அத்தியாயம் - 6

இன்று…..

“எனை மாற்றும் காதலே… எனை மாற்றும் காதலே…

எதையும் மாற்றும் காதலே… காதலே….!”

- ஹெட்செட்டின்யே வழி உருகி வழிந்தக் குரலில் தன்னைத் தொலைத்தபடி.. ‘சத்ரபதி சிவாஜி’ ஏர்போர்ட்டின் டொமெஸ்டிக் டெர்மினல் வழியாக அந்த இரவில்.. சீரான வேகத்தில் வெளியே நடந்து வந்து கொண்டிருந்தான் விஜய்.

பாட்டை நிறுத்தி சிணுங்கிய மொபைலைக் காதுக்குக் கொடுத்தபடி “சொல்லுடா பரத்” என்றான்.

“என்ன மச்சி, பொண்ணு பார்க்குற ஃபங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சதா?” – எதிர்முனையில் கோபக்குரலுடன் பரத்.

“ப்ச், யாரு உன் கிட்ட சொன்னது?, எங்கம்மாவா?”

“லட்சுமிம்மா சொல்லித் தான் எனக்குத் தெரியுது! ஏன்டா? துரோகி!”

“அப்டியே பொண்ணு யாருன்றதையும் சேர்த்துச் சொல்லியிருப்பாங்களே”

“இல்லையே டா! நான் இன்னும் கேட்கல! ஏன்?, யாரு பொண்ணு?”

“அதையும் உன் லட்சுமிம்மாக் கிட்டயே கேளு!, கார் எங்கடா பார்க் பண்ணியிருக்க?”

“பி-10.”

“ம்ம்”

“மச்சான்.. என்னாச்சு டா?” – பரத்

“பெருசா ஒன்னுமில்ல!, நேர்ல பார்க்கும் போது சொல்றேன்!, நீ உன் மதுபாலாவோட அம்ரிட்சர் ட்ரிப்பை எஞ்சாய் பண்ணு” – என்றவன் ஃபோனைக் கட் செய்தான்.

ஆம்! இன்று வரை பரத் அவனது உயிர்நண்பனாகத் தானிருக்கிறான்! அவன் மட்டுமல்ல! அசோக்,ரமேஷ்,தன்வீர்,அகத்தியன் என அனைவரும் ஒன்று சேர்ந்து மும்பையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார்கள்.

நேஷனல் யுனிவர்சிடியில் பி.ஜி முடித்தவர்களுக்கு இந்தியாவின் முன்னணி கம்பெனிகளில் காம்பஸ் இண்டர்வியூவிலேயே வேலை கிடைத்து விட.. அடுத்த இரண்டு வருடத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு நாட்டில் செட்டில் ஆகி விட்டிருந்தனர்.

அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த பரத்,விஜய் இருவருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை போரடித்துப் போக… இருவரும் சேர்ந்து, ஆங்காங்கு சிதறிப் போயிருந்த நண்பர்களை ஒன்று கூட்டி மும்பையில் ஒரு கம்பெனியைத் தொடங்கினர். அது இந்த ஐந்து வருடங்களில் 200 பணியாளர்களுடன் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. பரத் மற்றும் விஜய்யைத் தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்திருந்தக் காரணத்தினால், இவர்களிருவருடைய ப்ரோமான்ஸ் மாத்திரம் இன்று வரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கையிலிருந்தப் பையை பின் சீட்டில் போட்டு விட்டுக் காரில் ஏறி அமர்ந்தான் விஜய். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும், ப்ளேயரை ஆன் செய்தான்.

‘வைகாசி நிலவே.. வைகாசி நிலவே…

மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ…. பொய் பூசி வைத்திருப்பதென்ன?’

-ப்ச்! பரத்தின் ப்ளே லிஸ்ட் இது! அவன் ஹாரிஸ் ஜெயராஜின் தீவிர விசிறி! புன்னகை முகத்துடன் காரை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ… சரண்யாவின் நினைவு வந்தது.

அன்று அவளிடம் கோபம் கொண்டு கீழே வந்தவன், தன்னையே ஆர்வத்துடன் நோக்கிய அன்னை,தந்தையிடம் ‘வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்’ என்று கண் அசைத்து விட்டுத் தாமதிக்காமல் உடனே கிளம்பி விட்டான்.

வீட்டுக்கு வந்த பின்பு “இந்த சம்மந்தம் ஒத்துவராதுப்பா” என்று விட்டவனிடம் காரணம் கேட்டு அன்னை இன்று வரை நச்சரிக்க, தந்தையோ இவனிடம் முகம் கொடுத்துப் பேசுவதையே நிறுத்தி விட்டார்.

“பார்த்தசாரதிக் கிட்ட நான் என்னன்னு சொல்ல?, அதையும் நீயே சொல்லிடு” – என்று பாய்ந்தவரிடம் “எனக்குப் பொண்ணைப் பிடிக்கலன்னு சொல்லிடுங்கப்பா” என்றவன் அடுத்த ஒரே வாரத்தில் விடுமுறையை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டு விட்டான்.

ஏதேதோ யோசித்தபடி, அந்த இருளடைந்த சாலையில் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவன்… பக்கவாட்டிலிருந்த மைல்கல்லில் தள்ளாடியபடி அமர்ந்திருந்த ஒருவனையும், அவனருகே ஒரு பெண்ணையும் கண்டான்.

