அத்தியாயம் - 7

TechnoFest 2004, The National university.

ல்லூரி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப் பேனரைக் கடந்து சென்ற ஒவ்வொரு முகங்களிலும் விழாக்காலத்துக்கே உரித்தான குதூகலம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

ஆம்! நேஷனல் யுனிவர்சிட்டில் அந்த வருடத்திற்கான ஆல் டிபார்ட்மெண்ட் சிம்போசியம் கோலாகலமாகத் தொடங்கியிருந்தது. சண்டை,சச்சரவுகளையும், உள்நாட்டுக் கலவரங்களையும் சற்று ஒத்தி வைத்து விட்டு, அனைவரும் ஒன்று கூடி ஒரு வார காலத்திற்கு ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமென கொட்டமடிக்க முடிவு செய்திருந்தனர்!

டான்ஸ்,பாட்டு, நாடகம், நடிப்பு என ஒருபுறம் நடக்கும் கல்ச்சுரல்ஸ்களுக்கு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் சார்பில் பரத் தலைமை தாங்கியிருக்க, இந்தப் புறம் பேப்பர் ப்ரசண்டேஷன், டெக்னோ க்விஸ், என பாடம் சம்பந்தப்பட்ட விசயங்கள் விஜய்யின் மேற்பார்வையின் கீழ் நடந்தது.

அன்று பேப்பர் ப்ரசண்டேஷன் நடக்கவிருக்கும் ஹாலிலிருந்த கம்ப்யூட்டரையும், ப்ரொஜக்டரையும் சரி பார்த்தபடி அமர்ந்திருந்த விஜய்யின் முகத்தில் அப்படியொரு புன்னகை! காரணம்… வழக்கம் போல் சரண்யா தான்! மந்தகாசத்துடன் கூடிய அந்த ரொமாண்டிக் புன்னகையை அவளைத் தவிர யாரால் அவன் முகத்தில் கொண்டு வர முடியும்?

மேடையின் ஓரத்திலிருந்தக் கணிணியில் வழக்கம் போலக் பாட்டை ஒலிக்க விட்டுக் கொண்டுப் பார்வையைப் பதித்திருந்தவன் “சரண்யா, இன்னும் 30-மினிட்ஸ்ல ப்ரசண்டேஷன் ஸ்டார்ட் ஆகப் போகுது! நீ ப்ரிப்பேர் பண்ணாம, இங்க என்ன பண்ணிட்டிருக்க?” – அவள் புறம் திரும்பாமலேயே வினவினான்.

மேடையின் மறு ஓரம் கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்…

“ம்ம்ம், உங்களை சைட் அடிச்சிட்டிருக்கேன்” – என்றாள்.

கணிணியை நோக்கிக் கொண்டிருந்தவனின் இதழ்கள் நீண்டு விரிந்து… அழகான புன்னகையைக் கொடுக்க… “அடங்கவே மாட்ட நீ” என்றான்.

“ஆமா!, சாதாரண நாள்லயே உங்களை ஆ-ன்னு பார்ப்பேன்! இன்னைக்கு ஃபுல் ஃபார்மல்ஸ்ல, டக்-இன் பண்ணின ஷர்ட்!, டை-ன்னு இவ்ளோ ஹாண்ட்சம்மா கண்ணு முன்னாடி நிற்கிறீங்க! பார்க்காம இருப்பேனா??” – சரண்யா.

“ஷ்ஷ்ஷ்…. சரண்யா.. வெளிய போ நீ! என்னையே வெட்கப்பட வைச்சுடுவ போல!”

“ஹே.. ஹே…. உங்களுக்கு வெட்கமெல்லாம் வருமா?, எங்க,எங்க நான் பார்க்குறேன்” –என்றபடி படி ஓடி வந்து அவன் முன்னே நின்று கொண்டு.. ஆர்வத்துடன் அவனது முகம் நோக்கியவளைப் புன்னகை மாறாமல் நோக்கினான் அவன்.

எப்போதும் தோளில் புரளும் சுருட்டை முடியை அன்று ஏற்றிச் சீவி பேண்ட் போட்டிருந்தாள். முட்டைக் கண்களில் பட்டையாய்த் தீட்டப்பட்டிருந்த மை! வழக்கம் போல் பளபளத்தக் கன்னம்! ஆனால்.. அனைத்தையும் தாண்டி அன்று அவனை வெகுவாக ஈர்த்தது…. லிப்-க்ளாஸ் பூசப்பட்டிருந்த அவளது ஜாமூன் இதழ்கள் தான்! அவளது சரும நிறத்திற்கு ஒத்துப்போகும் லைட்-கலரில் பளபளப்புடன் தீட்டப்பட்டிருந்த அந்த லிப்-க்ளாஸ் இதழ்கள் ஏனென்றே புரியாமல்.. அநியாயத்திற்கு அவனை வசமிழக்கச் செய்து கொண்டிருந்தது.

“அச்சோ… அச்சோ.. இன்று ரொம்பத் தோணுதே..

அச்சோ.. அச்சோ.. ஏனோ ஆசை கூடுதே..

ஒரு காதல் வந்துச்சோ…. ஒது காதல் வந்துச்சோ…”

-சூழ்நிலைக்கேற்றவாறு கணிணி இசைத்த கீதத்தைக் கண்டு அவன் வாய் விட்டு நகைக்க.. புரியாமல் விழித்தாள் அவள்.

“ஏன் சிரிக்கிறீங்க?” – சரண்யா

“சும்மா தான்! ஏன், நான் சிரிக்கக் கூடாதா?”

“சிரிங்க! நல்லா சிரிங்க! நிறையா சிரிங்க! எனக்கு நீங்க சிரிக்கிறதைப் பார்க்க ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு..” – கண்களை அகல விரித்து சிறுபிள்ளைத்தனமாகக் கூறியவளின் முகத்தில் மொத்தமாய் வீழ்ந்து… தனக்கு வெகு அருகே நின்றிருந்தவளின் கன்னத்தில் மெல்லத் தனது வலது கையைப் பதித்தான் அவன்.

தலையை மெல்லச் சாய்த்து.. ஓரக்கண்ணால் அவன் கையை நோக்கி.. ஒற்றை விரல் கொண்டு அந்தக் கரத்தை விலக்கியவள் “என்னைத் தொட்டுப் பேசக் கூடாது” எனக் கூற.. நீண்டிருந்தக் கையை உயர்த்தி அவள் தலையில் நங்கெனக் குட்டி வைத்தான் விஜய்.

“என் வேலையைக் கெடுக்காம வெளியே போ நீ” - விஜய்

“ப்ச், நீங்க சரின்னு சொல்லுங்க”

“என்ன? எதுக்கு சரி-ன்னு சொல்லனும்?”

