அத்தியாயம் - 7
அன்றைய சம்பவத்திற்குப் பிறகு ஜீவன் அவளைத் தேடிச் செல்லவில்லை! கதைகளில் வருவதைப் போல், என்றேனும் அவனைப் புரிந்து கொண்டு அவளாகவே வருவாள் என நம்பினான். அந்தோ பரிதாபம்! அவள் வரவேயில்லை! வக்கீல் நோட்டீஸ் தான் வந்தது! பயந்து.. மீண்டும் அவளிடம் சென்றவனை அவள் சந்திக்கவேயில்லை.
தோழனாய் உடனிருந்த செல்வம் மாமா துபாயில் செட்டிலாகி விட்ட படியால், அவனுக்கு ஆறுதல் சொல்லவும் ஆளில்லாமல் போனது. ரோஹினியின் மீது ஏற்கனவே காண்டுடனிருக்கும் ஜீவனுடைய அன்னையின் கைங்கரியத்தால், அதிதி ஜீவனுடனும், ஆதி ரோஹினியிடமும் வளர கோர்ட் உத்தரவிட்டது! குழந்தைகளை அவளிடமிருந்துப் பிரிக்கும் நோக்கம் ஜீவனுக்குக் கொஞ்சமும் கிடையாது! கோர்ட் வாசலிலேயே இதற்காக மன்னிப்புக் கேட்டவனை அவள் திட்டித் தீர்த்தாள். கடைசியில் ரோஹினியின் பிரிவைப் போக்கிக் கொள்ள அதிதியைத் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளி விடப்பட்டான்.
அச்சமயம், சி.ஆர்.பி.எஃப் ஆஃபிசர்கள் தங்களது குடும்பங்களைத் தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளும் வசதியை இந்திய அரசு கொண்டு வந்திருந்தது. ஆஃபிசர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இந்த ஏற்பாடு!
சிறிதும் யோசிக்காமல் அன்னை மற்றும் அதிதியைத் தன்னுடன் சத்திஸ்கருக்கு அழைத்துக் கொண்டான் அவன். அங்கே அவர்களுக்கென கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் வழங்கப்பட்டது. கேம்ப் இல்லாத ஓரிரு நாட்கள், வந்து பார்த்துச் செல்வான்!
முழுதாக மூன்று மாதம் கூட முடிந்திருக்காது அதிதி அவனோடு வந்து!, அன்னையின் பிரிவை, பாட்டியம்மாளின் அரைகுறை கவனிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், காய்ச்சலில் விழுந்தாள்.
மனதிலுள்ள கஷ்டத்தை வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து இறுகிப் போவதில் இவள் அன்னையை ஒத்திருந்தாள்!, அவன் வீட்டிற்கு வந்து செல்லும் நாட்கள் தவிர, மற்ற நாட்கள் சிரிப்பென்பதையே தொலைத்து விட்டிருந்தாள்.
மகளின் நிலைக்கு அவளது மனநிலையே காரணம் என்று டாக்டர்கள் கூறி விட… செய்வதறியாதுத் தவித்துப் போனான் ஜீவன். மருத்துவமனையில் சந்தித்தத் தகப்பனிடம் அவள் எதையும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அவள் கண்ணில் குடி கொண்டிருந்த சோகம் அவனை மிகவும் வாட்டியது. அந்தக் கண்கள் ரோஹினியை நினைவுபடுத்தி மேலும் கொன்றது!
மனைவியின் பிரிவு ஏற்கனவே அவனை வேலையில் முழுதாக ஈடுபட விடாமல், கவனத்தைச் சிதறடித்துக் கொண்டிருக்க, பெற்ற மகளை ஒழுங்காகக் கவனித்துக் கொள்ள முடியாதத் தன் நிலைக்கும் வேலையின் மீதே பழியைப் போட்டது மனசாட்சி! ஒரு காலத்தில் உயிராக நேசித்தப் பணியைக் கடைசியில் முழுதாக வெறுத்து.. ராஜினாமா செய்து விட்டு சென்னை வந்து சேர்ந்தான்.
தான் வேலையை விட்டு வந்து விட்டதாகக் கூறித் தன்னுடன் வந்து வாழும் படிச் சொல்லி ரோஹினியிடம் கெஞ்சிப் பார்த்தான். ஈகோவோ,ரோஷமோ என்ன எழவோ! அவள் இன்று வரை அதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை. கடைசியில் குழந்தைகளைக் காரணம் காட்டி, மெல்ல மெல்ல அவளுடன் இயல்பாகப் பேசிக் கொள்ளும் நிலைக்கு முன்னேறியிருந்தான்.
-ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த ரோஹினி என்ன லூசா???, அப்படியும் சொல்லிட முடியாது! ஹஸ்பண்ட் ரிஸ்க்கியான ஜாப்-ல இருக்கிறது தெரிஞ்சா, எந்தப் பொண்ணால தான் இயல்பா காலத்தை ஓட்ட முடியும்?, வாட் எவர்! அங்கிள் வேலையை விட்டு வந்தும் கூட, அவரோட சேராம இருக்காங்கன்னா.. ஆண்ட்டிக்கு ஈகோ தான்! ப்ளடி ஆண்ட்டி அண்ட் ப்ளடி ஆஃபிசர்! சரி, யோசிக்கிறேன்னு சொன்னவங்க, யோசிச்சாங்களா இல்லையா??
அன்று ஜீவனின் காஃபே சற்றும் எதிர்பாராத விருந்தாளியைச் சந்தித்தது.
கருப்பு நிற காட்டன் புடவையில், முகம் முழுக்கத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்த ரோஹினியை, ஜீவன் சற்றும் எதிர்பார்க்கவில்லையென்பதை அவனது உயர்த்திய புருவங்களேக் கூறியது. இதற்கு முன்பு நிறைய முறை வருகை தந்திருக்கிறாள் தான்! ஆனால்.. அனைத்துமே குழந்தைகளுடன்.. குழந்தைகளுக்காக மட்டுமே! இன்று எதற்காக வந்திருக்கிறாள்??, ஜில்லென உள்ளே பரவத் தொடங்கியக் குளிரை அடக்கி.. முன்னே வந்து வரவேற்றான் ஜீவன்.
“வாங்க…” என்றவனிடம் தலை குனிந்தபடி “ம்” என்றவள் நேராகச் சென்று ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்தாள்.
அவள் பின்னேயே சென்றவன் “காஃபி ஆர் ஜூஸ்?, என்ன சொல்லட்டும்?” என்றான்.
“இல்ல, சாப்பிட்டுத் தான் வந்தேன். எதுவும் வேண்டாம்”
சரியெனத் தலையாட்டியவனுக்குச் சத்தியமாக என்ன பேசுவதென்றேத் தெரியவில்லை. தயங்கி நின்றவனை நிமிர்ந்து நோக்கியவள் “உட்காருங்க” என்றாள்.
அந்த ஏசியிலும் நெற்றியோரம் பூக்கத் தொடங்கிய வியர்வையைத் துடைத்தபடி அமர்ந்தவனை அவள் ஆச்சரியமாய் நோக்க.. லேசாய்ச் சிரித்தவன் “சொல்லாம,கொள்ளாம திடீர்ன்னு வந்திருக்கீங்களா… அதான் டென்ஷனா இருக்கு” என்று தயங்கியபடிக் கூறினான்.
உதட்டைக் கடித்தபடி அவள் அமைதியாகி விட.. “எ..என்னாச்சுங்க?, எதுவும் பிரச்சனையா?” என்று வினவினான்.
“இல்ல…………..”
“சொல்லுங்க…”
“நா..நான் நெல்லை போகலாம்ன்னு இருக்கேன்”
முகம் மலர்ந்து சிரித்தவன் “ரொம்ப நல்ல முடிவுங்க! இத்தனை வருசப் பிடிவாதத்தை நீங்க விட்டுக் கொடுத்ததுப் பெரிய விசயம்! அத்தை,மாமா ரொம்ப சந்தோசப்படுவாங்க!” என்றான்.
“நான் ஒன்னும் அவங்களுக்காகப் போகல, குழந்தைகளுக்காகப் போறேன்” – வீராப்பாய் பதில் கூறினாள்.
சிரிப்பு வந்தாலும் மறைத்து “எது எப்படியோ குழந்தைகளுக்காவாச்சும் போகனும்னு தோணுச்சே! அதுவே போதும்” என்றான்.
மேலும் ஏதோ கூற வருகிறாள் போலும்! மேசை மீதிருந்தக் கை விரல்களைப் பிசைந்தபடி “வ..வந்து…” என்று இழுத்தாள்.
“ம்,சொல்லுங்க”-ஜீவன்
“நீ…. நீங்களும் வர்றீங்களா என்னோட?” – ஒரு வழியாகக் கேட்டு விட்டாள்.
விழி விரியத் திகைப்புடன் அவளை நோக்கியவன் “ஏன்?” என்றான்.
யோசிக்கிறாள் போலும்! கருமணிகளிரெண்டும் ஒரே பாதையில் இருபுறமும் சென்று வந்து கொண்டிருந்தது.
“வ..வந்து.. குழந்தைங்க பார்த்தா சந்தோசப்படுவாங்க….. அப்புறம், நீங்க சொன்ன மாதிரி அம்மா,அப்பாவும் கூடச் சந்தோசப்படுவாங்க, அது….க்குத் தான்”
அவன் எதிர்பார்த்த பதில் இதுவல்ல. அது அவளுக்கும் தெரியும். ஒன்றும் கூறாமல், அவளையே நோக்கினான் அவன்.
