அத்தியாயம் - 3

ன்று காலை கம்ப்யூட்டர் லேப்பில் வைத்து விஜய்யின் முன்புக் கீழே விழுந்து மண்ணைக் கவ்வியதிலிருந்து.. கால் வலி அதிகமாகியிருக்க.. மதிய சாப்பாட்டிற்குக் கூட கேண்டீன் செல்லாமல், நேத்ராவிடம் தனக்குப் பார்சல் வாங்கி வரச் சொல்லி விட்டு.. வகுப்பறையிலேயே அமர்ந்து விட்டாள் சரண்யா.

வகுப்பறை காலியாக இருந்ததால்.. வலித்த காலைத் தூக்கி பெஞ்சில் வைத்து அக்கடாவென அவள் அமர்ந்திருந்த சமயம்.. திறந்த வீட்டுக்குள் ஏதோ நுழைந்ததைப் போல படபடவென ‘ஷூ’ சத்தம் ஒலிக்க வேக நடையுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் பரத். பரத் முகுந்தன்!

நேராக வந்து அவள் முன்பு நின்றவன்.. “நீ தான் சரண்யாவா?” என்று வினவினான்.

அவனுக்குப் பதில் கூறாமல் அளவெடுக்கும் பார்வையுடன் அவனை நோக்கினாள் அவள். பரவாயில்லை! பக்கத்துல பார்க்கும் போது.. ஆள் நல்லாத் தான் இருக்கான்! தமிழ்ப்பையனா இருந்தாலும், ஹிந்திக்காரனுங்க கலரு! என்ன, சுத்தமா ஷேவ் பண்ணி மொழுக்,மொழுக்ன்னு கொழுக்கட்டை மாதிரி இருக்கான்!

“ஹலோ…. உன்னைத் தான் கேட்குறேன்…” – டேபிளைத் தட்டி அவள் கவனத்தைத் திருப்பினான் அவன்.

“யார் நீங்க?” – பளிச்சென அவள் கேட்டக் கேள்வியில் அவன் முகம் கன்றிப் போனது.

தி நேஷனல் யுனிவர்சிட்டியில் அவனைப் பார்த்து யாரென்று கேட்ட முதல் பெண் இவளாகத் தானிருக்க முடியும்! காலேஜ் ஹீரோவென வலம் வந்து கொண்டிருப்பவனுக்கு இது எத்தனை பெரிய அவமானம்! ப்ளடி….

கையை இறுக மடக்கி வாயில் வைத்து “க்கும்” என இருமிக் கொண்டவன்.. “நான் பரத், பரத் முகுந்தன்” என்றான்.

“சரி, அதுக்கு?” – தோரணையாக அவள் கேட்டது அவன் கோபத்தைக் கிளறி விட..

“ஏய்… எழுந்து நில்லு முதல்ல. நான் உனக்கு சீனியர். என் முன்னாடி நீ உட்கார்ந்து பேசுறதேத் தப்பு. இதுல கேள்வி வேற கேட்பியா?” –என்று உறுமினான்.

“ஹலோ… கால்ல கட்டுப் போட்டிருக்கிறதுக் கண்ணு தெரியல?, என்னால அப்படியெல்லாம் ஈசியா எழுந்து நிற்க முடியாது. நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க. நான் இப்டியே கேட்டுக்கிறேன்” – அவளும் மிடுக்குடன் பதிலளித்தாள்.

“எவ்ளோ திமிரா பேசுற?, நான் உன் மென்டர்ன்றது உனக்கு நினைவில்லையா?, நான் நினைச்சா.. உனக்கு இண்டர்னல் மார்க்ன்னு ஒன்னே இல்லாமப் பண்ணிட முடியும் தெரியுமா?” – எரிச்சலுடன் எகிறினான் அவன்.

“நீங்க என் மென்டரா?, நான் உங்களை செலக்ட் பண்ணவே இல்லையே!”

“நீ என்னடி என்னை செலக்ட் பண்றது! நீ எனக்குக் கீழத் தான் பாடம் படிக்கனும். நான் இந்த நிமிஷம் முடிவு பண்ணிட்டேன்”

“வாடி,போடின்னு பேசுனேனா மூஞ்சியப் பேத்துறுவேன்!, வெள்ளைப் பக்கி”

“வா…வாட்? ப..பக்கியா? ஏய்… என்னடி சொன்ன?” – வேகமாய் அவளருகே செல்லவிருந்தவனை “டேய்… பரத்…..” என்ற விஜய்யின் குரல் தடுத்து நிறுத்தியது.

