மலைத்தேனீ
நல்ல பொன்னிறமாகப் பொரிந்திருந்த வறுத்த அரிசியை வாயில் அரைத்த வண்ணம் வாசல் திண்ணையில் காலாட்டியபடி அமர்ந்திருந்த அகலருவி, முன்னே மேய்ந்து கொண்டிருந்த கோழிகள், அரிசியைக் கொத்தித் தின்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், டிரிங்,டிரிங் என்ற ஒலி கேட்டு நிமிர்ந்து வெளிவாசலை நோக்கினாள்.
“ஐயா.. போஓஓஓஓஸ்ட்” – என்றபடி அருகே வந்த போஸ்ட்மேனிடம்..
“சொந்தக்காரய்ங்க பூராப்பயலும் உள்ளூர்ல இருக்கையில, எவன் அவன் எங்க வீட்டுக்குக் கடுதாசி எழுதுறது?” – என முணுமுணுத்த அகல்,
“யார்ட்ட இருந்துண்ணே வந்திருக்கு?” எனக் கேட்டாள்.
“டெல்லில இருந்து வந்திருக்கும்மா” என்றவர் அவளிடம் இரண்டு நீளக் கவர்களை நீட்ட, வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தவள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலிருந்த கடுதாசிகளைக் கண்டு மெல்லத் தலையைச் சொரிந்தாள்.
ஒரு வழியாக To அட்ரஸில் இருந்த ஆரணன் மற்றும் விருமனின் பெயர்களை தட்டுத் தடுமாறிப் படித்துக் கண்டு கொண்டவள், From அட்ரஸைப் படிக்கப் போராடிக் கொண்டிருந்த நேரம், சட்டென அவள் பிடரியில் ஒரு இடியை இறக்கி அவள் கையிலிருந்ததைப் பறித்தான் ஆரன்.
தலையைத் தடவியவண்ணம் நின்றவளைக் கண்டு கொள்ளாமல், “நமக்கா டா பங்காளி?” – என ஆரன் கடிதத்தைப் பிரிப்பதை ஆர்வமாய்ப் பார்த்தபடி அவன் பின்னே வந்தான் விருமன்.
“ஆமா! BHEL,Delhi ஆபிஸ்ல இருந்து வந்திருக்கு” என்றான்.
“என்னா போட்ருக்காய்ங்க?”
“எழுதுன பரீட்சைல பாஸ் பண்ணிட்டோமாம்! 3 மாசத்துக்குள்ள டெல்லில ஜாயின் பண்ண வேண்டி இருக்குமுண்டு போட்டிருக்காய்ங்க!”
“அப்டின்னா, பெருசு கிட்ட உடனே விசயத்தைச் சொல்லனுமே டா!”
“சொன்னதும், அப்பிடியா,சந்தோஷம் நல்லபடியா போய்ட்டு வாங்கடா பேராண்டிகளான்னு அனுப்பி வைப்பாருண்டு நினைச்சியா?, காசு சம்பாரிக்க அம்புட்டுத் தொலவு போகனுமாண்டு, அறிவுரை சொல்லியே நம்ம காதை சூடாக்கி விட்ருவாரு பங்காளி”
“அதுக்குண்டு, சென்ட்ரல் கவர்மெண்டு உத்தியோகத்தை வேணான்னு தூக்கி எறிய முடியுமா?, பொறு பங்காளி! பெருசுகிட்ட பேசுற மாதிரி பேசி சமாளிப்போம்!”
இருவரும் தங்களுக்குள் மெலிந்த குரலில் பேசுவதை ஒட்டுக் கேட்க முயன்று தோற்ற அகல் ‘உச்’ என்றபடி மீண்டும் வாசல் திண்ணையில் அமர்ந்தாள்.
அரிசியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டவள் காலாட்டிக் கொண்டே “திருட்டு வேலை பார்க்குறீகளா?, கூட்டுக்களவாணிகளா” எனக் கேட்க.. இருவரும் ஒருசேர அவள் புறம் திரும்பினர்.
அவளை முறைத்தபடியே கடுதாசிகளை மடித்து, ஆரன் தன் சட்டைப் பையினுள் வைத்துக் கொள்ள, அணிந்திருந்த வேஷ்டியை மடித்துக் கட்டியபடி அவளருகே நடந்து வந்த விருமன்,
“ஏன் டி, இது வாயா, இல்ல அரவை மெஷினா?, எந்நேரமும் மொச்சுக்கு,மொச்சுக்குண்டு என்னத்தையாவது அரைச்ச மயமாத்தேன் இருக்கு! இப்ப என்னத்தடி மேயுற? எங்க, எனக்குக் கொஞ்சம் கொடு பார்ப்போம்” – என்று கேட்க,
தலையிலடித்துக் கொண்ட ஆரன், “அவ அரவை மெஷினுண்டா, நீ சரியான ஆட்டுக்கல்லுடா பங்காளி! ச்சை! ரெண்டும் சோத்துக்கு செத்த கழுதைக!” என்று திட்ட,
கிண்ணத்தை விருமனிடமிருந்து காக்கப் போராடிக் கொண்டிருந்த அகலருவி, “சரியாச் சொன்னீக மாமா! அடுப்படில பொரிகடலை டப்பாவை உருட்டுற பொடிப் பயலுக்கெல்லாம் பொரி அரிசி கேக்குதா?, ஒழுங்கு மருவாதையா ஓடிரு சொல்லிப்புட்டேன்” என்று விரலை நீட்டி மிரட்டினாள்.
“கருவாக்குந்தாணி! யாருடி?, பொடிப்பய?” என்று சீறிய விருமன், கிண்ணத்தைத் தன் புறம் இழுக்க முயற்சிக்க, விடாது பற்றியபடி அவள் போராட, இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆரன்,
“ப்ச்,அவ விரலை ஒடிச்சு விட்டுக் கிண்ணத்தைப் புடுங்கு பங்காளி!, சட்டு,புட்டுன்னு சண்டையை முடிக்கிறதை விட்டுப்புட்டு, சலம்பிட்டுக் கிடக்குற!” என்று அசால்ட்டாகக் கூறியபடிக் கழுத்தைத் தேய்க்க, அவனை ஆங்காரமாய் நோக்கி, அவள் தன் கண்களைப் பெரிதாய் விரித்த சமயம், படாரென அவளிடமிருந்துக் கிண்ணத்தைப் பறித்த விருமன், பாதி அரிசியை அவசரமாய்த் தன் வாயில் கொட்டிக் கொண்டான்.
இருவரையும் முறைத்தவண்ணம் மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளைக் கண்டபடி, தானும் அரிசியை அள்ளி வாயில் அடைத்தான் ஆரன்.
பொறுமையாய் மென்று விழுங்கிய விருமன், அகலருவியை நோக்கி “ஏன் டி, அதென்ன அவனை மட்டும் மாமன்ற?, என்னைய இஷ்டத்துக்கு இலக்கணம் பார்க்காம ஏசுற?, என்னையப் பார்த்தா எப்பிட்றி இருக்கு உனக்கு?” என்று அதட்டினான்.
ஏற்கனவே ஆரன் மீது ஏகக்கடுப்பிலிருந்தவள் வெடுக்கென, “ஏன் இவனையும் தான் ஏசுவேன்!” எனக் கூறி ஆரனை நோக்கி “போடா உலுவ மீனு” என்று திட்டி முடிப்பதற்குள் நடு விரலால் நறுக்கென அவள் தலையில் ஒரு குட்டு வைத்திருந்தான் ஆரன்.
வலி தாங்காது கண்களில் குளம் கட்டி விடப் பல்லைக் கடித்துத் தலையைப் பற்றியவள், மூக்கை உறிஞ்சியபடி “பத்து வயசுல போடாண்டு சொன்னதுக்கு, இப்பிடிக் கொட்டி வைச்சுத்தேன் மாமான்னு கூப்பிடச் சொன்னாக!” என்று அறிவிப்பாகக் கூற.. பலமாகச் சிரித்த விருமன்,
“பரவால்லயே! அப்ப நானும் உன் மண்டையைப் பொளந்தா, என்னையும் மரியாதையாப் பேசுவ போலயேடி!” என்றதும்.. ஆத்திரமடைந்தவள், தலையைத் தடவிக் கொண்டிருந்தக் கையை எடுத்து, அருகேயிருந்த விளக்குமாற்றைத் தூக்கியபடி, இருவரையும் கோபமாய் நோக்கி..
“கையை வைச்சுப் பாரு பார்ப்போம்” – என்று சீற..
“பார்றா! அடேங்கப்பா! என்னாடி, இதேன் சாக்குண்டு என்னையும் மொறைக்குற?, நீயி, என்னைய வெளக்கமாத்தால அடிச்சிருவியாக்கும்?,” என்று ஆரன் அவளருகே வர, அவசரமாய் எழுந்து நின்றவள்,
“ஏன், அடிக்க மாட்டேண்டு நினைச்சீகளா?, நான் பட்டாளத்துக்காரர் பேத்தி! வகுந்துபுடுவேன் சொல்லிட்டேன்!” என்று வீர வசனம் பேச, புருவம் உயர்த்தியவன், அவள் கையிலிருந்த விளக்குமாற்றை வெடுக்கென இழுத்ததில், திண்ணையிலிருந்துக் கீழே குதித்தாள் அகலருவி.
விளக்குமாற்றோடு நின்றவனைக் கண்ட விருமன், “எல்லாம் சரிதேன், பங்காளி… ஆனா அந்த உலுவ மீனு….” எனத் தொடங்கி விட்டுக் கெக்கே,பெக்கேவெனச் சிரிக்க, அதுவரையிருந்த எரிச்சலும்,கோபமும் மாறி, அகலருவியும் கையை உதறியபடிக் கடகடவென சிரிக்கத் தொடங்கினாள்.
முகம் கன்ற பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தவன், கையிலிருந்த விளக்குமாற்றால் இருவரையும் சாற்றத் தொடங்க, துள்ளிக் குதித்து ஓடிய அகலருவி,
“கரண்டுல சாக் அடிச்சுக் கருகிப் போன காக்கா கலர்ல இருக்குற இந்த மனுசன், பொறந்தப்ப நல்லா உலுவ மீனு கணக்கா வெள்ள,வெளேர்ண்டு இருந்தாராமா! யாரு நம்புவா?, யாத்தே! இவுக புராணத்தைப் பேச ஆரம்பிச்சா, இஷ்டத்துக்கு அள்ளி விடும் பாரு அயித்தை! முக்கு வீட்டு முனியம்மா கெழவில இருந்துத் தொடங்கி மச்சு வீட்டு மங்கம்மா கெழவி வரைக்கும் அத்தனைப் பேர்க்கிட்டயும் கதை,கதையா ரயில் ஓட்டி வைச்சிருக்கு!” என்று சிரிப்புக்கிடையில் கூற..
அடிப்பதை நிறுத்தி விட்டு நெற்றி வியர்வையைத் துடைத்த ஆரன், “ஏய்ய் எங்கப்பனோட திருச்சில இருந்த வரைக்கும் நான் சூரக்கலர்லதேன் டி இருந்தேன்! எப்ப இங்க வந்து இந்த ஈத்தரப் பயலோட சேர்ந்தேனோ, அப்ப இருந்துதேன் இப்பிடிக் கரிச்சட்டியாய்ப் போனேன்!” என்று பீற்றிக் கொள்ள..
“ஆமாமா, இல்லாட்டியும், இவரு அப்பிடியே அவிச்ச அரிசி கணக்கா, பளீர்ன்னு இருந்தவருதேன்! எலேய்! நானெல்லாம் சின்ன வயசுல எம்புட்டு தீக்கலர்ல இருந்தேன் தெரியும்ல?, போய் எங்காத்தாட்டக் கேட்டுப் பார்றா” – என்ற விருமன் காலரைப் பின்னே இழுத்து விட்டுக் கொள்ள..
ஆரன் பதில் சொல்லும் முன் இடையில் புகுந்த அகலருவி “அப்பிடிப் பார்த்தா, நானும்தேன் சும்மா, சுட்ட சுண்ணாம்பாட்டம் பளிச்சுன்னு இருந்தேன்! இருட்டுல கூட ஜொலிப்பேண்டு எங்காத்தா அடிக்கடி சொல்லும்” எனப் பெருமையாய் கழுத்தை வெட்டிக் கொள்ள, அவளைக் கேவலமாய்ப் பார்த்த விருமன்,
“ஆமாமா, ஜொலிப்ப! போடி, போய் நடுவீட்ல மாட்டி வைச்சிருக்கிற போட்டோவுல உன் மொகரையப் பாரு! ஆப்பிரிக்கால பொறந்த அண்டங்காக்காவாட்டம், அட்டுக்கரியா நீ இருந்த லட்சணத்தை!” என்று கூற.. கொதித்துப் போனவள்,
“ஆமா! அட்டுக்கரிதேன்! என்னா இப்ப?, இதெல்லாம் என்னையக் கட்டிக்கப் போறவன் கவலைப்பட வேண்டிய விசயம்” என்று நொடிக்க,
“அதேன்டி! நான் கவலைப்பட்றேன்” – என்ற விருமன் ஒற்றைப் புருவம் உயர்த்திச் சிரிக்க.. “ஷ்ஷ்ஷ்” என்றவள்.
“வைகை ஆத்துல தண்ணி வத்திப் போய், இந்த உலகமே அழியுற நிலைமை வந்தாக் கூட, சத்தியமா நான் உன்னையக் கட்டிக்க மாட்டேன்!” என்று கத்த,
“ஓஹோ!” எனப் பெரிதாய் வியந்தபடி சட்டைக் கையை மடித்துக் கொண்டவனைக் கண்ட ஆரன்,
“ஏய்ய், எம் பங்காளி அழகுலயும்,அறிவுலயும் மயங்கி பட்டணத்துல எத்தனை புள்ளைக அவன் பின்னாடி சுத்துச்சுகண்டு தெரியுமா?, அவனைக் கட்ட உனக்குக் கசக்குதாடி?” என நண்பனுக்குப் பரிந்து கொண்டு பேச,
‘ஆ…மா! சீமைல இல்லாத அழகு’எனப் புருவம் உயர்த்திப் பின் “ப்ச்” என உதட்டைச் சுழித்தவளிடம்..
“பார்ப்போம் டி! என்னையத் தவிர உன்னைய எவன் கட்டுறியாண்டு!” எனக் காலரைத் தூக்கிவிட்டபடி விருமன் கூறிக் கொண்டிருக்கையில், திடுதிடுவென ஓடி வந்தான் அழகரின் நண்பன் ஒருவன்.
மூச்சு வாங்க ஓடி வந்து வெளிவாசல் கதவருகே நின்றவன், “அண்ணே! பட்டாளத்துக்காரரு இருக்காராண்ணே?” எனக் கேட்டான்.
பயமும்,பீதியுமாய் நிற்பவனைக் கண்டு அருகே விரைந்த இருவரும், “என்னா டா?” எனக் கேட்டதும்,
“அழகரு, அழகரை அடிச்சுப்புட்டாய்ங்கண்ணே!” என்றான் அவன்.
“என்னா டா சொல்ற?, யார்றா அடிச்சது?” – ஆரன்.
