அத்தியாயம் - 4
அதிகாலை ஏழு மணி (?!). இருளை விரட்டியடித்தபடி லேசாக வெளுக்கத் துவங்கியிருந்த வானத்தில் சூரியன் வெளி வரலாமா,வேண்டாமா என யோசித்த வண்ணமிருக்க… இப்போதைக்கு டீச்சர் வரப்போவதில்லை என்கிற எண்ணத்தில் குதூகலிக்கும் மாணவர்களாய் பனித்துளிகள் ஒவ்வொன்றும் அங்கிருந்த மரம்,செடி,கொடிகளின் மீது ஊர்ந்து,வழிந்து விளையாடிக் கொண்டிருந்தது.
நுரை ததும்பிய ‘பாத்-டப்’-ஐப் போல்.. வெண்பனிப் படலம் அம்மலைத்தொடர் முழுதிலும் நிரம்பி வழிந்து.. அதிகப்படிக் குளிரைப் பரப்பியிருக்க.. தன் லெதர் ஜாக்கெட்டுக்குள் கை நுழைத்துக் கொண்டு.. குளிர் பொறுக்காது மூக்கில் வழிந்த நீரை உறிஞ்சியபடி காம்பஸூக்குள் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் சரண்யா.
காதுக்குள் புகுந்து செல்லும் காற்று கண்ணையும் கலங்கச் செய்யத் தன் சுருள் முடியைக் கொத்தாக முன்னே இழுத்துப் போட்டுக் காதை மறைத்தாள்.
கல்லூரிக் கட்டிடங்களைக் கடந்து.. அம்மலைத் தொடர் முழுமையாகக் கண்ணில் படும் இடத்தில் வந்து நின்றவள்… பனிப்படலத்தைக் கண்டுக் கண்களை விரித்து “வாவ்வ்வ்வ்” என்றாள்.
கைகளைப் பரபரவென்றுத் தேய்த்தபடி சுற்றும்முற்றும் நோக்கியவள் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த அசோக்கை நோக்கிச் சிரித்து “குட்மார்னிங் சீனியர்” என்று சல்யூட் வைத்தாள்.
மேலும்,கீழுமாய் அவளை ஒரு மாதிரி நோக்கியவன் “நேத்து உன்னை நாங்கப் படுத்துன பாட்டுக்குப் பயம் வந்து நீ காய்ச்சல்ல படுத்திருப்பன்னு பார்த்தா.. காலங்கார்த்தால, காத்துல கோலம் போட்டுட்டு நிற்குற?” – வாயில் புகை வெளி வர மூச்சு வாங்கியபடிப் பேசினான் அசோக்.
“ப்ச், உங்களுக்கு அவ்ளோ சீனெல்லாம் இல்ல. நேத்து நான் கிழிச்ச,கிழில உங்க ஃப்ரண்ட் அந்த சீனிச்சேவுக்குக் காய்ச்சல் வந்திருக்கான்னு போய்ப் பாருங்க முதல்ல!, நான் இவங்களைப் பார்த்துப் பயப்படனுமாம்ல! ஹ!” – தோளைக் குலுக்கியவளைக் கண்டு அசோக்கிற்குத் தான் பயம் வந்தது.
“பார்க்க டின் பியர் சைஸ்ல இருந்துக்கிட்டு என்னா போடு போட்ற நீயி!, ஆத்தா… என்னை ஆளை விடு! உன் பிரச்சனை அவனுங்களோடயே(விஜய் & பரத்) நிக்கட்டும்!” என்றவன் நகரப் பார்க்க…
“இருங்க,இருங்க! உங்க ஃப்ரண்ட் விஜய் இப்போ எங்கயிருப்பார்ன்ன்னு சொல்லிட்டுப் போங்க” என்று அவள் அவனைத் தடுத்த நிறுத்த.. அவன் தனது வாட்சைத் திருப்பிப் பார்த்து “இந்நேரம் அவன் போதி மரத்தடில ஜெபம் பண்ணிட்டு இருப்பானேம்மா..”எனக் கூறினான்.
