இருவாய்ச்சி-1

மின்சாரம் தடை பட்டதால் செயலற்றுப் போய் நின்றிருந்த அந்த நான்கடுக்கு அபார்ட்மெண்ட்டின் லிஃப்ட் அருகே நகரும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சுஜாதா, அடிவயிறு கொடுத்த அசௌகரியத்தை சகிக்க முடியாது, வியர்த்து வழிய, கிட்டத்தட்ட அரை மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

லிஃப்ட் ஆபரேட்டரைத் தேடி ஓடிச் சென்றிருந்த, அவளது கேர் டேக்கரான ஷாஜியை எதிர்நோக்கி வாசல் புறம் திரும்பியவளின் விழிகளில் அவன் தென்பட்டான்.

தனது வழக்கமான வேக நடையுடன் படிக்கட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனின் பார்வை, லிஃப்ட்டின் அருகே, கிட்டத்தட்டத் தொங்கி விட்டத் தலையுடன், முகம் வெளுத்துப் போய் அமர்ந்திருந்தவளை எதேச்சையாக நோக்கியது.

ஒரு நொடி நின்று அவள் முகத்தை ஆராய்ந்தவனுக்கு, அவள் அமர்ந்திருந்த நிலை புருவம் சுருக்க வைக்க, அவசரமாக அருகே வந்து,

“என்ன செய்யுது?” எனக் கேட்டான் தமிழில்.

அவன் தன்னருகே வந்ததும், கிறங்கிக் கவிழ்ந்திருந்த விழிகளை அழுத்தமாய்த் திறந்து, முதன்முதலாகத் தன்னிடம் உரையாடுபவனிடம் புன்னகைக்க முயன்றவள், முடியாமல், நின்று போயிருந்த லிஃப்ட்டை பார்த்து விட்டு, அவமானமோ,சங்கடமோ ஏதுமின்றி, “பா..பாத்ரூம் போகனும்” என்று கூறியதும், நொடியும் யோசிக்காமல் சட்டெனக் குனிந்து அவளைத் தன்னிருகைகளில் ஏந்திக் கொண்டான் அவன்.

போலியோ நோயின் விளைவால் சூம்பிக் கிடந்த அவளது இடது காலை முழுவதுமாய்த் தழுவியிருந்த நீளப் பாவாடை சற்றும் விலகிடா வண்ணம் லாவகமாய்,நாகரீகமாய் தூக்கிச் சென்றவன், கடகடவெனப் படி ஏறி, மூன்றே நிமிடத்தில் நான்காவது மாடியிலிருந்த அவளது வீட்டை நெருங்கியிருந்தான்.

அவன், அவளைத் தூக்கிச் செல்வதைக் கண்ட ஷாஜி, லிஃப்ட் பணியாளர்களிடம் போராடுவதை நிறுத்தி விட்டு, அவர்களுக்கு முன்னே விரைந்து சென்று வீட்டுக் கதவைத் திறந்து வைத்தாள்.

விறுவிறுவென அவளுடன் உள் நுழைந்தவன், “எந்தப் பக்கம்?” எனக் கேட்டதும், இடது புறத்தை நோக்கி அவள் கை காட்ட, அவளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த பாத்ரூமினுள் அவளை இறக்கி விட்டு வெளியே வந்தான் அவன்.

முதல் நாள் இரவு சாப்பிட்ட உணவு சரி வர செரிக்காது போனதாலோ என்னவோ,காலை எழுந்ததிலிருந்து கழிவறையில் கிடந்தவளை, ஷாஜி வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவளுக்கு, மறுபடி அடிவயிறு தன் வேலையைக் காட்டத் தொடங்க, அந்நேரம் பார்த்து லிஃப்ட் வேறு அவளது அவசரம் புரியாது, நின்று போய் சதி செய்து, அவளை மொத்தமாய் அவஸ்தைக்குள்ளாக்கியிருந்தது.

ஒரு வழியாக பாத்ரூமிலிருந்து வெளி வந்தவள், நான்கு கால்களில் நடந்து வந்து, உடன் வந்தவனைத் தேட, அவன் சென்று விட்டதாகக் கூறினாள் ஷாஜி.

பெயிண்ட்,ப்ரஷ்,கேன்வாஸ்கள் சூழ்ந்திருந்த அந்த அறையின் சோபாவில் “ஓஓ” – என்றபடியே மெல்ல அமர்ந்தாள் சுஜாதா.

அவள் முகத்திலிருந்த சோர்வைக் கண்டு ஷாஜி, “நான் உனக்குக் குடிக்க ஏதாவது எடுத்து வருகிறேன்” என ஹிந்தியில் கூறி விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொள்ள, காலியான வயிறு கொடுத்த அசதியில் தலையைப் பின் சாய்த்துக் கண் மூடியவள், அடுத்த முறை அவனைக் காணும் போது நன்றி கூற வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

சுஜாதாவிற்கு அவனைத் தெரியும்.

அவன் பெயர் விருமன். அகலருவியின் மாமன் மகன்.

மூளை அகலருவியின் பெயரை உச்சரித்ததும், இதழ்கள் அனிச்சையாய் விரிந்து கொண்டது அவளுக்கு.

அகலருவி! தன் மாமன் மகன்களான ஆரன் மற்றும் விருமனுடன் அந்த அபார்ட்மெண்ட்டின் மூன்றாவது தளத்தில் கடந்த மூன்று வருடமாக வசித்து வருகிறாள்.

குடி வந்த சிறிது நாட்களிலேயே ஷாஜியுடன் சைகை பாஷையில் பேசிப் பழகியிருந்தவள், தன் எஜமானிக்குத் தமிழ் பேசத் தெரியுமென்று ஷாஜி கூறியதும், உடனே சுஜாதாவுடன் அறிமுகமாகியிருந்தாள்.

கொஞ்சமும் கூச்ச,நாச்சமின்றிப் பார்த்தவுடன் வளவளத்தவளின் பாஷையும்,வேகமும் மிரட்டலாய் இருந்தாலும், புதிதாகத் தெரியவில்லை அவளுக்கு!

“என்னாடா இவ, இம்புட்டுக் குதி, குதிக்குறா-ண்டு நினைக்காதீக! வெளியாளுகளோட தமிழ்ல பேசி ரெண்டு வாரத்துக்கும் மேலாகிடுச்சு! எனக்கு ஹிந்தியும் வராது, என் மாமன் மகனுங்க மாறி, இங்கிலிசு பேசவும் தெரியாது! இந்த ஊருக்கு வந்ததுல இருந்து பேச்சுத் துணைக்கு ஆளில்லாம ஊமை கணக்கா, சுத்திட்டுக் கிடக்கேன்!, அதேன் உம்மைப் பார்த்ததும் பட,படண்டு பேச்சு வருது” – அலுத்துக் கொண்டவளைக் கண்டு சிரிப்பு வந்தது சுஜாதாவுக்கு.

“புரியுது! ஆனா, நீங்க நினைச்சா சீக்கிரம் ஹிந்தி கத்துக்கலாம்” – ஆறுதலாய் அவள் கூற,

“ம்ஹ்ம், அதுக்கெல்லாம் அவசியமிருக்காது! ஏன்னா, நான் சீக்கிரமே எங்க ஊருக்குப் போயிருவேன்” – அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை சுருட்டிக் கொண்டு அடிக்குரலில் பேசியவளின், வார்த்தைகளிலிருந்த ஏக்கம், வருத்தப்படுத்த, அவளை மாற்றும் பொருட்டு,

“எந்த ஊரு நீங்க?” எனக் கேட்டாள் சுஜாதா.

பளிச்சென “மதுரை!, உங்களுக்கு எந்த ஊரு?” என்றவளிடம்,

“பொறந்தது வளர்ந்தது மதுரை. பத்தாங்க்ளாஸ்க்கு அப்புறம் படிச்சது கேரளாவுல. காலேஜ் டெல்லியில.” எனக் கூறித் தொடர்ந்து “அப்பா மதுரைக்காரரு! அம்மா மலையாளி” என்றாள் விளக்கமாய்.

“பார்றா! நம்மூர்க்காரவகதேன நீங்களும்! எங்கூருக்கு அடிக்கடி வருவீகளா?” – உற்சாகம் ததும்பிய குரலுடன் கேட்டவளிடம்,

“ஓ! நிறைய முறை! சோழவந்தான்ல தான் என் பாட்டி வீடு இருக்கு. அங்க அடிக்கடி வருவேன்” என்றாள் சுஜாதா.

“ஆத்தி! என்னால நம்பவே முடியல! வடநாடு வரை வந்து, நம்மூர்க்காரவகளோட சிநேகிதம் பிடிச்சிருக்கேன்! உடனே என் மாமனுங்கக் கிட்ட உம்மைப் பத்திச் சொல்லனும்” என்று துள்ளியவள் அறையிலிருந்தப் பொருட்களை சுற்றி,சுற்றிப் பார்த்து,

“நீங்க வரைவீகளா?” எனக் கேட்டு “வரையுறதுக்கு இம்புட்டு சாமான் தேவைப்படுமா என்ன?”- என்றவளிடம், தலையாட்டிப் புன்னகைத்த சுஜாதா,

“பின்ன!இதுக்குன்னு படிப்பு கூட இருக்கு! நான் அதான் படிச்சிருக்கேன்” எனக் கூறினாள்.

“இதுக்குண்டு படிப்பெல்லாம் இருக்கா?” என்றபடியே அவள் வரைந்து வைத்திருந்தப் படங்களை வியந்து பார்த்து,

“இம்புட்டுத் தத்ரூபமா வரைஞ்சிருக்கீக! திறமைசாலி நீங்க” என்றாள்.

பற்கள் தெரிய புன்னகைத்த சுஜாதாவை அதை விட ஆச்சரியமாய் நோக்கி,

“சிரிக்கையில நீங்க, ரொம்ப அழகா இருக்கீக!” என்றாள்.

அவளது வெளிப்படையான பாராட்டில் மேலும் பற்களை விரித்தவளிடம்,

“உங்களைப் பார்த்தா, எங்கயித்தை அவிக்கிற இட்டிலி ஞாபகம் வருது! அம்புட்டுப் பளீர்ண்டு இருக்கீக” என்று அகலருவி கூறியதும், விரிந்த இதழ்கள் மூடிக் கொள்ள, தாடையை இறக்கி முறைத்தவளைக் கண்டுப் பதறி,

“இல்ல,இல்ல,இல்ல, வெள்ளை,வெள்ளேர்ண்டு வடநாட்டுக்காரவக மாறி இருக்கீகங்குறதைத்தேன் அப்பிடிச் சொல்லிப்புட்டேன்! கோச்சுக்கிட்டு என்னையத் துரத்திப்புடாதீக! உம்மை விட்டா, இங்கன எனக்குப் பேச்சுத் துணைக்கு யாரும் கிடையாது!” -என்று அவசரமாய்க் கூறியவளைக் கண்டு சத்தமாய் சிரித்தாள் சுஜாதா.

“ஹ்ம்ம்ம்! உமக்கு என் நிலைமையைப் பார்த்தா சிரிப்பா இருக்குல்ல?”

“ஹேய், ச்ச,ச்ச இல்ல இல்ல!” – எனக் கூறியபடி எழுந்தவள் நான்கு கால்களில் நடந்து சென்று அங்கிருந்த வாஷ்பேசினில் கைக் கழுவ,

அவள் அமர்ந்திருந்தவரை கருத்தில் படாத வித்தியாசம், அவள் நடந்து செல்கையில் கண்ணில் பட்டதும் ஒரு நொடி அகலருவிக்குப் பேச்சு நின்று தொண்டையடைத்துப் போனது.

படபடவெனப் பேசிக் கொண்டிருந்தவளின் விரிந்த விழிகள் முழுக்க வியப்புடன் தன் கால்களைக் கவனிப்பதை உணர்ந்து உதட்டைப் பிதுக்கினாள் சுஜாதா. இந்தப் பார்வை அவளுக்குப் புதிதல்ல போலும்! பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தோளைக் குலுக்கியவள், அடுத்து அவளிடமிருந்து வரப் போகும் கேள்வியை எதிர் நோக்கிக் காத்திருக்கையில், சட்டென முகத்தைச் சாதாரணமாக்கிய அகலருவி,

“ஹ்ம்ம்! காட்டுலயும்,வரப்புலயும் சுத்திட்டுத் திரிய வேண்டியவ, இப்பிடிக் கூண்டுக்குள்ள அடைபட்டுக் கிடக்குறேன்! அதுலயும் இந்த உடுப்புதேன் பெருத்த அக்கப்போரா இருக்கு எனக்கு” – எனத் தான் அணிந்திருந்த சுரிதாரை இழுத்து விட்டுக் கொண்டுத் தன் புலம்பலைத் தொடர, ஒரு நொடி வியந்தாலும் பின்,

“ஏன்?டெல்லி பிடிக்கலையா உனக்கு?, அப்புறம் ஏன் இங்க வந்த?” எனக் கேட்டாள் சுஜாதா. ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒற்றுமையோ என்னவோ அவளுடன் சகஜமாய்ப் பேசத் தோன்றியது சுஜாதாவிற்கு.

“நான் எங்க வந்தேன்! வழில இறங்க இருந்தவளை, அள்ளிப் போட்டுல்ல கூட்டி வந்தாய்ங்க!” – என்று அவள் முணுமுணுத்த சமயம், தனது இருக்கையில் வந்தமர்ந்த சுஜாதாவின் கைப்பட்டு மேஜையிலிருந்த ப்ரஷ் ஒன்றுக் கீழே விழுந்தது.

அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சில அடி தூரம் தள்ளி விழுந்திருந்த ப்ரஷ்ஷைக் கண்டதும், அதை எடுக்க எண்ணித் தன்னிச்சையாய் முன்னே வந்த அகலருவி, பின் நின்று அவள் முகம் பார்த்தாள்.

அதற்குள், அருகிலிருந்தத் தடியைக் கொண்டு, பிரஷ்ஷைத் தன்னருகே நகர்த்தியிருந்த சுஜாதா, குனிந்து எடுத்துக் கொண்டு தனக்கு அவள் இன்னும் பதில் கூறாதிருப்பதை உணர்ந்து, அகலருவியை ஏறிட,

“வந்து…அ..அங்க ஊர்ல இருக்க முடியாத சூழ்நிலை, அதேன் என் மாமனுங்க இங்கிட்டுக் கூட்டி வந்துட்டாய்ங்க” என்றாள்.

“ஓஓ” என்றவள் அவள் முழுதாக சொல்ல முடியாது சங்கடப்படுவதை உணர்ந்து, பேச்சை மாற்றி,

“பொழுது போக்க இங்க விசயமா இல்ல! டிவி,ரேடியோ,டேப்,புத்தகம் அப்பிடி,இப்பிடின்னு எவ்வளவோ இருக்கே” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் எனக்குப் பழக்கமில்லங்க! ஒரே இடத்துல எம்புட்டு நேரம் உட்கார்ந்து கிடக்குறது! அங்கேயெல்லாம் மண்ணுல நிண்டா மணி போறதே தெரியாது! இங்கக் கடிகாரம் கல்லைக் கட்டிக்கிட்டுல்ல நகருது!,” என்றவள் தொடர்ந்து “சமையக்கட்டுப் பக்கம் போகவும் இவக விட்றதில்ல! இங்க ஆரன் மாமாதேன் சமைக்குறாக! எனக்கும்,விருமனுக்கும் கொட்டிக்கிறதுதேன் வேலை! வேலைக்குப் போக முன்னமே சமைச்சு வைச்சுப்புட்டு போயிர்றாக” என்றாள்.

“அப்பிடியா உன் மாமா நல்லா சமைப்பாரா?”

“நல்லா என்ன?, ரொம்பவே நல்லா சமைப்பாருங்குறது எனக்கே இங்க வந்தப்புறம்தேன் தெரியும்! வேலைக்குப் போய்ட்டு வாறவகளுக்கு உதவியா இருக்கலாமேண்டு நானே சமைக்க நினைச்சேன், ஆனா, நீ சமைக்கிறதை எவந்தின்பியாண்டு குறை சொல்லி, என்னைய பத்தி விட்டுப்புடுறாக! நாஞ்சும்மா, காய் நறுக்கிக் குடுக்குறது, அரைச்சுக் குடுக்குறது,விளக்கிக் குடுக்குறதுண்டு, அவக சமைக்குறப்ப பக்க வேலை மட்டும் பார்ப்பேன்! சில சமயம், அதையுங்கூட ஆரன் மாமாவே செஞ்சுக்குறாக” – பெருமையாய்,பாசமாய்க் கூறியவளின் முகம் போகும் போக்கைக் கண்டு,

“ஆரன் மாமா-ன்னா அவ்ளோ இஷ்டமா??” என்று சுஜாதா கேட்டதும் அவள் கேள்வியில் திடுக்கிட்டு, அகம் பதற, முகம் மாறியவள்,

“அ…அ..அது….” என்று இடமும்,வலமுமாய் ஓடிய விழிகளோடு பதில் கூறாது ஒரு நொடி இழுத்துப் பின், அத்தனை நேரமாகக் கையிலிருந்த பென்சிலைக் கொண்டு விரல் போன போக்கில் வரைந்து வைத்திருந்தப் படத்தைக் காட்டி,

“உங்க அளவுக்கு இல்லண்டாலும், எனக்கும் கொஞ்சம்,கொஞ்சம் படம் வரைய வரும்! திங்குறதையும்,ஊர் சுத்துறதையும் தவிர எனக்கு இருக்குற ஒரே திறமை இதுதேன்! எப்பிடியிருக்குண்டு பாருங்க! உங்களுக்குத் தொந்தரவு இல்லண்டா, நாளைக்கும் இதே நேரம் நான் வாரேன்!” என்றவள் நின்று “அப்புறம்…” என இழுத்தாள்.

என்னவென ஏறிட்டவளிடம்,

“அந்த பிரஸூ (ப்ரஷ்) கீழ விழுந்தப்ப, குனிஞ்சு எடுத்துத் தராம மரம் மாறி நின்னேனேண்டு என்னையத் தப்பா நினைக்காதீக! சில சமயம் உதவி செய்றது கூட அதிகப்பிரசங்கித்தனம்தேன்-ண்டு எந்தாத்தன் சொல்லியிருக்காரு”– எனப் படபடத்து விட்டு விறுவிறுவென ஓடி விட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டு உயர்த்திய புருவங்களுடன் தோள் குலுங்கப் புன்னகைத்த சுஜாதா “பேருக்கு ஏத்த மாதிரி பேச்சு அருவியாக் கொட்டுது!” என்று முணுமுணுத்து விட்டுத், தன் கையில் அவள் திணித்தப் படத்தைப் பார்த்து விழி விரித்தாள்.

பற்கள் தெரிய சிரித்த சுஜாதாவின் புன்னகை முகத்தைப் பேசியபடியே படமாக வரைந்திருந்தாள்.

அதன் பின்பு வந்த நாட்களில் இருவரும் நன்றாகப் பழகத் தொடங்கியதும், ஊரில் நடந்த பிரச்சனைகளைப் பற்றி சுஜாதாவிடம் கூறியிருந்தாள் அகலருவி.

பொழுது போக்குக்காகத் தன்னுடன் பழகத் தொடங்கியிருந்தவள், அவ்வப்போது எதையேனும் வரைந்து வைத்து விட்டுச் செல்வது கண்டு, அவளுக்கிருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளும்படி அறிவுரை கூறி, தினமும் மாலை, அருகிலிருக்கும் இன்ஸ்ட்டிடியூசனில் தான் எடுக்கும் வரைதலுக்கான டிப்ளமா கோர்ஸ் ஒன்றில் அவளையும் சேரச் சொல்லிக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாள் சுஜாதா.

அதுவரைத் தன் திறமையை வாசல் கோலத்திற்குள்ளும், காகிதக் கிறுக்கல்களுக்குள்ளும் ஒளித்து வைத்திருந்த அகலருவி, சுஜாதா கற்றுக் கொடுக்கத் தொடங்கிய சில மாதங்களில், காகிதத்தில் கருப்பு-வெள்ளையாய் இருந்தப் படங்களை கேன்வாஸில் ஏற்றி நிறம் கொடுக்குமளவிற்கு முன்னேறியிருந்தாள்.

ஆரனைப் பற்றிய அவளது எண்ணம் குறித்துக் கேள்வி கேட்டதற்கு அன்று அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடிய அகலருவியிடம், அதன் பின்பு பெரிதாக ஏதும் தோண்டித் துருவா விட்டாலும், தனது ஊர்,ஆடு,மாடு,தாத்தா,சிலம்பன்,புவியரசி,விருமன் எனத் தனக்கானவற்றைக் குறித்து வாய் ஓயாது பேசும் அகலருவி, ஆரன் மீது மட்டும் தனிப் பாசம் வைத்திருப்பதாகத் தோன்றியது சுஜாதாவிற்கு. அகலருவியின் செய்கைகளும்,பேச்சும் அவளது கணிப்பை மேலும் உறுதி செய்வது போலத் தான் இருந்தது.

ன்றொரு நாள், சுஜாதாவின் வீட்டில், ஷாஜி அளித்தத் தேநீரை ரசித்துக் குடித்தபடி அமர்ந்திருந்த அகலருவி,

“ச்சாய்,ச்சாய்ண்டு சாஜியக்கா கேக்கும் போது, ச்சை-ண்டு என்னத்தையோ குடிக்கத் தரப்போகுது போலன்னு நினைச்சிருந்தேன்! ஆனா, சாஜியக்காவோட இந்த அஸ்ஸாமி டீயை அடிச்சுக்க டெல்லில ஆளே கிடையாதுண்டு தோணுது சுஜியக்கா” – என்று வழக்கம் போல் வளவளக்க, அதை ஆமோதித்துப் புன்னகைத்தாள் சுஜாதா.