கடந்து விட எண்ணி வண்டியைச் செலுத்தியவனின் பார்வைத் தன்னை மீறி ரியர் வியூ மிர்ரரை நோக்க… பிங்க் நிறக் குர்த்தாவில், குடை ஜிமிக்கிக் காற்றிலாட.. அருகே அமர்ந்திருந்தவனின் தோளைப் பற்றியபடிக் கவலை தோய்ந்த முகத்துடன்.. அவள் தெரிந்தாள்… அவள் - சரண்யா!

சடன் பிரேக் – இட்டு வண்டியை நிறுத்தியவன்.. ஏதோ ஒரு வேகத்தில் காரை விட்டும் இறங்கி விட… மேலே நடந்து அவளருகே செல்வதற்குள், ‘வாட் த ஹெல் ஆர் யூ டூயிங் ப்ளடி’ என மூளை எச்சரித்ததும், அதே வேகத்துடன் திரும்பி காருக்குள் ஏறியமர்ந்திருந்தான்.

ஆனாலும் காரைக் கிளப்பிக் கொண்டுப் போக மனமில்லாமல்.. மீண்டும் ரியர் வியூ மிர்ரரை நோக்கினான். அருகேயிருந்தவனின் முதுகைத் தடவி ஏதோ கூறிக் கொண்டிருந்தாள் அவள்!

‘ஆளில்லாத ரோட்டுல, எவனுக்கு முதுகு தேய்ச்சு விட்டுட்டிருக்கா கேனச்சி!, மணி என்ன ஆகுது! அவங்கப்பனைத் தவிர வாழ்க்கைல எதுக்குமே பயப்பட மாட்டேங்குறா! இவ-லாம், 50வயசுலயும் அரைவேக்காடாத் தான் இருப்பா!, ஹாஃப் பாயில்!’

-அவனது மனசாட்சி விடாதுப் புலம்பிய வண்ணமிருக்க.. ஒரு கட்டத்தில் அதன் அனத்தலைத் தாங்க முடியாமல்.. கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனது காரையோ, காரின் வெளியே நின்று கொண்டு.. புருவத்தைத் தேய்த்தபடி அவளை எரிச்சல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனையோ அவள் கவனிக்கவேயில்லை.

இன்னமும் அந்தப் பரதேசியின் முதுகைத் தான் தேய்த்துக் கொண்டிருந்தாள். இது என்ன பப்ளிக் பாத்ரூமா?!, எரிச்சல் மிகுதியில் நின்ற இடத்திலிருந்தே பட்,பட்டெனக் கையைத் தட்டினான்.

சர்,சர்ரெனக் கடந்து கொண்டிருந்த வண்டிகளின் சத்தத்துக்கு மத்தியில் இவன் கைகள் எழுப்பிய ஒலி வித்தியாசமாயிருந்ததாலோ என்னவோ, சட்டெனத் திரும்பி அவனிருந்தத் திசையை நோக்கினாள் சரண்யா.

அவள் திரும்பியதும் கைகளைக் கட்டிக் கொண்டுக் காரில் சாய்ந்து நின்றவன், தலையை மட்டும் அவளிருந்தத் திசையில் திருப்பி அவளைப் பார்த்தான்.

அந்த இருளில் தெரிந்த வரி வடிவம், அவன் தான் என்பதை அவளும் நொடியில் கண்டு கொண்டாள். மைல்கல்லின் மீதமர்ந்திருந்தவனைக் கீழே அமர வைத்து விட்டு, விறுவிறுவென இவனை நோக்கி ஓடி வந்தாள்.

“சீ….சீனியர்.. நீ.. நீங்களா??, நீங்க எப்படி இங்க?” – நிம்மதியும்,வியப்புமாய் ஒலித்தது அவள் குரல்.

“ஏன் மும்பை மாநகரம் உன் சொந்த வீடா?, ஆமா, நீ இங்க என்ன பண்ற?, யார் அவன்?” – அப்பட்டமான எரிச்சலை குரலில் வெளிக்காட்டியபடி அவன்.

“அவர் தான்.. நான் சொன்ன ஸ்டீபன்”

“ஓஹோ.. ஏன், உனக்கு ரொமான்ஸ் பண்ண நடுரோடு தான் கிடைச்சதா?, ஹை-வேஸ்ல நின்னு சீன் காட்டிட்டிருக்க?”

“ஹலோ!, வார்த்தையை அளந்து பேசுங்க”

“சாரி, நான் பொதுவா இஞ்ச்-டேப்பை வீட்ல வைச்சிட்டுத் தான் வருவேன்”

“ப்ச், சீனியர்… எரிச்சலைக் கிளப்பாதீங்க ப்ளீஸ்! நீங்க அடிக்கிற காமெடிய ரசிக்குற மனநிலைல நான் இல்ல”

“ஓ!, நான் அடிக்கிறதுக்குப் பேரு காமெடியா?”

“அநாவசியமா பேச வேண்டாம்! அர்ஜெண்ட்டா இப்போ எனக்கு உங்க ஹெல்ப் வேணும்”

“என்ன?”

“ஸ்டீபனுக்கு என்னாச்சுன்னு தெரியல! திடீர்ன்னு ஒரு மாதிரி மயங்கி,மயங்கி விழறான்!, நான் பேசுற எதுக்குமே அவன் கிட்ட ரெஸ்பான்ஸ் இல்ல! எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு” – பதறிய குரலில் அவள்.

