அத்தியாயம் - 10

ஜூலை, 2005…

ன்றைய இரவுக்குப் பிறகு சரண்யா இருக்கும் திசைப் பக்கம் செல்வதைக் கூட வெகுவாகக் குறைத்துக் கொண்டான் விஜய். கண்களை மூடினாலே.. முகம் முழுக்க மழை நீர் வடிந்தபடி… பயத்தில் மின்னிக் கொண்டிருந்த அவள் விழிகளே நினைவில் நின்று தீரா ஆத்திரத்தை கிளப்பிக் கொண்டிருந்தது. அவனை ஒரு அற்பப் புழுவைப் போல் பார்த்து வைத்தது மட்டுமில்லாமல்.. பொறுக்கியென்று மீண்டும்,மீண்டும் சொல்கிறாள்! என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்?

ஏற்கனவே வானளவு உயர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அவனது மனத்தீயில் எண்ணையை ஊற்றுவது போல அடுத்து வந்த நாளில் நடந்து கொண்டாள் அவள்.

சம்பவம் நடந்த மறுநாள் காலை.. எப்போதும் போல போதி மரத்தடியில் அமர்ந்து.. மலைத் தொடரை வெறித்துக் கொண்டிருந்தவனின் மீது யாரோ கல்லெறிய… தோளில் வந்து விழுந்தக் கல்லைக் கண்டுத் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் அவன்.

மூச்சு வாங்க.. மேட்டின் மீது ஏறி வந்து அவன் முன்னே நின்றவள் – சரண்யா! கோபமும்,ஆத்திரமுமாய்க் கண்ணீர் வடிய அவனை வெறித்து நோக்கியவள்.. “எ..எதுக்குடா அப்படிப் பண்ண?, எவ்ளோ.. எவ்ளோ தைரியம் இருக்கனும் உனக்கு?, எங்கப்பாவுக்கு மட்டும் இதுத் தெரிஞ்சா உன்னை… உன்னைக் கொன்னுப் போட்டுடுவார் தெரியுமா?” என்றவள் ஏதோ அவன் அப்போது தான் முத்தமிட்டதைப் போல் ‘ச்சி’ என்றபடித் தன் உதடுகளைத் துடைத்துக் கொண்டாள்.

அவள் ‘ச்சி’ என்றதில் கடுப்பாகிப் போனவன்.. நிமிர்ந்து அவளை நோக்கி.. உணர்வற்றப் பார்வையுடன்…. “கிட்ட வராத! கிட்ட வந்தேனா.. மறுபடி கிஸ் பண்ணுவேன்” எனக் கூறப் பயந்து நடுங்கிப் போனாள் அவள்.

தன்னிச்சையாகக் கால்கள் பத்தடிப் பின்னடைய அவனது திமிரிலும்,தைரியத்திலும் வியந்துக் கண்களை அகல விரித்தாள்.

“தப்பும் பண்ணிட்டு அதைப் பத்தினக் குற்ற உணர்ச்சிக் கொஞ்சமும் இல்லாம.. உன்னால.. எப்படி இப்படி இருக்க முடியுது?” – அழுகைக் குரலில் முணுமுணுத்தாள்.

“60 செகண்ட்ஸ் தான் உனக்கு டைம்! நீ இங்கேயிருந்து போகலேன்னா.. நான் உன் கிட்ட வருவேன்! அதுக்கப்புறம்.. நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்ல”

-அவள் முகத்தைப் பாராமல் நேர் வெறித்தபடி, அமர்ந்த இடத்திலிருந்தே அவன் கூறிய விதத்தில் திகைத்து… அப்படி என்ன செய்து விடுவான் என்று அவனைப் போலத் திமிருடன் நிற்க நினைத்துப் பின் பயந்து…. குளிர்க்காற்றில் நடுங்கிய உடலையும், அவன் செய்கையில் நடுங்கிய மனதையும் அடக்கத் தெரியாமல்… கால்கள் தள்ளாடத் துவண்டு போனாள் அவள்.

அவள் இன்னமும் நகராதிருப்பதைக் கண்டு அவன் வேக மூச்சுடன் எழுந்து அருகே வர… தொய்ந்த கால்கள் திடீரென வலுப்பெற்றதில்.. மேலும் நான்கடிப் பின்னே நகர்ந்தவள்…. “உங்களை எவ்ளோ டீசண்ட்ன்னு நினைச்சிருந்தேன் தெரியுமா?, இ..இப்படி மோசமா நடந்துக்கிறீங்க?, எனக்கு மனசே ஆறல… நைட் முழுக்கத் தூக்கம் வரல! ஆனா.. நீங்க செஞ்சத் தப்புக்காகக் கொஞ்சமும் ஃபீல் பண்ணாம, இன்னும் என்னை மிரட்டுறீங்க? நீ.. நீங்க.. நீங்க இப்போ பண்ணிட்டிருக்கிறதுக்கு பேரு என்ன தெரியுமா?, பொறுக்கித்தனம்!” – மீண்டும் அதே வார்த்தைகளை அவள் உச்சரிக்க…. நான்கே எட்டில் அவளருகே வந்து நின்றவன்… அவள் கழுத்தைப் பற்றியிருந்தான்.

