அத்தியாயம் - 2
ஏப்ரல்,2004.
“குயிலைப் புடிச்சுக் கூண்டில் அடைச்சுக் கூவச் சொல்லுகிற உலகம்!, சரண்யாவைப் புடிச்சுக் காலை உடைச்சுக் கிரிக்கெட் பார்க்க வைக்குற உலகம்” – அந்தப் பெரியக் கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் இருக்கையில் கடும் எரிச்சலுடன் அமர்ந்திருந்த சரண்யா, தன் தோழி நேத்ராவை விழியாலே சுட்டெரித்தபடித் தன் கீச்சுக் குரலால் கடுப்புடன் பாடிக் கொண்டிருந்தாள்.
“ஷ்ஷ், தயவு செஞ்சு பாடாதடி. நீ பேசுனாலே மனுஷனாலக் கேட்க முடியாது, இதுல பாட்டு வேற!, கொஞ்சமும் யோசிக்காம, கட்டுப் போட்டிருக்கிற உன் கால்ல பட்டுன்னு ஒரு அடியைப் போட்ருவேன் பார்த்துக்க!” –அவளை விட எரிச்சலுடன் பதிலளித்தாள் நேத்ரா.
“அப்படித் தான் டி பாடுவேன்! என்ன செய்வ?, கிரிக்கெட்ல இன்ட்ரெஸ்ட்டே இல்லாத ஒருத்தியக் கூப்பிட்டு வந்து இந்த வெயில்ல உட்கார வைச்சு டார்ச்சர் கொடுக்கிற நீ?”
“ஏய், இந்த ஊர்ல வெயில் அடிக்கிறதே ரொம்பப் பெரிய விசயம்! அதை அனுபவிக்காம ஹாஸ்டல் ரூமுக்குள்ளேயே அடைஞ்சுக் கிடப்பியா?”
“அதுக்கு இங்க ஏன் டி அழைச்சிட்டு வந்த?, கட்டு போட்டக் காலோட இப்டியே எவ்ளோ நேரம்டி உட்கார்ந்திருக்கிறது?”
“ஏய்… உனக்குக் கம்ஃபர்ட்டபிளா இருக்கனும்ன்றதுக்காக இந்த சீட்டை நான் எவ்ளோ கஷ்டப்பட்டுப் பிடிச்சேன் தெரியுமா?, சொகுசா சாய்ஞ்சு உட்கார்ந்துக்கிட்டு நக்கல் பேச்சுப் பேசுறியா நீ?”
“அப்படிக் கஷ்டப்பட்டு இந்த மேட்சை நாம பார்த்தாகனுமா?”
“பின்ன?, நேஷனல் யுனிவர்சிட்டிக்கும், ராயல் யுனிவர்சிட்டிக்கும் நடக்குற ஃபைனல் மேட்ச் இது!, ரெண்டு யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட்ஸூக்கும் எப்பவும் ஆகாது! லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா கப் வின் பண்ணினது நாம தான்! இந்த முறை எப்படியாவது கப்பைத் தட்டிட்டுப் போயிடனும்னு ராயல் பாய்ஸ் கடும் முயற்சி எடுத்துருக்கிறதா ஒரு பேச்சு இருக்கு!, பட், நம்ம பசங்க சாம்பியன்ஸ் ஆச்சே!, விட்டுக் கொடுக்க மாட்டானுங்க! பரத் அண்ட் விஜய் காம்போ இருக்கிற வரைக்கும் நம்ம டீமை அடிச்சுக்க முடியாது! லாஸ்ட் டூ இயர்ஸா வின்னிங்க்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்குறதே இவங்க ரெண்டு பேர் தான்!”
“ஓஹோ….”
“யெஸ்…. நீ இப்போ தான ஜாயின் பண்ணியிருக்க?, அதான் உனக்கு இதெல்லாம் தெரியல.”
“தெரிஞ்சுக்கிட்டு என்னப் பண்ணப் போறேன்! எனக்குக் கிரிக்கெட் பிடிக்காதுடி!”
“எனக்கு மட்டும் பிடிச்சா பார்க்க வந்திருக்கேன்?”
“அட நாயே! பின்ன எதுக்குடி இங்க உட்கார்ந்திருக்கோம்?”
“எல்லாம் பரத்துக்காகத் தான்”
“அது யாரு?”
“நான் சைட் அடிக்கிறப் பையன் டி! நான் மட்டுமில்ல. இந்தக் காலேஜ்ல ஜூனியர்,சீனியர்ன்னு அத்தனைப் பொண்ணுங்களும் பாரபட்சமில்லாம சைட் அடிக்கிற பொது சொத்து அவன்!”
“அடப்பாவிங்களா”
“ஏன் வாயைப் பொளக்குற?, உங்கப்பா சைட் அடிக்கிறதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்கிறாரா?”
“ச்சி, எங்கப்பன் பேச்சை கேட்குற ஆளா நானு?”
“அதான?, கேட்டிருந்தா இப்டிக் கால் ஒடிஞ்சுப் போய் டார்ஜிலிங்ல உட்கார்ந்திருப்பியா?”
“ஏய்.. என்ன நக்கலா?”
