அத்தியாயம் - 4

ரகசியமாய்…. ரகசியமாய்…

புன்னகைத்தால்.. பொருள் என்னவோ???

-நள்ளிரவு 12 மணி. மனிதனாய்ப் பிறந்த அனைவரும் நித்திரை கொள்ள வேண்டிய நேரம்! ஆனால் நான் மட்டும் மடிக்கணிணியைப் பார்த்தபடி இந்தப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்! பேய்,பிசாசு ஏதேனும் அருகே வந்தால், என் குரலைக் கேட்டு அப்படியே ஓடட்டும்! ம்க்கும்! (இருமல்) ஆனால்.. என் ஹம்மிங்கின் காரணம் அதுவல்ல.. இருபதுகளின் இறுதியில் இருந்த ஜீவனின் முன்னுச்சிக் கற்றை முடியும், அவரது பெரிய கண்களின் வசீகரமும் தான்! ஆனா.. மனுஷன் போலீஸ் ஆஃபிசரா?? ச்ச! அந்த ‘க்ராப்பை’ வைத்து நான் முன்னமே கணித்திருக்க வேண்டும்! ஆனால்.. இப்போது சர்வீஸில் இருக்கும் ஆளைப் போலத் தெரியவில்லையே! தான் ஒரு போலீஸ் என்பதை ப்ரொஃபைலில் அவர் குறிப்பிடவே இல்லை! ஏன்?? சரி, அடுத்து என்ன நடந்ததென்று பார்ப்போம்!

‘என் செல்ல மிளகாயே! அன்றுப் பச்சையாய் இருந்து என் மூளையை இம்சித்தது போதாதென்று, இன்று சிகப்பாய் மாறி என் இதயத்தை வதைக்கிறாயே!’

-ஹாஹாஹா! ஸ்டேட்டஸை வாசித்த எனக்கு சிரிப்புப் பீறிட்டது. யோவ் அங்கிள்! கவிதையா-ய்யா இது??, தலையில் அடித்துக் கொண்டு வீடியோவைக் க்ளிக்கினேன்!

ன்று அந்த மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை. ஊராருக்கெல்லாம் அது வெறும் ஞாயிறு! ஆனால் டோனட் காஃபேயின் ஆண்களுக்கு மட்டும் அது ‘தீர்த்தம்’ பருகும் நாள்! வடிவேல் பாஷையில் பச்சையாகச் சொல்ல வேண்டுமானால்.. அனைவரும் ‘அரை போதை நாயாக’ மறு உருவமெடுக்கும் நாள்!

இரவு ஒன்பது மணிக்கே கடையை இழுத்து மூடி விட்டு, குடி,குடியெனக் குடித்துத் தீர்த்த அனைவரும் ஆளுக்கொரு மூலையில் ‘ஆஆஆ’-வெனக் கிடக்க… நாம் தேடிக் கொண்டிருக்கும் முக்கியமான ஆளை மட்டும் காணவில்லை! அந்த ‘அவன்’ ஆட்டோ ஒன்றில் சீரான வேகத்தில் கே.கே.நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான்.

அதிதி மற்றும் ஆதித்யனை உறங்க வைத்த ரோஹினி தன் மடிக்கணிணியில் எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் வாசல் கதவை யாரோ தட்டும் ஒலி கேட்டது.

யாராக இருக்கும் எனப் புருவத்தைச் சுருக்கியவள், திரும்பிக் காலண்டரை நோக்கினாள். ஓ! செகண்ட் சண்டே ஆஃப் திஸ் மந்த்! அப்படியானால், நிச்சயம் இது திருவாளர்.போலீஸ்கார் தான் என்றெண்ணிக் கொண்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

வாசலில் சாந்தமான முகத்துடன் நின்றிருந்த ஜீவனைக் கண்டால்.. அவனது சிறுகுடலிலிருந்து மலக்குடல் வரை அத்தனையையும் ஸ்காட்ச் அடைத்திருப்பதைக் கண்டறியவே முடியாது. ஸ்டெடியாக நின்று நேர்ப்பார்வையுடன் அவளை நோக்கினான்.

“குழந்தைங்க தூங்கிட்டாங்களா??” – லைட்டா வாய் குழறுதே போலீஸ்கார்!!!!

“எப்பவோ தூங்கிட்டாங்க” - ரோஹினி

“சரி, நான் இப்போ உள்ள வரப் போறேன்” – இப்போது மொத்தமாய்க் குழறிப் போன வார்த்தைகளுடன் தட்டுத் தடுமாறிப் படியேறினான் அவன். கையைக் கட்டிக் கொண்டு அவனுக்கு வழி விட்டு நின்ற ரோஹினி, கதவை அடைத்து விட்டு உள்ளே வந்தாள்.

