அத்தியாயம் - 5

Back to 2004..

முழுதாக ஒரு மாத காலம் கடந்திருந்தது சரண்யா, விஜய்யுடன் பழகத் துவங்கி! சரண்யாவின் முற்போக்கான சிந்தனைக்கும் (?!), அவளுக்கிருந்த முதிர்ச்சிக்கும் (?!) நேத்ரா உட்பட அந்தக் கல்லூரியிலிருந்த எவரும் ஒத்துப் போகாததால்.. தனக்கு வாய்த்த ஒரே அடிமையாக விஜய்யுடன் மட்டுமேப் பேசி நாட்களை ஓட்டினாள் அவள்.

மேற்கூறிய வாக்கியத்தில் ‘மட்டுமே’ என்கிற வார்த்தையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்! அவள் ‘மட்டுமே’ அவனிடம் பேசினாள். பாடம் சம்பந்தமாக அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதலளிப்பதோடு சரி, மற்றபடி அவள் பேசுவாள், அவன் கேட்க மட்டுமே செய்வான்!

ஏனோ! அவள் தனது கொள்கைகளைப் பற்றிக் கூறிய நாளிலிருந்து, அவளைக் காண்கையில் அவன் முகத்தில் தோன்றும் புன்னகை குறைந்து விட்டதாகவே எண்ணினாள் அவள். ‘பயபுள்ள பயந்திருச்சோ?, இந்தச் சின்னப் புள்ளைக்கு எவ்ளோ உயர்ந்த கொள்கைன்னு’ – என்று மனசாட்சி வேறு அவளை ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்க்க ‘இருக்கலாம்,இருக்கலாம்’ என்று தலையாட்டி வைத்திருந்தாள். எப்படியோ அவன் அவளைத் தவிர்க்காதது இப்போதைக்குப் போதும் என்றெண்ணிக் கொண்டாள்.

மேலும் விஜய்யுடன் பழகும் ஒரே பெண் தான் என்பதால் கல்லூரியே தன்னை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருப்பதுப் புரிந்த போது ஒரு தனி கெத்தே வந்தது அவளுக்கு! உடன் பயிலும் சேட்டைக்கார மாணவர்கள் கூட, ‘இவ விஜய் ப்ரதரின் ஃப்ரண்ட்’ என்றபடி அவளிடம் மட்டும் வாலைச் சுருட்டி வைத்திருப்பதில் அவளுக்கு அப்படியொரு பெருமை!

அதுமட்டுமல்லாது அவள் விஜய்யின் கம்பெனியை விரும்பியதற்கு 2 காரணங்கள் இருந்தது! ஒன்று, அவளுக்கு விவரம் தெரிந்து, அவள் சரிக்குச் சரியாய்ப் பேசிப் பழகும் முதல் ஆண் அவன் தான்! ஏனெனில் அவள் தந்தை ஒரு முசுட்டு ஆசாமி! அவளுக்கு உடன் பிறந்த சகோதரன் என எவருமில்லை! சொந்தத்திலிருக்கும் அத்தை,மாமன் மகன்களுடனோ,பெரியப்பா,சித்தப்பா மகன்களுடனோப் பேசத் தந்தை அனுமதித்ததில்லை! அதனால் சமவயதுத் தோழனாய் ஒருவன் கிடைத்த வாய்ப்பை அவள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை! ஹாஸ்டலிலிருப்பதால் தந்தையின் கண்டிப்பு இல்லாத நிம்மதி வேறு ஒருபுறம்!

இரண்டாவது, விஜய் அவளது சைட்! முதல் பார்வையிலேயே வசீகரித்தவன்! பழகத் தொடங்கிய பிறகும் வசீகரித்துக் கொண்டு தானிருக்கிறான். வயதுக்கோளாறோ என்னவோ, அவனை மீண்டும்,மீண்டும் பார்த்துப் பேசுவது அவளுக்குப் பறக்கும் உணர்வைக் கொடுத்தது. அந்த உணர்வு அவளுக்குப் பிடித்துமிருந்தது.

ன்று மாலை கல்லூரி முடிந்த பின்பு கம்ப்யூட்டர் லேப்-இல் C++ புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ப்ரோக்ராம் ஒன்றை கம்பைல் செய்து கொண்டிருந்தாள் சரண்யா.

அவளருகேயிருந்த ப்ரிண்டர் திடீரென சத்தமிட்டப்படி நான்கைந்து பேப்பர்களை வாமிட் செய்ய.. அவளுக்குப் பின்னே, ஐந்தாவது வரிசையின் முன்பிருந்தக் கம்ப்யூட்டரில் அமர்ந்திருந்த பரத், ப்ரிண்ட்-அவுட்களை எடுக்க.. அவளருகே வந்தான்.

வெகு தீவிரமாக நகம் கடித்தபடி மானிட்டரையே நோக்கிக் கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்தபடி ப்ரிண்ட்-அவுட்டைக் கையில் எடுத்தவன் அவளது மானிட்டரை நோக்கினான்.

எரர் எங்கேயென்று தெரியாமல் முழிக்கிறாள் என்பதை அறிந்து கொண்டு.. எட்டி அவள் கீ-போர்டில் அவன் சில கீ-க்களைத் தட்ட.. ப்ரோக்ராம் ரன் ஆனது!

திடீரெனத் தானாகவே முன் வந்து உதவி புரிந்தவனை அவள் ஒரு மாதிரி நோக்க… “என்ன?” என்றான் அவன்.

“ஒன்னுமில்ல” – சரண்யா.

“ஹெல்ப் பண்ணாக் கூட முறைச்சுப் பார்க்குற?, உனக்கு என்ன என் மேல அவ்ளோ காண்டு?”

“நீங்க வெள்ளையா இருக்கீங்கள்ல?, அதான்!”

“அடிப்பாவி!” என வாயைப் பிளந்தவன் “வெள்ளையாப் பொறந்தது என் தப்பா?, உன்னையெல்லாம்… எந்த நேரத்துல பெத்தாங்களோ” எனத் தலையில் அடித்துக் கொண்டான்.

