சீமைக்கருவேலம்

நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவன் கே.அழகரை மேடைக்கு அழைக்கிறோம்!”

அந்த மைதானம் முழுதும் திரண்டிருந்தப் பள்ளி மாணவர்களின் கரகோஷங்கள் விண்ணைப் பிளக்க, லேசான சிரிப்புடன் மேடை மீதேறிப் பரிசை வாங்கிக் கொண்ட அழகரின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.

அத்தோடு நகரப் பார்த்தவனை நிறுத்தி “இருப்பா” என்ற ஆசிரியர் “அடுத்து 100மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த மாணவன் கே.அழகருக்கு முதல் பரிசு வழங்கப்படுகிறது” எனக் கூற, அவனது நண்பர்கள் கூட்டம் பெரும் கூச்சலிடுவதைக் கண்டு, விரிந்த சிரிப்புடன் நின்றான் அழகர்.

அது மட்டுமல்லாது அடுத்து கட்டுரைப் போட்டியிலும்,பேச்சுப் போட்டியிலும் கூட முதல் பரிசைத் தட்டிச் சென்றவனை ஒட்டு மொத்தப் பள்ளியும் ஆச்சரியமும்,பெருமையுமாய் நோக்க, அவனோ முகத்தில் சிறிதும் கர்வமின்றி, வாழ்த்திய ஆசிரியர்களுக்கு நன்றி கூறி விட்டுப் பரிசுப் பொருட்களை சுமந்தபடித் தன் இடம் நோக்கி சென்றான்.

“எலேய் அழகரு, அந்தக் கவிதைப் புஸ்தகத்தையெல்லாம் அங்கிட்டு விளாசிப்புட்டு,அந்த சில்வர் தட்டை மட்டும் இங்கிட்டுத் தள்றா! மதியம் சத்துணவு வாங்கித் திங்க ஆகும்” – அவன் கையிலிருந்த பரிசுப் பொருட்களைக் கண்ட நண்பன் ஒருவன் ஆர்வமாய்க் கூற,

“எதுக்கு, தின்னுத் தின்னு மூளை மங்கிப் போய் நீ இன்னும் 2 பாடம் பெயிலாப் போறதுக்கா?”

நக்கலாய் அழகர் கேட்டதும் அவனது கூட்டம் கலகலக்க, இன்னொருவன்,

“டேய் அழகரு, சில்வர் தட்டெல்லாம் இருக்கட்டும்! முதல்ல அங்க ஒரு சிலுப்பி உன்னையே வைச்சக் கண்ணு வாங்காம பார்க்குற அழகைக் கவனி” – என அவன் முகத்தை வலது பக்கமாய்த் திருப்பி விட..

ரிப்பன் கட்டிய ரெட்டை ஜடையுடன் தோழிகளினருகே நின்றிருந்த புவியரசியின் விழிகள், தன்னையே வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான் அழகர்.

அவன் தன் புறம் திரும்பியதும், அவள் அவசரமாய்ப் புன்னகைக்க முயல, அவனோ தன் நண்பனின் கையை வெடுக்கெனத் தட்டி விட்டு, “வாயை மூட்றா” எனச் சீறியபடி சுருங்கிய முகத்துடன் தன் இடத்திற்குச் சென்று நின்றான்.

“ஏன் டா அழகரு, நீ பரிசு வாங்கப் போகையில அந்தப் புள்ள எம்புட்டு ஆர்வமா கைத் தட்டுச்சு தெரியுமா?, நீ மத்த விசயத்துலத் திறமையா இருந்து என்னா பிரயோசனம்?, அந்தப் புள்ள மனசைப் புரிஞ்சுக்கத் தெரியாத கூதரைப் பயலா இருக்கியே டா!” – நண்பன் தொடர்ந்து அவனைச் சாட.. பல்லைக் கடித்தவன்,

“ப்ச்,அந்தப் புள்ளையையும்,என்னையும் சேர்த்து வைச்சுப் பேசாதீக-ண்டு எத்தனை முறை டா சொல்றது உங்களுக்கு?” – என்று திட்ட,

“யாரு நாங்க பேசுறோமாக்கும்? ம்க்கும்! போன வாரம் 3rd குரூப் முனீஸ்வரன் பய, அந்தப் புள்ளக்கிட்ட போய் காதலிக்கிறதா கடுதாசி குடுத்ததுக்கு அந்தப் புள்ள, எனக்கு அழகரைத் தவிர எவனையும் புடிக்காதுண்டு சொல்லி, அவனைத் துரத்தி விட்ருக்கு” – என்றான் அவன்.

அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே விழா முடிந்ததன் அறிவிப்பாக அந்த மைதானத்தில் தேசிய கீதம் ஒலிக்கத் துவங்க, கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு அமைதியாக நின்ற அழகரின் முகம், யோசனையில் கூம்பிப் போயிருந்தது.

அதன் பின்பு கூட்டம் கலைந்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்க, அழகர் தன் வகுப்புக்குள் நுழைகையில், வாசலில் அவனை வழி மறித்த புவியரசி, அவன் கையிலிருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை அவசரமாய் அவனிடமிருந்துப் பறித்தாள்.

“ஏய்ய்” எனத் தொடங்கியவன் அவளைக் கண்டதும் பேச மறந்து, பயமும்,கோபமுமாய் அவளைப் பார்த்த வண்ணம் வியர்த்துப் போய் நிற்க,

தன் கையிலிருந்தப் பேனாவினால் அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில், அழகர்-புவியரசி என எழுதியவள், மீண்டும் அந்தப் புத்தகத்தை அவனிடமே திணித்து, பீதியாய்த் தன் முகம் நோக்குபவனைக் கண்டு இதழ் பிரித்துப் புன்னகைத்து விட்டு, அருகிலிருந்தத் தன் வகுப்புக்குள் ஓடி விட்டாள்.

அவனது வகுப்பில் கூடியிருந்த மாணவர்கள் சிலர் இவர்களைக் கவனித்து “எலேய்ய் அழகரு.. நீ மச்சக்காரன் டா” எனக் கேலி செய்ய.. அவசரமாய்ப் புத்தகத்தைத் திறந்து பார்த்தான் அழகர்.

இருவரது பெயர்களின் நடுவே அவள் வரைந்திருந்த இதயத்தைக் கண்டவனின் இதயம் பலமாய் அடித்துக் கொள்ள, பதட்ட மிகுதியில் நெற்றியில் ஊறிய வியர்வை வடிந்துப் புத்தகத்தில் விழுந்து, அவனது பெயரிலிருந்த ழகரத்தை அழித்தது.

தாத்தா முடிவா என்னா சொல்ற?, வருவியா, மாட்டியா?”

அந்தத் தென்னந்தோப்பிலிருந்தக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி மடக்,மடக் என இளநீரை வாயில் ஊற்றிக் கொண்டிருந்தப் பெரியவர், சிலம்பனின் கேள்வியில், குடிப்பதை நிறுத்தி விட்டு அவனை முறைத்தார்.

ஒரு புறம் கருப்பன், தனது கூரிய கொம்புகளால் தென்னை மரத்தை முட்டிய வண்ணம் விளையாட்டில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் விருமனும்,ஆரனும் குடித்துப் போட்ட இளநீரை வெட்டி தேங்காய் எடுத்துத் தின்று கொண்டிருந்தனர்.

“தாத்தா, குலசாமி கோயிலுக்குக் குடும்பத்தோட போயி பொங்க வைக்கனுமுண்டு கெழவி அக்கப்போரைக் கூட்டிக்கிட்டுக் கிடக்கு! எப்படியாவது தாத்தனை இழுத்துட்டு வர்றது உன் பொறுப்புன்னு என்னைய அனுப்பி வைச்சிருக்கு! நான் போய் அதுட்ட நீ வரலன்னு சொன்னேண்டு வை, என் காதைத் திருகிப்புடும் தாத்தா” – எரிச்சலுடன் சிலம்பன்.

“உன்னைய எவன் டா அண்ணன்-தங்கச்சி தகராறுக்குள்ளத் தலையை விடச் சொன்னது?” – ஆரன்.

“எலேய்! ஆலமரத்தடில அம்பட்டையான் கிட்டத் தலையைக் கொடுத்துட்டுப்புட்டு செவனேன்டு உட்கார்ந்து கிடந்தவன, நீ செரச்சது போதும், போய் பெருசை இழுத்து வா-ண்டு சொல்லி கெழவி எங்கூட ஒரே வம்பு டா! பார்றா, என் மண்டைய! பாதி செரைக்கும் முன்ன, போதுமுண்டு பத்தி விட்டுட்டா டா”

“சரி சரி அழுகாத டா!, மீதியை நான் செரைச்சு விட்றேன், வா” – முன்னே வந்த விருமனைக் கண்டு வேகமாகக் கருப்பனின் பின்னே மறைந்தவன்,

“எலேய்! இன்னும் ஒரு அடி எடுத்து வைச்சேண்டா, மாட்டை அவுத்து விட்ருவேன் சொல்லிப்புட்டேன்” என்று கத்த..

“டேய், என் கிட்ட முடி வெட்டப் பட்டணத்துல பத்துப் பேரு தெனம் வரிசைல நிற்பாய்ங்க தெரியுமா?” – என்று பீத்திய விருமனிடம்..

“ஆக மொத்தம், நீ படிக்கப் போகல! செரைக்கத் தான் போயிருக்க என்ன?” – என்று அவன் கலாய்த்ததும்..

“டேய் வென்று” – என்று அவன் கத்தத் துவங்கும் முன் தாத்தனிடம் தஞ்சமடைந்தவன்..

“தாத்தா, என்னா தாத்தா?, பொங்க வைக்க வர்றியா,இல்லையா நீயி?” – என்று சத்தமிட்டான்.

கனிந்த முகத்தோடு கருப்பனின் தலையைத் தடவி, கொம்பை நீவி விட்டுக் கொண்டிருந்த வீரைய்யன், பேரனின் கேள்வியில் எரிச்சலுடன் நிமிர்ந்தார்.

“எலேய் நான் அருவாளைத் தூக்குறதுக்குள்ள, மருவாதையா ஓடிர்றா! வந்துட்டியான் பொசகெட்ட பய, பொங்கலு,புதையலுண்டு!” – சீறியவரிடம்..

