அத்தியாயம் - 5
ஹாஆஆஆவ்வ்வ்வ்வ் – கொட்டாவியை வெளியிட்டபடிக் கண்ணாடியைக் கழட்டிக் கண்களைத் துடைத்தேன் நான். மணி அதிகாலை இரண்டைத் தொட்டிருந்தது. ஜீவன்-ரோஹினியின் காதல் போராட்டத்தைக் காண ஆரம்பித்ததில் நேரம் போனதேத் தெரியவில்லை. தூக்கம் கண்களை மூடச் செய்தாலும், உறங்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை எனக்கு! இவ்ளோ அந்நியோன்யமா இருந்தவங்க, ஏன் பிரிஞ்சாங்க??, அங்கிளுக்கு ஈக்வலா ஆண்ட்டியும் தான் அவரை லவ்வுது!! பின்ன என்னப் பிரச்சனை??, மடிக்கணிணியைத் தூக்கிப் படுக்கையில் வைத்து, நன்றாகக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு அடுத்த ஸ்டேட்டஸைப் படித்தேன்.
“மழையில் கழுவிய மணலிலே.. தொலைந்த காலடி நானடி!!”
“ரோஹினி மேடம்… உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்.” – ப்யூன் வந்து அழைத்ததும் ‘இண்ஸ்ட்டிடியூட் வரைக்கும் தேடி வர்ற ஆள் யார்’ என்ற யோசனையுடன் ஸ்டாஃப் ரூமை விட்டு வெளியே வந்த ரோஹினி வராண்டாவில் அமர்ந்திருந்த ஜீவனைக் கண்டுப் புருவத்தைச் சுருக்கினாள்.
அவளைக் கண்டதும் எழுந்து நின்றவன் “மார்னிங்-ல இருந்து கால் பண்றேன், பதிலே இல்லை. அதான் என்னாச்சோன்னு தேடி வந்தேன்-ங்க” என்றான்.
“ஃபோன் கொஞ்சம் ப்ராப்ளம், சார்ஜ் இல்லாம ஆஃப் ஆயிடுச்சு. ஆதியை நீங்க பிக்-அப் பண்ணிக்கிறதா நேத்து சொன்னீங்களே?, எங்க அவன்??”
“வெளியே இருக்கான். நான் வந்தது அதுக்கில்லங்க. வேற ஒரு விஷயமா.”
“என்ன?”
“ஊர்ல இருந்து அம்மா,அப்பா வந்திருக்காங்க. குழந்தைகளை அழைச்சிட்டுப் போக! ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகுதில்லையா?, அதான்… நீ..நீங்க என்ன சொல்றீங்க?, அனுப்பி வைக்கட்டுமா?”
“அதிதி ஓகே! சமாளிச்சுப்பா! ஆதி அப்படியில்லையே!, நீங்களோ,நானோ இல்லாட்டி சமாளிக்கிறதுக் கஷ்டம்”
“அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க”
“யாரு?, உங்கம்மா??, அப்படியே பார்த்துக் கிழிச்சிடும்!” – டிவர்ஸ் ஆனாலும் மாமியார் மீதிருக்கும் கடுப்பு மாத்திரம் மாறாது போலும்!
“எங்கம்மா இல்லங்க. உங்கம்மா”
“என் அம்மாவா??” – புருவத்தைச் சுருக்கி அதிர்ச்சியுடன் வினவினாள் அவள்.
“ஆமாங்க, அத்தையும்,மாமாவும் வந்திருக்காங்க. பசங்களை அழைச்சிட்டுப் போக!”
“பொண்ணே வேண்டாம்ன்னு என்னை ஒதுக்கி வைச்சிருக்காங்க, நான் பெத்த பிள்ளைங்க மேல மட்டும் என்ன பாசம் வேண்டிக்கிடக்கு?”
“ஒதுக்கி வைச்சது அவங்க இல்ல. நீங்க தான்.”
“ப்ச், எது எப்படியோ!, என்னால அவங்களோடெல்லாம் அனுப்ப முடியாது.”