“நானா கேட்டேன், வந்து ஹெல்ப் பண்ணுன்னு” என்று முணுமுணுத்தவள் கணிணியின் புறம் திரும்பிக் கொள்ள… “என்ன முணுமுணுக்குற?” என்று பரத் அதட்டிக் கொண்டிருக்கையில் வந்து சேர்ந்தான் விஜய்.

“ப்ரிண்ட்-அவுட் எடுத்துட்டியாடா?” – விஜய்.

“ம்ம், எடுத்தாச்சு” – பரத்

“நீ என்ன ஹாஸ்டல் போகாம இன்னும் இங்க உட்கார்ந்திருக்க?” – சரண்யாவை நோக்கி விஜய்.

“எல்லாம் சீன் மச்சி!, தான் பெரிய அறிவாளின்னு காட்டிக்கனும்ல?” – பரத்

“ப்ச், இப்போ நான் கேட்குறேன், உங்களுக்கு அப்டி என்ன என் மேல காண்டு?”- சரண்யா.

“ம்ம்ம், நீ கருப்பா இருக்கேல?, அதான்” – பரத்.

வெடுக்கென மீண்டும் கணிணியின் புறம் திரும்பிக் கொண்டவள் “நான் இந்த அசைன்மெண்ட்டை முடிச்சுட்டுத் தான் கிளம்புவேன். ப்ரஃபசர் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டுத் தான் உட்கார்ந்திருக்கேன்” என இருவருக்கும் பொதுவாகக் கூறினாள்.

பின்னேயிருந்து அவள் தலையில் அடிப்பது போல் பாவனை செய்த பரத் “பஜாரி” என முணுமுணுத்து விட்டு “நான் கிளம்புறேன் மச்சி” என நகர்ந்து விட்டான்.

தீவிரமாகக் கணிணியில் டைப் செய்து கொண்டிருந்தவளைக் கண்டபடியே.. நடந்து சென்று.. அருகேயிருந்த பாட்டில் தண்ணீரை எடுத்துப் பருகினான் விஜய்.

“என்ன சீனியர் அப்படிப் பார்க்குறீங்க?” – விழிகள் கணிணியில் பதித்திருந்தாலும், அவனது பார்வையை உணர்ந்த சரண்யா அவனிடம் வினவினாள்.

“…………………..”

“என்னை சைட் அடிக்கிறீங்களா?”

“இல்ல” – பட்டெனப் பதில் வந்தது அவனிடமிருந்து.

“ப்ச், அதான?, நீங்க அடிச்சிட்டாலும்!, ஆமா, நீங்க வாழ்க்கைல எந்தப் பொண்ணையாவது திரும்பியாவது பார்த்திருக்கிறீங்களா?

“ஏன்?, நான் என்ன முற்றிலும் துறந்த முனிவரா?, அதெல்லாம் நல்லா பார்ப்பேன்”

“ஓ! ரியலி?,”

“…………..”

“யார் அந்த லக்கி கேர்ள்?”

“ஸ்ரீதேவி, ஹேமமாலினி, இப்போ ரீசண்ட்டா சிம்ரன்!”

“ப்ச், அவங்கள்லாம் ஃபிலிம் ஆக்ட்ரஸ் ஆச்சே!, நம்ம காலேஜ்ல எந்தப் பொண்ணையும் நீங்க சைட் அடிச்சதில்லையா?”

“சுத்தி வளைக்காம என்னை நீங்க சைட் அடிச்சிருக்கீங்களான்னு ஸ்ட்ரைட்டாவே கேளேன்” – விஜய்.

முகத்தை இறக்கி அவனை முறைத்தவள் “ஏன், கேக்க மாட்டேன்னு நினைச்சீங்களா?, ஓகே! நேராவே கேக்குறேன், என்னை நீங்க சைட் அடிச்சிருக்கீங்களா?” எனக் கேட்டு விட்டு.. கைகளைக் கட்டிக் கொண்டு எழுந்து நிற்க.. தன் கையிலிருந்த பாட்டிலைக் கீழே வைத்து விட்டு அவளருகே வந்து நின்றான் விஜய்.

இரண்டே அடி இடைவெளி தான் இருவருக்குமிடையில்! நெருங்ங்ங்ங்ங்கி நிற்கிறான் என்று ஒரேடியாகக் கூறி விட முடியாது. ஆனால், இந்த நெருக்கமே அவளுக்கு உள்ளே குளிரைப் பரப்பியது. திடீரென முகம் சூடாகி விட்டதைப் போல் தோன்ற.. அணிந்திருந்த ஷூவுக்குள் உள்ளங்கால் லேசாக வியர்ப்பது தெரிந்தது.

அவள் முக மாற்றங்களை அமைதியாகப் பார்த்தபடி நின்றிருந்தவனுக்கு, நகரும் எண்ணம் இல்லை போலும்!

“உன்னை சைட் அடிச்சிருக்கேன்! ஒரு தடவை,ரெண்டு தடவை இல்லை! நிறைய தடவை!, உன் கண்ணு தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அப்புறம் இந்த ஸ்பிரிங் முடி!” – என்றபடியே அவள் முடியைத் தொட வர…. தன்னிச்சையாய் பின்னே நகர்ந்தாள் அவள்.

முன்னே எழுந்த கையை மடக்கிப் பின்னந்தலையைக் கோதியவன்… “சரண்யா….” என்றான்.

அவன் பார்வையைத் தவிர்க்க எண்ணி கணிணியின் புறம் திரும்பியவள் “ம்ம்” என்றபடிப் புத்தகத்தை மடக்கிப் பையினுள் திணித்தாள்.

“எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். பேரு எட்வின். என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்.. ரொம்ப நல்லப் பையன்”-விஜய்

நாற்காலியில் அமர்ந்து ப்ரோக்ராமை சேவ் செய்தவள் “அதுக்கு?” என்றபடி அவனைப் புரியாத பார்வை பார்க்க….

“இல்ல, ஒரு கிறிஸ்டியன் பையனைத் தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணனும்ன்னு ஒரு முரட்டுக் கொள்கை வைச்சிருக்கேல?, அதுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்ய.. இந்தப் பையனை உனக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணி வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்! என்ன சொல்ற?” – அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாகக் கேள்வி கேட்டான் அவன். சற்று முன்பு அவன் காட்டிய நெருக்கத்திற்க்கும், இப்போதிருக்கும் தோரணைக்கும் சற்றும் சம்பந்தமில்லை.

