அத்தியாயம் - 9
இன்று….
“இன்னும் கொஞ்சம் இடியாப்பம் போட்டுக்கோடா விஜய், அம்மா தோசை வார்த்திட்டிருக்கேன்” - சுப்புலட்சுமி
“ப்ச்! அம்மா.. அதான் இவ்ளோ ஐட்டம் பண்ணி வைச்சிருக்கியே! இன்னும் தோசையை வேற யார் சாப்பிடுவா?, எனக்குப் போதும்” – எரிச்சலுடன் பதிலளித்த விஜய்யிடம்…
“என்னைக்கோ ஒரு நாள் தான் வீட்டுப் பக்கம் வர்ற!, தினம் ஹோட்டல்ல சாப்பிடுறவனுக்கு நல்ல சாப்பாடு செஞ்சு போடனும்ன்னு எனக்குத் தோணாதா டா?”
“அதுக்காக இப்படியாம்மா?, கிட்சன்ல இருக்கிற எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா மேஜை மேல பரப்பி வைச்சிக்கிட்டு! ப்ச்”
“ரொம்பவும் சலிச்சுக்காதடா! எனக்காகவாவது அடிக்கடி வீட்டுப் பக்கம் வா விஜய்! ஒத்தப் பையனை வைச்சுருக்கோம்! உன்னையும் எங்கோ ஒரு மூலைக்கு அனுப்பிட்டு இப்படித் தனியா வாழ்நாளை கழிச்சிட்டிருக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்குடா”
“அம்மா.. மும்பை ஒன்னும் அவ்ளோ தூரம் இல்லம்மா”
“போடா! நீ சென்னைக்கு வந்துடுன்னாலும் கேட்க மாட்டேங்குற! நாமளாவது மும்பைல செட்டில் ஆகலாம்ன்னு சொன்னா, உங்கப்பா அதுக்கு ஒத்துக்க மாட்டேங்குறார்”
“சரி,புலம்பாத! எங்க மனுஷனை ஆளைக் காணோம்?, அவர் ஃப்ரண்ட் பொண்ணை நான் ரிஜெக்ட் பண்ணின கோபம் அவருக்கு இன்னமும் தீரல போல?”
“உனக்கு ஏன் டா சரண்யாவைப் பிடிக்காம போச்சு?, ரொம்ப நல்லப் பொண்ணு அவ! குழந்தைத்தனமான சிரிப்போட அவ்ளோ அழகா இருக்கா”
“…………..”
“32-வயசாச்சு உனக்கு! இன்னும் எத்தனை நாளுக்குடா கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுட்டு இருப்ப?, நீ குழந்தை,குடும்பம்ன்னு செட்டில் ஆகுறதைப் பார்க்க எங்களுக்கும் ஆசை இருக்காதா?, அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போய் இருக்கார் டா” – சுப்புலட்சுமி கண்ணைத் துடைத்துக் கொள்ள..
“இதுக்குத் தான் நான் இந்தப் பக்கமே வர்றது இல்ல!, அழாதம்மா ப்ளீஸ்”
“என்னமோ போடா! நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கன்னு அம்மாவுக்கு ஒன்னும் புரியல”
“மதியத்துக்கு நீ என்ன சமைக்கப் போறன்னு தான் நினைச்சுட்டிருக்கேன்!, போம்மா.. போய் சமையலைக் கவனி”
“மீன் வாங்கி வைச்சிருக்கேன் டா! உனக்கு வேற என்ன வேணும்?”
“நீ என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே தான்! அப்பா எங்கன்னு ஒரு கேள்வி கேட்டேன் உன் கிட்ட?”
“அவர் அந்தப் பொண்ணு சரண்யா வீட்டுக்குத் தான் டா போயிருக்கார். உனக்குத் தெரியாதுல்ல?, அவங்க, இங்க இருந்து இரண்டு தெரு தள்ளி புதுசா வீடு வாங்கியிருக்காங்க! அப்பா தான், கூடவே இருந்து வீட்டை முடிச்சுக் கொடுத்தார். அந்த அண்ணன் பார்த்தசாரதிக்கு ரொம்ப வருத்தம் டா! இந்தக் கல்யாணம் கைகூடலேயேன்னு! பாவம், அந்தப் பொண்ணுக்கும் வயசாய்ட்டேப் போகுதுல்ல?”
“ம்ம்ம்” – தோசையை வாயில் அடைத்துக் கொண்டிருந்தான் அவன்.
“அவர் இங்க வீடு மாறி வந்ததுல இருந்து உங்கப்பாவைக் கைல பிடிக்க முடியலடா! எந்நேரமும் அவரோட ஜோடி போட்டுட்டு சுத்திட்டிருக்கார்”
“ஓஹோஓஓஓ..”
“இருந்தாலும், நீ அந்தப் பொண்ணை ரிஜெக்ட் பண்ணியிருக்க வேண்டாம்டா விஜய்” – என்ற லட்சுமி புலம்பியபடியே உள்ளே சென்று விட.. கிர்கிர்ரென வைப்ரஷேன் மோடில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தான் விஜய்.
அழைத்தது சரண்யா! அட்டெண்ட் செய்யாமல், தண்ணீர் குடித்தபடி ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
மூன்று மாதத்திற்கும் மேலிருக்கும் அவளைப் பார்த்து! பேசி! அன்று சென்றவள் தான், அதன் பின்பு போலீஸ் விசாரணையைப் பற்றிக் கேட்டு இரண்டு முறை ஃபோன் செய்தாள்! அவன் எடுக்கவேயில்லை!
பரத்திடம் கூறி விசாரணை முடிந்து பிரச்சனைத் தீர்ந்து விட்டதாகக் கூறி இனி, ஸ்டீபனைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லையென்றும் அவளிடம் சொல்லி வைத்திருந்தான்.
‘ஏன் அவர் என் கூடப் பேச மாட்டாரா?, நான் அவர் கூடப் பேசனும்!, ஃபோன் அட்டெண்ட் பண்ணச் சொல்லுங்க!’ என்ற அவளது கேள்விகளுக்குப் பதிலே கொடுக்கவில்லை அவன். கம்பெனிக்கே அவனைத் தேடி வந்தவளையும் தவிர்த்து விட்டான்!
இந்த இடைவெளியில் அவள் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தக் கம்பெனியிலிருந்து மாற்றல் வாங்கி சென்னைக்குச் வந்து விட்டாள் என்கிற செய்தி அவனை எட்டிய போது கூட அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை!
நான்கு முறை அடித்து ஓய்ந்த செல்ஃபோனைக் கண்டு கொள்ளாமல் எழுந்து சென்று வாஷ்பேசனில் கையைக் கழுவினான். மீண்டும் திரும்பி வந்து அவன் ஃபோனை நோக்குகையில் அடுத்தடுத்த அவளிடமிருந்து 5,6 மெசேஜ்கள்.