“சரி, சரி விடு. நான் உனக்கு பரத்தைப் பத்தி சொல்றேன்”
“சொல்லித் தொலை”
“நம்ம காலேஜோட மோஸ்ட் ஹாண்ட்சம் லவர் பாய் அவன்! நல்ல உயரம்! சுண்டி விட்டா ரத்தம் வர்ற கலர்!, அழகான ஸ்மைல்,அப்புறம்…”
“ஏய்.. ச்சி,ச்சி நிறுத்து! நீ கொடுக்கிற வர்ணனையைக் கேக்குறதுக்கு நான் ஆளையே நேர்ல பார்த்துடுவேன், யாருன்னு மட்டும் சொல்லு” – எரிச்சலுடன் தொடையைக் கிள்ளியவளைக் கண்டுத் துள்ளி விலகிய நேத்ரா.. க்ரௌண்டைப் பார்வையிட்டு… “ஹேய்ய்ய்ய்… நம்மாளு பௌன்ட்ரி கிட்ட வர்றான்” என்று எழுந்து நின்றுக் கையிலிருந்த ஆரஞ்சு வண்ணக் கொடியை ஆட்டியபடி “பரத்,பரத்,பரத்” என்று கத்தினாள்.
அவள் மட்டுமல்லாது அவர்களருகே அமர்ந்திருந்தக் கூட்டத்திலிருந்தப் பெண்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட.. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவனது முகத்தைக் காண.. முன்னிருக்கைக்காரியின் டீ-ஷர்ட்டைப் பிடித்துத் தள்ளி.. மைதானத்தை நோக்கினாள் சரண்யா.
“பரத்… பரத்…. பேபி… டார்லிங்… ஸ்வீட் ஹார்ட்….”
-விடாது ஹை-டெசிபலில் ஒலித்துக் கொண்டிருந்தக் குரல்களுக்கு செவிமடிக்காது அவன் முன்னே பார்த்த வண்ணம் நிற்க.. சரண்யாவினால் அவனது முகத்தைக் காண முடியவில்லை.
“பரத்… ஐ லவ் யூ…. பரத்.. ஐ வான்ன டேட் யூ…. பரத்.. ஐ வான்ன ஸ்டே *********”
- கடைசியாக ஒருத்திக் கூறிய வார்த்தையைக் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டாள் சரண்யா. அடக் கிறுக்குப்பய மவள்களா! இப்படிப் பச்சையாப் பேசுறாளுகளே! அடியேய், உங்களையெல்லாம் கூட்டிட்டுப் போய் எங்கப்பன் முசுட்டு முனுசாமிட்ட விடனும்டி என்று விட்டுத் தானும் எழுந்து நின்று அவனைக் காண எத்தனித்தாள். பயபுள்ள திரும்ப மாட்றானே!
“பேபி….. பேபி.. ப்ளீஸ்…. ஒருதடவைத் திரும்பிப் பாரு ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்”
-அவனது ஒற்றைப் பார்வைக்காக ரொம்பவும் ஏங்கிப் போயிருந்த மங்கையொருத்தியின் கெஞ்சல் குரல் ஆங்கிலத்தில் கொஞ்ச… பரத்தின் அருகே நின்றிருந்த அவனது நண்பன் விஜய் முழுப்புன்னகையுடன் திரும்பிக் கூட்டத்தை நோக்கினான்.
புருவத்தைச் சுருக்கிக் கொண்டு இதழை வளைத்து ‘இந்த அளவுக்கா இறங்கிக் கெஞ்சுவீங்க?’ –என்கிற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு முழுப்பற்களையும் காட்டிப் புன்னகை புரிந்தவன் பரத்தின் தோளை அடித்து ஏதோ சொல்ல.. அப்போதும் பரத் என்பவன் திரும்பியும் பார்க்கவில்லை.
பரத் என்ன பதில் கூறினானோ! கடகடவெனத் தலையைச் சரித்துச் சிரித்தவன்.. மீண்டும் அவன் தோளை ஓங்கி அடித்து விட்டு.. அவனிடமிருந்து விலகி ஓடிக் கொண்டே முன்நெற்றி முடியைப் பின்னே தள்ளி.. இடையில் செருகி வைத்திருந்த கேப்-ஐ எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு.. தன் இடத்திற்குச் சென்று நின்று… கைகளைத் தட்டி “கமான்.. கமான்.. கமான் கைஸ்…” என்றான்.
பரத்துக்காக விடாது ஒலித்துக் கொண்டிருந்தச் சிட்டுக்களின் கொஞ்சல் குரலுக்கு அவ்வப்போதுத் திரும்பிப் பார்த்து சிரித்தவனையேத் தொடர்ந்தது சரண்யாவின் பார்வை.
“யாருடி அவன்??” – சரண்யா
“ஊஊஊஊஊஊஊஊஊஊ”- கூட்டம் பெருங்கூச்சலுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது. பயபுள்ள பரத் தனது கடைக்கண் பார்வையைச் செலுத்தி விட்டான் போலும்!
பூலோகத்தைக் கடந்து வான்வழியாக சொர்க்கத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்த நேத்ராவின் தோளைப் பற்றியிழுத்த சரண்யா.. “ஏய்… யாருடி அவன்?” என்று கத்தினாள்.
காதைத் தேய்த்துக் கொண்டு அவளை நகர்த்திய நேத்ரா “ஏன் டி கத்துற?, யாரைக் கேட்குற?” என்று விசாரித்தாள்.
“அவன் தான், உன் பரத் பக்கத்துல நின்றிருந்தானே! ஒரு தாடிக்காரன்!”
“அவனா?, அவன் பேர் விஜய். பரத்தோட க்ளோஸ் ஃப்ரண்ட்”
“ஓஹோ!, அவனும் பார்க்க நல்லாத் தான இருக்கான்?, அவனுக்கு யாரும் ஃபேன்ஸ் இல்லையா?”