“இன்னிக்கு நான் பண்ணப் போற ப்ரசண்டேஷனுக்கு ஃபுல் மார்க் போட்டு எனக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கித் தர்றதுக்கு சரின்னு சொல்லுங்க”

“ஹ்ம்ம்! ஜட்ஜிங் பானல்-ல உட்காரப் போறவனை இப்படிக் காக்கா பிடிக்கிறியே! வெட்கமாயில்ல உனக்கு?”

“ப்ளீஸ்.. ப்ளீஸ் சீனியர்”

“நான் எதுக்கு நீ ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்க ஹெல்ப் பண்ணனும்?, அதுக்கு முதல்ல காரணம் சொல்லு”

“ஏன்னாஆஆஆஆஆ.. நான் உங்களுக்கு ‘சம்திங் ஸ்பெஷல்’” – இழுத்துக் கூறி கண் சிமிட்டியவளிடம்…

உதட்டை வளைத்து “ம்ஹ்ம்??” என்றான்.

“ம்ம்ம், அப்புறம்ம்ம்…… இந்தக் காலேஜ்லயே உங்களை சைட் அடிக்கிற ஒரே பொண்ணு”

“ப்ச், இந்த ஸ்டேட்மெண்ட் நேத்து வரைக்கும் உண்மையா தான் இருந்தது. பட், இப்போ அப்டிக் கிடையாதே சரண்யா”

“ஏன் ஏன் ஏன்?”

“நேத்து… நான் dorm-க்கு போயிட்டிருந்த வழில… என்னை ஒரு ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஸ்டாப் பண்ணி சாக்லேட்ஸ் கொடுத்து ப்ரபோஸ் பண்ணினா” என்றவன் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஒரு சாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“அவ கொடுத்தது தான்! சாப்பிட்டுப் பாரேன், வெர்ர்ர்ர்ரி ஸ்வீட்”

எரிச்சலுடன் சாக்லேட்டைத் தூக்கி எறிந்தவள் “நீங்க எதுக்கு அவ கொடுக்கிற சாக்லேட்டெல்லாம் வாங்கி சாப்பிடுறீங்க?, சாக்லேட் தான் வேணும்ன்னா என் கிட்ட சொல்லியிருக்கலாம்ல?, நான் வாங்கிக் கொடுத்திருப்பேன்” எனக் கூற.. விஜய்யினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ப்ச், ஏன் சரண்யா தூக்கிப் போட்ட?, உனக்கு வேணாம்ன்னா என் கிட்டக் கொடுத்திருக்கலாம்ல?, நான் சாப்பிட்டிருப்பேன்”

“ரொம்ப முக்கியம்” – பல்லைக் கடித்தாள் அவள்.

“ஏய்… என்ன நீ?, உன்னைத் தவிர என்னை யாருமே பார்க்கக் கூடாதுன்ற மாதிரி பிஹேவ் பண்ற?, இதெல்லாம் ரொம்ப டூ மச்”

“அப்போ, நானும், அவளும் ஒன்னா உங்களுக்கு?”

“பின்ன இல்லையா?”

“சீனியர்…”

“ப்ச், வெட்டிப் பேச்சு பேசாம கிளம்பு நீ!, எனக்கு நிறைய வேலை இருக்கு”

கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே இரண்டு நிமிடம் முறைத்துப் பார்த்தவள் “நானும்,அவளும் ஒன்னு இல்லன்னு இன்னிக்கே ப்ரூவ் பண்ணிக் காட்டுறேன்!” என்று சூளுரைத்துக் கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்தான் அசோக்.

“டேய், ப்ரசண்டேஷனுக்குப் பசங்க வர ஆரம்பிச்சுட்டானுங்க!, நீங்க ரெண்டு பேரும் என்னடா இங்க உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கீங்க?” – அசோக்

விஜய்யை மீண்டும் முறைத்து விட்டு “ஆமா, பெரிய ரொமான்ஸ் மன்னன் இவரு” என்று முணுமுணுத்தபடி காலை தங்,தங்கென மிதித்து அறையை விட்டு வெளியேறினாள் சரண்யா.

இதழ்கள் விரிய.. கலகலவெனச் சிரித்தவனிடம் “நீ ஒரு மார்க்கமாத் தான் டா இருக்க” என்றான் அசோக்.

அதன் பின்பு மாணவர்கள் அனைவரும் ஹாலுக்குள் வரத் துவங்க, பின் வரிசையிலிருந்த ஜட்ஜிங் பானல்-இல் பரத்துடன் சென்றமர்ந்தான் விஜய். பரத்,விஜய்யோடு சேர்ந்து இன்னும் இரண்டு பி.ஜி மாணவர்கள் ஜட்ஜாக அமர்ந்திருந்தனர்.

ப்ரஃபசர்கள், லெக்ட்சரர்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்க.. மற்றக் கல்லூரிகளிலிருந்து ப்ரசண்டேஷனுக்காக வந்திருந்த மாணவர்களும், யுனிவர்சிட்டி மாணவர்களும், ஜூனியர்,சீனியர்களும் அறையை நிரப்பியிருந்தனர்.

சரண்யாவுடையது தான் முதல் ப்ரசண்டேஷன்! அவளும் அவள் தோழி ஆகான்ஷாவும் சேர்ந்து ப்ரசண்ட் செய்யவிருந்தனர்.

கையிலிருந்தப் பென் டிரைவ்வை கணிணியில் செருகி விட்டு, முன்னேயிருந்த மைக்கைக் கையிலெடுத்துக் கொண்ட சரண்யா... நமுட்டுச் சிரிப்புடன் பிபிடியை ஓபன் செய்தாள்.

ப்ரஜக்டர் வழியாக எதிர் சுவரில் தெரிந்த அவளது ப்ரசண்டேஷனின் முதல் பக்கத்தைக் கண்டு “God” – எனத் தலையில் கை வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்தான் விஜய்.

ஏனெனில் ப்ரசண்டேஷனின் முதல் ஸ்லைடில் ‘dedicating this presentation to my beloved senior Vijay Raghavendran’ என்று எழுதியிருந்தது மட்டுமில்லாமல்… ஸ்லைட் முழுதிலும் இதயவடிவ இமேஜ், பலூன் போலப் பறந்து கொண்டிருந்தது.

இந்த ப்ரசண்டேஷனுக்காக என்னோடு சேர்ந்து ராப்பகல் பாராமல் உதவி புரிந்த மகான் அவர் என்கிற வாசகங்களுடன்.. அடுத்த ஸ்லைட் முழுதிலும் அவனைப் பற்றிய வாக்கியங்களே இருக்க.. முதல் வரிசையிலிருந்த ப்ரஃபசர்கள் அவனைத் திரும்பி நோக்கினர்.

