன் கூறியதும் உதட்டை ஒருபுறமாக வளைத்தவள்.. “பொதுவா போலீஸ் ஆஃபிசர்ன்னா தோற்றத்திலயும், செயல்லயும் ரஃப் அண்ட் டஃப்-ஆ இருப்பாங்க?, நீங்க எப்படி இவ்ளோ அடக்கமான ஆளா இருக்கீங்க?, அதுவும் பொண்ணுங்கக்கிட்ட பேச கூச்சப்பட்டுக்கிட்டு??, பப்பி ஷேம்!” என்றாள்.

“நான் அப்படித் தான்-ங்க”

“அப்போ அக்யூஸ்ட்களை எல்லாம் எப்படி ஹாண்டில் பண்ணுவீங்க?”

“அதையெல்லாம் தெரிஞ்சுக்கனும்ன்னா, நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி என் கூட குடும்பம் நடத்தனுங்க”

“இதோடா.. நீங்க எப்படியிருந்தா எனக்கென்ன வந்தது?” – என்றவள் முறைத்து விட்டுச் சென்று விட்டாள்.

அன்று இரவு உணவின் போது ‘பொண்ணைப் பிடிச்சிருக்கா?’ எனக் கேட்ட அன்னையிடம் “முதல்ல, அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு கேளுங்கம்மா, அப்புறம் என்னைக் கேக்கலாம்” என்று விட்டான் ஜீவன்.

“ஏன் டா மாப்ள சலிச்சுக்கிற?” எனக் கேட்ட செல்வத்திடம் “அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையாம் மாமா” என்றவன் அவள் சொன்னக் காரணத்தைக் கூறினான்.

வெகுநேரம் அன்று உறங்காமல் ரோஹினியின் புகைப்படத்தையே நோக்கிக் கொண்டிருந்தவன், மறுநாள் காலையே, மாமனை அழைத்துக் கொண்டு அம்பாசமுத்திரத்திற்குக் கிளம்பி விட்டான். அது ரோஹினி வசிக்கும் ஊர்!

“எதுக்கு மாப்ள காலங்கார்த்தால அம்பைக்குக் கூட்டி வந்திருக்க?”-செல்வம்

“மாமா, ரோஹினி வீடு எங்க இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும், ஏன் கேட்குற? அடேய்… அந்தப் பொண்ணைப் பிடிக்கலன்னு தான டா சொன்ன?”

“பிடிக்கலன்னு நான் எப்போ சொன்னேன்?, கட்டுனா.. அவங்களைத் தான் கட்டுவேன்!”

“அடப்பாவி!”

“அவங்க வீடு எங்கன்னு சொல்லுங்க மாமா. நான் அவங்களோட பேசனும்”

“வீட்டுக்குப் போய் பேசுனா.. சங்கு தான் மாப்ள”

“பின்ன?, ஏதாவது ஐடியா கொடுங்க மாமா”

“எப்படியும் அந்தப் பொண்ணு வெளியே வரும், அப்போ நிறுத்தி பேசிடுவோம்”

இருவரும் ரோஹினியின் வீட்டருகேயிருந்த பெட்டிக் கடை ஒன்றில் அவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

முழுதாக இரண்டு மணி நேரம் கழித்து தரிசனம் தந்தவள், ஒரே பார்வையில் இருவரையும் கண்டு கொண்டாள். ஆனாலும் ‘யாரும் பார்த்து விடக் கூடாதே’ என்கிற பதைபதைப்பில் நேராக நடந்து கொண்டிருந்தாள்.

மான,ரோஷத்தையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் செல்வமும்,ஜீவனும்.

“மாப்ள, இது வர்க்-அவுட் ஆகும்னு நினைக்கிறியா?”

“ஏன் மாமா?”

“அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கல போலயே டா”

“நான் பார்க்குற வேலை தான் பிடிக்கலன்னு சொன்னாங்க, என்னைப் பிடிக்கலன்னு சொல்லல. சொல்லவும் மாட்டாங்க”

“இதெல்லாம் குருட்டு நம்பிக்கை டா தம்பி, அய்யய்யோ, அவங்கப்பன் கெடா மீசை வர்றான் டா”

“யாரு,யாரு மாமா?, அந்த டி.வி.எஸ் ஃபிஃப்டியா?”