எண்டர் கீயை நொட்டெனத் தட்டி விட்டு நிமிர்ந்து அவனை முறைத்தாள் சரண்யா.

‘இதை,இதை,இதைத் தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல் கையைக் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றவன்.. “நீ மட்டுமில்லம்மா, நானும் கூட பெரியாரோட தீவிர ஃபாலோயர். தெரியுமா?” என்றான்.

“இருந்துட்டுப் போங்க!, அதுக்காக நீங்க சொல்றதை நான் கேட்கமுடியுமா?” – எரிச்சலுடன் சரண்யா.

“ஏன் சரண்யா?, உன் உயர்ந்த கொள்கை என்னாச்சு?, ஒரு வேளை இந்த ஒரு மாசத்துல கொள்கையை மாத்திட்டியா?, இந்த தடவை என்ன முஸ்லீம் பையனா?, அப்டின்னா சொல்லு! கைவசம் முகமது,அஹமதுன்னு நிறைய பேர் இருக்கானுங்க” – எனக் கூறிச் சிரிக்க… உச்சக்கட்டக் கடுப்பில் அவனை முறைத்தாள் அவள்.

“ஹலோ! என் கொள்கை இன்னும் மாறல! நான் கல்யாணம் பண்ணுனா, ஒரு கிறிஸ்டியன் பையனைத் தான் கல்யாணம் பண்ணுவேன்”

“அப்போ எட்வின் கூடப் பேசுறதுல உனக்கு என்னத் தயக்கம்?”

“சீனியர்ர்ர்ர்ர்ர்” என்று பல்லைக் கடித்தவள் “படிக்குற வயசுல நான் காதலிச்சுட்டு சுத்துனா.. எங்கப்பா என்னை பெல்ட்டால அடிக்கிறதோட நிறுத்திக்காம.. 4 முழக் கயறு வாங்கிக் கொடுத்து.. தூக்குல தொங்கு-ன்னு சொல்லிடுவார்!” என்றாள்.

“பின்னே எப்போ காதலிப்ப?”

“ஒழுங்காப் படிப்பை முடிச்சு, வேலை வாங்கி! எங்கப்பன் காசுல திங்குற நிலைமை மாறினப்புறம் தான் என் கொள்கையை நிறைவேத்தனும்ன்னு ப்ளான் வைச்சிருக்கேன்”

கையைத் தட்டி “வெர்ரி குட், ஆல் த பெஸ்ட்” என்றான் அவன்.

அவன் நீட்டிய கையைத் தட்டி விட்டு “அதனால, இனிமே எட்வின்,ஆல்வின்னு எவன் பேரையும் என் கிட்ட சொல்லாதீங்க! இப்போதைக்கு உங்களை சைட் அடிக்கிறது மட்டும் தான் என் கொள்கை!” என்று முடித்து விட.. உள்ளே ஓர் நிம்மதி பரவி… அவளைக் காண்கையில் தோன்றும் அந்தப் பழைய சிரிப்பு அவன் முகத்தில் தோன்றியது.

இது எதையும் அறியாத சரண்யா கம்ப்யூட்டரை ஷட்-டவுன் செய்து கொண்டிருந்த சமயம்.. “டேய் மச்சான்” என்று கத்தியபடி லேப்-க்குள் நுழைந்தனர் அசோக்கும், தன்வீரும்.

“துஷருக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு டா!, பரத் அவனைக் காலேஜ் ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போயிருக்கான்” – அசோக்.

நிமிடத்தில் முகம் மாற “என்னாச்சு??,எப்படியாச்சு?” என்று வினவியவன் குனிந்திருந்த நண்பர்களின் முகத்தைப் பார்த்து “கமல்நாத்தா?” என்றான்.

“ஆமாம் மச்சி!, அவனை அப்புறம் பார்த்துக்கலாம்டா, இப்போ ஹாஸ்பிடல் போகலாம் வா” – என்று அவனை அழைத்துக் கொண்டு முன்னே நடந்தனர்.

‘என்னவோ ஏதோ என்று பதறியபடி அவர்களைத் தொடர்ந்து நடந்த சரண்யா “துஷர்ன்னா… உங்களோட ஒரு அஸ்ஸாமி பாய் இருப்பானே! அவன் தானே?, செகண்ட் இயர் பையன்??” என்று அசோக்கிடம் வினவினாள்.

“ஆமா” – வேகமாய் நடந்தபடி அசோக்.

கல்லூரியில் படிக்கும் பழங்குடி மாணவர்களுக்கு நடக்கும் ராகிங்கைப் பற்றியும், கமல்நாத் கேங்கைப் பற்றியும் அவள் ஓரளவு அறிந்து வைத்திருந்ததால், என்ன நடந்ததென்பதைத் தெரிந்து கொள்ள அவர்கள் பின்னேயே சென்றாள்.

லேப்-இன் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியில் “ஈடென் ஹாஸ்பிடல் தானடா?” என்று வினவியபடியே விஜய் ஏறி அமர.. “ஆமாம் மச்சி..” என்று அவனுக்குப் பதிலளித்து விட்டுப் பின்னே ஏறவிருந்த அசோக்கைத் தள்ளி விட்டுத் தான் ஏறி அமர்ந்தாள் சரண்யா.

“ஏய்ய்.. அறிவிருக்கா உனக்கு?, நீ எதுக்கு வண்டில ஏறுற?” – எரிச்சலுடன் அசோக்.

“சீனியர், நானும் வர்றேன் ப்ளீஸ்!, எனக்கும் அந்த அஸ்ஸாமியைப் பார்க்கனும்!” – சரண்யா.

“நீ எதுக்கு அவனைப் பார்க்கனும்?” – விஜய்

“மச்சி, அப்டியே முன் வீலைத் தூக்கி இந்த மொக்கை பீசைக் கீழே தள்ளி விடுடா!, அவசரம் புரியாம லூசு மாதிரி பண்ணிட்டிருக்கா” – அசோக்.

