உழிஞை-2
மூவரது புலம்பலையும் கண்டு நக்கலாகச் சிரித்தபடி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த மணிவண்ணனின் விழுது, வழக்கம் போல் அவனைத் தேடிச் சென்று பார்த்ததைப் பத்த வைத்தது.
தென்னந்தோப்பில் தேங்காய் எண்ணிக் கொண்டிருந்த மணிவண்ணன் தன் முன்னே முழு சிரிப்புடன் நிற்பவனைக் கண்டு, “என்னாடா?” எனக் கேட்டான்.
“அண்ணே, பெருசும்,அவரு பேராண்டிகளும் நம்ம குருசாமி தோட்டத்துப்பக்கம் தெனம் நடையா,நடக்குறாய்ங்கண்ணே! கொளுத்துற வெயில்ல கால் கடுக்கக் கிழவன் காத்துக்கிடக்குறதைக் காண்கையில, பனிக்கட்டி வைச்சா மாறி, கண்ணு குளுகுளுண்டு இருக்குண்ணே” – உடலை நெளித்துக் கொண்டுக் கூறியவனின் குரலிலிருந்த உற்சாகம் தனக்கும் ஒட்டிக் கொள்ளப் பெரிதாய்ப் புன்னகைத்தவன்,
“பட்ட அவமானம் கத்திரி வெயிலைக் கூடக் கண்டுக்காம நிற்கச் சொல்லுது போல! என்னத்துக்குடா அப்பிடித் தவம் பண்ணிட்டுத் திரியுறாய்ங்க?” எனக் கேட்டான்.
“ஒளிஞ்சு கிடக்குறவன் வாழ்க்கைல ஒளி வரட்டுமுண்டுதேன்”
“தலைமறைவாகிட்டவன் தலைக்கு என்னத்துக்குடா கிரீடம் சூடனும்ண்டு ஆசைப்பட்றாய்ங்க?, அவனே தலை போயிருமோங்குற பயத்துல, எங்கயும் தலை காட்டாம பதுங்கிக் கிடக்குறியான்!”
“தோல்வியை ஒப்புக்கத் தகிரிகியமில்லாம, கிழவன் அவன் பின்னாடி தொங்கிட்டுத் திரியுறாருண்ணே”
“தொங்கட்டும், தொங்கட்டும்! பள்ளியோடத்துப் படியேறுனா, உம்மவனைத் தொங்க விட்ருவேண்டு நான் அவன் ஆத்தாளை மிரட்டி வைச்சிருக்கையில, அவன் எப்பிட்றா, இந்தாளு பேச்சுக்குத் தலையாட்டுவியான்?”
அவன் பேச்சை ஆமோதித்து நகைத்தவன்,
“விலகி ஓட்றவனை விடாம புடிச்சுக்கிட்டுத் திரியுறாரு மனுசன்!” என்று கூற,
“பார்ப்போம்டா! கிழவன் எம்புட்டுத் தூரம் போறியாண்டு”
“தொங்கிப் போன மூஞ்சியோட கிழவன் தெனம் திரும்பி நடக்குறதைப் பார்க்க அம்புட்டு சந்தோசமா இருக்குண்ணே!,”
“எனக்கு அதைப் பார்க்கக் குடுப்பனையில்லாம போச்சே டா” – போலியாய் வருத்தப்பட்டவனிடம்,
“என்னத்துக்கு?, இப்பயே கிளம்பி வாண்ணே! ஊருக்குள்ள நடந்து வந்துக்கிட்டிருக்கிறவிங்க கூட ஒரண்டை இழுத்துட்டு வருவோம்”
“அப்பிடிங்குறியா?, சரி, வா போவோம்! நமக்கு அதை விட என்னா பெரிய வேலை?” – என்றவன் அவனோடு இணைந்து நடந்தான்.
விழுதின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு ஆடி,அசைந்து அலப்பரையைக் கொடுத்தபடி நடந்து சென்றவனுக்குத் தோதாக, பெருசும்,அவரது பேராண்டிளும் எதிரில் வந்தனர்.
“பொடி நடையா போறவரே! பொறுத்திருங்க நானும் வாரேன்! வேணாய்யா வீராப்பு” – நக்கலாகப் பாடிய மணிவண்ணனைக் கண்டுக் காதைத் தேய்த்துக் கொண்ட விருமன்,
“ஷ்ஷ்ஷ், எலேய்! நீயெல்லாம் பேசுனாலே உன் குரலைக் கேட்க நாராசமா இருக்கும்! இதுல பாட்டு வேறயா?, யானை பிளிர்ற மாறி இருக்குடா! தொண்டையைக் குறை டா டேய்!” என்றதும்,
“யானை தான் டா” எனக் காலரைத் தூக்கிக் கொண்டவன் “மதம் புடிச்ச யானை” எனப் புருவத்தை உயர்த்தியபடி வசனம் பேச,
“அதுசரி! அப்ப கருப்பனை இறக்கிற வேண்டிதேன்” – என்று விருமன் நக்கலடித்ததும், எரிச்சலுடன் முறைத்துப் பார்த்தவனைக் கண்டு, நெற்றியில் அடித்துக் கொண்டு சிரித்த விருமன்,
“எலேய், மந்தி மாறி மரத்துல தொங்கிக்கிட்டுக் கிடந்தவனுக்கு மத யானை-ண்டு பேரா?, ப்ச்! வழியை விட்டு நில்றா வென்று!” என்று கூற,
“சரிடா! நான் மந்தியாவே இருந்துட்டுப் போறேன்! இந்த மந்தி கூட மல்லுக்கு நிண்டு செயிக்க முடியாமத்தேனத் தாத்தனும்,பேராண்டிகளும் இப்பிடித் தெனம் வீட்டுக்கும்,தோட்டத்துக்கும் நடையா,நடந்துட்டுத் திரியுறீக?” – அவன் சிரிப்பும், கேலியுமாய்க் கூறியதும், ஆரன் பல்லைக் கடிக்க, விருமன் புருவம் சுருக்கியபடி,
“என்னாடா பூராப் பல்லும் இப்புடி பூச்சி புடிச்சுப் போய்க் கிடக்கு?, ஏன் டா இந்தப் பல்லை வைச்சுக்கிட்டா டா ஊர்ல ஒத்தப் பொம்பளைய விட்டு வைக்காம சல்லாபம் பண்ணிட்டுத் திரிஞ்ச நீயி?” எனக் கேட்டான்.
“அது.. எங்கண்ணேன் போன மாசம் வாய் வீங்கி வலில கிடந்தப்ப, சரியா பராமரிக்க முடியாதனால பல்லு இப்புடி ஆகிப் போய்ச்சு” – உண்மை விளம்பியாக விழுது.
“அடக்கருமாந்திரமே! ஏன் டா, உன் நொண்ணன் வாய்ல வரைஞ்சி விட்டுப் போனவன் எவண்டு இப்ப வரைக்கும் உங்களால கண்டுபுடிக்க முடியல போலயே”
“வாய்லயே விட்ருக்கியான்-ண்டா, கண்டிப்பா வெளியூர்க்காரனாத்தேன் இருப்பியான் பங்காளி” – ஆரன் ஒன்றுமறியாதது போல் கூறவும், அவனை வெடுக்கெனத் திரும்பி முறைத்துப் பார்த்தவனைக் கண்டு, சிரிப்பை அடக்கினான் ஆரன்.
“எனக்கென்னமோ உன் மேலதேன் பங்காளி சந்தேகமா இருக்கு?” – விருமன் பாய்ண்ட்டைப் பிடிக்க,
“ஏன் பங்காளி?” – அசராமல் கேட்டவனிடம்,
“குத்துச்சண்டை கத்துக்கிறேண்டு, கொஞ்ச நாள் மண்ணு மூட்டையக் குத்திக்கிட்டுத் திரிஞ்சேல! இவன் அடி வாங்குன ஆங்கிளைப் பார்த்தா, உன்-ட்ட குத்து வாங்குனவன் மாறிதேன் இருக்கு பங்காளி”
“அப்டியா டா?” – விருமன் கூறியதைக் கேட்டு நக்கலாய்ச் சிரித்தபடி ஆரன், மணிவண்ணனிடமே கேட்க, ஆம் என்றோ, இல்லையென்றோ ஒப்புக் கொள்ள முடியாமல் கடுப்புடன் நின்றவன், பேராண்டிகளின் பேச்சை ரசித்தவண்ணம் நின்றிருந்தத் தாத்தனைக் கண்டு எரிச்சலாகி,
“வாய் வீங்கிக் கிடந்தாலும், அந்த அழகரு பயலுக்கு வாய்க்கரிசி போட்டு வழியனுப்பிறமுண்டு நான் நினைச்சதை, நிறைவேத்திக் காட்டிட்டேன்ல” -பெருமை பீத்தியவனை முறைத்த ஆரனையும்,விருமனையும் கண்டுகொள்ளாமல், கிழவனை நோக்கி அவன்,
“புரோட்டா தட்டப் போறவனை வைச்சு நீயி புரட்சி பண்ணனுமுண்டு ஆசைப்பட்றியே பெருசு! வேரறுந்து கிடக்குற மரத்தைப் புதுசா நட்டு வைக்க நினைக்கிறது எம்புட்டுப் பெரிய முட்டாள்தனம்?, அவிங்க மண்ணு தரைல சொகுசு கண்டுக்கிட்டவிங்க! அவிங்களைப் போய் மாளிகைல உட்கார்த்தி வைக்குறப் பார்க்குறீரே?” எனக் கேட்க,
“நீ வேரறுத்த மரம் கீழயே கிடக்கட்டும்! அதை யாரு தொடப் போறா?, அடிமையாத்தேன் இருப்பேண்டு உன் காலைச் சுத்தி வர்றவிங்களைப் பத்தி எனக்கு எந்த அக்கறையுமில்ல! நான் அறுந்து கிடக்குற மரத்தோட விதையை முளைக்க வைச்சுப் புது விதியெழுத நினைக்கிறவன்டா” – பட்டாளத்துக்காரர் சட்டமாய்ப் பேசியதும், புருவம் உயர்த்தியவன்,
“அடேங்கப்பா! எந்தப் பக்கம் போனாலும் அணை கட்டுறீரே பட்டாளத்துக்காரரே! பூச்சி புடிச்ச விதை வேர் விடாது பெருசேய்! உனக்கு குடைச்சலைக் கொடுக்கனுமுண்டே நான் பிறவி எடுத்திருக்கையில, என்னை மீறி உன்னால மரம் வளர்த்துட முடியுமா? ” எனக் கேட்க,.
“இதுக்கு மேல-லாம் என்னால இவன் பேசுறதைக் கேட்க முடியாது தாத்தா” – என்ற விருமன் பாய்ந்து சென்றுத் தன் அகலக் கையால் அவன் குரவளையை நெரித்தபடி அவனுடன் சண்டைக்கு நிற்க,
அசராது அவன் கையை விலக்கப் போராடியவனிடம்,
“வாய்லயே வாங்கியும் கூட சவடால் பேச்சைக் குறைக்குறானா பாரு! ******* உன்னையெல்லாம் பேச விட்டு வேடிக்கை பார்க்குறதேத் தப்பு டா! உன் நாக்கறுத்து நாய்க்குப் போட்டாத்தேன் நீயெல்லாம் கட்டுப்படுவ” என்று சீற,
“அறு டா! அறு டா எலேய்!” என்று திமிறியவனைக் கண்டு “அண்ணேஏஏஏ” என அருகே ஓடப் பார்த்த விழுதின் சட்டையைப் பற்றிக் காலடியில் போட்ட ஆரன், அவனது குரவளையில் காலை வைத்து நசுக்கியபடி,
“பங்காளி, என்னா டா நீயி?, நீ புடிச்ச வேகத்துக்கு இந்நேரம் அவன் நாக்கு வெளிய தள்ளியிருக்க வேணாமா?, திறமை பத்தல டா உனக்கு” என்று ஏற்றி விட,
“இப்பப் பார்றா பங்காளி” என்ற விருமன் தன் விரல்களில் அழுத்தத்தைக் கூட்டியதில் முழி பிதுங்கிப் போன மணிவண்ணன், அவனது விரல்களைப் பற்றி அழுத்தத்தைக் குறைத்தபடி,
“என்னையக் கொன்-ண்டு தூக்கி எறிஞ்சுப்புட்டா, ஊரு சாந்தியடைஞ்சிரும்ண்டு தப்புக் கணக்குப் போடாதீக! நான் போனா, உம்ம வீட்லயே வைச்சு வளர்க்குறீகளே, உன் அயித்த புருசன், அவன் வருவியான் உங்களுக்கு எதிரியா! அவஞ்சங்கையும் இதே மாறி, அழுத்திற முடியுமா உன்னால?” – என மூச்சு வாங்கப் பேசுபவனைக் கண்டுத் தன் கையை எடுத்த விருமன், அவன் கன்னத்தில் ஓங்கி அறைய, நிலை தடுமாறி விழுந்தவனைக் கண்டு,
அங்கு சுள்ளி பொறுக்க வந்த பெண்கள் சிலர், களுக்கென சிரித்து விட்டுப் போக, ரோசத்துடன் நிமிர்ந்தவன்,
“எவ டி அவ இளிச்சவ?” என்றுப் பெண்களுடன் மல்லுக்கு நிற்கச் செல்ல, அவன் முதுகில் மிதித்த விருமன்,
“இவன் என்னா டா பங்காளி?, விட்டா சீலையைக் கட்டிக்கிட்டு அவளுகளோட குடுமிச்சண்டை போடக் கிளம்பிருவியான் போல” என்றான் விருமன்.
“அவன் கட்றானோ இல்லையோ, நாம அவனுக்குக் கட்டி விட்டே ஆகனும் பங்காளி” – என்று ஆரன் இடையில் வர,
“கட்டி விட்ருவோம்” என்று விருமன் கூறியதும், கோபத்தில் மணிவண்ணன், விருமனின் பல்லை உடைக்கக் கையை ஓங்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கையில் சிக்காமல் விலகியவனைக் கண்டு, அநியாயத்திற்கு வாயைப் பிளந்த ஆரன்,
“யாத்தே! பங்காளி, உன்-ட்டயே கை ஓங்குறியான் பார்றா” என்று கூவினான்.
கோபமிகுதியில் இரு கைகளையும் இறுக்கிக் கொண்டு, மூக்கு விடைக்க, கொலைக்காண்டுடன் மணிவண்ணனை நோக்கி நடந்து செல்லும் விருமனை, மேலும் ஏற்றி விடும் பொருட்டு,
“***** செத்தியான் அவன் இன்னைக்கு! விட்றாத டா பங்காளி அவனை! தூக்குடா டேய்.. தூக்கு டா தூக்கு டா” என்று கத்தி,‘சர்ர்ர்ர்ர்ர்,சர்ர்ர்ர்ர்’ என விரலை மடக்கி உற்சாகமாய் விசில் அடிக்க,
‘சுத்தப் பைத்தியக்காரப் பயலுகளா இருப்பாய்ங்க போல’ எனக் குழம்பிப் போய் இருவரையும் மாற்றி,மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மணிவண்ணனை நெருங்கி, இருகைகளாலும் அவனை அலேக்காகத் தூக்கித் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த விருமன்,
“எம் பங்காளி டா நீயி!!! எந்துணைப்பொறப்பு டா நீயி” எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த ஆரனின் குரல் கொடுத்தத் தூண்டுதலில், தன் கைகளில் திமிறியவனை தொப்பென அருகிலிருந்த சேற்றில் எறிந்தான் விருமன்.
அப்போதும் அடங்காமால் ‘சர்ர்ர்ர்ர்ர்ர்,சர்ர்ர்ர்ர்ர்’ என விசிலடித்த ஆரன் கையைத்தட்டிக் கொண்டாட, இருவரையும் கண்டுத் தலையிலடித்துக் கொண்ட பெருசு,
“பொம்மை வைச்சு விளையாட்ற வயசா இது?, கூறுகெட்டப் பயலுக” என முணுமுணுத்தபடி நகர்ந்து விட்டார்.
தலைக் குப்புற சேற்றில் விழுந்து கிடந்தவனைக் கண்டு கைகொட்டிப் பத்து நிமிடம் கெக்கே,பெக்கேவெனச் சிரித்த இருவரும்,
“இன்னைக்கு இது போதும்! நாளைக்கும் இதே நேரத்துக்கு, இதே இடத்துக்கு வந்துர்றா எலேய்” என்று விருமன் மணிவண்ணனை நோக்கிக் கத்த,
“பங்காளி,பங்காளி, அதேன், இன்னைக்கு நீ அடிச்சுட்டேல! நாளைக்கு என் முறை! நான்தேன் அடிப்பேன்” என்ற ஆரனிடம்,
“அப்டிண்டா, நாளைக்கழிச்சு நானு”
“அதுக்கடுத்த நாள் நானு” – தோளில் கையைப் போட்டுக் கொண்டு இருவரும் நான்,நீ என பங்கு பிரித்துக் கொண்டு செல்வதைப் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்த விழுது, ஆரனின் செருப்புத்தடம் பதிந்தக் கழுத்தை நீவியபடி, மணிவண்ணனின் அருகே சென்றான்.
முகத்திலிருந்த சேற்றை வழித்துக் கொண்டிருந்தவனிடம்,
“அண்ணே….” என அழைத்தவன், அவனருகே குனிந்து,
“கிழவன் உங்களை பொம்மை-ண்டு சொல்லிட்டுப் போறாருண்ணே” எனப் பம்மிய குரலில் கூற, பல்லைக் கடித்த மணிவண்ணன், ஆத்திர மிகுதியில், விழுதின் பிடரியைப் பற்றி சேற்றில் அழுத்தித் தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டான்.