“அவனா நல்லா இருக்கான்?, கருகருன்னு,மீசை,தாடியோட.. உவ்வேஏஏஏ…”
“ஏய்…. கருப்பா இருந்தா பார்க்க மாட்டீங்களா?, என்னடி லாஜிக் இது?, திராவிட நிறமே கருப்பு தான் டி!”
“அதை நீ டார்ஜிலிங்ல உட்கார்ந்துக்கிட்டு சொல்லக் கூடாது! இங்க வெள்ளையா இருக்கிற பசங்களுக்குத் தான் மவுசு”
“ப்ச், எனக்குக் கருப்பா இருக்கிற பசங்களைத் தான் பிடிக்கும்! எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு!”
“யாரை?”
“விஜய்”
“அடச்சி!, என்ன டேஸ்ட் உனக்கு?, அங்க பாரு, அங்க பாரு.. பரத் இந்தப் பக்கம் வர்றான்டி! ஊஊஊஊஊஊஊ” – அவள் மீண்டும் பறக்கத் தொடங்கி விட்டாள்.
அப்போது பரத்தின் முகத்தை நோக்கிய சரண்யா அப்படி ஒன்றும் பெரிதாக இம்ப்ரஸ் ஆகி விடவில்லை.
பிசைஞ்சு வைச்ச மைதா மாவு மாதிரி இருக்கான்! இவனுக்கா இவ்ளோ ஃபேன்ஸ்! அதுசரி, ஆலு போண்டா திங்குறவளுங்கக்கிட்ட என்ன ரசனையை எதிர்பார்க்க முடியும்?, எங்க நம்ம கிரேக்க சிலை! என்றவளின் பார்வை மீண்டும் விஜய்யை நோக்கித் திரும்புகையில்… அவன் தன்னை நோக்கி வந்தப் பந்தைப் பிடிப்பதில் மும்முரம் காட்டிக் கொண்டிருந்தான்.
பந்தின் திசைக்கேற்ப இருபுறமும் நகர்ந்தபடி வான் நோக்கிப் பார்வையைச் செலுத்தியிருந்தவன், பந்து கைக்குக் கிட்டியதும், அதை ஒரு நொடி இறுகப்பற்றிப் பின் எகிறிக் குதித்துக் கொண்டு பந்தைக் கீழே விட்டெறிந்து.. இரு கைகளையும் இறகாக நீட்டி க்ரௌண்டில் ஓடத் துவங்க… பாய்ஸ் அனைவரும் ஓடி வந்து அவன் மீதேறி.. தோளைப் பற்றி.. தலைமுடியைப் பிடித்து ஆட்டிக் குதூகலித்துக் கொண்டிருந்தனர்.
சுற்றியிருந்த அத்தனை பேரும் (காலேஜ் ஹீரோ பரத் உட்பட) அவன் முன்பு குள்ளமாகத் தெரிய.. மீண்டும் அதே போல்.. முழுப்பற்களையும் காட்டி.. முகம் மலர.. பளீச்சென சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
ரொம்பவும் சிலருக்கு மட்டும் தான் உதட்டில் தோன்றும் சிரிப்பு, முகம் முழுதையும் மலரச் செய்யும்! அவர்கள் உணர்ந்து சிரித்தாலும் சரி, பெயரளவில் புன்னகை கொண்டாலும் சரி!, காண்போரையும் உடன் சேர்ந்து சிரிக்க அழைக்கும் அந்த மாயச்சிரிப்பு!
விரிந்த விழிகளுடன் அவனையே நோக்கிக் கொண்டிருந்தவளின் மீது.. அவனது பார்வையும் ஒரு முறை உரசிச் சென்றது.
அத்தனைப் பெரியக் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து அவனையே நோக்கும் அவளது விழிகளை அவனால் அவ்வளவு எளிதில் கண்டு கொள்ள முடியாது தான்.
அவள் பார்வையை அவன் கண்டு கொண்டதற்கு இரு காரணங்கள் இருந்தது. ஒன்று, அவள் அமர்ந்திருந்த முதல் வரிசையில் அவளைத் தவிர அத்தனை பேரும் எழுந்து நின்று “பரத்,பரத்” எனக் கூவிக் கொண்டிருக்க.. அவள் மட்டும் படு கேஸ்வலாக காலை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தது! மற்றொன்று அவள் காலிலிருந்த மிகப்பெரியக் கட்டு!
இப்போது அவளருகேயிருந்தப் பெண்கள் கூட்டத்தின் பார்வைப் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த பரத்தின் புறம் திரும்பியிருக்க, இவள் மட்டும் நேராக அமர்ந்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவன் தன்னைக் கண்டுகொண்டான் என்பதை இந்தப் பக்கி இன்னும் உணரவேயில்லை!
தன்னை நோக்கி ஓடி வந்தவனை அவள் இன்னமும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, முதல் வரிசையின் முன்னே போடப்பட்டிருந்த வலைக்கு அருகே வந்து நின்றவன், இடுப்பில் கை வைத்துக் கொண்டு மூச்சு வாங்கியபடி அவளையே நோக்கினான்.
அப்போதும் அவன் தன்னைக் கவனிக்கின்றான் என்கிற எண்ணமேயின்றி அவன் மீதே பார்வையைப் பதித்திருந்தவளிடம் இரண்டு புருவத்தையும் உயர்த்தி தலையை ஆட்டி ‘என்ன’-வென்று வினவினான்.