“அடிச்சது, உங்க சொந்தக்காரய்ங்கண்டு சொல்றாய்ங்கண்ணே! நாயக்கன்பட்டிக்காரரு! புலிப்பல் வைச்ச சங்கிலி போட்டுக்கிட்டுப் பெரிய மீசையெல்லாம் வைச்சிருப்பாரே! பாதி நேரம் கள்ளுக்கடைலயே கிடப்பாருல்ல?”
“மணிவண்ணனா டா?” – விருமன்.
“அவன் என்னத்துக்கு மாங்குளத்துக்காரனோட ஒரண்டை இழுக்குறியான்? களவாணிப்பய! குடிச்சுப்புட்டு மப்புல வம்பிழுத்திருப்பியான்” – இவர்களருகே வந்து நின்ற அகலருவி.
“பேரு சரியாத் தெரிலண்ணே”
“சரி, எந்த ஆஸ்பத்திரில சேர்த்திருக்காக?, இப்ப எப்பிடியிருக்கியான்?” எனக் கேட்டபடி ஆரன், வண்டியை எடுக்க,
“கவர்மெண்டு ஆஸ்பத்திரில சேர்த்திருக்கிறதா சொன்னாக! ஊர்க்காரய்ங்க பூரா ஆஸ்பத்திரி முன்னாடி கூடிட்டாய்ங்கண்ணே! உங்க சொந்தக்காரன்தேன் அடிச்சதுண்டு தெரிஞ்சு, என் கிட்டப் பட்டாளத்துக்காரரை கூட்டி வரச் சொன்னாய்ங்க” – என்றான்.
“பெருசைக் கூட்டிப் போறதாடா பங்காளி?” – விருமன்.
“முதல்ல விசயம் என்னாண்டு தெரிஞ்சுக்குவோம்! நீ ஏறு” என்ற ஆரன் “எலேய்! நீயும் ஏறுடா” எனக் கூறி வந்தவனையும் ஏற்றிக் கொண்டு வண்டியில் பறந்தான்.
மறுபுறம், ரோட்டோர டீக்கடையொன்றில் அமர்ந்திருந்த வீரைய்யன், கூடியிருந்த ஊராரிடம் பேச்சில் ஈடுபட்டிருக்க, முன்னேயிருந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கருப்பன், அருகிலிருந்த மணல் குவியலை முட்டி மண்ணை அள்ளி வீசியபடி விளையாடிக் கொண்டிருந்தான்.
“மாடு என்னத்துக்குத் தாத்தா இப்பிடி மணலை முட்டிக்கிட்டுக் கிடக்கு?” – சிறுமி ஒருத்தி கிழவனிடம் வந்து கேள்வி கேட்க,
“அப்பப்ப இப்பிடி விளையாண்டாத்தேன் அவனுக்குக் கூச்சம் போகும்! வாடில நிற்கையில, எவனும் வந்து அவன் கொம்பைத் தொட்டா, மிரளாம இருப்பியான்!” என்ற பெருசிடம் அச்சிறுமி,
“நான் மாட்டைத் தொட்டுப் பார்க்கவா?” என ஆசையும்,பயமுமாய்க் கேட்டதும் சிரித்த பெருசு “தொட்டுப்பாரு!ஆனா நீ பயந்தேண்டா அது முட்டிப்புடும் பார்த்துக்க! ஆசை வந்துட்டா, கூடவே தகிரியமும் வந்திடனும்! வீரத்துல குஞ்சு,மூப்பு-ன்னு வித்தியாசம் கிடையாதுண்டு ஒரு மீசைக்காரரு சொல்லியிருக்காரு!” எனக் கூறிக் கொண்டிருக்கையில்..
“ஆமாமா! காளையை மட்டுமில்ல, கன்னிகளையும் கூட வீரமா வளர்க்குறதுல நம்ம பட்டாளத்துக்காரரை மிஞ்ச ஊர்ல ஆளே கிடையாது!” என்றபடியே அருகே வந்த மணிவண்ணன், அங்கே தொங்கிக் கொண்டிருந்த காரப்பட்டாணிப் பாக்கெட்டுகளில் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டபடி, “ஆனா என்ன, காளைக்கு மூக்கணாங்கயிறு கட்டத் தெரிஞ்ச மனுசன், அவரு வீட்டுக் கன்னிகளை கட்டுப்படுத்தாம விட்டதுதேன் வருத்தமான விசயம்” எனப் போலியான கவலைக்குரலில் கூற,
கையிலிருந்த டீ க்ளாஸைக் கீழே வைத்து விட்டுத் தொண்டையைச் செறுமிய பெருசு, தோளிலிருந்தக் கருப்புத் துண்டை தலையில் கட்டியபடி எழுந்து நின்றார்.
அவரது தோரணையைக் கண்டு நக்கலாகச் சிரித்துக் கொண்டவன், “கட்டவுத்துப்புட்டு ஓட்ற காளையைக் கூட அடக்கிப்புடலாம் போல! ஆனா, கட்டுப்பாடில்லாம திரியுற பொட்டச்சிறுக்கிகளை அடக்குறது பெரும்பாடால்ல இருக்கு! தெனவெடுத்த சிறுக்கிக! பருவம் வந்ததும் எவன் கிடப்பியாண்டு, பல்லிளிக்கக் கிளம்பிட்றாளுக!” எனப் பட்டாணியோடு சேர்த்துப் பட்டாளத்துக்காரரையும் அவன் மென்று முழுங்க முயற்சிப்பது கண்டு,
“எலேய் ஜெயக்கொடி! அண்ணேன் பேசுறதைப் பார்த்தா, இவரு ஒழுக்கத்துக்குப் பேர் போனா ஆளா இருப்பாரு போலயேடா! இப்பேர்ப்பட்ட ஒழுக்கசீலனையா டா நீயி, போன அமாவாசை அன்னிக்கு ஆலமரத்தடியில அரைபோதையில அம்மணமாக் கிடக்குறதா சொன்ன?, என்னா டா நீயி?, இவரு தெனவெடுத்தச் சிறுக்கிக முதுகை நிமிர்த்த வந்த, முன்னறி தெய்வம் டா! அவரைப் போய் நீயி, ******பய-ண்டு சொல்லிப்புட்டியே? சுத்த விவரம் புரியாத பய டா நீயி” – என்று கிழவர் கோதாவில் இறங்க..
அவர் தன்னை மறைமுகமாகத் தாக்குவதை உணர்ந்த மணிவண்ணன், ஜெயக்கொடி என்பவனை முறைத்து விட்டுப் பின், அவரை நேராக நோக்கி,
“சரி சாமி! நான் ஒழுக்கங்கெட்டத் ******பயலாவே இருந்துட்டுப் போறேன்! ஆனா நீங்க காளை மாறி வளர்க்குற கன்னிமாருக, என்னத்துக்கு கரும்புக்காட்டுல காதல் கடுதாசியோட கண்டவன் பின்னாடி சுத்திட்டுத் திரியுறாளுக?” எனக் கேட்டான்.
அவன் கூறுவது புரியாமல் நெற்றியைச் சுருக்கியப் பெரியவரைக் கண்டு.. மிதப்புடன் “ஹ்ம்ம்! கன்னுக்குட்டியெல்லாம் காளை மாட்டைத் தேடி ஓடுது! கலிகாலம் டா சாமி!” என்றவன்.. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டித் தன்னையே கூர்மையாய் நோக்குபவரிடம்..
“உம்ம சின்னப் பேத்தி, அந்த செவத்தச் சிறுக்கி, முளைக்கும் முன்னமே, நம்ம சாதிக்காரய்ங்க தலைக்கு முக்காடு போட்டு விட்ருவா போல! சாண் உசரத்துல இருந்துக்கிட்டு ச******யப்பயலோட சகவாசம் வைச்சிட்டுத் திரியுறா! தரங்கெட்டச் சிறுக்கி!” என்று அவன் கூற.. தாடியைச் சொரிந்த பெரியவர்,
“எலேய்! என்னா டா இவன்?, கள்ளைக் குடிச்சுப்புட்டுக் கம்மாயோரம் கிடக்க வேண்டிய நேரத்துல, கடை முன்னாடி நின்னுக்கிட்டு, கரைச்சலைக் கொடுக்கிறியான்?, எலேய்ய்… நீயி போதைல பார்வை தெரியாம இருக்கண்டா, இப்பிடி உட்கார்றா” என்றவர் “டேய், ஜெயக்கொடி, அந்தக் கொதி தண்ணியைத் தூக்கி இந்த பரதேசிப்பய தலைல ஊத்து டா! அப்பிடியாவது தெளியுறியானாண்டு பார்ப்போம்” என்றார்.
கண்டமேனிக்கு அவன் பேசியும், கிழவன் ‘கன்’ மாதிரி நிற்பதைக் கண்டு லேசாகக் கடுப்பாகிப் போனவன், முகத்திலிருந்த நக்கல் சிரிப்பைக் கஷ்டப்பட்டு நிறுத்தி வைத்துக் கொண்டு..
“போதைல இருக்கிறது நான் இல்ல பெருசு! உம் பேத்திதேன்! எம் போதைக்கே கொதி தண்ணியை ஊத்த நினைக்குறவரு, உம்ம பேத்திக்கிருக்கிற போதையப் பத்தித் தெரிஞ்சா, அவளைத் தீயில கொளுத்திப்புடுவீக போலயே” என்றான்.
“விசயம் என்னாண்டு நேராச் சொல்றா”
“ம்ம், இப்பிடிப் பெரிய மனுசனா மருவாதையாக் கேளுங்க சொல்றேன்! அதை விட்டுப் போட்டு, இளவட்டப் பய நானு, என் கூட சரிக்குச்சரியா பேச்சுப்போட்டிக்கு வாறீக!” – என்று மட்டம் தட்டியவன்,
“உம்ம சின்னப் பேத்தி புவியரசியும், அந்த ச******யப்பய அழகரும் காதோல் பண்றாங்களாமா, காதோல்” என்றான் சத்தமாய்.
அவன் விசயத்தைத் தெளிவாய்க் கூறியதும், அதை எதிர்பாராது ஒரு நொடி இறுகி நின்றப் பெரியவரைக் கண்டு சுற்றியிருந்தோர் சலசலக்கத் துவங்க, அவரது அமைதியைச் சாதகமாக்கிக் கொள்ள நினைத்த மணிவண்ணன்,
“கரும்புக்காட்டுல கையப் புடிச்சுக்கிட்டு உம்ம பேத்தியும்,அந்த ***** மவனும் கொஞ்சிட்டுக் கிடந்ததை எங்கூட்டாளி பார்த்துட்டு வந்து சொன்னியான்! உம்ம பேத்தி அவனுக்காக உருகி,உருகி எழுதுன காதல் கடுதாசி கூட என் கிட்டத்தேன் இருக்கு. படிக்குறேன்! கேக்குறீகளா?” எனக்கூறி அவன் கடிதத்தைக் கையில் எடுக்க,
பட்டென அவனிடமிருந்து கடிதத்தைப் பறித்துத் தன் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்ட பெருசு,
“பள்ளிக்கூடத்துக்குப் போற வயசுல, புகையிலை தோட்டத்துப்பக்கம் ஒதுங்குன பய நீயி! உனக்கு எழுத்துக்கூட்டிப் படிக்க எப்பிடியும் 3 நாள் ஆகும்! அதனால, நானே படிச்சுக்கிறேன்!” என்று கூறப் புருவம் உயர்த்தியவன்,
“பேத்தி மானம் போயிருமேண்டு பயப்பட்றீக போல” என்றான்.
“இதுல மானம் போக என்னா இருக்கு?”
“அதான? உம்ம மானம்தேன் 25 வருசத்துக்கு முன்னாடி, உம்ம மவன் ச******சியை இழுத்துட்டு வந்தப்பவே, வானம் ஏறிடுச்சே! இனி புதுசாப் போக என்னா இருக்கு!” என நக்கலடித்தவன்,
“ஆனா எங்களுக்கு அப்பிடிக் கிடையாது! நீங்க பாட்டுக்க உம்ம மவனுக்கு செஞ்சா மாதிரி, பட்டாளத்துப் பவுசைக் காட்டி, ரெண்டு பேருக்கும் மாலை மாத்தி, மறைவான இடத்துல குடி வைச்சுறாதீக! அன்னிக்கு மாதிரி, மன்னிக்க இன்னிக்கு ஊர்ல ஒரு பய கிடையாது! ஒவ்வொருத்தனும் சாதிவெறில சங்கிலி கட்டாத நாயாத் திரியுறானுக! நான் சும்மா கொளுத்திப் போட்டா, ஒட்டு மொத்தப் பயலும் குதர்றதுக்கு தயாராய்ருவாய்ங்க!, அப்புறம் நீங்களும் கூட மறைவான இடத்துலதேன் உசுரு வாழ வேண்டியிருக்கும்” என்று மிரட்டி விட்டு,
“உம்ம வீட்ல தலைமுறைக்கு ஒன்னு தலையெடுக்கிறதே, கீழ்சாதிக்கார நாய்களுக்கு இரையாகத்தேன் போல! இந்த முறை அப்பிடி நடக்காது பட்டாளத்துக்காரரே! மலம் அள்றவனை மாப்பிள்ளை-ண்டு வீட்டுக்குள்ள சேர்த்துக்க நீங்க வேணா தயாரா இருப்பீக! ஆனா, எங்களால வெட்டியான் கூட உட்கார்ந்து விருந்து திங்க முடியாது!” என்று ஆத்திரத்துடன் கூற… நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டப் பெரியவர், அவன் தோளில் தட்டி,
“இம்புட்டு நேரம் பேசுனதுல உனக்கு நாக்கு வரண்டு போயிருக்கும்! ஒரு டீயை வாங்கிக் குடிச்சுத் தொண்டையை நனைச்சுக்க” – என்றவர் சலசலத்த ஊரார்களைக் கண்டு கொள்ளாமல் நகரப் பார்க்க.. விடாது மணிவண்ணன்,
“உங்களை அசைக்குறது அம்புட்டு சுலபமில்லண்டு எனக்கு நல்லாத் தெரியும் பட்டாளத்துக்காரரே! இப்பிடி ஒரு சம்பவம் என் வீட்ல நடந்திருந்தா, அந்தப் பொட்டச்சிறுக்கிக் காலைத் திருகி கொல்லைல கட்டிப் போட்டிருப்பேன்! ஆனா, இந்தக் கிறுக்கி உம்ம பேத்தியாய்ப் போயிட்டாளே! அம்புட்டு சீக்கிரம் தொட்ற முடியுமா?, அதேன் இவளை விட்டுப்புட்டு அந்தத் ******** மவன் கையை ஒடைச்சு கம்மாக்குள்ள எறிஞ்சுப்புட்டேன்!” என்றான்.
அதிர்ந்துத் திரும்பிய பெரியவர், அவன் சட்டையைப் பிடித்து “என்னாடா சொல்ற?” எனக் கோபத்துடன் கேட்டார்.