“ப்ளீஸ் கால் மீ. அர்ஜண்ட்.” என்ற மெசேஜைத் தொடர்ந்து… ‘சீனியர், நான் இப்போ ரொம்பப் பெரிய பிரச்சனைல மாட்டியிருக்கேன். எனக்கு உங்க ஹெல்ப் வேணும். ப்ளீஸ்.. ஃபோனை அட்டெண்ட் பண்ணுங்க” – கடைசியாக வந்த மெசேஜை வாசித்தவன் டிவியை ஆன் செய்து சோபாவில் அமர்ந்தபடி ஃபோனில் டைப் செய்தான்.
“ஃபோனெல்லாம் அட்டெண்ட் பண்ண முடியாது. என்னப் பிரச்சனைன்னு மெசேஜ்லயே சொல்லு” – விஜய்.
“நீங்க என்ன அவாய்ட் பண்றீங்க தான?,” – சரண்யா
“உனக்கு என்னப் பிரச்சனை? , அதைச் சொல்லு”
“எதுக்கு என்னை அவாய்ட் பண்றீங்க?, எனக்குப் பதில் சொல்லுங்க”
“நான் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்றேன்”
“வேண்டாம், வேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்”
“……………”
“எங்கப்பா மாப்பிள்ளைன்னு ஒருத்தனைக் கூட்டிட்டு வந்து நடுவீட்ல உட்கார வைச்சிருக்கிறார்! இன்னைக்கு எனக்கு எங்கேஜ்மெண்டாம்! என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம, அவங்களே டிசைட் பண்ணிட்டாங்க”
“ஓ! அப்படியா?, வெர்ரி நைஸ்! கங்க்ராஜூலேஷன்ஸ் சரண்யா”
“சீனியர், என்னை வெறுப்பேத்தாதீங்க! எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல. எப்படியாவது இதுல இருந்து என்னைக் காப்பாத்துங்க!” – கதறிக் கொண்டு வந்து விழுந்தது அடுத்த மெசேஜ்.
“ப்ச், சரண்யா.. என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியும்?, அப்போ சொன்னதைத் தான் இப்பவும் சொல்றேன்!பிடிக்கலன்ன்னா பிடிக்கலன்னு தைரியமா உங்கப்பாக்கிட்ட சொல்லு”
“ம்ஹ்ம்.. எனக்குப் பயமா இருக்கு”
“அப்போ நல்ல பொண்ணா, வந்த மாப்பிள்ளைக்குப் போய் சொஜ்ஜி,பஜ்ஜியை நீட்டு”
“என்னால முடியாது! எனக்கு இதுல இஷ்டமில்ல! மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை! ஆளும்,மூஞ்சியும்! பார்க்கக் காட்டான் மாதிரி இருக்கான்”
“சரண்யா, தோற்றத்தைப் பார்த்து மாப்பிள்ளைய ரிஜெக்ட் பண்ற வயசையெல்லாம் நீ தாண்டிட்ட! பொண்ணுக்கு வயசாய்ட்டேப் போகுது, சீக்கிரம் கல்யாணம் பண்ணிப் பார்க்கனும்ன்னு உங்கப்பாவுக்கு ஆசை இருக்காதா?,”
“அதுக்காக இஷ்டமில்லாம, அவருக்காக எவனையோக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?, எனக்குப் பிடிக்கலை!”
“பிடிக்கலன்னா? என்னப் பிடிக்கல?, ம்? சும்மா காரணமில்லாம பிடிக்கல,பிடிக்கலன்னு சொல்லிட்டிருக்க?
“……………”
“சரண்யா, டெல் மீ த ரீசன்”
“வ…வந்து….”
“ம்ம்”
“இ..இ..இவன்… இவன்… பார்க்க…. உங்களை மாதிரி இல்ல…………….”
- அந்த மேசேஜைப் படித்ததும் தலை,முதல் கால் வரை ஜிவ்வென்று எழுந்த உணர்வு மூச்சடைக்கச் செய்ய…. ‘லொக்,லொக்’-என இருமிச் சுவாசத்தைச் சீர் செய்தான்.
ரொம்பவும் அசால்ட்டாக, சிறுபிள்ளைத்தனமாக சில,பல வார்த்தைகளை உச்சரித்து.. அன்றிலிருந்து இன்று வரை அவனை மூச்சடைக்க வைப்பதையே வேலையாக வைத்திருக்கிறாள். ராட்சசி!
இதற்கு.. இதற்கு என்ன அர்த்தமாம்! எரிச்சலுற்றுத் தலை முடியைக் கோதியவன் “சீனியர்,சீனியர்” என்றபடி அடுத்தடுத்து அவளிடமிருந்து வந்து விழுந்த மெசேஜ்களைக் கண்டுகொள்ளவேயில்லை.
வாசலில் மாக்கோலமிடப்பட்டிருந்த சரண்யாவின் வீடு 10,15 விருந்தாளிகளோடுக் கோலாகலமாகக் காட்சியளித்தது.
“ஏன் டா உன் கூடவே இருக்கேனே! என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா?, இன்னிக்கு சரண்யாவுக்கு நிச்சயம்ன்னு?” – பார்த்தசாரதியைக் கடிந்து கொண்டிருந்தார் ராகவன்.
“இல்ல டா! இன்னிக்குப் பொண்ணு பார்க்குற ஃபங்க்ஷனை மட்டும் தான் ப்ளான் பண்ணியிருந்தோம்! மத்ததெல்லாம்.. திடீர்ன்னு முடிவெடுத்தது தான்! இன்னிக்கு நிச்சயம் பண்ணிட்டுக் கல்யாணத்துக்கு முதல் நாள் பெருசா ரிஷப்சன் வைச்சுக்கலாம்”
“,ம்ம்ம், நல்ல ஐடியா தான்”
“நீ தப்பா எடுத்துக்காத டா ராகவா! பொண்ணுக்கு வயசாயிடுச்சு! கிடைச்ச சான்ஸை நான் மிஸ் பண்ண விரும்பல! அதான் அவசரமா எல்லாம் முடிவு பண்ணிட்டேன்”
“புரியுதுடா எனக்கு, நீ போய் வந்தவங்களைக் கவனி” – என்ற ராகவேந்திரன் கூடத்தில் அமர்ந்திருந்த சரண்யாவை நோக்கினார்.
எத்தனை லட்சணம் இந்தப் பெண் முகத்தில்! சிரித்தால் சிறு பிள்ளைப் போல் இருக்கிறாள்! இவளைப் போய் வேண்டாமென்று விட்டான்! படு பாவி! – மகனை அவர் மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கையில்.. சாட்சாத் அந்த மகனே சரண்யாவின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
“வாங்க.. வாங்க.. தம்பி” – அவனை முதலில் கண்டு கொண்டு வரவேற்றது சரண்யாவின் அன்னை தான்.
அவரிடம் லேசாகப் புன்னகைத்தபடித் தலையாட்டியவன் முதலில் நோக்கியது சரண்யாவை!