“நா..நான் கிளம்புறேன்”
இப்போதும் அதே பார்வையுடன் அமர்ந்திருந்தவனைக் கண்டு மெல்ல எழுந்தவளைத் தடுத்து.. அவள் கையைப் பற்றியவன்..
“ஏன் வந்தீங்க?, ஏன் இப்போ போறீங்க?, ஏன் என்னையும் நெல்லைக்குக் கூப்பிடுறீங்க?, இதுக்கெல்லாம் என்னங்க அர்த்தம்?”
“…………….”
“இப்போல்லாம் எனக்குப் பொறுமை குறைஞ்சுக்கிட்டே வருதுங்க. பட்,பட்டுன்னு கோபம் வருது. 40-ல நாய் குணம் சொல்வாங்களே! அதை ப்ரூவ் பண்ற மாதிரி!, தயவு செஞ்சு என்னைச் சோதிக்காதீங்க”
அவனிடமிருந்துக் கைகளை உருவிக் கொண்டவள், நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
“அன்னைக்கு ஏன் ஃபோன்ல அப்படிப் பேசுனீங்க?, ஸ்ட்ரோக் வரும்,ஹார்ட் அட்டாக் வரும்,சாவு வரும்ன்னு??”
“ஏன் அதெல்லாம் வராம இருக்கிறதுக்கு நான் என்ன தெய்வப்பிறவியா?”
“என்னோட வந்துடுன்னு நீங்க சொன்னதும், உடனே பெட்டி,படுக்கையெல்லாம் தூக்கிட்டு ஓடி வந்துடுவேன்னு நினைச்சீங்களா?”
“வர மாட்டீங்க தான்! ஒத்துக்கிறேன்”
“பின்ன ஏன் அப்படிப் பேசுனீங்க?”
“இப்போ என்னங்க?, நான் பேசுனது தப்பு. சாரி. ஸ்ட்ரோக்,ஹார்ட் அட்டாக்கெல்லாம் எனக்கு வராது அப்படின்னு சொல்லனுமா?”
“…………….”
“அதெல்லாம் வந்து தான் நான் சாகனும்னு இல்லங்க. நீங்களே போதும் என்னை உயிரோடு கொல்றதுக்கு!” – உச்சக்கட்ட எரிச்சலில் தான் இதைக் கூறினான் அவன். பின்னே?, என்றுமில்லாதத் திருநாளாக காஃபே வரை வந்திருப்பவள், அவன் காதுகளுக்கு விருந்தளிப்பது போல் ஏதேனும் நற்செய்தி கூறுவாள் என்று பார்த்தால்… அடங்காப்பிடாரி!
அவளுக்கும் கோபம் வந்துவிட்டது போலும்! உஷ்ண மூச்சை வெளியிட்டபடி வெடுக்கென எழுந்தவள் அவனை முறைத்து விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டாள்.
இவளைத் திருத்தவே முடியாது! அவனையும் தான்!
அவள் சென்றதும் எரிச்சலும்,கோபமுமாய் சில மணி நேரங்களைக் கடத்தியவன் பின் அவள் ஈகோவை விட்டு இறங்கி வந்ததேப் பெரிய விசயம்!, ஏதேதோ பேசி நாமே அதைக் கெடுத்து கொண்டோமோ எனத் தன் போக்கில் புலம்பி, பின் தன்னையேச் சமாதானப்படுத்த முடியாமல் அன்றிரவே, அவளைச் சந்தித்தான்.
வழக்கம் போல் ரோஹினி வீட்டு வாசலில் தான் இந்தப் பேச்சு வார்த்தையும்!
“ஊருக்குப் போகனும்னு சொன்னீங்களே!, ட்ரைன் டிக்கெட்ஸ்” – நீட்டியவனிடமிருந்துப் பெற்றுக் கொண்டவள், அதில் அவனுக்குமான டிக்கெட் இருக்கிறதாவென்றுப் பார்த்துக் கொண்டாள்.
“நானும் தான்-ங்க வர்றேன்” – கொஞ்சம் கூட மான,ரோஷமின்றித் தரை மட்டத்துக்கு இறங்கியிருந்தான் அவன்.
அடக்க மாட்டாமல் அவள் இதழோரத்தில் வெற்றிப் புன்னகைப் பூத்தது.
அதைக் கண்டவன் “சிரிக்காதீங்க. எனக்குக் கோபம் வருது” என்றான்.
“நான் சிரிக்கலயே!”
“நினைச்சதை சாதிக்கிறீங்க இல்ல? அப்போ இருந்து இப்போ வரைக்கும்!”
பதில் கூறாமல் கையைக் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்தாள் அவள்.