டீயைக் குடித்து, தட்டிலிருந்த சமோசாவையும் முடித்து விட்டு சுஜாதா வரைந்து கொண்டிருந்தப் படத்தைப் பார்வையிட்டவள்,

“இம்புட்டுப் படம் வரையுறீகளே! விற்பனை பண்ணுவீகளா?” – எனக் கேட்டாள்.

ஆம் என்ற சுஜாதா தன் படங்கள் விற்கப்படும் விற்பனை நிலையங்கள் சிலவற்றின் பெயரைக் கூற,

“ம்ம்ம்! அப்டின்னா, படம் வரைஞ்சு கூட காசு சம்பாரிக்கலாம் போலயே! நானும் உங்களைப் போல நல்லா வரையக் கத்துக்கிட்டு 4 காசு பார்த்து எங்க வீட்ல இருக்குற கெழவி மூஞ்சில கரியைப் பூசனும், பாரு கெழவி, நான் சுயமா சம்பாதிக்கிறேன்-ண்டு! ஏன்னா, அதுதேன் என்னைய ஒன்னுக்கும் உதவாத தெண்டச்சிறுக்கிண்டு எந்நேரமும் திட்டிக்கிட்டேக் கிடக்கும்! எம்புட்டு நாள் நான் வாசல்ல அழகா போட்டக் கோலத்துல தண்ணிய ஊத்தி விட்ருக்கு தெரியுமா?, ஊருக்குப் போனதும் இருக்கு அந்தக் கெழவிக்கு!” – ரோஷமாய்ப் பேசுபவளிடம் புருவத்தைத் தூக்கி உதட்டைப் பிதுக்கிய சுஜாதா, “உன் அப்பத்தாவுக்காகவாது நீ அடுத்த பிகாசோவா மாறனும்ன்னு நான் வாழ்த்துறேன்” என்று பாராட்டியதும், முறைத்து,

“கேலி பண்றீகளா?” – என்று முறுக்கிக் கொண்டவளிடம் “ச்ச,ச்ச இல்ல! நீ நிஜமாவே ரொம்பப் பெரிய ஆர்ட்டிஸ்ட்டா வரனும்னு நான் வாழ்த்துறேன்” என்றபடியே, அவள் வரைந்து வைத்திருந்த கேன்வாசைத் தன் புறம் திருப்பினாள் சுஜாதா.

படத்தைக் கண்டவளின் இதழ்கள் தன்னாலேயேப் பிளந்து கொள்ளத் திரும்பி அகலருவியின் முகம் பார்த்தாள்.

அவள் தன்னை ஆராய்ச்சியுடன் நோக்குவதை உணராது, இதழ்களில் அளவான சிரிப்பும், கண்களில் அளவில்லா அன்புமாய், படத்தில் தெரிந்த முகத்தைப் பொறுமையாய்ப் பார்த்திருந்தாள் அகலருவி.

அலுவலகத்திற்குச் செல்லும் ஃபார்மல் உடையோடு, இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ஆரன், அதை உதைத்து ஸ்டார்ட் செய்தபடி அருகிலிருக்கும் மல்லிகைச் செடியை மலர்ந்த முகத்துடன் பார்ப்பது போலிருந்தது படம்.

தன் முகத்தையேக் கேள்வியாகப் பார்த்த சுஜாதாவிடம்,

“என்ன அப்பிடிப் பார்க்குறீக?, படம் நல்லாயில்லயா?” என்று அகலருவி கேட்டதும், மறுத்துத் தலையசைத்து,

“ரொம்ப நல்லாயிருக்கு!” என்றுத் தொடங்கியவளின் பேச்சு அத்தோடு நிற்க,

மெல்லிய புன்னகையுடன் மீண்டும் படத்தின் புறம் திரும்பிய அகலருவி,

“அந்த மல்லிபூச் செடில அப்பிடி என்னாதேன் இருக்குண்டு தெரில! தெனம் அங்கன நிண்டு,அதைப் பார்த்துப்புட்டுதேன் போறாக” என்றாள்.

சலிப்பாய்க் கூறினாலும், உரிமை தவழும் அவளது பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வர, “அவர் தினம் அங்க நின்னு பார்க்குறது உனக்கு எப்பிடித் தெரியும்?”எனக் கேட்டாள் சுஜாதா.

“நாந்தேன் தெனம் அவக வேலைக்குப் போறப்ப, அவக வண்டி, அபார்ட்டுமெண்ட்டை விட்டு வெளியேறுற வரைக்கும் பலகணில இருந்து பார்ப்பேனே” – மனதோடு இதழ் இசைந்து கொண்டிருப்பதை உணராமல், படத்தில் பார்வையைப் பதித்துக் கொண்டு பட்டெனக் கூறியவளைக் கண்டு,

“ஓஹோ!” எனப் புருவம் உயர்த்தியவள்,

“கூடவே ஒருத்தன் பின்னால உட்கார்ந்திருப்பானே! படத்துல அவனைக் காணோம்?” – என நக்கலாய் வினவியதும், அதுவரையிருந்த புன்னகை மறைந்து புடைத்த மூக்குடன் அவள் புறம் திரும்பிய அகல்,

“பல்லு முளைச்சப் பல்லி மாறி இருக்கிறவனையெல்லாம், படமா வரையுறது ஒன்னுதேன் குறைச்சல்” என நொடித்துக் கொள்ள,

“அடிப்பாவி! பாடிபில்டர் ரேஞ்சுல இருக்கிறவனைப் போய் மனசாட்சியே இல்லாம பல்லின்னு சொல்ற?” எனச் சிரிக்கவும், முகம் சுழித்த அகல்,

“உடம்பை மட்டும் வளர்த்து வைச்சு என்னா பிரயோசனம்?, மூளை கெட்ட முரட்டுப்பய” – என்று திட்ட, வாய் விட்டுச் சிரித்த சுஜாதா,

“ஏன், விருமன்னதும் உன் முகம் அப்பிடிப் போகுது?” – எனக் கேட்டாள்.

“பின்ன, எந்நேரமும் வம்பு வளர்த்துக்கிட்டுத் திரியுறவன் மேல பாசமா பொங்கும்? என்னமோ, இவனைத் தவிர உலகத்துல ஆம்பளைகளே இல்லாத மாறி, இவந்தேன் எங்களுக்கு வாழ்க்கை தரப் போற மாறி, மாமனைக் கட்டிக்கிட்டு நீங்க மஞ்சள் அரைக்கத்தேன்டி போறீகண்டு என்னையும்,என் தங்கச்சியையும் எம்புட்டுப் பாடு படுத்துவியான் தெரியுமா! பொசகெட்டப்பய!”

“ஹாஹாஹா! முரட்டு முறை மாமனா இருப்பான் போலயே!”

“அய்ய, முருங்கைக்காய்க்கு முடி முளைச்ச மாறி இருக்கிறவனுக்கு முறை மாமன்-ண்டு பேரு வைக்குறீக! அவேன் ஒரு மானங்கெட்டபய! என் தங்கச்சி வயசு என்ன, அவன் வயசு என்ன?, சின்னப் புள்ளண்டு கூடப் பார்க்காம அவ கிட்டயும் சலம்பலைக் கொடுப்பியான்! ஆரன் மாமா அவன் பொடனில அடிச்சு போடா-ண்டு விரட்டுற வரை அடங்கவே மாட்டியான்”

தான் கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த சுஜாதாவிடம்,

“எங்காத்தாளும்,கெழவியும் என்னைய அந்த முரட்டுப்பயலுக்குக் கட்டிக் குடுக்கனும்ண்டு பல வருசமா திட்டம் போட்டுக்கிட்டுத் திரியுறாளுக! ஆனா நாஞ்சிக்கக் கூடாதுங்குற முடிவுல இருக்கேன்!” என்றவளின் பார்வை படத்திலிருந்த ஆரன் மீது பதிந்ததும்,

“ப்ச் விடுங்க! கருவாட்டுக் குழம்பு கண்ணு முன்னால மணத்துக்கிட்டுக் கிடக்கையில, ஆட்டுக்கறியைப் பத்தி என்னத்துக்குப் பேசிக்கிட்டு?” – என்றவள், ப்ரஷ்ஷைக் கையில் எடுத்துக் கொண்டு, படத்தின் அருகே சென்று,அதில் தெரிந்த ஆரனின் முகத்தை மேலும் அழகாக்க என்ன செய்யலாம் என நாடியில் விரல் வைத்துத் தலை சாய்த்து யோசிக்கத் துவங்கி விட, “அதுசரி” என உதட்டை வளைத்தாள் சுஜாதா.

அன்பென்ற பெயரில் அதிகப்பிரசங்கித்தனம் செய்யாமல், உறவென்ற பெயரில் ரொம்பவும் சலுகை எடுத்துக் கொள்ளாமல், அதிக அலட்டலின்றி, பெரும் எதிர்பார்ப்பின்றி, தனக்கான எல்லைக்குள் நின்று கொண்டு, நேர்மையாய்,நியாயமாய் நட்புக்கரம் நீட்டித் தன்னோடு ஒன்றி விட்ட அகலருவி, சுஜாதா தன் வாழ்வில் சந்தித்த முக்கிய நபராகிப் போனாள்.

வாழ்வில் எதையும் எதிர் நோக்கத் தயங்காது, தைரியமாய் நின்று சாதிக்கும் இருவரது ஒத்தக் குணாதிசயமும், பெரிய நாடகங்கள் இல்லாத இயல்பான இருவரது வாழ்வியலும், வாயாடித்தனமும் அவர்களிருவரது மூன்று வருட நட்புக்கு வலிமையான அடிக்கல்லை அமைத்துக் கொடுத்தது.

ன்று மாலை வெற்று மார்பும்,ட்ரவுசருமாய் கர்லா கட்டையுடன் மொட்டை மாடியிலிருந்த விருமன், உடற்பயிற்சியை முடித்து விட்டு மூச்சு வாங்க, அக்கடாவெனத் தரையில் சாய்ந்திருந்த நேரம், வாசலருகே அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

டொக்,டொக் என்கிற சத்தத்தோடு கழுத்தில் வாக் மேனுடன் நான்கு கால்களில் நடந்தவாறு உள் நுழைந்து கொண்டிருந்தாள் சுஜாதா.

முதல் நாள் நடந்த சம்பவம், அவளை கவனிக்கத் தூண்ட, அவள் நலனை ஆராய்ந்தபடி படுத்துக் கிடந்தான் விருமன்.

காற்றோடு கத்திச் சண்டையிட முயன்ற கார்கூந்தலைக் காதோரம் ஒதுக்கி விட்டு, மேற்கில் நின்று கொண்டுத் தன் கதிர்கரத்தால் கண் கூசச் செய்த கதிரவனை விழி மூடி கண்மணிக்குள் அடக்கி விட்டு, மாலை வெயில் உடல் முழுதும் பரவ, மஞ்சள் மேகமாய் மெல்ல நகர்ந்து கல்பெஞ்சில் அமர்ந்தவளைப் பார்த்திருந்தான் அவன்.

விதவிதமாய்ப் பூத்திருந்த வண்ணமயமானப் பூச்செடிகளுக்கு மத்தியில், புன்னகைப் பூவாய் அவள் அமர்ந்திருந்த விதம், புத்துணர்ச்சியைக் கொடுத்தது விருமனுக்கு.

பறையாய் விரிந்திருந்த வட்ட விழிகளுக்குப் பட்டையாய் மை தீட்டி, சிக்கனமாய் நீண்டிருந்த சிறிய மூக்கிற்கு சிகப்புக்கல் மூக்குத்தியிட்டு, பூவாய் மலர்ந்திருந்த இதழ்களுக்குப் புன்னகை சாயம் பூசி, எடுப்பான முக வடிவும்,எலுமிச்சை நிறமுமாய் அத்தனை அழகாயிருந்தாள் அவள்.

அளவெடுக்கும் பார்வையுடன் அவளை அசையாது நோக்கிக் கொண்டிருந்தவனுக்குக் கல்பெஞ்சில் அவள் சாற்றி வைத்திருந்த துணைக்கால்களைக் கண்டதும், நெஞ்சில் கனம் ஏற, சட்டென எழுந்து நின்றான்.

அவன் நின்றதும், எதேச்சையாக அவன் புறம் திரும்பியவளின் விழிகள் ஒரு நொடி விரிந்து பின் மலர்ந்து விகசிக்க, சிநேகமாய்ப் புன்னகைத்தவள், உடனே தன் துணைக்கால்களைக் கையில் எடுத்து எழப் பார்க்க, வேகமாய்க் கை நீட்டித் தடுத்தவன், தான் அருகே வருவதாகக் கூறி விட்டு, கழட்டி வைத்திருந்த பனியனை எடுத்து மாட்டிக் கொண்டு அவளருகே சென்றான்.

அவன் நடக்கத் துவங்கியதும், எழுந்து நின்றவளைக் கண்டபடி விரைந்து அருகே வந்தவன்,

“உட்காருங்க” என்றான் அவசரமாய்.

அவளை நிற்க வைத்திருக்கும் பரிதவிப்புடன் பேசியவனின் எண்ணத்தில் பரிதாபம் நிறைந்திருப்பதை உணர்ந்தவள், தன் நீண்ட புன்னகையை ஒரு இஞ்ச் குறைத்து,

“என்னால நிக்க முடியும்” என்றாள்.

தீவிரமாய் ஒலிக்க முயன்ற அவள் குரல், மெல்லிய பிடிவாதத்தை சுமந்து வருவது கண்டு, தவறாக எதுவும் கூறி விட்டோமோ என ஒரு நொடி ஆடிப் போன விருமன், சட்டெனக் கல் பெஞ்சில் அமர்ந்து,

“என்னால நிக்க முடியாது. அதான் உட்காரச் சொன்னேன்” என்றான்.

அகண்ட தோள்களோடு, அசாத்திய உயரத்தோடு, ராஜாளியாய் விரிந்திருந்தவன், தன் இறகுகளைக் குறுக்கி, இறங்கி வந்த விதம், சிரிப்பை வரவழைக்க, அவளை நோகடித்து விட்டப் பதற்றத்துடன் அவள், முகம் பார்த்து அமர்ந்திருப்பவனைக் கண்டு, புன்னகையில் உதடு நெளிய, மெல்ல அமர்ந்தாள் அவள்.

துணைக்கால்களை அருகில் வைத்து விட்டுத் திரும்பியவள், தன் செய்கையை அமைதியாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனிடம்,

“தேங்க்ஸ்” என்றாள்.

புரியாது நோக்கியவனிடம், “நேத்து அவசரம்ன்னதும், கொஞ்சமும் யோசிக்காம உதவி பண்ணதுக்கு” அலட்டாமல் கூறியவளைக் கண்டு, பிடரியைக் கோதிக் கொண்டவன், தயக்கத்துடன்,

“யோசிக்காம.. ஆமா, யோசிக்காமதேன் பண்ணிப்புட்டேன்! என் அயித்த மக, தெனம் உங்களைப் பத்தி வாய் ஓயாம பேசுறதைக் கேட்டுக் கேட்டு மனசு, உங்களை ரொம்ப பழக்கமான ஆள் மாறி உருவகப்படுத்திக்கிச்சு போல! அதேன் நீங்க கிறங்கிப் போய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும், அனுமதி கூடக் கேக்காம நான் பாட்டுக்கத் தூக்கிப்புட்டேன்! அப்புறம் யோசிச்சப்பதேன் தோணுச்சு, உங்களுக்குச் சங்கடமா இருந்துருக்குமோ, என்னமோ-ண்டு!” என்று பேசிக் கொண்டே சென்றவன்,

“என்ன சங்கடம்?” – என்றவளின் கேள்வியில் பேச்சை நிறுத்தி விட்டு அவள் முகம் பார்த்தான்.

அவளது பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு, மறுபடி தீவிரமாய் ஒலித்த அவள் குரல் புருவம் சுருக்க வைக்க,

“ம்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்தவன் ஒரு நொடி தான் பேசியதை ரிவைண்ட் செய்து பார்த்து விட்டு,

“புரியல” எனக் கூறியதும்,

தோளைக் குலுக்கி “இதுல சங்கடப்பட என்ன இருக்கு?” என்றவள், பின்னேயிருந்தப் பூச்செடிகளை நோக்கியபடி, “ரோட்டுல அடிபட்டுக் கிடக்குறவன் கிட்ட அனுமதி கேட்டா உதவி பண்றோம்! கையும்,காலும் நல்லாயிருந்தா அவனுக்கு எதுக்கு யாரு உதவியும் தேவைப்படப் போகுது! எனக்கு 4 வயசுல இருந்தே இது பழக்கம் தான்! என்னால முடியாதுங்குற பட்சத்துல உதவி கேட்க நான் என்னைக்கும் சங்கடப்பட்டதில்லை!” என்றாள்.

நீண்ட நீர்ப்பரப்பின் நடுவே நீச்சலடிக்கும் பந்தாய், அவள் விழிமணிகள் நகரும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் கூறியதைக் கேட்டு அகம் கன்றியது.

அவளது இதழ்கள் புன்னகைப்பதை நிறுத்திய பின்பும் கூட, முகம் மலர்ந்தே கிடப்பதை அளவிட்டபடி மௌனமாகி விட்டவனைக் கண்டு, சட்டென முகம் சுருங்க,

“ஹார்ஷா பேசிட்டேனா?” எனக் கேட்டாள் அவள்.

பெருமூச்சை வெளியிட்டு மெல்லச் சிரித்து “இல்ல! நிமிர்வா பேசுறீக! நாந்தேன் உங்களுக்கு ஒத்துப் போற மாறி பேசனும்ண்டு யோசிச்சு, சொதப்பிக்கிட்டுக் கிடக்கேன்” என்றான்.

“அகலருவி சொன்ன விருமனுக்கும், இப்ப என் கூட பேசிட்டிருக்கிற விருமனுக்கும் சம்மந்தமே இல்லையே! எல்லார் கூடயும், இப்பிடித்தேன் யோசிச்சு,யோசிச்சுப் பேசுவீங்களா?” புருவம் உயர்த்தி அவள் கேட்ட பாவனையில்,

“அப்ப்ப்ப்பிடி இல்ல” என இழுத்தவனைக் கண்டு,

“புரிஞ்சது!” என்றவள், மீண்டும் பின்னே திரும்பிப் பூக்களை பார்த்தபடி, “என்னைப் பார்த்ததும் உள்ள பொங்குற இரக்கமும்,பரிதாபமும் என்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசிடக் கூடாதுங்குற கான்ஷியஸ்நெஸ்ஸைக் கொடுக்குது. சரியா?” என்றாள்.

“…………..” – அப்படித்தான் என்றாலும், அதை வெளிப்படையாக் கூறும் தைரியமின்றி, பதிலற்று அமர்ந்திருந்தவனைப் பார்த்து விட்டு,

“அமைதியா ஆமோதிக்கிறீங்க! பரவாயில்ல! இந்த இரக்கமும்,பரிதாபமும் கூட எனக்குப் பழக்கம் தான்!” – என்றவளின் குரலில் இருந்த பாவம், அநியாயத்திற்குப் பாதிக்க, சட்டென எழுந்து நின்றவன்,

பூக்களைக் கை காட்டி, “இங்கன நீங்க வந்து உட்கார்ந்தப்ப, இந்த பூவுக்குப் போட்டியா உங்க முகத்துல மலர்ந்து கிடக்குற சிரிப்பு, பார்க்குறவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்குறதா நினைச்சேங்க! ஆனா, இப்ப அந்த சிரிப்பு வாட நானே காரணமா இருக்குற மாறி தோணுது! எனக்கு உங்கக் கிட்டப் பேசத் தெரியல போலங்க! சாரி! நான் கிளம்புறேன்” எனப் படபடவெனக் கூறி விட்டு விறுவிறுவென நடந்து சென்று விட,

ஒரு நொடி அவன் பேச்சைக் கேட்டு முகம் மாற,விழித்து,அதிர்ந்து பின் அலட்டிக் கொள்ளாது அமர்ந்திருந்தவளின் முன்னே, இரண்டே நிமிடத்தில் மீண்டும் வந்து நின்றான் விருமன்.

“கோபப்பட வைச்சுட்டேனா?”

கவலை தோய்ந்த முகமும்,கலக்கமான குரலுமாய்த் தன் முன்னே நின்றவனின் தோற்றத்தைத் தன் கருமணிக்குள் அடக்கி விடுபவள் போன்று, விழி விரிய அவனை ஒரு நொடி நோக்கியவள், பின் “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமி,

“இல்ல, நான் தான் உங்களை ஓட வைக்குற மாதிரி பேசிட்டேன்! சாரி” என்றவளிடம் அவசரமாய் மறுத்து,

“இல்ல,இல்ல, நான்தேன் சொதப்பிட்டேன் சாரி” என்றவன் மேலே என்ன பேசுவதெனத் தெரியாமல் நிற்க,

சங்கடமாய்த் தலையில் அடித்துக் கொண்ட மனதை அடக்கி, அவனை இயல்பாக்கும் பொருட்டு நீண்ட புன்னகையை உதிர்த்து, பெஞ்சை நோக்கி அவள் அமருமாறு கை காட்டியதும், தயக்கமாய் அவன் அமர்ந்த நேரம்,

எதிரே காய்ந்து கொண்டிருந்தத் துணிகளை எடுக்க வந்தப் பெண்ணொருத்தி, சுஜாதாவைக் கண்டதும், ஹிந்தியில் ஏதோ பேச, சிரித்தபடி அவருக்குப் பதில் கூறினாள்.

அதுவரை அந்தப் பெண்ணுடன் சிரித்து இயல்பாய் உரையாடிக் கொண்டிருந்தவளைக் கண்டபடி அமர்ந்திருந்தவன், அந்தப் பெண் சென்றதும்,

“தப்பு என் மேல தான்-ங்க” என்றான் திடீரென.