“இது தப்புங்க ரோஹினி. குழந்தைகளுக்கு அவங்களோட தாத்தா,பாட்டிக் கிட்டயிருந்துக் கிடைக்கிற நியாயமான பாசத்தைத் தடுக்கிறது பாவம்-ங்க!, ப்ளீஸ், சரின்னு சொல்லுங்க”
“இப்போ எங்க இருக்காங்க அவங்க?”
“இங்க தான்-ங்க, இண்ஸ்டிடியூட் வாசல்ல, கார்ல இருக்காங்க” – அவனுக்குப் பதில் சொல்லாமல் விடுவிடுவென வாசலை நோக்கி நடந்தவளின் பின்னே ஓடாத குறையாகச் சென்றான் ஜீவன், என்ன பேசி அவர்களைப் புண்படுத்தப் போகிறாளோ! என்ற பதைபதைப்புடன்!.
“எதுவும் கோபமாப் பேசிடாதீங்க. அத்தை இத்தனை வருஷத்துக்கப்புறம் இப்போ தான் சென்னை வந்திருக்காங்க” – எப்படியேனும் சமாதானப்படுத்தி விடும் நோக்கத்துடன் ஜீவன்.
அவள் அதற்கும் பதில் கூறவில்லை.
அங்கிருந்த மரத்தடியில் நின்றிருந்த ‘டஸ்டர்’ அருகே சென்றவள், காரை விட்டு வெளியே நின்றத் தந்தையிடம் தொடங்கினாள்.
“நேத்து ‘ஃபோன்’-ல பேசும் போது கூட நீங்க வர்றதா சொல்லலப்பா?,என்ன திடீர்ன்னு?” – என்றவளின் பார்வை காரினுள்ளே அமர்ந்திருந்த அன்னையிடம் சென்றது.
அவரும் அவளுக்குச் சளைக்காதப் பார்வையுடன் தான் அமர்ந்திருந்தார். வெர்ரி குட் மம்மி! வெர்ரி குட் டாட்டர் அண்ட் வெர்ரி நைஸ் ஃபேமிலி!
லேசாகத் தலையைச் சொறிந்தான் ஜீவன்.
“அவங்க சொகுசா காருக்குள்ள ஏசி-ல உட்கார்ந்துருக்காங்கள்ல, நீங்க மட்டும் ஏன் வெயில்ல நிற்கிறீங்க?” – அணிந்திருந்தச் சட்டையின் மீதிருந்தத் துண்டினால் நெற்றியைத் துடைத்தவரைத் திட்டினாள் ரோஹினி.
கெடாமீசை டாடி உண்மையில் ஒரு அப்பாவி! அப்படியே தன்னைப் போல்!- ஜீவன் மனதுக்குள் எண்ணிக் கொண்டான்!
“வயசான காலத்துல அம்மா-ன்னு ஒருத்தி எப்படியிருக்கிறான்ற நினைப்புக் கூட இல்லாம, இவளால எப்படி மாப்ள மனசாட்சி இல்லாம இருக்க முடியுது??,ஆமா, இவக் கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?, மனசாட்சி இருந்திருந்தா, உங்களைப் போய் வேண்டாம்ன்னு ஒதுக்கி வைப்பாளா??” – குமுறலுடன் சத்தமாய் வந்தது மரகதம்மாளின் குரல்.
“இவங்களோட நான், என் குழந்தைகளை அனுப்பனுமா?, நிச்சயமா முடியாது” – ஜீவனைப் பார்த்துக் கூறி விட்டுக் கையைக் கட்டிக் கொண்டுத் திரும்பி விட்டாள் அவள்.
“என்னடி உன் குழந்தைங்க??, நீ மட்டும் தனியாவா பெத்துக்கிட்ட?, இதுங்க, என் மாப்ளையோடக் குழந்தைங்கடி!, நீ என்ன அனுமதி கொடுக்கிறது?”
“மாப்ளயாம், மாப்ள! எனக்கு அவர் புருஷனே இல்லன்னு கோர்ட் சொல்லிடுச்சு! இவங்க பெருசா உரிமை கொண்டாடுறாங்க!”