பச்சைப்பட்டும்,மல்லிகைப்பூவுமாய் அமர்ந்திருந்தவளின் முகத்தில் அவனைக் கண்டதும் அப்படியொரு ஆனந்தம்! எப்படியேனும் இதிலிருந்துத் தப்பிக்க வைத்து விடுவான் என்கிற நிம்மதியில் அவனைக் கண்டுக் கண் சிமிட்டிச் சிரித்தாள்.
மறந்தும் கூடப் பதிலுக்குப் பல்லைக் காட்டாதவன் ‘நீ எங்கடா இங்க?’ – ரீதியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தத் தந்தையிடம் சென்றான்.
“நீ எதுக்கு டா இங்க வந்திருக்க?” – கேள்வியுடன் ராகவன்.
“சும்மா தான்ப்பா” – அவன் அலட்டிக்கொள்ளவேயில்லை.
“கையில என்ன அது?”
“சொல்றேன்! அதுக்கு முன்னாடி நான் அங்கிள் கிட்டப் பேசனும்ப்பா”
“பார்த்தசாரதிக்கிட்டயா?, அவன் கிட்ட நீ என்னப் பேசனும்?”
-அவரிடம் பதில் கூறாமல் கூடத்தில் அமர்ந்திருந்தவரை நோக்கினான் அவன். இருவீட்டாரும் பேசிச் சிரித்தபடி “அய்யரை வைச்சுத் தேதி குறிச்சிட்டு லக்னப் பத்திரிக்கையை எழுதிடலாமே!, அப்படியே தட்டையும் மாத்திக்கலாம்” என்று முடிவு செய்ய… எழுந்து நின்ற விஜய்… “அங்கிள், நான் உங்கக்கூடக் கொஞ்சம் பேசனும்” என்றான் பார்த்தசாரதியை நோக்கி.
கூட்டத்திலிருந்த அத்தனைப் பேரின் பார்வையும் இப்போது இவன் மீது! தட்டை மாத்துற வேளைல இவனுக்கு அவனோட என்னப் பேச்சு வேண்டியிருக்கு? குழம்பியபடித் தானும் எழுந்து நின்ற ராகவன்.. “டேய்…” என்று அவன் கையைப் பற்ற.. அவர் கையை விலக்கி விட்டு பார்த்தசாரதியை நோக்கினான் அவன். அவர் முகத்திலும் குழப்பம்! ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்..
“வா விஜய்.. எப்போ வந்த?, பேசலாம்ப்பா.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் பேசலாம்! நீ உட்காரு” – என்றார்.
அவரிடம் மறுத்துத் தலையசைத்தவன் “நான் இப்பவே பேசனும் அங்கிள், கொஞ்சம் இப்டி வர்றீங்களா?” – என்றதும் “விஜய்..” என்று அதட்டினார் ராகவன்.
யார் இவன்?, ஃபங்கஷனை நடத்த விடாமல் இடையில் வந்து பேசிக் கொண்டிருக்கிறான் என்ற ரீதியில் சுற்றியிருப்போர் அனைவரும் அவனையே நோக்க… சரண்யாவோ என்ன செய்யப் போகிறான் என்கிற எதிர்ப்பார்ப்போடு ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பார்த்தசாரதிக்கு எரிச்சல் வந்து விட்டது போலும்!
பல்லைக் கடித்துக் கொண்டு “அதான் ஃபங்கஷன் முடிஞ்சப்புறம் பேசலாம்ன்னு சொன்னேனே தம்பி” என்றார்.
“இந்த ஃபங்க்ஷன் நடக்கக்கூடாது அங்கிள்” – நிதானமாய் அவன் கூற….
“டேய் விஜய்…. என்னப் பேச்சுப் பேசுற நீ?” – பதறி விட்டார் ராகவன்.
“அதைச் சொல்றதுக்கு நீ யாரு தம்பி?” – கூட்டத்தினுள் யாரோ ஒருவர்.
“நான் யார்-ஆ?”- இகழ்ச்சியாக முறுவலித்தவன் சரண்யாவை நோக்கிக் கையைக் காட்டி “இந்தப் பச்சைப் புடவை கட்டியிருக்கிறப் பொண்ணோட புருஷன்” என்றான்.
கூட்டம் அதிர்ந்து சரண்யாவை நோக்க… அவள் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லையென்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. அதிர்ச்சியில்.. கைகள் வெடவெடக்க உறைந்து போய் அமர்ந்து விட்டவளுக்கு… மனம் ‘அய்யோ பார்த்தசாரதி’ எனப் பதற…. திடுக்கிட்டுத் தன் தந்தையை நோக்கினாள்.
கண்கள் சிவக்கக் கொப்பளித்துக் கொண்டிருந்தக் கோபத்துடன் விஜய்யை உறுத்து நோக்கிய பார்த்தசாரதி வாயைத் திறப்பதற்குள் “என்னடா சொல்ற நீ?” என்று அவன் சட்டையைப் பற்றியிருந்தார் ராகவன்.
“எனக்கும், அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுப்பா! எங்களோட மேரேஜ் சர்டிஃபிகேட்” – என்றபடித் தன் சட்டையிலிருந்து அவரது கையை நீக்கியவன், நடந்து சென்று பார்த்தசாரதியின் கையில் சான்றிதழைத் திணித்தான்.
நிமிடத்தில் கூட்டம் சலசலக்க… உறவுக்காரர்களின் முன்பு அவமானப்பட்டு விட்டத் துக்கத்தில் பார்த்தசாரதி இறுகிப் போய் நின்றிருந்தார். ‘தனக்கும்,அவனுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக விஜய் கூறியதிலிருந்துத் தந்தையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சரண்யாவிற்கு அவரது உடல்மொழிப் பீதியைக் கொடுத்தது.
மாப்பிள்ளையின் தந்தை எழுந்து “கூட இருந்து என்னவாச்சுன்னு கேட்டு உனக்கு ஆறுதல் சொல்ல ஆசையாத் தான் இருக்கு பார்த்தசாரதி! ஆனா.. நாங்களும் இங்க இருந்தா.. உனக்கு மேலும் சங்கடம் தான்! இப்போக் கிளம்புறோம்! நீ என்ன நடந்ததுன்னு விசாரிச்சு, பொண்ணு வாழ்க்கையை மனசுல வைச்சு நல்ல முடிவா எடு” எனக்கூறி விட்டுத் தன் சொந்தங்களை அழைத்துக் கொண்டு வெளியேற… மிச்ச,சொச்ச மக்களும் அவர்களைத் தொடர்ந்து வெளியேறினர்.
அவர்கள் சென்றதும் தன்னருகே நின்றிருந்த விஜய்யை ஓங்கி அறைந்தார் ராகவன்.
“அய்யோ… அங்கிள்…..” எனப் பதறிக் கொண்டு வந்த சரண்யாவிடம் “நீ பேசாதம்மா” என்றுக் கையை உயர்த்தித் தடுத்தார்.
