உழிஞை-1
வெள்ளைக்கொடி சமிக்ஞை காட்டப்பட்டதும், இதற்காகவே இரவிலிருந்து கரையோரமாய்க் காத்துக் கிடந்த சுற்றுப்பட்டிக் கிராமத்து மக்கள், அந்த ஐந்துகோவில் முத்தன் சுவாமி கண்மாய் முழுதையும், நொடியில் மனிதத்தலைகளால் நிரப்பியிருந்தனர்.
ஒரே நேரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்மாய்க்குள் குதித்திருந்தபடியால், அதுவரை நிச்சலனமான நீருக்கடியில் நிம்மதியாக நீந்திக் கொண்டிருந்த உயிரினங்கள் அனைத்தும், மக்களின் காலடியோசை கொடுத்த சலசலப்பில் பதறியடித்துத் துள்ளி ஓடத் தொடங்கியிருந்தன.
ஆளாளுக்குக் கையிலிருந்த வலை,கச்சா,ஊத்தா போன்ற மீன்பிடி சாதனங்களைக் கொண்டு ஆரவாரமாய் மீன் பிடிக்கத் தொடங்க, அந்தக் கண்மாய் முழுதும் நொடியில் செம்மண் நிறத்தில் மாறியது.
“இதைக் கள்ளந்திரி மீன்பிடித் திருவிழாண்டு சொல்லுவோமுங்க! இந்த ஊர் மக்களால நூறு வருஷத்துக்கும் மேல கொண்டாடப்பட்டு வர்ற திருவிழா இது! கோயிலுக்கு வர்ற சனங்க, அம்மனை வேண்டிக்கிட்டு, மீன் குஞ்சுகளை இந்தக் கம்மாய்க்குள்ள நேத்திக்கடனா விடுவாங்க! திருவிழா சமயம் முதல்நாள் ராத்திரில இருந்தே கரையோரமா காத்துக்கிடக்குற சுத்துப்பட்டிக் கிராமத்து சனங்க, விடி காலைல, கோயில்ல பூசை முடிஞ்சு, பூசாரிக வெள்ளைக்கொடி சமிக்ஞை காட்டினதும் உள்ள இறங்கிடுவாங்க! எத்தனை பேர்னாலும் கம்மாய்க்குள்ள இறங்கி மீன் பிடிச்சுக்கிடலாமுங்க! சில சமயம் 5 கிலோ,10 கிலோ வரைக்கும் கூட மீன் சிக்குமுங்க! கரையோரமா உட்கார்ந்து சமைச்சு தின்னுப்புட்டு ஊர் போய்ச் சேர்றவகளும் இருக்காக! வீட்டுக்குக் கொண்டு போய் சமைக்கிறவகளும் இருக்காக! ஆக மொத்தம், இன்னிக்கு ஊரு முழுக்க எல்லார் வீட்லயும் மீன் வாசம்தேன் வீசும்! அடுத்து ரெண்டு நாள்ல கம்மாக்குள்ள தண்ணீ தெளிஞ்சதும், மறுபடி மீன் குஞ்சுகளை விட ஆரம்பிச்சுடுவோமுங்க” – எனக் கரையோரம் நின்றிருந்த பெரியவர் ஒருவர், கண்மாய்க்குள் மீன்பிடிக்கும் மனிதர்களைப் புகைப்படமெடுத்தபடித் தன்னிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தப் பத்திரிக்கையாளரிடம் மீன்பிடித் திருவிழா பற்றிய விவரத்தைக் கூறிக் கொண்டிருந்தார்.
“எலேய்! கிறுக்குக் ***, வலையைப் புடிக்கச் சொன்னா, என்னத்துக்குடா வாயைப் பொளந்துக்கிட்டு நிற்கிற?”
தான் பற்றியிருந்த வலையின் ஒரு பகுதியை இழுத்துப் பிடித்த ஆரன், எதையோ தீவிரமாக வேடிக்கைப் பார்த்தபடி மறுபுறம் நின்றிருந்த விருமனை நோக்கி முழுக்குரலில் கத்தினான்.
“அட இரு பங்காளி, அந்த மஞ்சசீலைக்காரியைப் பார்த்தா, நம்ம கூட பத்தாப்புல படிச்ச, பண்ணையாரு மக பஞ்சவர்ணம் மாறி இருக்கு!” – அவன் கை காட்டியத் திசையை நோக்கிய ஆரன்,
“அப்டியே, அவ பக்கத்துல பாதுகாப்பா அணைக்கட்டிக்கிட்டு ஒருத்தன் நிற்குறானே! அவனையும் சேர்த்துப் பாரு! ஏன்னா அவந்தேன் அவ புருசன்! – என எள்ளலுடன் கூறியதும், “ஷ்ஷ்” எனக் கண்ணை மூடிப் பல்லைக் கடித்த விருமன் வலையைத் தண்ணீருக்குள் விட்டபடி,
“பட்டணத்துக்காரன் போலயேப்பா! அதேன் பஞ்சவர்ணம் மொகரை பலவர்ணம் காட்டுது! யாத்தே! அந்தாரு, இவ இளிக்குற இளிப்புல கடவாப்பல்லு ரெண்டும் கம்மாக்குள்ள விழுந்துரும் போல!” என ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்தவன் பின்,
“ஏன் டா பங்காளி, இருக்குற மீனைப் பூரா வெளியூர்க்காரய்ங்க பெரக்கிட்டு போயிட்டா, உள்ளூர்க்காரய்ங்க நமக்கு என்னா தான் டா மிஞ்சும்?, ஒத்த கட்லாக்கண்டையைப் பிடிக்கத்தேன் ஒன்பது நாளா கம்மாயைச் சுத்தி வாரோமா நாம?, பங்காளி, அநியாயம் நடந்தா தட்டிக் கேட்கனும் டா! வாடா, போய் அந்த பட்டணத்துக்காரனை என்னாண்டு கேட்டு வருவோம்” – என வேட்டியை மடித்துக் கட்ட,
அவனைக் கேவலமாய் முறைத்த ஆரன்,
“உனக்கு அவன் மீன் பிடிக்குறதுல கடுப்பா?, இல்ல, மீன் பிடிக்கிறவளை, பிடிச்சிக்கிட்டு நிற்கிறதுல கடுப்பா?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்ம், ரெண்டும்தேன்! பள்ளியோடத்துல என்னையே சுத்தி,சுத்தி வந்த சிறுக்கி, இன்னிக்குப் பார்த்தியாடா?, அவன் கைல தொங்காத குறையா உரசிக்கிட்டு நிற்கிறதை?”
“டேய், அவன், அவளோட புருசன் டா”
“இருந்தாலும், பொது இடத்துல ஒரு இங்கிதம் வேணாம்”
“அவ புருசன் கையி உனக்குப் பொது இடமா?”
“ப்ச், பங்காளி!!” என முறைத்தவன் பின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அகலருவியை நோட்டம் விட்டு, “ஹ்ம்! கடைசில இந்தக் கருவாக்குந்தாணியைக் கட்டிக்கிட்டு சோத்துக்கு சிங்கி அடிக்கனும்ங்றதுதேன் என் விதி போல பங்காளி” – எனப் பெருமூச்சு விட்டு, எட்டி.. அவளிடம்..
“இந்தாடி, கருப்பட்டி! இந்த வருசமாவது ருசியான மீன் குழம்பு செஞ்சு போட்டு மாமனை மயக்குற திட்டம் இருக்கா இல்லையா உனக்கு?” எனக் கேட்டான்.
முகத்தில் தெறித்திருந்த நீர்த்திவலைகளைத் துடைத்தபடி அவனை முறைத்துப் பார்த்த அகல், “அதுக்கென்னத்துக்கு மீன் குழம்பு?, மயக்க மருந்தை வாங்கி உன் மூக்குல தேய்ச்சு விட்றேன்! மயங்கி சாவு.” எனக் கூற,
உதட்டைப் பிதுக்கியவன் “ம்ஹூம் இவ கூட காலம் தள்ளுறது கஷ்டம் பங்காளி! திங்குற சோத்துல பங்கு கொடுக்காட்டி, திண்ணைல கட்டி வைச்சுத் திண்டாட விடுவா! இவளை நீயே கட்டிக்க, எனக்கு இந்த சின்னக் கழுத போதும்” எனக் கூறி, அகலருவியின் அருகே நின்றிருந்த புவியிடம்,
“இந்தாடி வெள்ளைப்பன்னி! உங்கொக்காகாரி மாறி இல்லாம, நீயாவது நாக்கு ருசியா நல்லா சமைச்சுப் போடக் கத்துக்க! வஞ்சகமில்லாம வயிறார நீ சோறு போட்டண்டு வை, மாமன் வப்பாட்டி தேடாம, உன் பின்னாடியே செல்லப்பிராணி மாறி சுத்தி சுத்தி வருவேன்! என்னா சொல்ற?” எனக் கேட்டான்.
அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் “ப்ச்” என முகத்தைச் சுழித்த புவியரசியைக் கண்டு கடுப்பாகித் தன் ஈரக்கையால் அவள் பிடரியில் ஒரு அடியைப் போட்டவன்,
“மொகரை என்னத்துக்குடி, முக்கால் உசரத்துக்கு நீளுது! என்ன, இன்னும் அந்த கருவாப்பய நினைப்பா?” எனக் கேட்டதும், படக்கென நிமிர்ந்தவள்,
“அவன் கருவாப்பய-ண்டா, நீ யாரு?” – என்று சீற..
“பார்றா!” எனப் புருவம் உயர்த்திய விருமன், “ஏன் டி, கூடவே வளர்ந்த மாமன் என்னைய விட, உனக்கு நேத்து வந்த பய பெருசா போய்ட்டானா?” என்றதும்,
“எலேய்! லூசுப் ******! சின்னப்புள்ளக்கிட்ட என்னா பேச்சு டா பேசுற?” – என்று ஆரன் ஒருபுறம் சத்தமிட, கண்டுகொள்ளாமல்,
“யாரு இவளா சின்னப்புள்ள?, இவ வடிச்சு வைச்சக் காதல் காவியத்தால, அந்தக் கடுதாசிக்குக் காச்சலே வந்துடுச்சுப் பங்காளி!” என்றான் அவன்.
“அட வெட்கங்கெட்டப் பரதேசி! அதை நீ படிச்சு வேற பார்த்தியாக்கும்”
“முதல்ல நாகரீகமா இருக்காதுண்டு நினைச்சு, அதைக் கிழிச்சுப் போடத்தேன் பார்த்தேன்! ஆனாலும், ஆறாப்புல அம்சவேணிக்கு நான் எழுதுன காதல் கடுதாசியை விட இது எந்த விதத்துல உசத்திண்டு தெரிஞ்சுக்க பிரிச்சுப் பார்த்தது, அப்பிடியே முழுசா படிக்க வேண்டியதாய்ப் போச்சு!”
-ஈஈஈஈ என இளித்தவனைக் கண்டு ஆரனும்,அகலருவியும் தலையில் அடித்துக் கொள்ள, புவியரசி அவனைக் கொலை வெறியுடன் முறைத்துப் பார்த்தாள்.
“என்னத்துக்குடி முறைக்குற சின்னச் சிறுக்கி! ஏன் டி இந்தக் கவித்துவத்தையெல்லாம் உருப்படியான விசயத்துக்கு உபயோகிக்கலாம்ல?, உன் நொண்ணன் அஞ்சாங்க்ளாஸூ, உங்கொக்கா பத்தாங்க்ளாஸூ! நீயாவது நல்லாப் படிச்சு விவரமா வருவண்டு பார்த்தா, இப்பிடி ரெக்கை முளைக்கும் முன்னமே, பறக்கத் திரியுற”
“அந்த சம்பவம் முடிஞ்சு 20 நாளைக்கு மேல ஆச்சு! நான் அதை மறக்க நினைச்சு 15 நாளைக்கு மேல ஆச்சு. நீ முடிஞ்ச விசயத்தைப் பத்தித் தேவையில்லாம பேசாத” – புவியரசிப் பல்லைக் கடித்தபடிக் கூற,
“ஆமாமா, அவன் கை ஒடிஞ்சுப் படுக்கைல விழுந்தும் கூட 20 நாளைக்கு மேல ஆச்சு” – அசால்ட்டாகக் கூறியவனிடம்..
“அதையே என்னத்துக்கு மாமா சொல்லிக் காட்டுற?, இப்பிடியெல்லாம் நடக்கும்ண்டு நான் கனவா கண்டேன்?” – என்று கத்திய புவிக்குக் கண்ணில் நீர் கோர்த்து விட, விருமனின் பிடரியில் அடித்த ஆரன்,
“எலேய்! எக்குத்தப்பா பேசி புள்ளைய அழ விட்றியா நீயி?, இப்ப என்னத்துக்குடா முடிஞ்சு போன விசயத்துக்கு முகப்புரை எழுதுறவன்?” – என்று திட்டியதும்..
“எலேய் சொல்லிக் காட்டனுமேண்டு சொல்லல டா!சும்மா அப்டியே வாய்ல வந்துருச்சு! ஏய், சின்னக் கழுத! என்னத்துக்குக் கண்ணைக் கசக்குற?, என்ன நடக்காததையா நான் சொல்லிப்புட்டேன் இப்ப?” என்ற விருமனை முறைத்தவள் தேம்பியபடியே,
“வீட்ல எங்காத்தாகாரிதேன் குத்தி,குத்திப் பேசியே என் மூளையைக் குடையுறாண்டு இங்க வந்தா, நீயும் அதையே பண்ணு” என்று கூறியவளிடம்,
“உங்காத்தாளுக்கு, அவ மாமியாளோட சண்டை கட்டுறதைத் தவிர ஒரு மயிறும் தெரியாது! அது பேசுறதையெல்லாம் கணக்குல எடுப்பியா நீயி? நானெல்லாம், என் கூட ஆறாப்புல படிச்ச அம்சவேணி தொடங்கி பத்தாப்புல படிச்ச பஞ்சவர்ணம் வரை, மொத்தம் பதினைஞ்சு புள்ளையளுக்கு காதல் கடுதாசி குடுத்துருக்கேன் தெரியுமா?, அதுல அஞ்சு இவன் எழுதிக் குடுத்தது!, நாங்கள்லாம் உன்னைய மாறி கண்ணைக் கசக்கிட்டாத் திரியுறோம்?” – என்று விருமன் கூற, மூக்கை உறிஞ்சியவள்,
“நீ ஆம்பள, என்னா பண்ணாலும் யாரும் உன்னைய எதுவும் கேட்கப் போறதில்ல! நான் அப்பிடியா?” எனக் கேட்க,
“அந்த வித்தியாசத்தைப் புடிச்சுக்கிட்டு வியாக்ஞானம் பேசுறதெல்லாம் உங்காத்தாத் தலைமுறை ஆளுகதேன்! நமக்கு அது தேவையில்ல. புரியுதா?” என்றவன், கண்ணைத் துடைத்துக் கொண்டவளிடம்,
“பட்டாளத்தான் பேத்தியா இருந்துக்கிட்டு நீ என்னாடி இப்பிடிப் பேச்சு பேசுற?, உங்கொக்காள மாறி இர்றி! உங்காத்தா அன்னைக்கு உன்னைய அடிச்சா மாதிரி, இவ மேல கைய வைச்சிருந்தாண்டு வையி, அது காதை அறுத்துட்டு வந்துருப்பா இவ” எனக் கூற..
“இப்ப என்னத்துக்கு அவளை ஏத்தி விட்டுட்டுத் திரியுற நீயி?” என்று இடையில் கத்திய அகலருவியைக் கண்டு கொள்ளாது, புவியரசியிடம்,
“அவந்தேன் நல்லபடியா குணமாகி பள்ளியோடத்துக்குப் போகத் தொடங்கிட்டியான்ல! அப்புறம் என்ன? விடு!,” என்று கூற மெல்லத் தலை குனிந்தவள்,
“செஞ்சத் தப்புக்கு தண்டனையாத்தேன் என் படிப்பை நிறுத்திப் போட்டாளே எங்காத்தா” என்றாள் வருத்தமாய்.
“கிழவன் அப்டியெல்லாம் விட்ற மாட்டாரு உன்னைய! உங்காத்தா போட்ற நாடகத்துக்கெல்லாம் பயப்பட்ற ஆளா அவரு?, நிலைமை மாறட்டுமுண்டுதேன் அமைதியா இருக்காரு! நீ தேவையில்லாத சிந்தனையெல்லாம் விட்டுப்புட்டு தெனம் உட்கார்ந்து படி! இன்னும் ஒரு மாசத்துல முழுப்பரீட்சை வருதுல்ல” எனக் கூற.. சரியெனத் தலையாட்டியவளிடம்..
“மொகரைய உர்ருண்டு வைக்காம சிரி கழுதேய்” என்ற விருமன் அவள் மீது தண்ணீரைத் தெளிக்க, “ப்ச், மாமா” என எரிச்சலுடன் கத்தியவள் தன் பங்குக்குத் தண்ணீரை அள்ளி அவன் மேல் தெறிக்க விட, நால்வரும் மாற்றி,மாற்றி தண்ணீர் ஊற்றி விளையாடியபடி நின்றிருந்த விதத்தைக் கொதித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த மணிவண்ணனின் விழுது ஒருவன், நேராக அவன் முன்பு சென்று நின்றான்.
நெற்றிக்கட்டுப் பிரிக்கப்பட்டு ப்ளாஸ்திரி ஒட்டப்பட்டிருக்க, இதழோரமிருந்த காயங்கள் ஆறிக் கருத்துப் போனதில், மணிவண்ணனின் விகார முகம் மேலும் அகோரமாகியிருந்தது.
“நீங்க இங்க உடம்பு பூரா கட்டோடக் கந்தலாகிக் கிடக்கையில, அவிங்க அங்க கம்மாக்குள்ள குடும்பமா கலகலண்டு சிரிச்சிக்கிட்ருக்காய்ங்கண்ணே!”
சவரம் செய்து முடித்துக் கையிலிருந்த கண்ணாடியில் தன் இதழோரக் காயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மணிவண்ணன் நிமிர்ந்துத் தன்னெதிரே நின்றவனை நோக்கினான்.
“சிரிச்சுட்டுப் போறாய்ங்க விட்றா!”