“ப்ச், அப்ப நான் கெழவி கிட்ட என்னாண்டு சொல்ல?” – என்று சிலம்பன் எரிச்சலுடன் கேட்க..

“ம்ம், பொங்க வைச்சுப் படையல் போட்ற காசை, இல்லாத சனத்துக்குக் கொடுக்க சொல்லு! ஊரு,உலகத்துல எத்தனை பேரு திங்க சோறு இல்லாம தெனம் சாகுறாய்ங்க! இவளுக படையல் போட்றேன், பாடை கட்டுறேண்டு பகுமானம் பண்ணிட்டுத் திரியுறாளுக! எலேய்! போங்கடா அங்கிட்டு! வந்துட்டாய்ங்க! கல்லுக்குக் கண்ணை செதுக்கி வைச்சு, கடவுளுண்டு பேர் சொல்லிக்கிட்டு!” – என்ற கிழவரைக் கண்டு கலகலவென சிரித்தனர் ஆரனும்,விருமனும்.

“தாத்தா, நீ மதுரைல பொறக்க வேண்டிய ஆளே இல்ல தாத்தா” – விருமன் கேலி செய்ய,

“பின்ன என்னாடா, இவிங்க என்ன உலக அமைதிக்கும், எய்ட்ஸூ நோய்க்கு சீக்கிரம் மருந்து கண்டுபிடிக்கனும்ண்டா வேண்டிக்கிறாய்ங்க! தனக்குக் காசு பெருகனும்! நோய் குறையனும்! பீடை ஒழியனுமுண்டு பூரா தன்னலம் பிடிச்ச வேண்டுதல்கள்தேன்! கேட்டா, வீடு நல்லாயிருந்தா நாடும் நல்லாயிருக்கும்ண்டு வசனம் பேசுவாய்ங்க! அப்பிடிப் பார்த்தா, இவிங்க கட்டி வைச்சிருக்கிற கோயிலோட எண்ணிக்கைக்கும்,இவிங்க போட்ற பூசைக்கும் இந்நேரம் எல்லார் வீட்டுலயும் செல்வம் கொழிச்சு, நாடு செழிச்சிருக்கனும்ல டா?”

“நியாயமான கேள்வி” -ஆரன்.

“இதெல்லாம் விட்றா! இவிங்க சொல்ற குலசாமி கோயிலுக்கு வழி,வழியா பொட்டி தூக்குற பரம்பரைல வர்ற பய, தனக்கு ஆண் வாரிசே அமையல-ண்டு, 3 பொம்பளப் புள்ளைங்களைப் பெத்தப் பொண்டாட்டிய ஆத்தா வீட்டுக்குத் துரத்திப்புட்டு, இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டு நிற்கிறியான்! இவளும் பொட்டச்சியைப் பெத்துப் போட்டா, இன்னும் எத்தனை பேரைக் கட்டுவானோ தெரியல! படைக்கிறவன் பிரம்மன்-றாய்ங்க! அவனும் கடவுள்ன்றாய்ங்க! அவன் படைச்ச பொட்டச்சித் தன் குலசாமிக்கு பொட்டி தூக்கக் கூடாது-ண்டா, அப்ப பிரம்மன்-ன்றவனுக்கு என்னா டா மரியாதை?, அவனெல்லாம் கனவுல வந்து கண்ணைக் குத்த மாட்டானா?, எலேய்! என்னா தான் டா உங்க கணக்கு?”

“ஹாஹாஹா” – கிழவனின் பேச்சில் முழு சிரிப்புடன் ஆரனும்,விருமனும்.

“கேட்டா, பொட்டப்புள்ளைக வேற வீட்டுக்கு வாக்கப்பட்டுப் போறவளுங்கண்டு பேச்சை முடிச்சிருவாய்ங்க! ஆக, 3 புள்ளைகளைப் பெத்துப் பொண்டாட்டியைத் துரத்தி விட்ட *****பய கையால தூக்கிட்டு வர்ற பொட்டியை ஏத்துக்கிற சாமி, பொட்டச்சி தொட்டா தீட்டு-ன்றுமா?, இதுக்குத் துடியான சாமி-ண்டு பேரு வேற!”

“ஏன் டா சிலம்பா, சாமியைப் பத்தி பேசுனாலே பெருசு சாமியாடும்ண்டு தெரிஞ்சும், என்னத்துக்கு டா கெழவி அக்கப்போரைக் கூட்டுது?” – ஆரன், வினவியதும் தலையைச் சொரிந்த சிலம்பன்,

“யோவ் கிழவா? இம்புட்டுப் பேச்சு தேவையா இப்ப?,” என்று திட்டி விட்டுப் பின்,

“ப்ச், இப்போ போய் நீ வரல-ண்டு நான் சொன்னா, கெழவி ஏழரையைக் கூட்டி மூக்கை சீந்திக்கிட்டு வாசல்ல உட்கார்ந்து ஒப்பாரி பாடத் தொடங்கிரும்!” எனப் புலம்ப,

“உங்கப்பத்தாகாரி மூக்கைச் சீந்தி,சீந்தித்தேன் டா அம்புட்டு காரியத்தையும் சாதிச்சுக்கிறா! எழவெடுத்தவ” – என்று திட்டினார் கிழவர்.

“இப்போ என்னா தான் சொல்ற நீயி?”-சிலம்பன் பொறுமையற்றக் குரலில் கேட்க, ஆரன்,

“தாத்தா, கெழவி கண்ணைக் கசக்குனா, எப்பிடியும் நீ வரேன்-ண்டு ஒத்துக்கத்தான் போற! பின்ன என்னத்துக்கு இம்புட்டுப் போராட்டம் பண்ற?, பேசாம கிளம்பி வா தாத்தா!” எனக் கூற

“ஆமா தாத்தா! சேவல் கறி குழம்பு,பட்ட சாராயம்-ண்டு ராத்திரி கோயில் கலை கட்டும்! தின்னுப்புட்டுத் தூங்கி எந்திரிச்சு வருவோம்” – என்று விருமனும் கிழவனை சரிக்கட்டி கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

மாலை வேளை ஒட்டு மொத்தக் குடும்பமும் படையல் பொருட்களுடன் மாட்டு வண்டியில் ஏற, கூட வந்து ஏறிக் கொண்ட சங்கிலியனை ஒரு பார்வை பார்த்தபடித் தானும் ஏறினார் பெரியவர்.

“துரைக்கு ஒரு வழியா வீடு இருக்குற திசை நெனைவுக்கு வந்துருச்சு போல” – என்று அவர் கூறியதும் அழுத்தமாய் நின்றவரிடம்..

“குடும்பத்துக்குள்ள இருக்கிறவிங்கக் கிட்ட என்னா டா ரோஷம் பார்க்க வேண்டிக் கிடக்கு! இன்னைக்கு உங்கப்பன் உசுரோட இருந்திருந்து, அவன் உன்னைய ஏசுனாலும், இப்பிடித்தேன் கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டுப் போவியா? வயசு ஏறி பேரன்,பேத்தி எடுத்தாச்சு! இன்னும் முதிர்ச்சியோட யோசிக்குற அளவுக்கு மூளை வரல!” என்று வீரைய்யன் திட்ட..

“நானும் அதைத்தேன்ணே சொன்னேன்! அப்பனா இருந்து உன்னை வளர்த்தவன் எங்கண்ணன்! அவன் கிட்ட ரோஷப்பட்டு என்னத்த டா சாதிக்கப் போற-ண்டு! நீயில்லாம எனக்கு வாழ்க்கை உண்டா?, நான் கட்டுற சீலைலயிருந்து, திங்குற சோறு வரைக்கும் அத்தனையும் நீ குடுத்ததுதேன்-ண்ணே! அவன் வெவரமில்லாம உன் கிட்ட ரோஷப்பட்டதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்ண்ணே” என கிழவி சீனைப் போட்டதும் சிலம்பனும்,விருமனும் “ஷ்ஷ்ஷ்” என கழுத்தைத் தேய்த்துக் கொண்டனர்.

“சரி,சரி, கண்ணைக் கசக்காத! போய் வண்டில ஏறு” – என்று கிழவன் விரட்டியதும் முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டு வண்டியில் ஏறியது கிழவி.

வீரலட்சுமியும்,சங்கிலியனும் அழுத்தமான முகத்துடன் முன்னேயிருந்த வண்டியில் அமர்ந்திருக்க, அடுத்த வண்டியில் தொத்தியிருந்த அகலருவியின் கவனம் முழுதும் கையிலிருந்தக் கிண்ணத்தில் பதிந்திருந்தது.

சுடச்சுட மீனாட்சி சுட்டெடுத்த பனியாரங்கள் கருப்பட்டிப் பாகில் மூழ்கி, ஊறிப் போயிருக்க, ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டுக் கொண்டவளின் இதழ்கள் பாகின் உபயோகத்தில் மினுமினுத்தது.

“நீ மட்டும் தின்பியாடி?” எனக் கேட்டபடியே வண்டியில் ஏறிய விருமன், நான்கைந்து பனியாரங்களைக் கைப்பற்றி, வாயில் போட்டுக் கொண்டு மென்றபடி அவளருகே அமர்ந்தான்.

கோவில் அருகே இவர்கள் சென்றிறங்கியதும், அங்கிருந்த அங்காளி, பங்காளிகளோடு பேச்சு வளர்த்தபடி பெண்கள் முன்னே சென்று விட, தாத்தனுடன் பின் தங்கினர் ஆரனும்,விருமனும்.

“எலேய் உங்கப்பன் எங்க டா?” – பெரியவர் விருமனைக் கேட்க,

“மதுரை வரை போயிருக்காரு தாத்தா. வந்துருவாரு” என்ற விருமன் ஆரனிடம் “என்னா பங்காளி, பார்க்குறதெல்லாம் தங்கச்சி முறைல வர்ற புள்ளைகளா இருக்குக! இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேனேடா” என்று முணுமுணுத்தான்.

“எலேய் நீ கறி சோறுக்கும்,சாராயத்துக்கும்தேன டா வந்த?”

“ப்ச், அது வயித்துக்கு பங்காளி! இது கண்ணுக்கு ஈயப்படும் உணவு!”

