உழிஞை-3

கிழக்கில் தன் கதிர்க்கரங்களை நீட்டி,நெளித்தபடி, விழிக்கத் துவங்கியிருந்த சூரியனின் சிவந்த நிற மேனியைப் பார்த்தவண்ணம், மரத்தில் சாய்ந்தபடி கைக்கட்டி நின்றிருந்தான் அழகர்.

அருகே வந்த கிழவர், அவன் தோளைத் தட்ட,

“ஐயா” என்றபடி அவர் முகம் பார்த்தான்.

கலாம்மாளின் தயவால் மிலிட்டரி கட் செய்யப்பட்டிருந்த முடியுடன், உயரமாய் நின்றவனைத் திருப்தியாய் நோக்கியவர், “எல்லாம் சவுகரியமா இருக்குல்லப்பு?” என வினவினார்.

“ஐயா?” - கேள்வியாய் அவர் முகம் பார்த்தான் அழகர்.

“தங்கியிருக்கிற வீடு, அங்க இருக்குற ஆளு, திங்குற சோறு,உறக்கம் எல்லாம் சவுகரியமா இருக்குல்ல?”

அவர் கேள்வியில் புன்னகைத்தவன், தலை குனிந்தபடி “எல்லாமே என் தகுதிக்கு மீறுனதா இருக்குங்கய்யா” என்றவன் தொடர்ந்து,

“டைனிங் டேபிள்ல சோறு, பஞ்சு மெத்தைல உறக்கம், பாத்ரூம்ல குளியல்ண்டு எ..எ..எல்லாமே புதுசா இருக்குங்கய்யா” என்றான்.

தயக்கமாய்க் கூறியவனிடம் மூக்கைச் சுருக்கியக் கிழவர்,

“அய்யய்ய, நீயி அதையெல்லாம் பார்த்து மிரளாத டா! அவ டவுன்ல பொழைக்கிற சோக்குல சும்மா பந்தா பண்ணிக்கிட்டுத் திரியுறா! நல்லி எலும்பைக் கைல குடுத்தா, நாலு நாளைக்கு வைச்சு உறியுறவ, நாற்காலிலதேன் சோறு திங்குறாளாக்கும்! கருவாக் கழுத” என்று மீசையை நீவியபடி நமுட்டுச் சிரிப்புடன் கேலி பேச,

சிரிக்காமல் உர்ரென நின்றவனிடம்,புருவம் சுருக்கி, “என்னா டா?” என்றார்.

“அவக..அவக.. ரொம்ப நல்லவங்கய்யா!”

“ஓஹோ” -புருவம் உயர்த்தினார் பெரியவர்.

அவர் முகம் பாராமல், தலையை இப்புறமும்,அப்புறமுமாய்த் திருப்பியவன், “இ…இனி அவகளை இப்பிடிக் கேலி பேசாதீகய்யா!” எனக் கூற..

“அடக் களவாணிப் பயலே!” – என வாயில் கைவைத்தவரிடம்,

“அவகளை நினைச்சா எனக்கு ரொம்ப வியப்பா இருக்குதுங்கய்யா! எனக்கும்,அவகளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது! ஆனாலும், எனக்காக எம்புட்டு உதவி செய்றாக!, நான் கொண்டு வந்த உடுப்பு சரியில்லண்டு, புது உடுப்பு வாங்கிக் குடுத்தாக! பயிற்சிக்கு உதவியா இருக்கும்ண்டு ஷூ-வெல்லாம் கூட வாங்கிக் குடுத்திருக்காக!” – என்றான்.

“பார்றா”

வெட்கமுமாய்,மகிழ்ச்சியாய்க் கூறிக் கொண்டிருந்தவன், திடீரென முகம் கன்ற, நொடியில் கண்ணீர் தேங்கி விட்ட விழிகளுடன்,

“அவக உதவற மனப்பான்மையோட,நல்ல எண்ணத்துல குடுக்குறாக, ஆனா, எனக்குத்தேன் அவக நீட்டுனதை வாங்க, கையி கூசிச்சிருங்கய்யா” என்றான்.

பதறி “எலேய் அழகரு” – அவன் தோளைப் பற்றிக் கொண்டவரிடம்,

“இதுக்கெல்லாம் நான் ஏத்தவன் தானா?, எனக்கு ரொம்பப் பயமா இருக்குங்கய்யா! ஒரு வேளை நான் செலக்ட் ஆகாம, தோத்துப் போய், இத்தனைப் பேரோட போராட்டமும்,முயற்சியும் ஒன்னுமில்லாம ஆகிப்போச்சு-ண்டா?, அந்த நினைப்பே என்னையக் கலங்கடிக்குதுங்கய்யா!” – என்று அவன் கலக்கமான குரலில் கூற,

“எலேய்! என்னாடா நீயி! சுத்தத் தொடை நடுங்கிப் பயலா இருக்குற?, தோத்துப் போனா, என்னா இப்ப? வாழ வழியா டா இல்ல இந்த உலகத்துல! இது ஒன்னுதேன் உனக்கிருக்கிற வாய்ப்பா?, உழைக்கத் துணிஞ்சவனுக்கு, ஆயிரம் வழியிருக்கு! மனசு இருந்தா, மார்க்கமுண்டு டா!” என்ற கிழவர் தொடர்ந்து,

“உம் பள்ளியோடத்துல, ஓட்டப்பந்தயத்துல உன்னைய மிஞ்ச ஆளே இல்லண்டு பேசிக்கிறாய்ங்க! ஓடும் போது, என்னா நினைச்சு ஓடுன?, ஜெயிக்கனும்,ஜெயிக்கனும்ண்டா?” எனக் கேட்டார்.

“நிச்சயம் இல்லங்கய்யா! வெற்றி,தோல்வியெல்லாம் எம் மனசுல இருந்ததே இல்லங்கய்யா! ஓடுறது எனக்குப் பிடிச்சிருந்தது! ஆர்வம் குடுத்த உந்துதல்ல கிடைச்ச சின்னப்புள்ளத்தனமா வெற்றிங்கய்யா அது!”

“பட்டாளத்துல சேர்றியாண்டு நான் கேட்டப்பவும், அதே ஆர்வம்தேன உன்னையத் தலையாட்ட வைச்சுச்சு?, ஜெயிப்போமா, தோற்போமான்ற நினைப்பே உம் மனசுல அன்னைக்கு இல்ல! உங்கண்ணு முழுக்கத் தேங்கி நின்னதெல்லாம் வெறும் ஆர்வம் மட்டுந்தேன்!”

“……..”

“உனக்கிருந்த ஆர்வம்தேன், ஈடுபாட்டோட, முடிவைப் பத்தி சிந்திக்காம , ரசிச்சு,அனுபவிச்சு, உன்னைய இலக்கை நோக்கி ஓடச் சொல்லி ஜெயிக்க வைச்சுச்சு! அந்த ஈடுபாட்டைத் தக்க வைச்சுக்கிட்டுக் குறி பார்த்துக் கல்லெறியுறது மட்டுந்தேன் உன் வேலை! பழம் விழுந்தாலும் சரி, பூ விழுந்தாலும் சரி! பார்த்துக்கலாம்”

கிழவரின் பேச்சில் தைரியம் பெற்றவன், “ரெண்டு நாளைக்கு முன்னாடி வரை, உலகமே எனக்கு எதிரா சதி செய்ற மாறி தோணுச்சுங்கய்யா! வாழ்க்கை என்னைய விரட்டி, ஒதுக்குறதா நினைச்சேன்! ஆனா இப்ப, நான் சந்திக்குற மனுசங்களும், நடக்குற விசயங்களும், என் வாழ்க்கைக்கான அகராதியையே மாத்தி எழுதுறதாத் தோணுதுங்கய்யா!” என்று கூற,

“எல்லாமே அனுபவம்தேன் டா அழகரு! உன் கண் பார்க்குற,கை தொட்ற எல்லா விசயத்துலயும் சாதகமும்,பாதகமும் அடங்கிதேன் இருக்கும்! சாதகத்தைக் கைல பிடிச்சுக்க! பாதகத்தைப் பாதத்துக்குக் கீழ போட்டுப்புட்டு, மனசு கை காட்டுற பாதையை நோக்கி முன்னேறிப் போய்க்கிட்டே இரு!” என்றவரைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தவன், மீண்டும் முகம் சுருங்க,

“எங்காத்தா எப்பிடி இருக்குங்கய்யா?, என்னையக் காணோம்ண்டு ரெம்ப அழுதுச்சா?” எனக் கேட்டான்.

“ம்ம், நேத்து விடிகாலைலயே, உங்காத்தா அவ கண்ணீரால, என் வீட்டு வாசலை மொழுகி விட்டுப்புட்டுப் போய்ட்டா! பொட்டக்கழுதைகதேன் கண்ணீர் விட்றதுல கை தேர்ந்தவளுகளாச்சே! உங்காத்தா திண்ணையை நனைச்சா! எம்பேத்தி, முற்றத்தை நனைச்சா! எந்தொண்டைத் தண்ணீ வத்துற வரை நல்லா வடிச்சாளுக கண்ணீரை!” – நொடித்துக் கொண்டவர், அவனது கவலையான முகத்தைக் கண்டு,

“எலேய்! நாளைக்கு நீயி, பட்டாளத்துல சேர்ந்தப்புறம், உங்காத்தா இளிக்குற இளிப்புல 32 பல்லும் வெளிய வந்து விழுகப் போகுது டா! இன்னைக்கு அவ அழுகுற அழுகையைப் பத்தி யோசிக்காத! நாளைக்கு அவ சிரிக்கப் போற சிரிப்பை மனசுல வையி” என்று அவர் திட்டவும், சற்றுத் தெளிந்தவன், தயங்கியபடி,

“வ..வ..வந்து.. அந்தப் புள்ள பரீட்சை எழுதப் போறதில்லங்களாய்யா?” என்று புவியரசியைப் பற்றி வினவ,

பெயர் கூறா விட்டாலும், அவன் தன் பேத்தியைப் பற்றிக் கேட்பதைப் புரிந்து கொண்டவர், “அவகாத்தாளும்,அப்பனும் எதுடா சாக்குண்டு திரியுறாய்ங்க! அதேன் பரீட்சை அன்னைக்குப் பள்ளியோடத்துக்கு அனுப்பிக்கலாம்ண்டு, வீட்ல உட்கார வைச்சிருக்கேன்!” என்று கூற,

“ஓ!” என்றவன், “அந்தப் புள்ள படிக்காம போயி பரீட்சை எழுதுனாலும், பாஸ் ஆயிரும்ங்கய்யா” என்றான்.

“அதுசரி” என்றவர் “விசாரணையெல்லாம் போதும்! வெயில் வர்றதுக்குல்ல வெரசா பயிற்சியைத் தொடங்குவோம் வா” என்று விட்டு மைதானத்தில் இறங்கினார்.

முதல் சுற்றான உடற்தகுதித் தேர்வில் நடக்கும் போட்டிகளைப் பற்றிக் கூறி, அவர் பயிற்சி கொடுக்கத் தொடங்க, ஆர்வமாய்க் கற்றுக் கொண்டான் அழகர்.

மைதானத்தில் வெயில் ஏறத் துவங்கியதும், பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு வந்தனர் இருவரும்.

வாசலில் காத்திருந்த கலாம்மாள், பெரியவரின் கையில் காபி கப்பையும், அழகரிடம் கேப்பைக் கஞ்சியையும் நீட்ட, தயக்கத்துடன் நன்றி கூறி வாங்கிக் கொண்டவன், அருகிலிருந்தத் திண்டில் அமர்ந்தான்.

அவர் நீட்டியக் கப்பைக் கையில் வாங்கிய கிழவர், கப்பைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு,

“கப்பு எம்புட்டு?” எனக் கேட்க, மூக்கை விடைத்தார் கலாம்மாள்.

“பொழுது விடிஞ்சதும், மண்ணு சட்டில ஊறுன பழைய கஞ்சியைக் மடக்,மடக்ண்டு குடிக்குறவன் கையில, காபி கப்பை நீட்டுனா, எப்பிடி?”

எந்நேரமும் கிழவர், அந்தம்மாளை வம்பிழுத்தபடித் திரிவதைக் கண்டு சிரிப்பு வர, கேப்பைக் கஞ்சியைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்கு நகர்ந்து விட்டான் அழகர்.

“சரி, கப்பை இப்பிடி குடுத்துப்புட்டு, வீட்டுக்குப் போய் கஞ்சியைக் குடிங்க” – கையை நீட்டியவரிடம், மறுத்த பெருசு,

“அதெப்பிடி?, நீங்க நாற்காலில உட்கார்ந்துக்கிட்டு, நாகரீகமா, நாக்குல படாம சோறு திங்குற வித்தையைக் காண்ங்காம, நான் வீடு போய்ச் சேருவேனா?” எனக் கேட்டார்.

“அப்ப காபியைக் குடிச்சுப்புட்டு, பைய்ய உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்க”

“ஆமா,பின்ன, விரல் நுனில எடுத்து, நாக்கு நுனில படாம, நடுவயித்துக்கு சோத்தைத் தள்ளுறது எம்புட்டுப் பெரிய சவாலான விசயம்! நானெல்லாம் உம்மைப் பார்த்துத்தேன் கத்துக்கிடனும்”

“அது கஷ்டம்! வாய் நிறையா, நீரு வளர்த்து வைச்சிருக்கிற மீசைக்கு, நாகரீகம் கத்துக் கொடுக்கிறது ரொம்பக் கஷ்டம்”

கிண்டலாய்க் கூறியவரைக் கண்டு புருவம் சுருக்கி, மீசையை நீவிக் கொண்ட பெருசு, “மீசை புடிக்கல போலயே” என்று விட்டுப் பின், “எடுத்துற வேண்டிதேன்” என்று கூறியதும்,

கண்ணை விரித்த கலாம்மாள், “அய்யய்யோ! அப்பிடியெல்லாம் செஞ்சுபுடாதீக! அப்புறம் பார்க்குறவிங்க, உம்மைக் கண்டு பயப்பட மாட்டாய்ங்க, பப்பரமுட்டாய்தேன் வாங்கித் தருவாய்ங்க!” என்று சிரிக்க,

“நக்கலுக்கு மட்டும் குறைச்சலில்ல” – பல்லைக் கடித்தவரிடம்,

“ஆமா! உம்ம கூட நின்-டா, தானா வருது” – என்றவரைக் கண்டு,

“அதுசரி” என்று நொடித்துக் கொண்டவர், வீட்டினுள் தரை பெருக்கிக் கொண்டிருந்தப் பெண்ணைப் பார்த்து,

“யாரு?” என்று விசாரித்தார்.

திரும்பிப் பார்த்த கலாம்மாள், “என் சிநேகிதி! புருசன் விட்டுட்டுப் போயிட்டியான்! புள்ள இல்ல! தனியா நிண்டா! அதேன் கூட அழைச்சுக்கிட்டேன்!” என்று கூறி விட்டு “ஏற்கனவே கூட்டுன வீட்டுன எத்தனை முறைடி பெருக்குவ?”என்று குரல் கொடுக்க,

“ஓ! கூட்டிட்டியா?” எனக் கேட்டவர், பெரியவரிடம் வரவேற்பாய்ப் புன்னகைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

முகம் மாற காபியைக் குடித்தப் பெரியவரின் அமைதியைக் கண்டு, கலாம்மாள் என்னவெனப் புருவம் உயர்த்த,

“புருசன்,புள்ள குட்டி-ண்டு வாழ்ந்திருந்தா, இதெல்லாம் தேவைப்பட்டிருக்காதுல்ல?” எனக் கேட்டார்.

“அதனால என்ன குறைஞ்சு போச்சு என் வாழ்க்கைல?”

“……….”

“என் குறிக்கோளும்,லட்சியமும் பொது வாழ்க்கையைப் பத்தி யோசிக்க விடல! இப்ப வரைக்கும் அந்த நினைப்பும் வரல! விடிஞ்சா தொடங்குற என் ஓட்டம், ராத்திரி, நிம்மதியான உறக்கத்தைத்தேன் குடுக்குதே தவிர, எனக்கு யாருமே இல்லங்குற ஏக்கத்தை இல்ல! அழகரு மாறி, சமூகப் பிரச்சனைக்குப் பலியாகுற ஆயிரம் புள்ளைகளை தெனம் பார்க்குறேன்!, அதுகளை என் சொந்தக் குழந்தைகளா மனசு, நினைக்கையில, ஏக்கமெல்லாம் எனக்கு ஏன் வரப் போகுது?”

அவர் பதிலில் புன்னகை கொண்ட பெரியவர்,

“உம்ம மேல பக்தி-ண்டு சொன்னா சிரிக்குறீக! ஆனா, இந்த மாதிரி நீங்க பேசுறதைக் கேட்கையில, பக்தியைத் தாண்டுன பரவச நிலைக்குப் போயிருது மனசு” என்று விட்டு, அவர் அதற்குப் பதிலளிக்கும் முன், பாக்கெட்டிலிருந்துக் கத்தைப் பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்.

“அழகரு செலவுக்கு வைச்சுக்கங்க”

“நான் வறுமைல வாடுறதா உங்கட்ட சொல்லவேயில்லயே”

“ஆத்தீ! பீங்கான் தட்டுல சோறு திங்குறவகளுக்குப் பணத்துக்காப் பஞ்சமிருக்கப் போகுது”

“பின்ன எதுக்கு இது?”

“என்னைய நம்பி வந்தப் பயலுக்கு எதுவுமே செய்யல-ண்டா, என் மனசாட்சி நாளைக்கு என் மூஞ்சில காறித் துப்பாதா?, உம்மை, அவனுக்குச் செலவு செய்ய வேணாண்டு சொல்லல! நான் குடுக்குறதையும் ஒரு பங்கா சேர்த்துக்கங்கண்டுதேன் சொல்றேன்!”

கிழவர் பொறுமையாய்க் கூறியதைக் கேட்டபின், காசை வாங்கக் கை நீட்டியவரிடம்,

“நீங்க, என் கூட எதைப் பகிர்ந்துக்கவும் விரும்ப மாட்டீகண்டு எனக்கு நல்லாத் தெரியும்! ஆனாலும்” என்று கிழவர் வம்பு செய்ய,

“உம்ம நட்பைப் பகிர்ந்துக்க நான் எப்பவும் தயார்தேன்” என்று கூறியபடியே பணத்தை வாங்கிக் கொண்டவரிடம்,

“யாத்தே! இப்பவாச்சும் மனசு வந்துச்சே” – என்று கேலி செய்தவரைக் கண்டபடி வந்து சேர்ந்தனர் ஆரனும்,விருமனும்.

“என்னா மனசு வந்துச்சு?” – அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்ட விருமன், ஆர்வமாய்க் கேள்வி கேட்க,

“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிய கிழவர், “காபி-ண்டு கழனித்தண்ணீ ஒன்னு குடுத்தீகளே! அதை இவிங்களுக்கும் ஊத்திக் குடுங்க! அப்பத்தேன் இவிங்க வாயை அடைக்க முடியும்” என்று விட்டு “மறக்காம அந்தக் கப்-ல ஊத்திக் கொண்டு வாங்க” என்றார்.

“கிழவன் பேச்சை மாத்துறதைப் பார்த்தியா டா! நம்ம-ட்ட மட்டும் பெருமை,எருமைண்டு வசனம் பேச வேண்டியது! அந்தம்மா மூஞ்சியைப் பார்த்ததும் ஜொள்ளு விட்டு, மானத்தை வாங்க வேண்டியது! பெருசு சரியில்ல பங்காளி” – ஆரனிடம் விருமன் முணுமுணுக்க, அவனைக் கண்டுகொள்ளாது ஆரன்,

“தாத்தா, பாண்ட்-சட்டைக்கு என்னா ரியாக்ஷன் அங்க?” என மெல்லக் கேட்டான்.

“போங்கடா டேய்! லங்கோடு கட்டுறவனுக்கு, இதெல்லாம் தேவையாண்டு அசிங்கப்படுத்திப்புட்டா டா” – கிழவன் எரிச்சலாய்க் கூறியதும், இருவரும் சத்தமாய்ச் சிரிக்க, காபி கப்பை நீட்டினார் கலாம்மாள்.

தாத்தனைப் போலவே பேராண்டிகளிருவரும் கப்பைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம், அழகர் “அண்ணே” என்றபடி அருகே வர,

“எலேய்! அழகரு, இதுலயாடா உனக்குக் காபி குடுக்குறாய்ங்க?” என்று விருமன் கேட்டதும், தலையைச் சொரிந்தபடி சங்கோஜமாய் சிரித்தவன், “ஆமாண்ணே!, முதல்ல எனக்கு எப்பிடிப் புடிச்சுக் குடிக்குறதுண்டே தெரிலண்ணே! காபி சிதறிடுமோண்டுப் பயம் வேற! அப்புறம், அவகதேன் சொல்லிக் குடுத்தாக” என்று மெல்லக் கூற,

“அவகலாம்ல! இவன் என்னாடா கிழவனுக்கு மேல இருக்கியான்” என்று முணுமுணுத்த விருமன்,

“எந்தாத்தனை லங்கோடு கட்டுறவண்டு சொன்னீகளாம்ல?” எனக் கலாம்மாளை அதட்டினான்.

“ஆமா! உந்தாத்தன் லங்கோடு கட்டுறவருதேன?”- அவர் தோளைக் குலுக்கியபடி அலட்டிக் கொள்ளாமல் கேட்க,

“அன்னைக்கும் இப்பிடித்தேன் அவரை வயசானவன்-ண்டு சொன்னீக! இன்னைக்கு லங்கோடு கட்டுறவண்டு கேலி செய்றீக! எந்தாத்தனைப் பார்த்தா எப்பிடித் தெரியுது உங்களுக்கு?” – என்று பொங்கியவன்,

“எப்பிடித் தெரியனும்?” – என்று மீண்டும் அவர் சலனமில்லாது கேள்வி கேட்டதும்,

“ம்ஹூம், கஷ்டம் பெருசு! கஷ்டம்! இந்தம்மாளை அசர வைக்குறது ரெம்பக் கஷ்டம்” – என்றபடி காபி கப்புடன் திண்டில் அமர்ந்து விட்டான்.

பேராண்டிகளுடன் பேருந்தை விட்டிறங்கி, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த கிழவர், “நல்ல வேளை, வேசத்தைக் கலைச்சுக் கூட்டி வந்தீகடா! பாண்ட்-சட்டையோட நான் உலா வர்றது தெரிஞ்சா, ஊர்ப்பயலுக பூராப் பேரும் என்னைய வரவேற்க, மந்தைல கூடியிருப்பாய்ங்க” என்றபடியே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டார்.

“மிலிட்டரிக்காரன் மாறியா பேசுற பெருசு நீயி?” – ஆரன்.