அவன் செய்கையில் திடுக்கிட்டுச் சுற்றும்,முற்றும் நோக்கிய சரண்யா அவன் தன்னிடம் தான் ஏதோ கேட்கிறான் என்றுணர்ந்துப் பதறி.. சட்டெனப் பார்வையை வேறு புறம் திருப்பினாள்.
சில நொடி நின்று அவளை நோக்கியவனும் விளையாட்டில் கவனம் திருப்ப, ஊஃப்ஃப்ஃப்ஃப் என மூச்சு விட்டு நேத்ராவின் கையைக் கிள்ளினாள் “உட்கார்ந்து பாருடி பக்கி” என்றபடி.
‘என்ன கேட்க வந்தான் அவன்??, பயபுள்ள நான் அவனை சைட் அடிக்கிறத கவனிச்சுட்டானோ!, அப்டியே எந்தப் பொண்ணாவது சைட் அடிச்சாலும், சைலண்ட்டா எஞ்சாய் பண்ணிட்டுப் போறதை விட்டுட்டு, இதென்ன கேள்வி கேட்குறான்?, படுபாவி! ஒரு லவர் பாய்க்கு ஃப்ரண்டா இருக்குற தகுதி இவனுக்குக் கொஞ்சமும் கிடையாது! ப்ச்!’ – என்று புலம்பியபடி அமர்ந்திருந்தவள், அதன் பின்பு மறந்தும் கூட அவன் மீதுப் பார்வையைச் செலுத்தவில்லை.
அதன் பின்பு நேஷனல் யுனிவர்சிடி அன்றைய மேட்சில் ஜெயித்துக் கோப்பையைக் கையில் வாங்கும் வரை.. அவளை எங்கும் நகர விடாமல் பிடித்து வைத்திருந்தாள் நேத்ரா.
அந்தக் கருகருக் கந்தசாமியின் முறைப்பைக் கூடச் சகித்துக் கொள்ளலாம்! ஆனால் நேத்ரா போன்ற இளஞ்சிட்டுகள் பரத்தை நோக்கிக் குடம்,குடமாய் ஊற்றும் ஜொள் மழையைத் தான் அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை!
‘பார்த்தா (சரண்யாவின் தந்தை) சொன்னது ரொம்பச் சரிடி சரண்யா!, நல்லது எது, கெட்டது எதுன்னு புரியாத ரெண்டுங்கெட்டான் வயசு இது! சீனிச் சேவு மாதிரி வெள்ளையா,குச்சியா இருக்கிறவனைப் போய் காலேஜ் ஹீரோன்னு சொல்லிக்கிட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாம சைட் அடிக்குதுங்களே இந்தப் பொண்ணுங்க! ஆண்டவா’ – என்று புலம்பியவளின் மனசாட்சி ‘நீ மட்டும் என்ன ஒழுங்கா?, நீயும் அந்த கேட்டகரி தான் பண்டாரமே!’ என்று இடித்துரைக்க.. அடங்கி அமைதியாக அமர்ந்து விட்டாள்.
அன்று காலை தனது டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த மூன்றாமாண்டு சீனியர் மாணவனை அவள் செய்யவிருக்கும் ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சந்திக்க வேண்டி கம்ப்யூட்டர் லேப்-க்குள் கால் பதித்திருந்தாள் சரண்யா.
அவர்களது கல்லூரியில் ஒரு வழக்கமுண்டு. முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்ததும், அவரவர் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நன்றாகப் படிக்கும் சீனியர் மாணவர்களை மென்டர் என்கிற பெயரில் அவர்களுக்கு நியமித்து விடுவார்கள்.
பாடத்தில் சந்தேகம் தீர்ப்பதிலிருந்துத் தொடங்கி, அவர்கள் செய்யும் ப்ராஜக்ட் வர்க் அனைத்தையும் மேற்பார்வை பார்ப்பது, காம்பஸ் இண்டர்வியூக்களுக்கு அவர்களைத் தயார்படுத்துவதற்காக மாக்-இண்டர்வியூக்களை நடத்துவது என அனைத்துப் பொறுப்பும் இந்த சீனியர் மாணவர்களுக்கு உண்டு.
ஜூனியர் மாணவர்களுக்கு எந்தப் பாடத்தில் அரியர் விழுந்தாலும், கல்லூரி நிர்வாகம் முதலில் மென்டர்களை அழைத்து வைத்துத் தான் விசாரணை நடத்தும்.
இவ்வரிசையில் சரண்யா தேர்ந்தெடுத்த மென்டர் - விஜய்குமார் ராகவேந்திரன்!
கல்லூரி துவங்கி ஒரு மாதம் கடந்திருந்தாலும்.. இன்று வரை அவள் ஒரு முறை கூட அவளது மென்டரை சந்திக்கவில்லை. இப்போது அவள் திட்டமிட்டு வைத்திருக்கும் ப்ராஜக்ட் ப்ளான் ஒன்றை முதலில் ரிவ்யூ செய்து அப்ரூவ் செய்ய வேண்டியது மென்டரின் கடமையென்பதால்.. அவனைத் தேடி வந்து கொண்டிருந்தாள்.
விஜய்குமார் ராகவேந்திரன் எங்கிருப்பான் என அவனது வகுப்பைச் சேர்ந்த ஒருத்தியிடம் கேட்டுக் கொண்டு, காலை எட்டு மணிக்கெல்லாம் அவனைத் தேடி கம்ப்யூட்டர் லேப்-க்குள் நுழைந்தாள்.