கையில் சரண்யா கொடுத்த ஃபைலுடன் வாசலருகே நின்றிருந்தான் விஜய். க்ரே நிறப் பேண்ட்டும்,டக்-இன் செய்யப்பட்ட வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தான். முட்டி வரை ஏற்றி விடப்பட்டிருந்தக் கையுடனும், ஏற்றிச் சீவப்பட்டிருந்த சிகையுடனும், ட்ரிம் செய்யப்பட்டிருந்தத் தாடி,மீசையுடனும் இவர்களிருவரையும் எரிச்சல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும், வலித்த காலைப் பொருட்படுத்தாது அவள் எழுந்து நிற்க.. வாசலருகே நின்றபடியே.. “என்னப் பிரச்சனை ரெண்டு பேருக்கும்?” என்று கேட்டான்.

“மச்சி, யாருடா இந்த ப்ளாக் போர்டு?, ரொம்பப் பேசுறாடா” – பரத்.

“ப்ளாக் போர்டா?, நீ வெள்ளை சாக்பீஸாட்டம் இருந்துக்கிட்டு, என்னை ப்ளாக் போர்டுன்றியாடா?!”

“யாரைடி டா-ன்ற?,” – பரத் கையை ஓங்கிக் கொண்டு அவளருகே செல்ல… “ஏய்.. ச்சி, சண்டையை நிறுத்துங்க!” என்ற விஜய் தொடர்ந்து சரண்யாவிடம், “ஏய்ய்.. என்ன?, அவன் சீனியர்ன்ற மரியாதை இல்லாம வாடா,போடான்ற?, முதல்ல டெஸ்க்கை விட்டு இறங்கி வா நீ” என்றான்.

பல்லைக் கடித்துக் கொண்டு அவன் சொன்னதைச் செய்தவள் பரத்தின் அருகே வந்து நின்றாள். விஜய் இன்னமும் பகல் வெளிச்சம் முகத்தில் பட வாசலருகே தான் நின்றிருந்தான். மிதமான ஈரப்பதத்தைத் தாங்கியபடி லேசாக வீசிக் கொண்டிருந்தக் காற்று.. அவன் முன்னுச்சி முடியைக் களைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

முறுக்கிக் கொண்டு நின்றவளை பரத் முறைத்த வண்ணமிருக்க…

“அவன் கிட்ட சாரி கேளு…” – என்றான் விஜய்.

வெடுக்கென நிமிர்ந்தவள் “அவர் தான் ஃபர்ஸ்ட் என்னை ‘டி’-ன்னு சொன்னார். அவரை சாரி சொல்ல சொல்லுங்க முதல்ல” எனக் கூற..

“பரத், நீ முதல்ல சாரி கேளு அவக் கிட்ட” என்றான் விஜய்.

“வா…வாட்??. நான்? நான் இந்த சப்போட்டாப் பழத்துக்கிட்ட சாரி கேட்கனுமா?, இன்னும் ப்ராஜக்ட் டீடெய்ல்ஸ் சப்மிட் பண்ணாம இருக்காளே!, என்ன பிரச்சனைன்னு அஸ் அ மென்டரா கேட்க வந்த என் கிட்ட மரியாதையில்லாம பிஹேவ் பண்ணிட்டு, என்னையே சாரி கேட்க சொல்றா?, முட்டக்கண்ணி!”

“பார்த்தீங்களா?, பார்த்தீங்களா?, வந்ததுல இருந்து இப்டித் தான் அரைவேக்காடாட்டம் பேசுறான் மைதாமாவு!”

“நீ என் கிட்ட அடி வாங்காம போக மாட்டடி” – பரத்

“டி சொல்லாத! எனக்குக் கெட்டக் கோவம் வரும்” – சரண்யா

“சரண்யா, வார்த்தைக்கு வார்த்தைக்கு வம்பு பண்றதை நிறுத்து முதல்ல” – விஜய் அதட்டியதும் அமைதியானவள் தலையைக் குனிந்து கொண்டு பல்லைக்கடித்தபடி நின்றாள்.

