அத்தியாயம் - 6
25-05-2013.
சுக்மா, சத்திஸ்கர் மாநிலம்.
CRPF என்றழைக்கப்படும் மத்திய ரிசர்வ் காவல்படை உள்நாட்டுத் தீவிரவாதங்களைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பிற்கு வழி செய்யும் வகையில் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய காவற்படையாகும். மாவோயிஸ்ட்கள்,நக்ஸலைட்டுகளை எதிர்த்துச் சண்டையிடும் லா அண்ட் ஆர்டர் வேலையோடுச் சேர்த்து, தேர்தல் காலங்களில், பிரச்சனைக்குரிய மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் அமைதியைக் காக்கவும், இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அடிக்கடிப் பணியிடம் மாற்றப்படும் வழக்கமிருந்ததால் இந்த முறை ஜீவனுக்குச் சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா என்ற கிராமத்தில் போஸ்டிங் கிடைத்திருந்தது.
சுக்மா மாவோயிஸ்ட்டுகளின் சாம்ராஜ்யம்! ‘ரெட் காரிடார்’ என்று போலீசாரால் பெயர் வைக்கப்பட்ட இரத்த பூமி! ஏகப்பட்ட சி.ஆர்.பி.எஃப் ஆஃபிசர்களையும், அரசியல்வாதிகளையும் காவு வாங்கிய,இன்னும் வாங்கிக் கொண்டிருக்கும் சுடுகாடு! எப்போதும் பதட்ட சூழ்நிலை நிலவும் கிராமம்!
அன்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் மாவோயிஸ்ட்டுகளின் அட்டீழியங்களை எதிர்த்து சுக்மா கிராமத்தில் கண்டன யாத்திரை நடந்தது. மாவோயிஸ்ட்டுகள் எந்நேரமும் தாக்கக்கூடும் என்று ஆளும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் எதிர்க்கட்சி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கடைசியில் சுக்மாவில் கட்சி மீட்டிங்கை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களும்,தொண்டர்களுமாய் 200 பேர் சென்ற 25 வண்டிகள், ‘தர்பா வேலி’ என்னும் அடர்ந்த காட்டையொட்டிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது 250 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழுவினரால், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்துச் சிதறடிக்கப்பட்டது.
கட்சியின் மூத்தத் தலைவர்கள், தொண்டர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்ற சி.ஆர்.பி.எஃப் ஆஃபிசர்கள் எனப் பலரைச் சுட்டுத் தள்ளியும்,கத்தியால் குத்தியும் கொன்றுக் குவித்த தீவிரவாதிகள், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை அள்ளிச் சென்றனர்.
சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சி.ஆர்.பி.எஃப்-க்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட, அந்தச் சம்பவத்திற்காகப் பழிவாங்கவே இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியதாக, அந்தக் கும்பல் செய்தி சொன்னது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களின் பாதுகாப்பிற்கெனச் சென்ற சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளில் ஜீவனாந்தமும் ஒருவன். கடவுள் அருளால் உயிர்த்தப்பியவன் உடல் முழுதும் காயங்களுடன் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
அதிதிக்கு அப்போது ஆறு வயது. ஆதித்யன் பிறந்து முப்பதே நாட்கள் தான் கடந்திருந்தது. விடுமுறை கிடைக்காதக் காரணத்திற்காகப் பிறந்த குழந்தையை வந்து பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை ஜீவனுக்கு. இந்த நிலையில் இப்படியொருத் துயரச் சம்பவம்!
இதனால் ஜீவன்-ரோஹினியின் வீடு மொத்தமும் ஆடிப் போனது. இருவரது அன்னைகளும் அழுது தீர்த்தார்கள், ஆண்களோ சத்திஸ்கரை நோக்கிப் பயணப்பட்டார்கள். ஆனால்.. ரோஹினி, பயம்,பதட்டம்,ஏன் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட வெளிப்படுத்தவில்லை. மொத்தமாய் இறுகிப் போயிருந்தாள். அவளுடைய இந்த நிலையே மரகதம்மாளை பீதியாக்கியது.
