அத்தியாயம் - 3

கதகவென மின்னிய மஞ்சள் விளக்கின் கீழ் பளபளத்துக் கொண்டிருந்தப் பாவையின் முகமதுத் தரை நோக்கிக் குனிந்திருக்க, வளை அணிந்திருந்த அவளது பொன்னிறக் கைகள், கூடையிலிருந்தப் பூக்களை அள்ளிக் கோலத்தின் மீது வட்டமாய் அடுக்கிய வண்ணமிருந்தது.

கருமமே கண்ணாக, பொறுப்பாய்க் கோலமிட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில், புள்ளியாய்த் தெரிந்த சிகப்பு மூக்குத்தித் தவிர வேறு எதுவும் அகப்படாதது கண்டு, அவளது மையிட்ட கண்களையும்,கனிந்த இதழ்களையும் தேடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான் அவன்.

கொஞ்ச நாள் பொறு தலைவா பாட்டில் வருவது போல், முகம் காட்டாது, விலகி ஓடி ஒளிபவளைக் கண்டு காண்டாகி, அவள் கைப் பற்றி விடும் வேகத்தில், சடாரென அவன் கண் விழித்த போது, ‘டௌங்ங்’ என்ற சத்தத்துடன் லிஃப்ட் திறந்தது.

லிஃப்ட்டின் எதிரேயிருந்த லாபியில், வெண்பட்டுச் சுடிதாரும், நெற்றியில் சந்தனமுமாய், விரிந்த கூந்தலோடு,விடாது வளவளத்த இதழ்களோடு, பூக்கோலமிட்டபடி அமர்ந்திருந்தாள் சக்தி.

வழிந்து வந்த கொட்டாவியை வெளிவிட்டுத் தலை முடியைக் கோதி சரி செய்தபடியே முன்னே நடந்தவன், “குட்மார்னிங்ண்ணா” என்ற பவித்ராவிடம் புன்னகைத்துக் கோலத்தைக் கை காட்டி,

“என்னவாம்?” என்று வினவினான்.

“இன்னிக்கு ஓனம்ண்ணா”

“ஓஓஓஓஓ!” என்றவன், “தங்கத் திரு ஓணம் வந்தல்லோ” – என்று இண்ஸ்டண்ட்டாகப் பாடியபடியேத் தன் இருப்பிடத்தை நோக்கித் திரும்ப, சிரிப்பை அடக்க முயன்று முடியாது, கலகலவெனப் புன்னகைத்தாள் சக்தி.

‘பாட்டைப் பாரு!, என்ன தான் டேஸ்ட்டோ இவனுக்கு’

ஒரு காலை முட்டியிட்டு, மறு காலை மடக்கியபடி அமர்ந்து, தரை நிறைய வெள்ளைப் பூக்களையும், முகம் நிறைய புன்னகைப் பூக்களையும் சிதற விட்டுக் கொண்டிருந்தவளை, பிடரியைக் கோதியபடி மெல்ல ஏறிட்டான் அவன்.

அகலமாய் விரிந்த இதழ்கள், அக்குண்டுக் கன்னத்துக்குள் குழி பறிக்கும் அழகை, அசையாது பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு மேலும்,மேலும் சிரிப்புப் பொங்கியது அவளுக்கு.

“சரி,சரி சிரிச்சது போதும்! எழுந்திரு” – பவித்ரா அதட்டியதும், எழ முயன்றவள், அத்தனை நேரமாய் கோலமிடுகிறேன் என்ற பெயரில் ஒரே பொசிஷனில் அமர்ந்திருந்ததால், இடுப்பும்,காலும் பிடித்துக் கொள்ள.. “பவி,பவி” எனப் பதறி தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, முகம் சுருங்கத் தொடையை அழுத்தினாள்.

அவள் தடுமாறுகையில், அவசரமாய் அருகிலிருந்த நாற்காலியைப் பற்றிய சசி, ‘கீழ விழுந்தா நேரா க்ரௌண்ட் ஃப்ளோர்ல தான் லேண்ட் ஆவா போல’ என்றெண்ணிக் கொண்டு,

“காஃபடீரியால தினம் பனீர் பக்கோடாவா வாங்கித் தின்னா இப்பிடித் தான் பன்னி மாதிரி ஆயிடும் பாடி!,” – என முணுமுணுத்தவன்,

“குண்டு,குண்டு,குண்டுப் பொண்ணே, கூப்பிடுது ரெண்டு கண்ணே” – எனப் பாடியபடி செல்ல,

வாயைப் பிளந்து, மூக்கை விடைத்த சக்தி, “எ…என்னை, என்னைப் பார்த்தா குண்டுன்னு சொல்றான்?” – எனக் கோபத்தில் திக்கித் திணற,

“உண்மையைத் தான சொல்றாரு!” என்ற பவித்ரா அவள் தீப் பார்வை பார்த்ததும்,

“65கேஜி எல்லாம் அவ்ளோ பெரிய வெயிட் கிடையாது சக்தி”

“இல்ல?”

“ஆமாமா! வா சீட்-க்குப் போகலாம்” – என அவளை நகர்த்திக் கொண்டு சென்று விட்டாள்.

அங்கே தன் இருப்பிடத்தில், சசி, அலெக்ஸிடம்,

“க்ரௌண்ட் ஃப்ளோர்ல லிஃப்ட் ஏறுனப்போ, லேசா கண்ணு மூடுன மாதிரி இருந்துச்சு ப்ரோ!, அப்டியே பட்டுன்னு தூக்கம், அதுல சட்டுன்னு ஒரு கனவு?”

“நீ பொட்டுன்னு போய்ட்ட மாதிரியா?”

“ப்ச், இல்ல ப்ரோ!, கேரளாக்காரி மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஒருத்தி, முகத்தைக் காட்டாம….” – அவன் முடிப்பதற்குள்,

“கேரளா ட்ரெஸ்ஸா?” என இடையிட்ட அலெக்ஸ், “சசி, ம்ம்ம்ம்” எனப் புருவத்தைத் தூக்கி, “முகம் தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன?” – என முணுமுணுத்தான்.

“ப்ச், பொறுக்கித்தனமா யோசிக்காதய்யா அலெக்ஸூ”

“யாரு?, நான் பொறுக்கியாக்கும்?, நீ பெரிய உத்தமனோ?” – எகிறியவனை அடக்கித் திரும்பி சக்தியின் இருக்கையைப் பார்த்து விட்டு,

“முழுசா மூடுன ட்ரெஸ் தான் ப்ரோ!, சலம்பாம, சொல்றதைக் கேளு” எனக் கூறி, “முகத்துல மூக்கைத் தவிர எதுவுமே தெரியல”

“ஓஹோ”

“ஆனா.. வலது பக்கமா.. சிகப்பு கலர்ல.. மூ…மூக்குத்தி மட்டும்” – என்றவன் நிமிர்ந்து, அலெக்ஸின் ஃபேஸ் எக்ஸ்ப்ரஷனை கிரகித்து விட்டு, “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமி,

“அப்புறம் லிஃப்ட் நின்னுடுச்சு ப்ரோ!, கதவு திறந்ததும், நான் கனவுல பார்த்த அதே கேரளா ட்ரெஸ்ல, நம்ம ரெட்-டூ மூக்குத்தி, குத்த வைச்சுக் கோலம் போட்டுட்டிருக்குது” என்றதும்,

“ஹ்ம்ம்ம்” என்ற அலெக்ஸ், “அப்புறம்?” எனக் கேட்க,

“அப்புறம் என்ன அப்புறம்?, கோலத்தை ரெண்டு ஃபோட்டோ எடுத்துட்டு டெஸ்க்குக்கு வந்துட்டேன்”

“எனக்கும் அனுப்பி வை டா! ஆஃபிஸ்-ஆனு, ஓணம்-ஆனு எனிக்கி இஷ்டமானுன்னு நான் ஸ்டேட்டஸ் வைக்கனும்”

“ப்ச், ப்ரோ”

“என்ன தான் டா உன் பிரச்சனை?”

“சுரைக்காய் எதுக்கு டா என் சொப்பனுத்துல வரனும்?”

“அதான, நீ, சுண்டெலியைக் கூட விட்டு வைக்காம சுக்கா போட்டு சாப்பிட்ற ஆளு”

“டேய்”

“இல்லடா சசி, நீ ப்யூர் நான்-வெஜ் ஆச்சேன்னு சொல்ல வந்தேன்”

“ப்….ரோ”

“சரி, வீட்ல இருந்து கிளம்பும் போது என்ன பாட்டுக் கேட்ட?” – அவன் விசாரித்ததும்,

“இன்னிக்கு ஓணம்ல?” எனக் கேட்டு, இரு கைகளையும் நீட்டியவன், நெஞ்சைக் குலுக்கி, “லா லா நந்த லாலா.. வா வா வா வா” என ஆடிக் காட்ட,

“போதும் கையை இறக்கு” என்ற அலெக்ஸ், நாடியைத் தட்டி யோசித்து,

“எனக்குப் புரிஞ்சுடுச்சு” என்றான்.

“என்னன்னு?”

“உன் கனவுல வந்தது ரெட்-டூ மூக்குத்தி கிடையாது! ரெட்-டூ சாரி கட்டுன ரம்யா கிருஷ்ணன்”

“நெசமாவாடா சொல்ற?”

“ஆமா டா!, பாரு ர.கி கூட அந்தப் பாட்டுல ரெட்-டூ கலர் மூக்குத்தி தான் போட்டிருக்கு”

“ஷ்ஷ் அப்பா…” என நெஞ்சை நீவிவிட்ட சசி, “சைட் அடிக்கிற பொண்ணை கனவுல பார்க்குறதெல்லாம், சாக்கடைல விழப் போறதுக்குன்னா அறிகுறி டா அலெக்ஸூ” – எனக் கூறி,

வெண் மேகமாய் நகர்ந்து.. தன் இருக்கைக்கு வந்த சக்தியைக் கண்டு,

“கடற்கரையினில் பீச் ஹவுஸ் இருக்கு,

பல ஊரினில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கு,

வா ஒன் டே கேர்ள் ஃப்ரண்டாக வரியா…” – என வழக்கம் போல் கூவ,

“ப்ச்” என உச்சுக் கொட்டி அவனை டீலில் விட்ட சக்தி, தன் கணினியின் புறம் பார்வையைப் பதித்துக் கொண்டாள்.

