அத்தியாயம் - 4

!! லாலி பாப்-ஆ?, தேங்க் யூ சோ மச் அம்மா” – என்றபடித் தன் அன்னையின் கையைப் பற்றியிழுத்து அச்சிறுவன் முத்தமிட்டதும், இதழ் விரியப் புன்னகைத்த சத்யா, பதிலுக்கு முத்தமிட்டு, அவனை அணைத்து விடுவித்து, அவன் விரல்களைப் பற்றிக் கொண்டு முன்னே நடந்து செல்வதைக் கண்டபடித் தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்தாள் சக்தி.

பள்ளிச் சீருடையிலிருந்த மகனின் கையைப் பற்றிக் கொண்டு அதே ஒடிசலான தேகத்துடனும், கொள்ளை அழகுடனும், கண்களில் லேசான சோகத்துடனும், அவனோடு பேசியபடி நடந்து செல்பவளைப் பின் தொடர்ந்தாள் அவள்.

‘இந்தக்காவுக்கு வயசே ஏறாதா?’

‘ஒரு குழந்தை பெத்தும் எப்பிடி Body-ஐ maintain பண்றாங்க’

முகத்துல கொஞ்சம் கூட மாற்றமில்ல! ரோஜா படத்துல வர்ற மதுபாலா மாதிரி எவ்ளோ அழகு! – என வியந்தபடிப் பின் தொடர்ந்து வந்தவளை, அந்தத் தனி வீட்டின் கேட்டைத் திறந்து உள் நுழைந்த சத்யா கவனித்து விட,

ஒரு நொடி கண்டு கொள்ளாமல் கடந்து விட நினைத்தவள், பின் வண்டியை நகர்த்தத் தோன்றாது நின்று, புன்னகை புரிந்தபடி,

“ஹா..ஹாய் சத்யாக்கா!, நீங்க சத்யா தான?” எனக் கேட்கவும்,

புருவம் சுருக்கி ஆம் எனத் தலையசைத்த சத்யா, “நீங்க?” என வினவ,

“நான் சக்தி. உங்க ஜூனியர். நீங்க படிச்ச ஸ்கூல்ல தான் நானும் படிச்சேன்! என்னை ஞாபகம் இருக்கா?” என்றாள்.

“சக்தி….” என இழுத்த சத்யா, அவளது கன்னக்குழியைக் கண்டு, நினைவு வந்தவளாக,

“ஞாபகம் இருக்கு! வேலண்டைன்ஸ் டே அன்னிக்கு எனக்கு ரோஸ் கொடுத்து, உங்க மேல எனக்கு பயங்கர க்ரஷ்ஷூன்னு சொன்ன பொண்ணு தான நீ?” என சிரிப்புடன் வினவவும், கண்ணை விரித்த சக்தி,

“ஹய்யோ! அக்கா! அதே பொண்ணு தான் நான்!, இன்னும் அந்த இண்சிடெண்ட்டை ஞாபகம் வைச்சிருக்கீங்களா?” – எனக் கேட்டபடியே வண்டியிலிருந்து இறங்க,

“அதெப்படி மறக்க முடியும்?, ஸ்கூல் முடிஞ்சு போற வரைக்கும் அதைச் சொல்லி சொல்லி என் ஃப்ரண்ட்ஸ் கலாய்ச்சதை என்னால மறக்கவே முடியாது!” என்ற சத்யா,

“ஏன் அங்கயே நிற்குற? உள்ள வா.. வா” எனக் கூறியபடி அவள் கைப்பற்றி உள்ளே கூட்டிச் சென்றாள்.

அளவாய்,அழகாயிருந்த வீட்டைப் பார்வையிட்டபடி உள் நுழைந்த சக்தி, அவள் கை காட்டிய இருக்கையில் அமர்ந்ததும், “நீ எப்பிடி இந்தப் பக்கம்?” எனக் கேட்டாள்.

ஹ்ம்ம்ம்ம்!, என் தம்பி என்னைப் புரிஞ்சுக்கனும் சஞ்சயன்னு நீங்க கண்ணீர் விட்டுக் கதறுன அந்தத் தொம்பி, நான் வேலை பார்க்குற இடத்துல, என் பக்கத்து சீட்ல தான் உட்கார்ந்திருக்கிறான்னு தெரிஞ்சும், என்னால எப்பிடிக்கா சும்மா இருக்க முடியும்?,

என் க்ரஷ்ஷூ நீங்க! நான் ரொம்ப ரொம்ப அட்மயர் பண்ற அடோர் பண்ற ஆளு! நீங்க கஷ்டப்படுறதை கைக்கட்டி வேடிக்கை பார்க்க முடியுமா என்னால?, அதான் உங்களுக்கு எதுவும் உதவி பண்ண முடியுமான்னு தெரிஞ்சுக்க, உங்களைத் தேடி புறப்பட்டு வந்துட்டேன்!

-என்றுகூற ஆசை தான்! ஆனாலும் முடியாமல்,

“நா..நான் வேற ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன், உங்களைப் பார்த்ததும், நீங்க சத்யாக்கா தானா, பக்கத்துல போய்ப் பேசலாமான்னு டவுட்ல நின்னுட்டிருந்தேன்! அதுக்குள்ள நீங்களே பார்த்துட்டீங்க” – என்று அவள் அள்ளி விட்டதும், அதை அப்படியே நம்பிய சத்யா,

“அப்பிடியா?, இவ்ளோ நாளாகியும் நீ என்னை ஞாபகம் வைச்சிருக்கிறது பெரிய விசயம் தான்!, சரி என்ன சாப்பிட்ற?, டீ ஆர் காஃபி?” – எனக் கேட்டதும்,

“டீ-க்கா” என்றவளிடம் புன்னகைத்து உள்ளே சென்றாள் சத்யா.

அவள் நகர்ந்ததும் தன்னையே கண்டபடி லாலி பாப்பை சப்பிக் கொண்டிருந்த சிறுவனைக் கண்ணை உருட்டிப் பார்த்த சக்தி, “உன் பேர் என்ன?” என முறைப்புடன் கேட்க, “விஷ்ணு” என்றான் அவன் முகம் சுருங்க.

“மிட்டாய் நிறைய சாப்பிட்டா, பல் சொத்தை ஆயிடும்! அளவா தான் சாப்பிடனும். புரிஞ்சதா?” என மிரட்டியபடி எழுந்தவள், அந்த லிவிங் ரூமைச் சுற்றி நோட்டம் விட்டாள்.

சுவரில் ஆங்காங்கு தொங்கிக் கொண்டிருந்தப் படங்கள் முழுதிலும் சத்யாவும்,அவளது குடும்பத்தினரும் ஆக்கிரமித்திருந்தனர்.

நிஜ உள்ளங்கள் கை விட்டக் காரணத்தினால், நிழலோடு வாழ்கிறாள் போலும்!

சத்யா,சஞ்சயனின் ஆரம்ப காலப் புகைப்படங்கள் சில!

விஷ்ணுவுடன் பல!

சத்யா தனது தாய்,தந்தையுடன் எடுத்த படங்கள் சில!

அடுத்ததாயிருந்த சுவர் ஒன்றில், அலங்காரப் பொருட்களுக்கு மத்தியில் அக்காவும்,தம்பியும் நின்றிருந்தனர்.

மொட்டை மாடி மதில் சுவரில் சாய்ந்திருந்த இருவரில், தன் தமக்கையின் தோளில் கை போட்டபடி அவனும், கைகளைக் கட்டிக் கொண்டு அவன் மீது முதுகை சாய்த்தபடி அவளும்!

ஒல்லியாய்,நீளமாயிருந்த சசி, இருபதுகளின் தொடக்கத்திலிருந்திருப்பான் போலும்! முன்னுச்சி முடி பறக்க, லேசாய் சுருங்கிய விழிகளும், இதழ் முழுக்கப் புன்னகையுமாய், தமக்கையை இறுகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தான்.

உரிமையாய்த் தன் உடன் பிறப்பின் மீது அவன் விரல் பதிந்திருக்கும் விதத்தைக் கண்டு புருவம் உயர்த்தி, அவள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருக்கையில், டீயுடன் வந்தாள் சத்யா.

“எடுத்துக்கோ சக்தி”

“அடடா! ஸ்நாக்ஸூமா?, தாங்க்ஸ்க்கா” – என்றபடி டீயைக் கையில் எடுத்துக் கொண்டவளிடம்,

“உன் கூடவே ஒரு பொண்ணு சுத்திட்டிருப்பாளே!, அவ என்ன பண்றா?, அவ பேர் என்ன?, மறந்துட்டேன்” என்று வினவினாள்.

“ஷர்மியை சொல்றீங்களா?, அவ பெங்களூர்ல ஒரு காலேஜ்ல லெக்சரர்-ஆ வர்க் பண்ணிட்டிருக்கா!, அவ கூட உங்க காலேஜ்ல தான் படிச்சா!”

“ஆமா! ஞாபகமிருக்கு! நீ என்ன பண்ற? வர்க் பண்றியா ?” -எனக் கேட்டதும்,

தன் படிப்பைப் பற்றியும், பார்த்துக் கொண்டிருக்கும் வேலை பற்றியும் எடுத்துரைத்த சக்தி, அவளைப் பற்றியும் விசாரித்தாள்.

“கல்யாணமாகி ரெண்டு வருஷம் வீட்ல தான் இருந்தேன்! குழந்தை பிறந்தப்புறம் அவர் தான் கம்பல் பண்ணி எம்.பி.எ படிக்க வைச்சார்! இப்போ ஒன் இயர்-ஆ ஒரு ஐடி கம்பெனில ஃபினான்ஸ் ஹெச்.ஆர்-ஆ இருக்கேன்!”

“ஓஓ!, அப்போ விஷ்ணுவை யாரு பார்த்துக்கிறா?”

“ஸ்கூல் பக்கத்துல ஒரு சைல்ட் கேர் இருக்கு. பொதுவா அங்க தான் விட்டுட்டுப் போவேன்! இன்னைக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாததால நான் லீவ்”

“உங்க ஆத்துக்காரர்?”

“அவரு மெக்கானிகல் எஞ்சினியர்” என்றவள் சஞ்சயன் வேலை செய்யும் கம்பெனியைப் பற்றியும் கூறினாள்.

“ஹ்ம்ம்” எனக் கேட்டுக் கொண்ட சக்தி, “ஏன்-க்கா, பையனை உங்க பேரண்ட்ஸ் கிட்ட விடலாம்ல?,அவங்க இந்த ஊர்ல இல்லையா?, டே கேர்ல பையனை நல்லா பார்த்துப்பாங்களா?” என்று ஏதுமறியாதவள் போல விசாரிக்க,

இரு நொடி விரல்களைப் பற்றியபடித் தலை குனிந்து அமர்ந்திருந்த சத்யா,

“எங்களோடது லவ் மேரேஜ் சக்தி. வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்! எனக்கு இப்படியொரு பையன் இருக்கிறது கூட என் வீட்ல இருக்கிறவங்களுக்குத் தெரியாது” என்றாள் மெல்லிய குரலில்.

“ஏன்-க்கா?, அதான் கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆயிடுச்சே! இன்னுமா அவங்க உங்க மேல கோபமா இருக்கப் போறாங்க?”

“தெ..தெரியல!”

“சினிமால காட்டுற மாதிரி, குழந்தையைத் தூக்கிட்டுப் போய் நீங்க அவங்க முன்னாடி நின்னா, தன்னால ஏத்துக்கப் போறாங்க!” – விளையாட்டாய் அவள் கூறியதை, சத்யா கவனித்ததாகவே தெரியவில்லை.

ஏதேதோ எண்ண அலைகளின் தாக்கத்தில், விறைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

“ஏன், நீங்க அவங்களோட பேச முயற்சி பண்ணதில்லையா?” – சக்தி மெல்லக் கேட்டதும்,

மறுப்பாய்த் தலையசைத்தாள் அவள்.

“ஏன்?”

“என்னால.. என்னால அவங்களை ஃபேஸ் பண்ண முடியும்ன்னு எனக்குத் தோணல!”

“ஏன் அப்பிடி?, அவங்க… அவங்களும் உங்க கூட பேச நினைக்கலையா?”

முட்டி நின்ற கண்ணீருடன் இல்லையெனத் தலையசைத்து, “என்னால.. நா..நான்.. எங்கப்பாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டதால.. என்.. என் அப்பா இ..இறந்து போயிட்டாரு!” என்றவள் நடுங்கும் உதடுகளைக் கடித்து, அதன் நடுக்கத்தை அடக்கி, “அ..அவங்களைப் பொறுத்தவரை நான், என் சந்தோசம் மட்டுமே முக்கியம்ன்னு நினைக்குற, சுயநலம் பிடிச்ச கேவலமான பொண்ணு. இப்பிடிப்பட்ட என்னோட பேச அவங்க ஆசைப்படுவாங்களா?,” எனக் கேட்க,

“ப்ச்” என மறுப்பாய்த் தலையசைத்த சக்தி, “நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டிருக்கீங்களோன்னு தோணுது!, உங்க மேல உண்மையான பாசம் வைச்சிருக்கிறவங்க, அந்த மாதிரிலாம் நினைக்குறதுக்கு கண்டிப்பா வாய்ப்பேயில்ல!” என்றாள்.

“நான் செஞ்சது மிகப்பெரிய குற்றம்ன்னு எங்கப்பா சொல்லாம சொல்லிட்டுப் போயிட்டாரு சக்தி!, என் வாழ்நாளுக்கானத் தண்டனையைக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. அவ்ளோ சீக்கிரம் அதை மறந்து, மன்னிச்சு என்னை அவங்க ஏத்துப்பாங்களா?, எனக்கு நம்பிக்கையில்ல”

“போனவங்களைப் பத்தி யோசிச்சு, நீங்க தேவையில்லாம குழம்பிட்டிருக்கீங்க! உங்களால தான் உங்கப்பா இறந்தார்ன்னு உங்க வீட்ல இருக்கிறவங்க நினைக்க வாய்ப்பே இல்ல! அதையெல்லாம் விடுங்க! விஷ்ணுவுக்கு அவனைச் சேர்ந்தவங்கக் கிட்டயிருந்து நியாயமா கிடைக்க வேண்டிய அன்பு, கிடைக்க வேண்டாமா?, அதுக்காகவாவது நீங்க அவங்களோட சேர்ந்து தான ஆகனும்?”