ஓரளவு உடல்நிலை தேறியதும், ஜீவன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தலை,கை,கால் என அத்தனையிலும் கட்டுக்கள்!, ஒரு பக்கக் கண் மீது, இமையிலிருந்துத் தொடங்கிப் புருவம் வரை நீளமாய் இரத்தக் கோடு! காயத்தால் வீங்கியிருந்த மேலுதடு, வற்றக் கூட இல்லை.
சோர்வுடன் படுக்கையில் கிடந்தவனை நோக்கியவளின் கண்களில் என்ன தெரிந்ததோ, அவளைக் கண்டதும் மெல்ல எழுந்தமர்ந்தான் அவன்.
“ஜூனியரைக் கூப்பிட்டு வரலீங்களா?, நான் அவனைப் பார்க்கனும்ங்க. அம்மா என்னைக் கட்டிலை விட்டு இறங்க விட மாட்டேன்றாங்க” – ஆர்வத்துடன் அவளை நோக்கினான்.
“கீழ இருக்கான். அப்புறமா அழைச்சிட்டு வர்றேன்”-ரோஹினி
“இல்லங்க, நான் இப்பவே பார்க்கனும், வாங்க போகலாம்” – காலைக் கீழே வைத்தவனின் தோளைப் பற்றி அமர வைத்தவள் “அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்றேனே” என்று மிரட்டினாள்.
தன் தோளைப் பற்றிய அவள் கைகளை இழுத்து அணைத்துக் கொண்டவன், வலது கையிலிருந்த பெரிய கட்டைச் சபித்தபடி “கம்ஃபர்டபிளா கட்டிப் பிடிக்கக் கூட முடியல” என்றபடி ஒரு கையால் அவளைச் சுற்றித் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“ரொம்ப பயந்துட்டீங்களா?, முகமே சரியில்ல”-ஜீவன்
“……………”
“அம்மா சொன்னாங்க. விசயம் கேள்விப்பட்டதுல இருந்து நீங்க ரொம்ப அமைதியாய்ட்டதா! அவ்ளோ சீக்கிரமெல்லாம் நான் உங்களை விட்டுப் போயிட மாட்டேங்க. கொஞ்சம் சிரிங்க. ப்ளீஸ்…”
“……………”
“ஏதாவது பேசுங்க” – கொஞ்சலாய் வந்தது அவன் குரல்.
நிமிர்ந்து அவனை நோக்கியவள் “எனக்காக ஒன்னு செய்வீங்களா?” என்றாள்.
இடது கையால் அவள் நெற்றி முடியை ஒதுக்கியவன் “சொல்லுங்க” என்றான்.
“இந்த வேலையை விட்டுடுங்க.” – பட்டெனச் சொன்னவளின் முகம் எவ்விதக் கெஞ்சலையும் காட்டவில்லை! செய்கையில் யாசிப்பு இல்லை! அந்தக் கண்கள்.. அந்தக் கண்களில் மட்டும் ஒரு பயம்,மிரட்சி!
அவளை நன்றாகப் புரிந்து வைத்திருந்த ஜீவனால் அதை உணர முடிந்தது. இவள் இந்தச் சம்பவத்தால் மொத்தமாய் அரண்டு போயிருக்கிறாள். இந்தப் பயத்தைப் போக்காவிடில், வாழ்நாள் முழுக்கக் கஷ்டம் தான்!
“விட்டுடலாம்” – என்றபடியே வீங்கியிருந்தத் தன் உதடுகளால் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவனை விலக்கியபடியே “நான் விளையாடல ஜீவன். யு நோ தட்” என்றாள்.
எரிச்சலாகிப் போனவன் “நான் உயிர் பிழைச்சு வந்திருக்கிறதும் விளையாட்டு இல்லங்க. ப்ளீஸ்… தலையிலிருந்துக் கால் வரைக்கும் எல்லாம் வலிக்குது. நீங்க என் மனசையும் வலிக்க வைக்காதீங்க” என்றான்.