“என்னை ஏன் ஊருக்குக் கூப்பிட்றீங்க?, இதுக்காவது பதில் சொல்லுங்க”
“உங்களுக்கு என்ன என்னோட வர்றதுல கஷ்டம்?,இத்தனை கேள்வி கேட்குறீங்க?”
“கஷ்டமில்ல. இஷ்டம் தான்!, நீங்களும் இஷ்டப்பட்டுத் தான் கூப்பிடுறீங்களான்னு எனக்குத் தெரியனும்”
“நானும் இஷ்டப்பட்டுத் தான் கூப்பிடுறேன்” – பட்டெனப் பதில் கூறியவளைக் கண்டு வாயடைத்துப் போனான் அவன்.
“ஆசை காட்டாதீங்க. ப்ளீஸ்” – நம்ப முடியாமல் வந்தது அவன் குரல்!
“நான்.. என் ஈகோவை விட்டு இறங்கி வர.. ரொம்பவும் ட்ரை பண்ணிட்டிருக்கேன்! நீங்க பேசிப் பேசி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க” – சிடுசிடுத்தாள் அவள்.
அதுவரை சுருக்கிய புருவங்களுடனும், முசுட்டு முகத்துடனும் உரையாடிக் கொண்டிருந்தவன், நொடியில் மாறி.. ஈஈஈஈ-யென்றாகி விட்டான்!
“பொறுமையா… பொறுமையா வாங்க, தப்பில்ல! நான் வெய்ட் பண்றேன்” – என்றவனைக் கண்டு அடக்க முடியாமல் கடகடவெனச் சிரித்தாள் அவள்.
அதையும் ஆ-வென நோக்கியவனைக் கண்டு, மேலும் சிரிப்பு வர.. கதவைச் சாத்தி விட்டு உள்ளே சென்று.. வயிறு குலுங்கச் சிரித்துத் தீர்த்தாள்.
ஜோடியாக வந்திறங்கிய மகளையும்,மருமகனையும் கண்டு மரகதம்மாளுக்கும், கெடாமீசைக்கும் சந்தோசம் தாளவில்லை! இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி சுற்றியவரைக் கண்டு ரோஹினி பல்லைக் கடிக்க, ஜீவனுக்கோ சங்கோஜமாய் இருந்தது! போதாதற்குக் குழந்தைகள் வேறு எதற்கென்றே தெரியாமல் ஆர்ப்பரித்தனர்.
தன் தோளில் தொற்றிக் கொண்ட ஆதியையும், கையைப் பற்றியிருந்த அதிதியையும் தாண்டி ஜீவனின் பார்வை, உள்ளே சென்று கொண்டிருந்த ரோஹினியையேத் தொடர்ந்தது.
அவள் இறங்கி வர முயற்சிப்பதாகச் சொன்னதேப் பெரிய விசயம்!, இதில் இந்த அத்தை வேறு! கோபமாய் இருக்கிறாளோ என்னவோ! கவலையாய்க் காட்சியளித்தான் அவன்.
“ஜீனு.. தாத்தா எங்களை டெய்லியும் வயற்காட்டுக்குக் கூட்டிட்டுப் போவார், அங்க பம்ப் செட்ல தான் குளிப்போம் தெரியுமா?” – தந்தையைக் கண்ட சந்தோசத்தில் விடாமல் பேசிக் கொண்டிருந்தாள் அதிதி.
“அதனால தான் இரண்டு பேரும் என் கலருக்கு மாறிட்டு வர்றீங்களா?”
“நான் சன்-ஸ்க்ரீனெல்லாம் அப்ளை பண்ணிட்டுத் தான் டாடி போறேன்!, கருப்பாயிட்டேனா??” – ஓடிச் சென்றுக் கண்ணாடியை நோக்கினாள் அதிதி.
சிறுசோ,பெருசோ பெண்களுக்குத் தங்களது தோற்றத்தின் மீது தான் எத்தனை அக்கறை! தானாகச் சிரித்தபடி அமர்ந்திருந்தவனிடம் காஃபியை நீட்டினார் மரகதம்.
“என்னைக் கவனிக்கிறது இருக்கட்டும், உங்க பொண்ணு இத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்காங்க. அவங்களைப் பாருங்கத்தை”
“அவ பொறந்து வளர்ந்த வீடு இது. ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் எதுக்கு மாப்ள?”
“பேசாம, நானும் உங்களை மாதிரி ரோஹினியை ஹாண்டில் பண்ணப் போறேன்”
“இந்த முடிவை ஆரம்பத்துலேயே எடுத்திருந்தீங்கன்னா, இத்தனை வருசத்தை இப்படி ஒண்டியா கழிச்சிருக்க வேண்டாம்”- என்றவரைக் கண்டு “ஹாஹாஹா”-வெனச் சிரித்தான் ஜீவன்.