“திரும்பத் திரும்ப அதையே சொல்லி என்னை வெறியாக்காதடி!, என் கண்ணுலயே படக்கூடாதுன்னு சொன்னேன்ல?, எதுக்கு வந்த இப்போ?” – கோபக்குரலில் கத்தியவனின் பிடியில்.. முகம் சுருங்க வலியில் தவித்தவள்.. முழு மூச்சுடன் அவனைப் பற்றித் தள்ளி விலகி.. கோபத்தில் அவனை என்ன செய்வதென்றுத் தெரியாமல்.. தன் காலடியில் கிடந்த சருகுகள் அத்தனையையும் அள்ளி அவன் மீது எறிந்து விட்டு… ஒரு தீப்பார்வையைச் செலுத்திப் பின் அழுகையுடன் ஓடி விட்டாள்.

அவள் உணரவேயில்லை! அந்தக் கண்களுக்குப் பின்னே காதலிருப்பதை! அந்தத் தீண்டலுக்குப் பின்னே நேசமிருப்பதை! ஒழுக்கம்,ஒழுக்கம் எனச் சொல்லி வளர்த்தத் தந்தையின் வளர்ப்பான தானே, அந்த இரவில் ஏதேதோ உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு ஆளாயிருந்த போது, அவன் அந்தச் சூழ்நிலையினால் மொத்தமாக வசிமிழந்து போனதில் அவளுக்கு அதிர்ச்சியேதும் இல்லை தான்! ஆனால்.. கொஞ்சமும் கட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து அவன் நடந்து கொண்ட விதம்… எத்தனைத் தைரியம் இருக்க வேண்டும்?

அவன் ஏதோ சூழ்நிலையின் தாக்கத்தினால் அப்படி நடந்து கொண்டான் என்றும், அடுத்து அவள் திட்டியதால் வெகுண்டுத் தவறாக நடந்து கொண்டான் என்றும் மட்டுமே நினைத்துக் கொண்டாளே ஒழிய, அவனுக்குத் தன் மீது விருப்பம் இருப்பதையும், அவன் தன் மேல் நேசம் கொண்டிருப்பதையும் அவள் உணரவேயில்லை! அவனும் உணர வைக்க முயற்சிக்கவுமில்லை.

அதன் பின்பு அடுத்தடுத்த வந்த நாட்கள் ப்ராக்டிகல்ஸ், செமஸ்டர் எனக் கழிந்து விட… விடுமுறைக்காக அவள் ஊருக்கும் சென்று விட்ட படியால்.. இருவருக்குமிடையே பெரிய இடைவெளியே விழுந்து விட்டிருந்தது.

விடுமுறையிலிருந்துத் திரும்பி அவள் இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்த வைத்த போது, அவன் அதே கல்லூரியில் தனது முதுகலைப் படிப்பைத் தொடங்கியிருந்தான். இருவரும் விலகிச் சென்ற பிறகு, நண்பர்களிடையே அவர்களைப் பற்றிய கேலியும்,கிண்டலும் கூடக் குறைந்து போயிருந்தது.

ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக் கூடாதென்று இருவரும் என்ன தான் தீர்மானம் செய்திருந்தாலும், விதி தேடித் தேடி வந்து சதி செய்ய.. அவள் வகுப்பு லெக்சரர் ஒருவர் தொடர் விடுமுறையில் சென்றிருந்ததால் நிர்வாகம் அந்த பாடத்தைச் சில நாட்களுக்கு இவனை எடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருந்தது.

தினம்,தினம் ஒரு மணி நேரம் அம்மேடையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு.. கையில் சாக்பீஸூடன் நிற்பவனைப் பார்க்காமல்… குனிந்து கொள்ளவா முடியும்?, கோபமும்,பீதியுமாய் அவள் நோக்க.. அவனோ இவள் இருக்கும் திசைப்பக்கம் கூட விழிகளைத் திருப்புவதில்லை!

ன்று மாலை லேப்-க்குள் தனியாக கணிணியின் முன்பு அமர்ந்திருந்தவள்… கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த விஜய்யை நிமிர்ந்து நோக்கினாள்.

ஐந்தாவது வரிசையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவளை அவன் கவனிக்கவில்லை போலும், தன் போக்கில் நடந்து சென்று அவனும் ஒரு கணிணியின் முன்பு அமர்ந்தான் வழக்கம் போலப் பாட்டை ஒலிக்க விட்டபடி!