இப்போது அந்தச் சிறிய வராண்டாவின் ஒரு மூலையில் ‘இது எனக்கான இடம்’ என்பது போல் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவன், கண்களை மூடியபடிச் சாமியாடிக் கொண்டிருந்தான்.

அவனது வினோத செய்கைகள் அத்தனைக்கும் ரோஹினியிடமிருந்து எந்தவித பதிலுமில்லை! இது வழக்கம் தான் என்பது போல், ஷோஃபாவில் அமர்ந்து மடிக்கணிணியின் மீதுப் பார்வையைப் பதித்திருந்தாள்.

பின் திடீரென… “ரோஹினினினினி” – எனச் சீறலாய் அவன் தொண்டையிலிருந்து சத்தம் வந்தது! இதுவரை நாம் கண்டிருந்த ஜீவனின் குரலே அல்ல அது!

நிமிர்ந்து அவனை நோக்கினாள் அவள். யோகா செய்பவன் போன்று சம்மணமிட்டு அமர்ந்து கைகளிரெண்டையும் முட்டியின் அருகே நீட்டியிருந்தவனின் கண்கள் இப்போதும் திறந்த பாடில்லை! ஆனால்.. தலை மட்டும் சாமியாடிக் கொண்டிருந்தது.

“ஏய்….. நிமிர்ந்து என்னைப் பாரு டீ, இங்க ஒருத்தன் கத்துறது கேட்கல??”

“சத்தத்தைக் குறைங்க. குழந்தைங்க தூங்குறாங்க”

“நிமிர்….ந்து என்….னைப் பா…ரு….டி” – ‘வெறும் காத்து தான்-ங்க வருது’ குரலுடன் மறுபடி சொன்னதையே சொன்னான் அவன்.

உதட்டை மடக்கி சத்தமில்லாமல் வயிறு குலுங்கச் சிரித்த ரோஹினி மடிக்கணிணியிலிருந்துப் பார்வையைத் திருப்பவேயில்லை.

‘குழந்தைங்க’-என்கிற வார்த்தை அவனை அத்தனை பாதித்திருக்கிறது போலும்!, ரோஹினியின் வாயிலிருந்து வரும் மற்றவற்றை உதாசீனம் செய்து விட்டு ‘குழந்தைங்க’ என்கிற வார்த்தைக்கு மட்டும் அலெர்ட்டாக இருக்கும் படி மூளைக்குக் கட்டளையிட்டு வைத்திருக்கிறான்! ப்ளடி ஆஃபிசர்!

“நான் இன்னும் என்ன செஞ்சா உன் கோபம் போகும்டி?? முதல்ல, என்ன பெரிய கோபம் உனக்கு! பொல்லாத கோபம்!! கட்டின புருஷன் கடவுள் மாதிரி! காலைத் தொட்டு கும்பிடாட்டியும் பரவாயில்ல! எட்டி உதைக்காதடி… எவ்ளோ… வலிக்கும் தெரியுமாஆஆஆஆ?????”

-நாற்பதுகளில் இருக்கும் ஆணா இவன்???, 4 க்ளாஸ் உள்ளே போனால் போதுமே! வயது,படிப்பு,வேலை என சகலத்தையும் மறந்து விடுவான்! கொஞ்சம் கூட முதிர்ச்சியில்லாத.. டீனேஜர் போல நடந்து கொண்டு! குடிகாரப் பயபுள்ள!

“ஷ்ஷ், மெதுவா பேசுங்கன்னு சொன்னேன்” - ரோஹினி

“மெதுவா பேசுறேன், மெதுவா பேசுறேன்!, நீ சொல்றதெல்லாம் கேட்குறேன்! என்னோட வந்துடி… ம், சொல்லு, வருவியா.. வர மாட்டியாஆஆஆஆ??”

-அவள் இதற்கும் செவி சாய்க்காமல், இப்போது செல்ஃபோனை நோக்கிக் கொண்டிருந்தாள்.

“5 வருஷம், முழுசா 5 வருஷம் முடிஞ்சு போச்சு!, இன்னிக்கு வருவ, நாளைக்கு வருவன்னு லூசு மாதிரி நான் காத்திட்டிருந்த நாளெல்லாஆஆஆம் ஓடிப் போச்சு.. ஆமா, ஓடியே போச்சு…..” – இப்போது ஒரு கையை மட்டும் முட்டியிலிருந்து எடுத்து ஆட்டிக் கொண்டிருந்தான்.

“ஆனா உன் கிட்ட இத்தனை வருசத்துல ஒரு… ஒரு சின்ன மாற்றம் கூட இல்ல… ஏன் டி ஏன்??, எனக்கு இப்போஓஓஓ பதில் வேணும்.. சொல்லுடி….”

“……………..”

“பதில் சொல்லுடி, திமிர்ப்பிடிச்சவளே!!!”