“புருஷனே இல்லாமத் தான் அவர் கட்டுனத் தாலியைக் கழுத்துல போட்டிருக்கியாடி?”
உஷ்ண மூச்சுடன் அவர் புறம் திரும்பியவள் “நீ பார்த்தியா?, நான் போட்டிருக்கேன்னு நீ பார்த்தியா??,” என்றவள் கழுத்திலிருந்த ஒற்றைச் செயினைக் காட்டி “இதைத் தவிர வேற எதையும் நான் கழுத்துல மாட்டிக்கல, தெரிஞ்சுக்க” என்றாள்.
“அய்யோஓஓஓ!! எந்தப் பொண்ணாவது இப்படிப் புருஷன் உயிரோட இருக்கும் போதேத் தாலி இல்லாமத் திரிவாளா?, என் வளர்ப்பையே அசிங்கப்படுத்துறாளே!” – என்றபடி மரகதம்மாள் கண்ணீர் விட… வாயில் விரல் வைத்தபடி அவர் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனைக் கண்டு “அத்தை, அத்தை கொஞ்சம் அமைதியா இருங்க. ஆதி உங்களையே பார்க்குறான்” என்று எரிச்சல் குரலில் இடையிட்டான் ஜீவன்.
மாப்பிள்ளையின் குரலுக்குக் கட்டுப்பட்டு உடனேக் கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக் கொண்டவர் “என் சாமி!, நீ ஆத்தாவோட, ஊருக்கு வர்றியா ராசா?” என்று கேட்க.. அவனும் சரியெனத் தலையாட்டினான். வெற்றிச் சிரிப்புடன் மகளை நோக்கியவர் “ஹ்ம்” எனத் திரும்பிக் கொண்டார். கோட்டிப்பயக் குடும்பம்!
அவர் பேரனைக் கொஞ்சத் தொடங்கியதும் ரோஹினியின் புறம் திரும்பினான் ஜீவன்.
“நீங்க என்னங்க அவங்களுக்குச் சரிக்குச் சரியா பேசிட்டிருக்கீங்க?”
“பின்ன?, ஏன் என்னைக் கடுப்பேத்துற மாதிரியே பேசுறாங்க?”
“அவங்க ஆதங்கத்தைப் பேசித் தீர்த்துக்கிறாங்க, இதுல உங்களுக்கு என்ன எரிச்சல்?”
“ப்ச்”
“இப்போ முடிவா என்ன தான் சொல்றீங்க?”
“என்னமோ பண்ணுங்க!, எனக்குக் க்ளாஸ் இருக்கு. நான் போறேன்”
“ரோஹினி… இரும்மா.. அம்மா உனக்கு முந்திரிக்கொத்து செஞ்சு கொண்டு வந்திருக்கா. வாங்கிக்கோம்மா” - கெடாமீசை
“எனக்கா இல்ல உங்க மாப்பிள்ளைக்கா?”
“உனக்கு என்ன இதுக்குடி நான் செஞ்சு கொண்டு வரப் போறேன்?, பாவம் மனுஷன், இந்த வயசுல நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லாம, மெலிஞ்சு போய்க் கிடக்குறார்!, இவளைப் பாருங்க, 3 வேளை நல்லா வக்கணையாத் தின்னுட்டுச் சிலை மாதிரி இருக்கா” – மரகதம்மாள்.
“அதான் சொல்லிட்டாங்கள்ல?, அவருக்கேக் கொடுங்க. கொட்டிக்கட்டும்!” – என்றவள் அங்கே நிற்காமல் விறுவிறுவெனச் சென்று விட்டாள்.
அன்றிரவே ரோஹினியின் பெற்றோருடன் குழந்தைகள் நெல்லைக்குச் செல்லத் தயாராக… ஆதியின் துணிமணிகளை வாங்க மீண்டும் ரோஹினியைச் சந்தித்தான் ஜீவன்.