என்னவென்பது போல் நோக்கியவளிடம்,

“இயல்பாப் பார்க்க வேண்டிய விசயத்தை நான்தேன் இரக்கப்படுறேன்ங்குற பேர்ல மிகைப்படுத்தி, உங்களைக் கோபப்பட வைச்சுட்டேன்” என்றான்.

நேர்ப்பார்வை பார்த்து, மனதிலிருப்பதை வெளிப்படையாய்க் கூறியவன் அந்நொடி, அகலருவியின் பிரதிபலிப்பாய் தோன்றினான் அவளுக்கு.

பதில் வேண்டித் தன் முகம் பார்த்துக் கொண்டிருப்பவனிடம் புன்னகைத்து,

“எனக்குக் கோபமெல்லாம் இல்ல விருமன். ஆனா, இரக்கப்பட வேண்டிய அவசியம் என்ன-ங்குற ஃப்ரஸ்ட்ரேஷன் மட்டும் தான். ஏன்னா, என் இயல்பு வாழ்க்கை இதனால, எந்த வகையிலும் பாதிக்கப்படல! பாதிக்கப்பட என் அப்பா விட்டதுமில்ல! ஓடி,ஆடி விளையாடுற வயசுல இருக்குற எல்லாக் குழந்தையும் ஓடி விளையாட விருப்பப்படுதா என்ன?, உட்கார்ந்து விளையாடுற விளையாட்டுல ஆர்வம் காட்டுறக் குழந்தைகளும் இருக்காங்க தான? நான் அந்த வரிசைல வர்ற குழந்தையா இருந்ததால, இதைப் பெரிய தடையா நினைக்க வேண்டிய அவசியம் வரவே இல்ல! முகவடிவம்,உடலளவெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறதில்லையா! மூக்கு பெருசா இருக்குறவன் மேல பரிதாபப்பட்றோமா?, இல்ல, காது சின்னதா இருக்கிறவன் மேல இரக்கம் காட்டுறோமா? ஏதோ நோயால ஒரு கால் சிறுத்து,நீண்டு போச்சு எனக்கு, அதனால என்ன குறைஞ்சிடுச்சு?, நல்ல படிப்பு படிச்சிருக்கேன்! எனக்கானத் திறமையை வளர்த்திருக்கேன்! காசு சம்பாதிக்கிறேன்! நல்லா சாப்பிட்றேன்! தூங்குறேன்! ஊர் சுத்துறேன்! எல்லாரைப் போலவும் இயல்பான வாழ்க்கை வாழ்ற என்னைப் பார்த்துப் பரிதாபம் ஏன் வரனும்?” எனக் கேட்டாள்.

மிக இயல்பாய்,நிமிர்வாய், அலட்டிக் கொள்ளாது பேசியவளின் முக பாவனையை அவதானித்தபடி அமர்ந்திருந்தவனிடம்,

“சின்ன வயசுல என் பக்கத்து வீட்டுல பிறவியிலேயே கண்ணை இழந்த ஒரு அங்கிள் இருந்தாரு! தன்னைச் சுத்தியிருந்த எதையும் அவர் தன் பார்வையால உணர்ந்ததே இல்ல! அந்த அங்கிளோட உலகம் எப்படியானதுன்னு தெரிஞ்சுக்காம, அவரோட பார்வையின்மை, அவருக்குக் கஷ்டத்தைத் தான் குடுக்குது-ங்குற மாதிரி நான் உருவகப்படுத்துறது தப்பு தான்!, ஆனா, எனக்குக் கால் இப்படியானாதும், ஒரு நாள் எங்கப்பா வந்து என் கைல ஒரு குச்சியைக் கொடுத்தாங்க! நானும் அதைப் பிடிச்சுக்கிட்டு நடக்கத் தொடங்கிட்டேன்! ஆனா, அந்த அங்கிளுக்கு இப்பிடி எந்த சிம்பிள் சொல்யூஷனும் இல்ல. அவருக்குக் கடைசி வரைக்கும் பார்வை கிடைக்கவே இல்ல! அதனால அவரோட ஒப்பிடும் போது, நான் என்னோட பாதிப்பைப் பெருசா நினைச்சு வருத்தப்படுறது, குற்றம்ன்னு சொல்லித் தான் வளர்த்தாரு எங்கப்பா! காசில்லாதவன், வீடில்லாதவன், படிப்பில்லாதவன், வேலையில்லாதவன்னு, எத்தனையோ இல்லாதவனுங்க வாழ்ற இந்த உலகத்துல, காலில்லாம இருக்குறது அப்பிடியொன்னும் பெரிய விஷயமில்லையே!” என்றவள்,

அவன் பார்வை தன் துணைக்கால்களின் மீது படிந்திருப்பது கண்டு,

“சந்தோஷம்-ன்ற வார்த்தையே துணைக்கால் இருக்குறதால தான் சந்தோஷமா இருக்கு. தெரியுமா?” என்றாள் மிதப்பாய்.

அவள் பேச்சுத் திறமையைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வர,

“பேச்சுல நீங்க எந்தாத்தனையே மிஞ்சிடுவீங்க போல!” என்றதும்,

தானும் சிரித்தவள், “ஐயோ! பட்டாளத்துக்காரரு பெரிய வாய்ச்சொல் வீரர் ஆச்சே! அவரு கூட-லாம் என்னால போட்டி போட முடியுமா?” என்றாள்.

“அடேங்கப்பா! கள்ளந்திரி பட்டாளத்துக்காரரு பெருமை தலை நகரம் வரை பரவியிருச்சா?,”

“ஆமா!, உங்க ஊரைச் சுத்தி கொட்டிக்கிட்டிருந்த அருவி, இப்ப டெல்லிக்கு இடம்பெயர்ந்ததோட விளைவு அது”

“பார்றா!” என்றவன், “குடும்பத்துல ஒருத்தரை விடாம, எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க போல” எனக் கூறியதும்,

“யெஸ் யெஸ்! இதென்ன பிரமாதம்?, மீனாட்சி அம்மாவுக்கு மாச மாசம், லெட்டர் எழுதுறது கூட நான் தான் தெரியுமா!” என்று அவள் பெருமை பீற்ற,

வாய் பிளந்தவன் “மீனாட்சியம்மாவா?, எங்கம்மாங்க அது” – என்று அதிர்ச்சியாய்க் கூறியதும்,

“இல்லன்னு நான் எப்போ சொன்னேன்” – என்று அசட்டையாய்த் தோள் குலுக்கினாள் அவள்.

“நக்கல் புடிச்ச ஆளு போல நீங்க” – நொடித்தவனிடம்,

“உங்க அளவு இல்லப்பா!” – கண்ணைச் சுருக்கியவளைக் கண்டு,

“இதெல்லாம் எப்பங்க நடக்குது?, முதல்ல இவ என்னத்துக்குக் கடுதாசி அனுப்புறா?, எங்களைப் பத்தின எந்த விவரமும் ஊர்ல இருக்குற எவனுக்கும் தெரியக் கூடாதுண்டு எந்தாத்தன் அங்க படாத பாடுபட்டுக்கிட்டுக் கிடக்குறாரு! இந்தக் கழுத என்னத்துக்கு இப்பிடி ஆகாத வேலை பார்த்துட்டுத் திரியுது?” என்று அவன் பொங்க,

“ரிலாக்ஸ் விருமன்! நாங்க எழுதுற லெட்டர் மதுரைல இருக்குற என் கசின் கைக்குத் தான் போகும்! அவன் மூலமா யாருக்கும் தெரியாம தான், மீனாட்சியம்மாக் கிட்ட சேர்த்திட்டிருக்கோம்!” என்றாள் அவசரமாய்.

“எங்கம்மாவுக்குப் படிக்கவே தெரியாதேங்க?”

“படிச்சுக் காட்டுறதும்,பதில் எழுதுறதும் என் கசின் தான் விருமன்” என்றவள், அவன் முகபாவனையைக் கண்டு “மீனாட்சியம்மாவைத் தவிர வீட்ல வேற யாருக்கும் இந்த லெட்டர் விவகாரம் தெரியாது” என்றாள்.

ஆனாலும் சமாதானமடையாமல் உர்ரென அமர்ந்திருந்தவனைக் கண்டுக் கவலையாகி விட,

“அருவி பாவமில்லயா விருமன்?, குளத்து மீனைக் கூட்டி வந்து கடல்ல விட்டு, கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க நீங்க! இதுல யார் கூடயும் பேசக் கூடாதுன்னு கண்டிஷன் வேற போட்டா எப்பிடி?, 3 வருஷமா ரெண்டு பேரும் லெட்டர்ல பேசிட்டு தான் இருக்காங்க! இதுவரைக்கும் யாருக்குமே தெரிய வந்ததில்ல!” எனப் பெருமையாய்க் கூறியதும்,

“பண்றது மொல்லமாரித்தனம், இதுல மெடல் வாங்குன மாறி பெருமை வேற!” என முணுமுணுத்தவன் “எங்கம்மா அப்பிடி ஆளு-ங்க! பொதுவா பொம்பளைங்கக் கிட்ட ரகசியம் தங்காதுண்டு சொல்லுவாங்க! ஆனா, எங்கம்மா அப்பிடிக் கிடையாது” என்றான்.

“சரியாச் சொன்னீங்க” என ஆமோதித்தவள், “விருமன்..” என்றாள்.

தன் பெயரை அவள் மிக உரிமையாய் உச்சரிப்பது கண்டு வியந்து, அவளை நிமிர்ந்து பார்த்தவனிடம்,

“கோபமில்லையே?” எனக் கேட்டு, “எங்கத்தையோட பேச உதவ முடியுமான்னு அருவி கேட்டதும் என்னால மறுக்க முடியல. அதனால தான் இந்த லெட்டர் விஷயத்துக்குத் துணை போனேன்! சாரி” என்றாள்.

“விடுங்க,விடுங்க! என் அயித்த மக எம்புட்டுப் பெரிய களவாணிண்டு எனக்கு நல்லாத் தெரியும்! எங்களுக்குத் தெரிய வேணாம்ண்டு அவதேன் உங்கட்ட சொல்லியிருப்பா! அமுக்குனி” என்று திட்டியவனிடம்,

“இ…இல்ல, நான் சாரி கேட்டது அதுக்கில்ல! அதிகப்பிரசங்கித்தனமா உங்கக் குடும்ப விசயத்துல நான் உள்ள வர்றதா நீங்க நினைச்சீங்கன்னா.. அதான்!” என்றாள்.

“மீனாட்சியம்மான்னு எங்கம்மாவை ரொம்ப உரிமையாக் கூப்பிட்றீங்க! அப்புறம் ஏன், உங்க குடும்பம்ண்டு பிரிச்சு பேசுறீங்க?, விடுங்க!” –என்றவனைக் கண்டு அவள் மலர்ந்து சிரிக்க,

“ஆனா, அந்தக் களவாணிக் கழுதையைப் போய் சாதுவான குளத்து மீனு-ண்டு சொன்னீங்க பாருங்க! அது ரொம்பத் தப்புங்க! அதுக்கு மன்னிப்பே கிடையாது!” என்றான்.

“ஹாஹாஹா, ஏன் விருமன்?”

“அவ-லாம் ஆளை முழுங்குற சுறா மீனுங்க” – முகம் சுழித்தவனைக் கண்டு,

“உங்களைப் பத்திப் பேசும் போது அவளும் கூட இதே மாதிரி தான் முகத்தை சுழிப்பா! உங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது போலயே விருமன்?” – என்று அவள் சிரித்தபடி கேட்க,

உதட்டைச் சுழித்தவன்“அப்பிடி என்னா சொன்னா அவ, என்னைப் பத்தி” எனக் கேட்டான்.

இதழ்கள் அசட்டையாய்க் கேட்டாலும், பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவன் விழி முழுக்க ஆர்வம் வழிவதை அளவிட்டபடி,

“நீங்க சரியான முரட்டுப்பய-ன்னு சொன்னா” எனக் கூறினாள் சுஜாதா.

“ம்க்கும்!, அதான பார்த்தேன்! என் மேல நல்ல எண்ணமே வராதே! கருவாக்குந்தாணி!”-என்று முணுமுணுத்துக் கொண்டவன், கழுத்தைத் தேய்த்தபடி,

“அது.. அத்த மக-ண்டு சின்ன வயசுல இருந்து, அவ கூட உரிமையா வம்பிழுத்து, சண்டை கட்டியே பழகிப் போச்சு! ஆனா, அவ ஒன்னும் லேசுப்பட்டவ இல்லங்க! தெனவெடுத்த கழுத, மப்பாப் பேசியே எதிர்ல இருக்குறவன் இரத்தத்தைக் கொதிக்க வைக்கும்! அதேன் கையைப் புடிச்சு முறுக்கி, முதுகுல ரெண்டு மொத்து வைச்சு விரட்டி விட்றது! ”

அகலருவி குறித்த அவனது உரிமையான பேச்சையும், சிரிப்பையும் அவதானித்துக் கொண்டிருந்தவளிடம்,

“ஆனா, இங்க வந்தப்புறம் உங்கக் கூட சேர்ந்து, ஒரு இடத்துல அடங்கி உட்கார்ந்துப் பொறுமையா அவ படமெல்லாம் வரையுறதைப் பார்க்கையில ஆச்சரியமா இருக்குங்க!, வாய் மசுரைத் தவிர அவளுக்கு எதுவும் வேலை செய்யாதுண்டு நினைச்சிருந்தோம்! ஆனா, பூவோட சேர்ந்தா நாரும் மணக்கும்ங்குற மாதிரி, உருப்படியா அவளுக்கு ஒரு திறமையை வளர்த்து விட்டதுக்கு உங்களுக்கு தான்-ங்க நான் நன்றி சொல்லனும்!” என்றான்.

“அடேங்கப்பா” என நக்கலாய் உதட்டை வளைத்த சுஜாதா, “இதை மட்டும் அகலருவி கேட்கனும்! அவளை நார்-ன்னு சொன்னதுக்கு, உங்களை நார்,நாரா கிழிச்சிருப்பா” என்று கூற,

“இந்நேரம் க்ளாஸ்ண்டு போயிருக்கும் கழுத! ஆமா, சொல்லப் போனா க்ளாஸ் எடுக்குற வாத்தி மேடமே இங்க இருக்கீங்களே! இன்னைக்குக் க்ளாஸ் இல்லங்களா?” எனக் கேட்டான்.

“இல்ல! வார,வாரம் புதன் கிழமை லீவ்!”

“6 மாசக் கோர்ஸ்ண்டு சொன்னா, ஆனா கோர்ஸ் முடிஞ்சு ரெண்டு வருசமாகியும், க்ளாஸ்ண்டு சொல்லிட்டுத் திரியுறாளே! அது என்னங்க கணக்கு?”

“நான் டீச் பண்ணும் போது, கூட உட்கார்ந்திருக்கிறது பிடிச்சிருக்குன்னு சொன்னா! அதான் தினம் கூட அழைச்சிட்டுப் போறேன்!”

“அதுசரி! க்ளாஸ் லீவ்-ண்டா இந்தக் கழுத வீட்ல என்னா செய்யுது?”

“ஆரன் வீட்ல இருக்காரா?” – ஓரப் பார்வையில் அவள் கேட்டதும்,

“ஆமா, அவன் வீட்லதேன் இருக்கியான்! ஏன்?” என்றவனிடம்,

“அதான், அவளும் வீட்ல இருக்கா போல” – குறிப்பாய் அவனுக்கு உணர்த்த நினைத்து அவள் கூற,

அவனோ அது புரியாமல், “ஆமாமா! சரியாச் சொன்னீங்க! என்னமாவது சமைச்சுக் குடுப்பியான்! திங்கலாம்ண்டு அவங்கூட உட்கார்ந்து கிடப்பா! தின்னிக் கழுத” என்று திட்ட,

அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்த சுஜாதாவிற்கு ‘அகலருவியால் இவன் நிச்சயம் வருத்தப்படப் போகிறான்’ என்கிற எண்ணம் தோன்றிக் கவலையுறச் செய்தது.

அதுவரை சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தவளின் முகம் கூம்புவது கண்டு, “என்னாச்சுங்க?” என்று அவன் கேட்க,

சட்டென முகத்தை மாற்றிச் சிரித்து, ஒன்றுமில்லையென அவசரமாய்த் தலையாட்டியவள், இருளத் துவங்கி விட்ட வானத்தைப் பார்த்து,

“உங்களுக்கு நேரமாகலையா?” எனக் கேட்டதும்,

தானும் இருளை உணர்ந்து “அட ஆமா! நேரம் போனதே தெரியல” என்றபடி எழுந்து நின்றவன், அவளும் தன்னுடன் எழப் போவதாக நினைத்து, அவள் முகம் பார்த்து நிற்க,

அந்த நொடி அவனைத் தவிர்க்கச் சொன்ன மனதோடு ஒத்துழைத்துத் தன் மடியிலிருந்த வாக்மேனைத் தூக்கிக் காட்டியவள், “இதைக் கைல தூக்கிட்டு வந்ததுக்காகவாது பத்து நிமிசம் உட்கார்ந்து பாட்டு கேட்டுட்டுப் போகலாம்ன்னு இருக்கேன்!” எனக் கூறி விடைபெறும் நோக்குடன் புன்னகைக்க, சூழ்ந்திருந்த இருளையும்,அவளையும் ஒரு நொடி பார்வையிட்டவன், பிடரியைக் கோதித் தயங்கியபடி சரியெனத் தலையாட்டி நகர, அவன் சென்ற பின், வாக்மேனை ‘ஆன்’ செய்யத் தோன்றாமல் இரண்டு நிமிடம் அமைதியாய் அமர்ந்திருந்தவள், தன்னருகே கேட்ட அரவத்தில் நிமிர்ந்து நோக்கினாள்.

அவன் தான். சுருக்கிய புருவத்துடன் கழுத்தைத் தேய்த்தபடி அவள் முகம் பாராது நின்றிருந்தான்.

“என்னாச்சு?” – யோசனையாய் விழி விரித்தவளுக்குப் பதில் கூறாது, பிடரியைத் தேய்த்துக் கொண்டவன்,

“உங்களால முடியும்ங்குற பட்சத்துல நீங்க உதவி எதிர்பார்க்குற ஆள் கிடையாது தான்! அது எனக்குப் புரியுது! ஆனா.. நேரம் போறது தெரியாம இம்புட்டு நேரம் நல்லாப் பேசிட்டு, இருட்டுக்குள்ள உங்களை, எப்பிடியோ போங்கண்டு விட்டுப்புட்டு என்னால அலட்சியமாக் கிளம்பிப் போக முடியலங்க! இது உதவி இல்ல. அக்கறை! அதுலயும் நான் மதுரைக்காரன்! பழகிட்டா உசுரை கொடுக்கக் கூடத் தயங்காதவன்! அதனால..” – என்று நிறுத்தி விட்டு இருளுக்குள் பளிச்சிட்ட அவள் முகம் பார்க்க,

அதுவரையிருந்த மனச்சோர்வு மறைந்து மெல்ல விரிந்த இதழ்களைப் பிரித்து, “அதனால?” என்றவளைக் கண்டு கொள்ளாமல்,

அவள் சாற்றி வைத்திருந்தத் துணைக்கால்களை எடுத்து அவள் புறம் நீட்டி, “பாட்டெல்லாம் வீட்டுக்குப் போய் கேட்கலாம்! இப்போ எங்கூட வாங்க” என்றான் சட்டமாய்.

அவனது அக்கறை, ஆழ் மனதில் குளிரூட்ட, நீண்ட சிரிப்புடன் எழுந்து நின்றவள் அவனிடமிருந்துத் தன் துணைக்கால்களை வாங்கிக் கொண்டு, அவனோடு நடந்தபடி,

“உங்க அக்கறையோட வேலிடிட்டி இன்னைக்கு மட்டும் தானா?, நாளைக்கு இதே நேரம் நான் மாடியில இருந்தா என்ன செய்வீங்க?,” எனக் கேட்டதும்,

ஒரு நொடி மௌனமாய் நடந்தவன், “இதுக்கு எனக்குப் பதில் தெரியல! ஆனா, நம்ம வீட்டு மொட்டை மாடியாவே இருந்தாலும், துணைக்கு ஆளில்லாம இருட்டுக்குள்ள தனியா உட்கார்றதைப் பழக்கப்படுத்திக்காதீங்க” என்றான் மெல்லமாய்.

“ஆறு வருசத்துக்கும் மேல இங்க குடியிருக்கேன்! பல நாள் இருட்டுனப்புறமும் கூட மாடில இருந்திருக்கேன்! பயப்படத் தேவையில்லை விருமன்”

“…………” – அமைதியாய் உடன் நடந்தவனிடம்,

“உங்கக் கிட்ட தான் பேசுறேன்” – என்று அவள் கூற,

“நீங்க சொன்னதை சரி-ண்டுலாம் என்னால ஏத்துக்க முடியாதுங்க! அதே சமயம், என்னால உங்களை கம்பெல் பண்ணவும் முடியாது இல்லையா?” எனக் கூறி விட்டு, மொட்டை மாடிக்கும்,அவளது வீட்டுக்குமிடையே இருந்த ஆறு படிகளில் முதலில் தான் இறங்கி, பின் நிமிர்ந்து, அவள் இறங்கி வருவதைப் பார்த்தபடி முன்னே நடந்தான்.

ஒவ்வொரு படியிலும் அவளதுத் துணைக்கால் பதியும் விதத்தைக் கவனித்து, பாதுகாப்பாக அவள் இறங்குவதை உறுதி செய்பவனைக் கண்டுச் சிரிப்பு வந்தது அவளுக்கு.

“ஆறே படி தான் விருமன்! அதுலயும் ஆறு வருஷமா எனக்குப் பழக்கமான படி!” என்று புன்னகையுடன் கூட,

“ஆனா, எனக்கு சுஜாதாவும்,இந்தப் படிக்கட்டும் இப்ப தான பழக்கம்?” என்று கேட்க, நீண்ட சிரிப்போடு விரிந்த அவள் இதழ்களைக் கண்டு,

“எல்லாத்துக்கும் சிரிக்குறீங்க! உங்க சிரிப்புக்கு ஒரு அகராதி எழுதனும் முதல்ல” என்று விட்டுத் தலையசைத்து விடைபெற்றுச் சென்று விட்டான்.