“தெளிவா இருக்கும் போது ங்க,ங்க-ன்னு வார்த்தைக்கு வார்த்தை மரியாதை தர வேண்டியது, போதையானதும் சகட்டு மேனிக்கு ‘டி’ போட வேண்டியது! மாசத்துக்கொரு தடவை இந்தாளோட அக்கப்போரா இருக்கு” – தன் போக்கில் புலம்பிய ரோஹினி உள்ளே எழுந்து சென்றாள்.

இப்போது கண்ணைத் திறந்தவன் “ஏய்… போகாதடி.. போகாத…” என்று எழுந்து நின்று.. ஒரு அடி எடுத்து வைத்து.. மீண்டும் பழைய பொஸிஸனிலேயே நின்று “நோ, இந்தக் கோட்டைத் தாண்டி நான் வர மாட்டேன்! இது என் எல்லை” எனக் கூறிப் பெருமூச்சு விட்டான்!

மறுபடி வெளியே வந்தவளின் கையில் ஒரு தம்ளர் எலுமிச்சைச் சாறு இருந்தது. அவன் முன்னே டொக்கென வைத்தவள் “இதைக் குடிங்க” என்றாள்.

“மாட்டேன்… குடிக்க மாட்டேன்!, இதைக் குடிச்சுத் தெளிவாய்ட்டா… என் மனக்குமுறலையெல்லாம் எப்படிடி வெளியே சொல்றது???”

“அதுசரி…..” – ரோஹினி

“உனக்கு என் கஷ்டம் என்னன்னே புரிய மாட்டேங்குதுடி! 40-வயசுல என் துணியை நானே துவைச்சிக்கிறது எவ்ளோஓஓஓ பெரிய விசயம் தெரியுமா??, பொண்டாட்டி கையால சாப்பாடுன்றதெல்லாம் மறந்தே போயாச்சு!! 20ஸ்-ல இருக்கிற பேச்சுலர் மாதிரி என் வேலையெல்லாத்தையும் நானே பார்த்துட்டு, ஒண்டியா வாழ்ந்துட்டு இருக்கேன்!”

“……………”

“இதையெல்லாம் விடுடி! பசி,தூக்கம் மாதிரி செக்ஸ்-ன்றது ஒரு ஆணோட,இல்ல,இல்ல ஒரு மனுஷனோட அடிப்படைத் தேவை!! ஆனா.. நான்.. 37 வயசுல இருந்து பிரம்மச்சாரியா வாழ்ந்துட்டிருக்கேன்!! உன்னைக் கடைசியா எப்போ கிஸ் பண்ணேன்றது கூட ஞாபகமில்ல எனக்கு! அன்னிக்கு… அன்னிக்கு அந்த கருப்பு சாரி-ல எவ்ளோ…. அழகா இருந்த தெரியுமா???, இந்த வயசுல, சொந்தப் பொண்டாட்டியவே சைட் அடிக்கிறது எவ்ளோ கொடுமை! ச்சை!”

“……………”

“நீ டிவர்ஸ் பண்ணப்புறம் நான் எவ பின்னாடியாவது போயிட்டேனா… இல்ல, உனக்குத் தான் வேற யார் மேலயும் விருப்பம் வந்துச்சா??, இந்த 5 வருசத்துல இது ரெண்டுமே நடக்காதப்போ.. உன்னோட வெறும் வரட்டு பிடிவாதத்துக்காக நாம ஏன் டி பிரிஞ்சு இருக்கனும்???, ”

“…………………..”

“பதில் சொல்லுடி… எனக்கு இப்போ பதில் தெரிஞ்சாகனும்……” என்றவன் லொக்,லொக்கென இருமி “ஆஆஆஆ, தொண்டை எரியுது” என்றான்.

எரிச்சலுடன் எழுந்து வந்து கீழேயிருந்தத் தம்ளரை எடுத்து அவன் வாயில் வைத்தாள். கடகடவென அவள் ஊற்றியதும், மூச்சு விடாமல் குடித்தவன் தடுமாறிக் கீழே அமர்ந்தான்.

தொங்கிய தலையுடன் அடுத்த அரை மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் பின் தலையை உலுக்கிக் கொண்டு மெல்ல எழுந்தான்.

லேசாக உணர்வு திரும்புகிறது போலும்! தன்னையே கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ரோஹினியை நிமிர்ந்தும் பாராமல் “நான் கிளம்புறேங்க” என்றான்.

அவள் பதிலை எதிர்பாராமல் நடந்தவன், வாசலருகே வந்ததும் “க..கதவைச் சாத்திக்கோங்க” என்றபடி மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான்.

பேபி பிங்க் நிறத்தில் முழு நீள இரவு கவுன் அணிந்திருந்தாள், தூக்கிக் கொண்டையிட்டிருந்த முடி, ஆங்காங்கு முன்னுச்சியில் பறந்து கொண்டிருந்தது. முகத்தில் கோபம்,எரிச்சல்,தூக்கம் போன்ற கலவையான உணர்வுகளோடு வேறொன்றும் சேர்ந்திருந்தது. அது என்னவென்று அவனால் பகுத்தறிய முடியவில்லை!