“அப்பன் கிட்ட அடி வாங்குற வயசா டா உனக்கு?, இந்நேரம் கல்யாணம் ஆகியிருந்தா ஒரு குழந்தைக்குத் தகப்பனாயிருப்ப! உன் வயசுக்கு நீ பண்ற வேலையாடா இது??” – கர்ஜித்த ராகவனை அடக்கிய பார்த்தசாரதி.. சரண்யாவையும்,விஜய்யையும் நோக்கி…..
“புரியவேயில்லை எங்களுக்கு! நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணினப்போ, ஒன்னு சொன்னாப்ல ரெண்டு பேரும் வேணாம்ன்னு சொல்லிட்டு! இப்போ என்ன இது?, எதுக்கு இந்தத் திருட்டுக் கல்யாணம்?” என்றவர் மகளின் புறம் திரும்பினார்.
வெளிப்படையாக நடுங்கியக் கை,கால்களுடன் வெலவெலத்துப் போய் நின்றிருந்தவளிடம் அவர் “என்ன சரண்யா இதெல்லாம்?” என்று கேட்டதும் கலங்கிப் போய் படாரென அவர் காலில் விழுந்திருந்தாள் சரண்யா.
“அ..அ..அப்பா.. சாரிப்பா.. அப்பா சாரி…..” – பயத்தில் உதடு நடுங்கத் திக்கியவளின் கைகளை உதறித் தள்ளியவர் தூரப் போய் விழுந்தவளிடம் “ஒரே பொண்ணாச்சேன்னு உன் போக்குக்கு விட்டு உன்னைச் செல்லமா (!?) வளர்த்ததுக்கு சொந்தக்காரங்க முன்னாடி நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்ட! இப்படி ஒரு அசிங்கத்தைத் தேடித் தரத் தான் இத்தனை வருஷமா கல்யாணம் வேண்டாம்ன்னு ஒதுங்கியிருந்தியா?” என்று உறும.. இன்னும் கீழே கிடந்த நிலையில் “அப்பா… இ.. இல்லப்பா…” என்றபடித் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள் அவள்.
“கல்யாணம் மட்டும் தான் பண்ணியா?, இல்ல… அவனோட சேர்ந்து குடும்பம் நடத்தவே ஆரம்பிச்சிட்டியா?” – தந்தையின் கேள்வியின் விலுக்கென நிமிர்ந்த சரண்யாவிற்குத் தலை முதல் கால் வரைக் கூசிப் போனது.
ஒழுக்கம்,ஒழுக்கம் எனச் சொல்லி வளர்த்தத் தந்தையின் வாயிலிருந்து இது போன்ற வார்த்தைகள் வெளி வரவும் முகம் கன்ற “நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லப்பா” என்றாள்.
“கல்யாணமே முடிஞ்சுடுச்சுன்னு அந்தப் பையன் சர்டிஃபிகேட்டைக் கொண்டு வந்து நீட்டுறான்! என்ன பாப்பா நடக்குது இங்க?, உங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருந்தா எங்கக்கிட்ட சொல்லியே கல்யாணம் பண்ணியிருக்கலாமே! எதுக்கு இந்த முடிவு?, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு என்ன தேவை?, அம்மா,அப்பான்னு நாங்க ரெண்டு பேரும் உயிரோடத் தானடி இருக்கோம்?, இல்ல, இவங்கள்லாம் எதுக்கு என் வாழ்க்கைல முடிவெடுத்துக்கிட்டுன்னு எங்களை ஒரேடியா தலை முழுகிட்டியா?” – கண்ணீருடன் கேள்வி கேட்டத் தாயின் கைகளைப் பற்றியவள் “அம்மா அப்படியெல்லாம் இல்லம்மா…. இப்டிப் பேசாத ப்ளீஸ்” என்றாள்.
“எனக்குக் காரணம் சொல்லுடி! யாருக்கும் தெரியாம இப்படித் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு,அதை எங்கக்கிட்டயிருந்து மறைச்சு என்னத்த சாதிச்ச?, சொல்லு” – என்ற அன்னையிடம் என்ன கூறுவதென்றேப் புரியவில்லை.
பிறந்ததிலிருந்து இது போன்று மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழ்நிலைகள் அத்தனையிலும் அவள் உண்மையைக் கூறித் தான் தப்பித்திருக்கிறாள்! இப்போதும் அதையே செய்ய முடிவெடுத்து.. மெல்லிய குரலில் “அ…அந்த சர்டிஃபிகேட்டேப் பொய்-ம்மா, எங்களுக்குக் கல்யாணமெல்லாம் நடக்கல” என்றவளை அதுவரை நாடகம் பார்ப்பது போல் அமைதியாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்த விஜய் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்கினர்.
அய்யோ! அரைமென்டல்! நான் ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி பெர்ஃபார்ம் பண்ணிட்டிருக்கும் போது, இவ ட்ராக்கை வேற மாதிரி கொண்டு போறாளே!! பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கினான் விஜய்.
கண்ணாடியைக் கழட்டித் தலையைப் பிடித்துக் கொண்டு நின்ற ராகவன் “விஜய்… என்ன நடக்குது இங்க?” என்றார்.
தான் நினைத்து வைத்திருந்ததற்கு மாறாக சூழ்நிலை வேறு வழியில் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டுத் திகைத்து என்ன கூறுவதென்று தெரியாமல் அவன் ஒரு நொடி அமைதியானான்.
“நான் சொல்றேன் அங்கிள்” என்ற சரண்யா முதலிலிருந்துக் கடைசி வரை அனைத்தையும் கூறி விட எண்ணி வாயைத் திறக்க…. “நான் அவளைக் காதலிக்கிறேன்ப்பா” என்ற விஜய்யின் குரலில் திகைத்துத் திறந்த வாயுடன் கண்கள் விரிய அவனையே நோக்கினாள்.
“நான் அவளைக் காதலிக்கிறேன்ப்பா! இன்னைக்கு நேத்து இல்ல.. பத்து வருஷமா… அவளை மட்டும் தான் காதலிக்கிறேன்!” – அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக.. அழுத்தமானக் குரலில் கூறியவனைக் கேட்டு அதிர்ச்சியும்,குழப்புமாய் ஒட்டுமொத்தக் குடும்பமும் அவனை நோக்கியது.
“அந்த மேரேஜ் சர்ட்டிஃபிகேட் பொய் இல்ல! உண்மை தான்! சரண்யாவோட சம்மதமில்லாம, அவளோட கையெழுத்தை மட்டும் வைச்சுக்கிட்டு நானே ரெஜிஸ்டர் பண்ணினது!”
கொஞ்சமும் பயம் இல்லாமல் சட்டமாக அவன் கூறியதைக் கேட்டு ராகவன் கொதித்தெழ… பார்த்தசாரதியோ அவனை நோக்கிக் கையை ஓங்கி விட்டார்.