“எலேய்! இடத்துக்குத்தக்கன வாழ்றனவன் டா நானு!” – என்று கிழவர் நொடித்துக் கொண்டிருக்கையில், ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி, சட்டையின் காலர் பகுதியை இழுத்து விட்டுக்கொண்டு எதேச்சையாய்ப் பின்னே திரும்பிய விருமன்,

சைக்கிளை உருட்டிக் கொண்டு, இவர்களை நோட்டம் விட்டபடிப் பின்னே வந்து கொண்டிருந்த மணிவண்ணனின் விழுதுகளில் ஒருவனைக் கண்டு, நின்றான்.

விருமன் நின்றதும், “என்னாடா?” எனக் கேட்டுக் கிழவனும்,ஆரனும் நின்று விட, வேட்டியை மடித்துக் கொண்டு விறுவிறுவென அவனருகே சென்றவன், அவன் கையிலிருந்த சைக்கிளை உதைத்துக் கீழே தள்ளி விட்டு, அவனது சட்டைக் காலரை இரு கைகளால் பற்றி, அரையடி உயரத்துக்கு அலேக்காகத் தூக்க, அருகே வந்த ஆரன்,

அட்டென்ஷன் பொசிஷனில் திருதிருவென விழித்தபடித் தொங்கிக் கொண்டிருந்தவனின், கன்னத்தைப் பற்றி இருபுறமும் திருப்பிப் பார்த்து,

“எலேய்! நீயி, அன்னைக்கு என் காலடில கழுத்தைக் குடுத்துப்புட்டு, கம்முன்னு கிடந்தவன்தேன?” என்று கேட்டு, அவன் காலரை விலக்கி,

“த்சு,த்சு! தோல் உரிஞ்சு போய்க் கிடக்கே டா!, அது… பட்டணத்துல வாங்குன செருப்பா, அதேன், நான் அழுத்துனதும் கழுத்தைப் பதம் பார்த்துருச்சு!, ரொம்ப வலிச்சதோ?” என்று கேட்க,

ஆம் என்றும் இல்லையென்றும் கூற முடியாமல், பீதியுடன் எல்லாப்புறமும் தலையாட்டியவனிடம்,

“இன்னைக்குக் கூட அதே செருப்பைத்தேன் போட்டு வந்திருக்கேன்! உஞ்சங்கை மிதிச்சு, சல்லடையாக்குனே-ண்டு வை, பொட்டுண்டு உசுரு போய்ரும்! பொறவு, வலியே தெரியாது! என்னா சொல்ற?” எனக் கேட்டான்.

பயத்தில் வியர்வை பெருக, தொங்கிய நிலையிலேயே “அண்ணே” என்றவனிடம்,

“எம்புட்டு நேரமா டா எங்களைத் தொடர்ந்து வாற?” என்று வினவினான் விருமன்.

“தொ..தொ..தொடர்ந்தெல்லாம் வரலங்கண்ணே!, பண்ணைல வேலையை முடிச்சுப்புட்டு, பழைய சோறு திங்க, வீட்டுக்குப் போயிட்டிருக்கேண்ணே”

“ப்ச், பொய் சொல்றியான் டா பங்காளி” – ஆரன்.

“உண்மையை வர வைக்க என்னா பங்காளி செய்யலாம்?” – விருமன்.

“கழுத்தைக் கிழிச்சிருவோமா பங்காளி?” – என்ற ஆரன் கல்லைத்தேட,

“ண்ணே,வேணாண்ணே,வேணாண்ணே!” என்று துள்ளிய விழுது, “ப..ப..பஸ்ஸை விட்டு, நீங்க இறங்குனதுல இருந்துதேன்ண்ணே பின்னால வாறேன்” என்றான் பயத்தில் படபடத்தபடி.

“ஆக, எங்களை உளவு பார்க்குற நீயி”

“இ..இ..இல்லண்ணே!” எனத் துவங்கியவன், விருமன் கொடுத்த அழுத்தத்தில் “ஆமாண்ணே” என்று விட,

“எம்புட்டுத் தகிரியம் பார்த்தியா டா பங்காளி?” – என்று ஆரன் கூறியதும், விருமன் பல்லைக் கடிப்பதைக் கண்டுப் பதறிப் போன விழுது,

“உளவு பார்த்தா நீங்க அடிக்கிறீங்க! பார்க்காட்டி, அவரு அடிக்குறாருண்ணே” என்று அழுகைக் குரலில் உண்மையைக் கூற,

சத்தமாய்ச் சிரித்த இருவரில், விருமன் அவனைக் கீழே இறக்கி விட்டு,

“சரி, உன்னையப் பார்க்கவும் பாவமாத்தேன் இருக்கு! ஒழுங்கா வீட்டைப் பார்த்துப் போய்க் கஞ்சியைக் குடி போ” என்று துரத்தி விட,

“டேய் பங்காளி, என்னாடா?” என்ற ஆரனிடம்,

“எறிஞ்சவனை விட்டுப்புட்டு, அம்பு மேல கோவத்தைக் காட்டுறதால என்னாடா பிரயோசனம்?” என்ற விருமன், விழுதிடம்,

“என்னாடா இன்னும் நிற்குற?” எனக் கேட்டான்.

“ண்ணே” என்றவன் “போடா..” என்று புருவம் உயர்த்தியவனைக் கண்டுப் பயந்து, கீழே கிடந்த சைக்கிளை அள்ளிக் கொண்டுத் திடுதிடுவென ஓடி விட்டான்.

அதுவரை இவர்களை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த பெரியவர், “என்னாடா சொல்றியான்?” என்று வினவ,

“ப்ச், இவன் உதவாக்கரை தாத்தா! ஆனா, ஒரு நிமிசம் தொடர்ந்து உத்துப் பார்த்தா, ஒன்னுக்கடிக்குற பயல்களை வைச்சுக்கிட்டு, அந்த மணிவண்ணன் பய எப்பிடி தாத்தா, நானும் பெரிய மனுசன்தேன்னு ஊருக்குள்ள நடமாடிட்டுத் திரியுறியான்?” என்றவனிடம்,

“அவன் கிடக்கியான் *********பய” என்ற பெரியவர் “நடங்க டா வீடு போய்ச் சேருவோம்” எனக் கூட்டிச் சென்றார்.

விருமனிடம் தப்பித்து ஓடி மணிவண்ணனிடம் சென்று நின்ற விழுது, கழுத்தைத் தேய்த்தபடி, நடந்ததைக் கூறினான்.

கொல்லையில் அமர்ந்திருந்த மணிவண்ணனின் புஜத்தில் எண்ணையிட்டு நீவிக் கொண்டிருந்தவனைக் கண்ட விழுது, சுகமாய்க் கண் மூடி அமர்ந்திருந்தவனிடம்,

“பஞ்சரான உடம்புக்கு என்னத்துண்ணே எண்ணெய்க் குளியலு?” என்று கேட்கப் பட்டென இமை திறந்தவன், அவனை முறைத்துப் பார்க்க,

“இ..இ..இல்லண்ணே! உள்காயம் எதுவும் ஆறாம இருந்தா, நீங்கதேன வலியை அனுபவிக்கனும்! அதுக்குச் சொன்னேன்” எனப் பம்மிக் கொண்டிருக்கையில், இன்னொருவன் அருகே வந்து,

“அண்ணே!, அந்த அழகரு பய ஆத்தாளை மிரட்டி விசாரிக்கப் போன பயலுக ரெண்டு பேரும், அடி வாங்கி, ஆஸ்பத்திரில கிடக்காய்ங்கண்ணே” என்றான்.

“யார்றா அடிச்சது?”

“யாரோ ரெண்டு பேரு புதுசா இருக்காய்ங்கண்ணே! டவுன்காரய்ங்க மாறித் தெரியுறாய்ங்க! அடியாளுக மாறி, தடிமாடு சைஸ்ல இருக்காய்ங்க!, அழகரு ஆத்தா,அப்பனை எங்க வைச்சு, எப்பிடி நெருங்குனாலும்,இவிங்க எங்கிட்ருந்தாவது குதிச்சு வந்து கழுத்தைப் பிடிக்குறாய்ங்கண்ணே”

“ஓஓஓ” – என்று யோசித்த மணிவண்ணன், உதட்டைப் பிதுக்கியபடி, “பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கே! ஏன் டா, இதெல்லாம் கிழவன் ஏற்பாடா?” எனக் கேட்க,

“வாய்ப்பிருக்கு மாப்ள” என்றபடி அருகே வந்தார் சங்கிலியன்.

மாமனைக் கண்டதும் ஆயில் மசாஜை நிறுத்தி விட்டு “வாங்க மாமா” என்று அவன் எழுந்து நிற்க,

“கிழவன் காலங்கார்த்தாலயே வீட்லயிருந்து வெளியேறிட்டாரு மாப்ள! எங்க போறாரு,எங்க அவனை ஒளிச்சு வைச்சிருக்கிறாருண்டு புரியல! ஆனா, ஒன்னு நிச்சயம். அழகரு மதுரையைத் தாண்டல” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்தவன் கைப்பகுதியிலிருந்த எண்ணையை நீவியபடி,

“நாந்தேன் சொன்னேன்ல! நாம தேடிப் போக வேண்டியத் தேவையே இல்ல மாமா! பரீட்சையன்னைக்கு அவனே பள்ளியோடத்துக்கு வருவியான்! பெருசா திட்டம் போட்டுட்டதா நினைச்சுக் கிழவன் இறுமாப்புல இருக்காப்ல! அவரு தலை கீழா நிண்டாலும், அந்த அழகருபய தலையெடுத்து வர நான் விட மாட்டேன்” என்றான்.

“வாத்திமாருக பூராப் பயலையும் மிரட்டி வைக்கனும் மாப்ள! நம்மள மீறி எதுவுஞ்செய்ய அவிங்கத் தயங்கனும்”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன் மாமா! கவலையை விடுங்க” – என்று சமாதானப்படுத்தியவனிடம்,

“இல்ல மாப்ள! கிழவன் எமகாதகன்! நாமதேன் சுதாரிப்பா இருக்கனும்! அந்தப்பய எங்கயிருக்கியான்,என்னா பண்றியாண்டு நமக்குத் தெரியனும் மாப்ள! அசால்ட்டா இருந்துறக் கூடாது” என்று கூற, யோசனையுடனே தலையாட்டிய மணிவண்ணன், அன்று மாலை பொட்டல் காட்டில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அழகரின் தம்பியைப் பிடித்தான்.

“இவனைத் தூக்குறதால என்னா மாப்ள பிரயோசனம்?”

“அண்ணே! விடுங்கண்ணே! விடுங்கண்ணே!” என்று துள்ளிக் கொண்டிருந்த சிறுவனைத் தூக்கித் தோளில் போட்டபடித் தன்னுடன் நடந்து வந்த மணிவண்ணனிடம் கேள்வி கேட்டார் சங்கிலி.

“எல்லாம் காரணமாத்தேன் மாமா” – என்றவன் ஆளரவமற்ற மரத்தடியொன்றில் சிறுவனை இறக்கி விட, பயத்தில் பதறித் தடுமாறி விழுந்த சிறுவன், மரண பீதியுடன் மரத்தைப் பற்றியபடி எழுந்து நிற்க,

“உன் அண்ணேன் எங்கடா?” எனக் கேட்டான் மணிவண்ணன்.

“தெ…தெ..தெரியாதுண்ணே! கடுதாசி எழுதி வைச்சுப்புட்டு அவேன் எங்குட்டோ போ..போயிட்டியாண்டு எங்காத்தா சொல்லுச்சு”

நாக்கு வரள, எச்சில் விழுங்கியபடிப் பேசியவனின் முன் நெற்றி முடியைப் பற்றியவன்,

“உண்மையைச் சொன்னண்டா சும்மா, விட்ருவேன்! இல்லண்டா, உன் நொண்ணனை மாறி, உன்னையும் கம்மாக்குள்ள எறிஞ்சுபுடுவேன்! சொல்றா, எங்கடா உங்கண்ணன்?” என்று அதட்ட,

பய மிகுதியில் கண்ணீர் விட்ட சிறுவன், அவன் கை கொடுத்த அழுத்தத்தில் வலித்த நெற்றியைப் பிடித்தபடியே “எங்காத்தா மேல சத்தியமா எனக்குத் தெரியாதுண்ணே!” என்று அழ..

“உங்காத்தா,அப்பன் பின்னால ரெண்டு பேரு, காவல்நாய் மாறித் திரியுறாய்ங்களே! யார்றா அவிங்க?” – அவனது அடுத்தக் கேள்விக்கும் பதில் தெரியாது விழித்த சிறுவன்,

“யா..யாருண்ணே?” எனக் கேட்க,

“யாருண்டு உனக்குத் தெரியாது?” என்றபடியே அவன் கையை ஓங்கியதும், மரத்தடியில் ஒட்டிக் கொண்டவன், முகத்தைத் திருப்பியவண்ணம்,

“நீங்க யா..ய்யா..யாரைச் சொல்றீங்கண்டே எனக்குத் தெரியலண்ணே!” என்று பெரிதாய் அழ,

“அப்ப உனக்கும்,உங்காத்தாளுக்கும் உன் நொண்ணன் எங்கயிருக்கியாண்டு தெரியாது! உங்க பின்னாலயே திரியுற அடியாளுங்களைப் பத்தியும் தெரியாது??” எனக் கேட்க,

“தெரியாதுண்ணே!” என்று அழுதவனை நோக்கியபடியே, எம்பி மரத்தின் கொப்பை ஒடித்தவன், அதிலிருந்த இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டபடி,

“தெரியாது??” என்றபடியே கம்பை ஓங்க.. உச்சகட்டப் பயத்தில் மூச்சைப் பிடித்தபடி, இறுக்கமாய் அவன் விழி மூடிய சமயம்,

“ஓஏய்ய்ய்ய்” என்ற சத்தம் கேட்க, கையைக் கீழிறக்காமலே திரும்பிய மணிவண்ணன் கண்டது,

இழுத்துச் செருகியத் தாவணியும், கையில் கதிரருவாளுமாய், நின்றிருந்த அகலருவியைத் தான்.

அவளைக் கண்டதும் அவன் கம்பைக் கீழிறக்க, மகள் தன்னையே வெறிப்பதை உணர்ந்துக் கன்றத் துவங்கிய முகத்தை இழுத்துப் பிடித்தபடி, விறைப்பாய் நின்றிருந்தார் சங்கிலியன்.

கம்பை நிலத்தில் ஊன்றியபடி, தன்னையே மேலிருந்துக் கீழ் வரை மேயும், மணிவண்ணனின் பார்வையைச் சந்திக்காது, சிறுவனிடம்,

“எலேய்! ஓட்றா” என்று அவள் அதட்ட,

ஓட எத்தனித்தக் கால்களை அடக்கியபடி அவன் பயத்துடன் மணிவண்ணனை நோக்கினான்.

“ஓட்றாங்குறேன்ல?” என்று அகலருவி மீண்டும் சத்தமிட்டதும்,

“ஓடிருவியாடா நீயி?” – என்பது போல் கம்பைத் தோள்ப்பட்டையில் வைத்தபடி சிறுவனை மிதப்பாய்ப் பார்த்தவனைக் கண்டு பல்லைக் கடித்த அகலருவி, கையிலிருந்த கதிரறுவாளை, ஓங்கி வீசினாள்.

தன் நெற்றி முடியை உரசிச் சென்று மரத்தில் குத்தி நின்ற அருவாளைக் கண்டு ஒரு நொடி விதிர்த்துப் போன மணிவண்ணன், வியந்த விழிகளுடன் மாமனை நோக்க, அவர், கொஞ்சமும் பயமின்றி, உயர்த்தியத் தாடையுடன் அசால்ட்டாய் நின்றிருந்த மகளைக் கண்டு மெல்ல எச்சில் விழுங்கினார்.

“அந்த அருவாளை எடுத்துக் குடுத்துப்புட்டு ஓட்றா அங்குட்டு” – என்று அவள் சிறுவனை ஏவவும்,

அதுவரை மரத்தைத் துளைத்து நின்ற அருவாளை ஆ-வெனப் பார்த்தபடி நின்றிருந்த சிறுவன், அவசரமாய் அவள் கூறியதைச் செய்து விட்டு, விட்டால் போதுமென ஓடிச் சென்றான்.

அவன் சென்றதும், மணிவண்ணனிடம் கேவலமான பார்வையைச் செலுத்தியவள் “கிழவன் உன்னைய பொண்டுகன்-ண்டு சொல்றது சரியாத்தேன் இருக்கு! உன் வீரத்தைப் பொட்டச்சிகட்டயும், பொடிப்பயல்களுட்டயும்தேன் காட்டுவ போல! சல்லி நாயி” என்று திட்டித் திரும்பி நடக்க,

அவள் தன்னையும் சேர்த்துத் திட்டியதைப் போல் உணர்ந்த சங்கிலி, அவமானத்தில் முகம் கறுக்க, “கொழுப்பேறுன கழுத” என்று முணுமுணுத்து விட்டு, மாப்பிள்ளையின் முகத்தை ஏறிட்டும் பாராது, விறுவிறுவென நடந்து சென்று விட்டார்.

“மாமா..” என்றழைத்து நிறுத்த முயன்றவன், அவர் வேக நடையுடன் செல்வதைக் கண்டு உதட்டைப் பிதுக்கி விட்டு, அகலருவியின் பின்னே சென்றான்.

“ஏன் டி, நீயி, வித்தை காட்டி விரட்டி விட்றதுக்கு, நான் என்ன பொடிப்பயலா?”

முதுகுக்குப் பின்னே ஒலித்த அவன் குரலைக் கண்டுகொள்ளாது, அவள் நடக்க,

“அருவாளைத் தூக்கி வீசுனா, நாங்க பயந்துருவோமா?” – என்றான் அவன் விடாது.

“நெத்திய நெம்பி விட்டும் கூட, பேச்சு குறைய மாட்டேங்குதே டா உனக்கு”

“எப்பிடிக் குறையும்! வாங்குன அடியைத் திருப்பிக் குடுக்கனும்ல?”

உதட்டை வளைத்து நக்கலாய்ச் சிரித்தவள், “யாரு நீயி?, திருப்பிக் குடுத்துருவ?” எனக் கேட்க,

தோளைக் குலுக்கியவன் “உம் மேலயும்,உம் மாமன் மகன் மேலயும் கை வைக்க முடியாட்டி என்ன?, அந்தச் சின்னப் பயலைத் தூக்கிக் கம்மாக்குள்ள எறியுறது, உங்குடும்பத்தையே திருப்பி அடிச்சமாறி ஆகிடாது? நான்… வலிக்குற இடத்துல அடிக்கிறவன்டி!” என்றான் சிரிப்புடன்.

முகம் மாற அவனை வெறித்துப் பார்த்தவள், “ஆக, நடக்குற அத்தனைக்கும் மூலக் காரணம் உன் அல்ப்ப ஆசைதேன்?” என வினவ,

“ஆமா! ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே-ண்டு கேள்விப்பட்டதில்லையா நீயி?, நீ மட்டும் என்னையக் கட்டிக்கிறேன்-ண்டு ஒரு வார்த்தை சொல்லு! இது அத்தனையையும் இப்பயே நிறுத்திட்றேன்! என்னா சொல்ற?” – ஆர்வமாய்க் கேட்டவனைக் கண்டு, கோபத்தை அடக்கிப் புன்னகைத்த அகலருவி,

“அப்ப, எங்கையாலயே சீக்கிரமே மொட்டைப்பாறைல உஞ்சாவுக்கொரு படையலைப் போட்ற வேண்டிதேன்” எனக் கூறிப் பின்,

“அந்தக் கூட்டுக்குக் காவலா உட்கார்ந்திருக்கிறது எந்தாத்தன்ற பாம்பு டா! உன்னால அந்தப் பாம்பை மீறி, கூட்டைக் கலைக்க முடியாது! நுரை தள்ளிச் சாகுறதுதேன் உன் விருப்பம்-ண்டா, கூட்டைத் தொட்டுப் பாரு” – என்று விட்டு விறுவிறுவென நடந்து சென்று விட்டாள்.

தொடர்ந்து வந்த நாட்களிலும், பயிற்சியின் போது பாண்ட்-சட்டை அணியச் சொல்லி வற்புறுத்திய பேராண்டிகளிடமிருந்துத் தப்பித்து, கலாம்மாளின் கேலிப் பார்வைக் கொடுக்கும் சங்கடத்திற்குப் பயந்து, வேட்டியுடனே அழகருடன் பயிற்சியில் இறங்கி விட்டார் கிழவர். அவரது விவசாயக் கடமைகளுக்கு சிலம்பன் கை கொடுத்தது, அவருக்கு உதவிகரமாயிருந்தது.

அன்று பயிற்சி முடிந்ததும் பை நிறையப் புத்தகங்களைத் தன்னிடம் நீட்டியவரைக் கேள்வியாய் நோக்கிய அழகரிடம்,

“உடற்தகுதித் தேர்வை நீ எப்பிடியும் சரிக்கட்டி முந்தி வந்துருவண்டு எனக்கு நல்லாத் தெரியும்! இந்தப் புத்தகமெல்லாம் அதுக்கடுத்து வர்ற எழுத்துத் தேர்வுக்காகத்தேன்” என்றார் பெரியவர்.

அவர் நீட்டிய புத்தகங்களைப் பிரித்துப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் முகபாவனையைக் கண்டு,

“தேர்வுக்குள்ள இம்புட்டுப் புத்தகத்தையும் எப்பிடி படிக்க முடியும்ண்டு யோசிக்கிறியா?” – எனக் கிழவர் கேட்க,

அவரைத் தயக்கமாய் நிமிர்ந்து பார்த்தவனின் தோளைப் பற்றியவர்,

“அம்பேத்கர்-ங்குறவரு, வெளிநாட்டுல படிக்கையில, தன்னோட 8 வருசப் படிப்பை வெறும் 2 வருசம் 3 மாசத்துல முடிச்சாராம்! அதுக்காக அவரு, ஒரு நாளைக்கு 21 மணி நேரம் படிப்பாராம்!, நான் உன்னைய உண்ணாம,உறங்காம, விழிச்சு உட்கார்ந்து, உடம்பைக் கெடுத்துக்கிட்டுப் படிக்கச் சொல்லல! ஆனா, முயற்சி செஞ்சா எதுவும் சாத்தியம்ண்டு சொல்றேன்!” என்று கூறித் தொடர்ந்து,

“ஆரனயும்,விருமனையும் உனக்கு உதவச் சொல்றேன்! நமக்கு நாள் இருக்குப்பு! நீ கவலைப்படத் தேவையில்ல” என்று கூறவும், நம்பிக்கையுடன் தலையாட்டினான் அழகர்.

திங்கட்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் உடற்தகுதித் தேர்வு நடக்கவிருந்த முகாமிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அழகர் பதட்டமோ,பயமோ இன்றி இயல்பாக இருப்பதைக் கண்டுப் புன்னகைத்துக் கொண்டார் கலாம்மாள்.