எப்போதும் புன்னகை முகத்துடன் வலம் வருபவனின் முகத்தில் இப்போதெல்லாம் இறுக்கம்,இறுக்கம்,இறுக்கம் மட்டுமே! எதற்காக இப்படி மாறிப் போனான்! சத்தியமாக அவளுக்குப் புரியவில்லை! ஒரு வேளை அவனது குணமே இது தானோ! தன்னிடம் மட்டும் தான் புன்னகைத்தானோ! தெரியவில்லை!

முன்னுச்சியில் எப்போதும் புரளும் முன்னுச்சி முடியைத் தூக்கிச் சீவியிருந்தான்! புதராய் மண்டிக் கிடந்த தாடி,மீசைக்குள் அழுத்தமாய் மூடிக் கிடந்த இதழ்களும், உணர்வற்ற அந்தக் கண்களும்… அவள், மனதைப் பெரிதாக அழுத்த….. என்னவென்றே புரியாத உணர்வோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அடியே.. என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்டக் கொடியே..

உன் எண்ணம் என்னவோ….!

சகியே… எனைக் கொஞ்சம்,கொஞ்சம் கொத்தித் தின்னும் கிளியே..

எனைக் கொல்லும் எண்ணமோ…!’

-ஒலித்துக் கொண்டிருந்தப் பாடலைத் தாண்டி.. மூளையை ஏதோவொன்றுச் சுரண்ட.. சட்டென்றுத் திரும்பிப் பின் வரிசையை நோக்கினான் அவன்.

அமர்ந்திருந்த நாற்காலியின் நுனியில், நிமிர்த்திய முதுகோடு… கைகளிரெண்டையும் ஒன்று சேர்த்து.. அசைவற்றுப் போய்…. இமைக்க மறந்து… புரியாத உணர்வோடுத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை ஒரு நிமிடம்… முழுதாக ஒரு நிமிடம்.. தன்னிலை மறந்து நோக்கியவன்.. சட்டெனத் திரும்பிக் கொண்டான்.

அடுத்த நிமிடம் அமைதியாகக் கழிய… “எதுக்குடி என்னைப் பார்க்குற?” – கணிணியின் புறம் திரும்பி அமர்ந்திருந்தவனிடமிருந்துக் குரல் மட்டும் வந்தது.

திடுக்கிட்டுத் தன்னை மீட்டெடுத்தவள்… பதிலற்று அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“சைட் அடிக்கிறேன்னு சொல்லிடாத! கழுத்தை நெரிச்சுடுவேன்”

அவன் பதிலில் ரோஷத்துடன்.. “நான் அப்படி சொல்லவேயில்லை” அவளும் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே அவன் முதுகை பார்த்துப் பதிலளித்தாள்.

“அப்போ அப்படிப் பார்க்காத!, இன்னொரு தடவை பார்த்தேனா…. எழுந்து வந்துக் கிஸ் பண்ணுவேன்” –இப்போதும் கணிணியின் புறம் பார்வையைப் பதித்திருந்தான்.

பல்லைக் கடித்துக் கொண்டு மூச்சு வாங்க நிமிர்ந்து அமர்ந்தவள் “நீங்க திருந்தவே மாட்டீங்களா?” என்றாள்.

“…………………..”

“உங்களுக்கு என்ன அப்படிக் கோபம்?, முகத்தைத் திருப்பிட்டுப் பேசுறீங்க?, மிஸ்பிஹேவ் பண்ணினது நீங்க! இப்போ வரைக்கும் அதுக்காக என் கிட்ட சாரி கூட கேட்கல! மேல,மேல தப்புப் பண்ற மாதிரியே நடந்துக்கிறீங்க?”

மறுபடித் தவறான வார்த்தைகளையே பிரயோகித்தவளைக் கண்டு ஆத்திரம் கொண்டு… பட்டென சீட்டிலிருந்து எழுந்தவன் எதுவும் கூறாமல் விறுவிறுவென நடந்து வெளியே சென்று விட்டான்.

இவனுக்கு என்ன தான் பிரச்சனை! எரிச்சலும்,குழப்பமுமாய் அமர்ந்திருந்தவள் தனது வேலையை முடித்துக் கொண்டு வெளியே வருகையில் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது.

லேப் வாசலிலேயேக் கையைக் கட்டிக் கொண்டுத் தூணில் சாய்ந்து நின்றிருந்தான் அவன். அவனைக் கண்டதும் மூக்கு விடைக்கக் கோபம் கொண்டு அவள் சட்டென மழையில் இறங்க… அவள் கையைப் பற்றி நிறுத்தினான் அவன்.

“எங்க போற?, இந்த மழைல நடந்து போனேனா.., நாளைக்கு ஜன்னி தான்”

அவன் கூறிய வார்த்தைகளையும், அதிலிருந்த அக்கறையையும் சென்சார் செய்து விட்ட மனம், தன்னை இறுகப் பற்றியிருந்த அவன் கைகளை மட்டுமே நோக்கிப் பின் நிமிர்ந்து அவனைப் பயப்பார்வை பார்த்து வைக்க…. வெறியாகிப் போனான்.