அனைவரும் வீடு வந்து சேர்கையில், இவர்களை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தாள் புவியரசி.
ஆர்வமாய்த் தங்களது முகம் பார்ப்பவளிடம், விருமன்,
“இந்தாடி, 15,20 நாள்ல பரீட்சையை வைச்சுக்கிட்டு, படிக்காம என்னத்துக்குடி திண்ணைல உட்கார்ந்து பெராக்கு பார்த்துட்டுக் கிடக்குறவ?” எனக் கேட்க,
தன் முகம் பாராமல் நடக்கும் தாத்தனைக் கண்டுப் புருவம் சுருக்கியபடி,
“படிக்கனும் மாமா” என்றவள், தயங்கிய வண்ணம்,
“அ..அ..அவன், அவன் படிக்குறானா?” எனக் கேட்டாள்.
இருந்த எரிச்சலில் அவளை ஏகத்துக்கும் முறைத்த விருமன்,
“என்னாடி ஆளாளுக்கு மனியம் பண்ணிட்டுத் திரியுறீங்க?, ஏன் அவேன் படிச்சாத்தேன் நீ படிப்பியோ?” என்று எகிற,
“அ..அப்டின்னா.. அப்டின்னா, அவன் படிக்கப் போறதில்லயா?” – கண்ணில் நீர் தேங்க விடைத்த மூக்குடன் கேட்டவளைக் கண்டுகொள்ளாது,
“சண்டைக்கு நிற்குறவனைக் கூடச் சமாளிச்சுறலாம் போல! கண்ணீரோட நிற்குறவளுகளைக் கண் கொண்டு பார்க்குறது பெருந்துயரமால்ல இருக்கு” என்று முனகியபடி முன்னே நடந்து விட்டான்.
தன் பேத்தியின் முகத்தைத் தவிர்க்க முடிந்தக் கிழவனால், அவளது கண்ணீரைத் தவிர்க்க முடியாது போய் விட,
“கண்ணைத் துடை கழுதேய்ய்” என்று திட்டியவர், “அவன் ஆத்தாளை, அவிங்க வகையா மிரட்டி வைச்சிருக்கையில, அவன் அம்புட்டு சீக்கிரம் ஒத்துக்கிடுவானா?, பொறுமையா இரு தாயி! நீ இந்தக் கவலையெல்லாம் விட்டுப்புட்டு பரீட்சைக்குத் தயாராகு! நான் பார்த்துக்கிடுறேன்” என்று சமாதானப்படுத்த,
அவளருகே நின்றபடி அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அகல், “பாவம் பார்க்குறதா, இல்ல இவளைப் பளார்ண்டு அறையுறதாண்டு ஒரே குழப்பமா இருக்கு தாத்தா” என்று கூற, அவள் தலையில் தட்டிய ஆரன்,
“புள்ள மேல கையை வைச்சிண்டா, வெட்டிருவேன்” என்று திட்டிச் சென்றான்.
கண்களைத் துடைத்தபடி நடந்து சென்ற பேத்தியைக் கண்டவாறு நின்று கொண்டிருந்தவரின் பார்வை, தரையில் கிடந்த செய்தித்தாளின் மீது பட்டது.
அருகே சென்று செய்தித்தாளைக் கையில் எடுத்தவரின் விழிகள், ‘இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாமுக்கு வரும் திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்’ என்ற தலைப்பையும், கல்வித்தகுதிக்கு நேராக 10/12-ம் வகுப்பில் 40% மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றிருந்த செய்தியையே சுற்றி வந்தது.
அடுத்த சில நொடிகள் சுருக்கியப் புருவங்களுடன் அதையே வட்டமிட்டுக் கொண்டிருந்தவரின் கண்களில் பளிச்சென விளக்கெரிய, செய்தித்தாளை மடக்கிப் பத்திரப் படுத்திக் கொண்டு நகர்ந்து சென்றார் பெரியவர்.
இரவு முழுக்க வெகுவாக யோசனை செய்ததன் விளைவாக, விடியும் விடியாத அந்தக் காலைப் பொழுதில், தோளைச் சுற்றித் துண்டைப் போர்த்திக் கொண்டு வாசலில் இறங்கி நடந்தவரின் கால்கள், நேரே அழகரது உறவினரின் வீட்டின் முன்பு சென்று நின்றது.
காலைக்கடனைக் கழிக்க வேண்டிக் கண்ணைக் கசக்கியபடி வெளியே வந்த அழகர், வீட்டின் முன்பிருந்த வேப்பமரத்தடியில் கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு, வானம் பார்த்து நின்றிருந்த மனிதரைக் கண்டதும், வியப்புடன் அவரருகே சென்று நின்றான்.
“ஐயா…”
அவன் குரலில் சிந்தனை கலைந்து அவன் புறம் திரும்பியவர்,
“வந்துட்டியா ராசா?” என்றவர், “நல்ல தூக்கமா?” எனக் கேட்க, மெல்லத் தலையாட்டியவன், சுருக்கியப் புருவங்களுடன்,
“நீ..நீங்க எங்க இம்புட்டு வெள்ளன, இங்கன வந்து நிற்குறீக?, எனக்காகவாக் காத்துக் கிடக்கீக?” – என்றுத் தயக்கமாய் கேட்க,
ஆம் என்றவர் அவனது இரு கைகளையும் பற்றிக் கொண்டு, நேரடியாக,
“பள்ளியோடத்துக்குப் படிக்கப் போனாத்தேன அவிங்க அக்கப்போரைக் கூட்டுவாய்ங்கண்டு யோசிக்குற?,பேசாம பட்டாளத்துல சேர்ந்துக்குறியா?” எனக் கேட்டதும், விழிகளைப் பெரிதாய்த் திறந்து, விரிந்த வாயுடன் அவரை நோக்கினான் அழகர்.
உதிக்கத் துவங்கியிருந்த சூரியன், தன் கதிர்கரத்தால் சூழலை அணைத்து நிற்க, இருவரும் ஒரே புள்ளியில் இணைந்து விட்டதன் அடையாளமாக.. ஆச்சரியத்தைத் தாங்கி நின்ற அழகரின் முகம், வெளிச்சம் படர்ந்திருந்த கிழவரின் முகத்தில் நிழலாய்ப் படிந்தது.
“பட்டாளத்துல சேர்க்கப் போறீகளா?” – ஆச்சரியம் நிறைந்த குரலில் ஒரு சேர வினவிய ஆரனையும், விருமனையும் நிமிர்ந்து பார்த்தப் பெரியவர், ஆம் எனத் தலையாட்டினார்.
முல்லைப் பெரியாறிலிருந்து வைகை அணைக்குப் பயணமாகிக் கொண்டிருக்கும் நன்னீரைக் கண்டபடி கால்வாயோரமிருந்த வேப்பமரத்து நிழலில் நின்றிருந்தனர் நால்வரும்.
“ஏன் தாத்தா?” – ஆரன்.
பேரனின் கேள்வியில் பெருமூச்சை வெளியிட்டப் பெருசு, “உள்ளூரு,வெளியூருண்டு இவனை நாம, எங்க படிக்க வைச்சாலும், நம்ம **** பின்னாடியே சுத்துற பயலுக, கடைசி வரைக்கும் நம்மளுக்குக் குடைச்சலைக் குடுக்கத்தேன் பார்ப்பாய்ங்க!அதனால, அவிங்களுக்கு எட்டாத உசரத்துக்கு இவனை அனுப்பி வைக்குறதுதேன் நல்லது”
“சரிதேன்! ஆனா.. இவனைப் பட்டாளத்துக்கு அனுப்ப இவகாத்தா எப்பிடி சம்மதிக்கும்?” – விருமன்.
“அதுக்கிட்ட யாரு இப்ப அனுமதி கேட்டு நிற்கப் போறா?”
“ஐயா….” – அதுவரை அமைதியாயிருந்த அழகர் அதிர்ச்சியுடன் அவர் முகம் பார்க்க,
“என்னாடா?, எலேய்! உங்காத்தாளோட இப்போதைய மனநிலையே, உன்னைய அவ கண் பார்வைக்குள்ளயே வைச்சுப் பாதுகாக்கனும்ங்குறதுதேன் டா!, மனுசப் பய அண்டாதத் தனித்தீவுக்கு உன்னைய கூட்டிப் போயிட்றேண்டு நான் சத்தியம் பண்ணிச் சொன்னாக் கூட உங்காத்தா, என்னைய நம்பி உன்னைய அனுப்பி வைக்கப் போறதில்ல. அவட்டப் போய் எப்பிட்றா பேசி அனுமதி வாங்க முடியும்?” – என்று நிதர்சனம் பேசினார் பெரியவர்.
அவரது பேச்சை ஆமோதித்தபடி குழப்பமும், யோசனையுமாய் நின்ற அழகரிடம்,
“நீ இம்புட்டு யோசிக்காதப்பு! என்ன ஆனாலும் சரிதேண்டு, ஒரே முடிவா எடு!பிற்பாடு நீயி, பட்டாளத்துல சேர்ந்துட்டங்குற விசயம் தெரிய வந்தா, இந்த உலகத்துலயே அதிகமா சந்தோசப்படப் போற ஒரே ஆளு உங்காத்தாதேன்! அந்த சந்தோசத்துல, நீ அவக்கிட்ட சொல்லிக்காம போன கோவம்,வருத்தமெல்லாம் காத்தா கரைஞ்சு போயிரும்! கவலைப்படாதப்பு” என்றார் கிழவர்.
“பெருசு சொல்றது சரிதேன் டா அழகரு! உங்காத்தாட்ட அனுமதி வாங்கிதேன், நீயி பட்டாளத்துக்குப் போகனுமுண்டு நினைச்சியின்னா, அது நீ பாடைல போற வரை நடக்காது!” – கிழவரின் பேச்சை ஆமோதித்தபடி விருமன்.
“அண்ணே” – என்றவனின் குரலில் கலக்கத்தைக் கண்ட கிழவர்,
“முடிவெடுக்கிற பொறுப்பு உனக்கானதுதேன்ய்யா! நாஞ்சொன்னது வெறும் யோசனை மட்டுந்தேன்! இது ஒத்துவருமா,இல்லையாண்டு ஆராய வேண்டியது நீதேன். நீ என்னா முடிவெடுத்தாலும் நான் உன் பக்கம் நிப்பேன்!” என்றார்.
குனிந்தத் தலையுடனே நின்றவனிடம்,
“உம்மனசுல இருக்குறதை வெளிப்படையா சொல்லு ராசா! இது வேணாண்டு நீ நினைச்சண்டாலும், பரவாயில்ல! நாம வேற மார்க்கத்தை யோசிப்போம்.” – என்றார்.
“இல்ல,இல்ல,இல்லங்கய்யா” என அவசரமாய் மறுத்தவன், “மறுக்குறதுக்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லங்கய்யா! ஒரு பக்கம், எங்காத்தாளை நினைச்சுக் கவலையாத்தேன் இருக்குண்டாலும், நா..நான்.. பேராசைப் பட்றேனோண்டு பயமாவும் இருக்குதுங்கய்யா! நான்… இதுக்கெல்லாம் தகுதியானவன் தானா?” – தயக்கமும்,சுய இரக்கமும் போட்டி போட.. விடைத்த மூக்குடனும், பொங்கக் காத்திருக்கும் கண்களுடனும் கேள்வி கேட்டவனின் தோளைப் பற்றியப் பெரியவர்,
“உன்னைய விட யாருக்குய்யா பெரிய தகுதி இருந்துறப் போகுது?, இவன் படிச்சு, உடுப்பு போட்ற வேலைக்கா போகப் போறயான்-ண்டு கேட்டு, உன் படிப்பைக் கெடுத்துப் பாடையேத்த நினைச்சப் பரதேசிங்க முன்னாடி, நீ மிலிட்டரி உடுப்போடக் கம்பீரமா வந்து நிற்கனும்ய்யா! காட்டுலயும்,கழனிலயும் வெறுங்காலோட வெந்து நிற்குற பயலுகளுக்கு செருப்பெதுக்குண்டு செருக்கோட கேள்வி கேட்டவிங்க முன்னாடி, நீ பூட்ஸூ காலோட நடந்து போகனுமுய்யா! வெயிலுக்குக் கட்டுன தலைப்பாகையை, இந்தத் **** பயலுகளைக் கண்டதும், கக்கத்துல ஒளிச்சு வைச்சுக்கிற சனங்களுக்கு, நீ போட்டுக்கிட்டு வர்ற தொப்பி, போராடுனா ஜெயிக்கலாமுங்குற நம்பிக்கையைக் கொடுக்கனும்ய்யா! கும்பிட்ற சாமில இருந்து, சுடுகாடு வரை அத்தனைலயும் வேற்றுமையை உருவாக்கி வைச்சு விளைஞ்சு நிற்குற பயலுக, உன் மிடுக்கைக் கண்டு வெந்து சாகனும்ய்யா” – என்றார்.
பொங்கி நின்ற விழிகள், அவர் பேசப் பேச, உடைப்பெடுத்துக் கொண்டு, சரசரவெனக் கண்ணீராகக் கன்னத்தில் வழியத் தொடங்க,
“நான் ஏன்ய்யா இம்புட்டுப் போராடனும்?, வலது கைல சோறு திண்டு, இடது கைல ***** கழுவுற சாதாரண மனுச இனம் தானய்யா எல்லாரும்?, மண்ணோட மண்ணா மக்கிப் போனப்புறம் மிஞ்சப் போற எலும்புக்கூட்டுக்குள்ள என்னத்துங்கய்யா இம்புட்டு வேற்றுமை?, பூமி ஆடுனா, எல்லாரும்தேனய்யா உள்ள போகனும்! வெள்ளம் வந்தா, எல்லாரையும்தேனய்யா அடிச்சுட்டுப் போகும்? சாதி பார்த்து யாரையும் இயற்கை, இங்க விட்டு வைக்கப் போறதில்லயே! படைச்ச இயற்கையே எல்லாரையும் சமமாப் பார்க்கையில, இங்க 70,80 வருசம் வாழ்ந்துப்புட்டு பாடைல போகப் போறவிங்களுக்குள்ள என்னத்துக்குய்யா இம்புட்டுப் பிரிவினை?, சாதி,சாதிண்டு இப்பிடிக் கொடி தூக்குறாய்ங்களே!, ஒரு சாதிக்காரய்ங்க பூராப்பேரும் ஒற்றுமையாத்தேன் இருக்காய்ங்கண்டா, அந்த மணிவண்ணன் அண்ணன் என்னத்துக்குய்யா உங்களை எதிரி மாறி பார்க்கனும்?, நீங்க அவரை விடப் பணக்காரருன்றதாலயா?, ஆக, ஒரே சாதிக்காரனுக்குள்ளயும் ஏழை,பணக்காரண்டு பிரிவினை இருக்கு?, என் ஒரு ஆளை அடக்கி, எஞ்சாதிக்காரய்ங்களை ஒடுக்கிப்புட்டா, இந்த ஓட்டம் நின்னுடுமுண்டு அந்தண்ணன் கணக்குப் போடுறது எம்புட்டுப் பெரிய முட்டாள்தனம்?, என்னோட நிண்டு போயிடுமா அவரு வெறி?, எனக்கடுத்து உங்களை செயிக்கனுமுண்டு நினைப்பாரா?, இப்பிடியே வாழ்க்கைல ஒவ்வொருத்தர் பின்னாடியும் துரத்திட்டு ஓட்றதால அவரைப் போல ஆளுங்களுக்கு, என்னதேன்ய்யா கிடைக்குது?” – இறுக்கம் தாங்காது அவனது இளவயது, இளகித் துடிப்பதைக் கண்டு,
“தங்களோட வக்கிரக்குணத்தைத் திருப்திப்படுத்திக்கிறதைத் தவிர அவிங்க செய்கைகளுக்குப் பின்னாலப் பெரிய நோக்கமெதுவும் இல்லப்பு! ரெண்டு குழந்தைங்க கைல ஒரே முட்டாயைக் கொடுத்தேண்டு வை, தான் கைல இருக்கிறதை விட்டுப்புட்டு, பக்கத்துல இருக்குறது கைல என்னா இருக்குதுண்டுதேன் எட்டிப் பார்த்துக்கிட்டிருக்கும்! இது பிறவிக் குணம்! வயசும்,அனுபவமும் மாற,மாற, ரெண்டு பேர் கைல இருக்குறதும் ஒன்னுதேன, அவனும் திங்கட்டும்,நானும் திங்குறேண்டு நினைக்கனும்! அதை விட்டுப்புட்டு, அவன் கைல இருக்குறதைத் தட்டி விடப் பார்க்குறதும், பறிச்சுத் திங்க நினைக்குறதும் வக்கிர குணத்தோட வெளிப்பாடே தவிர வேறென்ன?, கேடு நினைக்குற பூராப் பயலுகளுக்கும் ஒரு நிமிச மன திருப்தியைத் தவிர, பெருசா நிம்மதியோ, சந்தோசமோ கிடைக்கிறதில்லப்பு! இது புரிஞ்சும்,தெரிஞ்சும் அந்தப் போதைல இருந்து வெளி வர அவிங்க விரும்புறதில்ல! இவிங்களால இயல்பான மனுச வாழ்க்கையே வாழ முடியாதுப்பு! இவிங்க மிருக நிலையையும் கடந்தவிங்க!” – என்றார் பெரியவர்.