“பார்றா! பேத்திக்காக துடிக்காத நெஞ்சு, அந்த பரதேசிப்பயலைப் பத்தி சொன்னதும் பதறுது! ஆமா பெருசேய்! அந்தப் பள்ளியோடத்துல இவன் சாதிக்காரப் பயலுக நூறு பேரு படிக்கிறாய்ங்களாம்! இவனைச் சும்மா விட்டா, மீதியிருக்கிற பயலுகளுக்கெல்லாம் குளிர் விட்டுப் போய்றாது?, அதேன், அவனை கம்மாக்குள்ள மிதக்க வுட்ருக்கேன்! பார்த்துப் பதறுற அவன் சாதிக்காரப் பயலுக ஒவ்வொருத்தனும், இனி பள்ளியோடத்துப் படியேறுறதுக்குப் பயப்படனும்!” – ஆத்திரத்தில் கண்கள் சிவக்கத் தன் சட்டையைப் பிடித்தபடி முறைத்து நிற்பவரைக் கண்டு அவன் எள்ளலாய்க் கூற..
“அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு,******உன் தலையைச் சீவிப்புடுவேன் டா” என்று பெரியவர் மிரட்டிக் கொண்டிருக்கையில்.. கடை வாசலில் வண்டியில் வந்து நின்ற ஒருவன், “பட்டாளத்துக்காரரே, உங்க பேரன்ய்ங்க உங்களைக் கையோட கூட்டி வரச் சொன்னாய்ங்க” என்று குரல் கொடுக்க.. மணிவண்ணனைக் கண்களாலேயே பஸ்பமாக்கியப் பெரியவர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மீசையை நீவி விட்டபடி விறுவிறுவென வெளியேறினார், “எலேய் ஜெயக்கொடி, கருப்பனைக் கூட்டிப் போய் கட்டுத்தரைல வுட்றா” என்றபடியே.
பட்டாளத்துக்காரரை ஏற்றிக் கொண்டு சென்றவன், மருத்துவமனையின் முன்பு கூடியிருந்த அழகரின் ஊர்க்காரர்களைத் தவிர்க்க எண்ணி, அவரைப் பின் வாசல் வழியாக உள்ளே அழைத்துச் சென்றான்.
கிழவர் உள் நுழைவதைக் கண்டு, கையில் கட்டுடன் சோர்வாய்ப் படுக்கையில் சாய்ந்திருந்த அழகர்,குற்ற உணர்ச்சியும்,பயமுமாய் லேசாய் நடுங்கியபடி மெல்ல எழுந்தமர்ந்தான்.
“எலேய்! பட்றா,பட்றா” என்றபடியே உள் நுழைந்த கிழவர் அவரைக் கண்டதும் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுத அவனது அன்னையிடம் ஆறுதல் கூறி விட்டு, அவர் நகர்ந்ததும், அவனருகே அமர்ந்தார்.
கூர்மையாய்த் தன் முகம் பார்ப்பவரை எதிர்கொள்ள முடியாமல், அவன் நடுக்கத்தில் வியர்த்துப் போய் அமர்ந்திருக்க, படுக்கையில் கிடந்த அவனது வலது கையை மெல்லப் பற்றியவர்,
“என்னைய மன்னிச்சுட்றா” என்றார்.
பெரியவரின் அருகே நின்றிருந்த ஆரன் மற்றும் விருமனின் முகங்கள் இறுகிப் போய்க் கிடக்க, அவரது மன்னிப்பைக் கேட்டுப் பதறி,
“ஐயா! என்ன வார்த்தை சொல்றீக, அதுவும் போயும்,போயும் என்னைப் பார்த்து! நீங்க எவ்வளவு பெரிய மனுசன், நீங்க போய் இப்பிடிப் பேசலாமா?” என்று அவன் விதிர்த்துப் போய் எழுந்து நிற்கப் பார்க்க, அவன் தோள் பற்றி அமரச் செய்தவர் மெல்லிய குரலில்,
“இம்புட்டுப் பிரச்சனைக்கும் காரணகர்த்தா எம் பேத்தின்றப்ப, நாந்தேன டா மன்னிப்புக் கேட்கனும்?” என்றார்.
திகைப்பாய் நிமிர்ந்து பார்த்தவனிடம், “எனக்கு உன்னைப்பத்தியும் தெரியும்! எம்பேத்தியைப் பத்தியும் தெரியும்” என்றவரைக் கண்டு..
மௌனமாய்த் தலை குனிந்தவன் “அ…அ..அது, அது சின்னப்புள்ளைங்கய்யா! விவரம் புரியாம பண்ணிடுச்சு! ஆனா.. நீங்க… நீங்க மன்னிப்பெல்லாம் கேட்குற அளவுக்கு இது அம்புட்டுப் பெரிய விசயமில்லங்கய்யா!” என்று விட்டு அன்று நடந்ததைக் கூற.. அமைதியாக அமர்ந்திருந்தப் பெரியவர்,
“எத்தனை பேரு அடிச்சாய்ங்க?” – எனக் கேட்டார்.
“2 பேருங்கய்யா”
“வேற எங்க அடி பட்டிருக்கு?” எனக் கேட்டார்.
“கைல மட்டும் தானுங்கய்யா பெரிய அடி! மத்த இடத்துல எல்லாம் வீக்கமும், செராய்ப்பும்தேன்”
அவனைத் தலை முதல் கால் வரை முழுதாக ஆராய்ந்த பெரியவருக்கு அவன் குணமாகப் 15,20 நாட்களுக்கு மேலாகும் என்பது புரிந்தது.
“உனக்கு அந்தப் புள்ள மேல அப்பிடியெதுவும் எண்ணமிருக்காடா?”
கிழவர் வினவியதும் வலியை மறந்து, விருட்டென எழுந்து நின்றவன், திகைப்பில் திணறி, அவரது காலடியில் மண்டியிட்டு,
“ஐயா, சாக்கடை அள்றவன் எப்பிடிய்யா சாமிக்கு ஆசைப்பட முடியும்?, அந்தப்புள்ள கொட்டுற குப்பையில பொழப்பு நடத்துறவன்ய்யா நானு! என் தகுதி தெரிஞ்சும், தப்பு செய்ய நினைப்பேனா?, உங்க வீட்டுத் திண்ணைல தின்ன சோறு, நெஞ்சு வரைக்கும் நிறைஞ்சு கிடக்குறப்ப,என்னால எப்பிடிய்யா உங்களுக்குத் துரோகம் பண்ண முடியும்?” என்று கலங்கிய குரலில் கூற,
அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவசரமாய் அவன் தோளைப் பற்றித் தூக்கிப் படுக்கையில் அமர வைத்த பெரியவர்,
“பொசகெட்ட பயலே! இந்த வாக்குமூலத்தைக் கட்டில்ல உட்கார்ந்து குடுத்தா எனக்குக் கேட்காதா, வீங்குன காலை வைச்சுக்கிட்டு என்னத்துக்குடா வளைஞ்சிட்டுக் கிடக்க?” என்று கடிந்து கொள்ள..
கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டவன், “எனக்கு அப்பிடி எந்த எண்ணமும் இல்லைங்கய்யா! நல்லாப் படிச்சு, நல்ல வேலைக்குப் போய் எங்கப்பன்,ஆத்தாளுக்கும்,என் உடம்பொறந்தவனுக்கும் 3 வேளை நல்ல சோறு கிடைக்கிற அளவுக்கு நல்ல நிலைமையை உருவாக்கித் தரனும்ங்கிறதுதேன் என் கனவு,லட்சியம் எல்லாம்! அதைத் தவிர வேற எந்த நினைப்புக்கும் என் மனசுலயும்,மூளைலயும் இடமில்லங்கைய்யா” என்றவன் தொடர்ந்துத் தயங்கி அவர் முகம் பார்க்காமல் “அந்தப் புள்ளையும் கூட சும்மா விளையாட்டுத்தனத்துலதேன் இப்பிடிப் பண்ணிப்புட்டுச்சே தவிர, அது மனசுலயும் விவகாரமா எதுவுமிருக்காதுங்கய்யா! நல்ல புள்ளங்கய்யா அது! எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கும்ன்னு தோணுதுங்கய்யா” – என்று கூற..
தன் புற விளக்கத்தைக் கூறி, அவள் மீதும் யாருக்கும் எந்தவிதமானத் தவறான எண்ணமும் தோன்றி விடக் கூடாதென்கிற நோக்கத்துடன் பக்குவமாய் அவன் பேசும் விதத்தை வாஞ்சையுடன் நோக்கிய பெரியவர்,
“கனவுல கோட்டை கட்டி ராசாவா வாழ்ந்திட்டிருக்க பய, என்னத்துக்கு டா என்னைய மாறி ஒரு படிக்காத கழுதை கால்ல விழ நினைக்குற?, உனக்கிருக்கிற அதே 2 கையும்,2 காலும்தேன் எனக்குமிருக்கு! நான் உசந்தவனுமில்ல, நீ தாழ்ந்தவனுமில்ல! பணம்,காசுதேன் இந்த உசரத்தைத் தீர்மானிக்குதுண்டா, அந்த மணிவண்ணண் பயகிட்ட இல்லாததா?, கள்ளைக் குடிச்சுப்புட்டு போதைல கண்ணு தெரியாம, கழுதை வாய்க்குள்ள ஒன்னுக்கடிச்ச பய அவன்! காசு வைச்சிருக்கிறதால அவனையெல்லாம் உசந்தவனா நினைச்சுட முடியுமா? நாம வாழ்ற முறைமைதேன் மானம், மருவாதையைத் தீர்மானிக்குதே தவிர பணம்,காசு இல்ல! கால்ல விழறதெல்லாம் கையாலகாதத்தனம்! இனி நீ.. எதுக்காகவும், எவன் கால்லயும் விழக் கூடாது. புரியுதா?” எனக் கேட்க.. வியப்பாய் அவரை நோக்கித் தலையாட்டியவனின் தோளைத் தட்டி,
“சீக்கிரம் உடம்பைத் தேத்திப்புட்டு பள்ளியோடத்துக்குப் போற வழியைப் பாரு” என்றவர் அவனிடம் தலையசைத்து விட்டுத் தன் பேரனுங்களின் முகத்தை நோக்கினார்.
“வாசல்ல ஒரு குரூப்பு பஞ்சாயத்து பண்ண உட்கார்ந்திருக்காய்ங்க” – என்று விருமன் கூற பெருமூச்சை வெளியிட்டவர், சோர்வுடன் படுக்கையில் சாய்ந்த அழகரைக் கண்டு, அவனது அன்னையிடம் பார்த்துக் கொள்ளும்படிக் கூறி விட்டு, பேரனுங்களுடன் ஒதுங்கினார்.
“அவன்(மணிவண்ணன்) நம்ம மேல இருக்குற கடுப்புலதேன், ஒன்னுமில்லாத விசயத்தை ஊதிப் பெருசாக்கி, நம்மள ஒடுக்கிறனுமுண்டு திட்டம் போட்டுட்டுத் திரியுறியான்” –எரிச்சலுடன் கிழவர்.
“இதை சாக்கா வைச்சு, ரெண்டு சாதிக்காரய்ங்களையும் தூண்டி விட்டுக் கலவரத்தை உருவாக்கி, ஊர்க்காரய்ங்க உங்க மேல வைச்சிருக்கிற மரியாதைக்கு உலை வைக்கனுமுண்டு நினைக்கிறியான் போல தாத்தா!” – ஆரன்.
“பொண்டுகப்பய! நேரா மோதத் துப்பில்லாம, அப்பாவிப்பய மேல கை வைச்சிருக்கியான் பாரு! கண்ணு நிறைய கனவோட நிற்குற பயலைக் கண்டமாக்க நினைக்குறானே டா ****பய”
“நம்ம விரலை வைச்சே, நம்ம கண்ணைக் குத்தப் பார்க்குறியான் தாத்தா! ஆனா, நம்ம வீட்டுக் கழுதையைச் சொல்லனும் முதல்ல, கூறுகெட்டச்சிறுக்கி! பத்த வைக்கக் காத்திட்டிருக்கிறவன் கைல நெருப்புப்பெட்டியைத் தூக்கிக் கொடுத்தா மாதிரி, நம்ம நேரத்துக்குண்டு இவ சிக்கிருக்கா பாருங்க!” – என்று விருமன் புவியரசியைத் திட்ட..
“விட்றா, விட்றா! சின்னப்புள்ள, அவ வயசு அப்பிடி! எதையும் யோசிக்காம நடந்துக்கச் சொல்லித் தூண்டிருக்கு! எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவா! அவளை விடு! முதல்ல வெளிய காத்துக்கிடக்குறவிங்களை கவனிப்போம்” – என்று நடந்த பெரியவரின் பின்னே இருவரும் சென்றனர்.
கிழவரைக் கண்டதும் கூட்டம் சலசலக்க, இரு பிரிவாக நின்றிருந்தவர்களில், மணிவண்ணன் அனுப்பிய விழுதுகள் சில, கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டு,
“வாசல்ல இத்தனை பேரு காத்துக்கிடக்குறதை மதிக்காம, பின் வாச வழியா நுழையறதுதேன் பெரியமனுசத்தனமா?” – என்று குரல் கொடுக்க,
“எவன் டா அவன்?” – ஒரு சேரக் கூவியத் தன் பேராண்டிகளை அடக்கிய பெரியவர், கூட்டத்தினருகே வந்து நின்று கொண்டு,
“அந்தப்பய நிலைமை என்னாண்டு தெரிஞ்சுக்கிறதுதேன் முதன்மைண்டு பட்டுச்சு! அதேன் பின் வாசவழியா உள்ள போனேன்! முன்வாசல்ல நிற்குற முக்கியஸ்தர்களை தவிர்த்தது தப்புத்தேன்! மன்னிச்சுக்கிடுங்க” – என்று கையைத் தூக்கிக் கும்பிடு போட,
“பட்டாளத்துக்காரருல்ல, அதேன் பேச்சு வக்கணையா வருது! இந்த நியாயவெண்ணையை, நீரு புள்ள வளர்க்குறதுலயும் காட்டிருக்கனும்ய்யா!, அன்னிக்கு உம்ம மவன் பண்ணத் தப்பை நீர் ஆதரிச்சனாலதேன் உம்ம பேத்தி இன்னிக்குத் தரங்கெட்டப் பயலோடெல்லாம் தகிரியமா சகவாசம் வைச்சுட்டுத் திரியுது!” – ஒரு பிரிவு சத்தமிட..
“யாரு?, யாருய்யா தரங்கெட்டபய?, இருக்குற இடம் தெரியாத அப்பாவிப் பயலை மயக்கி, பள்ளியோடத்துலயே முதல் மார்க் எடுக்குற படிப்பாளிப் பய மனசைக் கலைச்சு, நல்லா இருந்தவனை, கையில கட்டோட ஆஸ்பத்திரில படுக்க வைச்ச அந்தத் ****சிறுக்கியோட தரத்தைப் பத்தி நாங்க பேசட்டுமா?” – என்று இன்னொரு பிரிவு கத்தியதும், கோபத்தில் கொதித்துப் போய், கேள்வி கேட்டவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றிய ஆரன்,
“வரம்பு மீறி பேசுனீகண்டா, நாக்கறுத்துப்புடுவேன் சொல்லிட்டேன்” – என்று சீற..