பின் வேண்டுமென்றே தடுமாறி அவள் மீது மொத்தமாய்ச் சாய்ந்தான்.

அவள் அணியும் ‘சாக்லேட்’ பர்ஃப்யூமை நுரையீரலில் நிரப்பி, அவள் தோள் வளைவின் மென்மையைத் தன் கன்னத்தில் தேக்கி.. அவள் இடையின் சுற்றளவைக் கையால் கணக்கிட்டு, காமமற்றத் தன் அணைப்பின் தீவிரத்தைத் தெளிவாய் உணர்த்தி.. மெல்ல விலகினான் அவன்.

செக்கச் சிவந்த செவ்வானத்துடன் போட்டி போடும் அபிப்ராயம் ரோஹினிக்குக் கொஞ்சமும் கிடையாது தான்! ஆனாலும், சிவப்பேறத் தொடங்கிய உடலின் அத்தனை பாகங்களையும், இறுக மூடிய உள்ளங்கையினால் அடக்கினாள்.

“சா…சாரிங்க, கா…கால் தடுக்கிடுச்சு” – வழக்கமாக அவன் கூறும் ஒரே பொய் தான்! ஆனாலும் சரியெனத் தலையாட்டினாள் அவள்.

அதன் பின்பு அவளைத் திரும்பியும் பார்க்காமல் விடுவிடுவென வெளியேறி விட்டிருந்தான் அவன்.

றுநாள் காலை அதிதியை அழைத்துச் செல்ல வந்தவனுக்கு நேற்றைய சம்பவத்தின் தாக்கம் துளி கூட இல்லை. ஏன், அப்படியொரு நிகழ்வு நடந்ததென்பதையே அவன் மூளை சென்சார் செய்து விட்டிருந்தது.

“ரோனி, என்னோட பிங்க் கலர் லெஹங்கா எங்க?, ஃப்ரை டே எங்களுக்கு ‘டெஸி டே’. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் லெஹங்கா போடப் போறோம்” - அதிதி

“கப்போர்ட்ல லாஸ்ட் செல்ஃப்ல இருக்கும் பாரு”

“என்னோட லாங் ஸ்டட்?,பேங்கிள்ஸ் எல்லாம்??”

“நான் எடுத்து வைக்கிறேன்டி, நீ வந்து இந்தப் பூரியைக் காலி பண்ணு முதல்ல” – என்றவள் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜீவனை ஒரு மரியாதைக்குக் கூடச் சாப்பிடச் சொல்லவில்லை.

தொண்டைக்கும்,உணவுக் குழாய்க்கும் இடையே ‘சொய்ங்ங்ங்’ என ‘ரைட்’ போய்க் கொண்டிருந்த சாண்ட்விச்சை “ப்ப்ப்ப்” என ஏப்பம் விட்டுக் கீழே இறக்கியவன் ஆதியிடம் குனிந்தான்.

“போகலாம் ஜீனு..” - அதிதி

“எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா?, வீட்டுக்குப் போனதும் அது இல்ல,இது இல்லன்னு என்னை அலைய வைக்காதீங்க, எனக்குக் கொஞ்சம் வயிறு வேற சரியில்ல” – ஜீவன்.

“அவ கேட்டதும் உடனே நீங்க இங்க ஓடி வராம, அவ கிட்ட மறுத்துப் பேசிப் பழகுங்க. நீங்கன்னாலே ரெண்டு பேருக்கும் இளக்காரமா இருக்கு போல” - ரோஹினி

“அவங்களுக்கு மட்டும் தானா?”

“என்ன நக்கலா?”

“இல்லங்க, உண்மையைச் சொன்னேன்” என்றவன் ஆதியிடம் டாட்டா சொல்லி விட்டு அதிதியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

வாசலில் நின்றபடி இருவரையும் நோக்கிக் கொண்டிருந்தவளிடம் திரும்பி ஒரு பார்வையை செலுத்தினான். ஹெல்மெட்டுக்குள் மறைந்து போயிருந்த முகத்துடன், அவன் கண்கள் மட்டும் கூறிய செய்தி அவளுக்குப் புரியமாலில்லை. கோபம்,ஆதங்கம்,யாசிப்பு அத்தனையும் கலந்த ‘இன்னும் எத்தனை நாளுக்கடி இந்தப் பிழைப்பு??’ என்பது போன்ற ஒரு பார்வை அது! – ஒரு நொடி தான்! அதன் பின்பு மகளுடன் பைக்கில் பறந்திருந்தான்.