ன்று மதிய வேளை ப்ராஜெக்ட் மேனேஜர் மும்பையிலிருந்து வருகை தந்திருக்க, ஒட்டு மொத்தக் குழுவும் மீட்டிங் அறையில் ஒன்று கூடியிருந்தது.

ப்ராஜெக்ட் குறித்த நிறை,குறைகளைக் கூறி அனைவரிடமும் தங்களது கருத்துக்களைக் கேட்ட வண்ணம் மேனேஜர் முன்னே நின்றிருக்க, சிலர் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தபடியும்,பலர் நின்று கொண்டும், அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கடைசி பெஞ்ச் மாணவர்கள் போல், அறையின் மூலையில், சுவரில் சாய்ந்தபடி சசியுடன் நின்றிருந்த அலெக்ஸ்,

“அதெப்பிடி டா இந்தாளு, வருசா வருசம், வார்த்தையைக் கூட மாத்தாம சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றாரு?, கூச்சமாவே இருக்காதா?” – என்றான்.

“கம்முன்னு இருய்யா அலெக்ஸூ” - சசி

“இதுல பாதி ஹிந்தி வேற! எனக்கு ஹிந்தில தெரிஞ்ச ஒரே வாக்கியம் ‘சோலிக்கே பீச்சே க்யா ஹே’ தான்”

இவர்களது சம்பாஷணையைக் கேட்டபடி முன்னே நின்றிருந்த பவித்ராவும்,சக்தியும் சிரிப்பை அடக்கப் பாடுபடுவதைக் கண்டபடியே,

“அலெக்ஸூ, ஹிந்தி இஸ் அவர் நேஷனல் லாங்குவேஜ்ய்யா” என்று சசி கூற,

“அது என் பாட்டி பரமேஸ்வரிக்குப் புரிய மாட்டேங்குதே டா”

விடாது வளவளத்தவர்களை அடக்கும் பொருட்டு சக்தி திரும்பிப் பார்த்துக் கண்ணை விரிக்க,

இன்ஸ்டண்ட்டாக முளைத்த புன்னகையுடன், கைகளைக் கட்டிய சசி, சந்தனக் கட்டையாக நின்றவளை நோக்கி,

“வண்ணங்கள் தேவையில்லை,

உன்னைத் தொட்டுப் படம் தீட்டுவேன்” – என்று முணுமுணுக்க,

“இது சரி வராது” – என்றவாறு, பின்னே நகர்ந்து அவனருகே, அவனது கண்ணில் படாதவாறுப் பக்கவாட்டில் நின்று கொண்டாள் சக்தி.

இடப்புறம் சென்ற விழிகளை இழுத்துப் பிடிக்க முயலாது, அவள் நெற்றியிலிருந்து உதிர்ந்து விழக் காத்திருக்கும் சந்தனக் கீற்றை நோட்டம் விட்டபடி, சுவரோடு சாய்ந்திருந்தான் அவன்.

“why sasi is in silent mode?”

மேனேஜர் தன்னிடம் கேள்வி கேட்டதும், அதுவரை சாவகாசமாக சைட் அடித்துக் கொண்டிருந்தவன், அனைவரும் தன் முகம் பார்ப்பது உணர்ந்து, நேராக நின்று, “ம்ம்ம்ம்ம்” எனப் பேசத் தொடங்குவதற்குள், அலெக்ஸ் விளையாட்டாய்,

“வருஷத்துக்கு 2 டீம் டின்னர் தான் ப்ராஜெக்ட் ஸ்பான்சர் பண்ணுதுன்னு கோபத்துல இருக்கான் சார்” என இதுதான் சாக்கென்று குறை கூறத் துவங்க, சசியும்,

“ஆமா சார், ஆமா சார்” என ஆமோதிக்க , கூட்டத்திலிருந்தவர்களும் நகைத்த படி அவன் கூறுவதை ஆதரித்துப் பேசவும்,

“திஸ் டைம் ஐம் ப்ளானிங் சம்திங் பிக் ஃபார் யூ கைஸ்!, கொஞ்ச நாள் பொறுத்திருங்க” என்றவரிடம்,

“டீம் அவுட்டிங்! கோவா!” – என ஆளாளுக்கு ஒன்றைக் கூறி சௌண்ட் கொடுக்கவும், கலகலப்போடு நிறைவுற்றது அந்த மீட்டிங்.

மீட்டிங் அறையிலிருந்து பவித்ராவோடு நேராக காஃபடீரியாவுக்குள் நுழைந்து விட்டாள் சக்தி.

“மீட்டிங் ரூமா அது?, ஐஸ் பெட்டி மாதிரி இருக்கு!, ஷ்ஷ் கையெல்லாம் குளிர்ல விறைச்சுப் போச்சு!, முதல்ல ‘ஃபெசிலிடி டீம்’-க்கு கால் பண்ணி ஏசியை குறைக்க சொல்லனும்” – எனப் புலம்பியபடிக் கையில் டீ கப்புடன் அமர்ந்திருந்தவள், விசிலடித்தபடி ஃபோட்டோக்களாக வந்து விழுந்தத் தனது வாட்ஸ் ஆப்-ஐ நோக்கினாள்.

தோழி கீதா, அவளது நிச்சயதார்த்தப் புகைப்படங்களனைத்தையும் அனுப்பியிருக்க, மொத்தக் குடும்பமும் ஒன்றாக நின்று போஸ் கொடுத்திருந்தப் புகைப்படத்தைப் பார்வையிட்டவள், வெள்ளை வேஷ்டி, நீலச்சட்டையில் இடது ஓரமாக நின்றிருந்த சசியை ஜூம் செய்தாள்.

தன் அன்னைக்கும், அவனது அன்னைக்கும் நடுவில் சிரித்த முகமாக நின்றிருந்தவனைக் கண்டவளுக்கு, அன்று நடந்த அத்தனையும் நினைவிற்கு வந்தது.

ன் வீட்டுப் பெண்களுக்கு மத்தியில் கலகலவென விடாது வளவளத்தபடிப் பம்பரமாகச் சுழன்றவனை விழி விரியப் பார்த்திருந்த சக்தி, தன் அன்னை கோகிலா, அவசரமாய் அவனருகே நின்றிருந்த பெண்மணியிடம் சென்று, அவர் கையைப் பற்றியபடி மகிழ்ச்சியும்,ஆர்வமுமாய் உரையாடுவதைக் கண்ணுற்றாள்.

கோகிலாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, ஃபோன் பேசியபடியே சசி நகரவும்,

“விசாலம்!, நீ எங்க இங்க?, எப்படியிருக்க?, எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து?” எனத் துள்ளலுடன் கோகிலா கேட்க,

விசாலமும் விரிந்த புன்னகையுடன், “கோகிலா!, உன்னை இங்க பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்ல! மாப்பிள்ளை சம்பத், என் கொழுந்தனார் மகன். நான் நல்லாயிருக்கேன். நீ எப்பிடியிருக்க?, அண்ணே வரலையா?, உனக்கு எத்தனை பிள்ளைங்க?” எனப் பதிலுக்குப் பேசத் துவங்கவும்,

“ஒரு பொண்ணு தான். பேரு சக்தி. அவளும் வந்திருக்கா. பொண்ணோட அம்மா என் சின்னம்மா மக தான்! பொண்ணு கீதாவும்,சக்தியும் ஒரே ஸ்கூல்ல படிச்சவளுங்க! உனக்கு எத்தனை பிள்ளைங்க?” எனக் கேட்க,

ஒரு நொடி முகம் மாறிப் போன விசாலம், “எனக்கு ஆண் ஒன்னு. பெண் ஒன்னு கோகிலா” – என்று மெல்லிய குரலில் கூறினார்.

“அப்பிடியா?, ரெண்டு பேரும் வந்திருக்காங்களா?, நான் பார்க்கனும்! சின்னாளப்பட்டி அழகின்னு பேர் எடுத்த விசாலாட்சி பெத்த புள்ளைங்க எப்பிடியிருக்குங்கன்னு நான் பார்க்கனும்”

“ப்ச், அழகென்ன அழகு!, அதான் கிழவியாய்ப் போனேனே”

“பின்ன, குமரியாவே இருக்கலாம்ன்னு நினைச்சியாக்கும்?” என்றவர், விசாலத்தின் வெற்று நெற்றியைக் கண்டு,

“அண்ணேன்ன்ன்?” என்றிழுக்க,

“நெஞ்சு வலில தவறிட்டாரு கோகிலா!, 5 வருசமாயிடுச்சு!” என்றவரிடம்,

“நல்ல மனுசன். சரி விடு விடு! வீடு எங்க இருக்கு?, பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டியா?, பையன் என்ன பண்றான்?” எனக் கேட்க,

“பையன் இஞ்சினியர் படிப்பு படிச்சுட்டு, ஒரு ஐடி கம்பேனில வேலை பார்க்குறான். பொண்ணு.. பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு” – என்றார்.

“அப்பிடியா?, என் மகளும் எம்.சி.ஏ முடிச்சுட்டு ஐடி கம்பேனில தான் வேலை பார்க்குறா! பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?, எங்க கட்டிக் குடுத்துருக்க?”

“அ…அது…” – முகம் கன்ற மேலே தொடர முடியாதுத் தடுமாறியவரை, கோகிலம் குழப்பமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அருகே வந்தான் சசி.

“ம்மா, பொண்ணு,மாப்பிள்ளை மாத்திக்கிறதுக்கு மோதிரம் குடுத்தேனே! எங்க அது?, தட்டுல வைக்கனுமாம். அத்தை கேட்குது” – படபடவெனப் பேசியவனை கோகிலா சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க,

தன்னையே நோக்குபவரைக் கண்டு லேசாகப் புன்னகைத்த சசி, “ம்மா,சீக்கிரம் ம்மா” என அவசரப்படுத்தவும்,

“இந்தா டா,இந்தா டா! இவன் ஒருத்தன், அவசரத்துக்குப் பொறந்தவன்” எனத் தன் மடியிலிருந்த மஞ்சப் பையிலிருந்து மோதிர டப்பாக்களை எடுத்து நீட்டினார் விசாலம்.