“என்னாண்ணே இப்பிடிச் சொல்ற?, அன்னிக்கு ராத்திரி கருவேலங்காட்டுல கண்டமாகிக் கிடந்த உன்னைய ஊர்க்காரய்ங்க உடனே கண்டெடுத்திருக்காட்டி, இந்நேரம் உனக்கு மொட்டைப் பாறைல படையல் போட்ருப்பாய்ங்கண்ணே” – அதுவரை பொங்கிய விழுது, கண்ணாடியைக் கீழே வைத்து விட்டுத் தன்னை முறைத்துப் பார்த்த மணிவண்ணனைக் கண்டுப் பம்மி,
“ம்க்க்க்க்கும்! இல்ல, அன்னிக்கு எங்க எல்லாரையும் நீயி, எம்புட்டுப் பதற வைச்சுப்புட்டங்குறதைச் சொல்றேன்! நீ பாட்டுக்க போதையைப் போட்டுப்புட்டு எவன் கிட்டயோ வாய் நிறைய வாங்கிட்டுப் படுத்துட்ட! சாராயம் குடிச்சிருக்கிறவனுக்கு மருத்துவம் பார்க்க முடியாதுண்டு ஆஸ்பத்திரில இருக்கிறவங்க கூட்டுன பஞ்சாயத்தைத் தீர்க்க நாங்க எம்புட்டு பாடுபட்டோம் தெரியும்ல!” - என்று அலட்டிக் கொள்ள, பல்லைக் கடித்த மணிவண்ணன்,
“நான் எவன் கிட்டயும் அடி வாங்கலடா! போதைல பாதை தெரியாம, அந்தக் காட்டுமண்டபத்து வாசல்ல கால் தடுக்கிக் கீழ விழுந்துட்டேன். அம்புட்டுதேன்” – என அவன் முகம் பாராமல், விடைத்த மூக்குடன் கூற,
“அய்ய, புழுகாதண்ணே!, சரமாரியா வாய்லயே விட்ருக்காய்ங்க! இதைக் கூடவா என்னால கண்டுபுடிக்க முடியாது?, பத்து நாளா, கஞ்சி குடிக்கக் கூட முடியாம அவதிபட்டுப்புட்டு, இம்புட்டுப் பொய் சொல்ற?” – என விழுது நொடித்துக் கொள்ள,
“எலேய்ய்ய்! ***** மூடிட்டு போடா அங்குட்டு” என சீறியவனைக் கண்டுகொள்ளாமல், அவனருகே குனிந்த விழுது,
“உண்மையைச் சொல்லுண்ணே! பட்டாளத்துக்காரர் பேரன்ய்ங்க, போலீசைக் கூப்ட்டு இங்கிட்டு விசயத்தை சுமூகமாக முடிக்கிறாப்ல காட்டிப்புட்டு, அங்குட்டு உன்னையக் கருவேலங்காட்டுல வைச்சுக் கொத்துபுரோட்டா போட்டுட்டாய்ங்கதேன?” என்று மெல்லியகுரலில் கேட்க,
மூச்சு வாங்க சினமிகுதியில் அவனது இடுப்பில் எட்டி மிதித்த மணிவண்ணன், “குறுக்கை ஒடிச்சுக் கிணத்துல எறிஞ்சிருவேன் பொடிப்பயலே! ஓட்றா முதல்ல” என்று கத்தியதும், பம்மிய விழுது,
“மன்னிச்சிருண்ணே! மன்னிச்சிருண்ணே!” என்று கெஞ்சியபடி ஓரமாய் ஒளிந்து கொண்டான்.
அவமானத்தில் செவ்வரியோடிய விழிகளுடன், கழுத்து நரம்புகள் புடைக்க “அன்னைக்கு மட்டும் நான் போதைல இல்லாம இருந்திருந்தா, அந்தத் ***** சிறுக்கியையும், அந்தப் ******** மவனையும் உருத்தெரியாம அழிச்சிருப்பேன்!”-எனத் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்ட மணிவண்ணன், “மாப்ள…” என வாசலில் ஒலித்தக் குரல் கேட்டுத் தன்னைக் கட்டுப்படுத்தி முகத்தைச் சீராக்கி வெளியே எழுந்து சென்றான்.
“வாங்க மாமா” – என்றவனின் அழைப்பிற்கு,
“வர்றேன் மாப்ள! இப்ப வலி பரவாயில்லையா?” – எனக் கேட்டபடியேத் தன் வீட்டிற்குள் நுழையும் சங்கிலியனைக் கண்டு எரிச்சல் பெருக,
“மவ நெத்தியைப் பொளக்குறா! அப்பன் நலம் விசாரிக்குறியான்! யோவ், அடிச்சதே உம்மவதேன்ய்யா” எனச் சொல்ல நா எழுந்தாலும் அடக்கிக் கொண்டு,
“நீங்க தெனம் தவறாம வந்து என்னைய பார்த்துட்டுப் போறப்ப, என் சௌக்கியத்துக்கு என்ன மாமா குறைச்சல் இருந்துறப் போகுது?” – என இனிப்பான குரலில் கூற..
ஒரு நொடி புன்னகைத்தவர் பின் முகம் மாற, “நீ சரியாகி வரனும் மாப்ள! என் தாய்மாமன் எனக்குச் சீலையைக்கட்டிவிட்டு என்னைய முழுப்பொண்டுகனா மாத்துறதுக்கு முன்னாடி, நீ எந்திரிச்சு வரனும்” என்றவரைக் கண்டு அவன் இறுகிப் போய் மௌனமாய் நிற்க,
“ச******யப்பயலோட சரசம் பண்ணத் துணிஞ்ச அந்தத் ***** சிறுக்கிக் கையை வெட்டவும் அவன் என்னைய அனுமதிக்கல! தான் திண்ணைல உட்கார்ந்து எச்ச சோறு திங்குற நாய்ண்டு தெரிஞ்சும், எட்டாத எழநிக்கு (இளநீர்) ஆசைப்பட்டத் தரங்கெட்டத் ******* தலையை சீவவும் அவன் அனுமதிக்கல! அன்னிக்கு கேட்டியே மாப்ள, நீயெல்லாம் ஆம்பளையாண்டு! என் கையையும்,காலையையும் கட்டிப்போட்டு என்னைய பொம்மையா ஆட்டிப்படைக்குற என் தாய்மாமன் முன்னாடி, நான் நிஜமாவே ஆம்பள தானாண்டு எனக்கே சந்தேகம் வருது மாப்ள” – என்றுக் கோபமும்,ஆதங்கமுமாய்க் கூறிய சங்கிலியனிடம்..
“ஐயோ! மாமா! கிழவன் பொண்ணு குடுக்க மாட்டேண்டு சொல்லி எஞ்சொந்தக்காரய்ங்க முன்னாடி அவமானப்படுத்துன ஆத்திரத்துலதேன் அன்னிக்கு அப்பிடிப் பேசிப்புட்டேன்! அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதீக” என அவசரமாய்க் கூறினான் மணிவண்ணன்.
“நீ அப்பிடிச் சொன்னதுல என்னத் தப்பிருக்கு மாப்ள?, ஊரே என்னையப் பொண்டுகனாத்தேன பார்க்குது?”
“ப்ச், மாமா”
“விடு மாப்ள! பள்ளியோடத்துக்குப் போற சிறுக்கி, ஆகாத வேலை பார்த்துட்டு வந்தா, ஒரு அப்பனா அவளை அடிச்சுக் கண்டிக்கிற உரிமை கூட எனக்கு இல்லாம போச்சு மாப்ள!, அவ காலை உடைச்சுக் கட்டையோட நடக்க வைக்குறதை விட்டுப்புட்டு, கண்ணீரைத் துடைச்சு விட்டு சமாதானம் பேசுனா, பெத்தவுக மேல எப்பிடிய்யா அவளுக்குப் பயம் வரும்?, இன்னிக்குக் கடுதாசியோட மாட்டுனவ, நாளைக்கு வயித்துல அவன் புள்ளையோட வந்து நிண்டாலும், பெருசு இப்பிடித்தேன் உட்கார வைச்சுப் பஞ்சாயத்துப் பேசுவாரா?” – என்று அவர் முடிப்பதற்குள் இடை புகுந்த மணிவண்ணன்,
“அப்பிடியொன்னு நடந்தா, எஞ்சாதிக்காரியைத் தொட்ட அந்த எச்ச நாய் தலையை வெட்டிப்புட்டு நான் ஜெயிலுக்குப் போவேன் மாமா!” என ஆவேசமாய்க் கூற..
பெருமையில் முகம் ஜொலிக்க அவன் தோளைத் தடவிய சங்கிலி,
“எனக்கு அப்பிடியே உங்கப்பனைப் பார்க்குற மாதிரி இருக்குப்பு! நீ சாதிமான்ய்யா! நம்ம சாதிக்காரய்ங்க மானம் காக்க வந்த குலசாமி!” என்று உணர்ச்சிவசப்பட்டதும் அவர் கையைப் பற்றியவன்,
“என்ன மாமா பெரிய,பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீக?” எனக் கேட்க, அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டவர், கண்ணீர் விட்டபடி,
“நாண்டுக்கிட்டு சாகலாம் போல இருக்கு மாப்ள! கள்ளுக்கடைல நான் எப்ப குறுக்கை சாய்ப்பேன்,எப்ப என் காலை அமுக்கி விட்டு ரெண்டணா சம்பாத்தியம் பார்க்கலாமுண்டு திரியுற நாதியத்த பயலுக மாப்ள அவிங்க!, அவிங்களோட எப்பிட்றா என்னால ஒன்னுமண்ணா பழக முடியும்?, ஊருக்குள்ள அவிங்க நிலைமை என்னாண்டு தெரிஞ்சும், எம்புட்டுத் துணிச்சல் இருந்திருந்தா, நான் பெத்தத் திருட்டு ******* இப்பிடியொரு காரியத்தைப் பண்ணியிருப்பா?, எல்லாம் தெரிஞ்சும்,அறிஞ்சும் ஒன்னுமே செய்ய முடியாம நிற்குறேனே மாப்ள! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு, என் வீட்ல இருக்கிறவன் ஒவ்வொருத்தன் தலையையும் கிள்ளி கொல்லைல புதைச்சுடனுமுண்டு தோணுது” என கோபத்தில் பிதுங்கிய விழிகளுடன் கூற.. அவரது முதுகை நீவிச் சமாதானப்படுத்தினான் மணிவண்ணன்.
“இவிங்க மெத்தப் படிச்ச மிதப்புல, பகுத்தறிவாளண்டு பேர் வைச்சுக்கிட்டு, நாங்க கால,காலமா கட்டுக்குலையாம காத்துட்டு வர்ற கட்டமைப்பை உடைச்சு எறிய வருவாய்ங்க! நாங்கக் கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்கனுமா?, சீர்திருத்த இங்க என்னாடா சிதறிக் கிடக்கு?, அவன்,அவன்,அது,அது இருக்க வேண்டிய இடத்துல தான இருக்கு?, வீட்டுச் செடிண்டு பேர் எடுத்ததைக் கொண்டு போய் காட்டுல நட்டு வைச்சுக் கௌரவப்படுத்தனுமுண்டு நினைக்குறதால என்ன பிரயோசனம்?, அது எம்புட்டுத் தூரம் வளரனுமுண்டு விதி எழுதி வைச்சவிங்க டா நாங்க! எங்க விதியை மீறி வளர, அதுக்குத் தகுதியோ,தகிரியமோ கிடையாது!” – வீராவேசமாய்ப் பேசுபவரைக் கண்டு உதடு வளைய பெருமிதமாய்ப் புன்னகைத்தான் அவன்.
“இன்னிக்கு நாம பொழைக்கிற பொழப்பு, நிற்குற இடம் அத்தனையும் பரம்பரை,பரம்பரையா நம்ம மூத்தகுடிக நாய்ப்பயக் கிட்டயும்,பேய்ப்பயக் கிட்டயும் அடி வாங்கி,மிதி வாங்கி சம்பாதிச்ச உரிமை டா! அதை அம்புட்டு சீக்கிரம் அடுத்தவனுக்கு விட்டுக்குடுத்துட முடியுமா?, நம்ம குலம் காக்கப் போராடுன சாதிமானுங்கக் கதையைக் கேட்டு வளர்ந்தவன் நானு! அவிங்களை சிலையா வடிச்சு வைச்சு வணங்குறவிங்க நாம! சாதிப்பேரைச் சொன்னாலே, கர்வத்துல நெஞ்சு விடைக்கனும்! பெருமைல மனசு பூரிக்கனும்! அதே நேரம், நம்ம சாதிக்குக் களங்கம் வருதுண்டா, மீசை துடிக்கனும்! ரத்தம் கொதிக்கனும்! தாய்ப்பாலோட சேர்த்து சாதிப்பெருமையையும் குடிச்சு வளர்ந்தவிங்க டா நாம! நம்மள மாத்த நினைக்குறது எம்புட்டுப் பெரிய முட்டாள்தனம்?”
கண்கள் சிவக்க,மூச்சு வாங்கப் பேசியவரை அமர வைத்துத் தண்ணீர் கொடுத்த மணிவண்ணன்,
“நான் இப்பயுஞ்சொல்றேன்! நம்ம புள்ள கஷ்ட,துக்கம் பார்க்காம வளர்ந்த கழுத! அகம்பிடிச்சச் சிறுக்கிக, தான் ஆசைப்பட்டது நிறைவேறிடமுண்டுதேன் நினைப்பாளுக! அவளுகளைச் சொல்லிக் குத்தமில்ல! நம்ம வளர்ப்பு அப்பிடி! ஆனா… நம்ம புள்ள நிமிர்ந்து பார்க்குற உசரத்துல அவன் நிற்கிறியான் பார்த்தீகளா?, அந்த இடம்…. அவன் நிற்குற இடந்தேன் மாமா தப்பு” என்றான்.
அவனை யோசனையாய்ப் பார்த்தவரிடம்..
“ஒரே உடுப்பைப் போட்டுக்கிட்டு, ஒரே படிப்பைப் படிக்கிறதால தான, நாம ரெண்டு பேரும் சமம்-ங்குற நினைப்பு வருது?, அந்தப் படிப்பறிவு, பகுத்தறிவைத் தூண்டி விட்டு அவனைப் படியேற வைக்குதுண்டா, அப்பிடிப்பட்டப் படிப்பை அவன் கிட்டயிருந்து பறிக்கிறதுதேன் மாமா, நம்மளோட வெற்றி!” – வெடித்துப் போயிருந்த வாயை வைத்துக் கொண்டு வானம் பார்த்தபடி வீர வசனம் பேசுபவனை அவர் உற்று நோக்க.. அவர் புறம் திரும்பியவன்,
“இவனுக்குப் பயந்துக்கிட்டு நம்ம புள்ள படிப்பைக் கெடுத்து வீட்டோட கட்டிப் போட்றதா?, தப்பு மாமா! நாம நடக்குற பாதைல பூனை குறுக்கால வருதுண்டா, அது நம்மளோட தப்பில்ல! பூனையோட தப்பு! ஐயோ பூனை வந்துடுச்சேண்டு சகுனம் பார்த்து அஞ்சு நிமிஷம் நிண்டு, அரை சொம்புத் தண்ணீ குடிக்கிறதெல்லாம் முட்டாளுங்க செய்யுற வேலை! குறுக்க வர்றதை மிதிச்சு,நசுக்கி பூனைகளே இல்லாத பாதையை உருவாக்குறதுதேன் மாமா புத்திசாலித்தனம்” என்றான்.
“என்னா சொல்ற மாப்ள?”
“அந்த அழகரு இனி பள்ளியோடத்துப்படி ஏறக்கூடாது மாமா!, மேல்சாதிக்காரய்ங்க கண்ணு பட்டா, இனி வாழ்க்கை அதோகதிதேங்குற உண்மை அவிங்களுக்குப் புரியனும்! நாம புரிய வைக்கனும்! அவன் தலையை சீவ, ஒரு நிமிசம் ஆகாது மாமா! ஆனா.. எந்த வலியையும் அனுபவிக்காம அவன் உசுரு பொட்டு-ண்டு போறதால நமக்கென்ன லாபம்? அவனைக் கண்ணிருந்தும் குருடனா, வாயிருந்தும் ஊமையா, காலிருந்தும் முடமா மாத்திக் காட்டனும் மாமா! அப்பத்தேன் அவிங்களுக்கு நம்மண்டா பயம் வரும்! காலுக்கடில கிடக்குற செருப்போட வேலையே,நம்மட்ட மிதிபட்றதுதேன் மாமா! அவிங்க எப்பவும் நமக்கு செருப்பாத்தேன் இருக்கனும்”
தீவிரமான குரலில் பேசுபவனைப் பெருமிதத்துடன் நோக்கியவரிடம்..
“அவன் வகுப்புலயே இவன்தேன் முதல் மார்க் எடுக்கிறவனாம்ல! இவன் பாட்டுக்க, நல்லாப் படிச்சு,நல்ல வேலையைத் தேடிக்கிட்டு முன்னேறி வந்துட்டியாண்டு வைங்க, பட்டாளத்துக்காரரே அவன் வீடு தேடிப் போய் உம்ம மவளுக்கும்,அவனுக்கும் கல்யாணம் கட்டி வைச்சாக் கூட ஆச்சரியப்பட்றதுக்கில்ல” – என்று அவன் கூறியதும் முகத்தை சுழித்த மனிதர்,
“அப்பிடி சொல்லாத மாப்ள. கேட்கவே நாராசமா இருக்கு” – என்றார்.
“அன்னிக்கு உம்ம மச்சான் இழுத்துட்டு வந்த சிறுக்கியை சும்மா விட்டதாலதேன், இன்னிக்கு உம்ம மவ மாறி ஆளுகளுக்குக் கொம்பு முளைச்சு நிற்குது! கால் நூற்றாண்டுக்கொரு தடவை, கிழவன் வளர்ப்பு, கழுதை மேய்க்கப் போயிருதே மாமா?, ஆனா, இந்த முறை அப்பிடி நடக்காது! நடக்கவும் விட மாட்டேன்”
“நடக்கவும் கூடாது மாப்ள! அன்னிக்கு ஊர்ப்பயலுகளைத் தந்திரமா சமாளிச்சு மவனைக் காப்பாத்திக்கிட்ட கிழவன், இந்த முறை ஜெயிக்கக் கூடாது மாப்ள! அந்தாளு மானம்,மருவாதையை இழந்து நடுவீதில ஊர்க்காரய்ங்க முன்னாடித் தலை குனிஞ்சு நிக்கனும்! தான் நினைக்கிறது,செய்றது அத்தனையும் சரிண்டு இறுமாப்புல திரியுற மனுசனை நிலைகுலைய வைக்கனும்! பெருசா செய்யனும்ய்யா! அந்தாளைத் தடுமாற வைச்சே ஆகனும். இது அத்தனையையும் நீ நிறைவேத்திக் குடு மாப்ள! எம் மவ கைய,காலைக் கட்டியாவது, உன் கூட மணமேடைல உட்கார வைக்குறேன்” – பழிவாங்கத் துடிக்கும் மீசை அதிர, கருத்துச் சிறுத்திருந்த முகத்தை மேலும் சுருக்கியபடி வஞ்சத்துடன் கூறியவரைக் கண்ட மணிவண்ணன், விழிகள் பளிச்சிட,
“உடனே காரியத்துல இறங்குறேன் மாமா” என்றான்.
அதன் விளைவாக மறுநாள் பட்டாளத்துக்காரரின் வீட்டின் முன்பு மணிவண்ணனால் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது.