அதன்பின் டிவியில் ஒரு கண்ணும்,குழந்தைகளின் மீது ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்தவன் அவ்வப்போது நிமிர்ந்து ரோஹினியின் மாடியறையையும் நோக்கத் தவறவில்லை. பின் எழுந்து அவளறைக்குச் சென்றான்.
குளிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் போலும்! தூக்கிக் கட்டியக் கொண்டையுடனும்,மாற்றுடையுடனும் நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் ‘என்ன’ என்பது போல் நோக்கியவளிடம்..
“கோபமா இருக்கீங்களோன்னு பார்க்க வந்தேன்-ங்க” –ஜீவன்
“கோபமா?, இல்லையே ஏன்?”
“இல்ல, அத்தை இப்படி ஆரத்தியெல்லாம் எடுப்பாங்கன்னு நான் சத்தியமா நினைக்கல. நீங்க… நீங்க இதுக்கெல்லாம் டென்ஷனாகாதீங்க”
“நான் அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல”
என்னவொரு ஆச்சரியம்! நம்ப முடியவில்லை அவனால்.
“ஷ்யூர்??, மறுபடி மலையேறிட மாட்டீங்களே?”-சந்தேகமாய் வினவினான்.
கையைக் கட்டிக் கொண்டு முறைத்தாள் அவள். “அப்போ சரிங்க” என்றபடி வெளியேறி விட்டான். எதற்கு வம்பு!
அதன் பின் குழந்தைகளைக் குளிப்பாட்டி,உடை மாற்றி அவள் தன் வேலைகளனைத்தையும் முடித்துக் கீழே வரும் போது அவனும் தயாராகித் தன் சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான்.
குழந்தைகளிருவரையும் டைனிங் டேபிளில் அமர வைத்து விட்டு அவனிருந்த அறையருகே சென்றாள்.
வாசலில் நின்றபடி அவன் அயர்ன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அரவம் உணர்ந்துத் திரும்பியவன், அவளைக் கண்டு புன்னகைக் கொண்டு “கையில கிடைச்சதை அள்ளிப் போட்டு வந்தேன், எல்லாமே அயர்ன் பண்ணாத சட்டையாயிருக்கு” என்றான்.
நாற்பத்தியிரெண்டு வயதில் தன் துணிகளைத் தானே துவைத்து, அயர்னிங் செய்து கொள்ளும் பொறுமையெல்லாம் தமிழ்நாட்டில் எத்தனை ஆண்களுக்கு இருக்கிறதோ தெரியவில்லை!
காதோரத்திலும், தலை முழுதிலும் ஆங்காங்குத் தென்பட்ட அவனது நரைமுடிகளைக் கண்ட போது உள்ளே ஏதோ செய்தது.
அருகே சென்று “தள்ளுங்க” என்றவள்.. அயர்ன் பாக்ஸை வாங்கித் தானே அயர்ன் செய்தாள்.
“உ..உங்களுக்கு ஏன்-ங்க வீண் சிரமம்?” – தயக்கமாய் வினவியவனிடம் “சிரமமெல்லாம் ஒன்னுமில்ல” என்றாள்.
“அப்போ இஷ்டப்பட்டுத் தான் செய்றீங்களோ??”
“……………….”
“டெய்லியும் அயர்ன் பண்ணித் தருவீங்களா?” - ஜீவன்
“ஏன்?, என்னைப் பார்த்தா ‘டோபி’ மாதிரி தெரியுதா உங்களுக்கு?”
“சாரிங்க” – என்றவனிடம் சட்டையை நீட்டி விட்டு “சாப்பிட வாங்க” எனக் கூறிச் சென்றாள் அவள்.
அவன் டைனிங் பேபிளில் அமர்ந்ததும், எதிரே அமர்ந்து உண்டு கொண்டிருந்த அதிதி எழுந்து வந்து, அவன் மடியில் அமர்ந்தபடி உண்ணத் தொடங்கினாள்.
மரகதம் பரிமாறிய இடியாப்பத்தின் ருசியை ரசித்தபடி அவன் உண்ணுகையில் “ரோனி, இது பேரு இடியாப்பமாம். உனக்குத் தெரியுமா?” என்றாள் அதிதி.
சாப்பாடு புரையேற லொக் லொக்கென இருமியவனுக்குச் சிரிப்பு தாங்கவில்லை.
“ஏன் டி அசிங்கப்படுத்துற?, இதுக்கு முன்னாடி நான் உனக்கு இடியாப்பம் செஞ்சுக் கொடுத்ததேயில்லையா?” – கோபத்துடன் ரோஹினி.