தர்மசங்கடமான ஒரு புன்னகையை அவர்களை நோக்கிச் செலுத்தி விட்டுப் பல்லைக் கடித்தபடி மேடையில் நின்றவளை அவன் முறைத்துப் பார்க்க… உள்ளே கும்மியடித்த மனசாட்சியுடன் கீழுதட்டை மடித்துச் சிரிப்பை அடக்கியவள், அவனை நோக்கிக் கண்ணடித்தாள்.

ஸ்லைடில் பறந்து கொண்டிருந்த ஹார்ட்டையும், இவள் கண்ணடித்ததையும் கண்ட ஜூனியர் மாணவர்கள் விசிலடித்து “விஜய், விஜய், விஜய்” என்று கூவிக் கொண்டே கைத்தட்ட.. “டேய் அடங்குங்கடா” என அவர்களை நோக்கி ஹிந்தியில் கத்தியவனுக்கு இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பதென்றே தெரியவில்லை!

பொதுவாக பரத் ஒருவன் தான் இது போன்ற பப்ளிசிட்டிகளுக்கெல்லாம் பழக்கப்பட்டவன்! நண்பனின் தோளை அடித்த பரத்துக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை! அங்கத் தொட்டு, இங்கத் தொட்டுக் கடைசில மச்சானையும் அசிங்கப்படுத்திட்டா! ஹாஹாஹாஹா!

சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் எழுந்த பரத் மாணவர்களை அடக்கி விட்டு சரண்யாவின் அருகே நின்றிருந்த ஆகான்ஷாவிடம் ‘அடுத்த ஸ்லைடைத் திருப்புமாறு’ கண்ணைக் காட்டி விட்டுத் தன் முன்னிருந்த மைக்கை எடுத்து “லெட்ஸ் ஸ்டார்ட் த ப்ரசண்டேஷன்’ என்று கூறினான்.

அதன் பின்பு புன்னகை முகத்துடன் பேச ஆரம்பித்த சரண்யா விஜய்யின் புறம் திரும்பாதிருந்தாலும்.. அவன் தன் மீது சூர காண்டில் இருப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

மேடைக் கூச்சமென்பது அறவேயின்றி… ரொம்பவும் இயல்பாக இடது கையில் மைக்கைப் பற்றிக் கொண்டு வலது கையிலிருந்தப் பேனாவினால் அவ்வப்போது ஸ்லைடைச் சுட்டிக் காட்டிக் கொண்டு பக்கா ப்ரஃபஷனலாக… நின்றிருந்தவளை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.

சற்று முன்பு சிறுபிள்ளைத்தனமாக அவள் செய்த செய்கைக்கும், இப்போது அவள் நடந்து கொண்டிருக்கும் விதத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லை! அவளது ஆட்டிடியூடிலேயே ஜட்ஜ்கள் அனைவரும் ஃபுல் மார்க்கை அள்ளித் தெளிக்க.. அடுத்த நடந்த கேள்வி,பதில் செஷனில் அனைவரது கேள்விகளுக்கும் அவள் பொறுமையாய்,தெளிவாய் அளித்த பதில் ப்ரஃபசர்களையும் ஈர்த்தது.

பரத் மற்றும் ஜட்ஜ் பானலில் அமர்ந்திருந்த அனைவரும் அவளை கேள்விகளால் துளைத்தெடுத்திருக்க.. அவளோ.. விஜய்யை நோக்கி “உங்களுக்கு எதுவும் கேள்விகள் இருக்கா?” என்று சிரித்தபடி வினவினாள்.

ஒட்டு மொத்தக் கூட்டமும் (ப்ரஃபசர்கள் உட்பட) அவனையே சிரித்தபடி நோக்க.. அவனோ அலட்டிக் கொள்ளாமல் தன் முன்னேயிருந்த மைக்கைக் கையிலெடுத்தான்.

என்ன கேள்வி கேட்கப் போகிறான் என்று அனைவரும் அவனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க.. அவனோ “எப்போ அந்த ஃபர்ஸ்ட் ஸ்லைடை டெலீட் பண்ணுவீங்க?” என்று வினவினான்.

கூட்டம் கலகலவெனச் சிரிக்கத் தொடங்க.. அவளும் “நேத்து சாக்லேட் கொடுத்தப் பொண்ணை விட, நான் உங்களுக்கு ‘சம்திங் ஸ்பெஷல்-ன்னு’ நீங்க ஒத்துக்கும் போது” –எனச் சிரிப்புடன் தமிழில் கூறி விட்டு கணிணியிலிருந்தத் தன் பென் டிரைவ்வை எடுக்கச் சென்றாள்.

“என்ன சொன்னா?, என்ன சொன்னா?” என்று கூட்டம் அமளி,துமளியுடனிருக்க… சீட்டில் சாய்ந்தமர்ந்து கைகளைக் கட்டிக் கொண்டுத் தன்னையேத் தொடர்ந்து கொண்டிருக்கும் விஜய்யின் பார்வையைக் கண்டு கொள்ளாமல் வெளியேறினாள் சரண்யா.

“ஆக்சுவலா, உங்க ரெண்டு பேருக்குமிடைல என்ன மச்சி நடக்குது?” – பரத்தின் கேள்விக்குப் பதிலாக விஜய்யின் மனதினுள் அன்று காலை கணிணியில் ஒலித்தப் பாடல் ஓடியது.

‘ஒரு காதல் வந்துச்சோ… ஒரு காதல் வந்துச்சோ…’

ன்று மாலை ஆட்டம்,பாட்டத்துடன் தொடங்கியது கல்ச்சுரல் காம்பெடிஷன். பாலிவுட் நட்சத்திரம் ஒன்று கெஸ்ட்டாகக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருக்க.. கூட்டத்தினுள் எழும் கூப்பாட்டைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேடையில் ஆடுபவர்களின் ‘ப்ராக்டிஸ் செய்யப்பட்ட’ டான்ஸ் பர்ஃபார்மன்ஸை விட ஆண்,பெண் பாராமல் கீழே அமர்ந்திருந்த மக்கள் ஆடும் ஆட்டம் தான் அங்கே ஹை-லைட்!

அன்றைய நிகழ்ச்சியை காம்பியரிங் செய்த பரத் மேடைக்குப் பின்னே வந்து அடுத்த பர்ஃபாமன்ஸ் ஆட்களைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.

அங்கேக் காத்திருந்த ஐந்து பெண்களுக்கு மத்தியில் சரண்யாவின் முகமும் தெரிய… “பார்ரா” என்றபடி அருகே சென்றான்.