வற்றல் போடுவதற்காகத் தட்டு நிறைய சீனிஅவரைக்காய்களைப் பரப்பியபடிக் கொல்லையில் நின்றிருந்த மீனாட்சி, அதை ஓட்டின் மீது காய வைத்து விட்டுக் குனிந்த போது, ஊர்க்காரர்களைத் திரட்டிக் கொண்டுத் தன் வீட்டு வாசலை நோக்கி நடந்து வரும் மணிவண்ணனைக் கண்டார்.
“இந்தக் களவாணிப்பய என்னத்துக்கு காலங்கார்த்தால இம்புட்டு சனத்தை திரட்டிக்கிட்டு வர்றியான்! அன்னிக்கு வாங்குனது பத்தலண்டு, இன்னிக்கு ஏழரையைக் கூட்ட வர்றியான் போல! பொறுக்கி நாயி” – என முணுமுணுத்து விட்டு, விரைந்து சென்று ஆரணனையும்,விருமனையும் அழைத்து வந்தார்.
வெளிவாசலில் கேட்ட சலசலப்பைத் தொடர்ந்து ஒட்டு மொத்தக் குடும்பமும் குழப்பமும்,யோசனையுமாய்த் திண்ணையருகே நிற்க, கூர்மையாய்க் கூட்டத்தை அளவிட்டுக் கொண்டிருக்கும் அகலருவியையும், பீதிப்பார்வையுடன் நிற்கும் புவியரசியையும் ஒரு முறைப்புடன் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தங்கைகளை மறைத்தவாறு நின்றான் சிலம்பன்.
குடும்பத்தினரைத் தொடர்ந்து வழக்கம் போல், தனது பேராண்டிகள் இருவர் புடை சூழ வாசல்படி இறங்கி வந்தார் பெரியவர்.
ஆரன் மற்றும் விருமனின் விழிகள் வருகை தந்திருப்பவர்களின் முகங்களை ஆராய, புன்னகையை உதட்டில் தவழ விட்டுக் கூட்டத்தை நோக்கி வணக்கம் வைத்து வரவேற்ற கிழவர், தன் பேரனின் புறம் திரும்பி,
“எலேய் விருமா, பெரியவகலாம் வந்திருக்காக! அந்த நாற்காலியை எடுத்துப் போட்றா” எனக் கூற,
விருமன் விரைந்து சென்று சிலம்பனின் துணையுடன் சில,பல நாற்காலிகளை எடுத்து வந்து போடவும், பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவருடன் வரிசையாக அமர்ந்த இன்னபிற தலைகள், விருமனிடம்,
“தம்பி, பெரியவருக்கும் நாற்காலி போடுப்பா” என்றனர்.
“தேவையில்லங்கய்யா! இன்னிக்கு என் வீட்ல கல்யாணமும் கிடையாது, கருமாதியும் கிடையாது, ஆனாலும் இம்புட்டு சனம் திரண்டு வந்திருக்கீக! பஞ்சாயத்துப் பேசத்தேன் கூடியிருக்கீகன்றது, உங்களை வழி நடத்திட்டு வந்த வெங்காயத்தைப் பார்த்தாலே தெரியுது! குற்றம் சுமத்தப்பட்டவன் என்னத்துக்கு குறுக்கை சாய்ச்சுக்கிட்டு?, அதுமட்டுமில்லாம, போன வாரம் வரை இழுத்துக்கிட்டுக் கிடந்தவனே இரும்பு மாறி நிற்கையில, பட்டாளத்துக்காரன் நானு! என்னால நிற்க முடியாதா என்ன?” - எடுத்ததும் எட்டுக்கட்டையில் பாடத் துவங்கி விட்டப் பெருசைக் கண்டு அகலருவி ‘களுக்’என சிரிக்க, ஒட்டுமொத்தக் கூட்டமும் திரும்பித் திண்ணையை நோக்கியது.
பல்லைக்கடித்தபடிக் கொதித்துப் போய் நின்ற மணிவண்ணன், வன்மத்துடன் அகலருவியை முறைத்துப் பார்க்க, அவன் பார்வையைக் கண்டு அனிச்சையாய் அவள் புறம் திரும்பிய ஆரன்,
காட்டுராஜாவாய்த் திகழும் கிழவனின் பின்னே, வேட்டைப்புலியாய் நின்றத் தன் மாமன் மகன்களைத் தொடர்ந்து, அரணாய்த் தன்னைக் காத்து நிற்கும் தன் அண்ணனின் முதுகருகேத் தனது வீட்டில், தான் பயின்ற ஆண் இலக்கணங்களுக்கு மத்தியிலிருக்கும் பாதுகாப்புணர்வு கொடுத்தத் திமிரில், ‘போடா எச்ச’ என்ற ரீதியில் கர்வமாய் மணிவண்ணனின் முறைப்பிற்குப் பதில் பார்வை கொடுப்பவளைக் கண்டு புன்னகையில் உதடு நெளிய நின்றான்.
“பட்டாளத்துக்காரரோட நாக்கு நீளத்தை அளக்க அளவுகோலே இல்ல” – கூட்டத்தில் ஒருவன் கூற,
“இல்லண்டா, அஞ்சு ரூவா கொடுத்து நீ ஒன்னை வாங்கிட்டு வா” – எனக் கிழவர் அதற்கும் நக்கலடித்ததும் கூட்டம் சிரிப்பும்,புகைச்சலுமாய் நின்றது.
என்ன தான் மணிவண்ணனின் பேச்சைக் கேட்டுத் திரண்டு வந்திருந்தாலும், ஊரின் பெரும்பணக்காரர், மதிப்பும்,மரியாதையும் மிக்கப் பெரியவர், தாங்கள் சொல்லியும் அமராமல் நிற்பதைக் கண்டு சங்கடம் எழ, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டப் பஞ்சாயத்துத் தலைகள்,
“ஐயா… நீங்க பெரிய மனுசன்! சனங்க மத்தியில நல்ல பேரு உள்ள ஆளு” எனத் தொடங்குகையில் இடை புகுந்த கிழவர்,
“காசு வைச்சிருக்கிறவன்! அதையும் சேர்த்துச் சொல்லுங்க” எனக் கூறியதும், ஒரு நொடி மௌனமானவர்கள் பின் தொண்டையைச் செறுமிக் கொண்டு,
“இல்ல, பெரிய மனுசன் நீங்க, உங்களைப் பஞ்சாயத்து வரை இழுக்க வேணாமேண்டுதேன் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கலாமுண்டு உங்க வீட்டுக்கேத் தேடி வந்துட்டோமுங்க” என்றனர்.
“சரி பேசுங்க”
“பிரச்சனை என்னாண்டு பிராது குடுத்தவரே சொல்வாருங்க” – எனக் கூறி நைசாகக் கழண்டு கொண்டவர், திரும்பி மணிவண்ணனைப் பார்த்ததும், கூட்டத்தின் பின்னிருந்து சங்கிலியன் முன்னே வந்து நின்றார்.
கிழவரின் முகத்தையும், தன் குடும்பத்தாரையும் ஏறிட்டும் பாராமல், கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு தூண் போல நிற்பவரைக் கண்டு, ஆரனும்,விருமனும் பல்லைக் கடித்தனர்.
“இவன் இன்னும் என்னாடி செய்யக் காத்திருக்கியான்?, கிழவன் கிட்ட செருப்படி வாங்கியும் திருந்தாம, இப்பிடிப் பஞ்சாயத்தைக் கூட்டிட்டு வந்து நிற்குறானே! ஒரு வார்த்தை நம்மக்கிட்ட சொல்றியானா பாரு! ஏன் டி, நீயெல்லாம் என்னாடி பொம்பள?, புருசன் என்னா பண்றியான், ஏது பண்றியாண்டு கூடவா தெரியாது உனக்கு?, எடுத்துச் சொல்லி பிடிச்சு வைக்க வேணாம்?” – சோலையம்மாள், வீரலட்சுமியிடம் முணுமுணுக்க..
“எடுத்துச் சொன்னா, எலும்பை எண்ணிடுவாரு! பரவாயில்லயா?, கறித்தண்ணீயோட சேர்த்து கள்ளை ஊத்திக் கொடுத்து அந்தாளை சூனியம் பிடிச்சவனா மாத்துனதே இவதேன்! பெருசா பேச வந்துட்டா! கிழட்டுச் சிறுக்கி!” – என வீரலட்சுமியும் பதிலுக்கு எகிற..
“ப்ச்” என இருவரையும் திரும்பிப் பார்த்த சிலம்பன் “முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டனும் போலயே! வாயை மூட மாட்டீகளா?” என்று திட்டியதும், முணுமுணுத்தபடி மௌனமாகினர் இருவரும்.
சங்கிலியனைக் கண்டதும், புருவம் உயர்த்தி,உதடு வளையப் புன்னகைத்தப் பெருசு,
“வீட்டுக்குள்ள இருந்து வர வேண்டியவன், என்னத்துக்குடா கூட்டத்துக்குள்ள இருந்து வர்றியான்?, ஏன் டா, இம்புட்டுப் பேர் இருக்கையில யாருக்குப் பயந்துக்கிட்டு டா இன்னவரைக்கும் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு நின்ன நீயி?” எனக் கேட்டதும், ரோஷம் பொங்க அவரை நிமிர்ந்து பார்த்த சங்கிலி,
“நான் என்ன மயித்துக்கு யாருக்கும் பயப்படனும்?” – என்று சீற,
“பின்ன என்னத்துக்கு டா பின்னாடியிருந்து வர்றவன்?, நீதேன் பிராது குடுத்தண்டு தெரிஞ்சதும்,அதிர்ச்சில என் மூஞ்சி போற போக்கைப் பார்க்கலாம்ண்டா?, ஏன் டா, அரையணாக் காசுக்காக, எம் பின்னாடி அரைடவுசரோட, மூக்கு ஒழுக, அழுதுகிட்டு சுத்துன பய நீயி! உன்னையப் பார்த்து எனக்கு அதிர்ச்சி மயிறு வேற வரனுமா?” – எனக் கிழவர் ‘பொடிப்பயலுகளைக் கூட்டிக்கிட்டுப் பஞ்சாயத்து பண்ண வந்துட்டாய்ங்க சல்லிக்****’ – ரீதியில் சங்கிலியையும்,கூடியிருந்த பெரிய தலைகளையும் மறைமுகமாக நக்கலடிக்க, கூட்டம் சிரிப்பை அடக்குவதை உணர்ந்து, முஷ்டியை இறுக்கிய சங்கிலியைக் கண்டு, மணிவண்ணன்,
“ஐயா, இப்ப நாம பிரச்சனை என்னாண்டு பேசித் தீர்க்க வந்திருக்கோமா, இல்ல, இவரு சவடால் பேசுறதை வாய் பார்க்க வந்திருக்கோமா?” எனப் பஞ்சாயத்துத்தலைகளை நோக்கிக் கோபமாய் வினவியதும், தொண்டையைச் செறுமிக் கொண்டவர்கள்,
“பெரியவரே! கொஞ்சம் அமைதியா இருங்க! ஏப்பா சங்கிலி, நீ பேசுப்பா” என்றனர்.
“ஐயா, என்னதேன் சண்டையும்,சச்சரவுமா எந்நேரமும் இவரு கூட மல்லுக்கு நிண்டாலும், அப்பன் இல்லாத அநாதப்பயலான என்னைய வளர்த்து ஆளாக்குன என் தாய்மாமனான இவரு மேல, எனக்கு அன்பும்,பாசமும் அதிகம்ங்க”
சங்கிலியன் திடீரென அந்தர்பல்டி அடித்து பவ்யமாய்ப் பேசுவதைக் கண்டு, அவரது பேச்சு போகும் போக்கைக் கணிக்க முயன்றபடி அமைதியாய் நின்றார் கிழவர்.
“நம்ம தலைமுறைதேன் படிக்காத தர்குறிகளா போயிடுச்சு, நம்ம புள்ளையளாவது நாலு எழுத்துப் படிச்சு உலகத்தைத் தெரிஞ்சுக்கட்டும்-ங்குற நல்ல எண்ணத்துலதேனங்க அதுகளை படிக்க வைக்குறோம்?, பெத்தவகளால எல்லா நேரமும் பிள்ளைக பின்னாடியே காவகாத்துக்கிட்டுத் திரிய முடியுமா? புள்ளைக படிக்க மட்டும்தேன் பள்ளியோடத்துப் படியேறுதுக-ன்ற நம்பிக்கையோடத் தானங்க அனுப்புறோம்?, அப்பேர்ப்பட்ட நம்பிக்கைல மண்ணை வாரிப் போட்டுத் தப்பு செஞ்சுட்டு வந்து நிற்குற கழுதைக மேலக் கோபம் வர்றதுலயும், ஒரு பெத்தவனா அந்தப் புள்ளைகளை நாம திட்டி,அடிச்சுக் கண்டிக்கிறதுலயும் என்னங்க தப்பிருக்கு?, உங்க வீட்டுப் புள்ள இதே தப்பை செஞ்சுட்டு வந்தா, நீங்க சும்மாயிருப்பீகளா? இல்ல, அவளைத் தப்பு செய்யத் தூண்டுனவனைத்தேன் சும்மா விட்ருவீகளா?”
“ஆனா நான், இவரு பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து, எம்மவளைத் தப்பு செய்யத் தூண்டுனவன் மேல, ஒரு அப்பனா, கொலைவெறியே இருந்தும் கூட, அவனை எந்த வகையிலும் சீண்டாம, சின்னப்பயலாச்சே! வயசு வேகத்துல விவரம் புரியாமத் தப்பு பண்ணிட்டியாண்டு நினைச்சு, அவனுக்கு எந்தத் தண்டனையும் குடுக்காம, இன்னைக்கு வரைக்கும் சும்மா விட்டு வைச்சு, மனுசத்தன்மையோடக் கண்ணியமாத் தான்ங்க நடந்துக்கிட்டேன்!”
-கண்களில் கண்ணீர் வழிய சங்கிலியன் உணர்ச்சி ததும்பும் குரலில் பேசுவதைக் கேட்டக் கூட்டத்தினர் ‘இவஞ்சொல்றதும் நியாயம்தேன?, பெத்த வயிறு பத்தி எரியத் தான செய்யும்?’ என்று முணுமுணுப்பதைக் கண்டு கடுப்பான கிழவர்,
“என்னா சொல்ல வாரங்குறதை நேராச் சொல்றா வெண்ண! புதைச்சுப் பதினைஞ்சு நாளான பொணத்தைத் தோண்டி எடுத்து வைச்சு, நாறுதா,மணக்குதாண்டு மோப்பம் புடிச்சுக்கிட்டுத் திரிறியான்! பீக்காளிப்பய” எனச் சத்தமிட,
“அவன் சொல்றதுல என்ன தப்பிருக்குப் பெரியவரே?, ஒரு பெத்தவனா, புள்ள செஞ்ச தப்பை நினைச்சு வருத்தப்படுறது நியாயம் தான?” – என்றனர் பெருந்தலைகள்.
“சம்பவம் நடந்து பல நாளாச்சு! இப்ப என்னத்துக்குய்யா புதுசா வருத்தப்பட்றியான்??, அப்பிடியே வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் வீட்டோட வைச்சுக்கனும்! காதும்,காதுமா பேச வேண்டிய விசயத்தை, ஊரைக் கூட்டி வைச்சுத் தண்டோராப் போட்டு புள்ளையை அசிங்கப்படுத்திக்கிட்டுத் திரியுறியான் சல்லிக் ***! இவன்லாம் அப்பனாக்கும்?, எலேய்! உன் நடிப்பையெல்லாம், உம் பின்னால நிற்குற பரதேசிப்பயட்ட வைச்சுக்க டா! நீ போட்ற நாடகத்தைப் பார்க்கத்தேன், அரைகுறையாக் கஞ்சியக் குடிச்சுப்புட்டு நான் அவதி,அவதியா வாசலுக்கு ஓடி வந்தேனாக்கும்?”
-விசயம் தன்னைப் பற்றியது என்றறிந்ததும் அவமானத்தில் குனிந்தத் தலையுடன் பயந்து,ஒடுங்கிப் போய் தூண் மறைவில் நின்ற புவியரசியைக் கண்டதும் கோபம் பெருக,சங்கிலியனோடு சேர்த்துத் தன்னையும் வெளுத்து வாங்கிய பெரியவரிடம், மணிவண்ணன் பல்லைக்கடித்தபடி,
“பட்டாளத்துக்காரரே! யாரைப் பரதேசிப்பயங்குறீக?, நான் என்ன கஞ்சிக்கு வக்கில்லாமலா காலங்கார்த்தால இங்கன வந்து கிடக்குறேன்?, இம்புட்டுப் பேரு வேலை,வெட்டியையெல்லாம் விட்டுப்புட்டு கால்கடுக்க உம்ம வீட்டு முன்னாடி நிற்குறது, உம்ம மாமன்-மருமவன் சண்டையை வேடிக்கைப் பார்க்கவோ, இல்ல உம்ம பேத்தி செஞ்ச சரசத்துக்கு விளக்கவுரை எழுதவோ இல்ல!” எனச் சீற..
“அப்பிடி என்னத்துக்கு டா கால் கடுக்க நிற்கனும்?, இளவட்டக்கல்லைத் தூக்க வேண்டிய வயசுல, கால் மணி நேரம் நின்டதுக்கேக் கால் கடுக்குதுண்டு கண்ணீர் விட்றியான் சோப்லாங்கிப்பய! எலேய்! உசுரோட ஒத்துழைக்காத மானங்கெட்ட உடம்பை என்னத்துக்குடா இழுத்துப் பிடிச்சு வைச்சுக்கிட்டுத் திரியுற?, பேசாம, நீயே போய் அதைக் கண்ணியமா கல்லறைல அடக்கம் பண்ணிரு!” எனக் கிழவர் வார்த்தைக்கு வார்த்தை வாயாடுவதைக் கண்டு.. உதட்டை ஈரப்படுத்தியவன்,
“ஐயா.. விடியும் முன்ன, குடும்பத்தோட வீதில நிக்க வைச்சுட்டோமுண்டுக் கிழவனுக்குப் புகைச்சல்! அதேன், நம்ம வாயை அடைச்சு, வந்த வழிலயேத் திருப்பி அனுப்ப, வசதி பண்ணிட்டிருக்காப்ல!” எனக் கிழவரை ஓரக்கண்ணால் பார்த்தபடி பஞ்சாயத்துத் தலைகளிடம் கூற..
“எலேய்! மரியாதையில்லாம பேசுனண்டா, ஏற்கனவே நெளிஞ்சு போய் இருக்கிற நெத்தியை, மொத்தமாப் பொளந்து விட்ருவேன் சொல்லிப்புட்டேன்!” என்று விருமன் எகிறியதும்..