அவன் சென்ற பின்னும் அதே இடத்தில் நின்றவளுக்குக் கீழ்த்தளத்தில் கதவு திறந்த அகலருவியிடம் அவன், “கொறிக்க ஆரம்பிச்சுட்டியாடி குந்தாணி! உன்னையெல்லாம் கட்டுனா, உனக்குத் தீனி போடவே நான் தனியா சம்பாதிக்கனும் போல! வெரசா வீட்டுக்கு வர்றவனை, வேலை வாங்குறதையே பொழப்பா வைச்சிக்கிட்டுத் திரியுற! காண்டாமிருகம் மாறி இருந்த எம்பங்காளி, மூனு வருசமா உனக்கு ஆக்கிப் போட்டே, முயல்குட்டி மாறி ஆயிட்டியான்! வழியை விட்டு நகர்றி அங்குட்டு” என்று சத்தமிடுவதைக் கேட்டு சிரிப்பும்,கவலையும் ஒரு சேர எழுந்தது.

தன்னைத் திட்டியபடி உள் நுழைந்து கதவைச் சாற்றியவனை முறைத்து நின்ற அகலருவி கையிலிருந்த கீரை போண்டாவைக் கீழே வைத்து விட்டு,

“என்னமோ, உன்னையக் கட்டனும்ண்டு நான் தலைகீழா தொங்கிட்டுக் கிடக்குற மாறி பேச்சைப் பாரு!” என்று நொடித்துப் பின்,

“ஏன் டா, எனக்கு மட்டுமா அவரு ஆக்கிக் கொட்றாரு! நீ என்ன மண்ணைத் திண்டா மூனு வருசமா உயிர் வாழ்ந்திட்டிருக்க! அரைப்படி சோத்தையும், ஆறு கிலோ கறியையும் ஒருமைல திங்குறவன் பெருசா என்னையச் சொல்ல வந்துட்டியான்!” – என்று எகிறிக் கொண்டிருக்கையில், பின்னே வந்த ஆரன், அவள் தலையில் குட்டி வைத்து,

“வாயைக் கொறடி” என்று விட்டுக் கையில் டீயுடன் பலகணிக்கு நகர..

“எல்லாம் உன்னாலதேன் டா பங்காளி! இவ இங்கன வந்து இப்பிடி அவஸ்தைபட்டுட்டு இருக்குறதுக்குக் காரணமே நாமதேன்! நாம பாட்டுக்க, ஆஃபிஸ் போயிட்றோம், நாள் பூரா வீட்ல மொட்டு,மொட்டுண்டு உட்கார்ந்து கிடக்குறவ பாவம்ண்டு சொல்லி,சொல்லி நீ ஆக்கிக் கொட்டுனதோட விளைவு,இவ நல்லாத் திண்டு,திண்டு, நிண்டாக் கூட மூச்சு வாங்குற அளவுக்குக் கொழுத்து,பெருத்துப் போய்த் திரியுறா!” என்று விருமன் ஏசியதும், பொங்கியவள்,

“நான் என்னமோ இந்த வீட்ல சும்மா உட்கார்ந்து திண்டு காலத்தை ஓட்டிட்டுக் கிடக்குற மாறி பேசுற?, தெனம் 2 வாட்டி வீடு கூட்டுறேன்! 4 வாட்டி தொடைக்கிறேன்! பாத்திரம் தேய்க்கிறேன், ஒட்டடை அடிக்கிறேன்” என்று தொடர்ந்து பேசிக் கொண்டே செல்ல, இடைபுகுந்துத் தடுத்தபடி,

“இவ யார்றா இவ, பல்லி விரட்டுறேன்,எலி புடிக்கிறேன்-ண்டு வசனம் பேசிட்டுத் திரியுறா! ஏன் டி, இம்புட்டு வேலை செஞ்சு என்னாடி பிரயோசனம்! பன்னி மாறி உடம்பு அகண்டுக்கிட்டேல்லடி போகுது உனக்கு?” என்று அவன் நக்கலடித்ததும், வெகுண்டவள்,

“அகண்டுட்டுப் போறேன்! அதைப் பத்தி உனக்கென்னத்துக்கு கவலை?” – என்று சீறினாள்.

“பார்றா! நான் கவலைப்படாம??, நாளைக்கு என்னையக் கட்டிக்கிட்டப்புறம், சிங்கம் மாறி இருக்குற மாமன் பக்கத்துல, நீர்யானை மாறி நீயி நிண்டா, பார்க்குறவன் சிரிக்க மாட்டியான்!” – என்று தீவிரமாய் வினவியவனைக் கண்டுக் கொதித்துப் போய்,

“எரும்மாட்டுப் பயலே! நான் என்ன மசுருக்கு டா உன்னையக் கட்டப் போறேன்!” என்றவள் பலகணியில் நின்று கொண்டு இருவரது சண்டையையும் வேடிக்கை பார்த்தபடி டீ குடித்துக் கொண்டிருந்த ஆரனின் அருகே சென்று,

“ஏன் மாமா, நான் குண்டா இருக்குறது, உங்களுக்குக் கவலையாவா இருக்கு?” எனக் கேட்டதும், அவனோ அவளைக் கண்டுகொள்ளாது, வெளிப்புறம் திரும்ப,

பல்லைக் கடித்தவள் “மாமாஆஆ” என்று அவன் முன்னே சென்று நின்றதும், அவள் பிடரியில் அடித்தவன்,

“போடி, ஏய்ய் போடி..” என்று விரட்டியதும் மூக்கை விடைத்தவள்,

“இப்பிடி விரட்டிக்கிட்டே இருந்தீகண்டா, ஒரு நாள் இல்ல ஒரு நாள், என்னா நடந்தாலும் சரிண்டு, நான் பாட்டுக்க ரயில் ஏறி ஊரு போய்ச் சேர்ந்துருவேன் சொல்லிப்புட்டேன்” என்று மிரட்ட,

தோளைக் குலுக்கியவன், “அதுக்கெல்லாம் அவசியமே வராது!, ஏன்னா, இன்னும் ரெண்டு மாசத்துல, நாங்களே உன்னைய அள்ளிக் கொண்டு போய் ஊர்ல போடத்தேன் போறோம்! நீயே நினைச்சாலும்,இனி இங்க இருக்க முடியாது!” என்று ஆரன் கூறியதும்,

“நெசமாவா?” என விழி விரித்தவள், பின் மகிழ்ச்சியில் துள்ளியபடி,

“நெசமாவே ஊருக்குப் போறோமா?, கிழவன் கோர்ட்டு பிரச்சனையெல்லாம் தீர்த்துட்டாரா?” என்று ஆர்வமாக வினவ,

“எல்லாம் தீர்ந்துருச்சு! இன்னைல இருந்து சரியா ரெண்டே மாசத்துல ஊருக்குப் போகப் போறோம்” என்று கூறியவனின் முகத்திலும் மகிழ்ச்சி பிரதிபலிக்க,

முழுதாக மூன்று வருடங்களுக்குப் பிறகுத் தன் சொந்த ஊரில் கால் பதிக்கப் போகும் நாளை எண்ணிக் கடகடவெனக் கற்பனையில் இறங்கியவளின் குண்டுக் கண்கள், கனவு காணத் தொடங்கி விட்டது கண்டு வந்த சிரிப்பை அடக்கிய ஆரன்,

“அதெப்பிட்றி கண்ணு கூட உனக்குக் குண்டா இருக்குது?” என்று வினவியதும், மூக்கை விடைத்தவளைக் கண்டு பம்மி,

“சரி,சரி, கண்ணைக் கூட சிமிட்டாம, அப்பிடி என்ன தீவிரமா யோசிச்சிட்டிருந்த?” என்று வினவியதும்,

“அதுவா??” என வாயை அகலமாகத் திறந்தவள், “இத்தனை வருசமா நான் வரைஞ்ச படத்தையெல்லாம் எடுத்துட்டுப் போய் அந்தக் கெழவி மொகரைல விட்டெறிஞ்சு, இப்ப தண்ணீ ஊத்துப் பார்ப்போம்ண்டு, திமிரா கையைக் கட்டிக்கிட்டு நிண்டு நான் சவால் விடும் போது, கெழவி மூஞ்சி எப்பிடிப் போகும்ண்டு கற்பனைல பார்த்துக்கிட்டிருந்தேன்!” என்றவளைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்ட ஆரன்,

“ரொம்பக் கற்பனை பண்ணாதடி! உனக்காகவே கெழவி, ஆட்டுக்கல்லையும்,அம்மிக்கல்லையும் கழுவித் தொடைச்சு வைச்சுக் காத்துக்கிட்டு கிடக்காம்” என்று கூற,

“கிடக்கட்டும்! அதனால என்ன?, எனக்குப் பதிலா அம்மி அரைக்க நீங்க இருக்கையில, எனக்கென்னக் கவலை” – என்றவளை முறைத்து,

“திமிருடி உனக்கு!, உட்கார வைச்சு சோறு போட்றேன்ல அந்தக் கொழுப்பு” என்றதும், அசட்டையாய்த் தோள் குலுக்கியவள்,

“ஆமா! எத்தனை பேருக்கு அடிக்குது இம்புட்டு யோகம்! இது.. நான் பரிபூர்ணமா அனுபவிச்சு சேர்த்து வைச்சக் கொழுப்பு” எனக் கூறித் தொடர்ந்து “மாமா, கெழவி முன்னாடியும் நீயி இதே மாறி எனக்கு ஆக்கிப் போட்டண்டு வையி, அது வயிறு எரிஞ்சே செத்துரும். அதனால அங்க போனப்புறமும் நீயி எனக்கு சமைச்சுக் குடு மாமா”

“எதுக்கு?, கெழவி எனக்குப் பொட்டப்பயண்டு பேரு வைக்கவா?”

“சமைக்குற ஆம்பளைகளுக்குப் பூரா பொட்டபயண்டு பேரு வைச்சா, ஊர்ல ஒரு ஓட்டல் இருக்காது”

“முடிஞ்சா உங்கப்பத்தாளுக்கு இதைப் புரிய வை”

“அதுக்கெல்லாம் புரிய வைக்கவோ,தெளிய வைக்கவோ முடியாது மாமா! திங்க வேணா வைக்கலாம்! பேசாம, அதுக்கும் சேர்த்து நீ சமைச்சுக் குடு மாமா”

“ஆமா, உனக்கும்,உங்கொப்பத்தாளுக்கும் சமைச்சுப் போடத்தேன் நான் பொறப்பெடுத்துருக்கேன்! போடி ஏய்.. போடி”

“ப்ச், அடப் போ மாமா! எனக்கு ஆக்கிப் போட ஒருத்தன் கிடைச்சுட்டியாண்டு கெழவி முன்னாடி பெருமை பீத்தலாம்ண்டு பார்த்தா.. நீ ஒரு வழிக்கும் வர மாட்டிங்குற” என்று அவள் சலித்துக் கொண்டிருக்கையில்,

“என்னாடி இது?” எனக் கேட்டபடி அவள் வரைந்த படமொன்றைக் கையில் வைத்துக் கொண்டு இருவரின் அருகே வந்த விருமன்,

“பங்காளி, இது உன் முகம் மாறி இல்ல” எனக் கேட்டதும், படத்தை எட்டிப் பார்த்தவள்,

“அவரேதேன்” எனக் கூறியதும்,

விருமனின் கையிலிருந்ததை வாங்கிப் பிரித்துப் பார்த்த ஆரன், மல்லிகைச்செடியை நோக்கிச் சிரித்தபடி பைக்கில் அமர்ந்திருந்தத் தன் உருவத்தைக் கண்டு வியந்து,

“நீயாடி வரைஞ்ச?” எனக் கேட்டான் அகலருவியிடம்.

“ம்ம்” – மிதப்பாய் முகம் வைத்துக் கொண்டவளைக் கண்டு,

“யாத்தே! பகுமானத்தைப் பார்றா” என்று திட்டினாலும்,

“எங்கால் விரலைக் கூட அப்பிடியே வரைஞ்சிருக்கியேடி! வீடு பூரா நீ மாட்டி வைச்சிருக்கிற படத்தை ஒரு நாள் கூட நான் நிண்டு பொறுமையா பார்த்ததில்ல! திறமைக்காரிதேன் போல டி நீயி!” – என்று அவன் பாராட்டியதும், ‘இப்பவாவது என் திறமை உங்க கண்ணுக்குத் தெரிஞ்சுச்சே’ என்ற நினைப்புடன் முழுப் பற்களையும் காட்டிச் சிரித்தவளிடம் விருமன்,

“இம்புட்டு நல்லா வரைஞ்சுப்புட்டு என்னத்துக்குடி படத்தைச் சுருட்டி பரண் மேல போட்டு வைச்சிருக்கிறவ?” – எனக் கேட்டான்.

“இது நான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, மொத,மொதல்ல வரைஞ்ச கலர்ப்படம்! இதுல நிறைய தப்பு இருக்கு. உடனே படத்துல தப்பைத் தேடாதீக! உங்களுக்குத் தெரியாது. ஏன்னா, ஒரு ஆர்ட்டிஸ்ட்டால மட்டும்தேன் என்னாத் தப்புண்டு கண்டுபுடிக்க முடியும்” – ஸ்டைலாகக் கூறியவளைக் கண்டு கடுப்பாகிப் போன விருமன்,

“யாரு நீயி?, ஆர்ட்டிஸ்ட்-ஆ?” – எனக் கேட்டான்.

“ஆமா! பின்ன?, ஆறு மாசம் டிப்ளமா க்ளாஸ் போயிருக்கேன்! சர்டிபிகேட்டெல்லாம் கூட குடுத்துருக்காய்ங்க தெரியும்ல?, அதை வைச்சு நான் எங்கண்டாலும் வேலை கேட்கலாம்ண்டு சுஜியக்கா சொல்லிருக்கு!”

“அதுசரி” – என்ற ஆரனுக்குச் சிரிப்பு வந்தாலும், கூடவே பெருமையாகவும் இருந்தது.

அவன் சிரிப்பைக் கண்ட அகலருவிக்கும் முகம் பளபளக்க,

“ஏன் மாமா, அப்பிடி என்ன அந்த மல்லிகைச் செடில இருக்குண்டு, அதைப் பார்க்கும் போதெல்லாம் உங்கக் கண்ணுல லைட் எரியுது?” எனக் கேட்டாள்.

படத்திலிருந்த மல்லிகைச் செடியின் மீது பார்வையை ஓட்டியவன், “அது… நான் காலேஜ் படிக்கும் போது, எங்கூட மல்லிகா,மல்லிகாண்டு ஒரு புள்ள படிச்சுச்சு, அந்தச் செடியைப் பார்க்கும் போது அந்தப் புள்ள நினைப்பு வருதா, அதேன்..” எனக் கூறி முடிப்பதற்குள், அவன் கையிலிருந்தப் படத்தை வெடுக்கெனப் பறித்தவள், பட்டென சுருட்டிக் கசக்கி விட,

“ஏய்ய்ய்ய்,ஏய்ய்ய்ய்” என ஒரு சேரக் கத்திய இருவரையும் கண்டு கொள்ளாமல்,

“மல்லிகாவாமா, மல்லிகா!” என்று சத்தமாய் முணுமுணுத்தவளிடம்,

“கூறுகெட்டவளே! என்னத்துக்குடி நல்லாயிருந்த படத்தைக் கசக்குன?,” என்று விருமன் எகிறியதும்,

“அதேன், தப்பு,தப்பா வரைஞ்சிருக்கேண்டு சொன்னேன்ல?” – என்று கடுப்படித்தவளின் கையைப் பற்றி, படத்தை உருவிய ஆரன், கசங்கலை நீவியபடியே..

“பயலுக படிக்குற காலேஜ்ல படிச்சவன்டி நானு! சும்மா கேலிக்கு சொன்னது புரியாம, இப்பிடிக் கசக்கிப்புட்ட! பைத்தியக்கார சிறுக்கி” – என்று திட்டினான்.

“ஓஓ! கேலிக்கு சொன்னீகளா?,” என்று தலையைச் சொரிந்து பின், “ப்ச்,அதைப் போட்டு என்னத்துக்கு நீவிக்கிட்டுக் கிடக்கீக! விடுங்க மாமா! அதை விட சூப்பரா, இன்னொரு படம் வரைஞ்சு தரேன் நானு”- என்று முன்னே வந்தவளின் தலையில் தட்டி,

“ஒன்னும் தேவையில்ல! போடி” – என்று விரட்டிய ஆரனைக் கண்டு சுருங்கிப் போன முகத்துடன் நின்றவளிடம்,

“அவன் கேலிக்குச் சொன்னானோ, உண்மையைச் சொன்னானோ! அவன் பொம்பளப்புள்ள பேரைச் சொன்னதும், உனக்கு என்னத்துக்குடி அம்புட்டுக் கோவம் வருது?” – என்று விருமன் கேட்க,

இன்னமும் கசங்கலை எடுத்து விட்டுக் கொண்டிருந்த ஆரனைப் பார்த்தபடி, “அகலருவி-ண்டு ஒரு நாள் ஒரு பொழுது என் பேரை வாய் விட்டுச் சொன்னது கிடையாது!, மல்லிகாவாமா, மல்லிகா” என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை, தொண்டைக்குள் அடக்கியவள், விருமனை முறைத்து விட்டு நகர்ந்தாள்.

“கோவத்தைப் பார்றா! அடியேய்! உன்னையக் கட்டிக்கப் போற மாமன், நான் எத்தனை புள்ளைக பேரைச் சொன்னாலும் எஃகிரும்பு மாறி நிற்குறவ! இவன் ஒத்த புள்ள பேரைச் சொன்னதுக்கு, ஒப்பாரி வைக்குற?” – என்று சவுண்டு விட்ட விருமனின் பிடரியில் அடித்து,

“போய் வேலையைப் பார்றா டேய்! எப்பப் பாரு, அவ கூட வம்பு வளர்த்துக்கிட்டு” – என்று திட்டி விட்டுத் தானும் நகர்ந்தான் ஆரன்.

டெல்லியில் இங்கு அகலருவித் தான் வரைந்த படங்களை சோலையாத்தாளிடம் காட்டிப் பெருமை பீற்ற வேண்டுமென்று நினைத்த அதே நேரம், அங்கு கள்ளந்திரியில் சோலையாத்தாள், அன்று தங்களது இல்லத்துக்கு வருகை தந்திருந்த வள்ளியின் மாமியாரோடு வளவளத்தபடித் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

“கன்னு போட்டு ஒரு மாசம் ஆன மாடு ஒன்னு, பால் கறக்கவே விட மாட்டேங்குது சின்னம்மா, மடியைத் தொட்டாலே உதைக்குது!, காலைக் கட்டுனாலும் துள்ளிட்டுத் திரியுது!, மடிவீக்கம் இருக்குற மாறியும் தெரியல! என்னாதேன் பண்றதுண்டு ஒன்னும் புரியல?” – எனக் கேட்ட வள்ளியின் மாமியாரிடம்,

“மாட்டுக்கு இது முத கன்னு-ங்குறதால கூச்சம் கொண்டு, இப்பிடி உதைக்குது போல! சில மாடுங்களுக்கு இது பிறவிக்குணமா இருக்கும்! நாளாக,நாளாகத்தேன் இதைச் சரி செய்ய முடியும்! இனி பால் கறக்கையில, ஏதாவது செஞ்சு அது கவனத்தைத் திசை திருப்பி விட்டுப்புட்டு ,அப்புறம் கறந்து பாரு” – என்று கூறிக் கொண்டிருந்த வேளைக் கட்டுத்தரையிலிருந்து வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார் வீரைய்யன்.

கருப்பனுக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சங்கிலியன் கட்டுத்தரைப் பக்கம் செல்வதை நிறுத்தி விட்டதால், மாடுகளுக்குத் தீவனம் போடுவதும்,தண்ணீர் காட்டுவதும் கிழவரின் பொறுப்பாகிப் போனது.

முன்பு போல் சாதிப்பெருமை பேசிக் கொண்டு கள்ளுக் கடையிலும், மொட்டைப் பாறையிலும் உருண்டு கிடக்காமல், தன் மச்சானுடனும்,மகனுடனும் சேர்ந்து பொறுப்பாய் நிலபுலன்களைக் கவனிக்கும் சங்கிலியனின் மாற்றம் கண்டு ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் திருப்தி தான் என்றாலும், கருப்பன் விசயத்தில் அவருக்குண்டானக் குற்ற உணர்ச்சி அவரை இன்று வரை கட்டுத்தரையில் கால் பதிக்க விடவில்லை. மருமகனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட பட்டாளத்துக்காரரும், அவரைப் பெரிதாக வற்புறுத்தவில்லை.

ன்னைக் கண்டதும் எழுந்து நின்ற வள்ளியின் மாமியாரைக் கண்டு, “என்னத்துக்கு எந்திரிக்குற?, சும்மா உட்காரு தாயி” என்ற பெரியவர், தங்கையிடம் “வீட்டுக்குள்ளார கூட்டிப் போறத விட்டுப்புட்டு, வாசல்ல உட்கார்ந்துக்கிட்டு என்னா கழுத வளவளத்துக்கிட்டிருக்க?”- என்று அதட்ட,

“இருக்கட்டும்ங்க மாமா, அம்புட்டுதேன், நான் பொறப்பட்டுட்டேன்! நான் இங்கன உட்காரவும்தேன், சின்னம்மாவும் கூட உட்கார்ந்திருச்சு.!” என்றவரிடம், “இருட்டிருச்சுல்ல, இனி எங்குட்டுப் போவ?, இருந்து விடிஞ்சதும் போ!” என்று பெரியவர் கூற,

“இல்லங்க மாமா!, அங்கன உங்க பேத்தி ஒத்தைல கிடப்பா! மாரி வரவும் நேரமாகும் இன்னிக்கு” என்றவரிடம் தலையாட்டி, “சாப்பிட விட்டு சிலம்பன் கூட அனுப்பி வை தாயி” என்று தங்கையிடம் கூறி வீட்டினுள் சென்றார் பெரியவர்.