“ஆமா, அப்படியே ஒதுங்கு மாப்ள, உச்சா போற மாதிரி மறைஞ்சுக்குவோம்”

“அட ச்சி!, ரோஹினி நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?, போங்க மாமா”

“ஏன்?, அவளுக்கெல்லாம் வராதா?, மாப்ள, கெடாமீசை பார்த்தான்னா, இந்த ஜென்மத்துல உனக்கு இவளோட கல்யாணம் நடக்காது, வாடா” – என்றவர் அவனை இழுத்துக் கொண்டு ஒதுக்குப்புறமாய் மறைந்தார்.

மிஸ்டர்.மீசை சென்றதும் மீண்டும் அவளைப் பின் தொடர்ந்தனர். வீட்டுக்கு ஐந்து தெரு தள்ளியிருந்த கோவிலுக்கு வருகை தந்திருந்தாள் அவள்.

விநாயகரிலிருந்துத் தொடங்கி மூலவரை தரிசித்து நவகிரகங்களைச் சுற்றும் வரை அமைதியாய் வேடிக்கை பார்த்தவன், அவள் அமர்ந்ததும் அருகே சென்றான்.

“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்” – ஜீவன்

நிதானமாய் நிமிர்ந்து அவனை நோக்கியவள் “யார் நீங்க?” என்றாள்.

அடிப்பாவி! என்றெண்ணிய ஜீவனுக்கு, முதல் சந்திப்பில் அவன் அவளைத் தவிர்த்ததற்காகப் பழி வாங்குகிறாள் என்பது புரிந்து விட.. கைகளைக் கட்டிக் கொண்டு முறைத்தான்.

“மாப்ள, வாடா போவோம்”

“ஓ!!, சாரும் வந்திருக்கிறாரா?, என்னங்க சார், அன்னிக்கு உங்க பையனை இப்படியெல்லாம் வளர்க்கலன்னு பெருசா பேசுனீங்க?, இப்போ ஏன் இங்க வந்து நிற்கிறாரு?” – இந்தக் கேள்வி செல்வத்திற்கென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“நான் இவனோட தாய்மாமன்ம்மா, கொஞ்சமாவது மரியாதை தரலாமே!” – கிட்டத்தட்டக் கெஞ்சியவரைக் கண்டு சிரிப்பு வர அதை மறைத்து “எதுக்கு இங்க வந்துருக்கீங்க?” என்றாள்.

“நேத்து நீங்க குடிச்ச ஸ்லைஸ்-க்குப் பணம் கொடுக்காம போயிட்டீங்க. அதை வாங்கிட்டுப் போலாம்ன்னு வந்தேன்” - ஜீவன்

“மாப்ள, நீ பேசிட்டு வா டா” – நைசாய் நழுவி விட்டார் செல்வம், எப்படியும் பெரிய பன்னாய்த் திருப்பிக் கொடுப்பாள் அவள்! எதற்கு வம்பு!

“பத்து ரூபாய்க்காக பஸ் ஏறி வந்தீங்களாக்கும்?”

“என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு, நான் வாங்கித் தந்த ஸ்லைஸை மட்டும் ஏன் குடிச்சீங்க?, அதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்”

“பொண்ணுங்கக்கிட்ட பேசவே தெரியாதுன்னு நேத்து எவ்ளோ சீன் போட்டீங்க?, இன்னிக்கு வார்த்தைக்கு வார்த்தை ஃப்ளர்ட் பண்றீங்க?”

“இதுக்குப் பேரு தான் ஃப்ளர்ட்டிங்கா?”

“அடேங்கப்பா!”

“சரி, நான் நேராவே விசயத்துக்கு வர்றேங்க. எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு, உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்”

“ஆஆஆஆஆங்ங்ங்ங்ங்…….”

“வீட்ல ஃபோட்டோ கொடுத்தப்போ, பார்க்கனும்னு கூடத் தோணல. ஆனா உங்களை நேர்ல பார்த்த நாளிலிருந்து, நீங்க தான் எனக்கு பொண்டாட்டியா வரனும்னு உள் மனசு சொன்னதையே சொல்லிட்டிருக்கு! நீங்க என்ன சொல்றீங்க?”