“ஏய் சப்போட்டா… நீயெல்லாம் ஆடுனா எவன் பார்க்குறது?, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?” - பரத்

வழக்கம் போல அவனை முறைத்து “பேசாம போயிருங்க மைதா! நான் நல்ல மூட்ல இருக்கேன்” என்றாள்.

“அடேங்கப்பா! நீ மிரட்டுனா நான் பயந்துடனுமா?, போடி போ… நீ ஆடும் போது உன் காலுக்கடில வாழைப்பழத் தோலைப் போட்டு விட்றேன்” – மிரட்டி விட்டுச் சென்றான் அவன்.

அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்கியது அவர்களது நடனம்.

காலேஜ் பியூட்டி என்றழைக்கபட்ட முட்டை போண்டா ஒன்று நடுவில் ஆட.. அதன் இடது புறத்தில் அழகான வளைவு,நெளிவுகளோடு ‘யாத் பியா கி ஆனே லகி’ என்ற ஃபால்குனி பதக்கின் பாட்டிற்கு நளினமாக நடனமாடிக் கொண்டிருந்தாள் சரண்யா.

பொதுவாக ஆட்டம்,பாட்டு என்றாலே ஓரமாக ஒதுங்கி விடும் விஜய் அன்று அவளது நடனத்தைக் காண வேண்டிப் பின் வரிசையின் ஓரத்தில் கையில் பியர் டின்னுடன் நின்றிருந்தான்.

நீள ஸ்கர்ட், பாதி இடை வரை நீண்டிருந்த லாங்-ஸ்லீவ் ப்ளௌஸ், நெற்றிச் சுட்டி, பெரிய தோடு என பளபளத்தவளின் மீதிருந்துப் பார்வையைத் திருப்ப முடியவில்லை அவனால்.

பாட்டின் வரிகளுக்கேற்ப காதல்,ஆசை,வெட்கம் என அனைத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தவளை இமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான்.

பர்ஃபாமன்ஸ் முடிந்ததும் மேடையை விட்டு இறங்கியவளிடம் தண்ணீரை நீட்டிய பரத் “நல்லாத் தான் ஆடுற சப்போட்டா” என்றான்.

அவனிடம் புன்னகைத்து விட்டு கூட்டத்தினுள் யாரையோ தேடியவளிடம் “விஜய்யைத் தேடுறியா?” என்றான் அவன்.

“ஆமா” – சரண்யா

“எதுக்கு?”

“எதுக்கு தேடுவாங்க,என் டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் எப்படியிருந்ததுன்னு கேட்கத் தான்!”

“அதான் நல்லாயிருந்ததுன்னு நான் சொன்னேனே”

“நீங்க சொல்றதையெல்லாம் கன்சிடர் பண்ண முடியாது மைதா”

“அவன் வாய் வழியா கேக்குறது அவ்ளோ முக்கியமா?”

“ஆமா”

“ஏன்?”

“ஏன்னா…” என்று இழுத்தவள் அவனை அருகேயழைத்து “அவர் நான் ஆறு மாசமா சின்சியரா சைட் அடிச்சிட்டு இருக்கிற முக்கியமான பையன்” எனக் கூற.. உதட்டைப் பிதுக்கிய பரத் “வேணும்ன்னா இந்த மைக்கை வாங்கிட்டுப் போய் ஸ்டேஜ்ல நின்னு எல்லார் முன்னாடியும் இதைச் சொல்லேன்” என்று நக்கலடித்தான்.

“ப்ச்,! போய்யா மைதா!” என்று முறைத்தவள் விறுவிறுவெனக் கூட்டத்துக்குள் நடக்கத் துவங்கினாள்.

எதிர்ப்பட்டோர் அனைவரும் ‘சூப்பர் பர்ஃபாமன்ஸ் கேர்ள்! எனப் பாராட்ட அவர்களிடம் தலையாட்டியபடியே பின் வரிசைக்குச் சென்றவளை வரவேற்றது விஜய்யின் ஒட்டு மொத்தப் பட்டாளம்!

அவள் வந்து நின்றதுமே “ஊஊஊஊஊஊஊஊஊ” எனக் கத்தியவர்களின் கர்ணகொடூரக் குரல்களிலிருந்துத் தப்பிக்கக் காதைப் பொத்தினாள் சரண்யா.

ரமேஷ்,அசோக்,தன்வீர் என அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ‘யாத் பியா கி ஆனே லகி..’ என அவளைப் போலவே கையை வைத்துக் கொண்டு இடுப்பை ஆட்டக் கடுப்பாகிப் போனாள்.

“டேய்… வேஸ்ட் பீஸ்ங்களா, கேலியா பண்றீங்க?” – பொங்கி விட்டாள் அவள்

“ஏய்! மரியாதை மரியாதை!, பல்லை உடைச்சுடுவேன்” – அசோக்.

“ஆமா, இன்னிக்கு நைட் கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல பார்ட்டியாமே!, ஊர்ல விற்கிற ஒட்டு மொத்த பியர் பாட்டில்ஸூம் உங்க ஹாஸ்டல்ல இருக்கிறதா ஹெட்லைன்ஸ்ல சொன்னாங்க?” – ரமேஷ்.

“என்னைக் கேட்டா?, நான்-லாம் ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு! எனக்கு எதுவும் தெரியாது”

“அப்படியே உனக்கு எதுவும் சிக்குனாலும், நேரா பாட்டில் என் கைக்குத் தான் வரனும். புரிஞ்சதா?” – மிரட்டிய ரமேஷிடம் அவள் தலையாட்டிக் கொண்டிருக்கையிலேயே அசோக் “டேய்… மச்சான்! உன் ஆள் இங்க நிற்குதுடா” என்று விஜய்யை நோக்கிக் குரல் கொடுத்தான்.

யாரைச் சொல்கிறான் என்று புருவத்தை நெரித்தபடியேத் திரும்பியவன், சரண்யாவைக் கண்டதும் பின்னந்தலையைக் கோதியபடி வேறு புறம் நோக்கி தானாக விரியத் துவங்கிய இதழ்களை மறைத்தான்.

அவனைக் கண்டதும் முகம் மலர அவனருகே ஓடி வந்து நின்றாள் சரண்யா.

“என் டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் பார்த்தீங்களா?” – ஆர்வத்துடன் அவன் முகம் நோக்கியவளிடம் பதில் கூறாமல் கையிலிருந்த பியரை வாயில் சரித்தான் அவன்.

“இது என்ன பியர் டின்-ஆ?, நான் ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமா?” – அவனிடமிருந்துப் பறிக்கப் பார்த்தவளின் கையைத் தட்டி “ப்ச்” என்றான் அவன்.