கொல்லை நோக்கி செல்பவரின் முதுகை வெறித்த வள்ளியின் மாமியார், “ஏன் சின்னம்மா, உம்ம பேரன்ய்ங்களும்,பேத்தியும் எங்க இருக்காய்ங்க,என்னா ஆனாய்ங்கண்டு இப்ப வரை ஒரு சேதியும் தெரியலையா?” என்று மெல்லிய குரலில் கேட்க,

“ப்ச்” என உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்த சோலையாத்தாள், கோபமும்,ஆதங்கமுமாய்,

“அந்தப் பயலுகளை விடு! ஆம்பளப் பயலுக அவிங்க, எங்குட்டுண்டாலும், எப்பிடிண்டாலும் பொழைச்சுக்குவாய்ங்க! அவிங்களைப் பத்தி எனக்கு எந்தக் கவலையுமில்ல! ஆனா, இந்தப் பொட்டச் சிறுக்கி, ரெண்டு இளந்தாரிகளோட கூட்டுச் சேர்ந்துக்கிட்டு, ஊரு,உலகம் தன்னைப் பத்தி என்னா பேசும்ங்குற நினைப்பே இல்லாம இப்பிடிக் கொண்டி மாடாத் திரியுறாளே!, பொம்பளையா அடக்கமா வீட்டுக்குள்ள அடங்கி இருடி-ண்டு நான் அவ கூட மல்லுக்கு நிண்டப்பலாம் அவ தாத்தன், என்னையத் திட்டி அதட்டுனாரு! அவரு குடுத்த இடந்தேன், இந்தக் கழுத கொஞ்சமும் பயமில்லாம, இம்புட்டுத் தகிரியமா பெத்த அப்பன்,ஆத்தாளை தவிக்க விட்டுப்புட்டு,வீட்டையும்,ஊரையும் மறந்து எங்கனயோ அநாதையா கிடக்குது!” என்று புலம்பத் தொடங்க, அவரை ஓரப் பார்வையில் நோக்கிய வள்ளியின் மாமியார்,

“நீ புலம்புறது நியாயந்தேன் சின்னம்மா!, ஊர்ப்பக்கம் தலை காட்டாம, ரெண்டு பயல்களோட அந்தப்புள்ள கண்காணாத இடத்துல இருக்குறதைப் பத்தி, ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாறிதேன் பேசுறாய்ங்க! மட்டமான பேச்செல்லாம் கூடக் காதுல விழுகுதுண்டு மாரி சொல்லிக்கிட்டிருந்தியான்” என்று ஒத்து ஊத,

புலம்புவதை நிறுத்தி விட்டு வெடுக்கென எழுந்து நின்ற சோலையாத்தாள், கொண்டையை முடிந்தபடி,

“மட்டமா பேசுறாய்ங்களா?, எவன் டி அவன் எம்பேத்தியைப் பத்தி மட்டமான பேச்சு பேசுறவன்?, எவன்-ண்டு கை காட்டு! அவன் தலையைத் திருகி உப்புக்கண்டம் போட்டுத் தகரத்து மேல காய வைச்சுப்புட்றேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டுப் பெருங்குரலெடுத்துக் கத்தத் துவங்க, ஒரு நொடி திடுக்கிட்டாலும், அடங்காமல்,

“இல்ல சின்னம்மா! இத்தனை வருசமா அந்தப் பயல்களோட தனியா இருந்துட்டு வந்த புள்ளைய எவங்கட்டுவியான்-ண்டு ஒரு பேச்சு ஓடுது! அதைத்தேன் சொன்னேன்! ஒழுக்க சீமாட்டியான சீதையவே சந்தேகப்பட்டுத் தீக்குளிக்கச் சொன்ன உலகம் தான சின்னம்மா இது?” – என்றார் மழுப்பலாய்.

“எவ டி அவ! சொன்னவன் வாய்ல தீயை அள்ளி போட்றதை விட்டுப்புட்டு,அவ என்னத்துக்குடி தீக்குளிச்சா?, எம்பேத்தி எப்பிடி ஆளு-ண்டு தெரிஞ்சும், இப்பிடிப் பேச்சு பேசுறியேடி! கதிரருவாளைக் கொண்டி பேசுறவன் தலையை வெட்டிக் கக்கத்துல சொருகிக்கிட்டுக் கண்டுக்காம போறவ அவ! எம்பேத்தியைக் கட்ட, புதுசா என்னத்துக்குடி எவனும் வரனும்?, அவளைக் கட்டிக்கப் போறவனே, கூடதேன இருக்கியான். பட்டாளத்துக்காரரு வளர்ப்புகளோட ஒழுக்கத்தைப் பத்திப் பேச ஊர்ல ஒருபயலுக்கும் தகுதி கிடையாது! பொறுக்கித் திங்குற நாயெல்லாம், பொறுப்பான புள்ளைகளைப் பத்திப் பொறணி பேசுறதா!” – கடுப்பில் சிடுசிடுத்த சோலையாத்தாளைக் கண்டு, வந்த வேலை முடிந்து விட்டதை எண்ணித் திருப்திபட்டுக் கொண்ட வள்ளியின் மாமியார்,

“விடு சின்னம்மா! உம்ம பேத்தியும்,பேரன்மார்களும் நேர்ல வர்ற வரை, ஊர்ப்பயலுக கற்பனைக்குக் கடிவாளம் போட முடியாது” என்று விட்டு “சரி, நான் வாரேன்” எனப் புறப்பட எத்தனிக்க,

“நில்லு” என்ற சோலையாத்தாள்,

“உங்கொழுந்தன் பொண்டாட்டி (மணிவண்ணனின் தாய்), மலைச்சாமி தோட்டத்துல கூலி வேலைக்குப் போறா-ண்டு கேள்வி பட்டேன்!” என்று கேட்டார்.

அதுவரையிருந்த வெற்றிக் களிப்பு மாறி முகம் தொங்கிப் போக, எங்கே தன் அக இறுக்கத்தைக் கிழவி கண்டு கொண்டால், தன் சொத்தும் பறி போய் விடுமோ என்ற எண்ணத்தில், எச்சில் விழுங்கியவர், அவசரமாய் முகத்தை மாற்றி,

“ஆமா சின்னம்மா!, மகன்-ண்டு ஒரு களவாணிப் பயலை பெத்தப் பாவத்துக்கு, காலம் போன காலத்துல இம்புட்டுக் கொடுமையையும் அனுபவிக்குறா அவ! பட்டை சங்கிலியை மாட்டிக்கிட்டு பகட்டோட திரிஞ்சவ, இன்னைக்குக் கஞ்சிக்கு வழியில்லாம, காட்டு வேலைக்குப் போய்க்கிட்டுக் கிடக்கா” – என்றார்.

“ஓரகத்தி மேல அம்புட்டுப் பாசமிருந்தா, உன் வீட்ல குடி வைச்சுக் கஞ்சி ஊத்த வேண்டி தான நீயி?”

“காட்டுலயும்,தோப்புலயும் கை நிறையக் காசு பார்த்தவ, வெயில்ல வெந்து சாகுறது பொறுக்காம, நம்ம வீட்ல கூட்டி வந்து வைச்சுக்கலாம்ண்டு நாஞ்சொன்னேன் சின்னம்மா, ஆனா எம்புருசன்தேன், ஒத்துக்கிடல”

“எப்பிடி ஒத்துக்குவியான்?, உங்கொழுந்தன் மகன் (மணிவண்ணன்) காசு இருந்தவரை போட்ட ஆட்டத்துக்கெல்லாம், கையைத் தட்டிக்கிட்டுக் கிடந்த சனம், இப்ப காசு போனதும் காறில்ல துப்பிக்கிட்டிருக்கு! வாயில்லா ஜீவனைக் கொன்-ண்ட பாவத்துக்குத்தேன் இப்பிடிக் கையை இழந்து,காசை இழந்து கஞ்சிக்கு வக்கில்லாம,ஓட்டாண்டியாத் தெருவுல நிற்குறியான் *** பய! உங்கொழுந்தன் பொண்டாட்டி வருசம் தவறாம சுடலை மாடனுக்குப் பொங்க வைச்சு என்னா பிரயோசனம்?, கும்புட்ற சாமி குரவளையை நெரிச்சவன் கையில மண்ணு எப்பிட்றி தங்கும்?” – கிழவி இது தான் சாக்கென்று வெளுத்து வாங்கியதும், ரோஷப்பட்டப் பெண்மணி,

“மாட்டுக்கு வெசம் வைச்சது நான் இல்ல-ண்டு சாதிக்கிறியானே சின்னம்மா மணிவண்ணன்! உம்ம மவனுக்கும்,அந்தக் கொல்லங்குளத்துக்காரனுக்கும் ஏற்கனவே பகையாம்ல! உம்ம மவன் மேல பழி விழுகனும்ண்டுதேன் அவன், தண்ணீல வெசத்தைக் கலந்தியாண்டு சொல்றானே சின்னம்மா!”

அவர் தன் மகனை இழுத்ததும் எகிறிய கிழவி“ஓஹோ! ஆத்தாட்ட அள்ளி விட்டக் கதைய, தகிரியமா போலீசு கிட்ட சொல்லச் சொல்லு பார்ப்போம் அவனை! தலை கீழா கட்டித் தொங்க விட்டுத் தோலை உரிச்சுப்புடுவாய்ங்க!” – எனக் கத்தியதும் பம்மியவர்,

“ஏ..ஏன் சின்னம்மா, ஏற்கனவே உம்ம பேரன்ய்ங்களும், பேத்தியும் சேர்ந்து அவன் கையை சேதாரம் பண்ணிப்புட்டாய்ங்க! பெரியவரு, அவன் சொத்தை உருவி விட்டுப்புட்டாரு! வெறும்பயலாப் போனவன், வேதனை தாங்காம, தெனம் குடிச்சுப்போட்டுக் கம்மாயோரம் சோறு,தண்ணியில்லாம கிடக்குறியாண்டு அவகாத்தா புலம்பிட்டுக் கிடக்குறா! பட்டாளத்துக்காரரை எதிர்த்து அவன் பட்ட அனுபவம், இனி அவனை எந்த வம்பு,தும்புக்கும் துணை போக வைக்காது சின்னம்மா! அவன் பல்லு புடுங்குன பாம்பு சின்னம்மா, அவனால இனி யாருக்கும் எந்தத் துயரமும் வராது! சனியன்புடிச்சவன், உசுரு இருக்குற வரை, எங்கயாவது ஒரு மூலைல கஞ்சியைக் குடிச்சுக்கிட்டு கிடக்கட்டும்ண்டு விட்ருங்க சின்னம்மா! போலீசு,கோர்ட்டெல்லாம் வேணாம்!” என்றார்.

கிழவி இறுகிய முகத்துடன் அமர்ந்திருப்பது கண்டு, கண்ணீர் விட்டபடி,

“சொத்து சுகமில்லாமத் தெருவுல நிற்கிறதைப் பத்தி கூட அவன் ஆத்தாளுக்கு எந்தக் கவலையுமில்ல! மவனோட குறுக்குப்புத்திக்குக் கிடைச்சத் தண்டனை இது-ண்டுதேன் நினைக்குறா! ஆனா, அவனை ஓட ஓட விரட்டுன பட்டாளத்துக்காரரு, எங்க, அவனை செயில்ல தள்ளி மொத்தமா முடக்கிப் போட்ருவாரோ-ண்டுதேன் தெனம்,தெனம் பயந்து செத்துட்டுக் கிடக்கா! ஒத்த மவனைப் பெத்து வைச்சிருக்கால்ல சின்னம்மா, அவனால கால் காசுக்குப் பிரயோசனமில்லண்டாலும், அவன் தன் கண் முன்னாடி இருந்தாலே போதும்ண்டு நினைக்குறா. ஒரு தாயா அவளோட பயம், நியாயம்தேன?” – என்று கூறத் தோளைக் குலுக்கிய சோலையாத்தாள்,

“இப்ப அழுது பொரண்டு ஒரு பிரயோசனமுமில்ல! நிலைமை கை மீறிப் போச்சு, ரெண்டு மாசத்துல கோர்ட்டு தீர்ப்பு வந்தப்புறம், உங்கொழுந்தன் மவன் செயில்ல கம்பியை எண்ணிட்டு உட்காரப் போறதை யாராலயும் தடுக்க முடியாது” – என்று கூற, ஒரு நொடி ஆத்திரத்தில் மூக்கு விடைத்தாலும், மறு நொடி அடங்கி,

“என்னமோ சின்னம்மா, அவன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்” என்றவர் “நான் வாரேன்!” எனக் கூறி நகர்ந்து விட்டார்.

“சிங்கமா வளர்த்தவனை அநியாயமாத் தூக்கிக் குடுத்துப்புட்டு, வெந்த வயிறைத் தணிக்க வழியில்லாம திரியுறோம் நாங்க! செய்றதையும் செஞ்சுப்புட்டுக் கண்ணீர் விட்றாளுக களவாணி *****” – என்று புலம்பியபடி உள் நுழையும் சோலையாத்தாளின் குரலைக் கேட்டபடி உள் அறையில் கண் மூடி அமர்ந்திருந்தார் பெரியவர்.

பேரன்,பேத்திகளின் சத்தத்தில் எப்போதும் கலகலத்துக் கிடக்கும் வீடு, இன்று யாருமற்று வெறிச்சோடிப் போய் அமைதியுடனிருந்தது அவரை சோர்வாய் உணர வைத்தது.

பேராண்டிகளும்,பேத்திமார்களும் உடனிருந்த போது ஒரு நொடி கூட அவர் உள் அறைக்குள் ஒதுங்கியதில்லை! ‘தாத்தா,தாத்தா’ என்றபடி ஏதேனுமொரு தேவைக்கு அவரைத் தேடி வந்த வண்ணமிருப்பார்கள்.

ஆரன்,விருமன் மற்றும் அகலருவி டெல்லி சென்ற பிறகு, நடக்கும் அனைத்திற்கும் ஊ-னா சுழி இட்டதுத் தான் தானோ என அழுது வடிந்த புவியரசியை அள்ளிக் கொண்டு போய் வாடிப்பட்டியிலிருக்கும் வீரபாண்டியின் வீட்டில் விட்டு விட்டார் பெரியவர்.

கை போன ஆத்திரத்தில் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மணிவண்ணனும்,அவனது ஆட்களும் அகலருவி சிக்காத ஆத்திரத்தில், புவியரசியின் மீது கை வைக்க வாய்ப்பிருப்பதால், அவளை வீரபாண்டியின் வீட்டில் வைத்துப் பாதுகாத்தார். அங்கிருந்தேத் தனது பன்னிரெண்டாம் வகுப்பைத் தொடர்ந்த புவியரசி, தற்போது பாத்திமா கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

எப்போதும் மாமனுக்கு எதிராகச் செயல்படும் சங்கிலியன், கருப்பனின் இழப்பிற்குப் பிறகு அவருக்கு ஆதரவாக நின்றதால், தன் குடும்பத்தினரைப் பாதுகாக்கும் பொறுப்பை அவரிடம் விட்டார்.

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து மணிவண்ணன் தேறி வரும் முன்பாக, தனது தோட்டத்து வீட்டு ட்ரங்க்கு பெட்டியைத் திறந்திருந்தவர், தன்னிடமிருந்து மணிவண்ணன் ஆட்டையப் போட்ட நிலங்களுடைய அதர பழசான பட்டாக்களையும், பத்திரங்களையும் தூசி தட்டினார்.

சார் பதிவாளரான தனது இரண்டாவது மகனிடம் கையிலிருந்தப் பத்திரங்களைக் கொடுத்து சரி பார்க்கச் சொல்ல, கடந்த 30,40 வருடங்களில் அந்நிலங்கள் யார் கைக்கெல்லாம் சென்று வந்ததென்கிற பத்திர விவரங்களைத் தோண்டி எடுத்திருந்த வீரபாண்டி, சம்மந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் நிலமோசடி வழக்கு தொடுக்க, அதில் ஒருவனாக மணிவண்ணனும் சிக்கினான்.

அவனது 80 சதவீத சொத்துக்களும், வழக்கு முடியும் வரை அனுபவிக்கக் கூட முடியாதவாறு முடக்கப்பட, மருத்துவமனையிலிருந்துத் திரும்பியவனுக்குச் சிதைந்து போனக் கையை விட, தவறிப் போன சொத்து பெரும் மன உளைச்சலைக் கொடுக்க, வெறியாகிப் போனவன், தன் பங்குக்குத் தனது கை போனக் கதையைச் சொல்லிக் கிழவரின் பேராண்டிகளின் மீது போலீஸ் புகார் கொடுக்க முற்பட்டான்.

அரசுப்பணி புரியும் தன் பேராண்டிகளின் மீது புகார் பதிவு செய்யப்பட்டால், அவர்களது எதிர்காலம் வீணாகி விடக் கூடுமென்கிற எண்ணத்தில், அவன் கொடுத்த புகாரை உழட்டி விட நினைத்து இடைபுகுந்த பெரியவர், கருப்பன் விவகாரத்தில் அவன் மீது பதிவு செய்த வழக்கை உள்ளிழுத்து விட்டார்.

மனசாட்சியின்றி அவன் செய்த செயல் குறித்துத் தன் பத்திரிக்கையில் அவனது புகைப்படத்துடன் கலாமணியம்மாள் செய்தி வெளியிட்டு விட, Blue Cross-ல் இருந்துக் கிளம்பி வந்தக் கூட்டமொன்று, அவன் வீட்டின் முன்னே படையெடுத்ததில், உள்ளூர் போலீசிடமிருந்தத் தனது செல்வாக்கையும் மீறி, உடனடியாகக் கைது செய்யப்பட்டான் மணிவண்ணன்.

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டப் பெரும்பாலானோர் வசிக்கும் கிராமமதில், அவன் மாட்டிற்கு விஷம் வைத்துக் கொன்ற விஷயம், ஊர்மக்களைக் கொதிக்கச் செய்தாலும், அதுவரை மணிவண்ணனின் ஆளுமைக்கும், ஆட்களுக்கும் பயந்து அமைதியாயிருந்தவர்கள், அவனது சிறைச் சம்பவத்திற்குப் பிறகு “வெளங்காத பய, இப்புடிப் பண்ணிப்புட்டானே! இவனுக்குக் கையி போனதெல்லாம் பத்தாது! தலை போயிருக்கனும்” என்று சத்தமாகவே பேசத் தொடங்கி விட,

சொத்தையும் இழந்து, ஊராரின் முன்னே மான,மரியாதையையும் இழந்து குன்றிப் போன மணிவண்ணன், உள்ளே பொங்கிய ஆத்திரத்திற்கு வடிகால் தேட முடியா வண்ணம், ஜெயிலுக்குள் அடைக்கப் பட்டான்.

எதிர்வினையாற்ற அவனுக்கு வாய்ப்பளிக்கக் கூடாதென்பதில் தீவிரமாயிருந்த பெரியவர், மிகக் கவனமாய்க் காய் நகர்த்தினார்.

எப்படியோ,அடித்துப் பிடித்து ஒரு மாதத்தில் ஜெயிலிலிருந்து வெளி வந்தவனுக்கு, தனக்கு வருமானம் தரும் வழிகளனைத்தையும் கிழவர் அடைத்து வைத்ததுக் கையறு நிலையைக் கொடுத்தாலும், எப்படியேனும் வழக்கில் சிக்கியிருக்கும் சொத்துக்களை மீட்டு விட வேண்டுமென்கிற முனைப்பில், குறுக்கு வழியில் முயன்று, கடைசியில் மிச்சமிருக்கும் 20 சதவீத சொத்துக்களையும் அடுத்த இரண்டு வருடத்தில் மொத்தமாய் இழந்திருந்தான்.

இடைப்பட்ட நாட்களில் சொத்துக்களைக் கைப்பற்றப் போராடிக் கொண்டிருந்தவனின் மனதில், தனது கை போன சம்பவமும், கிழவரது பேராண்டிகளையும்,பேத்தியையும் பழி வாங்க துடித்த ஆத்திரமும் சற்றும் அடங்காதிருக்க, அவர்கள் மூவரும் சென்ற திசை கூட அறியாதுக் குழம்பி நின்றவன், பெரியவரையும்,அவர் குடும்பத்தாரையும் விடாது தொடர்ந்த வண்ணமிருந்தான்.

இருக்கும் சொத்து பறி போகும் நிலை வந்தும் கூட, கிழவரைத் தோற்கடிக்க வேண்டுமென்கிற வெறியில் மதியிழந்து ஆட்டம் ஆடுபவன், அடங்கும் வரைக் கைக் கட்டிக் காத்திருக்க முடிவு செய்தார் பெரியவர்.

கை நிறையக் காசு,பணத்தோடு இருந்த போது, அவன் தூக்கி எறியும், ஒற்றை எலும்புத் துண்டுக்காக நாக்கை நீட்டிக் கொண்டு அவன் காலடியில் காத்திருந்தக் காக்காய்க் கூட்டம், அவன் ஓட்டாண்டியாய்ப் போனதும், சத்தமின்றிப் பறந்து விட, ஒற்றைக் குரங்காய்த் தனித்து விடப் பட்டான் மணிவண்ணன்.

பெரியவர் வழக்கு தொடுத்த நிலங்கள் போக, எஞ்சியவற்றைக் காத்துக் கொள்ளுமாறுக் கூறிய சொந்த,பந்தங்களின் அறிவுரையை அவன் அசட்டையாகக் கடந்ததன் விளைவு, சொத்து மொத்தமும் கை விட்டுப் போன பின்பு, அவனை ஆதரிக்கக் கூட ஆள் இன்றி அநாதையாய் நின்றான்.