“அட இருப்பா தம்பி! நீங்களே அடிச்சிக்கிறதா இருந்தா, பஞ்சாயத்துத் தலைவன்-ண்டு எங்களுக்கு என்னத்துக்குப் பதவி கொடுத்திருக்காய்ங்க?, பொறுமையா இருங்கப்பா! பேச வேண்டியதை மட்டும் பேசுங்க! அநாவசிய வாய்த்தகராறெல்லாம் வேண்டாம்” என்ற பெரிய தலை ஒன்று,
“பட்டாளத்துக்காரரே! சுத்துப்பட்டில இருக்கிற 18 ஊரும் கிராமப் பஞ்சாயத்துப் போர்டுக்கு கட்டுப்பட்டதுதேங்கிறது நீங்க அறியாத விசயம் கிடையாது! இத்தனை வருசமா, இங்கன நடக்குற அத்தனை பிரச்சனையும் கிராமப் பஞ்சாயத்தைத் தாண்டிதேன் போலீசு,கோர்ட்,கேசுண்டு போயிருக்கு! ஆனா, இந்த முறை உம்ம பேத்தி விசயத்துல நீரு பஞ்சாயத்து ஆட்களோடக் கலந்தாலோசிக்காம, நேரா போலீசை இழுத்துட்டு வந்ததுல, எங்க எல்லாருக்கும் வருத்தம்தேன்! பெரிய மனுஷன் நீங்க, உங்களை எதிர்த்து பேச விரும்பாததாலயும், பிரச்சனை சுமூகமா முடிஞ்சுட்டதாலயும், நாங்க தலையிடாம ஒதுங்கியிருந்தோம்! ஆனா.. நீங்க முடிக்க நினைச்ச விசயம் பல பிரச்சனைகளுக்குத் தொடக்கமா அமைஞ்சிட்டதால,இப்ப நாங்க உள்ள வர வேண்டிய சூழ்நிலை வந்துருச்சு” என்றனர்.
“என்னா சொல்றீங்க?”
“போனவாரம் ஞாயித்துக்கிழமை புரோட்டாக்கடைல உட்கார்ந்திருந்த நம்மபய கரிகாலன், கோழித்துண்டு ஒன்னை கூடுதலாக் கேட்டதுக்கு, அங்க சால்னா ஊத்துற கீழ்சாதிக்காரப்பய ஒருத்தன், குடுக்க முடியாதுண்டு அவன் கூடப் பிரச்சனை பண்ணியிருக்கியான்! இவன் உடனே கடுப்புல குரலை உசத்துனதும், போலீசைக் கூப்பிடவாடாண்டு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டுத் தகிரியமா கரிகாலனையே மிரட்டியிருக்கியான்!” – என ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல பேசிய தலையைக் கண்டு எரிச்சல் வர,
“கோழி65 போதாதுண்டு 66-வதா ஒன்னைக் கேட்ருப்பியான் அவன்! இதெல்லாம் ஒரு பிரச்சனையாங்கய்யா?, அவகப்பன் கோழிப் பண்ணையே வைச்சிருக்கியான்! இந்தப் பிச்சைக்காரப்பய, ஒத்தத் துண்டுக்காகச் சண்டைக்கு போயிருக்கியான் பாருங்க! இந்த சில்றத்தனமான பிரச்சனைக்குப் பஞ்சாயத்துக் கூட்டத்தேன் நீங்க வெள்ளை வேட்டி சட்டையைப் போட்டுக்கிட்டு வீட்ல இருந்து புறப்பட்டு வந்தீகளா?” – என்றார் கிழவர்.
“என்னைய முழுசாப் பேச விடுங்க பட்டாளத்துக்காரரே”
“சரி பேசுங்க”
“பிரச்சனை புரோட்டக்கடைல மட்டும் நடக்கல! முந்தா நாளு காட்டுப்பாதைல நடந்து போயிட்டிருந்த உம்ம மருமவன், பாதைல குறுக்க வந்த ஆட்டை விரட்டுனதுக்கு, ஆடு மேய்க்கிறப் பரதேசிப்பய ஒருத்தன், ‘ஆட்டை அடக்கத் தெரிஞ்சவனுக்கு, பெத்தப் புள்ளய அடக்கத் தெரியலயாண்டு’ அவரை அசிங்கமா பேசியிருக்கியான்! கோவத்துல உம்ம மருமவன் அவன் வாயை உடைக்கப் போய் பெரிய கைக்கலப்பாகிப் போச்சு” – எனத் தலை தொடங்கியதைத் தொடர்ந்த சங்கிலியன்..
“அவன் மட்டுமா பேசுறியான்?, கள்ளுக்கடைல இருந்து, கரும்புத்தோட்டம் வரை அவிங்க சாதிக்காரப்பயலுக பூராப் பேரும், நம்மாளுங்களை நக்கலடிச்சுட்டுத்தேன் திரியுறாய்ங்க! நமக்குப் பயந்து முதுகுக்குப் பின்னாடி முனகிட்டு இருந்த பயலுகலாம், இப்ப மூஞ்சி முன்னாடியே மூர்க்கமாப் பேசுறாய்ங்க!”-என்று சொல்ல, காதைச் சொரிந்த கிழவர், தலைகளிடம்..
“எம்மருமவன் பேசுறதையெல்லாம் கணக்குல எடுத்துக்க முடியாதுங்கய்யா!ஏன்னா, அந்தச்சின்னப்பய சும்மா ஏப்பம் விட்டுட்டுப் போயிருந்தாக் கூட, அவனைப் புடிச்சு வைச்சு ‘எம்புட்டு ஏத்தமிருந்தா எம்முன்னாடி ஏப்பம் விடுவடா பரதேசி நாயே-ண்டு இவன்தேன் சண்டைக்குப் போயிருப்பியான்! அதனால இவஞ்சொல்றதையெல்லாம் உண்மைண்டு நம்பாதீக” – என்றார்.
தான் நாக்கு வரளப் பேசியும் கூடக் கிழவர் இன்னும் நக்கல் தொனியிலேயே பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பல்லைக்கடித்தப் பஞ்சாயத்துத்தலையொன்று, “பட்டாளத்துக்காரரே! இன்னும் உங்களுக்குப் பிரச்சனை என்னாண்டு புரியலயா, இல்ல புரியாத மாறி நடிக்குறீகளா?” – என்று கேட்டதும், மணிவண்ணன்,
“பகுத்தறிவாளருக்கு இன்னுமா புரியாம இருக்கும்! அவரு, சீர்திருத்தவாதியாச்சே! அதேன், நாம சொன்ன விசயங்களை சீர் தூக்கிப் பார்த்து சீக்கிரமே முடிவுக்கு வருவாரு” என்றான்.
அவன் மேலும் பேசும் முன் இடை புகுந்தத் தலைவர், “உம்ம பேத்தி பிரச்சனைல நீரு அவிங்களுக்கு ஆதரவா நடந்துக்கிட்டதாலதேன், அவிங்க நம்ம சாதிக்காரய்ங்களை மதிக்கிறதில்லண்டு ஊருக்குள்ள ஒரு பேச்சு உலவுது பட்டாளத்துக்காரரே”
“நான் எவனுக்கும் சொம்பு தூக்குற ஆளு கிடையாது! அன்னிக்கு என் மனசுல நிண்டதெல்லாம் தப்பே செய்யாத அந்தப்பய எதிர்காலமும், விளையாட்டுப் போக்குல விளைவுகளை யோசிக்காம விவகாரம் பண்ணிப்புட்ட எம் பேத்தியோட எதிர்காலமும் மட்டும்தேன்!”
“ஆனா ஊரு அப்பிடி நினைக்கல பட்டாளத்துக்காரரே”
“சரி, அதனால இப்ப என்னா செய்யனும்ங்குறீக?” – கிழவர் எரிச்சலாகக் கேட்டதும் தொண்டையைச் செறுமிய மணிவண்ணன்,
“வெவரம் புரியாத சின்னப்புள்ளைக, தெரியாம தப்புப் பண்ணிடுச்சிடுங்கண்டு, அன்னிக்கு சமரசம் பேசி, ரெண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி நிலைமையை சுமூகமா முடிச்சு, அந்தப்பய மறுபடி பள்ளியோடத்துக்குப் போற வரைக்கும், போலீசு மூலமா அவனை அடைகாக்கத் தெரிஞ்ச மனுசனுக்கு, தன் பேத்தி படிப்பு மேல அக்கறை இல்லாம போனதுதேன் வருத்தமான விசயம்” எனத் தொடங்கினான்.
“அந்தப் புள்ளைக்கு படிப்பு தேவையில்லண்டு முடிவு பண்ணதே உன் தொடுப்புதேன்டா வென்று” – எகிறியபடி விருமன்.
“ஆமா! புள்ளையப் பெத்த அப்பனுக்கு இருக்கிற நியாயமான பயத்தால படிப்பை நிறுத்திப் போட்டாரு!அதுல என்ன தப்பிருக்கு?, ஐயா, நீங்க சொல்லுங்க! படிக்கப் போறேண்டு, உங்க வீட்டுப் புள்ளைக இப்புடி விவகாரம் பண்ணிட்டு வந்து நிண்டா, மறுபடி அதுகளை வீட்டுப்படி தாண்ட அனுமதிப்பீகளா நீங்க? ஏற்கனவே மானம், வானம் வரை ஏறி, மனுசனை வீதில நிற்க வைச்சிருச்சு! அவரு எப்பிடிய்யா இனி அந்தப்புள்ளய நம்பி பள்ளியோடத்துக்கு அனுப்புவாரு?, இன்னிக்குத் தாந்தோன்றித்தனமா நடந்துக்கிட்டுப் பெத்தவகளைத் தலை குனிய வைச்சக் கழுத, நாளைக்கு அவன் கூடச் சேர்ந்து இதை விடப் பெரிய தப்பா செஞ்சுட்டு வந்து, மொத்தமா அவுகளை தலை சரிய வைக்காதுண்டு என்ன நிச்சயம்?”
“அப்புறம் என்ன, உன் நியாயப்படி புள்ள படிக்காம, படிதாண்டாம வீட்டுக்குள்ளயே தான கிடக்குது? பேச்சை விடு” – கடுத்த குரலில் விருமன்.
“அதெப்பிடி?, தப்பு செய்யத் தூண்டுனவன், சுதந்திரமா பள்ளியோடத்துக்குப் போய்,வருவியான். நம்ம புள்ள மட்டும், மோட்டுவளையை வெறிச்சுக்கிட்டு மொட்டு,மொட்டுண்டு வீட்ல உட்கார்ந்து கிடக்கனுமா?”
“அதனால?” – கிழவர்.
“நம்ம புள்ளயால பள்ளியோடத்துப் படியேற முடியாதுண்டா, அவனும் ஏறக் கூடாது.”
சட்டமாய் அவன் கூறியதும், அவனது நோக்கம் புரிந்து விட, அதுவரையிருந்த அசட்டை மனநிலை மாறி, கொதிப்புடன் அவனை வெறித்தார் பெரியவர்.
“இந்தத் **** பயலுக கால,காலமா நம்ம புள்ளைகளையும்,பயல்களையும் வளைச்சுப் போட்டு, நம்ம கூட வம்பு வளர்க்குறதையே பொழப்பா வைச்சிருப்பாய்ங்க! நாம, இவிங்களுக்குப் பயந்து, அடங்கி, நம்ம புள்ளய வீட்ல பூட்டி வைச்சு அடை காக்கனுமா?”
“இப்ப உன் பிரச்சனை, புள்ள படிப்பு தடைபட்டதா, இல்ல, அவன் படிப்பைத் தொடர்றதா?” – பட்டாளத்துக்காரர் பாய்ண்ட்டைப் பிடித்ததும், கழுத்தைத் தேய்த்துக் கொண்டவன், பெரியவரை நோக்காமல், தலைகளிடம் திரும்பி,
“ஐயா.. நம்ம நடக்குற பாதைல முள் இருந்தா நீங்க என்னாய்யா செய்வீங்க?, ஒன்னு, நம்மளும்,நமக்குப் பின்னால வர்றவிங்களும் பாதையைப் பிரச்சனை இல்லாம உபயோகிக்க, அந்த முள்ளைக் கிள்ளி களை எடுத்துப்புட்டுக் கம்பீரமா நடந்து போகனும்! இல்ல, அது கால்ல குத்தி, நமக்கு சேதாரத்தை உண்டு பண்ணிருமோண்டு பயமிருந்தா, பொத்திக்கிட்டு ஒதுங்கிப் போயிரனும்! ஆனா, ஒத்த முள்ளுக்குப் பயந்து ஒதுங்கிப் போகத் தொடங்குனோமுண்டு வைங்க, நாளைக்கு அது பெரிய முள்ளுச் செடியா வளர்ந்து, பாதையை மறிச்சு நிண்டு, நமக்கும்,நம்ம பின்னால வர்றவிங்களுக்கும் தடையா மாறி, நம்மள முன்ன நடக்க விடாம, ஒரே இடத்துல நிற்க வைச்சுடும்!” என்றவன் பட்டாளத்தானை ஒரு பார்வை பார்த்து..
“நான் களை எடுக்கனுமுங்குறேன்! கிழவன் ஒதுங்கித்தேன் போகனுமுண்டு நிற்குறாப்ல! என்ன பண்ணனுமுண்டு பெரியவக நீங்களே சொல்லுங்க” என்றான்.
“பாதைல இருக்கிற சாதுவானச் செடியை, அதோட வளர்ச்சி பொறுக்காம, முள்ளுண்டு உருவகப்படுத்தி, அதைப் பிடுங்கி எறியத் துடிக்கிறவன் பேச்சை ஆதரிக்கறதெல்லாம் கையாலாகாதத்தனம்! நீ சரியான ஆம்பளையா இருந்தா, அது சரிக்கு சரியா உன் அளவுக்கு வளர்ந்து நிண்டப்புறம் மோதனும்டா! பிஞ்சுச் செடி கிட்ட உன் வீரத்தைக் காட்டிப் பீக்காளித்தனம் பண்ணப் பார்க்குற?” – பெரியவர்.
“அவிங்களை வளர விட்டா, நாம அழிஞ்சு போவோம்! பரவாயில்லயா?, இனி தப்பே பண்ணாலும் பட்டாளத்துக்காரரு செஞ்சு கொடுக்குற போலீசு பாதுகாப்புல எந்த சேதாரமுமில்லாம தப்பிச்சுக்கிடலாமுங்குற தகிரியத்துல அவிங்க நம்ம சாதிக்காரய்ங்களை மதிக்காம, போற இடத்துலலாம் சலம்பல் பண்ணிட்டுத் திரியுறாய்ங்க?, பெரியவரால பேசிப்,பேசியே என்னைய அடக்கிற முடியும்! ஆனா ஊர்ப்பய வாயை மூட முடியுமா?, இன்னைக்கு வெறும் கைக்கலப்போட நிண்டு போன பிரச்சனை, நாளைக்கு உயிர்பலி கொடுக்குற அளவுக்கு பெருசானாலும், இப்பிடித்தேன் அற வழியில அகிம்சைய ஆதரிச்சுக்கிட்டு உட்கார்ந்து கிடக்கப் போறோமா?” – ஆவேசமாய்ப் பேசுபவனிடம்..
“அதனால இப்ப என்ன தம்பி செய்யனுமுங்குறீங்க?” – என்றது தலையொன்று.
“இவரு பேத்தி பிரச்சனைல அந்தப்பயலை சும்மா விட்டதாலதேன் நம்ம சாதிக்காரய்ங்கண்டா, இளக்காரமாய்ப்போச்சு அவிங்களுக்கு! எம்பாட்டன் காலத்துலயெல்லாம் இப்பிடித்தப்பு நடந்தா, கையை வெட்டிப்புடுவாய்ங்க,தலையைச் சீவிப்புடுவாய்ங்கண்டு பூராப்பயலுக்கும் பயம் இருந்தது! ஆனா, என்னைக்கு இவரு மவன், அவிங்க சாதிக்காரியைக் கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிப் போய் உல்லாசமா வாழ்ந்தாரோ! அப்ப இருந்து, அந்தப்பயலுகளுக்கு நம்ம-ண்டா லேசாப் போச்சு!” என்றவன் தொடர்ந்து..
“நம்ம சாதிக்காரய்ங்களை சாந்தப்படுத்தி நிலைமையை சீராக்கனுமுண்டு நினைச்சீகண்டா, அந்தப்பய பள்ளியோடத்துக்குப் போறதுக்குத் தடை போடுங்க! அவன் குடும்பத்துக்கு இருக்கிற வருமானத்துக்கு, எப்பிடியும் அவன் உடுப்புப் போட்ற படிப்பைப் படிச்சு உசரத்தை எட்டப் போறதில்ல! நம்ம தோட்டத்துலயோ, காட்டுலயோ கூலி வேலை பார்த்துத்தேன் பொழப்பை ஓட்டப் போறியான்! புல்லு புடுங்கப் போறவனுக்கு என்னத்துக்குங்க புஸ்தக அறிவெல்லாம்?, தூக்கி எறியச் சொல்லுங்க! இல்லண்டா, நம்மசாதிக்காரய்ங்களைக் கட்டுப்படுத்த முடியாது, நாளைக்கு எவன் வாயையாவது வெட்டி வஞ்சத்தைத் தீர்த்துக்கிட்டாய்ங்கண்டு வைங்க, அப்புறம் உங்க தலைதேன் பஞ்சாயத்துல உருளும் சொல்லிப்புட்டேன்” – என்றான் எள்ளலாய்.
“பட்டாளத்துக்காரரே நீங்க என்ன சொல்றீங்க?”
“நான் சொல்றதுக்கு என்னா இருக்கு?, எப்பிடியும் நீங்க என்னா முடிவெடுக்கனுமுண்டு இவன் சொல்லித்தேன கூட்டி வந்திருப்பியான்” – கருப்பைத் துண்டை உதறித் தலையில் கட்டியபடி பெரியவர்.
“பட்டாளத்துக்காரரே”
“குரலை உசத்தாதய்யா யோவ்! பாகுபாடு பார்க்காம பஞ்சாயத்துப் பேசுறவன்தேன் டா தலைவன்! அவன் ஓதுறதுக்கெல்லாம் ஒருதலைபட்சமா தலையாட்டிட்டு பொம்மையா உட்கார்ந்திருக்கிற உனக்கெல்லாம் நாற்காலி ஒன்னுதேன் குறை! எந்திரிய்யா யோவ்”
“பெரியவரே வார்த்தை தடிக்குது! பார்த்துப் பேசுங்க!”
“இம்புட்டு நேரம், உம்மொகரையெல்லாம் பார்த்து நான் பொறுமையா பேசுனதே பெரிய விசயம்! எந்திர்றா எலேய்!”
“பட்டாளத்துக்காரரே பஞ்சாயத்தை அவமானப்படுத்துனா, என்னாகும்னுண்டு தெரியும்ல உங்களுக்கு?”