அதிக அலட்டலின்றி நிதானமாய்,அடக்கமாய்,அமைதியாய் இருக்குமிடம் தெரியாது, லேசான தயக்கத்துடனே இந்த ஒரு வார காலமாய் அவர் வீட்டினுள் வலம் வருபவன் அவன்.

அதிகப் பேச்சில்லை என்றாலும், ஒரேடியாய் ஒதுங்கியுமில்லாமல், ஓய்வு நேரத்தில், அவர் செய்யும் வேலைகளில் உதவி புரிந்தவனைக் கவனித்திருந்தவர், வாஞ்சையுடன் அவன் தலை தடவினார்.

“உங்காத்தா, உன்னைய நினைச்சு, சந்தோசத்துல தலை,கால் புரியாமத் துள்ளிக் குதிக்கப் போற நாளு கொள்ளத் தொலைவுல இல்லப்பு”

மென்மையான சிரிப்புடன், அன்பாய்க் கூறியவரின் முகம் பார்த்தவன், அவர் கண்களில் தெரிந்த அக்கறையில் நெகிழ்ந்து, வார்த்தைகளற்று ஆம் என்பது போல் தலையசைத்து, மெல்லப் புன்னகைத்தான்.

விடிந்திராத அந்தக் காலைப் பொழுதில், தூங்கி வழிந்த முகத்துடன் வந்து சேர்ந்த ஆரனும்,விருமனும் “சிறப்பா செய் டா அழகரு” – என்று கைக்குலுக்கி வாழ்த்தவும், நன்றி கூறி முறுவலித்தவன், அவர்களருகே நின்றிருந்தப் பெரியவரை நோக்கினான்.

ஆர்வத்திலும்,தன்னம்பிக்கையிலும் ஒளிர்ந்த அவன் கண்களைத் திருப்தியாய்க் கண்டு விட்டு, இரு கைகளால் அவன் புஜத்தைத் தட்டிக் கொடுத்து,

“என்ன வந்தாலும், சமாளிச்சுக்கிடுவோம்! ஒரு கை பார்த்துட்டு வா டா” என்று கூறிய பெரியவரிடம், பற்கள் தெரியப் புன்னகைத்தவன் “சரிங்கய்யா” என்று விட்டு புறப்பட்டான்.

மணிவண்ணன் ஆட்கள் எவர் கண்களிலும் பட்டுவிடக் கூடாதென்பதற்காக, அவனுடன் செல்வதை மூவரும் தவிர்த்திருக்க, அழகர் மட்டும் புறப்பட்டிருந்தான் முகாமை நோக்கி.

உயரம் சரிபார்த்து உள்ளே அனுப்பப்பட்டவன், முதலில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்டிருந்த 1.6 கி.மீ தூரத்தை 5 நிமிடம் 40 வினாடிகளில் கடந்து, 48 மதிப்பெண்கள் எடுத்து அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியிருந்தான்.

அடுத்த சுற்றான pull ups-ல், பத்து புல்-அப்ஸ்களுக்கு மேல் எடுத்து, நிர்ணயிக்கப்பட்டிருந்த 40 மதிப்பெண்களை முழுதாகப் பெற்றிருந்தான்.

அடுத்ததாக, Ditch எனப்படும் சுற்றில், 9 அடி அகலத்தில் தோண்டி வைக்கப்பட்டிருந்தக் குழியை ஒரே தாவலாக, தாவிக் கடந்து விட்டு, அடுத்து Balance சுற்றில், zigzag-வடிவத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தக் கட்டையின் மீதேறித் தடுமாறாமல் நடந்து, physical fitness test-ஐ முடித்திருந்தான் அழகர்.

அடுத்ததாக நடந்த physical measurement test-ல், உயரம், எடை, மார்பளவு எடுக்கப்பட, அதிலும் தேர்ச்சி பெற்றவன், அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறவிருந்த மெடிகல் டெஸ்ட்டிற்குத் தேர்வாகி, அந்நாளை வெற்றிகரமாக முடித்திருந்தான்.

மாலை வீடு வந்து சேர்ந்தவன், தேர்ச்சி பெற்று விட்டச் செய்தியைக் கூற, மகிழ்ச்சியடைந்த மூவரும், அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் சுற்றுகளைப் பற்றி ஆலோசித்து விட்டு, ஊர் திரும்பினர்.

இந்தப்புறம் மணிவண்ணன், அடுத்த இரு நாட்களில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறவிருப்பதால், அழகர் படித்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி அனைத்து வாத்திமார்களையும் தொடர்ந்து, அழகரது தேர்வு நுழைவுச் சீட்டு, கிழவரையும்,கிழவரைச் சேர்ந்தவர்கள் எவர் கைக்கும் சென்றடைகிறதா என்பதைக் கவனமாக நோட்டம் விட்டபடி சுற்றிக் கொண்டிருந்தான்.

பொதுத் தேர்வும், மெடிக்கல் டெஸ்ட்டும் ஒரே நாளில் நடைபெற, சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, மெடிக்கல் டெஸ்ட்டிலும் தேர்ச்சி பெற்றிருந்தான் அழகர்.

பொதுத் தேர்வன்று காலை பள்ளி வாசலை முற்றுகையிட்டிருந்த மணிவண்ணனுக்கு, அழகர் பரீட்சை எழுத வராதது பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது.

அழகரைத் தேர்வுக்கு தயார் செய்யத்தான் கிழவர், ஒளித்து வைத்திருக்கிறார் என்றுத் திடமாக நம்பியிருந்தவன், எப்படியும், தேர்வன்று காலை அவனைக் கண்ணில் காட்டுவார், பஞ்சாயத்து முடிவை மதிக்காமல் அவர் தன் போக்கில் நடப்பதாகக் கூப்பாடு போட்டு, ஊரின் பெருந்தலைகளைத் தூண்டி விட்டுப் பிரச்சனையைப் பெரிதாக்கி, மறுபடி சாதிச்சண்டையை உருவாக்கி, அழகரைப் பரீட்சை எழுத விடாமல் செய்து, கிழவரை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டுமென திட்டமிட்டிருந்தவன்,

அழகரும்,கிழவரும், பள்ளிக்கூடத்தின் எந்தத் திசையிலும் தென்படாததைக் கண்டு முழுதாகக் குழம்பிப் போனான்.

கிழவர் தினம் மதுரை சென்று வருவதைப் பற்றிக் கூறி, அவரைப் பின் தொடர முயன்ற விழுதுகளிடம், “விடுங்கடா! பரீட்சை அன்னிக்கு அவிங்களே வருவாய்ங்க” என்று எகத்தாளமாகச் சொல்லி வைத்திருந்தவனுக்கு, அழகர் வருகை தராதது, குழப்பத்தில் ஆழ்த்த, அவனது எரிச்சலை அதிகரிக்கும் பொருட்டு சங்கிலியன் வேறு,

“நாந்தேன் சொன்னேன்ல! கிழவன் பொல்லாதவன்-ண்டு! இப்பிடி அசட்டையா இருந்துட்டியே மாப்ள! பரீட்சை எழுதத்தேன் அவனை ஒளிச்சு வைச்சிருக்காருண்டு சொன்ன! இப்ப,அந்த சல்லிப்பய நுழைவுச் சீட்டே நம்ம கைல இருக்கு!, அவனை ஆளைக் காணோம்!” என்று கோபத்துடன் படபடக்க, அவருக்குப் பதில் கூற முடியாமல், தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக, குழப்பத்துடன் நின்றிருந்தான் மணிவண்ணன்.

“கிழவன் அவனை வைச்சு என்னா பண்றாரு,ஏது பண்றாருண்டு ஒன்னும் புரிபடலயே” என விடாது புலம்பியவர்,

தான் எதிர்பார்த்தது நடவாது போன ஏமாற்றமும், தந்திரமாய்ச் செயல்படும் கிழவரை எண்ணிக் கோபமுமாய் விடைத்த மூக்குடன், முகம் கருக்க நின்றிருந்த மணிவண்ணனை ஆதங்கத்துடன் நோக்கி,

“உன்னைய நம்புனதுக்கு இப்புடி ஏமாத்திப்புட்டியே மாப்ள! கிழவன் தலை குனிஞ்சு,தடுமாறி நிற்குறதைப் பார்த்து, செயிச்சுட்டேண்டு மார் தட்டி, மீசையை முறுக்கிக்கிட்டு, சந்தோசத்துல கூத்தாடமுண்டு ஆசைப்பட்டேனே!என் எண்ணத்துல இப்பிடி மண்ணை வாரிப் போட்டுப்புட்டியே!” என்று சங்கிலி அவனை நேரடியாகத் தாக்க,

ரோஷத்திலும்,அவமானத்திலும் சினம் பொங்கப் பல்லைக் கடித்து நின்ற மணிவண்ணனைக் கண்ட விழுது,

“இந்தாங்க, இப்ப என்னா எங்கண்ணே உங்களை ஏமாத்திப்புட்டாருண்டு இம்புட்டுப் பேச்சு பேசுறீக?” என்று எகிறவும், “டேய்” என அவனை அடக்கியவன், மாமனிடம்,

“என்னா மாமா?, பேச்செல்லாம் ஒரு விதமா இருக்கு?” என்றான் அடக்கப்பட்டக் கோபத்துடன்.

“பின்ன, கிழவன் எப்பிடியாளுண்டு நான் எச்சரிச்சும் கேட்காம, நாஞ்சொல்றதுதேன் நடக்குமுண்டு திமிராத் திரிஞ்சு, கிடைச்ச வாய்ப்பை இப்பிடிக் கோட்டை விட்டுப்புட்டு நிற்கிறியே!,”

“எந்தக் கோட்டையை விட்டாக?, தேவையில்லாம பேசாதீக?”

“எது தேவையில்லாதது?, அந்தத் ******** மவனைக் கண்டுபுடிச்சு, அவன் குரவளையைப் புடிச்சு இழுத்துட்டு வந்து நாம அடைச்சு வைச்சுக் கிழவனுக்குக் குடைச்சலைக் குடுக்குறதை விட்டுப்புட்டு, பரீட்சை அன்னைக்குப் பார்ப்போம்ண்டு, பெரிய இவன் மாறி மிதப்பா சொல்லிட்டுத் திரிஞ்ச!, நீ கணிக்கிற ஆரூடத்துக்கெல்லாம் கிழவன் அப்பாற்ப்பட்டவண்டு நான் அம்புட்டு சொல்லியும் கேட்டியா!, உன்னைய நம்பி, கிழவன் கழுத்துல கத்தியை வைக்க நினைச்சேன் பாரு, நான் ஒரு முட்டாப்பய! நீயெல்லாம் கம்மாக்கரையோரம் கண்டவளுகளோடக் கசமுசா பண்ணத்தேன் லாயக்குப்படுவ!” – என்று அதீத கோபத்தில் சங்கிலி வாயை விட,

ஆத்திரத்தின் உச்சத்தை எட்டி விட்ட மணிவண்ணன், “பார்றா” என்றபடி வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு, நக்கலாய் உதட்டை வளைத்தபடி, “கசமுசா பண்றவனாம்ல! ஏன், மாப்ள,மாப்ளண்டு என் தோள்ல தொங்கிட்டுக் கிடந்தப்பத் தெரியலயோ, நான் கம்மாயோரம் கண்டவளுகளோடக் கரை ஒதுங்குறவன்-ண்டு! ஆனா, நீயி என்னா பெரிய யோக்கியனாய்யா?, கள்ளுக்கடை வாசல்ல அன்ட்ராயர் அவுந்தது தெரியாம, ஆ-ண்டு வாயைப் பொளந்துக்கிட்டு வானத்தைப் பார்த்துக் கிடக்குறவன், பெருசா என்னையச் சொல்ல வந்துட்ட?” என்று சத்தமிட,

ஆங்காங்கு சிலர் இவர்களது சண்டையை நின்று கவனிக்கத் துவங்கி விட்டதைக் கண்டுப் பல்லைக் கடித்த சங்கிலி,

“பேச்சு வரைமுறையில்லாம போய்ட்டிருக்கு மாப்ள!” என்று எச்சரிக்க,

“யோவ்! அப்பிடித்தேன்ய்யா பேசுவேன்! சண்டைண்டு வந்தப்புறம், என்னத்துக்கு சட்டை கிழியுறதைப் பத்திக் கவலைப்படனும்?, ஏன்ய்யா, ஒரே வீட்ல கூடவே இருக்குற மனுசன் எங்க போறியான்,என்னா பண்றியாண்டுத் தெரிஞ்சுக்கக் கூட வக்கில்ல உனக்கு! பெருசா எங்கிட்ட வந்து எகிறுற?” என்றவன், கண்களை விரித்தபடி “ஓ! உம்மைத்தேன் கிழவன் வீட்டை விட்டு வெளிய போடா துப்புகெட்ட நாயே-ண்டு விரட்டிப்புட்டாரோ! துப்பில்லாதவன் எங்கிட்டுத் துப்பறியுறது! களவாணிப்பய மாறி வாய்க்கா வரப்புலத் தூங்கி எந்திரிக்கிறவனுக்கு, வாய் என்னத்துக்கு இம்புட்டு நீளனும்?” – என்றான்.

அவன் சரமாரியாகத் தாக்கியதும், அவமானத்திலும்,கோபத்திலும் முகம் சிவந்தது சங்கிலிக்கு.

“மரியாதையாப் பேசு மாப்ள!, அநாவசியமா வார்த்தையை விடாத!” - விரல் நீட்டி எச்சரித்தவரைக் கணக்கில் கொள்ளாது,

“ம்ம்ம்?, கோவத்தைப் பார்றா! துப்புகெட்டவன் தானய்யா நீயி! ஏதோ ரெண்டு பொட்டச்சிகளைப் பெத்து வைச்சிருக்கியே!, நாளப் பின்ன நான் கம்மாயோரம் கரை ஒதுங்க, உபயோகமா இருப்பாளுகளேண்டுதேன் உன்னையெல்லாம் மாமன்-ண்டு மருவாதையாக் கூப்பிட்டுகிட்டுத் திரிஞ்சேன்!, இல்லண்டா, நான் ஏன் உன்னைய மாறி ஒன்னுக்கும் வக்கில்லாத பொட்டப்பயலையெல்லாம் கூட வைச்சுட்டு சுத்தப் போறேன்!” – நக்கலாய்க் கூறியவனைக் கண்டுத் தாவி அவன் சட்டையைப் பற்றிய சங்கிலி,

“என்னாடா சொன்ன, எச்ச நாயே” என்று கொதிக்க,

“நான் எச்ச நாய்ண்டா நீ யாரு?, கிழவன் கழுத்தறுக்க, உம்மவளை எனக்குக் கூட்டிக் கொடுக்கத் துணிஞ்சத் ***** பய நீயி!, நீயி என்னைய நாய்ங்குறியா?, நான் உந்தலையை வெட்டித் தண்ணிக்குள்ள எறியுறதுக்கு முன்னாடி, நீயே எஞ்சட்டைல இருந்து கையை எடுத்துரு” – என்றவன் தன் விழுதுகளை நோக்க, சங்கிலியின் கரத்தைப் பற்றியிழுத்துக் கொண்டு நடந்த விழுதுகளிடமிருந்து எகிறியபடி,

“ஒழுக்கங்கெட்டத் ***** பயலே! மனுசனா டா நீயெல்லாம்?, கூடவே இருந்தவனுக்குக் குழி பறிக்க நினைச்சுருக்கியே!, நல்லாவே இருக்க மாட்ட டா நீயி! நாசமா போவ டா, நாசமா போவ!” – என்று கத்திக் கொண்டே சென்ற சங்கிலியைக் கண்டபடிக் கசங்கியிருந்த சட்டையை நீவி விட்டுக் கொண்ட மணிவண்ணனின் முகம் அளவுக்கு மீறிய ஆத்திரத்தில் அகோரமாய் மாற, அவனது ஒட்டுமொத்தக் கோபமும் இப்போது கிழவரின் மீது திரும்பியிருந்தது.

அவனது கோபத்தை மேலும் கிளறி விடுவது போல அன்று மாலை, கருப்பனைக் கையில் இழுத்துக் கொண்டு வயக்காட்டிலிருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த கிழவரும், அவரது பேராண்டிகளும், மணிவண்ணனை எதிர் கொண்டனர்.

அதுவரை அடுத்த இரு நாட்களில் நடைபெறவிருக்கும் அழகரது எழுத்துத் தேர்வைப் பற்றியும், அதில் தேர்ச்சி பெறுபவர்கள், உடனடியாக ராணுவப் பணியில் அமர்த்தப் படுவார்களென அரசு அறிவித்திருந்ததைப் பற்றியும் பேசிய படி வந்து கொண்டிருந்த விருமன், தன் விழுதுகள் இருவருடன் எதிரே நடந்து வந்த மணிவண்ணனைக் கண்டு குஷியாகி “ஊஊஃப்ஃப்” என விசில் அடித்தான்.

கிழவரையும்,அவரது பேராண்டிகளையும் கண்டதும் ரௌத்திரம் அதிகமாக சிவந்த விழிகளுடன், மூக்கை விடைத்தபடி நின்றவனைக் கண்டு விருமன்,

“யோவ் பெருசு, கன்னி வெடி வைச்சுக் கலவரம் பண்ணலாம்ண்டு பள்ளியோடத்து வாசலுக்குப் படையெடுத்துப் போனவிங்க, கடலை மிட்டாய் வாங்கித் தின்னுப்புட்டுத் திரும்பி வந்து சேர்ந்த சேதி தெரியுமா உனக்கு?”- என நக்கலடித்ததும் பல்லைக் கடித்த மணிவண்ணன், அவனை முறைத்துப் பார்க்க,

“நாங்கூட யோசிச்சேன்!, வாய்க்கா வரப்புல வரவு செலவு பார்த்துட்டுத் திரிய வேண்டியவன், என்னத்துக்கு வாத்திமாருக பின்னால வால் புடிச்சுட்டு சுத்துறியான்-ண்டு! ஏன் டா லூசுக் ***! கிழவனை என்ன, உன்னைய மாறி பொண்டுகப்பய-ண்டு நினைச்சியா?” – என்று விருமன் கேட்டதும்,

“டேய்ய்” என உறுமியவனிடம்..

“ஆமா, ஒன்னு எம்மாமங்காரனைத் தூண்டி விட்டு, அந்தாளு முதுகு பின்னாடி நிண்டு, சலம்பல் பண்ணுற! இல்ல, ஊர்க்கலவரம்ங்குற பேர்ல, நாலு விளங்காத பயல்களுக்குக் கள்ளை ஊத்திக் குடுத்துக் கூட்டி வந்து கரைச்சலைக் குடுக்குற! உனக்கு இதேனடா வரும்?” என்றதும்,

கையை இறுக்கிப் பல்லைக் கடித்துக் கோபத்தைக் கட்டுப்படுத்த நினைப்பவனின் கருத்த முகத்தைக் கண்டபடி, வேட்டியை மடித்துக் கட்டிய விருமன்,

“புலி எப்ப சிக்கும்ண்டு, நீ கூண்டைத் திறந்து வைச்சுக்கிட்டுக் காத்துக் கிடக்குறது தெரிஞ்சும், பலியாக, நாங்க என்ன உன்னைய மாறி முட்டாப் ***** டா?, ஆலமரத்தடில கட்டெறும்பு கடிக்கிறது தெரியாம, கட்டையை நீட்டிக் கிடக்குற பய நீயி, உனக்கிருக்கிற மாட்டு மூளைக்கு, நீயெல்லாம் எப்பிட்றா கிழவன் கூட மோதி செயிக்கலாம்ண்டு கனா கண்ட?” – என்று கிழித்துத் தொங்க விட,

மணிவண்ணனின் அருகில் நின்றிருந்த விழுதுகளிருவரும் பொங்கி, “ண்ணே! நீ ஊ-ண்டு ஒரு வார்த்தை சொல்லுண்ணே!, இவேன் வாயை உடைச்சு, வரப்புல எறியுறேன்” என்று முஷ்டியை இறுக்க,

சிலிர்த்துக் கொண்ட விருமன், “பார்றா!, யாரு நீயி?, ஏன் டா தவக்களை மாறி இருந்துக்கிட்டு, நீயெல்லாம் எப்பிட்றா என் வாயை உடைப்ப?” என்று கேட்கவும்,

அதுவரை கிழவனின் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆரன்,

“தாவித் தாவி அடிப்பியான் போல பங்காளி!” எனச் சொல்லி, விழுதிடம்,

“எலேய்!, நீ எம்பி அடிக்கிறதுக்கு முன்னாடி, அவேன் உன் எலும்பை எண்ணிருவியான் டா! பேசாம போயிரு! ஆஸ்பத்திரி செலவுக்குக் கூட உன் நொண்ணன் காசு குடுக்க மாட்டியான்! நாஞ்சொல்றதை சொல்லிப்புட்டேன்! அப்புறம் உன் இஷ்டம்!” எனக் கூறியதும்,

ரோஷப்பட்டுப் போன விழுது, மூக்கை விடைக்க,

“பங்காளி, உன்னைய அவேன்,இவேன்-ண்டு மருவாதையில்லாம பேசுறியான்! நீ என்னாடா வேடிக்கை பார்த்துட்டு நிற்கிற?” – என்று ஆரன் தூண்டி விட்டதும்,

யோசிக்காது அவன் பிடரியில் இடியை இறக்கிய விருமன் “அப்பிடியா டா சொன்ன?” எனக் கேட்க, அவன் அடித்த அடியில், இரண்டடித் தள்ளி நின்ற விழுது,

“வே..வே..வேணாம்! என்னைய அடிச்சீகண்டா, எங்கண்ணேன் உங்களைச் சும்மா விட மாட்டாரு சொல்லிப்புட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரிக்க, எட்டி அவன் விரலைப் பிடித்து வளைத்த விருமன்,

“என்னாடா செஞ்சிருவியான்?” என்று மிரட்ட,

வலியில் முகம் சுருக்கியவன், விரல் வளைந்தத் திசையில் தானும் வளைந்தபடி, ஈனஸ்வரத்தில் “அ….ண்…ணே” என்று மணிவண்ணனைப் பார்க்க, அவன் முகம் இறுக, அசையாது நிற்பதைக் கண்டு மற்றொரு விழுது, அவசரமாய்க் காலை உயர்த்தி விருமனின் முதுகில் மிதித்துத் தள்ளினான்.

அவன் மிதித்ததில் ஓரடி நகர்ந்த விருமன், முகத்தைச் சுருக்கியபடித் திரும்ப, பீதியுடன் மெல்ல பின்னே நகர்ந்தவனின் முன் தலை முடியைப் பற்றி அருகிலிழுத்து,

“ஆம்பளண்டா, நெஞ்சுல மிதிக்கனும் டா! உன் நொண்ணன் மாறி, கோழைத்தனமா முதுகுல மிதிக்கக் கூடாது!” எனக் கூறி, அவன் கன்னத்தில் ஒரு அறை விடத் தடுமாறிக் கீழே விழுந்தவனைக் கண்டு விட்டுத் தன் பார்வையை மணிவண்ணனிடம் திருப்பினான் விருமன்.