“அன்னிக்கு இவரு மவன் பக்கத்துல நிண்ட உங்காத்தாளை, இவ எதைக்காட்டி மயக்குனாளோ *****மவ-ண்டு வாய் கூசாம கேட்டு, அவளைக் கூனிக் குறுக வைச்ச பயலுக இவிங்க! இன்னிக்கு இவிங்க புள்ளையைப் பத்தி நாங்க பேசுனதும் பொங்கிட்டு வார??, எலேய்! போடா.. போய்… உங்காத்தாளைப் பேசுனவிங்க நாக்கை அறுத்துட்டு வாடா முதல்ல!” – என்று தன் சட்டையில் பதிந்திருந்தவனின் கையை உதறியப் பெருசு ஒன்று கூவ.. இறுகிப் போய் நின்றவனைக் கண்ட எதிரணி,
“இந்தா ஒன்னு கூடிட்டாய்ங்கள்ல! யோவ் பெருசு, பார்த்துக்க, நீயி இத்தனை நாள் சோறு போட்டு வளர்த்தது, நாய் இல்ல நரி! என்ன இருந்தாலும், அவிங்க ரத்தமும் தான ஓடுது இவனுக்குள்ள! அதேன், அவிங்க போட்டத் தூண்டில்ல சிக்கி, யார் பக்கம் பேசுறதுண்டு புரியாம தள்ளாடிட்டு நிற்குறியான்” – எனச் சீண்ட,
காலரைப் பின்னால் தூக்கி விட்டுக் சட்டைக் கையை மேலே ஏற்றிய ஆரன், உதடு வளையச் சிரித்து,
“தள்ளாடிட்டு நிற்க, நான் உன்னை மாதிரி தற்குறியுமில்ல! இவுக தூண்டில் போட்டதும் சிக்க, நான் கொளத்து மீனுமில்ல! நான் பட்டாளத்தான் பேரன்! சங்கறுக்க, சாதியெல்லாம் பார்க்க மாட்டேன்!, எங்கப்பன், எங்காத்தாளைக் கூட்டிக்கிட்டு ஓடுனாண்டா, அது எங்காத்தாளைப் பெத்தவகளும், எங்கப்பனைப் பெத்தவரும் விமர்சனம் பண்ண வேண்டிய விசயம்! எவன் வீட்ல எவன் மோண்டயான்,பேண்டயாண்டு, மோப்பம் புடிச்சுட்டு சுத்துற எச்ச நாய்களெல்லாம், இதேன் சாக்குண்டு தெருவுல நிற்குற தேருக்கு வடம் பிடிக்கப் பார்க்கக்கூடாது” – எனப் பல்லைக்கடித்துக் கொண்டு கூற..
“எலேய்! யாரை டா நாய்ங்குற?” என்று இருசாரரும் பொங்குவதைக் கண்டு “நிறுத்துங்கடா டேய்! நிறுத்துங்கடா” என அடக்கிய பெரியவர்,
“இப்பிடியே பேச்சை வளர்த்து நேரத்தை ஒப்பேத்தனுமுண்டு நினைக்கிறவிங்கெல்லாம், போய் முக்குக் கடைல எம்பேரைச் சொல்லி சோத்தைத் தின்னுட்டு வாங்குடா! தின்னுப்புட்டு உட்கார்ந்துத் தெம்பாப் பேசுவோம்” எனக் கூற..
“பட்டாளத்துக்காரரே! பகடி பேசுற நேரமா இது?”
“பின்ன என்னாடா செய்யச் சொல்றீக?, சல்லித்தனமா பேசுற உங்களோட சரிக்குச் சரியா நானும் பேசட்டா?”
“எது சல்லித்தனம்?, ஆஸ்பத்திரில அரை உயிராக் கிடக்குற எங்க பயலுக்காக நாங்க ஏத்துக்கிட்டுப் பேசுறது சல்லித்தனமா?”
“உனக்கு அம்புட்டுப் பாசம் பொங்குதுண்டா, போய் அவனை அடிச்சவன் சட்டையைக் கிழிச்சுட்டு வா டா”
“அப்ப இம்புட்டுப் பிரச்சனைக்கும் காரணமான உம்ம பேத்தியை என்ன செய்ய? அது சட்டையையும் கிழிச்சிட்டு வந்துரவா?” – துடுக்காய் ஒருவன் குரல் கொடுத்ததும், அதீத ஆத்திரத்தில் நின்றிருந்த இடத்திலிருந்துப் பாய்ந்து சென்ற விருமன், முஷ்டியால் அவன் மூக்கை உடைத்ததில், அவன் முகம் முழுதும் ரத்தமானது.
“பட்டாளத்துக்காரரே! இது எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்லியாகனும்” – அடி வாங்கியவன் சத்தமிட்டதும், இரு பிரிவினருக்கும் கைக்கலப்பாகி விட, விருமனையும்,ஆரனையும் கூட்டத்திலிருந்துப் பிரித்து நிறுத்திய பெரியவர், இருவரிடமும்
“எது நடக்கக் கூடாதுண்டு நான் அடங்கிப் போறேனோ, அதை நீங்களே வழி நடத்திட்டுப் போறீகளே டா கூறு கெட்டப் பயல்களா!” என்று கத்த,
“யோவ் கிழவா, என் வீட்டுப் புள்ளய அவன் கண்டமேனிக்குப் பேசுவியான், நான் கையைக் கட்டிக்கிட்டு நிற்கனுமா?, இதுக்குத்தேன், ஆம்பளண்டு எனக்கு மீசை வைச்சு விட்டியா நீயி?” என்று விருமன் அளவில்லாக் கோபத்தில் பெரியவரிடம் சீற..
“அப்பப் போய் அடிச்சுக்கிட்டு சாவுங்க டா! ஆனா ஒன்னு ஞாபகத்துல வைச்சுக்கங்க! இந்த அலப்பரையை எதிர்பார்த்து இது அத்தனையையும் தொடங்குனவன், நீ இங்க மல்லுக்கட்டிட்டு இருக்குற நேரத்துல, அவன் ஆத்தா மடில படுத்து அயிரை மீனை உறிஞ்சுக்கிட்டிருப்பியான்!” – என்ற பெரியவர் இருவரையும் மூச்சு வாங்கக் கோபமாய்ப் பார்த்து விட்டு, கூட்டத்தில் நடந்து கொண்டிருந்த சண்டையை விலக்கச் சென்று விட்டார்.
பெரியவர் நகர்ந்ததும், நெற்றி வியர்வையை ஒற்றை விரலால் துடைத்தெறிந்த ஆரன்,
“தப்பு பண்றோம் பங்காளி!” என்றான்.
சட்டை பட்டனைக் கழட்டிக் காலரைப் பின்னுக்குத்தள்ளியபடிக் கோபம் குறையாது நின்றிருந்த விருமன் அவனை நிமிர்ந்து பார்க்க,
“பெருசு சொல்றதுதேன் சரி! சண்டை நடக்கக் கூடாது இங்க!”
“அதுக்கு வாய்ப்பில்ல! நிலைமை கை மீறிப் போயிருச்சு! வாய்த்தகராறுல இருக்கிறவிங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல வீச்சருவாளைத் தூக்கிட்டு வருவாய்ங்க”
“விடக் கூடாது பங்காளி! எப்பிடியாவது நிலைமையைக் கட்டுப்படுத்தியாகனும்! இவிங்க சாதிவெறியால சின்னப் புள்ளைக ரெண்டும் அநாவசியமா பலியாகும்ங்க! பெருசு மானம் காத்துல பறக்கும்”
“என்னடா பண்றது?” – என்றபடி ஆரனை யோசனையாகப் பார்த்த விருமன்,
“போலீசைக் கூப்பிடலாமா?” எனக் கேட்டான்.
“அவிங்களைக் கூப்பிட்டா, கூட்டம் ஓயும்! ஆனா இந்தப் பிரச்சனை ஓயாது”
“அப்புறம்?”
“Press-ஐக் கூப்பிடுவோம் பங்காளி! போன முறை இது போல ஒரு கலவரத்துல போலீஸ்காரய்ங்க மூடி மறைக்க நினைச்ச விசயத்தை, முதலமைச்சர் வரை இழுத்துட்டுப் போச்சுல்ல ஒரு பத்திரிக்கை?”
ஆரன் வினவியதும் கண்கள் பளிச்சிடப் புன்னகைத்த விருமன்,
“அதுக்குக் காரணமே அந்தக் கலாமணியம்மாதேன் டா!” என்று கூறியதும் புருவம் சுருக்கிய ஆரனிடம்..
“அதேன் டா, பெருசு சொன்ன நெலா, இல்ல கலா” – என்று கூற, ஆச்சரியமாய்ப் புருவம் உயர்த்திய ஆரன், அடுத்து நடக்க வேண்டிய விசயங்களைத் திட்டமிட, தாமதிக்காமல் மருத்துவமனையின் எதிரிலிருந்த PCO-க்குள் நுழைந்தனர் இருவரும்.
கூட்டத்தினரின் சலசலப்பு அடங்காதிருப்பதையும், பெரியவர் தன் தொண்டைத் தண்ணீர் வத்தக் கத்திக் கொண்டிருப்பதையும் கண்ட இருவரும், அவரின் பின்னே சென்று நின்றனர்.
“எங்க டா போனீங்க ரெண்டு பேரும்?” – எரிச்சலாய் வினவியவரிடம் ஆரன்,
“உங்க நெலாவைத் தேடிதேன் தாத்தா” என்றான்.
“ப்ச், என்னா டா உளர்ற?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல நீதேன் உளறப் போற பெருசேய்” – என்று விருமன் கூறிக் கொண்டிருக்கையில் போலீஸ் வாகனமும்,இன்ன பிற வாகனங்களும் மருத்துவமனையின் வாசலில் நுழைய..
“எவன் டா அவன் போலீசுக்கு ஃபோன் போட்டது?” என முணுமுணுத்தனர் கூட்டத்தினர்.
கலாமணியம்மாளின் பத்திரிக்கை நிறுவனத்தின் வண்டியைக் கண்ட போலீசார், “இவிங்களுக்கு எவன் டா தகவல் சொன்னது?,இந்தம்மா பெரிய தலவலியாச்சே” என்று புலம்பியபடி அருகே வந்தனர்.
“என்ன பிரச்சனை இங்க?, எதுக்கு இம்புட்டுக் கூட்டம்?” என்றபடியே அருகே வந்த போலீசாரைக் கண்டு,
“இவன் நம்ம சாதிக்காரன்தேன்” என்ற மணிவண்ணனின் விழுது ஒன்று முன்னே வந்து அங்கு நடந்ததைக் கூற,
அழகரின் பெற்றவர்களையும், வீரைய்யனையும் ஒரு பார்வை பார்த்த கலாமணியம்மாள், போலீசாரிடம்,
“பையனைப் பெத்தவங்களும்,பொண்ணைப் பெத்தவங்களும் பேசித் தீர்க்க வேண்டிய விசயத்துக்கு, எதுக்கு சார் அநாவசியமா இம்புட்டுக் கூட்டம் சேரனும்?” எனக் கேட்டார்.
அவருக்குப் பதில் சொல்லாது ஒரு பெருமூச்சை வெளியிட்ட போலீசார், “பையனை அடிச்சவன் எவன் டா?” எனக் கேட்டார்.
“அவன் எந்தக் கள்ளுக்கடைல காலைப்பரப்பிட்டுக் கிடக்கானோ” என முணுமுணுத்த விருமன், துள்ளிக் கொண்டிருந்த விழுதின் தோளைப் பற்றி முன்னே தள்ளி,
“அவன் எங்க இருக்கியாண்டு, இவனுக்குத் தெரியும் சார்” எனக் கூற அருகிலிருந்த ஆரன் “சார் கேட்குறாருல்ல, சொல்றா?” எனத் தன் பங்குக்கு அவனது பிடரியில் இடியை இறக்க, ஆத்திரத்துடன் இருவரையும் முறைத்தவன்,
“எனக்குத் தெரியாது” என்றான்.
“அவன் ஆம்பளையா இருந்திருந்தா, நாந்தேன் அடிச்சேண்டு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு முன்ன வந்து நின்டுருப்பியான்! அவந்தேன் பொண்டுகப்பயலாச்சே!, அதேன் இருக்குற திசையே தெரியல” என்று விருமன் கூறியதும், விழுது கோபத்தில் வெம்பிப் போய் நிற்க,
அவனை நிமிர்ந்து பார்த்த போலீஸ் “வரைமுறை தாண்டி வார்த்தையை விட்டண்டா, நான் பேச மாட்டேன்! லத்திதேன் பேசும்” என்று கூற.. “சரிங்க சார்,சரிங்க சார்” என்று அடக்கமாய்க் கூறிய விருமன் அமைதியாய் நின்று கொண்டான்.
“அடிச்சவனைப் பிடிக்க போலீஸ் இருக்கு! பிரச்சனையைப் பேசி தீர்க்க ரெண்டு குடும்பத்து ஆளுக இருக்காக! இப்பிடிக் கூட்டம் சேர்ந்துக்கிட்டுச் சட்டையைக் கிழிச்சுக்கிறதெல்லாம் சட்டப்படி தப்பு! வன்முறையைத் தூண்டி விட்டுக் கலவரத்தை உண்டாக்குறீகண்டு, பூராப் பேரையும் உள்ள தூக்கி போட்ருவேன்! மருவாதையாக் கூட்டத்தைக் கலைங்க முதல்ல” என்று போலீசார் சத்தமிட..
“அடிச்சவன் பணக்காரன்! மேல்சாதிக்காரன்! நீங்க அவனைக் கண்டுபுடிச்சு உள்ள போட்டாலும் ரெண்டே நாள்ல வெளிய வந்து இன்னொரு கீழ்சாதிக்காரனை அடிப்பியான்! அப்பவும் நாங்க அடங்கிப் போனுமா சார்?, பையன் இன்னிக்கு உசுரோட இருக்கிறனால சரியாப் போச்சு! கம்மாக்குள்ள அவன் பொணமா மிதந்திருந்தா, இப்பிடித்தேன் உட்கார வைச்சுப் பஞ்சாயத்து பேசுவீகளா?” – ஒரு கூட்டம் சலம்பலைக் கொடுக்க,
“பொணமா மிதக்க விட்ருக்கனும்டா டேய்! ****ல குளிர் விட்டுப் போனதால தான, மேல்சாதிக்காரப் புள்ளைகக் கையப் புடிக்கிற அளவுக்கு தகிரியமா வளர்ந்து நிற்குறீக?, தலையை வெட்டிப் போட்ருந்தா, இந்நேரம் எங்க முன்னாடி நிமிர்ந்து நின்டு பேச தெனவிருந்திருக்குமா?” – என மற்றொரு கூட்டம் பொங்கியது.
“ஷ்ஷ், ரெண்டு பேரும் வாயடக்குறீகளா, இல்ல வண்டில ஏறுறீகளா?” – போலீசார் மிரட்டியதும் அனைவரும் அமைதியாய் நிற்க, வந்திருந்த தாசில்தார்,ஆர்.ஐ,போலீசார்,பத்திரிக்கைக்காரர்கள் என அனைவருக்கும் நாற்காலி போடப்பட்டது.
இரு குடும்பத்தாரும் எதிரெதிரே அமர்த்தப்பட, ஆரனும்,விருமனும் மடித்துக் கட்டிய வேட்டியுடன் தாத்தனின் பின்னே நின்றனர்.
“நீங்க பேசுங்க பெரியவரே” – தாசில்தார் கேட்டதும்..