“சரி, நீங்க தர வேண்டாம். டான்ஸ் பார்த்தீங்களா இல்லையா?, அதைச் சொல்லுங்க”

“பார்த்தேன்” – விஜய்

“எப்படியிருந்தது?” – முகம் கொள்ளா ஆர்வத்துடன் மீண்டும் வினவினாள்.

“நல்லாயிருந்தது”

“ப்ச், அவ்ளோ தானா?, போங்க சீனியர்”

“வேற என்ன சொல்லனும்?” – என்றவனின் பார்வை அவளைத் தலை முதல் கால் வரை நோக்கியது.

அவன் பார்வையை உணர்ந்து தன்னிச்சையாகக் கைகள், ஓடிவந்ததில் லேசாக விலகியிருந்தத் துப்பட்டாவின் வழியே வெளியே தெரிந்த இடையை மூடிக் கொள்ள.. மீண்டும் தோன்றியப் புன்னகையை மறைக்க.. பியர் டின்னை வாய்க்குக் கொண்டு சென்றான் அவன்.

“ரொம்பவும் மூடிக்காத!, நான் ஏற்கனவேப் பார்த்துட்டேன்” – அவன் கூறியதும் பல்லைக் கடித்துக் கொண்டுத் தலை குனிந்தவளிடம்.. “உன்னைப் பார்த்து என் ஆளுன்னு அசோக் சொல்றான்! நீயும் கண்டுக்காம இருக்க?” எனக்கேட்டு வம்பு செய்தான்.

அவனுக்குத் தெரிந்தே கொண்டே ஆக வேண்டும்! இவள் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை!

“ப்ச், சொன்னா சொல்லிட்டுப் போறாங்க” - சரண்யா

“இது என்ன பதில்?” - விஜய்

“சீனியர்.. ஒரு பையனும்,பொண்ணும் பேசிக்கிட்டா… இஷ்டத்திற்குக் கற்பனைல இறங்குற உலகம் இது! ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் நாங்க அப்படிக் கிடையாதுன்னு விளக்கம் சொல்லிட்டிருக்க முடியாது”

“ஓ! நாம அப்படிக் கிடையாதா?” – ஏளனத்துடன் அவன்.

-அதுவரையிருந்த அவனது ஏகாந்த மனநிலை அவள் பதிலால் நொடியில் மாறி விட.. கடுப்புடன் கேள்வி கேட்டான் அவன்.

“ஆமா! அவங்க சும்மா கேலி பண்றதையெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க சீனியர்” – அவனுக்கே அறிவுரை கூறியவளைக் கண்டு எரிச்சல் வர… எதிரே வந்து கொண்டிருந்த நேத்ராவை “ஓய்ய் சோடாபுட்டி” என்று கத்தி அழைத்தான்.

வேகமாக ஓடி வந்தவளிடம் “சீனியரைப் பார்த்தா விஷ் பண்ணனும்ன்னு தெரியாதா?, கண்டுக்காம நடந்து போற?” என்றுத் திட்டினான்.

திடீரென்று அவன் அழைத்துத் திட்டவும், விழித்த நேத்ரா.. “இ…இல்ல…. கு..குட் ஈவ்னிங்.. இல்லல்ல, கு..குட் நைட் சீனியர்” என்று உளறிக் கொட்ட… “சீனியர்ன்ற மரியாதைக் கொஞ்சமும் கிடையாது” – என்றபடி இருவரையும் நோக்கித் திட்டியவன் நகர்ந்து சென்று விட்டான்.

ஏன் திடீர்ன்னு திட்டிட்டுப் போறான்?, என்று குழம்பிய சரண்யாவும் நேத்ராவுடன் ஹாஸ்டலுக்குச் சென்று விட்டாள்.

ன்றிரவு ரமேஷ் கூறியபடி கேர்ள்ஸ் ஹாஸ்டல் ஜெகஜோதியாகக் காட்சியளித்தது. கடைசி வருட மாணவிகளனைவரும் ஒன்று கூடிக் குத்துப் பாட்டைப் போட்டுக் கொண்டு அரைகுறை ஆடையில் ஐட்டம் டான்ஸ் ஆடிக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டும் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். கடைசியாக சிகரெட்,மது பாட்டில்கள் வேறு!

அறையில் க்வில்ட்டுக்குள் முடங்கியிருந்த நேத்ராவை தட்டியெழுப்பிய சரண்யா “ஏய், கீழ சீனியர்ஸ் ரூம்ல ஒரே கொண்டாட்டமா இருக்குடி! எல்லாரும் போய்ப் பார்க்குறாங்க, வா நாமளும் போவோம்” என்று அழைத்து வரமாட்டேன் என்றவளை வம்படியாக இழுத்துக் கொண்டு போனாள்.

மூடப்பட்டிருந்த அந்தப் பெரிய டிவி ஹாலுக்குள் பெண்களனைவரும் ஒன்று கூடியிருக்க.. இவர்களிருவரும் கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.

நேத்ரா ஒரு ஓரத்தில் அமைதியாக நின்று கொள்ள.. அங்கு நடக்கும் ஆட்டத்திற்கும், பாட்டத்திற்கும் சும்மா நிற்க முடியாமல் சிறிது நேரத்திலேயே ஜோதியில் கலந்து விட்டாள் சரண்யா.

ஒரு பக்கமாக இரண்டு குண்டாசட்டிகளில் நிரப்பப்பட்டிருந்த நீரை வைத்துக் கொண்டு யார் அதை முதலில் குடித்து முடிப்பது – என்று போட்டி நடந்து கொண்டிருக்கத் தானும் அருகே சென்றாள்.

அவள் வந்து எட்டிப் பார்த்ததும் ஒருத்தித் தன்னருகேயிருந்தவளின் காதுக்குள் ஏதோ கூற.. அவளை நோக்கிக் கையைத் தட்டி “ஹே பொண்ணே” என்று ஹிந்தியில் அழைத்தாள் அவள்.

நிமிர்ந்து நோக்கிய சரண்யாவிற்கு அப்பெண் நிதானத்தில் இருப்பது போலத் தெரியவில்லை! என்னவென்று வினவியவளை அருகே அழைத்து நிற்க வைத்தாள்.

“நீ தானே விஜய் கூடவே ஒட்டிக்கிட்டு சுத்துற பொண்ணு?” – ஹிந்தியில் அவள்.

பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினாள் சரண்யா.

“என் தங்கச்சி கலருக்கு, நீ அவ பக்கத்துலயே வர முடியாது.. நீ.. நீ அவளுக்குப் போட்டியா?” – அந்தப் பெண்.

அவள் கலரைப் பற்றிப் பேசியதும் கோபம் வந்து விட்டது சரண்யாவிற்கு.