“ஏய்ய், ஜூனியர் மாதிரி நடந்துக்க மாட்டியா நீ?” – ஹிந்தியில் காட்டுக்கத்தலாய் தன்வீர்.

அவர்கள் பேச்சை மதிக்காமல் விஜய்யை நோக்கியவள் “சீனியர் அவங்களுக்குத் தான் என் கொள்கைகளைப் பத்தித் தெரியாதுன்னா, நீங்களுமா?, டிஸ்கிரிமினேஷன்னு ஒன்னு ஒழியனும்ன்னு டெய்லி சாமியை வேண்டுற நான், கண்ணுக்கெதிரே இப்படி ஒரு கொடுமையை பார்த்துட்டு அமைதியா இருப்பேனா?, நான் உங்க கூட வருவேன். வந்து… என்ன நடந்ததுன்னு அந்த அஸ்ஸாமியைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன்” என்று தீர்மானமாய்க் கூறினாள்.

“தெரிஞ்சுக்கிட்டு?, தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்வ?, அப்டியே போய் கமல்நாத் கேங்கை அடிச்சு நொறுக்கிடுவியா?, ஏய்ய்ய்.. இறங்கு முதல்ல” - அசோக்

“முடியாது. நீங்க வண்டியை எடுங்க சீனியர்” என்றவள் கம்பியைப் பற்றிக் கொண்டு நன்றாக அமர்ந்து கொண்டாள்.

அந்த நேரத்திலும் அவளது செய்கை விஜய்க்குச் சிரிப்பைத் தூண்ட… உதட்டைக் கடித்து அடக்கியவன் “நீ அவனோட வாடா” என்று அசோக்கிடம் கூறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

“வோ பாகல் ஹே க்யா?” என்று புலம்பியபடித் தன்வீரும் “சரியான அராத்து” என்றபடி அசோக்கும் வண்டியில் புறப்பட்டனர்.

மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுப் படுக்கையில் ஓய்ந்து கிடந்த துஷரைக் கண்ட விஜய்.. அவனருகே அமர்ந்திருந்த பரத்தை நகர்த்தி விட்டு.. “டேய்.. நேபாலி.. நீ அந்த கமல் பய இருக்குற பக்கமே போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?” எனக் கோபமாகக் கேட்டான்.

“அவனுங்க தான் இந்தப் பசங்களைத் தேடித் தேடி டார்ச்சர் கொடுக்கிறானுங்களேடா?”-கவலையுடன் பரத்.

“இந்தத் தடவை என்னடா பண்ணானுங்க?” – விஜய்

“அந்தக் கமலோட அள்ளக்கை வீரேந்தர் கம்பெல் பண்ணி இவன் வாய்ல ஆல்கஹால் ஊத்திருக்கான் மச்சி!, பயத்துல இந்தப் பன்னாடைக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு!” – பரத்

“ஓசில சரக்குக் கிடைச்சா வாங்கி ஜாலியா அடிக்கிறதை விட்டுட்டு உனக்கு ஏன் டா பயம் வருது?” – அசோக்

“எனக்கு ஆல்கஹால் ஸ்மெல்லே ஒத்துக்காது பாய்” – பாவமாய் ஹிந்தியில் துஷர்.

“எப்பவும் சொல்றது தான் இப்பவும் சொல்றேன், ஒன்னு அவங்களைத் தைரியமா ஃபேஸ் பண்ணப் பழகு! இல்ல, தனியா அவனுங்கக்கிட்ட மாட்டாத!,” – பரத் அவனிடம் அறிவுரை கூறிக் கொண்டிருக்கையிலேயே யோசனையுடன் எழுந்த விஜய் அசோக்கை அழைத்து அவன் காதில் ஏதோ கூறினான்.

சரியென்று தலையாட்டியபடி அவன் வெளியே சென்றதும் தன்வீரை அழைத்து ஏதோ கூறியவன் அங்கிருந்த நர்ஸிடம் ட்ரிப்ஸ் முடிய இன்னும் எவ்வளவு நேரமாகுமென்று வினவினான். அவர் அரைமணி நேரம் என்றதும் தலையாட்டி விட்டு துஷரை நோக்கியபடி அமர்ந்தான்.

அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கி நின்றிருந்த சரண்யாவைக் கண்டு.. “ஏய்.. சப்போட்டா, நீ எதுக்கு இங்க வந்த?” என்று வினவினான் பரத்.

“இவனைப் பார்க்கத் தான்” என்று துஷரைக் கை காட்டிய சரண்யா, அவனருகே வந்து நின்றாள்.

“அந்த வீரேந்தர் பய.. பாட்டிலோட பக்கத்துல வந்தா… அவன் செவுல்லயே ரெண்டு விட்றதை விட்டுட்டுப் பயந்து போய் இங்க வந்து படுத்திருக்க?, என்ன ஆளு நீ?, கவர்ட்” – முகத்தைக் கோபமாய் வைத்துக் கொண்டு அவள் ஹிந்தியில் திட்டவும் அவளை ‘ஆ’-வென நோக்கினான் துஷர்.

“உன் அளவுக்கு நான் தைரியமான ஆள் கிடையாது” – துஷர்.

“இது ஒரு பதிலா?, எதிர்த்து நிற்கத் தான் தெரியாது! தப்பிச்சு ஓடவுமா தெரியாது?” – சரண்யா.

“அவனுங்க 5 பேர்! நான் ஒரே ஒருத்தன்ம்மா”

“ஆம்பள நீயே இவ்ளோ வீக்கா இருந்தா…, இவ்ளோ பயந்தா.. என்னை மாதிரி பொண்ணுங்கள்லாம் என்னவாகுறது?, சரியான மடையன்ய்யா நீ” – சரண்யா

மிகவும் உரிமையாய் நெடுநாள் பழகியவள் போலத் திட்டிக் கொண்டிருந்தவளை துஷர் சிரித்தபடி நோக்க… பரத்தோ ‘நம்மள மட்டும் தான் அசிங்கப்படுத்துறான்னு நினைச்சேன், இவ பொதுவாவே இப்ப்டித் தான் போல’ என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டு அவள் மீது ஆராய்ச்சிப் பார்வை செலுத்தினான்.