“இவன் தான் உன் மவனா?” என்ற கோகிலாவிடம்,

“ஆமா கோகிலா! பேரு சசிதரன்.” என்றவர்,

“நான் அடிக்கடி சொல்லுவேன்ல, என் பக்கத்துவீட்டுக்காரி, சிநேகிதி கோகிலான்னு!, இவ தான் அது” எனக் கூற,

“நீ எப்ப சொன்ன?” – என முணுமுணுத்தபடியே, அறிமுகமாய் மெல்லத் தலையசைத்தவன், “இதோ வந்துட்றேன்” என நகர்ந்து விட்டான்.

“நின்னு பேசுறானான்னு பாரேன்! ஏழு கழுத வயசாய்டுச்சு! இன்னும் பெரியவங்கக் கிட்ட எப்பிடிப் பேசனும்ன்னு தெரியாம ஓடுறான்! இவனெல்லாம் கல்யாணம் பண்ணி, பொண்டாட்டியோட என்னான்னு வாழப் போறானோ போ” – புலம்பியவரிடம்,

“விடு விசாலம்! இந்தக் காலத்து பசங்க அப்பிடித் தான்!, நம்மள மாதிரி கிழடு,கட்டைகளோட என்ன இருக்கு பேச?, அதை விடு! பையன் நல்லா கலையா இருக்கான்! என்ன உன்னைப் போல நிறமில்ல!, பொண்ணு எப்பிடி இருப்பா?, உன்னை மாதிரியா?, அண்ணனை மாதிரியா?” – எனக் கேட்க,

பதிலற்று அமர்ந்திருந்தவரிடம், “விசாலம்”என அவர் கையைத் தொட்டவர், தோழியின் முகத்தில் தென்பட்ட வருத்தத்தைக் கண்டு,

“என்னா புள்ள?” – எனக் கேட்க, விசாலமும் கடகடவெனத் தன் மனதை அழுத்தும் பாரத்தைக் கொட்டியே விட்டார்.

அவர் கூறியதைக் கேட்டு கவலை கொண்ட கோகிலாவும், “அதுக்குப் பிறகு எந்தப் போக்குவரத்தும் இல்லையா?” எனக் கேட்க, இல்லையென மெல்லத் தலையசைத்தவரிடம்,

“ப்ச், விடு! இதைத் தான் பெத்த மனம் பித்து,பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாங்க போல!, பெத்த தாயும்,கூடப் பொறந்தவனும் ஒத்தைல நிக்குறாங்களேங்குற நினைப்பு இல்லாம, வந்து என்ன,ஏதுன்னு கேட்காம, அழுத்தமா இருக்குது பாரு அந்தப் புள்ள!”

“அது மேல எந்தத்தப்புமில்ல கோகிலம்!, இந்த மனுஷன் பேசுன பேச்சு அப்பிடி!, மறுபடி வீட்டுவாசப்படியை மிதிக்க முடியாதபடி அவ்ளோ பேச்சு பேசிப்புட்டாரு அந்தப் பையனை! ரோஷம்,மானம் இருக்குற எவனும் திரும்ப வீட்டுப்படி ஏற யோசிப்பான்!, எப்பிடியோ அவளை நல்லா வைச்சுப் பார்த்துக்கிட்டா சரி தான்!”

“உறவுகளுக்குள்ள என்ன ரோஷம்,மானம் வேண்டிக்கிடக்கு!, அதுவும் பெத்தத் தாயோடையும்,தம்பியோடயும் ரோஷம் பார்த்து என்னத்த சாதிக்கப் போறாளாமா அவ?”

“விடு கோகிலம்! அவளும் நிச்சயம் எங்களை நினைச்சு வேதனைப்பட்டுக்கிட்டு தான் இருப்பா”

“அது சரி! நீ மாறவே இல்ல விசாலம்!,” – என்றவர், “சரி விடு! வந்த இடத்துல சிரிச்சு சந்தோசமா இருக்குறதை விட்டுட்டு, அதை,இதைப் பேசி நானே உன் நிம்மதியைக் கெடுத்துப் போட்டேன்!, நீ உன் ஃபோன் நம்பரைச் சொல்லு! நான் பதிவு பண்ணிக்கிறேன்” எனக் கூறித் தூர நின்றிருந்த சக்தியை அழைத்து, விசாலத்தை “நமக்கு சொந்தக்காரவங்க தான்! உனக்கு அத்தை முறை!” என அறிமுகப்படுத்தி அவரது தொலைபேசி எண்ணைத் தன் மகளின் உதவியுடன் தனது அலைபேசியில் ஏற்றிக் கொண்டார்.

“உன் நிறத்துக்கும்,உன் பொண்ணு நிறத்துக்கும் சம்பந்தமே இல்ல புள்ள!, பொண்ணு எவ்ளோ கலரா இருக்குறா! சுண்டி விட்டா ரத்தம் வரும் போல” – என்ற விசாலம், சக்தியின் கன்னத்தைத் தடவிக் குடுத்து,

“வயசுக்கு வந்த காலத்துல இருந்து உங்கம்மாவுக்கு ஒரே குறிக்கோள் தான்! நல்லா செக்கச் செவேர்ன்னு ஒரு புள்ளையைப் பெத்துக்கனும்ன்னு! கடைசில நினைச்ச மாதிரியே பெத்துக்கிட்டா” – எனக் கூறிச் சிரிக்க, தானும் புன்னகைத்த சக்தி,

“நீங்களும் கூட அந்தக்காலத்து நடிகை வைஜெயந்தி மாலா மாதிரி ரொம்ப அழகாயிருக்கீங்க அத்தை” என்றாள் சிரிப்புடன்.

“அதே பேரைச் சொல்லித் தான் டி எங்கூர்ப் பயலுக பூரா அவ பின்னாடி திரிஞ்சாய்ங்க” – கோகிலா.

“ஆமா, பின்னால வர்றவங்களையெல்லாம் விரட்டி விட்ற வேலையை உங்கம்மா தான் பார்த்துக்கிட்டிருந்தா”

“என் சிநேகிதிக்கு அவளைப் போலவே, நல்லா கலரான மாப்பிள்ளையா பார்த்து வைப்பாரு அவங்கப்புன்னு நினைச்சு, பூரா பயலையும் விரட்டி விட்டேன், ஆனா எங்க! அவர் கூட்டி வந்த சீமத்துரை, கோயில் சிலையை மிஞ்சுற அளவுக்குல்ல கரு,கருன்னு இருந்தாரு!,”

“கருப்பா இருக்கிறது தான் டி கம்பீரம்” – விசாலம்.

“புருஷனுக்கு சப்போர்ட்டா?, அது சரி”

தன் அன்னையும்,அவரது தோழியும் சரிக்கு,சரி வாயடிப்பதைப் பார்த்தபடி சிரிப்புடன் அமர்ந்திருந்த சக்தி, தூரத்தில் மாப்பிள்ளையருகே நின்ற சசியைத் திரும்பி நோக்கினாள்.

முழுப் பற்களையும் காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு விட்டுப் பின், தன்னருகிலிருந்த விசாலத்தை நோக்கி, மீண்டும் அவன் புறம் திரும்பினாள்.

‘இந்த அழகுச் செல்வத்தின் மகனா இவன்! ச்சை’ – என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, சசியும் இவள் புறம் பார்த்து விட,

நாற்காலியில் நன்றாகச் சாய்ந்தமர்ந்து, நீலாம்பரி ஸ்டைலில் வலது காலைத் தூக்கி, இடது கால் மேல் போட்டுக் கொண்டு, கையைக் கட்டியபடித் திரும்பி அவனது அன்னையை நோக்கி விட்டு, அவன் புறம் திமிரான பார்வை செலுத்தியவளைக் கண்டு அல்லு கழண்டு விட்டது சசிதரனுக்கு.

சூனியக்காரி எதுக்கு ‘zoo’-க்கு வந்திருக்கா?

மைலாப்பூர்க்காரிக்கு, மந்தவெளில எந்தா டா சோலி!

அதுவும் என் மதர் பக்கத்துல மந்தகாசப் புன்னகையோட உட்கார்ந்திருக்கா!

யவன ராணி, யார்றி நீயி!!!!

நிமிடத்தில் மனம் கடகடவென கவுண்ட்டர்களைக் கொட்ட, எச்சில் விழுங்கிப் பதட்டத்தைத் தணித்தவன்,

“டேய் சசி, மோதிரம் சைஸ் சரியாத் தான இருக்கும்?, இல்லாட்டி அவ பேசியே என்னை சாகடிச்சுருவா டா” என மாப்பிள்ளை சம்பத், தன் காதுக்குள் முணுமுணுப்பதைக் கேட்டு,

“இங்க ஆல்ரெடி என் உசுரு போய்க்கிட்டிருக்கு டா பேமானி” எனத் திட்டி விட்டு, நைஸாக அவள் பார்வையிலிருந்து விலகி, மெல்ல நகர்ந்து.. பின்னே…. பின்ன்ன்னே.. பின்ன்ன்ன்ன்னே சென்று விட்டான்.

பிடரியைக் கோதியபடி எரிச்சலுடன் கடைசி வரிசையில் நின்றவன், “ஆமா, அந்த ரெட்-டூ மூக்குத்தியைப் பார்த்து நான் எதுக்கு ரெட் கார்டு வாங்குனவன் மாதிரி ஆட்டைய விட்டு வெளிய வரனும்?, இவக் கிட்ட எனக்கென்ன பயம்” – என்று புலம்பி பின் எட்டி, அவளிருப்பிடத்தை அறிந்து கொண்டு, கெத்தாக முகத்தை வைத்தபடி, மீண்டும் முன்னே வந்தான்.