இதே போன்ற ஒரு பார்வை பானத்தை இதற்கு முன்பு அவளை நோக்கிச் செலுத்தியிருக்கிறான். ஆனால் அதில் காதல்,காதல்!!! காதல் மட்டுமே நிறைந்திருந்தது.

திருமண மேடையில் தன்னருகே புன்னகையுடன் நின்றிருந்த ஜீவானந்தத்தைத் திரும்பி நோக்கிய ரோஹினிக்குச் சத்தியமாக நடப்பதை நம்பவே முடியவில்லை! குனிந்து, காலையில் அவன் தன் கழுத்தில் கட்டியத் திருமாங்கல்யத்தைப் பார்த்துக் கொண்டாள்! ஆறுமாதத்திற்குப் பிறகு தான் வரமுடியும்,அது,இதுவென வசனம் பேசியவன், அடுத்த இரண்டே மாதத்தில் திருமணத்தை முடித்திருந்தான். எமகாதகன்!

இந்த இரண்டு மாதத்தில் பெரிதாக இருவரும் பேசிக் கொள்ளக் கூட இல்லை. ஏனெனில் அவனுக்கு டியூட்டி போடப்பட்டிருக்கும் இடம் அப்படி! சத்திஸ்கர் மாநிலத்தின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் கிராமத்தில் பணி புரிகிறானாம்!

போலீஸ், போலீஸ் என்று இத்தனை நாட்களாக அவனைக் காக்கிச் சட்டையில் கற்பனை செய்து வைத்திருந்தாள் அவள். உண்மையில் அவன் மிலிட்டரி யூனிஃபார்ம் அணிபவன்.

He is an Assistant Commandant in CRPF (Central Reserve Police Force). அப்படியென்றால் என்னவென்று கூட ரோஹினிக்குத் தெரியாது. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கென இந்திய அரசால் ஒதுக்கப்பட்டிருக்கும் காவல்படையாம்!.

அதுமட்டுமல்ல! அசிஸ்டெண்ட் கமாண்டண்டிற்கான யு.பி.எஸ்.சி தேர்வில் இந்தியாவிலேயே நான்காம் இடத்தைப் பிடித்து நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டவனாம் இவன்!

பன்னிரெண்டாம் வகுப்பில் எழுநூற்றி சொச்ச மார்க்குகளை எடுத்துப் பார்டரில் பாஸாகி, கடனே என பி.எ.இங்க்லிஷ் லிட்ரேச்சர் படித்த அவள் எங்கே! இந்த அறிவாளி எங்கே!

“என்னங்க உம்முன்னு இருக்கீங்க?, ஆறு மாசம் மெதுவா லவ் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டு ரெண்டே மாசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கோபமா?” -ஜீவன்

“பின்ன இருக்காதா?”

“ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்க வாழ்க்கை முழுசும் இருக்குங்க. ஆறே மாசத்துலலாம் மொத்தமா புரிஞ்சுக்க முடியாது”

“அதுசரி”

“இது மட்டும் தான் உங்க கவலையா??”

“இ..இல்ல…..”

“ம்ம்,சொல்லுங்க”

“நான் உங்களை எங்கப்பா மாதிரி ஒரு மக்குன்னு நினைச்சு வைச்சிருந்தேன்”

“வாட்??”

“இல்ல,20 வயசுல வேலை,வெட்டியில்லாம தெண்டமா சுத்திட்டிருந்த எங்கப்பா, என் தாத்தா வாய்க்கு பயந்து தான் மிலிட்ரில சேர்ந்தாராம். நீங்க கூட…. அ..அப்படித் தான்னு நினைச்சு வைச்சிருந்தேன்! ஆனா.. நீங்க என்னங்க இவ்ளோ பெரிய அறிவாளியா இருக்கீங்க??, எனக்குல்லாம் உங்க அளவு மூளை வேலை செய்யாது.”

“இது ஒரு பிரச்சனையாங்க?”

“பின்ன இல்லையா?, வைஃப் கொஞ்சம் மக்குன்னு நினைச்சு நீங்க மட்டம் தட்ட நினைச்சா???”

“என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது உங்களுக்கு?, எனக்கு வர்ற ஒரே விசயம் படிப்பு தான்-ங்க! ஆனா.. உங்களுக்கு அப்படியில்ல. எவ்ளோ அழகா படம் வரையறீங்க?, உங்க கலெக்ஷனெல்லாம் பார்த்தேன்! சான்ஸே இல்ல! ஒரு ஆர்ட் கேலரியே வைக்கலாம்!”