எப்படியும் சொத்து கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் வீட்டைக் கூட விற்றுத் தீர்த்தவனை அடக்க முடியாது, அழுது புலம்பிய அவன் தாய், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாது போனதும், வயிற்றுப் பிழைப்பிற்காகக் கூலி வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதுவரை ஏக்கர் கணக்கில் விவசாயம் புரிந்து ஏக,போக வாழ்க்கை வாழ்ந்த பெண்மணி, பெற்ற மகனைச் சரியாக வழி நடத்தி வளர்க்காத குற்றத்திற்குக் கிடைத்தத் தண்டனை இதுவென எண்ணிக் கொண்டு, மான ரோஷம் பார்த்த மூளையின் கூக்குரலைத் தாண்டி வயிறு கொடுத்த அவலக்குரலுக்கு செவி சாய்த்து, வேலைக்குச் செல்லத் துவங்கினார்.

ஒரு காலத்தில் முதலாளியாக இருந்து தங்களுக்குச் சம்பளம் கொடுத்தவர், இன்றுத் தங்களில் ஒருவராக நிற்பது கண்டு, உடனிருப்பவர்கள் அவரது முதுகுக்குப் பின்னே ஜாடை பேசினாலும் பொறுத்துப் போயாக வேண்டிய நிலைக்கு ஆளானார்.

தள்ளப்பட்ட நிலையும், விதவிதமான ஏச்சு,பேச்சுக்களும் அவரைத் தளர்வடையச் செய்திருக்க, இழுவையில் இருக்கும் வழக்குகளுக்குத் தீர்ப்பெழுதப் பட்டால், மணிவண்ணனுக்குக் குறைந்தது இரண்டாண்டுகளேனும் சிறை தண்டனைக் கிடைக்குமெனத் தன் கொழுந்தன் மகனான மாரி (அகலருவியின் அக்கா வள்ளியின் கணவன்) அவரிடம் கூறியதும், அரண்டு போனவர், தினம் தன் ஓரகத்தியிடம் அழுது புலம்ப, அவர் கஷ்டம் பொறுக்காது, வள்ளியின் மாமியார் அவ்வப்போது பெரியவரின் வீட்டிற்கு வருகை தந்து அவரது நிலை குறித்துப் பெரியவரிடம் ஜாடையாகக் கூறத் தொடங்கினார்.

“கருப்பன் குடிக்குறத் தண்ணீல இதைக் கலந்துரு சித்தப்பு” – என்று விசத்தை நீட்டிய அவனது வலது கை, மோட்டார் அறையில் ஏற்பட்டத் தீ விபத்தில் கருகிச் சிதைந்திருக்க, **** கழுவும் கையில் சோற்றை அள்ளித் திங்க வேண்டிய அவலநிலையை எண்ணித் தினம்,தினம் மருகி, உள்ளுக்குள் ஒடுங்கியவன், அடுத்தவரின் உதவியின்றிச் சொந்தமாய், பீடி கூட பற்ற வைத்துக் கொள்ள முடியாத அளவிற்குத் தான் கையாலாகாதவனாய் மாறிப் போனதை எண்ணி மொத்தமாய் உடைந்து போனான்.

எந்நேரமும் 4 விழுதுகளை உடன் வைத்துக் கொண்டுக் காலரைத் தூக்கி விட்டபடி சண்டியராய் ஊருக்குள் வலம் வருபவனுக்குத் தான் இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது போக, அவன் அன்னையைப் போல் எவனிடமும் வேலைக்குச் சென்று கை நீட்டிச் சம்பளம் வாங்குவதற்கு சுயகௌரவம் இடம் கொடுக்காததால், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கத் தொடங்கினான்.

சரியான ஊனின்றி, உறக்கமின்றிப் பாதிப் பைத்தியமாய் அடைபட்டுக் கிடந்தவன், ஒரு கட்டத்தில் அன்னை வெயிலில் வெந்து பாடுபட்டுச் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தைப் பறித்துக் கொண்டு போய் மொத்தமாய்க் குடித்து விட்டுக், கள்ளுக்கடை வாசலில் படுத்துக் கொண்டுப் போவோர்,வருவோரிடமெல்லாம் வம்பு செய்யத் துவங்கினான்.

குடித்து விட்டு ஆற்றோரத்திலும்,தெருவோரத்திலும் கேட்பாரற்று, சுயநினைவின்றிக் கிடப்பவனை அழுகையும்,புலம்புலுமாய் அவன் அன்னைத் தினம் இழுத்து வந்து வீடு சேர்ப்பதைக் கண்டப் பெரியவருக்கு, ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்கிற எண்ணம் தான்.

மூன்று வருடமாக இழுவையில் இருந்த வழக்குகள், பெரியவர் மற்றும் அவரது மகன்களின் விடா முயற்சியால் முடிவு பெற்று, அடுத்த இரண்டு மாதத்தில் தீர்ப்பு வருவதாக இருக்க, அவன் ஆடும் ஆட்டமெதுவும், எந்த வகையிலும் தன் பேரப்பிள்ளைகளைப் பாதித்து விடக் கூடாதென்பதற்காக, அதுவரை மூவரையும் ஊருக்கு வர வேண்டாமெனத் தடுத்து வைத்திருந்தப் பெரியவர், தீர்ப்பு வரும் நாளன்று மூவரும் உடன் இருக்க வேண்டுமென நினைத்து, ஊர் திரும்பும்படிக் கூறி வைத்திருந்தார்.

ஆரம்பத்தில், விடாது தொடர்ந்த மணிவண்ணனின் ஆட்களது கண்ணில் படாமல், மாதத்திற்கிருமுறைத் தன் மகன் வீரபாண்டியின் உதவியுடன் தன் பேராண்டிகளிடமும்,பேத்தியிடமும் தொலைபேசியில் உரையாடி, இங்கு நடப்பதைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

மூவரும் வெளியூரில் பாதுகாப்பாக இருப்பதாக வீட்டிலிருப்பவர்களிடம் சொல்லி வைத்திருந்தவர், மேற்படி அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என எந்த விவரத்தையும் வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

சோலையாத்தாளும்,வீரலட்சுமியும் அகலருவி குறித்து அவ்வப்போது புலம்பித் தவிக்கும் வேளைகளில், அவள் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள், தேவையில்லாது கவலை கொள்ள வேண்டாமென அதட்டியவர், அப்படியும் விடாது புலம்பியவர்களை பின்பு கண்டு கொள்ளவே இல்லை. மீனாட்சியும், தனக்கும்,அகலருவிக்குமான கடிதப் போக்குவரத்துக் குறித்து எவரிடமும் மூச்சு விடவில்லை.

டேராடூனில் ராணுவப் பயிற்சியிலிருந்த அழகருக்கு, அடுத்த இரண்டு வருடத்தில் பணி நிரந்தமாகியிருந்தது. அவனுக்கும்,பெரியவருக்குமான கடிதப் போக்குவரத்தை வழக்கம் போல் கலாமணியம்மாள் பார்த்துக் கொண்டார்.

எவன் ஒருவனைப் பகடைக்காயாக உருட்டித் தன் அற்ப எண்ணங்களுக்குத் தீனி போட மணிவண்ணன் நினைத்தானோ, அவன் ‘நீ உருட்ட நான் காய் அல்ல டா! காலன்’ என ஒருபுறம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருவது புரியாது, தனக்கிருந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், அழகர் குறித்த நினைப்பு கூட இல்லாது நிர்மூடமாய் அலைந்து கொண்டிருந்தான் மணிவண்ணன்.

வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடத்தில் டெல்லி வந்த அழகரை மற்ற மூவரும் சந்தித்திருக்க, நால்வருமாய் நின்ற புகைப்படத்தைக் கலாமணியம்மாள் பெரியவரிடம் காட்டிய போது, அழகரின் முகத்திலிருந்த பூரிப்பு, அப்படியொரு நிம்மதியைக் கொடுத்தது பெரியவருக்கு.

இனியும் அவனது அன்னையிடம் அவனிருக்கும் இடம் பற்றி மறைக்கத் தேவையில்லையென்று எண்ணிய பெரியவர், அவரைத் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார்.

அன்று புவியரசி கல்லூரி விடுமுறையென்று வீடு வந்திருக்க, அடுக்களையிலிருந்த மீனாட்சி, அழகரின் தாயை வாசலருகே கண்டதும், வீட்டிற்குள் வருமாறு அழைத்தார்.

அவரைத் திண்ணையில் கண்டாலே துரத்தியடிக்கும் சோலையாத்தாளும்,சங்கிலியனும் வாழும் வீடு அது! எப்படி வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதெனத் தயங்கி “பட்டாளத்துகாரருதேன் தாயி வரச் சொன்னாரு!” என்றவரை உள் அறையிலிருந்து கண்டு கொண்டப் புவியரசி, பதற்றத்துடன் ஓடிச் சென்றுத் தன் தாத்தனை அழைத்து வந்தாள்.

“உள்ள கூப்பிடுத்தா” என்று மருமகளிடம் கூறியபடியே வந்த பெரியவர் “வா தாயி” என்று வரவேற்க, தயங்கிப் புன்னகைத்த அழகரின் தாய், வாசலிலேயே நிற்க, அவரைக் கனிவுடன் நோக்கியவர்,

“கிண்ணத்தை விட்டெறிஞ்சு உன் நெத்தியைப் பொளந்த பயலெல்லாம், வாழ்க்கையோட நெறிமுறையைப் புரிஞ்சுக்கத் தொடங்கிப் பல நாளாச்சும்மா! நீ தயங்காம உள்ள வா” – என்று கூறி விட்டு முன்னே நடக்கப் பின் தொடர்ந்தனர் அனைவரும்.

அந்த மட்ட மதியான வேளையில் மோர் கொடுத்து உபசரித்த மீனாட்சியிடம் நன்றி கூறித் தயக்கத்துடன் வாங்கிப் பருகியவர், கிழவர் அமரச் சொல்லி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட அமர மறுத்து விட்டார்.

பெருமூச்சுடன் அவரை ஒரு நொடி நோக்கி விட்டு, ‘இதோ வந்து விடுகிறேன்’ எனக் கூறி உள்ளறைக்குச் சென்றார் பெரியவர்.

தன் மகன் குறித்த செய்தி எதையும் கூறப் போகிறாரோ என்கிற பதட்டத்திலும்,பயத்திலும் கிழவரின் முகத்தை ஆராய முயன்ற பெண்மணி, அவர் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாமல் போனதும், வழிந்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்தபடி நடுக்கத்துடனே நின்றிருந்தார்.

அவருக்குச் சற்றும் குறையாத பயத்துடன் எதிரே நின்றிருந்த புவியரசி, அழகரைப் பற்றிக் கூறத்தான் தாத்தன் அவனது அன்னையை வரவழைத்திருக்கிறார் என்று அடித்துக் கூறிய மனது கொடுத்த ஆர்வத்திலும்,பதட்டத்திலும், ‘அவன் நன்றாக இருப்பதாக அவர் செய்தி கூற வேண்டுமென’ உலகத்திலுள்ள தெய்வங்கள் அத்தனைக்கும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள்.

உள்ளறையிலிருந்து வெளிவந்தக் கிழவரை இருவரும் ஒரு சேரத் திரும்பி நோக்க, இருவரது முகத்திலும் தென்பட்டப் பதட்டத்தை கண்டு கொள்ளாது,

“இங்க வா தாயி” – எனப் புவியரசியை அருகில் அழைத்தார் பெரியவர்.

“தாத்தா” என்றபடி அவசரமாய் அருகே வந்தவளிடம் ஒரு கடிதத்தை நீட்டி,

“இதை வாசிச்சுக் காட்டு தாயி” என்றார்.

படபடக்கும் மனதைக் கட்டுப்படுத்த இயலாது, நடுங்கிய கைகளுடன் கடிதத்தைக் கையில் வாங்கிய புவியரசியின் பார்வையில்..

“அன்புள்ள அம்மாவுக்கு….” – எனத் துவங்கியக் கடிதத்தின் முதல் வரி பட்டதும், மூக்கு விடைத்துக் கண்களில் கடகடவென நீர் கோர்க்க,

அதுவரை அவள் முகத்தையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த அழகரின் தாயாருக்கு, அவள் விழிகளில் கண்ணீரைக் கண்டதும், அது தன் மகன் பற்றியக் கடிதம் தான் எனப் புரிந்து விட, அதிர்ச்சியில் விரிந்த விழிகளும், மகிழ்ச்சியில் ஊற்றாய்ப் பெருகியக் கண்ணீருமாய், சேலைத் தலைப்பால் வாயை அழுத்தி மூடியபடி, புவியரசியின் முகத்தை நோக்கினார்.

உதடு கடித்து தன்னைக் கட்டுப்படுத்தியப் புவியரசி, கரகரத்தக் குரலுடன் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினாள்.

“அன்புள்ள அம்மாவுக்கு…,

உன் மகன் அழகர் எழுதும் கடிதம்.

அம்மா-ண்டு கடுதாசியைத் தொடங்கிப்புட்டு, கால் மணி நேரமா காகிதத்தையே வெறிச்சுக்கிட்டு உட்கார்ந்து கிடக்கேன்ம்மா! கையி நடுக்கமெடுக்குது! தொண்டை அடைக்குது! அழுகை வருது! இத்தனை வருசமா எனக்காக நீ தவிச்ச தவிப்பும், சிந்துன கண்ணீரும் இந்த நிமிஷம் மொத்தமா ஒன்னு சேர்ந்து என் நெஞ்சுல ஏறி உட்கார்ந்து அழுத்துற மாறி இருக்கும்மா!

உன் கைக்குள்ள வைச்சுக் கவனமா பாதுகாக்கனும்ண்டு நீ நினைச்சவன், உன் கையை உதறி விட்டுப்புட்டு, சொல்லாம கொள்ளாம எங்கேயோ ஓடிட்டேனேண்டு என் மேல கோவமா?,

எனக்குத் தெரியும்மா! அன்னைக்குப் படிப்பை இழந்து நான், கனவு தொலைஞ்ச கவலையில கிடந்தப்ப, ராவெல்லாம் தூங்காம நீயி, என் முகத்தைப் பார்த்துக்கிட்டு, சத்தமில்லாம கண்ணீர் வடிச்சக் கதையெல்லாம்! அந்தக் கண்ணீர்தேன், என்னைய சுத்தி போடப்பட்டிருந்த சதி வலையை அறுத்து எறிஞ்சுட்டு முன்னேறச் சொல்லி எனக்கு வெறி ஏத்துச்சு! உன் பயம் எனக்குப் புரிஞ்சதும்மா! உனக்குப் பணிஞ்சு நடக்க நான் முயற்சியும் செஞ்சேன்!

அன்னைக்கு எதிர்ல நிண்டவனோட நோக்கம் என் உசுரா இருந்திருந்தா, எடுத்துட்டுப் போடா மசுரு-ண்டு தூக்கிக் கொடுத்துருப்பேன்! ஆனா அவன் பறிக்க நினைச்சது என் உசுரை இல்லம்மா! என் தன்மானத்தை! என்னால அதை அம்புட்டு சீக்கிரம் விட்டுக் கொடுக்க முடியலம்மா!

என்னைப் பாதுகாக்க நீ எடுத்த முயற்சியை மதிக்காம, உன்னைத் தவிக்க விட்டுக் கண் காணாத இடத்துல ஓடி ஒளிஞ்சுக்கிட்டதுக்கு, நீ என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கிடுறேன்!

வெள்ளைப் பனி மலைக்கு நடுவுல வெளுத்துப் போய் உட்கார்ந்து கிடக்கேன்! ஆனா மனசு, மார்கழி மாசம் காலையில, நீ போட்டுக் குடுக்குற வர காபிக்காக ஏங்கிட்டுக் கிடக்கு!

பள்ளியோடத்துக்கு நான் உடுத்திட்டுப் போற சீருடையவே பத்துத் தடவை துவைச்சு, இஸ்திரியெல்லாம் போட்டு, பதமாத் தடவிக் குடுத்து பாதுகாத்துட்டுக் கிடப்ப! இப்ப நான் உடுத்தியிருக்கிற உடுப்பு, உங்கையில என்னா பாடு படப் போகுதோ தெரியல!

நேர்ல வருவேன்ம்மா சீக்கிரமே! இந்த நிமிசம் சந்தோசத்துல நீ வடிக்கிறக் கண்ணீர்தேன், எனக்காக நீ அழுகுற கடைசிக் கண்ணீரா இருக்கனும்! இனி உம் முகத்துல நான் நிமிர்வையும், சிரிப்பையும் மட்டுந்தேன் பார்க்கனும்!

ஏன்னா….. நீ பட்டாளத்தானைப் பெத்தவம்மா!!!

இப்படிக்கு,

Azhagar Karuppaswamy,

Soldier, Indian Army.

கடிதத்தைப் படித்து முடித்தப் புவியரசி, சந்தோஷத்தில் தலை,கால் புரியாமல் துள்ளிக் குதித்தபடிக் கண்ணீரும்,சிரிப்புமாய் அழகரின் அன்னையை ஏறிட,

அவள் வாசித்துக் காட்டிய வார்த்தைகளின் பின்னிருந்த உண்மையை நம்ப முடியாமல், மகிழ்ச்சியில் உறைந்து விட்ட விழிநீருடன் வாயடைத்துப் போய் நின்றிருந்தார் அவர்.

புவியரசி அவரருகே சென்றுத் தோளைத் தொட்டதும், திடுக்கிட்டு அவள் முகம் பார்த்தவர், அவளது கைகளைப் பற்றிக் கொண்டு,

“ப..பட்டாளத்துல இருக்கிறதாகவா எழுதியிருக்கியான்?” – எனத் தடுமாற்றமும்,அழுகையுமாய்க் கேள்வி கேட்க, சந்தோஷத்தில் வார்த்தை வராமல் ஆம் என்பது போல வேக,வேகமாய்த் தலையாட்டினாள் புவியரசி.

“யாத்தே!!!” என நெஞ்சில் கை வைத்தப் பெண்மணி, நடப்பதெல்லாம் கனவா,நனவா என்று குழப்பமுற்று, அதிகபட்ச சந்தோஷம் கொடுத்த படபடப்பில் மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்கத் தள்ளாடி விழப் பார்க்க, அவசரமாய் அவரைப் பிடித்து நிறுத்தியப் புவியரசியின் தோளை இறுகப் பற்றி, அழுகையும்,சிரிப்புமாய்,

“எ..எம் மவன்! எம் மவன் பட்டாளத்துக்காரனா?, எம்மவன் பட்டாளத்துல சேர்ந்திருக்கியானா?” எனத் திரும்பத் திரும்பக் கேட்டு, ஆம்,ஆம் என விடாது தலையாட்டும் புவியரசியின் பதில் கொடுத்தப் பேரின்பத்தில், அவளை அணைத்துக் கொண்டுக் கண்ணீர் உகுத்தார்.

அழகர் காணாமல் போன தினத்திற்குப் பிறகு, உயிரற்று நடமாடிய புவியரசியை அழைத்து விருமன், ‘தனக்கான அடையாளத்தைத் தேடிக்கிட்டு, உன்னைய ஆச்சரியப்படுத்துற மாறி ஒரு நாள் அவன் உன் முன்ன வந்து நிற்கையில, நீ இப்பிடித்தேன் அரை உசுரோட அவனை வரவேற்கப் போறியா?’ – என அழகர், கிழவரின் பாதுகாப்பின் கீழ் நலமாக இருப்பதை மறைமுகமாக எடுத்துக் கூறியிருக்க, அன்றிலிருந்து அவன் குறித்த செய்திக்காக ஆவலுடன் காத்துக் கிடந்தவளுக்குக் கிழவர் காட்டியக் காகிதம், காற்றில் பறக்கச் செய்ய, தன்னை அணைத்திருந்த அழகரது தாயின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் புவியரசி.

ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று கொண்டு கண்ணீர் வடித்த இருவரையும் நெகிழ்ச்சியாய்ப் பார்த்திருந்தப் பெரியவர், ஒருவாறு சமாளித்துக் கொண்டு நிமிர்ந்த இருவரிடமும், அழகர் பட்டாளத்தில் சேர்ந்த விசயத்தைக் கதையாகக் கூறினார்.