பத்தடித் தூரத்தில் மைல்கல்லின் அருகே அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்த்தவன் அவளிடம் “இப்போ நான் என்ன செய்ய?” என்று வினவினான்.

“அவனை ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போக ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” – கலவர முகத்துடன் கெஞ்சியவளிடம் மறுக்க முடியாமல்… அந்த ஸ்டெப்னியிடம்.. சாரி, ஸ்டீபனிடம் சென்றான் விஜய்.

மைல்கல்லின் அருகே மண்டையை ஆட்டியபடி அமர்ந்திருந்தவனின் அருகே சென்றவன் அவன் தோளைப் பற்றி நிறுத்த முயற்சிக்க… அவனோ தடுமாறி விஜய் மீதே விழுந்தான்.

அவன் மீதிருந்து எழுந்த வாசம் சந்தேகத்தைத் தூண்ட.. அவன் முகவாயைப் பற்றி முகத்தை நோக்கினான். அரைக்கண்ணைத் திறந்தபடி மிதப்பில் இருந்தவனைக் கண்டுப் பல்லைக் கடித்தவன் ‘டோப் அடிச்சிட்டு அரை போதைலக் கிடக்குது நாய்’ என்றெண்ணிக் கொண்டு தொப்பென அவனைக் கீழே விட்டான்.

அவன் செய்கையில் கோபமுற்றுப் பதறி ஸ்டீபனின் அருகே சென்ற சரண்யா “என்ன பண்றீங்க நீங்க?” என்று சீறினாள்.

“ஏய்ய், ஹாஃப் பாயில்! இவன் இருக்குற கண்டிஷன்க்கு இவனையெல்லாம் ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போக முடியாது”

“ஏன்?”

“ப்ச், உனக்கு எல்ல்லாஆஆஆஆம் சொல்லனுமா?, பேசாம, இவனை இங்கயே விட்டுட்டு நீ வீடு போய்ச் சேருற வழியைப் பாரு”

“வா..வாட்??, உடம்பு முடியாமக் கிறங்கி விழுகுறவரை அப்படியே விட்டுட்டுப் போகச் சொல்றீங்க?, மனசாட்சியே இல்லையே உங்களுக்கு?”

“உடம்பு முடியாமலா?, ஏய்ய்ய் அவன் போதைல இருக்கான் டி!, உனக்குப் புரியுதா இல்லையா?”

“எ..என்ன சொல்றீங்க?, ஸ்டீபனுக்குத் தண்ணியடிக்குற பழக்கமெல்லாம் கிடையாது! அவன் உங்களை மாதிரி! அளவாத் தான் குடிப்பான்!”

‘யாரை,யாரோட கம்பேர் பண்ணுறா பாரு!, இவளையெல்லாம்….’ – பொறுமையற்றக் குரலுடன் “சரண்யா, இந்த நேரத்துல இந்த அரை-போதை நாயோட நீ ஹை-வேஸ்ல நிற்குறதை உங்கப்பா பார்த்தார்ன்னா, உன்னை வெட்டிப் பொலி போட்டுடுவார், மரியாதையா கிளம்பு”

“முடியாது. அப்டியே அவன் குடிச்சிருந்தாலும்.. என்னால இந்த நிலைமைல அவனை அம்போன்னு விட்டுட்டுப் போக முடியாது”

“அப்போ, இப்டியே அவன் பக்கத்துல உட்கார்ந்து அவன் தெளியுற வரைக்கும் முதுகு தேய்ச்சு விட்டுக்கிட்டே இரு” – எரிச்சலுடன் மொழிந்து விட்டு அவன் தன் காரை நோக்கி நடக்க.. அவன் பின்னேயே ஓடி வந்து “சீனியர்,சீனியர் ப்ளீஸ்…. விட்டுட்டுப் போகாதீங்க! ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என்றாள்.

“என்ன பண்ணச் சொல்ற என்னை இப்போ?” – விஜய்

“பக்கத்துல தான் அவனோட வீடு இருக்கு. அங்க போய் அவனை விட்டுடலாம். ப்ளீஸ்” – என்று கெஞ்சியவளிடம் வேறு வழியின்றி சரியெனத் தலையாட்டி அந்த ஸ்டீபனை இழுத்து வந்துப் பின் சீட்டில் ஏற்றி, அவளிடம் வழி கேட்டு.. அவனது வீட்டிற்கு வண்டியைச் செலுத்தினான் விஜய்.

மிகுந்த போராட்டத்துடன் இருவரும் சேர்ந்து அவனை இழுத்து வந்து அவனது வீட்டின் முன்பு நிறுத்தினர்.

“என்ன பூட்டியிருக்கிற கதவையே முறைச்சுப் பார்த்திட்டு இருக்கிற?, திறந்திடு சீசேம்ன்னு சொன்னா கதவு திறந்திடுமா?” – சரண்யாவை நோக்கி முழு எரிச்சலில் கோபமாய்க் கேட்டான் அவன். ப்ளைட்டில் சாப்பிட்ட சாண்ட்விச்சை வயிற்றில் வைத்துக் கொண்டு, இந்தக் கெடாமாட்டை இழுத்து வந்திருக்கிறான்! பசி வேறு ஒரு புறம்! எல்லாம் இவளால் வந்தது! அரைவேக்காடு!