அவள் கேள்வியில் விழி நீர் சிதற, தலை தாழ்த்திய சத்யா, உடல் குலுங்க அழத் தொடங்கவும்,

“ஐயோ அக்கா” எனப் பதறி அவளருகே சென்றமர்ந்த சக்தி,

“சாரி.. சாரிக்கா! நான் உங்களை வருத்தப்படுத்தனும்ன்னு எதையும் சொல்லல! எதார்த்தமா தான் சொன்னேன், சாரிக்கா! ப்ளீஸ்!” – என அவள் தோளைப் பற்ற..

வேகமாகக் கண்ணைத் துடைத்துக் கொண்டவள், புன்னகைக்க முயன்ற படி,

“நான் தான் சாரி சொல்லனும்! வீட்டுக்கு வந்த உன்னை சங்கடப்படுத்துற மாதிரி நடந்துக்கிறதுக்கு” – என்று கூறவும்,

கனிவே உருவாய் அமைந்திருந்த அவள் முகத்தை, மென்மை தாங்கி வந்த அவள் புன்னகையை எப்போதும் போல் வியப்புடன் நோக்கி விட்டு,

“நீங்க ரொம்ப ரொம்ப அழகுக்கா” என்றவளைக் கண்டுத் திகைத்து, பின் புன்னகைத்து, சலிப்பாய் தன்னை நோக்கியவளிடம்,

“ஆனா, உங்க தம்பி உங்களை மாதிரியில்லையே! நல்லா கள்ளு குடிச்சக் கரடி மாதிரி காட்டான் லுக்-ல இருக்காரு!” என அந்த ஃபோட்டோவைக் காட்டி வினவ, அதுவரையிருந்த அழுகை முகம் மாறி, பளிச்செனப் புன்னகைத்த சத்யா, எழுந்து சென்று, புகைப்படத்தை வருடி,

“அவன் எங்கப்பா மாதிரி!” என்று கூற,

“பார்த்தாலே தெரியுது” என்ற சக்தியிடம்,

“மொக்கை மூஞ்சியா இருந்தாலும், ஓவரா பந்தா பண்ணுவான்! என் cuticura பவுடரை பாடி ஃபுல்-ஆ அடிச்சுக்கிட்டு தான் காலேஜ்க்குப் போவான்!, என் ஷாம்பூ, கண்டிஷனர்ன்னு ஒன்னை விட்டு வைக்க மாட்டான்! என் கூட வம்பு பண்றது தான் அவன் வேலையே!” – என சிரிப்புடன் தொடங்கினாள் அவள்.

“அநியாயத்துக்கு வாயடிப்பான்! ஆனா.. எல்லாம் வீட்டுக்குள்ள மட்டும் தான்! வெளிய யார்க்கிட்டயும் வாயைத் தொறந்தா காத்து தான் வரும்! பொண்ணுங்களைப் பார்த்தாலே ஓடுவான்!, இத்தனைக்கும் கோ-எட்ல தான் படிச்சான்!, என் ஃப்ரண்ட்ஸ் யாராவது வீட்டுக்கு வந்தா, ரூமை விட்டு வெளிய வரவே மாட்டான்! ரொம்பக் கூச்சப்படுவான்! இப்ப மாறிட்டானான்னு தெரியல” – புகைப்படத்தைப் பார்த்தபடி படபடவெனப் பேசியவள்,

“அப்பா மேல அவனுக்கு ரொம்ப பயம். அவர்க் கிட்ட என்ன கேட்கனும்ன்னாலும், என் கிட்ட தான் வந்து நிற்பான்!, அம்மா ஊத்துற தோசை அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது! ஃப்ரண்ட்ஸ்ங்களோட ஊர் சுத்திட்டு, நைட் பதினோறு மணிக்கு வந்தாலும், என்னை எழுப்புவான் ‘தோசை ஊத்து’-ன்னு சொல்லி!, நிச்சயம் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவான்” – என்றபடித் தம்பியின் முகத்தை வருடிக் கொடுக்க, நெற்றியைச் சொரிந்தாள் சக்தி.

அவனே ஒரு டும்மாங்கோழி!, அவனைப் பத்தி இப்பிடி டபாய்க்குது இந்தக்கா!

“தம்பின்னா ரொம்ப இஷ்டமோ அக்காவுக்கு?” – அலட்சியமான அவளது கேள்விக்கு,

“ரொம்ப ரொம்ப!, எனக்கு எல்லாமே அவன் தான்” – என வெகு தீவிரமாக பதில் கூறியவளைக் கேட்டு,

“அவரோட கூட நீங்க பேச முயற்சி பண்ணதில்லையா?” என வினவ,

இல்லையென்றவள், “மாலையும்,கழுத்துமா நாங்க முன்னாடி நின்னப்போ, என்னை அடிக்க வந்த எங்கப்பாவைத் தடுத்தவன், என்னோட ஒரு வார்த்தை கூட பேசல! எங்கப்பா இறந்த அன்னைக்கு, என் சொந்தக்காரங்க யாரும் என்னை அவன் கிட்ட நெருங்க விடல. அவனும் என்னைத் தேடல. ஒ..ஒரு வேளை.. அவனும்.. அவனும் கூட எங்கப்பா இறந்ததுக்கு நான் தான் காரணம்ன்னு நினைக்கிறானோன்னு… ஒரு எண்ணம்!, அது உண்மையான இருந்தா.. நிச்சயம் என்னால அதைத் தாங்கிக்க முடியும்ன்னு தோணல. அதான்.. நான் அவன் கூட பேச முயற்சி பண்ணல” என்றாள்.

“அவரைப் பார்த்தா, அப்பிடி நினைக்குற ஆள் மாதிரி தெரியல!”

“அப்பா இறந்த அன்னைக்கு, என்னை வீட்டுக்குள்ள விட மாட்டேன்னு என் சித்தி ரொம்ப தரக்குறைவா பேசுனப்போ, நான் ‘சசி,சசி’-ன்னு எவ்ளவோ கத்தியும், அவன் என்னை நிமிர்ந்து கூட பார்க்கல!, அதுவே அவன் கோபத்தோட அளவைக் காட்டுச்சு!, அ..அவனுக்கு என் மேல ரொம்பக் கோபம்! எனக்குத் தெரியும்” – சிறு பிள்ளையாய் முணுமுணுத்தவளைக் கண்டு பாவமாக இருந்தது சக்திக்கு.

“இதெல்லாம் பேசித் தீர்த்துக்க முடியாதா-க்கா?”

“கல்யாணம் முடிஞ்ச ஒரு வருசமும், நிறைய முயற்சி பண்ணேன் சக்தி. என் சொந்தக்காரங்க யாரும் என்னை அவங்களோட நெருங்கவே விடல!”

“சரி விடுங்க!, சீக்கிரமே ஒரு சான்ஸ் கிடைக்கும் உங்களுக்கு, உங்க வீட்டோட சேர!, அதுவரை, உங்க குடும்பம் உங்களை வெறுக்குதோன்னு நினைச்சு பயப்பட்றதை மாத்திக்கப் பாருங்க” – என்று கூறியதும்,

“அப்பிடியொன்னு நடந்தா உன்னைத் தேடி வந்து நான் ட்ரீட் குடுக்குறேன் கண்டிப்பா” – என்றவளைக் கண்டு சிரித்து,

“ட்ரீட் கொடுக்குறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உங்க ஃபோன் நம்பர் கொடுங்க” எனக் கூறி அவளது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டிருக்கையில் அவளது கணவன் சஞ்சயன் வந்து சேர்ந்தான்.

அன்று பஸ் ஸ்டாப்பில் பார்த்ததை விட, சற்று சதைப்பிடிப்புடன், உயரமாய் வந்து நின்றவனைக் கண்டு இருவரது ஜோடிப் பொருத்ததையும் அவள் அளவிட்டுக் கொண்டிருக்கையில், அவளைக் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் சத்யா.

“வாங்க” எனக் கூறிப் புன்னகைத்து “ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே சென்றவன், உள்ளிருந்தே “சத்யா..” என்றழைத்தான்.

என்னவெனக் கேட்டு உள்ளே சென்றவளின் முகத்தை ஒரு நொடி நோக்கி, “அழுதியா?” என்று அவன் வினவியதும்,

அவசரமாய் இல்லையெனத் தலையாட்டியவள் பின் உதட்டைக் கடித்தபடி மெல்ல ஆமாம் என்று தலையசைக்க, கையைக் கட்டிக் கொண்டு முறைத்தான் அவன்.

“அ..அது… தம்பி ஞாபகம் வந்திடுச்சு. அதான்” – தயங்கிக் கூறியவளிடம்,

“நான் அவன் கிட்டப் போய் பேசட்டுமா?” என்றான் அவன் வழக்கம் போல.

“இல்ல, அவனும் அப்பா மாதிரி உங்களைத் தப்பா பேசுனா…” – அவளும் தயங்கினாள் வழக்கம் போல.

“அப்போ நான் என்ன தான் செய்யட்டும் உன் அழுகையை நிறுத்த?”

“…………” – அவன் கேள்விக்குப் பதில் கூறாது தலை தாழ்த்தி நின்றவள் பின்,

“இனி அழ மாட்டேன்” என்று மெல்லக் கூற,

“சத்யா…” என்றான் அவன்.

“வெளிய அவ தனியா இருக்கா” என்றவள் அவன் பார்வையைத் தவிர்த்து நகர்ந்து விட, தானும் ஃப்ரெஷ் அப் செய்து கொண்டு வெளியே வந்து சக்தியுடன் உரையாடிய சஞ்சயனின் பார்வை முழுதும் சத்யாவின் மீது தான்.

‘ரொம்பப் பாசக்காரரா இருப்பாரு போலயே!’ – என்றெண்ணிக் கொண்ட சக்தி, உறங்கி விட்ட விஷ்ணுவுக்கு ‘பாய்’ சொல்லி ‘இன்னொரு நாள் ஷர்மியைக் கூட்டிக் கொண்டு வருவதாகக் கூறி இருவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டாள்.

வண்டியில் சென்று கொண்டிருந்தவள், ‘என்ன இப்பிடி இருக்காய்ங்க! எதுவா இருந்தாலும், சட்டு,புட்டுன்னு பேசித் தீர்த்துக்க வேணாமா?, 5 வருஷமா அழுதுகிட்டு, நிம்மதியில்லாம.. அப்பிடி என்ன வீம்பு! அவநம்பிக்கை! இனிமேலாவது இந்தக்கா ஏதாவது ஸ்டெப் எடுத்து விசாலம் அத்தையோட மனக்கவலையைத் தீர்க்கட்டும்!, என்றெண்ணிக் கொண்டாள்.

மறுநாள் அலுவலகத்தில்…

அன்று காலை கலந்து கொள்ள வேண்டிய மீட்டிங் ஒன்றிற்குத் தாமதமாக வந்து சேர்ந்த சசியிடம்,

“டேய் சசி!, ஸ்டீவ் உன் பேரைச் சொல்லி ஏலம் விட்டுட்டு இருக்கான் டா டேய்!, சீக்கிரம் ஜாயின் பண்ணு டா” – என்று அலெக்ஸ் திட்ட,

“சக்தி ஜாயின் பண்ணலையா?” -எனக் கேட்டபடி அவசர,அவசரமாய் பையைத் திறந்து, லாப்டாப்பை வெளியில் எடுத்து ஆன் செய்தவனிடம்,

“அந்தப் பொண்ணு தான் இவ்ளோ நேரமா திக்கித் திணறி சமாளிச்சிட்டிருக்கு” எனக் கூறியதும், நிமிர்ந்து மீட்டிங் அறையை நோக்கியவன், உள்ளே சக்தி கொலை காண்டுடன் தன்னை முறைத்துப் பார்ப்பது கண்டு, “ஷ்ஷ்ஷ்ஷ்” என நாக்கைக் கடித்தபடி அவசரமாய் ஹெட் செட்டைக் காதுக்குக் கொடுத்தான்.

சக்தியின் லாப்டாப் ஸ்க்ரீன் ஷேர் செய்யப்பட்டிருக்க, அவள் எதையோ விவரிக்கத் திணறுவது புரிந்தது, அப்போது ஸ்டீவ் கேட்ட கேள்விக்கு, “ம்ம்ம்ம்” என யோசித்தபடி அவள் தடவிக் கொண்டிருப்பது கண்டு,

“ஸ்டீவ், ஸ்டீவ் திஸ் இஸ் சசி. சாரி ஃபார் ஜாயினிங் லேட்” என்று மன்னிப்பைப் போட்டவன், அவர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறி விட்டு, “சக்தி, ஐம் ஷேரிங் மை ஸ்க்ரீன்” என்றவன் அவளுக்கு விடுதலை அளித்து சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டான்.

ஊஃப்ஃப்ஃப் என மூச்சை இழுத்து விட்ட சக்தி, அவசரமாய் மீட்டிங் அறையிலிருந்து வெளியே வந்து, சசியின் டெஸ்க்கினருகே நின்றாள்.

அந்த இஷ்யூ பற்றி அவன் விவரிப்பதையும், அதை சால்வ் செய்ய தாங்கள் எடுத்த முயற்சிகளை எடுத்துக் கூறுவதையும் கண்டபடி நின்றவள், ‘இதைப் பற்றி க்ளையண்ட்டிடம் கூறி விட்டீர்களா?” என்ற ஸ்டீவ்வின் கேள்விக்கு, சசி தன் முகத்தை நோக்குவது கண்டு, ‘சொல்லியாச்சு’ என்பது போல் புருவத்தைத் தூக்கிக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

“யா ஸ்டீவ், சக்தி ஹேஸ் செண்ட் ஆன் எமெய்ல் ஆல்ரெடி” – அவளது உயர்த்திய புருவங்களைப் பார்வையிட்டபடி கூறியவன்,பின் அவள் அனுப்பிய ஈமெய்லை ஓபன் செய்து பார்த்தான்.