“சசி, பெரியப்பா ஃபோனை கார்லயே விட்டுட்டாராமா!, நீ காரை எங்க பார்க் பண்ணுன?, யார்க்கிட்டயாவது சாவியைக் கொடுத்து எடுத்துட்டு வர சொல்லு” – பெரியம்மா கூறியதும், தன்னையே முறைத்தபடி கல்யாணப் பெண்ணின் அருகே நின்ற சக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“நானே.. நானே போய் எடுத்துட்டு வர்றேன்” எனக் கூறித் திரும்பியவன், மாப்பிள்ளை சம்பத்தின் கலவர முகத்தைக் கவனித்து, “என்ன டா?” எனக் கேட்டான்.

“இங்க வா” என அவனைக் குனியச் செய்த சம்பத் “ நிச்சயப் புடவை பச்சைக் கலர்ல இல்லன்னு அவ கொஞ்சம் கோவமா இருக்கா டா” எனக் கூறியதும்,

“பச்சைக் கலர் புடவை கட்டிருக்கிறவங்களைப் பார்த்தா, எனக்குப் பச்சை,பச்சையா வாய்ல வரும்ன்னு எதையாவது சொல்லி சமாளி டா!” – என்றவன், “ரெட்-டூ கலரோட ரேஞ்சு தெரியாம பேசிக்கிட்டிருக்காய்ங்க” -என சக்தியை மேலோட்டமாகப் பார்த்தபடியே கூறி விட்டு, அவள் கண்ணை விரிப்பதைப் பொருட்படுத்தாது விறுவிறுவென ஓடி விட்டான்.

அதன் பின்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, கூட்டம் பந்தியை நோக்கி செல்லத் துவங்க, தன் தோழியுடனே நகர்ந்த கோகிலாவைக் கண்டு கொள்ளாதுத் தன் நண்பிகளுடன் ஐக்கியமானாள் சக்தி.

பந்தியில் தன் எதிரே அமர்ந்திருந்த சசி, சமத்தாக சைவம் சாப்பிடுவதை வெறித்துப் பார்த்தபடி உண்டவள், கைக் கழுவுமிடத்தில் நிற்கையில்,

“ஏன் டா சசி, அந்த க்ரேவில உருண்டை,உருண்டையா இருந்துச்சே! என்னா டா அது?”

“அது பேரு தான் கோஃப்தா சித்தி!” – சசி.

“என்ன கண்றாவியோ!”

“கண்றாவியா இருந்ததால தான் கேட்டு,கேட்டு வாங்கி சாப்பிட்டியாக்கும்!, சாப்பாடு பொண்ணு வீட்டு சைடு-ன்றதால குறை சொல்லியே ஆகனும் உனக்கு! அதான?, சோத்தைப் போட்டு, உன்னைய வண்டில ஏத்திட்டு வந்ததுக்கு, நல்லாஆஆ பண்ற சித்தி நீயி!”

“டேய், பேசாம போடா!, ஒன்னு சொல்ல முடியாது இவங்கிட்ட” – என முணுமுணுத்தபடி சித்தி நகர்ந்து விட, சிரித்தபடி கை கழுவி நிமிர்ந்தவன், கண்ணாடியில் தன்னையே முறைத்தவாறு நின்றிருந்த சக்தியின் பிம்பத்தைக் கண்டு,’அய்யய்யோ’ என அலறிய உள்ளத்தை மறைத்து மெல்லத் திரும்பினான்.

கண்டுகொள்ளாதவாறு அவன் தன்னைக் கடந்து செல்ல முற்படுகையில்,

‘நண்டு வறுக்கத் தெரியுமா, கோழி பொரிக்கத் தெரியுமா,

ஆட்டுக்காலை நசுக்கிப் போட்டு சூப்பு வைக்கத்தெரியுமா’ – என ஒவ்வொரு வார்த்தையையும்,அழுத்தி,அழுத்தி எச்சில் தெறிக்கப் பாடி, எகிறிக் கொண்டு வருபவளை உணர்ந்து, தோள்களைக் குறுக்கி, கண்ணை இறுக மூடியபடி சுவரோடு சுவராய்ப் பம்மி விட்டான் சசி.

ஹை பிட்சில் பாடி முடித்து, மூச்சு வாங்க நின்ற சக்தி, முந்தானையை இழுத்துச் செருகிக் கொண்டு,

“கொஞ்ச,நஞ்சப் பேச்சாய்யா பேசுன?”

“ஏங்க, மரியாதைங்க, ம…ரி..யாதை” – கெஞ்சியவனை கண்டுகொள்ளாது,

“மைலாப்பூர்க்காரி மாமியா தான் இருப்பா, பால் கலர்ல இருக்கிறவ ப்ராமினா தான் இருப்பா-ன்னு! எவ்ளோ கமெண்ட் அடிச்ச?, இன்னிக்கு சைவ சாப்பாட்டை சைலண்ட்-ஆ அமுக்குற?” – காஞ்சனா லாரன்ஸ் போல், க்ளோஸ் அப்பில் முகத்தைக் காட்டியவளைக் கண்டு மிரண்டு,

“இல்லங்க, வலது பக்கம் மூக்குத்திப் போட்டிருக்கிறதைப் பார்த்து நீங்க வடகலை ஐயங்காராத் தான் இருப்பீங்கன்னு நினைச்சோம்ங்க” – அலறினான் அவன்.

“இப்பிடித் தான் ரெட்டூ கலர் மூக்குத்தியைப் பார்த்து, ரெட்டின்னு சொன்னீங்க”

“ஆமாங்க,ஆனா ரெண்டுமே தப்பாப் போச்சு”

“ஷ்ஷ்ஷ்ஷ்” -அவள் நெற்றியைப் பிடித்ததும்,

“அது….. அழகான பொண்ணுங்கன்னா, இப்பிடி இஷ்டத்துக்கு அனுமானிக்கிறது பசங்களோட ஹாபி-ங்க” – என ஃபார்ம்க்கு வந்தான் அவனும்.

“ஆனா…… சைவப் ******** பிறந்துட்டு, ஆட்டுக்கால் பாயாவுக்கு ஆசைப்பட, உங்களுக்கு எப்பிடி மனசு வருது?”

“சாதிக்கும்,சாப்பாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்?”

“அதாவது?”

“பசின்னு வந்துட்டா, சாதிப்பற்று,தேசப்பற்று,மொழிப்பற்றுன்னு எல்லாப் பற்றும் பின்னுக்குப் போயிடும்ன்னு சொல்றேங்க”

‘மஷ்ரூம் பிரியாணில ஏன் டா மட்டனைக் கலந்தன்னு கேட்டா, இவன் ஏன் என்னன்னவோ பேசுறான்?, - என்ற ரீதியில் விழித்தபடி சக்தி.

அவள் விழிப்பதைக் கண்டு சிரிப்பு வர, “அதனால மனிதம் போற்றுவோம்! மந்த்ரா பேடியை ஃபாலோ செய்வோம்! ஜெய்ஹிந்த்!” – எனக் கூறி அவசரமாக அவளைக் கடந்து சென்றவனை, அழாத குறையாக நோக்கிய சக்தி, நங்,நங்கென சுவற்றில் முட்டிக் கொண்டாள்.

அன்று அந்த விழா முடிந்து கிளம்பும் வரை சக்தியைக் காணும் போதெல்லாம் ‘அழகு புள்ளையப் பெத்துருக்கடி கோகிலம்’ என ஆயிரம் முறை அவள் கன்னம் வழித்து, மகன் ஏற்றியக் கடுப்பைக் குறைத்து அவளைச் சிரிக்கச் செய்திருந்தார் விசாலாட்சி.

செல்ஃபோனில் தெரிந்த சசியின் தலையில் விரலால் ஒரு குட்டு வைத்து விட்டு, தோழி அனுப்பியிருந்த ஃபோட்டோக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஸ்டேட்டஸில் வைத்தாள் சக்தி.

அன்று மாலை வேளை நெருங்குகையில், அதுவரையிருந்த ‘க்ளியர் ப்ளூ ஸ்கை’ மாறி, வானம் கருக்கத் தொடங்க, மங்கிய வெளிச்சத்தை ஜன்னல் வழி கண்ட சசி,

“கைஸ்!, குஞ்சாகோ போபன் உங்களுக்காக, டெஸ்க்ல ‘உன்னியப்பம்’ வைச்சிருக்காராம்! போய் எடுத்துக்கோங்க! ஓணம் ஸ்பெஷல்” – என்று கூவிய அலெக்ஸைக் கண்டுச் சிரித்து டெஸ்க்கிலிருந்து எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.

அலெக்ஸ் சொன்ன அடுத்த நொடியே, குடுகுடுவென ஓடிச் சென்று, “ஓணம்க்கு ஊருக்குப் போகலையா போபன்?” – எனக் கேட்டபடி, “ஐ வில் டேக் 3” என்று விட்டு இரண்டு அப்பங்களைக் கையிலும், ஒன்றை வாயிலும் வைத்துக் கொண்டு டெஸ்க்கிற்கு வந்த சக்தியைக் கண்டு அவன் சிரிப்பை அடக்க,

அவனை முறைத்தவள், “நான் பவித்ராவுக்கு சேர்த்து எடுத்துட்டு வந்தேன்” – என கெத்தாகக் கூறி விட்டு “இந்தா பவி” என நீட்ட, “வேணாம், வேணாம், நீயே கொட்டிக்க” என்றவளிடம் பல்லைக் கடித்து,

“சமயத்துக்கு உதவ மாட்ட!, இப்ப அவன் என்னையப் பார்த்து கெக்கே,பெக்கேன்னு சிரிக்கனும் அதானே?” – என்று திட்டிப் பின் நிமிர்ந்து, எதிரில் நின்ற சசியிடம்,

“நீங்க சாப்பிடுங்க” என நீட்டினாள்.

“இல்ல பரவாயில்ல! நான் போய் எடுத்துக்கிறேன்! உ..உங்களுக்கு 3 போதுமா?”