“சாவி… சாவி… எங்கயிருக்குன்னு தெரியலயே!, அவனோட பேண்ட் பாக்கெட்டை செக் பண்ணுங்க ப்ளீஸ்..”

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?” – என்றவன் வேறு வழியில்லாமல் அவள் சொன்னதைச் செய்ய.. கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்.. ஹாலிலேயே அவனை டமாலெனக் கீழே போட்டு விட்டு ‘ஹப்பாடா’வென அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் விஜய்.

“ப்ச், என்ன இப்படிப் போட்டுட்டீங்க?, பெட்ல படுக்க வைச்சிருக்கலாம்ல?”

“இந்த நாய்க்கு இது போதும்”

“மரியாதையில்லாம பேசாதீங்க”

“அப்டித் தான் டி பேசுவேன்” – என்று அவளிடம் பதில் கூறிக் கொண்டே வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டான்.

பையன் பிட் பார்ட்டி போலும்! ஆங்காங்கு நீச்சல் உடையில் ஹாலிவுட் அழகிகளின் உடல் மினுமினுத்தது. சட்டென அவள் புறம் திரும்பியவன் “நீ இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கியா?” என்று வினவினான்.

அவன் பார்வை சென்ற திசையைத் தானும் நோக்கிய சரண்யாவும் முகத்தைச் சுழித்தபடி “ம்ஹ்ம் வந்ததில்ல. இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம்” என்றாள்.

தொடர்ந்து “இ….இதையெல்லாம் பார்த்து ஸ்டீபன் தப்பான ஆளோன்னு நினைக்காதீங்க!, அவனுக்கு ஒரு ரூம்-மேட் இருக்கான்! மே பி, அவனோட வேலையா இருக்கும்” எனக் கூற..

“தப்பித் தவறி இந்தப் படத்தைப் பார்த்தாக் கூட ஸ்டீபன் கண்ணை மூடிப்பார்ன்னு சேர்த்துச் சொல்லேன்!, அதையும் நம்புறேன்” – என்று பதில் கூறி விட்டு.. கன்றிய அவள் முகத்தைக் கவனிக்காமல்.. ஃப்ரேம் செய்யப்பட்டிருந்த ஸ்டீபன் புகைப்படத்தின் அருகே சென்று நின்றான்.

கன்னம் முழுக்கத் தாடியுடன் ஃபார்மல்ஸில் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தவனைக் கண்டு ‘இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே’ என்று அவன் நெற்றியைச் சொரிந்தபடித் தன் மொபைல் கேமராவில் அந்தப் படத்தைக் க்ளிக்கி யாருக்கோ அனுப்பினான்.

அடுத்த சில நிமிடத்தில் ‘டிங்,டிங்’ என ஒலியெழுப்பியபடி அவனது மொபைலில் வந்து விழுந்த மெசேஜைப் படித்து விட்டுப் பல்லைக் கடித்தான்.

தரையில் நீச்சலடித்தபடி அரைக்கண்ணுடன் கிறங்கிப் போய்க் கிடந்த ஸ்டீபனை, அவள் கன்னத்தில் கை வைத்தபடிக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அதிகமா குடிச்சா இப்ப்படித் தான் பிஹேவ் பண்ணுவாங்களா சீனியர்?” -சரண்யா

“ஏய் மென்டல்! அவன் குடிச்சிருக்கிறான்னு உனக்கு யார் சொன்னது?”

“அவன் போதைல இருக்கிறதா நீங்க தான சொன்னீங்க?”

“குடிச்சா மட்டும் தான் போதையேறுமா?, ஹாஃப் பாயில்”

“பின்ன?”

“அவன் ட்ரக் அடிச்சிருக்கான்!”

“ட்….ட்….ட்…ட்ரக்காஆஆஆஆ?” – கண்கள் பெரிதாய் விரிய.. அதிர்ச்சியுடன் நின்று விட்டவளைக் கண்டு அலட்டிக் கொள்ளாமல் “நைட் எல்ல்லாம் இந்த ஆரோக்கிய தாஸ் கூட இருக்கிறதா ஐடியா எதுவும் வைச்சிருக்கியா?” என்று வினவினான்.

ஏற்கனவே அதிர்ச்சியிலிருந்தவள் பயத்துடன் “இ….இல்ல,இல்ல.. நான் கிளம்பப் போறேன்” என்று விட்டு வேகமாய் அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள்.

‘இவனுக்குப் போதைப் பழக்கம் இருக்கா??, இத்தனை நாள் பழகியும் எப்படித் தெரியாமல் போனது?, அதிர்ச்சி மாறாமல்.. தடதடக்கும் இதயத்துடன் விறுவிறுவெனக் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவளை… “சரண்யா, நில்லு” என்ற விஜய்யின் குரல் தடுத்து நிறுத்தியது.

அவன் முகம் பார்க்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளிடம் “உன் கூடப் பேசனும்” என்றவன் தன் காரின் அருகே அழைத்துச் சென்றான்.

“உனக்கு இவனை எவ்ளோ நாளா தெரியும்?” – விஜய்

“…………….”

“பதில் சொல்லு. காரணமில்லாம நான் உன்னைக் கேள்வி கேட்கல”

“5,6 மாசமாத் தான் பழக்கம்”

“ஓ!, கண்டதும் காதலா?” - விஜய்

“……………..”

“எப்படிப் பழக்கம்?”