“ஜெபமா??, ஓஓஓ… அவர் கிறிஸ்டியனா?” – முகம் அதிகப்படியாய் மலர.. வியந்த குரலில் வினவியவளை வினோதமாய் நோக்கி “அதுல உனக்கு என்ன அவ்ளோ சந்தோசம்?” என்று வினவினான் அவன்.
“ப்ச், சொல்லுங்கண்ணா ப்ளீஸ்..”
“அண்ணாவாஆஆஆ?, அதுசரி!, அவன் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமிய குலதெய்வமா வச்சிருக்கிற ப்யூர் ஹிந்தும்மா” – என்றான்.
“ப்ச்”-ஏமாற்றத்துடன் தலை குனிந்தவள் “அது என்ன போதி மரம்?, அது எங்க இருக்கு?” என்று விசாரித்து விட்டு விஜய் இருந்த இடத்தைத் தேடிச் சென்றாள்.
அந்த உச்சி மேட்டிலிருந்த ஒற்றை மரத்தின் அருகேக் காதினுள் வாக்மேனை செருகிக் கொண்டு.. கைகளிரெண்டையும் பாக்கெட்டிலிட்டபடி.. எதிரே தெரிந்த மலைத்தொடரைக் வெறித்துக் கொண்டிருந்தான் விஜய். முகத்தில் ஒரு தீவிரம்! அதை மீறிய ஒரு புன்னகை! ‘எப்பவும் சிரிச்ச மாதிரியே இருக்குற முகம் போல!’
“டொக்,டொக்” – என யாரோ அவனதுத் தோளைத் தட்டத் திரும்பியவன்.. அருகே நின்றிருந்தச் சரண்யாவைப் புருவம் சுருக்கியபடி நோக்கினான்.
“குட்மார்னிங் சீனியர்” – 32-பற்களையும் காட்டி அநியாயத்திற்கு வழிந்து வைத்தாள்.
“நீ இங்க என்ன பண்ணுற?”
“சு…சும்மா.. உங்களைப் பார்க்கத் தான் வந்தேன்! ப்..ப்ராஜக்ட் டிஸ்கஷன்??”
கையைத் திருப்பி மணியைப் பார்த்தவன் “மணி இன்னும் 8 ஆகலயே!, அதுவுமில்லாம, நான் உன்னை லேப்-க்குத் தான வரச் சொன்னேன்?” என்று வினவினான்.
“அ..அது… உ..உங்களைப் பார்க்குற ஆர்வத்துல அலாரம் வைக்காமலே 5 மணிக்கெல்லாம் எழுந்துட்டேன்! ஹாஸ்டல்ல போர் அடிச்சதா.. அதான், கொஞ்சம் வெளிச்சம் வந்ததும், வெளியே வந்துட்டேன். ஹிஹி”
“நீ ஓப்பனா வழியுறன்றது உனக்குத் தெரியுதா சரண்யா?”
முகம் கன்றத் தலை குனிந்தவள் “உங்களைப் பார்த்ததும் தன்னாலே வருது, நான் என்ன செய்யட்டும்?” என்று சிணுங்கிக் கொள்ள.. சிரிப்பு வந்தது அவனுக்கு. ஆனாலும் அடக்கி.. “கழுத்துல போர்டைக் காணோம்?, சீனியர் மேலக் கொஞ்சம் கூடப் பயமில்ல! மரியாதையுமில்ல!” என்று அதட்டல் குரலில் வினவினான்.
அவன் கேள்வியில் முகத்தைச் சுருக்கி “ஹாஸ்டல்ல இருக்கு. நான் வேணா போய் மாட்டிட்டு வரட்டுமா?” என்று பாவமாய் வினவினாள்.