பெரியவரின் கூற்றைக் கேட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவனின் பார்வை, அந்த வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்த நாக சிலையின் மீது படிந்ததும்,
“இவிங்களையெல்லாம் அந்தக் கடவுள்தேன்ங்கய்யா கேக்கனும்” என்றான்.
“எது, இந்த பாம்புச் சிலையா கேக்கப் போகுது? எலேய்! இவிங்கதேன் ஆகாத,போகாத கதையைச் சொல்லி பாம்புக்கெல்லாம் சிலை வடிச்சு சாமிண்டு கும்பிட்றாய்ங்கண்டா, நீ என்னாடா? அறிவிலித்தனமா யோசிக்கிற?, அதுக்கு 2 பாம்பைப் புடிச்சுக் கொண்டு போய் அவிங்க காலடில விட்டா, பாம்பாவது கேக்கும்!, எலேய் அழகரு, பகுத்தறிவுக்குத் தீனி போட்ற விஞ்ஞானத்தைத்தேன் டா நம்பனும்! மெய்ஞானமெல்லாம் வயசு இருக்கையில ஆட்டம் போட்டுப்புட்டு, வயசு போய், தள்ளாட்டம் வந்ததும் முக்தி வேணும்,மோட்சம் வேணும்ன்னு அலையுற முடிச்சவிக்கிப் பயலுகளுக்குத்தேன்! டேய், சாமி,பேய்,பூதம்,பாவம்,புண்ணியம் இதெல்லாம் சுத்தப் பொய் டா”
பெரியவர் தன் கருப்புத் துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு அருகிலிருந்தத் திட்டில் வாகாக அமர்ந்தபடி அவனுடன் வாய் பேசத் துவங்கி விட்டதைக் கண்ட ஆரனும்,விருமனும்,
“ப்ச், கிழவன் தொடங்கிட்டாப்ல” என்று உச்சுக் கொட்டிக் கொண்டனர்.
“நீ நல்ல படியா படிக்கனும், நல்லா வரனுமுண்டு உங்காத்தா ஏறாத கோயிலா?, கும்பிடாத சாமியா?, அவ பஞ்சாயத்துல பக்கத்துணை யாருமில்லாம, ஒத்தைல நிண்டப்ப, எந்தச் சாமி உதவ வந்துச்சு?, படிப்பை இழந்து, வாழ்க்கையே இருண்டு போனதா, நீ இடிஞ்சு போய் கிடக்கையில, எந்தச் சாமி வந்து விளக்கேத்தி வைச்சுச்சு?”
“அதேன் எனக்குச் சாமியா நீங்க வந்திருக்கீங்களேய்யா”
“பார்றா! உங்கண்ணுக்கு நான் சாமியாத் தெரியுறேன்! எனக்குள்ள இருக்குறக் குற்ற உணர்ச்சிக்கு வடிகாலா, உன்னைப் பார்க்குற எங்கண்ணுக்கு நீதேன் சாமியாத் தெரியுற! சக மனுசனுக்குள்ளக் கடவுளைத் தேடுறதுதேன் டா தர்மம்!”
பதில் கூறாமல் புன்னகைத்தான் அவன்.
“ஹ்ம்ம்! இந்த பாம்பு சிலைக்கு வைக்குற முட்டையைக் களவாண்ட்டு போய் திண்டுருந்தாக் கூட இந்நேரம் நீயி, புஷ்டியா வந்திருப்ப டா! ஏன் டா விருமா, பாம்பு முட்டை திங்குமுண்டு எந்த முட்டாப்பய டா சொன்னது?, இதுக்குப் பின்னால இருக்குற உண்மை என்னாண்டு தெரியுமா?,”
“உன் அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது! நீயே சொல்லு” – திட்டில் அவரருகே அமர்ந்தபடி விருமன்.
“மனுசன் காட்டுல வாழ்ந்த காலத்துல, பாம்போட எண்ணிக்கை அதிகமாயிருந்ததால, அதோட இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத்தேன் முட்டையையும்,பாலையும் புத்துல ஊத்தத் தொடங்குனியான்! ஏன்-ண்டா, பெண் பாம்பு வெளியிட்ற பிரத்யேக வாசனையைத் தேடித்தேன் ஆண் பாம்பு, இனப்பெருக்கம் செய்ய அது பின்னாடி போகுமாம்! அந்த வாசனையைப் போக்கத்தேன் அந்தக்கால மனுசப்பயலுக இந்த வேலை பார்த்திருக்காய்ங்க! ஆனா, இந்தக் காலத்துல இருக்கிறவிங்க, இதுலயும் மத சாயம் பூசி வைச்சு, பூராப் பேரையும் மரமண்டையாக்கிட்டிருக்காய்ங்க!”
“கிழவனுக்குத்தேன் எம்புட்டு அறிவு!” – போலியாய் வியந்தபடி விருமன்.
“நீ சிலையைத்தேன் வணங்குவேன்-ண்டு அடம்புடிச்சண்டா, நான் ஒரு மனுச சிலையைக் காட்றேன்! உலகத்துலயே அதிக சிலை இருக்கிற மனுசன் அவரு! அம்பேத்கர்-ண்டு பேரு வைச்சவரு! தாழ்த்தப்பட்டவன் படிக்கிறதெல்லாம் தப்பு-ண்டு தள்ளி நிற்கச் சொன்னவிங்க முன்னாடி, இனி இங்க தப்பு எது,சரி எது-ண்டு தீர்மானம் பண்ணப் போறதே நாந்தேன்டா-ண்டு பெரிய,பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு வந்து, நாட்டுக்கே சட்டம் எழுதுனவரு! மனுசங்களுக்கிடைல உயர்ந்தவன்,தாழ்ந்தவண்டு பிரிவினையை உண்டாக்கி வைச்சுருக்கிற, உங்க மதமும் வேணாம்,மனுதர்மமும் வேணாமுண்டு புரட்சி பண்ணுனவரு! சமத்துவத்துக்காக சாகுற வரை போராடுனவரு! நீ வணங்கனும்ண்டா, அவரை வணங்கு!”
“சாமி என்னாடா சாமி! மனுசன் உருவானப்ப எந்தச் சாமியைக் கும்பிட்டு வாழ்க்கையை ஓட்டுனியான்! அப்ப உயிர் வாழ்றது ஒன்னுதேன் அவன் நோக்கமாயிருந்துச்சு! இப்ப ஆசை கூடிப் போச்சு! பயம் வந்துருச்சு! தன்னை மீறி ஒருத்தன் இருக்கான்டு ஜோடிச்சு வைச்சா, எல்லாம் கட்டுக்குள்ள வந்துடும்ண்டு நம்புறாய்ங்க!”
“பெருசேய்! எங்க ஆரம்பிச்சு எங்க போயிட்டிருக்குறீரு!, இவனைப் பட்டாளத்துல சேர்க்க வழி சொல்றதை விட்டுப்புட்டு, கதை பேசிக்கிட்டிருக்குறீரு” – விருமன் கடுப்படித்ததும்,
“வர்ற திங்கக்கிழமை மதுரைல ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடக்குது! இவனோட பத்தாப்பு சான்றிதழைக் குடுத்து நான் இவன் பேரைப் பதிஞ்சு வைச்சுட்டேன்! நல்ல வேளை, இவனுக்குப் பதினெட்டு வயசுன்றதால பதியுறதுல எந்தப் பிரச்சனையும் வரல! எண்ணி ஏழே நாள்தேன் இருக்கு! அதுக்குள்ள இவனை உடற்தகுதித் தேர்வுக்குத் தயார் படுத்தனும்” என்றார்.
“எங்க வைச்சு எப்பிடித் தயார் படுத்துவீக?, நம்மள மொசை புடிச்சுக்கிட்டுத் திரியுற மணிவண்ணன் பய கண்ணுல சிக்காம, இதையெல்லாம் எப்பிடித் தாத்தா சாத்தியமாக்குறது?” – ஆரன்.
“அவனுக்குத் தெரிஞ்சா என்னா இப்ப?, தலையையா சீவிருவியான்?, யோவ் கிழவா, அந்தப் போக்கேத்தவனுக்குப் பயந்துக்கிட்டு நாம ஒளிஞ்சு,மறைஞ்சு திரியனுமுண்டு எந்த அவசியமுமில்ல! அவன்லாம் ஒரு ஆளுண்டு!” – விருமன் சீறலாய்க் கூற..
“எலேய்! முட்டாப்பய மாறி பேசாத டா! வீண் பிரச்சனைல நேரத்தையும், தெம்பையும் விரயம் பண்றதை விட்டுப்புட்டு, விவேகமா யோசிச்சு செயல்பட வேண்டிய வேளை டா இது! சண்டை மூண்டா,அவன், இவகாத்தாகாரியோட ஒரண்டை இழுப்பியான்!, ஆத்தாளுக்கு ஏத்துக்கிட்டு இவன் மறுபடி, பின் வாங்கிட்டியான்னா என்னா பண்ணுவ?, இப்ப நம்ம நோக்கம் இவனைப் பட்டாளத்துல சேர்க்குறதுதேனே தவிர, மூளையில்லாதவிங்களோட மல்லுக்கு நிக்குறது இல்ல” – ஆரன் திட்டி அவனை அடக்கினான்.
அவன் பேச்சை ஆமோதித்தப் பெரியவர், “இம்புட்டுக் கோவப்பட்டா காரியஞ்சாதிக்க முடியாதுப்பு” எனப் பேரனிடம் கூற..,
அவன் தனது முசுட்டு முகத்தை மாற்றி, “சரி, என்னா செய்யனும்ண்டு சொல்லு” என்றான்.
“அந்தப் பரதேசிப்பய கைல சிக்காம, ஊர்க்காரய்ங்க கண்ணுல படாம, விவகாரம் இல்லாம, இந்த விசயத்தை வினயமா முடிக்க, ஒருத்தரால மட்டுந்தேன் நமக்கு உதவ முடியும்”
“யாரைச் சொல்ற தாத்தா?”
“எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சவகதேன்! போன முறை பிரச்சனை நடந்தப்ப, சுமூகமா சமாளிக்க, பங்காளிக ரெண்டு பேரும் ஃபோன் போட்டு ஆளைக் கூட்டி வந்தீகளே! இந்த முறையும் அவகட்டயே போய் நிற்க வேண்டிதேன்!” – கிழவன் தன் பேராண்டிகளின் முகம் பார்க்காமல் கூறி முடிக்க,
புருவத்தைச் சுருக்கிய இருவரும், பின் யார் என்பது புரிந்ததும், முழுப்பல்லையும் காட்டியபடி,
“யோவ் பெருசு, சரியான ஆளுய்யா நீயி! காலுக்கடில கன்னிவெடியை வைச்சுக்கிட்டு, உனக்கெல்லாம் கலகலப்புக் கேட்குது” – என்று கேலி செய்யத் துவங்க, கஷ்டப்பட்டு முகத்தில் கோபத்தைக் கொண்டு வந்தப் பெரியவர்,
“எலேய்! என்னா பேச்சுடா பேசுறீங்க?, காதும்,காதுமா வைச்சு முடிக்க வேண்டிய விசயம் டா இது! யாருக்கும் தெரியாம ரகசியமா பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கையில, பொறுப்பான ஆளைப் பிடிக்க வேண்டியது முக்கியமில்லயா?,” என்று தவ்வியவர் ஆரனைக் கைக் காட்டி “முதல்ல இவகப்பன்தேன் நினைவுல வந்தியான்! அவந்தேன் வாடிப்பட்டிக்கு மாற்றல் வாங்கிக்கிட்டு வந்துட்டானே! அங்க தங்க வைக்கலாம்ண்டு யோசிச்சேன்! ஆனா, ஊருக்குள்ள அழகரு நடமாட்டம் இல்லண்டு தெரிஞ்சா, முதல்ல அவிங்க சந்தேகப்படப் போறது நம்மளத்தேன்! ஒரு வேளை விசயம் தெரிய வந்தா, அவனை நாம ஒளிச்சு வைச்சுக்கிற இடமா அவிங்க நினைக்கப் போறது உங்கப்பன் வீட்டைத்தேன்! அதேன் இவ கிட்ட உதவி கேட்டா என்னாண்டு தோணுச்சு” என்றார்.
“எப்பிடியோ ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கப் பார்க்குறீரு” – விருமன் விடாமல் கேலி செய்ய,
“இந்த வயசுல மாங்காய் அடிச்சு, நான் மயிறா புடுங்கப் போறேன்! வாயை மூட்றா எலேய்! வாயை மூட்றா! அவ முன்னாடியும் இப்பிடிப் பேச்சு பேசி வைச்சுக் காரியத்தைக் கெடுத்துப்புடாதீங்கடா! சின்னப்பயலுகளா!” – என்று புலம்பியபடி பெரியவர் எழுந்து நடந்து செல்ல,
சிரிப்பும்,பதற்றமுமாய் நின்ற அழகரை மேலிருந்து கீழாக நோக்கிய விருமன், அவனது உயரத்தை அளந்தபடி “நீ இருக்கிற உசரத்துக்கு, கண்டிப்பா செலக்ட் ஆயிருவ டா” என்றவன், கலக்கமான அவன் முகம் கண்டு, அவன் தோளைத் தட்டி “கண்ல இன்னும் என்னாடா பயம் தெரியுது?, நீயி பட்டாளத்துக்காரனாகப் போறவன் டா! திமிரும்,தகிரியமும் உடம்பு முழுக்க ரத்தம் மாறிப் பாயனும்! புரியுதா?” என அதட்ட, சிரிப்பும்,கவலையுமாய்த் தலையசைத்தவன்,
“பயமா இருக்குண்ணே” எனக் கூற, அவன் தோளில் கைபோட்டுத் தன்னோடு இறுக்கிக் கொண்ட ஆரன்,
“என்னத்துக்கு டா பயம்?, காலைல உதிக்குற சூரியன், பொழுது சாய்ஞ்சா மறைஞ்சுதேன் டா ஆகனும்! சூரியனுக்கே இந்தக் கதின்றப்ப, இவிங்கள்லாம் எம்மாத்திரம்! மறைஞ்சு,அழிஞ்சு,மொத்தமா அவிங்க இல்லாம போற காலம் சீக்கிரமே வரும்! விளைவுகளை யோசிக்காம இறங்கு! நல்லதே நடக்கும்” என்றான்.
தானும் அவனது தோளில் கையைப் போட்டுக் கொண்ட விருமன், “அடுத்துப் பெருசு சேதி சொல்றவரைக்கும், எப்பயும் போல தோட்ட வேலைக்குப் போய் வா டா! யாருக்கும் சந்தேகம் வராம பார்த்துக்க” என்று எச்சரிக்க, சரியெனத் தலையாட்டினான் அழகர்.
அழகரை அனுப்பி விட்டு மூவரும் கலாமணியம்மாளின் பத்திரிக்கை அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.
அவர்களது வருகையைப் பற்றித் தெரிந்து கொண்டதும், சற்றும் தாமதிக்காமல் தேடி வந்தவரிடம், மூவரும் வணக்கம் வைக்க, பதிலுக்கு வணக்கம் கூறிப் புன்னகைத்தவர்,
“இங்கயே உட்கார்ந்து பேசலாம்ங்களா?, இல்ல வெளிய எங்கயும் போகலாமுங்களா?” எனக் கேட்டார்.
பேராண்டிகள் இருவரும் தாத்தனின் முகம் பார்க்க,
“இல்ல, இல்ல, வெளிய வைச்சுப் பேசுறது தோதுப்படாது! விசயம் அப்பிடி! வினைபுடிச்சப் பயலுக எவங்காதுக்கும் நாம பேசப் போற சேதி எட்டிறக் கூடாது” என்றார் பெரியவர்.
“சரி, வாங்க” என்றவர் அருகிலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்று மூவரையும் அமர வைத்தார்.
“எதுவும் குடிக்குறீகளா?” – எனக் கேட்டவரிடம்,
“இல்ல, வெளிய இளநீ குடிச்சுப்புட்டுத்தேன் வந்தோம்! உங்களுக்கொன்னு வாங்கலாம்ண்டு சொன்னதுக்கு, பெருசுதேன் வேணாம்ட்டாப்ல” – என விருமன் கூற, பல்லைக் கடித்தப் பெரியவர் அவனை முறைத்துப் பார்த்தார்.
சிரிப்பை அடக்கியபடி ஆரன், “இல்ல, முதல்,முதல்ல உங்களைப் பார்க்க வர்றோம்ல, அதேன் வெறுங்கைய வீசிக்கிட்டு வர வேணாம்ண்டு” எனத் தன் பங்குக்கு பேச, பேராண்டிகளின் பிடரியைப் பிளக்கத் துடித்தக் கையை அடக்கியபடி, “ம்க்க்க்கும்” எனத் தொண்டையைச் செறுமிய பெரியவர்,
“வந்த விசயத்தைப் பத்திப் பேசலாம்ங்களா?” எனக் கேட்டார்.
மென் புன்னகையுடனே அமர்ந்திருந்தவர், “சொல்லுங்க” எனக் கேட்க, சுருக்கமாக அழகரின் விசயத்தையும், தனது முடிவையும் எடுத்துக் கூறினார்.
“இந்தத் தேர்வு முறையெல்லாம் முடிஞ்சு, அவன் பட்டாளத்துல சேர்ற வரை அவனை நம்பகமான இடத்துல தங்க வைக்கனும்” – பெரியவர்.