“Common ஃப்ரண்ட் ஒருத்தி மூலமா அறிமுகம் ஆனான். அவன் தான் ப்ரபோஸ் பண்ணான்! பேசிப் பழகினதும் பிடிச்சிருந்தது! அப்பாக்கிட்டயிருந்து கல்யாணத்துக்குப் ப்ரஷர் வேற! அதான் சட்டுன்னு ஓகே சொல்லிட்டேன்!”

“ஹ்ம், அவனைப் பத்தி எதுவும் தெரியாமலே ஓகே சொல்லிட்ட? அப்படித்தான?”

“இல்ல, என் ஃப்ரண்ட் ஜூலிக்கு இவனை ரொம்ப நாளாத் தெரியும்! அவ நல்ல பையன்னு சொன்னதால தான் நான் ஓகே சொன்னேன்”

“ஓ! அப்போ ஜூலி எவனைப் பார்த்து நல்லவன்னு சொன்னாலும் நீ ஓகே சொல்லிடுவ?”

“என்னைக் கோபப்படுத்தனும்ன்னு தான பேசுறீங்க?, உங்கக் கூட கல்யாணம் வேணாம்ன்னு சொன்னதுக்கு, என்னை அசிங்கப்படுத்தனும். அதான உங்க நோக்கம்?, பேசுங்க! நீங்க என்ன பேசுனாலும் பல்லைக் கடிச்சுட்டு சகிச்சுக்கிறேன்” – கோபமும், இயலாமையும் போட்டி போட.. சிவந்த முகத்துடன் கூறியவளிடம்…

“அவன் நல்லவன் இல்ல சரண்யா” – என்றான் விஜய்.

நெற்றியைச் சுருக்கியபடி அவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.

“என் கம்பெனியோட எக்ஸ்-எம்ப்ளாயி இவன்! போதை மருந்து யூஸ் பண்ணுறான்னு தெரிஞ்சு கம்பெனியால டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆளு!”

“……………….” – அடுத்தடுத்த அதிர்ச்சிகளை உள்வாங்கியபடி திகைப்புற்றுச் சிலையானாள் அவள்.

“அவன் கிறிஸ்டியன் தான்னு உனக்கு யார் சொன்னது?”

“ஜூ….ஜூலி”

“என் கம்பெனில அவன் மாதவகிருஷ்ணன்ற பேர்ல இருந்தான். மோர் ஓவர், அவனுக்கு அம்மா,அப்பான்னு யாரும் கிடையாது! அவன் படிச்சது வளர்ந்ததெல்லாம் ஆசிரமத்துல தான்”

“பேரண்ட்ஸ்ன்னு 2 பேரை எனக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணி வைச்சானே!”

“எல்லாம் செட்-அப்-ஆ இருந்திருக்கலாம்”

“…………………..”

முகம் இறுகிப் போய் அவள் நின்றிருந்த விதம் அவனது கோபத்தை அதிகமாகக் கிளப்பியது. இந்த நாதாரிக்காக என்னை நிராகரித்திருக்கிறாள்! பின்னந்தலையை அழுந்தக் கோதியபடிக் கார்கண்ணாடியைக் குத்தியவன்…. அதுவரையிருந்தப் பொறுமை பறக்க…

“நீயெல்லாம் நேரா போய் கீழ்பாக்கத்துல அட்மிட் ஆயிடு! வெளில சுத்த வேண்டிய ஆளே கிடையாது நீ! கேன ******-ஆட்டம் பிடிச்சிருக்காப் பாரு ஒருத்தனை! ஏன் டி வயசுக்குரிய மெச்யூரிட்டி கூடவாக் கிடையாது உனக்கு?, பெரிய ***** கொள்கை! கடைபிடிக்காட்டி என்ன உயிரையா விட்ருவ?, கிறிஸ்டியன் பையன் தான் வேணுமாம்! ஏன், ஹிந்துப் பையனைக் கட்டிக்கிட்டாப் பிள்ளை பெத்துக்க முடியாதா?”

-அதிகபட்சக் கோபத்தில் சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளை உச்சரித்த வண்ணம் அவளை விளாசித் தள்ளினான்.

“உன்னைப் பார்க்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப அதே வார்த்தையைத் தான் சொல்ல வைக்குற! தயவு செஞ்சு இனிமே என் கண்ணுலயே படாத” – கோபமாய் மொழிந்து விட்டுக் காரில் ஏறிச் சென்று விட்டான் விஜய்.

அவன் எத்தனை முறை அவ்வசனத்தைக் கூறினாலும், விதி தன் சதி வேலையைச் சரியாகச் செய்து இருவரையும் மறுபடி சந்திக்க வைத்தது. இம்முறை அவனைத் தேடி வந்தவள் சரண்யா!

விஜய் அவளைச் சந்தித்த இரண்டே வாரத்தில்… ஒரு புதன் கிழமையன்று காலை ThenWare Infotech-ன் ரிஷப்ஷனில் துப்பட்டாவைக் கசக்கியபடி எரிச்சலுடன் அமர்ந்திருந்தாள் சரண்யா.

அவள் அமர்ந்திருந்த சோபாவின் எதிரிலிருந்த லிஃப்டிலிருந்து வெளிப்பட்ட பரத் அந்த ஸ்பிரிங் முடியை வைத்து சரண்யா என்பதைக் கண்டு கொண்டு… வேகமாக அவளருகே வந்தான்.