“நிஜமாவா சொல்றீங்க??”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குங்க. சும்மா என்னோட உங்களைக் கம்பேர் பண்ணிக்காதீங்க! என்னைப் பத்தி எங்கம்மாக்கிட்ட கேளுங்க! என் பையன் ஒரு சோம்பேறி,தெண்டத் தீவட்டின்னு பச்சை,பச்சையா திட்டுவாங்க”

“ஹாஹாஹாஹா”

“ஹப்பாடா! சிரிச்சுட்டீங்களா?, உங்களை ரொம்ப,ரொம்பப் பிடிச்சுப் போனதால தான்-ங்க இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ணிக்கிறேன். என் வேலைல கான்சென்ட்ரேஷன் ரொம்பவும் முக்கியம்ங்க. ரெண்டு மாசமா உங்க நினைப்பு என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டே இருந்தது! உங்களோட பேசவும், அந்தக் காட்டுக்குள்ள வசதியில்ல. அதான்.. டைரக்ட்டா கல்யாணம்! புரிஞ்சதா உங்களுக்கு??”

உள்ளே குளிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் தலை குனிந்தபடி “ம்ம்ம்ம்” என்றாள்.

“இந்த வெட்க ஃபேஸைத் தான்-ங்க ரொம்ப மிஸ் பண்ணேன்!,”

“……….”-அதிகமாய் வெட்கப்படத் தோன்றியது அவளுக்கு.

“இப்போ கைப் பிடிச்சா செருப்பைக் கழட்டிட மாட்டீங்களே!”

“மாட்டேன்” – அவள் தலையாட்டியதும், மாலை மறைவில் கையைப் பற்றியவன் அதன் பின்பு விடவேயில்லை!

அடுத்தடுத்த சம்பிரதாயங்களை முடித்து ஜீவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தத் தனிமையைக் கொடுத்து இரவில் அவன் அறைக்கு அவளை அனுப்பி வைத்தனர் ஜீவனின் வீட்டார்.

“என்ன பூ டெக்கரேஷன் எதுவுமேயில்ல??, குறைஞ்சபட்சம் ஊதுபத்தி வாசனை கூட இல்லை??” – அறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்த ரோஹினி, இதைக் கூறினாள்.

“ஹாஹாஹா, உங்களுக்கு அதெல்லாம் பிடிக்குமா என்ன?”

“ச்ச,ச்ச, மணி வேஸ்ட்! பூ வேஸ்ட்! எனக்கு அதிலெல்லாம் இஷ்டமில்ல. உங்களுக்கு?”

“எனக்கும் இஷ்டமில்ல! அதெல்லாம், ‘மூட்’ மெயிண்டைன் பண்றதுக்காக வைக்கப்படுற சமாச்சாரங்கள்! எனக்குத் தான் உங்களைப் பார்த்தாலேஏஏஏஏ……….”

“ஏய்ய்ய்ய்ய்”

“சரி, கோபப்படாதீங்க” என்றவன் திடீரென “மச்சுக்குப் (மொட்டை மாடி) போகலாமா?” என்று வினவினான்.

“இப்போஓஓவா??”

“ஆமாம்….”

“யாராவது பார்த்துட்டா??”

“யாரும் பார்க்க மாட்டாங்க, வாங்க” – என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

கல்யாணக் களைப்பில் ஹாலில் படுத்திருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க.. அடி மேல் அடி வைத்து மெல்ல அவர்களைக் கடந்தனர்.

“என் கொள்ளுப் பாட்டி ‘சௌண்ட் சரஸ்’ காலை மட்டும் மிதிச்சுடாதீங்க, விடியுற வரைக்கும் வாயை மூடாது” - ஜீவன்

“யாரு, இந்த ப்ரௌன் கலர் சாரியா?”

“ஆமாமா, எதுக்கும் நீங்க இந்தப் பக்கம் வாங்க” – குசுகுசுவெனத் தங்களுக்குள் பேசியபடி மொட்டைமாடியை அடைந்தனர் இருவரும்.

கார்காலத்திற்கும், பனிக்காலத்திற்கும் இடைப்பட்ட காதல் காலம் அது! வான் கடலில் நிலவும்,நட்சத்திரங்களும் மெல்ல நீந்தி, விடியலை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் நள்ளிரவு வேளை!

உடலைத் தொட்டுச் செல்லும் காற்றின் ஈரப்பதத்தை உணர்ந்தபடி, சுவற்றில் சாய்ந்து கொண்டு நான்கடி இடைவெளியில் நின்று எதிரில் தெரிந்த வயல்வெளியை வெறித்துக் கொண்டிருந்தனர் ஜீவனும்,ரோஹினியும்.

குளிரின் தாக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், “ஷ்ஷ்” என்றபடிச் சேலை தலைப்பால் அவள் தன்னைப் போர்த்திய நொடி “இருங்க,இருங்க” என்று அவளைத் தடுத்தான் ஜீவன்.

“நான் ஒருத்தன் இங்கிருக்கும் போது, சேலைக்கு ஏன் வேலை வைக்கிறீங்க?” என்று விட்டுப் புரியாமல் விழித்தவளின் அருகே வந்துப் பின்னிருந்து அவளைக் கட்டிக் கொண்டான்.