ஒரு நிமிடம் அமைதியாய்த் தலை குனிந்தவள் “நான் ஆதியைத் தூக்கிட்டு வர்றேன்” என்று நகர்ந்து விட்டாள்.
அதன் பின்பு அவள் அவனிடம் பேசும் நேரங்களைக் குறைத்துக் கொண்டாள். அவன் நெருங்கினாலும் விலகிச் சென்றாள். அவனது கால் காயம் ஆறி நன்றாக நடக்கும் வரைத் துணையிருந்தவள், அதன் பின்பு மாமியார் வீட்டைக் காலி செய்தாள். ஏன் என்று கேள்விக் கேட்ட யாருக்கும் பதில் சொல்லவில்லை!
விஷயமறிந்த ஜீவன் நேராக ரோஹினியைத் தேடி வந்தான்.
“ஏன் திடீர்ன்னு கிளம்பிட்டீங்க அங்கேயிருந்து?”- ஜீவன்
“எப்பவும் அம்மா வீட்ல தான இருக்கேன்?, நீங்க லீவ்-ல வரும் போது மட்டும் தான மாமியார் வீட்டு வாசமெல்லாம்?”
“அதான்-ங்க, நான் தான் எங்க வீட்ல இருக்கேனே! இப்பவும் ஏன் இங்க வந்துட்டீங்க?”
“…………”
“அம்மா எதுவும் சொன்னாங்களா?, அப்படியே அவங்க எதுவும் சொல்லியிருந்தாலும், நீங்க சும்மா விட்ற ஆள் கிடையாதே!”
“அவங்க ஒன்னும் சொல்லல”
“பின்ன?”
“நீங்க வந்த அன்னிக்கு நான் உங்கக்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். இப்போ அதுக்குப் பதில் சொல்லுங்க. நீங்க சொல்ற பதிலை வைச்சு, உங்க வீட்டுக்கு நான் வரலாமா, வேணாமான்னு யோசிக்கிறேன்”
அவள் கூறிய விதத்தைக் கண்டு ஹால் ஓரத்தில் சோஃபாவில் அமர்ந்திருந்தக் கெடாமீசையும், சமையலறையிலிருந்த மரகதம்மாளும் பதறி எழுந்து நின்றனர்.
“ரோஹினி, என்னடி உளர்ற?” – மரகதம்.
“எனக்குப் பதில் சொல்லுங்க” – ஜீவனை நோக்கியபடி ரோஹினி.
“என்ன பதில் சொல்லனும்?, முதல்ல உங்கக் கேள்வி என்ன?”
“இந்த வேலையை விட்டுடுங்கன்னு சொன்னேன். இல்ல, விடமுடியுமான்னு கேட்டேன்.”
“முட்டாள்த்தனமா பேசாதீங்க”
“நான் முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்! நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க”
“இப்போ என்னங்கப் பிரச்சனை உங்களுக்கு?, நான் என்னைக் காப்பாத்திக்குவேன்ங்க. இனி இந்த மாதிரி நடக்காது. என்னை நம்புங்க”
“உங்கக் கூட வந்த ஆஃபிசர்ஸ்ல 8 பேர் ஸ்பாட்லயே செத்துட்டாங்க. உங்களோட சேர்த்து ரெண்டே பேர் தான் பிழைச்சிருக்கீங்க. உண்மை தான?”
“…………….”
“வேலையை விட்டுடுறேன்னு சொல்லுங்க”
“ரோஹினி.. எனக்குன்னு சிலக் கொள்கைகள்,விருப்பங்களெல்லாம் இருக்கு. இப்படிப் பாதியில வேலையை விட்றதுக்கு நான் இதுல சேரல. இதுக்கெல்லாம் நான் பயந்திருந்தா.. இஞ்சினியரிங் முடிச்சப்பவே, ஏசில உட்கார்ந்து பார்க்குற வேலையாப் பார்த்து சேர்ந்திருப்பேன்! நான்… நான் நேசிக்கிற ஜாப்-ங்க இது! பொழச்சு வந்த என்னைப் பார்த்துச் சந்தோசப்படாம இது என்னங்க பிடிவாதம்?”