“சரண்யா….” – அவள் தானோ என்கிற சந்தேகத்தில் சற்றேக் குனிந்து மெல்ல அழைத்தவனின் குரலில் சட்டென நிமிர்ந்து நோக்கினாள் சரண்யா.

டார்ஜிலிங்கில் இருந்த போது மீசை,தாடி ஏதுமில்லாமல் வெள்ளை நிறத்தில் ரசகுல்லாவைப் போலிருந்தவன் இப்போது லேசாகக் கருத்து வயதின் முதிர்ச்சியுடன், அளவான மீசையுடன், அவள் கண்ணுக்கு இன்று ஹீரோவைப் போலத் தெரிந்தான்.

முகம் மலர சல்யூட் வைத்து “குட்மார்னிங் சீனியர்” என்றவளை ஒரு மாதிரி நோக்கி “ஹ்ம்ம், காலேஜ்ல இருந்த வரைக்கும் ஒரு நாள் கூட சீனியர்ன்னு என்னை மரியாதையா கூப்பிட்டதில்லை. இப்போ என்ன புதுசா?” என்று அவன் கேட்க… அசடு வழிந்தபடித் தலையைச் சொரிந்தாள் அவள்.

“எப்படியிருக்க?, நீ எங்க இங்க?, ரொம்ப வருஷமாச்சு உன்னைப் பார்த்து”

“ப்ச்! சும்மா சீனைப் போடாதீங்க மைதா!, வார,வாரம் ஃபேஸ்புக்ல நான் போடுற ஃபோட்டோஸ்க்கு முதல் ஆளா.. லைக் போடுவீங்க!, என்னவோ இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் என்னைப் பார்க்குற மாதிரி எதுக்கு டிராமா?”

“சரி, வாயைக் குறை. நான் உன்னை ஃபேஸ்புக்ல ஃபாலோ பண்ணிட்டுத் தான் இருக்கேன். ஒத்துக்கிறேன், இப்போ என்ன விசயமா இங்க வந்திருக்கிற?”

“நான் விஜய் சீனியரைப் பார்க்கனும். ரொம்ப முக்கியமான விசயம்” – சற்றே பதட்டத்துடன் கவலை படிந்த முகத்தோடுக் கூறியவளைக் கண்டு “ரிஷப்ஷன்ல சொல்லிட்டு உள்ளே போக வேண்டியது தான?” என்று வினவினான் பரத்.

“ப்ச், அவர் என்னைப் பார்க்க விரும்பல போல!, உங்க ரிஷப்சனிஸ்ட் சொல்லியனுப்பியும் எனக்கு உள்ளே போக பர்மிஷன் கிடைக்கல”

“விஜய் உன்னைப் பார்க்க விரும்பலயா?” – ஆச்சரியத்துடன் வினவியவன் “சரி, என்னோட வா, நான் அழைச்சிட்டுப் போறேன்” என்றபடி அவனுடன் அழைத்துச் சென்றான்.

கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த பரத்தைத் தொடர்ந்து பின்னே வந்தவளின் மீது ஒரு பார்வையைச் செலுத்திய விஜய் அதன் பின்புத் தன் லேப்டாப்பில் கவனமாகி விட்டான். கடுப்பாகி பரத்தை நோக்கினாள் அவள்.

“ப்ச், பொண்ணு பார்க்க வந்தவனை நீ ரிஜெக்ட் பண்ணி அனுப்பினா, அவன் இப்படித் தான் ரியாக்ட் பண்ணுவான். ஆமா, என் நண்பனுக்கு என்னை குறைச்சல்?” - பரத்

“என் சிச்சுவேஷன் தெரியாம, இஷ்டத்துக்குப் பேசாதீங்க”

“எல்லாம் தெரியும்! ஸ்டீபன் என்கிற மாதவகிருஷ்ணனைப் பத்தி இவனுக்கு டீடெயில்ஸ் அனுப்பினவனே நான் தான்!, காதலுக்குக் கண்ணில்லைன்றதுக்கு நீ ரொம்ப நல்ல எக்ஸாம்பிள் சரண்யா” – பரத்.

“அதைக் காதல்ன்னு சொல்லி காதலை அசிங்கப்படுத்தாதடா பரத்” – முழு எரிச்சலுடன் விஜய்.

முகம் கன்ற தலை குனிந்தவள் “என்னை எவ்ளோ வேணா அசிங்கப்படுத்திக்கோங்க, நான் வேணாம்ன்னு சொல்லல! ஆனா… அதுக்கு முன்னாடி நான் மாட்டியிருக்கிற பிரச்சனைல இருந்துத் தப்பிக்க எனக்கொரு வழியைச் சொல்லுங்க ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

பத்து வருடத்திற்கு முன்னே பார்த்த சரண்யாவிற்கும், இப்போதிருப்பவளுக்கும் பெரிதாக ஏதும் வித்தியாசமிருப்பதாய்த் தெரியவேயில்லை பரத்துக்கு! வயதின் தாக்கத்தில் கொஞ்சமே கொஞ்சம் முகம் மாறியிருக்கிறது! மற்றபடித் தலை முதல் கால் வரை அதே லூசுத்தனம்! தாண்டவமாடுகிறது!

“இப்போ என்ன ஆச்சு?” – பரத்.

“அவரைக் கேட்கச் சொல்லுங்க” – விஜய்யை நோக்கிக் கை நீட்டினாள் சரண்யா.

“டேய் விஜய், நீ கேளுடா” – பரத்.