இது எதையும் கண்டு கொள்ளாது அமர்ந்திருந்த விஜய்.. ட்ரிப்ஸ் முடிந்ததும் துஷரைத் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டுக் கல்லூரியை நோக்கிப் பறந்தான்.

“டேய்… இவன் என்னடா பண்ணப் போறான் இப்போ?” – பதறிய குரலில் வினவிய பரத்தை மதியாமல் அசோக்கும்,தன்வீரும் விஜயைத் தொடர்ந்து சென்றுவிட… உடன் யாருமற்றுத் தனியாக நின்றிருந்த சரண்யாவிடம் ஒரு பார்வையைச் செலுத்திய பரத்.. தன் வண்டியருகே சென்றான்.

‘அய்யோ இவனும் விட்டுட்டுப் போயிடப் போறான்’ என்று பதறியடித்துக் கொண்டு அவனிடம் சென்றவள் மான,ரோஷத்தையெல்லாம் கை விட்டு “என்னையும் கூப்பிட்டுப் போங்க” என்றாள்.

“ம்ம்ம்ம், கருப்பா இருக்கிறப் பொண்ணுங்களையெல்லாம் நான் வண்டில ஏத்துறதில்ல!” – மிடுக்காகக் கூறினான் பரத்.

“ஹலோ!, எனக்கும் வெள்ளையா இருக்குற பசங்க பைக் பின்னாடி உட்கார்ற பழக்கமில்ல” – அவளும் முறுக்கிக் கொண்டாள்.

“ஓ ரியலி! குட்! அப்போ நான் கிளம்புறேன்” – நகரப் பார்த்தவனை நிறுத்தி “ப்ளீஸ்… ப்ளீஸ்ங்க மைதா… என்னையும் கூப்பிட்டுப் போங்க! அவசரத்துல நான் பர்ஸ் கூட எடுத்துட்டு வரல” என்று கெஞ்ச….

“என்ன சொன்ன?,மைதாவா?, ஏய்ய்.. நீயெல்லாம் திருந்தவே மாட்ட! உன்னையெல்லாம் வண்டில ஏத்த முடியாது! போடி” – என்று பொறிந்து விட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்து சென்று விட்டான்.

அய்யோ போயிட்டானே! போயிட்டானே! படுபாவி! கையில காசில்லாம, எப்டி ஹாஸ்டலுக்குப் போறது! டேய் பரத்து, கட்டைல போறவனே! ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாதிரி ஒரு பொம்மை ஃபேஸை வைச்சுக்கிட்டு நீ பண்ற ரவுசுக்கு! என்று அவள் புலம்பிக் கொண்டிருக்கையில்… ஹாரன் ஒலி கேட்டது.

பத்தடித் தள்ளி வண்டியை நிறுத்தியிருந்தவன், “வா,வா, வந்து ஏறு..” என்று கத்தினான்.

முகம் மலர.. அவனை நோக்கி ஓடி வந்தவளைக் கண்டு அவன் மீண்டும் பத்தடி வண்டியை முன்னே நகர்த்தி நிறுத்தினான்.

அவனை நின்று முறைத்து விட்டு மீண்டும் அவள் ஓட.. அவன் மீண்டும் வண்டியை நகர்த்தினான்.

“என்ன?, இப்டியே காலேஜ் வரைக்கும் என்னை ஓட விடலாம்ன்னு எண்ணமா?” – மூச்சு வாங்கப் பொறிந்தவளின் அருகே ரிவர்ஸ் அடித்து வந்து நின்றவன் “கொஞ்சமாவது உனக்குக் கொழுப்பு குறையனும்ன்னு தான் ஓட விட்டேன்!, சீக்கிரம் ஏறு… விஜய் என்ன பிரச்சனைப் பண்ணி வைக்கப் போறான்னு போய் பார்க்கனும்” என்றான்.

எரிச்சலுடன் அவள் ஏறிக் கொள்ள அவன் காலேஜை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

இருவரும் காலேஜை அடைகையில் விஜய்,அசோக்,தன்வீர்,ரமேஷ் அனைவரும் ஒன்று கூடி வீரேந்தரை ரௌண்டு கட்டியிருந்தனர். எப்படியோ அவனைத் தனியாகச் சிக்க வைத்திருந்தான் விஜய்!

“பாய் ப்ளீஸ்.. லீவ் ஹிம்!, அவங்க எனக்கு என்ன செய்றாங்களோ, அதையேத்தான் நீங்க அவங்களுக்கு செய்றீங்க!, பதிலுக்குப் பதில்ன்னு போயிட்டே இருந்தா.. இது எப்போ தான் முடியும்?, என்னால உங்களுக்குப் பிரச்சனை வேண்டாம்” – ஹிந்தியில் கெஞ்சிக் கொண்டிருந்தான் துஷர்.

“அதுக்காக இவனை இப்டியே விடச் சொல்றியா?” – ரமேஷ்.

“நீ கம்முன்னு இருடா நேபாலி, மச்சான் நீ அவன் வாய்ல ஊத்துடா” – வீரேந்தரின் இரு கைகளையும் இறுகப் பற்றியிருந்த அசோக் விஜய்யை நோக்கிக் கத்தினான்.

“டேய்.. விஜய்.. வேணாம் நிறுத்து!, கமல்நாத்துக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகும் டா” – பதறிய குரலில் கத்தியபடி அருகே ஓடி வந்தான் பரத்.

“பிரச்சனை ஆனா.. ஆகட்டும்! நான் பார்த்துக்கிறேன்” – தீவிர முகத்துடன் வீரேந்தரையே நோக்கிக் கொண்டிருந்த விஜய், பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டிருந்தான்.

“விஜய்… சொல்றதைக் கேளுடா” – கெஞ்சல் குரலில் பரத்.

நிதானமாய் நடந்து வீரேந்திரனின் அருகே சென்றவன்.. கையிலிருந்தக் குட்டி பாட்டிலைத் திறந்து… அவனது முகவாயைப் பற்றித் தூக்கி.. வாயைப் பிளந்து.. பாட்டிலிலிருந்தத் திரவத்தை ஊற்றினான்.