அவன் தன் புறம் வருவதை உணர்ந்தும், பரபரப்புடன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டைக்குத் தயாராக நின்றவனைக் கண்டுத் தோள் குலுங்கச் சிரித்த விருமன்,

“பதறாத டா! அடிக்க மாட்டேன்!” என்றான்.

அவன் சிரித்ததும் ரோஷப்பட்ட மணிவண்ணன், “யாரு நான் பதறுறேனா?,அதுசரி! ஏன் டா, ரெண்டு சின்னப்பயலுகளை அடிச்சுத் தள்ளிப்புட்டா, நீ பெரிய வீரனா டா?” – எனக் கேட்க,

“அப்ப இவனையும் அடிச்சுப்புட்டு, மூனு பொடிப்பயல்களைப் பொளந்த சூரன்-ண்டு பேர் வாங்கிக்க பங்காளி! எலேய், அவன் உன் தோள்ல ஏறி, ஊஞ்சலாட ஆசைப்பட்றியான்,அவன்ட்ட போய் பேச்சு வார்த்தை நடத்திட்டிருக்க?,சட்டுப்புட்டுண்டு தூக்கி வரப்புல எறிஞ்சுப்புட்டு வா டா! வெரசா வீடு போய்ச் சேரனும்” – ஆரன் பின்னாலிருந்து குரல் கொடுத்ததும்,

மணிவண்ணனின் அருகே சென்ற விருமன் “வா டா, வா டா வந்து ஏறிக்க!” எனத் தூக்க வர, பங்காளிருவரின் கேலிப் பேச்சில் ஆத்திரத்தின் உச்சத்தை எட்டி விட்ட மணிவண்ணன், கடித்தப் பற்களுடன் விருமனின் கழுத்தைப் பற்றினான்.

அவனது கோபத்தைக் கண்டு வியந்த விருமன், “என்னா டா மீசை துடிக்குது! என்னா பிரயோசனம்?,அழுத்தம் பத்தலயே டா” என்று முகம் சுளித்து விட்டு,

“கைய வைச்சாலே, குரவளை நெரிபடனும்”-எனக் கூறி, “இப்பிடி,” என்றபடி அவன் தடுக்கும் முன் அவனதுத் தொண்டையில் தனது அகண்ட கையை பதித்து விட,

தானும் அழுத்தத்தைக் கூட்ட நினைத்த மணிவண்ணனின் விரல்களை, மற்றொரு கையால் ஒடித்துக் கீழிறக்கிய விருமன்,

“ஒரு நாள் கள்ளு குடிக்காட்டி, கை நடுங்குற பய நீயி! உன்னால எப்பிட்றா, பட்டாளத்தான் வளர்ப்போட போட்டி போட முடியும்?,” எனக் கூறி, அவனைப் பின்னே தள்ளி விட்டான்.

பிதுங்கிப் போன முழியிலிருந்துத் தண்ணீர் வர, தொண்டையைத் தடவிக் கொண்டவனிடம்,

“நீயி பஞ்சாயத்து பண்றேண்டு, என் வீட்டு வாச முன்னாடி கரைச்சலைக் குடுத்தப்பவே, உஞ்சங்கறுத்து சாக்கடைல எறிஞ்சிருக்கனும் டா! ******, உன்னையச் சும்மா விட்டதாலதேன் டா, இம்புட்டு அலப்பரையைக் குடுக்குற!” என்று விருமன் சீற,ஆரன்,

“விட்றா பங்காளி! அவேன் கழுத்துல பட்டிருக்கிற உங்கைத்தடமே அவனை நாலு நாளைக்குத் தூங்க விடாது! செத்தபய”

வலித்தத் தொண்டையைச் செருமிக் கொண்டு, சிவந்த விழிகளுடன் ஆரனை ஏறிட்டுப் பார்த்தவன், உதடு வளையச் சிரித்து,

“இந்த செத்தவனுக்குப் பயந்துக்கிட்டு, என்னத்துக்கு டா அந்த சல்லிப்பயல மதுரைல ஒளிச்சு வைச்சுப்புட்டு, அவன் ஓடிட்ட மாறி இங்குட்டுக் குடும்பமா ஊருக்குள்ள நாடகமாடிட்டுத் திரியுறீங்க?” எனக் கேட்டதும்,

“எலேய் பங்காளி! உன்னைய பயந்தபய-ண்டு சொல்லித் தூண்டி விட்டு உண்மையை வெளி வர வைக்கப் பார்க்குறாராம் வெண்ண!” – ஆரன் விருமனிடம் கூற,

காதைச் சொரிந்த பெரியவர், “எலேய்! ஒரு வாரமா உழைப்பைப் போட்டு ஓடாத் தேய்ஞ்சு கிடக்கியான் பாவம்! நீங்களே அழகர் எங்கயிருக்கியாண்டு உண்மையைச் சொல்லிப்புடுங்க டா” என்றார்.

“கிழவனே சொல்லிட்டாப்ல! சரி டா! இந்த நாடகத்தை இத்தோட முடிச்சுக்கிடுறேன்! அழகரு எங்கயிருக்கியாண்டு நான் உண்மையைச் சொல்லிடுறேன்! நீதேன் பெரிய ****** ஆச்சே! உன்னால என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கடா” என்ற விருமன் தொடர்ந்து,

“‘மக்கள் குரல்’ பத்திரிக்கை ஆளு கலாமணியம்மா வீட்லதேன் அழகரை தங்க வைச்சிருக்கோம்!” என்றான்.

கீழே கிடந்த விழுதுகளிருவரும், அவன் கூறியதைக் கேட்டு மெல்ல எழுந்தமர்ந்தபடி மணிவண்ணனை நோக்கினர்.

ஒரு நொடி இமை சுருக்கிய மணிவண்ணன், பின் விழிகளை விரிக்க,

“என்ன?, அவ கிடக்குறா ப*******சி! அவல்லாம் ஒரு ஆளா-ண்டு நினைக்கத் தோணுதா?, நீ இப்பிடியெல்லாம் நினைப்ப-ண்டுதேன், அந்தம்மா நெடு,நெடுண்டு வளர்ந்து ‘தலைமைப் பதிப்பாசிரியர்-ண்டு’ பதவி வாங்கி உங்கைக்கு எட்டாத உசரத்துல காலாட்டிக்கிட்டு உட்கார்ந்து கிடக்கு! நீ பாட்டுக்க, உம் மாட்டு மூளையை வைச்சுக்கிட்டு, அந்தம்மா வீட்டு முன்னாடி கூட்டத்தைக் கூட்டிறலாம்ண்டு யோசிச்சிராத! கள்ளு வாங்கிக் குடுத்து நீ கூட்டிப் போறக் கூட்டம், அந்தம்மாவைக் கண்டாலே அல்லு கழண்டு ஓடிருவாய்ங்க! அப்புறம், எவன் முதுகு பின்னாடியும் நீ ஒளிய முடியாது! உம் மொகரையை போட்டோ புடிச்சுப் பத்திரிக்கைல போட்டு, அந்தம்மா நீ இங்கன பண்ணிட்டிருக்கிற சில்லற அரசியலை, உலகத்துக்கேப் படம் புடிச்சுக் காட்டிரும்!” – என்று விருமன் ஏகத்துக்கும் அவனை நாறடித்ததும், உள்ளே கொதித்தாலும் அடக்கி, கழுத்தை நீவியபடி சிரித்துக் கொண்ட மணிவண்ணன்,

“அதுக்கெல்லாம் அவசியம் வராது! உண்ட வீட்டுக்குத் துரோகம் நினைக்குற, உம்மாமன் மாறி ஆளுக, உந்தாத்தன் கழுத்தறுக்கத் காத்துக்கிட்டிருக்கும் போது, நான் என்னத்துக்கு டா கள்ளுக்கு செலவழிச்சுக் கூட்டத்தைக் கூட்டப் போறேன்” எனக் கூற… பல்லைக் கடித்த விருமனைக் கண்டுக் குஷியாகிப் போனவன்,

“என் ஒருத்தனை அடக்கிப்புட்டா, அந்த சல்லிப்பயலுக்கு விடிவு வந்துரும்ண்டு நினைச்சு, நீயி இம்புட்டு வசனம் பேசுறது, எனக்கு சிரிப்புத்தேன்டா வருது! உந்தாத்தன் பேரைச் சொல்லி, தூண்டி விட்டா, அந்தப்பய தலையை வெட்டிப் போடக் கூடத் தயங்க மாட்டியான் உம்மாமன்ங்காரன்! இந்தாளு மேல இருக்குறக் கடுப்புல, பெத்த மவளைக் கூடக் கூட்டிக் குடுக்கத் தயாராயிருக்கிறவனைக் கூடவே வைச்சுக்கிட்டு, நான் என்னத்துக்குடா களத்துல இறங்கனும்!” – என்று வசனம் பேசியவன், தன் பேச்சை முடிப்பதற்குள் தாக்க நினைத்த விருமனைத் தாண்டி, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் பெரியவர்.

எழுபது வயதிலும், வலிமை குறையாதிருந்த அவரது கைகள், அவன் கன்னத்தில் தன் விரல் தடத்தைப் பதித்ததும், ஒரு நொடி தள்ளாடியவன், காதுக்குள் கேட்ட ரீங்காரத்தை உணர்ந்து அனிச்சையாய்த் தலையைக் குலுக்கிக் கொண்டு, இதழோரம் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி, அவரை விரிந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தான்.

“சல்லிப் ****! பேச நாக்கு இருக்காது சொல்லிப்புட்டேன்! நான்-ங்குறதால ஒரே அடியோட விட்றேன்! எம்பேத்தி இதைக் கேட்ருந்தா-ண்டா, உன் உசுரை உருவி, உரல்ல போட்டு ஆட்டிருப்பா!” – என்று விட்டு, கலைந்தத் தலையும், வழிந்த ரத்தமுமாய், மூர்க்கத்தோடு மூச்சு விட்டுக் கொண்டிருப்பவனைப் பார்த்தபடி,

“ஆரணா” என்றழைத்து, “கழட்டி விட்றா கருப்பன” என்று குரல் கொடுக்க,

என்றுமல்லாது இன்று கிழவனே அடிதடியில் இறங்கி விட்டது கண்டுக் குஷியாகிப் போன ஆரன், கையிலிருந்தக் கயிற்றை விட, அதுவரைத் தன் கால்களால் மண்ணை வாரிக் கொண்டு தலையை ஆட்டியபடி, வெளிவர முயன்று கொண்டிருந்தக் கருப்பன், ஆரன் கயிற்றை விட்டதும், சலங்கை குலுங்கத் திடுதிடுவென ஓடி வந்தான்.

எழுந்தும்,எழாமலும் தரையில் கிடந்த விழுதுகளிருவரும், பல்டி அடித்து எதிரெதிர்த் திசையில் ஓடி மறைந்து விட, கருப்பனைக் கண்டாலே, காத தூரத்துக்கு ஓடி விடும் மணிவண்ணன், தன்னை நோக்கி ஓடி வரும் காளையைக் கண்டுப் பயத்தில் வியர்வை வழிய, திரும்பி ஓட எத்தனித்த சமயம், அவனை நெருங்கியிருந்த கருப்பன், அவனது பின்புறத்தைக் குத்தப் போக,

சுற்றுப்புறம் மறந்து, அலறியவன், கடைசியில் கருப்பனின் கொம்பு தன் வேட்டியை உருவி வீசியதைக் கூட உணராது, பட்டாபட்டியுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்.

வேலை முடிந்து மாலை வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஊர்க்காரர்கள், கருப்பன் துரத்த, டவுசருடன் முழு வேகத்தில் வீதியில் ஓடிக் கொண்டிருந்த மணிவண்ணனைக் கண்டுக் கேலியில் இறங்க,

“கருப்பனைப் புடிச்சுப்புட்டு வீடு வந்து சேருங்கடா” என்ற கிழவர், பேராண்டிகள் தன்னை முறைத்துப் பார்ப்பதை கவனியாதது போல் சென்று விட்டார்.

“கிழவனுக்கு லொள்ளப் பார்த்தியாடா!” என்று பல்லைக் கடித்த விருமன், ஆரனுடன் கருப்பனைப் பிடிக்க ஓடினான்.

கருப்பனிடமிருந்துத் தப்பித்துத் தன் தோட்டத்துக் கிணற்றுச் சுவரின் பின்னே மூச்சு வாங்க மறைந்து அமர்ந்திருந்த மணிவண்ணன், மெல்ல எட்டி நோக்கினான்.

“கயத்தைப் போட்றா பங்காளி டேய்” என்ற விருமனின் குரலும், அதைத் தொடர்ந்து ஆரன் “அந்தக் களவாணி நாயி எங்குட்றா தொலைஞ்சியான்” எனக் கேட்டபடிக் கயிறு வீசுவதையும், இருவரும் சேர்ந்துக் கருப்பனை இழுத்துச் செல்வதையும் கண்டு, சுவற்றில் நன்றாகச் சாய்ந்தமர்ந்தான்.

ஓடி வருகையில், காளையிடமிருந்துத் தப்பிப்பது மட்டுமே நோக்கமாயிருந்ததால், மறந்திருந்த சுற்றுப்புறம், இப்போது நினைவு வர, முகத்தில் அறைந்து கொண்டவனுக்கு, அவமானம் பிடுங்கித் திங்க, ஊர்க்காரர்களின் முன்னே தன்னைக் கேலிப் பொருளாக்கியக் கிழவனை எண்ணிக் கோபம் பெருகியது.

பட்ட அசிங்கம், அவனை அங்கிருந்து நகர விடாது செய்ய, விடும் மூச்சின் வேகம் குறையாது கிணற்றடியிலேயே இரவு வரை கிடந்தவனைத் தேடி வந்தனர் அவனது விழுதுகள்.

வெறித்த பார்வையுடன், சிலையாய் அமர்ந்திருந்தவனின் தோள் தொட்டதும் நிமிர்ந்தவன், விருமனிடம் அடி வாங்கிய இருவரும், பீதியுடன் தன்னை நோக்கிக் கண்டிருப்பதைக் கண்டு, எழுந்து நின்றான்.

“அ..அண்ணே!” என்று எச்சில் விழுங்கியபடி, “க..க..கருப்பன்-ண்டா எங்களுக்கும் பயந்தேண்ணே” எனக் கூறப் பல்லைக் கடித்தவன், இருவரது தலைமுடியையும் பற்றி முட்ட வைத்து,

“இப்பிடிப் பயந்து ஓடத்தேன், நாங்குடுக்குற கோழியையும்,கறியையும் திண்டு உடம்பை வளர்த்துட்டுத் திரியுறீங்களாடா?, தின்னிப்பயலுகளா” என்று திட்ட, நெற்றியைத் தடவிக் கொண்ட இருவரும், அவனைப் பாவமாய்ப் பார்த்தபடி நின்றனர்.

“இனி என் மூஞ்சிலயே முழிக்காதீங்கடா தொடைநடுங்கிகளா! கிழவனையும்,அவரு பேராண்டிகளையும் எதிர்க்கத் துப்பிருக்கிறவன் மட்டும் எங்கூட நில்லுங்கடா! மத்தவிங்களெல்லாம் ஓடிப் போங்கடா” – எனக் கர்ஜிக்க,

“அப்டிப் பார்த்தா, முதல்ல ஓட வேண்டியது இவருதேன்” – என முணுமுணுத்த விழுது ஒருவன், அவன் வாங்கிக் கொடுக்கும் கள்ளுக்கும்,கறிக்கும் ஆசைப்பட்டு,

“அண்ணேஏஏஏஏ” என்று இழுக்க, அவன் இடுப்பில் மிதித்த மணிவண்ணன், “ஓட்றா,ஓட்றா நாயே” என்று அடித்து விரட்ட, ‘இவேன் கிழவங்கிட்ட செருப்படி வாங்காம அடங்க மாட்டியான்’ என்றெண்ணிக் கொண்டு முறைப்பும்,எரிச்சலுமாய் அவனைப் பார்த்தபடி ஓடிச் சென்றான்.

“உங்களுக்குத் தனியாச் சொல்லனுமா டா?” – என்று கத்தியவனைக் கண்டுப் பலர் விலகிச் சென்று விட, ஒரேயொரு கிழவன் மட்டும் அவனுடன் நின்றான்.

“என்னாய்யா?” – கேள்வி கேட்டவனுக்குப் பதிலாய், அவன்,

“பட்டாளத்துக்காரரையும்,அவரோட பேராண்டிகளையும் அடிதடில செயிக்க, ஊருக்குள்ள ஒரு பய கிடையாதுப்பு” – என்றான்.

“ப்ச், இதைச் சொல்லத்தேன் நிண்டயா! அடப்போய்யா!”

“சாவைத் தவிர எதுக்கும் பட்டாளத்துக்காரரு அசர மாட்டாரு ராசா!, கிழவன் கடைசியா கலங்கி நிண்டது, அவரு மவன் கட்டுன ச****லியச் சிறுக்கி பொணமா ஊருக்குத் திரும்பி வந்தப்பதேன்!,”

காரிருள் சூழ்ந்திருந்த இடத்தில், பூச்சிகளின் ரீங்காரத்துக்கு மத்தியில், தன் எதிரே நிற்கும் கிழவனின் விழிகளை யோசனையாய்ப் பார்த்தான் மணிவண்ணன்.

“களை புடுங்கிறவிங்கள்லாம், கால் மேல கால் போட்டுக்கிட்டுக் களத்து மேட்டுல உட்கார ஆசைப்பட்டா, கால,காலமா இவிங்களுக்குக் கஞ்சி ஊத்துற நாம, வேடிக்கை பார்த்துட்டு சும்மா நிற்க முடியுமாய்யா?” – மீசையை நீவியபடி அவன் கேள்வி கேட்க, இதழ் வளைந்தது மணிவண்ணனுக்கு.

ஓ! மற்றொரு சாதிமான்! மற்றொரு சங்கிலியன்! – என்றெண்ணியபடி, அவர் தோளில் தட்டிக் கொடுத்து,

“சரியாச் சொன்ன சித்தப்பு” என்றவனுக்குக் கடகடவென, மனதுக்குள் அடுத்தத் திட்டம் தயாரானது.

அழகரின் எழுத்துத் தேர்வன்று அதிகாலை பெரியவரும்,அவரது பேராண்டிகளும் வழக்கம் போல், மதுரை சென்றிருக்க, மணிவண்ணன் அனுப்பிய சாதிமான், அவரது வீட்டையும்,வரப்பு,தோப்பையும் நோட்டமிட்டான்.

“கிழவனும்,அவர் பேராண்டிகளும் ஊர்ல இல்லப்பு!” – தன்னிடம் ஒப்பித்தவனின் கையில், ஒரு பொட்டலத்தை நீட்டிய மணிவண்ணன்,

“நாஞ்சொன்னபடி கலந்துரு சித்தப்பு” என்றான்.

ழுத்துத் தேர்வை முடித்து வெளி வந்த அழகரின் முகம் மகிழ்ச்சியில் ஜொலிப்பது கண்டு, புன்னகைத்துக் கொண்டனர் மூவரும்.

“என்னாடா அழகரு, வாயெல்லாம் பல்லாத் தெரியுது! நல்லா எழுதுனியா?” – ஆரன் வினவியதும், நீண்ட சிரிப்புடன், பிடரியைக் கோதியவன், ஆம் எனத் தலையாட்டினான்.

“பின்ன, சொல்லிக் குடுத்தது நானாச்சே!” என்ற விருமனை முறைத்து,

“அப்ப, பொட்டி படுக்கையை கட்டுறதுதேன் பாக்கி” – என்று ஆரன் கூற,

“பொறுங்கடா ரிசல்ட் வரட்டும்!” என்ற பெரியவர், “என்னிக்குப்பு முடிவு தெரிய வரும்?” எனக் கேட்டார்.

“ரெண்டு நாள்ல தெரிஞ்சுருமுங்கய்யா” – என்ற அழகரின் முகம் திடீரெனச் சுருங்க,

“என்னப்பு?” என்றார் கிழவர்.

“ஒ..ஒன்னுமில்லங்கய்யா” என்றவன் அவரது நேர்ப்பார்வையைக் கண்டு, “எ..எங்காத்தா நினைப்பு வந்திருச்சுங்கய்யா” என்றான் தலை குனிந்தபடி.

“விட்றா! விட்றா! பட்டாளத்தான் எதுக்கும் கலங்கக் கூடாது! நீயி கிழவன் பாதுகாப்புலதேன் இருக்கண்டு இந்நேரம் உங்காத்தா யூகிச்சிருக்கும்! உன்னையப் பத்திக் கவலைப்படத் தேவையில்லண்டும் நினைச்சிருக்கும்! நீ எதைப்பத்தியும் யோசிக்காம பொட்டியைக் கட்ற வழியைப் பாருடா!” – என்ற விருமனின் பேச்சை ஆமோதித்த ஆரன்,

“பட்டாளத்துப் பகட்டோட ஊருக்குள்ள நீயி நடந்து வர்ற நாளு, நீ முன்னேறக் கூடாதுண்டு சலம்பிட்டுக் கிடந்த சில்றப்பயலுக பூரா,வாயடைச்சுப் போய் சிலையா நிற்பாய்ங்கடா!, அன்னைக்கு, உங்காத்தாளைமாறி கர்வப்படப் போற ஆளு, உலகத்துல இனி பொறக்கப் போறதில்ல” என்று கூற, இருவரது பேச்சில் சற்றுத் தெளிந்த அழகரிடம்,

“இது வெறும் தொடக்கம் தான்ப்பு!, நீ வளர்ந்து வந்து, உந்தம்பியைப் படிக்க வைக்கனும்! உன்னையும்,உந்தம்பியையும் பார்த்து, உன்னையச் சேர்ந்தவிங்களும் முன்னேற நினைச்சா, நீ அதுக்கு உறுதுணையா நிற்கனும்!இது குடும்பப் பொறுப்பில்லப்பு! சமூகப் பொறுப்பு”- என்றார் கிழவர்.

அதுவரைத் தன் குடும்பத்தையும்,அன்னையையும் எண்ணித் தடுமாறி நின்ற அழகரின் மனம், கிழவரின் பேச்சில் தெளிவு பெற்று, அவர் தனக்களித்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றத் தன்னை ஆயத்தப்படுத்தத் தொடங்கியது.

“அப்புறம் என்ன டா அழகரு, மனசை ஒரு நிலைப்படுத்து! சிரிச்சு சந்தோசமாயிரு! சேரப் போற இடத்தைப் பத்தி மட்டும் யோசி!, கடக்கப் போற பாதையை நினைச்சு மலைக்காத!” என்ற ஆரனும்,விருமனும் அவன் தோளில் கைப் போட்டுக் கூட்டிச் செல்ல, அதுவரை மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான் இருவரிடமும்.