அதே தனிமை! அன்றும் இப்படித் தானே கையைப் பற்றினான்! அன்றும் இது போலத் தானே மழை பெய்தது! மனம் அன்றைக்கும்,இன்றைக்குமான ஒற்றுமை,வேற்றுமைகளைப் பகுத்தறிந்து.. முகத்தில் அப்பட்டமான பயத்தைக் கொண்டு வர… அவள் முக மாற்றத்தை நோக்கியவன் பல்லைக் கடித்துக் கொண்டுத் தலையை அழுந்தக் கோதினான்.

“என்னடிப் பயம் அது கண்ல?, ம்?, என்னவோ உன்னை நான் ரேப் பண்ண ட்ரை பண்ற மாதிரி எப்பவும் என்னைப் பார்த்துப் பயப்படுற?, பொறுக்கின்ற? மிஸ்-பிஹேவ் பண்ணேன்ற?, என்னைப் பார்த்தா போற,வர்ற பொண்ணுங்க பின்னாடியெல்லாம் திரியிற தேர்ட்-ரேட்டட் கூஸ் மாதிரி தெரியுதா உனக்கு?, என்ன நினைச்சிட்டிருக்கிற என்னைப் பத்தி?, உலகத்துலயே உங்கப்பன் மட்டும் தான் பிள்ளைங்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்து வளர்க்குறவனா?” – கண்கள் சிவக்க… அவளை நோக்கிச் சீறியவன்… பயம் குறையாமல், நடுங்கிப் போய்… அவனையே நோக்கியவளைக் கண்டுச் செய்வதறியாது….. கண்கள் கலங்க…. பல்லைக் கடித்தபடி “உன் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல” – என்று அடிக்குரலில் உறுமிவிட்டு சட்டெனத் திரும்பி கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டான்.

அவனுக்குத் தெரியவேயில்லை! தன்னைப் பற்றிய அவள் எண்ணத்தை எப்படி மாற்றுவதென்றும்! தன் மனதிலிருப்பதை எப்படி அவளுக்குப் புரிய வைப்பதென்றும்!

அதன் பின் தொடங்கியது அவர்களது வாழ்வையே புரட்டிப் போட்ட.. அந்த ஸ்டூடண்ட் எலக்ஷன்! கம்யூனிஸ்ட்டுகளின் சார்பாக அகத்தியனும், ஆளுங்கட்சியின் சார்பாக கமல்நாத்தும் ப்ரசிடெண்ட் பதவிக்கு நாமினேட் செய்யப் பட்டனர்!

கல்லூரிக்குள் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் ஜூனியர்,சீனியர்களிடம் ஓட்டுக் கேட்டு இரு அணிகளும் தங்களது கான்வாஸைத் தொடங்கினர். தினமும் மாலை மேடை போட்டுக் கொண்டு இரு அணிகளும் நாட்டு நடப்பை, தற்போதையத் தலையாயப் பிரச்சனைகளைப் பற்றி விமர்சித்துத் தங்களது அணிக்கான ஓட்டு சேர்க்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கான்வாஸ் நடத்துவதில் பெரும் குளறுபடிகளைச் செய்து இவர்களுக்குக் குடைச்சலைக் கொடுக்கும் கமல்நாத்தின் குழுவிடம் ஏற்பட்டத் தகராறைத் தீர்ப்பதில் விஜய் படு பிஸியாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.

நம் ஆர்வக்கோளாறைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தலில் போட்டியிடும் அகத்தியனின் பின்பு தான் அவள் எப்போதும் திரிவது! களப்பணிகள் அனைத்திலும் முன் நின்று விடாது உழைத்தவளைக் கண்டு விஜய்யின் நண்பர் குழு முழுக்கப் புன்னகை தான்! தீவிரமானப் பிரச்சனைகளுக்கு மத்தியில் அவளது சிறுபிள்ளைத்தனம் அனைவரது முகத்திலும் சிரிப்பை வரவழைக்க.. யாரும் அவளைத் துரத்தவில்லை.

சுற்றி ஐம்பது மாணவர்களைத் திரட்டி வைத்துக் கொண்டு மைக் பிடிக்காமலே புரட்சிகரமாக உரையாடிக் கொண்டிருந்த அகத்தியனின் பின்னேக் கையில் சுருட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களுடன் அவன் பேச்சைக் கேட்டபடி நின்றிருந்தாள் சரண்யா.

அவளையே வெறித்தபடி நின்றிருந்த விஜய்யின் கையைச் சுரண்டினான் துஷர்.

“என்னடா?”

“ப்ரேக் எடுத்துக்கலாம் பாய்! வாங்க ஒரு காஃபி சாப்பிட்டு வரலாம்” – அவன் அழைத்ததும் பின்னே சென்றவன் அவன் நீட்டிய காஃபியை உறிஞ்சியபடித் தூரத்தில் நடந்து கொண்டிருந்தக் கூட்டத்தை நோக்கினான்.