இன்னமும் கட்டுப் பிரிக்கப்படாத காலை மெல்ல ஊன்றியபடி, இடது கையில் ஃபைலுடனும்,வலது தோளில் பையுடனும் அந்த லேப்-இன் கதவைத் திறந்து.. குப்பென்று முகத்தில் அடித்த ஏசிக் காற்றை சுவாசித்தபடி, உள்ளே வந்தாள்.
காலியான இருக்கைகளும், அணைத்து வைக்கப்பட்டிருந்த கணிணிகளுமே அவளை வரவேற்க! ப்ச், ஆள் இல்ல போல! இவ்வளவு தூரம் நொண்டிட்டு வந்தது வேஸ்ட்டா! என்பது போல் முகத்தைச் சுழித்துக் கொண்டு அவள் திரும்பிய நேரம்.. பாம்பே ஜெயஸ்ரீயின் கணீர்க் குரல்..
“முதற் கனவே.. முதற் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்.. நீ மறுபடி ஏன் வந்தாய்..” –என்றபடி கணிணி வழியே ஒலிக்க.. திடுக்கிட்டு நின்றாள் சரண்யா.
‘ஆஹாஆஆஆஆ… தமிழ்ப்பாட்டு!, ஆள் இங்க தான் இருக்கான் போலவே!’ – என்று எண்ணிக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டு தலையை எட்டிப் பார்க்க.. அந்த அறையின் மூலையில்.. மெல்லிய வெளிச்சத்துக்குள்.. அங்கிருந்த கம்யூட்டரின் முன்பு தீவிர முக பாவத்துடன் ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது.
மெல்ல நடந்து சென்று அவன் முன்பு நின்றவள் தயங்கியபடியே ‘எக்ஸ்யூஸ்மீ…” என்றாள்.
அமைதியாயிருந்த அறையினுள் அவளது கீச்சுக் குரல் காற்றைக் கிழித்துக் கொண்டு சற்று சத்தத்துடன் ஒலிக்க.. எரிச்சலுடன் திரும்பி நோக்கினான் அவன்.
‘ஓ! மை காட்! இ…இவன் அவனாச்சே!! தட் கரு,கரு கந்தசாமி! ரெண்டு நிமிஷம் பார்த்ததுக்கே, அய்யனாராட்டம் அருவாளைத் தூக்குன ஆளாச்சே! இவன் கிட்ட எப்பிடிப் பாடம் கத்துக்கிறது! அட மக்கு,மடச்சாம்பிராணி! விஜய்ன்றவனோட முழுப்பெயர் என்னன்னு விசாரிச்சு வைச்சிருக்க வேண்டாம் நீ!, அய்யோ! அய்யோ!’ – பதறித் தவித்த மனசாட்சி நேற்று இவனைப்பற்றி சீனியர் அக்காவிடம் விசாரிக்கையில், ‘அவனையா மென்டரா செலக்ட் பண்ணியிருக்க’ என்று ஆச்சரியத்துடன் கேட்டதை ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டது. முட்டாள்த்தனம் பண்ணிட்டியேடி முனுசாமி மவளே!
அவளது மனசாட்சியின் ஓலங்கள் எதுவும் அவன் செவிகளை எட்டவில்லை போலும்! கையில் ஃபைலுடன் தயங்கியபடி நின்றிருந்த அவளது முகத்தை வைத்தே ஃப்ரஷர் என்று புரிந்து கொண்டவன், பாட்டின் சத்தத்தைக் குறைக்காமல் அருகிலிருந்த விளக்கு ஸ்விட்ச்சைத் தட்டினான்.
அவள் நின்றிருந்த இடத்திலும் இப்போது வெளிச்சம் பரவ.. அவள் புறம் தலையைத் திருப்பி “என்ன வேணும்?” – என்று ஆங்கிலத்தில் வினவினான்.
‘வேறென்ன ராசா கேட்கப் போறேன்! கடைசி வரை உன் அன்பு!, இப்போதைக்கு இந்த ஃபைல்ல ஒரு கையெழுத்து!’ – நக்கலடித்த மனசாட்சியை அடக்கி விட்டு..
“நான்… நான் சரண்யா.. ப்ராஜெக்ட் விஷயமா உங்கக்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும். உ…உங்களைத் தான் நான் மென்ட்டராக தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என ஆங்கிலத்தில் கூறினாள்.
“ஓ!, நீ தானா அது?” – என்றபடித் தன் முன்னேயிருந்தக் கத்தைக் காகிதங்களில் ஒன்றை உறுவியவன்.. அதிலிருந்தப் பெயர் பட்டியலைப் பார்த்துக் கொண்டே “சரண்யா பார்த்தசாரதி. ரைட்?” என்றான்.
‘ஆமா சார்! ஆமா சார்! அந்தக் கருத்துக் கண்ணாயிரம் பெத்த ‘பேட்டி’ நான் தான்’ – என்று மனதுக்குள் நினைத்தபடி ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.
தொடர்ந்து அவன் “நீ தமிழ் தானே?” என்றதற்கும் அவள் ஆமென்றுத் தலையாட்ட.. சுழல் நாற்காலியை அவள் புறம் திருப்பியவன்..
“உன்னை யாரு என்னை மென்டரா செலக்ட் செய்யச் சொன்னது?” – எனச் சட்டமாகக் கேள்வி கேட்டான்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் ஒரு நிமிடம் விழித்தவள்.. கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று நடந்தவற்றை.. நினைவடுக்கிலிருந்துத் தட்டியெடுத்து…
“அ…அது… வந்து.. எ…எல்லாரும் பரத் முகுந்தன்-ற பேரை செலக்ட் பண்ணுனாங்க. நா.. நான் தான் ஒரு சேஞ்சா இ..இருக்கட்டுமேன்னு… உ…உங்க பெயரை செலக்ட் பண்ணுனேன்!” என்றாள்.