“பொண்ணுங்களை டி போட்டு பேசியே அவனுக்குப் பழக்கமாயிடுச்சு! என்னை ‘டா’ன்னு சொல்றான் இல்லையா?, அந்த மாதிரி உன்னை டி-ன்னு சொல்லிட்டான்! மத்தபடி தப்பான இண்டென்ஷன் எதுவுமில்ல அவனுக்கு! ஓகே?”

“ஏன், போற,வர்ற பொண்ணுங்கள்லாம் இவன் பொண்டாட்டியா?, வாடி,போடின்னு பேசுறதுக்கு” – மெல்ல முணுமுணுத்தவளின் குரல் நல்ல வேளையாக பரத்தை எட்டவில்லை.

“மச்சான், எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்ல. நீ எதுக்காக இவ்ளோ பொறுமையா பேசிட்டிருக்க இவக்கிட்ட?”

“அதுல உங்களுக்கு என்ன அவ்ளோ கடுப்பு?” - சரண்யா

“சரண்யா, நாங்க இந்த ரூமை விட்டு வெளியே போற வரைக்கும், நீ வாயே திறக்கக் கூடாது.” – விஜய்.

“சீனியர்.. இவர்…” எனத் தொடங்கியவளிடம் “சுப்” என்று விட்டு “கையைக் கட்டி வாய்ல விரலை வைச்சு அமைதியா நிக்கனும்” என டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்ட…. வேறு வழியின்றி அவளும் ஒரு கையைக் கட்டிக் கொண்டு மறு கையின் ஆள் காட்டி விரலை உதட்டில் வைத்து இருவரையும் வேடிக்கைப் பார்த்தாள்.

அவன் சொல்வதனைத்தையும் அவள் தட்டாமல் செய்வதை ஆச்சரியத்துடன் பார்த்த பரத் ‘இவன் பொதுவா பொண்ணுங்கக் கூட அவ்ளோ க்ளோஸ் கிடையாதே!, இவக் கிட்ட ரொம்ப உரிமையாப் பழகுறான்! ஹ்ம்ம்ம்’ என்றபடி நண்பனை சந்தேகமாய் நோக்கினான்.

“என்னடா அப்டிப் பார்க்குற?, கிளம்பு போகலாம்.” - விஜய்

“இல்ல, நான் அவ ப்ராஜக்ட் பத்திக் கேட்கத் தான் வந்தேன்” – என்றவனிடம் “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ வா” எனக்கூறி அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“டேய் விஜய்..”

“சொல்லு..”

“யாருடா அந்தப் பொண்ணு?, உனக்கு அவளைத் தெரியுமா?”

“யாரைச் சொல்ற?”

“அந்தக் கண்ணழகி சரண்யாவைத் தான்!”

“ஓ!, அவ கண்ணு அழகா இருக்குன்ன்னு நோட் பண்ணிட்ட போல”

“ப்ச், ச்சி! எனக்குக் கருப்பா இருக்கிறப் பொண்ணுங்களைப் பிடிக்காதுடா விஜய்”

“ஹாஹாஹா, ஒன்னும் பிரச்சனையில்ல! அவளுக்கும் வெள்ளையா இருக்குறப் பசங்களைக் கண்டாலே ஆகாது”

“டேய், உண்மையைச் சொல்லு. அந்தப் பொண்ணு மேல உனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு தான?, அதனால தான அவ்ளோ பொறுமையா பேசிட்டிருந்த?”

“ஏய், கால்ல அவ்ளோ பெரியக் கட்டுப் போட்டுக்கிட்டுப் பாவமா நிற்குற பொண்ணுக்கிட்ட பொறுமையா தானடா பேச முடியும்?, இதுல என்ன சாஃப்ட் கார்னர் இருக்கு”

“இதென்ன ஃபைல் கைல?, அவ ப்ராஜக்ட் ஃபைலா?, பை மிஸ்டேக் எனக்குக் கீழ ஒரு பொண்ணு பேரு வந்திருக்கு, உன் கிட்ட மாத்தி விட்றேன், நீயே அவளுக்கு மென்டரா இருன்னு சொன்னவன், இப்போ என்னடா கைல ஃபைலோட சுத்திட்டிருக்க?”