“எப்படியும் நாம ஜெயிச்சுடுவோம் பாய்! எனக்கு நம்பிக்கையிருக்கு!”

“ம், எனக்கும் தான்! ஆனா கமல்நாத் கேங்கோட ஆளுமையை நினைச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு”

“அநியாயம் எல்லா நேரமும் ஜெயிக்காது பாய்”

“நீ என்னடா பெரிய செயிண்ட் மாதிரிப் பேசிட்டிருக்க?”

“ப்ச், கேலி பண்ணாதீங்க பாய்!, சரி, உங்களுக்கும் சரண்யாவுக்கும் என்னப் பிரச்சனை?”

“…………” – அமைதியாகக் காஃபியை உறிஞ்சினான் அவன்.

“நீங்க ஏதோ பெரியத் தப்பு பண்ணிட்டு அவக்கிட்ட சாரி கூட கேட்காம இருக்கிறதா அவ சொல்றாளே! என்னத் தப்பு பண்ணீங்க?”

“ஐ கிஸ்ட் ஹெர்.”

“வித் அவுட் ஹெர் கன்செண்ட்??”

“………………..”

“சொல்லுங்க பாய்!”

“அதுல என்னடா தப்பு இருக்கு?, நான் லவ் பண்ற பொண்ணு தானே அவ?”

“சோ வாட்?, ஒப்புதல் இல்லாத மனைவியை படுக்கைக்குக் கூப்பிட்றது கூடத் தப்புன்னு சட்டம் சொல்லலையா?, நீங்க பண்ணினது தப்பு தான்! அதுலயும் செஞ்ச தப்பை உணராம இருக்கிறது ரொம்பத் தப்பு. ஒழுங்கா அவக்கிட்ட சாரி கேளுங்க”

“என்னால முடியாது டா! என்னை pervert-ன்னு சொல்றவக்கிட்ட நான் சாரி கேட்கனுமா?, நெவர்”

“இதுக்குப் பேரு தான் ஈகோ!”

“ஏதோ ஒரு எழவு”

“சின்ன விசயத்தை நீங்க ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்க பாய்”

“நான் இப்படித் தான் டா! என்னைப் புரிஞ்சுக்காம விலகி போறவ பின்னாடி, என்னால கெஞ்சிக்கிட்டுப் போக முடியாது”

“லவ் பண்ற பொண்ணு பின்னாடி போகாம யார் பின்னாடி போகப் போறீங்க! ப்ச், பாய்! நீங்க ரொம்ப ஈகோயிஸ்ட்டிக்”

“என்னன்னாலும் சொல்லிக்கோ”

“நீங்க அவ மேல வைச்சிருக்கிறக் காதலை விட உங்க ஈகோ பெருசா பாய்?, கொஞ்சம் பொறுமையா.. தெளிவா யோசிங்களேன் ப்ளீஸ்..”

“ம்ம், உன்னைப் பார்த்து எவளாவது நீ நல்ல குடும்பத்துல பொறந்தவனா?, பொறுக்கி, பரதேசின்னு அசிங்கமா பேசும் போது நீ அமைதியா இருந்து… பொறுமையா யோசிக்கிறியான்னு பார்ப்போம்!”

“இந்தக் கருமத்துக்குத் தான் நான் லவ்வே பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் பாய்!”

“ரொம்ப நல்ல முடிவு டா தம்பி” – என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே இவர்களை நோக்கி ஓடி வந்தாள் சரண்யா.

“மேத்ஸ் டிபார்ட்மெண்ட்ல கான்வாஸ் பண்ணப் போன நம்ம பசங்கக் கூட கமல்நாத் கேங் பிரச்சனைப் பண்றாங்களாம், நாம சீக்கிரம் போகனும்” – என்றவளைக் கண்டு இருவரும் பதறி சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர்.

பின்னேயே வந்தவளிடம் “நீ எங்க வர்ற?” என்றான் துஷர்.

“ஏன்?, நான் பார்ட்டி மெம்பர் தானே?, நானும் வருவேன்” - சரண்யா

“ப்ச்” என்ற விஜய் “டேய் போகச் சொல்லுடா அவளை” என்றுப் பல்லைக் கடித்தான்.

“சரண்யா.. நீ போ! அங்க என்னப் பிரச்சனை ஆயிட்டிருக்கோ?” – அவசரமாய்த் துஷர்.

“ஏன் ஏன் நான் போகனும்?, என்னப் பிரச்சனை பண்றாங்கன்னு நானும் பார்க்குறேன்”

எரிச்சலுற்ற இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ள….