“பரவாயில்ல. நெக்ஸ்ட் டைம் நான் உன்னைப் பார்க்குறப்போ போர்டு இருக்கனும். புரிஞ்சதா?”
“ம்ம்” – எரிச்சலுடன் அவள்.
“சொல்லு. எதுக்கு என்னைப் பார்க்க வந்த?”
என்னவென்று சொல்லுவாள்! ஒரு ஆர்வத்தில் வந்து விட்டேனென்றா??, ஏதாவது சொல்லி சமாளி சரண்யா என்று மனசாட்சியைத் தட்டிக் கொடுத்தவள்…. அவனது கூரிய பார்வையிலிருந்துத் தப்பிக்கும் பொருட்டு.. எதிரே தெரிந்த மலைத் தொடரை நோக்கி “பயங்கரக் குளிர் இல்ல?” என்று வினவினாள்.
அவன் பதிலேதும் கூறாமல் அவள் திணறுவதை வேடிக்கை பார்த்தான்.
அவனிடமிருந்துப் பதில் வராததைக் கண்டு ‘போச்சு!, அடுத்து வாயைத் தொறந்தா… கண்டிப்பா அசிங்கப்படுத்துவானே!’ என்று நடுங்கி.. அவனைப் பார்த்துச் சிரித்து..
“இந்தக் குளிருக்கு ஒரு பியர் அடிச்சா செம்மையா இருக்கும்ல?” எனக் கண்ணடித்துக் கேனத்தனமாய்க் கேட்டு வைத்தாள்.
அவள் பாவனையில் லேசாய் புரண்ட மனதை அடக்கிப் புருவத்தைத் தூக்கி உதட்டை வளைத்தவன் “ஓ!, உனக்கு அந்தப் பழக்கம் வேற இருக்கா?” என்று வினவினான்.
தோளைக் குலுக்கியபடி “ஒரு தடவை ட்ரை பண்ணியிருக்கேன்!, ஒரே ஒரு தடவை தான்! என்று அழுத்திக் கூறி விட்டு “ஏன்?, நீங்க குடிக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.
“நீ இதைத் தெரிஞ்சுக்கத் தான் என்னைத் தேடி வந்தியா?”
“ப்ச், அடுத்த 3 வருஷம் உங்களுக்குக் கீழ தான் படிக்கப் போறேன்?, உங்கக் கூட சாதாரணமா பேசிப் பழகக் கூடாதா?, இப்போ புரியுது! ஏன் உங்களுக்கு பொண்ணுங்கக் கூட பழக்கம்இல்லன்னு!, உங்களுக்குக் கடலை போடவே தெரியல சீனியர்”
“ஆனா.. நீ கடலை போடுறதுல டாக்டரேட் வாங்கியிருப்ப போல! நேத்து பார்த்தப் பையன் கிட்டப் பேசுற மாதிரியா இருக்கு உன் பேச்சு?”
“ஹலோ!, இதுவரைக்கும் நான் சைட் அடிச்சப் பசங்க ஒருத்தர் கிட்டக் கூட நான் பேச ட்ரை பண்ணதேயில்ல!, முதல் தடவையா உங்கக்கிட்ட மட்டும் தான் பேசியிருக்கேன்”
“இப்போ என்ன?, நான் காலரைத் தூக்கி விட்டுப் பெருமை பட்டுக்கனுமா?”
“ஆமா.. பின்ன!”
“இதுக்கு முன்னாடி நீ சைட் அடிச்ச பசங்களோட ஏன் பேச ட்ரை பண்ணதில்ல?”
“ப்ச், எல்லாம் எங்கப்பனால தான்!”
காதிலிருந்த ஹெட்செட்டைக் கழட்டியபடி அருகேயிருந்த பெஞ்சில் அமர்ந்தவன் “ஹாஹாஹா அப்பாவையே இப்டி மரியாதையில்லாம பேசுற?” என்று வினவினான்.