“நான் ஏன் கேட்கனும்?, எப்போப் பார்த்தாலும், இவ எந்தப் பிரச்சனைலயாவது போய் மாட்டுவா! இவளைக் காப்பாத்தி விட்றது தான் என் வேலையா?, பத்து வருஷத்துக்கப்புறம் பார்த்தும் பாடு படுத்துறா!, ஏய்… நீ என் கண்ணுலயே படக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?, வெளியே போடி…” – கோபமாய்க் கத்தினான் விஜய்.

ரோஷத்துடன் எழுந்தவள் அவனை முறைத்து விட்டு விறுவிறுவென வெளியேறி விட… “ஏய் என்ன மச்சி?, என்னப் பிரச்சனையோ பாவம்!, போய்க் கேளு டா போடா…” என நச்சரித்து அவள் பின்னேயே அவனை அனுப்பி வைத்தான் பரத்.

அந்தக் கட்டிடத்தின் வாசலருகேயிருந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்தவளின் அருகே வந்து நின்றான் விஜய். அவனைக் கண்டு கொள்ளாமல்.. நேரே வெறித்தபடி அமர்ந்திருந்தவளைக் கண்டு எரிச்சலுற்று ஸ்லீவ்ஸை முட்டி வரை ஏற்றி விட்டுக் கொண்டுப் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“உங்களுக்கு சிகரெட் குடிக்கிற பழக்கமிருக்கா?” – விரிந்த விழிகளுடன் சரண்யா.

“ஆமாடி! பிடிப்பேன்! என்ன இப்போ?, டோப் அடிக்கிறவனையே நல்லவன்னு நம்பி லவ் பண்றவளுக்கு, இதெல்லாம் ஏன் பெரிய குற்றமாத் தெரியுது?”

பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வார்த்தைகளைச் சகித்தவள் “அவனுக்கு இந்தப் பழக்கமிருக்கிறதே எனக்குத் தெரியாது” என்றாள்.

“அது மட்டுமா உனக்குத் தெரியாது?”

“ப்ச், ஜூலி சொன்னதை அப்படியே நம்பித் தான் நான் அவனுக்கு ஓகே சொன்னேன்”

“எவ அவ ஜூலி?, அவ சொன்னா.. அவ சொன்னா ஓகே சொல்லிடுவியா?, உனக்கு மூளை இல்ல?, நீயெல்லாம் கோல்ட் மெடலிஸ்ட்ன்னு வெளியே சொல்லிக்காத”

“என் கிட்டயும் அவன் டீசண்டா தான் பழகுனான்!”

“அவனுக்கு வக்காலத்து வாங்கி என் கோபத்தைக் கிளறாத சரண்யா ப்ளீஸ்..”

“நான் எதுக்காக ஒரு ஃப்ராடுக்குப் போய் வக்காலத்து வாங்கப் போறேன்” – முணங்கியபடித் திரும்பிக் கொண்டாள் அவள்.

“………………” – அமைதியாக புகையை வெளியிட்டான் அவன்.

“ஒரு வகையில இதுக்கெல்லாம் நீங்களும் தான் காரணம்” – சரண்யா.

புகையை வெளியிட்டுக் கொண்டே புருவத்தைச் சுருக்கி அவனை நோக்கினான்.

“அவனை மீட் பண்ணப்போ, அவனும் உங்களை மாதிரியே தாடி,மீசையெல்லாம் வைச்சிருந்தான்!, உங்க ஹைட்,உங்க வெயிட்! உங்க கலர்! உ…உ..உங்களை அவன் நினைவுபடுத்துனதால, அவன் ப்ரபோசலுக்கு சரின்னு ஒத்துக்கிட்டேன்”

-மெல்ல வீசிய காற்றில் லேசாக ஆடிய அவள் துப்பட்டா, களைந்து சென்ற அவனது சிகரெட் புகை, தூரத்தில் ஒலித்த ஹாரன் சத்தம், அவர்களிருவருக்கும் இடையே நடந்து சென்ற பச்சை சுடிதார்ப் பெண் என அனைத்தும்.. அவன் கண்களில் ஸ்லோ-மோஷனில் தெரிந்தது.

மறுபடியும் கம்பேர் செய்கிறாள்! எதற்காக இந்த ஒப்பீடு?, அவனைப் பற்றி என்ன தான் நினைத்து வைத்திருக்கிறாள்! முட்டாள்!

சிகரெட்டை அணைத்து அருகிலிருந்த டஸ்ட்-பின்னுக்குள் போட்டு விட்டு அவளருகே வந்து நின்றவன் “சொல்லு, என்னப் பிரச்சனை உனக்கு?” என்று வினவினான்.

நிமிர்ந்து அவனை நோக்கியவள் “சொன்னா.. திட்டாம எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா?” என்று பாவமாய் வினவினாள்.

“ப்ச், நீ என்னன்னு சொல்லு முதல்ல”

“வ…வந்து..”

“ம்”

“Marijuana-ன்னா என்ன?” – மெல்லிய குரலில் வினவினாள்.

“ட்ரக் தான். தடை செய்யப்பட்ட போதைப் பொருள். ஏன்?”

“ஸ்….ஸ்டீபன் கிட்ட அந்த ட்ரக் இருந்ததா, அவனை 2 நாளைக்கு முன்னாடி போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க”

“அவனுக்கு இதெல்லாம் புதுசில்ல. அவன் ஏற்கனவே கம்பி எண்ணினவன் தான், ஏன்?, அவனுக்காக ரொம்ப ஃபீல் பண்றியோ!”