“ம்ம்ம்??, கொஞ்சம் மண்ணள்ளிப் போட்றேன். முழுங்கிக்க”

இருவரும் பேசியபடி பின்னால் நடக்க, பெரியவர் அறிந்தவர்,தெரிந்தவரிடம் பேச்சுக் கொடுத்தபடி முன்னால் நடந்தார்.

கோவில் வாசலருகே செல்கையில், அங்கே தேங்காய் உடைத்தபடிக் கோபுரத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்டு,

“என்னா டா வெள்ளைச்சாமி, வாசல்ல நிண்டு, வானத்தைப் பார்த்துக் கும்பிட்டிட்டிருக்க?, சாமி காக்கா ரூபத்துல சுத்துதுண்டு எவனும் பரப்பி விட்டானா?”

பெரியவரின் குரல் கேட்டதும் பளிச்சென சிரித்த அம்மனிதர், “வாங்க பட்டாளத்துக்காரரே! சவுக்கியமா இருக்கீகளா?” என்று நலம் விசாரிக்க அவரிடம் தலையாட்டியவர், தன் கேள்விக்கான பதில் வேண்டி அவர் முகம் பார்த்தார்.

வாசலருகே சூடம் ஏற்றிக் கொண்டிருந்தத் தன் மனைவியையும்,அருகே நின்றிருந்தக் குழந்தைகளையும் கண்ட மனிதர்,

“உங்களுக்குத் தெரியாததா பட்டாளத்துக்காரரே!, கோவிலுக்குள்ள பூசை போடவோ, தேங்காய்,பழம் உடைக்கவோ, செத்தவிங்களுக்கு நடுகல் வைக்கவோ எங்க சாதிக்காரய்ங்களுக்கு அனுமதி கிடையாதுங்க” என்றார்.

அவரது பதில் கேட்டு ஒரு நொடி முகத்தைச் சுருக்கிய பட்டாளத்துக்காரர் பின் கோபத்துடன்,

“எலேய்! நீ வா டா உள்ள! எவன் என்னா சொல்றாய்ங்கண்டு பார்த்துருவோம்!” என அவர் கையைப் பற்றி இழுக்க, அவசரமாய்த் தடுத்த அம்மனிதர்,

“வே..வேண்டாம் பட்டாளத்துக்காரரே! வீணா வம்பு வேணாம்! நீங்க குடும்பத்தோட கோயிலுக்கு நல்ல காரியத்துக்காக வந்திருப்பீக! இப்பப் போய் என்னத்துக்குச் சண்டை கட்டிக்கிட்டு! அது போக, ஊர் இப்பத்தேன் பிரச்சனையில்லாம இருக்கு! வீணா மல்லுக்கட்டி உள்ள நிலைமையை கெடுத்துக்க வேணாம் பட்டாளத்துக்காரரே” – என்று கூற, தோளிலிருந்தக் கருப்புத் துண்டை உதறிய பெரியவர், அவரை எரிச்சலுடன் நோக்கி,

“ஏன் டா, இப்பிடி மானங்கெட்டுப் போய் சாமி கும்பிடமுண்டு என்னா டா இருக்கு?, அதேன் சாமி தூண்லயும் இருக்கு, துரும்புலயும் இருக்குன்றாய்ங்கள்ல?, வீட்டுச் சுவர்ல 2 படத்தை மாட்டி வைச்சுக் கும்பிட்டுப்புட்டுப் போக வேண்டி தான?, உங்களை மதிக்காத கோயில் வாசல்ல என்னத்துக்கு டா இப்பிடி மதி கெட்டுப் போய் நிற்குறீங்க?, வாசல் தாண்டி உள்ள வர்றதுக்கே வழி செய்யாத சாமி, உங்க வாழ்க்கைக்கு என்ன டா பெருசா வழி செஞ்சுறப் போகுது?, உளில செதுக்கி வைச்ச சிலைய நம்புறதை விட்டுப்புட்டு உழைப்ப நம்புங்கடா! அப்புறம் சாமியெல்லாம் நீங்க இருக்குற இடம் தேடி வரும்!” – என்று பெரியவர் சத்தமிடத் தலையைச் சொரிந்த மனிதர் “சரிங்க பெரியவரே” எனக் கூறி விட்டுச் செல்ல, அவர் வெளியேறும் வரை கோபமும்,ஆதங்கமுமாய் பார்த்திருந்தப் பெரியவர்,

“இந்த மசுறுக்குத்தேன் நான் கோயில் பக்கமே தலை காட்டுறதில்ல! ஏன் டா, அழிக்குற கடவுளான சிவன், வெட்டியான்னுதேன் சொல்றாய்ங்க! அப்ப வெளிய இருக்கிற வெட்டியான், உள்ள இருக்குற வெட்டியானைப் பார்க்குறதுக்கு என்னத்துக்கு டா தடை போடுறாய்ங்க! ரெண்டு வெட்டியானும் ஒன்னு கூடி பிசினஸூ பேசிக்கட்டுமுண்டு விட வேண்டி தான?” எனக் கூறி,

“பாகுபாடு பார்க்குறவன்தேன் பணக்காரனா இருக்கியான்! வேற்றுமையை உருவாக்குறவன்தேன் உயர்பதவில உட்கார்ந்திருக்கியான்! இவிங்க போட்றதுதேன் இங்க சட்டதிட்டமெல்லாம்! சாமியும் அதுக்குப் பணிஞ்சுதேன், பொம்மையா உள்ள உட்கார்ந்து கிடக்கு! அது புரியாத இந்த முட்டாப் பயலுக, வாசல்ல நிண்டு பூசை பண்ணிட்டுத் திரியுறாய்ங்க!” என்று கூற, அதை ஆமோதித்தபடி அமைதியாய் நின்றனர் பேராண்டிகள் இருவரும்.

அதன் பின்பு கோயில் உள்ளே பூசை தொடங்க, சன்னதிக்குள் நுழையாமல், கடனே எனப் பெரியவர் வாசலில் நிற்க, சற்றுத் தள்ளி இறந்தவர்களுக்காக நடப்பட்டிருந்த நடுகல்லை வேடிக்கை பார்த்தவண்ணம் ஆரனும்,விருமனும் நின்றிருந்தனர்.

“பட்டாளத்துக்காரரே வாசலோட நின்னுப்புட்டா எப்பிடி?, சாமி உங்களைத் தேடி வரனும்-ண்டு நினைக்குறீகளோ?” – பூசாரி குரல் கொடுக்க,

கிழவன் பதில் சொல்லும் முன் இடை புகுந்த விருமன்,

“வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்காம சட்டு,புட்டுன்னுப் பூசையை முடி பெருசேய்ய்” என்று குரல் கொடுக்க,

“ஹாஹாஹா” எனப் புன்னகைத்த மனிதர், “வீட்டுப் பெரியவருக்கு முறை செய்யனும்ல ராசா?, அவரு தள்ளி நிக்க நினைச்சாலும், சாமி அவரை அப்பிடி விடாதுல்ல?” என்றார்.

“முறை செய்யனுமாம்ல?”- என்ற ஆரன் திரும்பித் தாத்தனை நோக்க, தன் கருப்புத் துண்டை உதறித் தலையில் கட்டிக் கொண்டப் பெரியவர்,

“முறை-ண்டா, என்னா முறை?” என்றார்.

சோலையம்மாள் உச்சென்றபடித் தலையைத் திருப்பிக் கொள்ள, நெல்லிக்காயை மென்று கொண்டிருந்த அகலருவிக்கு கிழவனின் தோரணை சிரிப்பை வரவழைத்தது.

“பட்டாளத்துக்காரரே இப்பிடிக் கேட்டா எப்புடி?, பரிவட்டம் கட்டி மாலையைப் போட்டு, உங்களுக்கு நாங்க செய்ய வேண்டிய மரியாதையைச் செய்யனும்ல?, அதான முறை?”

“ம்ம், இந்த மரியாதையை நான் ஏத்துக்கிட்டா, நாளைக்கு நான் செத்தப்புறம், கோயிலுக்குள்ள எனக்கு நடுகல் வைச்சு என் பரம்பரைக்குப் பெருமை தேடி குடுப்பீக?, இல்லைண்டா, வெளிய இருக்குற கீழ்சாதிக்காரப் பயலுக கல்லோட, என் கல்லும் உட்கார்ந்துரும் அதான?, ஏன் டா நீங்க சொல்ற, சொர்க்கத்துக்கும்,நரகத்துக்கும் இல்லாத சாதி வேறுபாடு, நீங்க நட்டு வைக்கிற காலணா கல்லுக்கு வந்திடுமா டா?, அப்ப பாவம்,புண்ணியம்ங்குறீங்களே! அந்தக் கணக்கெல்லாம் எவனுக்கு டா?”

“ஆரம்பிச்சுட்டீகளா உங்க பட்டாளத்துப் பவுசை?” – முணுமுணுத்த பூசாரி,

“அவிங்க சாதில உயிரோட இருக்கிறவங்களுக்கேக் கோயிலுக்குள்ள நுழைய அனுமதி கிடையாது, செத்தவிங்களுக்கு மட்டும் கல்லு நட விட்ற முடியுமா?! ப்ச், நம்ம கோயில்ல நம்ம சாதிக்காரய்ங்களுக்கு முன்னுரிமை கொடுக்குறதுல என்ன பட்டாளத்துக்காரரே தப்பிருக்கு?”

“முன்னுரிமையா?, எதுல? சிவபதவி அடையுறதுலயா?, ஏன் டா கோயிலுக்குள்ள நடுகல்லா உட்கார்ந்திருக்கிற உன் சாதிக்காரப் பயலுக பூராப் பேரும், சிவபதவி அடைஞ்சுட்டாய்ங்கண்டு உனக்குத் தெரியுமா?, நீ எத்தனை தடவ செத்துப் போய் கணக்கெடுத்துட்டு வந்த? ”

புருவத்தைத் தூக்கிக் கொண்டு கேள்வி கேட்டக் கிழவனிடம் கையெடுத்துக் கும்பிட்டப் பூசாரி “உம்ம கூட வாய்ச்சண்டை போட்டு, என்னால செயிக்க முடியாது சாமி! இப்ப பரிவட்டம் கட்டுறதா வேணாமா?, அதை மட்டும் சொல்லுங்க” என்று கதறியதும் சோலையம்மாள் பிரச்சனையை முடிக்கும் பொருட்டு,

“இந்தா என் அண்ணன் மவன் மூத்தவன் வீரவேலன் வந்துட்டியான்?, அவனுக்கேக் கட்டிருங்க!” – என்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த விருமனின் தந்தையைப் பார்த்துக் கூற..