“அது ஒன்னும் இப்படியிருக்காது. ஆத்தா எவ்ளோ சாஃப்ட்டா செஞ்சுருக்காங்க பாரு”-அதிதி
“அம்மா செய்றது இன்ஸ்டண்ட் இடியாப்பம் போலங்க டார்லி. ஆத்தா, ஆட்டிப் பிழிஞ்சிருக்காங்க”- ஜீவன்
“அவ ஏன் ஆட்டிப் பிழியப் போறா?, கட்டுன புருஷன் மேலயும் அக்கறையில்ல. பெத்தப் பிள்ளைங்க மேலயும் அக்கறையில்ல”- அடுப்படியிலிருந்து மரகதத்தின் குரல் வந்தது.
“இப்போ நான் சாப்பிடனுமா?, சாப்பிட வேண்டாமா?” – கோபமாய் எழுந்தாள் ரோஹினி.
“அத்தை, கொஞ்சம் சும்மா இருங்களேன்.. ரோஹினி, ப்ளீஸ் உட்கார்ந்து சாப்பிடுங்க” –ஜீவன்
“அவ கிடக்குறா மாப்ள, மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்?, கறியா? இல்ல மீனா?” –மரகதம்
“இல்லத்தை, நான் சேரன்மகாதேவிக்குக் கிளம்புறேன், வீட்டுக்குப் போய் அம்மா,அப்பாவைப் பார்க்கனும். ரோஹினி சரின்னு சொன்னாங்கன்னா, குழந்தைகளையும் அழைச்சிட்டுப் போவேன்”
“அவ என்ன தம்பி சரின்னு சொல்றது?, இவங்க அவங்களோட பேரக் குழந்தைங்க! அவங்களுக்கில்லாத உரிமையா?” – மரகதம்
“அழைச்சிட்டுப் போட்டுமாங்க?” – ரோஹினியிடம் வினவினான் ஜீவன்.
“திரும்ப எப்போக் கூப்பிட்டு வருவீங்க?”
“ஈவ்னிங் வந்துடுவேன்-ங்க”
“அப்போ ஓகே!”
“நான் குழந்தைங்க வந்ததுல இருந்து ரோஹினி அப்பாக்கிட்ட சொல்லிட்டுத் தான் இருந்தேன் மாப்ள, ஒரு தடவை சேரன்மகாதேவிக்குக் (ஜீவனின் வீடிருக்கும் ஊரின் பெயர்) கூட்டிட்டுப் போங்கன்னு!, நீங்க தான் வேண்டாம்ன்னு சொன்னதா சொன்னார்”
“நான் வரும் போது அழைச்சிட்டுப் போகலாம்ன்னு அத்தை, அப்போ நாங்க கிளம்புறோம்” –என்றவன் குழந்தைகளை அழைத்துக் கொண்டுத் தன் வீட்டிற்குச் சென்றான்.
மூவரும் சென்றதும் தனது பழைய பெயிண்டிங்குகளைக் கண்டபடி நேரத்தைப் போக்கியவள், போரடித்துப் போக.. சமையலறைக்கு வந்தாள். வியர்த்து விறுவிறுக்க மரகதம் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் நறுக்கி வைத்திருந்தப் பொருட்களைக் காணும் போதே தெரிந்தது அனைத்தும் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளென்பது! வந்ததிலிருந்து அவரிடம் இவள் சரியாகப் பேசக் கூட இல்லை.
“ம்மா…”
“ம்ம், பாதாம் பால் குடிக்கிறியாடி?, அப்பா இப்போ தான் வாங்கிட்டு வந்தாரு”
“கொஞ்ச நேரம் ஆகட்டும்”-என்றபடி அருகிலிருந்த வெங்காயத்தை நறுக்கத் தொடங்கினாள்.
“அதெல்லாம் நான் பண்ணிக்கிறேன். நீ போய் உட்காரு”
“ம்மா”
“என்னடி?”
“சாரிம்மா…….”
நிமிர்ந்து அவளை நோக்கினார் மரகதம்.
“எனக்கு எதுக்குடி சாரி?, வீண் பிடிவாதம் பிடிச்சு உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கிட்டதுக்கு என் கிட்ட ஏன் மன்னிப்புக் கேட்குற?”
“……………..”
“மாப்ள ரொம்பப் பாவம்டி! இனியும் அவரைப் படுத்தாத. அவரோட நீ சேர்ந்து வந்தப்பவே அம்மாவுக்குப் புரிஞ்சது, ஏதோ முடிவு பண்ணியிருக்கன்னு! என்னன்னு நான் கேட்கல!, ஆனா.. நல்ல விசயமாச் சொல்லுடி!, ஏற்கனவே உங்கண்ணனைத் தூக்கிக் கொடுத்துட்டேன்! உன் வாழ்க்கையும் இப்படின்னா.. நானும்,உன் அப்பாவும் உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்ல” – நெகிழ்ச்சியான பேச்சுத் தான்! வேற யாருமாயிருந்தால்.. கண்ணீர் விட்ட படித் தான் இதைக் கூறியிருப்பார்கள். ஆனால் மரகதத்தின் கண்களில் ஈரம் சொட்டவில்லை! ரோஹினி அவரைக் கொண்டு பிறந்திருப்பாள் போலும்!