“அது ஒன்னும் பிரச்சனை இல்ல! அவன் என் வீட்லயே தங்கிக்கட்டும்! இந்தப் பத்திரிக்கை ஆபீஸ் பக்கத்துலதேன் என் வீடு! ஊருக்கு ஒதுக்குப்புறம்ங்குறதால, யாருக்கும் சந்தேகம் வராது! பாதுகாப்பாவும் இருக்கும்” – என்று அவர் கூறியதும், ,பேராண்டிகளிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவனை எங்கேனும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துத் தருவாரென்று அவர்கள் நினைத்திருக்க, அவர் தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்வதாகக் கூறியதும், அவரை வியப்புடன் நோக்கினர்.
“என்ன அப்பிடிப் பார்க்குறீக?, உங்க தாத்தனே நேரடையா இறங்கி இப்பிடியொரு காரியத்தைச் செய்றாருண்டா, அதுக்கு உறுதுணையா இருந்து, ஒத்துழைக்க வேண்டியது, என் கடமையாச்சே!”
பற்கள் தெரியாத சிரிப்புடன், அவர் பட்டெனக் கூறி விட, வாயைப் பிளந்த இருவரும், “ஓஓஓஓஓஓஓஓ” – என ஒரு சேரக் கூற, முகம் மாறாமல் இருக்க, பிரம்மப்பிரயத்தனம் செய்தபடி அசையாது அமர்ந்திருந்தார் பெரியவர்.
“சரி, அழகரு ஊரை விட்டுப் போகப் போறதுக்குக் காரணமா, என்னக் கட்டுக்கதை கட்டலாம்ண்டு இருக்கீக?” – கலாம்மாள் கேட்டதும்,
யோசித்த மூவரில் ஆரன், “கடுதாசி எழுதி வைக்கச் சொல்லலாமுங்கம்மா! படிப்பு கைய விட்டுப் போன மன உளைச்சல் தாங்காம, வீட்டை விட்டுப் போறதா சொல்லி, இரக்கம் வர்றா மாறி, அவன் கையால அவகாத்தாளுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லுவோம்! படிக்க முடியாதத் துக்கத்துலதேன் அவன் எங்கயோ போயிட்டியாண்டு ஊருக்குள்ளக் கதை கட்டி விடுவோம்!” என்று கூற,
“மணிவண்ணன் நம்புவானா?” எனக் கேட்டார் அவர்.
“நம்பாட்டிப் போறியான்ம்மா!, எங்க வழியா விசயம் வெளிய வர சாத்தியமில்லண்டு தெரிஞ்சும், எங்க முதுகை மோப்பம் புடிச்சு, காரணத்தைக் கிரகிக்க முயற்சி பண்ணுவியான்! அவனால அம்புட்டுத்தேன் முடியும்!” – அசால்ட்டாய் விருமன்.
“இல்ல! அழகரு காணாம போய்ட்டியாங்குற விசயம் தெரிஞ்சதும், அவன் முதல்ல கை வைக்கப் போற இடம், அழகரோட ஆத்தா குரவளைதேன்” – பெரியவர்.
“ரைட்டு” – கலாம்மாள்.
“ஊருக்குள்ள இந்த விசயம் அடங்குற வரை, மணிவண்ணன் அழகரைத் தேடுறதை நிறுத்துற வரை, அவன் குடும்பத்துக்குப் பாதுகாப்பு பண்ணிக் குடுக்க வேண்டியது என் கடமை” – பெரியவர் கூறியதும், அதை ஆமோதித்தவர்,
“அதுக்கு வழி செய்ய வேண்டியது எம் பொறுப்பு! எனக்குத் தெரிஞ்ச ஆளுங்க ரெண்டு பேரை அனுப்பி அவகளைக் கண்காணிக்க ஏற்பாடு பண்றேன்! அழகரு குடும்பத்துக்கு, மணிவண்ணனால எந்தப் பாதிப்பும் வராம, அவக பார்த்துப்பாக” என்றார்.
பிரச்சனையாகக் கருதி தான் கூறும் ஒவ்வொன்றிற்கும் பட்,பட்டென சுலபமா முடிவெடுத்து, ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் கலாமணியம்மாளைக் கண்டு, உள்ளே ஜெர்க் ஆனாலும், அதை முகத்தில் காட்டாமல் பெரியவர் அமர்ந்திருக்க, பேராண்டிகளிருவரும் விரிந்த விழிகளுடன் அவரது வாய் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களது பார்வையைக் கண்டுப் புன்னகைத்தவர், “அதிகாரம் கைல கிடைச்சாலொழிய அகராதி எழுத முடியாதுண்டு, அனுபவம் சொல்லிக் குடுத்துச்சு! அதேன், அடக்கி ஆள நினைச்சவிங்களைக் கண்டு அச்சப்படாம, போராடி, எனக்கான அகராதியை நானே எழுதப் பழகிக்கிட்டேன்!” என்றார்.
கர்வமாய்,பெருமையாய் இருந்தது பெரியவருக்கு! அவரது ஆளுமை உணர்த்திய தெய்வீக நிலையில், பரவசமாய் அமர்ந்திருந்தவரிடம்..
“மிலிட்டரி செலக்ஷனுக்கு அவனுக்குப் பயிற்சி கொடுக்க, ஆள் ஏற்பாடு பண்ணனும்ண்டா சொல்லுங்க” என்று கலாம்மாள் கேட்க,
“அதுக்கெதுக்கு ஆளு?, அதேன் எங்க தாத்தா இருக்கார்ல! அவரு எம்புட்டுப் பெரிய பட்டாளத்துக்காரரு தெரியும்ல?” என்று பீற்றினான் விருமன்.
“பெரிய்ய்ய்ய பட்டாளத்துக்காரர்தேன்! ஆனா, இப்ப வயசாய்ப் போச்சுல்ல?” என்று அவர் சிரிப்புடன் கேட்க,
அவரது முதல் வார்த்தையில் மீசையை நீவி விட்டுக் கொண்ட பெருசு, அடுத்த வார்த்தையில் மூக்கை விடைக்க..
“அந்தம்மாதேன் உடைச்சுப்புட்டுச்சே?, அப்புறம் என்னத்துக்கு பெருசு விடைக்குற?” – அவர்புறம் சாய்ந்து முணுமுணுத்த விருமனை அவர் முறைக்க, சிரிப்பை அடக்கினார் கலாம்மாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிடுவேன்! உங்களுக்கு அந்தச் சிரமம் வேணாம்” – என்று வீராய்ப்பாய்க் கூறினார் பெரியவர்.
“அப்ப சரி” என்றவர் “வேற?” என்பது போல் பார்க்க,
“வேற எதுவுமில்ல! இன்னிக்கு ராத்திரியே அழகரைக் கிளப்பிடுவோம்!” என்ற பெரியவரிடம் சரியெனத் தலையாட்டியவர்,
“உங்க முயற்சில என்னையும் ஈடுபடுத்திக்கிட்டதுக்கு நன்றி! விசயத்தைக் கேள்விப்பட்டப்போ நான் நேரா அந்தம்மாட்டயே போய் பேசிப் பார்த்து, அந்தப்பய படிப்புக்கு ஏதாவது வழி செய்யனும்ண்டு நினைச்சிருந்தேன்! ஆனா, நீங்க யோசிச்ச விதம்,எடுத்த முடிவு ரெண்டுமே ரொம்பச் சரியானதா இருக்கு! இது எனக்கான கடமை! உங்களை விட நான் பெரியாள் இல்ல! ஆனாலும் என்னைத் தேடி வந்ததுக்கு நன்றி! விசயம் எந்த வழிலயும் வெளிய வராம பார்த்துக்கிறது என் பொறுப்பு” என்றார்.
“நீங்க பெரிய ஆள் இல்லயா?, அது சரி!” என விருமன் நொடித்துக் கொள்ள..
“நான் அம்புட்டுப் பெரிய ஆளா இருந்தா, ஊரு ஏன் இன்னும் 40,50 வருசத்துக்கு முன்னால இருந்த அதே நிலைமைலயே இருக்கு?, எம்புட்டுப் பெரிய ஆள் வந்தாலும், அம்புட்டுச் சீக்கிரம் இது எதையும் மாத்திட முடியாது! உங்களுக்குத் தெரியாததில்ல! நீங்கதேன், இந்தச் சாக்கடையைச் சுத்தப்படுத்த ஆரம்பத்திலிருந்தே உழைக்குற ஆளு! அப்டிப்பார்த்தா, அனுபவத்துல நீங்க, என்னைய விடப் பெரிய ஆளுதேன்” என்றார் பெரியவர்.
அவர் பேச்சை ஆமோதித்த ஆரன், “நீங்க ரெண்டு பேருமே குணத்துல பெரிய ஆளுகதேன்!” என்றான் இடைபுகுந்து.
அதன் பின்பு அழகரை எப்போது,எங்கே வைத்து, அவரது வீட்டிற்கு அழைத்துக் கொள்வது என்பதைப் பற்றிப் பேசி விட்டு மூவரும் புறப்பட்டனர்.
பேராண்டிகளை முன்னே அனுப்பி விட்டுப் பின் தங்கிய பெரியவர், கலாம்மாளின் முகத்தைத் தயக்கமாக ஏறிட, என்னவென்பது போல் புருவம் சுருக்கி அவர் முகம் பார்த்தார் அவர்.
“இ..இல்ல, என் பேரன்ய்ங்க கேலி பேசுறதையெல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம்! சின்னப் பயலுக அவிங்க!” என்று கிட்டத்தட்ட அசடு வழிந்த நிலையில் அவர் கூற,
அடக்கப்பட்டப் புன்னகையுடன் அவரை நோக்கியவர் பதில் கூறாமல், மெல்லிய முறுவலுடன் கடந்து சென்று விட, தலையைச் சொரிந்தபடி வெளியே வந்த பெரியவரிடம் பேராண்டிகள் இருவரும் என்னவென்று வினவினர்.
“உங்க கேலி பேச்சையெல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம்ண்டு சொன்னேன்! பதிலே பேசாம, போய்ட்டா டா”
குழம்பிய முகத்துடன் கிழவன் கூறுவதைக் கேட்டு இருவரும் புருவத்தைத் தூக்கி, அவரை முறைத்துப் பார்த்தனர்.
“ஆனா, கடைசில ஒரு சிரிப்பு சிரிச்சா! அதுக்கு என்னா அர்த்தம்ண்டே புரியலயே டா!” – யோசனையோடு நின்றவரைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்ட விருமன்,
“இந்தாளு அழகரைப் பட்டாளத்துக்கு அனுப்புன மாறிதேன்” என்று முனகியபடியே முன்னே சென்று விட,
ஆரன் அவரிடம், “காலம் போன காலத்துல இதெல்லாம் உனக்குத் தேவையாண்டு அந்தம்மா சிரிச்சுருக்கும்! ஏன் பெருசேய், இப்புடி அவமானப்பட்ற?” என்று கூறியபடி, அவரைக் கூட்டிச் செல்ல,
“அப்டியா டா சொல்ற?” எனப் பல்லைக் கடித்தப் பெருசு “சிறுக்கி மவ, சிரிச்சு என்னைய அசிங்கப்படுத்திப்புட்டாளே டா!, அடுத்த முறை அவளைப் பார்த்துக்கிறேன்” என்று மீசையை நீவிக் கொள்ள,
“எங்கிட்டு! அந்தம்மாதேன் அசராம உன் கண்ணைப் பார்த்துப் பேசுது! உம் பார்வை, அந்தம்மா மூக்கு,வாயைத் தாண்டி ஒரு இஞ்சு கூட முன்ன நகர மாட்டேங்குது” – என்று ஆரன் அவமானப்படுத்தியதும், முகத்தைச் சுருக்கியபடி நெஞ்சை நீவிக் கொண்ட பெருசு,
“இந்தத் தயக்க மசுறெல்லாம் நமக்குத்தேன் போல டா! இவளுக சும்மா கன் மாறி அசராம நிற்குறாளுகளே” என்று புலம்ப, அவரை முறைத்த ஆரன்,
“பெருசு, நமக்குண்டு என்னையும் உன் கூடக் கோர்த்துக்கிற! இளமை ஊஞ்சலாடுறதா நினைப்பா உனக்கு” என்று திட்டியபடியே அவருடன் நடந்தான்.
அடுத்த சில மணி நேரத்தில் அழகருக்கு சேதி கடத்தப்பட, சொல்லி வைத்தபடிக் கடுதாசி எழுதி வைத்து விட்டு நள்ளிரவில், யார் கண்ணிலும் படாமல், ஊரை விட்டு வெளியேறினான் அழகர்.
வீட்டிலிருப்பவர்கள் உட்பட யாருக்கும் சந்தேகம் வந்து விடக் கூடாதென்பதற்காக தாத்தனும்,பேராண்டிகளும் அவனுடன் செல்லாது தேங்கி விட, மதுரை சென்றிறங்கிய அழகரை, கலாமணியம்மாள் அவருடன் அழைத்துக் கொண்டார்.
விடிந்ததும், அழகர் வீட்டை விட்டுச் சென்று விட்ட விவரம் தெரிய வர, ஒப்பாரி வைக்காத குறையாக அழுது புலம்பிய அழகரின் தாய், கையில் தென்பட்டக் கடுதாசியை எடுத்துக் கொண்டு நேரே பட்டாளத்துக்காரரின் வீட்டை நோக்கிச் சென்றாள்.
“ஐயா…. எம்மவனைக் காணோம்ங்கய்யா! இப்பிடிக் கடுதாசி எழுதி வைச்சுப்புட்டு வீட்டை விட்டுப் போய்ட்டான்ய்ங்கய்யா!” – புலர்ந்தும்,புலர்ந்திராதக் காலைப் பொழுதில் சரியாகக் கொண்டையிடப்படாதக் கூந்தல், தோளில் சரிந்து கிடக்க, இழுத்துச் செருகிய சேலையும்,அழுத முகமுமாய் வந்து நின்றவரைக் கண்டு கவலை எழுந்தாலும், அடக்கி,
“என்னாம்மா சொல்ற?” எனப் பதறியபடி அருகே வந்த பெரியவர், அவர் கையிலிருந்தக் கடுதாசியை வாங்கிப் பிரித்துப் படித்தார்.
“கையில ஒத்த ரூவா இல்லாம, எங்க போனானோ, என்ன ஆனானோ! உண்ணாம,உறங்காம விட்டத்தை வெறிச்சுக்கிட்டுக் கிடந்தவன், நாளானா சரியாய்ருவியாண்டு நம்புனேனேய்யா! இப்பிடி என்னைய ஏமாத்திப்புட்டுப் போயிட்டானே! ஐயா.. எப்பிடியாவது எம்மவனைக் கண்டுப்பிடிச்சுக் குடுங்கய்யா! அவன் படிப்பைத் தொடரனும்ண்டு கால் கடுக்க அவன் பின்னாடியே திரிஞ்சீகளே! உங்க பேச்சைக் கேட்காம பிடிவாதமா இருந்ததுக்கு எனக்கு இந்தத் தண்டனையா?,”
அந்த அதிகாலை நேரத்தில், வாசலில் நின்று அலறிக் கொண்டிருந்த அழகரது அன்னையின் குரலில், பெரியவரின் வீட்டிலிருந்த அனைவரும் என்னவோ,ஏதோவென நினைத்து வெளியே வந்தனர்.
அழகரைக் காணவில்லை என்ற செய்தி கேட்டுப் புவியரசி, அரண்டு அதிர்ந்து, கலங்கிப் போய் சிலையாய் நிற்க, ‘ஷ்ஷ்ஷ், இவ ஒருத்தி, கூறு கெட்டவ’ என்றெண்ணிக் கொண்ட அகலருவி, ‘கிழவன், அவனை ஓட விட்டு வேடிக்கை பார்க்குற ஆள் இல்லயே! என்னவா இருக்கும்?’ என்ற யோசனையுடன் தன் தாத்தனையே நோக்கினாள்.
“பதறாதம்மா! பதறாத! எங்க போயிருக்கப் போறியான்! தான் செய்றது தப்புண்டு உணர்ந்து, பொழுது சாய்றதுக்குள்ள அவனே திரும்பி வந்துருவியான்! அழுகாத! உன் கண்ணீரோட மதிப்பு தெரிஞ்சவன் அவன்! உன்னைய அழ விட்டு வேடிக்கை பார்க்க முடியாது அவனால! வந்துருவியான்ம்மா அழுகாத” எனப் பெரியவர் அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில்,
“கடுதாசியை நல்லாப் படிச்சுப் பாருங்க பட்டாளத்துக்காரரே! வீட்டை விட்டுப் போறேண்டு போட்ருக்கானா?, இல்ல இந்த உலகத்தை விட்டேப் போறேண்டு போட்ருக்கானா?”
அழகரது அன்னை எழுப்பியக் குரல் கேட்டுக் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒருவன் கேள்வி கேட்க,
“ஐயோ”-வென அதிர்ந்து விழித்த அவனது தாய் சரிந்து, மடிந்து விழ, அருகிலிருந்த பெண்கள் அவரைத் தாங்கிப் பிடிப்பதைக் கண்டுப் பதறிப் போன புவியரசி, வீட்டுக்குள் ஓடிச் சென்று ‘எல்லாம் என்னாலதேன்! என்னாலதேன்!’ எனத் தலையில் அடித்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழ,
உள்ளே ஓடிய பேத்தியையும், தரையில் சரிந்து கிடந்த பெண்மணியையும் கண்டுப் பல்லைக் கடித்தப் பெருசு,
“இதுங்களுக்காக யோசிச்சு முடிவெடுத்தேன் பாரு! என்னையச் சொல்லனும்! கூறுகெட்டச் சிறுக்கிக, பொசுக்கு,பொசுக்குண்டுக் கண்ணீரைச் சிந்துறதுலயே குறியா இருக்காளுக” என்று மனதுக்குள் திட்டியபடி பேராண்டிகளிடம் கண்ணைக் காட்டினார்.