அருகில் வந்தவர், அங்கு நடப்பதைச் சொல்லாமலே புரிந்து கொண்டு நேராக பூசாரியிடம் சென்று பரிவட்டம் கட்டத் தலையைக் கொடுத்து விட்டார்.

கட்டி முடித்ததும், சந்நிதியில் நின்றவர்களுக்குத் திருநீரைப் பூசி விட்டப் பூசாரி,

“இவரு என்னாத்தா, நம்ம கோயில்ல வந்து நின்னுக்கிட்டு நம்ம வழக்கத்தையே நக்கல் பேச்சு பேசிட்டுத் திரியுறாரு?, கூடியிருக்கிற அங்காளி,பங்காளியெல்லாம் இதைக் கேட்டாய்ங்கண்டா சண்டை ஆகிப் போய்டாதா?, ச******சியைக் கட்டிட்டு ஓடுன இவர் மவன் பெத்த புள்ளையைக் கோயிலுக்குள்ள விட்றதுக்கே இன்னும் நம்ம பயலுக சலம்பிக்கிட்டுக் கிடக்குறாய்ங்க! இதுல இவரு, அடுத்த சாதிக்காரய்ங்களுக்கு ஏத்துக்கிட்டுப் பேசுனாருண்டா, ஒரு பய இவரை சும்மா விட மாட்டியான்” என்று கூற..

அவரது தடித்த குரல் வெளியே வரை ஒலித்ததால், அவர் கூறியதைக் கேட்டுக் கொதித்துப் போன பெருசு,

“எவன் டா அவன் என் பேரனை கோயிலுக்குள்ள விடக் கூடாதுண்டு சொன்னது?” என்று சவுண்டு விட, பம்மிய பூசாரி, அவசரமாய் சூடத்தட்டுடன் அருகே வர..

“இரு தாத்தா” – என அவரை அடக்கிய ஆரன் பூசாரியிடம்,

“நான் கோயிலுக்குள்ள வரக் கூடாதா?” என்று கேட்கப் பம்மியவரிடம்..

“அதேன் இன்னிக்கு பூராப் பயலும் பூசைன்ற பேர்ல ஒன்னு கூடியிருக்காய்ங்களே! நீ சலம்பரவன் எவன்டு கை காட்டு! நான் அவன் சங்கறுத்துப்புட்றேன்!” என்று ஆரன் கூற,

“தம்பி! பொதுவா எல்லாப் பயல்களும் பேசிக்குறதைச் சொன்னேன்ப்பா!, மத்தபடி, உன் மேல எனக்கென்னாப் பகை?” என்றார்.

“அதான உனக்கென்னாப் பகை?, நீதேன் ச******சியைக் கட்டுனவன் கையால வருஷம் தவறாம நன் கொடை-ன்ற பேர்ல காசைப் புடுங்கி வாக்கட்டப் போட்ற ஆளாச்சே!, யோவ், போன வாரம் மானூத்துல வைச்சு, எங்கப்பன் கிட்டக் குலசாமி கோயில்ல பௌர்ணமி பூசைண்டு சொல்லி நோட்டு,நோட்டா வாங்கிட்டுப் போனவன் நீதேன?” – ஆரன் தொடர்ந்து அந்த மனிதரைப் போட்டு இறக்க, பதறிப் போனவர்,

“யாத்தே! கோயிலுக்குண்டு வாங்குற காசை வாக்கட்டப் போட்ற அளவுக்கு நான் பெரியாள் இல்லப்பு! அந்த ஆதிசிவன் பொதுவா சொல்றேன், இதுவரை நன்கொடை-ண்டு வாங்குன காசுல ஒரு பைசா கூட நான், என் சொந்தத் தேவைக்கு உபயோகிச்சது கிடையாது”

“ஏன், சாமி கண்ணைக் குத்திருமா? சும்மா,புருடா விடாதய்யா யோவ்! போன வாரம்தேன உன் பொண்டாட்டிக்கு ரெட்ட வட சங்கிலி செய்யச் சொல்லி ஆசாரிக் கிட்ட கொடுத்த?” – விருமன் வேறு இடையில் வர,

“யாத்தே! பட்டாளத்துக்காரரு பேரய்ங்க, பொல்லாப் பயலுகளா இருக்காய்ங்க! என்னைய ஆள விடுங்கப்பா சாமிகளா” – என்ற பூசாரி விறுவிறுவென உள்ளே ஓடி விட்டார்.

“இவிங்களால நிம்மதியா சாமி கும்பிடக் கூட முடியல” – என்று புலம்பியபடி சோலையம்மாள் முன்னே செல்ல, வீரலட்சுமி,மீனாட்சியுடன் புவியரசியும்,அகலருவியும் நடந்தனர்.

சங்கிலி, கோயிலினுள் நுழைந்த நிமிடத்திலிருந்துக் காணாமல் போயிருக்க, வீரவேலனிடம் பெரியவர்,

“ஏன் டா பரிவட்டம் கட்டனும்,பாடை கட்டனுமுண்டு அவிங்க சட்டம் பேசுனா, நீயும் ஜம்முண்டு போயி தலையை நீட்டிருவியா?” என்று திட்ட..

“அப்பா, சாமி கும்பிட வந்த இடத்துல என்னத்துக்குத் தேவையில்லாம தர்க்கம் பண்ணிக்கிட்டு?, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையில்லண்டா, விடுங்க! எங்களை என்னத்துக்கு ஏசிட்டுத் திரியுறீங்க?” என்று வீரவேலன் பேசியதும்..

“ம்ம்ம்,கடவுளே வளர்க்கட்டுமுண்டு, நீங்க பொறந்ததும், உங்களையெல்லாம் கோயிலுக்கு நேந்து விட்ருக்கனும்டா டேய்!” – என்ற பெருசு படியிறங்க ஆரம்பித்தது.

கூட்டம்,கூட்டமாய் பந்தலடியில் அமர்ந்திருந்த மக்களைக் கண்டபடி அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தார் பெரியவர்.

அதன் பின்பு, பெண்கள் மூவரும் பொங்கல் வைக்கத் துவங்க, அடுப்பு மூட்டிக் கொண்டிருந்த சோலையாத்தாளின் அருகே சென்று விறகைப் போட்ட விருமன், வெல்லத்தை உடைக்கும் சாக்கில் வாயில் அள்ளிப் போட்டிக் கொண்டிருந்த அகலருவியைக் கண்டு அருகில் அமர்ந்தான்.

“அங்க பாரு! அங்க பாரு! இவள என்னத்துக்கு ஆத்தா அடுப்புப் பக்கத்துல விட்ட?, கால் கிலோ வெல்லத்தைக் கடவாப் பல்லுக்கிட்ட ஒளிச்சு வைச்சிருக்காப் பாரு?! களவாணிக் கழுத!”

அவன் திட்டியதும், அவசரமாய்க் கடித்து விழுங்கியவள், மெல்ல ஆத்தாவின் பக்கம் திரும்ப, அவளை முறைத்துப் பார்த்த கிழவி, அடுப்புக்குள்ளிருந்து விறகுக் கட்டையொன்றைக் கையிலெடுக்க,

“அய்யோ அப்பத்தா! அவசரப்படாத! இத்துனூண்டு வெல்லத்தைத்தேன் எடுத்து வாயில போட்டேன்! இவன் பொய் சொல்றியான்” என்றவள் அவசரமாய் நகர்ந்து அமர்ந்தாள்.

“தின்னிக் கழுத! பொங்க வைச்சு முடியற வரைக்கும் பக்கத்துல வராத சொல்லிப்புட்டேன்!” என்ற கிழவி அடுப்பின் புறம் திரும்பியதும், வெல்லத்தை அள்ளி வாயில் போட்டுக் கொண்ட விருமன், அவளிடம் நாக்கைத் துருத்தி அழகு காட்டினான்.

“அடப் பொடிப் பயலே!” என்ற அகல் அசிங்க,அசிங்கமாக வாய்க்குள் முணுமுணுப்பதைக் கண்டுக் குதூகலமாய் சிரிப்பவனை தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த மணிவண்ணனுக்கு வயிறு எரிந்தது.

தனக்கு எதிரே அமர்ந்திருந்த சங்கிலியனை நோக்கினான். தனது குடும்பத்தினரை வெறித்துக் கொண்டிருந்தவரின் பார்வையில் கோபமும்,ஆதங்கமும் அதிகமிருந்தது. பின் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வீரைய்யனை நோக்கிச் சென்றான் மணிவண்ணன்.

“பட்டாளத்துக்காரரே என்ன கோயில் பக்கமெல்லாம் வந்திருக்கீக?” – சிரித்தபடி அருகே வந்தவனை நிமிர்ந்து நோக்கியப் பெரியவர்,

“நீ என்னா டா இந்தப் பக்கம்?, தெனம், கள்ளுக்கடை வாசல்ல கட்டைய நீட்டிக் கிடக்குற பயலுகளெல்லாம், சிவராத்திரி-ண்டா, குலசாமி கோயில்ல ஒன்னு கூடிர்றீங்க!, உங்களைச் சொல்லி என்ன?, உங்க சாமியே பட்டசாராயமும்,சுருட்டும் குடிக்கிற ஆளு தான?” என்றார்.

“ஹிஹிஹி! உங்களுக்கு ரொம்பக் குசும்பு தாத்தா”

“அது சரி! பொங்க வைக்கலயா டா நீங்க?”

“வைச்சாச்சு வைச்சாச்சு! போன வாரம், ஆத்துக்குக் கிழக்க ஒரு இடம் முடிச்சோம்!! அதேன் இன்னிக்கு எங்காத்தா பொங்க வைச்சு முடி குடுத்துச்சு”- என்றவன் கிழவனின் முகத்தை ஆராய..