-வாயில் வைத்த அப்பத்தோடு அவனைக் கடுப்பாய் நோக்கியவள், ‘ஹ்ம்ம்’ எனத் திரும்பிக் கொள்கையில், ரவி,

“சக்தி, கேன் யூ ஸ்விட்ச் ஆன் த லைட்ஸ்?” எனக் கேட்கவும்,

“ஷ்யூர்” என்றவள் நடந்து சென்று எதிரேயிருந்த ஸ்விட்ச்சுகளைத் தட்டியதும், பட்,பட்டென அனைத்து விளக்குகளும் ஒளிர, போபனின் டெஸ்க்கருகே நின்றிருந்த சசியும்,அலெக்ஸூம் “ஹேஏஏஏஏஏஏஏஏ” எனக் கை தட்டினர்.

எதற்கென்றே தெரியாமல் மற்றவர்களும் க்ளாப் செய்யத் துவங்க, புருவம் உயர்த்திய சக்தி, தான் அணிந்திருந்த அனார்கலி டாப்-ஐ இழுத்துப் பிடித்துக் குனிந்து மேற்கத்திய பாணியில் நன்றி சொல்லி விட்டு நகர்ந்தாள்.

டுத்த அரைமணி நேரத்தில், ஓணம் செலிப்ரேஷனாக, பெண்களும்,ஆண்களும் தங்களது தளத்திலேயே கேட் வாக் நடக்கத் துவங்க, சசி,அலெக்ஸ்,சுந்தர்,சுஷ்மா நால்வரும் ‘பெஸ்ட்-ட்ரெஸ்ட்’-ஆளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவரும் நடந்து வருகையில், விதவிதமான கமெண்ட்டுகள் நாலாபுறமிருந்தும் தெறித்த வண்ணமிருந்தது.

கடைசியில் கை கோர்த்தபடித் தயக்கமும்,சிரிப்புமாய் முன்னே நடந்து வந்த சக்தியும்,பவித்ராவும், விடாது விசில் அடித்த சசியையும்,அலெக்ஸையும் ஒன்றும் கூற முடியாது முறைத்து வைத்தனர்.

“சக்தி லுக்ஸ் சோ ப்யூட்டிஃபுல்!, chubby-ஆ இருந்தாலும், க்யூட்டா இருக்கா!” – என்று சுஷ்மா கூறியதும்,

“பட், என் வோட் இஷிதா முகர்ஜி தான்” – பட்டெனக் கூறிய சசியைக் கண்டு, “நண்பேன் டா” என முணுமுணுத்த அலெக்ஸ்,

“அதாவது அவங்க தான் கேரளா ட்ரெடிஷனை கரெக்ட்-ஆ ஃபாலோ பண்ணி முண்டு கட்டிட்டு வந்திருக்காங்க! அதை சொல்றான் நண்பன்!” என்றான்.

“கரெக்ட்! இஷிதா அண்ட் அஜய் தான் இன்னிக்கு பெஸ்ட் ட்ரெஸ்ட்” – என்ற சுந்தர் அவர்களிருவருக்கும் பரிசுகளை வழங்க, கைத்தட்டிக் கொண்டிருந்த கூட்டத்தில் நகர்ந்து, சக்தியின் பின்னால் நின்றான் சசி.

“அந்த பெங்காலி ஆண்ட்டி தான் எவ்ளோ அழகு!, ரசகுலா மாதிரி இருக்குப் பாரேன்” – இஷிதா குறித்து, பவித்ராவிடம் சக்தி.

“ஆனா, நம்மூர்ப் பசங்களுக்கு, ரசகுலாவை விட, ரவாலட்டு மேல தான் ப்ராஆஆந்து” – கமெண்ட்டரியில் சசி.

சைட்-ஆகத் திரும்பிப் புருவத்தை உயர்த்தியவள், “யாரு ரவாலட்டு?” என்று முணுமுணுக்க,

“ம்க்க்க்கும்!, குழி விழுற கன்னத்தோட, கொழு,கொழுன்னு இருக்குறவங்க எல்லாரும் ரவாலட்டு தான்” என்று அவனும் முணுமுணுத்ததும்,

“அப்போ அந்த ரவாலட்டுக்கே ப்ரைஸ் கொடுத்திருக்க வேண்டியது தான-ண்ணா?, டெரகோட்டா செட்! அநியாயத்துக்கு மிஸ் ஆயிடுச்சு” – என்று எரிச்சலுடன் கூறினாள் பவித்ரா.

“சரி,சரி ஓணம் அன்னைக்கு ஓஓஓ-ன்னு அழுகாத! டெரகோட்டா போனா என்ன, அண்ணன் உனக்குப் பனகோட்டா வாங்கித் தரேன்” – என அலெக்ஸ் கூறியதும், இருவரும் கெக்கே,பெக்கேவென சிரிக்க,

தன் தெற்றுப் பல்லை உற்று நோக்குபவனைக் கண்டு, சிரிப்பை அடக்கி, வாயைக் க்ளோஸ் செய்தவள், “வா போலாம்” என்று பவித்ராவிடம் முணுமுணுத்துத் தன் சீட்டில் அமர்ந்தாள்.

அனைவரும் அவரவர் இடத்திற்கு நகர்ந்ததும், தனது டெஸ்க்கிற்கு வந்த சசி, ஜன்னல் திரையை விலக்கி, மழையில் ஒரு கண்ணும், மங்கையில் ஒரு கண்ணுமாக,

‘என்னுயிரே இந்த நூற்றாண்டில், ஓர்க் கவிஞன் எவனும் எழுதாத

லவ் போயம் நீயும்,நானும் தான்’ – என முணுமுணுக்க..

நிமிர்ந்து முறைத்த சக்தியிடம்,

“நீ முறைக்கிறதுல தப்பே இல்ல சக்தி!, பாட்டு மட்டும் உனக்கு! ஆனா, பரிசு ஆண்ட்டிக்கு!, ஆண்ட்டி பேரை ஃபர்ஸ்ட்-ஆ சஜஸ்ட் பண்ணதே சார் தானாம்! தெரியுமா?” – என்ற பவித்ராவைக் கண்டுப் பம்மி, சீட்டில் பதுங்கியவனைக் கேவலமாக நோக்கினான் அலெக்ஸ்.

“என்ன டா?, உனக்கும் டெரகோட்டா செட்டு வேணுமா?”

“ஹ்ம்ம்” – நக்கலாய் உதட்டை வளைத்தபடி அலெக்ஸூ.

“எதுக்கு ப்ரோ இப்ப நக்கலா சிரிக்கிறீங்க?”

“நானும் காலைல இருந்து நோட் பண்ணிட்டு தான் டா இருக்கேன்”

“என்னத்த?”

“உன் சாங் செலக்ஷனையெல்லாம்”

“அதுக்கென்ன இப்போ?”

“ஏன் டா டேய்!, நேத்து வரை கொத்தவச்சாவடி லேடி, நீ கோயம்பேடு வாடின்னு பாடிட்டு, இன்னிக்குக் காலைல இருந்து, கேர்ள் ஃப்ரெண்டாக வரியா, காதல் நீ தானா?, இப்ப.. லவ் போயம்!, என்ன ப்ரோ நடக்குது இங்க?”

“எ…என்ன ப்ரோ சொல்றீங்க?”

“புரியல?”

“ப்ரோ!”

“உங்க பாட்டும்,பார்வையும் ஆபத்தான பாதையை நோக்கிப் போய்ட்டிருக்கு ப்ரோ”

நண்பன் கூறியதும் அதிர்வாய் அவன் முகம் நோக்கிய சசி, ஒரு நொடி யோசித்துப் பின் தலையை குலுக்கி, “எ…எ..என்னைப் பார்த்தா ப்ரோ இப்பிடிப் பேசறீங்க?”

“ஏ..ஏ..ஏன் திக்குறீங்க?, தண்ணியடிச்சாக் கூட தெளிவா பேசுற உங்க வாய், ஏன் தந்தியடிக்குது மிஸ்டர்.சசி?” – இடது கை விரல்களை மடக்கி, பெருவிரலை நிறுத்தி வலது உள்ளங்கையில், தட்டியபடி அலெக்ஸூ.

“நான் வினயமில்லாம பண்ண விசயத்தை, நீங்க விவகாரமாக்கப் பார்க்குறீங்க மிஸ்டர்.அலெக்ஸ்”

“யாரு நானா?, காலைல கனவுல வந்தது யாருன்னு நினைக்குறீங்க?”

“ரம்யா கிருஷ்ணன்”

“அது.. உங்களை சமாதானப்படுத்துறதுக்கு நான் சொன்ன பொய்”

“எ..என்ன்ன்ன??”

“அந்த மூக்குத்தி முத்தழகி, இந்த உன்னியப்பம் தான்”

“சும்மா உடான்ஸ் விடாதீங்க ப்ரோ”

“அந்தப் பொண்ணை இப்ப எட்டிப் பாரு”

“எதுக்கு ப்ரோ?”

“சொல்றதைச் செய் டா”

எட்டி அவளைப் பார்த்து விட்டு மீண்டும் தன் புறம் நோக்கியவனிடம்,

“பொண்ணு என்ன பண்ணுது?”

“நெத்தியை சொரிஞ்சுட்டிருக்கு ப்ரோ”

“இப்ப உங்களுக்கு என்ன பாட்டு ஓடுது உள்ள?”

“நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும், அது ஏனோ” – பாடிக் காட்டியவனைக் கண்டு, ‘தட்ஸ் இட்’ என டெஸ்க்கைத் தட்டிய அலெக்ஸ்,

“கன்னக்குழிங்குற புதை குழி உங்களை இழுத்துருச்சு ப்ரோ! இனி நீங்க நினைச்சாலும் வெளிய வர முடியாது! வரவ்வ்வ்வ்வ்வே முடியாது” – ஆருடம் சொல்ல,

“மூட்றா முட்டாப் பயலே!” என்ற சசி, முசுமுசுவென மூண்ட கோபத்துடன், வாட்டர் பாட்டிலை எடுத்துத் தன் கையில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கொண்டு,

“அப்பாலே போ சாத்தானே! அப்பாலே போ சாத்தானே!” – என்றபடி தன்னைச் சுற்றித் தெளித்து விட,

திடீரெனத் தன் மீது தெறித்தத் தண்ணீரை உணர்ந்து எட்டிப் பார்த்த சக்தி, சசியின் உளறலைக் கேட்டு, “மென்ட்டலா இவன்!” என முகத்தைச் சுளித்தாள்.