“என்ன அப்படிப் பார்க்குறீங்க?, ஹீரோயினை ஒரு கைல தூக்கிக்கிட்டு ஃபைட் பண்ற ஹீரோஸையெல்லாம் நீங்க பார்த்ததில்லையா?, அந்த மாதிரி எதையாவது நீங்க ட்ரை பண்ணுறதுக்கு நான் சான்ஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்…” – அசால்ட்டாகக் கூறினாள் அவள்.

“ஹாஹாஹாஹா” – சிரித்தத் துஷரை முறைத்த விஜய் வேகமாக முன்னே நடக்க.. “இது ஒரு கோல்டன் ஆப்போர்ச்சனிட்டி! இதை மிஸ் பண்ணாதீங்க!” என்ற சரண்யாவின் குரல் ஒலித்ததும்.. நின்றவன்… அவளை நோக்கித் திரும்பி….

“நான் தொட்டுத் தூக்கிடுவேன்! அப்புறம் நீ தான் என்னை எப்படித் தொடலாம், தொட்டதுக்கு சாரி கேளுங்கன்னு பின்னாடியே வருவ” – என்றான்.

எதையும்,எதையும் கோர்க்கிறான்! அதுவரையிருந்தப் புன்னகை மாற… அவனை வெறித்தவளிடம்…

“எப்பவும் ஏத்தி விட்டேப் பழக்கமாயிடுச்சு உனக்கு. என்னடி?” என்றுக் கேட்டு விட்டு அவன் முன்னே சென்று விட்டான்.

முகம் கன்ற நின்றவளிடம் “உன்னை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் சொல்லிட்டாரா?, டோண்ட் ஃபீல் பேட் சரண்” என்று துஷர் ஆறுதல் கூற.. பதிலற்று அவன் சென்ற திசையையே நோக்கினாள் அவள்.

அன்று தான் இருவரும் துஷரைக் கடைசியாகச் சந்தித்தது!

இரவில் உண்ணும் ஹாஃப்-பாயிலில் மிளகு குறைவாக இருந்தால் கூட.. பழங்குடி மாணவர்களை நிறுத்தி வைத்து ராகிங் செய்யும் மோசமான குணம் கொண்டவர்கள் கமல்நாத்தின் கேங்கைச் சேர்ந்தவர்கள்!

அப்படியிருக்கையில் இப்பழங்குடி மாணவர்களைப் பின்னே சேர்த்துக் கொண்டு, ஜனரஞ்சகக் கொள்கைகளைப் பரப்பியபடிக் கல்லூரி முழுதிலும் கம்யூனிஸ்ட் கூட்டம்… வலம் வருவதை எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? அவர்களதுத் திசையைத் திருப்பி இயக்கத்தை நிறுத்த முடிவு செய்த கமல்நாத்தின் கூட்டம் இந்த முறை பெரிதாகத் திட்டம் தீட்டினர்.

அதில் சிக்கிச் சின்னாபின்னாமாகி ஒரேடியாக உயிரையே விட்டான் துஷர்.

இரவு தூங்கிக் காலை எழுந்த துஷரின் கண் முன்னே அவனது நிர்வாணப் புகைப்படம் வைக்கப்பட்டிருக்க.. பதறி எழுந்து அதைக் கிழித்துப் போட்டவனிடம் சிரித்து இன்னும் ஆயிரம் புகைப்படங்களைக் கல்லூரி முழுதிலும் ஒட்டி வைத்திருப்பதாக மிரட்டினான் நிஷாந்த். விஷயம் கேள்விப்பட்டு அவனைக் கொலை வெறியுடன் விஜய் தாக்க… பிரச்சனைப் பெரிதானது.

விஜய் அடித்ததற்கும் அடங்காமல்… மறுநாள் காலை அந்தப் புகைப்படத்தை பெண்கள் விடுதியில் வைக்கப் போவதாக நிஷாந்த் துஷரிடம் மிரட்ட.. மனம் விட்டுப் போனவன்.. அன்றிரவே அறைக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்!

நிர்வாணம் என்பது ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒன்று தான்! ஆணாக இருப்பதால் மட்டுமே வெட்கமின்றிப் போகாது! ஆண்கள் விடுதியில் ஏற்கனவே பறிபோய் விட்ட மானம், நாளைப் பெண்கள் விடுதியில் காற்றில் பறக்க விடப்படுமோ என அஞ்சி அவமானத்தில் சுருண்டு, அவன் உயிரை விட… விஜய்யின் ஒட்டு மொத்தக் கூட்டமும் ஸ்தம்பித்துப் போனது.

விசயம் கேள்விப்பட்டு ஆண்கள் விடுதியென்றும் பாராமல்.. உள் நுழைந்து.. அவன் மீது பாய்ந்துக் கதறியழுத சரண்யாவைச் சமாதானம் செய்ய முடியாமல் திணறிப் போனான் விஜய்.