“ஆத்துக்குக் கிழக்க இருக்குற நிலமெல்லாம் நம்ம பரம்பரை நிலமுண்டு சொல்லுவியே தாத்தா” – இவனது பேச்சைக் கேட்டபடி ஆரன் அருகே வந்து நின்றான்.

“பரம்பரை நிலம்தேன்! முறையான பத்திரம் இல்லாததால , ஊர்ப்பயலுக கொள்ளையடிச்சுத் தின்னுட்டிருக்காய்ங்க!, போறாய்ங்க விடு! சாகும் போது தலைல கட்டிக்கிட்டாப் போ போறோம்” –எனப் பெரியவர் கூறியதும், மணிவண்ணனின் திருட்டு முழியைக் கண்ட ஆரன்,

“ஆமா, பெரிய தியாகப் பரம்பரை! பத்திரம் முறையா இருந்த நிலத்தையும் கூட தூக்கித் தான குடுத்தீக!, கையெழுத்தை மாத்திப் போட்டு இவுகப்பன் ஆட்டையப் போட்ற அளவுக்கு, உங்கப்பா ஏமாந்த சோணகிரியா இருந்திருக்காரு! உன் காலத்துல நீயாவது இருக்கிறதை, முறையா உன் பேருக்கு மாத்தியிருந்தா, இன்னிக்குப் பல மழைக்காளான் முளைக்காமலே போயிருந்திருக்கும்” என்றான்.

“சரி விட்றா பேராண்டி!நெஞ்சுல உரம் இருக்கிறவன், உழைச்சு சொந்தமா சொத்து சேர்ப்பியான்! **** கழுவக் கூட நொந்துக்கிறவன், குறுக்கு வழியைத்தேன் தேடுவியான்! நல்லாயிருந்துட்டுப் போறாய்ங்க விடு”

கிழவனும்,பேரனும் தன்னையும்,தன் குடும்பத்தையும் கழுவி ஊற்றுவதைக் கண்டுக் கோபம் கொப்பளித்தாலும், அடக்கிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்த மணிவண்ணன், இருவரும் முடித்ததும்..

“ராத்திரிக்குக் கள்ளு கொண்டு வரச் சொல்லியிருக்கேன் தாத்தா, எங்காத்தா வைக்குற சேவக்கறிக் கொழம்போட, கள்ளைக் குடிச்சேண்டு வை! சொர்க்கமா உறக்கம் வரும்!” – என்று கூற.. “அடேங்கப்பா! இளவட்டப் பய நீயி! கள்ளையும்,கறியையும் சேர்த்துத் திம்ப! ஆனா என் வயசும்,உடம்பும் தாங்காதுப்பா” என்று பெரியவர் கூறியதும் “அதெல்லாம் தாங்கும்! நீங்க யாரு! பட்டாளத்துக்காரராச்சே! நான் ராத்திரி வாறேன்” என்றவன் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு நகர்ந்து விட்டான்.

“என்னா தாத்தா இவன், சுத்த மானங்கெட்டப் பயலா இருப்பியான் போல! அம்புட்டுப் பேசுறோம்! ரோஷமில்லாம உட்கார்ந்திருக்கியான்! களவாணிப்பய! ஆளும்,மொகரையும்” என்ற ஆரனிடம்..

“என்னைக்குமில்லாம இவன் என்னத்துக்கு இப்புடிப் பம்முறியாண்டு தெரிலயே டா” என்று பெரியவரும் முகம் சுருக்கினார்.

இருவரது முகச்சுழிப்பையும் மேலும் அதிகரிக்கும் பொருட்டு, அந்த வார இறுதியிலேயே அவர்களது வீட்டிற்கு வருகை தந்தான் மணிவண்ணன், குடும்பத்தோடு! அகலருவியைப் பெண் கேட்டு!

வீட்டு வாசலை விட்டு சற்றுத் தள்ளியிருந்த ஜாதி மல்லிச் செடியில் பூ பறித்தபடி நின்றிருந்த அகலருவி, தன் வீட்டை நோக்கி நடந்து வரும் வள்ளியம்மையின் குடும்பத்தையும், அவர்களின் பின்னே மணிவண்ணனின் குடும்பத்தினரையும் கண்டுப் புருவம் சுருக்கினாள்.

யோசனையுடனே நின்றவளின் அருகே வந்த வள்ளியம்மையின் முகத்தில் எப்போதும் போல் ஒரு வண்டி எரிச்சல் மண்டிக்கிடந்தது.

“வர்றவிங்கள வா-ண்டு கேட்காம, வாயை என்னத்துக்குடி இப்பிடிப் பசை போட்ட மாதிரி மூடி வைச்சிருக்கிறவ?” – தமக்கை மெல்லிய குரலில் முணுமுணுத்ததும் முறைத்தவள், அவளுக்குப் பின்னே நோக்கி,

அவளது கணவன்,மாமியார்,மாமனாரிடம் “வாங்க” எனக் கூறி லேசாய்த் தலையாட்டினாள். அவர்களும் சிறு தலையசைப்புடன் நடந்து விட, பின்னே வந்த பாண்டீஸ்வரி நக்கல் பார்வை செலுத்துவதைக் கண்டு உதட்டை வளைத்தவள், “நல்லாயிருக்கியாத்தா?” – எனத் தன் கன்னம் வழித்த மணிவண்ணனின் அன்னையிடம் மெல்லச் சிரித்து வைத்தாள்.

அனைவரும் உள்ளே சென்றதும், பின் தங்கிய மணிவண்ணனின் முறுக்கு மீசையையும்,புலிப்பல் சங்கிலியையும்,சவ்வாது வாசனை மணக்கும் கலர் சட்டையையும் கண்டு இரு புருவங்களையும் உயர்த்தித் திமிராய் நோக்கியவளிடம்,

“ஹாஹாஹா” என சிரித்தவன், “இந்தத் திமிருதேன் டி! இந்தத் திமிருதேன்! திமிலைத் தூக்கிக்கிட்டு திமிறிட்டு நிற்குற காளை மாறி, உன் கண்ணு காட்டுற இந்தத் திமிருதேன் டி, உன்னைய அடக்கியே ஆகனுமுண்டு எனக்கு வெறி ஏத்தி விடுது” என்றான்.

அசால்ட்டாக உதட்டைச் சுழித்தவள் “அடேங்கப்பா! ஏன் டா, கள்ளைக் கண்டாலே கை நடுங்குற பய நீயி!, நீ தகிரியமா களத்துல இறங்கிக் காளையைத் தொட்ருவியாக்கும்?, அதெல்லாம் சுத்தவீரனுக்கான சம்பவம்! உன்னை மாதிரி சுண்டக்கா பயலுக்கில்ல” என்றாள்.

“வீர வசனமா?, பேசுடி பேசு! மாமனைக் கட்டிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு வந்தப்புறம், என் மடில கிடைக்கையில இதே வசனத்தைப் பேசிப் பாரு”

“மாமன்-ண்டா யாரு?”

“ஏன்?, நான்தேன்”

“மாங்காய்க்கு மீசை முளைச்ச மாதிரி இருக்குற பயலெல்லாம் மாமனா?, உன்னைய என்னத்துக்கு டா நான் கட்டனும்?”

“கட்டனும்ல?, அதுக்குத்தேன, குடும்பத்தோட பொண்ணு கேட்டு வந்திருக்கோம்?” – என்று கூறியவன் ஒரு நொடி திகைப்புடன் விழி விரித்தவளின் முகத்தைத் திருப்தியாய் நோக்கினான்.

“பயப்பட்றியா?” – மணிவண்ணன்.

அவனுக்குப் பதில் கூறாமல் கையிலிருந்தப் பூக் கிண்ணத்தை அருகிலிருந்தக் கல்லில் வைத்தவள், நிமிர்ந்து அவனை நக்கலுடன் நோக்கி,

“உன்னையப் பார்த்து நான் பயப்பட்ற அளவுக்கு நீ பெரிய ஆளா?, ஆனா, சிங்கம் மாறி, ஒன்னுக்கு ரெண்டு மாமன் மகனுங்க என் வீட்லயே இருக்கும் போது, உன்னைய மாறி அசிங்கத்துக்கு நான் என்னத்துக்கு டா வாக்கப்படப் போறேன்?”

“உனக்கிருக்கிற திண்ணக்கத்துக்கு, அவிங்க ரெண்டு பேரையும் கட்டுனாலும் உன் திமிரு அடங்காதுடி”

“கட்டுவேனே! ரெண்டு பேரையும்! என்னா குறைஞ்சிடப் போகுது இப்ப?”

“ஆமாமா! ஊரே உன்னைய வேசி-ண்டு சொல்லிக் காறித் துப்புனாலும், என்னா பெருசா குறைஞ்சிடப் போகுது!”

“ஏன், 5 புருஷனைக் கட்டுன பாஞ்சாலியை சாமி-ண்டுதேன கோயில் கட்டிக் கும்பிட்றீக?, நான் 2 பேரைக் கட்டுனா என்னைய வேசி-ன்றுவீங்களா?”

“நியாயம்தேன் டி! ரெண்டைக் கட்ட ரெடியா இருக்கிறவ, மூணாவதா என்னையும் கட்டிட்டுப் போ! எப்பிடியோ ********-ண்டு பேர் எடுக்கப் போற! அதுல என்னையும் சேர்த்துக்கிறதுல என்ன பிரச்சனை உனக்கு?”

“பார்த்தியா, இதான் சாக்குண்டு, நீ கண்ணியவானுங்களோட உன்னையும் சேர்த்துக்கப் பார்க்குற?,ஏன் டா, நீயெல்லாம் கிழவியைக் கூட விட்டு வைக்காம அரிப்பெடுத்துப் போய் கடலைக்காட்டுலயும்,கம்மா மேட்டுலயும் கரை ஒதுங்குற களவாணிப்பயலாச்சே! உன்னையெல்லாம் எவளும் வப்பாட்டனாக் கூட வைச்சுக்க மாட்டாளுகளே டா! எந்த சீக்காளியோட கூடி என்ன நோயோ இழுத்து வைச்சிருக்கியோ யாருக்குத் தெரியும்! வேணும்-ண்டா ஒன்னு செய்!, கதைகள்-ல வர்ற மாதிரி, தீக் குளிச்சு, உன்னைய சுத்தப்படுத்திக்கிட்டு வா! நீ அரைவேக்காடா வந்தாக் கூட அயித்தான்-ண்டு உன்னைய நான் அரவணைச்சுக்கிறேன்!”