“ஹே அலெக்ஸ், இன்னிக்கு மிட் நைட் 3 ஓ க்ளாக், ப்ரடக்ஷன் சிஸ்டத்தை ஷட் அவுன் பண்ணப் போறது நீ தான?, இன்னும் ஆஃபிஸ்ல என்ன மேன் பண்ணிட்டிருக்க?, சீக்கிரம் வீட்டுக்குப் போய்த் தூங்கு!” என சுந்தர் விரட்டியதும், “இதோ கிளம்பிட்டேன் சுந்தர்” என லேப்டாப்பை மடித்து பைக்குள் திணித்த அலெக்ஸ்,

“யார் யாரோ நண்பன் என்று, ஏமாந்த நெஞ்சம் உண்டு” – எனப் பாட,

கடுப்புடன் அவனது சேரை மிதித்த சசி, “எந்திரிச்சுப் போடா, எந்திரிச்சுப் போடா நாயே” எனத் துரத்தவும்,

“ஆஃபிஸ் ப்ராப்பர்ட்டி டா சசி!, மேல கேமரா இருக்கு” என எச்சரித்த சுந்தரைக் கண்டு, “நத்திங் சுந்தர்” என்றபடி சேரைத் தடவிக் கொடுத்தவன், “மூடிட்டு போடா மூதேவி” என முணுமுணுத்துத் தன் கணினியின் முன்னமர்ந்தான்.

நண்பன் சென்றதும், முசுட்டு முகத்துடன் லேப்டாப்பைத் தட்டிக் கொண்டிருந்தவன்,

சக்தியின் டெஸ்க் அருகே போபன் வந்து நின்று, மீதமிருந்த உன்னியப்பத்தை நீட்டி, “சக்திக்கி இஷ்டமல்லே” எனக் கூறுவதையும், அதற்கு சக்தி, “ஹய்யோ! சேட்டா!, அத்தரையும் எனக்கியானோ! நன்னி நன்னி!” எனப் பொங்கியபடி வாங்கிக் கொள்வதையும் கேட்டு,

இப்ப புருவத்தைத் தூக்கி, கண்ணைச் சுருக்கி, முழுப் பல்லையும் காட்டி, கன்னத்துல ரெண்டு குழியோட, அம்சமா சிரிச்சிட்டிருப்பா!,

நிமிர்ந்து பாரு டா சசி!,

நச்சரித்த மனதை அடக்கி, “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியவன், தீவிரமாக ஈமெயிலொன்றை டைப் செய்ய, அவனது மனசாட்சியோ விடாது,

‘லஜ்ஜாவதியே!, என்னை அசத்துற ரதியே” – எனக் கூவ…

“ரம் பாட்டில் மாதிரி இருக்கிறவ, ரதியா?, மனசாட்சி!, உனக்கு மனசாட்சியே இல்லையா?”

ஆமா, ஆக்சுவலா பார்த்தா, இந்த சிச்சுவஷேனுக்கு நான், லாலாக்கு டோல் டப்பிமான்னு பாடாம, ஏன் லஜ்ஜாவதியேன்னு பாடிட்டிருக்கேன்! ஒரு வேளை அலெக்ஸ் சொன்ன மாதிரிஇஇஇஇஇஇ…………

-என யோசிக்கையிலேயே, நெற்றி வியர்த்து,தொண்டை காய்ந்து விட படபடப்புடன் வாட்டர் பாட்டிலை எடுத்துத் தண்ணீரைக் குடித்தான் சசி.

“அந்தப் பொண்ணு நிறத்தோட, உன் நகக் கண்ணு கூட போட்டி போட முடியாதே டா சசி!, நீ எப்பிட்றா…… அந்தப் பொண்ணைஐஐஐஐ” – நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத மனசாட்சி,

“போச்சு!, இனி என்ன நடக்கும்ன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு!, நீ இந்த நச்சரிப்பைப் பொறுக்க முடியாம, நாலா மடிச்ச லெட்டர்ல உன் மனசை அடக்கி, அந்தப் பொண்ணுக் கிட்ட நீட்டப் போற!, அது உன்னை நொங்கெடுத்து POSH-ல போட்டுக் கொடுக்கப் போகுது! நீ வேலை போய் தெருவுல நிற்கப் போற”

‘ஐயையோஓஓஓஓஓஓ’

“டாவுமில்லாம, டப்புமில்லாம நீ ‘பொன்னான மனசே, பூவான மனசே, வைக்காத பொண்ணு மேல ஆச-ன்னு’ பாடிக்கிட்டு செண்ட்ரல் ஸ்டேஷன்ல பிச்சையெடுக்கப் போற”

கட்டம் போட்டக் கைலியும்,கிழிந்த சட்டையுமாக, டோங்கிரித் தலையுடனும், டோரிக் கண்ணுடனும் தன்னைப் போன்றொரு உருவம், வாயில் பீடியுடன், குஷ்டம் வந்த கையோடு பிச்சையெடுப்பது கற்பனையில் தோன்றவும்,

“நோஓஓஓஓஓஓ”-வென அலறி எழுந்து நின்றவன்,

மறுபக்கத்திலிருந்து சக்தி, “என்னாச்சு?” என உதடசைப்பது கண்டு, பதறியடித்துத் தன் பொருட்களையெல்லாம் பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, அடித்துப் பிடித்து ஓடியே போய் விட்டான்.

“மரண பயத்தைக் காட்டிட்டியே டா பரமா அலெக்ஸூ!, இனி பத்து நாளைக்காவது, அந்த நாகினி முகத்துல முழிக்காம இருக்கனும்! மூக்குத்தியைக் காட்டி, என்னைய மூலைல உட்கார வைச்சிருவா போல” – எனப் புலம்பியபடி ஆஃபிஸிலிருந்து வண்டியை எடுத்தவன், நேராக வீட்டில் வந்து நின்றான்.

ஆனால், உண்மையில் அவனுக்கு மரணப் பயத்தைக் காட்டி விடும் முயற்சியில் இருப்பது பரமா இல்லை!, பரமி! அதாவது சக்தியின் அன்னை கோ..கி..லா!

செல்ஃபோன் நம்பரைப் பகிர்ந்து கொண்டதிலிருந்து தினம் ஃபோனைப் போட்டு “இன்னைக்கு என் வீட்ல கத்திரிக்காய்! உன் வீட்ல வெண்டைக்காயா?” எனப் பேசிக் கொள்ளும் அன்னையர் இருவரும் முப்பது வருடங்களாகப் பகிர நினைத்த விஷயங்களைனைத்தையும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாள் எதேச்சையாக, கோகிலா,

“ஏன் விசாலம், உன் மகன் கல்யாண வயசைத் தாண்டி போய்ட்டிருக்கானே! இன்னுமா பொண்ணு பார்க்காம இருக்க?” எனக் கேட்க,

பெருமூச்சை வெளியிட்ட விசாலம்,

“மாசம் தவறாம தரகர் வீட்டு வாசல்ல நிற்குறேன்! ஆனா, எதுவும் அமைய மாட்டேங்குது கோகிலா.” – என்றார்.

“ஏன், தோஷம்,கீஷமெதுவும்ம்ம்ம்?”

“ச்ச,ச்ச, என் மகனுக்கு சுத்த ஜாதகம் டி”

“அப்புறம் என்ன பிரச்சனை?”

“ப்ச்,இந்தக் காலத்து புள்ளைங்க, தனக்கு வர்றவன் அழகா,சிவப்பா இருக்கனும்ன்னு எதிர்பார்க்குறாளுங்க!, என் மவன் தான் அவங்கப்பாரைக் கொண்டு கருப்பசாமியாட்டம் பிறந்திருந்திருக்கானே!, கலரைக் காட்டியே பாதிப் பேரு கழண்டுக்கிட்டாளுங்க!”

“அடப்பாவமே”

“என்ன பாவமே!, ஏன் டி, வெளுப்பா இருக்குறவனைக் கட்டுனாத் தான் என் கட்டை வேகும்ன்னு சொல்லி, நீ அடம்பிடிச்சு அண்ணனைக் கட்டல?, அப்பிடித் தான்”

“ம்க்கும்! அப்பிடி அடம் பிடிச்சதுக்குத் தான் இப்ப அனுபவிச்சிட்டிருக்கேன்”

“ஏன், எங்கண்ணனுக்கு என்ன குறை?”

“சுத்த வெவரங்கெட்ட மனுஷன் டி அவரு! ஒன்னுத்துக்கும் பிரயோசனமில்லாதவரு”

“உன் வாய்க்கு.. உன்னையெல்லாம் சகிச்சுக்கிட்டு வாழ்றாரு பாரேன்”

“ப்ச், அதை விடு!, நான் விசயத்துக்கு வர்றேன்! என் மக சக்திக்கு, உன் மகன் சசியைக் கேட்டா கொடுப்பியா?”

“என்னாடி சொல்ற?” – அதிர்ச்சியும்,ஆனந்தமுமாய் விசாலம்.

“நெசத்தைத் தான் சொல்றேன்!, ஒத்தப் புள்ளதான்னாலும், இந்தக் கூறுகெட்ட மனுசனை வைச்சுக்கிட்டு, அவளுக்குன்னு என்னால பெருசா எதுவும் சேர்க்க முடியல!”

“கிளி மாதிரி இருக்குற பொண்ணைப் பெத்து வைச்சுக்கிட்டு, காசு,பணத்துக்குக் கவலைப்படுவியா நீயி?, பார்க்க அவ்ளோ அழகா இருக்குறா, சம்பாதிக்குறா! இது போதாதா?, மாப்பிள்ளைங்க வரிசை கட்டி நிற்க மாட்டானுங்க! நீ ஏன் டி இப்பிடி பேசுற?”

“ப்ச், இப்ப என்ன?, உன் மகனைக் கொடுக்க முடியாதுங்குறியா?”

“அடிக் கூறு கெட்டவளே!, எதுக்குடி இப்பிடி வெடுக்குன்னு பேசுற?, உன் மகளை வேணாம்ன்னு சொல்ல நான் என்ன குருடா?”

“பின்ன என்னடி?”