கொட்டும் மழையோடு சேர்ந்து.. துஷருக்கான அவர்களது கண்ணீரும் கரைந்து மண்ணில் விழ.. எலக்ஷன் வேலைகளை நிறுத்தி.. நண்பர்கள் அனைவரும் முறையாக அவன் உடலை அவனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதியில் அவன் உடல் மீட்கப்பட்டதிலிருந்துத் தொடங்கி போஸ்ட்மார்ட்டம் வரை அழுதபடியே உடனிருந்தச் சரண்யா.. திடீரென மாயமாகி விட… நண்பர்களிடையேப் பதற்றம் சூழ்ந்தது.

கடைசியில் நண்பன் சாவுக்குப் பழிவாங்கப் போவதாகக் கையில் ஆசிட் பாட்டிலுடன் அவள் கிளம்பி விட்ட விசயம் தெரிந்து, ஆளுக்கொரு புறம் அவளைத் தேடி அலைந்து… முழுதாக 24-மணி நேரம் முகம் காட்டாதிருந்தவளை ஒரு வழியாகக் கண்டுப்பிடித்தனர்.

திரும்பி வந்தவள், கமல்நாத்தின் வலதுகையை ஆசிட்டில் முக்கி எடுத்த விசயம் தெரிந்ததும், உடனே அவளை ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் ஒரு உயிரைப் பலி கொடுத்தது போதாதென்று! இவளை வேறு இழுத்து விட வேண்டுமா?, செய்தது இவள் தான் எனத் தெரிந்தால்… கமல்நாத்தின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், அவளது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கி விடுவார்கள்!

அனைவரும் விஜய்யின் கூற்றை ஒப்புக் கொண்டு எலக்ஷன் முடிந்த மறு நாளே அவளை ஊருக்கு ரயில் ஏற்றி விட்டனர்.

அதன் பின்பு, அந்த ஆசிட் சம்பவத்திற்காகப் பல நாட்கள் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஒன்றும் கண்டறிய முடியாமல், கடைசியில் பத்துப் பேரை மொத்தமாக சஸ்பென்ட் செய்ததுக் கல்லூரி நிர்வாகம்.

துஷரின் வகுப்பறையில்.. அவனது பெஞ்சில் அமர்ந்து.. மேஜையில் தலை சாய்த்திருந்தான் விஜய். பல நாட்களாக ஷேவ் செய்யப்படாதத் தாடியுடனும், சிவப்பேறியிருந்தக் கண்களுடனும் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவனின் தோளைத் தட்டினான் பரத்.

“எழுந்திருடா விஜய்!, ரொம்ப நேரமாச்சு. போகலாம்”

அவன் தலையைப் பற்றித் தூக்கியவனின் வயிற்றில் தன் முகத்தை அழுத்தியவன் வாய் விட்டுக் கதறியழுதான்.

பாய்,பாய் என எப்போதும் அவனை மட்டுமே சுற்றி வருபவன் துஷர்! எவ்வளவு திட்டினாலும் புன்னகையைத் தவிர ஒரு பாவமும் இருக்காது அவன் முகத்தில்! ஜூனியர் என்பதால் இதைச் செய்,அதைச் செய் என வாட்டி எடுக்கும் விஜய்யின் நண்பர்கள் கூட்டத்திடம் அவன் ஒரு முறை கூட முகம் சுழித்ததில்லை. அவர்களுடனே தான் எப்போதும் சுற்றுவான்! எவ்வளவோ முயன்றும் விஜய்யால் அவனது பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“என்னை நம்பியிருக்கலாம்ல டா அவன்?, கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல போஸ்டர் ஒட்டுவேன்னு அந்த நாய் சொன்னா, நான் விட்ருவேனா?, இதுக்காக.. இதுக்காக உயிரையே விடுவானா டா இவன்?, இடியட்ட்ட்ட்” – கோபத்தில் முணுமுணுத்தவனிடம்.. “ஃப்ரஸ்ட்ரேட் ஆயிருப்பான் டா விஜய்!, இது மாதிரி எத்தனையைத் தான் கடந்து போறதுன்னு விரக்தி ஆயிருப்பான்” என்றான் பரத்.

“எனக்கு வர்ற கோபத்துக்கு அப்படியே காலேஜையே கொளுத்திடனும்ன்னு தோணுது” – விடாது புலம்பியவனின் அருகிலேயே அமர்ந்து அவனை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான் பரத்.

ந்தப்புறம் கல்லூரியை விட்டுப் பாதியிலேயே வீடு வந்த சேர்ந்த சரண்யா, இருந்த விரக்தியில் தனக்கு அங்கேயிருக்கப் பிடிக்கவில்லையென்றும், அதனால் தான் பாதியில் வந்து விட்டதாகவும் கூற, ஏற்கனவே துஷரின் இறப்பைப் பற்றி செய்தியில் கண்டிருந்த அவளது பெற்றோரும் பயந்து அவளது முடிவை ஏற்றுக் கொண்டனர்.