“எ..என்ன திடீர்ன்னு?, ‘பிடிக்கலன்னு சொல்லிடுங்கன்னு’ நேத்து நான் சொன்னப்போ சரின்னு தான தலையாட்டுனீங்க?”

“அது பொய்-ங்க. நேத்து நீங்க ரொம்பக் கோபமா இருந்தீங்க. அதான் நான் உங்களை மறுத்துப் பேசல”

“………………….”

“எனக்குப் பொண்ணுங்க கூடப் பேசி பழக்கமில்ல ஓகே!, உங்களுக்கும் பசங்க கூடப் பேசி பழக்கம் இல்ல போலயேங்க??”

“அப்படியெல்லாம் இல்லையே! நான் என்ன உங்களை மாதிரி ஓடவா செஞ்சேன்?”

“இல்ல, நான் பிடிச்சிருக்குன்னு சொன்னதும், உங்க காது,மூக்கெல்லாம் சிவந்து போச்சே! அதைச் சொன்னேன்! வெட்கப்படுறீங்களோ??”

“ஹலோ!, என்ன கொழுப்பா?, போலீஸ் ஆஃபிசரா இருந்துக்கிட்டு பப்ளிக் ப்ளேஸ்ல ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க?”

“உங்களை விட்டுப் பத்தடி தள்ளி நின்னு, டீசண்ட்டா பேசிட்டிருக்கேன். என்னைப் போய் இப்படி சொல்றீங்க?”

“…………………”

“எப்போ எனக்கு பதில் சொல்லப் போறீங்க?”

“நான் தான் நேத்தே க்ளியரா சொல்லிட்டேனே! எனக்கு யூனிஃபார்ம் ஆட்களையே பிடிக்காதுன்னு?”

“ஏன்-ங்க?, நாட்டைக் காக்குற புனிதமான வேலைல இருக்கோம். எங்க மேல ஏன் உங்களுக்கு இவ்ளோ வெறுப்பு?”

“வெறுப்பு இல்ல. பயம்”

“பயமா?, ஏன்?”

“எங்கண்ணன், ஆர்மில இருந்தது உங்களுக்குத் தெரியுமா?”

“ஹ்ம்ம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார்ன்னு கேள்விப் பட்டேன்”

“ம், கல்யாணமாகி ரெண்டே வருசத்துல போய்ச் சேர்ந்துட்டான். என் அண்ணியையும், குழந்தையையும் அநாதையா விட்டுட்டு.”

“நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் பண்ணின தியாகிங்க அவர், அவரைப் பார்த்தும் கூடவா உங்களுக்கு எங்க வேலை மேல வெறுப்பு?”

“அவன் நாட்டுக்காக போய்ச் சேர்ந்துட்டான், அவனை நம்பி இருக்கிற அண்ணிக்கும்,பாப்பாவுக்கும் யார் பொறுப்பு?, என்னால.. என் வாழ்க்கைல அப்படி ஒரு சூழ்நிலையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல. எனக்கு ரிஸ்க்கியான வேலைல இருக்கிற எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்”

“இது முட்டாள்த்தனம் ரோஹினி”

முதல்முறையாகப் பெயர் சொல்லி அழைக்கிறான்!, மனது அதைக் குறித்துக் கொண்டாலும் விறைப்பாய் நின்றாள்.

“அதே ஆர்மில வேலை பார்த்தவர் தான் உங்கப்பா. நல்ல படியா ரிடயர்ட் ஆகி வந்து, இன்னிக்கு டி.வி.எஸ் ஃபிஃப்டி ல ஜம்முன்னு போயிட்டிருக்கார்!, அவரை ஏன் பார்க்க மாட்டேங்குறீங்க?, ஒவ்வொருத்தருடைய தலையெழுத்தும் ஒவ்வொரு மாதிரிங்க. சாகனும்னு விதியிருந்தா.. எந்த வேலை பார்த்தாலும்,செத்துத் தான் போகனும்! எந்த ஜாப்ல தான் ரிஸ்க் இல்ல?, உங்க லாஜிக் படி பார்த்தா.. பேங்க் உத்தியோகத்துல இருக்கிறவனும்,டீச்சர் வேலை பார்க்கிறவனும் நீண்ட ஆயுளோட இருக்கனும். அப்படி யாரையாவது காட்டுங்க பார்ப்போம்”

“…………………………”

“தயவுசெஞ்சு இந்த எண்ணத்தை மாத்திக்கோங்க ப்ளீஸ்!, எல்லாப் பொண்ணுங்களும் இப்படி நினைச்சா.. எங்களை மாதிரி ஆளுங்க பிள்ளை,குட்டியோட வாழ வேண்டாமா?”