“ஆமாம் டா! இந்தப் பொண்ணை எனக்குக் கீழ சேர்துக்கலாம்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!, உனக்குத் தான் அவளைப் பிடிக்கலயே! பின்ன எதுக்குடா இப்போ கேள்வி கேக்குற?” - எனப் பொறிந்தவன் நண்பனை முறைத்து விட்டு லேப்-க்குள் நுழைந்து விட்டான்.

சிலுசிலுக்காற்றோடு குளிரைப் பரப்பிக் கொண்டிருந்த அந்த மாலை நேரம், நேத்ராவின் தோளைப் பற்றிக் கொண்டு ஹாஸ்டலை நோக்கி நடந்து கொண்டிருந்த சரண்யா, அந்நாளில் மூன்றாவது முறையாக விஜய்யைச் சந்தித்தாள்.

காற்றிலிருந்தக் குளிரை ஆத்மார்த்தமாக அனுபவிப்பவன் போன்றுக் கண் மூடி முன் நெற்றியில் புரண்ட முடியை வலது கையால் பின்னே தள்ளியவன், லைப்ரரி வாசலிலிருந்து இறங்கி மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அதே க்ரே நிற பேண்ட், வெள்ளை சட்டை! கல்லூரி நேரம் முடிந்து விட்டதாலோ என்னவோ, டக்-இன் செய்யப்பட்டிருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டிருந்தான். முட்டி வரை மடக்கி விடப்பட்டிருந்தக் கை! வலது கை மோதிர விரலில், வட்டமாய் ஒரு மோதிரம்!

தூரத்திலிருந்தக் குட்டிச்சுவர் மீதமர்ந்திருந்தத் தன் நண்பர் பட்டாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தவன், ஏதோ உள்ளுணர்வில் திரும்பி சரண்யா நடந்து வந்து கொண்டிருந்தத் திசையை நோக்கினான்.

கொஞ்சம் கூட வெட்க,மான,ரோஷமின்றிக் கண்களை அகல விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு உதட்டில் புன்னகை பூக்க, ஒரு நொடி தலையைக் குனிந்து, சரிந்து கொண்டிருந்த சட்டையின் கையை, மேலேற்றி விட்டுக் கொண்டு அவளிடம் வந்தான்.

பரத் இருக்கிறானா என்றுத் தேடியபடிக் குட்டிச் சுவரையே பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா இவனது வருகையை உணரவில்லை. திடீரென சரண்யா நடப்பதை நிறுத்தவும், என்னவென்று நோக்கியவள், அவள் பார்வையைத் தொடர்ந்துத் தானும் நோக்கிப் பின் பதறி…. “கு..கு..குட் ஈவ்னிங் சீனியர்” என்று சல்யூட் வைத்தாள்.

பதிலுக்கு “ம்ம்” என்றவன் நேராகச் சரண்யாவிடம் “உன் கிட்டப் பேசனும்” என்றான்.

‘இவன் பொண்ணுங்கக்கிட்டப் பேசுவானா??’ – என்பது போல் தன் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு நேத்ரா நோக்க… குட்டிச்சுவரில் அமர்ந்திருந்த அவனது நண்பர் கூட்டமோ, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வைப் பிளந்த வாயுடன் நோக்கினர்.

“டேய் மாமா, என்னடா நடக்குது?, யார்றா அவ?” – அசோக்.

“நம்மாளு பொதுவா பொண்ணுங்கக் கூட கடலை போடுற ஆசாமி கிடையாதே!, யார் இவ?” - திரு

“அப்டி ஒன்னும் நல்ல ஃபிகராத் தெரியலயேடா” - ரமேஷ்

“ப்ச், ஏய்.. பக்கத்துல போய்ப் பாருங்க! சுருட்டைமுடி,முட்டக்கண்ணுன்னு ஆளு டக்கரா இருக்கா” – அசோக்.

“பரத் எங்கடா போனான்?” - திரு

-நண்பர்கள் பட்டாளம் காணாததைக் கண்டது போல் பார்வையை இவர்கள் புறமே பதித்திருக்க.. மைதானத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த மாணவ,மாணவிகள் விஜய் ஒரு பெண்ணுடன் உரையாடுவதை ஆச்சரியப் பாவனையுடன் நோக்கியபடிக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவனைத் தவிர சுற்றுப்புறம் எதையும் நோக்காத சரண்யா இதை அறியாவிட்டாலும், விஜய் அனைவரது பார்வையையும் உணர்ந்தேயிருந்தான்.