“சரி, இன்னிக்கு மாதிரி ஒரு நாள், ‘சி.ஆர்.பி.எஃப் ஆஃபிசர்களின் வீரமரணம்ன்னு எட்டோட, ஒன்பதாச் சேர்த்து உங்க பொணமும் வந்து இறங்குனா.. நான் கலங்காம… என் புருஷன் நாட்டுக்காகத் தன் இன்னுயிரை தந்தத் தியாகின்னு மார் தட்டிட்டு நிமிர்ந்து நிற்கனுமா?”
“ரோஹினினினினினி” – கிட்டத்தட்டக் கத்தினார் மரகதம்மாள்.
“நாளைக்கு என்ன நடக்கும்ன்னு நீங்க எப்படிங்கத் தீர்மானம் பண்ணலாம்?” -ஜீவன்
“இது நடக்காதுன்றதுக்கு என்ன கியாரண்ட்டி?”
“கல்யாணமாகி 7 வருஷத்துல இது தானேங்க முதல் முறை?, 7 வருஷத்தையும் சேஃபா தான கடந்திருக்கேன்?, அதையெல்லாம் கணக்குல சேர்க்க மாட்டேன்றீங்க?”
“நான் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்கக்கிட்டத் தெளிவா சொன்னேன். என் அண்ணி மாதிரி என்னால ஆக முடியாதுன்னு! நீங்க தான் பின்னாடியே வந்து என்னன்னவோப் பேசிக் கன்வின்ஸ் பண்ணிக் கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க! இப்போ… இப்படி நிற்க வைச்சுட்டீங்க”
நெற்றியைத் தேய்த்தபடிப் பெருமூச்சை வெளியிட்ட ஜீவன் “ரோஹினி… அன்னிக்கு சொன்னதையே தான் இன்னிக்கும் சொல்றேன்! ஒவ்வொருத்தரோடத் தலையெழுத்தும் ஒவ்வொரு மாதிரி! ரிஸ்க் இல்லாத விசயமேக் கிடையாது லைஃப்ல! ரோட்ல வண்டியோட்டிட்டுப் போறவனுக்கும் சாவு வரத் தான் செய்யுது! அதுக்காக.. நாம வண்டில போகாமலா இருக்கோம்?, கொஞ்சம் தெளிவா யோசிங்க” என்றான்.
“அப்போ உங்களால இந்த வேலையை விட முடியாதா?”
“நிச்சயமா முடியாதுங்க. உங்களை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ!, அதே அளவுக்கு என் வேலையையும் நேசிக்கிறேன்! என்னால முடியாது.”
ஒரு நிமிடம் அமைதி காத்தவள் பின் நிமிர்ந்து தீர்க்கமாய் அவனை நோக்கி “அப்போ என்னை விட்டுடுங்க” என்றாள்.
“அப்படின்னா??”
“டிவர்ஸ் பண்ணிடலாம்! உங்களுக்கும்,எனக்கும் இடையில இனி எந்த உறவும் வேண்டாம்” – தெளிவாய் அவள் உச்சரித்த வார்த்தைகளைக் கண்டு ஜீவன் திகைத்து நிற்க, மரகதமும்,கெடாமீசையும் பதறி அருகே வந்தனர்.
“என்னப் பேச்சு பேசுறம்மா ரோஹினி?, உன் வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா?” – கெடாமீசை.
“இழுத்து வைச்சு 4 அறை விட்ருவேன்டி யோசிக்காம!, என்னப் பேச்சு பேசுற?” – அவள் கையைப் பற்றித் திட்டிய மரகதம்மாள்.
தன் இருபுறமும் நின்று, விடாமல் கத்திக் கொண்டிருந்தவர்களை அசட்டை செய்த ரோஹினியின் பார்வை ஜீவனின் மீது மட்டுமே பதிந்திருந்தது. அவனுடைய பார்வையும்!