“சாகனும்ண்டு நினைச்சிருந்தா, அவகாத்தாளை பஞ்சாயத்துல நிற்க வைச்சு நீங்க பதம் பார்த்தப்பவே, அவன் செத்துருப்பியான்! சும்மா புரளியைக் கிளப்பி விடாம, போய் கஞ்சி ஆக்குற வழியைப் பாருங்க! கிளம்புங்க” என்ற விருமன் கூட்டத்தை அப்புறப்படுத்தி விட்டு அருகே வந்தான்.
“அழகரு அப்பிடி முடிவெடுக்கிற ஆளு கிடையாதும்மா! அவன் எதிர்த்துப் போராடி வாழ ஆசைப்பட்டவன்! அம்புட்டு சீக்கிரம் வானோட போறவன் கிடையாது! எவன்,எவன் சொல்றதையோக் கேட்டுப் பதறிக்கிட்டுத் திரியாத! அவன் எங்க போனியாண்டு முதல்ல கண்டுபுடிப்போம்! எந்திரி” என்ற பெரியவர், “யம்மா மீனாட்சி, ஒரு கிண்ணத்துல கஞ்சி காய்ச்சிக் கொண்டு வா தாயி” என்று மருமகளிடம் கூற,
“வழி செய்வாண்டு நம்புனவன் வழியை, நானே அடைச்சுப்புட்டு, அவனை அடை காக்கத் துப்பில்லாம, இப்பிடி தூக்கிக் குடுத்துப்புட்டேனே! எம்மவன் எங்க போனானோ! உண்டானோ, உறங்குனானோ! ராசா… அய்யா..” என்று அழுது கரைந்தவரை ஆரனும்,பெரியவரும் பாவமாய்ப் பார்க்க, விருமன் எரிச்சலுடன் பார்த்தபடி நின்றிருந்தான்.
அதற்குள் செய்தி, விழுதுகளின் மூலமாக மணிவண்ணனை எட்டியிருந்தது.
“அண்ணே, அந்த அழகரு பய, படிப்பைத் தொடர முடியாத விரக்தில, கடுதாசி எழுதி வைச்சுப்புட்டு ஊரை விட்டே ஓடிட்டானாமாண்ணே!”
சொம்பிலிருந்தத் தண்ணீரை வாயில் ஊற்றிக் கொப்பளித்தபடி விழுதை நிமிர்ந்து பார்த்த மணிவண்ணன், வாயிலிருந்ததைத் துப்பி விட்டு,
“ஓடிட்டானா?” எனப் புருவம் சுருக்கியபடிக் கேள்வி கேட்டான்.
“ஆமாண்ணே! அப்பிடித்தேன் பேசிக்கிறாய்ங்க! அந்தம்மா பட்டாளத்துக்காரர் வீட்டு முன்னால உட்கார்ந்து ஒப்பாரி வைச்சுக்கிட்டுக் கிடக்கு!”
“அவன் அப்பிடியெல்லாம் அவகாத்தாளை அம்போ-ண்டு விட்டுப்புட்டு ஓட்ற ஆள் கிடையாதே டா!”
“ஆனா, ஓடிட்டியானேண்ணே”
“ஹ்ம்ம், இதுல கிழவன் எதுவுஞ்சதி செஞ்சுருக்கியானாண்டு தெரியலயே”
“கிழவன் எதுவும் செஞ்சா மாறி தெரியலண்ணே! குழம்பிப் போய்தேன் உட்கார்ந்து கிடக்குறாரு! போதாதுக்கு கூட்டத்துல ஒருத்தன், அவன் செத்து,கித்துப் போயிட்டியானாண்டு பாருங்கண்டு கிளப்பி விட்ருக்கியான் போல! கிழவன் பேராண்டிக, ஊர்ல உள்ள ஆறு,கிணத்தையெல்லாம் அலசிக்கிட்டுக் கிடக்காய்ங்கண்டு கேள்வி பட்டேன்!”
“ஓஹோ!!” என்றவன், தோளிலிருந்தத் துண்டால் முகத்தைத் துடைத்தபடி “பார்ப்போம் அவன் ஊரை விட்டுத்தேன் ஓடுனியானா, இல்ல, ஒரேடியா போயிட்டியானாண்டு” – எனக் கூறித் தொடர்ந்து,
“எப்பவும் போல நம்ம கண்ணு பெருசு மேலயேதேன் டா இருக்கனும்!” என்று யோசனையுடன் கூற, “ஆகட்டும்ண்ணே!” என ஆமாஞ்சாமி போட்டபடி நின்றது விழுது.
இந்தப் புறம் பட்டாளத்துக்காரர் நீட்டிய கஞ்சியைக் கையில் வாங்காது, மறுத்த அழகரின் தாயார் அழுகையைத் தொடர்ந்தபடியே, “வேணாங்கய்யா! ஒத்த ரூவா கைல இல்லாம, எம்மவன் பட்டினியோட எங்க திரியுறியானோண்டு நெஞ்சு தவிச்சுக்கிட்டு கிடக்கையில, என் வயித்துக்குப் பசியெடுக்குமாய்யா?, எம்புட்டு மனக்கவலையில இருந்திருந்தா, இப்பிடியொரு முடிவெடுத்திருப்பியான்! எம்புள்ள கஷ்டப்பட்றது தெரிஞ்சும், அவனுக்கு நல்லது செய்றதா நினைச்சுக்கிட்டு, எம் மனசை நான் கல்லாக்கி வைச்சிருந்தது இப்புடி அவனைத் தொலைக்கத்தேனா?, கூறுகெட்டச் சிறுக்கி நானு! என்னாலதேன்! என்னாலதேன் எம்மவன் போயிட்டியான்!” – என அழகரின் தாய் தன் நெஞ்சில் அடித்துக் கொள்ள, அவசரமாய் அவரது கையைப் பற்றிக் கொண்ட மீனாட்சி நிமிர்ந்து கிழவரை நோக்கினார்.
“மல்லுக்கு நிற்குறவனோட கூட சரிக்குச் சரியா நிண்டு, மோதி ஜெயிச்சுடலாம் போல! அழுது புலம்புற பொட்டச்சியைச் சமாளிக்கிறது, பெரிய சவாலா-ல்ல இருக்கு” – என மனதுக்குள் நொந்து கொண்டப் பெரியவர், அவரை சமாதானப்படுத்த வாயைத் திறந்த நேரம்,
“இந்தாத்தா, இப்ப என்னத்துக்கு இம்புட்டு அழுக, அழுகுற நீயி?, உம் முந்தானைக்குள்ள, அவனை மூடி வைச்சுக்கிட்டு திரிஞ்சப்ப தெரியலயோ, அவேன் மூக்கை உறிஞ்சிக்கிட்டு சுத்துன கதையெல்லாம்! இப்ப வந்து புதுசா, கூப்பாடு போட்ற?, உம் மேல வைச்சிருக்கிற பாசத்துக்கும், தன்னோட ஆசைக்குமிடைல கிடந்து அல்லாடுனது போதுமுண்டுதேன், அவேன் எங்கயாவது ஓடிருப்பியான்! அவன் மனக்கவலை தீர்ந்து, நல்லபடியா வீடு வந்து சேரனும்ண்டு சாமியைக் கும்பிட்றத விட்டுப்புட்டு, ஒப்பாரி வைச்சு மேலும்,மேலும் அவனை தூரத் தள்ளப் பார்க்குற?, அவேன் வெரசா வீடு திரும்பனும்ண்டு நினைச்சியினா, முதல்ல அழுகையை நிறுத்து. நீ அளவு பார்க்காம வடிக்கிற கண்ணீர்தேன், அவனைக் கண்டம் தாண்டி ஓட வைச்சிருக்கு! முதல்ல அதைப் புரிஞ்சுக்க” – அதுவரை அந்தப் பெண்மணியின் அழுகையை எரிச்சலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விருமன்,
“அவனவன் நிலாவைப் பிடிக்கனும்ண்டு ராக்கெட் ஏறிக்கிட்டிருக்காய்ங்க! இவளுக, ஒத்த மாங்காயைப் பறிக்க மரம் ஏறுனவனை நினைச்சு ஒப்பாரி வைச்சுட்டுத் திரியுறாளுக! முதல்ல இந்தம்மா வாயை அடைக்கனுமே” – என்றெண்ணிக் கொண்டு, வாய்க்கு வந்ததைக் கடகடவென பேசி விட்டான்.
அவன் சத்தமிட்டதும், தலையைக் குனிந்து கொண்டு, அழுகையை அடக்கியப் பெண்மணி, கண்ணைத் துடைத்தபடி “சரிய்யா! நிறுத்திட்றேன்! இப்பவே நிறுத்திட்றேன்! நா..நான் நான்.. அழுகுறத நிறுத்துனா, எம்மவன் திரும்பி வந்துருவியான்லய்யா?” – எனக் கேட்டதும், பாவமாகி விட, தன் அன்னையின் கையிலிருந்தக் கிண்ணத்தை வாங்கிய விருமன், அந்தப் பெண்மணியின் அருகே தரையில் அமர்ந்தபடி,
“அய்யய்யய்ய! என்னாத்தா நீயி! அக்கப்போரைக் கூட்டிட்டுக் கிடக்குற! சின்னப்பயதேனத்தா அவேன்?, உடனொத்தப் பயலுகளெல்லாம், பள்ளியோடத்துக்குப் போய் வர்றையில, தான் மட்டும் காட்டுலயும்,மேட்டுலயும் திரியுறோமேண்டு வருத்தப்பட்டிருக்க மாட்டானா?,இத்தனைக்கும் அவன் ஏனோ,தானோ-ண்டு படிக்கிற பயலா இருந்திருந்தாப் பரவாயில்ல! பள்ளியோடத்துலயே முத மார்க் வாங்குறவேன்! அவனுக்குப் பாடமெடுத்த வாத்திமாருக-லாம் கிழவங்கிட்ட விசாரிச்சுருக்காய்ங்க, அவேன் படிப்பைத் தொடர வழியில்லையாண்டு! அவனைச் சுத்தியிருக்கிற ஆளுங்களுக்கே அவன் நிலைமையைக் கண்டு இம்புட்டு ரோதனையா இருக்குங்கையில, அவனுக்கு எம்புட்டு வலிச்சிருக்கும்! இங்கன உட்கார்ந்துக்கிட்டு, எல்லோரோட அனுதாபப் பார்வையையும் சகிச்சுக்கிட்டு, அவன் நொந்து சாகுறதுக்கு, எங்கயாவது கண்காணாத இடத்துல போய், நிம்மதியா இருந்துட்டுப் போகட்டுமே! என்னாவாம் இப்ப?” எனக் கேட்க,
“இதேன் அவேன் நினைப்புண்டு தெரிஞ்சிருந்தா, நானே அவனை எங்கயாவது கூட்டிட்டுப் போயிருப்பேனேய்யா?” என்று அவர் மூக்கைச் சீந்தியதும், தாடையை இறக்கி முறைத்துப் பார்த்தவன்,
“கூட்டிட்டுப் போயி? கூட்டிட்டுப் போயி, உங்குடிகாரப் புருசனையும்,படிப்பு முடிக்காத பயல்களையும் வைச்சுக்கிட்டு வாழ வழி தெரியாம, கண்ணைக் கசக்கியே, அவனைக் கண்டமாக்கியிருப்ப! ஆகுற பேச்சைப் பேசுத்தா!” எனக் கூறி விட்டு,
“உம்மவன் இந்த ஊரைத் தவிர எங்கயிருந்தாலும் நல்லாயிருப்பியான்! இங்க இருக்கிற நாறப்பயலுக மொகரைல முழிக்காம இருக்கிறதே அவனுக்குப் பெரிய நிம்மதிதேன்! முதல்ல, மூஞ்சியைக் கழுவிப்புட்டு, இந்தக் கஞ்சியைக் குடி! அப்பத்தேன் புத்தித் தெளிவா யோசிக்கும்” என்றபடி அவரிடம் கஞ்சியை நீட்டினான்.
அவன் அதட்டலில் அடங்கி, அவன் நீட்டியக் கஞ்சியை வாங்கியபடி அவன் முகம் பார்த்தவர், “எம் புள்ள எங்கயிருக்கியாண்டு உனக்குத் தெரியுந்தானய்யா?” என மெல்லிய குரலில் கேட்டார்.
கண்ணீர் தேங்கிய விழிகளும், தேம்பிக் கொண்டிருந்தத் தொண்டையுமாய், துடித்த மூக்குடன் அவர் விருமனின் முகம் பார்த்துக் கேள்வி கேட்டதும், ஒரு நொடி அவரை அசையாது நோக்கிய விருமன், பின் முகத்தைச் சுழித்து,
“இப்பிடிப் பாவமா மொகரையை வைச்சுக்கிறதை நிறுத்து மொதல்ல!” என்று விட்டுப் பின் “அன்னைக்குக் கதிரருவாளைத் தூக்கையில, கோவத்துல கண்ணுமுழி ரெண்டும் வெளிய வராத குறையா, அப்பிடிப் பிதுங்கி நின்னுச்சு! மூஞ்சியை மூனடி நீளத்துக்கு நீட்டிக்கிட்டு மூர்க்கமா நிண்டு, நீ புடிச்ச பிடிவாதமெல்லாம் எங்க போச்சு?,” என்று அவன் திட்டியதும்,
“டேய்..” என்று அதட்டினான் ஆரன்.
“இப்பிடியெல்லாம் நடக்கக் கூடாதுண்டு நினைச்சுத்தேன், அன்னைக்கு நாங்க நடையா,நடந்தோம்!! பெரிய மனுசன் ஒருத்தரு, தான் நிலைல இருந்து இறங்கி வந்து, உம்மவனுக்காகக் கால் கடுக்க காலைலயும்,சாயந்தரமும் காத்துக்கிடந்ததைக் கொஞ்சமும் மதிக்காம, அவரு என்னா சொல்ல வர்றாருண்டுக் கூடக் கேட்காம, கையறுத்துக்கப் பார்த்த! இப்ப உன் அருவா எங்க கறி வெட்டவா போயிருச்சு! மவன் போன துக்கம் தாங்க முடியலண்டா, எடுத்து அறுத்துக்கிட்டுப் போய்ச் சேர வேண்டிதான!”
“டேய்ய் விருமா” – கிழவன் கோபமாய் இடைமறித்ததும், கண்டு கொள்ளாமல் எழுந்து நின்றவன்,
“இன்னைக்கு மவன் ஓடுனதும், இங்கன வந்து நிண்டுக்கிட்டு ஐயா,நொய்யா-ண்டு கதறுறியே!, அன்னைக்கு அந்தக் காவாலிப்பய உன் கழுத்துல கை வைக்கையில, இந்த ஐயாவை உன் கண்ணுக்குத் தெரியலயோ! அந்தப் பொண்டுகப் பயலுக்குப் பயந்து, பெத்தப் புள்ள வாழ்க்கையை வீணாக்குன உனக்கு, சரியான தண்டனையைத்தேன் அவன் குடுத்துட்டுப் போயிருக்கியான்!”என்று கூற, அவன் தோளில் அடித்துத் தள்ளிய பெரியவர்,
“எலேய்! மவனைக் காணா-ண்டு துடிச்சுக்கிட்டு கிடக்குறவட்டப் போய் கடுசாப் பேசிட்டிருக்க நீயி! அங்குட்டுப் போடா முதல்ல!” என்று திட்ட,
ஒரு காலை உயர்த்தி வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டவன் குனிந்து, “உம்மவன் எங்கயிருக்கியாண்டு எனக்கு இப்ப வரை தெரியாது! இனிமே தெரிய வந்தாக் கூட, நிச்சயம் உன்ட்ட சொல்ல மாட்டேன்!” என்று கூறியதும்,
ஆதங்கத்துடன் அவனைப் பார்த்தவரிடம், “என்னா பார்க்குற?, எம்மவன் மேல நான் வைச்சிருக்கிறப் பாசம் அவனை, எங்கிட்டக் கொண்டு வந்து சேர்க்கும்!, உன் உதவியெல்லாம் எனக்குத் தேவையில்லடா பொடிப்பயலேண்டு, எஞ்சட்டையைப் புடிச்சு, வைராக்கியமா சொல்லிப்புட்டு, போய் பொழப்பப் பார்ப்பியா! அதை விட்டுப்புட்டு வீதில உக்கார்ந்து விம்மிக்கிட்டு கிடக்குற!” என்று விரட்டினான்.
விருமனை அடக்க முற்பட்ட ஆரனும்,கிழவரும், அவன் பேசும் பேச்சிற்கு அப்பெண்மணியின் முகம் போகும் போக்கைக் கண்டு, அமைதியாய் நின்றனர்.
ஒரு நொடி தரையை வெறித்தபடி, விடைத்த மூக்குடன் மூச்சு வாங்க அமர்ந்திருந்தப் பெண்மணி, பின் கண்ணீரை முழுவதுமாகத் துடைத்து, கூந்தலை அள்ளி முடிந்து, அருகிலிருந்தக் கஞ்சியை எடுத்து ஒரே மூச்சாக வாயில் ஊற்றிக் கொண்டு,
“எம்மவன் வருவியான்! என்னையத் தேடி வருவியான்! எம் பசியை மறந்து, நான் அவன் வயித்தை நிறைச்சது உண்மை-ண்டா, அவன் என்னையத் தேடி வருவியான்!” எனக் கூறியபடி எழுந்து நிற்க,
“ம்ம்! அப்பிடிச் சொல்லு” – எனப் பாராட்டிய விருமன், மெல்ல நடந்து கிழவனருகே சென்று அவர் காதுக்குள்,
“எப்பிடி சமாளிச்சேன் பார்த்தேல! சில சமயம், கோவம் கூட காரியஞ்சாதிக்கும் பெருசேய்” எனக் கூற,
“ம்க்கும்! பெருசா மலையை நகட்டுன மாறி, மார் தட்டிட்டுத் திரியுறியான்! அடப் போடா போக்கேத்த பயலே!” எனக் கிழவன் முகத்தைத் திருப்பிக் கொள்வதைக் கண்டு ஆரன் வாய்க்குள் சிரிப்பை அடக்கிய வேளை, வீட்டு வாசலில் கால் பதித்தார் சங்கிலியன்.