“ப்ச், ஆமா சீனியர்!, எங்கப்பன் ஒரு ஸ்ட்ரிக்ட் சீதாராமன்!, பசங்கக் கூடப் பேசக் கூடாது, பார்க்கக் கூடாதுன்னு ஏகப்பட்ட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் போடுற மோசமான ஆசாமி” – பேசிக் கொண்டே நடந்து சென்று அவள், அவனருகே அமர முயல… “ஏய்… ஏய்…. பேச்சு வாக்குல பக்கத்துல வர்ற?” என்று தடுத்தவன்.. “சீனியருக்கு ஈக்வலா உட்காருற தகுதியெல்லாம் உனக்குக் கிடையாது, போய்க் கீழ உட்காரு” என்றான்.
‘இவனுங்களோட இதே தொல்லையாப் போச்சு’ என்று முணுமுணுத்தவள் கீழே அமர.. பனி படர்ந்திருந்த புல் தரையோ, அவள் அணிந்திருந்த ஜீன்ஸைத் தாண்டி, அவள் தொடையில் ஜில்லெனப் பதிந்தது.
‘ஷ்ஷ்ஷ்’ என்றபடி காலைத் தூக்கியவள் அவன் உதட்டை மடக்கி சிரிப்பை அடக்குவதைக் கண்டு முறைத்துப் பின் காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
கட்டுப் போட்டிருந்த காலுடன் கீழே அமர்ந்திருக்கிறாளே என்கிற இரக்கம் கொஞ்சமுமின்றி… “கால்ல எப்படி அடி பட்டுச்சு?”என்று வினவினான் விஜய்.
அருகேயிருந்தப் புற்களைப் பிய்த்துப் போட்டபடி அமர்ந்திருந்தவள் சலிப்புடன் “ப்ச், அது ஒரு பெரிய கதை சீனியர்” என்றாள்.
“பரவாயில்ல சொல்லு. செக்யூரிட்டி லேப்-ஐ திறக்க இன்னும் டைம் இருக்கு. அதுவரைக்கும் டைம் பாஸ் ஆகட்டும்”
“வெர்ரி குட்! இப்டித் தான் கடலை போடனும்!, நீங்க வேணா பாருங்க, என் கூடப் பேசிப் பழகுனப்புறம் நீங்க பொண்ணுங்களோட பழகுறதுல டிகிரி வாங்கிடுவீங்க”
“வாயைக் கொறச்சிட்டு விசயத்தைச் சொல்லு”
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செறுமியவள் தொடங்கினாள்.
“நான் பார்க்கக் கொஞ்சம் லூசு மாதிரி லொட,லொடன்னு பேசிட்டு விளையாட்டுத்தனமா திரிஞ்சாலும், எனக்குள்ள சீரியஸான நிறைய விசயங்கள் இருக்கு.”
“ம்ஹ்ம்??” – ஆச்சரிய பாவனையை சற்று அதிகப்படியாய் காட்டியபடி விஜய்.
“யெஸ்! அதுல ஒன்னு நான் நல்லா படிக்கிறது! 12த்-ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்த எனக்கு, சென்னைல ***** யுனிவர்சிட்டில சீட் கிடைச்சது! காலேஜ் தொடங்கி ஒரு வாரமிருக்கும்! என் கூட ஜாயின் பண்ணின பொற்கொடி அவளோட கார்-டிரைவர் ஒருத்தனை ரொம்பக் காதலிக்கிறதாவும், அவன் ஒரு கிறிஸ்டியன்றதால அதை அவளோட பணக்கார அப்பா எதிர்க்குறதாகவும் என் கிட்ட சொல்லி அழுதா!, ஏன் சீனியர், வேற மதத்தைச் சேர்ந்த பையனைக் காதலிக்குறது என்ன அவ்ளோ பெரிய குற்றமா?”