ஒரு வழியாக மீட்டிங் முடிந்ததும், “ஈமெய்ல் ஓகே தான?, நான் உங்களுக்குக் கால் பண்ணேன். நீங்க எடுக்கல” என்றவளிடம்,

“இல்ல, நான் வண்டில வந்துட்டிருந்தேன்!, ஈமெய்ல் ஓகே தான்” என்றான் சசி.

“பதறாத, பதறாத! நீ அந்தாளை நல்லா தான் சமாளிச்ச” – என்ற அலெக்ஸிடம்,

“தேங்க்யூ” என அலட்டி விட்டு சசியிடம், “அடுத்து சப்போர்ட் டீம் கால்-க்கு நீங்க ஜாயின் பண்ணுங்க! அவங்க கேட்குற கேள்வில பாதி எனக்குப் பதில் தெரியல” – என்றவளைக் கண்டு,

“இங்க யாரு சீனியர் ரிசோர்ஸ்ன்னே தெரியல” என அலெக்ஸ் முணுமுணுத்ததும்,

“ஹெல்ப் கேக்குறது தப்பா?” என்று எகிறியவளிடம்,

தன் டெஸ்க்கிலிருந்து எழுந்த சசி, லாப்டாப் மற்றும் சார்ஜரைக் கையிலெடுத்துக் கொண்டு, அவள் முகம் பார்த்து,

“ஹெல்ப் பண்றேன்! ஆனா, டாகுமெண்ட் நீங்க தான் க்ரியேட் பண்ணனும். சுந்தர் கேள்வி கேட்பாரு! இஷ்யூ பத்தி டீம்க்கு உங்களை KT எடுக்க சொல்லுவாங்க. எவ்ளோ தூரம் உங்களுக்குப் புரியுதுன்னு தெரிஞ்சுக்க! டவுட்-ன்னா கேளுங்க!” எனக் கூற..

தடுமாறாமல்,திணறாமல் கடகடவென விழி பார்த்து பேசுபவனை அளவிட்டபடி “ம்ம்” என்றவளைக் கண்டு கொள்ளாது மீட்டிங் அறைக்குச் சென்று விட்டான் சசி.

அதன் பின்பு அன்று முழுதும் டெஸ்க்கிற்கு வராமல், மீட்டிங் ரூமிலேயே செட்டில் ஆகி விட்டவனை, எவரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால்.. மறு நாளும், தனது டெஸ்க் பக்கம் எட்டிப் பார்க்காமல் தர்ணா செய்தவனை யோசனையுடன் நோட்டம் விட்டான் அலெக்ஸ்.

சசி ஹாண்டில் செய்யும் அப்ளிகேஷனில் பெரிதாக அன்று வேலையுமில்லை! அவனுக்குக் கீழே பணிபுரியும் ஆட்களின் டெஸ்க்குகள் காற்று வாங்கிக் கொண்டிருந்தது.

சக்தியின் டெஸ்க்கில் அவளது லாப்டாப் மட்டும் அநாதையாகத் திறந்து கிடப்பதை எட்டிப் பார்த்து விட்டு,

“டீமே கொட்டாவி விட்டுக் கை,காலை முறுக்கிட்டு இருக்கு! இவன் மட்டும் என்ன சுறுசுறுப்பா வேலை பார்க்குறான்?” – என முணுமுணுத்தபடி மீட்டிங் அறைக்குள் நுழைந்தான் அலெக்ஸ்.

“என்ன ப்ரோ, பர்மனெண்ட்டா மீட்டிங் ரூமுக்கே குடியேறிட்டீங்க போல”

“ஆமா ப்ரோ!, ஜன்னல் கிட்ட உட்கார்ந்தா ஜன்னி வர்ற மாதிரி இருக்குது! அதான்” – அவன் திடீரென உள்ளே நுழைந்ததில் ஜெர்க் ஆன சசி.

“ஜன்னலா?, இது கன்னியால வந்த ஜன்னி மாதிரி தெரியுதே” – தாடையைத் தடவியபடி அலெக்ஸ்.

“ஜன்னி-ன்னா சொன்னேன்?, ச்ச, இது ஜன்னியில்ல ப்ரோ! ஜாண்டிஸூ!, ஜாங்கிரி சாப்பிட்டதால வந்தது”

“ஜூரீர்ன்னு ஒரு அடியை போட்ருவேன் ப்ரோ, ஜம்மந்தமில்லாம உளறுனீங்கன்னா!”

“ப்ச், Incognito mode-ல KGF-2 பார்த்துட்டிருக்கேன் டா!, அதான் மீட்டிங் ரூம்ல உட்கார்ந்திருக்கேன். என்னவாம் இப்போ?”

“என்னை விட்டுட்டு நீ மட்டும் ஏன் படம் பார்க்குற?”

“நீ ரவியையும்,பவியையும் உட்கார வைச்சு, கவி எழுதிட்டிருந்த, அதான் டிஸ்டர்ப் பண்ணல”

“***** அப்ளிகேஷன்ல இன்னிக்கு P2 டா(high priority பிரச்சனை)! அதான்! சரி, வா டீ அடிச்சிட்டு வருவோம்” – என்றவன் சசியை இழுத்துக் கொண்டு டெரஸூக்கு வருகை தந்தான்.

கேஃபடீரியாயாவை ஒட்டியிருக்கும் மொட்டை மாடியில், கல் பெஞ்சில் அமர்ந்திருந்தான் சசி.

டக் இன் செய்திருந்த சட்டையை இழுத்து விட்டு, கைகளிரெண்டையும் பின்னே வைத்துக் காலாட்டியபடி, நெற்றி முடியைக் கலைத்துச் சென்ற குளிர்க் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தவனின் பார்வை வட்டத்திற்குள் சக்தி.

ஒரு கையில் டீயுடனும், மறுகையில் மசால் வடையுடனும், பவித்ராவுடன் மகா தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தாள்.

கரு மேகத்திற்குப் போட்டியாக கருப்பு நிற சுடிதாருடன் நின்றிருந்தவளின், கன்னத்துப் பருக்களை அவ்வப்போது தீண்டிச் சென்றக் கூந்தலைக் கண்டபடி,

‘வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா…

அவள் வயதுக்கு வந்தத் தங்கம் அல்லவா’ – என வழக்கம் போல் முணுமுணுத்தவன்,

“அட அட அட! அக்டோபர் வந்தாத் தான்ய்யா சென்னை,சென்னை மாதிரி இருக்குது!, என்னா க்ளைமேட்டு!” என்றபடியே இரண்டு டீ கப்புகளோடு அலெக்ஸ் வருவது கண்டு,

பெரிதாய் முழித்துப் பரபரவெனப் பிடரியைக் கோதி,

‘பொன்மானைத் தேடி நானும் பூவோட வந்தேன்,

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்ல’ – என அவசரமாய் பாட்டை மாற,

“ம்ம்ம், மான் மந்தவெளியோரமா மல்லாக்கப் படுத்திருக்காமாம்” என்ற அலெக்ஸ்,

“நடிப்பைப் போடாதீங்க ப்ரோ!,” எனக் கூற,

‘என் நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னேன் பாரு’ என்று விடாது பாடியபடி டீயைக் கையில் வாங்கிக் கொண்ட சசி, கவனமாய் அவள் புறம் பாராது மறுபக்கமாய்த் திரும்பி அமர்ந்தான்.

“பார்றா, அவாய்ட் பண்றாராமா” என்ற அலெக்ஸை அவன் டீலில் விட்டு டீயைப் பருக,

“உண்மையைச் சொல்லுங்க ப்ரோ! டெஸ்க்ல உட்கார்ந்தா அந்தப் பொண்ணை சரியா பார்க்க முடியலன்னு தான, மீட்டிங் ரூம்ல செட்டில் ஆயிட்டீங்க?” எனக் கேட்டான் அலெக்ஸ்.

“சத்தியமா இல்ல ப்ரோ! என் டெஸ்க்ல இருந்து பார்த்தா, இஷிதா முகர்ஜி டெஸ்க் இருட்டாத் தெரியுது! அதான் மீட்டிங் ரூம்ல உட்கார்ந்திருக்கேன்”

“உனக்குத் தான் ரசகுலா பிடிக்காதே ராசா”

“அது.. அவங்களை கேரளா ட்ரெஸ்ல பார்த்ததுல இருந்து, கொஞ்சம் கேர் ஆன மாதிரி இருக்கு ப்ரோ”

“அப்டின்னா, இந்த ரெட்-டூ கலரு மூக்குத்தி, உன்னை எந்த விதத்துலயும்ம்ம்..” என்று அவன் முடிப்பதற்குள் இடை புகுந்தவன்,

“ஐயா, மூக்குத்தி-ன்னா என்னங்கய்யா?” எனக் கேட்க,

“ம்ம்” எனத் தலையை ஆட்டிக் கொண்ட அலெக்ஸ், “இதெல்லாம் நல்ல சகுனத்துக்கான அடையாளம்!, எங்க நீ, புதைகுழில புதைஞ்சு போவியோன்னு நினைச்சேன்! கடைசில நீயொரு புல்லட்டு பாண்டின்னு ப்ரூவ் பண்ணிட்ட! வெரி குட்” – எனக் கூறியதும்,

“எல்லாப் புகழும் என் தோஸ்துக்கே” – என்ற சசி, நண்பனை சரிக்கட்டி விட்டத் திருப்தியில் பெருமூச்செறியும் வேளையில்…

இவர்களைக் கடந்து படியை நோக்கிச் சென்றனர் பவித்ராவும்,சக்தியும்.

“கையில என்ன க்ரீம் பிஸ்கட்டா? அண்ணனுக்கு ஒன்னு கொடேன்” – என அலெக்ஸ் பவித்ராவை வம்பு செய்ய,

கையிலிருந்த பாக்கெட்டை அவன் கையில் திணித்த பவித்ரா, எட்டி சசியைப் பார்த்து மூக்கை விடைத்து முறைக்கவும்,

“என்ன, கண்ணுலயே கலவரத்தைக் கூட்டுற?, என்னவாம்?” – என்றான் அலெக்ஸ்.

“அவுரு டெரகோட்டா செட்டு கொடுக்கலன்னு டெரர் லுக் விட்டுட்டிருக்கா” – எனப் பதிலளித்த சக்தி,

இவர்கள் அருகே வந்ததும், மறுபக்கமாய்த் திரும்பியமர்ந்து பொறுப்பாய் டீ குடித்துக் கொண்டிருந்த சசியைக் கண்டுக் கண்ணைச் சுருக்கினாள்.

அவள் பார்வை நண்பன் புறம் செல்வது கண்டு, அமர்ந்தபடியே நகர்ந்து, அவனை மறைத்த அலெக்ஸ், “டீ குடிக்கிறப்ப என் நண்பன் டாக்(talk) பண்ண மாட்டான்! பிஸ்கட்டை கொடுத்தாச்சுல்ல, படி அந்தப் பக்கம் இருக்கு. நவுருங்க” எனக் கூற,

தலையிலடித்தபடி சென்று விட்டாள் சக்தி.

“ப்ரோடகால் படி நடந்துக்கிறீங்க ப்ரோ நீங்க! இப்பிடித் தான் துஷ்டரைக் கண்டால் தூர விலகிடனும்!” – பாராட்டியவனைக் கண்டு கொள்ளாது, டீ கப்பை bin-ல் எறிந்து விட்டு நகர்ந்தான் சசி.

ன்று அவள் வீட்டிற்குப் புறப்படும் நேரம், அவளை அழைத்த சுந்தர், அந்த வாரக் கடைசியில் நடக்கப் போகும் வேலை குறித்து விசாரிக்க, சசியிடம் கேட்டு சொல்வதாகக் கூறி மீட்டிங் அறைக்குச் சென்றாள் சக்தி.

அறைக் கதவு தட்டப்படும் ஓசையில் நிமிர்ந்தவன், உள் நுழைந்தவளை என்ன என்பது போல் பார்க்க,

“வீக் எண்ட் ஆக்டிவிடி ஸ்கெட்யூல் கேட்குறாரு சுந்தர்” என்றாள்.

பதில் கூறாது, லாப்டாப்பை நோக்கியவனிடம்,

“உங்க IM, DND mode-ல இருக்கு” என்றாள், அவன் பார்வையை மொழி பெயர்த்து.

“ஓ” – என்றவன், தனது மெசெஞ்சர் ஸ்டேட்டஸை மாற்றியபடியே, நிமிர்ந்து அவள் முகம் பார்த்து,

“நான் அனுப்பிக்கிறேன்” எனக் கூறி, அவ்வளவு தானே என்பது போல் அவளை அனுப்பி வைக்க நினைக்க,

முகம் பார்த்துப் பேசுபவனை சந்தேகத்துடன் மேலும்,கீழுமாய் நோக்கி, அருகிலிருந்த சேரை இழுத்து சட்டமாய் அமர்ந்து கொண்டவள்,

“அவர் என் கிட்டத் தான் கேட்டாரு. நீங்க ஹெல்ப் பண்ணுங்க, நானே அனுப்பிக்கிறேன்” என்றாள்.

அவளிடமிருந்து இதை எதிர்பாராததால், திகைத்து, மௌஸின் மீது பரபரப்பாய் அலைந்த அவனது விரல்கள், சில,பல ஈமெயில்களை ஓபன் செய்வதும், க்ளோஸ் செய்வதுமாயிருக்க,

“ம்க்க்கும்” என்றாள் அவள்.

அதில் அலெர்ட் ஆகி, தாங்களிருவரும் செய்யப் போகும் ஆக்டிவிடி குறித்து பகிரத் துவங்கியவன்,

“டைமிங் மட்டும் **** டீமோட டிஸ்கஸ் பண்ணனும். அதை வேணும்ன்னா நாளைக்கு” – என்று பேசிக் கொண்டிருக்கையிலேயே,

“இங்க பாருங்க” என்றாள்.

என்னவென்பது போல் திரும்பியவனிடம், நீளமாய்த் தன் கழுத்தில் அணிந்திருந்த பாசிமணியைக் காட்டி,

“டெரகோட்டா செட்டு” என்றாள்.