பின் நடந்து சென்று, ஹாலின் ஓரத்திலிருந்த ஃப்ரிட்ஜைத் திறந்துத் தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டவன், அவள் முன்பிருந்த டீபாயின் மேல் வைத்து “நீங்களும் குடிங்க. நான் நாளைக்கு வர்றேன்” எனக் கூறிச் சென்று விட்டான்.
ரோஹினி அத்தோடு நிற்கவில்லை! தன் சொல்லின் தீவிரத்தை, தான் எடுத்த முடிவின் வீரியத்தைத் தன் செயலால் தெளிவாய் உணர்த்தினாள்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்குக் கெடாமீசையிடமிருந்து ஃபோன் வந்தது ஜீவனுக்கு, ரோஹினியையும்,பிள்ளைகளையும் காணவில்லையென்று!
பதறியடித்துக் கிளம்பிய ஜீவன், அன்றிரவு வரை நெல்லை முழுதும் தேடி அலைந்தும் அவள் சென்ற சுவடேத் தெரியவில்லை. தலையைப் பற்றிக் கொண்டு அமர்ந்து விட்டவனைக் கண்டு அவன் அன்னை ரோஹினியைக் கரித்துக் கொட்டினார்.
அவள் அறையைத் துழாவியதில், அவள் நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்றதற்கான ரசீதும், சென்னையின் ப்ரைவேட் இன்ஸ்டிடியூஷன் ஒன்றில் டிராயிங் டீச்சராகச் சேரச் சொல்லி வந்திருந்த லெட்டரின் காப்பியும் கிடைத்தது. அதை வைத்து அவள் இருப்பிடத்தைக் கண்டறிந்தவன், தாமதிக்காமல் சென்னைக்கு ஓடினான்.
இன்ஸ்டிடியூட் கொடுத்திருந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தவளை, விடிந்தும் விடிந்திராத அந்தக் காலைப் பொழுதில் சந்தித்தான் ஜீவன்.
அந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு, காலிங் பெல் அடிக்காமல், கதவைத் தட்டினான். அவனை எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ, ரோஹினி அவனைக் கண்டதும் ஆச்சரியம் கொள்ளவேயில்லை. அவனுக்கு வழி விட்டு விலகி நின்றாள்.
உள்ளே வந்து ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தவன், முழுச் சோர்வில் இருந்தான். ஊன்,உறக்கம் ஏதுமின்றி முதல் நாள் காலை 4 மணியிலிருந்து அவளைத் தேடி அலைந்ததன் பலன்! கண்கள் சிவந்து,முகம் கருத்து ஒரே நாளில் பாதியாகிப் போயிருந்தான். இது எதுவும் ரோஹினியைப் பாதிக்கவில்லை போலும்! கையைக் கட்டிக் கொண்டு அவனையேப் பார்த்திருந்தாள்.
முழுதாக அரை மணி நேரம் அமைதியுடனே கழிந்தது.
“இப்போ நான் என்னங்க பண்ணனும்?” – அடக்கப்பட்டக் கோபத்துடன் அடக்கமாய் வந்தது அவன் குரல்.
“வேலையை விடனும்”
“முடியாதுங்க”
“அப்போ,டிவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போடுங்க” – அவனை எதிர்பார்த்துத் தயாராய் வைத்திருந்தாள் போலும்! டீபாயின் மீதிருந்தத் தாள்களைக் காட்டினாள்.
“………………..” – அவன் பார்வை எதிரே நின்றிருந்தவளின் கால் விரலில் பதிந்திருந்தது.
“கையெழுத்து போட்டுட்டு??, கையெழுத்துப் போட்டுட்டு என்னங்க பண்ணனும்?, என்னைப் பிரிஞ்சு வாழ்நாள் முழுசையும் உங்களாலக் கடந்துட முடியுமா?, என்னால முடியாதுங்க. உங்களாலயும் முடியாது. எனக்குத் தெரியும். ”
“……………..”