முதல் முறையாக அணைக்கிறான். சருமம் கூசிச் சிலிர்த்து, பின் கழுத்தில் பரவியிருந்த முடிகளனைத்தும் “டைங்ங்ங்” என நின்று கொள்ள.. படபடவென அடித்த இமைகளைக் கட்டுக்குள் கொண்டு வர எண்ணித் தலை குனிந்தாள் அவள்.

“நிமிர்ந்து என்னைப் பாருங்க” – காதோரத்தில் அவன் குரல் இசையாய் ஒலித்தது.

தூக்கமும்,தயக்கமும் நிரம்பிப் போயிருந்த விழிகளை மெல்ல உயர்த்தி தன் பின்னாலிருந்தவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.

“அன்னிக்குக் கோவில்ல கூட இதே மாதிரி தான் பார்த்தீங்க, அப்பவே தோணுச்சு”

“என்னன்னு?”

“உங்களைக் கிஸ் பண்ணனும்ன்னு” – பெரிய விழிகளை அவள் முழுதாய் விரிக்கையில் குனிந்து அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்திருந்தான் அவன்.

இறுகக் கண் மூடியவள் தன் விழிகளைத் திறந்து அவனை நோக்கும் போது.. அதில் கரை புரண்டோடியக் காதலைக் கண்டு வியந்து.. அவள் மேலும் தன் கண்களை விரித்த சமயம்.. அவளைத் தூக்கி அருகேயிருந்த மேடையில் அமரச் செய்திருந்தான் அவன்.

“பொண்ணுங்க கூடப் பேசத் தெரியாது, ஃப்ளர்ட் பண்ணத் தெரியாது, காதலிக்கத் தெரியாதுன்னு என்னென்னவோ சொன்ன மனுஷன், இன்னிக்கு என் பர்மிஷன் கூடக் கேக்காம, இப்படியெல்லாம் பண்றீங்க??” – ஒற்றைப் புருவத்தைத் தூக்கி நக்கலுடன் வினவியவளிடம் சிரித்து மீண்டும் அவள் புருவத்தின் மீது இதழ் ஒற்றினான்.

“ஃபர்ஸ்ட் 2 செண்டென்ஸ் ஓகே!, காதலிக்கத் தெரியாதுன்னு நான் எப்போ சொன்ன்னேன்?, சத்தியமா உங்கக்கிட்ட மட்டும் தான்-ங்க இதெல்லாம் தோணுது!”

“நம்பிட்டேன், நம்பிட்டேன்”

“நீங்க வேணா, செல்வம் மாமா கிட்டக் கேட்டுப் பாருங்களேன்”

“ஆமாமாம், அவர் அப்படியே உண்மையைக் கொட்டிடுவார்”

“ஹாஹாஹா, உங்கப்பாவை அவர் கோட்டிப்பயன்னு சொன்ன கோபம் இன்னும் தீரலையா உங்களுக்கு?, ஆனா மனுஷங்களைக் கணிக்கிறதுல மாமா எக்ஸ்பர்ட்ங்க! உங்கப்பா.. நிஜமாவே லூசு தான்!”

“ஹலோ!, என்ன திமிரா?”

“ச்ச,ச்ச இல்லங்க. சாரி! இனிமே உங்கப்பாவை அப்படிச் சொல்ல மாட்டேன்!”

“ஹ்ம்ம்,அந்த பயம் இருக்கட்டும்”

உதட்டை மடக்கிச் சிரித்தவனின் தோளில் அவள் அடிக்கவும், அவள் கையைப் பற்றிக் கொண்டவன்.. “உங்க பெயிண்டிங்கெல்லாம் நிஜமாவே சூப்பரா இருந்ததுங்க” என்றான்.

“நிஜமாவா??” – இதழ் விரிய குதூகலமாய் ஒலித்தது அவள் குரல்.

“நிஜமா!, இதைக் கொஞ்சம் சீரியசா எடுத்துப் பண்ணா.. உங்களுக்கு இதுல ப்ரைட் ஃப்யூச்சர் இருக்கு”

“தேங்க்ஸ், தேங்க்ஸ்!, உங்களுக்கு இந்த மாதிரி விசயங்களும் பிடிச்சிருக்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!, பெரிய படிப்ஸ்ங்கல்லாம், பொதுவா கோ-கர்ரிகுலர் ஆக்டிவிடிஸ்ல இண்ட்ரெஸ்ட் காட்ட மாட்டாங்க”

“யார் சொன்னா?, என்னை எக்ஸெப்ஷன் லிஸ்ட்ல வைங்க”

“ஏன்?”

“ஏன்னா.. எனக்கு கிட்டார் வாசிக்கத் தெரியும். அப்புறம், நல்லா பாட்டு பாடுவேன்! ஏழு வருஷம் முறையா கத்துக்கிட்டேன்”

“ரியலி??”