“நான் அவளுக்குப் போட்டியா?, புரியல?” - சரண்யா

“என் தங்கச்சி அந்த மதராஸியைக் காதலிக்குறா! அதனால நீ அவனை விட்டு ஒதுங்கிப் போயிடு. புரிஞ்சதா?”

ஓ!, அந்த சாக்லேட் பாப்பா இவ தானா?-என்றபடி அந்தத் தொங்கச்சியின் முகத்தை நோக்கியவளுக்கு அவள் வெள்ளையாய் இருப்பது வயித்தெரிச்சலைக் கொடுக்க..

“அதை அவர் சொல்லட்டும். அப்போ ஒதுங்கிக்கிறேன்” – எனத் திமிராகக் கூறினாள்.

“எவ்ளோ திமிர் உனக்கு! சீனியரையே எதிர்த்துப் பேசுறியா?”-என அவளருகேயிருந்த அள்ளக்கைகள் அனைத்தும் பொங்க.. கண்டுகொள்ளாமல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள் சரண்யா.

கையைத் தூக்கி அனைவரையும் அமைதிப்படுத்திய அந்தப் பெண் “ஓகே!, ஒரு போட்டி வைச்சுக்கலாம்” என்று தொடங்கினாள்.

“உன் கண்ணு முன்னாடியிருக்கிற இந்த 2 சட்டிலயும் பியர் இருக்கு! நீ ஒன்னையும், நான் இன்னொன்னையும் குடிப்போம்! நான் முதல்ல முடிச்சுட்டா…. இனி நீ விஜய் இருக்கிறப் பக்கமே போகக் கூடாது! நாளையில இருந்து என் தங்கச்சி என்னல்லாம் சொல்றாளோ! நீ அதைக் கேட்கனும்! என்ன சொல்ற?”

அடப்பாவிங்களா! அது பச்சைத் தண்ணின்னு பச்சைப்புள்ளையாட்டம் நினைச்சிருந்தேனே! பி..பியரா!

கதிகலங்கிப் போய் விழித்தவளைக் கண்டு அந்தத் தொங்கச்சிப் பெண் சிரித்தபடித் தன் அக்காவின் காதுக்குள் ஏதோ சொல்ல… கொதித்துப் போனாள் சரண்யா.

இந்தப் பால் டின் ஏன் அப்பப்போ அவ அக்கா காதைக் கடிக்கிறா?, அடியேய்… முட்டைக் கோஸூ!! இந்த சரண்யாவைப் பத்தி உனக்குத் தெரியாதுடி! என்று கறுவிக் கொண்டு..

“ஒரு வேளை நான் ஜெயிச்சுட்டா?” என்று வினவினாள்.

“ஏய்.. பியர் குடிக்கிற போட்டில பசங்களே இவக் கிட்ட தோத்துடுவாங்க! நீ… நீ ஜெயிச்சுடுவியா?, நீயெல்லாம் முன்ன,பின்ன பியரை நுகர்ந்தாவது பார்த்திருக்கியா?” – கலாய்த்த கூட்டத்திடம் “ஒரு வேளை நான் ஜெயிச்சா?” –என்று மீண்டும் கேள்வி கேட்டாள்.

“நீ சொல்றதை நானும்,என் தங்கச்சியும் கேட்கிறோம்” – அவள் கூறியதும் உடனே சரியென ஒப்புக் கொண்டாள் சரண்யா.

‘ஏய்ய்ய்ய் என்னடி பண்ற’ காதைக் கடித்த நேத்ராவை அவள் கண்டுகொள்ளவேயில்லை.

அடுத்த நொடி அவள் முன்பிருந்த இரண்டு சட்டிகளும் நிரப்பப்பட, அந்தத் தொங்கச்சிப் பெண் “ஸ்டார்ட்” என்றதும் இருவரும் சட்டியைக் கையில் தூக்கிக் கடகடவெனப் பருகத் தொடங்கினர்.

முழுதாக இரண்டு நிமிடம் ‘மடக்,மடக்’ என அவர்களதுத் தொண்டை எழுப்பிய ஓசையைத் தவிர எதுவுமே அறையில் ஒலிக்கவில்லை!

இரண்டு நிமிடம் கடந்த நிலையில் டொக்கென சட்டியைக் கீழே வைத்து வலது கைப் பெரு விரலைத் தூக்கினாள் சரண்யா.

ஜூனியர் பெண்கள் கூட்டம் “ஊஊஊஊஊஊ’ –வெனக் கத்தத் துவங்க.. சீனியர் பெண்கள் “சுப்” எனக் கூறி அவர்களை அடக்கினர்.

சரண்யாவின் சட்டியில் பியரோடு சேர்ந்து ஹாட்டும் கலந்திருந்தபடியால்.. நொடியில் மூளை மந்தமடையத் துவங்கியது அவளுக்கு. கண் முன்னே அனைத்தும் களங்கலாகத் தெரியத் தொடங்க…. “ஏய்.. பாதுஷா… நாளையிலிருந்து நான் சொல்றதைத் தான் டி நீ கேட்கனும்” – வாய்க் குழற குழற… அவளை நோக்கி உறுமியவளை நேத்ரா “ஏய் என்னடி, என்னாச்சு உனக்கு?” என்றபடி அவள் தோளைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றாள்.

அந்த சீனியர் பெண்ணுடன் பியர் போட்டியில் அவள் வெற்றி பெற்று விட்டதைக் கூட்டத்தில் அனைவரும் ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருக்க.. எதையும் கண்டு கொள்ளாமல், அவளை இழுத்துக் கொண்டுவெளியே வந்தாள் நேத்ரா.

“ஏய் சோடாபுட்டி, நான் ரூமுக்கெல்லாம் வர மாட்டேன்! என்னைக் காத்தாட வெளியே கூப்பிட்டுப் போடி!” – சரண்யா.

“செருப்பால அடிப்பேன்! ராத்திரி 12 மணிக்கு உனக்குக் காத்து வாங்கனுமா?, நீ பண்ணி வைச்ச வேலைக்கு..உன் மூக்கைப் பிடிச்சு மூச்சை நிறுத்தலாமான்னு நான் யோசிச்சிட்டிருக்கேன்”

“ப்ச், அந்தப் பால் டின் எவ்ளோ வெள்ளையா இருந்தா பார்த்தேல?.அதான் காண்டாயிட்டேன்!”

நேத்ராவின் தோளில் தொங்கியபடியே அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்திருந்தாள் சரண்யா.