“ப்ச், அந்த ஃப்ராட் நாய்க்காக நான் ஏன் ஃபீல் பண்ணப் போறேன்!” – முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டவளிடம் “பின்ன?” என்று வினவினான் அவன்.

“அவன் கைக்கு அந்த ட்ரக் எப்படிக் கிடைச்சதுன்னு இப்போ விசாரணை நடந்துட்டிருக்கு. அவனோட ஃபோன்,மெயில்,சோஷியல் நெட்வர்க்ன்னு எல்லாம் போலீஸ் கிட்ட மாட்டியிருக்கு”

“அதனால?”

“அவனோட கால் ஹிஸ்ட்ரில ரிபீட் ஆயிருக்கிற நம்பர்ஸ் ஆட்களை போலீஸ் விசாரிக்குறதா எனக்கு இன்ஃபர்மேஷன் கிடைச்சது. அ…அதுல என்.. என் நம்பரும் ஒன்னு!” – ‘ஏழு கழுதை வயசுல இப்டி ஒருத்தன் கிட்டப்போய் சிக்கியிருக்கேடி!’ என அவமானப்படுத்திய மனசாட்சி அவள் முகத்தைக் கன்றச் செய்ய… இறங்கிய குரலில் கூறினாள் அவள்.

யோசனையில் நெரித்திருந்தப் புருவத்தோடு.. நேரே பார்த்தபடி நின்றிருந்தவனிடம் “போலீஸ், விசாரணை அது,இதுன்னு நான் போனா.. எங்கப்பா என்னைக் கொன்னுப் போட்டுடுவார்” என்று கவலையுடன் கூறினாள்.

இத்தனைப் பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கிறோம் என்கிற பயமின்றி இப்போதும் தந்தையை நினைத்து நடுங்கியவளைக் கண்டு எரிச்சலானது விஜய்க்கு.

“அப்பாவுக்கு அவ்ளோ பயப்படுற!, உனக்கு எதுக்குடி காதல்,கத்தரிக்காயெல்லாம், அதுவும் கிறிஸ்டியன் பையனோட?”

“தப்புத் தான். ரொம்ப ரொம்பத் தப்பு தான்! ஒத்துக்கிறேன்! அதுக்காக நீங்கத் திருப்பித் திருப்பி அதையே சொல்லிக் காட்டி ரொம்பவும் அவமானப்படுத்த வேண்டாம்” – மொத்தமாய் சிவந்து போய் தகதகத்த முகத்துடன் அவள் கூற… “ஊஃப்ஃப்ஃப்ஃப்” எனப் பெருமூச்சை வெளியிட்டபடித் தலையைக் கோதினான் அவன்.

“சாரி சீனியர்! உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு!, ஆனா.. எனக்கு என்ன பண்றதுன்னு சுத்தமாப் புரியல! இந்த ஜூலியை வேற காண்டாக்ட் பண்ண முடியல! நம்பர் நாட் எக்ஸிஸ்ட்ன்னு வருது!” – கவலையாய்ப் புலம்பியவளிடம் ஏளனமாய் உதடு சுழித்தவன் “அவளும் ஒரு கஞ்சா******-ஆத் தான் இருப்பா!, அதான் எஸ் ஆயிட்டா போல” என்றான்.

“நீங்க இப்போல்லாம் ரொம்பக் கெட்ட வார்த்தை பேசுறீங்க சீனியர்”

“அப்படித் தான் டி பேசுவேன்! அப்படித் தான் பேசுவேன்! நீ வாயைத் தொறக்காத! நீ பேசுனாலே எனக்கு எரிச்சல் வருது!” – காட்டுக்கத்தலாய் கத்தியவனிடம் எதிர்த்து எதுவும் கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

இருப்பது இவன் ஒருவன் மட்டுமே! ஏற்கனவே ஸ்டீபனைப் பற்றி நன்கு அறிந்தவன்! இவனை விட்டால்.. அப்பாவிடம் சென்று தான் நிற்க வேண்டும்! பெண்ணுக்கு வயதாகி விட்டதென்கிற எண்ணம் சிறிதுமின்றி மனிதர் இப்போதும் பெல்ட்டைக் கழட்டி விடுவார்! அதற்கு.. இவனிடம் கிழி வாங்குவது எவ்வளவோ பரவாயில்லை!

“இப்போ என்ன பண்றது?” – சரண்யா.

“நீ தான் கஞ்சா சப்ளை பண்ணன்னு ஒத்துக்கிட்டுப் போய் ஜெயில்ல உன் ஸ்டீபனோட ஜோடியா உட்கார்ந்துக்க. இப்போதைக்கு அது ஒன்னு தான் வழி!”

“ப்ச், சீனியர்”

“விசாரணையிலிருந்துல்லாம் தப்பிக்க முடியாது. ஃபேஸ் பண்ணித் தான் ஆகனும்”-அவன் கூறியதும் பேயறைந்தது போல் ஆகி விட்ட அவள் முகத்தைக் கண்டவன் “ஏதாவது யோசிக்கிறேன்! எனக்கு டைம் கொடு” என்று விட்டு.. விறுவிறுவென அலுவலகக் கட்டிடத்தை நோக்கி நடந்தான்.