“அந்தப் புள்ள பரீட்சை எழுதுதாண்ணே?”

“எந்தப் புள்ள?” – விருமன் வேண்டுமென்றே உரண்டை இழுக்கத் தயங்கியவன்,

“பு..புவியரசி” என்றவனிடம்,

“உனக்கென்னத்துக்குடா அந்தப்புள்ள மேல அம்புட்டு அக்கறை?” – என்று விருமன் மேலும் வம்பு செய்ய,

“டேய்ய்”- என அதட்டிய ஆரனுக்கு முன், அழகர், பதறிய குரலில்,

“நா..நான் தப்பான நோக்கத்துல கேக்கலண்ணே! தடைபட்டுப் போனது எம்படிப்பு மட்டுமில்லண்டு எனக்குத் தெரியும்! எனக்கு வழியமைச்சுக் கொடுத்தப் பட்டாளத்துக்காரரு, அந்தப்புள்ளையை சும்மா விட்ற மாட்டாருண்டும் தெரியும்! ஆனாலும், என் அளவுக்கு அந்தப்புள்ளயும் தண்டனை அனுபவிக்கிறது தெரிஞ்சும், எப்பிடிண்ணே விசாரிக்காம இருக்குறது?” என்று கேட்க,

“எலேய்! அவேன் சும்மா உங்கூட ஒரண்டை இழுக்குறியான்! நீயும் அதை பெருசு பண்ணிட்டுத் திரியுற! நீ ஊரை விட்டுப் போய்ட்ட சேதி தெரிஞ்சதுல இருந்து, உண்ணாம,உறங்காம பித்து பிடிச்ச மாறி உட்கார்ந்து கிடந்தவ கிட்ட, இவேந்தேன் போய் பத்து நிமிசம் பேசுனியான்! என்னத்தச் சொன்னானோ தெரியல! அதுக்கப்புறம் அது, தெளிவடைஞ்சு, புத்தகத்தைத் தூக்கி வைச்சுப் படிக்க ஆரம்பிச்சுருச்சு! பரீட்சைக்கும் போகத் தொடங்கிருச்சு!” என்று ஆரன் கூறியதும், துக்கம் அகன்று, விரிந்த சிரிப்புடன் நின்றவனைக் கேலி செய்த விருமன்,

“போடா போடா! போய் நல்லாத் திண்டு தூங்கி எந்திரி” என்று அவனைக் கலாமணியம்மாளின் வீட்டில் சேர்த்து விட்டு மூவரும் வீடு திரும்பினர்.

ஊருக்குள் நுழைந்த மூவரும், மந்தையில் வழக்கத்திற்கு மாறாகக் கூடியிருந்தக் கூட்டத்தைக் கண்டு யோசனையுடன் தேங்குகையில், ஒருவன் அவசரமாக ஓடி வந்து, கிழவரின் முன்னே நின்றான்.

“ஐயா.. ஐயா…” என்றபடித் தயக்கமும்,கலக்கமுமாய் நின்றவனைக் கண்டுப் புருவம் சுருக்கியவர், “என்னாடா?” என்று அதட்டவும்,

“க..க..கருப்பன் குடிக்கிறத் தண்ணீல யாரோ விசத்தைக் கலந்துப்புட்டாய்ங்கய்யா!” என்று அவன் அவசரமாய்க் கூறியதைக் கேட்டுக் கிழவர் அதிர்ந்து நிற்க,

அனிச்சையாய் அவன் சட்டையைப் பிடித்த விருமன், “என்னாடா சொல்ற?” எனக் கடித்தப் பற்களுடன் கேட்டதும்,

“ஆமாண்ணே!தண்ணீயைக் குடிச்சதுல இருந்து கருப்பன் தடுமாறிக்கிட்டு கிடந்ததா பார்த்தவிங்க சொன்னாய்ங்க!, கொ..கொஞ்ச நேரத்துலயே உடம்பு சரிஞ்சிருச்சுங்கண்ணே! மாட்டு டாக்டரு வந்து பார்த்துக்கிட்டிருக்காரு!” என்றான்.

பதற்றமாய் அலைந்தக் கருமணிகளுடன் நெற்றி வியர்க்கப் பேச்சற்று நின்ற கிழவரின் கால்கள் கட்டுத்தரையை நோக்கி ஓட, அவரின் பின்னே விரைந்தனர் ஆரனும்,விருமனும்.

வீட்டருகேயிருந்த கட்டுத்தரையை மூவரும் நெருங்கிய சமயம் ‘ஐயோ!என் எய்யாஆஆ’-வென நெஞ்சிலடித்துக் கொண்டுப் பெருங்குரலெடுத்து அழும் சோலையாத்தாளின் ஒப்பாரியைக் கேட்டதும், அனிச்சையாய்த் தன் வேக நடையை நிறுத்திய கிழவரின் முகம் ஒரு நொடி உணர்வற்றுப் போக, இருட்டிக் கொண்டு வந்த கண்கள் கொடுத்தத் தடுமாற்றத்தில், கால்கள் தள்ளாட, நிலை கொள்ளாது சரிந்து, அங்கிருந்தக் கல்லின் மீது தொப்பென அமர்ந்தார்.

மூப்பு, அவரது உடலை வியர்த்து வடியச் செய்ததில், சிவந்த விழிகளோடு, மூச்சு வாங்க, மண் பார்த்து, இடிந்து போய் அமர்ந்திருந்தவரைக் கண்டுக் கலங்கிப் போன ஆரனும்,விருமனும் அவசரமாய்க் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே ஓடினர்.

புலியையும் குத்திக் கொல்லும் கூரிய கொம்புடையப் புலிக்குளம் காளையவன்,ஒரு புல்லுருவியின் கோழைத்தனத்துக்குப் பலியாகித் தன் கம்பீரமிழந்துக் கட்டையாய்த் தரை சாய்ந்திருந்தான்! திமிறும் திமிலுடன் திமிராய் நின்று எட்டுத்திக்கையும் தெறித்து ஓடச் செய்யும் வலிமை கொண்டவன், தன் வலுமொத்தமுமிழந்து, விழி சொருகிக் கிடந்தான். அண்ட வருபவனை அசட்டையாய்க் கொம்பில் தூக்கித் தூர எறிந்து, வாடியில் நின்று விளையாடுபவன்,இன்று வாய் பிளந்து, வாடிக் கிடந்தான்.

“வாயில்லா ஜீவனை விசம் வைச்சுக் கொண்டவன், வாய்க்கரிசிக்கு வழியில்லாமப் புழுத்துக்கிட்டு சாக! அவேன் கையி விளங்காம போக! அவேங்குடும்பம் நாசமாப் போக! எந்தத் ****** மவன் செஞ்ச சதியோ, எம்புள்ள உசுரு போயிருச்சே!, என் ராசா… என் எய்ய்யாஆஆ… எங்கருப்பா… எங்குலசாமி!” – தலையிலடித்துக் கொண்ட அழுத சோலையாத்தாளின் பின்னே இறுகிய முகத்துடன் அகலருவியும்,சிலம்பனும் நிற்க, அருகே புவியரசியும்,மீனாட்சியும், வீரலட்சுமியும் கண்ணீர் விழிகளுடன் கருப்பனின் உடலைப் பற்றிக் கொண்டு கலங்கியபடி அமர்ந்திருந்தனர்.

அழுவதற்கு அலறிய விழிகளை அடக்கிக் கண்ணீரைக் கண்ணோடு தேக்கிய விருமன், கோப மூச்சுடன் மூக்கு விடைக்கக் கருப்பனை வெறித்துப் பின், விறுவிறுவென வெளியேறினான்.

அழுது வடிந்த விழிகளுடன் ஆரன் “தாத்தா” என்றழைக்கும் வரை, கல்லோடு கல்லாய்ச் சமைந்திருந்த கிழவர், கவசமாய்த் தன் தோளில் கிடக்கும் கருப்புத் துண்டு சரிந்து விழுவது கூடத் தெரியாமல், தடுமாறி எழுந்து மெல்ல நடந்து வந்தார்.

ஆயிரம் காயங்களை உடல் முழுதும் சுமந்து கொண்டு, ரத்தம் சொட்ட, வலி நிறைந்த மூச்சைக் கர்ஜனையாய் வெளியிட்டபடி, தன் கம்பீரம் குலைந்துத் தளர்ந்த நடை போட்டுத் தள்ளாடி வரும் காட்டு ராஜாவை மொத்த ஊரும் கலங்கிப் போய்ப் பார்த்தது.

கிழவர் அருகே வந்ததும், கூட்டம் அமைதியாகி, விலகி நிற்க, சோலையாத்தாளின் விசும்பல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த அவ்விடத்தில், கருப்பனின் உடலருகே அமர்ந்தார்.

அவன் கொம்பை நீவி, திமிலைத் தொட்டு, உடல் முழுதும் வருடிக் கொடுத்த கிழவனின் விரல்கள், தடவத் தடவ நடுக்கம் கண்டது. பாசமாய், பெருமையாய் அவன் நெற்றி வருடும் கரங்கள், இன்று குற்ற உணர்ச்சியில் தயங்கித் தடுமாற, அவன் கொம்பைத் தன் ஐவிரலில் இறுக்கித் திமிலைத் தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டவர், துடித்த மீசைக்குள் மடிந்து கிடந்த இதழ்களைப் பிரித்து,

“வாடி மேல வாடி தாண்டி வெற்றி கண்டு வந்த முகம்,

வாய்க்கரிசி வாங்கிக்கிட்டு வானம் பார்த்துக் கிடக்குதய்யா!

ஏறு பூட்டி நான் பார்த்த வெள்ளாமை வெசமேறி..

வெடிச்ச வாயோட வெந்து போய்க் கிடக்குதய்யா!

பதக்கம் வாங்கி வந்த கொம்பைப் பதமா நீவித் தந்து..

பூரிச்ச நாளெல்லாம்.. புகையாப் போனதய்யா!

சுத்தவீரன் நெஞ்சுல ரத்தம் கண்ட காளையது..

சூழ்ச்சிக்குப் பலியாகி, சுண்ணாம்பாப் போனதய்யா!

பொட்டு வைச்சு நான் பார்த்த நெத்தி இங்கு நிலஞ்சரிய,

முட்டு வாங்கும் தென்னை அங்கு ஒத்தைல நிற்குதய்யா!

உங்கால் உழுத காடெல்லாம், உஞ்சலங்கைக்குக் காத்திருக்க,

மணியோசை மறந்து நீயும், மண்ணோடு போனதேன்ய்யா?

கொம்பு சீவக் கை துடிக்க, திமில் தடவ விரல் துடிக்க,

உங்கயிறு தேடும் உசுருக்கு, என்னாண்டு புரிய வைப்பேன்..

நீ காத்தோட கரைஞ்சு, காலத்தோட செண்ட கதைய…!”

-உயிர் உருகப் பாடிய கிழவர் உணர்வற்று அவன் உடல் மீது சாய, வெறித்த அவர் கண்களில் குளம் கட்டத் தொடங்கியக் கண்ணீரை, அணை கட்டி நின்றான், அவர் விழி முழுக்க, உயிர் முழுக்க நிறைந்திருந்த கருப்பன்.

அதுவரை, இரும்பாய் இறுகிப் போன இதயத்துடன், இறந்து கிடந்த கருப்பனை இமைக்காது வெறித்தபடி, சுற்றுப்புறம் மறந்து மரமாய் நின்றிருந்த அகலருவி, கிழவனின் குரல் உயிரை உலுக்கியதில் உணர்வு பெற்று, நடுக்கமெடுத்தக் கைகளை மறைக்க முயன்று தோற்று விறுவிறுவென ஓடிச் சென்றாள்.

ஆத்திரமாய்,ஆதங்கமாய்,கோபமாய், கொலை வெறியாய் நெஞ்சு முழுக்கப் பொங்கி வந்த உணர்வுகள், ஆஆஆ-வெனக் கத்திக் கதறச் சொல்ல, உதட்டை மடித்துக் கடித்து, விடைத்த மூக்கை அடக்கி, வடியக் காத்திருக்கும் கண்ணீரை உள்ளிழுக்க முயன்ற இமைகளோடு இரு நொடி போராடிப் பார்த்தவள், கடைசியில் அநியாயமாய்த் தோற்று.. கன்னம் தாண்டி வழிந்து சென்ற விழிநீர் கொடுத்தத் துயரத்தில், பல்லைக் கடித்து சத்தம் வராமல் தேம்பித் தேம்பி அழலானாள்.

அடங்கா ஆத்திரத்தில் ஆடத் தொடங்கிய உடலின் நடுக்கத்தைக் கைகளை இறுக்கி அடக்கி நின்றவள், கடித்தப் பற்களுக்கிடையேக் கெட்ட வார்த்தைகளை உதிர்த்தபடி, விடாது தேம்பிக் கொண்டிருப்பதைக் கண்ணீர் வழிய பார்த்திருந்தான் ஆரன்.

அவனைக் கண்டதும் மேலும் உதடு பிதுங்க, தாவணியை இறுக்கியபடி, உடல் குலுங்க அழுதவளை, கலங்கிச் சிவந்த விழிகளால் வெறித்து நின்றான் அவன்.

அவனைப் பார்த்தபடியே அழுது கொண்டிருந்தவளின் விழிகள் அவன் பின்னே கண்ட உருவத்தைக் கண்டுக் கோபத்தில் பளபளக்க, அவள் பார்வை சென்றத் திக்கைத் திரும்பி நோக்கியவனுக்கு, அழுகை முழுதும் ஆத்திரமாய் மாற, ஓடிச் சென்று, அவ்வுருவத்தை மிதித்துக் கீழே தள்ளினான் ஆரன்.

கருப்பனின் கட்டுத்தரையருகே கல்லில் சாய்ந்தபடி, குற்ற உணர்ச்சியில் குறுகிப் போய்க் கண்ணீர் வடிய அமர்ந்திருந்த சங்கிலியனின் முதுகில், ஓங்கி மிதித்திருந்த ஆரன், அவர் சட்டையைக் கொத்தாகப் பற்றித் தூக்கி,

“தெனம் கருப்பனுக்குத் தீவனம் வைச்சுத் தண்ணீ காட்டுறவேன் நீதேன்! உன்னைய மீறி, இங்கன எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்ல! பதில் சொல்லுய்யா! அந்தத் ***** மவனோடக் கூட்டு சேர்ந்துக்கிட்டு கருப்பனை வெசம் வைச்சுக் கொன்-ண்டது நீதேனா??,” – எனக் கேட்டபடி, அவர் கன்னத்தில ஓங்கி அறைந்தான்.

அவன் வேகத்தில், அவர் வாய் கிழிய, தடுமாறி நின்றவர் “நா..நாஞ்செய்யல! நாஞ்செய்யல” – எனப் பதறியபடிப் பின்னே நகர முயல, அவர் கையை முறுக்கிப் பின்னால் வளைத்தவன், அவர் முகத்தைத் அருகிலிருந்தக் கல்தூணில் மோதச் செய்து,

“படையே திரண்டு வந்தாலும், ஒத்தைல நிண்டு செயிக்கிறப் பட்டாளத்துக்காரனைக் கலையிழந்த பட்டமரமா நிற்க வைச்சுட்டீங்களேய்யா!,ஆம்பளையா நேருக்கு நேர் நிண்டு மோதத் துப்பில்லாம, கோழைத்தனமா பாவப்பட்ட ஜீவனைக் கொன்-ண்டு பழி தீர்த்துட்டீங்களே! கிழவன் முகத்துக்கு முன்னாடி மூக்கரிக்கக் கைய உயர்த்தக் கூடத் துணிவில்லாம திரிஞ்ச பொண்டுகப்பயலுக, வாயில்லா ஜீவன் உசுரை உருவி வஞ்சத்தைத் தீர்த்துக்கிட்டீங்களேய்யா! தெனம் நீ போட்டத் தீவனத்தை நம்பித் திண்ட உசுரு,உருக்குலைஞ்சு கிடக்குதுய்யா! ஒன்னுமண்ணாப் பழகுன ஜீவனை ஒன்னுமில்லாம ஆக்க உனக்கெல்லாம் எப்பிடிய்யா மனசு வந்துச்சு?, நீயெல்லாம் மனுசனா?, உன்னைக் கொன்-ண்டு போட்டாத்தேன்ய்யா என் ஆத்திரம் அடங்கும்” என்றவன் ஆவேசமாய்,

“இந்தக் கைதேன அந்தப் ***** மவனுக்கு உடந்தையா, எங்கருப்பனுக்கு வெசம் வைச்சுக் கொல்லுச்சு?, இந்தக் கைதேன?, இந்தக் கைதேன?” – எனக்கத்தியபடி, அவர் முகத்தைத் தூணில் மீண்டும்,மீண்டும் அறைந்து, முழு பலத்துடன் அவர் கையை முறுக்கி ஒடிக்கப் பார்க்க, வலியில் துடித்தவர்,

முகத்தில் ரத்தம் வழிய “ஏ…ஏறு உழுது வெள்ளாமை கண்டு, வெந்த அரிசியை உண்டு வாழுற விவசாயி மவன் நானு! க..க..ருப்பன் எங்…குலசாமி!, எ..என்னைக் காக்குற தெய்வம்! கடவுளா நினைச்சவனைக் கொல்லுற அளவுக்கு நா..நான் கல்நெஞ்சுக்காரனில்ல” -என்றபடியே, வலி பொறுக்காது அவர் கீழே சரிய, பொங்கிய கோபத்துடன் அவரை வெறித்துப் பார்த்தவனிடம்,

மூச்சு வாங்க, சொருகிய விழிகளுடன் கீழே கிடந்தவர், “கிழவன் தலை தாழ்ந்து நிற்கத்தேன் ஆசைப்பட்டேனே ஒழிய, அவர் தலையையே எடுக்கனும்ண்டு நான் எந்நாளும் நினைச்சதில்ல” – என்று கூற, ஆத்திரமும்,ஆதங்கமுமாய் அவரை நோக்கியவன், விழி மூடி ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, குனிந்து அவரிடம்,

“யார் மேல உமக்கு இம்புட்டுக் கோவம்?, எது உம்மை இம்புட்டுத் தப்பையும் செய்யச் சொல்லித் தூண்டுச்சு?, நீரு தலைல தூக்கி வைச்சுக் கொண்டாடுற சாதிய, தரைல போட்டு மிதிச்சு, சாதியில்ல,பேதமில்லண்டு மனுசப்பய அத்தனை பேரையும் சரிசமமாப் பார்க்குறக் கிழவனோட நோக்கமா? இல்ல, வாழ்க்கைல முன்னேறி, 3 வேளை சோத்துக்கு வழி செய்யனும்ண்டு துடிச்ச, அப்பாவி கீழ்சாதிக்காரப் பயலோட அர்ப்ப ஆசையா?, இல்ல, ச*******சி பெத்த மவனோட, ஒரே வீட்டைப் பகிர்ந்துக்கிட்டு, அவன் திங்குற சோத்தை நாமளும் திண்டு வாழ்றோமேங்குற எண்ணம் கொடுத்த அவமானமா?” என்றவன் தொடர்ந்து,

“இதெல்லாம் உம்ம ரத்தத்தைக் கொதிக்க வைச்சு, அடிவயித்துல நெருப்பை மூட்டுதுண்டா, உத்திரத்துல தொங்கி உசுரை விடுறதைத் தவிர உமக்கு வேற வழி எதுவுமில்ல! ஏன்-ண்டா, பாகுபாடு பார்க்கக் கிழவன் உம்மைப் போல பாமரன் இல்ல! பட்டாளத்தான்! நீரு தடை போட்டதும், தடம் தெரியாம அழிஞ்சு போக அழகரு கோழை இல்ல! நீரு அடைச்சதை உடைச்சு, முன்னேறிப் போற போராளி! ச******சி பெத்த மவனை உறவுக்காரன்-ண்டு சொல்லிக்க நா கூசுது-ண்டா, கூசுன நாக்கை, நான் ஊத்தப் போற கூழைக் குடிக்கத் தயார்ப்படுத்துங்க! ஏன்-ண்டா, இந்த சென்மத்துல மருமவன்-ண்டு நீரு வாய் நிறைய அழைக்கப் போறது, இந்த ச*****சி மவனைத்தேன்!” – என்றவன், விடைத்த மூக்கும்,தேங்கி நின்றக் கண்ணீருமாய், ரத்தம் வழியக் குப்புறக் கிடந்தவரை ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

அதுவரை ஆத்திரத்தைக் கண்ணில் தேக்கி, ரௌத்திரத்துடன் நின்றிருந்த அகலருவி, குற்ற உணர்ச்சி கொடுத்தக் குறுகுறுப்பில் குறுகித் தரையோடு தரையாய்த் தளர்ந்து கிடந்தத் தகப்பனை மூத்திரமாய் எண்ணி, அருவெறுப்புடன் நோக்கினாள்.

நல்ல தகப்பனாய் வாழ முயன்றிடா விட்டாலும், நல்ல மனிதனாகவேனும் அவர் வாழப் பழகியிருக்க வேண்டும்! மகளை நிமிர்ந்து பார்க்கக் கூசித் தழைந்த கண்கள், இம்மண்ணில் உயிர் வாழத் தான் தகுதியற்றவன் என்கிற எண்ணத்தை வலுப்படுத்த, அர்ப்ப ஆசையாய் ஒரு முறை மன்னிப்பை யாசித்தபடி அவர் மெல்ல இமை உயர்த்தி மகள் முகம் காண்கையில்,

கண்ணீர் சிந்திச் சிந்தி வீங்கிக் கருத்திருந்த முகத்தோடு, உதடு வளையச் சிரித்துப் பின் முழுக் கோபத்தில் தன் அகண்ட விழிகளைக் குரோதமாய் விரித்தவள், நெஞ்சு அதிர, அடிவயிற்றிலிருந்துப் புறப்பட்ட ஆத்திரத்தை, எச்சிலில் தேக்கி, அவர் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு நகர்ந்திருந்தாள்.

முகத்தில் வழிந்த ரத்தத்தோடு சேர்ந்து அவள் உமிழ்ந்த எச்சிலும் வடிய, கொட்டித் தீர்த்தக் கண்ணீரைத் துடைக்கக் கைகளின்றி, உடல் குலுங்க அழுதபடிக் கேட்பாரற்றுக் கிடந்தார் சங்கிலியன்.

ந்தப்புறம், சோலையாத்தாளின் ஒப்பாரியைக் கேட்ட விருமனின் காது, வேறு சப்தம் எதையும் உணராது செவிடாகிப் போயிருக்க, ஈ மொய்த்துக் கிடந்தக் கருப்பனின் உடல், விழி முன் அகலாது நின்று வெறியேற்றியதில், நிதானம் தவறி, மிருகமாகியிருந்தவன், புறப்பட்டிருந்தான் மணிவண்ணனைத் தேடி!