“எ..என்ன பேசனும்?” – தயங்கியபடி வெளிவந்ததுச் சரண்யாவின் குரல்.

கையிலிருந்த அவளது ப்ராஜக்ட் டாகுமெண்ட்டை அவளிடம் நீட்டியவன் “இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண வேண்டாமா?, நான் ரிவ்யூ பண்ணா தான உன்னால ப்ரொசீட் பண்ண முடியும்?” என்று வினவினான்.

மலர்ந்த முகத்துடன் அவனை நோக்கியவள் “அப்டின்னா என்னை அக்சப்ட் பண்ணிக்கிறீங்களா?” என்றாள்.

“ம்ம்”

“தே..தேங்க்ஸ்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” – குரலில் குதூகலத்துடன் துள்ளிக் குதிக்காதக் குறையாக மகிழ்ச்சியடைந்தவளைக் கண்டவனின் பார்வைத் தொடர்ந்து நேத்ராவை நோக்க.. அவளோ இஞ்சி தின்ற குரங்கைப் போல் முகத்தை வைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் “நாளைக்குக் காலைல 8 மணிக்கு லேப்-க்கு வந்துடு. ப்ரோக்ராமை ரன் பண்ணிப் பார்த்துடலாம்” என்றான்.

அவள் ‘சரியெனத் தலையாட்டுகையில் வந்து சேர்ந்தான் பரத் முகுந்தன்.

பரத்தைக் கண்டதும் ஈஈஈஈஈ-யென்றாகி விட்ட நேத்ரா “குட் ஈவ்னிங் சீனியர்” என்று வேகமாய் ஒரு சல்யூட்டை வைத்தாள்.

பதிலுக்குக் குட் ஈவ்னிங் எனக் கூறிப் புன்னகைத்து அவள் மனதைக் குளிர்வித்தவன் சரண்யாவிடம் “ஓய், ஸ்பிரிங்கி!, சீனியரைப் பார்தா விஷ் பண்ணனும்ன்னு தெரியாதா?” என்று வினவினான்.

தொங்க விட்டிருந்தக் கைகளை வேக மூச்சுடன் உயர்த்தியவள், அதை மார்பின் குறுக்காக இறுகக் கட்டிக் கொண்டு, வாயையும் அழுந்த மூடி வைத்துக் கொண்டாள்.

“திமிரைப் பார்த்தியா மச்சி?” என்று வெகுண்டவன் ‘உனக்கு இருக்குடி இன்னைக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு குட்டிச் சுவரை நோக்கி “டேய், பன்னாடைங்களா!, என்னடா வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கீங்க?, ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கு கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்க வேண்டியிருக்கு இறங்கி வாங்க” எனக் குரல் கொடுத்தான்.

இனி நடப்பது எதற்கும் நான் பொறுப்பில்லை என்பது போல் ஒரு காலை மடக்கி மரத்தில் சாய்ந்து நின்று, கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான் விஜய்.

கடகடவென ஓடி வந்த நண்பர்கள் ஐவரும் ‘நம்ம ஹீரோஸ் ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல பக்கத்துல நிற்க வைச்சிருக்கிறாளே!எவ இவ?’ என்பது போன்று சுவாரசியமான பார்வையை அவள் மீது செலுத்த… எரிச்சலுடன் தரையைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் சரண்யா.

“ஓய் சோடாபுட்டி!, போய்… அந்தாண்ட உக்காரு” – என்ற அசோக் நேத்ராவை அப்புறப்படுத்தி விட.. இப்போது சரண்யா மட்டுமே அத்தனை பேருக்கும் நடுவில்!

உள்ளே லேசாகப் பதற.. கடைக்கண்ணால் விஜய்யை நோக்கினாள். படுபாவி! கிரேக்க சிலை, கிரேக்கசிலைன்னு பேருக்குச் சொன்னா.. நிஜமாவே சிலை மாதிரி அமைதியா நிக்குறானே! என்று புலம்ப… ‘காலைல என் கிட்ட எவ்ளோ வாயடிச்ச, இப்போ சமாளி’ என்பது போல் அவன் பதில் பார்வை பார்த்து விட்டு நண்பர்களின் பக்கம் திரும்பிக் கொண்டான்.