வியப்பாய் விழி விரித்தவனிடம்,

“என் கிட்ட ஏற்கனவே இருக்கு” என்றாள்.

“தெரியும்” – தன்னை மீறி சொல்லி விட்டப் பதிலினால் ‘ஷ்ஷ்ஷ்’ எனக் கண்ணை மூடித் திறந்து லாப்டாப்பை நோக்கியவனிடம்,

“டைமிங் மட்டும் நாளைக்கு *** டீமோட டிஸ்கஸ் பண்ணிட்டு கன்ஃபார்ம் பண்ணனும். அதான?” – என்றாள், அலைபாயும் விழிகளோடுத் தடுமாறிய அமர்ந்திருந்தவனை நோட்டம் விட்டபடி.

பதில் கூறாமல், அவள் முகம் பாராது தலையை மட்டும் ஆட்டியவனைக் கண்டு.. உதட்டை வளைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

றுநாளும், தொடர்ந்து நான்காவது நாளாக அன்றும் மீட்டிங் அறைக்குள் பதுங்க நினைத்தவனை, வளைத்துப் பிடித்தார் சுந்தர்.

“என்ன மேன் நீ?, இந்த டீம்ல தான் இருக்கியா?, நீ பாட்டுக்க ஃபுல் டே மீட்டிங் ரூமை புக் பண்ணி, அங்கேயே செட்டில் ஆயிக்கிற?”

– உயர்த்திய புருவங்களுடன், பிடரியைக் கோதும் சாக்கில், லாப்டாப் மீது பார்வையை பதித்தமர்ந்திருந்த சக்தியைக் கண்டபடித் தன் டெஸ்க்கில் நின்ற சசியிடம் அவர் கேள்வி கேட்க,

“அதனால உங்களுக்கு என்ன லாஸ் ஆச்சு?, நடக்க வேண்டிய வேலை எல்லாம் சரியாத் தான நடக்குது?” – அலட்சியமாய்க் கூறியவனிடம்,

“அதுக்காக?, டீமை விட்டு, நீ மட்டும் தனியா உட்கார்ந்துப்பியா?, மெசெஞ்சர் ஸ்டேட்டஸை வேற DND-ல வைச்சிக்குற”-என்று காய்ந்தார் அவர்.

“நீங்க சும்மா,சும்மா பிங் பண்ணீங்கன்னா, அப்டித் தான்”

“டேய் டேய்! உண்மையைச் சொல்லு டா!,”

“என்ன உண்மை?”

“சசி, பேப்பர் போடப் போறியா டா?, இண்டர்வியூ எதுவும் அட்டெண்ட் பண்ணிட்டிருக்கியா?, இங்க என்ன டா குறை உனக்கு?”

-இருவரும் உரையாடுவதைக் கவனித்தபடி அமர்ந்திருந்த சக்தி, சுந்தரின் இந்தக் கேள்வியில் மெல்ல எட்டி சசியைப் பார்க்க,

அதுவரை அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவன், பதறாமல் தன் பார்வையைத் திருப்பி,

“இது நல்ல ஐடியாவா இருக்கே!, ட்ரை பண்ணலாம் போலயே!” என்று சிரித்தபடி கூற,

“விளையாடதடா சசி!, என்ன தான் டா உன் பிரச்சனை?”என சுந்தர் கேட்கவும்,

“ஆக்சுவலி சுந்தர்?” என்றவன்,

அவர் டெஸ்க் அருகே குனிந்து,

“Breaking Bad-3rd season பார்த்துட்டிருக்கேன்! இடைல நிப்பாட்டுனா தூக்கம் வர மாட்டேங்குது!, வீட்ல பார்க்க நேரமும் கிடைக்கிறதில்ல! அதான்ன்ன்” என்று இழுக்க,

“டேய் டேய் டேய்” என்று பொங்கிய சுந்தரைக் கண்டு கொள்ளாது சிரிப்புடன் தன் டெஸ்க்கை நோக்கி நடந்தவன்,

சுருக்கியப் புருவங்களுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டு ப்ரேக் அடித்து, யு டர்ன் போட்டு, காலியாக இருந்த ரவியின் இருக்கையை ஆக்கிரமித்தான்.

அவன் செய்கையை எரிச்சலுடன் கண்ட சுந்தர்,

“என்னடா?” எனக் கேட்க,

“அங்க ஏசி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.” என்று உளறி விட்டு, இன்னும் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் சக்தி, பார்வை வட்டத்திற்குள் விழுந்தாலும் கண்டு கொள்ளாது, தன் லாப்டாப்புக்குள் தலையை நுழைத்துக் கொண்டான் சசி.

என்னவாமா இவனுக்கு?

டெரகோட்டா செட்டு கேட்டு முறைக்கிறதுக்குத் தான் பம்முறான்னு நினைச்சா, விஷயத்தை வேற மாதிரி கொண்டு போறான்!

‘இங்க என்ன ஏசி ஜாஸ்தியா இருக்காமா?’ –நிமிர்ந்து AC vent-ஐ நோக்கி விட்டு, எழுந்து நின்று தனது டெஸ்க் ஃபோனை நொட்,நொட்டெனத் தட்டினாள் சக்தி.

“ஃபெஸிலிட்டி டீம்??” – சத்தமாய் அவள் பேசுவது காதில் விழுந்தாலும், கண்டு கொள்ளாது அமர்ந்திருந்தவன்,

“என் டெஸ்க்ல ஏசியைக் குறைக்கனும்” – என்று கூறியதும், வியப்பில் பட்டென நிமிர்ந்தான்.

அதிர்ச்சியாய் நோக்கிக் கொண்டிருப்பவனிடம், “ஏசி ஜாஸ்தியா தான இருக்குது?” என மிரட்டலாய்க் கேட்க,

தன்னாலேயே ஆம் என ஆடிய தலையைக் கட்டுப்படுத்த முடியாது அவன் திணற,

“ஃப்ளோர் நம்பர் 9, B wing” எனத் தொலைபேசியில் கூறி, நொட்டென ரிசீவரைத் தாங்கியில் பொருத்தி விட்டு, அவனை முறைத்தபடி அமர்ந்தாள்.

இங்குமங்குமாய் அலையும் கருமணிகளோடு, ஆயிரம் முறை இமைகளைத் தாழ்த்தி, நிமிர்த்தி, தன் புறம் பார்க்காது பார்ப்பவனைக் கண்டு கடுப்பாகி, “ப்ச்” என மௌஸைக் க்ளிக்கியவளின் அருகே வந்த பவி,

“என்னவாம் அந்தண்ணனுக்கு?, டெஸ்க்குக்கும் வர்றதில்ல! பாட்டும் பாடுறதில்ல!, ரெம்ம்ம்ப அமைதியா இருக்குறாரே!” எனக் கேட்டாள்.

“எனக்கென்ன தெரியும்?, எல்லாத்துக்கும் நீ தான் காரணம்! டெரகோட்டா செட்டு தரலைன்னு போற,வரப்பல்லாம் அவனை முறைச்சுப் பார்த்தேல?, அதான் பயந்துட்டான்” – அவள் அள்ளி விடவும்,

“ஐயோ! அப்பிடியா?” என்ற பவி, எழுந்து நின்று,

“அண்ணா, இனி டெரகோட்டா செட்டு கேட்டு உங்களை நொச்சு பண்ண மாட்டேன்! பயப்படாம வந்து உங்க டெஸ்க்ல உட்காருங்க” என்று ஊருக்கே கேட்பது போல் கத்தவும்,

ஹிஹிஹி-என சிரித்த கூட்டத்தைக் கண்டு எரிச்சலுற்று,

“எம்மா, நீ வேற ஏம்மா?, பேசாம உட்காரும்மா” என்று அழாத குறையாக கெஞ்சிய சசியைக் கண்டபடியே உள் நுழைந்த அலெக்ஸ்,

“இதுக்குத் தான் புறமுதுகிட்டு ஓடக் கூடாதுன்னு சொல்றது!, எதுவாயிருந்தாலும் ஃபேஸ் டூ ஃபேஸ், ஐஸ் டூ ஐஸ் டைரக்ட்-ஆ டீல் பண்ணனும் டா சசி” என சக்தி இருக்கும் திசையின் புறமாக விரலை நீட்டி,மடக்கி எக்ஸ்ப்ரஷூனுடன் கூறியதும்,

“என்னடா நடக்குது இங்க?” – என்று சுந்தர் வேறு இடையில் வர,

“ஒன்ன்னுமில்ல சுந்தர்” என்ற சசி, பல்லைக் கடித்து “அடேய் பாலபத்திர ஓணாண்டி!,மூடிட்டுப் போய் ஓரமா உட்கார்றா” என்று முணுமுணுக்க,

“ஹ்ம்!, இந்த ஆம்பளைங்களே இப்பிடித் தான்” என்று சலித்தபடி நடந்த அலெக்ஸ், தன்னையும் முறைப்பான பார்வையுடன் தொடரும் சக்தியைக் கண்டுப் புருவத்தைத் தூக்கி,

“இன்னா?” என அதட்டினான்.

ஒன்றுமில்லையென்பதைப் போல் தலையசைத்த சக்தி, டொக்,டொக் என எண்டர் கீயை இருமுறைத் தட்டி விட்டுத் தன் லாப்டாப்பின் புறம் திரும்பிக் கொண்டாள்.

அதன் பின்பு ஃபெஸிலிடி டீம், சக்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஏசியை குறைத்து வைக்கவும்,

“ஏசியைக் குறைச்சாச்சாம்” – தன் டெஸ்க்கிலிருந்தே சக்தி கூவுவது கண்டு,

சசியிடம் சுந்தர்,

“குறைச்சாச்சாம் டா” என்றார்.

“ம்,…ம்..ம்” என்றவன் நிமிர்ந்து மெல்ல சக்தியைப் பார்க்க, அவள் கையைக் கட்டிக் கொண்டுத் தன்னையே பார்த்து நிற்பது கண்டு, டென்ஷனாகி நெற்றியை நீவியபடி அலெக்ஸை நோக்கினான்.

வாயில் அரைத்த பபிள் கம்முடன் நண்பனது நிலையைக் கண்டு தோள் குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்த அலெக்ஸ்,

“வா வா வா!, பார்த்துக்கலாம்!,பார்த்துக்கலாம்! நீ சால்சா ஆட நினைச்சது சனியன் சகடையோட-ங்குறதை இப்பவாவது புரிஞ்சுக்க” எனக் கூற,

“யாரைப் பார்த்து சனியன் சகடைன்னு சொல்ற” – என முணுமுணுத்த சக்தி, அவன் மீது பென்சிலை விட்டெறியவும், புருவம் உயர்த்திய அலெக்ஸ்,

“ஓ!, அவன் உன்னை அவாய்ட் பண்ணத் தான் டெஸ்க்கு பக்கம் வராம இருந்தான்-ங்குறது உனக்குப் புரிஞ்சுடுச்சா?” – எனக் கேட்கவும்,

“டேய்ய்ய்ய்” – எனப் பாய்ந்து வந்து அவன் வாயைப் பொத்திக் கழுத்தைத் திருகிய சசி, மறந்தும் அவள் புறம் திரும்பியும் பார்க்கவில்லை.

தன் முதுகுக்குப் பின்னால் அவள், மூச்சு வாங்க, மூக்கை விடைத்து முழுக் கோபத்துடன் உக்கிரமாய் நிற்பது புரிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு,

“நான் நல்லா பண்றனோ இல்லையோ, நீ நல்ல்ல்லா பண்ற டா!” எனக் கூறி, தன் பொருட்களுடன் தனது டெஸ்க்கில் அமர்ந்தவன், கடைசி வரை அவளை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.

அதுவரை அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பவித்ரா, மெல்ல எழுந்து அலெக்ஸிடம் குனிந்து,

“ஆமா, இவரு ஏன்-ண்ணா சக்தியை அவாய்ட் பண்ண நினைக்கனும்?” என மெதுவாய்க் கேட்க,

“அது வந்து….” எனக் கதை கூறும் பாணியில் அலெக்ஸ் தொடங்குகையில்,

“டேய்ய்ய்” என நண்பனை அதட்டிய சசி,

“எம்மா, போம்மா, போய் வேலை இருந்தா பாரும்மா” என்று பவித்ராவையும் துரத்தி விட்டு,

தன்னை ஆராய்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டிருந்த சக்தியிடம், வாயைத் திறந்து எதையோ கூற வந்துப் பின், ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ எனப் பல்லைக் கடித்து சங்கடமான முகத்துடன் கணினியின் புறம் திரும்பியவனது எக்ஸ்ப்ரஷனை,

“ஆ… ஓ… உ..!,” என இண்டர்ப்ரட் செய்த அலெக்ஸ்,

“என்ன என்ன என்ன வாந்தியா?, வாழைப்பழமா?, ஏன் ஏன் ப்ரோ வார்த்தையை வாய்க்குள்ளயே அடக்க்க்குறீங்க” எனக் கேலி செய்ய,

“டேய் *****! உன் சங்கறுத்து சாக்கடைல எறியல, என் பேரு சசி இல்ல டா” என்று கொதித்த சசி,

“நண்பனா டா நீ?, அந்தப் பொண்ணு.. அந்தப் பொண்ணு என்னைப் பத்தி என்ன டா நினைக்கும்?” – என்று கலங்கிப் போன குரலில் திட்ட,

“ஓ!, இதுவரைக்கும் அவங்க உங்களை, ப்ராட் பிட் லெவல்-ல வைச்சிருந்தாங்க!, இப்ப ஃப்ராட் பய-ன்னு நினைப்பு மாறுறதுக்கு?, டேய், நேத்து வரை அவ காறித் துப்பிட்டிருந்த கழிசடை தான டா நீ”

“ப்ரோ…”

“ப்ச்!, இருட்டுக்கடை அல்வா மாதிரி இஷிதா முகர்ஜி இருக்குறப்ப, உனக்கு ஏன் டா இந்த இருளாயி மேல ஆச?”

“ஆசையை அடக்கம் பண்ணிடலாம்ன்னு நான் எடுத்த முயற்சில தான், நீ மண்ணை அள்ளிப் போட்டுட்டியே டா பரதேசி!”