வீட்டினுள்ளே கூட அனுமதிக்காமல் வாசலிலேயே துணிப்பையை நீட்டியவளிடம் “அவனோட ‘டாய்’ ஏதோ கேட்டான்-ங்க. பேரு மறந்துட்டேன்” என்றான்.
“எடுத்து வைச்சுட்டேன்! உள்ளே இருக்கு”
சரியெனத் தலையாட்டியவன் “நைட் கிளம்புறாங்க 4 பேரும்” என்றான்.
“எப்போ ரிடர்ன்??”
“10 நாள்ல திரும்பிடுவாங்க”
“எனக்கு நம்பிக்கையில்ல. ரெண்டே நாள்ல ஆதி அடம்பிடிச்சு இங்க வந்துடுவான். எங்கம்மாவுக்கு அவனைச் சமாளிக்கிற அளவு பொறுமையெல்லாம் கிடையாது”
“உங்களையே சமாளிச்சு வளர்த்துருக்காங்க. ஆதியைப் பார்த்துக்க மாட்டாங்களா?”
“என்ன நக்கலா?”
“……….”- பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் “ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வரலாமில்லையா?, எத்தனை வருஷம் இப்படியே இருந்துட முடியும்? நான் வேண்டாம்ன்னு நினைக்கிறீங்க ஓகே!, அவங்களை ஏன் ஒதுக்குறீங்க?, பார்க்கும் போதெல்லாம் திட்டுனாலும், உங்கம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறாங்க” என்றான்.
“என் வீட்டுப் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன். உங்க அட்வைஸ் எனக்கு வேண்டாம்” – திமிராக வந்தது அவளது பதில்.
வேறொரு ஆண்மகனாய் இருந்திருந்தால்… கோபம் தலைக்கேறி.. ஏடாகூடமாக ஏதேனும் செய்திருப்பான். ஆனால் பூமாதேவியின் பொறுமையோடு போட்டி போடும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜீவானந்தம் தலையைக் குனிந்தபடியே “அப்போ நான் கிளம்புறேன்-ங்க” எனக் கூறி முன்னே நடந்தான்.
இரண்டடி நடந்தவன் மீண்டும் அருகே வந்து, கையிலிருந்தச் சிறிய பை ஒன்றை அவள் காலடியில் வைத்து “உங்கம்மா செஞ்ச முந்திரிக்கொத்து. சாப்பிடுங்க” என்று விட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.
கையைக் கட்டிக் கொண்டு நேர் வெறித்தபடி நின்றிருந்த ரோஹினி, விரல்களை அழுந்த மூடித் தன்னையே அடக்க முயன்றாள்! கோபத்தை அல்ல! அழுகையை!
குழந்தைகள் இல்லாத வெறுமை ரோஹினியை ரொம்பவேத் தாக்கியது. ஜீவனைப் பிரிந்த இந்த ஐந்து வருடங்களில் ஒரு முறைக் கூட அவள் தனிமையை உணர்ந்ததில்லை. அதற்குக் காரணம் அவளது குழந்தைகள்! பெற்றோர்,சொந்தபந்தம் என யாரையும் அவள் அனுமதித்தில்லை. குழந்தைகள் தான் அவள் உலகம்! இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அவர்களைப் பிரிந்ததுமில்லை!
அதிதி,ஆதி சென்று இரண்டு நாட்கள் கூடக் கடந்திருக்காது. இரவில் தூக்கமில்லாமல் மடிக்கணிணியும்,செல்ஃபோனுமாய்த் தான் திரிகிறாள். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று அன்னைக்கு அலைபேச ஈகோ இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. ஜீவனிடம் கேட்டால், 4 பக்கத்திற்கு அட்வைஸ் மழையைப் பொழிவான்! பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் பதிலுக்கு ஏதேனும் பேசி வைத்தால்.. உம்மென்ற முகத்துடன் அமைதியாய்ச் சென்று விடுவான்! அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது! இந்த வாண்டுகளும் கூட அங்கே சென்றதும், அவளை மறந்து விட்டதுகள்!