தன்னலமின்றித் தன் மகனுக்காகக் கிழவர் நடத்திய அறப்போராட்டம், அன்னையாகப்பட்டவளை அவர் முன்பு, தலை வணங்கச் செய்ய, சற்றும் யோசிக்காமல் கிழவரின் காலில் விழுந்தப் பெண்மணியை, பதறித் தூக்கி நிறுத்திய பெரியவர்,

“என்னாத்தா பழக்கமிது?, சகமனுசன் கால்ல விழுகுறது” என்று கடிந்து கொண்டு,

“வேலைக்கு சேர்ந்த நாள்லயிருந்து சம்பாதிச்சக் காசையெல்லாம் உம்மவன் எனக்கு அனுப்பி வைச்சிருக்கியான். அவன் ஆத்தாளுக்காக வீடு வாங்கனுமாம்!, அதுமட்டுமா?, தம்பியைப் பெரிய படிப்பு படிக்க வைக்கனுமாம்! பள்ளிக்கூடம் கட்டனுமாம்!, என்னன்னமோ சொல்றியான்” என்று புருவத்தை உயர்த்திக் கூறித் தொடர்ந்து,

“வீடு கட்ட நான், நிலத்தை எழுதி வைக்கிறேன் டா, நீ பொறுமையா காசு குடுண்டு சொன்னதுக்கு, ஒத்துக்க மாட்டேன்னுட்டியான்! அவன் அனுப்புன காசை பத்திரமா சேர்த்து வைச்சிருக்கேன், மாங்குளத்துல, கடைவீதிப்பக்கம் புதுசா கட்டுன வீடு ஒன்னையும் பேசி முடிச்சிருக்கேன்! உம்மவன் வந்ததும் வீட்டை உம்பேருக்குப் பதிவு பண்ணிப்புடலாம்! பட்டாளத்தானைப் பெத்தவ, சொந்தவீடு வைச்சிருக்கிறவ, அடுத்தவன் கால்ல விழலாமா?” என்று சிரிப்புடன் கூற, அவரை வியப்பாய் நோக்கிய அழகரின் தாயார்,

“தெனம் படத்துக்கும்,சிலைக்கும் பொட்டு வைச்சு,பூ சூட்டிச் சாமிண்டு பேர் சொல்லி, விளக்கேத்திக் கும்பிட்றதால, எவனுக்கும் எந்த நற்பண்பும் வளரப் போறதில்லங்கய்யா! சுயநலம் புடிச்சவனுக்கு மட்டுந்தேன் சாமி தேவைப்படுது! மனுசனை மனுசனாப் பார்க்குற உங்களை மாறி ஆளுங்கதேன்ய்யா உண்மையான சாமி! மனுசனுக்கிடைல வேறுபாடு கிடையாதுண்டு எடுத்துச் சொல்ற உங்க வார்த்தைகள்தேன்ய்யா வேதம். பூமியில வாழ்ற அத்தனை உயிரும் சரிசமமா நடத்தப்பட்டாகனுங்குற உங்க மனப்பாங்குதேன்ய்யா சாஸ்திரம்! உங்களை மாதிரி ஆளுங்க நிறைய பேரு உருவாகனும்!” – என உளமாரக் கூறினார் அழகரின் தாயார்.

புவியரசி கடிதத்தை வாசிக்கத் துவங்கிய நொடி, வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருந்த சங்கிலியன் அனைத்தையும் வேடிக்கை பார்த்து விட்டு அமைதியாய்க் கடந்திருந்தார்.

இனி இருக்கும் காலம் முழுமைக்கும் கிழவரின் காலடியைத் தொடர வேண்டுமென முடிவு செய்திருந்த சங்கிலிக்கு, அவர் காட்டும் பாதையில் முற்களிருந்தாலும் சரி, பூக்களிருந்தாலும் சரி என்கிற எண்ணம் தான்!

நடு வீட்டுக்குள் அழகரின் அன்னையைக் கண்ட பிறகும் கூட, சங்கிலியன் அமைதியாய்ச் செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த புவியரசி, அழகர் எப்போது ஊர் திரும்புகிறான் எனக் கேட்ட அழகரது தாயாரின் கேள்வியில், ஆர்வமாய் தாத்தனின் முகம் பார்த்து,

“இன்னும் ரெண்டே மாசத்துல உம் மவன் உன் முன்னாடி வந்து நிற்பியான்” – என்றவரின் பதிலில் அகம் மலர, பெரிதாய்ப் புன்னகைத்தாள்.

ன்று புதன் கிழமை.

தனது மாலை வகுப்பிற்கு அன்று விடுமுறையாதலால், மொட்டை மாடிக்கு வருகை தந்திருந்தாள் சுஜாதா.

உள் நுழையும் போதே, எதிரில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த விருமன் தென்பட்டான். அவள் அவனை நோக்கிய வேளை, அவளது துணைக்கால் ஏற்படுத்திய அரவத்தில் தானும் அவள் புறம் மலர்ச்சியுடன் திரும்பிய விருமன்,

தன்னைக் கண்டதும் அவளது புன்னகை முகம் மெல்ல மங்குவதையும், தன் விழி நோக்காது அவள் கருமணிகள் அலைபாய்ந்தபடி யோசனைக்குச் செல்வதையும் கண்டுப் புருவம் சுருக்கினான்.

உடற்பயிற்சி செய்ததன் விளைவால் ஏறி,இறங்கிய மூச்சுடன், இடுப்பில் கை வைத்தபடி, தலை சாய்த்து, இடுங்கியப் புருவங்களுடன் நின்றவனைக் கண்டு அவளும், அவளது முக மாற்றத்துக்கான காரணத்தை அறிந்து கொள்ள முயன்றபடி அவனும் ஒரே சமயத்தில்,

“என்னாச்சு?” என்று வினவியதும்,

சிரிப்பு வந்தது விருமனுக்கு. நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி வேறுபுறம் பார்த்து பற்கள் தெரியப் புன்னகைத்தவனை நோக்கியவளுக்கும், முறுவல் தோன்ற, அவனைப் பார்த்தபடி நின்றவளிடம்,

“இல்ல, உள்ள வர வரைக்கும் சிரிச்ச முகமா வந்தீங்க! என்னைப் பார்த்ததும் பல்பு ஆஃப் ஆயிடுச்சே!, அதேன் என்னாண்டு கேட்டேன்” என்றவனைக் கண்டு உதடு வளைய,

“எதிர்ல இருக்கிறவனோட முக மாற்றத்தைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு நீங்க அறிவாளியா என்ன?” – எனப் போலியாய் வியந்தபடி கேட்க, பல்லைக் கடித்தவன்,

“லந்தைக் குடுக்குறீங்க பார்த்தீங்களா?” – என்று வினவியதும், அமைதியாய் நின்றவளைக் கண்டுக் குழம்பி,

“எப்பவும் மலர்ந்தே கிடக்குற முகம் ஏன் இன்னைக்கு இப்பிடி வாடிக் கிடக்கு?, உங்களைக் கஷ்டப்படுத்துற மாறி யாரும் நடந்துக்கிட்டாங்களா?, அப்படியெல்லாம் எதையும் பெருசு படுத்தி, மனசுல வைச்சுக்கிட்டு மருகுற ஆள் கிடையாதே நீங்க?” – எனக் கேட்டதும், புருவம் உயர்த்தியவள்,

“அவ்ளோ தெரியுமா உங்களுக்கு என்னைப் பத்தி” எனக் கேட்க,

“பக்கத்துல நிண்டு பேசிப் பழகுறது இந்தக் கொஞ்ச நாள் தான்-ண்டாலும், மூனு வருசமா உங்களை எனக்குத் தெரியும்” என்றவனைக் கண்டு,

இருபுறமும் தலையசைத்து, “ஒன்னுமில்ல. நான் நல்லாத் தான் இருக்கேன்” என்றவள் தொடர்ந்து “மனுசங்க மனசை interpret பண்ற விசயத்துல, நீங்க அவ்ளோ intelligent எல்லாம் கிடையாது விருமன்” என்றாள்.

“ஏன்வாம்?”

“சட்டை போடாம இப்பிடியே எவ்ளோ நேரம் நின்னு பேசுறதா இருக்கீங்க?”

-தன் கேள்விக்குப் பதில் கூறாமல், அலட்டிக் கொள்ளாது மறு கேள்வி கேட்டவளைக் கண்டுக் கடுப்பாகிப் போனவன்,

“பேச்சே சரியில்லையே இன்னைக்கு” என்று முணுமுணுத்தபடி அருகே கிடந்த பனியனை எடுத்து மாட்டிக் கொண்டு, அவளிடம் கல்பெஞ்சை நோக்கிக் கை காட்டினான்.

மறுத்துப் பேச முயன்றவளை அவசரமாய்த் தடுத்து,

“உங்களால நிற்க முடியும். ஆனா, என்னால உங்களை நிற்க வைச்சு வேடிக்கைப் பார்க்க முடியாது. இது பரிதாபம் இல்ல. அக்கறை” என்று படபடத்தவனைக் கண்டு நீளமாய்ச் சிரித்தவளின் முகத்தைத் திருப்தியாய் நோக்கி,

“ம்ம், இப்பிடி சிரிக்கிறதுதேன் அழகு. அதை விட்டுப்புட்டு, மூஞ்சுறு மாறி முகத்தைச் சுருக்கி வைச்சுக்கிட்டு” என்று திட்டிக் கொண்டே அவளுடன் நடந்தவன், அவள் அமர்ந்ததும், அங்கிருந்தக் கைப்பிடிச் சுவரருகே நின்றுத் தெருவை நோக்கி,

கீழே.. அபார்ட்மெண்ட் வாசலில் ஆரனின் பின்னே கையில் பையோடுத் துள்ளலுடன் நடந்து சென்று கொண்டிருந்த அகலருவியைக் கண்டு,

“கருவாக்குந்தாணி! பையைத் தூக்கிக்கிட்டு எங்கயோ கிளம்பிட்டா! ஒரு நாள் வீட்ல அடங்கி உட்கார முடியாது இவளால. நேத்துதேன் அவனை நச்சரிச்சுப் பானி பூரி வாங்கிக் குடு,பேல் பூரி வாங்கிக் குடுண்டு மல்லுக்கட்டி வெளிய இழுத்துட்டுப் போனா! இன்னைக்கு என்னத்த வாங்கித் திங்க கிளம்பிட்டாளோ தெரியல! சரியான தின்னிக் கழுத!” – என்று திட்டியபடியே அவளைப் பார்த்து நின்றான்.

தானொருத்தி அருகில் இருப்பதையே மறந்து, தன் போக்கில் முணுமுணுத்துக் கொண்டு, ஆரனுடன் நடந்து செல்லும் அகலருவியையே உரிமையாய்ப் பார்த்தபடி நின்றவனின் முகம் கலக்கத்தைக் கொடுத்தது சுஜாதாவிற்கு.

அகலருவியின் மனநிலை குறித்து தெள்ளத்தெளிவாய்த் தெரிந்து வைத்திருந்தவளுக்கு, விருமனின் எண்ணப் போக்கு கவலையை ஏற்படுத்த, இனியும் இதை வளர விட்டால் சம்மந்தப்பட்ட மூவருமே பாதிக்கப்படப் போவது உறுதி என்றெண்ணிக் கொண்டு, ஆரன் மீதான அகலருவியின் எண்ணத்தை விருமனுக்குப் புரிய வைத்து விடும் நோக்கத்துடன், அவசரமாய்,

“அகலருவிக்கு ஆரனைத் தான் பிடிக்கும் விருமன்” என்றாள்.

திடீரென ஒலித்தக் குரலில், அகலருவியிடமிருந்துப் பார்வையைப் பிரித்து சுஜாதாவின் புறம் நோக்கியவன், சிரித்தபடி,

“தெரியுமே! திட்டி அதட்டுனாலும், அவன் அவளுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சு குடுப்பியான்! இப்ப-ண்டு இல்ல! சின்ன வயசுல இருந்தே அப்பிடித்தேன்! என் வீட்ல இருக்குற கெழவி, ஆரனை எந்நேரமும் ஏசிட்டுக் கிடக்கும்!, அம்மணிக்கு அது பொறுக்காது, கமுக்கமா போய் கிழவிக்கு சம்பவம் பண்ணிப்புட்டு வந்துருவா! அது பாட்டுக்க ஒரு பக்கம் கத்திக்கிட்டுக் கிடக்கும்,இவ கண்டுக்கவே மாட்டா! எமகாதகி!” என்று ரசித்துக் கூறிக் கொண்டே செல்ல,

அவனை வருத்தப்படுத்த வேண்டாமென நினைத்து அவள் மேலோட்டாமாகக் கூறிய விசயத்தைப் புரிந்து கொள்ளாது பேசியவனைக் கண்டு சங்கடம் எழ, ஒரு நொடி கண்ணை மூடிப் பெருமூச்சை வெளியிட்டவள், பின்,

“நான் சொன்ன பிடித்தத்தோட அர்த்தம் வேற விருமன்” என்று அழுத்தமாய்க் கூறியவள், கேள்வியாய்த் தன்னைப் பார்த்தவனின் விழி நோக்கி,

“she loves him” என்றாள்.

அதுவரை கைப்பிடிச் சுவற்றில் இரு கைகளையும் ஊன்றி சாதாரணமாய்ச் சாய்ந்திருந்தவன், திடுக்கிட்டு விறைத்து நின்ற விதமே அவனுக்கு உண்டான அதிர்ச்சியைக் கூற,

உடம்பிலுள்ள 5 லிட்டர் ரத்தமும், அவனது கருத்த முகத்தில் தேங்கி விட்டது போல், விழி சிவக்கப் பிளந்த வாயுடன் நின்றவன், அலைபாய்ந்த கருமணிகளை ஒரு நொடி தாழ்த்தி, அவள் கூறியதை மொழியாக்கம் செய்ய முயற்சித்து, அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள மூளை எடுத்துக் கொண்ட அவகாசம் பொறுக்காமல், அவசரப்படுத்தி, கடைசியில் அது உணர்ந்த வாக்கியத்தின் வீரியம் தாங்காது, பிடரியைக் கோதியபடி அங்குமிங்கும் நடை பயின்றவன், மித மிஞ்சியக் கோபமும்,ஆத்திரமுமாய்க் கடித்தப் பற்களுடன் “முட்டாக் ****, கூறு கெட்டப் ****, அறிவில்லாதவன்” என்று தன்னைத் தானே கெட்ட,கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வதை, கலங்கிப் போன மனதுடன் அசையாது பார்த்திருந்தாள் சுஜாதா.

சோலையாத்தாளும்,வீரலட்சுமியும் ‘விருமனுக்கு அகலருவி தான்’ என ஜாடை,மாடையாகப் பேசிய பேச்சுக்கள் அனைத்தும், அவனறியாது அவன் ஆழ் மனதில் அழுத்தமாய்ப் பதிந்து போனதன் விளைவு, அகலருவி தனக்கானவள் என்கிற எண்ணத்தை அவனுக்குள் உண்டாக்கியிருந்தது. ‘காதல்’ என்று பெயர் சூட்டுமளவிற்கு அந்த எண்ணம் குறித்து அவனுக்குப் பரிட்சயமில்லாவிடினும், அந்த வீட்டில், அடுக்களையில் பொட்டுக்கடலையை எடுத்து உண்பதும், சோலையாத்தாளுடன் மல்லுக்கு நிற்பதும் எப்படித் தனக்கான உரிமை என்று கருதினானோ, அதே போலத் தான் அகலருவியைத் துணையாகப் பெறுவதும் தன் உரிமை என்று எண்ணி வைத்திருந்தான்.

ஆனால் அதே உரிமை உணர்வு, தன் துணைப்பிறப்பான ஆரனுக்கும் உண்டென்பதை அப்போது உணர்ந்து கொள்ளாத மூளை, இப்போது, உடன் வளர்ந்த பொழுதிலிருந்துத் தொடங்கி மூவரும் ஒரு வீட்டில் குடியேறிய பிறகான இந்த மூன்று வருடம் வரை, ஆரனோடு அவள் பழகும் விதத்திலிருந்த வித்தியாசத்தை எடுத்துக் காட்டி, அவனை முட்டாள் என ஏசியது.

மாடு போல் உடம்பை வளர்த்து, மாமலையாய் நின்று என்ன பிரயோஜனம்?, அடுத்தவனின் எலும்பை எண்ணத் தெரிந்தவனுக்கு, மனதை அறிந்து கொள்ளுமளவிற்குப் பக்குவம் இல்லையே! அதைத் தான் இவளும் கூறினாளோ, எதிரிலிருப்பவனின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாதத் தெரியாத முட்டாள் அவன் என்று??,

தன்னையே அவதானித்துக் கொண்டிருப்பவளை, அவமானத்தில் சிறுத்துப் போன முகத்துடன் மூக்கு விடைக்க நோக்கியவன், கரகரத்தக் குரலில்,

“உனக்கு எப்பிடித் தெரியும்?, அவ உங்கிட்ட சொன்னாளா?” – எனக் கேட்டான்.

அவன் தன்னை ஒருமையில் விளிப்பது கண்டு, அவன் நிதானத்தில் இல்லையென்பதைப் புரிந்து கொண்ட சுஜாதா, உணர்ச்சியற்ற குரலில்,

“சொன்னா தான் புரியனுமா?” – என்றாள்.

“ஓ! சொல்லாமலே அடுத்தவன் மனசுல என்னா இருக்குண்டு புரிஞ்சுக்கிற அளவுக்கு நீ அறிவாளி! நாந்தேன் முட்டாப்பய” – பல்லைக் கடித்துக் கொண்டுக் கூறியவன் காட்டிய அணுகு முறையில் தோளைக் குலுக்கியவள்,

“நீ முட்டாள்ன்னு இப்பவாவது உனக்குப் புரிஞ்சதே?” – என்றதில் பெரிதாய் சீண்டப்பட்டவன்,

“அளவாப் பேசு! இல்ல, பல்லைக் கழட்டிடுவேன்” என்று கோபமாய் மிரட்ட, அவனைக் கேவலமாய் நோக்கியவள்,

“அந்தப் பொண்ணு, ஆரனைப் பார்க்குற பார்வைல இருக்குற வித்தியாசத்தைக் கூடப் புரிஞ்சுக்கத் தெரியாதவனை முட்டாள்ன்னு சொல்லாம, வேற எப்பிடி சொல்றது?”

“ஏய் வாயை மூட்றி! என்னைப் பார்த்தா ‘பொம்பள மனசைப் புரிந்து கொள்வது எப்படி-ண்டு’ புத்தகம் எழுதுனவன் மாறியா தெரியுது?, பெருசா புரிஞ்சுக்கல,புரிஞ்சுக்கலங்குற?, இத்துனூண்டு வயசுல இருந்து சொல்லி வளர்த்தாய்ங்க, உனக்கு அவதேன்-ண்டு! உரிமைப்பட்டவதேன-ண்டு நினைச்ச எனக்கு, நீ சொல்ற வித்தியாசத்தைத் தேடத் தோணக் கூட இல்ல!”

“யார் சொல்லி வளர்த்தா அப்பிடி?, உன் தாத்தாவா?, விவரம் புரியாத வயசுல இருக்குற புள்ளைங்களுக்கிடைல விவகாரமா முடிச்சுப் போட்ற அளவுக்கு முட்டாள் கிடையாது அவரு! கண்டிப்பா, இந்த மாதிரி வார்த்தைகளெல்லாம் அவர் வாய்ல இருந்து வந்திருக்காது”

-அவனது குடும்பத்தைப் பற்றி அடி முதல் நுனி வரை தெரிந்தவள் போன்று, உறுதியாய்க் கூறியவளை எதிர்த்து எதுவும் கூற முடியாமல், மூச்சு வாங்கத் தலை தாழ்த்தி நின்றவன்,

“அவர் சொல்லல தான்” என்றதும்,

“பின்ன! நீயா உன் மனசுல அவ உனக்கானவ-ன்னு உருவகப்படுத்திக்கிட்டது, எப்பிடி அவளோட தப்பாகும்?”

“இப்ப நான் அவளைத் தப்பு சொல்லவே இல்லையே!, நாந்தேன் முட்டாளு! அவளுக்கும் என்னைப் போலவே எண்ணமிருக்குண்டு நினைச்சுக் கூறு கெட்டத்தனமா கூடவே சுத்தியிருக்கேன்” – கோபமும்,விரக்தியுமாய் விறைப்பாய்ப் பேசியவனின் சிவந்த முகம் கொடுத்தப் பயத்தில்,

“கோபத்துல மூளையிழந்து, நீ அகலருவியையோ, ஆரனையோ காயப்படுத்துனேனா, அது தான் நீ உன் வாழ்க்கைல பண்ணுன மிகப் பெரியத் தப்பாயிருக்கும் விருமன்” – என எச்சரித்தவளைக் கண்டு ஒரு நொடி அசையாது நின்றவன்,

அதீத ஆத்திரத்தில் உடல் நடுங்க, சிவந்த விழிகளுடன், “என்னைப் பத்தி என்னா-ண்டு நினைச்ச?, ம்ம்?, அவிங்க ரெண்டு பேரும் என்னைச் சேர்ந்தவிங்க! எனக்கானவிங்க! என்னோட முட்டாள்த்தனமான எண்ணத்துக்காக நான்… நான் அவிங்களைக் கஷ்டப்படுத்துவேனா?,” எனக் கேட்டு,

“என் வீட்ல இருக்குறவிங்க அத்தனை பேரோடயும் உடனிருந்து பழகுன மாறி, ஒவ்வொருத்தனைப் பத்தியும் புட்டு,புட்டு வைப்பியே! ஏன், என்னைப் பத்தி தெரியாதா உனக்கு? ஓஓ! நீங்கதேன் அகலருவியோட அடிமனசைப் பிரதிபலிக்குறக் கண்ணாடியாச்சே! என்னைப் பத்தி அம்புட்டுக் கேவலமாவா சொல்லி வைச்சுருக்கா அவ?, என்னைப் போல எண்ணம் அவளுக்கு இல்லங்குறதைக் கூட என்னால ஏத்துக்க முடியும்! ஆனா.. மாமன் மகன்ங்குற ,அடிப்படைப் பாசம் கூடவா என் மேல இல்ல அவளுக்கு?” - விரக்தியாய் வினவியவனின் முகம் அடிமனதை வலிக்கச் செய்ய,

மறுத்துத் தலையசைத்தபடி, தன் துணைக்கால்களை மறந்து வேகமாய் எழுந்தவள், கல்பெஞ்சைப் பற்றிக் கொண்டு நின்றபடி,

“விருமன்..” – என்றதும், விரல் நீட்டி எச்சரித்தவன்,

அவளை வெறுப்புடன் நோக்கி “இனி என் பேரைச் சொல்லாத” என்று விட்டு, அவள் தள்ளாடி நிற்பதைப் பொருட்படுத்தாமல், விறுவிறுவெனச் சென்று விட்டான்.

அன்றிரவு உண்ணும் போதும் சரி, உறங்கும் போதும் சரி, இறுக்கத்துடனே காணப்பட்டவனை புருவம் சுருங்க நோக்கிய ஆரன், “எலேய்ய் என்னாடா, அழுகுன மாம்பழத்தைக் கடிச்சவன் மாறி, மூஞ்சியை அப்பிடி வைச்சிருக்க?” எனக் கேட்டதற்குப் பதிலின்றிப் போக, விருமனின் முகத்தைக் கவனித்திருந்த அகலருவியும், அமைதியாய் உறங்கச் சென்றவனைக் கண்டுத் தோளைக் குலுக்கி விட்டுப் படுத்து விட்டாள்.