“ஹ்ம்ம்,உங்க கவலை உங்களுக்கு”

“கொஞ்சம் தெளிவா யோசிங்க ப்ளீஸ்!, எனக்காக…”

“உங்களுக்காக நான் ஏன் யோசிக்கனும்?, அப்படி என்ன என் கிட்டப் பிடிச்சிருக்கு?

“கொஞ்சம் அடாவடியா இருக்கீங்க!,அதான்ன்ன்ன்ன்”

“ஓஹோ! என்னை மாதிரி பொண்ணுங்களைச் சமாளிக்கிறதுக் கொஞ்சம் கஷ்டம். தெரியுமா?”

“ஹாஹாஹா…. தெரியும்ங்க”

“பரவாயில்லையே!, பல் தெரியற மாதிரி சிரிக்கத் தெரியுது உங்களுக்கு?”

“ஆமாங்க, உங்களைப் பார்க்கும் போது மட்டும் தான் இந்த மாதிரி சிரிக்க வருது”

“அதென்ன, வார்த்தைக்கு வார்த்தை ங்க,ங்க-ன்னு?, கல்யாணத்துக்கு அப்புறம் வாடி,போடின்னு தான கூப்பிடப் போறீங்க?, எதுக்கு இவ்ளோ சீன்?”

“ச்ச,ச்ச எனக்கு அதெல்லாம் வராதுங்க. எங்கம்மாக்கு அப்புறம், நான் இவ்ளோ பேசுற முதல் பொண்ணே நீங்க தான்! நமக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா.. அது மூணாவது ஆளா இருக்கும்”

“ச்ச,ச்ச இன்னும் நான் கல்யாணத்துக்கே ஓகே சொல்லல, அதுக்குள்ள குழந்தைக்குப் போயிட்டீங்க” – சிடுசிடுத்தாள் அவள்.

“எனக்கு இன்னும் 3 நாள் தான்-ங்க லீவ் இருக்கு. இதுக்கப்புறம் நான் ஊர்ப்பக்கம் வர ஆறு மாசமாகும். அதுக்குள்ள நீங்க ஓகே சொல்லிட்டா.. நான் சந்தோசமா கிளம்புவேன்”

“பார்ப்போம்!”

“பார்க்கலாம்!, அப்போ நான் வர்றேங்க” – என்றவன் செல்வத்துடன் புறப்பட்டான்.

அடுத்த மூன்று நாட்களும் அவனை முழுதாய்த் தவிக்க விட்டு மூன்றாம் நாள் மாலை நெல்லையப்பர் கோவிலில் சந்தித்தாள் ரோஹினி.

ஆரஞ்சு வண்ண சுடிதாரில்,மையிட்ட விழிகளுடனும்,ஒப்பனையற்ற முகத்துடனும் அவனை வெகுவாய் ஈர்த்துக் கொண்டிருந்தாள் அவள். ப்ளூ ஜீன்சும்,சிகப்பும்,கருப்புமாய் சட்டையணிந்திருந்தவன் அவள் பார்க்காத போது அவளையே பார்த்தபடிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.

அமைதியாய் அமர்ந்திருந்தவன் இப்போதைக்கு வாயைத் திறக்க மாட்டான் என்றறிந்து கொண்ட ரோஹினி தானே தொடங்கினாள்.

“எங்க உங்க மாமாவைக் காணோம்?”

“எதுக்கு டிஸ்டர்பென்ஸ்ன்னு அவரைக் கழட்டி விட்டுட்டேங்க”

“அதுசரி”

“கை-ல என்ன அது? கிஃப்ட்டா?”

“ஹ்ம்ம்”

“எனக்கா??”