எரிச்சலுடன் அவள் புலம்பிக் கொண்டிருக்கையில் ஜீவனிடமிருந்து அழைப்பு வந்தது. நினைத்ததும் அழைக்கிறானே!! பரபரப்புடன் படுக்கையிலிருந்து எழுந்து ஃபோனைக் காதில் வைத்தாள்.
“ஹலோ” – ரோஹினி
“தூங்கிட்டீங்களா?”
“இல்ல,இல்ல, முழிச்சுத் தான் இருக்கேன். சொல்லுங்க. ஆதி அழறானா?, அம்மா ஃபோன் பண்ணாங்களா?” – வரிசையாய்க் கேள்வி கேட்டவளைக் கண்டு அந்தப் பக்கம் “ஹாஹாஹா”-வெனச் சத்தமாய்ச் சிரித்தான் அவன்.
“என்ன சிரிப்பு?”
“உங்களுக்கு என்னங்க அப்படியொரு ஈகோ?, உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி கேட்க வேண்டியது தானே?”
“எங்கப்பாக்கு ‘கால்’ பண்ணா, வேணும்ன்னே எங்கம்மா ஃபோன் எடுக்குறாங்க”
“ஹாஹாஹா.. அத்தை உங்களை மாதிரிங்க”
“ப்ச், குழந்தைங்க எப்படியிருக்காங்க?, அதைச் சொல்லுங்க முதல்ல”
“அத்தை அடைதோசை சுட்டுத் தந்தாங்களாம்!, சாப்பிட்டு நல்லத் தூக்கமாம்”
“ஓஹோ…………”
“ரோனிக்கு இதெல்லாம் தெரியாதா ஆத்தா, ஒரு முறைக் கூட பண்ணித் தந்ததில்லையேன்னு கேட்ருக்காங்க”
“எங்கம்மா கழுவி ஊத்திருப்பாங்களே உடனே?, இதைச் சொல்லி என்னைக் கடுப்பேத்தத் தான் ஃபோன் பண்ணீங்களா?”
“சாரிங்க. டென்ஷன் ஆகாதீங்க”
“நீங்க ஃபோனைக் கட் பண்ணுங்க முதல்ல. வந்துட்டாரு, மனுஷனைக் கடுப்பேத்துறதுக்குன்னே”
“ஏங்க,ஏங்க, வைச்சுடாதீங்க ப்ளீஸ்”
“சொல்லுங்க”
“அதிதி இல்லாம, வீடு கொஞ்சம் டல்லா இருக்குதுங்க”
“ஹ்ம்ம், இங்கயும் தான்”
“நீங்க இல்லாதப்போக் கூட நான் இப்படித் தான்-ங்க ஃபீல் பண்ணினேன்”
“…………….”
“லைன்ல இருக்கீங்களா??”
“……………”
“இருப்பீங்க, ஆனா பதில் சொல்ல மாட்டீங்க.”
“…………”
“என்னோட வந்துடுங்களேன்… ப்ளீஸ்…..” – இறைஞ்சலுடன் ஒலித்தது அவன் குரல்.
“…………”
“நிறைய பேர் டிவர்ஸ் வாங்கினப்புறம் கூட ஒன்னு சேர்ந்திருக்காங்க. சினிமால-லாம் பார்த்திருக்கோமே!, ஊர்,உலகம் என்ன சொல்லுமோன்னுத் தயக்கப்படாதீங்க”
“ஆமா, ஊர்,உலகத்துக்காகத் தான் நாம உயிர் வாழ்ந்துட்டிருக்கோம்!”
“பின்ன என்னங்க?, வந்துடுங்களேன்……………..”
“…………”
“எல்லா விசயத்துலேயும் ரொம்பத் தெளிவா யோசிக்கிறீங்க, பேசுறீங்க! ரொம்ப மெச்யூர்டா நடந்துக்கிறீங்க. ஆனா.. என் சம்பந்தப்பட்ட விசயத்துல மட்டும் ஏன் இவ்ளோ ஈகோ பார்க்குறீங்க?, முடியலங்க…….. சீரியஸா…..!! கடைசில என்னை, டீனேஜ் பையன் மாதிரி பேச வைச்சுட்டீங்க” – லேசாய்ச் சிரித்தான் அவன்.