“இல்ல தான்! நீ மேல சொல்லு”
“எனக்கும் தப்பில்லன்னு பட்டதால, நான் அவங்கக் காதலுக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு டிசைட் பண்ணிணேன்! உங்களுக்குக் கேட்க ஆச்சரியமா இருக்கும், ஆனா.. நான் பெரியாரோடத் தீவிரமான ஃபாலோயர்! நிறைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு உதவி பண்ணியிருக்கேன்”
“பார்றா…..”
“ஆமா!, ஜாதியோட சேர்ந்து மதமும் ஒளிஞ்சு போகட்டும்ன்னு ஒரு முற்போக்கோன சிந்தனையோட பொற்கொடிக்கும்,அந்தக் கார்-டிரைவருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்க முயற்சி பண்ணுனேன்”
“ம்ம்”
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டவள் “ஆனா, கல்யாணம் நடக்குற அன்னிக்குத் தான் தெரிஞ்சது பொற்கொடிக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட முடியலன்றது!” எனக் கூற…. “ஹாஹாஹாஹா”-வென பலமாய்ச் சிரித்தான் விஜய்.
அசடு வழிய தலையைச் சொறிந்தவள் “கொள்கையைப் பரப்பியாகனும்ன்னு ஒரு ஆர்வக் கோளாறுல நான் இறங்கி வேலை பார்க்க, பொற்கொடி அப்பா எப்படியோ கண்டுபிடிச்சு எங்கப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்துட்டார்!, இதுல இன்னொரு ஷாக் என்னன்னா, பொற்கொடி டாடியும்,எங்கப்பனும் ஃப்ரன்ட்ஸாமாம்!,” எனக் கூற.. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் விஜய்.
“அப்புறம் என்ன?, பெல்ட்டைக் கழட்டி எங்கப்பா போட்டாரு பாருங்க ஒரு போடு!, நான் அப்படியே பாய்ஞ்சு போய்… மாடிப்படில உருண்டு டமால்ன்னு கீழ விழுந்துட்டேன்! வேணும்ன்னு தான் விழுந்தேன்! இல்லாட்டி அந்த முனுசாமி பெல்ட்டை வைச்சே என்னைக் கைமா பண்ணிருப்பான்! எங்கம்மா மட்டும் தான் அய்யோ சரண்யான்னு பதறிட்டு ஓடி வந்தாங்க! பட் டாடி.. சிலையாட்டம் நின்னிருந்தார்!, என் ப்ளானை ஸ்மெல் பண்ணிடுச்சு அந்த மொசக்குட்டி!”
“ம்ம்” – இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
“அப்புறம் என்ன, நீ சென்னைல படிச்ச வரைக்கும் போதும்ன்னு ஒடிஞ்ச காலோட என்னை அள்ளிட்டு வந்து இங்க போட்டுட்டார் தகப்பனார்!, நான் எப்டியும் அடங்க மாட்டேனாம்! சென்னைல, தெரிஞ்சவங்களுக்கு மத்தியில அவர் மானம் போறதுக்கு, இப்டி எங்கயாவதுக் கண்ணுல படாத இடத்துல இருந்தா… நான் என்ன பண்ணாலும் அவரை பாதிக்காதாம்! நீ என் பொண்ணே இல்லன்ற மாதிரி இங்க கொண்டு வந்து சேர்த்து விட்ட என் டாடி, இப்ப வரைக்கும் என் கிட்டப் பேசவேயில்ல” – சோகமாய் முடித்தாள் அவள்.
“நீ ஒரு ஹாஃப்-பாயில்ன்னு உன் மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே! பெரியார் கொள்கையை ஃபாலோ பண்ற ஆளைப்பாரு!, லூசு லூசு” – விஜய்.