“ம்,ஆமாம்”

“அப்போ கொடுங்க, என்னன்னு பிரிச்சுப் பார்க்குறேன்”

“ம்ம்ம்ம்ம்”-என்றபடி உதட்டைக் கடித்துக் கொண்டுத் தயக்கத்துடன் அவனிடம் கையிலிருந்ததை நீட்டினாள்.

நிதானமாக அதைப் பிரித்தவன், உள்ளே இருந்ததைக் கண்டு விழி விரித்தான்.

ஆழி இலைக் கிருஷ்ணனை அவன் ஜாடையில் வரைந்திருந்தாள். கீழே “To: Mine, - Yours, Rohini” என்றெழுதப்பட்டிருந்தது. கண்கள் பளபளக்க அதை வாசித்தவனுக்கு.. சப்த நாளங்களிலும் சூடாக ஏதோ ஒன்று ஆறாய் ஓடி.. இதுவரை தோன்றியிராத புது உணர்வொன்றை கற்பித்துக் கொடுத்தது.

“நீங்க வரைஞ்சதா?” - ஜீவன்

“ஹ்ம்ம்”

“எனக்காகவா??????”

“ப்ச்…” – வழக்கம் போலத் தன் பெரிய கண்களை விரித்து முறைத்தாள் அவள்.

“ஹாஹாஹா… அப்போ எனக்கு தான் போல!, என் முக ஜாடையில் வரைஞ்சிருக்கீங்களோ?” – புன்னகையில் கொள்ளை போன முகத்துடனும், அவன் அனுமதியின்றியே மையல் குடி கொண்டு விட்ட விழிகளுடனும் அவளிடம் வினவினான் அவன்.

“ம்ம், எப்படியிருக்கு?” – ஆர்வமாய் அவள் முகம் நோக்கினாள் அவள்.

புருவத்தைச் சுருக்கிக் கொண்டு “ம்ம்ம்ம்ம்ம்ம்” என யோசித்தவன் “புருவம் கொஞ்சம் திக்னெஸ் கம்மியா இருக்கு. மூக்குக் கூட சரியில்லயேங்க…” எனக் கூற.. எரிச்சலாகிப் போனவள், வேகமாய் எழுந்து வந்து “யோவ், குடு-ய்யா பெயிண்டிங்கை!, ரசனை கெட்ட மனுஷன் நீ-ன்னு தெரியாம, உன்னைப் போய்ப் பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன் பாரு, குடு-ய்யா,குடு..” என்றபடி அவனிடமிருந்துப் பெயிண்டிங்கைப் பிடுங்கப் போராடிக் கொண்டிருந்தாள்.

“ஹாஹாஹா..”-வெனப் பெரிதாகச் சிரித்தவன் அவள் இரு கைகளையும், தன் ஒரு கரத்தால் பற்றி…. “என்ன?, என்ன சொன்னீங்க இப்போ?” என்று வினவினான்.

“ரசனை கெட்ட ஆஃபிசர்ன்னு சொன்னேன்”

“அதுக்கப்புறம் வந்த ஸ்டேட்மெண்ட்??”

“சொல்ல முடியாது”

“ப்ளீஸ்.. இன்னொரு தடவை சொல்லுங்க”

“உ…உங்களைப் பி…பிடிச்சிருக்குன்னு சொன்னேன்” – தலையைக் குனிந்தபடித் தயக்கமாய்க் கூறினாள்.

குனிந்து அவள் முகத்தை நோக்கியவன் “நிஜமாவா?” என்று வினவினான்.

அவனிடமிருந்துத் தன் கையை உறுவிக் கொண்டவள் மீண்டும் பழைய இடத்திலேயே வந்தமர்ந்தாள்.

“ஒரு போலீஸ் ஆஃபிசரைக் கொஞ்சம் கூடப் பயமே இல்லாம, நீ,உன்னைன்னு மரியாதை இல்லாம பேசுறீங்க!”

நாக்கைத் துருத்திப் பழிப்புக் காட்டினாள் அவள்.

எழுந்து அவளருகே வந்து இரண்டடி இடைவெளியில் அமர்ந்தவன் “இனி அப்படியே கூப்பிடுங்க, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான்.