அழகரின் தாயையும், அவரைச் சேர்ந்த சில தலைகளையும் தனது வீட்டுத்திண்ணையில் கண்டதும், முகம் கோபத்தில் கருத்து விட, தோளிலிருந்தத் துண்டை வேகமாக உதறியபடி உள்ளே நுழைந்தார்.
அங்கு நடப்பதை அசூயையான முகத்துடன் வேடிக்கை பார்த்தபடி, உள் வாசலருகே நின்றிருந்தத் தன் அன்னையையும்,மனைவியையும் கடந்து சென்றவர், வீட்டினுள்ளே, தூணில் சாய்ந்தபடிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த சின்ன மகளைக் கண்டு எரிச்சலுடன் பல்லைக் கடித்தார்.
“வாயை மூட்றி பொட்டச் சிறுக்கி!” என்று சத்தமிட்டபடி அருகே வந்த, தந்தையைக் கண்டதும் பதறி எழுந்து நின்ற புவியரசிக்கு, அதிர்ச்சியில் கண்ணீர் நின்று விட, விரிந்த விழிகளுடன் விம்மியபடி நின்றவளிடம்,
“கண்ணீர் விடுறாளாமா, கண்ணீரு! இங்க என்ன எழவு விழுந்து போச்சுண்டு, இம்புட்டு அழுகை அழுகுற நீயி?, அந்தத் தரித்திரம் புடிச்ச பயலுக்காக, நெஞ்சு பதறுதோ! காதுக்குள்ள ரீங்காரமிட்டிருக்கிருந்த கொசு காத்தோட போச்சு-ண்டு நான் சந்தோசப்பட்டுக்கிட்டுக் கிடக்கேன்! இவ ஓ-ண்டு ஒப்பாரி பாடிகிட்டுத் திரியுறா! இன்னொரு தடவை அந்த சல்லிப்பயலுக்காகக் கண்ணீர் வடிச்ச, முழியைத் தோண்டிருவேன் சொல்லிப்புட்டேன்!” என்று மிரட்ட,
“அவேன் கொட்டுற தேனீ-ண்டு புரியுற வரைக்கும், கொசு-ண்டே நம்பிட்டுத் திரி டா களவாணிப் பயலே!,” – வாசலிலிருந்துக் குரல் கொடுத்தப் பெரியவர் தொடர்ந்து, “வருவியான் டா அவேன்! உன் கொழுப்புல, கொடுக்கை ஏத்துறதுக்கு நிச்சயம் வருவியான்! அதுவரைக்கும், ஊளச்சதை போட்டு உப்பிக் கிடக்குற உன் உடம்பை, ஊசிப் போகமா வைச்சுக்க” – கர்ஜித்ததும், உதட்டைச் சுழித்த சங்கிலி,
“நீரு எம்புட்டுத்தேன் கூட்டைப் பாதுகாத்தாலும், நெருப்பைக் கண்டு பயந்து, பறந்து போன தேனீ, திரும்பவும் கூட்டை நோக்கி வரப் போறதில்லங்குறதை நினைவுல வைச்சுக்கங்க!” என்றவர் வாசலருகே நடந்து வந்து “திண்ணைல உட்கார்த்தி வைச்சுக் கஞ்சியெல்லாம் குடுத்துக் கௌரவப்படுத்திருக்கீக போல! சரி போய்த் தொலையுது, கையளவு அரிசில என்னா குறைஞ்சிறப் போகுது இங்க!ஆனா, தின்ன கஞ்சிக்குக் கூலியா, மறக்காம கக்கூஸைக் கழுவி விட்டுப் போகச் சொல்லுங்க” என்றார் திமிராய்.
அவரது பேச்சைக் கேட்டு அவமானத்தில் முகம் கருக்கத் தலை தாழ்த்தி நின்ற அழகரின் தாயாரைக் கண்டு, மாமனை முறைத்தனர் ஆரனும்,விருமனும்.
அவர் பேசியதற்குக் கோபப்படாமல் மெலிதாய்ச் சிரித்த கிழவர், “எப்பிடி?, நீயி, பொறந்ததுல இருந்து என் வீட்ல திங்குற ஓசிக் கஞ்சிக்குக் கூலியா, கருப்பன் *****யை கழுவிட்டுத் திரியுறியே! அந்த மாறியா?” எனக் கேட்டதும், ஆத்திரமாய் நோக்கியவரிடம்,
“எலேய்! தகுதி இருக்கிறவன்தேன் டா தலையை நிமிர்த்தித் தாட்டியமா பேசனும்! உன்னைய மாறி, தரங்கெட்டப் பயலுக தலையெல்லாம் தரையைத் தாண்டக் கூடாது! எங்கன வந்து, யார் முன்னால உன் எகத்தாளத்தைக் காட்டுற, எரும்மாட்டுப் பயலே!” என்று கிழவர் பங்கமாய் ஏசியதும், ஆரனும்,விருமனும் பல்லைக் காட்ட, உள்ளே கொதித்தாலும் அடக்கிய சங்கிலி,
“தாட்டியமா இருப்பியாண்டு நீரு நினைச்சவனைத் தலை தெறிக்க ஓட விட்ட நான், தரங்கெட்டவனாவே இருந்துட்டுப் போறேன்!,” என்று தோளைக் குலுக்கி விட்டுப் பின், அழகரின் அன்னையை வன்மையுடன் நோக்கி,
“உம்ம இரக்க மயிரெல்லாம் திண்ணைல உட்கார்த்தி வைச்சு, கண்ணீரைத் துடைச்சு விட்டு, கஞ்சி ஊத்துறதோட நிக்கட்டும்! நாளைக்கு இரக்க புத்தி முத்திப் போய் முற்றத்துல கூட்டி வைச்சு, தட்டு மாத்தனும்ண்டு திட்டம் போட்றாதீக! அவனை ஊரை விட்டு ஓட வைச்ச எனக்கு, உலகத்தை விட்டே அனுப்ப ரொம்ப நேரமாய்ராது” என்றபடித் திண்ணையிலிருந்தக் கிண்ணியைக் காலால் உதைக்க, அது நேராக அழகரது தாயின் நெற்றியைப் பதம் பார்த்துப் பின் உருண்டு விழுந்தது.
அனிச்சையாய் “ஆஆஆ”-வெனக் கூவியபடி நெற்றியைப் பிடித்தவரைக் கண்டு, “டேய்ய்ய்” எனக் கோபமாய் சங்கிலியின் சட்டையைப் பற்றினார் கிழவர்.
மாமனைக் கண்டு கொள்ளாது, எட்டி, நெற்றியைப் பிடித்தபடி நின்றிருந்த பெண்மணியை நோக்கிய சங்கிலி,
“கிண்ணம் வர்ற திசைண்டு தெரிஞ்சும், என்னத்துக்கு தலையை நிமிர்த்திக்கிட்டு நிற்கனும்?, அடக்கமா இருந்திருந்தா, அடி வாங்காம தப்பிச்சிருக்கலாம்ல?” எனக் கேலி பேச, அவர் கழுத்தை அழுத்திப் பிடித்த பெரியவர்,
“இனி நாக்கு நகருச்சு-ண்டா, குர வளைய நெரிச்சுப்புடுவேன் சொல்லிட்டேன்” என்று மிரட்டி, “விருமா, ஆரணா” எனக் குரல் கொடுத்ததும், பேராண்டிகளிருவரும் ஓடி வந்து, ஆளுக்கொரு புறம் நின்றபடி மாமனின் புஜத்தைப் பற்றியிழுத்துக் கொண்டு வெளி வாசலை நோக்கி நடக்க,
“சின்னவளே! நெத்திக் காயத்துக்கு மருந்து எடுத்துட்டு வா தாயி” என்று குரல் கொடுத்தார் பெரியவர்.
இளவட்டங்களின் இறுகிய பிடியைத் தாங்க முடியாது “கையை விடுங்கடா! கையை விடுங்கடா கெடா மாடுகளா” எனத் திமிறிக் கொண்டிருந்த சங்கிலி, மாமனின் குரலில் அதிர்ந்துத் திரும்பி நோக்கினார்.
தாத்தனின் குரல் தன்னை அழைத்ததும், ஒரு நொடி விழித்து நின்ற புவியரசி, பின் வீட்டினுள் ஓடிச் சென்று மருந்தை எடுத்து வந்து மீனாட்சி மற்றும் இன்ன பிறப் பெண்களின் நடுவே நின்றிருந்த அழகரின் தாயைக் கண்டு நனைந்த விழிகளுடன் தயங்கி நிற்க,
“குடு தாயி” என்றுத் தாத்தன் கொடுத்த உந்துதலில் அருகே சென்றவள், மன்னிப்பை யாசிக்கும் பார்வையுடன், நடுங்கிய விரல்களால் மருந்தை நீட்ட, அவளை ஏறிட்டுப் பார்த்து மருந்தை வாங்கியவரின் காலில், விம்மியபடிப் படாரென விழுந்தாள் புவியரசி.
“என்னைய மன்னிச்சுருங்கம்மா, என்னைய மன்னிச்சுருங்கம்மா” – என ஒரே வாக்கியத்தை மறுபடி,மறுபடி உச்சரித்தபடி அழுது வடிந்தவளை, பதறியபடி அவசரமாய்த் தன் இரு கைகளால் அள்ளி நிமிர்த்திய அழகரின் தாயார்,
“என்னா காரியம் பண்றத்தா நீயி?” என அதிர்ந்து, கலங்கிய குரலில் வினவ,
ஆரனிடமும்,விருமனிடமும் சிக்கியிருந்த சங்கிலி, மகளின் செய்கையால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று, திமிறிக் கொண்டு வெளிவர முயன்றபடி “கேடு கெட்டச் சிறுக்கி! உன்னைய சங்கறுத்துச் சாகடிச்சாத்தேன்டி என் ரத்தம் அடங்கும்! எவனுக்குப் பொறந்து, எவ கால்ல விழுவடி நீயி! மானங்கெட்ட *******! உன்னையக் கொல்லாம விட மாட்டேன் டி” என்று பொங்க,
கால்களைத் தூக்கிப் போட்டபடி,தன் மாமன்ங்களிடமிருந்து வெளி வரத் துடித்து நின்றத் தந்தையைக் கண்டு நடுங்கி நின்ற புவியரசியின் தோளைப் பற்றியிருந்த பெண்மணி, அவளது நடுக்கத்தை உணர்ந்து, தன்னோடு இறுகச் சேர்த்துக் கொள்ள, அவரை நிமிர்ந்து பார்த்தவள், கவலையும்,பயமுமாய்த் தன் முகம் நோக்குபவரைக் கண்டுத் திகைத்தாள்.
அழகரது தாயாரின் கைப்பிடியில் நின்றவளை, ஆத்திரமும்,அசூயையுமாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வீரலட்சுமியை நோக்கி,
“அந்த ***** தலையை வெட்டித் தூர எறியுறதை விட்டுப்புட்டு, சாத்தி வைச்சப் பொணம் மாறி, வாசலோட நிற்கத்தேன் தெனம் வக்கணையா சோறு திங்குறியாடி *****! ஆத்தாளும் மகளும் கிழவன் கூடச் சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட்றீகளா! ரெண்டு பேரையும் உசுரோட கொளுத்திப்புடுவேன்டி!” எனப் பாய,
காதைச் சொரிந்த கிழவர், “எலேய்! அந்த வெறி நாயை இழுத்துட்டுப் போய் மரத்துல கட்டுங்கடா லேய்ய்” என்று குரல் கொடுத்தார்.
இருவரும் அவரை இழுத்துக்கொண்டு நகரத் தொடங்கியதும், “மவன் தொலைஞ்ச மிதப்புல, மப்பாத் திரியலாம்-ண்டு நினைக்கிறியாடி *** மவளே! எம்மவ தொட்ட உன் கால், ரொம்ப நாளைக்கு உன் கூட இருக்காதுடி! உங்காலை வெட்டி உன்னைய நொண்டியாத் திரிய விடல, நான் சாதிமான் இல்லடி” – என்ற சங்கிலியின் குரல் தொடர்ந்து ஒலிக்க,
புவியரசியும்,அழகரின் தாயாரும் ஒருவரையொருவர் பயப் பார்வை பார்த்துக் கொள்வதைக் கண்டு,
“அவனால ஒழுங்கா எளநி (இளநீர்) கூட வெட்ட முடியாது! இவந்தேன் உன் காலை வெட்டப் போறானாக்கும்! இவேன் வாய்ச்சவடால் பேசியே வாழ்க்கையைக் கழிக்கிறவன்ம்மா! இந்த வெண்ணையால உம் மசுரைக் கூடத் தொட முடியாது! பயப்படாத” என்று கிழவர் கூற, நடுங்கிய விரல்களுடன் நின்றிருந்த அழகரின் தாயாரைக் கண்டுக் கலங்கி, அவர் கையைப் பற்றியப் புவியரசி,
“என்னைய மன்னிச்சிருங்கம்மா! என்னாலதேன் நீங்க இம்புட்டையும் அனுபவிக்கிறீக! தானுண்டு, தான் வேலையுண்டு-ன்னு எங்கேயோ ஒரு மூலைல கிடந்தவகளை, முச்சந்தில நிக்க வைச்சு, இம்புட்டுக் கஷ்டத்தையும் கொடுத்ததுக்கு, நீங்க என்னைய கொன்-ண்டு போட்டாக் கூட தப்பில்லம்மா! புத்தியை அடக்கத் தெரியாம புல்லு மேய விட்டு, அப்பாவிப் பய வாழ்க்கையை நாசமாக்கிப்புட்டேனே! நாஞ்செஞ்ச தப்புக்கு அவேன் தண்டனைய அனுபவிக்கிறது எந்த விதத்துல நியாயம்! என்னைய, நீயே உங்கையால கொன்-ண்டு போட்ருத்தா! உங்களை நரகத்துல தள்ளுன எனக்கு, இந்த உலகத்துல உசுரு வாழத் தகுதியே இல்ல” – என்று கதற.. தானும் கண்ணீர் வடித்தவர்,
“உன்னையக் கொன்-ண்டு பழிக்குப் பழி வாங்கிப்புட்டா, எம்மவன் அனுபவிச்சதெல்லாம் இல்லை-ண்டு ஆயிருமா?, இப்பிடியெல்லாம் நடக்கனும்ண்டு அவனுக்கு விதியிருந்தா, யாரு என்னா தாயி செய்ய முடியும்?, உம் மேல எந்தத் தப்புமில்லத்தா! நீ இம்புட்டுக் கண்ணீர் வடிக்கத் தேவையில்ல! விவரமறியாத புள்ள நீயி! வினயமில்லாம நீ பண்ண காரியத்தை விவகாரமாக்கி விதி விளையாடுறதுக்கு, நீ என்னா தாயி செய்வ?, விடுத்தா! இந்தக் கேடு காலமெல்லாம் முடிஞ்சு, எம்மவனுக்கு விடிவு பொறந்து, அவன் நல்லபடியா எங்கிட்டத் திரும்பி வந்து சேர்ந்தாலே போதும்! கவலைப்பட்டுக் கண்ணீர் வடிச்சு, சாவைத் தேடுற வயசா உனக்கு?, மொட்டு விட்டப் பூவு நீயி, விரிஞ்சு,மலர்ந்து செழிப்பா வாழனும்! அழுகையை நிறுத்துத்தா” என்றார்.
அவர் பேச்சில் குற்ற உணர்ச்சி மேலும் பெருக, வார்த்தைகளின்றி, கண்ணீர் விட்டபடி, அவர் கையைப் பற்றித் தன் நெற்றியில் அறைந்து கொண்ட புவியரசியிடம்,
“ப்ச், என்னா கழுத நீயி! அந்தம்மாவே மவனைக் காணோம்ண்டு கதறிக்கிட்டுக் கிடக்கு! ஆறுதல் சொல்றத விட்டுப்புட்டு அழுது புலம்பிட்டுத் திரியுற நீயி! போ கழுதேய்! போ போய் படிக்கிற வழியைப் பாரு” எனத் துரத்தியப் பெரியவர்,
“நீயும் வீடு போய்ச் சேரு தாயி! கவலையில்லாம இரு! எங்க போயிறப் போறியான் உம்மவன்! உன்னைத் தேடி சீக்கிரமே திரும்பி வந்துருவியான்! உன்னை நம்பியிருக்கிற உன் சின்ன மவனுக்கும்,புருசனுக்கும் போய் கஞ்சியாக்கிப் போடு போ” – என்றனுப்பி வைக்க, கண்ணைத் துடைத்துக் கொண்டவர்,
கையைத் தூக்கிக் கும்பிட்டபடி “நான் உங்களைத்தேன்ங்கய்யா நம்பியிருக்கேன்! எப்பிடியாச்சும் எம்மவனை எங்கிட்டக் கொண்டு வந்து சேர்த்திருங்கய்யா” என்ற கோரிக்கையுடன் தன் வீடு நோக்கித் தளர்வாய் நடந்தார்.