பாதி விழுங்கியும், விழுங்காமல் “உங்களைச் சும்மா விட மாட்டேன் டா! கமல் உங்களை விட மாட்டான்! இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகனும்” – என்றபடிக் கதறியவனின் தோளைப் பற்றிக் கீழே தள்ளினான் அசோக்.

“டேய்… என்னத்த டா அவன் வாய்ல ஊத்துனீங்க?, என்னதுடா அது?” - பரத்

“ம்ம்ம், விஷம்” - விஜய்

“விஷமா??” – பரத் வாயைப் பிளக்கையில் கமல்நாத்தின் கூட்டம் வந்து சேர்ந்தது.

மூச்சு வாங்க, வயிற்றைப் பிடித்தபடி “உவ்வேஏஏஏஏஏ…” என வாந்தி எடுத்துக் கொண்டிருந்த வீரேந்தரை நோக்கிய கமலின் கூட்டம், அவனருகே சென்று அவனைத் தூக்கியபடி ஹிந்தியிலேயே கத்தத் துவங்க… கமல்நாத் நேராக வந்து விஜய்யின் சட்டையைப் பற்றினான் “என்னடா செஞ்சீங்க அவனை?” என்றபடி.

“நத்திங். ஒரு பாட்டில் விஷத்தை வாயில ஊத்தியிருக்கேன்! இப்பவே ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போயிட்டேனா.. ஒரே ஒரு ஸ்டமக் வாஷ்! உயிர் பிழைச்சிடுவான்.. இல்லாட்டி நாளைக்கு நீ அவனுக்கு மாலை வாங்கிட்டுப் போற சிச்சுவேஷன் வந்தாலும் வரலாம்” – பிசிரற்ற குரலில் அலட்டலின்றி அவன் கூறிய பதிலைக் கேட்டு கமல்நாத்தின் ஒட்டு மொத்தக் கூட்டமும் பயந்து போய்… பதறியபடி வீரேந்தரைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினர்.

அதற்குள் விஷயம் காலேஜ் முழுக்கப் பரவி.. விஜய்யை ஆதரிக்கும் மக்களுக்கும், கமல்நாத்தின் கையாட்களுக்கும் இடையே சண்டை துவங்க.. ஹாக்கி ஸ்டிக்குகளும், கிரிக்கெட் மட்டைகளும் அந்த இரவில் யார்,யாரைப் பொளந்து கட்டியதென்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

கூட்டம் கூடுவதற்கு முன் அசோக் சரண்யாவை அப்புறப்படுத்தியிருந்தபடியால்… மறுநாள் காலையில் தான் விசயம் அவளை எட்டியது.

விஜய் மற்றும் கமல்நாத் உட்பட பத்துப் பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்க… பிரச்சனை மீண்டும் வளராமலிருக்க அன்று கல்லூரிக்கு விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.

அன்று முழுவதும் அவள் எத்தனையோ முறை கல்லூரியைச் சுற்றி சுற்றி வந்தும் விஜய் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவே முடியவில்லை. உடனிருந்த ஹாஸ்டல் வாசிகள் அனைவரும் கமல்நாத்தும் அவனது நண்பர்களும் ராகிங் என்ற பெயரில் புரியும் அட்டகாசங்களனைத்தையும் சொல்லிப் புலம்பியபடியிருக்க… அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சரண்யாவிற்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது.

ன்று காலை 8 மணியளவில் விஜய்யின் நண்பர் பட்டாளம், அவன் எப்போதும் அமரும் அந்த போதிமரத்தின் அடியில் கூடியிருந்தனர்.

“ப்ச், சஸ்பென்ஷன் முடிஞ்சு இன்னிக்கு நாம ஜாயின் பண்ற நேரத்துல இது என்னடா மச்சி புதுப்பிரச்சனை?” – கவலையுடன் விஜய்யிடம் வினவினான் ரமேஷ்.

ரமேஷின் கவலையில் பத்து சதவீதம் கூட விஜய்யின் முகத்தில் இல்லை! அவன் முழுப்புன்னகையுடன் “யாருடா இந்த சிறுபிள்ளைத்தனமான வேலையைப் பார்த்தது?” என்று வினவினான்.

“டேய், நாங்கல்லாம் கம்யூட்டர் சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ்!, எங்களுக்கு கெமிஸ்ட்ரி நாலேஜ் எல்லாம் ரொம்பக் கம்மி!” - அசோக்

“யார் பண்ணியிருந்தாலும், இப்போ அவனுங்க சந்தேகப்பட்றது நம்மளத் தான்!” – எரிச்சலுடன் பரத்.

தீவிரமாக அனைவரும் உரையாடிக் கொண்டிருக்கையில் “ட்ரிங்,ட்ரிங்” என பெல் சத்தம் ஒலிக்க.. சைக்கிள் ஒன்றில் அமர்ந்து கொண்டு… ஈஈஈஈஈ-யென்ற சிரிப்புடன் “ஹாய்ய்ய்ய் கைஸ்” என்று கையை ஆட்டினாள் சரண்யா.

துஷர் மட்டும் முன்னே வந்து “ஹாய்…. சரண்..” என்று பதிலுக்குக் கையாட்ட.. மற்ற அனைவரும் அவளை எரிச்சலுடன் பார்த்து வைத்தனர்.

சைக்கிளை நிறுத்து விட்டு மேட்டின் மீது ஏறியவள்.. “வெல்கம் பேக் கைஸ்!, 10 நாள் கழிச்சு காலேஜ் வந்திருக்கீங்க?, முகத்துல கொஞ்சம் சந்தோசமே இல்லையே” எனக் கேட்டாள்.

“ஏய்…. நீ என்ன விசயமா வந்த?, அதைச் சொல்லு முதல்ல” – பரத்.

“பத்து நாள் கழிச்சு உங்களையெல்லாம் இப்போ தான் பார்க்குறேன்! அதான்.. ஜஸ்ட் ஹாய் சொல்லலாம்ன்னு வந்தேன்”

“சொல்லிட்டேல?, கிளம்பு” – எரிச்சலுடன் விஜய்.