அவர் கூறியதற்குப் பதில் சொல்லாமல் “அண்ணி எங்க?, அவங்கம்மா வீட்ல இருக்காங்களா?” என்றாள்.
“ஆமாடி! அங்க இருந்து வேலைக்குப் போறது ஈசியா இருக்குன்னு சொல்றா. நான், தினமும் போய்ப் பார்த்துக்குவேன்!, நீயும் ஒரு தடவைப் போய் பார்த்துட்டு வா”
-கணவன் இறந்த பின்பு, மாமியார்,மாமனாரின் உதவியுடன் மேற்படிப்புப் படித்து வங்கியொன்றில் வேலை பார்த்து வரும் அண்ணியை எண்ணியபடிச் சரியெனத் தலையசைத்தாள் ரோஹினி.
அன்று மாலை வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டுக் குழந்தைகளாகத் தான் இருக்குமென்று எண்ணி, விரைந்து ஓடி வந்த ரோஹினி வாசலில் குழந்தைகளோடு வந்திறங்கிய மாமியாரைக் கண்டு வியந்து போனாள். அவர் பின்னேயே கலவர முகத்துடன் ஜீவன்!
நாற்பது வயதில் இந்த ஆளுடைய வாழ்க்கை இத்தனைக் கொடூரமாக இருக்க வேண்டாம்! பாவம்!
தன்னையே முறைப்புடன் நோக்கிக் கொண்டிருக்கும் மாமியாரைக் கண்டு கொள்ளாமல் குழந்தைகளின் அருகே சென்றாள் ரோஹினி. அதற்குள் வாசலை வந்தடைந்த மரகதம் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல.. அவசரமாக ரோஹினியிடம் சென்றான் ஜீவன்.
“சாரிங்க, நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம அம்மா இங்க வந்துட்டாங்க” – ஜீவன்
“வந்துட்டுப் போறாங்க, நீங்க ஏன் எல்லாத்துக்கும் பதறுறீங்க?”
“இல்லங்க, உங்களுக்குத் தான் அவங்களைப் பிடிக்காதே!”
“அதனால?, அவங்க உங்கம்மா இல்லன்னு ஆயிடுமா?”
“அப்படியில்லங்க….”
“ப்ச், சும்மா பேசிட்டே இருக்காம, உள்ளே வாங்க” – வாட் அ சேஞ்ச் ஓவர்! திகைப்பு மாறாமல் அவள் பின்னேயே சென்றான் அவன்.
குழந்தைகளுடன் கெடாமீசை உள்ளே சென்று விட.. இவர்களனைவரும் ஹாலில் அமர்ந்தனர். உபசரிப்புகள் முடிந்ததும் அமைதியாகயிருந்த ஜீவனின் தாய் ராஜம், திடீரெனச் சேலைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டு அழுதார்.
“இந்தம்மா இப்போ ஒரு சீனைப் போடும்”- ரோஹினியின் மனசாட்சி.
“அம்மா.. இப்போ எதுக்கு அழறீங்க?” – ஜீவன்
“அழாம என்னடா செய்யச் சொல்ற?, இந்த வயசுல உன்னை இப்படி ஒண்டிக்கட்டையா பார்க்கத் தான் நான் உயிரோட இருக்கேனா?,” என்றவர் ரோஹினியிடம் “என் மேல என்னக் கோபம் இருந்தாலும், தயவு செஞ்சு மன்னிச்சுடு!, விவாகரத்து வாங்குனப்போ, அதிதி நம்மோட இருக்கனும்ன்னு பிரச்சனை பண்ணினது நான் தான்!, குழந்தையை உன் கிட்ட இருந்து பிரிக்கனும்னு ஜீவன் நினைக்கவேயில்ல” என்றார்.
“பழசெல்லாம் எதுக்குப் பேசிக்கிட்டு, விடுங்க” – ரோஹினி
“இல்ல, நீ அதையெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டுத் தான் இத்தனை நாளா, என் பையன் உன் பின்னாடியே வந்து கெஞ்சியும், அவனோட வந்து வாழாம இருக்க”
“அப்படியெல்லாம் எதுவுமில்ல. நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க”
“எதுவுமில்லன்னா, அவனோட சேர்ந்து வாழலாமில்ல?, நான் உங்களுக்காக ஏறாத கோவிலில்ல, வேண்டாத சாமியில்ல” – தன் போக்கில் புலம்பிச் சென்றவரை நிறுத்திய ஜீவன் “எல்லாம் நடக்கும் போது நல்ல விதமா நடக்கும். நீங்க ஒப்பாரி வைக்காதீங்க. ப்ளீஸ்” என்றான்.