அவள் சரமாரியாகப் போட்டுத் தாக்கியதில் கோபத்தில் சிவந்த விழிகளுடன், முகம் இறுக நின்றவனைத் திருப்தியுடன் நோக்கியவள்,

“நீ ஒழுக்கத்தைப் பத்திப் பேசுனதும், நான் கண்ணீரை ஒழுக விட்டு அடங்கிப் போயிருவேண்டு நினைச்சியா?, காலாகாலமா பொம்பளைங்க நடத்தையை விமர்சனம் பண்ணித்தேன டா, உங்க நாக்குக்கடில எங்களை பொழப்பு ஓட்ட வைக்குறீங்க! உன்னை மாதிரி பரதேசிப் பயலுக்கெல்லாம், என்னை மாதிரி பத்தினி கேட்குதா? ஏற்கனவே ஆத்தோரம் வைச்சு என்-ட்ட செருப்படி வாங்கியும், உனக்குக் கொழுப்பு குறையல பார்த்தியா?, மருவாதையா வந்தத் திசை தெரியாம, உன் குடும்பத்தை இழுத்துக்கிட்டு ஓடிரு. இல்ல, வீச்சருவாளைக் கொண்டி, உன் தலையை வீசிப்புடுவேன் சொல்லிட்டேன்!” -அலட்டிக் கொள்ளாமல் அவன் முகம் பார்த்து சீறியவள், பூக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பின் வாசல் வழி வீட்டுக்குள் சென்று விட்டாள்.

கொல்லையிலிருந்து வீரைய்யன் வீட்டுக்குள் நுழைகையில், வள்ளியம்மையின் ஒட்டுமொத்தக் குடும்பமும் முற்றத்தில் அமர்ந்திருப்பது கண்டு ஒரு நொடி புருவம் சுருக்கிப் பின் அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

அவரைக் கண்டதும் அமர்ந்திருந்த நாற்காலியிருந்து எழ முற்பட்ட சங்கிலியன், பின் முகம் மாற, அழுத்தமாய் நகராது அமர்ந்து விட, அவரை ஒரு பார்வை பார்த்தபடி கூட்டத்தின் அருகே சென்றார் பெரியவர்.

“வீரலட்சுமி, வந்தவங்களுக்கு காபி,பலகாரமெல்லாம் கொடுத்தியா?” என்றவர் முன்னேயிருந்தத் தாம்பளத் தட்டுக்களைக் கண்டுக் கூட்டத்தைக் கேள்வியாய் நோக்கினார்.

“பட்டாளத்துக்காரரே! நான் சுத்தி வளைக்க விரும்பல! நேரடியாவே விசயத்துக்கு வாறேன்! எங்கண்ணன் பொன்ராசு மவன் மணிவண்ணனுக்கு, உம்ம பேத்தி அகலருவியைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோமுங்க” – என்றார் வள்ளியம்மையின் மாமனார்.

“ஓஓஓ” என்ற பெரியவரின் குரல் மெல்லத் தேய்வதையும், முகம் சுருங்குவதையும் கண்டக் கூட்டம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, வள்ளியம்மையின் கணவன்,

“சொல்லாம,கொள்ளாம திடுதிப்புண்டு வந்து நிண்டது தப்புத்தேன் பட்டாளத்துக்காரரே! எம்பங்காளி, உம்ம பேத்தி மேல கொள்ள ஆச வைச்சிருக்கியான்! கட்டிக்கிட்டா அவளைத்தேன் கட்டிக்குவேண்டு ஒத்தக் கால்ல நிற்குறியான்! அதேன் எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தி நாளைக் கடத்திக்கிட்டுண்டு, பொண்ணு கேட்ரலாம்ண்டு பொறப்புட்டு வந்துட்டோம்!” என்றான்.

“அதை நான் தப்பு சொல்லல மாப்ள! பூவு-ண்டு இருந்தா, 4 வண்டு தேடி வர்றது இயல்பு தான?, ஆனா.. ராசாவாட்டம் ஒன்னுக்கு ரெண்டு பேரனுங்களை வளர்த்து வைச்சிருக்கேன் நான்! மொறை மாமனுங்க அவனுங்களை விட்டுப்புட்டு நான் வெளிய பொண்ணு குடுத்தா, நல்லாயிருக்காதுல்ல மாப்ள?”

“வெளிய பொண்ணு கொடுத்தா,சொத்து வெளிய போயிருமோண்டு பயப்படுறீகளோ?” – கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க,

“ஏற்கனவே ஒருத்தியை வெளியே தான கொடுத்துருக்கோம்! என்னா பெரிய சொத்து வெளிய போய்ருச்சு?, இன்னில இருந்து ஆயிரம் வருசத்துக்கப்புறம் நான் சேர்த்து வைச்சிருக்கிற சொத்தெல்லாம் எவன் அனுபவிச்சிட்டிருப்பானோ?, நிலையில்லாத விசயத்தையெல்லாம் நான் பெருசா மதிக்கிறதில்ல தம்பி”-என்றார் பெரியவர்.

“எங்களுக்கும்தேன் பணம்,காசு பெருசில்ல! கட்டுன சீலையோட நீங்க பொண்ணை அனுப்பி வைச்சாக் கூட நாங்க ஏத்துக்கிடுவோம்” – மணிவண்ணனின் தாய்.

“நீங்க என்னா ஏத்துக்கிறது?, நாங்க என்ன வக்கேத்தவகளா? கட்டுன சீலையோட புள்ளையை அனுப்ப?, முதல்ல இங்க யாரு உங்களுக்குப் பொண்ணு கொடுக்கத் தவ்விட்டுத் திரியுறா?” – தன் மகன்-களுக்கு உரிமைப்பட்டவளை, எவனோ ஒருவன் வந்து பெண் கேட்கும் ஆத்திரத்தில் மீனாட்சி வார்த்தையை விட,

“மீனாட்சி” என அடக்கியப் பெரியவர், எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டு..

“உங்களை வருத்தப்பட வைக்குறதுக்கு மன்னிக்கனும்! எம் பேத்தியை வெளிய கட்டிக் கொடுக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல!” என்று பேசிக் கொண்டிருக்கையிலேயே சடாரென எழுந்த மணிவண்ணன்,

“அதை பொண்ணைப் பெத்தவரு சொல்லட்டும்! உங்கட்டப் பேச்சு வார்த்தை நடத்தத்தேன் நாங்க வெள்ளையும்,ச்சொல்லையுமா கிளம்பி வந்தோமாக்கும்” என்று கூற..

“தம்பி, வார்த்தை என்ன வானம் வரைக்கும் ஏறுது?, யாருட்டப் பேசிட்டிருக்கீகண்டு தெரியுதுல்ல?” – என்று மீனாட்சி சத்தமிட,

மகன் அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி அழுத்தமாய் அமர்ந்திருப்பது கண்டு கையைப் பிசைந்த சோலையம்மாள், வீரலட்சுமியிடம் கண்ணைக் காட்ட, அவர் கணவரின் அருகே சென்று, அவர் கையைச் சுரண்டியதில் நிமிர்ந்து பார்த்த சங்கிலி, அவளிடம் பொறுக்கும்படி சைகை செய்தார்.

“இந்தாப்பா, பொண்ணைப் பெத்தவனே! வாய்ல வைச்சிருக்கிற வாழைப்பழத்தைத் துப்பிப்புட்டு, வாயைத் தொறந்து பேசு” – கோபமாய்க் கிழவர் சங்கிலியனை முறைக்க, அவர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தும், அவர் புறம் தலையைத் திருப்பாது எழுந்து நின்ற சங்கிலி,

“மணிவண்ணனை பொண்ணுக் கேட்டு வரச் சொன்னதே நான்தேன்! எம் பொண்ணை அவனுக்குத்தேன் கட்டிக் கொடுப்பேன்” என்று சட்டமாகக் கூறுகையில்.. உள்ளே நுழைந்தனர் ஆரனும்,விருமனும்.

சங்கிலி கூறியதைக் கேட்டுக் கொதித்துப் போன கிழவர், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு,

“அதுக்கு அவ உம் பொண்ணா மட்டும் இருந்திருக்கனும். இந்தப் பட்டாளத்துக்காரனோட பேத்தியா இருந்திருக்கக் கூடாது!” – என்றவர்,

“இம்புட்டுத்தேன் மருவாதை உனக்கு! நீ வரவழைச்சக் கூட்டத்தை, நீயே திருப்பி அனுப்பி விட்ரு! இல்ல நடக்கிறதே வேற!” என்று மிரட்ட, கோபம் கொண்ட சங்கிலி,

“எம் பொண்ணை யாருக்குக் கொடுக்கனுமுண்டு தீர்மானம் பண்ற உரிமை கூட ஒரு பெத்தவனா எனக்குக் கிடையாதா?, எல்லாத்துக்கும் நான் உங்க கையை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கனுமுண்டு என்னா இருக்கு?,” என்று அவர் முகம் பார்க்காமல் சத்தமிட..

“நீ தீர்மானம் பண்ண மயிரைத்தேன் நான் பார்த்தேன்ல! பிச்சையெடுக்கிறவன் கூடத் தான் பிள்ளைக்கு உத்தமனாப் பார்த்துத்தேன் டா கட்டி வைப்பியான்! இவனை மாதிரி ஊர் மேய்றவனை இல்ல! யார் வீட்ல வந்து யார்றா பொண்ணு கேட்குறது?, தராதரம் இல்லாத பயலுகளுக்கெல்லாம், தாம்பாளத்தைத் தூக்கிக்கிட்டு என் வீட்டு வாசல் ஏறி வர்ற அளவுக்குத் தகிரியம் கூடிப் போச்சா?” – பெரியவர் உக்கிரமடையத் துவங்கியதும்.. பொங்கிய மணிவண்ணனின் தாய்,

“யாரைப் பார்த்து ஊர் மேய்றவண்டு சொல்றீங்க?, எம் புள்ளைக்கு என்ன தராதரம் இல்லாததைப் பார்த்தீக?, எலேய், ராஜாங்கம், இதேன் நீ சம்மந்தம் பண்ண வீட்டு வகுசா டா?,” என்று வள்ளியம்மையின் மாமனாரிடம் எகிற,

“வக்கேத்தவனை, வக்கேத்தவண்டு தான சொல்ல முடியும்?, உன் புருசன் என் சொத்தை ஆட்டையப் போட்டுப் பொழச்சியான்! உன் மவன், என் புள்ளையவே ஆட்டையப் போட வாசப்படி ஏறி வந்திருக்கியான்” – கிழவன் சீறியதும்..