“அவளை ஏன் எல்லாரும் எப்பவும் திட்டிட்டே இருக்கீங்க?, ஷி இஸ் அ வெர்ரி நைஸ் கேர்ள்” – சரண்யாவுக்கு சப்போர்ட்டாகப் பேசிய துஷரை பரத் கொலைவெறியுடன் நோக்க.. “டேய் நேபாலி… நீ என்னடா அவ பக்கம் சாய்ஞ்சுட்ட?” என்று வாயில் விரல் வைத்தான் ரமேஷ்.

“மச்சான், இந்த அரை டிக்கெட்டை ஓரம் கட்டுங்க!, இப்ப இந்தப் பிரச்சனையைப் பண்ணினது யாருன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது, அதைச் சொல்லுங்க” – அசோக்

“என்னப் பிரச்சனை?” – சரண்யா.

“ம்ம், காலைல நாங்க சாப்பிட சப்ஜில உருளைக்கிழங்கு மிஸ்ஸிங். அதான் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்ன்னு இருக்கோம்” – அசோக்.

“ஏய்…. நீ முதல்ல கிளம்பு இங்கேயிருந்து” – விஜய்

“ப்ச், அவளை ஏன் துரத்துறீங்க?, அவ பாட்டுக்க நின்னுட்டுப் போறா” – துஷர்.

“டேய்.. நேபாலி, நீ வாயை மூட்றா” – பரத்

“ஏய் நீ கிளம்பு” – விஜய்.

“ஷ்யூர்???? ஷ்யூரா நான் கிளம்பட்டுமா?” – தோரணையாக நின்று கொண்டு வினவியவளிடம் அத்தனை பேரும் ஆம் எனத் தலையாட்ட… “அப்போ, அந்தக் கமல்நாத் பயலுக்கு சல்ஃபியூரிக் ஆசிட் அனுப்பி, அந்த ஆஸ்துமாக்காரனோட.. அலர்ஜியைக் கூட்டி… அவனை ஹாஸ்பிடல்ல படுக்க வைச்சது யாருன்னு உங்களுக்குத் தெரிய வேணாம்?,அப்டித் தான?” என்று கேட்டு விட்டு… விஜய்யை நோக்கிப் புருவத்தைத் தூக்கிக் கண்ணடித்தாள்.

ஒரு நொடி…. கண்கள் விரியப் பிளந்த வாயுடன் அவளை நோக்கிய விஜய்… மறு நொடி…. அவளருகே ஓடிச் சென்று… ஒரு கையை அவள் தோளில் போட்டு.. மறு கையால் அவளது இடது காதைத் திருகி “ஆர்வக் கோளாறு, ஆர்வக் கோளாறு” எனத் திட்டிக் கடகடவெனச் சிரிக்க.. “ஆஆஆஆஆஆஆ” எனத் துள்ளிக் குதித்தவளும் “எப்பூபூபூபூபூடி நம்ம ஐடியா?” என அனைவரையும் நோக்கிக் கத்தினாள்.

“ஏய்ய்ய்ய், அரை மென்டல்! நீ தான் இந்த வேலையைப் பார்த்ததா??” – ரமேஷ்

“ஏய்.. நம்ம சேர்மேன் மகன் அந்தக் கமல்நாத்! மாட்டுனேனா… டிஸ்மிஸ் தான்!”- அசோக்.

“நிஜமா, நிஜமா நீ தான் பண்ணுனியா?” – ஆச்சரியம் அடங்காத குரலுடன் துஷர்.

தோளிலிருந்த விஜய்யின் கையை விலக்கி விட்டு.. “யெஸ் நானே தான்!” – காலரைத் தூக்கியபடிக் கூறிச் சிரித்தாள்.

அவள் சிரிப்பதைக் கவனிக்காது அருகே வந்த பரத் கோபத்துடன் “ஏய், அரைவேக்காடு! நீ பண்ணி வைச்ச வேலைக்கு, இன்னிக்கு எங்க தலை உருளுது. அது தெரியுமா உனக்கு?” – எனப் பொறிந்தான்.

“அதனால என்ன இப்போ?, இன்னொரு 10 நாள் சஸ்பெண்ட் பண்ணினா, வாங்கிக்கோங்க! இதெல்லாம் உங்களுக்குப் புதுசா பாஸ்?” – அசட்டையுடன் தோளைக் குலுக்கினாள் அவள்.

“டேய்… விடுடா.. நாம தான் பண்ணோம்ன்றதுக்கு எந்த சாட்சியும் கிடையாது. அதனால நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல” – ரமேஷ்.

“அப்போ இவ மாட்டினா?” – அசோக்.

“சான்ஸ் இல்ல!, நான் எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணித் தான் செயல்படுத்தினேன்”

“டேய் விஜய், இவளையெல்லாம் நம்ப முடியாதுடா!” – பரத்

சுர்ரென்று எழுந்தக் கோபத்துடன் “ஹலோ! அப்டியே மாட்டினாலும் நான் உங்க பேரை சொல்ல மாட்டேன்! இது முழுக்க முழுக்க, என் முடிவு! என் செயல்! அதனால, இதுக்கு எனக்கு தண்டனை கிடைச்சா அதை நான் அனுபவிச்சுக்குவேன்” எனப் படபடத்தாள்.

“டேய் மச்சான், விடுடா” –பரத்தை நோக்கி அசோக்.

“ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீ எவ்ளோ தைரியமா இருக்க?, உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு” – அவளை தேவி துர்கா ஸ்தானத்தில் நிறுத்தி பயபக்தியுடன் துஷர் கூற…. “டேய், இப்டில்லாம் அவளை நீ ஏத்தி விடாதடா” என்று சிரித்தபடி மிரட்டினான் விஜய்.

‘இவ நல்லவளா.. கெட்டவளா’ ரீதியில் அவளைப் பார்த்து விட்டு ஒவ்வொருவராக நகர்ந்து விட…. கடைசியில் பின் தங்கிய விஜய்யுடன் இணைந்து நடந்தாள் சரண்யா.

அவ்வப்போது அவள் புறம் பார்வையைச் செலுத்தி சிரித்தபடி நடந்தவனை நெருங்கி “சீனியர்….” என்றழைத்தாள்.