“என்னாகும்?, ஊர் எல்லைக்குள்ள ஒன்னுக்கடிக்கக் கூடாது! கருமாரியம்மன் கோயில்ல கற்பூரம் ஏத்தக்கூடாதுண்டு, உருப்படாத 2 தீர்ப்பைச் சொல்லி என்னைய குடும்பத்தோட ஒதுக்கி வைப்பீக அதேன?, எலேய்! பித்தளைப் பானையைக் கொண்டி நான் உன் பொடனியைப் பொளக்குறதுக்கு முன்னாடி நீயே எந்திரிச்சு ஓடிர்றா!” – வேட்டியைக் கட்டிக் கொண்டு கிழவர் எகிறிக் கொண்டு வந்ததும்,
“தம்பி! என்னாய்யா இது?” – என்று பொங்கியது பெருந்தலைகள்.
“அங்க என்னாய்யா கொஞ்சுற?, ஏன்ய்யா இவனே ஒரு கடைஞ்செடுத்தக் களவாணிப்பய! பிரச்சனையை பெருசு பண்ணனும்ங்குறதுக்காகவே சும்மா இருக்கிறவிங்களோட ஒரண்டை இழுக்க, இவனே அங்கங்க ஆளை நிறுத்தி வைச்சு கரைச்சலை உண்டாக்கியிருப்பியான்!, என்னமோ இவிங்க சாதிச்சண்டையெல்லாம் இன்னிக்கு,நேத்துத்தேன் தொடங்குனா மாதிரி, அந்தப்பய படிப்பை நிறுத்திப்புட்டா, எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடுமுண்டு இவன் எல்லார் காதுலயும் பூ சுத்திட்டிருக்கியான்! அதை உண்மைண்டு நம்பி, வெட்கமில்லாமக் கூட்டம் சேர்த்துக்கிட்டு வந்திருக்கீக?, கழுத்து வரை கறி சோத்தைத் தின்னுப்புட்டு மப்பு குறையுறதுக்காக, அவிங்களைக் கூப்ட்டு வைச்சு அடிச்சு, உடம்பை நெளிச்சுக்கிற உருப்படாத பயலுக இவிங்க! இவிங்க பேச்சை பெருசு பண்ணி, தீர்ப்பெழுதப் போறீகளா? அடப் போங்கடா டேய்! பொசகெட்டப் பயலுகளா”
“அப்டின்னா, ரெண்டு சாதிக்காரய்ங்களும் அடிச்சுக்கிட்டு செத்தாக் கூடப் பரவாயில்லயாங்குறீகளா?”
“கோழித்துண்டுக்கும்,ஆட்டுக்குட்டிக்கும் அடிச்சுக்கிற சல்லிப்பயலுக இருந்தா என்ன,செத்தா என்ன?” – கிழவர் பேச்சை முடித்துக் கொள்ள,
“தம்பி! இவரு எப்பிடிப்பட்டவருண்டு தெரிஞ்சும், இவரு கிட்டப் போய் பஞ்சாயத்துப் பேச எங்களைக் கூட்டி வந்திருக்கியேப்பா” – கிழவரைச் சமாளிக்கும் திராணியற்றுத் தன் முகம் பார்த்தத் தலையை சாந்தப்படுத்திய மணிவண்ணன்,
“நாம இங்க வந்து நிண்டது, அந்தப்பய படிப்பைத் தொடரனுமா வேணாமாண்டு இவருக் கிட்ட அனுமதி கேட்குறதுக்கில்ல! இனி அவன் படிப்பைத் தொடர மாட்டான்-ங்குற அறிவிப்பைச் சொல்லத்தேன்!”
“அதை நீ முடிவு பண்ணக் கூடாதுடா வெண்ண”
“ரைட்டு! நீங்க இப்பிடி கேப்பீகண்டு எனக்கு நல்லாத் தெரியும்! அதேன், முடிவு பண்ண முழு உரிமையுமிருக்கிற அந்தப்பயலோட ஆத்தாளைக் கூட்டி வந்திருக்கேன்” என்றவன் திரும்பிப் பார்க்க, அவனது விழுதுகள் சிலரின் பின்னே, அழகரின் அன்னை பயமும்,பீதியும் நிறைந்த முகத்துடன், விடாது வழியும் கண்ணீரை சேலைத் தலைப்பில் துடைத்தபடி வேக,வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
மணிவண்ணன் ஆட்கள் அவரை வளைத்துக்கட்டிக் கூட்டிச் செல்லும் விவரமறிந்து, அவரது ஊர்க்காரர்கள் சிலர் பதறியடித்துக் கொண்டுப் பின்னே ஓடி வந்திருந்தனர்.
அவரைக் கண்டதும், சிறிதும் யோசிக்காமல் அருகே விரைந்து சென்ற பெரியவர், “நீ ஏன்ம்மா இங்க வந்த?” என்று கடிந்து கொள்ள, அவர் முகம் பாராது தலை குனிந்த பெண்மணி, “எம்மவன் சம்மந்தப்பட்டப் பிரச்சனைக்கு நான் வாராம, யாரு வருவாக பெரியவரே” எனக் கேட்டபடி அமைதியாகச் சென்று மணிவண்ணன் காட்டிய இடத்தில் குனிந்தத்தலையுடனே நிற்க, அவரது செய்கையைக் கண்டுப் புருவம் சுருக்கியப் பெரியவர் திரும்பி மணிவண்ணனை நோக்கினார்.
உதட்டை வளைத்துப் புருவத்தை உயர்த்தி எள்ளலாக நகைத்தவன் பஞ்சாயத்துத் தலைகளிடம்,
“தன் மவனால ஆரம்பிச்ச பிரச்சனை, தன் மவனோடயே போகட்டுமுண்டு, அந்தப்பய படிப்பை நிறுத்துறதா அந்தம்மா முடிவு பண்ணியிருக்குங்கய்யா! அவுக சூழ்நிலைல இருந்து பார்த்தா, அவக சொல்றதும் சரிண்டுதேன் படுது! இன்னைக்குப் பொடி,பொடியா அங்கங்க பகையை வளர்க்குற பயலுக, நாளைக்கு அருவாளைத் தூக்கிக்கிட்டு மல்லுக்கு நிண்டாங்கய்ண்டு வைங்க, ரெண்டு சாதிக்காரய்ங்கள்ல எவன் ஜெயிச்சாலும்,தோத்தாலும், போகப் போறதென்னவோ இந்தப்பய தலைதேன்! அதுக்குப் பயந்துக்கிட்டுதேன் அந்தம்மாவே ஒதுங்கிடலாம்ண்டு முடிவு பண்ணிருச்சு போல! என்னாம்மா?” எனக் கேட்க,
தலை குனிந்த நிலையிலேயே ஆம் எனத்தலையசைத்தப் பெண்மணி,யாருடைய முகத்தையும் பாராமல், கையெடுத்துக் கும்பிட்டு “எனக்கு எம்மவன் உசுரோட இருந்தாலே போதும்ங்க! கால் வயிறுக் கஞ்சியைக் குடிச்சிக்கிட்டுன்னாலும், அவன் கை,கால் சுகத்தோட, நீண்ட ஆயுசோட நிம்மதியா வாழனுமுங்க! இந்தப் பிரச்சனையை இத்தோட முடிச்சுப்புட்டு, தயவு செஞ்சு எங்களை விட்ருங்கய்யா! இனி உங்க கண்ணுலயே படாம பொழச்சுக்கிறோம்” எனக் கெஞ்சியதும்,
பதைபதைத்துப் போனக் கிழவர் “குரைக்கிற நாய் கடிக்காதும்மா! எந்தத் தப்பும் பண்ணாத நீயி, இந்தப் பொண்டுகப்பயலுக்குப் பயந்துக்கிட்டு, தலை குனிஞ்சு நிற்கனுமுண்டு எந்த அவசியமுமில்ல! உம்மவன் உசுருக்கு நான் பொறுப்பு! உங்களால முடிஞ்சதைப் பாருங்கடாத் **** பயலுகளாண்டு தகிரியமா நெஞ்சை நிமிர்த்தி சொல்லிப்புட்டு, இவிங்க மூஞ்சில காறித் துப்பிட்டுப் போ” என்று பட்டாளத்துக்காரர் குரல் கொடுக்க, பதில் பேசாமல் குனிந்தத் தலையுடனே அழுத்தமாய் நின்றிருந்தார் அப்பெண்மணி.
“அந்தப்பய *** மிதிச்சுக் குரவளைய நெரிச்சுக் கொன்னுடுவேண்டு நான் வகையா மிரட்டி வச்சிருக்கையில, அந்தம்மா எப்பிடிப் பெருசு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நடந்து போகும்?, நேக்கு,போக்கு தெரியாம நேர் வழில வாழ்ந்து என்னா பிரயோசனம்?, உனக்குத் திறமை பத்தாது பெருசேய்ய்!” என்று மணிவண்ணன் பெரியவருக்கும்,அவரது பேராண்டிகளுக்கும் மட்டும் கேட்கும் படி முணுமுணுக்க, பல்லைக்கடித்த விருமன், திரும்பி சிலம்பனிடம், கீழே கிடந்த மணிவண்ணனின் கழுத்துத் துண்டை நோக்கிக் கண் காட்டினான்.
“அப்புறம் என்ன?, பிரச்சனை முடிஞ்சது! அந்தப் பயலை இனி பள்ளியோடத்துக்கு அனுப்பப் போறதில்லண்டு பையனைப் பெத்தவகளே முடிவு பண்ணிட்டாக!” – தலை தொடங்குகையில் இடை மறித்த அழகரின் ஊர்க்காரர்கள் சிலர்,
“அதெப்பிடி நியாயமாகும்?, அப்ப, இவிங்களுக்குப் பயந்துக்கிட்டு எஞ்சாதிக்காரய்ங்க எவனும் பள்ளியோடத்துக்குப் படிக்கப் போகக்கூடாதுண்டு சொல்றீகளா?” எனப் பொங்கியெழுந்து முன்னே வர,
“நாங்க உப்பைத் தின்னவனை மட்டுந்தேன் தண்ணி குடிக்கச் சொல்றோம்! அப்பத்தேன் இனி உப்பைத் திங்கனுமுண்டு ஆசைப் பட்றவனுக்கு, இவன் குடிச்சத் தண்ணீயோட அளவைப் பார்த்து மிரட்சி வரும்! தப்பு செய்யக் கூடாதுங்குறப் பயம் வரும்!” – என்று மணிவண்ணன் கூறியதும்,
ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக் கொண்டு முனகியபடி நிற்க, பெரியவர், அழகரின் அன்னையை வெறித்தபடி அமைதியாய் நின்றார்.
“நீ முடிவா என்னாம்மா சொல்ற?”
“எம்மவன் பசி கூட நடத்துற போராட்டமே போதுமுங்க! படிப்போடவும் அவன் போராட வேண்டாம்”
“பெரியவரே! நீங்க என்னா சொல்றீக?”
ஒரு நொடி தன்னை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்ட பெண்ணைக் கண்டு, ஒரு அன்னையாக அவள் மனம் புரிந்து, கழிவிரக்கம் எழுந்தாலும் அடக்கி,
“தங்கத்தை நெருப்புக்குள்ளத் தள்ளி விட்டு, அது ஆயுசு முடிஞ்சு போச்சுண்டு அலப்பரையைக் குடுக்குற உங்க அறிவீனத்தை நினைக்கையில, சிரிப்புத்தேன்டா வருது எனக்கு! முட்டாப்பயலுகளா, தங்கத்துக்கு அழிவே கிடையாதுடா! அழகரு, அழிவே இல்லாத தங்கம் மாதிரியானவன்!” – என அடிக்குரலில் அழுத்தமாய்க் கூறினார் பட்டாளத்துக்காரர்.
கிழவனின் பதிலில் தலை முதல் கால் வரை புகைந்தாலும்,அதை மறைத்து,
“துருப் பிடிச்சத் தகரத்தைத் தங்கமுண்டு நம்புற உம்ம அறிவீனத்தை நினைச்சா எனக்கும் கூட சிரிப்புத்தேன் வருது பெருசேய்!, உம்ம மவன் அன்னைக்கு இவுக சாதிக்காரப்புள்ளைய இழுத்துட்டு வந்து நிண்டப்ப, அவக செஞ்ச தப்புக்கு ஊரை விட்டுத் துரத்துறதுதேன் நியாயமுண்டு ரெண்டு சாதிக்காரப் பயல்களும் ஒன்னு கூடி முடிவெடுத்ததுக்கு உடன்பட்டீக தான?, இப்ப மட்டும் என்னத்துக்கு வசனம் பேசுறீக?, எங்க சாதித் திமிருக்கு முன்னால உம்ம பகுத்தறிவெல்லாம் செல்லாக்காசு பட்டாளத்துக்காரரே! சிங்கத்தோட இயல்பே சீறுறதுதேன், அதைப் போய் சீர்திருத்தி சாந்தப்படுத்த நினைக்குறது எம்புட்டுப் பெரிய முட்டாள்தனம்? உம்ம பேச்சும்,சிந்தனைகளும் இங்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போறதில்ல பெரியவரே! வரவும் விட மாட்டோம்!” – என்றவன், ஊரார் முன்பு அவரை ஜெயித்துத் தலை குனிய வைத்து விட்டப் பூரிப்பில்,
“அப்புறம் இன்னொன்னு, நீங்க பாட்டுக்கப் போலீசைக் கூட்டி வந்து உள்ள நிலைமையை மாத்தலாமுண்டு சல்லித்தனமா எதுவும் திட்டம் போட்றாதீக! நீங்க அமெரிக்க அதிபரையே கூட்டி வந்தாலும், இந்தம்மா அவக மவனைப் பள்ளியோடத்துக்கு அனுப்பப் போறதில்ல. புரியுதா?” எனக் கேட்டு சபையைக் கலைத்து எழுந்து சென்று கொண்டிருந்தப் பெருந்தலைகளை நோக்கி “போலாம்! ரைட் ரைட்” என மிதமிஞ்சியக் குஷியில் விசிலடித்தபடி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மிதப்பாய் நடந்தான்.
அவனது பேச்சிலும்,அலப்பரையிலும் அகம் கன்றிப் போன விருமன், சிலம்பனை நோக்கிக் கண்ணைக் காட்டியதும், அவன் வீட்டின் பக்கவாட்டிலிருந்தப் பாதையில் ஓடிச் செல்ல, சில நிமிடங்களில் சலங்கைக் குலுங்கல்களுடன் திடுதிடுவென ஓடி வந்தான் கருப்பன்.
காளையைக் கண்டதும் கூட்டம் பதறியடித்து, ஆளாளுக்கு ஒருபுறம் ஓடி ஒதுங்க, சுற்றியிருந்த அத்தனை பேரையும் கதிகலங்கச் செய்து விட்டு முன்னே ஓடி வந்த கருப்பன், நேராக மணிவண்ணனை மோப்பம் பிடித்துக் குத்த வர, மரண பீதியைக் கண்ணில் தேக்கிக் கொண்டு அடித்துப்பிடித்து இங்குமங்கும் பதறி ஓடியவன், பரபரவென அருகிலிருந்த ஆலமரத்துக் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
அவன் மரம் ஏறத் துவங்கியதும், கருப்பனின் நாலாபுறமிருந்தும் கயிற்றைப் போட்டுப் பிடித்து நிறுத்திய விருமனும்,ஆரனும் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனின் அருகே வந்தனர்.
“ஏன் டா, காளை குத்த வருதுன்னதும் வேகமா கையை வைச்சுக் **** மறைக்குற?, நீயெல்லாம் என்னாடா ஆம்பள?” – விருமன்.
“நெஞ்சுல உரமிருந்தா என்னத்துக்கு பங்காளி அவன் ***** மறைக்கப் போறியான்? ஏன் டா, கிழிஞ்ச வாயை வைச்சுக்கிட்டு எம்புட்டுப் பேச்சு பேசுற நீயி?, பங்காளி! கருப்பனை இங்கனயே நிறுத்து டா! இவன் கீழ வந்தா ******* கிழிக்கட்டும்” – ஆரன்.
ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்டிருந்த உடம்பு ஒத்துழைக்காமல் போனதில், மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்கத் தொடங்கி விடக் கஷ்டப்பட்டு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மணிவண்ணன் பங்காளிகளின் பேச்சைக் கேட்டுக் கோபப்படக் கூட முடியாது, “கீழ இறக்கி விடுங்கடா” என்று சீறினான்.
“பார்றா! எலேய்! கையப் புடிச்சு இறக்கி விட்றதுக்கு நீ என்ன என் பொண்டாட்டியா?, ஈத்தரப்பயலே! ஏறுன மாறியே இறங்கி வாடா” – என்று விருமன் லந்தடித்ததும்,
வியர்த்து விறுவிறுத்துப் போய் கிளையில் அமர்ந்திருந்தவன், குனிந்து பங்காளிகளிருவரின் கைகளில் அடங்கியிருந்தக் காளையை நோட்டம் விட, அவனை நக்கலாய்ப் பார்த்த விருமன்,
“ஏன் டா, கிழவன் வீட்டுக் காளையே அடங்காத உங்கிட்ட, கிழவன் மட்டும் அடங்கிருவானா!, களவாணிப்பயலே! ***** புடிச்சுக்கிட்டே வீடு போய்ச் சேர்றா” என்றபடி முழு வேகத்தில் அவன் கையைப் பற்றிக் கீழே இழுத்து விட, பல்டி அடித்துத் தலைக்குப்புற விழுந்த மணிவண்ணனின் மூக்கு, ரத்தத்தில் குளித்திருந்தது.
நேரம் நள்ளிரவைக் கடந்து ஒரு நாழிகையாயிருந்தது.
கிணற்றடியில், கண்ணீர்க் கறை படிந்திருந்த முகத்தோடு கால்களைக் குறுக்கிக் கொண்டு, நகம் கடித்தபடி அமர்ந்திருந்த புவியரசி, ஒரு முடிவுடன் எழுந்து நின்றுக் குனிந்து, கிணற்றின் உள்ளே நோக்கினாள். கருவானத்தைப் பிரதிபலித்தக் கிணற்று நீரின் நடுவே நிலவு நீந்திக் கொண்டிருந்தது.
தண்ணீரின் சலசலப்பிற்கேற்றபடி உடலை வளைத்து,நெளித்துக் கொண்டிருந்த வெண்ணிலவை ஒரு நொடி வெறித்துப் பார்த்தவள், அதன் பிம்பத்தை உடைத்திடும் சிந்தை கொண்டவளாய், கிணற்றின் மீது ஏறி நின்றாள்.
அதிவேகத்தில் துடித்த இதயம், உயிர் குலையச் செய்ததில் குளிர்க்காற்றிலும் வியர்த்தவளாய், உடல் நடுங்க நின்றவள், கண்களை இறுக மூடிக் கொண்டுக் குதிக்க எத்தனிக்கையில், திடீரென கரம் பற்றி இழுக்கப்பட்டாள்.
இழுத்த வேகத்தில் தன் பிடரியில் ஒரு இடியை இறக்கியத் தன் தமக்கையின் செய்கையில், அலையக் குலைய கிணற்றுச் சுவற்றில் இடித்து விழுந்தவள், எரிச்சலும்,அழுகையுமாய் அவளை நிமிர்ந்து நோக்கினாள்.