“இனியொரு வார்த்தை எங்கப்பனைப் பத்தி பேசுனீகண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்” – எனக் கையை நீட்டிய மணிவண்ணனின் சட்டையைப் பற்றிய விருமன்,

“என் தாத்தனையேக் கை நீட்டிப் பேசுற அளவுக்குப் பெரியாளா டா நீயி?, ஏன் டா, கடலைக்காட்டுல கண்டவளுகளோட களவாணித்தனம் பண்ற சல்லிநாய் நீயி! உனக்கு என் அயித்தை மவ கேக்குதா?” என்று அவன் மூக்கை உடைக்க,

“விருமா, விட்றா! விட்றா அவனை! சல்லிப்பய! தொலைஞ்சு போகட்டும்!” என விருமனைத் தன்னருகே இழுத்தவர், “இந்தாரு, உள்ள இருந்து என் பேத்தி, அருவாளைத் தூக்கிக்கிட்டு உன் தலையை வெட்ட வாறதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா நீயே உன் கூட்டத்தைக் கூட்டிக்கிட்டு இடத்தைக் காலி பண்ணிரு” என்று பெரியவர் கூறுகையில்..

“நான் தயாராத்தேன் உட்கார்ந்து இருக்கேன்! நீ ஊ-ண்டு ஒரு வார்த்தை சொல்லு தாத்தா! ஒரு பய மிஞ்சாம, அத்தனை பேர் தலையையும் வெட்டி சாய்ச்சிட்றேன்” என அகல் உள்ளறையிலிருந்துக் குரல் கொடுக்க.. பல்லைக்கடித்தபடி நிற்கும் சங்கிலியனையும், இறுக்கிய உள்ளங்கையோடு நிற்கும் மணிவண்ணனையும் கண்டு மீசையை நீவியபடிக் கர்வமாய்ப் புன்னகைத்த பெரியவர்,

“வள்ளி, உன் வீட்டாளுகளைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு தாயி! பங்காளின்ற பேர்ல இந்த வினைபுடிச்ச பயலுக-லாம் வீட்டுக்குள்ள வந்தா, அடிச்சுத் துரத்தி விடு” என்றவர் தன் வீட்டு மாப்பிள்ளையிடம்..

“உம் பங்காளி, எம்புள்ளைக்கு இஷ்டமில்லண்டு தெரிஞ்சும், வம்பு வளர்க்க வாசப்படி ஏறி வந்திருக்காரு மாப்ள! சொல்லி வைங்க! எம் பேத்தியை, எல்லா நேரமும் என்னால புடிச்சு வைக்க முடியாது! வந்து.. வகுந்துருவா அப்புறம்” – என்று கூற.. படியேறி வந்து மாமனார் வீட்டில் அவமானப்பட்டதை எண்ணிக் கடுகடுத்த முகத்துடன் மணிவண்ணனை நோக்கிய வள்ளியின் கணவன், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் விருட்டென வெளியேறினான்.

அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக “அவ ஒரு எமகாதகிண்டு தெரிஞ்சும், இவன் ஏன் அந்தப் புள்ளதேன் வேணுமிண்டு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டுத் திரியிறியான்?, “ எனப் புலம்பியபடி வெளியேறி விட..

கசங்கிய சட்டையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த மணிவண்ணன் அவமானத்தில் அசையாது நின்றிருந்த சங்கிலியனை நோக்கி,

“அடங்கிப் போய் நிற்கிறதுக்கு என்னத்துக்குய்யா நீயெல்லாம் ஆம்பள-ண்டு மீசை வைச்சிருக்க?, கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்துறியா?” என்றவன் பெரியவரிடம்..

“பட்டாளத்துக்காரரே! தாத்தனும்,பேத்தியும் சேர்ந்து என் சொந்த,பந்தத்துக்கு முன்னாடி என்னைய அவமானப்படுத்திட்டீகள்ல?, நீங்களாவே என்னைத் தேடி வந்து எம் பேத்தியைக் கட்டிக்கண்டு, என் கால்ல விழுந்து கேட்பீக! கேட்க வைப்பான் இந்த மணிவண்ணன்” – என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சீறலாய்ப் பேச..

“நீ இப்பிடியே வசனம் பேசிட்டிருந்தா, உனக்கு இங்கனயே, இந்த இடத்துலயே வாய்க்கரிசி போட வைப்பான் இந்த விருமன். பார்க்குறியா?” என விருமன் முன்னே வர.. அவனைக் கொலைவெறியுடன் நோக்கி விட்டு திரும்பிச் சென்றான் மணிவண்ணன்.

அனைவரும் வெளியேறுகையில் உள் நுழைந்தச் சிலம்பன், தன் காதலி பாண்டீஸ்வரியைக் கண்டு “ஏய் புள்ள, நீ எங்க இங்க?” எனக் கேட்டபடி ஆர்வமாய் அருகே வர, அவளோ “ஹ்ம்” என சிலுப்பிக் கொண்டு அவனைக் கடந்து சென்று விட்டாள்.

வீட்டில் நடந்த விவரம் தெரியாமல், குழப்பமாய் உள்ளே வந்தவனிடம் ஆரன்,

“உன் காதலுக்கு சங்கூதிட்டா மச்சான் உன் தங்கச்சி! ப்ச்,பாவம் நீயி!” என்றான் போலி இரக்கத்தோடு!

“என்னா மாப்ள சொல்ற?” – அதிர்ச்சியாய் கேட்டவனிடம்..

“ஆமா! நீ அந்தப் புள்ளையை மறந்துட்டு, கிழவன் கை காட்டுறவளைக் கட்டிக்கத் தயாராகு!” என்றான் விருமன்.

“எலேய்! என்னாங்கடா பீதியைக் கிளப்புறீங்க?” – என்றவனை இழுத்துக் கொண்டு இருவரும் உள்ளே நுழைகையில்..

அடங்கா ஆத்திரத்துடன் ‘ரைய்’ எனத் தன் மனைவியை அறைந்து கொண்டிருந்தார் சங்கிலியன்.

“அப்பா, மாமா” என ஆளாளுக்கு ஓடி வந்து வீரலட்சுமியைத் தாங்க, இதழோரம் ரத்தம் வழிய கீழே சாய்ந்தவரின் கண்ணில் கண்ணீரைக் கண்ட பெரியவர், சங்கிலியனைக் கொதிப்புடன் நோக்க,

“நான் ஆம்பளையா இருந்து என்ன பிரயோசனுமுண்டு கேட்டுட்டுப் போறியான்டி ஒருத்தன்! இவனை மாறி ஊர்ல எத்தனை பேரு என்னையக் கேவலமாப் பேசுறாய்ங்கண்டு தெரியுமாடி உனக்கு?” என்று மனைவியிடம் கத்தினார் சங்கிலியன்.

“ஹ்ம்ம்??, அப்பிடி எத்தனை பேருடா உன்னையக் கேவலமா பேசிட்டாய்ங்க?, வா டா, வந்து எவன்-ண்டு என்-ட்டக் காட்றா பார்ப்போம்” – பெரியவர்.

“நீங்க பேசாதீங்க! நான் இந்த நிலைமைல இருக்கக் காரணமே நீங்கதேன்”

“ஆமா! 3 வேளை சோறு, 2 வேளை கள்ளுண்டு, நீ தொப்பை வளர்க்குற அளவுக்கு சுகபோகமா வாழக் காரணமே நாந்தான்! இல்லைண்டு யார் சொன்னது?”

எகத்தாளமாய்க் கிழவர் கேட்டதும் கடுப்பாய் அவரை நோக்கியவர்,

“இந்த வீட்ல இனியும் என்னால உட்கார்ந்து கஞ்சி குடிக்க முடியாது! நீங்க, என் பொண்டாட்டிக்குச் சேர வேண்டிய சொத்தைப் பிரிச்சுக் கொடுங்க! நாங்க தனியாப் போயிட்றோம்” என்றார்.

“எது உன் பொண்டாட்டி சொத்து?, உன் பொண்டாட்டியா பட்டாளத்துல மாச சம்பளம் வாங்கிட்டிருந்தா?, இல்ல, காட்டுலயும்,மேட்டுலயும் கால் கடுக்க உழைச்சாளா?, ஒவ்வொன்னும் நான் சேர்த்த சொத்துடா! அது யாரைப் போய்ச் சேரனுமுண்டு நான்தேன் தீர்மானம் பண்ணனும்”

“அப்டின்னா, உம்ம மவளாப் பொறந்தவளுக்கு, என்னா தான் செய்யப் போறீக?”

“அதைப்பத்தின கவலை உனக்கென்னத்துக்கு?, நீதேன் மீசை வைச்ச ஆம்பளையாச்சே! வெளிய போய் மூட்டை தூக்கி, உன் பொண்டாட்டிக்குக் கஞ்சி ஊத்து டா”

கோபம் கொப்பளிக்க மூச்சு வாங்க நின்ற சங்கிலியைக் கண்டு..

“அப்பிடியே அவகப்பனைக் கொண்டு பொறந்திருக்கியான்! குடிகார நாயி! சொத்து வேணுமாம்ல சொத்து! நாதியத்துக் கிடந்தவன தூக்கிட்டு வந்து வளர்த்ததுக்கு, நல்ல மரியாத செஞ்சுட்ட டா நீயி! நீ இப்பிடி சின்னப்புத்திக்காரண்டு தெரிஞ்சுதேன் உன்னையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்கேன் நானு! இனி என் மூஞ்சில முழிச்ச, வகுந்து போடுவேன் சொல்லிட்டேன்” என்று கர்ஜித்த பெரியவர், துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு விறுவிறுவென வெளியேறி விட்டார்.