“அடக்கம் பண்ண நினைச்சவன் எதுக்கு டா அண்டர்கவர் ஆஃபிசர் மாதிரி தலைமறைவாவே இருந்த?”

“ப்ச், உங்களுக்கு இதெல்லாம் புரியாது ப்ரோ”

“என்ன புரியாது?, அவாய்ட் பண்ணுனா, ஆல்ப்ஸ் மலை ஏறிடலாம்ன்னு எவன் டா சொன்னது?”

“ஏன் முடியாதா?”

“முடியாது”

“பின்ன?”

“ஜலஜா-ன்னு ஒரு ஜானிடர்! ஹவுஸ் கீப்பிங் டீம்ல புதுசா சேர்ந்திருக்குது!, ஊரு ஆந்திரா, ஆனா கலரு கேரளா, சிரிச்சா கர்நாடகா, முறைச்சா” – என்றவனைக் கண்டினியூ செய்ய விடாது தடுத்து, “ப்ச்” என்ற சசி,

“வெளக்கமாத்தோட சுத்துறவளை வைச்சு, எப்பிடி ப்ரோ விளக்கேத்துறது?” எனக் கேட்க,

“ஏன், வீட்டோட சேர்த்து, உன் மனசையும் கூட்டிப் பெருக்கி சுத்தமா வைச்சுக்குவா!, வாழ்க்கை ஜகஜோதியா இருக்கனும்ன்னு நினைச்சேனா, நீ ஜலஜாவை மிஸ் பண்ணக் கூடாது!, இனிமே ஜலஜா தான் உன் ஜான் மேரி ஜான்! வா இப்பவே போய், பொண்ணைப் பார்ப்போம்” – என்ற அலெக்ஸ் கையோடு அவனை இழுத்துச் சென்று விட்டான்.

இருவரும் குசுசுசுவெனப் பேசிக் கொண்டதைக் கேட்டு முசுமுசுவென மூண்ட கோபத்தோடு எரிச்சலாய் அமர்ந்திருந்தவளின் அருகே தனது சேரை நகர்த்திக் கொண்டு வந்த பவித்ரா, மெல்ல அவள் தோளைத் தொட்டு,

“ஏன் சக்தி, அந்தண்ணன்னுக்கு உன் மேல எதுவும்ம்ம்ம்ம்ம்” என இழுக்கவும்,

இரு நொடி பதிலற்று அமர்ந்திருந்த சக்தி, திரும்பி அவள் புறம் செலுத்திய தீப்பார்வையில் கருகி, காற்றோடு கலந்து காஃபடேரியாவை அடைந்து விட்டாள்.

தன் பின்பு கடுப்பும்,எரிச்சலுமாய் அமர்ந்திருந்த சக்தி, அவளது அலுவலக நேரம் கடந்த பின்பும் இருக்கையிலிருப்பது கண்டு சுந்தர்,

“சக்தி, கிளம்பலையா?” எனக் கேட்டார்.

“இல்ல சுந்தர். மும்பை டீம்க்கு இன்னைக்கு பப்ளிக் ஹாலி டே. அதான் என்னை லேட்-ஆ சைன்-ஆஃப் பண்ண சொன்னாங்க”

“ஓகே!, ஏதாவது இஷ்யூன்னா சசிக்கு கூப்பிடுங்க” – எனக் கூறிச் சென்றவரைக் கண்டு மூக்கை விடைத்தவள்,

“இன்னைக்கு சிஸ்டம் வெடிச்சாலும், அந்த சில்றப் பயலை மட்டும் கூப்பிடவே மாட்டேன்” என்று நினைத்ததாலோ என்னவோ,

அன்று நிஜமாகவே சிஸ்டம் பற்றி எரிந்தது.

முதலில் பயந்து பின், பிறகு எக்காரணம் கொண்டும் அவனிடம் உதவி கேட்டு நின்று விடக் கூடாதென்கிற நினைப்பிலேயே முனைப்பாய் வேலை செய்து, அடுத்த சில மணி நேரத்தில் பிரச்சனையை வெற்றிகரமாக தீர்த்தே விட்டாள் சக்தி.

அனைத்தும் வேலை செய்கிறதா எனச் சரி பார்த்து, இந்தத் திடீர் இஷ்யூ குறித்துக் குழுவினருக்கு ஈமெய்ல் அனுப்பி விட்டு, அன்று அவள் வீட்டிற்குப் புறப்படுகையில் மணி பத்தைத் தொட்டிருந்தது.

அடுத்த சில நிமிடங்கள், ஆன்-சைட்டிலிருந்து ‘குட் ஜாப் சக்தி!’ ஈமெய்ல்கள் சென்று வந்த வண்ணமிருக்க, அனைவருக்கும் நன்றி கூறி விட்டுப் படுக்கையில் விழுந்தவள் அவனின்றித் தனியாகத் தான் மட்டும் பிரச்சனையை சமாளித்ததில், மிதப்புடன் உறங்கினாள், மறுநாள் காத்திருக்கும் அதிர்ச்சி அறியாது.

முதல் நாள் இரவு தாமதமாக வீடு வந்ததால், மறு நாள் காலை ஆடி,அசைந்து சாவகாசமாகக் கிளம்பி, அவள் அலுவலகத்தை அடைந்த நேரம், மீட்டிங் அறைக்குள் சுந்தர்,அலெக்ஸ்,பவித்ரா, மற்றும் இன்ன பிற சிலர், கலவரமான முகங்களுடன், சசியினது லாப்டாப் ஸ்க்ரீனைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

தீவிரமான பாவனையுடன் கீபோர்டைத் தட்டிக் கொண்டிருந்த சசியின் முகத்திலிருந்து பெரிதாக எதையும் கண்டறிய முடியவில்லை.

அவன் அப்படித் தான்! இடியே விழுந்தாலும், அவன் முகத்தில் சிறு தீவிரத்தைத் தவிர, வேறு பரபரப்பைக் காண இயலாது!

“என்னவாமா காலையிலேயே” என்றெண்ணியபடி அவள் நடந்து வருகையில் இவளைக் கண்டு விட்ட பவித்ரா, தலையில் அடித்துக் கொண்டு அவளை நோக்கி ஓடி வந்தாள்.

“எத்தனை தடவை டி உனக்குக் கால் பண்றது?, உங்க அப்ளிகேஷன்ல P2!, நேத்து இஷ்யூ வர்க் பண்ணப்போ, என்ன செஞ்சு வைச்ச நீ?, சிஸ்டம் படுத்துருச்சு!, உன்னைக் கண்டிப்பா ஃபயர் அவுட் பண்ண போறாங்க! போ போ!” – என்று பீதியைக் கிளப்ப,

தோளிலிருந்தப் பையை டெஸ்க்கின் மீது எறிந்து விட்டு, அதிவேகமாக அவள் மீட்டிங் அறைக்குள் நுழைகையில், சுந்தர் சசியைக் கடிந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“இட்ஸ் யுவர் ரெஸ்பான்சிபிளிட்டி சசி!, ஒரு சீனியர் ரிசோர்ஸா நீ, என்ன சொல்லிக் கொடுக்குற உனக்குக் கீழ வேலை பார்க்குறவங்களுக்கு?, பிசினஸ் அவர்ஸ் இன்னும் ஸ்டார்ட் ஆகாததால, இன்னைக்குத் தப்பிச்சுட்டோம்!, நாம நோட் பண்ணாம விட்டிருந்து, பீக் அவர்ல பிரச்சனை ஆகியிருந்தா, யாரை ப்ளேம் பண்ணுவீங்க?, என்ன எக்ஸ்க்யூஸ் கேட்குறது க்ளையண்ட் கிட்ட?”

“ப்ச்” என உச்சுக் கொட்டி அவர் கூறுவதைக் கண்டு கொள்ளாதுத் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தவன்,

“ஷீ ஹேண்டில்ட் இட் வெரி வெல் விதவுட் எனி ஒன்ஸ் ஹெல்ப். யு நோ தட்” -என்றான் கடுப்பாக.

“அதனால என்ன பிரயோஜனம்?, செய்யுற வேலையை முழுசா பண்ண வேண்டாமா?”

“ஃபர்ஸ்ட் டைம் பண்றதால மறந்துருப்பாங்க!, இது எல்லாருக்கும் நடக்கிறது தான் சுந்தர்”

“க்ளையண்ட் இந்த இஷ்யூக்கு, ரூட் காஸ் கேட்பான்! நீ இதையே சொல்லு”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

“என்னன்னு பார்ப்ப?”

“உண்மையைச் சொல்லலாம். தப்பில்ல” – என்றவன் நிமிர்ந்து,

அறையின் ஒரு ஓரமாகப் பேஸ்தடித்துப் போய் நின்றிருந்த சக்தியைக் கண்டு “ஷ்ஷ்ஷ்ஷ்” என சலித்துக் கொண்டான்.

அவன் பார்வை சென்ற திசையைத் திரும்பிப் பார்த்த அனைவரில் சுந்தர்,

“அண்ட் யூ… சக்தி!, இனி எந்தப் பிரச்சனையா இருந்தாலும் சசிக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க! யூ ஆர் நாட் சப்போஸ்ட் டூ ஹாண்டில் எவ்ரிதிங் பை யுவர்செல்ஃப்! வீ வர்க் அஸ் அ டீம். ஓகே?” என்று கடிய,

அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து, நேத்து பார்த்த வேலையில் எங்கே ஓட்டை விழுந்ததென்பதைப் புரிந்து கொண்ட சக்தி, நெற்றியைத் தட்டிக் கொள்ளச் சென்ற உள்ளங்கையை இறுக்கிக் கொண்டு,

“ஓ..ஓகே சுந்தர்” என்றவள், “சாரி” என்றாள் அழுந்த மூடிய கண்களுடன்.

“டோண்ட் ஸே சாரி!, இந்த சாரி யாருக்கு?, எனக்கா?, இல்ல, நீங்க பண்ணுன தப்புக்காக இன்னைக்கு க்ளையண்ட்-ஐ ஃபேஸ் பண்ணப் போற அவனுக்கா?, உங்க சாரியால ஒரு பிரயோஜனமும் இல்ல சக்தி. யூ ஹேவ் டூ பி கேர்ஃபுல் எவ்ரிடைம் யு டச் த சிஸ்டம்! தெரியலன்னா, சசியைக் கேளுங்க. இட் இஸ் ஹிஸ் ரெஸ்பாண்சிபிளிடி டூ மேக் யூ அண்டர்ஸ்டேண்ட். புரிஞ்சதா?” என்று விட்டு, வெளியேறி விட,

ஊஃப்ஃப்ஃப் என மூச்சு விட்டபடி சசியின் எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தனர் பவியும்,அலெக்ஸூம்.

“ஏம்மா, அவ்ளோ பண்ணியே, கடைசில மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டியேம்மா?, நீ செஞ்சு வைச்ச வேலையால, ப்ரொடக்ஷன் டிஸ்க் ஸ்பேஸ் நிறைஞ்சு வழிஞ்சு, அப்ளிகேஷன் படுத்துருச்சு” –அலெக்ஸ்.

ஐயோவெனக் கதறிய மனதுடன் நெற்றியைத் தேய்த்தபடி சசியினருகே அமர்ந்தவள்,

“சத்தியமா எனக்கு ஞாபகமே இல்ல!, இஷ்யூ ரிசால்வ் ஆயிடுச்சுங்குற சந்தோசத்துல இதை மறந்துட்டேன்” – என கலங்கிப் போன முகத்துடன் கூற,

“நல்லா மறந்த போ!, ப்ரொசிஜரெல்லாம் டாகுமெண்ட் பண்ணி வைச்சிருக்காங்களே!, நாக்கு வழிக்கிறதுக்கா அதெல்லாம்?, இருக்குறதைப் படிச்சுப் பார்த்து ஃபாலோ பண்றதுல என்ன கஷ்டம் உனக்கு?” – என்று அலெக்ஸ் விடாமல் திட்டியதால்,

முகம் சுருங்க அமர்ந்திருப்பவளைக் கண்டு, “டேய், விட்றா, விட்றா டேய்!” என்ற சசி, “போய் லாப்டாப் எடுத்துட்டு வாங்க போங்க!, இஷ்யூ டாகுமெண்ட் அடிக்கனும்” என்று அவளை அனுப்பி விட்டு, மற்றவர்களையும் துரத்தினான்.

அனைவரும் சென்றதும், கலவர முகத்துடன் அவனருகே வந்தமர்ந்த சக்தி,

“எப்போ ஃபைண்ட் அவ்ட் பண்ணீங்க?” – என்றாள் மெல்லிய குரலில்.

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி”

“அப்ளிகேஷன் நாட் அவைலபிள்ன்னு எல்லாருக்கும் மெய்ல் போயிருக்குமே”

“ஹ்ம்ம்”

“இப்போ.. இப்போ என்ன பண்றது?”

“சமாளிக்கனும்”

“………..”

“அதான் பிரச்சனை பெருசாகுறதுக்கு முன்னாடி சால்வ் பண்ணியாச்சே! விடுங்க”

“…………” – கலக்கமான முகத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தவளின் மனநிலையை மாற்றும் நோக்கத்தோடு,

“உண்மையை சொல்லுங்க!, வேணும்ன்னு தான செஞ்சீங்க?” – எனக் கேட்டான்.

அவன் கேள்வியில் அதிர்வாய் தன்னைப் பார்ப்பவளைக் கண்டு சிரித்து,

“இவன் தலை உருளட்டும்ன்னு என்னைப் பழிவாங்கத் தான வேணும்ன்னே பண்ணீங்க?” என்று வினவ, முகம் மாற அசையாது அவனை நோக்கினாள் அவள்.