அதன் பின்பு எங்கும் செல்ல விருப்பமில்லாமல், படிப்பையும் தொடராமல் அந்த வருடம் முழுதையும் வெட்டியாகக் கடத்தியிருந்தாள். இடைப்பட்ட நாட்களில் நேஷனல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த எவரும் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை! அவளும் யாருடனும் பேச முயலவில்லை! துஷரின் இறப்பு அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்க.. அதன் பின்னேயே ஆளாளுக்குத் தன் போக்குக்குப் பயணித்தவர்கள், அதன் பின்பு ஒருவரையொருவர் மறந்தே போயிருந்தனர்.

அடுத்த வருடம் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் தனது இளங்கலையைத் தொடர்ந்து அதன் பின்பு முதுகலைப் படிப்பையும் அங்கேயே முடித்து.. காம்பஸிலேயே வேலையும் கிடைத்து மும்பைக்குப் பயணமானாள்.

அடுத்த இரண்டு வருடங்கள் மட்டுமே அவள் வேலை பார்க்க அனுமதித்திருந்தத் தந்தை, அதன் பின்பு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, அவளை டார்ச்சர் செய்யத் துவங்க.. அவரை எப்படி சமாளிப்பதென்றுத் தெரியாமல்.. அவசரமாக.. அப்போது கிடைத்த ஆன்-சைட் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நெதர்லாண்ட் சென்று அடுத்த வருடத்தையும் தள்ளினாள்.

இதற்கிடையில் அவளது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதனால் தான் திருமணம் தடை படுவதாகவும் அவளது பெற்றோர் பரிகார பூஜையில் இறங்கியிருந்தனர்.

‘ஹ்ம், அவனவன் மார்ஸ்ல ப்ளாட் போட்டு வித்துட்டிருக்கிறதா நாசா-ல சொல்லிட்டிருக்கிறானுங்க!, அப்பேர்ப்பட்ட மார்ஸ், என் ஜாதகத்துல குந்தினு இருக்கிறது எம்மாம்பெரிய விசயம்! அதைப் போய் பெரிய பிரச்சனையா பார்க்குறானுங்களே!’ – என்று இவளது மனசாட்சி வழக்கம் போல் கேலி செய்து சிரித்துக் கொண்டது! எப்படியோ கல்யாண டார்ச்சரிலிருந்து தப்பித்தால் போதும்!

அவள் திருமணத்தைத் தவிர்த்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தது! ஒன்று அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஒரு கிறிஸ்டியன் பையனுக்காக! மற்றொன்று கிடைத்த கிறிஸ்டியன் எவனும் பார்க்க.. விஜய்யைப் போல் இல்லை!

ஒரு வருடம்.. முழுதாக ஒரு வருடம் தான் அவனும்,அவளும் பழகியது! அவன் காதோர முடியிலிருந்துத் தொடங்கி.. நெற்றியிலிருக்கும் பருக்கள் வரை அத்தனையையும் ரசித்து சைட் அடித்திருக்கிறாள்! ஆண் இப்படியிருக்க வேண்டும் என்கிற அவளது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ஒருவன் அவன்! ஒரு ட்ரீம் ஹீரோவாக, மாடலாக அவனை மனது உருவகம் செய்து விட்டிருந்த படியால்.. நாட்கள் கடந்த பின்னும்.. அவனுடன் தொடர்பற்றுப் போன பின்னும்.. காணும் ஒவ்வொரு ஆணிடமும் அந்த முகத்தையே தேடிக் கொண்டிருந்தது.

பார்க்கும் ஒவ்வொரு ஆணின் முகத்தையும், ஏன் அவனோடு ஒப்பிடுகிறொம் என்பதை அவள் ஒரு முறை கூட யோசித்துப் பார்க்கவேயில்லை!

பழையக் கல்லூரி நண்பர்கள் சோஷியல் மீடியாக்களில் அவளுடன் நட்புக்கரம் நீட்டிய போது கூட அவள், அவனைப் பற்றி ஏதும் விசாரிக்கவில்லை! கேட்கத் தோன்றவில்லை! உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடைசி நாட்களில் நடந்த அவனுடனான சம்பவங்கள் எதுவும் அவனைப் பற்றி விசாரிக்கும் துணிவைக் கொடுக்கவில்லை! அவனது நண்பர்கள் அத்தனை பேரும் அவளுடன் தொடர்பில் இருக்கையில், அவன் மட்டும் பேச முயலாதது வேறு அவளுக்குத் தயக்கத்தைக் கொடுத்திருந்தது.

கடைசியாக அவனது ஜாடையிலிருந்த ஸ்டீபனுடன் பழக்கம் ஏற்பட்டு.. அவனது ப்ரபோசலுக்கு ஓகே சொல்லிய சமயம் தான்.. தந்தை பார்த்த மாப்பிள்ளையாக விஜய்யே அவள் முன் வந்து நின்றான்.