“பேர் என்ன?” – அசோக்.

“சரண்யாவாம் மச்சி!” –பரத்

“எந்த டிபார்ட்மெண்ட்?”

“நம்ம டிபார்ட்மெண்ட் தான்! கம்ப்யூட்டர் சைன்ஸ்”-பரத்

“ப்ச், டேய் காட்பரீஸ்!! நீ கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருக்கியா?, ஏய்.. ஸ்பிரிங்கி.. நீ பதில் சொல்லு” – அசோக் அதட்டியதும் சட்டென நிமிர்ந்து நோக்கிய சரண்யா சரியென மெல்லத் தலையாட்டினாள்.

“தமிழ்நாட்ல எங்கயிருந்து வர்ற?”

“கோபிசெட்டிப்பாளையம்”. – சரண்யா.

“அப்ப கோபிமஞ்சூரியன் நல்லா சமைப்பியா?” – திரு.

“எங்க, கொங்குத் தமிழ்ல ரெண்டு வாக்கியம் பேசிக் காட்டுப் பார்ப்போம்”

“எ…எனக்கு அதெல்லாம் வராது. நான் படிச்சதெல்லாம் சென்னைல” – சரண்யா.

“அப்ப, ஜானி,ஜானி இன்னா நைனா, ஈட்டிங் சுகர், இல்ல நைனான்னு பாடிக்காட்டு”

பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவள் அதுவும் முடியாது என்பது போல் தலையாட்ட….

“ஏய்ய்.. அப்ப உனக்கு என்னா தான் வரும்?” – பொறுமையற்றக் குரலில் வினவினான் ரமேஷ்.

“இரு,இரு மச்சி! ஏன் டென்ஷனாகுற?, இன்னிக்கு நாம சொல்றதைச் செய்யாம.. இவ இந்த இடத்தை விட்டு நகர முடியாது” – பரத்.

“மாப்ள, இவன் ஏன் டா இந்தப் பொண்ணு மேல இவ்ளோ கடுப்புல இருக்கான்?” – ரமேஷிடம் முணுமுணுத்தான் திரு.

“ஏய்.. 12த் மேத்ஸ்ல எவ்ளோ நீ?” – பரத்

“செண்டம்”

“ஓ! படிப்ஸா?”-அசோக்

“அப்போ 100 டூ 1 ரிவர்ஸ்ல சொல்லு” – ரமேஷ்.

ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்தவள் பின் “100.99,98,97…..” என வரிசையாக சொல்லத் தொடங்க.. “ஏய்,ச்சி,ச்சி நிறுத்து சின்னப்புள்ளத்தனமா 1,2,3 சொல்லச் சொல்லிட்டிருக்கான்” என்று பொறிந்த பரத் அசோக்கைக் கைக் காட்டி “நீ இவன் கிட்ட ல்தகா சைஆ இருக்கான்னு ப்ரண்ட்ஸ் படத்துல வர்ற ஆக்டர் விஜய் ஸ்டைல்ல கேளு” என்றான்.

நிமிர்ந்து அசோக்கின் முகத்தை நோக்கியவள் பரத்திடம் ‘முடியாது’ என்றாள்.

“ஏன்?” – திரு

“இவர் பார்க்க என் அப்பா சாயல்ல இருக்குறார். அதனால இவர்க்கிட்டலாம் அப்டி கேட்க முடியாது” –சரண்யா

“அப்போ என் கிட்டக் கேளு” – பரத்.

“இல்ல, முடியாது”

“ஏய்.. என்ன திமிரா?” – பொங்கத் தொடங்கிய பரத்தை இடைமறித்தவள்.. “வேணும்ன்னா அவர் கிட்ட கேட்குறேன், அவர் தான் பார்க்க என் அத்தை மகன் மாதிரி இருக்கார்” – என்றபடி, மரத்தில் சாய்ந்து கொண்டு படு கேஸ்வலாக நின்றிருந்த விஜய்யைக் கைக் காட்ட… அனைவரது பார்வையும் வியப்புடன் அவளை நோக்கி விட்டுப் பின் விஜய்யை நோக்கியது.