“இல்ல, என் மவன் பார்க்கக் கொஞ்சம்.. சுமாராத் தான் இருப்பான்!, அந்தப் பொண்ணுக்கு பிடிக்குமோ, என்னவோ தெரியலயே”

“அதெல்லாம் பிடிக்கும்! நான் பிடிக்க வைச்சிருவேன்! உன் வீட்டுக்கு அவ மருமவளா வந்தா, எனக்கு ஒரு கவலையில்லையுமில்ல!, ஒத்தப் பொண்ணை வைச்சிருக்கேன்! நம்பகமான இடத்துல கட்டிக் கொடுக்கனும்ன்னு நினைக்குறேன்! என் புருசன் வெவரங்கெட்ட மனுசன்! ஒரு கூறு இல்ல அவருக்கு. கல்யாண விசயத்துல அவரை நம்ப, எனக்கு இஷ்டமில்ல” – என கோகிலா விடாமல் புலம்பத் தொடங்க,

சக்தியின் அழகு முகத்தை நினைவில் நிறுத்தி, மகன் இதற்கு நிச்சயம் மறுப்புக் கூற மாட்டான் என நம்பியபடி, பற்பல யோசனைகளுடன் ஃபோனைக் காதில் வைத்தபடி நின்றிருந்தார் விசாலம்.

திங்கட் கிழமையன்று காலை..

பூரி கிழங்கை, பூரிப்பாய்த் தின்று கொண்டிருந்த சசியிடம் விசாலம்:

“ஆஃபிஸ் லீவா டா சசி?”

“மதியம் ஷிஃப்ட் ம்மா!, இன்னொரு பூரி வை”

“சசி..”

“ம்ம்ம்”

“சம்பத் நிச்சயத்துல என் சிநேகிதி ஒருத்தியைப் பார்த்தோமே! ஞாபகமிருக்கா?”

குருமாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரல்கள் ஒரு நொடி நின்று பின்,

“ஆமா, என்னவாம் இப்ப?”

“அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கு டா! பேரு சக்தி. நீ கூட நிச்சயத்துல பார்த்திருப்ப”

“……..”

“கோகிலம், அவ பொண்ணுக்கு உன்னைக் கேட்குறா டா”

தொண்டையில் ஸ்லைட் போய்க் கொண்டிருந்த பூரி, இவன் அதிர்ச்சி தாங்காது விக்கியதில், படாரெனக் குதித்து நாசியில் ஏற,

லொக்கு,லொக்கென இருமி, மூச்சுக்குத் தவித்துப் பின் தண்ணீரைக் குடித்துத் தன்னை சமன் செய்தவன்,

“என்ன சொன்ன?” எனக் கேட்டான்.

“பார்த்து சாப்பிடு டா” எனக் கடிந்தபடி விசாலம், “கோகிலாவோட பொண்ணு சக்தியை உனக்குப் பார்க்கலாமா-ன்னு கேட்குறேன் டா” என மறுபடி கூற,

சடாரென இருக்கையிலிருந்து எழுந்தவன், நெற்றியைத் தேய்த்துக் கொண்டு, மூச்சு வாங்க,

“இ..இந்த விசயம், அந்தப் பொண்ணுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.

“அ..து.. தெரியலயே டா! கோகிலா, அவக் கிட்ட கேட்டாளா,என்னன்னு தெரியலயே!”

“தயவு செஞ்சு இந்த விசயம் அந்தப் பொண்ணு காதுக்கு எட்டிடாதபடி ஏதாவது பண்ணிடும்மா ப்ளீஸ்” – கெஞ்சிக் கேட்டவனை குழப்பத்துடன் நோக்கி,

“ஏன் டா இப்பிடி சொல்ற?” என்றவரிடம்,

“ப்ச்!, ம்மா, அந்தப் பொண்ணு ரொம்பக் கலரும்மா”

“அதுக்கு?”

“நான் எப்பிடிம்மா அந்தப் பொண்ணுக்கு செட் ஆவேன்?”

“உனக்கென்ன டா! கருப்பா இருந்தாலும், கலையா கம்பீரமா இருக்க”

“அது உன் கண்ணுக்கு மட்டும் தான்! சும்மா லூசு மாதிரி உளறாம, இந்தப் பேச்சை இத்தோட விடு!, திரும்பவும் சொல்றேன், அந்தப் பொண்ணு காதுக்கு இந்த விசயம் போகாத மாதிரி பார்த்துக்கம்மா!” என்றவன், “இல்லாட்டி, பெருத்த அவமானத்துக்கு உள்ளாயிருவேன் நானு” என முணுமுணுத்தபடி கையைக் கழுவி விட்டு அறைக்குள் மறைந்தான்.

திங்கட் கிழமை மதியம்…

சக்தியின் வாட்ஸ்-ஆப்பில்.. அவளது பள்ளித் தோழி ஷர்மி:

சக்தி, கீதாவோட நிச்சயதார்த்தத்துக்கு நீயும் போயிருந்த போல! இப்ப தான் க்ரூப்ல ஃபோட்டோ பார்த்தேன்!

“ஆமா நீ மட்டும் தான் மிஸ்ஸிங்! நம்ம பொண்ணுங்க, எல்லாரும் வந்திருந்தாளுங்க”

“ப்ச், என்ன பண்றது?, நான் தான் பெங்களூர்ல மாட்டிக்கிட்டேனே! ஆனா, நீயெல்லாம் ஏன் டி இப்பிடியிருக்க?”

“ஏன்?”

“நம்ம சீனியர் சத்யாக்கா பத்தின அத்தனை இன்ஃபர்மேஷனையும் நீ கேட்கும் போதெல்லாம் அவுத்து விட்டேனே!, ஆனா, அந்தக்கா உன் சொந்தக்காரங்கங்குறதை நீ என் கிட்ட சொல்லாம மறைச்சுட்ட பார்த்தியா?”

“என்ன சொல்ற?, சத்யாக்காவா?”

“ஆமா! ஏய், 5-வது ஃபோட்டோல, உங்கம்மா பக்கத்துல, சிரிச்ச முகமா ப்ளூ கலர் சாரில நிற்குறது, சத்யாக்காவோட மதர் டி”

-ஷர்மி கூறியதும், அவசரமாய் ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தவள், “விசாலாட்சி அத்தையைவா சொல்ற?” எனக் கேட்டு அனுப்ப,

“ஓ!, அவங்க பேரு விசாலாட்சியா?, அவங்க தான், அவங்க தான் சத்யாக்காவோட அம்மா! நான் காலேஜ்ல பார்த்திருக்கேன்!, ஏன், உனக்குத் தெரியாதா?”

“இல்லடி, தெரியாது” – எனப் பதில் அனுப்பி விட்டு நிமிர்ந்த சக்தி,

எதிரே வரும் ரவியைக் கலாய்த்தபடி புன்னகை முகமாக, தங்களது தளத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த சசியை நோக்குகையில், அன்று பஸ் ஸ்டாப்பில் சத்யா கூறிய, “என் தம்பி என்னைப் புரிஞ்சுக்கனும் சஞ்சயன்” என்றதே நினைவில் ஓடியது.

அதே நேரத்தில், விசாலமும்,கோகிலமும் அலைபேசியில்:

“என்னடி உன் மகன் இப்பிடி சொல்லிட்டான்?” – கோகிலா.

“அவன் சொல்றதும் நியாயம் தான?, உன் பொண்ணு ரோசாப் பூ மாதிரியிருக்கா! என் மவன் கரிக்கட்டை மாதிரி இருக்கான்! எப்பிடிடி பொருந்தும்?”

“ஏன் உனக்கும்,எங்கண்ணனுக்கும் பொருந்தல?, எனக்கும் என் புருசனுக்கும் பொருந்தல?”

“ப்ச், நம்ம காலம் வேற டி கோகிலா”

“என்னமோ போ!”

“உன் பொண்ணுக் கிட்ட இதைப் பத்தி எதுவும் பேசாத! காசு,பணத்துக்கு யோசிச்சுக்கிட்டு, நம்ம அம்மா சீக்கிரம் நம்மளத் தள்ளி விடப் பார்க்குதோன்னு வருத்தப்படப் போகுது”

“ப்ச், உன் மகனுக்கு என்ன டி குறை?, நிச்சயத்துலயே நான் பார்த்தேன்!, தங்கமான பயலா இருக்கான்! உன் ஓரகத்தி அந்த வாயாடியையே அவன் அவ்ளோ அழகா சமாளிக்குறான்!, வீட்டு ஆளுங்க அத்தனை பேர் வாயிலயும் சசின்னு தான் முதல்ல வருது!, உறவுகளை அனுசரிச்சு நடந்துக்கிறவன், எத்தனை பேருக்குடி கிடைப்பான்?, சும்மா தூக்கிக் கொடுக்க நினைப்பேனா என் பொண்ணை?”

“உன் பொண்ணுக்கு மட்டும் என்ன குறை?, அத்தை,அத்தைன்னு பாசமா பக்கத்துலயே உட்கார்ந்திருச்சு புள்ள!, அவ மருமகளா வந்தா, எனக்கும் சந்தோசம் தான்! ஆனா.. இந்தப் பய இப்பிடிப் பேசிப் போட்டானே”

“இப்ப என்னாடி பண்றது?”

“உன் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா அமையும் டி! கொஞ்சம் பொறுமையாத் தான் இரேன்”

“ஏன், உன் மகன்-ட்ட எனக்காக இன்னொரு முறை பேசிப் பார்க்க மாட்டியா?”

“கட்டாயப்படுத்துற விசயமா டி இது?”

“அதுவும் சரி தான்!”

“ப்ச், நீ எதைப்பத்தியும் யோசிக்காதே!, நல்லதே நடக்கும்! நம்பு!” – விசாலம்.

திங்கட் கிழமை இரவு……

சோபாவில் படுத்த நிலையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு, மனம் முழுக்க சத்யாவின் நினைவு தான்!

‘சத்யாக்கா அப்பிடியே விசாலம் அத்தை ஜாடை!, அதான் அவ்ளோ அழகா இருக்காங்க!,’

‘அந்தக்கா இப்ப எப்படியிருப்பாங்க?’