“பரவாயில்ல விடுங்க!, இதை விடப் பெரிய பெரிய பிரச்சனையெல்லாம் சமாளிச்சிருக்கேன்!, இதை சமாளிக்க மாட்டேனா?, இப்போதைக்கு டாகுமெண்ட்டை ரெடி பண்ணி அனுப்பி வைப்போம்!, அப்புறம் வர்றதை.. பார்…த்துக்….கலாம்” – என்றபடியே அவள் புறம் திரும்பியவன்,

கண்களில் திரண்டு நின்ற நீரோடு, சிவந்து விட்ட மூக்குடன், அழுகை முகத்தோடு காட்சியளித்தவளைத் திகைப்பாய் நோக்குகையில்,

“சத்தியமா… நான்… நான்… வேணும்ன்னு பண்ணல சசி..” என்றவள்,

அவன் அவசரமாய் மறுத்துத் தலையசைத்து “இல்ல, இல்ல நான்.. நான் சும்மா தான்… விளையாட்டுக்கு…”– எனத் திக்கித் திணறிக் கூறிக் கொண்டிருக்கும் பதிலைக் காதில் வாங்காது விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

எப்போதும், அலட்டலாய், அதட்டலாய், மிரட்டலாய், திமிரோடு அவனை இடது கையில் டீல் செய்பவள், கண்ணீர் தேங்கிய விழிகளோடு சென்றது… ஒரு மாதிரி.. கலக்கத்தைக் கொடுக்க… அவளைத் தொடர்ந்து செல்ல முயன்றவனைத் தடுத்தது சுந்தரின் ஃபோன் கால்.

“சொல்லுங்க சுந்தர்” என்றவனிடம்,

“சசி, ஸ்டீவ் கால் ஸ்கெட்யூல் பண்ணியிருக்காரு. செக் பண்ணியா?” – எனக் கேட்டதும்,

லேப்டாப்பை நோக்கியவன், “ஹ்ம்ம், பார்த்துட்டிருக்கேன்” என்றான்.

“மிச்ச வேலையையும் முடிச்சிருங்க சீக்கிரம்”

“ஹ்ம்ம், பண்றோம்”

“வேர் இஸ் சக்தி?”

“இருக்காங்க. நீங்க எங்க இருக்கீங்க?”

“காஃபடீரியா. ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு இருக்கேன்”

“நீங்க மட்டும் சாப்பிட்டா போதுமா?”

“டேய்ய்”

“நானும் தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடாம, காலைல இருந்து இஷ்யூல உட்கார்ந்திருக்கேன்”

“அதனால?”

“ஒரு மஷ்ரூம் சாண்ட்விச் வாங்கிட்டு வாங்க” – எனக் கூறி கால்-ஐ கட் செய்தவன், எட்டி சக்தியின் டெஸ்க்கை நோக்கினான்.

அதன் பின்பு அவன் முகம் பாராது, அவன் கொடுத்த வேலையை முடித்து, ஸ்டீவ் உடனான கால்-ஐ அட்டென் செய்து, பொறுப்பாக அனைவரிடமும் அவள் மன்னிப்புக் கேட்டு முடிக்கையில், அந்த நாளில் பாதி முடிந்திருந்தது.

ஒரு வழியாக அனைத்தும் ஓய்ந்ததும், பையைத் தூக்கிக் கொண்டு சுந்தரின் டெஸ்க்கில் நின்றவள், “மை மாம் இஸ் நாட் வெல் சுந்தர். ஐ ஹேவ் டூ லீவ் நௌ” என்றாள்.

சோர்வுடன் நின்றவளைக் கண்டு சுந்தருக்கு ஒரு மாதிரியாகி விட,

“ஆர் யூ ஓகே சக்தி?” என்றார்.

“யா யா ஐ ஆம் ஓகே” – சிரிக்க முயன்றவளிடம்,

“இதெல்லாம் நம்ம இண்டஸ்ட்ரில ரொம்ப சகஜமான விஷயம். யூ டோண்ட் நீட் டூ ஃபீல் டிஸ்கரேஜ்டு!” என்றவர், “டேக் கேர் ஆஃப் யுவர் மதர்” – எனக் கூறி விடைகொடுத்ததும், நன்றி சொல்லி விட்டு நகர்ந்து விட்டாள்.

‘கூட்டா சேர்ந்து கும்மியெடுத்துட்டு, இப்ப குசலம் விசாரிக்கிறானுங்க, கும்கி மண்டையனுங்க’ – எரிச்சலுடன் பொருமினாலும்,

என் வாழ்க்கைல என்னை நினைச்சு நானே ப்ரௌட்-ஆ ஃபீல் பண்ணின ஒரே மொமண்ட், நேத்து நைட் தான்!

இப்பிடி சொதப்பிட்டேனே! – என்றெண்ணியபடிக் குடைந்தெடுத்தத் தலையைப் பற்றிக் கொண்டு லிஃப்ட்டை நோக்கிச் சென்றவளின் எதிரே வந்தான் சசி.

தோளில் பையும், கையில் ஹெல்மெட்டுமாக நடந்து வருபவளைக் கண்டு விழியை விரித்துப் பின் யோசனையாய் நோக்கி,

“என்னாச்சு?” என்று அவன் வினவ,

காதில் விழாதது போல் கடக்கப் பார்த்தவளோடு கூட நடந்தபடி, “வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டதும்,

அவன் முகம் பாராது “ம்” என்றவள், லிஃப்ட்டைத் தவிர்த்துக் கடகடவெனப் படிக்கட்டில் இறங்கி விட்டாள்.

அதன் பின்பு அவன் சுந்தரிடம் விசாரித்ததில், அவர் காரணத்தைக் கூற,

“நீங்க அந்தப் பொண்ணை வாங்கு,வாங்குன்னு வாங்குனதுல தான் அது கிளம்பிடுச்சு” என்று எரிச்சலுடன் கடுகடுத்தவன்,

“ஹராஸ்மெண்ட் கேஸ்ல உங்களை தூக்கப் போகுது பாருங்க” என்று மிரட்ட,

“டேய், என்ன டா பயமுறுத்துற?, ஒரு டீம் லீடரா நான், அந்தப் பொண்ணோடத் தப்பை சுட்டிக் காட்ட வேணாமா?, என்னாங்கடா இப்பிடிப் பண்றீங்க” – அங்கலாய்த்துக் கொண்ட சுந்தரைக் கண்டு கொள்ளாது தனது டெஸ்க்கிற்குச் சென்றவன், அவசரமாய் வாட்ஸ்-ஆப்பை ஓபன் செய்தான்.

“நான் வாங்குற திட்டுக்கெல்லாம், ஃபீல் பண்ணி வீட்டுக்குப் போறதா இருந்தா, தினம் வீட்லயே தான் குடியிருக்கனும். ஆனாலும், அந்த ரெட்டூ மூக்குத்தி ஓவராத் தான் டா பண்ணுது! யாரும்,எதுவும் சொல்லக் கூடாதாமா அதை?, இதென்னடா அராஜகம்?, டீச்சர் அடிச்சா, தூக்குல தொங்குற 2K kids தான இதுங்க! ஹ்ம்!”

-விடாது புலம்பிக் கொண்டிருந்த அலெக்ஸின் மீது வாட்டர் பாட்டிலை விட்டெறிந்த சசி, “கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு டா” – என்று திட்ட,

“அந்தப் பொண்ணை சொன்னா உனக்கு ஏன் டா கோவம் வருது?, என்ன ஜலஜாவுக்கு ஜலசமாதி கட்டலாம்ன்னு பார்க்குறியா?” – என்று பொங்கியவனிடம் பதில் கூறாது, பரபரவெனப் பிடரியைத் தேய்த்துக் கொண்ட சசி,

இதுவரை ஒரு முறை கூட வாட்ஸ்-ஆப்-ல் அவளுடன் பேசியிராததால், ஸ்டார்ட்டிங் ட்ரபிள் ஆகி, திணறி, பின் “ப்ச்” என ஃபோனை டெஸ்க்கில் எறிந்தான்.

டை மழை பொழிந்து ஓய்ந்ததற்கான சாட்சியாய் அந்த மொட்டை மாடியின் சிமெண்ட் தரையெங்கும் ஆங்காங்கு தண்ணீர் தேங்கியிருக்க.. தண்ணீர்த் தொட்டியின் கீழே போடப்பட்டிருந்த இரும்பு ஏணியில் அமர்ந்திருந்த சக்தி, ஜில் காற்றை சுவாசித்தபடி, தூரத்தில் புள்ளியாய் நகர்ந்து கொண்டிருந்த வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில்… அதே போன்றொரு மொட்டைமாடியில், ஷார்ட்ஸ்,டீஷர்ட்டோடு நடைபயின்று கொண்டிருந்த சசி, கடந்த அரை மணி நேரமாக சக்தியின் நம்பரை டயல் செய்வதும்,கட் செய்வதுமாகத் திணறிக் கொண்டிருந்தான்.

அந்த அரை மணி நேரத்தில், ஆயிரமாவது முறையாக தலைமுடியைக் கோதியவன், ஒரு முடிவுடன், அவள் நம்பரை டயல் செய்து, அலைபேசியை காதுக்குக் கொடுத்தான்.

தன் விரல்களுக்கு நடுவே சுழன்று கொண்டிருந்த அலைபேசி, சிணுங்கத் தொடங்கவும், யாரெனப் பார்த்த சக்தி, சசியின் பெயர் ஒளிர்வது கண்டு, ‘இவனா’ எனப் புருவம் சுருக்கி, அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ..” – சக்தி.

“ஹ..ஹலோ…”

“ம்”

“ஹ..ஹலோ சக்திஇஇ…” – தயக்கமாய் இழுத்தான் அவன்.

“சக்தி தான் பேசுறேன். சொல்லுங்க”

“ஓஓ……”

“………..”

“………….”

“ஃபோன் பண்ணா ஏதாவது பேசனும்..”-சக்தி

“ஆஆங்க்…. ம்ம்ம், எ..என்ன, என்ன பண்ணிட்டிருக்கீங்க?” – திணறலைக் கை விடாது அவன்.

“ப்ச், அதைத் தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க?” – திண்ணக்கமாய் அவள்.

“இல்ல, வ.. வந்து…, ஆன், உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு நீங்க லீவ் போட்டுப் போயிட்டதா சுந்தர் சொன்னாரே! இப்போ அவங்க ஓகே வா?”

“எங்கம்மாவுக்கென்ன, நல்லா தான் இருக்குது” – அலட்சியமாய் அவள்.

“ஓஓ…”- அவளது ஆட்டிடியூடை உள்வாங்கியபடி அவன்.

“இதைக் கேட்கத் தான் கூப்பிட்டீங்களா?”

“இல்ல… ஆ..ஆமா.. அது.. வந்து..”

“…..”

“வ..வந்து…”

“ப்ச், நீங்க பொறுமையா புரட்டாசிக்கு வாங்க! நான் இப்ப வைக்கிறேன்” – எரிச்சலுடன் மொழிந்தவளைத் தடுத்து..

“இருங்க,,, ஏங்க.. இருங்க..” என்றவன், பின் ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’-என மூச்சை விட்டு நெற்றியைத் தேய்த்துக் கொண்டு,

“எனக்கு முன்னபின்ன, பொண்ணுங்களை சமாதானப்படுத்தி பழக்கமில்லங்க. அதான் என்ன பேச, எப்படி ஸ்டார்ட் பண்ண-ன்னு தெரியல” – என்றான்.

புருவம் சுருக்கி, ஃபோனைக் காதிலிருந்து எடுத்துப் பார்த்து விட்டு, மீண்டும் காதில் வைத்தவளின் பதிலை எதிர்பாராது அவன்..

“ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தீங்களேன்னு, உங்க மைண்ட்-அ மாத்தா விளையாட்டா தான்.. வேணும்ன்னு பண்ணீங்களான்னு கேட்டேன். அதுக்குப் போய், கண்ல தண்ணி வர அளவுக்கு….. ப்ச்!, ரொம்பக் கஷ்டமாயிடுச்சுங்க”

“நீங்க வேணும்ன்னு பண்ணல. பண்ணவும் மாட்டீங்க. யாரும் பண்ண மாட்டாங்க. எனக்குத் தெரியும். நான் எப்பவும் போல, வம்பிழுக்கத் தான் அப்பிடிக் கேட்டேன்! வகையா திருப்பிக் கொடுப்பீங்கன்னு பார்த்தா, நீங்க….. வைச்சு செஞ்சுட்டுப் போயிட்டீங்க!”

“…………”

“இருக்கீங்களா லைன்ல?”

“ஹான்.. ம்ம்”

“நான் ரொம்ப ஃபீல் பண்ணேன்ங்க. உங்களை அழ வைக்குற அளவு பேசிட்டேனோன்னு நினைச்சு! இதுல சொல்லாம கொள்ளாம, லீவ் போட்டு வேற போயிட்டீங்க”

“………….”

“ஒன்னு சொல்லட்டுமா?, நீங்க இன்னைக்கு நடந்துக்கிட்டது, ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருந்துச்சுங்க. ஸ்கூல் கிட்-ஆ நீங்க?, ஒரு வர்க்கிங் ப்ரொஃபசனல் மாதிரியா பிஹேவ் பண்ணீங்க?, எதுவாயிருந்தாலும் ஃபேஸ் பண்றதை விட்டுட்டு, அவாய்ட் பண்ணி ஓடுனா சரியாய்ப் போச்சா?”

“இந்த அட்வைஸ் எனக்கு மட்டும் தானா?”

“என்னது?”

“4 நாளா மீட்டிங் ரூம்லயே குடித்தனம் நடத்துன நீங்க, இதையெல்லாம் பேசுறீங்களேன்னு கேட்குறேன்”

“ஃபார்ம்க்கு வந்துட்டீங்க போல”

“எல்லாரும் இப்பிடித் தான நினைச்சிருப்பாங்க?”

“என்னன்னு?”

“நான் ரொம்ப இம்மெச்யூர்ட்-ஆ நடந்துக்கிட்டேன்னு?”

“அதெல்லாம் இல்ல! அப்டியே நினைச்சுக்கிட்டாலும் தான் என்ன இப்போ?, அப்பிடியென்ன பெருசா லாஸ்-ஆகிடப் போகுது”

“……….”

“ஏங்க,”

“ம்ம்??”

“நான் அப்பிடிக் கேட்டதால, என் மேல கோபம்-ங்களா?”