இருபுருவங்களையும் உச்சி மேட்டுக்கேக் கொண்டு சென்று அவன்.. ‘தெரியும்டி எனக்கு!, நீ நிச்சயம் என்னை வம்பிழுப்பன்னு’ என்பது போல் தலையைச் சரித்துக் கண்ணைச் சுருக்கி அவளை நோக்கினான் விஜய்.

இருவரையும் மாறி,மாறிப் பார்த்த பரத் “இவளை நாம ராக் பண்றோமா, இல்ல இவ நம்மள ராக் பண்றாளா” என்று யோசிக்க.. ரமேஷ் அதற்குள் “உனக்கு அவ்ளோ ஆசையாயிருந்தா, நாங்க ஏன் மா வேணாம்ன்னு சொல்லப் போறோம்?, போய்க் கேளு ஆத்தா” என்றான்.

மெல்ல நடந்து மரத்தினருகே சென்று அவன் முன்பு நின்றவள்.. “கேட்கட்டுமா?” என்றாள்.

பதில் கூறாமல் அவளையே பார்த்தவனிடம் தொண்டையைச் செறுமிக் கொண்டு.. கைகளைப் பிசைந்தபடி, ஒரு காலைப் பின்னே வைத்து.. நடிகர் விஜய்யைப் போல் நெளிந்தபடியே… “ல்தகா சைஆ இருக்கா??” என்று வினவியதும்… உதட்டில் நெளிந்த சிரிப்புடன் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள்.. மொத்தமாய் விரிந்து….. தன் அழகானப் பல் வரிசையைக் காட்டி.. அவனது ட்ரேட் மார்க் புன்னகையைத் தோற்றுவித்தது.

சுற்றியிருந்த நண்பர் கூட்டம் பலமாகச் சிரிக்க…. இடைவரைக் குனிந்து “நன்றி,நன்றி!” என்றவள்.. தன்னை முறைத்தபடியே நின்றிருந்த பரத்திடம் “முடிஞ்சுடுச்சா?, நான் போகலாமா?” என்று வினவினாள்.

“அவ்ளோ சீக்கிரமெல்லாம் உன்னை விட முடியாது. நில்லு” என்றவன் “டேய்… ராக் பண்ணச் சொன்னா… அவ பர்ஃபாமன்ஸூக்குக் கைத் தட்டிட்டு நிற்கிறீங்க?, இப்படியிருந்தீங்கன்னா, இதுங்களுக்கெல்லாம் சீனியர்ஸ் மேல எப்படிடா பயம் வரும்?” என்று அதட்ட.. அசோக் அவனருகே நெருங்கி “டேய் மச்சி, என்ன தான் டா செய்யனும்ன்னு நினைக்கிற, அதையும் நீயே சொல்லிடு” என்றான்.

மேலிருந்துக் கீழ் வரை அவளை எரிச்சலுடன் நோக்கியவன்… “ஏய்…. அங்கக் கிடக்குற சிகப்புப் பூவை எடுத்துட்டு வா” என்று அவளை ஏவினான்.

அவள் எடுத்துக் கொண்டு வந்ததும்… பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு அவளை நோக்கியவன்… “இப்படியே நீல்-டவுன் பண்ணி, இந்தப் பூவை என் முன்னாடி நீட்டி, ஐ லவ் யூ மாமான்னு ரொமாண்ட்டிக்கா சொல்லு பார்ப்போம்” என்றான்.

அதுவரை அசட்டையாக அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், அவன் முடித்ததும் வெகுண்டெழுந்து பூவைத் தூர எறிந்து “அப்டில்லாம் சொல்ல முடியாது” என்றாள்.

“ஏய், நான் சொல்றதை நீ செய்யனும். அதுக்குப் பேரு தான் ராகிங்”

“செய்ய முடியாது. என்ன செய்வீங்க?” – கையை உயர்த்தி அதட்டியவளின் தோரணையைக் கண்டு வியந்து “ரொம்பத் தைரியம் உனக்கு!, சுத்தி பத்துப் பசங்க நிற்கிறோம்ன்ற பயமில்லாம, எங்களையே மிரட்டுற?” என்றான் பரத்.

“எனக்கென்ன பயம்?, நான் நிற்கிறது காலேஜ் கேம்பஸ்!, நான் நினைச்சா…இப்ப்பவே போய் உன்னைப் பத்திக் கம்ப்ளைண்ட் பண்ண முடியும்!”