உதட்டை வளைத்தபடி அவளை நோக்கியவன்.. “நான் பொதுவா பொண்ணுங்களை எனக்குக் கீழ சேர்த்துக்கிறது இல்ல. அதனால, நீ உடனே போய் டிபார்ட்மெண்ட்ல பேசி.. பரத் கூட ஜாயின் பண்ணிக்கோ” என்றான்.
‘தொலைந்த என் கண்களைப் பார்த்ததும்… கொடுத்து விட்டாய்..
கண்களைக் கொடுத்து…. இதயத்தை எடுத்து விட்டாய்……’
-ஹரிஷ் ராகவேந்திரனின் குரல் வேறு இடையில்! ப்ச்! அந்தப் பாட்டுச் சத்தத்தைக் குறைச்சுத் தொலையேன் டா பாவி!
அலட்டிக் கொள்ளாமல் அவன் கொடுத்தப் பதிலில் பாதி, பின்னே ஒலித்துக் கொண்டிருந்த பாட்டுச் சத்தத்தினால் அவள் செவிகளை எட்டாது போக… “எ…என்ன சொன்னீங்க?, சரியாக் கேட்கல” என்றாள்.
பதில் கூறாது பார்வையைக் கணிணியின் புறம் திருப்பியவன் “வெளியே போ” என்றான்.
‘வா..வாட்’ என்று புரியாது விழித்தவள் பாட்டுச் சத்தத்தின் மத்தியில் ஒலித்த அவன் குரல் என்ன கூறியதென்பதை யோசித்துப் பார்த்து… கிடைத்த பதிலில் திகைத்துப் பின் கோபத்துடன் அவனை நோக்கினாள்.
‘உனக்காக ஒருத்தி வந்தாள்.. அழகாக எதிரில் நின்றாள்…
இந்த நேரம் பின்பு வாராதே! வாராதே!’
-அவன் ப்ளே லிஸ்ட்டிலிருந்து அடுத்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
கடுப்பாகிப் போய் விருட்டென முன்னே வந்து.. மௌஸைப் பற்றியிருந்த அவனது வலது கையின் அருகே தெரிந்த ஸ்பீக்கரின் பட்டனைத் தட்டி அதன் சத்தத்தைக் குறைத்தாள் அவள்.
அவள் செய்கையில் திகைப்புற்றவனின் கைகள் மௌஸைக் க்ளிக்குவதை ஒரு நிமிடம் நிறுத்தி விட…. பார்வை மட்டும் அவள் புறம் திரும்பாமல் மானிட்டரையே நோக்கிக் கொண்டிருந்தது.
“பொண்ணுங்க உங்களை செலக்ட் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா இங்க?, ஏன்?, ஏன் பொண்ணுங்களை சேர்த்துக்க மாட்டீங்க?” – படபடவெனக் கேள்வி கேட்டவளை மேலிருந்துக் கீழ் வரை நோக்கியவன்..
“உனக்கு அப்படியென்ன என் மேல இன்ட்ரெஸ்ட்?, என்ன ட்ரை பண்ற நீ?” என்றான்.
மறுபடியும் அலட்டிக் கொள்ளாமல் அவன் கேட்டக் கேள்வியில் வாயடைத்துப் போனவள் “உங்க மேல எனக்கு என்ன இன்ட்ரெஸ்ட் இருந்துடப் போகுது?, என்ன கேள்வி இது?, உங்களை இப்போ தான் முதன்முறையா நான் பார்க்குறேன்! யார்ன்னே தெரியாதவங்க மேல என்ன இன்ட்ரெஸ்ட் வரும்?”- எரிச்சலுடன் பதில் கேள்வி கேட்டாள்.
“ஒஹோ….” என்றபடிச் சக்கர நாற்காலியை அப்படியும்,இப்படியும் திருப்பியவன் “அப்போ மேட்ச் நடந்த அன்னைக்கு என்னையே வைச்சக் கண் வாங்காம பார்த்துட்டிருந்த ஆள் நீ இல்ல. அப்படித் தான?” என்று வினவினான்.
அந்த நாளின் எத்தனையாவது ஷாக் இது என்பதை எண்ணிப் பார்க்கும் மனநிலை அவளுக்கு நிச்சயம் இல்லாததால்.. கையிலிருந்த ஃபைலை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு அப்படியே அதனுள் தொலைந்து போக முயன்று கொண்டிருந்தாள். வாட் ஆன் எம்பாரசிங் மொமண்ட்! நூறு சதவீதம் அக்மார்க் முத்திரைக் குத்தப்பட்டத் தரமான சைட் சம்பவத்தை இல்லையென்று சொல்லி எப்படிச் சமாளிப்பது! கம் கம் கணபதி! நீயே துணை!
“ஹலோ….” – ஃபைல் மறைத்திருந்த அவள் முகத்தின் முன்பு அவன் சொடுக்கிடுவதுத் தெரிந்தது.
கண்களை இறுக மூடிச் சமாளித்துக் கொண்டுஃபைலை முகத்திலிருந்து நீக்கியவள்… தலையைக் குனிந்த படி நின்று கொண்டாள்.
“நான் கேட்டதுக்குப் பதில்??” – விஜய்.