“கொ… கொஞ்சம் என்னைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்களேன் ப்ளீஸ்!, என் கொள்கைகளையும்,என் விருப்பங்களையும் மதிக்க முயற்சி பண்ணுங்க! உயிரைக் காப்பாத்துற டாக்டர் தொழில் மாதிரி தான்-ங்க, நான் பார்க்குற வேலையும்! இந்தப் புண்ணியம், என் பேரன்,பேத்தி வரைக்கும் எல்லாரையும் போய்ச் சேரும்!”
“என்ன, அதைப் பார்க்கத் தான் நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க”
“ரோஹினி… ப்ளீஸ்..”
“நாட்டைக் காக்கனும்ன்ற புனிதமான கொள்கை வைச்சிருக்கிறவருக்கு ஏன் குடும்பம்,குழந்தைன்ற ஆசையெல்லாம்??, உங்கக் கொள்கைகளுக்கு நான் ஒத்துப் போகனும்ன்னு வேற நினைக்கிறீங்க?”
“அதனால் என்ன செய்யப் போற??, ம்? டிவர்ஸ் பண்ணி நடந்த கல்யாணத்தை இல்லன்னு ஆக்கிடுவ!, குழந்தைகளை என்ன செய்வ?, திரும்ப வயித்துக்குள்ளேயே அனுப்பி வைச்சிடுவியா?” – அவன் ஒருமைக்குத் தாவியதிலிருந்தே தெரிந்தது மொத்தமாகப் பொறுமையிழந்து விட்டான் என்பது!
“நீங்க உங்கக் கொள்கைகளுக்காகப் போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் உங்க நினைப்புல நானும்,குழந்தைங்களும் காலம் பூரா கண்ணீர் விட்டு வாழனும்ன்றதை என்னால கற்பனைக் கூட பண்ணிப் பார்க்க முடியல ஜீவன்”
“நான் உங்க கண்ணு முன்னாடி உயிரோட நிற்கிறேன்ங்க. அதைப் பாருங்க கொஞ்சம்! மறுபடி,மறுபடி சொன்னதையே சொல்லாதீங்க. எனக்கு ரொம்பக் கோபம் வருது”
“ஒரு வேளை அப்படி ஆயிட்டா….. எங்க நிலைமை என்ன?, இதுக்குப் பதில் சொல்லுங்க”
“……………………”
“அந்த வேதனையெல்லாம் சுமந்துட்டு வாழ்வேன்னு நினைச்சீங்களா?, மாட்டேன்! செத்துப் போயிடுவேன்!”
“…………………”
“அது எவ்ளோ பெரிய நரகம்ன்னு அண்ணியைப் பார்த்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன்! மூணாவதா ஒரு ஆளுக்கு நடக்கிறதைப் பார்க்கவே என்னால சகிச்சுக்க முடியாதப்போ, அதே விசயம் எனக்கு நடந்தா.. தாங்கிக்க முடியுமா??, முடியாது!”
-இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு சைக்கோவைப் போல் நடந்து கொள்ளும் இவளை என்ன தான் செய்வது??, உயிரோடு,நல்ல ஆரோக்கியத்தோடு, குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்வதைப் போல் கற்பனை செய்து பார்க்க மாட்டாளா?, என்னவொரு நெகட்டிவ் தாட்ஸ்! முட்டாள்! ‘இப்போதே பொம்மை வேண்டும்’ என அழுது தீர்க்கும் குழந்தைக்கும்,இவளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது??
போஸ்ட்-ப்ரக்னென்ஸி டெப்ரெஷன் என்பார்கள்! பிரசவத்திற்குப் பின்பான மன அழுத்தம்! புதிதாகப் பிறந்த குழந்தையைக் கண்ட உற்சாகம், கர்ப்பமாயிருந்த போது கணவன் மற்றும் உடனிருந்தவர்களிடமிருந்துக் கிடைத்த அக்கறை,திடீரென மாறுகையில் உண்டாகும் சோகம்,தூக்கமின்மை,சோர்வு,உடல்வலி,ரத்தப்போக்கு! இவையனைத்தும் தான் இந்த மன அழுத்தத்திற்குக் காரணம்! மிகச் சாதாரணமான விசயம் தான்! அநேக பெண்கள் இதைச் சுலபமாகக் கடந்து விடுகிறார்கள்!