“ஏன்டி கூறுகெட்டவளே! குளிக்கனும்ண்டா தண்ணி இறைக்குறதை விட்டுப்புட்டு, என்னத்துக்குடி கிணத்துக்குள்ள நீச்சலடிக்கப் பார்க்குறவ?” –தங்கையை அடித்தக் கைகளைத் தூசு தட்டியபடி அவளருகே அமர்ந்தவளை முறைத்துப் பார்த்தப் புவியரசி,
“நடுசாமத்துல நீச்சலடிக்க நான் என்ன பைத்தியமா?” என்று கோபமாய்க் கேட்க,
“பின்ன என்னத்துக்குடி மதில் மேல ஏறி நிண்டு வித்தை காட்டிட்டிருந்த?” – ஒன்றும் அறியாதது போல் தன் முகம் பார்த்துக் கேட்டவளைக் கண்டுத் தலை குனிந்தவள், கண்ணீரைச் சொரிய, உச்சுக் கொட்டிய அகலருவி,
“இந்தாரு, பொசுக்கு,பொசுக்குண்டு கண்ணீரை ஒழுக விட்டண்டு வை, ரைய்ண்டு, செவுல்லயே ஒன்னு விட்ருவேன் சொல்லிப்புட்டேன்” எனக் கூற,
“அழுகாம என்ன செய்யச் சொல்ற?, எம்புட்டுப் பெரிய பாவம் பண்ணிப்புட்டேன்! படிப்புதேன் எல்லாமுண்டு இருந்தவன் வாழ்க்கையை உருத்தெரியாம அழிச்சு, காதலிக்கிறேங்குற பேர்ல அவன் கனவைக் கொன்னு, தப்பே செய்யாதவனைத் தண்டனை அனுபவிக்க விட்டு, உசுரு இருந்தும் அவன் பொணமா நடமாடக் காரணமாய்ட்டேனே!” – அழுகையுடனே புலம்பியவளிடம்,
“அதேன் கிணத்துல விழுந்து சாகப்பார்த்தியாக்கும்?” – எனக் கேட்டாள் அகலருவி.
“குற்ற உணர்ச்சி கொடுக்குற அனலைப் பொறுக்க முடியாம, நெஞ்சு வெந்து சாகுது அகலு! மானம் காக்குமுண்டு நம்பி, அவன் தன் உடம்புல சுத்தியிருந்த ஒத்தத்துணியை உருவி, அவனை நிர்வாணமாக்கி நிர்கதியா நிற்க விட்டதுக்கு,எனக்குத் தண்டனை வேணாமா?, நான் மூச்சு விட்ற ஒவ்வொரு நொடியும், அவன் மூளையைக் கழட்டி மூலைல எறிஞ்சுப்புட்டு அவனை முண்டமா அலைய விட்ட நிலையை நினைச்சு, மனசு துடிக்குது! நானெல்லாம் ஏன் உசுரோட இருக்கனும்? எனக்கு வாழவே பிடிக்கல!” – தேம்பித் தேம்பி அழுபவளை எரிச்சலாய் நோக்கிய அகல்,
“நீ பொட்டுண்டு போயிட்டா, பூராப் பிரச்சனையும் தீர்ந்துடும்ண்டு எவஞ்சொன்னது?” எனக் கேட்க.. ஒரு நொடி பதில் தெரியாது விழித்தவள், பின் கண்ணீர் விட்டபடியே,
“எனக்கு இந்த குற்ற உணர்ச்சில இருந்து விடுதலை கிடைச்சாப் போதும்” என்றாள்.
“சுயநலம் புடிச்ச கழுத”
“வேற என்னதேன் நான் செய்றது!, என்ன செஞ்சிட முடியும் என்னால?, முட்டாள்தனமா நான் பண்ணுன காரியம், இம்புட்டு விவகாரத்தை இழுத்துட்டு வரும்ண்டு தெரிஞ்சிருந்தா, அன்னைக்கே என் ஆசைய நெஞ்சோட புதைச்சிருப்பேன்! இதெல்லாம் நடக்கக் கூடாதுண்டு நினைச்சு, எனக்கு அறிவுரை சொல்லி விலகிப் போனவன் அவன்! அவனுக்குப் போய் இப்பிடியொரு நிலைமையா?, என்னால தாங்கவே முடியல அகலு”
“ஏய் ச்சீ, வாயை மூடு! மரணத்தைத் தவிர உலகத்துல எந்த விசயமும் நம்ம கண்ணீருக்குத் தகுதியானதில்லண்டு கிழவன் சொல்லி வளர்த்துங்கூட, இப்பிடி அழுது வடிஞ்சிட்டுத் திரியுற?, கண்ணைத் துடை முதல்ல” – தமக்கை அதட்டியதும் கண்ணீரைத் துடைத்தவளிடம்,
“தள்ளி நிண்டு வேடிக்கை பார்த்தவளுக்கே சாகத் தோணுதுண்டா, அம்புட்டையும் அனுபவிச்சுட்டிருக்கிறவனுக்கு எம்புட்டு வலிக்கும்?, அவன் வலியைப் போக்க வழி என்னாண்டு யோசிக்குறதை விட்டுப்புட்டு, இப்பிடி அழுது கரையுறனால யாருக்கு என்னாடி லாபம்?” என்று அவள் கூறிக் கொண்டிருக்கையில்..
“சரியாச் சொன்னத்தா” என்றபடியே அருகே வந்தப் பெரியவரைக் கண்டு பேத்திகள் இருவரும் எழுந்து நின்றனர்.
தாத்தனைக் கண்டதும் மறுபடி புவியரசியின் விழியில் நீர் கோர்த்து விட,
“ப்ச், தாத்தா, இவளுக்கு நீங்க புவியரசிண்டு பேரு வைச்சதுக்குப் பதிலா, கருமேகம்ண்டு வைச்சிருக்கலாம்! எப்பப் பாரு, இவ கண்ணு மழை பெய்ஞ்ச மயமாத்தேன் இருக்கு” என்ற அகலருவி,
“இவ கிணத்துல குதிச்சு சாகப் போறாளாமா தாத்தா” என்றாள் அவரிடம்.
அதுவரை அழுது கரையும் விழிகளோடு, குனிந்தத் தலையுடன் நின்றிருந்த புவியரசியைப் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தக் கிழவரின் முகம், நொடியில் கோபமாகி விட,
“என்ன தாயி இதெல்லாம்?” என்று பேத்தியிடம் சீறினார்.
“எனக்கு வேற என்ன செய்றதுண்டு தெரியலயே தாத்தா”
“நீ எதுக்குக் கண்ணு என்னமுஞ்செய்யனும்?, தாத்தன் செய்றேன்! நீ வேடிக்கைப் பாரு! என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?”
“தாத்தா..” – விழி ஒளிரத் தன் முகம் பார்த்தவளிடம்..
“சாகத் துணியுற வயசாத்தா உனக்கு?, சாவுக்கு ரெண்டு எழுத்துன்றதைத் தவிர, சாவைப் பத்தி உனக்கு என்னாத்தா தெரியும்?, வலியும்,வேதனையையும் குடுத்துட்டு சாகுறவன் ஒரு வகை, கர்வத்தையும்,பெருமையையும் குடுத்துட்டு சாகுறவன் இன்னொரு வகை! நம்ம சாவு எந்த வகைல இருக்கனுமுங்குறதை நாமதேந்த்தா தீர்மானிக்கனும்! வாழ்ந்து பார்க்காம, வாழ்ந்து காட்டாம, மக்கிப் போகனும்ண்டு நினைக்குறது இந்தப் பொறப்புக்கு நாம செய்ற துரோகம் ஆத்தா” – எனப் பெரியவர் கூற.. முகம் கன்றத் தலை தாழ்த்தியவள்,
“நான் அப்பிடியொரு தப்பை செஞ்சிருக்கலண்டா, அவனுக்கு இப்பிடியொரு நிலைமை வந்திருக்காதுல்ல தாத்தா?” எனக் கேட்டாள்.
“தப்புண்டு நினைச்சு, நீ தலை குனியுற அளவுக்கு, இது அம்புட்டுப் பெரிய விசயமில்லத்தா! முடி வளர்றதும்,நகம் வளர்றதும் இயற்கை! அதை வளர்க்குறதா,நறுக்குறதாண்டு முடிவு பண்ண வேண்டியது நீ! வயசுல வர்ற ஆசையும் அப்பிடித்தேந்த்தா! அது சரியா,தப்பாண்டு யோசிச்சு, ஆலோசிச்சு வேணும்,வேணாம்ண்டு முடிவெடுக்குற உரிமை உனக்கானது! உனக்கு என்னத்துக்கு முடி வளருது, அதெப்பிடி வளரலாம்ண்டு கேட்டு, அர்த்தம் புரியாம மல்லுக்கு நிற்கிறக் கூறு கெட்டப் பயல்களுக்காக சாக நினைக்குறது நியாயமாத்தா?. ஒத்தக் கோழித்துண்டுல, சாதி அரசியல் பண்ற ஈனப்பயலுகத்தா அவிங்க!, நீ முழுங்குன கோழி எந்த சாதிடாண்டு கேட்டா, அவிங்களால பதில் சொல்ல முடியுமா?, இப்பிடிப்பட்ட ஈத்தரைகளுக்காக நீ தலை குனியமுண்டு எந்த அவசியமுமில்ல! உன் எண்ணத்துல தப்பில்லத்தா! அவிங்க பார்வைலதேன் தப்பு!” என்ற பெரியவர்.. தொடர்ந்து..
“ரெக்கை உதிர்ந்து மண்ணுல விழுகுற ஈசல், அம்புட்டு சீக்கிரம் மடிஞ்சு போறதில்லத்தா! மண்ணைத் துளைச்சுக்கிட்டு உள்ள பதுங்கி, தனக்கான சாம்ராஜ்யத்தையே உருவாக்கும்! மண்ணா இருந்து, அவனை மீட்டுக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு! நீ கவலைப்படாதத்தா! அம்புட்டு சீக்கிரம் உன் தாத்தன் பின் வாங்கிற மாட்டான்!” என்றார்.
சரியெனத் தலையாட்டிக் கண்களைத் துடைத்தவள், பின் தயங்கியபடித் தாத்தனின் முகம் பாராது,
“அ..அ..அவகம்மா எம்மேல ரொம்பக் கோவத்துல இருப்பாக, இல்ல தாத்தா?, இன்னிக்குப் பஞ்சாயத்துல அவகக் கூனிக் குறுகிப் போய் நின்ன விதத்தைப் பார்க்கையில, எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு தாத்தா” என்றவளைக் கண்டுப் புன்னகைத்தவர்,
“மவன் படிப்பை நிறுத்தி அவனை நிர்மூலமாக்கனுமுண்டுத் திட்டம் போட்ட நீசனுங்க மேல இருக்குற கோவத்தை விட, உம் மேல அந்தம்மாவுக்குக் கோவம் கம்மியாத்தேன் இருக்கும் தாயி” எனக் கூற.. பெருமூச்சுடன் வான்நிலவை நோக்கியவள்..
“நல்லாப் படிச்சு, நல்ல உத்தியோகத்துக்குப் போய், தன் குடும்பத்தரத்தை உயர்த்தனுமுண்டு நினைச்ச, அவன் ஆசை நிறைவேறனும் தாத்தா! எங்கயாவது ஒரு மூலைல இருந்து, அவன் உசரத்தை நிமிர்ந்து பார்க்குற ஆளா நான் இருக்கனும்!” என்று ஏக்கம்,ஆசை,அவமானம்,வேதனை என அவள் குரல் காட்டிய பேதங்களை நிதானமாக அளவிட்ட மனிதர், அவள் தோளைத் தட்டி,
“நீயும் படிக்கனும் தாயி! இப்பிடி வசனம் பேசி வேதனைப் பட்டுக்கிட்டிருந்தா, ஊர்க்காரய்ங்க முன்னாடி நீ பட்ட அவமானக்கறை எப்பிடி அழியும்?,” என்று கூறியதும்..
ஆர்வமின்றி சரியெனத் தலையாட்டியவளின் தலையை வருடி விட்டு விலகிச் சென்றார் பெரியவர்.
பெரியவருடனான உரையாடல் முழுக்கத் தங்கையின் முக மாறுதல்களை ஆராய்ந்தபடி நின்றிருந்த அகலருவி அவர் சென்றதும்,
“ஏன்டி, அவனை நான் பார்த்துக்கிறேண்டு கிழவன் சொன்னதும், உன் மொகரை கருப்பட்டியை அள்ளி வாய்ல போட்டா மாறி, அம்புட்டு தித்திப்பைக் காட்டுது?, அவன்-ண்டா, அம்புட்டு இஷ்டமாடி உனக்கு?” எனக் கேட்டாள்.
விரக்தியோடு அவள் முகம் பார்த்த புவியரசி,
“அப்படிச் சொல்லாத அகலு! பிடிக்கும்ங்குற என் நினைப்பு கூட அவனைப் பாதிக்குமோ-ண்டு பயம் வருது எனக்கு! ஒரு தடவ என் பேச்சைக் கேட்க, என் பக்கத்துல நிண்டதுக்கே, வாழ்க்கையோட எல்லை வரைக்கும் தள்ளப்பட்டுட்டியான்! இனியும் அவனை நினைச்சு, அவன் உசுரு போக நான் காரணமாக விரும்பல” என்றவளைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்ட அகல்,
“அடிப் போடி கூறுகெட்ட சிறுக்கி” என்றாள்.
பேத்தியிடம் வாக்குக் கொடுத்தபடி மறுநாள் அழகரைக் காணப் புறப்பட்டு விட்டார் பெரியவர், தனது பேராண்டிகள் இருவரையும் துணைக்கழைத்துக் கொண்டு.
ஊராரின் கண்ணில் பட விரும்பாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாயிருந்த உறவினரின் வீட்டில் தங்கியபடி தோட்ட வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்த அழகர், கிழவரின் வருகையை எதிர்பார்த்திருந்தான் போலும்.
அவன் வேலைக்குச் செல்லும் வழியில், புளிய மரத்தினடியில் நின்றிருந்த மூவரையும் கண்டதும், ஒரு நொடி நடையை நிறுத்தியவன், பின் அவர்களைக் கண்டுகொள்ளாமல் குனிந்தத் தலையுடன் விறுவிறுவென வேகம் கூட்டி நடக்கத் துவங்கினான்.
தன்னைக் கண்ட பின்பும் நிற்காமல், தலையைக் குனிந்து கொண்டுக் கடந்து செல்பவனை “அழகரு” என்றழைத்து நிறுத்தினார் பெரியவர்.
அவரது குரலுக்குக் கட்டுப்பட்டேப் பழகி விட்ட மூளை, தன்னாலே கால்களை நிற்கச் செய்து விட,அவரை ஏறிட்டுப் பார்க்கத் துடித்த விழிகளை மண்ணில் பதித்தபடி கைகளை இறுக்கிக் கொண்டு நின்ற அழகரின் நெஞ்சு சுயபச்சாதாபத்தில் ஏறி,இறங்கிய வண்ணமிருந்தது.
அடக்கி வைத்திருந்த ஆத்திரமும்,ஆதங்கமும் வியர்வையாய் நெற்றியோரம் வழிய, சுரக்கத் தொடங்கியக் கண்ணீரை விழியோடு நிறுத்தி வைத்து, பல்லைக் கடித்துக் கொண்டு, மூக்கு விடைக்கத் தன் உணர்வுகளோடுப் போராடியபடி அவன் விறைத்து நின்ற தோற்றம், கிழவரைக் கலங்கச் செய்ய, “எய்யாஆ..” என அவன் கைப்பற்றியவரைக் கண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டவன்,
“என்னை மன்னிச்சுருங்க பட்டாளத்துக்காரரே! பயப்படாம எதிர்த்துப் போராடனுமுண்டு, என் தோள் தட்டி சொல்லிக் குடுத்த உங்க வார்த்தைகளை மதிக்காம, தகிரியத்தை இழந்து, தன்மானத்தை இழந்து இங்கன வந்து இப்பிடி ஒளிஞ்சு கிடக்குறதுக்கு” என்று கூற..
“உன் மேல எந்தத்தப்புமில்லாதப்ப நீ ஏன்ய்யா ஒளிஞ்சு கிடக்கனும்?” என வேகமாய்க் கேட்டவரிடம் மறுத்துத் தலையசைத்து,
“என் மனசுல உறுத்திட்டிருக்கிற உண்மையை, இந்த நிமிசம் உங்கக் கிட்டச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமோ, பயமோ இல்லங்கய்யா!” என்றவன், தொடர்ந்து,
“பள்ளியோடத்துல பயலுக அந்தப் புள்ளையையும்,என்னையும் இணைச்சுக் கேலி பேசுனப்ப,வேணாம்,வேணாம்ண்டு அலறுன மூளை குடுத்த அறிவுரையெல்லாத்தையும் தாண்டி, என் ஆழ் மனசு அந்தப் பேச்சையெல்லாம் பலதடவ ரசிச்சுருக்குங்கய்யா! அறிவுக்குக் கட்டுப்படாம, ஆசைக்கு இடங்கொடுத்து சலனப்பட்ட என் மனசுக்குக் கிடைச்சத் தண்டனையா இதை நான் எடுத்துக்கிறேங்கய்யா” என்றான்.
கண்கள் மூடிய நிலையில், தன் தாத்தனிடம் கையைக் கொடுத்து விட்டு, சிலையாய் நின்றபடி உதடசைத்துப் பேசுபவனைக் கண்ட ஆரனும்,விருமனும் அணைவாய் அவனைச் சூழ்ந்து நின்றனர்.
“சலனப்படுறது குத்தமில்ல ராசா! எளங்கறியைக் கண்டா எச்சி ஊர்றதில்லயா?, ஆசைப்பட்றது மனுச இயல்பு! இயற்கை நம்மளப் படைச்ச விதம் அப்பிடி” – பெரியவர் கூறுகையில் விரக்தியாய் சிரித்தவன்,
“ஆசைப்படவும் தகுதி வேணுமேய்யா?, பசியறிஞ்ச வயித்துக்கு முன்னால ருசி தேடுற நாக்குத் தோத்துப் போயிடுதுங்கய்யா! மல,ஜலத்தைத் தவிர எல்லா உணர்வுகளையும் அடக்கத் தெரியனுமுண்டு சொல்லி வளர்க்கப்பட்ட நான், மனசை அலைபாய விட்டது தப்புதேனங்கய்யா?” – என்று கேட்டதும், பெருமூச்சை வெளியிட்டப் பெருசு,
“வேணாண்டு விலகிப் போறது வேற! தப்புப் பண்ணிட்டுத் தண்டனை அனுபவிக்குறது வேற! நீ விலகிப் போக நினைச்சவன்! தண்டனை அனுபவிக்க வேண்டியவன் இல்ல” – என்றார்.