“ஐயா, நான் பட்டாளத்துக்காரனுங்க! எனக்கு மனுசனாப் பொறந்த அத்தனை பேரையும் சரிசமமாப் பார்த்துத்தேன் பழக்கம்! இங்க யாரும் எனக்கு எதிரி இல்ல! எனக்கு யார் மேலயும் எந்தப் பகையுமில்ல! வயசு வேகத்துல சின்னப் புள்ளைக பண்ணுன சின்னத் தப்பை பெருசு பண்ணி, இம்புட்டுக் கரைச்சல் பண்றது எனக்கு சரின்னு படலங்க! நல்லது எது, கெட்டது எதுண்டு புரியாத ரெண்டுங்கெட்டான் வயசுல இருக்கிறதுக, எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கிடுவாங்க! ஆனா.. தண்ணியை ஊத்தி அணைக்க வேண்டிய நெருப்புல, எண்ணையை ஊத்தி விட்டு வேடிக்கை பார்க்குற எடுபட்டபயலுக எலும்பை மட்டும் நீங்க எண்ணி அனுப்புனீகண்டா, நான் சந்தோசப்படுவேனுங்க” எனக் கையைத் தூக்கிக் கும்பிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டார்.
“அப்ப அடிவாங்குன பயலுக்கு என்னாங்க நியாயம்?” – முன்னிருந்து ஒருவன்.
“அடிச்சவன் எலும்பை எண்ணுறதுதேன்” – விருமன்.
“எஞ்சாதிக்காரன் மேல நீங்க கை வைச்சீகண்டா, ஊரு பத்தியெரியும் சார்” – பின்னிருந்து ஒருவன்.
“பேசுறது எவன்ய்யா?, மூஞ்சியைக் காட்டு போட்டோ புடிச்சிக்கிறோம்! நாளைக்கு ஊர் எரிஞ்சா, முதல்ல கம்பி எண்ணப் போறது நீதேன்” – என்ற கலாமணியம்மாள், பின்னிருந்தவனைப் புகைப்படமெடுக்க, கூட்டம் லேசாகப் பம்மியது.
“கலாமணியம்மா, பேசுறதோட நிறுத்திக்குவீகளா, இல்ல என் உடுப்பை வாங்கி மாட்டிக்கப் போறீகளா?” – எரிச்சலோடு போலீஸ்.
“போலீஸ் உடுப்புப் போட்டவன்தேன் பேசனுமுண்டா, இவிங்களை மாதிரித் தொடுப்பெல்லாம் என்னத்துக்கு உங்க முன்னால குரலை உசத்துறாய்ங்க?”
“எலேய்! இனி ஒரு பய வாயைத் தொறக்கக்கூடாது சொல்லிப்புட்டேன்!” – பொங்கிய நிலையில் போலீஸ்.
“எம்மா, நீங்க ஏதாவது சொல்ல நினைக்குறீகளா?” – தாசில்தார், அழகரின் அன்னையிடம் கேட்க.. பயந்து,நடுங்கி,ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்த பெண்மணி, மெல்லிய குரலில்,
“எம் பையனை உசுரோட விட்டதே போதும்ங்கய்யா! குடிகாரப் புருசன் கூடப் பொழப்பு நடத்துற எனக்கு, எம்புள்ளைக தான்ங்க ஆதாரம்! அதுக இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல! பெரியவகலாம், பெரிய,பெரிய விசயம் பேசுறீக! ஆனா அன்னாடம் ஒரு வேளை கஞ்சிக்காக நாயா உழைக்குற எங்களுக்கு சாதியைப் பத்தியெல்லாம் யோசிக்க வயிறு இடங்கொடுக்கிறதில்லங்கய்யா! சோத்துக்காகக் கூவுற வயித்தைக் காப்பாத்தவே வம்பாடு பட வேண்டியதா இருக்கு,இதுல எங்கிட்டுங்கய்யா நாங்க சாதியைக் காப்பாத்த?, சாதி,மத வேறுபாடெல்லாம் காசு இருக்கிறவனுக்குத் தானுங்கய்யா! பசில இருக்கிறவனுக்கில்ல! 3 வேளை கஞ்சி குடிக்கிறவன் உசரம் என்ன, நம்ம உசரம் என்னாண்டு நல்லாத் தெரிஞ்சவனுங்கய்யா எம்பையன்! எப்பிடித் தடம் மாறுனாண்டு தெரியல! இனி அவன் எந்தத்தப்பும் பண்ணாம நான் பார்த்துக்கிடுறேனுங்கய்யா” – என்று கூற..
தொண்டைத்தண்ணீர் வத்தத் தான் கத்திக் கொண்டிருந்த விசயத்தை, இரண்டே வாக்கியத்தில் பொட்டில் அறைந்தார் போல் கூறி விட்டப் பெண்ணை வியப்பும்,நெகிழ்ச்சியுமாய் பார்த்துக் கொண்டிருந்தப் பெரியவர்,
“உம் பையன் மேல எந்தத்தப்புமில்லம்மா! அவன் சொக்கத்தங்கம்” என்று அவசரமாய்க் கூற..
“அப்ப உம்ம பேத்தி மேலதேன் தப்போ?” – கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க, எரிச்சலுடன் திரும்பியவர்,
“ஆமா, எம்பேத்தி மேலதேன் தப்பு! என்னா இப்ப?, எம்மா, இந்தப்பயலையும் ஒரு போட்டோவைப் பிடிங்க!” – கலாமணியம்மாளை நோக்கிக் கூற, லேசாய்ப் புன்னகைத்துக் கொண்டவர் அவர் சொன்னதைச் செய்ததும், அவசரமாய்ப் பின்னே சென்றவன்,
“இம்புட்டுப் பிரச்சனைக்கும் காரணமே இந்தப் பெரியவருதேன் சார்! ஊர்ல இருக்கிற கீழ்சாதிக்காரப்பயலுகலாம் அவிங்க வக்கென்னாண்டு புரிஞ்சு,இருக்கிற இடம் தெரியாம ஒடுங்கிக் கிடந்தவிங்கதேன்! ஆனா, இந்தாளுதேன், அவரு மவனை நாங்க ஊரை விட்டுத் துரத்துன வஞ்சத்தைத்தீர்க்க, சாதியில்ல,பேதமில்லண்டு பேசிப்பேசியே அவிங்களைத் தூண்டி விட்டு, எங்களை எதிர்த்து நிற்குற அளவுக்குத் தகிரியத்தை வளர்த்து விட்டிருக்காரு!, ஆனா பாவம், வளர்த்த கெடா தன் நெஞ்சுலயே பாயுமுண்டு நினைச்சுக் கூட பார்த்திருக்க மாட்டாரு” என எள்ளலாய்க் கூறினான்.
“என் நெஞ்சுல பாய்ஞ்சதை உன் ****-க்குத் திருப்பி விட எனக்குப் பத்து நிமிசமாகாது! பொத்திக்கிட்டு நில்லு, இல்ல குரவளையைத் திருகிருவேன்” – பெரியவர் சீற..
“அமைதியா இருங்க பெரியவரே!” என்று கட்டுப்படுத்திய போலீஸ்,
“இப்பிடியே பேச்சை வளர்த்துக்கிட்டேப் போனீங்கண்டா இது இன்னைக்குள்ள முடியாது! ரெண்டு குடும்பத்து ஆட்களும் பேசி பிரச்சனையைத் தீர்த்துக்கிட்டாக! பையன் எந்திரிச்சு வந்து, அடிச்சவனை அடையாளம் காட்டுனதும், அவனுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்கப்படும்! இதை இத்தோட விடாம, நாளைக்குப் பிரச்சனையை பெருசு பண்ணீகண்டா, இங்க நிற்குற அத்தனை பேரையும் வாரண்ட் இல்லாம கைதி பண்ணச் சொல்லி, கவர்மெண்டு எங்களுக்கு ஆர்டர் போடும்! அப்புறம் நிலைமை கை மீறிப் போயிரும்!ஞாபகத்துல வைச்சுக்கங்க!” என்று மிரட்டி விட்டு அருகிலிருந்த கான்ஸ்டபிளிடம்,
“கூட்டத்திலிருக்கிற அத்தனை பேர்க்கிட்டயும் எழுதி வாங்கிருவாங்க சார்! பூராப்பய பேரும் வீட்டு அட்ரஸோட வேணும்” எனக் கூறியதும், கூட்டம் சலசலக்க, மணிவண்ணன் எதிர்பார்த்தபடிக் கலவரம் நடவாததில் ஏமாந்து போன அவனது விழுதுகளில் ஒன்று, அவனுக்கு இங்கு நடந்ததைத் தெரிவிக்க விரைந்து ஓடியது.
அடுத்த சில மணி நேரங்களில் கூட்டம் கலைந்ததும், அழகரைச் சந்தித்து வாக்குமூலம் வாங்கிக் கொண்டு போலீசார் சென்று விட, ஊர்க்காரியாக முன் நின்று, அழகரின் அன்னைக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்த கலாமணியம்மாளைக் கண்டபடி நின்றிருந்தனர் ஆரனும்,விருமனும்.
அவரிடம் பேசி விட்டு விடைபெறவிருந்தவரிடம் சென்ற இருவரும் “ரொம்ப நன்றிங்கம்மா” என்று கூற, புருவம் சுருக்கியவரிடம்,
“பட்டாளத்துக்காரரு பேரனுங்க” -எனத் தங்களை விருமன் அடையாளப்படுத்திக் கொள்ள, “உங்களுக்கு ஃபோன் பண்ணது நாங்க தாங்கம்மா” என்றான் ஆரன்.
கண்கள் பளிச்சிடப் புன்னகைத்தவர் இருவரது கன்னங்களையும் தட்டி விட்டு நடந்து செல்ல, இருவரும் அவரை வியந்து பார்த்தபடி நின்றிருந்தனர்.
“போலீசு முன்னாடியே குரலை ஒசத்துதேடா இந்தம்மா” – விருமன்.
“தகிரியசாலிதேன்” – அவரையே பார்த்தபடி ஆரன்.
அதன் பின்பு, அழகரிடம் ‘பத்திரம்’ கூறி விடைபெற்று விட்டு வீட்டுக்கு நடந்தனர் மூவரும்.
“தாத்தா, உம்ம நெலா, நெசமாவே அந்த வானத்து நெலாவைப் போலத்தேன் ஜொலிக்குறாக” – கிழவனிடம் நக்கலடித்தபடி விருமன்.
“அவ எங்கடா ஜொலிக்குறா?, இன்னும் அதே கரிச்சட்டி கலர்ல கருகிப் போன மாறி தான இருக்க?, என்ன கலையாதத் தலைமுடி,மடிப்பு மாறாத சீலைக்கட்டுண்டு ஆளு கொஞ்சம் நாகரீமாய்ட்டா”
“யோவ் பெருசு, அப்டின்னா அந்தம்மாவை நீயி தலை முதல் கால் வரை அலசியிருக்க?”
“நாகரீகமா மட்டுமில்ல தாத்தா, நளினமாவும் இருக்காக” – ஆரன் தனது ஆராய்ச்சி முடிவைக் கூற,
“ம்ம்ம்ம்ம்”-என்ற கிழவரின் முகம் பெருமையில் பூரிப்பது கண்டு உதட்டைச் சுழித்த விருமன்,
“கட்டுங்கடங்காதக் காளையாட்டம் ரெண்டு இளவட்டபயலுக பக்கத்துல நிற்குறோம், டொக்கு விழுந்த கிழவன் உனக்கு சோடி கேட்குதா?” – என்று கூற, சட்டென முகத்தை மாற்றிக் கொண்டப் பெரியவர்,
“என்னா சோடி?, வாய்க்கு வந்ததைப் பேசாதீங்கடா எடுபட்டப்பயலுகளா! எப்பேர்ப்பட்ட சம்பவத்தை முடிச்சுப்புட்டு வந்திருக்கோம், நீங்க என்னாடா பேசுறீங்க” என்று திட்டிக் கொண்டிருக்கையில் எதிரே சைக்கிளில் வந்த சிலம்பன்,
“ப்ச், எங்க போனீங்க 3 பேரும்?, அங்க எங்கப்பன் புவி புள்ளைய அடிச்சே கொன்னுக்கிட்டிருக்கியான்” – என்று எரிச்சலுடன் கூற, அவசரமாய் வீட்டுக்கு விரைந்தனர்.
மூவரும் நுழைகையில், முடிந்திருந்த கொண்டைத் தோளில் அவிழ்ந்து கிடக்க, புவியரசியின் தலைமுடியை ஒரு கையால் பற்றிக் கொண்டு, மறு கையால் அவளது முதுகில் ஓங்கி,ஓங்கி அடித்த வண்ணம் வீரலட்சுமி முழு ஆங்காரத்தில்,
“ச******யப்பயலைத் தேடிப் போயிருக்கியேடி சண்டாளச்சிறுக்கி, உன்னைப் பெத்தவ ச******சியா, இல்ல நீ ச******யனுக்குப் பொறந்தவளாடி?, தாகமுண்டு அவிங்க வீட்டு வாசல்ல நின்னா கூட, இடது கையால தண்ணீ குடுக்குறவடி நானு! எனக்குப் பொறந்தவ எப்பிட்றி அருவெறுப்பில்லாம, அவன் கூடப் போன?, அவன் தொட்ட கை தான டி இது, அவன் தொட்டக் கை தான, இன்னிக்கு இதை வெட்டிப் போட்டாத் தான் டி என் கோவம் அடங்கும்” என்றபடி அருவாளைத் தூக்க,
“வீரலட்சுமி” என ஓங்கிக் குரல் கொடுத்தபடி உள்ளே வந்த பெரியவர், அப்பனிடமும்,அன்னையிடமும் அடி வாங்கி, நெற்றியிலும்,உதட்டிலும் ரத்தம் சொட்ட, விரிந்த கிடந்தத் தலைமுடியுடன் கொஞ்சம் கண்ணீரும்,அதிகக் கோபமுமாய் நின்ற புவியரசியைத் தன் புறம் இழுத்துக் கொண்டு,
“இனியொரு அடி புள்ள மேல விழுந்தா, நான் மனுசனா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்!” என்று அவர் சீற,
அப்பனைக் கண்டதும் ஒதுங்கிய வீரலட்சுமி, முகத்தில் அறைந்தபடி மூலையில் அமர்ந்து கொண்டு “புத்திகெட்டச்சிறுக்கி, தங்கத்து மேல நிற்கிறதை மறந்து, தகரத்தைப் பார்த்து ஆசைப்பட்ருக்காளே! நம்ம வீட்டு நாய் திங்குற திண்ணையில உட்கார்ந்து, நாயோட நாயா சேர்ந்து சோறு திங்குறவன் டி அவன்! வக்கத்தவளாடி நீயி, அவனை மனசுல நினைக்க?, ச்சி” – என விடாது புலம்ப,
கிழவன் மீது திரும்பிய முழுக்கோபத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு, அவரை முறைத்துப் பார்த்தவண்ணம் நின்றிருந்த சங்கிலியைக் கண்ட பெரியவர்,
“என்னா டா?” என்றார்.
“நீங்க தொடங்கி வைச்ச வினை, இன்னிக்கு விருட்சமா வளர்ந்து நிற்குது பாருங்க! ஊரே ஒன்னு சேர்ந்து துரத்துனவன் கூட உறவாடி, அவன் மவனைக் கூட வைச்சு வளர்த்தீகள்ல?, அது கொடுத்தத் தகிரியம்தேன் நேத்து பொறந்த சிறுக்கியையெல்லாம் தறி கெட்டு ஓட வைக்குது!”