உதட்டைக் கடித்தபடி, எதிரில் தெரிந்தக் கண்ணாடியில் தன்னை நோக்கினாள் ரோஹினி. கண்களில் லேசாக நீர் தேங்கியிருக்கிறதோ??
“இன்னிக்கு பி.பி செக் பண்ணேன்ங்க. அதிகமா இருக்கிறதா டாக்டர் சொன்னார். ஸ்ட்ரெஸ்ஸைக் குறைங்கன்னு அட்வைஸ் வேற!”
“………….”
“நான் தெம்பா,நல்லாயிருக்கிற வரைக்கும் ஓகே-ங்க! திடீர்ன்னு ஸ்ட்ரோக்,ஹார்ட்-அட்டாக்ன்னு எதுவும் வந்துட்டா… பக்கத்துல நீங்க இல்லாட்டிக் கொஞ்சம் கஷ்டம்-ங்க! வயசாயிடுச்சுல்ல??” – இப்போதும் சிரித்தான் அவன்.
“கொஞ்சம் வாயை மூடுங்க” – பல்லைக் கடித்தபடி பதில் வந்தது அவளிடமிருந்து.
வெகு நேரமாக அவன் செய்த முயற்சியின் பலனாய் அவள் பதில் பேசியிருக்கிறாள். ஆனால்.. அவன் எதுவும் கூறாமல் நெடிய மூச்சொன்றை வெளியிட்டான்!
“ம்க்க்கும்” – ரோஹினி.
பதில் பேசு என்கிறாளாம்.
சிரிப்பு வந்தது ஜீவனுக்கு. சில்லி! சைல்டிஷ்! அடமெண்ட்! ஈகோயிஸ்ட்டிக்! எத்தனையோ வார்த்தைகள் இருக்கிறது அவளைப் பற்றிச் சொல்ல!
“கோபப்படுறீங்களா?, எதுக்குங்க?, ஸ்ட்ரோக்,ஹார்ட்-அட்டாக்ன்னு சொன்னதுக்கா?, நமக்கெல்லாம் சாவே வராதுன்னு நினைச்சுட்டீங்களோ??, எனக்கு மட்டுமில்ல. உங்கம்மா,அப்பா எல்லாருக்கும் இதே தான்! எல்லாம் கை மீறிப் போனப்புறம் அழுது,புலம்புற நிலைமை வந்துடக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்-ங்க. தப்பா?? ம்??”
“………..”
“எனக்காக யோசிங்க.”
“……………”
“யோசிப்பீங்களா???”
“………….”
“இதுக்குப் பதில் சொல்றதால.. உங்க ஈகோவுக்கு எந்த டேமேஜூம் ஆய்டாதுங்க”
குழந்தைகளுடனான பிரிவு, இரவின் தனிமை, அன்னையின் கோப முகம், கடைசியாக ஜீவனின் வார்த்தைகள் அத்தனையும் அவளை சுனாமியாய்த் தாக்க… அவளையறியாமல் “யோசிக்கிறேன்” என்றாள்.
“தேங்க்ஸ்” – என்றவனும் மேலே எதுவும் கூறாமல் ஃபோனைக் கட் செய்தான்!
உண்மையில் ஜீவன் மீது அவளுக்கிருப்பதுக் கோபமல்ல! ஈகோ! தனக்காக அவன் ஆயிரம் நல்ல விசயங்களைச் செய்திருந்தாலும், அவன் செய்யாது விட்ட, ஒரு செயலுக்காகக் கோபப்பட்டு, அவனை வருத்தித் தன்னையும் வருத்திப் பிள்ளைகளையும்,பெற்றவர்களையும் இதற்கிடையில் தவிக்க விட்டு! Damn Ego! சிறு கல்லாய் மனதில் அமர்ந்துக் கடகடவென வளர்ந்து பெரும் பாறையாக மாறி, ஐந்து.. முழுதாக ஐந்து வருடங்களை முட்டாள்தனமாகக் கழிக்கச் செய்திருக்கிறது!