ஓங்கிய அவரதுக் கையைப் பற்றியவன் “என்னை அடிக்கிற ரைட்ஸ் எங்கப்பாவுக்கு மட்டும் தான் இருக்கு! அதனால நீங்க எமோஷனை கண்ட்ரோல் பண்ணுங்க” என்றபடி முழு பலத்துடன் அவர் கையை இறக்கி விட…. வலியில் முகம் சுருக்கியவருக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கியது.
“ராகவா…. இது தான் நீ உன் பையனை வளர்த்து வைச்சிருக்கிற லட்சணமா?, என்னடா இதெல்லாம்?, பொண்ணைப் பார்த்துட்டுப் போய் வேண்டாம்ன்னு ரிஜெக்ட் பண்ணினவன், எதுக்குடா அவளுக்கேத் தெரியாம கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கான்?” – ஆத்திரத்துடன் உச்சஸ்தாதியில் கத்தியவரை முறைத்தவன்…. “தப்பு பண்ணினது நான். என்னைத் திட்டுங்க! எங்கப்பாவைக் கேள்வி கேட்குற வேலையெல்லாம் வேண்டாம்” எனக் கூறத் திகைத்து நின்று விட்டார் பார்த்தசாரதி.
மனுஷனா இவன்?, தப்பும் பண்ணிட்டு எவ்ளோ தெனாவெட்டா நிற்கிறான்!
“பொண்ணைப் பெத்தவன் டா அவன்! அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டிருக்கான்! கேள்வி கேட்காம என்ன செய்வான்?, அப்பா மேல இருக்கிற பாசம், இப்படி ஒரு கேவலமான வேலையைச் செய்யும் போது நினைவிருந்திருக்கனும்! உன்னை என் பையன்னு சொல்லவே வெட்கமா இருக்கு! போடா.… வெளியே போ…. போ இங்கேயிருந்து…” எனத் துரத்திய ராகவன்… அவன் தோளைப் பற்றி வெளியே தள்ள…. அவர் கையை விலக்கி “நானே போறேன்” என்றவன்… பார்த்தசாரதியை நோக்கி..
“இந்த மேரேஜ் சர்டிஃபிகேட் பொய்யில்லை அங்கிள்! நான் அவளைக் காதலிக்கிறேன்னு சொன்னதும் பொய்யில்லை! இதுக்கப்புறம் பொறுமையா முடிவெடுத்து… உங்கப் பொண்ணை என்னோட வாழ அனுப்புறதும்… உங்களோடயே வைச்சுக்கிறதும் உங்க விருப்பம்!” என்று கூறி விட்டு… திகைத்தப் பார்வையுடன் அவனையே வாயடைத்துப் போய் நோக்கிக் கொண்டிருந்தவளின் மீது ஒரு பார்வையைச் செலுத்தி விட்டு விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான்.
அவரைத் தொடர்ந்து ராகவனும் எதுவும் கூறாமல் வெளியேறி விட.. நெற்றி வியர்வையைத் துடைத்தபடி சோபாவில் அமர்ந்த பார்த்தசாரதிக்கு ஆத்திரம் உச்சத்தைத் தொட்டிருந்தது.
“என்ன நினைச்சுட்டு இருக்கான் என்னைப் பத்தி?, பெருசா மிரட்டிட்டுப் போறான்! ஃப்ராடு! இவனைப் போய் நல்லவன்னு நம்பி, உனக்குக் கட்டி வைக்கக் கனவு கண்டேனே! ராகவன் மாதிரி ஒரு ஆளுக்கு மகனா பொறந்துட்டு.. எப்படி இவனால இவ்ளோ பெரிய ஃப்ராடுத்தனத்தைப் பண்ண முடிஞ்சது?, ராஸ்கல்! விட மாட்டேன்… இப்படியே விட மாட்டேன்.. நடக்காதக் கல்யாணத்தை நடந்ததா அவனால ரிஜிஸ்டர் பண்ண முடிஞ்ச மாதிரி… அந்த சர்டிஃபிகேட்டே இல்லாம ஆக்க என்னால முடியாதா?, நீ கவலைப்படாத சரண்யா! இந்த ராஸ்கலை நான் சும்மா விட மாட்டேன்! இவனை ஜெயில்ல தள்ளிக் களி திங்க வைச்சாத் தான் என் மனசு ஆறும்”
-விடாது புலம்பியத் தந்தையின் பேச்சைக் கேட்டுப் பயம் வர… எங்கே அப்படியேதும் செய்து விடுவாரோ என அஞ்சி.. “அப்பா…” என்றழைத்தபடியேக் கலக்கத்துடன் அவர் காலடியில் அமர்ந்தாள் சரண்யா.
“அ…அவர் மேல எந்தத்தப்பும் இல்லப்பா, நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொல்லி அவர்க்கிட்ட கேட்டதே நான் தான்! நான்… நான் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்” – குனிந்தத் தலையுடன் குரல் கம்மக் கூறியவளைக் கண்டு ‘அடுத்து என்ன அதிர்ச்சியைக் கூறப் போகிறாள் இவள்’ என்ற பயத்தோடு பெரியவர்கள் இருவரும் அவளையே நோக்கினர்.
“என்ன சரண்யா சொல்ற?” – பாக்கியம்
“அ…அது வந்து அப்பா…” என்று தொடங்கியவள் அவளது கொள்கை,கோட்பாடுகளிலிருந்துத் தொடங்கி… ஸ்டீபனுடனானக் காதல் வரை அனைத்தையும் கூறி… விஜய்யைச் சந்தித்தது, அவன் தனக்காக உதவியது என நடந்தவற்றை ஒரே மூச்சில் ஒப்பித்தாள்.
“போ…போலி சர்டிஃபிகேட் ரெடி பண்றதா தான்ப்பா சொன்னாரு! எ…எதுக்காக உண்மையாவே ரெஜிஸ்டர் பண்ணினார்ன்னு எனக்குச் சத்தியமாத் தெரியாது” – எனக் கூறி முடிக்கையில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார் பாக்கியம்.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியக் கதையாக அடுத்தடுத்து எழுந்த அதிர்ச்சிகளைத் தாங்க முடியாமல் வெம்பியவர் “ஏன் டி உனக்கு புத்தி இப்படிப் போயிருக்கு?, நாங்க வளர்த்த வளர்ப்பையே அசிங்கப்படுத்துற மாதிரி ஏன் டி இப்படி நடந்துக்கிற?, ஒழுக்கம்,ஒழுக்கம்ன்னு உன்னைப் பொத்திப் பொத்தி வளர்த்த மனுஷனையே ஏமாத்தி வேறு மதத்தைச் சேர்ந்தவனைக் கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவு எடுத்துருக்கேனா.. உனக்கு எவ்ளோ திமிர் இருக்கனும்?, அப்படியும் ஒரு நல்லவனைத் தேர்ந்தெடுக்கிற அறிவாவது இருக்கா?, அதுவுமில்லை! நீ வாங்கி வைச்சிருக்கிற மெடல்-ஐ எல்லாம் தூக்கிக் குப்பைல போடு! வெறும் பட்டறிவை மட்டும் வளர்த்து வைச்சுக்கிட்டு என்னப் பிரயோஜனம்?, வாழ்க்கையைப் பத்தி ஒரு தெளிவு இருக்கா உனக்கு?, இந்த வயசுலயும் பொறுப்பில்லாம நடந்துக்கிட்டு எங்களைக் கஷ்டப்படுத்துற?” எனக் கூற.. முகம் கன்றத் தலை குனிந்தாள் சரண்யா.