அவர் நகர்ந்ததும் ஓ-வென ஒப்பாரி வைத்த கிழவி “உனக்கு ஏன் டா புத்தி இப்பிடிப் போகுது?, வளர்த்தவரை எதிர்த்துக்கிட்டு உன்னால எப்பிட்றா பொழப்பு நடத்த முடியும்?, பெரியவர் முன்னால இம்புட்டுப் பேச்சுப் பேசிப்புட்டியே டா?” எனக் கூற..

“வாயை மூடு! இல்ல, ஆத்தா-ண்டு கூடப் பார்க்காம, குரவளைல மிதிச்சுக் கொன்றுவேன் சொல்லிப்புட்டேன்! எல்லாம் உன்னால வந்தது! என்னைச் சுத்தி எல்ல்லாம் இருக்கு! ஆனா எதுவுமே எனக்குச் சொந்தமானது இல்ல! உன் நொண்ணனுக்கு அடிமையாட்டம் பணிஞ்சு போய் என்னத்தக்கண்டேன் வாழ்க்கைல?, இந்தத் தரித்திரம் பிடிச்சவளைக் கட்டிக்கிட்டதைத் தவிர! என் காலைச் சுத்திக் கிடக்குற பொட்டச்சிறுக்கிக, உங்க ரெண்டு பேரால எனக்கு என்னைக்கும் பீடைதேன்! நான் பெத்ததாவது எனக்கு மானம்,மருவாதையைத் தேடித்தருமுண்டு பார்த்தா, அதுவும் தாத்தனோட சேர்ந்துக்கிட்டு அப்பண்டு கூடப் பார்க்காம அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்துது என்னைய! எங்கயாவது போய்த் தொலையுறேன் நானு! உங்க மொகரைகளையெல்லாம் பார்க்கக் கூட எனக்கு விருப்பமில்ல” – எனக் கத்த.. உள்ளறையில் காதைக் குடைந்து கொண்டிருந்தாள் அகலருவி.

“எலேய்! சங்கிலி! நான் பெத்த ராசா! உன்னைய நோகாம வளர்க்கனுமுண்டு தான டா நான் அம்புட்டுப்பாடு பட்டேன்! என்னைய ஏச உனக்கு எப்பிட்றா மனசு வந்தது?, என்ன ராசா உன் மனக்கவலை?” – என்று அவரது கையைப் பிடித்தவரை உதறி விட்டு விறுவிறுவென வெளியேறி விட்டார் சங்கிலி.

மகனின் கோபத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் மருமகளிடம் திரும்பிய கிழவி, “எல்லாம் உன்னாலதேன் டி! அப்பன் வீட்ல உட்கார்ந்து திங்குற பவுசுல, என் மவனை மதிக்காம எகத்தாளமாத் திரிஞ்சேல?” என்று திட்ட..

கூந்தலை அள்ளி முடிந்த வீரலட்சுமியும் “யாரு நானு?, உம் மவனை இப்பிடிக் கிறுக்கனாக்குனதே நீதேன் டி கிழட்டுச் சிறுக்கி! மகனுக்கு சோத்தை ஊட்டி, கள்ளுக் கடைல கொண்டு விட்ட ஒரே ஆத்தா உலகத்துலயே நீதேன்! உங்களாலதேன் டி என் வாழ்க்கை போச்சு!” என்று கத்தத் துவங்க..

எங்கேயோ ஆரம்பித்த பிரச்சனைக் கடைசியில் மாமியார்-மருமகள் சண்டையாக முடிந்ததில், “ஷ்ஷ்ஷ்ஷ்”எனத் தலையைச் சொரிந்த அனைவரும், ஆளாளுக்குத் தங்களது வேலையைப் பார்க்க நகர்ந்து விட்டனர்.

ந்த வயக்காட்டுப் பாதையில், அணிந்திருந்தத் தாவணியைச் சுழற்றிய வண்ணம் கையில் புத்தகத்துடன் நடந்து சென்று கொண்டிருந்த புவியரசி, எதிரே வந்தவனைக் கண்டுப் புன்னகையுடன் நின்றாள்.

அவளைக் கண்டதும் அவசரமாய்த் திரும்பி நடந்தவனின் அருகே “ஏய்ய் அழகரு நில்லு” என வேகமாக ஓடிச் சென்றவள், மூச்சு வாங்க அவன் எதிரே நின்று, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

பயத்தில் வியர்வை வழிய பதட்டத்துடன் அவளைக் கடந்து போக முற்பட்டவனைக் கை நீட்டி வழி மறித்தவள்,

“உன் கிட்ட ஒன்னு கொடுக்கனும்” என்றாள்.

அவள் கண்களை எதிர்கொள்ளாது “எ..எ..என்ன?” என்று திக்கியவனைக் கண்டுப் புன்னகைத்து..

“ஏன், என் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குற?, அம்புட்டுப் பயமா என் மேல?” எனச் சீண்ட, படாரென நிமிர்ந்தவன் பல்லைக் கடித்து, “அப்பிடியெல்லாம் ஒன்னுமில்ல” என்றான்.

“பின்ன என்ன?, என் கண்ணைப் பார்த்துப் பேசு”

அவள் விழிகளை நோக்கிப் பதில் பேசாது நின்றவனிடம், தன் புத்தகத்தில் ஒளித்து வைத்திருந்தக் காகிதத்தை எடுத்து நீட்டினாள்.

கேள்வியாய் புருவம் சுருக்கியவனிடம்..

“என்னன்னு தெரியலயா?”

“………”

“நீ குடுக்க வேண்டியதையெல்லாம் நான் குடுக்க வேண்டியதாயிருக்கு” என சலித்துக் கொண்டவள் “புரியல?” எனக் கேட்டு.. மலர்ந்த முகத்துடன்..

“இது காதல் கடுதாசி!” என்றாள்.

திடுக்கிட்டு வாய் பிளக்க நின்றவனிடம் “நா….நான்.. உன்னை விரும்புறேன்” என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்றவன், எச்சில் விழுங்கிப் பதட்டத்தைக் குறைத்துப் பின் கோபத்துடன் அவளை நோக்கி,

“சின்னப்புள்ளையாச்சே, உன் மனசை நோகடிக்க வேண்டாம்ன்டு நான் விலகி,விலகிப் போனா, நீ இம்புட்டுத் தகிரியமா கடுதாசியைத் தூக்கிட்டு வந்து நிற்குற?, என்ன தெரியும் உனக்கு என்னைப் பத்தி?, என்ன புரியும் இங்க இருக்குற சாதிப்பிரிவினையைப் பத்தி?, பள்ளிக்கூடத்துல நீயும்,நானும் ஒரே உடுப்பு உடுத்தி, ஒரே புத்தகத்தைப் படிக்கிறதால, நாம ரெண்டு பேரும் ஒன்னு-ண்டு நினைச்சுட்டியா? இப்பிடி நீ முட்டாள்தனமா நடந்துக்கிறது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்!” என்றவன் சுற்றும்,முற்றும் நோக்கி “யாரும் பார்க்குறதுக்கு முன்னால அந்தக் கடுதாசியைக் கிழிச்சுக் கம்மாக்குள்ள எறிஞ்சுபுட்டு வீடு போய்ச் சேரு” என நகரப் பார்க்க.. அவசரமாய் அவன் கையைப் பற்றியவள்,

“இது தான் உன் பதிலா?” என்றாள்.

கண் கலங்க, ஏமாற்றத்தில் கூம்பிப் போன முகத்துடன் தன் கரம் பற்றியிருப்பவளைக் கண்டு அழுவதா,சிரிப்பதா என்றே புரியவில்லை அழகருக்கு.

“ஆத்திரம்,அவசரம்-ண்டா நீயெல்லாம் கக்கூஸ்க்குள்ள ஓடுற ஆளு! நான் கம்மாயோரமா ஒதுங்குற ஆளு! உனக்கும்,எனக்கும் மலையளவு வித்தியாசமிருக்கு! தயவு செஞ்சு இதையெல்லாம் விட்ரு” என்றவன் அவள் கையை விலக்கி விட்டு நடந்து விட்டான்.

சிரித்த முகத்தோடு வந்தவள், சிறு பிள்ளையாய் அழுத வண்ணம், முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடி நடந்து செல்வதைத் திரும்பிப் பார்க்காமலே புரிந்து கொண்ட அழகருக்கு, துக்கம் நெஞ்சைக் கவ்வியது.

இருவரும் ஆளுக்கொரு திசையில் நகர்ந்ததும், அங்கிருந்த ஆலமரத்தின் பின்னிருந்து, நீளக்குச்சியால் முதுகு சொரிந்தபடி வெளியே வந்த மணிவண்ணனின் கூட்டாளி அழகுபாண்டி, வெற்றிலையை மென்றபடி “ஓஓஓ! கதை அப்பிடிப் போகுதா! இதை அண்ணன் கிட்ட வத்தி வைச்சாகனுமே” என்றபடியே தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரையும் மாறி,மாறி நோக்கினான்.

நாட்டுக்கருவேலமரம் போலில்லாமல், இந்த சீமைக்கருவேல மரத்து மேல ஏகப்பட்ட விமர்சனமிருக்கு! மண்ணுக்குள்ள 150 அடி ஆழம் வரை வேர் விட்ற இந்த மரங்கள், எந்த வறட்சியிலும் வளரக் கூடிய தன்மை கொண்டதாம்! மழை இல்லாம போனாக் கூட, நிலத்தடி நீரை உறிஞ்சி தன் இலைகளை வாட விடாம பார்த்துக்குமாம்! வறட்சி காலத்துல இந்த மரம் இப்பிடி நிலத்தடி நீரை உறிஞ்சிட்றதால, மத்த தாவரங்கள் போதிய நீர் இல்லாம பாதிக்கப்படுதாம்!

மணிவண்ணன்,சங்கிலியனும் கூட இந்த சீமைக்கருவேல மரத்தைப் போன்றவர்கள் தான்! அடுத்தவன் எப்பிடிப் போனா என்ன?, தான் நினைச்சதை சாதிச்சு, தான் மட்டுமே நல்லாயிருக்கனும்-ன்ற குணம் கொண்டவர்கள்!