பதிலற்று நிற்பவனின் தோளைப் பற்றியவர்,
“பெருசா தகுதி,தகுதிங்குறியே! ஒரு பொட்டச்சி மேல ஆசைப்பட, ஆம்பளயா இருக்கிறதைத் தவிர வேற என்னப்புப் பெரிய தகுதி வேணும்?, உன் வயசைக் குத்தஞ்சொல்லு! ஆதரிக்கிறேன்! ஏன்னா, இப்ப இது வேணுமா,வேணாமாண்டு முடிவெடுக்குறப் பக்குவமோ,தகுதியோ அதுக்குக் கிடையாது. ஆனா, காசையும்,சாதியையும் மையப்படுத்தி உங்க ரெண்டு பேருக்கும் இடைல சமூகம் உருவாக்கி வைச்சிருக்கிற இடைவெளிக்குத் தகுதி-ண்டு பேரு வைக்காத” எனக் கூற.. அவரை நிமிர்ந்து நோக்கியவன்,
“நீங்க குடுக்குற விளக்கத்தை ஒத்துக்க எத்தனைப் பேருங்கய்யா தயாரா இருக்காய்ங்க?, உசரத்துல நிற்குறோம்ங்குற கர்வத்துல கால் தரைல படாம பறந்துட்டுக் கிடக்குறவனுக்குக் கீழ இருக்குறவன் எம்புட்டுக் கத்துனாலும் கேக்காதுங்கய்யா! அவன் உசரத்துக்கு வளர்ந்து நிண்டு அவன் கண்ணைப் பார்த்துப் பேசுனாலொழிய, எங்கக் காட்டுக்கத்தலை யாரும் காது கொடுத்துக் கேட்கப் போறதில்ல! போட்டிருக்குறத் துணிலயும், திங்குற சாப்பாட்டுலயும் மட்டுந்தேன் எனக்கும்,அந்தப்புள்ளைக்கும் வேறுபாடு இருக்கிறதா நினைச்சிருந்தேன்! ஆனா.. இந்தச் சூழ்நிலையும், இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்குற ஆட்களோட மனப்பாங்கும், எங்க ரெண்டு பேருக்குமிடைல இருக்கிற இடைவெளியோட நீள,அகலத்தைப் புரிய வைச்சிருச்சுங்கய்யா எனக்கு!”
“அவேன் உசரத்துக்கு வளர்ந்து நிண்டாலொழிய, எதுவும் மாறப் போறதில்லண்டு தெரிஞ்சுமா நீ அவிங்களுக்குத் தாழ்ந்து போக நினைக்குற?”
“தாழ்ந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கேனுங்கய்யா! நெஞ்சு நிறையப் பொங்கி நிற்குற கோவத்தை வெளிக்காட்டக் கூட எனக்கு வாய்ப்புக் குடுக்கப்படலையே?, வாய் இருந்தும் ஊமையா வாழ வேண்டிய நிலைமைல தான இருக்கேன்?, ஏழ்மை நான் போர்த்தியிருக்கிறக் கிழிஞ்ச போர்வை-ண்டா, சாதி, நான் படுக்குற ஓட்டை விழுந்தப் பாய்-ங்கய்யா! ரெண்டுக்கும் இடைல கிடக்குற நான் குளிர்லயும்,அனல்லயும் விறைச்சும்,கருகியும் உசுரு வாழப் போராடிக்கிட்டுக் கிடக்குறப்ப, உசரத்தை எட்டுற சிந்தனையெல்லாம் எனக்கு எப்பிடிங்கய்யா வரும்?”
“சரி, உனக்கு அந்தக் கிழிஞ்சப் போர்வையும் வேண்டாம்,பாயும் வேண்டாம்! ரெண்டையும் கொஞ்ச நாளைக்கு ஒதுக்கி வைச்சுப்புட்டு நான் தாரதை யோசிக்காம வாங்கிக்க! அதை வைச்சு அந்தக் கிழிசலையும்,கந்தலையும் ஒட்டத் தேவையானத் தகுதியை வளர்த்துக! அதுக்குப் பிரதிபலனா, அவிங்க உசரத்துக்கு வளர்ந்து நிண்டு, எனக்காக அவிங்க சட்டையைப் புடிச்சுக் கேள்வி கேளு, மனுச இனத்துக்கு விதி எழுத நீங்க யார்றா வெண்ணைகளா-ண்டு”
“ஐயா….”
“செய்யாதத் தப்புக்கு உன்னைத் தண்டனை அனுபவிக்க விட்டப் பாவத்துக்கு தான் உயிரை விட்டுப் பரிகாரம் தேடுறேண்டு, எம்பேத்தி நேத்து கிணத்துல குதிக்கக் கிளம்பிட்டா” – பெரியவர் கூறியதும், திடுக்கிட்டு அவர் முகம் பார்த்தவனிடம்..
“பயப்படாத! கிணத்துச்சுவத்து மேல ஏறி நிண்ட கழுத பொடனில அடிச்சு, அது மூளையை முழிக்க வைச்சாச்சு!” என்று ஆரன் கூறியதும் ஆசுவாசப்பட்டவனைக் கண்டு..
“நீ படிப்பைத் தொடரனும்ய்யா அழகரு, நான் அதுக்கு வழி பண்றேன்” – என்று பெரியவர் கூறியதும், நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன்,
“வீர வசனமெல்லாம் உங்களைப் பார்த்தாத் தானுங்கய்யா வருது! எங்காத்தா கண்ணீருக்கு முன்னாடி, என்னால வாயைத் தொறக்கக் கூட முடியல! ரோஷங்கெட்டுப் போய் இப்பிடி ஒளிஞ்சு வாழ்றதுக்கு, அவிங்க என் தலையை சீவுனாக் கூட சந்தோசமா செத்துருவேன் போலங்கய்யா” என்று கூற..
“எவன் உன் தலையைச் சீவிருவியான்?, அந்த அளவுக்கு எவனுக்குத் தகிரியமிருக்கு?, எலேய்! நம்மக் கருப்பனுக்குப் பயந்துத், தலை தெறிக்க ஓடுனத் தொடைநடுங்கிப் பயலுக டா அவிங்க! அவிங்க உன் தலையைச் சீவிருவாய்ங்களாக்கும்?” - அதுவரை அமைதியாய் நின்றிருந்த விருமன் அசால்ட்டாய்க் கூறவும் அதை ஆமோதித்தப் பெரியவர்,
“உன்னையப் பெத்தவளா, உன் படிப்பு தடைபட்டுப் போனதை நினைச்சு அவ கண்ணீர் விட்றது நியாயம்தேன் ராசா! ஆனா.. அதுக்குக் கட்டுப்பட்டு, நீ உன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டா, இனி வர்ற தலைமுறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாய்டும்ப்பு! நாளைக்கு நம்ம பயலுகளுக்கும் இப்பிடியொரு நிலைமை வந்துடுமோ-ண்டு, உங்காத்தாளைப் போல அத்தனைப் பேரும், தான் புள்ளைங்கப் படிப்பை நிறுத்தி, காட்டுலயும்,மேட்டுலயும் அவிங்களுக்கு சேவகம் பண்ணிட்டுச் சுத்தனும்ன்றதுதேன் அவிங்க நோக்கம்! நீ அவிங்களுக்கு வெறும் பகடைக்காய்! உன்னை உருட்டி, ஊரைத் தன் கைக்குள்ள அடக்குறதுதேன் அவிங்க திட்டம்” என்றார் பெரியவர்.
அவர் கூறுவது அத்தனையும் புரிந்தாலும், தன் அன்னையையும்,தன் குடும்பத்தையும் நினைத்துத் தயக்கமும்,யோசனையுமாய் அதை மீறித் தன் படிப்பைத் தொடரக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றிக் கொள்ளத் துடித்த ஆசையுமாய் நின்றவனின் தோளைப் பற்றியப் பெரியவர்,
“என்னை நம்புய்யா! நீ பரீட்சை எழுதத் தயாராகுறேண்டு ஒரு வார்த்தை சொல்லு! உன்னைய இவிங்க கண்லயே படாம, வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைக்குறேன்” என்று கூறுகையில், ‘தொப்பென’ சத்தம் கேட்க, அனைவரும் திரும்பிச் சத்தம் வரும் திசையை நோக்கினர்.
சிறுத்துக் கருத்த முகத்துடன், கோபத்தில் கண்ணீர் தேங்க, மூச்சு வாங்க நின்றிருந்த அழகரின் தாயின் கண்கள், அவனை வெறித்த வண்ணமிருக்க, மித மிஞ்சிய ஆத்திரம் கொடுத்த நடுக்கத்தில் கையிலிருந்தத் தூக்குச் சட்டியை அவர் கீழே விட்டதில், உள்ளிருந்தப் பழைய சோறும்,பச்சை வெங்காயமும், மண்ணில் சிதறி, சட்டிக் கடகடவென உருண்டு கொண்டிருந்தது.
மூக்கு விடைக்க ஆதங்கத்துடன் தன்னை மட்டுமே நோக்கும் அன்னையைக் கண்டதும் ‘ஐயோ’-வென மனம் சோர்வடைய, பட்டாளத்துக்காரரின் கைகளிலிருந்து விலகி நின்றவனைக் கண்டு, ஆங்கார மூச்சை வெளியிட்ட அவன் தாய், இடுப்பில் செருகி வைத்திருந்தக் கதிர் அறுவாளை, வெடுக்கென இழுத்து, அதே வேகத்தில் தன் கையை அறுத்துக் கொள்ளப் போக,
“ஆத்தா” எனப் பதறிய பெரியவரும்,அழகரும் அவரருகே செல்வதற்குள், விரைந்து அவரை எட்டியிருந்த ஆரனும்,விருமனும் அவர் கையிலிருந்ததைப் பறித்துத் தூர எறிந்திருந்தனர்.
“என்ன காரியம் செய்யப் பார்க்குறத்தா நீயி?, கதிரறுக்கத் தூக்குற அருவாளைக் கொண்டி உயிரறுக்கப் பார்க்குறியே! எம்புட்டுப் பெரிய பாவம் பண்ணத் துணிஞ்சிருக்க” – பதறிய குரலில் பெரியவர்.
அவர் புறம் திரும்பாது, அப்போதும் தன் மகனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தப் பெண்மணி, அவனிடம்,
“தலைச்சன்பிள்ளக் கையால கொள்ளி வாங்க நினைக்குறது அம்புட்டுப் பெரிய பேராசையாய்யா?, பத்து மாசம் சுமந்து,வலி பொறுத்து உன்னைப் பெத்தெடுத்தவளுக்கு,அந்தச் சின்ன சந்தோசத்தை அனுபவிக்கக் கூட அருகதை கிடையாதா?,” எனக் கேட்க…
அவர் தோளைப் பற்றித் தன்னோடு அணைத்து நின்ற அழகர், கலங்கும் அவர் கண்களைத் துடைத்து விட்டபடி,
“இப்ப என்னத்துக்கு ஆத்தா, கொள்ளி,அது,இதுண்டுப் பெரிய,பெரிய வார்த்தையெல்லாம் பேசுற?” எனத் திட்டியதும், அவன் கையைப் பற்றிக் கொண்டவர்,
“பெத்தவனைத் தூக்கிக் குடுத்துப்புட்டு உசுரு வாழ்ற தெம்பு எனக்குக் கிடையாதுப்பு! உன் படிப்பு, உனக்கு சொல்லித் தந்த சுயமரியாதைக்கு அர்த்தம் என்னாண்டு கூட எனக்குத் தெரியாது!, அது குடுக்குற ரோசத்துல, சாத்திரம் பேசிக்கிட்டு, நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு, நம்ம தகுதிக்கு மீறுன சக்தியோட போராட நீ வேணா தயாரா இருப்ப! ஆனா.. எப்ப உன் உசுரு போகுமோ-ண்டுன்னு பயத்தோடயே என்னால காலங்கழிக்க முடியாதுய்யா” என்றதும்,
எரிச்சலான மூச்சுடன் தன் தாத்தனை நிமிர்ந்து பார்த்த ஆரன், ‘இது வேலைக்காகாது’ என்பது போல் உதட்டைப் பிதுக்க, விருமன் ஒரு படி மேலேறி,
“ஆக, அவன் உசுரு இருந்தும் பொணமா நடமாடனும். அதேன் உன் ஆசை?” என்று திட்டியதும்..
“விருமா..” என அடக்கியத் தாத்தனைக் கண்டு கொள்ளாமல்,
“அவன் என்ன நல்ல சோறு திண்டு, நல்ல உடுப்பு உடுத்திக்கிட்டுப் பகட்டான வாழ்க்கை வாழவா படிக்கனும்ண்டு நினைச்சியான்?, ஓலைக் குடிசைக்குக் கீழ, ஓய்ஞ்சு போய் கிடக்குற உன்னைய, ஓட்டுக்குக் கீழ ஒய்யாரமா உட்கார வைச்சு, அழகு பார்க்கத் தான ஆசைப்பட்டியான்? வாய்க்கும்,வயித்துக்கும் நீ நடத்துற போராட்டத்தைப் பார்க்கச் சகிக்காமத்தேன படிச்சு முன்னேறமுண்டு நினைச்சியான்?, உம்மவனைத் தேடி வந்து இம்புட்டு வம்பையும் இழுத்து வைச்சது எங்க புள்ளைதேன்! உம்மவன், இதுவரை அந்தப்புள்ள முகத்தைத் தயக்கமில்லாம முழுசாக் கூட நிமிர்ந்து பார்த்ததில்ல! வயசுக்கான உணர்வுகளை அடக்கிக்கிட்டு, இலக்கை நோக்கி நடை போட நினைச்சவனுக்கு ஏன், இம்புட்டு இம்சையைக் குடுக்குறீக எல்லாரும்?, அந்தத் *****-களுக்குத்தேன் உன் மவனைப் பத்தித் தெரியாது! உனக்குமா தெரியாது?, அவிங்க உன் மவன் இதயத்தை நிறுத்தி உசுரைப் பறிக்க நினைக்கிறாய்ங்கண்டா, நீயி அவன் மூளையைப் புடுங்கி முடக்கிப் போட நினைக்குற!” என்று அதீதக் கோபத்தில் சத்தமிட..
அவன் கூறுவது அத்தனையும் புரிந்தாலும், இயலாமையில் பொங்கிய கண்ணீருடன், தன் மகனின் கையை இறுகப் பற்றிக் கொண்டப் பெண்மணி, அவன் கன்னத்தை வருடியபடி,
“மத்தப் பயலுக எல்லாம், மதிய சோத்துக்காக பள்ளியோடத்துக்குப் போய் வர்றையில, வறுமையைப் பொருட்படுத்தாம, நம்ம நிலைமையைத் தடையா நினைக்காம, பொறுப்பாப் படிச்சு, என் பொறப்புக்குப் பெருமை சேர்த்தவன்ய்யா நீயி! அப்பேர்ப்பட்ட உனக்கு நாஞ்செய்றது பச்சத் துரோகமுண்டு எனக்கு நல்லாப் புரியுது! ஆனா.. ஆனா.. எனக்கு வேற என்ன செய்றதுண்டும் தெரியலயே” எனக் கூற..
“நீ ஒன்னுஞ்செய்ய வேணாம்த்தா, பேச்சை விடேன்” என்ற அழகரிடம்..
“என் கழுத்தைப் பிடிச்சு மிரட்டுனாய்ங்கய்யா! உம்மவனைப் பாடைல ஏத்தனும்ண்டு ஆசையிருந்தா, அவனைத் தாராளமா பள்ளியோடத்துக்கு அனுப்புண்டு! பஞ்சாயத்துல ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நின்டப்பவே பாதி ஜீவன் பறி போயிடுச்சுய்யா! மீதி உசுரை நான் புடிச்சுக்கிட்டு நிற்கிறதே, உன்னை நல்லபடியா பாதுகாக்கத்தேன்” என்றதும்..
கண்களில் நில்லாமல் வழிந்தக் கண்ணீரைச் சுண்டியெறிந்த அழகர், “எங்காத்தா கஷ்டப்படக் கூடாதுண்டுதேன் நான் படிக்க நினைச்சேன்! ஆனா.. எங்காத்தாளைக் கஷ்டபடுத்தித்தேன் அந்தப் படிப்பு எனக்குக் கிடைக்குமுண்டா, அப்பிடியொரு படிப்பு எனக்குத் தேவையில்லங்கய்யா” என்றான் தீர்மானமாய்.
“ப்ச், டேய்..” என்ற ஆரனிடம்..
“இல்லண்ணே! என்னையப் பெத்ததைத் தவிர எங்காத்தா என்னத் தப்புண்ணே பண்ணுச்சு?, என் படிப்புப் பாதில நிண்டு போனதுக்கு, என்னைய விட அது தான் ரொம்ப வருத்தப்படும்ண்ணே! அதைப் போய் அதட்டி,மிரட்டிப் பஞ்சாயத்து வரை இழுத்து, ஊர் முன்னாடி அவமானப்படுத்தி…, வேணாண்ணே! இதுவரை என் ஆத்தாளுக்கு நான் தேடித் தந்தக் கஷ்டமே போதும்! இனியும் அதை நான் வருத்தப்பட வைக்க விரும்பல! என்னைய விட்ருங்கண்ணே” என்றான்.
மகனை அணைத்தபடிப் பெரியவரை நிமிர்ந்து பார்த்தப் பெண்மணி, “நீங்க ரொம்ப நல்லவருங்கய்யா! எல்லாரும் சமம்தேண்டு நினைக்குற உங்க எண்ணம் ரொம்ப உயர்ந்தது! உம்ம மவனுக்காக நீங்க நடத்துன போராட்டத்தை ஆச்சரியமாப் பார்த்துப் பெருமைப்பட்ட ஆளுதேன் நானு! ஆனா, அடுத்தவனுக்கு நடக்குறப்ப, இதுதேன் சரிண்டுத் தீர்மானமாச் சொல்ற மூளை, தான்-ண்டு வரும் போது, யோசிக்குற அறிவையெல்லாம் மனசுக்கிட்ட அடமானம் வைச்சிடுதுங்கய்யா! உங்களை நம்பி எம்மவனை படிக்க அனுப்புனா, ஊரு,ஊரா இருக்காதுங்கய்யா! எங்களை மன்னிச்சுருங்க! உம்ம பகுத்தறிவுக்குத் தீனியா எம்மவனை என்னால பலி குடுக்க முடியாது! அவன் வாழ்க்கைக்கு ஆண்டவன் வழி காட்டுவியான்” – இடையில் பேச முயற்சித்தக் கிழவருக்கு வாய்ப்பளிக்காமல், கடகடவெனப் பேசி முடித்து விட்டு மகனை இழுத்துக் கொண்டு நடந்து விட்டார்.
“ஆண்டவன் நொட்டுவியான்! ப்ச், என்னா தாத்தா இந்தம்மா?, கூறுகெட்டத்தனமாப் பேசுது?, ஊர்லயே இது மட்டுந்தேன் மவனைப் பெத்து வைச்சிருக்கிற மாறி ரொம்பத்தேன் அடை காக்க நினைக்குது!” – கடுப்பின் உச்சத்தில் விருமன்.