பாக்கியமேனும் வாய் விட்டுத் திட்டினார்! பார்த்தசாரதியிடம் பேச்சே இல்லை! மகளை ஒரு முறை வெறித்துப் பார்த்தவர்.. அறைக்குள் நுழைந்துக் கதவைச் சாற்றிக் கொண்டார். அவருக்கு யோசிக்க வேண்டியிருந்தது.
என்னப் பிள்ளைகள் இவர்களிருவரும்?, முப்பதை எதிர் நோக்கி ஒருத்தி! முப்பதைக் கடந்த ஒருவன்! இந்த வயசிலும் ஒருவரையொருவரைப் பற்றியத் தெளிவின்றி.. வயதுக்குரிய முதிர்ச்சியில்லாமல்.. இஷ்டத்திற்குத் தானாக முடிவெடுத்துக் கொண்டு… வாழ்க்கையைத் தங்கள் போக்கிற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்!
நல்ல கொள்கை தான் சரண்யாவினது! இல்லையென்று கூறவில்லை! இந்த வயதிலும் தனக்கேற்ற ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் தெளிவில்லாமல்.. ஒரு பொறுக்கியுடன் காதல் கொண்டு.. அந்தக் காதலைப் பற்றி வீட்டினரிடம் தெரிவிக்கும் தைரியமும் இல்லாமல்! என்ன பெண் இவள்! இத்தனை வருடமாக தின்று,வளர்ந்து என்ன பிரயோஜனம்? மூளைக்கு வார்னிஷ் அடித்துக் கிடப்பில் வைத்து விடுவாள் போலும்! தேவைக்குக் கூட அதை உபயோகப்படுத்தாமல்! என்ன வளர்த்திருக்கிறேன் இவளை எனத் தன்னையேக் கேட்டுக் கொண்டார் அவர்.
இதுவரைத் தன்னிடம் கோபப்படாத அன்னை தன்னை அடித்ததும், எப்போதும் கோபப்பட்டுப் பெல்ட்டைக் கழட்டும் தந்தை, இன்று எதுவுமே கூறாமல்… அமைதியாகச் சென்றதும்.. சரண்யாவிற்குக் கிலியைக் கொடுக்க.. ஆளுக்கொரு மூலையில் கதவைச் சாற்றிக் கொண்டவர்களைக் கண்டுப் பயந்து… யாரை முதலில் சமாதானப்படுத்துவெனத் தெரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்தாள்.
இதற்கிடையில் அவளைக் காதலிப்பதாக விஜய் கூறிச் சென்றதை மூளை மறந்தே விட்டிருந்தது.. இது அறியாத விஜய்.. தன் அறையில் இரு கைகளையும் தலைக்கடியில் வைத்துக் கொண்டுக் கண்களை மூடிப் படுத்திருந்தான். அன்னையும்,தந்தையும் வெளியே விடாது கத்திக் கொண்டிருப்பது அவன் காதுகளில் விழுந்து கொண்டு தானிருந்தது. ஆனாலும் அவன் கதவைத் திறந்து அவர்களுக்குப் பதில் சொல்ல முயலவில்லை!
இங்கே சரண்யாவின் வீட்டில்.. இன்னமும் திறக்கப்படாத மூடிய கதவுகளையே கலக்கத்துடன் வெறித்துக் கொண்டிருந்தவள் பொறுக்க முடியாமல் எழுந்து சென்று அன்னையிருந்த அறைக்கதவைத் தட்ட… வெளியே வந்த பாக்கியமோ ‘தானே தலையில் மண்ணை வாரிப் போட்டு சொந்த வாழ்க்கைக்கே சூனியம் வைத்துக் கொண்டு, அடுத்து என்ன செய்வதென்கிறத் தெளிவும் இல்லாமல்… சொந்தபந்தங்களின் முன்புத் தங்களை அவமானப்பட வைத்ததற்காகக்… கண்ணீர் விட்டேனும் என் துக்கத்தை ஆற்றிக் கொள்கிறேன்’ என்று விட்டுப் படுக்கையில் சாய்ந்து கொள்ள… முகம் கோணி அழுகை வரும் போலிருந்தது அவளுக்கு.
எல்லாம்…. அவனால்…. அவனால் வந்தது! என்ன கூறி நிச்சயதார்தத்தை நிறுத்தப் போகிறான் என்பதை அவளிடம் கலந்தாலோசிக்காமல் அவன் இஷ்டத்திற்கு ஏதேதோ பேசி… அன்னை,தந்தையை அத்தனை பேரின் முன்னிலையில் அவமானப்படுத்தி…. ராஸ்கல்! என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் மனதில்??
போலிச் சான்றிதழ் எனக் கூறித் தன்னிடம் கையெழுத்து வாங்கி விட்டு.. இப்போது.. உண்மையான சர்டிஃபிகேட் என்றுத் தந்தையையே மிரட்டுகிறான்! இன்னும்….. இன்னும்… அவளைக் காதலிப்பதாக வேறு கூறுகிறான்!, எது உண்மை?
அதுவரைப் படபடவென விடாது அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தவள்…. அவன் கூறிய நொடியையும், அந்த வார்த்தைகளையும் எண்ணிப் பார்த்து… நெஞ்சம் நனைய.. உடல் சிலிர்க்க…. படபடத்தக் கண் இமைகளுக்குள் தள்ளாடிக் கொண்டிருந்தக் கருவிழிகளை அவசரமாய்த் தாழ்த்திக் கொண்டாள்!
அழுது கொண்டிருந்த அன்னையையும், மூடியிருந்தத் தந்தையின் அறைக்கதவையும் கண்டு விட்டு விறுவிறுவென சென்று உடை மாற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். முழு வேகத்துடன் சாலையில் நடை போட்டவள் நேரே சென்று நின்றது விஜய்யின் வீட்டில்!
மகன் செய்து வைத்தக் காரியத்தின் பாதிப்பிலிருந்து இன்னமும் வெளி வராமல் ஹாலில் புலம்பியபடி அமர்ந்திருந்த ராகவனையும்,லட்சுமியையும் கண்டவள், விறுவிறுவென உள் நுழைந்து “எங்க அங்கிள் உங்கப் பையன்?” என்றுக் கோபமாய் வினவினாள்.
அவள் நுழைந்த விதமும், அவள் அதட்டிய விதமும் ராகவனைத் திகைக்கச் செய்ய… அவர் பேச்சிழந்து… மாடியிலிருந்த அவனது அறையை நோக்கிக் கைக் காட்டினார்.