“நேத்ரா.. அதுல பியர் மட்டுமில்லடி, வேற ஏதோ கலந்திருக்காளுக! அதான்.. இ…இவ்ளோ போதையாயிருக்கு!, நீ கூட என் கண்ணுக்கு இப்போ அழகா தெரியுறேனா பாரேன்..” – அரை போதையில் கூடக் கலாய்த்தவளைக் கண்டு எரிச்சலுற்ற நேத்ரா துரத்த… ஹாஹாஹா-வென சிரித்தபடி ஓடியவள் கால் தடுக்கி சொத்தெனக் கீழே விழுந்தாள்.

கையையும்,காலையும் பரப்பிக் கொண்டுக் குப்புறப் படுத்துக் கிடந்தவளின் அருகே சென்ற நேத்ரா பதறி “ஏய்… ஏய்.. சரண்.. எந்திரி டி! நாயே… எழுந்திரு! ஒழுங்கா ரூம்க்குக் கூப்பிட்டுப் போக இருந்தவளை, வெளியே இழுத்துட்டு வந்துட்டு.. இப்டிப் பண்ணிட்டியேடி?, அய்யோ! வார்டன் கிட்ட மாட்டுனா.. நாம அவ்ளோ தான்” – விடாது புலம்பியவளின் அருகே ஒரு உருவம் வந்து நிற்க.. பீதியுடன் நிமிர்ந்து நோக்கினாள்.

அவளருகே நின்றிருந்தவன் துஷர்! ஆசுவாச மூச்சுடன் “சீனியர்” என்றபடி சல்யூட் வைத்தாள் நேத்ரா. (துஷரைப் பார்த்து சீனியர் என சல்யூட் வைத்த ஒரே பெண் நேத்ராவாகத் தானிருக்க முடியும்)

அருகேயிருந்த பி.டி. அறையில் இவனும்,விஜய்யும் அமர்ந்து ஜலதீர்த்தம் பருகிக் கொண்டிருந்த வேளை சத்தம் கேட்டு வெளியே வந்திருந்தான் துஷர்.

சல்யூட்டெல்லாம் வேண்டாம் என்றவன் “என்னாச்சு?” என்று வினவினான்.

அவனிடம் என்ன சொல்வதென்றுப் புரியாமல் “தி..திடீர்ன்னு கீழ விழுந்துட்டா” என்று உளறிக் கொட்டியபடி அவளைத் தூக்கி நிறுத்த முயற்சித்தாள்.

நேத்ராவின் பிடிக்குச் சிக்காமல் மீண்டும் கீழே சரிந்தவள் சரண்யாவெனப் புரிய.. “இது சரண்யாவா?, ஹே… சரண்.. ஆர் யூ ஓகே?” என்றுப் பதறி அவள் கையைப் பற்றினான் துஷர்.

அதற்குள் விஜய்யும் வெளியே வந்திருக்க… நடந்த அனைத்தையும் முழுதாக விவரித்தாள் நேத்ரா.

மூவருக்கும் நடுவில், புல் தரையில்…. சுழற்றியடித்துக் கொண்டிருக்கும் குளிரின் பாதிப்புக் கொஞ்சமுமின்றி ‘பே’-வெனக் கிடந்தாள் சரண்யா.

இந்த இரவில் சரண்யாவை வெளியில் கண்டதில் அடித்த சரக்கு மொத்தமும் இறங்கிப் போயிருந்த விஜய்க்கு, அடுத்து நேத்ரா கூறியதைக் கேட்டு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

அவளும்,நீயும் ஒன்று தான் என விஜய் கூறியதையேப் பொறுக்க மாட்டாமல்.. ப்ரசண்டேஷனின் போது ப்ரஃபசர்களின் முன்புத் தைரியமாய் ஹார்ட் விட்டவள் அவள்! இந்தச் சில்லறைப் பீசுகளின் மிரட்டலுக்கா அடிபணிந்து விடுவாள்! ஷ்ஷ்….சரண்யா… உன் பொஸஸிவ்நெஸ்க்கு என்ன தான் அர்த்தம்! ஏகத்துக்கும் குழம்பினாலும், மட்டையாகிக் கீழே கிடந்தவளைக் கண்டு துஷருக்கும்,விஜய்க்கும் சிரிப்பு தாளவில்லை.

“சிரிக்காதீங்க சீனியர், இவளை எப்படி நான் ஹாஸ்டலுக்குள்ள கூட்டிட்டுப் போறது?” – பாவமாய் நேத்ரா வினவிக் கொண்டிருக்கையிலேயே திடீரெனப் புரண்டு “உவ்வ்வ்வ்வ்வ்வ்வே” என முழுச் சத்தத்துடன் வாந்தி எடுத்தாள் சரண்யா.

“ஹேஏஏஏஏஏ ச்சீஈஈஈஈஈஈ” – என்ற துஷர் நான்கடித் தள்ளி நின்று கொள்ள.. நேத்ரா துள்ளிக் குதித்து அவன் பின்னே சென்றிருந்தாள்.

“இதுக்கு முன்னாடி நீங்கள்லாம் வாந்தி எடுத்ததேயில்லையா?” என்று திட்டியவன் ‘நடுராத்திரி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அட்டகாசம் பண்றாளே’ என்றெண்ணியபடி அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு.. பி.டி அறையினுள் நுழைந்தான்.

அங்கிருந்த வாஷ்ரூமில் அவளைச் சுத்தம் செய்ய வைத்தனர் மூவரும்.

போதை இன்னும் தெளியவில்லை போலும்! டீ-ஷர்ட்டினால் வாயைத் துடைத்தபடி ஒவ்வொருவராக நோக்கியவள், அவளையே முறைத்தபடி நின்றிருந்த விஜய்யைக் கண்டுக் கோணலாக சிரித்து.. “சீனியர்ர்ர்ர்ர்ர்” எனக் கூவியபடியே ஓடிச் சென்று இறுகக் கட்டிக் கொண்டாள்.

துஷரும்,நேத்ராவும் பிளந்த வாயுடன் இருவரையும் நோக்க, விஜய்க்கு ஒரு நிமிடம் மூச்சடைத்துப் போனது.

சட்டென அவளை விலக்கி நிறுத்தியவன் “சரண்யா… “ என்று அதட்ட.. மீண்டும் அதே கோணல் சிரிப்புடன் அவன் மார்பில் சாய்ந்தவள், அவன் மார்பைத் தட்டி “இந்த மாதிரி ஒரு கம்ஃபர்டபிள் ஆன பில்லோவை நான் பார்த்ததேயில்ல” என்றபடிப் பெருமூச்சுடன் இரு கரங்களால் அவனைச் சுற்றி வளைத்துத் தன் கன்னத்தை அவன் மார்பில் அழுத்திக் கொண்டாள்.