இவன் வருகைக்காகக் காத்துக் கொண்டு மாந்தோப்பில், தன் கைக்கூலிகளுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த மணிவண்ணன், புட்,புட்,புட் என ஒலித்த புல்லட் வண்டியின் சத்தத்தில், அவசரமாய் நிமிர்ந்து முன்னே பார்த்த நொடி, அவன் அமர்ந்திருந்த நாற்காலியை இடித்துத் தூக்கி, அவனை நான்கடிப் பறந்து விழச் செய்துத் தன் வண்டியை வளைத்து நின்ற விருமன்,

ஆவேசமாய் நடந்து வந்து கீழே கிடந்தவனின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தரதரவென இழுத்து அருகிலிருந்து மரத்தில் வலுவாய் மோதச் செய்தான்.

எதிர்வினையாற்ற எவருக்கும் வாய்ப்பளிக்காமல் இமைக்கும் நொடியில் அவன்,இத்தனையும் செய்திருக்க, அவசரமாய் ஓடி வந்து விருமனை வளைத்துப் பிடித்துத் தடுத்து நிறுத்தினர் மணிவண்ணனின் கைக்கூலிகள்.

ஆஜானுபாகுவான இருவரால் அழுத்திப் பிடிக்கப்பட்டிருந்தவன், விடாது திமிறியபடி, “தெனவெடுத்தத் ***** நாயே!, உன்னைக் கண்டந்துண்டமா வெட்டிக் காணாப் பொணமாக்காம, நான் இங்க இருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன்டா!” – ஆக்ரோஷமாய்க் கத்தியவனை அடக்கப் போராடியபடி இருவரும் தன் பிடியை இறுக்கி நிற்க,

புடைத்த நெற்றியைத் தடவியபடி எழுந்து நின்ற மணிவண்ணனுக்கு, சிறைபட்டிருந்தப் புலியைக் கண்டு வலி மறந்து போனது.

“என்னாக் கண்கொள்ளாக் காட்சி டா இது! இப்பிடியொரு காட்சியைக் காண்ங்க, எம்பூட்டு நாள் நான் காத்துக் கிடந்தேன் தெரியுமா! டவுன்ல இருந்து உங்க ரெண்டு பேரையும் காசு குடுத்துக் கூட்டி வந்தது நல்லதாப் போச்சு! உறுமுற புலியை உள்ளங்கைல அடக்கிப்புட்டீகளே! சபாஷ்!”

வியந்து பேசுபவனை அற்பப் பதரென நோக்கிய விருமன், “சல்லிக் ***! ஆம்பளை-ண்டா, எங்கூட ஒத்தைக்கு ஒத்த நிண்டு மோது டா!” என்று பல்லைக் கடிக்க,

அசட்டையாய்க் காலரைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்ட மணிவண்ணன், “நான் ஆம்பளையா இல்லயாங்குறதை, உன் அயித்தை மவளை வைச்சுத் தெரிஞ்சுக்கிறேன்! நீ பட்டம் கொடுத்துப் பதவி ஏற்பு விழா நடத்தத் தேவையில்ல!” என்று கூறவும், நக்கலாய் உதட்டை வளைத்த விருமன்,

“தகிரியமிருந்தாத் தொட்டுப்பாரு டா அவளை! நீ நினைக்குறதுக்கு முன்னமே உன் நெஞ்சைக் கிழிச்சு நாய்க்குப் போட்ருவா அவ! ஏற்கனவே அவ உன் நெத்தியை நெளிய வைச்சக் கதை எனக்குத் தெரியாதுண்டு நினைச்சியா?, நான் கட்டிக்கப் போறவ மேல நீயி கை வைச்சங்குறதை அறிஞ்சும், நான் அமைதியாக் கடந்து போனது, கிழவன் ஒருத்தனுக்காகத்தேன் டா!” என்று சீற.. தோளைக் குலுக்கிய மணிவண்ணன்,

“பாவம்! அறவழியில நடக்குற கிழவன், இன்னைக்கு ஆஆ-ண்டு கதறிக்கிட்டு, அசந்து போய் கிடக்குறாப்ல! ஏன் டா, பட்டாளத்துல ஒப்பாரி பாடவுமா பயிற்சி குடுக்குறாக! கிழவன் பாடுன பாட்டைக் கேட்டு ஊரே கண்ணீர் வடிக்குதேடா” – என்று நக்கலடித்தான்.

குபுகுபுவென அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் கிளம்ப, எகிறி அவன் நெஞ்சில் மிதித்த விருமனை, பிடித்திருந்த இருவரும் அடக்க, அவன் செருப்புத் தடத்தைத் தன் வெள்ளைச் சட்டையில் கண்ட மணிவண்ணன், கோபம் பெருக, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

அசராது அவனை அடிக்கண்ணில் முறைத்த விருமன் நிமிர்ந்த நெஞ்சுடன், “ஒரு அப்பனுக்குப் பொறந்தவனா இருந்தா, இவிங்க ரெண்டு பேரையும் நகரச் சொல்லிட்டு, என்னைத் தொட்டுப் பாரு டா” – என அடிக்குரலில் சீற..

“ம்ஹூம்!” என இருபுறமும் தலையசைத்து மறுத்தவன் “எலேய்! எனக்குப் பூ போல உடம்பு டா! கறியும்,கள்ளும் சேர்ந்து உடம்பைப் பஞ்சாக்கிப் போட்டுச்சு! அதை உங்கிட்டக் கொடுத்துப் பஞ்சராக்கிக்க நான் என்ன முட்டாப் பயலா?” – எனக் கொஞ்சமும் வெட்கமில்லாது கேட்டவனின் முகத்தில் காறி உமிழத் தோன்ற,

“கோழை நாயே” – என்று முணுமுணுத்தவனிடம்,

“கோழைதேன் டா! கோழைதேன்! ஆனா, உடம்புதேன் பஞ்சா போச்சேத் தவிர, எம் மூளை நல்ல பவரோடதேன் இருக்கு!, என்னா சொன்ன? பட்டாளத்தான் வளர்ப்போட மோதி செயிக்க இனியொருத்தன் பொறந்ததுதேன் வரனும்ண்டா?, கிழவன் மூளையோட மோத நானொருத்தன் இங்கிருக்கையில, இனியொரு பொறப்பை என்னத்துக்கு டா வீணடிக்கனும்?, உங்கர்வத்துல, நான் அள்ளிப் போட்டத் தீயால, உன் வீட்டு வாச முன்னாடி, வாய் வெடிச்சுப் போய்க் கிடக்குப் பார்த்தியா உந்தாத்தன் வளர்ப்பு!” – வெற்றி கொண்ட இறுமாப்புடன் இடி,இடியெனச் சிரித்தவனைக் கண்டு, ரத்தம் கொதிக்க,

“ஏர் உழுத காலைக் கை தொட்டுக் கும்பிட்டுக் கடவுளா வணங்குறவந்தேன் டா உழவனா இருக்கத் தகுதியானவன்! சேறு அப்புன காலை செருக்கோடத் தடவிக் கொடுத்து, அவேன் கால் பட்ட மண்ணை நெத்தியில பூசிக்கிறவேன்தேன் டா விவசாயிங்குறவன்! கலப்பையைத் தொடக் கூடக் கை நடுங்குறக் களவாணித் **** நாயி நீயி! உம் பொண்டுகத்தனத்துக்குப் பலியாடா, அநியாயமா எங்குலசாமியைக் கொன்னுட்டியே டா!” – வார்த்தைகள் கரகரக்க, சரசரவெனக் கன்னம் நனைத்தக் கண்ணீருடன் ஒரு நொடி கலங்கி நின்றவன், மறு நொடி ஆக்ரோஷம் பெருக, ஒரே மூச்சில் தன் கைப்பற்றி நின்றிருந்தவர்களின் பிடியிலிருந்துத் திமிறி வெளிவந்து, அருகே நின்றிருந்தவனின் கையிலிருந்தக் கதிர் அருவாளைப் பறித்து மணிவண்ணனின் கழுத்தில் கோடிழுக்க,

பயந்து பதறி, மரண பீதியுடன் விழிகளை விரித்தவன், எகிறிக் கொண்டு வந்த விழுதுகளைக் கை நீட்டித் தடுத்தபடித் தன்னை நோக்குவதைக் கண்டு, உதடு வளைய,

“அகிம்சை வழில தண்டனை கொடுக்க நான், எந்தாத்தனுமில்ல!, அடிக்குற அடியைப் பாதில விட்டுப் போக நான் எம்பங்காளியுமில்ல! நான் விருமன் டா! உஞ்சாவு எங்கைலதேன்” என்று அடிக்குரலில் முணுமுணுத்தவன், தன்னைத் தாக்க வந்த மலமாடுகளிடமிருந்துப் போராடி அங்கிருந்து தப்பித்திருந்தான்.

ஆரன் சங்கிலியனை அடித்து நொறுக்கியதையும், விருமன் மணிவண்ணனிடம் சண்டையிட்டு வந்ததையும் கேள்விப்பட்டிருந்த பெரியவர், காயங்களுடன் நின்றவர்களைக் கண்டு,

“பயலுகளா! என்னத்துக்குடா வம்பை வளர்க்குறீங்க?, இவிங்களை அடிச்சுக் கை,காலை உடைக்குறதால, போனவன் திரும்பி வரவா போறியான்?, பதிலுக்குப் பதிலுண்டு பழிவாங்குறது தொடர்ந்தா, இது என்னைக்கும் தீராது டா!” என்றார் சலிப்பான குரலில்.

“இதுக்குப் பேரு பழிவாங்குறது இல்ல! தண்டனை குடுக்குறது! அவனுக்கு எம்மேலயோ, உங்க மேலயோ கோவம்ண்டா, உங்களையும்,என்னையும் கொன்-ண்டு பழி தீர்த்திருக்கனும்! அப்பாவிப் பயலை ஓட ஓட விரட்டுறதும், வாயில்லா ஜீவனை வெசம் வைச்சுக் கொல்றதும், எம்புட்டுப் பெரிய குற்றம்?, செஞ்ச தப்புக்குத் தண்டனையா, எண்ணைச் சட்டில வறுக்கிறதும், கட்டையால அடிக்கிறதும் எமலோகத்துலயே நடக்குதாம்ல! சாத்திரத்துல இருக்குறதை சாமானியன் செஞ்சா, என்னா பெரிய தப்பு!” – வெறித்த பார்வையுடன் விருமன் வெறியோடு பேச, அவனை எரிச்சலுடன் நோக்கிய கிழவர்,

“எலேய்! எவன் டா இவன், எமலோகம்,மேலோகம்ண்டு இல்லாததைப் பேசிக்கிட்டு! சாத்திரமெல்லாம் பகுத்தறியுற புத்தியில்லாத முட்டாப் பயலுகளுக்குத்தேன் டா!” – என்று கூற,

“பின்ன என்ன?, தண்டிக்கிற உரிமையை எங்களுக்குக் குடுங்க” – ஆரன் ஆவேசமாய்க் கேட்டதும், சலிப்புடன் நோக்கியவர்,

“பொறுமையா இருங்கடா பயலுகளா! முறையா போலீசு கம்ப்ளைண்ட் குடுப்போம்! தண்டிக்கிறதையெல்லாம் சட்டம் பார்த்துக்கிடட்டும்!” என்றார்.

“எப்பிடி?, அந்தத் ***** பயலுக்கு மாமா வேலை பார்க்குற பஞ்சாயத்துத் தலைகளோட மல்லுக்கு நிண்டு, போலீசுக்குப் போக அனுமதி வாங்கி, கோர்ட்டு அவங்கைக்குக் காப்பு மாட்டுற நாளுக்காக நடையா நடந்து, கருப்பனைப் புதைச்ச இடத்துல புல்லு முளைக்குற வரை காத்திருக்கச் சொல்றீக?” – அமைதியான குரலில் கேட்ட விருமன், பொறுமையைக் கடந்து, பொங்கிப் பாயக் காத்திருக்கும் எரிமலையாய் உருமாறியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டப் பெரியவர் முகம் இறுக,

“ஒவ்வொன்னுக்கும் கோவப்பட்டு அதிரடியா ஆட்டமாட நினைச்சிருந்தா, அழகரை என்னத்துக்கு டா நானு ஒளிச்சு வைச்சு பட்டாளத்துக்கு அனுப்பனும்?, யாருக்கும், எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாதுண்டுதேன டா நான் இம்புட்டுப் போராடுறேன்! கருப்பன் இடத்துல உன்னையோ,இவனையோ,அழகரையோ பார்த்திருந்தா, என் உசுரு என் உடம்புல தங்கியிருக்குமா?” என்று கரகரத்தக் குரலில் கூறியவர் தொடர்ந்து விழி சிவக்க “அந்தப் ***** மவனை நான் பார்த்துக்கிடுறேன்! நீங்க எங்கூட இருந்து, ஊர்ப்பிரச்சனைல தலையிட்டது போதும்!, எழுதுன பரீட்சைல அழகரு பாஸ் ஆயிட்டியான்ல?, அவனை வண்டி ஏத்தி விட்டுப்புட்டு உங்கப்பன் வீட்டுக்குப் போய்ச் சேருற வழியைப் பாருங்க! நான் சொல்ற வரை ரெண்டு பேரும் ஊர்ப்பக்கம் தலை காட்டக் கூடாது! இந்தப் பிரச்சனையை எப்பிடி சமாளிக்கனும்ண்டு எனக்குத் தெரியும்” – என்றார்.

“அப்டின்னா, அவனுக்குப் பயந்து எங்களை ஓடிப் போகச் சொல்றீகளா?, அறிவுகெட்டத்தனமா பேசாதய்யா பெருசு!” – கோபமாய்த் திட்டிய விருமனை ஆதங்கத்துடன் முறைத்த கிழவர்,

“எம் பேச்சைக் கேட்குறதா இருந்தா என் மூஞ்சில முழிங்க டா! இல்லண்டா, எக்கேடோ கெட்டு எப்பிடியோ போங்கடா” – எனத் தளர்வாய்ப் பேச, அதுவரை மூவரும் உரையாடுவதைத் தூர இருந்து பார்த்திருந்த அகலருவி, கிழவனின் அருகே வந்து, அவர் தோளைப் பிடித்து,

“தாத்தா, உமக்கு ரத்தக்கொதிப்பு அதிகமா இருக்குண்டு நேத்து வைத்தியர் சொல்லிட்டுப் போனது மறந்துடுச்சா?, என்னத்துக்கு இப்பக் கத்திட்டுத் திரியுறீக?, உங்ககூட மல்லுக்கு நிண்டாலும், கடைசில நீங்க சொல்றதைத்தேன் ரெண்டு பேரும் கேட்பாக! பேசாம போய் சோத்தைத் தின்னுப்புட்டு எல்லாரும் தூங்கி எந்திரிக” – என்று அதட்ட, பேராண்டிகளிருவரையும் நிமிர்ந்து பார்த்த கிழவர், தோளிலிருந்தத் துண்டை உதறியபடிப் பேத்தியுடன் சென்று விட்டார்.

“கிழவனுக்குப் புத்திகெட்டுப் போச்சு பங்காளி” – விருமன்.

“கிழவனை விட்றா! இன்னைக்கு நம்மள திட்டுனாலும், நாளைக்கு நம்ம பக்கந்தேன் நிப்பாரு!” – ஆரன்.

“என்னா பண்ணலாம் பங்காளி” – தன் முகம் பார்த்து மெல்லிய குரலில் கேட்டவனிடம்,

“வெசத்தைக் கலந்தவன் காலை ஒடைச்சுப் படுக்கப் போட்டாச்சு! கலக்கச் சொன்னவனுக்குத் தரமா ஒரு சம்பவத்தைப் பண்ணிப்புடனும் பங்காளி” – என்ற ஆரனின் குரலில் வன்மம் தெறித்தது.

ழகருக்கு டேராடூனில் போஸ்ட்டிங் போடப் பட்டிருக்க, அடுத்த இரு நாட்களில் பொட்டி,படுக்கையுடன் புறப்பட்டிருந்தவனை, வழியனுப்ப கலாமணியம்மாளுடன் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தனர் ஆரனும்,விருமனும்.

“பட்டாளத்துக்காரரு வரலையாங்கண்ணே?” – நான்காவது முறையாகக் கேட்டவனை முறைத்துப் பார்த்த விருமன்,

“அவரு உடம்பு சவுகரியமில்லாம கிடக்குறாரு டா! ரத்தக் கொதிப்பாமாம்! கூடவே காய்ச்சலும் சேர்ந்திக்கிடுச்சு! வருவேன்-ண்டு அடம்புடிச்சவரை நாங்கதேன் நிப்பாட்டிப்புட்டு வந்திருக்கோம்” – என்று கூசாமல் பொய் சொல்ல, அவனை நம்பாத பார்வை பார்த்தவனிடம்,

“அவரு வழியனுப்ப வரலண்டதும், நீ மொகரையை இப்பிடி வைச்சுக்குவண்டு தெரிஞ்சுதேன், அவரு கைப்பட உனக்குக் கடுதாசி எழுதி குடுத்திருக்காரு!” என்று ஆரன், சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினான்.

அதுவரைக் கூம்பியிருந்த அவன் முகம், நொடியில் மலர்ந்து விட, அவசரமாய்க் கடிதத்தைப் பிரித்துப் படித்தான் அழகர்.

Azhagar KaruppaSwamy, Soldier, Indian Army. – என ஆங்கிலத்தில் துவங்கியிருந்தக் கிழவரின் கையெழுத்தை வருடிக் கொடுத்தவனின் கண்கள் தன்னாலேயேக் குளம் கட்டி விட,

“பட்டாளத்தான் பயமறியாதவேன்! யாருக்கும் அஞ்சாதவேன்! எல்லைக்குள்ள அடங்காதவேன்! சுக,துக்கம் காணாதவேன்! புத்திசாலி! பொறுப்பாளி! போராளி!

நாஞ்சொன்ன அத்தனைக் குணத்தையும் மொத்தமா வாங்கி, முழு பட்டாளத்தானா நீ வளர்ந்து நிற்கையில, நீ யாரைக் கண்டுப் பயந்தியோ அவனெல்லாம் உங்கண்ணுக்கு, சுவத்துல ஊறுற பல்லியாத் தெரிவியான்! எவனைக் கண்டு ஓடி ஒளிஞ்சியோ, அவேன் காத்துல பறக்குறக் கொசுவாத் தெரிவியான்! ராணுவ உடுப்போட நீயி ராஜாவா நடந்து வாரையில, உம் பூட்சுக்கு அடியில, நசுங்கப் போற எலிகளை எட்ட நிண்டு வேடிக்கைப் பார்க்கப் போறத் தருணத்தை நான் ஆவலா எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன்! “ – எனக் குறிப்பிட்டிருந்தவர்,

“நீ செயிக்கப் பொஸ்றந்தவேன்ய்யா” – என முடித்திருந்தார்.

கடிதத்தை முடித்தவனின் இதழ்கள், பெரிதான சிரிப்பைத் தத்தெடுக்க, அவரது கையெழுத்தில் முகம் புதைத்துத் தேம்பியவனைக் கண்ட ஆரனும்,விருமனும் அந்தச் சின்னப்பயலின் செய்கையை கனிவான முகத்துடன் பார்த்தபடி, அவன் தோள் தட்டிக் கொடுத்தனர்.

“எலேய்! அழுகையை மிச்சம் வை டா! வேலை நிரந்தரமானதும், உங்காத்தாளைத் தேடி வந்துக் கட்டிப்புடிச்சு அழுகக் கண்ணீர் இல்லாம போயிரப் போகுது” – விருமன் கேலி செய்ததும் சிரித்தவன், மூக்கை உறிஞ்சியபடியே கடிதத்தைப் பார்த்து,

“அடுத்த சென்மம்ண்டு ஒன்னு இருந்தா, அவரு எனக்கு மவனாப் பொறக்கனும்ங்கண்ணே! அவரை உள்ளங்கைக்குள்ள பொத்தி வைச்சுப் பார்த்து என் நன்றிக்கடனை நான் தீர்க்கனும்” என்றவனிடம் புருவத்தைத் தூக்கிய ஆரன்,

“உள்ளங்கைக்குள்ள அடங்குறவனா டா கிழவன்?” – என்று கேலி செய்ய,

மூவரையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்த கலாமணியம்மாளைக் கண்டு,

“உனக்குக் கிழவன் நேர்ல வராதது குறையாத் தெரியுதுண்டா, கிழவனோட மறு உருவமா நிற்குற அந்தம்மாளைப் பார்த்து மனசைத் தேத்திக்க” என்றான் விருமன்.

அவனை மெலிதாக முறைத்து, அழகரின் தலை வருடிப் புன்னகைத்த கலாம்மாளிடம், “உம்மைக் காலைப் புடிச்சுத் தொட்டுக் கும்பிட ஆசையா இருக்கு! ஆனா, ஆசீர்வாதத்துக்காகக் கூட ,யார் காலையும் பிடிக்கக் கூடாதுண்டு பட்டாளத்துக்காரரு சொல்லியிருக்கிறாரு! அதனால” என்றவன், அவர் முகம் கண்டுக் கையெடுத்துக் கும்பிட, அதிர்வுடன் அவசரமாய் அவன் கையைப் பற்றிக் கீழிறக்கியவர்,

“என்னப்பு இதெல்லாம்?, இது என் கடமை! எம்பொறப்புக்கு அர்த்தம் குடுக்குறதே உன்னையப் போல ஆளுகதேன்! முதல்ல கண்ணைத் துடை! சிரிச்சுக்கிட்டு சந்தோசமாப் போ!” என்று கடிந்து கொள்ள, கண்களைத் துடைத்துக் கொண்டவன், தன் batchmates-களுடன் சேர்ந்து ரயிலில் ஏறிக் கொண்டான்.

பட்டாளத்துக்காரர் போராடிப் பாதுகாத்த சிங்கக்குட்டியொன்று தன் முதல் வேட்டையை நோக்கிப் பூரிப்பும்,மகிழ்ச்சியுமாய்க் கர்வத்துடன் வெற்றி நடை போட்டுச் செல்வதைப் பெருமையுடனும்,திருப்தியுடனும் பார்த்தபடி நின்றிருந்தனர் மூவரும்.

அவன் சென்றதும், தங்களது முகம் பார்த்தக் கலாம்மாளிடம்,

“நடந்த எதையும் அழகரு கிட்ட சொல்ல வேண்டாமுண்டு பெரியவரு கேட்டுக்கிட்டாரும்மா” என்றான் ஆரன்.