“உம்மவளைப் பத்தி பேசுறண்டா, அவளைப் பத்தி மட்டும் பேசு! எம்மவனையோ,அவன் பெத்த மவனையோ விமர்சனம் பண்ண, உனக்குத் தகுதியும் கிடையாது,உரிமையும் கிடையாது” – பெரியவர் சீறியதும்..
“அதெப்பிடி அப்பிடி விட முடியும்?, அங்க தொடங்குனதுதேன இது எல்லாமே?, ஊரைத் தலைமுழுகிப்புட்டு ஓடுனவன், தலைமறைவாவே வாழ்ந்திருந்தா இன்னிக்கு இம்புட்டுப் பிரச்சனை வந்திருக்குமா?”
“எம்புட்டுப் பிரச்சனை வந்திருச்சு இப்ப?, எலேய் மொன்ன நாயே! நீ சுத்தி,சுத்தி எங்க வாரண்டு எனக்கு நல்லாத்தெரியும் டா! இதையே சாக்கா வைச்சு, கணக்கு தீர்க்கப் பார்க்குறியோ! சங்கறுத்து சாக்கடைல எறிஞ்சிருவேன் சொல்லிப்புட்டேன்! உன்னைத் தூண்டி விட்ட நாதாரிப்பயட்ட போய் சொல்லு, அவன் நினைக்குறது என்னைக்கும் நடக்காதுண்டு! மீசை வைச்ச ஆம்பளையா நேர் வழில எங்கூட மோதுங்க டா!, குறுக்கு வழில வர்றவனாலலாம், என் குறுக்க ஒடைச்சிற முடியாது” என்றவர், மகளிடம்,
“வாயை மூட்றி போக்கேத்தகழுத! உம் புருசன் கூடச் சேர்ந்துக்கிட்டு ஒப்பாரி வைச்சுட்டுத் திரிஞ்சண்டு வை, பொடனிலயே ரெண்டு போட்டு பரலோகத்து அனுப்பிருவேன் சொல்லிப்புட்டேன்! அவன் இதேன் சாக்குண்டு பாட்றியான்! இவ அவன் கூடச் சேர்ந்து ஆடிட்டுக் கிடக்கா! கூறுகெட்டச் சிறுக்கி”
“அப்டின்னா, அவனுக்கு ஆதரிச்சு, கட்டவுத்துப்புட்டு ஓடுன இந்தக் கழுதைய அந்தத் கேடுகெட்டவனுக்கேக் கட்டி வைக்கப் போறீகளா?, அப்பிடியொன்னு நடந்தா, உன் வீட்டு முன்னாடி நின்னு தீக்குளிச்சு செத்துப் போவேன்ய்யா நானு” – சங்கிலி முழுக்குரலில் சத்தமிட்டதும்..
“எய்ய்யாஆஆ, என்னா வார்த்தைய்யா சொல்லிப்புட்ட, உன்னை அப்பிடித் தூக்கிக் குடுக்கத்தானா வம்பாடுபட்டு நான் வளர்த்தேன்??” – அதுவரை பேத்தியை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்த சோலையம்மாள், மகன் பேசியதைக் கேட்டுத் தலையில் அடித்தபடிக் கதற,
“வக்கத்தவண்டு தான என்னைய வாயிருந்தும் ஊமையா வளர்த்தீக?, ஆனா, ஊமை ஊரைக் கெடுக்கும்ன்றதை மறந்துட்டீகளே! நான் பெத்ததுக வாழ்க்கைய முடிவு பண்ற உரிமையைக் கூட என் கிட்ட இருந்து பறிக்கப் பார்க்குறீகள்ல?, இது அத்தனைக்கும் காலம் பதில் சொல்லும்!” என்றவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறி விட்டார்.
சோலையாத்தாளும்,வீரலட்சுமியும் ஆளுக்கொருபுறம் புலம்பியபடி புரண்டு கொண்டிருக்க, பேத்தியை கூட்டிக் கொண்டு கொல்லைக்கு நகர்ந்தார் பெரியவர்
சிறுசுகள் அனைவரும் சுற்றி நிற்க, அவளை பின்வாசல் திண்ணையில் அமர வைத்து, “அகலு,போய் பஞ்செடுத்து வா தாயி, டேய் சிலம்பா, மருந்துக்கடைல போய் நான் சொல்றதை வாங்கிட்டு வாடா” என்றவர் அவனைக் கடைக்கு அனுப்பி விட்டு, அகல் கொண்டு வந்த பஞ்சைக் கொண்டு புவியரசியின் நெற்றிக் காயத்தைத் துடைக்கக் கையை இறுக்கி வலியை அடக்கியவளுக்கு, விழியோரம் நீர் கசிந்தது.
ஆரன் பரிதாபமாய் அவளைப் பார்த்திருக்க, விருமன் எரிச்சலில் நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.
“ஏன் டி உடம்பொறந்தவளைப் போட்டு இப்பிடி அடிச்சிருக்காய்ங்க, நீ வேடிக்கை பார்த்துட்டிருந்திருக்க?, ஆ,ஊ-ண்டா வெளக்கமாத்தைத் தூக்கிக்கிட்டு வீரவசனம் பேசுவியே! இப்ப வாய் எங்க, வைகை ஆத்துல தண்ணி குடிக்கப் போயிருச்சா?” – ஆரன், அகலருவியைத் திட்டியதும் அவனை முறைத்துப் பார்த்தவள்,
“இடைல போனதுக்குத்தேன், இடுப்பொடிஞ்சு உட்கார்ந்திருக்கேன் நானு” என்று நொடித்துக் கொள்ள,
“ஓ! உன்னையும் விளாசிப்புட்டாய்ங்களா?” – என்று சிரித்தான் விருமன்.
“மருந்து தாத்தா” எனத் தாத்தனிடம் மருந்தை நீட்டினான் சிலம்பன்.
அவள் முகத்தில் அடிபட்ட இடங்களிலெல்லாம் டிஞ்சர் வைத்துத் துடைத்து, மருந்து தடவிய பெரியவர் “கை,கால்ல அடிபட்டிருக்காத்தா?” எனக் கேட்கையில், அவரது வயிற்றைக் கட்டிக் கொண்ட புவியரசி, தேம்பித் தேம்பி அழ.. அவளது தலையை வருடிய பெரியவர்,
“எதுக்கு அழுகுற கழுத, உங்கப்பன்,ஆத்தா அடிச்சதுக்கா?, முட்டாக்***-களுக்கு வாயை விடக் கைதேன் அதிகம் பேசுது?,என்ன செய்றது! ஒவ்வொருத்தன் கையையும் புடிச்சு ஒடிச்சு விட்டாத்தேன் சரி வரும்! விடுத்தா!” என்று கூற, விடாது தேம்பிக் கொண்டிருந்தவள், நிமிர்ந்து,
“அவனை… அழகரை எதுவும் செஞ்சுப்புட்டாய்ங்களா?, அவன் மேல எந்தத்தப்புமில்ல தாத்தா! எல்லாம் என்னாலதேன்! கூறுகெட்டச்சிறுக்கி நானு, என்னைப்பத்தி மட்டுமே சுயநலமா யோசிச்சு அவனை இம்புட்டுப் பெரிய பிரச்சனைல இழுத்துவுட்டுப்புட்டேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ..
“ப்ச், சும்மா,சும்மா கண்ணைக் கசக்குறத நிறுத்து கழுத! அவனுக்கு ஒன்னும் ஆகல! நல்லாயிருக்கியான்! அப்பிடிலாம் எதுவும் நடக்க விட்ருவேனா நானு?” – என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட.. தெளிந்து அமர்ந்தவள்,
“இவுகளுக்கெல்லாம் நான் காதலிச்சது பிரச்சனையா, இல்ல அவனைக் காதலிச்சது பிரச்சனையா தாத்தா?” எனக் கோபமும்,குழப்பமுமாய்க் கேட்டாள்.
அவள் கேள்வியில் மெல்லச் சிரித்தவர், “அதைப் புரிஞ்சுக்கனுமுண்டா நீ வளரனுமே ஆத்தா! இன்னமும் கெழவி சுருக்குப்பைல காசைக் களவாண்ட்டுப் போய் சீனிமுட்டாய் வாங்கித் திங்குற சின்னக்கழுத நீயி! உன்னால எப்பிடி தாயி, இவிங்க கால,காலமா உருவாக்கி வைச்சிருக்கிற சிக்கலோட அடிநூலைப் பிடிக்க முடியும்?” எனக் கேட்க..
“நான் பண்ணது அம்புட்டுப் பெரிய தப்பா தாத்தா?” – மெல்லிய அழுகையுடன் கேட்டவளிடம்..
“தப்பு,சரியெல்லாம் தீர்மானிக்கிறது நாமதேன் தாயி! எவனைப்பத்தியும் யோசிக்காம,எவனுக்கும் பயப்படாம, தெளிவோட, நிதானத்தோட எது தப்பு,எது சரிண்டு தீர்மானமெடுக்கிற தகிரியத்தைக் கொடுக்குறது அனுபவம் மட்டுந்தேன்! நீ சின்னப்புள்ளத்தா! குழப்பமில்லாம முடிவெடுக்கிற வயசு இது இல்ல!”
“…………”
“மூனு வேளை கறி சோறு திண்டு, பஞ்சுத் தலகாணில சுகமா உறங்குற உனக்கு, ஒரு வேளைக் கஞ்சிக்கு அவன் நடத்துற போராட்டத்தைப் பத்தித் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லத்தா! சாக்கடையள்றதுக்காக குடிக்கத் தொடங்கி இப்ப மொடாக்குடிகாரனாகிப் போன அவன் அப்பன், தினம் கிடைக்குற வேலையைப் பார்த்து, வயித்துப்பாட்டுக்கு வழி செஞ்சிக்கிறவ அவன் ஆத்தா! ஒவ்வொரு நாளையும் கஷ்டத்துல தள்றவிங்க, படிப்பு விடியலைக் கொடுக்கும்ங்குற நம்பிக்கையில பள்ளியோடத்தைத்தேடி வாராய்ங்க! அவிங்களுக்கு நாம உதவி செய்யாட்டியும் பரவாயில்ல, தொல்லை கொடுக்கலாமாத்தா?” – கிழவர் கேட்டதும் அவளுக்குப் பொல,பொலவெனக் கண்ணீர் பெருகியது.
“கீழ இருக்கிறவிங்களைக் கீழயே வைச்சுக்கனுமுண்டு துடிப்புல நரிக் கூட்டம் ஒன்னு சுத்துதுத்தா இங்க! நியாயம் பேசற என்னைய மாறி ஆளுகளைக் கூட முழுங்க நினைக்குற குள்ளநரிக்கூட்டம் அது! அவிங்க ** விட்டாக் கூட, இவிங்க அதைப் பத்த வைச்சுப் புகையாக்குவாய்ங்க! அவிங்களுக்கு வாழ்க்கையே சவாலான விசயம் தாயி! அதைப் புரிஞ்சுக்கிற சாமர்த்தியம் வேணுமுண்டா நீ வளரனும்த்தா”
பெரியவர் பொறுமையாய்ப் பேசிப் புரிய வைத்ததும், “இனி இப்பிடிப் பண்ண மாட்டேன் தாத்தா! என்னால அவனுக்கு எந்தக் கேடும் வந்திரக் கூடாது” எனக் கூற.. அவள் தலையைத் தடவியவர்
“நீ பக்குவப்பட்டவளா வளரனும்ங்குறதுதேன் என் ஆசை தாயி! நல்லா படி! இந்த வயசுல படிப்பைத்தவிர வேற எதுவுமே முக்கியமில்ல” எனக் கூற.. சரியெனத் தலையாட்டியவள் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் வீட்டினுள் சென்று விட்டாள்.
களைப்புற்றிருந்த பெரியவர் தன் பேராண்டிகள் மூவரையும் நோக்கி “போய் சோத்தைத் தின்னுங்கடா டேய்! பஞ்சாயத்துப் பேச வைச்சே மனுசனை பஞ்சராக்கி விட்ருவாய்ங்க போல” எனப் புலம்பியபடி நகர்ந்தார்.
அடுத்த நாள் கிழவனும்,பேராண்டிகளும் நினைத்தபடி, மணிவண்ணன் போலீசாரிடம் பிடிபட்டிருந்தான். ஒரு நாள் முழுக்கக் காவல் நிலையத்திலிருந்தவன், விடாது எகிறிக் கொண்டிருக்க, அவனைச் சார்ந்தோரும்,சேர்ந்தோரும் போலீசாரிடம் சமரசம் பேசி அன்றே அழைத்து வந்திருந்தனர்.
அவனது ஆதரவாளனான எஸ்.ஐ அவனிடம், “வெளிய போய் நீயி இப்ப அக்கப்போரைக் கூட்டுனயிண்டா, என்னால எந்த உதவியும் பண்ண முடியாது பங்காளி! பட்டாளத்துக்காரரும்,அவரு பேரன்ய்ங்களும் திட்டம் போட்டே அந்தக் கலாமணியம்மாளை உள்ள இழுத்து விட்ருக்காய்ங்க! அந்தம்மா சரியான கரைச்சல் பேர்வழி! நாம கமுக்கமா பண்ற விசயத்தையெல்லாம் ஊருக்கே கடைபரப்பி விட்ரும். பொறுத்துரு பங்காளி! நேரம் வரும் போது பார்த்துக்கலாம்” – என்று அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருந்தான்.
வழக்கம் போல் கள்ளுக்கடையில் கழுத்து வரை குடித்து விட்டு முழுப் போதையில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தவனுக்கு, தான் நினைத்ததை சாதிக்க முடியாமல் அடுத்தடுத்து வரிசையாய்ப் பெரியவரிடம் தோற்றுப் போனது, வெறியைக் கிளப்பி விட்டிருந்தது.
பட்டாளத்தான் டா என மார் தட்டிக் கொள்ளும் பெரியவரின் காலை வார சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், புவியரசியின் விசயம் தானாய் வந்து சிக்க, சாதிக்கலவரத்தைத் தூண்டிப் பெரியவரின் மான,மரியாதையைக் காற்றில் பறக்க விட்டு, ஊரே அவரை எதிர்க்கும் சூழ்நிலையை உருவாக்கி, அவரும்,அவரது பேத்தியும் தன்னைத் தேடி வரும் நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென்று அவன் திட்டமிட்டிருக்க, ஆனால் அவரும், அவரது பேராண்டிகளும் புத்திசாலித்தனமாய் செயல்பட்டு நடக்கவிருந்தக் கலவரத்தைத் தடுத்தது மட்டுமின்றி, கலாமணியம்மாளை முன்னே நிறுத்தித் தன் கைகளையும் கட்டுப்போட்டு விட்டதை எண்ணிக் கடுப்புடன் அமர்ந்திருந்தான்.
குடித்துக் கொண்டிருந்த ப்ளாஸ்டிக் தம்ளரை நெறித்து, கண்களை இறுக மூடியவனுக்குப் பெரியவரின் குடும்பத்தார் தன்னை அவமதித்த கணங்களனைத்தும் உள் மனதில் உலா போனது.