தன் தோளை உரசிய அவளது பளிச் பளிச் கன்னத்தை அக்காலை வெயிலில் ரசித்தபடி நடந்த விஜய் “சொல்லுங்க துர்காதேவி” என்றான்..

“உங்களுக்கு இப்போ என்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கா?”

“ஏன் பெருமையா இருக்கனும்?” – விஜய்

“இல்ல, இவ்ளோ நாளா.. நான் லொட,லொடக்குறதைப் பார்த்து என்னை ஒரு பேக்குன்னு நீங்க நினைச்சிருப்பீங்க! ஆனா.. இப்போ இவ்ளோ வீரமா.. அந்தக் கமல்நாத்தை ஒரு நாளைக்கு நூறு தும்மல் போட வைச்சு, ஹாஸ்பிடல்ல படுக்க வைச்சுட்டேன்ல, அதனால தான்”

“ஹாஹாஹா…. பட் சீரியஸ்லி சரண்யா… இப்டி ஒரு யோசனை யாருக்கும் தோணியிருக்காது! ஹாஹாஹா, எப்படி இந்த சல்ஃபியூரிக் ஆசிட் ஐடியா வந்துச்சு?”

“ப்ச், அவனுக்கு அலெர்ஜி தொந்தரவு இருக்குன்னு யதேச்சையாக் கேள்வி பட்டேன்! உடனே அந்தக் காட்டெருமைக்கு ஒரு ஆசிட் பார்சல்ன்னு மூளை மணியடிச்சது! அதான் அப்டி பண்ணிட்டேன்! நான் கெமிஸ்ட்ரில செண்டம் தெரியும்ல?”

“ம்ம்ம், செம போ”

“இப்போ சொல்லுங்க, என்னை நினைச்சா உங்களுக்குப் பெருமையா இருக்கா இல்லையா?”

“இல்ல! ரொம்பப் பயமா தான் இருக்கு”

“பயமா?? எதுக்கு?”

“இந்தக் காலேஜ் எப்பவும் பிரச்சனையோடத் தான் இருக்கும்! நீ ஒவ்வொரு தடவையும் எந்த ஆசிட்டை கமல்நாத்துக்கு அனுப்பி வைக்கப் போறியோன்றதை நினைச்சுத் தான்” – ஜெர்க்கினுக்குள் கை நுழைத்துக் கொண்டு பம்மியபடி கூறியவனைக் கண்டு அவள் கலகலவெனச் சிரிக்க.. “கொஞ்சம் கூட பயம்ன்றதேக் கிடையாது” என்றவன்.. அவள் தோளில் படர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அவளது சுருள் முடியை ஒரு விரலால் பற்றி அருகிலிழுத்தான்.

சிரிப்பில் நிதானமிழந்திருந்தவள் அவன் இழுப்புக்கேற்ப அருகே வர.. தனக்கு வெகு அருகே தெரிந்த…. அவனை மிகவும் ஈர்த்த… அந்த முட்டைக்கண்ணிடம்..

“அன்னைக்கு ஏன் நான் உன் முடியைத் தொட வந்தப்போ தள்ளிப் போன?” – என்று மெல்லிய குரலில் கேள்வி கேட்டான்.

அந்தக் குரலும், அவனது முக பாவமும், அவன் செய்கையும் அன்று போல் உள்ளே குளிரைப் பரப்பி விட.. சட்டென அவனை விட்டு விலகி நின்றவள்….

“இனிமே என்னைத் தொட்டுப் பேசக் கூடாது” - என ஸ்ட்ரிக்டாகக் கூற.. புருவத்தைத் தூக்கி உதட்டை வளைத்தவன் “உங்கப்பா அப்படியொன்னும் மோசமான மனுஷனா எனக்குத் தெரியல” என்றான் சம்பந்தமில்லாமல்.

“இப்போ ஏன் அந்தாளை நியாபகப்படுத்துறீங்க?”

“உனக்கு நிறைய நல்லப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரோன்னு தோணுது எனக்கு. அதான்” – என்றவனை முறைத்தபடித் தோளைக் குலுக்கியவள் “பட், உங்கப்பா உங்களை ரொம்பக் கெட்டப் பையனா வளர்த்திருக்கிறார். கொஞ்சம் கூடப் பயமில்லாம, அன்னைக்கு அவன் வாய்ல பாய்சனை ஊத்தினீங்களே!, ஹப்பா… ரொம்பப் பயந்து போயிட்டேன்” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

“…………..” – பதில் கூறாமல் அமைதியுடன் நடந்தான் அவன்.

“அன்னைக்கு மட்டும் அவனுக்கு ஏதாவது ஆயிருந்தா… என்னாயிருக்கும்?”

“நான் ஜெயிலுக்குப் போயிருந்திருப்பேன்”

“அதனால யாருக்கு லாபமிருந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க?”

“ப்ச்” – பதிலின்றித் தோளைக் குலுக்கினான் அவன்.

அவனது செய்கையில் எரிச்சலுற்று “இனிமே இப்படி பண்ணாதீங்க சீனியர்! அந்த இன்சிடெண்டுக்கு அப்புறம் பத்து நாளா உங்களைப் பார்க்கவும் முடியல! என்னாச்சோ, ஏதாச்சோன்னு எப்படிப் பதறிப் போனேன் தெரியுமா?” – என்று கத்தி விட்டுப் பின் “ஆக்சுவலி, நான் உங்க மேல ரொம்பக் கோபமா இருக்கேன்” எனக் கூறி முறுக்கிக் கொண்டு முன்னே நடந்தாள்.

தெரியவில்லை!!! மனம் ஏன் மீண்டும் மீண்டும் அவள் முன்பு புரள்கிறதென்று! அவள் பார்வையா…. பேச்சா… அல்லது… மிகச் சாதாரணமாக அவள் வெளிப்படுத்தும் சிறுபிள்ளைத்தனமான.. உரிமையா.. கோபமா… எது அவனை சரியச் செய்கிறதென்று…. அவனுக்கேப் புரியவில்லை! ஆனால்.. பிடித்திருக்கிறது! இந்த உணர்வை…! அவளை…! பெயர் வைக்கப்படாத இந்த உறவை…!