முகம் சுருங்கத் தலையாட்டியவர் “மணிவண்ணன் மேல போலீசு கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு” என்று கூற உதட்டைச் சுளித்த விருமன்,

“அந்தக் களவாணிப்பய போலீசுக்கெல்லாம் பயப்படுவியாண்டு நினைச்சீகளா?” என்று கேட்க,

“பெரியவர் எண்ணப்படிதேன் நடந்தாகனும்ப்பு! ஏற்கனவே ஒரு உசுரைத் தூக்கிக் குடுத்துப்புட்டு மனசொடிஞ்சு போய்க் கிடக்குறவரு, இனி ரொம்ப எச்சரிக்கையா இருக்கத்தேன் பார்ப்பாரு” என்றார் கலாம்மாள், கிழவரின் எண்ணத்தை யூகித்தபடி.

“நேர்ல் வழில நடக்குறவனுக்குத்தேன்ம்மா போலீசு,கோர்ட்டெல்லாம்! இந்த சல்லி நாயி, முன்னால நடக்க விட்டு, முதுகுல குத்துறத் **** பய” – என்று ஆரன் முணுமுணுக்க, மூவரது முகமும் அதுவரையிருந்த மகிழ்ச்சி மனநிலை மாறி துக்கத்தையும்,குரோதத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

ரவு வீடு வந்த பேராண்டிகளிருவரும் தாத்தனிடம் அழகரை வழியனுப்பி விட்டு வந்ததைப் பற்றிக் கூற, கீற்றாய் அவர் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.

“எவன் என்னா குள்ளநரித்தனம் பண்ணா என்னாடா?, யாரு முன்னேற்றத்தையும் யாராலயும் தடுக்க முடியாது” – என்ற கிழவர் தொடர்ந்து முகம் மாற,

“நீங்க ரெண்டு பேரும் நாளைக்கே உங்கப்பன் (ஆரனின் தந்தை) வீட்டுக்குக் கிளம்பிருங்கடா” என்றார்.

“ஏன்?, நாளைக்கு போலீசு விசாரணை இருக்குதாக்கும்?” – நக்கலாய் விருமன் கேட்டதும், பல்லைக் கடித்தக் கிழவர்,

“அது உனக்கு அநாவசியம்! நீ போய் பொட்டி,படுக்கையைக் கட்டுற வழியைப் பாரு” என்றார்.

“கட்டியாச்சு,கட்டியாச்சு” என்றபடியே வேட்டியை மடித்துக் கொண்டவன், “நாளைக்கு காலைல 3 மணிக்குக் கிளம்பிடுவோம் நாங்க” என்றான்.

“இங்கன இருக்குற வாடிப்பட்டிக்குப் போறதுக்கு என்னத்துக்குடா நடுராத்திரி கிளம்புறீங்க?”

“போகனும்ண்டு முடிவு பண்ணப்புறம் நடுராத்திரிண்டா என்ன, அதிகாலைண்டா என்ன?” – என்று விருமன் முணுமுணுக்க, அவனைச் சந்தேகமாய்ப் பார்த்தவரை அசராது எதிர் கொண்டவன்,

“என்னா தாத்தா?” என்றான்.

பெருமூச்சை வெளியிட்டு ஒன்றுமில்லையெனத் தலையாட்டியவர், இருவரிடமும் “என்னமோ செய்ங்கடா” என்று சலிப்பாய்க் கூறி விட்டு நகர, தோளைக் குலுக்கினான் விருமன்.

றுநாள் அதிகாலை 3 மணிக்குக் கையில் பையுடன் இருவரும் புறப்பட்டனர் வாடிப்பட்டியை நோக்கி!

“உங்கப்பன் வந்து கூட்டிப் போறேன்-ண்டு சொன்னயான்?, நான் அவனைப் பார்க்க வர்றேன்” – என்று கிளம்பிய கிழவரைத் தடுத்த விருமன்,

“அதேன் கருப்பன் செத்தன்னைக்கு சுடுகாட்டுல வைச்சுப் பார்த்தீகளே?, இன்னைக்கு வேற என்னத்துக்கு?, ரத்தக்கொதிப்பு மறுபடி அதிகமாகிடப் போகுது! பேசாம போய் படுத்துத் தூங்குங்க! இந்நேரம் ஊர் எல்லைல வண்டியோட சித்தப்பு காத்துக்கிட்டிருப்பாரு! நாங்க பார்த்து, ஏறிப் போய்க்கிடுவோம்” – எனக் கூற, சரியெனத் தலையாட்டியவர், இருவரது தோளையும் பற்றித் தடவி,

“பார்த்துப் போய்ட்டு வாங்கடா பயலுகளா!, எந்த வம்புலயும் சிக்காதீங்கடா” எனக் கூறினார்.

“நாங்க ஊருக்கு வந்தன்னைக்கு, இனி எங்கயும் போகக் கூடாதுடாண்டு சண்டை போட்ட, இன்னைக்கு நீயே எங்களைத் தொரத்தி விட்ற?” – ஆரன் கேட்டதும்,

“சூழ்நிலை சரியாகட்டும்! அதுவரை அங்க இருங்க” என்றவரிடம்,

“நீயும் உன்னையப் பார்த்துக்க பெருசேய்! புதுசா ரத்தக்கொதிப்பையெல்லாம் இழுத்துட்டு வந்துருக்க” என்று விருமன் கூற, முகத்தைச் சுழித்தவர், மீசையை நீவியபடி,

“எனக்கென்ன டா! நான் பட்டாளத்தான்! சந்தோசமோ,துக்கமோ, எல்லாம் 4 நாளைக்குத்தேன்! அஞ்சாவது நாளு, காலத்தோட போராட களத்துல இறங்கிருவேன்!” – என்று கூற,

“அந்தத் தகிரியத்துலதேன் நாங்க கிளம்புறோம்” என்ற இருவரும், சிலம்பனிடம், கிழவருடனே இருக்கும்படிக் கண்ணைக் காட்டி விட்டு, வீட்டுப் பெண்களிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர்.

ர் எல்லையில் ஆரனின் தந்தை வீரபாண்டி காருடன் காத்திருக்க, ஏறிக் கொண்டனர் இருவரும்.

“என்னாங்கடா ரெண்டு பேர் மொகரையும் என்னண்டோண்டு இருக்கு?” – வீரபாண்டி கேட்டதும்,

“ம்ம்ம், அரைத் தூக்கத்துல கிளம்பி வந்தா, அப்பிடித்தேன் இருக்கும்” என்றான் ஆரன்.

“அப்பிடி என்னத்துக்கு டா களவாணிப்பய மாறி நடுராத்திரி கிளம்பனும்?, விடிஞ்ச பிறகு வாறதுக்கென்ன?”

“எல்லாம் காரணமாத்தேன் சித்தப்பு” – விருமன்.

“என்னாடா சொல்றீங்க?”

“அப்பிடியே வலது பக்கம் வண்டியை நிறுத்துங்க”- ஆரன்.

“என்னத்துக்கு டா?” – வீரபாண்டி.

“ஒரு சின்ன வேலை பாக்கியிருக்கு! முடிச்சுப்புட்டு வந்துர்றோம்” – விருமன் கூறியதும், வெளியே பார்த்த வீரபாண்டி,

“இது அந்த மணிவண்ணன்பய தோட்டமாச்சே டா! இங்கன என்னாடா பண்ணப் போறீங்க?” – என்று அவசரமாய்க் கேட்க,

“ப்ச், சும்மா பதறாத சித்தப்பு” – என்று அசட்டையாய்க் கூறினான் விருமன்.

“எலேய்! ஆகாத வேலை பார்க்காதீங்க டா!, உங்களைப் பத்திரமா கூட்டிக்கிட்டு வீடு போய்ச் சேராட்டிக் கிழவன் எங்காதை அறுத்துவாரு” – புலம்பியவரிடம்,

“ப்ச், சும்மா நசநசங்காதப்பா! அரை மணி நேரத்துல வந்துருவோம்! யார் கண்ணுக்கும் படாத மாறி, வண்டியை ஓரமா நிறுத்திப்புட்டு, உள்ளயே உட்கார்ந்துரு” – என்ற ஆரன், அவரது பதிலுக்குக் காத்திராமல் தன் பங்காளியுடன் தோப்புக்குள் ஓடி விட்டான்.

செழித்து வளர்ந்திருந்தச் செடிகளின் ஊடே, அந்தக் கோர இருளைக் கிழித்துக் கொண்டுத் தடதடவென ஓடிக் கொண்டிருந்தனர் பங்காளிருவரும்.

தோட்டத்தின் மூலையில், தன் அகண்ட வாயைத் திறந்து கிடந்த ராட்சதக் கிணற்றொன்றினருகே நெருங்கிய இருவரும், ஓட்டத்தை நிறுத்தி விட்டு, அங்கிருந்த மோட்டார் அறையின் முன்னே நின்றனர்.

“சாவியைக் குட்றா பங்காளி” – ஆரன் கேட்டதும், விருமன் தன் சட்டைப்பையிலிருந்து, முதல் நாள் அரும்பாடு பட்ட அளவெடுத்துச் செய்த அந்த அறையின் போலிச் சாவியை எடுத்து நீட்டினான்.

அவசரமாய்ச் சாவியைத் துளையிலிட்டு மெல்ல அறையைத் திறந்த ஆரன் உள்ளே நுழைய, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, சகோதரனைத் தொடர்ந்து உள்ளே சென்றான் விருமன்.

இருள் அப்பிக் கிடந்த அறைக்குள் பரபரவென அலைந்த கருமணிகளுடன், நின்ற இருவரில், ஆரன் தன் சட்டைப் பையிலிருந்த சிறிய டார்ச் ஒன்றை உயிர்ப்பித்து, அந்த அறை நடுவிலிருந்த எலக்ட்ரிக் மோட்டாரைக் கண் காட்ட, விருமன் விரைந்து சென்று அதனருகே அமர்ந்தான்.

வலது பக்க வேட்டியைத் தூக்கி, டவுசருக்குள் மறைத்து வைத்திருந்த சில,பல கருவிகளைக் கையில் எடுத்தவன், அடுத்த சில நிமிடங்களில் மோட்டாரை பிரித்துப் போட்டான்.

டார்ச்சைப் பிடித்துக் கொண்டு அவனுக்கு வெளிச்சம் காட்டியபடி அருகே நின்றிருந்த ஆரனின் கண்கள் அவ்வப்போது, எதிரிலிருந்த ஜன்னல் வழி இருட்டைப் பார்த்துக் கொண்டது.

மொத்தமாக மோட்டாரைப் பிரித்து வைத்திருந்தவன், கலர்,கலராய் உள்ளிருந்த வயர்களைக் கையில் பிடித்துக் கொண்டு, புருவத்தைத் தூக்கியபடி வியர்த்த நெற்றியை மெல்லச் சொரிந்தான்.

“என்னாடா பங்காளி, நெத்தியை சொரிஞ்சுட்டுக் கிடக்க?, சட்டுபுட்டுண்டு வேலையை முடி டா” – ஆரன் அவசரப்படுத்தியதும் நிமிர்ந்தவன்,

“மஞ்ச வயரா, செவப்பு வயரா டா பங்காளி?” – எனக் கேட்டான்.

புருவம் சுருக்கி, உதட்டைக் கடித்து யோசித்த ஆரன்,

“ரெண்டும் வேணாம்! அந்த நீலக்கலர் வயரை நறுக்கி விட்ரு” – எனக் கூறவும், மூக்கை விடைத்து முறைத்த விருமன்,

“நகைச்சுவை பண்றீங்களா பங்காளி?” எனக் கேட்டான்.

“நானா நீயா?, எங்கன உட்கார்ந்து என்னா வேலை பார்த்துட்டிருக்கோம்! எந்த வயரை நறுக்குறதுண்டு என்னையக் கேக்குற டா வெண்ண?”

“நீயும் தான டா வெளக்கெண்ண,நான் படிச்சப் படிப்பை படிச்ச?”

“ப்ச், குத்துமதிப்பா ஒரு வயரை நறுக்கு டா” – ஆரன் எரிச்சலுடன் அவசரப்படுத்தியதும்,

“விளங்கிரும்” என்ற பெண் குரல் கேட்க, திடுக்கிட்டு இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி வாசலை நோக்கினர்.

இருளில் தெரிந்த வடிவத்தின் மீது ஆரன், அவசரமாய் டார்ச் அடிக்க, இருவரையும் முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் அகலருவி.

அத்தை மகளைக் கண்டதும் பட்டென எழுந்த விருமன், “நீ எப்ப டி வந்த?” என வியப்புடன் கேட்க,

“ம்ம், மஞ்சளு,செவப்புண்டு நீங்க வண்ணங்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கிறப்பதேன்” என்றபடி வேகமாய் மோட்டாரின் அருகே வந்து நின்றாள்.

அவளது செய்கையை எரிச்சலுடன் பார்த்திருந்த ஆரன், “நீ என்னத்துக்குடி இங்க வந்த?, எவன் கண்ணுலயும் மாட்டித் தொலைச்சா, குடும்பமா எல்லாரும் பஞ்சாயத்துல நிக்க வேண்டிதேன்” என்று பல்லைக் கடிக்க,

“நிப்போம்! அதனால என்ன இப்ப?” என்றவள் விருமனிடம் “செகப்பு வயரை நறுக்கி விடு” எனக் கூற,

“ஏன் டி படிச்ச எங்களுக்கே எந்த வயருண்டு தெரியல! நீ எப்பிட்றி பார்த்ததும் சொல்ற?” எனக்கேட்டபடி வயரை நறுக்கிய விருமனிடம், அவள் புருவத்தை நெளித்து, உதட்டைச் சுழிக்க,

அவளை நம்பாது பார்த்த ஆரன், “எலேய்! இவளை நம்பி, யோசிக்காம நறுக்கிப்புட்டியேடா!, இன்னிக்குச் சம்பவம் மட்டும் சொதப்புச்சுண்டா, ரெண்டு பேரையும் கயித்தைக் கட்டிக் கிணத்துல இறக்கிருவேன் டா” என்று மிரட்ட,

“ப்ச், இதுக்கு முன்னாடி நம்ம தோட்டத்து மோட்டார் ரூம்ல தீப் பிடிச்சப்ப, இந்த வயரு அறுந்ததுதேன் காரணம்ண்டு, மோட்டாரை செம்ம பண்ண வந்தவேன் சொல்லி நாங்கேட்ருக்கேன்! எல்லாம் எங்களுக்குத் தெரியும்! நேரத்தை விரயம் பண்ணாம, சட்டுபுட்டுண்டு, மோட்டாரைப் பழையபடி மாட்டி வைங்க” என்று அவள் அதட்டியதும்,

ஆரன் உதட்டைப் பிதுக்க, பற்கள் தெரிய சிரித்த விருமன்,

“என் அயித்த மகளா, கொக்கா! எம்பூட்டு அறிவா பேசுறா பார்த்தியா பங்காளி” – என்றபடியேக் கடகடவென பிரித்த மோட்டார் பாகங்களை இணைத்துப் பழைய நிலைக்கு மாற்றி வைத்தான்.

வந்த வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்த மூவரும், அறையைப் பூட்டி விட்டு, பின்புறமிருந்த ஜன்னலருகே மறைந்து நின்றனர்.

“இன்னும் என்னத்துக்கு டா இங்கன நின்னுக்கிட்டு?” – கிசுகிசுத்த ஆரனிடம் அகல்,

“மோட்டாரு தீ பிடிக்குதா இல்லையாண்டு தெரிய வேணாமா?”

“தீ பிடிக்கலண்டா?” – விருமன்

“அந்தத் ***** மவன் சங்கறுத்துப்புட்டுத் தடம் தெரியாம நழுவ வேண்டிதேன்!” – அசால்ட்டாய்க் கூறிய அகலைக் கண்டு ஆரன் தலையில் அடித்துக் கொள்ள, விருமன் அகலமாய்ச் சிரித்து வைத்தான்.

“சிக்குனா சின்னாபின்னாமாய்ருவோம்! அது புரியாம, சிரிச்சுட்டுக் கிடக்குக ரெண்டும்?” – ஆரன் எரிச்சலைக் காட்டியதும்,

“சிக்க மாட்டோம்டா பங்காளி! பதறாத!” என்ற விருமனை முறைத்து,

“ஏய் கருவாக் குந்தாணி! சம்பவம் நடக்குதா,இல்லையாண்டு, நாங்க பார்த்துத் தெரிஞ்சுக்கிடுறோம்! நீ வந்த வழி கிளம்புற வழியைப் பாரு” – என்று மிரட்டினான் ஆரன்.

“ம்ம்ம்ம்ம்ம்??, பார்றா! வந்த வழி திரும்பிப் போகத்தேன், நேத்துல இருந்து உங்க ரெண்டு பேர் பின்னாடியும், நாயா திரிஞ்சுட்டுக் கிடக்கேனாக்கும்?”

“பின்னாடி வந்தியா?” – வியப்பாய் விருமன்.

“ஆமா! வெசம் வைக்கத் தூண்டுனவன் கையை, வெட்டி போட சித்தம் பண்ணாம, வெறும் வாயை மெண்டுக்கிட்டு, வெட்டியா சுத்தி வர நீங்க என்ன கோழைகளா?, பட்டாளத்தான் பேரன்ய்ங்க! எப்பிடியும் அந்தக் களவாணிப் பயலை சும்மா விட மாட்டீகண்டு நல்லாத் தெரியும்! அதேன் பின்னால வந்தேன்! ஆனா, வந்தப்புறம்தேன் தெரிஞ்சது, உங்களுக்குக் கை,கால் வேலை செய்ற அளவுக்கு மூளை வேலை செய்யாதுண்டு” – நக்கலாய் முடித்தவளை முறைத்த விருமன்,

“ஏய்ய் என்னா டி?” என்று எகிற,

“பின்ன?, மோட்டாரைப் பிரிச்சுப் பரப்பி வைச்சுக்கிட்டு மஞ்சள்,சிகப்பு,நீலம்ண்டு சின்னப் பிள்ளைக மாறி, விளையாடிக்கிட்டுக் கிடக்கீக?” – என்று அவள் பதிலுக்கு எகிறியதும், பிடரியைக் கோதிக் கொண்ட விருமன்,

“பங்காளி! ஒத்த வயர்ல நம்ம மொத்த மானமும் போயிருச்சு டா” என்று பொறுமிக் கொண்டான்.

“ஒரு கம்பியை நறுக்கத் துப்பில்ல, இவிங்கள்லாம் பட்டணத்துக்குப் போய்ப் பட்டப்படிப்புப் படிச்சாய்ங்களாம்!” – நொடித்துக் கொண்டவளின் தலையில் ஆரன், நறுக்கெனக் குட்டி வைக்க, கத்தக் கூட முடியாமல், வாயை இறுகப் பொத்திக் கொண்டவள் ஆரனை முறைத்த சமயம், விழிகளைக் கூர்மையாக்கி அவன் ஜன்னல் வழியே அறை வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆரனைத் தொடர்ந்து, உள்ளே பார்த்த விருமனும், வாயில் கை வைத்து “உஷ்” என்றபடி முழு அமைதியுடன் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

அந்த அதிகாலை வேலையில், வழக்கம் போல் தண்ணீர் பாய்ச்சுவதற்காகத் தன் புல்லட் வண்டியில் தோட்டத்திற்கு வந்திறங்கினான் மணிவண்ணன்.

வண்டியை விட்டிறங்கி, இருண்டிருந்த வானத்தை அண்ணாந்து ஒரு முறை பார்த்தவன் பின், அணிந்திருந்த வேஷ்டியை சரி செய்து கொண்டு, ஏதோ பாட்டை முணுமுணுத்தபடிக் கையிலிருந்த சாவியால் மோட்டார் அறையைத் திறந்தான்.

விளக்கு ஸ்விட்சைத் தட்டி விட்டு, பத்து நிமிடம் அறைக்குள் எதையோ உருட்டிக் கொண்டிருந்தவனை, கண் சிமிட்டாது பார்த்தபடி, இருளோடு இருளாய் அறை ஜன்னலருகேப் பதுங்கியிருந்தனர் மூவரும்.

தோட்டத்தில் பரவியிருந்தக் குளிர் காற்றை மீறி மூவருக்கும் வியர்த்து வடிந்திருக்க, மூச்சு விடக் கூட மறந்து, மும்மரமாய் உள்ளே பார்த்திருந்தனர்.

ஒரு வழியாக, உருட்டிக் கொண்டிருந்த வேலையை முடித்திருந்த மணிவண்ணன், மோட்டாரை இயக்குவதற்காக அதனருகே சென்றான்.

அதிவேகத்தில் துடித்த இதயத்துடன், ஆடாது,அசையாது நின்றிருந்த மூவரும், அடுத்த நொடி நடக்கப்போகும் சம்பவத்திற்காக ஆர்வமாய்க் காத்திருக்க,

அவர்களது காத்திருப்புக்குப் பயனளிக்கும் பொருட்டு, மோட்டாரைத் தொட்டு இயக்கிய மணிவண்ணனின் வலது கரம், அடுத்த நொடி, பலத்த சத்தத்துடன் வெடித்த மோட்டார் கக்கிய நெருப்பில், விரல்கள் கருகி, கை முட்டி வரை சிதைந்து, அனிச்சையாய் முகம் திருப்பிக் கொண்டதால், கழுத்தும், மார்பும் வெந்து, பெருத்த அலறலுடன் பத்தடித் தூரப் போய் விழுந்திருந்தான்.

திட்டமிட்டபடி மோட்டார் வெடித்ததும், அனிச்சையாய்க் கீழே குனிந்த மூவரும், அவசரமாய் நிமிர்ந்து நோக்குகையில், மோட்டார் முழுதும் எரிந்து, அறை முழுக்கப் புகை சூழ்ந்திருக்க, உடல் முழுதும் ரத்தக் கறையுடன், வெந்தும்,வெந்திராத சதைகளோடு, “ஆஆஆ,ஆஆஆ’-வென மரண வலியில் அரற்றியபடி அறையின் ஒரு மூலையில், அரை மயக்க நிலையில் அநாதையாய்க் கிடந்தான் மணிவண்ணன்.

மணிவண்ணனின் மரணக் குரல் கேட்டு, அருகருகே இருந்தத் தோட்டத்து வாசிகள், அவசரமாய் ஓடி வர, மோட்டார் அறையிலிருந்து நெருப்பு வருவதைக் கண்டு கத்திக் கூவிய ஆட்களின் குரலுக்கு, அவசர,அவசரமாய்க் கூட்டம் கூடியது.

அரை மயக்க நிலையில் கிடந்த மணிவண்ணனை, அவனது கைக்கூலிகள் சிலர், தோள் பற்றித் தூக்கியதும், கண்ணீர் விழிகளோடு மெல்ல இமை திறந்த மணிவண்ணன்,கண்டது,

ஜன்னலுக்கு வெளியே அப்பிக் கிடந்த இருளின் நடுவில், எரிந்து கொண்டிருந்த நெருப்பு ஜ்வாலையினூடே, அக்னிப் பிழம்பாய்த் தகதகத்த முகங்களோடு, ஆவேசமாய் நின்றிருந்த பட்டாளத்தானின் வளர்ப்புகளைத் தான்.