மறுநாள் ஆரன் எழும் போதே, விருமனது படுக்கைக் காலியாயிருப்பதைக் கவனித்து, ஹாலில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த அகலருவியை மிதித்து எழுப்பி,

“எங்கடி அவன்?” எனக் கேட்க,

“உறங்கிட்டிருந்தவளை எழுப்பி எங்க அவன்-ண்டு கேட்டா, எனக்கெப்பிடித் தெரியும்?, புருசன்,பொண்டாட்டி மாறி ரெண்டு பேரும் உள் ரூம்புல கதவை அடைச்சு, கட்டுப்பிடிச்சுக்கிட்டுத்தேன உறங்குவீக?, உமக்குத் தெரியாம அவேன் எங்க போயிருக்கப் போறியான்?” – எனத் தொடங்கிய அகலருவி அடுத்தப் பத்து நிமிடத்திற்கு விடாது பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, விலகிக் கிடந்த போர்வையை அள்ளி அவள் முகத்தில் எறிந்து, அவள் வாயை அடைத்து விட்டு,

“இம்புட்டு வெல்லென ஆஃபிஸ் போற அளவுக்கு, அப்பிடி என்னா வேலை பார்க்குறியான் இவேன்?” – என்று முணுமுணுத்தபடி உள்ளே சென்று விட்டான் ஆரன்.

அலுவலகத்தில் இருவரும் வெவ்வேறு division-ல் வேலை பார்ப்பதால், கண்ணில் படாதிருந்தவன், மதிய உணவு இடைவேளையிலும் மறைந்து விட்டதை எண்ணிக் குழம்பினான் ஆரன்.

ஒரு வழியாக இரவு உணவின் போது வீட்டிற்குள் நுழைந்தவன், அருகருகே அமர்ந்தவாறு உண்டு கொண்டிருந்த ஆரனையும்,அகலருவியையும் கண்டும்,காணாமல் அறையை நோக்கி நடந்தான்.

“எலேய் நில்றா” என்று ஆரன் அதட்டியதும், அவன் முகம் பார்க்காது நின்றவனிடம்,

“காலைல இருந்து எங்கடா தொலஞ்ச?, மதிய சாப்பாட்டப்பவும் ஆளைக் காணோம்?, என்னாண்டு கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டாம, திருப்பிக்கிட்டுப் போற?, என்னாடா பிரச்சனை உனக்கு?, உன் division-ல எதுவும் தகராறா?” – எனக் கேட்டான் ஆரன்.

அவன் பதில் சொல்வதற்கு முன், தட்டிலிருந்த கடைசி வாய்ச் சோற்றை வாயிலடைத்தபடி எழுந்து நின்ற அகலருவி, “இவனுக்கெல்லாம் என்னா பிரச்சனை இருந்துறப் போகுது?, அந்தக் கறிச் சட்டியை அவன் கண்ல காட்டு மாமா! அஞ்சு கிலோ கறியைக் கண்டா, ஆனந்தமாயிருவியான்” என்று எப்போதும் போல வம்பிழுக்க,

அணிந்திருந்த சட்டையைக் கழட்டியபடி உதட்டைச் சுழித்தவன், சகஜமாக அவளுடன் உரையாட முயன்றபடி,

“நான் என்ன உன்னைய மாறி திங்குறதுக்குண்டுப் பொறப்பெடுத்தவனா?” எனக் கேட்டதும் மூக்கை விடைத்த அகலருவி,

“இவனெல்லாம் வாயாலயே கெடுற ஆள் மாமா!, வாய்க்கொழுப்பெடுத்துப் போய் யார்ட்டயாவது வம்பிழுத்து வைச்சிருப்பியான்! அவிங்க ஏதோ பெருசா செஞ்சுட்டாய்ங்க போல, அதேன் நேத்துல இருந்து மூஞ்சியை ஒன்றரை முழத்துக்கு நீட்டி வைச்சுக்கிட்டுத் திரியுறியான்” – என்று கூற,

அவள் பிடரியில் அடித்து “ப்ச், வாயை மூடிட்டுப் போடி” – என்று கடந்து செல்லப் பார்த்தவன்,

அவன் அடித்ததில் வலித்தத் தலையைத் தடவியபடி “இப்பிடித்தேன் எவனையாவது அடிச்சு உரண்டை இழுத்திருப்பியான் போல மாமா! முரட்டுப்பய! இவனுக்கெல்லாம் மூளை இருந்து என்னா பிரயோசனம்” – என்று வாய் போன போக்கில் பேசிச் செல்ல,

அவள் வாய் ஓயாது பேசுவதைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன் அவள் முகம் பார்த்து அமர்ந்திருந்த ஆரனையும், அகலருவி அவனை மட்டும் மாமா என்று விளிப்பதும், தன்னைச் சகட்டுமேனிக்கு அவன்,இவன் என்றதும் கோபத்தைக் கிளப்பி விட, இருபத்தி நான்கு மணி நேரமாக மனதை வெகுவாக அலட்டிக் கொண்டதன் விளைவாக, அற்ப விசயத்துக்கு ஆத்திரப்பட்டவன், அவள் கையிலிருந்தத் தட்டைப் பறக்கச் செய்து,

“அவேன்,இவேன்-ண்டு என்னாடி வாய் நீளுது?, உன் வயசென்ன, என் வயசென்ன?, மரியாதை இல்லாம பேசுனேண்டா, வாயை உடைச்சுப்புடுவேன் சொல்லிட்டேன்!” என்று அதட்டியதும்,

“என்னத்துக்கு இப்ப வெறி புடிச்சவன் மாறி கத்துற?” – என்று கிறீச்சிட்ட அகலருவியிடம்,

“எனக்கும்,அவனுக்கும் ஒரே வயசுதேன?, அவனை மாமா,மாமா-ண்டு வாய் நிறையக் கூப்பிட்றவ, என்னைய மட்டும் என்னத்துக்குடி மரியாதையில்லாம பேசுற?” – என்று எகிறுவதைக் கண்டு, எரிச்சலுற்ற ஆரன்,

“எலேய்” என்று அடக்க முற்படுவதைக் கண்டு,

“நீ சும்மா இரு பங்காளி!” எனக் கூறிக் கோபமாய் நின்ற அகலருவியை முறைத்து, “நான்-ண்டா எளக்காரமா இருக்கு இவளுக்கு” என்று முணுமுணுத்தவனுக்கு அந்த நொடி மனதில் நின்றதெல்லாம் சுஜாதாவின் வார்த்தைகள் தான். தன்னைப் பற்றி எத்தனை மட்டமாய் நினைத்து விட்டாள்!

‘அகலருவியைக் காயப்படுத்தி விடாதே’- என்று சுஜாதா கூறியதில் கடுப்பாகித் தான் உண்மையிலேயே அகலருவியைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராது, அவன் முறைத்து நிற்க,

அவனது முணுமுணுப்பில் கொதித்துப் போன அகலருவி,

“என்னா உன்னைய எளக்காரமா பேசிப்புட்டேன் நானு?, ஏன், நீ என்னையப் பேசுனதில்ல?, வாடி,போடி, குந்தாணி,கொண்டிமாடு,தெனவெடுத்தவ, திமிரெடுத்தவ-ண்டு?, நான் என்ன உன் சட்டையைப் புடிச்சு சண்டையா போட்டேன்?, அயித்த மவ, உடன் வளர்ந்தவங்குற உரிமைலதேன நீ எங்கூட விளையாடிட்டுத் திரிஞ்ச?, அதே உரிமைய நான் எடுத்துக்கிட்டாத் தப்பா?,” எனக் கேட்டு, தாவணியை இழுத்துச் செருகியபடிக் கீழே சிதறிய சோற்றை அள்ளித் தட்டில் போட்டுக் கொண்டே,

“எனக்குப் புரிஞ்சுருச்சு! உஞ்சம்பாத்தியத்துல நான் உட்கார்ந்து திங்குறேங்குற ஆணவத்துலதேன், என்னைய இம்புட்டுப் பேச்சு பேசுற நீயி! ஊருக்குப் போய் எந்தாத்தன் கிட்டச் சொல்லி, இத்தனை நாளா, நீ எனக்கு செலவழிச்சக் காசு மொத்தத்தையும் எண்ணி உம் மூஞ்சில விட்டெறியல, என் பேரு அகலருவி இல்ல” என சிறுபிள்ளைத்தனமாய் சவால் விடத் தலையில் அடித்துக் கொண்ட ஆரன்,

“ஏய் வாயை மூட்றி” என்று அதட்டியதும், அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தவள்,

“நீ பேசாத மாமா! அம்புட்டுப் பேச்சு பேசுறியான்! தடுக்காம, நீ கம்முன்னு நிற்குற?, இதே எந்தாத்தனா இருந்திருந்தா, இப்பிடி வேடிக்கை பார்த்திட்டு இருந்திருப்பாரா?, எல்லாம் என் தலையெழுத்து!, இங்கன வந்து மாட்டி, இம்புட்டு ஏச்சு,பேச்சையும் வாங்கி இப்பிடி சீரழிஞ்சுக்கிட்டுக் கிடக்கேன்” எனப் புலம்பத் தொடங்க,

“இனி இவ வாயை மூடுன மாறிதேன்” என்றெண்ணிக் கொண்ட ஆரன், எரிச்சலுடன் விருமனை நோக்க..

அவனோ, தனது உள் மனதின் ஆதங்கம், அவள் மீது கோபமாய் வெளிப்பட்டதைக் கண்டு, விடைத்த மூக்கோடு விடாது புலம்புபவளைக் குற்ற உணர்ச்சியுடன் நோக்கி விட்டு, உள் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

ன்றிரவு உறங்காமல் மொட்டைமாடியில் தஞ்சமடைந்திருந்தவனைத் தேடிச் சென்றான் ஆரன்.

ஏதேதோ யோசனையில் இருளை வெறித்தபடி நின்றிருந்த விருமனின் பிடரியில் அடித்து,

“பெரிய கண்ணதாசேன் இவரு!, இருளுக்குள்ள ஒளியைத் தேடிகிட்டு நிற்கிறாரு! கேனக் ****! என்னாதேன் டா பிரச்சனை உனக்கு?” என எரிச்சலும்,கோபமுமாய் வினவிய ஆரனை நோக்கியவன், அவன் கையிலிருந்த வாழைப்பழத்தைக் கண்டு, உதட்டைப் பிதுக்கி,

“ஒத்தப்பழம் எந்த மூலைக்கு?” என்று முணுமுணுக்க,

“ம்ம்ம், நீ அவளைக் கிழிச்சுக் கூறு போட்டக் கோவத்துல, இருந்த கறியையெல்லாம் திண்டுபுட்டு, இழுத்து மூடிட்டுத் தூங்கிட்டா அவ!, நீ பசி தாங்க மாட்டியேண்டு பாவம் பார்த்து, நாந்தேன் அவ ஒளிச்சு வைச்சிருந்த வாழைப்பழத்தை திருடிட்டு வந்திருக்கேன்” – என்றவனைக் கண்டு சிரிப்பு வர, சோர்ந்த விழிகளும், நெளிந்த இதழ்களுமாய், முன் நெற்றி முடி காற்றிலாட தன் முகம் நோக்கியவனைக் கண்டு பழத்தைத் திட்டில் வைத்த ஆரன், அவன் தோளில் கையிட்டு,

“என்னா டா??” என ஆதூரமாய்க் கேட்டதும், விழிகளில் நீர் கோர்த்து விட, எச்சில் விழுங்கி அதை அடக்கியவன், தன் இடது கையைத் தூக்கி ஆரனின் தோளிலிட்டுக் கொண்டு,

“பங்காளி, இந்த உலகத்துலயே நீ அதிகமா பாசம் வைச்சிருக்கிற ஒரே ஆளு நாந்தேன டா?” எனக் கேட்டான்.

எப்போதும் தன்னிடம் அவன் கேட்கும் கேள்வி தான். அவன் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், உள்ளே பாசமும்,பெருமையும் பொங்கினாலும் வெளியே அசட்டையாய் “ஆமாண்டா” எனக் கடந்து செல்பவன், இன்று சகோதரனின் முகத்தை ஆராய்ச்சியாய் நோக்கினான்.

“பதில் சொல்லு டா”

“இப்ப என்னத்துக்கு இந்த கேள்வி?”

“சொல்றா பங்காளி”

அவன் அழுத்திக் கேட்டதும் பழத்தைக் கையிலெடுத்தவன் அதை உரித்தபடியே,

“திருச்சில எங்காத்தாளுக்குப் பிரசவ வலி கண்டு, எங்கப்பன் ஆஸ்பத்திரில சேர்த்த அன்னைக்குத்தேன், கள்ளந்திரியில பெரியம்மாவுக்கும் பிரசவ வலி வந்துச்சாம்! ஒரே நாள்ல, காலைல நானும், சாயந்தரம் நீயும் பொறந்தோமாம். ஒரே வயித்துல இருந்து வராட்டியும், ஒரே நாள்ல ஒருத்தருக்கொருத்தர் துணையாப் பொறந்ததால, உனக்கு என்னையும்,எனக்கு உன்னையும் துணைப்பொறப்புண்டு சொல்லி வளர்த்தாரு தாத்தா! எங்காத்தா செத்துப் போய் நான் கள்ளந்திரி வந்தப்புறம், ரெண்டு பேரும் உடுப்பு கூட ஒரே மாறி உடுத்திக்கிட்டு ஒட்டிக்கிட்டேத் திரியுறதைப் பார்த்து ஊருக்குள்ள பலபேரு இவிங்க ரெண்டு பேரும் ரெட்டைப்புள்ளைகளா-ண்டு கேட்குற அளவுக்கு அந்த வயசுலயே ஒற்றுமையா இருந்தோமாம்!” – என்றவன், உரித்த வாழைப்பழத்தைப் பிய்த்து அவன் வாயில் இட்டபடி,

“எனக்கு வலிச்சா நீ அழுது, நான் சிரிச்சா நீ சிரிச்சு, எனக்காக யாரையும் எதிர்த்து நிண்டு, என்னைய எங்கயும் விட்டுக் கொடுக்காம, என் கஷ்டத்துலயும்,சந்தோசத்துலயும் உடனிருக்கிற உன்னைய எஞ்சகோதரன்-ண்டு சொல்றதா, நண்பன்-ண்டு சொல்றதா, இல்ல என் உசுரு-ண்டு சொல்றதா?” – எனக் கேட்டவனைக் கண்டு, அடக்கிப் பார்த்தும் முடியாமல், விருமனுக்குக் கடகடவெனக் கண்ணீர் கன்னத்தில் இறங்கி விட, அதைக் கண்டு கொள்ளாமல்,

“இப்ப சொல்றா! இந்த உலகத்துலயே நான் அதிகமா பாச வைச்சிருக்கிற ஒரே ஆளு நீயில்லாம வேற யாரு?” என ஆரன் கேட்டதும், மூக்கை உறிஞ்சி அழுகையை அடக்கியவன், அவன் கொடுத்த மீதி வாழைப்பழத்தையும் விழுங்கித் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவன்,

“இப்பிடியே எங்கூட இருந்தே காலத்தைத் தள்ளிரலாம்ண்டு நினைக்காத பங்காளி! உனக்கு-ண்டு நிறைய புது உறவெல்லாம் வர இருக்கு” – எனக் கூற, புருவம் சுருக்கியவன்,

“என்னா புது உறவு?” எனக் கேட்க,

“அதேன் டா!, உனக்கு நாளைக்குக் கல்யாணம் ஆகலாம்! பொண்டாட்டி-ண்டு ஒருத்தி வரலாம்! கருப்பா,குண்டா நல்லா பல்லு மொளச்சப் பன்னி மாறி இருக்குற அயித்த மக ஒருத்தி, உம் பொண்டாட்டியா வரனும்ண்டு ஆசைப்படலாம்” – என நமுட்டுச் சிரிப்புடன் கூற, புருவத்தை உயர்த்தி உதட்டைப் பிதுக்கியவன்,

“அதேன் புது உறவா?” – என்றதும்,

“என்ன பண்றது?, உன் தலையெழுத்து அப்பிடிப் பங்காளி” என்றவனிடம்,

“எலேய்! நீ என்னமோ சாமியாராகப் போற மாறி என்னைய நக்கலடிச்சுட்டுத் திரியுற! ஏன், உனக்கு இந்தக் கல்யாண மயிரெல்லாம் நடக்காதா, அந்த பல்லு மொளச்சப் பன்னிக்கு உன்னையக் கட்டனும்ண்டுலாம் ஆசை வராதா?” – என்று வினவ,

தோளைக் குலுக்கிப் பிடரியைக் கோதிய விருமன், “நான் கட்டுனா செவத்த புள்ளயத்தேன் கட்டுவேன் பங்காளி” என்று கூறியதும், தாடையை உயர்த்தி அவனை முறைத்த ஆரன்,

“இப்ப என்னத்துக்குத் திடீர்ன்னு கல்யாணம்,கருமாதி-ண்டு பேசிட்டுத் திரியுற நீயி?” எனக் கேட்டுப் பின் வாயில் கை வைத்தபடி “எலேய் களவாணி நாயே, செவத்த புள்ளதேன் வேணும்ண்டு வடநாட்டுக்காரி எவ கூடயும் ஒரண்டை இழுத்து வைச்சிருக்கியா டா?, அதேன் நடு ராத்திரி மொட்டைமாடில நிண்டுக்கிட்டு, நிலாவை வெறிச்சுட்டுக் கிடக்கியா?” எனக் கேட்டதும்,

“ப்ச்” என்ற விருமன் “உள்ளூர்க்காரிகளே ஓட ஓட விரட்டுறாளுக, இதுல வடநாட்டுக்காரிகளை வம்பிழுக்கிறது ஒன்னுதேன் கொற” – என்று முணுமுணுத்தவன்,

“எலேய் பங்காளி! சட்டி,சட்டியா சோறு திங்குற எனக்கு, சப்பாத்தியெல்லாம் எப்பிட்றா ஒத்து வரும்” எனக் கேட்க,

“அதுசரி” என்றவன் “சரிசரி, நீ காத்து வாங்குனது போதும்! கிளம்பு கீழ போவோம்” எனக் கூறி முன்னே நடக்க,

“ஆரணா…” என்று அவனை அழைத்து நிறுத்திய விருமன், திரும்பித் தன் முகம் பார்த்தவனிடம், தயங்கியபடி,

“நான் வேலை விசயமா 2 வாரம் போபால் போறேன் டா” என்றான்.

கண்ணைச் சுருக்கி அவனையே இரு நொடி தீர்க்கமாய் நோக்கிய ஆரன்,

“அவிங்க அனுப்புறாய்ங்களா?, இல்ல நீயா கேட்டு வாங்கிட்டுப் போறியா?” எனக் கேட்க, தன் துணைப்பிறப்பிடம் உண்மையை மறைக்க இயலாது, மெலிந்த குரலில்,

“நாந்தேன் டா கேட்டேன்” என்றவனைக் கண்டுக் கோபம் வர, கடித்தப் பற்களுடன் ஒரு நொடி தலை தாழ்த்திக் கண்ணை மூடிக் கோபத்தை அடக்கிய ஆரன்,

“என் கிட்ட இருந்து மறைக்குற அளவுக்கு, அப்பிடி என்னா உனக்கு மனக்கவலைண்டு தெரியல டா எனக்கு! உங்கூடவே இருக்குற எனக்குத் தெரியாம, அப்பிடி என்னத்த நீயி மூளைக்குள்ள ஒளிச்சு வைச்சுக்கிட்டு மருகுற-ண்டு எனக்குச் சத்தியமா புரியல. என்னைத் தாண்டி அப்பிடி எந்த விசயம் உன்னைப் பாதிக்குதுண்டு தெரியாம, கடுப்பு வருது பங்காளி! ஒன்னுக்கடிக்கக் கூட ஒன்னாப் போறவிங்கடா நாம! நமக்குள்ள ரகசியம்-ண்டு ஒன்னு இருந்ததா, எனக்கு ஞாபகமே இல்ல!” என்றவன், பிடரியைக் கோதியப் பெருமூச்சை வெளியிட்டு,

“நான் கோவப்பட்டு உன்னை மேல,மேல வருத்தப்படுத்த விரும்பல டா! இப்ப உன் மண்டைக்குள்ள குடைஞ்சிக்கிட்டிருக்கிறது என்ன எழவா இருந்தாலும் சரி, ரெண்டு வாரம் கழிச்சுத் திரும்பி வரும் போது, ஒழுங்கு மரியாதையா அதுக்குச் சமாதி கட்டிட்டு வா!” என்றவன் சிரிக்க முயன்றபடி நிற்பவனைக் கண்டுப் பல்லைக் கடித்து “லூசுப் ****” என்றுத் திட்டி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.

கோபமாய் நடந்து செல்பவனைக் கண்டு சிரித்துக் கொண்டான் விருமன்.

“எந்துணைப்பொறப்பு டா பங்காளி நீயி” என்று முணுமுணுத்தவனுக்கு அந்த நொடி, ‘ஆரன் நிதானமானவன்’ -எனப் பெரியவர் கூறுவது நினைவிற்கு வந்தது.

எத்தனை உண்மையது! அவன் இடத்தில் தான் இருந்திருந்தால், இந்நேரம் சட்டையைப் பிடித்துச் சண்டையிட்டுச் சம்பவம் பண்ணியிருப்போம் என்றெண்ணிக் கொண்டவனுக்கு, ஆர்ப்பாட்டமான அகலருவியின் குணத்திற்கு, நிதானம் தவறாத ஆரணன் தான் சரியான ஜோடி எனத் தோன்றியது.