கடகடவென இரண்டிரண்டுப் படிகளாகத் தாவி ஏறியவள் அவனது அறைக் கதவைத் திறக்க முயற்சித்துப் பின் அது உள்புறமாகப் பூட்டியிருப்பதை உணர்ந்து “ப்ச்” என்றபடி அறைக்கதவை ஓங்கித் தட்டி “கதவைத் திறங்க” என்றுக் கத்தினாள்.
அவளது குரல் தன் வீட்டில் ஒலிப்பதை.. அதுவும் இத்தனைப் பெரிய சம்பவத்திற்குப் பின்.. தன் அறை வாசலில் ஒலிப்பதை எண்ணி ஒரு நொடி வியந்தவன், பின் வியப்பை மறைத்தபடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.
அவனைக் கண்டதும் கொத்தாக அவன் சட்டையைப் பற்றியவள்… “நீ…. நீ பெரிய இவனா டா?, ம்?? எங்கப்பாவையே மிரட்டுற அளவுக்கு உனக்குத் தைரியமா?, அவர் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?,” – கோபத்துடன் கத்த…
நிதானமாக அவள் கையை விலக்கியவன் “அவ்ளோ பெரிய ஆளையே ஏமாத்தி லவ் மேரேஜ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தியே! உனக்கெல்லாம் எவ்ளோ தைரியம்!” எனக் கேட்க.. பல்லைக் கடித்துக் கொண்டு அவனை முறைத்தவள்..
“ஒழுங்கா அவர்க்கிட்ட வந்து உண்மையைச் சொல்லுங்க, அந்த சர்டிஃபிகேட் பொய்ன்ன்னு சொல்லுங்க.. ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சல் குரலில்.
“ஹ்ம், பொய்-ன்னு சொல்லிட்டு.. காலைல உங்கப்பா பார்த்து வைச்சிருந்த மாப்பிள்ளையோட அப்டியே உனக்கு நிச்சயமும் பண்ணி வைச்சிடட்டுமா?”
“……………”
“நிச்சயதார்தத்தை நிறுத்துங்கன்னு நீ தானடி கெஞ்சுன?,”
“அதுக்காக?, அதுக்காக…. அவ்ளோ பெரிய பொய் சொல்வீங்களா நீங்க?”
“எதைப் பொய்-ன்ற?, நான் சொன்னதெல்லாம் உண்மை தான்! சட்டப்படி நீ என் பொண்டாட்டின்னு உண்மையாவே பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் சர்டிஃபிகேட் அது!”
-அவன் பதிலில் வாயடைத்துப் போய் நின்றவள்… “ஏன்?, ஏன் அப்படிப் பண்ணீங்க?” – என்று அதிர்ச்சி மாறாதக் குரலில் வினவினாள்.
“அந்த ஸ்டீபன், அப்புறம் இன்னிக்கு மாப்பிள்ளைன்ற பேர்ல வந்தவன், இவனுங்களை மாதிரி.. எவனும் உன் வாழ்க்கைல இனி வந்துடவே கூடாதுன்றதுக்காகத் தான்” – அசால்ட்டாகக் கூறியவனை அவள் கலங்கிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்த சமயம்.. மாடியேறி வந்தனர் அவனை பெற்றவர்கள்.
“விஜய், நீ பேசுற விதம் கொஞ்சமும் சரியில்லடா! அந்தப் பொண்ணை ஏமாத்திக் கல்யாணம் பண்ணியிருக்க!, கொஞ்சம் தணிஞ்சு பேசு! பண்ணது ஃப்ராடுத்தனம், இதுல எதுக்குடா உனக்கு இவ்ளோ திமிரு?” – பொறுமையற்றக் குரலில் ராகவன்.
“ஹ்ம், சொல்லுங்க! பத்து வருசத்துக்கு முன்னாடி இவ என்னைப் பொறுக்கின்னு சொன்னா!, நீங்க இப்போ என்னை ஃப்ராடுன்னு சொல்லுங்க! எல்லாத்தையும் கேட்டுக்கிறேன்…” – கோபமாய்க் கூறியவனைச் சத்தியமாய் என்ன செய்வதென்றேப் புரியவில்லை அவளுக்கு.
“ஏன் டா விஜய் இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிற?, என்னடா ஆச்சு உனக்கு?” – அழுகைக் குரலுடன் அன்னை வினவியதும்… தலையை அழுந்தக் கோதியவன்… “என்னைக்கு இவளைப் பார்த்தேனோ.. அன்னைக்கு இருந்துப் பைத்தியம் மாதிரி தான் நடந்துக்கிட்டிருக்கேன்” – என்று முணுமுணுக்க… அவன் குரல் தன் செவிகளைத் தீண்டியதில்.. அவன் புறம் திரும்பியவள்..
“என் மேல ஏன் பழி போடுறீங்க?, நான் உங்களை என்னப் பண்ணினேன்?” என்றாள்.
முழு எரிச்சலுடன் அவளை நோக்கியவன் “பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன பண்ணினேன்னு என்னையே கேட்குறியா?, அப்பா…. இவளை அப்டியே இழுத்துட்டுப் போய் எங்கேயாவது கண் காணாத இடத்துலத் தள்ளிடுங்க.“ என்று தந்தையிடம் கூறி விட்டுப் பின் அவள் புறம் திரும்பி…
“ஏய்ய்ய் மேரேஜ் சர்டிஃபிகேட் பொய் தான் டி! போய் ஒரு வக்கீலை வைச்சு வெரிஃபை பண்ணி அது பொய் தான்னு உங்கப்பன்ட்ட ப்ரூவ் பண்ணு! அப்டியே அவர் பார்த்து வைச்சிருக்கிற மாப்பிள்ளைக்கும் கழுத்தை நீட்டு” – கோபமாய்க் கத்தினான்.
“விஜய்…….” – அதட்டியத் தந்தையிடம்..
“இந்த மரமண்டைக்குக் கடைசி வரைக்கும் நான் அவளைக் காதலிக்கிறது புரியாதுப்பா…! இவளை மனசுல வைச்சுக்கிட்டு இத்தனை வருசத்தையும் நான் யோக்கியனாக் கழிச்சது ரொம்ப ரொம்பத் தப்பு! ராட்சசி! சும்ம்மா இருந்த என் லைஃப்ல தேடித் தேடி வந்து குழப்பத்தை உண்டாக்குறா…. ஏய்… போடி இங்கேயிருந்து…” – அவள் தோளைப் பற்றி அவன் தள்ளியதும்.. கீழே விழ இருந்தவளை லட்சுமி பிடித்து நிறுத்த..
“என்னடா பண்ற?” என்றுத் திட்டி அவனைத் தன் புறம் இழுத்தார் ராகவன்.
அவன் வார்த்தைகளில் கண்களில் கண்ணீர் சேர்ந்து விட… “என்னைக் காதலிக்கிறதா அவர் என் கிட்ட ஒரு தடவைக் கூட சொன்னதேயில்ல அங்கிள்…. எனக்கு இது எதுவுமேத் தெரியாது “ – குரல் கம்மக் கூறியவளைக் கேட்டு… வெறியாகிப் போனான் விஜய்.