“பின்ன வராதா?, செய்யாத குற்றத்துக்குக் குற்றவாளிக் கூண்டுல ஏத்துனா?”

“எப்பவும் போலத் திருப்பித் திட்டுவீங்கன்னு எதிர்பார்த்து தான் நான் அப்பிடி சொன்னேன்”

“அது… ரொம்பக் கோபம் வந்துடுச்சு. அதான்”

“ஓ!, அப்டின்னா, ரொம்பக் கோபம் வந்தா அழுவீங்களா?”

“ஆமா, என் வீக்நெஸ் அது. வெளிய சொல்லாதீங்க”

லேசாய்ப் புன்னகைத்தான் போலும் அவன்.

பின் ஊஃப்ஃப்ஃப் என அவன் விட்ட மூச்சு, இவள் காதைத் தீண்டிச் செல்ல, சிரிப்புடன் ஏணியில் சாய்ந்தவளிடம்,

“இப்போ ஓகே தான நீங்க?” எனக் கேட்டான்.

“என்ன ஓகே?”

“இ..ல்..ல, அப்போ நீங்க என் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கல!, பேசவும் இல்ல!, அதான்.. இப்ப.. என் மேல.. கோபம் போயிடுச்சான்னு…..”

“கோபமெல்லாம் இல்ல”

“வந்து….”

“வந்து??”

“சாரி-ங்க” – தயக்கமாய் அவன் கேட்ட மன்னிப்பு சிரிப்பை வரவழைக்க..

லேசாய்ச் சிரித்தாள் அவள்.

“நாளைக்கு.. நாளைக்கு வருவீங்க தான?”

“ஏன், நீங்க மீட்டிங் ரூம்ல தான செட்டில் ஆகப் போறீங்க?, அப்புறம் ஏன் கேட்குறீங்க?”

“……”

“ஹலோஓஓஓ”

“குட்நைட்-ங்க”

“போய்யா யோவ்”

-கடுப்புடன் கட் செய்தவளை உணர்ந்து, சிரிப்புடன் அலைபேசியை பாக்கெட்டுக்குள் இட்டவன், ஊஃப்ஃப்ஃப் என மூச்சு விட்ட படி, பரபரவெனத் தலை முடியைக் கோதிக் கொண்டான்.

றுநாள் காலை அலுவலகத்திற்கு வந்ததும், தன் டெஸ்க்கில் நின்றபடி பையைத் திறந்து, லாப்டாப்பை வெளியிலெடுத்து ஆன் செய்து கொண்டிருந்தவனின் விழிகள் அவளைத் தேடியலைந்தது.

டெஸ்க்ல பேக் இருக்கு!, ஆனா ஆளைக் காணோமே!

மீட்டிங் அறை, பாண்ட்ரி,போபன் டெஸ்க் என சுற்றிச் சுற்றித் தேடியவனைக் கண்டபடி, கையில் காஃபி கப்புடன் நடந்து வந்த சக்தி, தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனிடம்,

“ம்க்கும்” எனத் தொண்டையைச் செரும,

படார் எனத் திரும்பியவன், அவளைக் கண்டு என்ன ரியாக்ட் செய்வதெனப் புரியாது நிற்க..

நமுட்டுச் சிரிப்புடன் உதட்டை வளைத்தவள்,

“என்ன?, டெஸ்க் பக்கமெல்லாம் தலை காட்டுறீங்க?” என்றாள் நக்கலாய்.

பிடரியை நீவியபடி, “அ..து வ..ந்து..” என்று அவன் திணறுகையிலேயே..

பவித்ராவுடன் தளத்திற்குள் நுழைந்த அலெக்ஸ், சக்தியைக் கண்டு,

“என்னா ரெட்-டூ மூக்குத்தி, ரேஞ்ச் ரோவர் ரேஞ்சுக்கு உன்னை கெத்தான ஆளுன்னு நினைச்சா, நீ என்ன ரெனால்ட் க்விட் மாதிரி ஃபெயிலர் வெர்ஷனா இருக்க?, ஆமா, நேத்து எதுக்கு ஓடிட்ட?, உன் இஷ்டத்துக்கு வந்து போக, இதென்ன உங்க தாத்தாவோட ஆஃபிஸா?” – எனக் கடிந்து கொள்ள..

“அலெக்ஸ்-ன்னதும், நான் கூட தான் அலெக்ஸ் பாண்டியன் ரேஞ்சுக்கு யோசிச்சேன்! ஆனா நீ.. அழுகிப் போன ஆப்பிள் மாதிரி இல்ல?, அப்பிடித் தான்”

“டேய், சசி.. பார்த்தியா டா, எப்பிடி மரியாதை இல்லாம பேசுதுன்னு?, ஏய்ய்ய் என்ன?”

“என்ன என்ன என்ன?” – இருக்கையிலிருந்து எழுந்து நின்று, கையை மடக்கி சிலிர்த்துக் கொண்டு வந்தவளைக் கண்டு இரண்டடி பின்னால் நகர்ந்துத் தொப்பென சேரில் விழுந்த அலெக்ஸ்,

“இ.. இ..இதெல்லாம் ரெம்ப… ரெம்ப… ஓவரா இருக்கு டா சசி” – எனப் பம்ம,

“மூடிட்டு வேலையைப் பாருடா” என முணுமுணுத்த சசி, சுடிதாரின் கைப்பகுதியை மடித்துக் கொண்டு ரௌடி லுக்கில் நின்றவளை லேசாக நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்புகையில், தன்னையே நோக்கிக் கொண்டிருந்த பவித்ராவைக் கண்டு,

“என்ன?” என்கையில்,

மெல்லத் திரும்பி சக்தியை ஒரு பார்வை பார்த்துப் பின்,

“எதுக்கும் ஒரு தடவை நல்லா யோசிச்சுக்கோங்கண்ணா” – எனச் சின்னக் குரலில் கூறினாள் அவள்.

பவித்ரா கூறியது காதில் விழாததால், சுருக்கிய புருவத்துடன் இருவரையும் கவனித்த சக்தியைக் கண்டு ஆடிப் போன சசி,

“எம்மா.. உனக்குப் புண்ணியமாப் போகும்ம்மா! தயவு செஞ்சு வாயை மூடும்மா” என முணுமுணுத்து.. கவனமாய் சக்தியைத் தவிர்த்து விட்டு லாப்டாப்பின் புறம் திரும்பிக் கொண்டான்.

ன்று காலை பதினோறு மணி வாக்கிலேயே, அதுவரை வெளுப்பாயிருந்த வானம் நிறம் மாறி, கருக்கத் துவங்க, இடி,மின்னலோடு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வானிலை, மனநிலையை மாற்றியதில், உற்சாகம் பொங்க, எழுந்து சென்று ஜன்னலருகே நின்ற பவித்ரா,

“செம்ம க்ளைமேட் இல்ல!” எனக் கேட்டபடி சக்தியிடமிருந்த காஃபி கப்பை அபேஸ் செய்து கொண்டதும்,

“ப்ச்” என்றவளைப் பொருட்படுத்தாது,

“ஆனா சக்தி, இந்த சசி அண்ணா இப்போல்லாம் பாட்டே பாடுறதில்ல பாரேன்” என்றாள்.

சின்சியராக வேலை செய்து கொண்டிருந்தவள், அவள் புறம் திரும்பாது,

“அவனோட கழுதை வாய்ஸ் மேல உனக்கு இவ்ளோ க்ரேஸா?” எனக் கேட்க,

“அதெல்லாம் அந்தண்ணா வாய்ஸ் நல்லா தான் இருக்கும்” என்று நொடித்தாள் அவள்.

“தொன்று தொட்ட காலத்திலிருந்தே தொண்டைக் கட்டுனது மாதிரி, கரகரன்னு ஒரு வாய்ஸூ!, கருமம்”

முணுமுணுத்துக் கொண்டிருந்தவளைக் கண்டு கொள்ளாது பவித்ரா,

“சசிண்ணா” – என்றழைத்தாள் அவனை.

லாப்டாப்பிலிருந்துக் கண்ணை எடுக்காது “ம்ம்ம்” என்றவனிடம்,

“நீங்க ஏன் இப்போ-லாம் பாட்டு பாடுறதே இல்ல?” எனக் கேட்கவும்,

லாப்டாப்பிலிருந்து பார்வையைத் திருப்பியவனின் விழிகள், தடுப்பிற்கு மறுபுறமிருந்த சக்தியின் விழிகளைச் சந்தித்து விட்டு,

“பா..பாட்டா?,” என்றவனிடம்,

“ஹ்ம்ம்!, வெளிய மழை!, என் கைல காஃபி!, நீங்க ஒரு பாட்டு மட்டும் பாடுனீங்கன்னா, சிச்சுவேஷனுக்கு ஒரு கம்ப்ளீஷன் கிடைக்கும்” என்றாள் பவித்ரா.

“அ..அது வந்தும்மா.. போன வாரம் தான் பாளையத்தம்மன் கோயில்ல வைச்சு, இனி வாழ்க்கைல நான் பாட்டே பாட மாட்டேன்னு சொல்லி என் பாட்டி கைல அடிச்சு சத்தியம் பண்ணுனேன்! சத்தியத்தை மீறி.. எப்பிடி….” – என இழுத்தவன் கூறியது புரியாது அவள் விழிக்க,

இடை புகுந்த அலெக்ஸ்,

“இங்க யாரோ, என் நண்பன் பாடுற பாட்டை ஹெவியா டிஸ்லைக் பண்ணியிருக்காங்க!, அதான்.. அவன் பதறுறான்” – என்றான்.

“டிஸ்லைக்-ஆ?” என்ற பவித்ரா “ஏய்ய்.. நீயாடி?” என சக்தியைக் கேட்க,

“செருப்புப் பிஞ்சுரும்” என்று திட்டிய சக்தி, தடுப்பிற்குப் பின்னே தெரிந்த அவன் விழிகளை முறைத்துப் பார்க்க, அவசர,அவசரமாய்ப் படபடத்த இமைகளைத் தாழ்த்திக் கொண்டான் அவன்.

அடுத்த சில மணி நேரம், அடித்துப் பெய்த மழையின் சப்தத்தோடு, கீபோர்டின் சத்தம் மட்டுமே ஒலிக்க,

லாப்டாப்பை நோக்கித் தாழ்ந்திருந்த அவன் இமைகளைத் தடவைக்கொரு முறைத் தடவி நகர்ந்து கொண்டிருந்தது சக்தியின் விழிகள்.

“போரடிக்குது” – டொக்கென மௌஸைக் கீழே வைத்தபடி பவித்ரா.

“ஏன் வேலை வெட்டி இல்லையா உனக்கு?”

“ப்ச்,போடி..”

“சரி, காண்டாகாத!, நான் வேணா ஒரு பாட்டு பாடட்டுமா?”

-சக்தியின் கேள்விக்கு, இங்கு லாப்டாப்பைப் பார்த்துக் கொண்டிருந்த சசி, “பார்றா” என்றபடி உதட்டை வளைக்கையில்,

‘கதைப்போமா… கதைப்போமா… கதைப்போமா..

ஒன்றாக நீயும்,நானும் தான்..’

– என்று தொடங்கி விட்டவளைக் கண்டு, அவன் மெல்லத் திரும்பி நமுட்டுச் சிரிப்புடன் அலெக்ஸை நோக்க,

“பொறு, பொறு! எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்ப்போம்” – என்றான் அவன்.

தீவிரமாய் லாப்டாப்பைப் பார்த்தபடி அமர்ந்திருந்த இருவரையும் கண்டு,

பவித்ரா சக்தியிடம்,

“என்னடி ரியாக்ஷனே இல்ல?”

“பாட்டை மாத்துவோம்” – என்ற சக்தி, தொண்டையைச் செருமிக் கொண்டு,

‘தள்ளிப் போகாதே!, எனையும்.. தள்ளிப் போக.. சொல்லாதே’ -எனக் கூவ,

பொங்கி வந்த சிரிப்பை அடக்கி, இடது கையால் வாயை மூடிக் கொண்டு தோள் குலுங்க, மிகத் தீவிரமாய் லாப்டாப்பை நோக்கினர் இருவரும்.

“சிரிக்கிறானுங்களா?, இங்க என்ன காமெடியா பண்ணிட்டிருக்கோம்?” – என்று எரிச்சலுற்ற சக்தி,

“என் வாய்ஸ் அவ்ளோ கேவலமாவா இருக்கு?” எனக் கேட்டாள்.

“சசியண்ணே வாய்ஸை விட பெட்டரா தான் இருக்கு” – பவித்ரா.

“பின்ன என்னவாம்?”

“இரு,இரு! இந்தத் தடவை பாட்டை கரெக்ட்-ஆ சூஸ் பண்ணுவோம்” – என்ற பவித்ரா, அடுத்த இரண்டு நிமிடம், குசுகுசுவெனப் பேசி அவளைக் கன்வின்ஸ் செய்ய, மீண்டும் “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமினாள் சக்தி.

“அடக் காதல் என்பது மாயவலை!, சிக்காமல் போனவன் யாருமில்லை!,

சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை”

-பெரிதாய்த் தொடங்கி மெலிதாய் முடித்த சக்தி, ‘கெக்கே பெக்கே’-வென உருண்டு பிரண்டு சிரித்த இருவரையும் கண்டு உக்கிரமடைந்து, நெற்றிக் கண்ணைத் திறந்த வேளை, எழுந்து நின்றனர் இருவரும்.

ஒருவரையொருவர் ஒரு முறை பார்த்துக் கொண்டு,

“ப்ரோ, ம்ம்ம்” – என அலெக்ஸ், சசிக்குக் கண்ணைக் காட்டியதும், இருவரும் ஒரு சேரக் குதித்தபடி இங்குமங்கும் நகர்ந்து,

“மறு வா…ர்..த்தை.. பே….சா…தே!, ம..டி மீ….து.. நீ தூ…ங்…கிடு…” – என ஓலமிட்டதும்,

‘ச்ச’ என முஷ்டியை இறுக்கி டெஸ்க்கில் குத்திய சக்தி, தன் லாப்டாப் மீதே முகத்தைக் கவிழ்த்து,

“பங்கம் பண்ணிட்டானுங்களே” – என முணுமுணுத்தாள்.