அவர் செல்லும் திசையைப் பார்த்தபடி நின்றவரை நோக்கி நடந்து வந்தப் பேராண்டிகளிடம்,
“டவுனுக்குப் போய் போலீஸ் கம்ப்ளைண்ட் ஒன்னு குடுத்துடுவோம் டா பயலுகளா!” என்றார்.
“என்னத்துக்கு?” – புருவம் சுருக்கியபடி வினவிய விருமனை முறைத்து,
“டேய்ய்” – எனப் பல்லைக் கடித்துக் கண்களால் எச்சரித்தான் ஆரன்.
அவனது எச்சரிப்புக்குப் பின் மூளைக்குள் மணியடிக்க “ஆஆஆஆ.. ஹா…ஹான்ன்ன் புரிஞ்சது, புரிஞ்சது! அழகரைத் தேடச் சொல்லித்தேன?, குடுத்துருவோம்” எனக் கூறி, அழகரின் அன்னையை நோக்கியபடி, வாசலில் ஆங்காங்கு நின்று புறணி பேசிக் கொண்டிருந்தக் கூட்டத்தை நோட்டம் விட்டான் விருமன்.
தங்களது செயல்களைப் பின் தொடரும் மணிவண்ணனின் கைக்கூலிகளுக்காகக் கிழவரால் சொல்லப்பட்ட வாக்கியம் அது என்றெண்ணிக் கொண்டவனின் பார்வை,
சோலையாத்தாளும், தன்னைப் பெற்றவளும் வெறுப்பும்,அருவெறுப்புமாய்த் தன் முகம் பார்ப்பதைக் கூட உணராது பொம்மையாய் நடந்து சென்ற புவியரசியிடம் வந்து நின்றது.
“இவ என்னாடா உலகமே வெறுத்தா மாறி, இம்புட்டு விரக்தியா மொகரையை வைச்சுட்டு சுத்துறா?, விட்டா, மறுபடி கிணத்துல குதிச்சுருவா போல! பெருசேய்ய்.. பேசாம இவட்ட மட்டுமாவது உண்மையைச் சொல்லிருவோமா?” – என மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருக்கையில்,
நெருக்கமாய் நின்றிருந்த மூவரின் அருகில் தன் வலது காதை வைத்திருந்த அகலருவி, அவனைப் போலவே மெல்லிய குரலில்,
“என்னா உண்மை?” எனக் கேட்க, திடுக்கிட்டு விலகிய மூவரில், ஆரன், அவள் பிடரியில் அடித்து,
“ஒட்டுக் கேக்குறியாடி கருவாக்குந்தாணி” என்று அடிக்குரலில் அதட்ட,
“அதேன் முழுசாக் கேக்க முடியலயே” என்று நொடித்துக் கொண்டவள், அவன் அடித்ததில் வலித்தப் பிடரியைத் தடவியபடி,
“பார்ப்போம்! எத்தனை நாளைக்கு சேவலை பஞ்சாரத்துக்குள்ளயே அமுக்கி வைக்குறீக-ண்டு” எனக் கூறி விட்டு “ஹ்ம்” எனத் தாவாங்கட்டையைத் தோளில் இடித்தபடி முன்னே சென்று விட,
“எப்பிடி மொசை புடிக்கிறா பார்த்தீகளா?, மணிவண்ணன்ங்கிட்ட கவனமா இருக்கோமோ இல்லையோ, இவக்கிட்ட ரெம்பக் கவனமா இருக்கனும் பெருசேய்!” என்று விருமன் எரிச்சலுடன் வியந்து கொண்டான்.
அவன் பேச்சில் புன்னகைத்த ஆரன் கழுத்தை நீவியபடி “இந்நேரம் கண்டுபுடிச்சிருப்பா” என்று கூற,
பெருமையாய்த் தன் மீசையைத் தடவிக் கொண்டப் பெரியவர் “அவ எம்பேத்தி டா” என்று பீற்றிக் கொள்ள,
“ம்க்கும்” என சலித்துக் கொண்ட விருமன், முகத்தைத் தீவிரமாக்கி,
“உம்ம மருமவன் இப்ப நேராப் போயி அந்தக் களவாணிப்பயட்டதேன் நின்டுருப்பாரு! அவேன் யோசிக்கத் தொடங்குறதுக்கு முன்னாடியே நாம காரியத்தை முடிச்சிரனும் பெருசேய்” என்றான்.
அவன் பேச்சுக்குத் தலையசைத்தப் பெரியவர் யோசனையாய் நின்றிருந்த வேளை, மூவரும் எண்ணியபடி, சங்கிலியன் மணிவண்ணனின் முன்பு நின்றிருந்தார்.
புஜத்தில் பதிந்திருந்த விரல் தடங்களில் விழிகளைப் பதித்திருந்த சங்கிலி, வலியில் பல்லைக் கடிப்பதைக் கண்டு, விரிந்த வாயுடன் மணிவண்ணன்,
“என்னா மாமா, புஜத்தைப் புரோட்டா மாவு மாறி பெசஞ்சு விட்ருக்காய்ங்க?, நீங்க என்னத்துக்கு மாமா, அவிங்கட்டப் போய் வாக்குடுத்தீக?” என்று கலாய்க்க..
அவனை நிமிர்ந்து முறைத்த சங்கிலி, “என்னா மாப்ள கிண்டலா?” என்று கேட்டதும்,
“ம்க்கும்!” எனப் பம்மியவன்,
“கோவத்தைக் குறைங்க மாமா! நம்மள மீறி கிழவனால அப்பிடி என்னா செஞ்சிட முடியும்? பொறுமையா இருங்க!” என்று கூற, கோப மிகுதியில் அருகிலிருந்த மண்பானையைக் காலால் தள்ளி உடைத்த சங்கிலி,
“எம்புட்டு நாளைக்கு மாப்ள?, எம்புட்டு நாளைக்குப் பொறுமையா இருக்கச் சொல்றீக?, இவிங்க போக்கே சரியில்ல மாப்ள! ஒட்டுக் குடிசைல வாழ்றவளை ஒய்யாரமா திண்ணைல உட்கார்த்தி வைச்சுக் கஞ்சியாக்கி போட்டு, குடும்பமா ஆறுதல் சொல்லிக்கிட்டுக் கிடக்காய்ங்க! நான் பெத்தக் கூறுகெட்ட ****, மன்னிப்புக் கேட்டு அந்த ச*****சி கால்ல விழுகுறா! கிழவன், ரெண்டு பேரையும் கொஞ்ச விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு கல்லு மாறி நிக்குறாப்ல!, எம்மவளும்,அந்தச் சிறுக்கியும் கையைக் கோர்த்துக்கிட்டு நின்னதைப் பார்த்ததுல இருந்து, என் உடம்பு பத்தி எரியுது மாப்ள!” என்று கொதிக்க,
“ஹ்ம்ம்ம்” என நாடியைச் சொரிந்த மணிவண்ணன், அவரை ஓரக் கண்ணால் பார்த்தபடி “நீங்க கோவப்பட்றது நியாயந்தேன் மாமா!இம்புட்டு நாளா இல்லாம, கிழவன் இப்ப, உம்ம பேத்தியை உள்ள இழுத்து விடுறாருண்டா…… கலப்புத் திருமணம் ஒன்று தான் சாதியை ஒழிக்கும்ண்டு பேசி, உம்ம சின்ன மவள, அந்த ச******லியப் பயலுக்கேக் கட்டி வைச்சிருவாரோ!” என்று ஏற்றி விட,
ஆத்திரத்தில் கையை இறுக்கி, உடலை முறுக்கிய சங்கிலி, “அப்பிடி ஒன்னு நடந்தா, ரெண்டு பேரையும் கண்டந்துண்டமா வெட்டிப் பொலி போட்டுப்புட்டு, நான் செயிலுக்கு போய்ருவேன் மாப்ள” என்று அடிக்குரலில் முழு வெறியுடன் கூற..
லேசாய்ச் சிரித்துக் கொண்டவன், “உங்களுக்கு அம்புட்டுக் கஷ்டம் வர நான் விடுவேனா மாமா?, மருமவன்-ண்டு நான் என்னத்துக்கு இருக்கேன்” எனக் கூறிப் பின் தயங்கி “மருமவன்-ண்டு சொல்லலாம்ல?” எனக் கேட்டான்.
சிவந்த விழிகளைத் துடைத்தபடி மெல்லச் சிரித்தவர், “நீயில்லாம யாரு! நீதேன்ய்யா எம் மருமவன்! என்னைக்கா இருந்தாலும், எம் மூத்த மவ உனக்குத்தேன்” என்றார்.
“ஹ்ம்ம்ம்” எனப் பெருமூச்சை வெளியிட்டவன், “நான் மட்டும் கனவு கண்டு என்னா மாமா பிரயோசனம்?, என்னையக் கண்டாலே வெளக்கமாத்தத் தூக்குறவ கிட்டப் போய், வெவாகத்தைப் (விவாகத்தை) பத்தி எப்பிடி மாமா பேசுறது?, விருப்பமில்லாதவளை வற்புறுத்தவும் தயக்கமா இருக்கு, அதே சமயம் பொண்டாட்டி-ண்டு அவளை வடிச்சு வைச்சுக்கிட்ட மனசு, வேற எவளையும் ஏறெடுத்துக் காணக் கூட விரும்ப மாட்டிக்குது மாமா” – என நெஞ்சைப் பற்றிக் கொண்டு வசனம் பேச, அவன் தோளைத் தடவிய சங்கிலி,
“எம்மவ மேல இம்புட்டு ஆசை வைச்சிருக்கியே ராசா! உன்னைத்தவிர அந்தச்சிறுக்கிக்கு, எந்தப் பொருத்தமானவனை தேடித்தரப் போறியானாம் கிழவன்?, அவளுக்கு விருப்பமில்லாட்டியும் பரவாயில்ல, எவன் தடுத்தாலும் அவ கைய,காலைக் கட்டித் தூக்கிட்டு வந்தாவது, உன்னைய அவ கழுத்துல நான் தாலி கட்ட வைப்பேன் மாப்ள” என்று பொங்க,
இதை எதிர்பார்த்தவன் போல் தலையாட்டியவன் “அப்பிடித்தேன் எங்கல்யாணம் நடக்கனும்ண்டு விதியிருந்தா, அப்பிடியே நடக்கட்டும் மாமா!” என்றான்.
மருமகனின் முகத்தில் சந்தோசத்தைக் கண்டதும், தானும் மகிழ்ச்சி கொண்ட சங்கிலி,
“அப்புறம் மாப்ள, கேக்கனும்ண்டு நினைச்சேன்! நிசமாவே அந்த சல்லிப்பய ஊரை விட்டு ஓடிட்டானா?, இல்ல, கிழவன் அவனை எங்கயும் நோகாம அனுப்பி வைச்சுப்புட்டு, இங்கிட்டு குடும்பமா நாடகம் ஆடிட்டுத் திரியிறியானா?” எனக் கேட்டார்.
“ஆடட்டும் மாமா! நீங்க ஏன் பதறுறீங்க! பத்து நாள்ல பன்னென்டாங் க்ளாஸூ பரீட்சை வருதுல்ல?, அதேன் அவன் படிக்கிறது நமக்குத் தெரியக் கூடாதுண்டு, கிழவன் விவரமா வேலை பார்க்குறதா நினைச்சுக்கிட்டு, எங்கயாவது அவனைக் கூட்டுட்டுப் போய் ஒளிச்சு வைச்சிருப்பாரு!”
“அப்பிடியா மாப்ள சொல்ற?”
“ஆமாம் மாமா! கிழவன் அம்புட்டு சீக்கிரம் பின் வாங்குற ஆளு கிடையாது! அவேன் எங்கயிருக்கியாண்டு, இன்னும் ரெண்டு,மூனு நாள்ல நான் கண்டுபுடிச்சு சொல்றேன் பாருங்க!”
கிழவரின் எண்ணப் போக்கை சரியாய்க் கணித்து விட்டதாய் எண்ணிக் கொண்டுக் கர்வமாய் காலரைத் தூக்கி விட்டவனை, பெருமையுடன் நோக்கி அவன் தோளைத் தட்டி விட்டு நகர்ந்தார் சங்கிலி.
அவர் சென்றதும், அவனது விழுதுகளில் ஒன்று “அப்புறண்ணே! கல்யாணக் கலை வந்துருச்சு போல முகத்துல” என்று கேலி செய்ய, புருவம் சுருக்கியவன்,
“என்னாடா சொல்ற?” எனக் கேட்க,
“அதேன் அந்தக்கா கைய,காலைக் கட்டி மணவறைக்குத் தூக்கிட்டு வர்றதா, உங்க மாமனாரு வாக்குக் குடுத்துட்டாரே! இன்னும் என்னத்துக்குண்ணே தாமதிச்சுக்கிட்டு! சட்டு,புட்டுன்னு அக்காவைத் தூக்குற வேலையைப் பார்க்க வேண்டிதேன?” என்றான்.
அவனது கேள்வியில் மெல்லச் சிரித்தபடி, வேஷ்டியை மடித்துக் கொண்டு கொல்லையை நோக்கி வந்தவன், அங்கு கூண்டுக்குள் வெட்டப்பட்ட ரெக்கையுடன் வாடிக் கிடந்த கிளியைக் கண்டு, அதனருகே சென்று,
“என்னாடா? கிளி சோகமா இருக்கு?, திங்குறதில்லயோ?” எனக் கேட்டான்.
“ப்ச், காட்டுல சுதந்திரமாத் திரிஞ்சுக்கிட்டிருந்த கிளியை கூண்டுக்குள்ள அடைச்சு வைச்சா, அது எப்பிடிண்ணே திங்கும்?”
“பின்ன, என் கையைக் கொத்திப்புட்டுப் பறந்து போக நினைச்சா, சும்மா விட்ற முடியுமா?, அதேன், தூக்கிட்டேன்” – வன்மத்துடன் கூறியவனின் முகத்தைப் பீதியுடன் நோக்கியபடி,
“சும்மா இருந்த கிளியை வம்பிழுத்ததே நீங்கதேனண்ணே” – என்றான் விழுது.
“ப்ச்,அழகை ஆராதிக்கத் தெரிஞ்சவன்தேன்டா மனுசன்! ஆராதிக்க நினைச்ச எனக்கு, ஆப்பு வைச்சு அலப்பரையைக் கூட்டுனது, கிளியோட தப்புதேன?”
“அதுசரி! கிளிக்குப் புடிச்சக் கிரகத்தைப் பாருங்க” – என்று நொடித்தவனை, மணிவண்ணன் நிமிர்ந்து முறைக்க,
“ம்க்க்க்கும், கூண்டைத் திறந்து விடுங்கண்ணே! பாவம், பறந்து போகட்டும்” என்றான்.
“அடைபட்டதே, ஆணவம் குறையத்தேன்! திங்காம திமிரா திரியுதுண்டா, சனியன், உள்ளேயே கிடந்து சாகட்டும்” – எனக் கூறி விட்டு விருட்டென அவன் நகர்ந்து சென்று விட,
கூண்டிலிருந்த கொய்யாப்பழத்தைக் கிளியை நோக்கி நகர்த்திய விழுது, “தின்னு தொலை கழுத! பட்டினில சாகாத” என்று கிளியுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலை மொத்த ஊரும் துயிலில் ஆழ்ந்திருக்க, விடியலுக்கு முன், வீட்டு வாசலைத் தாண்டி விடும் நோக்கத்துடன், பெரியவர் பரபரப்புடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
“ப்ச், யோவ் கிழவா, எந்தாத்தன் எம்புட்டுப் பெரிய பட்டாளத்தான் தெரியுமாண்டு, நான் அந்தம்மாட்டப் பீத்திட்டு வந்திருக்கேன்! நீ என்னாய்யா, என் மானத்தை வாங்குற மாறி, இப்பிடிக் கிளம்பி நிற்குற?” – தாத்தனை எரிச்சலுடன் திட்டியபடி விருமன்.
பேரனின் வசவைக் கேட்டுத் தன்னை மேலிருந்து கீழ் வரைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட பெருசு, “எப்பிடிக் கிளம்பி நிக்கிறேன்?, எலேய்! என்னா டா?” என்றார்.
“ம்ம்ம்ம், இப்பிடி வேட்டியைக் கட்டிட்டுப் போனா, வேடிக்கைதேன் பார்க்க முடியும்! பக்கத்துல போய் பயிற்சியெல்லாம் குடுக்க முடியாது!”
“அதுக்கு?”
“ப்ச், மிலிட்டரிக்காரன் மாறி, கம்பீரமா பாண்ட்-சட்டை போட்டுப் போ தாத்தா”
கையை நீட்டித் திட்டிய விருமனிடம் “என்னாது?, பாண்ட்,சட்டையா?” என வாயைப் பிளந்த பெரியவர்,
“அடப் போடா பொசகெட்டப் பயலே! பாண்ட் போட்ற வயசா டா எனக்கு?” எனப் பேரனை ஏசினார்.
“ஏன் உன் வயசுக்கென்ன?, பட்டணத்துலக் கைத்தடியோட நடக்குற கிழவனுங்கக் கூட பாண்ட்-சட்டைதேன் போடுவாய்ங்க தெரியும்ல?”
“அது பட்டணம் டா! இங்க நான் பாண்ட் போட்டா, பாடைல கிடக்குறவங்கூட, எந்திரிச்சு வந்து வேடிக்கை பார்த்துட்டுப் போவியான் டா”
“பரவாயில்ல! பார்த்தா பார்க்கட்டும்! இப்ப உன்னால பாண்ட்-சட்டை போட முடியுமா?, முடியாதா?”