“நீங்க தான் என்னோட மென்டர்ன்னு எனக்கு அப்போத் தெரியாது”
“ம்ஹ்ம்??”
“எங்கப்பா மேல சத்தியமா!”
“சரி, இப்போத் தெரிஞ்சுடுச்சுல்ல?, வெளிய போ” – என்றவன் மீண்டும் வால்யூமைக் கூட்ட… “சீனியர்,சீனியர்” என்றபடி அவனைத் தடுத்தவள்.. “பரத்தை செலக்ட் பண்ண எனக்கு இஷ்டமில்ல” என்றாள்.
“ஏன்?”
“அவருக்குக் கீழ இருக்குற பொண்ணுங்க எதுவும், படிக்கிறதுக்காக அவர்க்கிட்ட சேர்ந்த மாதிரித் தெரியல! எல்லாம் அவருக்கு ரூட் விட்ற கோஷ்டிங்க!”
“நீ அந்த கோஷ்டில இல்லையா?”
“இல்ல”
“ஏன்?”
“என்ன ஏன்?, எனக்கு அவனைப் பிடிக்கல”
“சீனியரை இப்படித் தான் மரியாதை இல்லாம பேசுவியா?”
“சா…சாரி…, பட், அந்தக் கோஷ்டியோடச் சேர்ந்தா… நல்லாப் படிக்க முடியாதுன்னு தோணுச்சு, மோர் ஓவர், அவரை விட நீங்க நல்லாப் படிக்கிற ஆள்ன்னு கேள்விப் பட்டேன்”
“அப்போ என்னைப் பத்தி உனக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு?”
“இல்ல,இல்ல.. அன்னைக்கு க்ரௌண்ட்ல பார்த்த விஜய் பத்தி எனக்கு எதுவும் தெரியாது!, நான் கேள்விப்பட்டது, என் மென்டர் விஜயைப் பத்தி மட்டும் தான்!, ரெண்டு பேரும் ஒரே ஆள் தான்னு அப்போ எனக்குத் தெரியாது”
“தெரிஞ்சுருந்தாத் தேடி வந்திருக்க மாட்ட?”
“இல்ல!, நான்… நான் உங்களை சைட் அடிச்சதை நீங்கக் கவனிச்சிருப்பீங்கன்னும், நியாபகம் வைச்சிருப்பீங்கன்னும் நான் நினைக்கல! அதனால, நிச்சயம் வந்திருப்பேன்” – தயக்கத்துடன் கூறினாள் அவள்.
“சைட் அடிச்சேன்றதை இவ்ளோ போல்டா ஒத்துக்கிற ஒரே பொண்ணு நீயாத் தான் இருப்ப”
பல்லைக் கடித்தபடித் தலை குனிந்து நின்றவள்.. “திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க. எனக்கும் எம்பாரசிங்காத் தான் இருக்கு!, ஒரு ஐந்து நிமிஷம் பார்த்ததுக்கு இவ்ளோ அக்கப்போரா?. ரொம்பத் தான் பண்ணிக்கிறீங்க!, இப்போ என்ன?, என்னைச் சேர்த்துக்க மாட்டீங்க! அதான?, ஃபைன்!” என்று விட்டு விருட்டெனத் திரும்பி… அருகேயிருந்த நாற்காலியைக் கவனிக்காமல்.. அடிபட்டக் காலால் வேகமாக எட்டு வைத்து.. கடைசியில் வலி பொறுக்க முடியாமல் படாரெனக் கீழே விழுந்தாள்.
அவள் கீழே விழுந்ததும் “ஏய்… ஏய்ய்” என்றபடிப் பதறி எழுந்தவன்.. கிட்டத்தட்டக் குப்புறப்படுத்த நிலையில் ‘பே’-வெனக் கிடந்தவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு அருகே சென்றான்.
முகத்தைத் தரையில் அழுத்தியபடி அவன் பார்வையைத் தவிர்த்தவள்.. “இன்னைக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” என வாய் விட்டுப் புலம்ப..
“ஏய்ய்ய் லூசா நீ?” என்று அதட்டியவன்.. “எழுந்திரு முதல்ல” என்றான்.
“மாட்டேன்!, பொண்ணுங்களையேப் பிடிக்காதுன்னு சொல்ற உங்களை மாதிரி ஆள் முன்னாடி எனக்கு இப்படியொரு அவமானம் தேவையா?”
“பொண்ணுங்களைப் பிடிக்காதுன்னு நான் எப்போ சொன்னேன்?, எனக்குக் கீழ பொண்ணுங்களைச் சேர்த்துக்க மாட்டேன்னு தான் சொன்னேன்”
“ரெண்டுத்துக்கும் என்னப் பெரிய வித்தியாசம் இருக்கு?”
“இருக்கு. எழுந்து இந்த சேர்ல உட்கார்ந்தேனா, என்ன வித்தியாசம்ன்னு சொல்வேன்” – என்றவன் அவள் தோளைப் பற்றித் தூக்கி அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்துத் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
“கால் ரொம்ப வலிக்குதா?” – விஜய்
“ம்ம்”
“இந்த நொண்டிக்காலை வைச்சுக்கிட்டு உனக்கு எதுக்கு இந்த வீரம்?”
“பின்ன?, நீங்க எதுக்கு அப்படிச் சொன்னீங்க?”
“என்ன இல்லாததைச் சொல்லிட்டேன்?,நீ என்னை சைட் அடிச்சது உண்மை தான?”
“சீனியர்… ப்ளீஸ்….”