“சரி, ரொம்பப் பேசாதீங்க”
“கொள்கையை ஃபாலோ பண்றவளுக்கு தெளிவான சிந்தனை வேணாம்? நல்ல படியா படிப்பை முடிச்சு ஒரு வேலையை வாங்குன்னு உன் ஃப்ரண்ட்க்கு அட்வைஸ் பண்ணி, நாலு வருஷம் படிப்பை முடிச்சப்புறமும் அந்தப் பையன் உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தா.. கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு வாக்குக் கொடுத்து அவளை நல்ல வழில டைரக்ட் பண்ணியிருந்திருக்கனும்”
“ப்ச், எனக்கு அவ்ளோ டீடெயில்டா யோசிக்கத் தெரியல போல சீனியர்”
“ம்ம், ஆனா சைட் அடிக்க மட்டும் தெரியும்”
“ப்ச், சும்மா சும்மா அதையே சொல்லிக் காட்டாதீங்க”
“ஹாஹாஹா, சரியான பேக்கு நீ”
“ஹலோ!, நானா பேக்கு?, அந்த இன்சிடெண்டுக்கு அப்புறம் நான் என் வாழ்க்கைல எவ்ளோ பெரிய முடிவெடுத்திருக்கிறேன் தெரியுமா?”
“அடேங்கப்பா! அப்படியென்ன பெரிய முடிவு?, உங்கப்பாக்கிட்ட அடிவாங்குறதுல இருந்து தப்பிக்க இனி எப்பவும் காலை உடைச்சுக்கலாம்ன்னா?”
“ச்ச,ச்ச இல்ல”
“பின்ன?”
அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கொண்டவள் லெதர் ஜாக்கெட்டுக்குள் கையை நுழைத்துக் கொண்டு “என் வாழ்க்கைல கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அது காதல் கல்யாணமாத் தான் இருக்குனும்” எனக் கூறினாள்.
அவளையேப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் லேசாக வளைந்துக் கண்களில் ஒரு வித வெளிச்சத்தைத் தோற்றுவிக்க “ம்ம்ம்??” என்றவனின் உதடுகள் அடுத்த நொடி அவள் கூறியதைக் கேட்டு, புன்னகை உறைய அழுந்த மூடியது..
“அதுவும் நான் காதலிக்கப் போற பையன் கிறிஸ்டியனா மட்டும் தானிருக்கனும்”
இன்று……..
“நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்” – என்று சரண்யா கூறியதும்.. ஒரு நொடி.. ஒரே ஒரு நொடித் திகைத்த விஜய்.. அடுத்த நொடி முகத்தைச் சரிபடுத்திக் கொண்டான்.
“சோ…. கிடைச்சுட்டான் போல!, கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட அப்பாவி ஜீவன்?” – நக்கலுடன் விஜய்.
“ம்ம்”
“பேர் என்ன?, ஆரோக்கிய தாஸா?”
“ப்ச், சீனியர், அவர் பேரு ஸ்டீபன்”
“உங்கப்பாக் கிட்ட சொல்லிட்டியா?, இனி நீ ஏசுவின் நாமத்தைத் தான் ஜெபிக்கப் போறன்னு?”
“ம்ஹ்ம், இன்னும் சொல்லல”
“ஏன் சொல்லல?”
“ஆ..ஆக்சுவலி, ஸ்டீபனுக்கு இப்போக் கொஞ்சம் ப்ராப்ளம்!, அவர் வேலை பார்த்துட்டிருந்த கம்பெனில இருந்து அவரை லே-ஆஃப் பண்ணிட்டாங்க! அதனால….”
“ஓ!, வேலை வெட்டியில்லாதத் தெண்டக் கருமாந்திரத்தையா லவ் பண்ற நீ?”
“ஏன் இப்படிப் பேசுறீங்க?” – முகம் சுருங்க அவள் கேள்வி கேட்டதும், ஆத்திரம் பொங்கி வழிந்த மனதை நிதானத்துக்குக் கொண்டு வந்தவன்…
“இல்ல, நீயே இப்போ 30 வயசை நெருங்கிட்டிருக்க! நீ லவ் பண்றவன் எப்படியும் உன்ன விட 1 வருஷமாவது மூத்தவனா இருப்பான்!, இந்த வயசுல நிலையான வேலை இல்லாத ஒருத்தனை, எப்படி லவ் பண்ணுன?” – எனக் கேட்க..