“இது எல்லாத்துக்கும் அந்தத் *****ப்பயதேன் டா காரணம்! அப்புராணிகளை மிரட்டிப் பயங்காட்டியிருக்கியான் பாரு! பொண்டுகப்பய! அவஞ்சங்கறுத்துக் குடலை உறுவி விட்டா, எல்லாப் பிரச்சனையும் தன்னால தீர்ந்துடும்” – மணிவண்ணன் மீது கொலை காண்டில் ஆரன்.
“அப்புறம் அவனுக்கும்,நமக்கும் என்னாடா வித்தியாசம்?, அந்தப்புள்ள நிலைல இருந்து யோசிச்சுப் பார்த்தா, அது செய்றதும் நியாயம்ண்டுதேன் டா படுது! அந்தப்பரதேசிப்பய மிரட்டலுக்குப் பயப்பட்ற அளவுக்கு அவன் பெரிய ஆள் இல்லண்டு, அதுக்கிட்ட யார் சொல்லிப் புரிய வைக்குறது?, பயத்துல மூளையை மூடி வைச்சுப்புட்டு அரண்டு,மிரண்டு போய்க் கிடக்குறவக் கிட்டப் போய், மீள்றதுக்கான வழியைச் சொல்லிப் புரிய வைக்குறதுல பிரயோசனமில்லப்பு!”
“அதுக்காகப் பின் வாங்கப் போறீகளா?, பஞ்சாயத்தன்னைக்குக் கருப்பனை விட்டு அவன் **** கிழிச்சிருக்க, எனக்குப் பத்து நிமிசம் ஆயிருக்காது! உங்களுக்காகத்தேன் இன்னைக்கு வரைக்கும் பொறுமையா இருக்கேன்! உம்ம மாப்ளயைத் தூண்டி விட்டு, நம்ம வீட்டுப்புள்ள மானத்தை வாங்கி, அப்பாவிப்பயப் படிப்பைக் கெடுத்து, அவகம்மாவை மிரட்டி, ஊருக்குள்ள சலம்பல் பண்ணி சாதிக்கலவரத்தை உருவாக்க வழி பார்த்திட்டிருக்கிறவனை இதுவரைக்கும் உசுரோட விட்டு வைச்சிருக்கிறதே ரொம்பத் தப்பு” – பொங்கிய நிலையில் விருமன்.
“பொறு டா! கோவத்தை அடக்கத் தெரிஞ்சவனாலதேன், காரியத்தை சாதிக்க முடியும்!, அவன் ஆத்தாளுக்கு நம்ம மேல நம்பிக்கை வரனும்! நம்பனுங்கிறத் தகிரியம் வரனும்!”
“அதுக்குள்ள அந்தப் பய பரீட்சையும் வந்துரும்”
எரிச்சலோடு கூறிய விருமனை முறைத்தப் பெரியவருக்கும் அழகரது அன்னையின் பேச்சு ஆயாசத்தைக் கொடுத்தது.
பரீட்சை நெருங்க ஒரு மாதகாலமே இருப்பதால், அழகரைச் சம்மதிக்க வைத்தாக வேண்டியக் கட்டாயத்தில் தினம் அவன் வேலை பார்க்கும் தோட்டத்திற்குச் சென்று வந்து கொண்டிருந்தனர் தாத்தன் மற்றும் ஆரனும்,விருமனும்.
அவ்வளவு சீக்கிரம் கிழவர் பின்வாங்கிவிட மாட்டார் என்பது புரிந்ததாலோ என்னவோ, மகனுக்குக் கேடயமாகக் அழகரின் தாய் அவனுடனே ஒட்டிக் கொண்டுத் திரிந்ததால், அவர்களால் அவனை நெருங்க முடியவில்லை.
அழகரது அன்னையின் செயலால், மூவரில் அதிகக் கோபமுற்றது விருமன் தான்.
“தாத்தா, வேகாத வெயில்ல இம்புட்டுப் போராட்டம் தேவையா உனக்கு?, நீ ஊ-ண்டு ஒரு வார்த்தை சொல்லு, பரீட்சையன்னைக்கு இந்தப்பயலை அலேக்காத் தூக்கிட்டு வந்துப் பள்ளியோடத்துல உட்கார வைக்குறேன்! அதிரடியைப் பின்பற்றுறதை விட்டுப்புட்டு இங்கன உட்கார்ந்து சத்தியாகிரகம் பண்ணிக்கிட்டுக் கிடக்குறதால ஒரு பிரயோசனமுமில்ல தாத்தா”
காட்டுக்கத்தலாய்க் கத்தியவனைக் கண்டுகொள்ளாமல் கிழவர், தோளிலிருந்தக் கருப்புத் துண்டை வைத்து நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி, அழகர் வரும் திசை பார்த்து அமர்ந்திருக்க,
“பார்த்தியா டா கிழவன?, சொந்தப் பேரன் பேச்சை மதிக்காம, எவனோ ஒருத்தனுக்காக *** பொசுங்கியும் கூடக் கல்லு மாறி உட்கார்ந்து கிடக்குறத?”
மண்டை காய நின்றிருந்த ஆரன், அவன் பேச்சில் கடுப்பாகி “வாயை மூட்றா கிறுக்குக் ***” என்று விட, ‘அடப் போங்கடா’ என்றவன், நடந்து அங்கிருந்த புளியமரத்தின் கீழே அமர்ந்து விட்டான்.
சற்று நேரத்தில் தன் அன்னையுடன் நடந்து வந்த அழகருக்கு, தனக்காகக் காலையும்,மாலையும் கால் நோகக் காத்திருக்கும் பெரியவரைக் கண்டு இரக்கம் உண்டானாலும், விடாது தொடரும் அவரது பிடிவாதத்தை எண்ணிக் கவலை வந்தது.
தன் எண்ணத்தைப் பிரதிபலித்த அன்னையின் முகத்தில் கலக்கம் சூழ்ந்திருப்பதைக் கண்டு, யோசனையுடன் மூவரையும் கடந்து சென்றான்.
“இந்தா போயிட்டியான்ல?, போக்கேத்தபய! காவயித்துக் கஞ்சியைக் குடிச்சுப்புட்டு லொங்கு,லொங்குண்டு நடந்து வந்து, பலியாக் காத்துக் கிடக்குற பெரிய மனுசனைக் கண்டுக்கக் கூட இல்ல! ஆனா, அவகாத்தா பேச்சை அச்சுப்பிசராம அப்பிடியேக் கேட்க எப்பிட்றா முடியுது இவனால?, அரியவகை உயிரனமா இருக்கியானே டா” – ஆரன் மற்றும் பெரியவரின் ஆயாசமும், விருமனின் லொட,லொடப் பேச்சும் தொடர்ந்து கொண்டிருக்க, சென்ற வேகத்திலேயேத் திரும்பி வந்தான் அழகர்.
தன் பேச்சைக் கேட்காது, அவன் சென்ற திசையை நோக்கிக் கொண்டிருந்த இருவரது கண்களும், மெல்ல விரிவதைக் கண்டுத் திரும்பி நோக்கினான் விருமன்.
அழகரைக் கண்டதும் உதட்டை வளைத்தவன்,
“என்னா டா?, ஒரு வாரமா, உங்காத்தா முந்தானைல விரலை முடிஞ்சிக்கிட்டு முறுக்கிக்கிட்டுப் போன, இப்ப என்ன முறிச்சிக்கிட்டு வந்திருக்க?” – என்று கேட்டான்.
“எலேய்! சும்மா இர்றா” – அவனது முகபாவனையை அவதானித்துத் தன் சகோதரனை அடக்கியபடி ஆரன்.
“ஏன் டா, ஆத்தா பின்னால ஆட்டுக்குட்டி கணக்கா இப்பிடி ஓட்றியே?, உன்னைய நம்பி வர்ற புள்ள பாடு கஷ்டம் போலயேடா”
“ஆமா, படிப்புக்கே இங்க வழியைக் காணோம்! புள்ளைக்குதேன் குறைச்சல் இப்ப! சும்மா இருங்கண்ணே” – எப்போதும் மூவரையும் பவ்யத்துடன், பயபக்தியாய் நோக்கும் அழகர், தன் பழக்கத்தை மறந்து, வழக்கத்தை மீறி முகம் சுழித்தபடி வந்து நிற்க,
“அம்புட்டு சுணக்கமா இருக்குண்டா, என்னத்துக்கு டா படிப்பு வேணாமுண்டுப் பிடிவாதம் பிடிக்குற?” என்று ஆரன் திட்டியதும், இயலாமை தந்த ஆயாசத்துடன் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன்.
பொறுமையாய்த் தன் செய்கையை பார்த்தபடி அங்கிருந்த செம்மண் திட்டில் அமர்ந்திருந்தப் பெரியவரின் அருகே சென்று அவர் காலடியில் மண்டியிட்டவன்,
“நான் இப்ப உங்க செய்கைக்கு உடன்பட்டு, பரீட்சை எழுதப் பள்ளியோடத்து வாசல்ல கால் வைச்சா என்ன நடக்கும்ண்டு தெரியுமாங்கய்யா?” எனக் கேட்டான்.
தொண்டையைச் செறுமிய பெரியவர் நீயே பதில் சொல் என்பது போல் பார்க்க,
“மணிவண்ணன் அண்ணே, முதல் காரியமா எங்காத்தாக் குரவளையைப் புடிப்பாரு! என் தகிரியத்துக்குப் பின்னால நிற்குறது நீங்கதேன்-ண்டு தெரிஞ்சா, ஊருக்குள்ள, சாதிவெறி புடிச்சுப் போய் அலையுற பூராப் பயலுகளையும் தூண்டி விட்டுப் பிரச்சனையை உண்டாக்குங்கடாண்டு ஏவி விடுவாரு” – இடையில் பேச வந்தப் பெருசைத் தடுத்து,
“நீங்க எனக்கும்,என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு குடுப்பீங்க, ஒத்துக்கிடுறேன்! ஆனா, அந்தண்ணே உண்டாக்குற பிரச்சனையையும், அதைத் தொடர்ந்து ஊர்க்காரய்ங்க அடிச்சிக்கிடுறதையும் உங்களாலத் தடுக்க முடியுமா” என்று கேட்க..
“எலேய்! எங்களை என்னக் கையாலாகதவிங்கண்டு நினைச்சியா?, அவிங்கக் கலவரம் பண்ணா, பண்ணிட்டுப் போறாய்ங்க! எருமைச்சாணில எள்ளுருண்டை புடிக்கிற பயலுகளுக்கு உம் பிரச்சனையெல்லாம் ஆட்டுப்புழுக்கையாத்தேன் டா தெரியும்! மாங்காய்க்கும்,தேங்காய்க்கும் கலவரம் பண்ற பயலுக, இந்தச் சம்பவம் நடந்திருக்காட்டியும், அடிச்சுக்கிட்டுத்தேன் கிடந்திருப்பாய்ங்க! நீ இதையெல்லாம் புதுசாவா பார்க்குற?, என்னாடா நீயி?” – என்ற விருமனிடம்..
“இப்ப நடக்குற பிரச்சனைக்கு நான் தொடக்கப்புள்ளியா இருக்குறதை எங்காத்தா விரும்பலங்கண்ணே! எத்தனை நாளைக்கு உங்களால எங்களுக்குப் பாதுகாப்புக் குடுக்க முடியும்?, எங்காத்தா குரவளைல கை வைக்கத் துணிஞ்சவருக்கு, கத்தியை வைக்க எம்புட்டு நேரமாகும்?, அப்பிடியொன்னு நடந்தா, எங்காத்தாப் பொணத்தைத் தாண்டி என்னால படிப்பைத் தொடர முடியுமா?, நான் படிச்சுப் பெரிய டாக்டராகப் போறதில்லங்கண்ணே!, எம் படிப்புக்காக நீங்க இம்புட்டுப் போராட வேண்டிய தேவையில்ல! தினம் உங்களைக் கடந்து போற எங்காத்தாளுக்குத் குற்ற உணர்ச்சியும்,வேதனையும் அதிகமாத்தேன்ண்ணே ஆகுது! மணிவண்ணன்ண்ணே வந்து சம்பவம் செய்ற வரை காத்திருக்காம, அதுவாவே உசுரை விட்ரும் போல இருக்கு! எனக்கு.. எனக்கு எப்பிடிப் புரிய வைக்குறதுண்டு தெரியல! என்னைய விட்ருங்கண்ணே!” எனக் கையெடுத்துக் கும்பிட்டவனைக் கண்டு.. ஆரன் விரைந்து, “கூறுகெட்டப்பயலே” என்றபடி அவன் கையைப் பற்றிக் கீழிறக்க..
கோபமிகுதியில் விருமன் பிடரியைப் பற்றியபடித் திரும்பி நின்று கொண்டான்.
அமைதியாய் அமர்ந்திருந்தப் பெரியவரைக் கண்டுத் துக்கம் எழ, குரல் கமற “ஐயா” என்றவனிடம்..
“இது உனக்கானப் போராட்டம் இல்லப்பு! எம் மனசுக்குப் புடிச்சவ-ண்டு நான் ஒரு ப******சியைக் கை காட்டுனப்ப, எங்காத்தாத் தூக்குலத் தொங்கி தொடங்கி வைச்சப் போராட்டம்! எம்மவன், ஒரு ச******சியை இழுத்துட்டு வந்து இவதேன் என் பொண்டாட்டிண்டு சொன்னப்ப, ஊரே ஒன்னு கூடி அவனைத் தொரத்துனதால வளர்ந்த போராட்டம், நான் வளர்த்த எம் பேரன் உடம்புல, ச******சி ரத்தம் ஓடுதுண்டு இன்னைக்குவரைக்கும், ஊர்க்காரய்ங்க அவனை அவமானப் படுத்துறதால தொடர்ந்துக்கிட்டிருக்கிற போராட்டம்! இந்த அத்தனை நிகழ்வுலயும் எதிர்த்து நிண்ட என்னால வெட்டத்தேன் முடிஞ்சதேத் தவிர, வேரறுக்க முடியலப்பு! நீ எனக்கொரு வாய்ப்புக் கொடு! எம் மனசை நிறைச்சவளுக்கு மதிப்புக் கொடுக்க, எம்மருமவளா வந்தவளை கௌரவப்படுத்த, எம் பேரனுக்கு நியாயம் தேடித்தர! கடைசியா, உன்னைய இந்தச் சுழலுக்குள்ள சிக்க வைச்ச எம்பேத்தியோட குற்ற உணர்ச்சியைப் போக்க”
-தொண்டையடைக்கப் பேசியப் பெரியவரை மூவரும் நெகிழ்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டிருக்க,
“நான் எடுக்கிற முயற்சியும்,உன் ஒத்துழைப்பும் ஒரே ராத்திரியில பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப் போறதில்லப்பு! ஆனா, தன்மானத்தை அடகு வைச்சு, சுயகௌரவத்தை மறந்து அடுத்தவன் காலடியில வாழ்றதுதேன் இயற்கை போலண்டு அறியாமையில திரியுற பயல்களுக்கு, உன் மாற்றம் நாமளும் மாறலாம்ங்குற மனதைரியத்தைக் கொண்டு வரும்! ஏழை,பணக்காரன்,கீழ்சாதி,மேல்சாதிண்டு பிரிவினைக்குள்ள குளிர் காய்ற குள்ளநரிகளுக்கெல்லாம் உன்னையக் கண்டாப் பயம் வரும்”
“ஏன்னா நீ ஒருத்தன் படிச்சுப் பட்டம் வாங்கி, உன் படிப்புக்கேத்த வேலையும் கிடைச்சு, கால் காசுண்டாலும், அவிங்களை அண்டாம, உன் திறமையால சம்பாதிச்சண்டு வை, சாக்கடைக்குள்ள பொழப்பு ஓட்றவனுக்குப் பொறந்தவன், இன்னிக்குக் காலாட்டிக்கிட்டு சம்பாதிக்கிறியாண்டு, உன் அக்கம்,பக்கத்துல இருக்கிற 4 பேரு, உன்னைய மாதிரி வளரக் கனவு காணத் தொடங்குவியான்! அவனைப் பெத்தவக, அதுக்கு வழி செய்யனுமுண்டு தூண்டி விடப்படுவாக! அந்த 4 பேரைப் பார்த்து இன்னும் 4 பேரு முன்ன வருவியான்!, அதனால, இவிங்க உருவாக்கி வைச்சிருக்கிற இடைவெளி குறையும்! நீ கிட்ட நெருங்கி வர்றதைப் பார்த்து, எதிராளி கை,கால் நடுங்குவியான்!, காலகாலமா இவிங்க சூத்திரனுக்கு என்னத்துக்கு சாத்திரமுண்டு, கட்டை விரலை வெட்டுறதுலயேதேன் குறியா இருப்பாய்ங்க! அவிங்கக் கேட்டதும் வெட்டிக் குடுக்க, நீ ஏகலைவனும் இல்ல! நாம துவாபர யுகத்துலயும் வாழல! விரலை வெட்ட நினைக்குறவன், தலையை வெட்டிப்புட்டு, அவேன் முண்டத்து மேல நடந்து முன்னேறிப் போய்க்கிட்டே இருக்கனும்”
-கிழவன் ஆக்ரோஷமாய்ப் பேசியதும், ஆரனும்,விருமனும் ‘இனியும் மறுப்பாயா’ என்பது போல் அழகரின் முகம் பார்க்க,
அவன் குழப்பமும்,யோசனையுமாய் தெளிவற்ற முகத்துடன் அவரை ஏறெடுத்துப் பார்த்து விட்டுத் தளர்ச்சியுடன் நடந்து சென்றான்.
“நீ தெளிவாப் பேசி அவனைக் குழப்பிட்ட தாத்தா”
அவன் நகர்ந்ததும், விருமன் தாத்தனிடம் கூற, அவன் செல்லும் திசையைப் பார்த்தபடி நின்றவரிடம்..
“ஒரு பக்கம் நீயி நியாயம் பேசியே அவனைக் கொல்ற! இன்னொரு பக்கம் அவன் ஆத்தா, பாசத்தைக் காட்டியே கொல்றா! அவன் என்னா தான் செய்வியான்?” என ஆரன் கேட்டதும்..
“விளையாட்டுல எப்பவும் ஒருத்தன் செயிச்சா, இன்னொருத்தன் தோத்துத்தேன்ய்யா ஆகனும்” என்ற கிழவனைக் கண்டு..
“ஏன்னா வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தேன் ராசா அப்டின்னுவ?, பெருசேய், மொட்டை வெயில்ல உனக்குத் தத்துவம் வேற! நடய்யா யோவ்! எப்பிடியும் நாளைக்கும் இதே நேரம் இங்கன வந்து காத்துக்கிடக்கனும்” – என்று புலம்பியபடி இருவரையும் இழுத்துச் சென்றான் விருமன்.