அவனது தந்தை காலத்தில் சொத்து விசயத்தில் தொடங்கியது பெரியவரின் மீதான பகை! ஆனால் ஆற்றங்கரையோரம் தோழிகளுடன் நீராடிக் கொண்டிருக்கையில், அவளை வெறிக்க வெறிக்கப் பார்த்ததற்காக என்று அகலருவி அவனை செருப்பால் அடித்தாலோ, அன்று வளர்ந்து விருட்சமாகி நின்றது!
அதன் பிறகு எப்படியேனும் அவளை அடைந்து,அவள் தன்னை அவமதித்ததற்குப் பழிவாங்கியே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றியவனுக்கு, எதிர்பாராமல் சங்கிலியனின் ஆதரவு கிட்ட, தான் நினைத்தது நடக்கப்போகிறதெங்கிற இறுமாப்புடன் சுற்றியவனை, செருப்பால் அடிக்காத குறையாக அவனது உறவினர்களின் முன்பு அவமானப்படுத்தி அனுப்பினார் பெரியவர்.
ஒவ்வொன்றையும் நினைத்தபடி முழு போதையில், முத்தி விட்டக் கோபத்துடன், அவன் மனிதம் மறந்து, மதம்பிடித்த யானையாகக் கள்ளுக்கடையை விட்டு வெளியே வந்த வேளை, அவன் கண்ணில் சிக்கினாள் அகலருவி.
அன்று காலை அரவை மில்லில் மிளகாய்ப்பொடி அரைப்பதற்காக, வாளியை வைத்து விட்டு வந்திருந்தவள், அதை எடுத்து வர மறந்திருக்க, இருட்டி விட்ட வேளையில் அவசர,அவசரமாய் ஊர் கடைசியிலிருந்த மில்லுக்குச் சென்றிருந்தாள். மில் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு எரிச்சலுடன் வீட்டை நோக்கி நடைப் போட்டுக் கொண்டிருந்தவள், கருவேலங்காட்டைக் கடக்கையில், அங்கிருந்த பாழடைந்த மண்டபத்தருகே அவளை வழி மறித்து நின்ற மணிவண்ணனை நிமிர்ந்து நோக்கினாள்.
மூக்கு முட்டக் குடித்து விட்டு, மப்பேறிப்போய் மிதப்பாய் தன் முகம் பார்ப்பவனை இடுங்கிய விழிகளுடன் நோக்கியவள், அவனைக் கண்டு கொள்ளாமல் சுற்றிக் கொண்டு நடக்க முற்படுகையில், அவள் கையைப் பற்றி நிறுத்தினான் அவன்.
எரிச்சலுடன் மூக்கு விடைக்க அவனை நிமிர்ந்து நோக்கியவள், தன் கைகளை உதற, சட்டமாக அவளது இரு கைகளையும் பற்றிக் கொண்டவன்,
“ஆசையா மாமன் வந்து கையைப்புடிக்கிறேன்ல, என்னத்துக்குடி திமிறிக்கிட்டு ஓட்றவ?” என்றான்.
“மப்புல மரம் எது,மலை எதுண்டு தெரியாம மண்ணுல தவழ்ந்துக்கிட்டுக் கிடக்குறவனுக்கு, ஆசை ஒரு கேடு!,பீக்காளிப்பயலே! விட்றா கையை”
வழக்கம் போல் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காது, வஞ்சனையில்லாமல் வாரி விட்டு அவனிடமிருந்துத் தன் கையை இழுத்துக் கொள்ளப் போராடியவளிடம்,
“ஏற்கனவே ரெண்டு தடவை விட்டதுக்குத்தேன் உன் தாத்தன் என் மண்டைல மஞ்சள் இடிச்சுட்டுப் போய்ட்டியான்! இந்தத்தடவை நான் சும்மா விட்றதா இல்ல!” – போதையில் வாய் குழறினாலும், வார்த்தைப் பிரளாமல் பேசுபவனைக் கண்டுக் கடுப்பாகிப் போனவள், முழு பலத்துடன் கையை உதறி அவனிடமிருந்து விலகி நின்று,
“என்னா டா பண்ணிருவ??” எனக் கேட்டாள் திமிர் குறையாமல்.
அவளது தோரணையைக் கண்டு, உதட்டை வளைத்தபடி தோள் குலுங்கச் சிரித்தவன்,
“அத்துவானக் காட்டுல, ஆளில்லாத ரோட்டுல ஆம்பளை ஒருத்தனோட ஒத்தைல நிற்குறடி நீயி! இப்ப என்னால உன்னைய என்னண்டாலும் செய்ய முடியும்!” – என்றான்.
“அத்துவானக்காடு, ஆளில்லாத ரோடு எல்லாம் சரிதேன்! ஆனா பேச்சுவாக்குல ஆம்பளன்னியே! அது யாரு?” – எள்ளலாய்க் கேட்டவளிடம்,
“இந்தப் பேச்சுதேன்டி உன்னையத் தலை குனிய வைச்சே ஆகனுமுண்டு எனக்குள்ள வெறி ஏத்தி விடுது! இப்ப தெரிஞ்சுடும்டியேய், நான் ஆம்பளையா,இல்லையாண்டு” – என்றவன் சட்டென அவள் தாவணியில் கை வைக்க,
அதை எதிர்பாராது திகைத்தவள், அனிச்சையாய்த் தாவணியைக் ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் முன்னே நின்றவனின் முகத்தில் ஓங்கி அறைய,
அவள் அடித்த வேகத்தில் திரும்பிக் கொண்ட முகத்துடன், மூச்சு வாங்க ஒரு நொடி குனிந்து நின்றவன், மறு நொடி நிமிர்ந்து செவிலோடு சேர்த்து அவனது அகலக் கையொன்றால் விட்ட ஒரு அறையில், கதிகலங்கி நிலைதடுமாறிப் போனாள் அகலருவி.
கன்னத்துத் தசைகள் துடித்துத் தடிப்பதை அவளது மூளை உணர்ந்த சமயம், விழிநீர் ஊறி, பார்வை மங்க,
அவள் கொடுத்த அடியும், இறக்கிய கள்ளும் அவனை வெறி ஆக்கியதில், முற்றிலும் மிருகமாகிப் போனவன், அசையாது நின்றவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு தள்ளாடியபடி மண்டபத்தை நோக்கி சென்றான்.
ரத்த ஓட்டம் நின்று போன தனது இடது கன்னம் கொடுத்த வலியில் ஒட்டுமொத்த உடலும் கதிகலங்கிப் போய் விட, நொடியில் வீங்கி விட்ட தசைகள் விண்,விண்னெனத் தெறித்ததில் செயலிழந்த மூளை விழித்து விட, படக்கென இமையை விரித்துக் கண்களைப் பெரிதாக்கியவள், அவன் தன்னை தூக்கிச் செல்வதை உணர்ந்ததும், திமிறி ஒரு குதி,குதித்து அவனை விட்டு விலகி நின்று, அதீத ஆத்திரத்தில், அவன் தலைமுடியைப் பற்றி அருகிலிருந்த மண்டபத்தின் சுவற்றில் ஓங்கி அடித்திருந்தாள்.
நச்சென நெற்றி மோதியதில் கண்களை மூடி வலியை அடக்கியவன், பின் பல்லைக்கடித்தபடித் தட்டுத்தடுமாறி எழுந்து, ஒரே தாவலில் அவள் மீது படர்ந்து, அவள் தாவணியை உருவியிருந்தான்.
அவனிடமிருந்துத் தன் ஆடையைப் பறிக்க முற்பட்டவளின் தலை முடியைக் கொத்தாகப் பற்றியவன், அதைப் பற்றி இழுத்துக்கொண்டு நடந்தபடி, கையிலிருந்தத் தாவணியால் நெற்றியை அழுத்தி ரத்தத்தைக் கட்டுப்படுத்தினான்.
“முடியை விட்றா கிறுக்குப் *****!, முன்ன நின்னேண்டா, உன் **** மிதிச்சே, உன்னைய சொர்க்கத்துக்கு அனுப்பிருவேன்”
முடியோடு சேர்ந்து, அடி வாங்கிய கன்னத்து சதைகளும் அவன் கைகளில் இழுபட்டதில், ரணவலி உண்டாக, பொறுக்க முடியாது துடித்தவள், திடீரென அருகில் கேட்டக் காலடியோசையில் அவசரமாய்த் திரும்பிப் பார்த்தாள்.
வியர்வை வழிந்த நெற்றியுடன், சிவந்திருந்த கண்கள் முழுக்க ரௌத்திரத்தில் மின்ன, தகித்த ரத்தம் கொடுத்த அதீத ஆத்திரத்தில் ஒட்டு மொத்த உடலும் கிடுகிடுவென நடுங்க, அனலாய் மூச்சு விட்டபடி, அடங்கா ஆங்காரத்துடன் நின்றிருந்தான் ஆரணன்.
அவனது காலடியோசையை உணர்ந்துத் தானும் நின்று விட்ட மணிவண்ணன், அவனைக் கண்டதும் இதழ் வளைய,
“என்னாடா வெறிச்சுப் பார்க்குற?, உனக்கும் பங்கு வேணுமா?” எனக் கேட்டு முடிப்பதற்குள் அவன் மீது பாய்ந்திருந்தவன், அவன் வாயில் விட்டக் குத்துக்களின் எண்ணிக்கைக் கணக்கில்லாது போக, தனக்கு வாய்ப்பளிக்காது, கண்,மண் தெரியாமல் நிதானமின்றித் தாக்குபவனை அடக்கும் வழி தெரியாது முழி பிதுங்கிய மணிவண்ணன், தரையைத் தடவிக் கைக்குக் கிடைத்தக் கல்லைக் கொண்டு அவன் காதோரம் ஓங்கி ஒரு போடு போட்டான்.
அனிச்சையாய்க் காதைப் பற்றியவனை, விலக்கித் தள்ளி எழுந்து நின்ற மணிவண்ணன், மண்டியிட்டு அமர்ந்திருந்தவனைக் கீழே தள்ளி, சரமாரியாக மிதிக்கத் தொடங்க,
முகத்தில் ரத்தம் வழிய மூர்க்கமாய் மிதிப்பவனைத் தடுக்க முயன்ற அகலருவியின் கழுத்தை நெரித்தவன், தன் கையின் அழுத்தத்தைக் கூட்டியபடியே அவளைத் தரதரவென தள்ளிக் கொண்டு நடந்தான்.
நாக்கு தள்ள, மூச்சுக்குத்தவித்தபடி, அவனது கையைப் பிராண்டித் தன் கழுத்திலிருந்து விடுவித்துக் கொள்ள நினைத்தவளின் முயற்சி நிறைவேறாது போக, அவன் இழுத்த இழுப்புக்குச் செல்பவளை, அரைக்கண்ணில் நோக்கிய ஆரணனின் விழிகளில், சோளக்காட்டுக்குள் அவன் காக்காது போன பச்சைத்தாவணி வந்து போனாள்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் கடந்த பற்பல உறங்கா இரவுகள், அவன் ஆண் என்கிற அழைப்புக்குத் தகுதியானவன் தானா என்கிற யோசனைகளையெல்லாம் அவனுக்குள் விதைத்திருக்கிறது! தகுதியை வளர்த்துக் கொள்ள, அவன் நிறையவே முயற்சித்திருக்கிறான்.
பத்துப் பேர் வந்து தாக்கினாலும்,பலமாய் நின்று எதிர்கொள்ளும் திறமைகளை வளர்க்க வேண்டி, உலகிலுள்ள அத்தனைத் தற்காப்புக் கலைகளையும் கற்றிருக்கிறான்! மனதையும்,மூளையும் ஒருமுகப்படுத்த பல விடியல்களை தியானத்தில் கழித்திருக்கிறான். உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்ள பசி,ருசி பாராது கட்டுப்பாடான உணவுகளை உண்டிருக்கிறான்!
அத்தனையும் அந்த ஒரு நொடிக்காக! நான்கு கயவர்களிடம் தோற்று, அவளைக் காக்க முடியாது மடிந்து விழுந்த அந்த சொற்ப வினாடிகள் கொடுத்த நமைச்சலுக்காக!
ஆனால் இந்த நிமிடம், இத்தனை நாட்களாக அந்தக் கரிசல்காட்டை எண்ணி அன்றாடம் அலறித்துடித்த இதயத்தின் அலட்டல்களை அமைதிப்படுத்துவதற்க்கானத் தருணம்! அவன் இரண்டு வருடங்களாக எடுத்த ஒட்டுமொத்த முயற்சிகளுக்கும் அரங்கேற்றம் நடத்த வேண்டிய சமயம்! காக்க முடியாது போனதே எனக் கலங்கிக் கதறிய மனதின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய நேரம்!
அன்று அந்தக் காட்டெருமைகளின் கைகளில் சிக்கியவளின் கடைசி அலறல், இன்று காதுக்குள் ஒலித்ததும்,அது வரை வலியில் அரற்றியபடி மங்கிக்கிடந்த மூளை நரம்புகள், விடைத்தெழுந்து நிற்க, சடாரென எழுந்து அமர்ந்தவனின் கண்கள் சோளத்தட்டைகளையும், கரிசல்காட்டையும் பரபரவெனத் தேடியது.
அதற்குள் இங்கு தன் கழுத்தைப் பற்றியிருந்தவனின் அடிபட்ட நெற்றியைத் தாக்கி அவனைக் கீழே தள்ளிய அகலருவி, அவனோடு சேர்ந்துத் தானும் விழுந்திருந்தாள்.
எழ முற்பட்டவனைத் தடுத்து, குப்புறக் கிடந்தவனின் மீது ஏறியமர்ந்து ஆங்காரத்துடன் அவன் தலையை மண்டபத்தின் வாசலில் அழுத்தி இடி,இடியென இடித்தவள், “அம்மிக்கல்லையும்,ஆட்டு உரலையும் தூக்குற கை டா இது! எங்களுக்கு மசாலா அரைக்க மட்டுமில்லடா, உன்னை மாதிரி ***** பயலுக மண்டையைப் பொளக்கவும் தெரியும்” என அடங்கா ஆத்திரத்தில் மூச்சு வாங்கப் பேச,
ஆரணன் வாயில் கொடுத்தக் குத்திலும், அகலருவி நெற்றியில் இடித்த இடியிலும், பெருகிய ரத்தத்துடன் வலி தாங்காது மயங்கிச் சரிந்தான் மணிவண்ணன்.
அவனிடம் அசைவு நின்று போனதும் எழுந்தவள், மூச்சு வாங்க, ஆரனை நோக்கி விரைந்தோடினாள்.
தடதடவென அவளருகே நெருங்கி வந்திருந்த ஆரணனின் விழிகளும், அவளது சௌக்கியத்தை அவசரமாய் ஆராய.. அலைபாயும் அவனது கருமணிகளையும், சீரற்ற மூச்சையும், நடுங்கிக்கொண்டிருந்த உடலையும், நிதானமற்ற செய்கைகளையும் கண்ட அகலருவி, தன் நிலையை மறந்து, அவன் கன்னத்தைத் தட்டி,
“மாமா, மாமா இங்க பாரு! எனக்கு ஒன்னும் ஆகல! நான் நல்லாத்தேன் இருக்கேன்! மாமா… மாமா…” என அவனை நிதானப்படுத்த முயற்சிக்க,
“அந்தத் ******ப்பய உன்னை எதுவும் செஞ்சானா?, உனக்கு ஒன்னும் ஆகலேல?” – குழறிய நாக்கும், விரைத்து நின்ற விரல்களுமாய் அவன் முகம் காட்டும் வேறுபாட்டை உணர்ந்தவள், அவன் முகத்தில் சட்,சட் என அடித்து,
“எனக்கு ஒன்னும் ஆகல! நான் நல்லாத்தேன் இருக்கேன்! அவனால.. என்னை என்ன செஞ்சிட முடியும்??, நீ இப்ப நிதானத்துக்கு வரப் போறியா இல்லையா?” – என ஆத்திரத்துடன் கத்த,
தொப்பெனத் தரையில் அமர்ந்து, இழுத்த மூச்சோடு போராடிக் கொண்டிருந்த நெஞ்சை நீவியபடி “நீ…. போ இங்கயிருந்து” என்றான் மறுபடியும் குழறலாய்.