“ஹாஹாஹாஹா.. மச்சி, இவ நம்மளப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ணிடுவாளாம்டா!, அய்யோ! எனக்குப் பயமா இருக்கே!, ஏய்… கம்ப்ளைண்ட் பண்ணப் போக.. உனக்குக் கால் இருந்தாத் தானே?, நல்லா இருக்கிற இன்னொரு காலையும் உடைச்சு மூலைல உட்கார வைச்சுடுவேன். நியாபகம் வைச்சுக்கோ!,”

“மச்சான், சும்மா ஃபன்-ன்னு நினைச்சா, இவன் என்னடா வயலண்ட்டா போயிட்டிருக்கான்?” – அசோக்கின் காதைக் கடித்தான் ரமேஷ்.

அவன் பதிலில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்ட சரண்யா.. “உடைப்ப டா உடைப்ப! என் சுருட்டை முடியை உன் இடுப்புல லேசா இறுக்கிக் கட்டுனாலே, ரெண்டா உடைஞ்சுடுவ நீ! நீ… என் காலை உடைப்பியா?, பார்க்க.. ஷேவ் பண்ணின வெள்ளைக் குரங்கு மாதிரி இருக்கான்! இவன் மூஞ்சியப் பார்த்து… நான் ரொமாண்ட்டிக்கா ஐ லவ் யூ சொல்லனுமாம்! போடா மைதா மாவு!” என்று கத்த…

அவளிடம் இப்படியொரு காட்டுக் கத்தலை எதிர்பார்க்காதக் கூட்டம், கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல்… ஆளாளுக்கு வயிற்றைப் பிடித்துக் கொண்டுக் கடகடவென சிரித்தனர்.

“ஏய்.. என்னாம்மா நீ?, காலேஜ் ஹீரோன்னு கெத்தா சுத்திட்டிருக்கிறப் பையனை இப்படிச் சொல்லிட்ட?, மச்சி…. நீ வெள்ளைக் குரங்காம்டா” எனச் சொல்லிக் காட்டி… ரமேஷ் விழுந்து விழுந்து சிரிக்க.. முகம் சிறுத்துப் போய் கடுப்புடன் நின்ற பரத்தின் தோளைத் தட்டி “டேய்… அமைதியா இருங்கடா” என்று அதட்டிய விஜய்… சரண்யாவிடம் திரும்பினான்.

“ஏய்ய், சீனியரை மரியாதையில்லாம பேசாதன்னு காலைல இருந்து திட்டு வாங்கியும் புத்தி வரலையா உனக்கு?” என்றுத் திட்டி விட்டு… அருகே நின்றிருந்த துஷரிடம் “டேய் நேபாலி, போய் நம்ம ஐட்டத்தை எடுத்துட்டு வா டா” என்றான்.

“ஐம் நாட் நேபாலி! ஐம் ஆன் அஸ்ஸாமி” – முறுக்கிக் கொண்டு பதில் கூறிய துஷரிடம் “ரொம்ப முக்கியம்” என்று எரிந்து விழுந்தவன் “போய் எடுத்துட்டு வாடா” என்று விரட்டினான்.

வேகமாக ஓடிச் சென்றவன் திரும்பி வந்த போது அவன் கையில் “ஐம் சாரி சீனியர்” என்கிற போர்ட் ஒன்றிருந்தது.

அதை வாங்கி சரண்யாவின் கழுத்தில் மாட்டிய விஜய்.. “இப்டியே ஹாஸ்டல் வரைக்கும் நடந்து போ!, அடுத்த பத்து நாளைக்கு க்ளாஸ் ரூமைத் தவிர எல்லா இடத்துலயும் உன்னை நான் இந்த போர்டோடத் தான் பார்க்கனும். புரிஞ்சதா?” என்றான்.

தன் முட்டைக் கண்ணை விரித்து பார்வையாலே பரத்தை எரித்த சரண்யா ஏதும் கூறாமல் அமைதியாக நிற்க.. விசிலடித்து “ஓய்ய்ய் சோடாபுட்டி!” என நேத்ராவை அழைத்த விஜய் “உன் ஃப்ரெண்டைக் கூட்டிட்டுக் கிளம்பு” என்று விட்டு நண்பர்களுடன் முன்னே நடந்தான்.