‘எங்க இருப்பாங்க’

‘குழந்தை பிறந்திருக்கும்ல’,

‘ஆனா ஏன் இன்னும் அவங்க வீட்டோட சேரல?’

‘போயும் போயும், இவன் ஏன் அந்தக்காவோட தம்பியா இருக்கனும், ச்ச!’

ஏனோ இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது மனம் முரண்ட, எரிச்சலுடன், நெற்றியைத் தேய்த்தவள், டம்மென கிட்சனில் பாத்திரம் விழும் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து சென்று அடுப்படியை நோக்கினாள்.

அன்னை கோகிலா ஏதேதோ புலம்பலுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு,

“என்னம்மா புலம்புற?” எனக் கேட்டாள்.

“எல்லாம் என் தலையெழுத்து டி! அதான் புலம்புறேன்”

“என்ன குறையாமா உன் தலையெழுத்துக்கு! செவப்பா புருசன் வேணும்!, செவப்பா புள்ளை வேணும்ன்னு நினைச்ச!, நீ நினைச்சது தான் நடந்துருச்சே! பின்ன என்ன?”

“ப்ச், இப்ப அது தான் டி பெரிய பிரச்சனையா இருக்குது”

“அப்பாவை வேணும்ன்னா பிரச்சனைன்னு சொல்லு ஒத்துக்கிறேன்!, அவரு ஏமாளியா, வெகுளியா இருக்குறது எனக்கும் பல சமயம் கோவம் வரும்! ஆனா.. என்னை ஏன் உன் பிரச்சனை லிஸ்ட்ல வைக்குற?”

“எல்லாம் உன் கல்யாணத்தை நினைச்சுத் தான் டி”

“என் கல்யாணத்தை நினைச்சு என்ன கவலை?, மாப்பிள்ளை பார்த்துட்டு தான இருக்க?”

“ஒன்னும் அமைய மாட்டேங்குதே டி!, நல்ல மாப்பிள்ளைங்க பூரா, நகை,நட்டுன்னு போட்டாத்தான் கட்டுவேங்குறாங்க!, நகை எதுவும் வேணாம், பொண்ணை மட்டும் குடுங்கன்னு கேட்குறவனை நம்ப நான் தயாரா இல்ல”

“ஓஹோ”

“ப்ச், மனசுக்கு ஒன்னும் ஒப்ப மாட்டேங்குதுடி சக்தி”

“கவலைப்பட்டு,கவலைப்பட்டு பி.பி ஏத்திக்காத!, சொந்த வீடு, புருசனோட பென்ஷன், மகளோட சம்பாத்தியம்ன்னு நீ நல்லா தான் இருக்க!, பஞ்சத்துல வாழ்ற மாதிரி புலம்பாத”

“உனக்கு என் கஷ்டம் புரியாது டி”

“புரியாமலே இருக்கட்டும்!” – என்று நகர்ந்தவள்,

“ஆனாலும், இந்த விசாலத்தை மலை போல நம்புனேன் பாரு” என்றவரைக் கண்டு நின்று,

“விசாலம் அத்தைக்கு என்ன?” எனக் கேட்கவும், ஒரு நொடி தயங்கியவர் பின்,

“ம்ம்ம்ம்” என நொடித்து, “அவ மகன் சசிக்கு உன்னைக் கொடுக்கலாம்ன்னு கேட்டேன்” என்றதும்,

உள்ளே அதிர்ந்தாலும், காட்டிக் கொள்ளாது,

“அப்புறம்?” எனக் கையைக் கட்டிக் கொண்டு விசாரிக்க,

“ப்ச், அந்தப் பய வேணாம்ன்னு சொல்லிட்டானாம் டி” எனக் கூறவும்,

வாயைப் பிளந்து, கண்ணை விரித்தவள்,

“என்னது?” என மூக்கை விடைக்க,

“ஆமா, அந்தப் பொண்ணு ரொம்பக் கலரு!, நான்-லாம் அதுக்கு பொருத்தமா இருக்க மாட்டேன், வேற அழகான பையனா பாருங்கன்னு சொல்லிட்டானாம்” – என்ற கோகிலம்,

“இங்க பாருடி, அம்மா ஒன்னு சொல்றேன் கேளு!, வெளித்தோற்றத்துக்கெல்லாம் பெருசா முக்கியத்துவம் கொடுக்காத!, நல்ல குணமிருக்கிறவனோட தான், நிம்மதியா குப்பை கொட்ட முடியும்!, அம்மா அனுபவத்துல சொல்றேன்! புரிஞ்சதா?” எனக் கேட்க,

‘அந்தப் பொண்ணு ரொம்பக் கலரு’ – என்ற பதிலிலேயே புருவத்தை உயர்த்திய சக்தி, “பார்றா!, அம்பூட்ட்ட்டு நல்லவனா டா நீயி!” என நினைத்துச் சிரித்துக் கொண்டு,

“அந்தக் குப்பையை அப்புறம் கொட்டலாம்!, மொதல்ல சிங்க்ல அடைச்சுட்டு நிற்குற குப்பையை க்ளீன் பண்ணு! கப் அடிக்குது” – என்றபடியே நகர்ந்து விட்டாள் சக்தி.

துணுக்,துணுக்,துணுக்ஸ்ஸ்ஸ்ஸ்….

டித்துப் பெய்து கொண்டிருந்த மழையைப் பொருட்படுத்தாது, அவசரமாய் அந்த மெடிக்கல் ஷாப்பில் வண்டியை நிறுத்திய அந்த ஹெல்மெட்காரன், சொட்ட,சொட்ட நனைந்தபடி விறுவிறுவெனப் படியேறிப் பாக்கெட்டிலிருந்த ப்ரெஸ்க்ரிப்ஷனை எடுத்து கடைக்காரரிடம் நீட்டி,

“கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கண்ணா! அர்ஜெண்ட்” என்றான்.

பொறுமையாக மருந்துகளை பேக் செய்த கடைக்காரரைக் கண்டு, எரிச்சலடைந்து, “கொஞ்சம் சீக்கிரம்! ப்ளீஸ்” என்றவன் விடாது அடித்த செல்ஃபோனை கடுப்பாய்ப் பார்த்து, பின் காதில் வைத்து “வந்துட்டேன் வந்துட்டேன்!, அஞ்சு நிமிஷம்” என்று விட்டு,

“கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க” – எனக் கோபமாய்க் கூறவும்,

“இருங்க சார்!, அவசரத்துல நான் மருந்தை மாத்திக் குடுத்துட்டா, என்ன பண்ணுவீங்க” – எனக் கேட்க, காண்டாகிப் போனவன்,

“நீங்க எட்டி,எட்டி மருந்தைத் தேடுறதுக்குள்ள, எமர்ஜென்சி பேஷண்ட் எமலோகத்துக்கே போயிருவான்” – என்று விட்டு, கடைக்காரர் முறைப்பதைக் கண்டு கொள்ளாது, மருந்துகளையும்,மழையையும் மாறி,மாறி இரு நொடி பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பின், அவர் பையை நீட்டியதும், வேகமாய் வாங்கிப் பணத்தை நீட்டினான்.

“ஏன் சார், 148 ரூபாய்க்கு மருந்து வாங்கிட்டு, 2000 ரூபாய் நீட்டுனா எப்பிடி சார்?, சேஞ்ச் இல்ல சார்”

“ப்ச்” என்றவன், பர்ஸைக் குடைந்து விட்டு, “என் கிட்டயும் இல்ல சார்” எனக் கூற,

“சேஞ்ச் மாத்திட்டு வாங்க சார்” என்றவர், அடுத்த நபரிடம் நகர்ந்து விட,

“ஷ்ஷ்ஷ்ஷ்” என நெற்றியைத் தேய்த்தவன், “மழைக்குக் கடையெல்லாம் பூட்டியிருக்கு சார்! நான் எங்க போய் சேஞ்ச் வாங்க?,” என்றான் பொறுமையற்ற குரலில்.

“அப்ப மருந்தை வைச்சுட்டுப் போங்க சார்”

“…………” – கோபமாய்க் கடைக்காரரை ஏறிட்டவன், என்ன கூறியிருப்பானோ, அதுவரை அருகில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், தன்னிடமிருந்தப் பணத்தை நீட்டி,

“2000 ரூபாய்க்கு, 15 ரூபா கம்மியா இருக்கு! வாங்கிக்குறீங்களா?” எனக் கேட்டாள், அவனிடம்.

நன்றி கூறக் கூட நேரமில்லாது, அவசரமாய் அவள் கையிலிருந்தப் பணத்தை வாங்கி கடைக்காரனின் முகத்தில் எறிந்து விட்டு, தன்னிடமிருந்த 2000 ரூபாய்த் தாளை அவளிடம் கொடுத்து விரைந்தான் அவன்.

வண்டியை அவன், ஸ்டார்ட் செய்து கொண்டிருக்கையிலேயே..

“இப்பிடி மப்பா பேசுற நீயெல்லாம் எப்பிடிய்யா மருந்து விற்குற வேலை பார்க்குற?, எமர்ஜென்சின்னு வர்றவங்கக் கிட்ட இப்பிடித்தான் எகத்தாளமா பேசுவீங்களா?, இங்க நடந்த எல்லாத்தையும் நான் என் ஃபோன்ல படம் பிடிச்சு வைச்சிருக்கேன்! தெரியுமா?, நெட்ல போடட்டா?” என அவள் மிரட்டுவதும்,

“என்னம்மா, பேச்சு ஒரு மாதிரி போகுது?, அந்தத் தம்பி எப்பிடித் திமிரா பேசுச்சு பார்த்தேல?”

“அவசரத்துல வர்றவங்க அழகான வார்த்தையைப் போட்டா பேசுவாங்க?, என்ன ஆளு நீங்க?” - என்றபடித் திரும்பியவளிடம்,

-வண்டியை ஸ்டார்ட் செய்தவனின் விழிகள், தனக்காக சண்டையிடுபவளை அதிர்வுடன் நோக்கிப் பின், ‘பிரச்சனை வேண்டாம்! செல்’ என எச்சரிக்கும் பார்வை பார்த்து விட்டு, அவசரமாய் நகர்ந்தது.