“உன்னை இங்க விட்டுப்புட்டு நான் எங்க போக?”
“போ-ண்டு சொன்னேன்” – சீறலாய்க் குழறினான் அவன்.
“போயி, போய் என்ன செய்ய?, வீட்ல இருக்கிறவங்களை இழுத்துட்டு வந்து இந்தக் கருமத்தைக் காட்டவா?, இங்க நடத்த அத்தனைக்கும் சாட்சியா நானே ஊர்க்காரய்ங்க முன்னாடி நிற்கவா?, முட்டாத்தனமா பேசாம எந்திரிச்சு வா மாமா! இவன் அநாதைப் பொணமா, இங்கயே கெடந்து சாகட்டும்”
விழி மூடி, எச்சில் விழுங்கி,விடைத்திருந்த கையை மூடித் திறந்தபடி அவன் தன்னைச் சமன்செய்வதை ஒரு நொடி நின்று பார்த்தவள், பின் தன் தாவணியைத் தேடியெடுத்து அணிந்து கொண்டு வந்தாள்.
தொங்கிப் போனத் தலையுடன் விழி மூடி அமர்ந்து கிடந்தவனிடம்,
“எந்திரிச்சு வா மாமா” என்று அவள் வற்புறுத்தியதும், எழுந்தவன், அவளோடு இணைந்து நடந்தான்.
அங்கிருந்தக் கிளைப்பாதையில் ஆளுக்கொருபுறமாய் பிரிந்தனர் இருவரும், வீட்டிலிருப்பவர்களுக்கும்,ஊரிலிருப்பவர்களுக்கும் எவ்விதச் சந்தேகமும் தோன்றி விடக் கூடாதென்பதற்காக.
கால் தடுக்கிக் கல்லில் விழுந்து விட்டதாக மருத்துவமனையில் தன் நெற்றிக்காயத்துக்கு மருந்து கட்டிக் கொண்ட ஆரன், உடனிருந்த விருமனின் சந்தேகப் பார்வையைக் கண்டுகொள்ளவில்லை.
தன் கன்னத்துக் காயத்திற்கும் அதே பதிலை வீட்டினரிடம் கூறிய அகலருவி, அனைவரும் நகர்ந்த பின், அவசரமாய்க் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
தகிரியமாய் அவனை எதிர்த்து நின்று, அடித்துத் துவைத்துத் தப்பித்து வந்திருந்தாலும், வெறும் உடலுறுப்பில் ஒன்றை ஒட்டுமொத்த இனத்தின் பலவீனமாக்கி, பொக்கிஷம் என அதை மிகைப்படுத்தி, கன்னிமையை உயிருக்கு நிகராய் உருவகப்படுத்தி வைத்து தன் இனத்துக்கு எதிராக இயற்கையும்,இச்சமூகமும் செய்யும் துரோகத்தை எண்ணி அழுகை பொங்கியது அவளுக்கு!
சிற்சில கண்ணீர் துளிகள் தான்! அதுவும் தனக்கானது அல்ல! தன் பிறப்பிற்கானது! தன் இனத்திற்கானது!
வழிந்த கண்ணீரைத் துடைத்துக் காதோர முடிகளோடு ஒதுக்கியவள், ‘தனது விலைமதிப்பில்லாக் கண்ணீர், ஒரு மூன்றாம் தர அற்ப ஜீவனுக்காக வீணாவது பொறுக்காமல், மூக்கை உறிஞ்சி அதை அடக்கி விட்டு, கடந்து போன நிமிடங்களையெல்லாம் தண்ணீரில் கரைத்தபின், வேறு ஆடை உடுத்திக் கொண்டு கிணற்றடியில் வந்தமர்ந்தாள்.
ஒட்டுமொத்த வீடும் உறக்கத்தைத் தழுவியிருக்க, மாதுள மரத்தினருகே மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்க வியர்த்துப் போய் நின்றிருந்த ஆரனைக் கண்டு அவசரமாய் எழுந்து வந்தாள் அகலருவி.
“என்னாச்சு?” – எனக் கேட்டபடித் தன்னருகே வந்தவளை நிமிர்ந்து பார்த்தவன், “ஒன்றுமில்லை’-எனத் தலையாட்டி அவளது கன்னத்துக் காயத்தைக் கை காட்டி “மருந்து போடலயா?” எனக் கேட்டான்.
“போடனும்” – என்றவள் அவனையே பார்த்தபடி நிற்க,
“என்ன?” என்றான் அவன்.
“தூங்க முடியலயா?”
“ஆமா”
“விருமனைக் கூட்டி வரவா?” – கவலையாய்க் கேட்டவளிடம் ‘வேண்டாம்’ எனத் தலையசைத்தவன்,
“சரியாய்டும்” என்றபடியே அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான். அவனெதிரே முக்காலியின் மீதமர்ந்த அகலருவி, சீரற்ற மூச்சோடு திண்டாடுபவனைக் கண்டபடி,
“அடிக்கடி இப்பிடி வருமா மாமா?” எனக் கேட்டாள்.
“ரொம்ப நாளா இல்லாம இருந்தது, இன்னிக்கு வந்திருக்கு” – அமைதியான குரலில் கூறியவனைக் கண்டு ‘ஓஓஓ’ என மெல்லத் தலையாட்டியவள்,
“ஆனா, நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்றாள்.
அவளை என்னவென்பது போல் பார்த்தவனிடம்,
“இல்ல, வெறிநாய் குதறுனது என்னைய, ஆனா, நீ கடி வாங்குன மாறி, என்னத்துக்கு இம்புட்டு அலட்டிக்கிற?” எனக் கேட்டாள்.
மூக்கு விடைக்க அவளை முறைத்தவனிடம்,
“என்ன நான் இப்ப தப்பா கேட்டுப்புட்டேன்?” – என எகிறியவளைக் கண்டுப் பெருமூச்சை வெளியிட்டுக் கண்களை மூடிக் கொண்டவன்,
“கோபம்! ஆதங்கம்! புனிதம்ண்டு போற்றப்பட வேண்டிய விசயம் வெறும் ***வெறியா மாறிப் போனதுல உண்டான ஆத்திரம்! கண்ணுக்குள்ள வைச்சுக் காக்கப்பட வேண்டிய மென்மையான பூவு, கசங்கிப் போய் கல்லறை வாசல்ல கிடக்குறதால உண்டான ஆங்காரம்! வேலியா நிற்க வேண்டிய இனமே, அழிவுக்குக் காரணமாகுறதால உண்டான ஏமாற்றம்” – எனப் புலம்ப..
“புனிதமான விசயமா?” எனக் கேட்டு மெல்லச் சிரித்துக் கொண்டவள், அவன் முகம் நோக்கி,
“ஆலமரத்தடியில, அரைகுறை போதைல, ஆம்பளயா,பொம்பளயாண்டு தெரியாமலே, தன் உறுப்பை திருப்திப்படுத்திக்கிற ஒரு தரங்கெட்டத் **** கிட்டப் போய் இது புனிதம்ண்டு சொன்னா, அவனுக்குப் புரியுமா?, இவிங்கள்லாம், அவிங்களைப்பெத்த ஆத்தா மாராப்பு விலகுனா கூட ஆ-ண்டு பார்க்குறவிங்க மாமா! இவிங்களை மனுஷனாப் பார்க்குறதே இயற்கைக்கு நாம செய்ற துரோகம்! ஏன்னா, இவனெல்லாம் விலங்கினமா மாறிப் பல நாளாச்சு! கூண்டுல அடைச்சுக் கொண்டு போய் காட்டுலயோ,மலைலயோ விட்றதுதேன் அவனை உருவாக்குன இயற்கைக்கு நாம செய்ற உதவி” – எனக் கூற..
அவளது சிந்தனையின் போக்கைக் கண்டு புன்னகையில் உதடு வளைந்தது அவனுக்கு.
“அதே போல, பூவு,கீவுண்டு சொல்லி எங்க இனத்தோட இயல்பை மாத்தாத மாமா! பெண்-ண்டு நீங்க ரெண்டு எழுத்துல வகைப்படுத்துறதுக்கு முன்னாடி நாங்க மனுஷன்-ங்குற நாலு எழுத்துக்குள்ள அடங்குறவிங்க! உங்களுக்கிருக்கிற கையி,கால்,கண்ணு,மூக்குதேன் எங்களுக்கும் இருக்கு. பசி,ருசி,கோபம்,ஆத்திரம்,பலம்,பலவீனம் அம்புட்டும் எங்களுக்கும் வேலை செய்யும். ஆதம்,ஏவாளைப் படைச்சப்ப, இயற்கை என்ன, ‘டேய் ஆதம், நீ போய் வேட்டையாடி சோறு கொண்டு வாடா, ஏவாள் காட்டைப் பார்த்துக்கிட்டு கம்முனு உட்காரட்டும்ண்டு’ கட்டளையாப் போட்டுச்சு?, சரிசமமான பலம்,பலவீனங்களோட உருவாக்கப்பட்ட உயிரினங்கள் மாமா நாம! ஆனா, கற்பு,புனிதம்,***-ண்டு சொல்லி எங்க பலத்தையெல்லாம் ஒடுக்கி, மூலைல உட்கார வைச்சு படைச்ச இயற்கைக்குத் துரோகம் செஞ்சிடுச்சு பெருகுன சமூகமும்,வளர்ந்த நாகரீகமும்.”
“பெண்மை,மென்மைண்டு சொல்லி எங்களை மேன்மையா பார்க்க வேண்டிய அவசியமே இல்ல! ரெண்டு பேரையும் சமமாப் படைச்ச இயற்கைக்கு மதிப்பு கொடுத்து நீயும்,நானும் ஒன்னு தான்ற பார்வை பார்த்தாலே போதும்”
விழி விரிய அவளையே பார்த்திருந்தவனைக் கண்டுத் தானும் அமைதியாகி அவன் முகம் பார்த்தவள், பின்,
“ஒருத்தன்-ன்ற எண்ணிக்கை இன்னிக்குப் பத்தாயிருந்திருந்தா, என்னால பத்ரகாளியாலாம் உருமாறியிருக்க முடியாது மாமா, அவிங்க பலத்துக்கு முன்னாடி சத்தியமா நான் பலியாகியிருப்பேன்! ஆனா நிச்சயம் அது என் இனத்துக்கான தோல்வியா இருந்திருக்காது. அப்பிடியே உருத்தெரியாம நான் அழிஞ்சு போயிருந்தாலும், நிச்சயம் வருத்தத்துல செத்திருக்க மாட்டேன்! ஏன்னா என் ஒருத்தியை அழிச்சு தூக்கி எறிஞ்சுட்டு, தான் ஆம்பளண்டு ஆட்டிட்டுத் திரியுறத் **** பயலுக கர்வத்தை அழிக்க, என்னை விட தகிரியமான கோடி பேரை உருவாக்கித் தருவாளுக என் இனத்தைச் சேர்ந்தவளுக!”
கடும்மாதவம் புரிந்து மங்கையெனப் பிறப்பெடுத்தவளின் பெருமைமிகு வார்த்தைகளை,தன்னம்பிக்கையில் ஜொலி,ஜொலித்த முகத்தை அருகே கண்ட ஆரனின் கண்கள் தன்னாலே ஊற்றெடுக்க, வாஞ்சையுடன் அவள் தலை தடவியவனின் கையைக் கன்னத்தோடு அழுத்தி இறுகப் பற்றிக் கொண்டவள், அவன் விழி நோக்கி,
“நாங்க பலவீனமானவங்க இல்ல மாமா! பலவீனப் படுத்தப்பட்டவங்க! என் சக்திக்கு அடங்குன விசயங்களை என்னால கட்டுப்படுத்த முடியும்! ஆயுதமில்லாம,போதைல நிற்குற ஒத்தப் பீக்காளிப் பயலை, ***-ல மிதிச்சு குரவளைய நெரிக்கக் கூட வக்கில்லாமலா 3 வேளை சோத்தைத் திண்டு உடம்ப வளர்த்திருக்கேன் நான்?, என்னால முடியும் மாமா. இம்புட்டுக் குற்ற உணர்ச்சி உனக்குத் தேவையில்ல” என்றவளின் கன்னத்தை அழுத்திப் புன்னகைத்தவன்,
“ஆமா! உன்னால முடியும்! உனக்குத் துணையா என்னை மாதிரி ஆளுங்க இருக்கும் போது, உன்னால நிச்சயம் முடியும்”-என்றான்.
அவனது கை கொடுத்த கதகதப்பில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “தெரியும் மாமா! நாங்க இல்லாம நீங்க இல்ல. நீங்க இல்லாம நாங்களும் இல்ல.” என்றாள்.
கொல்லையில் காய்ந்து கொண்டிருந்தப் பௌர்ணமி நிலவொளியில், அவள் கன்னத்தில் கரம் பதித்து, அவள் விழி பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு,அதுவரை மனதில் நிழலாய் உறுத்திக் கொண்டிருந்த பெண்மை வடிவம், இப்போது உயிர் பெற்று, நிஜமாய்க் கண் முன் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.
இருக்குற தேனீ வகைகள்லயே ரொம்பப் பெரியது,ரொம்பக் கொடூரமானது மலைத்தேனீ தானாம்! சின்ன தொந்தரவைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத இயல்பைக் கொண்ட இந்தத் தேனீ, கடிச்சா சாவு நிச்சயம்! இவ்ளோ ஆற்றல் இருக்குற இந்தத் தேனீயை நெருப்புல கருக விட்டுத் தான் மலைத்தேன் எடுக்குறாங்க! ஆக, தன்னை விட சக்தி வாய்ந்த ஒரு force தன்னைத் தாக்காத வரைக்கும், இயற்கை தனக்களித்த இயல்பை வைச்சு அந்தத்தேனீயால தன்னைக் காத்துக்க முடியுது!
அகலருவி கூட இந்த இயல்பைப் பெற்றவள் தான்! பெருத்த எண்ணிக்கையையும், பலத்த ஆயுதங்களையும் அடக்கி,ஒடுக்குற வலிமை அவளுக்குக் கிடையாது! ஆனா, தான் ஒரு எதிர்பாலினம்ங்குற திமிர்ல, நீ என்னை விட பலம் குறைந்தவள் தான்-ங்குற மிதப்புல, நிராயுதபாணியாத் தாக்க வந்த ஒத்த உருவத்தை சமாளிக்கத் தெரியாத அளவுக்கு அவளைக் கோழையாகவும் இயற்கை படைக்கல! இந்த இயல்பு அகலருவியோட இனத்துக்கே பொருந்தும்.