அவன் கேள்வியில் சுர்ரென்று தலைக்கேறியக் கோபத்துடன்… “அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?, நான் அவரைக் காதலிக்கிறேன். எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல. நீங்களும் கீழ போய் இஷ்டமில்லன்னு சொல்லிடுங்க” என்று படபடத்தாள்.
“என்ன மிரட்டுற? ம்?, நீ சொன்னா, நான் கேட்றனுமா?”
“………………..”
“லவ் பண்ற பையனை வீட்ல காட்டிக் கல்யாணத்துக்கு வழி பண்ண, தைரியமில்ல! என்னை மிரட்டுறியா நீ?”
“தைரியமில்லாமல்லாம் இல்ல!, அவருக்கு வேலை கன்ஃபார்ம் ஆனதும், இன்னும் 2,3 மாசத்துல நான் வீட்ல பேசிடுவேன்”
“உங்கப்பா சம்மதிப்பாருன்னு நம்புறியா?”
“அந்தாளு சம்மதத்தை யாரு எதிர்பார்த்தா?”
“ஓ!, அப்போ ஓடிப் போகப் போறியா?”
“ப்ச், நீங்க ஏன் அநாவசியமா கேள்வி கேட்குறீங்க!, என்னைப் பிடிக்கலன்னு சொல்றதுல உங்களுக்கு என்ன அவ்ளோ கஷ்டம்?”
“எனக்கு எந்தக் கஷ்டமுமில்ல!, பட், நீ ஒரு மோசமானவனைக் கல்யாணம் பண்ணி, வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கும் போது.. அய்யோ! அன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு நோ சொல்லாம, கல்யாணம் பண்ணியிருந்தா, இன்னிக்கு இப்டி ஆயிருக்காதேன்னு எனக்குத் தோணிடக் கூடாது இல்லையா?, அதான் கன்ஃபார்ம் பண்ணிக்கிறதுக்காக இத்தனை கேள்வி கேக்குறேன்”
“ப்ச், அய்யோ பாவம்ன்னு நீங்க நினைக்குற அளவுக்கு என் வாழ்க்கை மோசமா போயிடாது!, ஸ்டீபன் எவ்ளோ நல்லவர் தெரியுமா?, மோர் ஓவர், அவங்க ஃபேமிலில எல்லாரும் என்னை அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்க! எங்கப்பா தண்ணி தெளிச்சு விட்டாலும், எனக்கு அவர் ஃபேமிலி சப்போர்ட் பண்ணுவாங்க! சோ.. நீங்க தேவையில்லாம எதையும் யோசிக்க வேண்டாம்” – கோபத்தில் படபடத்தவளிடம் இறங்கிப் போக.. மனசாட்சி இடம் தராததால்.. முகம் இறுக ஒரு நொடி அமைதியானான் அவன்.
“இதோ பாரு! உன்னை மாதிரி லூசுத்தனமான கொள்கைகளை வைச்சுக்கிட்டு, அப்பா,அம்மாவை எதிர்த்து, சம்பந்தமில்லாத பிரச்சனைகள்ல தலையை விட்டுக்குற ஆள் நான் கிடையாது!, உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லாட்டி நீ தான் வாயைத் தொறந்து சொல்லனும்!, என்னால… எங்கப்பாம்மாவை மீறி, எதுவும் பேச முடியாது!, சோ… உனக்குக் காரியம் ஆகனும்ன்னா… நீ வாயைத் தொற..” – என்று விட்டு… விறுவிறுவெனப் படியிறங்கிச் சென்று விட்டான் விஜய்.