அத்தனையருகே அவன் அமர்ந்ததும்… அருகேயிருந்த ஆலமரத்திலிருந்து வீசிய காற்று, மைனஸ் டிகிரியில் அடிக்கும் பனிப்புயலாய் உடலைத் தாக்க.. லேசாய் நடுங்கியது அவளுக்கு. தலை குனிந்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தவளிடம்..

“எங்கேயிருந்தீங்க இவ்ளோ நாளா?”-என்று வினவினான்

என்ன கேள்வி இது என்பது போல் நோக்கினாள் அவள்.

“இல்ல, முன்னமே அறிமுகமாயிருந்தா.. நிறைய லவ் பண்ணியிருக்கலாம்”

“இப்போ என்ன?, மிச்சமிருக்கிற வாழ்க்கை முழுசும் லவ் பண்ணிக்க வேண்டியது தான்”

“குறைஞ்சபட்சம் இரண்டு நாள் முன்னாடியாவது சொல்லியிருக்கலாம்ல?”

“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

“நம்ம கல்யாணத்தை நிச்சயம் பண்ணியிருப்பேன்”

“ஹாஆஆஆஆஆஆங்??”

“நிஜமா தான்-ங்க!, இனி ஆறு மாசம் வெயிட் பண்ணனும்”

“வெய்ட் பண்ணலாம். தப்பில்ல. உங்களைப் பத்தி நானும், என்னைப் பத்தி நீங்களும் தெரிஞ்சுக்க டைம் வேணும்ல?”

“அதுசரி”

“அப்போ நான் கிளம்பட்டுமா?, டைம் ஆச்சு”

“பத்து நிமிஷம் இருங்க ப்ளீஸ், இப்போ தான் லவ் பண்றதா சொன்னீங்க, அதுக்குள்ள கிளம்புறேன்றீங்க?”

“லவ்வாஆஆஆ?, பிடிச்சிருக்குன்னு மட்டும் தான் சொன்னேன்”

“ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கா என்ன?”

“நீங்க ரொம்ப மக்கு போலீஸ் ஆஃபிசர் போல மச்சான்…”

“மச்சானா??”

“ஏன்?, நல்லாயில்லையா?, இனி நான் உங்களை மச்சான்னு தான் கூப்பிடுவேன்”

“நீங்க எப்படிக் கூப்பிட்டாலும் எனக்குப் பிடிக்கும்-ங்க”

“சரியான வழிஞ்சான் கேஸ்!, இவரு ‘ஷை’ டைப்பாம்!, வெவ்வவவவ”– வாயிலேயே அடித்துக் கொண்டாள் அவள்.

அவள் செய்கைகளனைத்தும் அவனுக்கு வித்தியாசமாய்த் தெரிந்தது போலும்! பே-வெனப் பார்த்தபடிக் கண் சிமிட்டக் கூட மறந்து போனான்.

“ரோஹினி………”

“ம்ம்??”

“இப்போ நான் உங்கக் கையைப் பிடிச்சா என்னங்க பண்ணுவீங்க?

“செருப்பால அடிப்பேன்”

“நல்ல வேளை, கோயிலுக்கு வந்தோம்”

“என்ன நக்கலா?, நீங்க இப்படியே பேசிட்டிருங்க, நான் கிளம்புறேன்” - அமர்ந்திருந்த இடத்திலிருந்துக் குதித்து இறங்கினாள் அவள்.

இரண்டடி நடந்தவளை “ரோஹினி….” என்றழைத்து நிறுத்தியவன்.. தானும் இறங்கி வந்து, அவள் முன்னே நின்றுத் தன் வலது கையை நீட்டினான்.

கண்ணைச் சுருக்கி முறைத்தவளிடம் அவன் “ப்ளீஸ்” என்றதும், அவன் கை மீதுத் தன் கரத்தை வைத்தாள்.

“நானும் உங்களோட பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வர்றேன்” என்றவன் கையைப் பற்றியபடியே உடன் நடந்தான்.

“இ…இப்படியேவா??” – கோர்த்திருந்த கைகளைத் தயக்கமாய் நோக்கினாள் அவள்.

“இப்படியே தான்”

ஒரு நொடி அமைதியாய் நடந்தவள், பின் தன் கையை உறுவி, அவன் வலது கை முட்டியைச் சுற்றிப் பற்றிக் கொண்டு தன் புறம் குனிந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தாள்.