ஆனால் ரோஹினியைப் போன்ற சிலர்.. அதாவது கஷ்டம்,துக்கம் போன்ற உணர்வுகளை அவ்வளவு சீக்கிரம் வெளியே காட்டாமல் இறுகிப் போகும் பெண்களை இந்த மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே தாக்கி விடுகிறது! போதாதற்கு.. ஜீவனின் நிலை வேறு சேர்ந்து கொண்டு.. அவளை மொத்தமாக மாற்றி, சைக்கோ நிலைக்குத் தள்ளி விட்டிருந்தது!
ஜீவனுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அவன் அவளை எப்படியேனும் பேசிச் சமாதானம் செய்து உடன் அழைத்துச் சென்று விடும் நோக்கத்தோடு வந்திருந்தான்.
“இப்போ என்ன தான் முடிவா சொல்றீங்க?”
“வேலையை விடுங்க. இல்ல, இந்தப் பேப்பர்ஸ்ல கையெழுத்துப் போடுங்க”
“ரெண்டுமே என்னால முடியாது ரோஹினி”
“அப்போ நான் செத்துட்றேன்! உங்களுக்கு என்னாகுமோ, ஏதாகுமோன்னோ யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு நாளும் பைத்தியமாகிக் கேவலமா சாகுறதை விட, நான் இப்போவே செத்துட்றேன்!” – அழுகையுடன் ஒலித்தது அவள் குரல்.
-இதுவரை அவள் அழுததில்லை! அவள் அழுது அவன் கண்டதில்லை! ஏன், அவளுடைய வீட்டாரும் கூட அவள் அழுது பார்த்ததில்லை! இதை அவர்களே சொல்லிக் கேட்டிருக்கிறான்! இன்று அழுகிறாள்! அவனால்!!
பல்லைக் கடித்து, கையை இறுக மூடி எச்சில் விழுங்கியவனின் விழிகளிலும் லேசாய் நீர் கோர்த்திருந்தது.
விறுவிறுவெனச் சென்று டீபாயின் மீதிருந்தப் பேப்பர்களை எடுத்துக் கடகடவெனக் கையெழுத்திட்டான்.
திகைப்புடன் அவனையே நோக்கியவளின் மீது பேப்பர்களை எறிந்து விட்டுச் சென்றவனின் கண்களில் ஆத்திரம்,கோபம்,அன்பு,காதல்,இயலாமை,யாசிப்பு அனைத்தும்.. அனைத்துமிருந்தது.
மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்கத் தொண்டையிலிருந்துப் புறப்பட்ட அழுகைக் குரல் வெளியே வந்துவிடாதிருக்கச் சிரமப்பட்டு அடக்கியவளின் முயற்சி தோற்றுப் பெரிதாய் ஒரு கேவல் கிளம்ப…. வேக நடையுடன் முன்னே நடந்தவன், நின்று.. திரும்பி அவளருகே வந்து, அவளைத் தன் புறம் திருப்பினான்.
இப்போதும் கூட அழுகையை அடக்க முயற்சி செய்து.. முடியாமல்.. கண்களில் வழியும் நீரை எண்ணி எரிச்சலுற்று, ‘என்னால் இதைச் சமாளித்து விட முடியும்’ என்கிற வீராப்புடன், தோளை விரித்து, நிமிர்ந்து நின்று… கஷ்டப்பட்டு மனதை மறைத்துக் கொண்டிருந்தவளிடம்.. ஆயிரமாவது முறையாக.. அநியாயக் காதல் கொண்டு…. பொறுக்க முடியாமல் குனிந்து.. அவள் இதழ்களில் முரட்டுத்தனமாகத் தன் இதழ்களைப் பொருத்தினான் அவன்.
அழகான, அறிவுகெட்ட, திமிர்ப்பிடிச்சக் காதலி! – அவன் மனம் முணுமுணுத்தது.