“**** கழுவுற கையில சோத்தை அள்ளித் திங்குற ஒவ்வொரு நிமிசமும், நீயி நினைக்கனும் டா! துடிச்சு செத்த அந்த வாயில்லா ஜீவனை!” – கண் முன்னே ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்தவனின் கதறல் தாங்காது, பொங்கிச் சிவந்திருந்த விழிகளோடு தன் இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டான் விருமன்.

கண் கண்ட காட்சி, உள் மனதை உலுக்கிப் போட்டிருக்க, அவனை வெறித்து நின்ற அகலருவியின் மனதுக்குள், அவன் உடல் பலத்தோடுப் போராடிய நிமிடங்களும், அவனது சாதிவெறிக்கு இரையாகி, ஊரார் முன் நடுக்கத்துடன்,தலை தாழ்ந்து அழகரின் அன்னை நின்ற நொடிகளும், கடைசியாய் நெத்திப் பொட்டோடுக் கட்டுத்தரையருகே சாத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பனின் உடலும் ஊர்வலமாய்ப் போக… தலைக்கேறிய ஆத்திரம் கொடுத்தத் திணறலில், மூச்சு வாங்க நின்றவளின் விழிகள் “பட்டாளத்தானையும்,பட்டாளத்தான் வளர்ப்பையும் உன்னால என்னைக்குமே செயிக்க முடியாது டா” – என்ற தன் உள் மனதின் எண்ணத்தைப் பிரதிபலிக்க,

பற்றி எரியும் தீயின் ருத்ரதாண்டவத்திற்கு நடுவே, ஆங்காரமாய்ப் பளபளத்த அவளது விழி மொழியை, அரை மயக்கத்தில் கண்டு கொண்ட மணிவண்ணனின் இதழ்கள், “அ….அ…அவளை வி…வி…விடாதீக! அவ..அவளை விடாதீக” என்று இழுத்துக் கொண்ட மூச்சின் நடுவே உச்சரிக்க,

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட ஆரனும்,விருமனும் மறு நொடி அகலருவியை இழுத்துக் கொண்டு தோட்டத்தின் பின்னிருந்த மாந்தோப்பு வழி ஓடி மறைந்தனர்.

மணிவண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வண்டி வந்திருக்க, திரும்பத் திரும்ப ஜன்னல் வழி கை காட்டி விட்டு மயக்கத்திற்குச் சென்று விட்டவனைக் கண்டு, அவனது கைக்கூலிகள் ஓடிச் சென்று தோட்டத்தைச் சுற்றிலும் நோட்டம் விடத் தொடங்கினர்.

“அண்ணேன் கை காட்டுறதைப் பார்த்தா, யாரோ இங்கன வந்து போயிருக்காய்ங்க போல டா” – என்ற சிலர், ஜன்னலருகே மண்ணில் தெரிந்த கால் தடங்களைக் கண்டு விட்டு,

“டேய், சீக்கிரம் அண்ணனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போங்க டா” என்று பணித்து விட்டு, கால்தடங்களைத் தொடர்ந்து தோப்புக்குள் ஓடினர்.

தடதடக்கும் இதயத்துடன் திடுதிடுவென ஓடிய ஆரனும்,விருமனும், முன்னே உருண்டு கொண்டிருந்த அகலருவியைக் கண்டுப் பல்லைக் கடித்தபடி,

“அடியேய் கருவாக்குந்தாணி! இந்த வேகத்துல ஓடுனா, அவிங்க உன் காலைப் புடிச்சு இழுத்துக் கொண்டு போய், கிணத்துல போட்டு அமுக்கிருவாய்ங்கடி” – ஆரன் விரட்டியதும், தம் பிடித்துக் கொண்டு அவள் தொடர்ந்து ஓட,

ஓட்டத்தைத் தொடர்ந்தபடியே வாய் விட்டு சிரித்த விருமன்,

“வேகமா ஓட்றாளாமா பங்காளி! நல்லாத் திண்டு கொழுத்தப் பெருச்சாளி மாறி இருந்துக்கிட்டு, ஓட மாட்டாம, உருண்டுக்கிட்டுத் திரியுறா! கருவாச் சிறுக்கி” என்று கேலி செய்ய,

நின்று அவனைக் கிழித்துக் கூறு போட மனம் விரும்பினாலும் அடக்கி, முழு வேகத்தில் ஓடினாள் அகலருவி.

“வாயை மூட்றா வெண்ண! உசுரைக் கைல புடிச்சுக்கிட்டு ஓடிட்டிருக்கோம்! பல்லைக் காட்டிட்டிருக்கியான் மயிராண்டி” – என்று விருமனைத் திட்டிய ஆரன், திசையறியாது பரபரவென ஓடியவளின் ஜடையை எட்டிப் பிடித்து,

“இடது பக்கம், இடது பக்கம் டி” – என்று திருப்பி விட, தடதடவென ஓடியவளைக் கண்டு, அடக்க முடியாது சிரித்தபடி இருவரும் காரருகே வந்து நின்றனர்.

அதுவரை இருவரும் சென்ற திசையை பார்த்தபடி, காருக்குள் அமர்ந்திருந்த வீரபாண்டியன், மூவராகத் திரும்பி வருபவர்களைக் கண்டு,

“நீயி என்னா கழுத இவிங்களோட வார?” – என்று குழப்பமாய்க் கேட்டுக் கொண்டிருக்கையில், அவசரமாய்க் காருக்குள் ஏறிய மூவரும்,

“வண்டியை எடுங்க, வண்டியை எடுங்க” என்று அவசரப்படுத்த,

அனிச்சையாய் வண்டியை ஸ்டார்ட் செய்த வீரபாண்டியன், முழு வேகத்தில் செலுத்த, அவர்கள் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மண்டிக் கிடந்த முடக்கறுத்தான் இலைகள், வாகனத்தின் சக்கரத்தை அலங்கரித்தது.

ஊரைத் தாண்டி சில,பல கிலோ மீட்டர்களைக் கடந்து வந்ததும், ஆசுவாசமாக மூச்சு விட்டபடி இருக்கையில் சாய்ந்தமர்ந்தனர் ஆரனும்,விருமனும்.

“என்னாடா செஞ்சு வைச்சிருக்கீங்க?” – என்று அதட்டிய தந்தையைக் கண்டு கொள்ளாது ஆரன், மற்ற இருவரிடமும்,

“அவேன் பார்த்துட்டியான்” என்றான்.

“இப்ப என்னா செய்றது?” – கேட்ட அகலருவியிடம்,

“ஒன்னும் பண்ண வேணாம்! எல்லாம் கிழவன் பார்த்துப்பாரு!” என்று கூறியபடிக் கண்களை மூடிக் கொண்டான் விருமன்.

“அப்போ நான் எப்பிடி வீட்டுக்குப் போறது” – எரிச்சலாய் அவள் கேட்க,

“வீட்டுக்கெல்லாம் போக முடியாது! அவேன் உன்னையப் பார்த்துட்டியான்! அதனால,கொஞ்ச நாளைக்குத் தலைமறைவாத்தேன் இருக்கனும்” – என்ற ஆரனைத் தொடர்ந்து விருமன், பட்டென விழிகளைத் திறந்து,

“பங்காளி! பேசாம குந்தாணியையும் டெல்லிக்குக் கிளப்பு டா” என்றான்.

அவன் கேள்வியில் “அப்பிடிங்குறியா?” எனக் கேட்டுச் சிரித்த ஆரன், இருவருக்கும் நடுவே அமர்ந்திருந்தவளின் தலையில் குட்டி,

“வடநாட்டுக்கு வர்றியாடி?” எனக் கேட்க,

“வட நாடா?” என்று வாயைப் பிளந்தவளின் முகத்தைக் கண்ணாடியில் பார்த்த வீரபாண்டி,

“பொட்டப்புள்ளையை எங்குட்றா இழுத்துட்டுப் போறீங்க?, எலேய்! தலைமறைவாகுற அளவுக்கு என்னாடா செஞ்சிட்டு வந்திருக்கீங்க?” – என்று கேட்க,

அசட்டையாகப் பிடரியைக் கோதி, அவரது கேள்வியை நிராகரித்த விருமன், “இன்னைக்கு மதியம் 1 மணிக்கு நாங்க டெல்லிக்கு ட்ரைன் ஏறுறோம்” என அறிவிப்பாய்க் கூறினான்.

“என்னாடா சொல்றீங்க?” – அதிர்ச்சியாய்க் கேட்டவரைக் கண்டு ஆரன்,

“என்னாடா இவரு?, என்னா சொன்னாலும் அதிர்ச்சியாகுறாரு” என்றவன்,

“எங்க ரெண்டு பேருக்கும் BHEL-ல வேலை கிடைச்சிருக்கு! அடுத்த வாரம் புதன் கிழமை ஜாயின் பண்றோம்” என்று முடித்தான்.

அவன் கூறியதைக் கேட்டுப் புருவத்தை உயர்த்தி, உதட்டைப் பிதுக்கிய அகலருவி,

அடுத்தடுத்த இருவரும் கொடுத்த அதிர்ச்சிகளால் வாயடைத்துப் போயிருந்த வீரபாண்டியனின் தோளைச் சுரண்டி,

“ஏன் மாமா, bhel-ண்டா, ரொம்பப் பெரிய உத்தியோகமோ?” என விசாரிக்க, கடுப்பாய் அவளை முறைத்தவரைக் கண்டு வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டான் ஆரன்.

தற்குள், மோட்டார் அறைக்குள் மணிவண்ணனுக்கு நடந்த சம்பவம் ஊர் முழுதும் பரவியிருக்க, விசயம் கேள்விப்பட்டப் பெரியவர், பேராண்டிகளையும்,பேத்தியையும் எண்ணிப் பல்லைக் கடித்த சமயம், விடியத் துவங்கியிருந்த அந்தக் காலை நேரத்தில், அவரது வீட்டுக்குள் கத்தி,கம்புடன் கூட்டமாய் நுழைந்தான் மணிவண்ணனின் பங்காளியும், வள்ளியின் (அகலருவியின் அக்கா) கணவனுமான மாரிமுத்து.

தடதடவென வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்த ஆட்களைக் கண்டு, வீட்டினர் அனைவரும் முற்றத்தில் கூட, அத்தனைக் கூட்டத்தைக் கண்டும் கொஞ்சமும் அசராமல், நின்ற கிழவரின் அருகே, ஓட்டுக்குள் செருகி வைத்திருந்த அருவாளைக் கையில் உருவிக் கொண்டு, பாதுகாப்பாய் நின்றான் சிலம்பன்.

சிலம்பனின் செய்கை சிரிப்பை வரவழைக்க, “அதை என்னத்துக்கு டா உருவுறவேன்?” எனத் திட்டிய கிழவர் முன்னே நின்றிருந்த மாரிமுத்துவிடம்,

“வாங்க மாப்ள” என்றார்.

பெரியவரின் வரவேற்பைக் கிடப்பில் போட்ட மாரிமுத்து, “பட்டாளத்துக்காரரே! உம்மை வரவேற்பை ஏத்துக்கிட்டு, வாய் நிறைய இளிக்க, நான் ஒன்னும் உம்ம வீட்டு விருந்துக்கு வரல!” என்று எகிறி விட்டுப் பின் “எங்க உம்ம பேராண்டிக?, மோட்டார் ரூம்ல முரட்டு சம்பவம் பண்ணிப்புட்டத் திமிருல, இழுத்து மூடிட்டுத் தூங்கிட்டிருக்காய்ங்களா?” என்று கத்த,

கைகளைப் பின்னே கட்டிக் கொண்டக் கிழவர், நக்கலாய்ச் சிரித்தபடி “இது நல்லாயிருக்கே! அந்தக் களவாணி நாயி, குடி போதைலத் தடுமாறி கரண்டுல கைய விட்டதுக்கெல்லாம், ஊர்லயே இல்லாத எம்பேராண்டிக மேல பழியைப் போடுவீகளோ?” என்றவர் தொடர்ந்து, “இந்தாரு மாரி!, ஏற்கனவே கருப்பன் விசயத்துல நான் உம்பங்காளி மேல கொலைவெறில இருக்கேன்! தேவையில்லாம, அவேன் எம்பேராண்டிகளோட ஒரண்டை இழுத்தியாண்டு வை,அப்புறம் நான் சும்மாயிருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்” என்று மிரட்டியதும்,

வேட்டியை மடித்துக் கட்டியவன், “மாட்டுக்கு வெசம் வைச்சது எம்பங்காளிதேன்றதுக்கு என்னாய்யா சாட்சி?” எனக் கேட்க,

“நான்தேன் டா சாட்சி!” என்று வந்து நின்றார் சங்கிலியன்.

கையும்,தலையும் கட்டுப் போடப்பட்டிருக்க, வலது காலை இழுத்தபடி நடந்து வந்தவர்,

“என்னைக்குமில்லாம, அந்தக் கொல்லங்குளத்துக்காரன் கட்டுத்தரைக் கிட்ட நிண்டு, குசலம் விசாரிச்சப்பவே நான் சுதாரிச்சிருக்கனும் டா! ****** நாய்களா!, யார் வீட்ல வந்து நிண்டு, யாரை டா மிரட்டுறீங்க?” – என்று குரல் கொடுக்க, வாயைப் பிளந்த சிலம்பன், அருகிலிருந்தக் கிழவரை நோக்கினான்.

ஒரு நொடி அவரை வியந்து பார்த்தக் கிழவர், பின் கர்வமாய் மீசையை நீவிக் கொள்ள, ‘அதுசரி’ எனத் தலையாட்டிக் கொண்டவன், வராத கண்ணீரைத் துடைத்தபடி தூர நின்றிருந்த சோலையாத்தாளையும்,வீரலட்சுமியும் கண்டு, மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.

இவர்களது குடும்ப நாடகத்தைக் கண்டுக் கடுப்பான மாரி முத்து, “என்னாய்யா போன வாரம் வரை எம்பங்காளி தோள்ல தொங்கிட்டுத் திரிஞ்சவன், இன்னைக்கு உம்மாமன் கூட கூட்டு சேர்ந்துட்ட?,” எனக் கேலி பேசி, பின் “அப்பிடித்தேன்ய்யா மிரட்டுவேன்?, என்னா பண்ணிருவ?” எனக் கேட்க, மெலிதாய்ப் புன்னகைத்தக் கிழவர்,

அலட்டிக் கொள்ளாமல் “எந்தோட்ட வீட்ல இருக்குற ட்ரங்க்கு பொட்டிகளைத் தூசி தட்டிருவேன்” என்றார்.

நொடியில் முகம் கூம்பிப் போக, வார்த்தைகளற்றுப் பல்லைக் கடித்து நின்ற மாரியிடம்,

“நான் ட்ரங்க்கு பொட்டியை தொறந்தா, என்னாகும்ண்டு தெரியும்ல?, நாங்களும் சொத்துக்காரய்ங்கண்டு பீத்திக்கிட்டுத் திரியுற நீயும்,உம்பங்காளியும் ஓட்டாண்டிகளாத் தெருவுல நிக்க வேண்டிய நிலைமை வந்துரும்! சொந்தக்காரய்ங்கதேன, பரவால்ல, தின்னுட்டுப் போகட்டும்ண்டு நான் பொறுமையாப் போனா, என் வீட்டு வாசலுக்கு அருவாளைத் தூக்கிட்டு வருவியோ! தலையை வெட்டித் தகரத்துல மேல எறிஞ்சுபுடுவேன் சொல்லிப்புட்டேன்! ஓடுங்க டா வெளிய” – என்று கிழவர் அதட்டியதும்,

பதில் பேச முடியாது, கையிலிருந்தக் கம்பை இறுக்கிப் பிடித்தவன், “என்னைய மிரட்டி விரட்டிருவீக! ஆனா ஆஸ்பத்திரில படுத்துக்கிடக்குறவன், குணமாகி எந்திரிச்சு வந்தா, உம்மையும்,உம்ம பேரனுங்களையும் சும்மா விட மாட்டியான்” என்று கூற அசட்டையாய்த் தோளைக் குலுக்கிய கிழவர்,

“இந்தாருங்க மாப்ள! உம்ம பங்காளி ஒன்னும் யோக்கியன் கிடையாது! அவனுக்கு ஏத்துக்கிட்டுக் கத்தியைத் தூக்கி, நீங்க எந்த வம்புலயும் மாட்டிக்காதீக! புள்ளக்குட்டிக்காரரு நீங்க! சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லண்டு நம்புறேன்” என்று மிரட்டி அனுப்பியதும், விடைத்த மூக்குடனே வெளியேறினான் அவன்.

இங்கிருந்து செல்லும் கூட்டம், வீரபாண்டியின் வீட்டை முற்றுகையிட வாய்ப்புள்ளதால், அவசரமாய் அவரைத் தொடர்பு கொள்கையில்,

மணிவண்ணனின் ஆட்கள் தனது வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டு சுற்றுவதாகச் சொன்ன வீரபாண்டி, பேராண்டிகளையும்,பேத்தியையும் பற்றி விசாரித்தவரிடம், “அவிங்க எங்க இங்க வந்தாய்ங்க! மதுரைல இறக்கி விடச் சொன்னவிங்க, நான் எம்புட்டுச் சொல்லியும் கேட்காம, புள்ளையைக் கூட்டிக்கிட்டு எங்கயோ போய்ட்டாய்ங்க! டெல்லி bhel-ல வேலை கிடைச்சிருக்கிறதாகவும், அடுத்தவாரம் புதன் கிழமை சேரப் போறதாகவும் சொன்னாய்ங்க! எனக்கே இம்புட்டுத்தேன்ப்பா தெரியும்! போற போக்குல அவிங்க, எங்காதுக்குச் சொன்னதை, நான் உங்களுக்குச் சொல்றேன்” என்றவரிடம்,

“நீயெல்லாம் என்னாடா அப்பன்?, புள்ளைகளைப் புடிச்சு வைக்கத் துப்பில்லாம, எங்கயோ போய்ட்டாய்ங்கண்டு பொறுப்பில்லாம பேசுற?” என்று கிழவர் எகிற,

“இங்கன கூட்டி வந்து, வீட்டை நோட்டம் விட்டுச் சுத்துற பரதேசிங்க கைல புள்ளைகளை, சிக்க வைக்கச் சொல்றீகளா?” என்று அவர் அந்தப்புறம் எகிறியதும், பெருமூச்சை வெளியிட்டப் பெரியவரிடம்,

“அகலு புள்ளையை நினைச்சுத்தேன் உமக்குக் கவலைண்டா, அது தேவையில்லாதது! உம்ம பேரன்ய்ங்க அவளை சூதானமாப் பார்த்துக்குவாய்ங்க! அவிங்க திட்டம் போட்டுத்தேன் செயல்ல இறங்கியிருக்காய்ங்க! இந்தக் கழுததேன் பெரிய வீரமங்கையாட்டம் ஊடால போய்ச் சிக்கி, கடைசில அவிங்க இழுக்குற இழுப்புக்கு ஓடிக்கிட்டிருக்கு!” என்று கூறியவர் தொடர்ந்து “அவிங்களா நமக்குத் தகவல் சொல்ற வரைக்கும், பொறுமையா இருக்குறதைத் தவிர வேற வழியில்ல” என்று விட்டு, வீட்டு நிலைமையைப் பற்றி விசாரித்தார்.

அவருக்குப் பதில் கூறிய பெரியவர் தனது ட்ரங்க்கு பெட்டி விவகாரத்தைப் பற்றிச் சொல்லி, சார் பதிவாளராகப் பணிபுரியும் வீரபாண்டியிடம் சில,பல வேலைகளை ஒப்படைத்து விட்டு பேச்சை முடித்தார்.

அகலருவியைத் திட்டித் தீர்த்துக் கவலை கொண்ட வீட்டுப் பெண்களைச் சமாளித்த பெரியவர், பேராண்டிகளிடமிருந்து வரப் போகும் தகவலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.

மணிவண்ணனின் உடல்நிலை சரியாகும் வரை, கருப்பன் விவகாரத்து விசாரணையை போலீஸ் ஒத்தி வைத்திருக்க, தன் வீட்டையும், தன் மகனது வீட்டையும் சுற்றி வந்து, ஆரன்,விருமன் மற்றும் அகலருவியின் இருப்பைக் கண்டுபிடிக்கப் போராடிக் கொண்டிருந்த மணிவண்ணனின் ஆட்களைக் கிழவர் கண்டு கொள்ளவேயில்லை.

இப்படியாக இரு நாட்கள் கடந்திருக்க, அந்த மாலை வேளையில், கருப்பனின் கட்டுத்தரையருகேயிருந்தக் கல்லில் அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தக் கிழவர், திடீரெனக் கேட்ட சலங்கையொலியில், சிந்தனை கலைந்துத் திரும்பி நோக்கினார்.

புலிக்குளம் காளையொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு, அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த கலாமணியம்மாளைக் கண்டு வியப்புடன் அவர் எழுந்து நிற்க,

திகைத்தப் பார்வையுடன் தன்னை நோக்குபவரைக் கண்டு மெல்லப் புன்னகைத்த கலாம்மாள், தன்னருகிலிருந்தக் காளையை ஒரு பார்வை பார்த்து விட்டுப் பின்னர், தன் கையிலிருந்தக் கயிற்றை அவரிடம் நீட்டி,

“உம்ம கருப்பன் அளவுக்கு இல்லண்டாலும், இவனும் வீரன்தேன்! செண்ட, பாலமேட்டு வாடில, சைக்கிள் செயிச்சுக் குடுத்தானாம்! களத்துல நிண்டு விளையாடுவியாண்டு, வைச்சிருந்தவக சொன்னாக!,” என்றவர், தன் எண்ணப்போக்கைக் கணித்துக் கனிவான முகத்துடன் தன்னை நோக்கும் கிழவரிடம், தயங்கிக் கேட்டார்.

“எனக்காக, இதை நீங்க வளர்ப்பீகளா?”

பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று மதிலை முற்றுகையிட்டு போரிடும் படை வீரர்கள், உழிஞை (முடக்கறுத்தான் இலை) கொடியிலான ஆன மாலையைச் சூடிக் கொண்டு தான் போரிடுவார்களாம்! அதோட அர்த்தம் கிட்டத்தட்ட நான் உன்னை நெருங்கிட்டேன்டா-ன்னு எதிரிக்குக் கொடுக்குற சமிஞை மாதிரி! அதனால இந்த முற்றுகைப் போரை உழிஞைன்னு சொல்லுவாங்களாம்! தங்களையும்,தங்களைச் சேர்ந்தவங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில, திட்டம் போட்டு முற்றுகையிட்டு மணிவண்ணனைத் தூக்குன பட்டாளத்தான் வளர்ப்புகள் செஞ்சதும் ஒரு வகைல மதில்ப் போர் தான்.