“எலேய்! என்னாடா இவன், காலங்கார்த்தால எங்கூட ஒரண்டை இழுத்துட்டுத் திரியுறியான்! வழியை விட்றா போக்கேத்த பயலே!” – என்றபடி நகரப் பார்த்தவரின் கையைப்பற்றிய ஆரன்,
“தாத்தா, அங்க அழகரு மட்டுமில்ல! கூடவே அந்தம்மாளும் இருக்கும்” என்றான்.
“அதனால?”
“உனக்கு வயசாய்டுச்சு-ண்டு அந்தம்மா லந்தைக் குடுத்தது மறந்துருச்சா பெருசு?”
ஆரன் சீண்டியதும், விடைத்த மூக்குடன் மீசையை நீவியவர்,
“எலேய்!, அவளுக்கு மட்டும் வயசு என்ன, குறைஞ்சிக்கிட்டாப் போகுது! தட்டுல என்னா இருக்கு, தொண்டைல என்னா இறங்குதுண்டு, வித்தியாசம் தெரியாத வயசுல இருக்கிறவ! என்னையக் கேலி செய்ய வந்துட்டா!, கருவாச்சிறுக்கி” – என்று விறைப்பாய்க் கூற..
“ப்ச், பகடி பேசுன வாய்க்குப் பசை போடனும்-ண்டா, நீயி பாண்ட்-சட்டைல போயாகனும் தாத்தா” – விருமன்.
“டேய்ய்ய்”
“பங்காளி சரியாத்தேன் சொல்றியான்! உன்னையப் பாண்ட் சட்டைல பார்த்ததுமே அந்தம்மாவுக்கு ஒரு ‘இது’ வரனும்ய்யா பெருசு!” – ஆரன்.
“எது டா?”
“டேய், இர்றா பங்காளி! கிழவா நான் நேரிடையாக் கேக்குறேன். உனக்கு அந்தம்மா மேல ‘அது’ இருக்கா இல்லையா?”
“என்னாடா அது,இது-ண்டு குழப்பிட்டுத் திரியுறீங்க ரெண்டு பேரும்?”
“ப்ச், என்னா பெருசு நீயி, எல்லாத்தையும் உன்-ட்ட நான் விலாவரியா விளக்க முடியுமா?”
“எலேய்! என்னா தான்டா உங்க பிரச்சனை?”
ப்ச்! யோவ் கிழவா, ஒரு காதலியைப் பார்க்கப் போற காதலன், சும்மா, சிவாஜி கணேசன் மாறி ஜம்முண்டு போக வேணாமா”
ரசனையாய்க் கூறிய விருமனைக் கண்டு பதறிய கிழவன் “என்னா பேச்சு பேசுற டா வெவஸ்தகெட்ட பயலே!” என்று பொங்கிப் பின், இருவரது தோளையும் பற்றித் தள்ளி விட்டு நகரப் பார்க்க,
அவரைக் கோழி அமுக்குவது போல் அழுத்திப் பிடித்த ஆரன், அவர் சட்டையை அவிழ்க்க, விருமன் வேட்டியை உருவியெடுத்தான்.
“எலேய்! விடுங்க டா! விடுங்க டா என்னைய! ஊர்ல எனக்குண்டு இருக்குறக் கொஞ்ச,நஞ்ச மான,மருவாதையை கப்பலேத்தி விட்டுப் போய்ராதீங்கடா டேய்!” – புலம்பிய கிழவனைக் கண்டு கொள்ளாது இருவரும் சேர்ந்து பாண்ட்,சட்டை அணிவித்து விட, கடைசியாய் விருமன் அவர் தலையில் வெள்ளை நிறத் தொப்பியை வைத்து விட்டு, “இப்பப் பாரு கண்ணாடியை” என்றபடி அவரைக் கண்ணாடியை நோக்கித் திருப்பினான்.
கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்ட பெரியவர், சட்டையை இழுத்து விட்டு, காதோர முடியைக் கோதியபடி, “என்ன கண்றாவி டா இது!” என்றார்.
“நல்லாத்தேன் இருக்கு பெருசேய்! பத்து வயசு குறைஞ்சாப்ல தெரியுற! என்ன, உச்சி மண்டைதேன் தரிசு நிலம் மாறி, பொட்டலாப் போய்க் கிடக்கு! மத்தபடி, நீ எழுவது வயசுலயும், சும்மா எம்.ஜி.ஆர் கணக்கா இருக்க தாத்தா” – விரிந்த சிரிப்புடன் விருமன்.
“எலேய்! பங்காளி! பாராட்டுறதுக்கு அளவு இல்லையா டா! தீஞ்சு போன கரிச்சட்டி மாறி இருக்குற இவர் கலர் எங்க, அந்த மனுசன் கலர் எங்க?” – ஆரன் வாரியதும், முறைத்த பெரியவர்,
“கொஞ்சம் கலர் கம்மியாப் போய்ட்டேன்! அதுக்கென்னாடா இப்ப?,” என்று சீற,
“கொஞ்சமாம்ல!” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டான் ஆரன்.
“அவனை விடுய்யா பெருசு! இதே சோக்கோட போய், நீயி, நின்ன-ண்டு வையி! அந்தம்மா அப்பிடியே பொளந்த வாயோட பொம்மையா, கிறங்கிப் போய் பார்க்கும் பாரு!”
“ஏன் டா, பொட்டு-ண்டு போற வயசுல இருக்கிறவளை, பொம்மையா நிற்க வைக்குறதால என்னாடா பிரயோசனம்?”
“என்னா பிரயோசனம் இருக்கனும்?, யோவ் கிழவா! அந்தம்மா உன்னைய சீண்டுனதுக்கு, பதில் குடுக்கத்தேன் இந்த வேசமெல்லாம்! நீயி விட்டா, தாலி கட்டித் தனிக்குடித்தனம் போயிருவ போல” – விருமன்.
“எலேய்! வரம்பு மீறி பேசுன-ண்டா, வாயை உடைச்சுப்புடுவேன் சொல்லிட்டேன்!, அவ சூரியன் மாறி டா! அவ குடுக்குற வெளிச்சம்தேன் என்னைய அணைக்குமே தவிர, என்னால அவளை அணைக்க முடியாது டா!”
“ரொம்ப ஏங்குறியே பெருசு”
“ஏக்கமில்ல டா! பெருமை!”
“அடேங்கப்பா” – ஆரன்.
“அவளை விட நான் அதிகம் விரும்புனது அவ சிந்தனைகளையும்,செயல்களையும்தேன் டா! அவளோட எண்ணப் போக்கையும், செயல் திறனையும் பார்த்து, நான் அவளைப் போல வாழக் கத்துக்கிட்டவன் டா! அவ கூட வாழ்றதை விட, நான், அவளாவே வாழ்றது எம்புட்டுத் திருப்தியைக் குடுக்குது தெரியுமா?, ஒன்னா வாழ்ந்திருந்தா, எனக்குள்ள இருக்குற ஆண்-ங்குற கர்வம், அவ ஆளுமையை விரும்பாம போயிருக்கலாம்! என் வயசு, அவ எனக்குப் பொண்டாட்டியா மட்டும் இருந்தாப் போதும்-ண்டு, சின்னத்தனமா சுயநலமா யோசிச்சிருக்கலாம்! கல்யாணம் என்னத்தடா பெருசா தேடித் தரும்?, 4 புள்ள குட்டி, காசு,பணம், சில அர்ப்ப சந்தோசம் அம்புட்டுத்தேன?, கல்யாணம் கட்டிக்காம, கூட வாழாம, பேச்சு வார்த்தையில்லாம, மனசளவுல அவ சிந்தனைகளோட ஒத்து வாழ்றது, சந்தோசத்தைக் கடந்த வரம் டா!! அவ, எனக்கான அகராதி! நான் படிக்கிற வாழ்க்கைப் பாடத்துக்கு விளக்கவுரை வைச்சிருக்கிறவ! அவ அறிமுகம் இல்லாம போயிருந்தா, நான் ஒரு சாதிமான்-ண்டு உன் மாமன், மார் தட்டிட்டுத் திரியுறியானே, அவனைப் போல நானும் ஒரு வெறி புடிச்ச சொரிநாயாத்தேன் இருந்திருப்பேன்! என் எண்ணங்களைக் களையெடுத்து, புது சிந்தனைகளை விதைச்சவ அவ! அதுதேன் என்னைய வழி நடத்தி, மனுசனா வாழ வைச்சுச்சு!”
நெகிழ்வுடன் கூறுபவரை இருவரும் மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கத் தொண்டையைச் செருமியவர்,
“அதனால, இந்த அலங்கோலமெல்லாம் வேணாம் டா!, என் வேட்டி,சட்டையைத் திருப்பிக் குடுத்துருங்க டா” – என்று கெஞ்சிக் கேட்க,
அதுவரை சின்ன சிரிப்புடன் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த விருமன், உடனே முகத்தை மாற்றி,
“அது முடியாது பெருசு!, அந்தம்மாவை நீ அகராதியா பார்க்குற-ங்குறதுக்காக, அது அகராதித்தனமா பேசுறதையெல்லாம் எங்களால சகிச்சுக்க முடியாது” என்றான்.
“ஆமா!, உனக்கு வயசாய்டுச்சு-ண்டு அந்தம்மா கேலி பேசுனதுக்கு நாங்க, பதில் சொல்லியே ஆகனும்!” – தன் பங்குக்கு ஆரன்.
“உரிமையா அவ ஒரு வார்த்தை சொன்னது குத்தமா டா?” எனப் புலம்பிக் கொண்டப் பெரியவர், பங்காளிகளிருவரும் ஒன்று கூடித் தன்னைப் பகடையாய் உருட்டி விளையாடுவதைக் கண்டு, “எலேய்?, ஊர்ப்பயலுக பார்த்தாய்ங்கண்டா, என்னையக் கோமாளி-ண்டு கேலி பேசுவாய்ங்க டா!, கழட்டி விடுங்க டா” – என்று விடாது கெஞ்ச, அவரை சரிக்கட்டி, கலாம்மாளின் வீடு நோக்கி அனுப்பி வைத்தனர் ஆரனும்,விருமனும்.
வெளிச்சத்திற்காகக் காத்திருந்த வானத்தை வெறித்தபடி அந்த அதிகாலை நேரத்தில், கலாம்மாளின் வீட்டு வாசலில் நின்றிருந்தார் பெரியவர்.
கதவைத் திறந்து கொண்டு வெளி வந்த அழகர், கிழவனைக் கண்டு வாயைப் பிளந்தபடி நிற்க, அவனது பார்வை சங்கடத்தை உண்டாக்கினாலும் மறைத்து, “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியவர்,
“என்னா டா?” என அதட்டினார்.
பேச்சற்று ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்தவனிடம்,
“என்னத்துக்கு டா வாயை ஆ-ண்டு வைச்சிருக்கிறவன்?, ஏன், கிழடு,கட்டைகல்லாம் பாண்ட்-சட்டை போட ஆசைப்படக் கூடாதா?” என்று கேட்க,
“போ..போடலாங்கய்யா! தாராளமாப் போடலாங்கய்யா! அதுலயும் நீங்க, கண்டிப்பாப் போடலாங்கய்யா” என்று உளறிக் கொட்டியவன்,
“நான் மைதானத்துக்குப் போறேன்” என்றபடி கலாம்மாள் வாங்கிக் கொடுத்த ஷூவை மாட்டிக் கொண்டு, வீட்டின் பின்புறமிருந்த க்ரௌண்டிற்கு ஓடி விட்டான்.
அழகரைத் தொடர்ந்து வெளி வந்த கலாம்மாளின் கண்கள், ஓடிச் சென்றவனைப் பார்த்தபடித் திரும்பி நின்றிருந்தப் பெரியவரின் தோற்ற மாற்றத்தைக் கண்டு ஒரு நொடி வியந்துப் பின், அடக்கப்பட்ட சிரிப்பைப் பிரதிபலிக்க,
“என்னத்துக்கு இப்பிடி ஓட்றியான்” என முணுமுணுத்தபடித் திரும்பிய கிழவர், கலாம்மாளின் புன்னகை முகத்தைக் கண்டபின்,
சங்கடத்துக்கே சங்கோஜம் வந்தது போல், சிரிக்க முயன்றும் முடியாமல், அவரை நிமிர்ந்து பார்க்க நினைத்தும், முயலாமல், பேராண்டிகளை மனதுக்குள் திட்டியபடி, முகம் கன்ற நெஞ்சைத் தடவியபடி தயங்கி நிற்க,
“கையில என்ன?” எனக் கேட்டார் கலாம்மாள்.
குனிந்துக் கையை நோக்கியவர் பின் “தொ..” எனத் தொடங்குகையில் தொண்டை கரகரத்து விட, செருமிச் சரி செய்து கொண்டிருந்தவர்,
“தொப்பி” என்றார்.
“போட்டுக்க வேண்டி தான?, தோரணையா இருக்கும்ல?” – சிரிப்பும், கேலியுமாய்க் கேட்க,
விடைத்த மூக்குடன் பற்களைக் கடித்தபடி அவரை நிமிர்ந்து பார்த்தக் கிழவர், கண்ணைச் சுருக்கி முறைக்க,
“கேலி பண்ணல! நிசமாத்தேன் சொல்றேன்” என்றவரைக் கண்டு,
“பயிற்சி குடுக்க சுலபமா இருக்கும்ண்டு எம் பேரன்ய்ங்கதேன் இப்பிடி உடுப்பை மாட்டி விட்டாய்ங்க” என்று சத்தமாய்த் தொடங்கியவர், “வேற எதுக்குமில்ல”என முணுமுணுப்பாய் முடிக்க,
சிரித்தக் கலாம்மாள், “உங்களுக்கு வயசாய்டுச்சுண்டு நான் சொன்னது உம்ம பேரன்ய்ங்களுக்குப் பட்டுக்கிச்சாக்கும்! லங்கோடு கட்டுறவருக்கு, பாண்ட்-சட்டை மாட்டி விட்டு ரோசத்தைக் காட்றாய்ங்க, ” என்றார்.
“ஆமாமா, நான் மட்டுந்தேன் கூனு விழுந்து, கிழவனாய்ப் போனேன்! எங்கூட நிற்குறவகல்லாம், இன்னும் குறுக்கு சிறுத்தக் குமரியாத்தேன் இருக்காக”
“என்னையவா சொல்றீக?”
“உங்களைத் தவிர இங்கன வேற யாரு எங்கூட நிற்குறது?” – கிழவன் நக்கலடித்ததும், உதட்டைப் பிதுக்கியவர்,
“ஏன்? நான் குமரிதேன்! இன்னும் எனக்கு ஒத்த முடி கூட நரைக்கல தெரியும்ல?” – எனக் கையைக் கட்டிக் கொண்டு பெருமை பீற்ற,
“டையி,கிய்யி அடிப்பீக போல! ஒசரத்துல நிற்குறவகளுக்கு, ஒப்பனை பண்ணவாத் தெரியாது”
“டையெல்லாம் இல்ல! இயற்கையாவே நரையில்லாம என் முடி கருத்துத்தேன் இருக்கு”
“முடி மட்டுமா கருத்துக் கிடக்கு?” – கிழவன் அதற்கும் முணுமுணுக்க, மூக்கு விடைத்தப் பெண்மணி,
“ஆமா, இவரு பெரிய எம்.சி.ஆர் கலரு!” – என்று ரோஷப்பட்டதும்,
“யாத்தே! கோவமெல்லாம் வருது! பார்றா”
மெல்லிய சிரிப்புடன் சீண்டியவரைக் கண்டு புன்னகை தோன்ற,
“எனக்கு வயசாய்ருச்சுங்கறதை நான் ஒத்துக்கிறேனோ இல்லையோ! ஆனா, உம்ம பேச்சு என் மனசை இளமையா உணர வைக்குதுங்குறதை நான் ஒத்துக்கிட்டுத்தேன் ஆகனும்” என்றார்.
“ஆளும்,பேருமா வாழ்ந்தா, மனசு எப்பவும் இளமையாத்தேன் இருக்கும்!”
“ஆளும்,பேருமாவா?”
“ஆமா, புருசன், புள்ளக்குட்டி, பேரன்,பேத்திங்க இந்த மாறி”
“அதுக்குத்தேன் எனக்கு வாய்ப்பில்லண்டு போச்சே”
“என்னத்துக்கு?”
“மணமேடைல வைச்சு, மாப்பிள்ளையை துரத்தி விட்டவளை, எவங்கட்டத் தயாரா இருந்தியான்?”
“நீங்க மாப்பிள்ளையை மட்டுமா துரத்துனீக?, கட்டிக்கக் கேட்டு உம்ம பின்னாடியே சுத்தி,சுத்தி வந்தவனையுந்தேன் கல்லை விட்டெறிஞ்சு விரட்டி விட்டீக?”
“விரட்டி என்னா பிரயோசனம்?, சுத்தி,சுத்தி வந்த மனுசன் இன்னும் சுதாரிச்ச மாறி தெரியலயே”
“உம்ம விசயத்துல, அந்த மனுசன் கடைசி வரை சுதாரிக்கப் போறதேயில்ல!”
“அம்புட்டுப் பாசமா?”
“இல்ல! பக்தி” – பட்டெனப் பதிலளித்தக் கிழவனைக் கண்டு புருவத்தை உயர்த்திய கலாம்மாள் பதிலின்றி இதழ் பிரித்து சிரிக்க, அவர் புன்னகை முகத்தை ஒரு நொடி நின்று பார்த்து விட்டு, மைதானத்தை நோக்கி நடந்தார் பெரியவர்.