“ஆக்சுவலி, அன்னைக்கு நீ என்னையே பார்த்துட்டிருந்ததுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கும்ன்னு நினைச்சிட்டிருந்தேன்! பட், நீ என்னை சைட் அடிச்சிட்டு இருந்தன்றது இப்போ நீ சொல்லித் தான் தெரியும்!”
ஓஹோ.. அப்போ நாமளாத் தான் போய் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டோமா?, ரொம்ப அசிங்கப்படுத்துறானே!
“ஏன் சீனியர், உங்களுக்கு எதுவும் லவ் ஃபெய்லியரா?”
“இல்லையே! ஏன் கேக்குற?”
“அப்புறம் ஏன் உங்களுக்குப் பொண்ணுங்களைப் பிடிக்கல?”
“நான் எப்போ பிடிக்காதுன்னு சொன்னேன்”
“குழப்புறீங்களே மை லார்ட்!”
“ப்ச்!, ஆரம்பத்துல இருந்து பொண்ணுங்கக் கூட்டம் பரத் பின்னாடி தான் போகும்! எனக்குக் கீழ அமைஞ்சதெல்லாம் பசங்க மட்டும் தான்! எனக்கும் அது கம்ஃபர்ட்டபிளா இருந்தது! அதனால அப்டியே கண்டினியூ பண்றேன்! சொல்லப் போனா.. என்னை மென்டரா செலக்ட் பண்ணுன முதல் பொண்ணு நீ தான்”
“இங்க இருக்குற ஆலு போண்டாக்களுக்கு வெள்ளையா இருக்கிற பசங்க மேல தான் மதிப்பிருக்கு சீனியர்! நம்மளை மாதிரி கருப்பா இருக்கிறவங்களை கண்டுக்க மாட்டேங்குறாங்க”
-அவள் எரிச்சலுடன் கூறியதும், அவளை நிமிர்ந்து பார்த்த விஜய்க்கு சிரிப்பு வந்தது.
அவளும் கருப்புத் தான்! ஒரேடியாகக் கருப்பென்று கூறி விட முடியாது! மாசு,மருவற்ற மாநிறம்! என்ன க்ரீம் உபயோகிக்கிறாளோ! கன்னங்கள் இரண்டும் வழு,வழுப்புடன் பளிச்சிட்டது! நல்ல உருண்டையான கண்கள்! அதில் ஒரு கிறுக்குத் தனம்! கூரான மூக்கு! இடதுபக்கம் ஒற்றைக்கல் மூக்குத்தி வேறு! ஸ்டைலாகத் தானிருந்தது! நல்ல வடிவான இதழ்கள்… லிப்-பாமின் உதவியுடன் வெண்ணையாய்ப் பளபளத்தது! உச்சியிலிருந்துத் தொடங்கி சுருள்,சுருளாய் முதுகு முழுதும் படர்ந்திருந்த கூந்தல் தான் அவளது ப்ளஸ் பாயிண்ட்! அது அவளைப் பொம்மை போல் காட்டியது!
தொண்டையைச் செறுமிக் கொண்டு மானிட்டரின் மீது பார்வையைத் திருப்பியவன் “ஆலு போண்டாவா? அப்டின்னா?” என்றான்.
“நார்த் இண்டியன் பொண்ணுங்களைச் சொல்றேன்”
“அவங்க ஆலு போண்டான்னா, நீ என்ன மசால் வடையா?”
“ப்ச், சீனியர்…..”
“உன்னை எவனும் பார்க்கலன்னு வயித்தெரிச்சல்ல இருக்க போலயே!”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல!, ஒவ்வொருத்தனும் பால் டின் மாதிரி பளீர்ன்னு இருக்கானுங்க!, இவனுங்களை வைச்சு நான் டீ தான் ஆத்தனும்!”
“வாயைக் கொற. வந்ததிலிருந்து ரொம்பப் பேசுற நீ”
“என்னைக் கேட்குறது இருக்கட்டும்!, உங்களை எந்தப் பொண்ணும் பார்க்குறதில்லையேன்னு, உங்களுக்கு எதுவும் ஃபீல் இருக்கா?” – நாற்காலியைத் தள்ளிக்கொண்டு அவனருகே வந்து.. விழி விரிய வினவியவளிடம்…
“யார் சொன்னா என்னை எந்தப் பொண்ணும் பார்க்கலன்னு?” எனப் பதில் கேள்விக் கேட்டவன் தொடர்ந்து.. நமுட்டுச் சிரிப்புடன்..
“அதான் நீ இருக்கியே!, உங்களைத் தான் சைட் அடிச்சேன்னு பகிரங்கமா ஒத்துக்கிட்டு!” எனக்கூற… அவன் அளித்தத் தண்ணீர் பாட்டிலை டொக்கென வைத்து விட்டுத் தன் கையிலிருந்த ஃபைலை அவன் முன்னேயிருந்த கீ-போர்டின் மீது போட்டு..
“என்னைச் சேர்த்துக்க இஷ்டமிருந்தா.. இந்த ப்ராஜெக்ட் டீடெயில்ஸைப் படிங்க. இல்லாட்டி, அப்டியே கிழிச்சுத் தூக்கிப் போட்டுடுங்க!, என்னால அந்த அன்னப்பட்சிக்கு கீழே பாடம் படிக்க முடியாது! மென்டரே இல்லாம நான் இந்தக் காலேஜ்ல காலத்தை ஓட்டிக்கிறேன்” என்று படபடத்து விட்டு.. விந்தி,விந்தி நடந்து வெளியேறி விட்டாள்.