“என்னடி தெரியாது?, ம் என்ன தெரியாது?, லவ் பண்ணாமத் தான் 3 தடவை உன்னைக் கிஸ் பண்ணேனா?, முத்தம் கொடுக்கும் போது என்னன்னு நினைச்ச?, என்னைப் பொறுக்கின்னா?, என் தப்பு தான்! நான் ஒரு பொறுக்கின்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்தவக்கிட்ட இதைத் தவிர வேற என்ன எதிர்பார்க்க முடியும்?” – அன்னை,தந்தை அருகிலிருக்கிறார்கள் என்கிற நிதானமின்றி அவன் கோபத்தில் வார்த்தைகளை விட…. அவமானத்தில் முகம் கன்றிச் சிவந்து விட்டது அவளுக்கு. என்னவெல்லாம் பேசுகிறான்!
அவன் கூறியதைக் கேட்ட ராகவனும்,லட்சுமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு… அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டனர். அவர்கள் சென்றதும், தலை குனிந்து நின்றிருந்த சரண்யாவின் முன்பு வந்து நின்றான் அவன்.
“சரண்யா… நிமிர்ந்து என்னைப் பாரு”
கண்ணீரும்,விம்மலுமாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் அவள்.
“கண்ணீர் விடாத! காண்டாகுது எனக்கு!”
“நீங்க சொன்னவுடனேல்லாம் கண்ணீர் நின்னுடாது”
“சரி அழு! நல்லா அழு! இத்தனை வருஷமா என்னை அழ விட்டதுக்கு சேர்த்து வைச்சு நல்லா அழு”
“……………….” – அவள் விசும்பல் ஒலி மட்டுமே கேட்டது.
“ப்ச் சரண்யா.. நிறுத்து! மீதி அழுகையை வீட்டுக்குப் போய் உங்கப்பா முன்னாடி கண்டினியூ பண்ணு!, இப்போ நான் சொல்றதைக் கேளு”
“என்ன?” – அழுகையூனூடேக் கேட்டாள் அவள்.
“எப்போ என் வீட்டுக்கு வரப் போற?”
“ம்ம்ம்ம்???” – புரியாமல் புருவம் சுருக்கினாள் அவள்.
“அதான் சட்டப்படி நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னேனே! அதே சட்டம், நீயும்,நானும் சேர்ந்து ஒரே வீட்ல தான் வாழனும்ன்னு சொல்லுது! அதான் கேட்குறேன்! எப்போ வரப் போற?”
அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாகப் பேசுபவனைக் கண்ணீர் உறைய.. வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
முகத்தில் பழைய குறும்பு கூத்தாட… புன்னகைத்தபடியே “என்ன சைட் அடிக்கிறியா?” என்றான்.
“இல்ல!” – வியப்புடனே வேகமாய்த் தலையசைத்தாள். என்ன மனிதன் இவன்?
“பரவாயில்ல! நீ அடிக்க வேணாம்! உனக்கும் சேர்த்து நான் அடிச்சுக்கிறேன். இப்போ என் கேள்விக்குப் பதில் சொல்லு?”
என்ன கூறுவதென்றுப் புரியாமல் ஒரு நொடி வேறு புறம் நோக்கியவள் பின் திரும்பி… அவன் கண்களை நோக்கி… உள்ளே சென்று விட்டக் குரலில் வினவினாள்.
“நீ…நீங்க.. நி..நிஜமாவே என்னை லவ் பண்றீங்களா?”
“எப்படி ப்ரூவ் பண்ணனும்?”
“நா…நான் இப்படி ஒரு ஆங்கிள்-ல யோசிச்சுப் பார்த்ததேயில்ல! நீ..நீங்க என்னை லவ் பண்ணுவீங்கன்னு நினைச்சதேயில்ல”
“அதனால என்ன இப்போ?, என் வீட்டுக்கு வந்தப்புறம் பொறுமையா யோசிச்சுப் பார்த்துக்கோ”
“…………..” – எதுவும் பேசாமல் ஐந்து நிமிடத்தை சரண்யா தரையைப் பார்த்தபடியும், விஜய் அவளைப் பார்த்தபடியும் கழித்தனர். பின் மெல்ல நிமிர்ந்த சரண்யா தானே தொடங்கினாள்.
“எங்கப்பா உங்க மேல ரொம்பக் கோபமா இருக்கார். அவர்க் கிட்ட நீங்க மன்னிப்புக் கேட்கனும்”
“நான் உன் கிட்டயே எந்த விசயத்துக்கும் சாரி கேட்கல! இதுல உங்கப்பாக்கிட்ட கேட்பேனா?, என்னால முடியாது!” – வழக்கம் போல் திமிரான குரலில் அவன்.
“அப்போ என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது” – தானும் முறுக்கிக் கொண்டாள் அவள்.
“வராத! என்னால உன் பின்னாடியே வந்துல்லாம் கெஞ்ச முடியாது!”
“……………….” – பல்லைக் கடிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவளுக்கு.
“ப்ச், உன் கிட்டப் பேசுனா டைம் வேஸ்ட் தான் ஆகும்! எங்கப்பா நாளைக்கு உன் வீட்லப் பேசுவார்! 24 மணி நேரம் தான் உனக்கு டைம்! நல்லா யோசிச்சுக்கோ! உனக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ இந்த 24 மணி நேரத்துக்கப்புறம் உன் வாழ்க்கைல நீ கடத்தப் போற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட தான்…. என்னோட மட்டும் தான்….”
-அவ்வளவு தான் என்பது போல் கூறி விட்டுத் தன்னறைக்குள் நுழையவிருந்தவனை… வியப்பும்,கோபமுமாய் நோக்கியவள்.. கலங்கிய முகத்துடன்…. மெல்லிய குரலில்… “அ..அப்போ… நா.. நான் உங்களைக் காதலிக்க வேண்டாமா?” என்று வினவ…. ஒரு நொடிக் கண்களை அழுந்த மூடி மூச்சை உள்ளிழுத்தவன்.. சட்டெனத் திரும்பி வந்து.. அவள் கையைப் பற்றியிழுத்துத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்து… அவள் காதோரத்தில் இதழ் பதிய.. “காதலிக்கனும்.. நிறைய.. நிறைய… காதலிக்கனும்! இந்த ஜென்மம் முழுசும்! என்னை மட்டும்...” எனக் கூற…..
எப்போதும் அவன் தொட்டாலேத் திமிறி விலகி நிற்க முயல்பவள் இன்று அவன் அணைப்பில் அசையாமல் நின்று.. அவனது அகண்ட கண்களில் வழிந்த காதலைக் கண்டு வியந்து.. தன் கன்னத்தில் பதிந்திருந்த அவன் உள்ளங்கையின் சூட்டை மெல்ல உள்வாங்கி.. அவன் ஸ்பரிசம் உணர்த்திய உரிமையை உணர்ந்து… ஆ-வென அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