“என் கொள்ளுப்பாட்டி சரஸ் மேல சத்தியம்ங்க”

“எங்க, ஒரு பாட்டு பாடுங்க பார்ப்போம்” – இடது கையை மேடை மீது வைத்துத் தலையைப் பின்னுக்குச் சாய்த்து அவளிடம் உரையாடிக் கொண்டிருந்தவனின் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்தவள் உற்சாகமாய் வினவினாள்.

“என்ன பாட்டு பாட??”

“ஏதாவது… இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி??” – வழக்கம் போல் அவள் இதழ்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு பேசிய கண்களுடன், ஆர்வமாய்க் கூறினாள்.

“ஹ்ம்ம்ம்ம்ம்” என்று யோசித்தவன், பாடினான்.

‘நேற்றைய பொழுது கண்ணோடு…

இன்றைய பொழுது கையோடு…..

நாளைய பொழுதும் உன்னோடே….

நிழலாய் நடப்பேன் பின்னோடே……’

-லேசாயத் தலையாட்டியபடி அவள் மீதிருந்துப் பார்வையைத் திருப்பாமல் கம்பீரக் குரலுடன் பாடியவன் மீது ஆயிரத்திப் பத்தாவது முறையாகக் காதல் கொண்டாள் ரோஹினி.

திறந்த வாயுடன் ஆ-வென நோக்கியவள், பின் தலை குனிந்து விரல்களைப் பார்த்தபடி “இது ஃபீமேல் லைன்ஸ் ஆச்சே” என்றாள்.

“அதனால என்ன?, நான் உங்க பின்னாடி நிழலா நடந்துட்டுப் போறேன்!, ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்பவே டிசைட் பண்ணிட்டேன், நீங்க தான் என்னை டாமினேட் பண்ணப் போறீங்கன்னு!”

“என்ன?, விட்டா… ‘ஆலம்பனா.. நான் உங்கள் அடிமைன்னு’ ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பீங்க போல?”

“பார்த்தீங்களா?, ச்ச,ச்ச அப்படியெல்லாம் இல்ல,நான் உங்களை டாமினேட் பண்ண மாட்டேன்னு சொல்ல மாட்டேன்றீங்க??”

“ம்ஹ்ம், நெல்லை-ல வாழ்ந்தாலும் நான் மதுரை மீனாட்சி மாதிரி” என்றவள் அமர்ந்திருந்த மேடையிலிருந்துக் குதித்திறங்கினாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலெனத் தெரிந்த வயல்வெளியைக் கண்டபடி “இந்த வயல் வரப்பெல்லாஆஆஆம் உங்களோடது தான்னு உங்கம்மா பெருசா பீத்திக்கிட்டாங்க??, எல்லாம் பொய் தான?” என்றாள்.

“என்னங்க, வந்த நாளே என் அம்மாவை வம்புக்கு இழுக்கிறீங்க?”

“பின்ன?, மாமியார்-மருமகள்ன்னா சும்மாவா?” என்றவள் கொட்டாவியை வெளியிட்டபடி “தூக்கம் வருது, கீழ போகலாமா??” என்று கண்ணைக் கசக்கினாள்.

அருகே வந்து அவள் கண்களிலிருந்தக் கைகளைத் தன் இரு கையால் பற்றிக் கொண்டவன் “மிஸஸ்.ரோஹினி ஜீவானந்தம், இவ்ளோ நேரம் நாம விடாம பேசிக்கிட்டது வெறும் வார்ம்-அப் தான்!, மிச்ச சொச்ச சம்பவத்தையெல்லாம் முடிக்காம இப்படிக் கண்ணைக் கசக்கக் கூடாது” என்றான்.

உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் மறைத்து “என்ன மிச்ச சொச்ச சம்பவம்??” என்றாள்.

ஒருபுறமாக உதடு வளைய.. அவளைக் காணும் போதெல்லாம் கண்களில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் போதை, இன்று மொத்தமாய் விழியை நிரப்ப.. அவள் இடையைப் பற்றி அருகில் இழுத்து, அவளை இறுக அணைத்துக் கொண்டவன்.. குனிந்து அவள் காதில்…

“மாமன்காரன் தானே, மாலை போட்டதாலே..

மோகம் தீரவே… மெதுவாய்.. மெதுவாய்த்.. தொடலாம்…..” எனப் பாடினான்.

எதற்கென்றே தெரியாமல் இறுக்கமாய் மூடிக் கொண்ட இமைகளிரெண்டும், அவளது கருமணிகளுக்குக் காவல் இருக்க, முகத்தை அவன் மார்பில் அழுத்தி மொத்தமாய்ப் புதைந்திருந்தாள் அவள்.

அவள் முகத்தை நிமிர்த்தி நோக்கியவனின் கண்கள் மோகத்தில் மிளிர.. குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டு அறையை நோக்கி நடந்தான் ஜீவன்.