அதன் பின்பு சமாதானமாகி விட்ட ராஜம், மேலும் சிறிது நேரமிருந்துப் பின் ரோஹினியிடம் வீட்டிற்கு வரும்படிக் கூறி விட்டுச் சென்றார்.
அன்றிரவு குழந்தைகளுடனேத் தங்கி விட்ட ஜீவன், மொட்டை மாடியில் கெடாமீசையுடன் பேசிக் கொண்டிருந்தான். கையில் பால் தம்ளர்களுடன் வந்து சேர்ந்த ரோஹினி இருவரிடமும் நீட்ட.. மகள்,மருமகனுக்குத் தனிமை கொடுக்க விரும்பி, மீசை கழண்டு கொண்டார்.
இருளை வெறித்தபடி நின்றிருந்தவளிடம் “சாரிங்க, எங்கம்மா அப்படியெல்லாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கல” என்றான்.
“எனக்கும் ஆச்சரியம் தான்!, பொதுவா உங்கம்மாவுக்கு என்னைச் சுத்தமா பிடிக்காது! கரிச்சுக் கொட்டத் தான் வீடு தேடி வந்திருக்கோன்னு நினைச்சேன்”
“ச்ச,ச்ச நான் அதுக்கெல்லாம் அனுமதிப்பேனாங்க?”
“…………………”
“குழந்தைங்க தூங்கிட்டாங்களா?”
“தூங்கிட்டாங்க”
“நீங்க தூங்கலையா?”
“ப்ச், தூக்கம் வரல”
“ஓஓஓஓ!! அப்போ, நான் பேசட்டும்ங்களா??”
“என்ன பேசப் போறீங்க?, ஸ்ட்ரோக்,ஹார்ட்-அட்டாக் மாதிரி அல்சர்,கேன்சர்ன்னு எதுவும் சொல்லப் போறீங்களா?”
“ப்ச்,அதை விடவே மாட்டீங்களா?, தெரியாம சொல்லிட்டேன்-ங்க” – கிட்டத்தட்டக் கதறினான் அவன்.
“ஹாஹாஹா..”
“இந்த 2 நாளா.. அடிக்கடி சிரிக்கிறீங்க. பார்க்க, ரொம்ப நல்லாயிருக்குங்க”
பதில் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
சிரிப்புடன் அவளை நோக்கியவன், கையை நீட்டிச் சோம்பல் முறித்தபடி “ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்” என ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தான்.
“பேசாம ஒரு பாட்டுப் பாடுங்களேன், தூக்கமாவது வரும்” – அவன் புறம் திரும்பி நின்று வினவினாள் அவள்.
“பாட்டு பாடனுமா??” என்றவனிடம் “ம்ம்” என்றாள்.
அவள் முகமும்,அதில் தெரிந்த ஆர்வமும் அவர்களது திருமண இரவை நினைவு படுத்தியது ஜீவனுக்கு.
காற்றிலாடும் முன் நெற்றி முடியைக் காதோரத்தில் ஒதுக்கியபடிக் கைக் கட்டி நின்றிருந்தவளின் மோதிர விரல்கள், வெற்று நெற்றி, தன்னையே ஆர்வமாய் நோக்கும் விழிகள், லேசாய்ப் புன்னகை பூத்திருந்த உதடுகள், மொத்தமாய் அவள்! எப்போதும் போல்… மனதில் துள்ளி எழுந்த காதலை வெளிப்படையாய்க் கண்ணில் காட்டி.. அவன் பாடத் தொடங்கினான்.
“விடிகாலை விண்ணழகு! விடியும் வரைப் பெண்ணழகு!
நெல்லுக்கு நாற்றழகு! தென்னைக்குக் கீற்றழகு!
ஊருக்கு ஆறழகு! ஊர்வலத்தில் தேரழகு!
தமிழுக்கு ழ அழகு! தலைவிக்கு நான் அழகு!”
- தன்னையே நோக்கியபடிப் பாடியவனின் குரல், அதன் காந்த சக்தி, அவன் பார்வை, அது சொல்லும் காதல் சேதி, இது எதுவும் அவளுக்குப் புதிதல்ல! ஆனால்.. ஏன் ஒவ்வொரு முறையும், கொள்ளை,கொள்ளையாய் அவளை ஈர்த்துத் தொலைக்கிறது!
முகம் மாற.. இமை மூடித் திறந்து.. மறுபுறம் திரும்பியவளின் கையைப் பற்றி அவள் மீது சாய்ந்தவன், சிறிதும் யோசிக்காமல் தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவளிடம் “சாரிங்க” என்றவன் தொடர்ந்து “இப்போ கால் தடுக்கினதால, உங்க மேல விழல” என்றான்.