நிம்மதி,ஆசுவாசம்,காதல்,காமம்,கோபம்,கடுப்பு எனக் காலை அவளைக் கண்ட நொடியிலிருந்துக் கட்டுக்கடங்காமல் பொங்கி வழிந்து கொண்டிருந்த உணர்வுகள் அனைத்தும் ஒரு நொடியில்… ஒரே ஒரு நொடியில்… உறைந்து விட.. தன் மீது சாய்ந்திருந்தவளைக் குனிந்து நோக்கினான் விஜய்.

நேத்ராவின் தோளைச் சுரண்டிய துஷர் ‘வெளியே வருமாறு கையசைத்துவிட்டுச் செல்ல.. இருவரையும் ஒரு நொடி விரிந்த விழிகளுடன் நோக்கி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள் அவள்.

“இரண்டு பேரும் காதலிக்கிறாங்களா?” – பட்டென துஷர் கேட்டக் கேள்வியில் பதறி விட்டாள் நேத்ரா.

“ப்ச், இதுல பயப்பட என்ன இருக்கு?, ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்” – என்று அவன் கூற… “தெரியல!, நீங்க சொல்ற மாதிரியிருந்தா நான் சந்தோசப்படுவேன்” என்ற நேத்ரா.. அந்த அறை வாசலில் அமர்ந்த துஷரின் அருகேத் தானும் அமர்ந்து விட்டாள்.

“சரண்யா….” – அவள் தோளைத் தட்டினான் விஜய்.

“…………………” – அவளிடம் பதிலில்லை.

“தொட்டுப் பேசக் கூடாதுன்னு சொல்லி என்னை எத்தனை தடவை மிரட்டியிருக்க?, இப்போ என்னடி நீயா வந்து கட்டிப்பிடிச்சிருக்க?” – அவள் முகவாயைப் பற்றித் தூக்கியவன் மூடியிருந்த அவள் விழிகளை நோக்கி “முட்டக்கண்ணி!, பதில் சொல்லுடி” என்றான்.

“சரண்யா…”

“……………..”

“ஐ ஹேவ் சம்திங் டூ டெல் யூ…..”

“……………”

“என்னன்னு கேட்க மாட்டியா?”

“………………..”

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு சரண்யா. நான் உன்னை ரொம்ப சைட் அடிக்கிறேன்”

“…………..”

“டே 1-லயே இம்ப்ரெஸ் ஆயிட்டேன்! க்ரௌண்ட்ல காலை நீட்டி உட்கார்ந்துக்கிட்டு என்னையே ஆ-ன்னு பார்த்துட்டிருந்தியே! அப்போவே…! என்னை மென்டரா செலக்ட் பண்ணின சரண்யா நீ தான்னு நெக்ஸ்ட்-டேயே கண்டுபிடிச்சிட்டேன்! எப்போ என்னைத் தேடி வருவன்னு வெய்ட் பண்ணிட்டிருந்தேன்!”

“………..”

“பட் ஸ்பிரிங்கி!, நாம மீட் பண்ணின அன்னைக்கு நீ அவ்ளோ போல்டா என்னை சைட் அடிச்சேன்னு ஒத்துக்கிட்டது என்னை எவ்ளோ இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு தெரியுமா?, அப்பவே விழுந்துட்டேன் உன் முட்டைக் கண்ணுலயும், உன் ஸ்பிரிங் முடிலயும்!”

“……….”

“சைட் அடிக்கிறேன்,சைட் அடிக்கிறேன்னு சுத்தி சுத்தி வர்ற உன்னை.. நான் தான் அதிகமா சைட் அடிக்கிறேன்னு எப்போ புரியும் உனக்கு?”

“……..”

“சரண்யா.. உன்னோட கேனத்தனமானக் கொள்கையைத் தயவு செஞ்சு தூக்கிப் போட்டுட்டு.. கொஞ்சம் உன் மூளையை நல்லா திறந்து வைச்சு.. என்னைப் பாரு!, உன் பக்கத்துல ஒருத்தன், உன் கிட்டக் கிறங்கிப் போய் மயங்கி நிற்கிறதை ஃபீல் பண்ணு!, இல்ல… கொள்கை தான் முக்கியம்ன்னு நினைச்சேனா…………..”

“…………….”

“நான் வேணா, மதம் மாறிக்கிறேன்” – என்றவனுக்குச் சிரிப்பு வர.. தன் கையிலிருந்து நழுவித் தொங்கிய அவளது தலையை நிறுத்தித் தன்னோடு சேர்த்து அவளை இறுக்கியவன்… அவனை எப்போதும் ஈர்க்கும் அந்தப் பள,பளக் கன்னங்களில் அழுந்த முத்தமிட்டு…. ஆழ்ந்த குரலில் “ஐ லவ் யூ…..” என்றான்.

அவள் மட்டையாகிக் கட்டையை நீட்டியிருந்தாலும், அவளது ஆழ்மனது இன்னமும் உறங்கவில்லை போலும்!

அவன் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளுக்குத் தன்னையறியாமல் அவள் இதழ்களில் புன்னகை பூக்க… இதயத்திலிருந்து மூளைக்கு சுர்ரென ஏறிய உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல், அவள் இதழ்களை நோக்கிக் குனிந்தவன், தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்துத் தன் கையிலிருந்தவளைப் பட்டெனக் கீழே விட்டான்.

லேசா கைப்பட்டாலே தள்ளிப் போயிருவா!, சும்மா பார்த்தாலே இழுத்து மூட்ற கோஷ்டியைச் சேர்ந்தவளுக்கு இப்போ நான் பண்ணினது மட்டும் தெரிஞ்சா… அவ்ளோ தான்! என்றெண்ணிக் கொண்டு… உணர்வற்றுக் கீழே கிடந்தவளின் முன்பு கால்களை மடித்து முட்டியின் மீது கை வைத்தபடி அமர்ந்தான்.

“என் செல்லக் கருப்பழகி! இதுக்காக நான் உன் கிட்ட சாரி கேட்கப் போறதில்ல!, எனக்குத் தெரியும்! காலைல நீ முழிச்சுப் பார்க்குறப்போ இங்க நடந்தது எதுவும் உனக்கு நினைவிருக்கப் போறதில்லன்னு! ஆனா…. இப்போ.. இந்த நிமிஷம்.. இதையெல்லாம் உன் கிட்ட சொல்லனும்னு தோணுச்சு! சொல்லிட்டேன்…! பட்… அடுத்த தடவை நான் இதை உன் கிட்ட சொல்லும் போது… நீ என்னை மறுக்க முடியாத சூழ்நிலைல இருப்ப” என்றவன் அவளை ஒரு நொடி நோக்கி விட்டுப் பின் “துஷர்…..” எனத் தன் நண்பனை அழைத்தான்.