‘ஒரே ஒரு ஸ்டேஜ் ஏறி ஒட்டுமொத்த இமேஜையும் டேமேஜ் பண்ணிக்கிட்டியே டா சித்-து!

அவள் தன் முகத்தை மறைத்துக் கொண்டதும் நின்ற இருவரில், அலெக்ஸ்,

“ஏய்ய்ய்ய் 2K kid! நாங்கல்லாம் சித் ஸ்ரீராம் ஹேட்டர்ஸ்!, ஊளை விட்றவன் பாட்டைப் பாடி எங்களை உக்கிரமாக்கப் பார்க்குறியா!, பீ கேர்ஃபுல்” என்று மிரட்டி விட்டு அமர,

வெடுக்கென எழுந்த பவித்ரா, “ரசனை கெட்ட ப்ளடி 90ஸ் கிட்ஸ்!,!” என்றுத் திட்டி விட்டு நகர,

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்-எனப் புலம்பியபடி சக்தியும் அவளைத் தொடர்ந்து தன் முகத்தை மறைத்தபடி ஓடி விட்டாள்.

போஸ்ட் லஞ்ச் ஆகியும் கூட,

“யார்க்கிட்ட வந்து என்னா பாட்டு பாடுதுங்க!, பொடிக் கழுதைங்க” – என விடாது திட்டியபடி இவள் மீது வாய்ப்போர்த் தொடுத்த அலெக்ஸை முறைத்து, முகத்தை உம்மென வைத்தபடி அமர்ந்திருந்தாள் சக்தி.

அதன் பின்பு அனைவரும் வேலையில் பிஸியாகி விட, மழையும் வெகு பிஸியாகி, அடர்த்தியாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.

தன் இன்பாக்ஸில் வந்து விழுந்த ஸ்டீவ்வின் ஈமெயிலைக் கண்டு, மெசெஞ்சரைக் க்ளிக்கி, சேட் விண்டோவைத் திறந்த சக்தியின் திரையில் சசியின் பெயர்.

“ஹல்லோ..” – ஹாய் ஸ்மைலியுடன் சக்தி.

நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“ஹ்ம்ம்” – மொட்டையாய் Hmm-உடன் அவன்.

“ஸ்டீவ் ஈமெய்ல் பார்த்தீங்களா?”

“யெஸ்”

“ரிப்ளை ஈமெய்ல் நான் ட்ராஃப்ட் பண்ணிருக்கேன்”

“Okay”

தான் டைப் செய்து வைத்திருந்தவற்றை அவனுக்கு அனுப்பி,

“ஏதாவது சேஞ்ச் பண்ணனுமா?” எனக் கேட்டாள்.

பொறுமையாய்ப் படித்துப் பார்த்து விட்டு, என்ன மாற்றம் செய்ய வேண்டுமென்பதை, அவன் அனுப்ப,

அவன் கூறியவாறு மெய்லை மாற்றியவள், திடீரென,

“இப்போ நான் நல்லா பிரிபேர் பண்ணிட்டு வந்திருக்கேன்” -என்றாள் சம்மந்தமேயில்லாமல்.

அதுவரை English-ல் இருந்த மெசேஜ்களுக்கு மத்தியில் அவளது தங்க்லிஷ் மெசேஜ் வந்து விழவும், அவனும், தங்க்லிஷ்ஷில்,

“என்ன ப்ரிபரேஷன்” என்றான்.

“இந்த மெய்ல் ஓகேவா பாருங்க” – ஃபைனல் ட்ராஃப்ட்டை அனுப்பிப் பட்டென வேலை விசயத்துக்குத் தாவியவளிடம், அவன்,

“கூல்” என அனுப்ப,

“என்ன ப்ரிபரேஷன்னு கேளுங்க” என்றாள்.

“ஆல்ரெடி கேட்டேனே”

“ஈமெய்ல்-ல வேற யாரை இன்க்ளூட் பண்ணனும்?” – வேலைக்குத் தாவினாள் அவள்.

“ஆட் சுந்தர் அண்ட் பரத்”

“90ஸ் கிட்ஸ்க்கு ஏத்த ஒரு பாட்டைத் தான்” – முந்தைய கேள்விக்குப் பதில் கூறினாள் அவள்.

“என்ன பாட்டு?”

“மெய்ல் செண்ட் பண்ணிட்டேன்! ஸ்டீவ் லீவ் போலயே! அவுட் ஆஃப் ஆஃபிஸ் நோட்டிஃபிகேஷன் வருது”

“ஆமா, யு.எஸ் ஹாலிடே இன்னிக்கு”

“ஓஓ!”

“என்ன பாட்டுன்னு கேட்டேன்”

அவன் கேள்விக்குப் பதில் வராது போக, நிமிர்ந்து அவளை நோக்கினான் அவன்.

தடுப்பிற்கு மறுபுறம், லாப்டாப் வெளிச்சம் முகத்தில் அடிக்க, நெரித்தப் புருவங்களோடுக் கண்களைச் சுருக்கியமர்ந்திருந்தவளைப் பார்த்து விட்டு, அவன் தனது லாப்டாப்பின் புறம் திரும்புகையில், நிமிர்ந்து அவனை நோக்கியது அவள் விழிகள்.

டிக்…. டிக்…. டிக்…. என அடுத்தடுத்த நகர்ந்த மூன்று முழு வினாடிகளில்,

முதல் டிக்கின் போது… வலப்புறமாய் நகர்ந்தது அவன் விழிகள்.. தாழ்ந்திருந்த அவள் விழியைத் தீண்டியபடி,

இரண்டாவது டிக்கில்.. இடப்புறமாய் நகர்ந்தது அவள் விழிகள், இமை மூடியிருந்த அவன் விழியைத் தேடியபடி,

மூன்றாவது டிக்கில்… இருவரது விழிகளும் ஒரே நேர்க்கோட்டில்……..!

அவன் விழிகளைச் சந்தித்ததும், தன் பெரிய கண்கள் சிரிப்பில் சுருங்க, அவனது அசையாத கருமணிகளை ஆர்வமாய் நோக்கி,

‘கண்ணாலே மிய்யா… மிய்யா..’ என்று முணுமுணுக்க,

“ஹோய்ய்ய்ய்ய்ய்” -என்றபடித் தனது சேரை சர்ர்ர்ர்ரென நகர்த்தி அவளருகே வந்த பவித்ரா,

‘கிள்ளாதே கிய்யா.. கிய்யா’ எனத் தொடர,

‘உள்ளே ஓர் உய்யா… உய்யா.. மீளயாமையா…” – எனக் கோரசாய் பாடிக் கைத்தட்டிக் குதூகலிக்க..

தன் டெஸ்க்கிலிருந்து எழுந்த சுந்தர், “ஆவணி மாசம் வந்தாலே, அந்தாக்ஷரி ஆரம்பிச்சுட்றீங்க” – எனக் கூறியபடி கடந்து சென்றார்.

ஹை-ஃபைவ் கொடுத்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த இருவரையும் கண்டு “அரை மெண்ட்டலா இதுங்க” – என முணுமுணுத்தபடி நண்பனின் புறம் திரும்பிய அலெக்ஸ், ஆ-வென அவளையே வைத்த கண் வாங்காது பார்த்திருப்பவனைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டான்.

கன்னக்குழியில் நிரம்பி வழிந்த சிரிப்புடன் சசியை நோக்கிய சக்தி, ‘எப்பூடி’-எனப் புருவம் தூக்கி வினவ,

“ம்ம்ம்ம்” – எனப் பெருமிதமாய் உதட்டை வளைத்தவனை உணர்ந்து,

‘சக்ஸஸ்’ – எனத் துள்ளியவளின் புன்னகைத் தனக்கும் ஒட்டிக் கொள்ள,

இதழ் விரிய, முழுப் பற்களையும் காட்டி மலர்ந்து சிரித்தவனைக் கண்டு, அதுவரையிருந்த புன்னகை உதட்டோடு உறைய, அவனது சிரித்த முகத்தையே இமை சிமிட்டாது நோக்கினாள் அவள்.

சிரிக்கும் போது அப்படியே அவன் சத்யாவைப் பிரதிபலித்தான்!

கட்டிப் போட வைக்குமளவிற்கு கவர்ச்சியானப் பளீர்ப் புன்னகை அல்ல அது.

எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி அமைதியை மட்டுமே தாங்கி வரும், மென்ன்ன்மையான சிரிப்பு.

A peaceful smile!

அசைவற்ற விழிகளோடுத் தன்னையே பார்ப்பவளைக் கண்டு, அவன் சிரிப்பை நிறுத்திக் கேள்வியாய்ப் புருவம் சுருக்க,

ஒரு கையால் கன்னத்தைத் தாங்கி, லேசாக முன்னே சாய்ந்தமர்ந்தவள்,

“ரொம்ம்ம்ம்ம்ப சாஃப்ட்-ஆ ஸ்மைல் பண்றீங்க நீங்க” எனக் கூற..

முன்னே,பின்னே இப்படியொரு காம்ப்ளிமெண்ட்டை கேட்டறிந்திராத சசி, ஒரு நொடி அவள் முகம் பார்த்து விழித்துப் பின், படபடத்த மனதுடன்.. இதற்கு என்ன மாதிரியான உணர்வைப் பிரதிபலிப்பதெனத் தன் மூளையோடு பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் புன்னகைத்துக் காட்ட முயன்ற இதழ்களை.. அடக்கத் தெரியாது.. விரித்த நேரம்..

“ஷ்ஷ்ஷ்ஷ்..”-என நெற்றித் தேய்த்தவள்,

“நா..நான் சொன்னதை உங்க மெமரில இருந்து அழிச்சுடுங்க” என்றாள்.

லேசாய்ச் சுணங்கிய மனதோடு மூக்கை விடைத்தவன், அவளுக்குப் பதிலளிக்காமல் பார்வையை ஒரு நொடி விலக்கி, மீண்டும் ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க முயன்ற போது,

“ஹலோஓஓ” என்றாள் அவள் மிரட்டலுடன்.

“அழிச்சுட்டேன்-ங்க”

அவளது மிரட்டலில் தன்னாலேயே அவன் இதழ்கள் அவளுக்கு அடி பணிந்து விட்ட அழகைக் கண்டு,

இதழோரமாய் பூத்த லேசான சிரிப்பு, அவள் அடக்க நினைப்பதற்குள் காது வரை நீண்டு விட, அவள் கன்னக்குழியை ரசனையாய் நோக்கியவனின் இதழ்களிலும் அழகாய் ஒரு புன்னகை.

ஏதோ உறுத்த… ஈ-யென்ற வாயுடனே திரும்பியவன்,

அங்கு அலெக்ஸ், அஷ்ட கோணலாய் முகத்தை வைத்துக் கொண்டு, மகா கேவலமாய்த் தன்னை வெறிப்பது கண்டு பதறி, அவசரமாய் வாயை சாற்றி, காலரை சரி செய்து, ஒன்றுமறியாதவன் போல் அதி தீவிரமாய் கீபோர்டைத் தட்டினான்.

“ஹ்ம்” – என அலட்சியமாய் அலெக்ஸ் சிரிக்கும் சத்தத்தை உணர்ந்து,

கண்ணை இறுக மூடிப் பல்லைக் கடித்தவன், பின் திரும்பி, “ப்ரோ… அந்த ஜான் மேரி ஜான் ஜலஜா…” என்று தொடங்கியதும்,

வெடுக்கென இருக்கையை விட்டு எழுந்த அலெக்ஸ்,

“நீ கண்டிப்பா சென்ட்ரல் ஸ்டேஷன் வாசல்ல பிச்சை எடுப்ப டா! எடுப்ப” – என்று சாபம் விட்டுக் கோபமாய்ச் செல்ல,

பாவமாய்த் தன் புறம் நோக்கியவனிடம், சக்தி வேறு “அப்பிடியும் நடக்க சான்ஸ் இருக்கு” என்றதும்,

‘அடிப்பாவி!, இவளை நம்புனதுக்கு………’ – என்று முறைத்து விட்டு, “ப்ரோ…. ப்ரோ…” என அலெக்ஸின் பின்னே ஓடிச் சென்றான் சசி.

ந்த வாரக் கடைசியில்.. வெள்ளிக்கிழமையன்று..

சம்பத் மற்றும் கீதாவின் தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்தை அம்மன் கோவிலொன்றில் வைத்திருந்தனர் அவர்களது குடும்பத்தினர்.

அங்கு…

தன் முன்னே விடைத்த மூக்குடன், கண்ணீரும்,கம்பளையுமாக நின்றிருந்த சிறுமியை..

“அடி!, கண்ல தண்ணீ வந்துச்சுன்னா, தூக்கிட்டுப் போய் அந்தக் குளத்துக்கு நடுவுல உட்கார வைச்சுருவேன்!, அங்க 2 முதலை இருக்கு. சிக்குனேனா, உன்னைக் கடிச்சுக் குதறிடும்!”- என எக்குத்தப்பான எக்ஸ்ப்ரஷன்களைப் போட்டு அநியாயத்திற்கு மிரட்டிக் கொண்டிருந்தாள் சக்தி.

“உன்…னை உன்னை எங்கப்பாக் கிட்ட சொல்றேன் பாரு” – கோணல்,மாணலாய்ப் பிதுங்கிய வாயுடன் அவளைப் பதிலுக்கு மிரட்டிய சிறுமியிடம்,

“போய்ச் சொல்லு!, எனக்கென்ன பயமா?, தாம்பாளத் தட்டை சுத்தி,சுத்தி ஓடி, நீ மிதிச்சு நசுக்குன திராட்சைப்பழத்துக்கான காசை உங்கப்பாக் கிட்டயே வாங்கிக்குறேன்!” – என்றவள்,

அவளது குடுமியைப் பிடித்து ஆட்டி, “உங்கப்பா, பெரிய.. பெரிய இவுரா” – என அவளை மேலும் அழ வைக்க,

அடித்தது போல் ஆஆஆ-வென வாயைத் திறந்த சிறுமி, ஊருக்கே கேட்குமளவிற்குக் கத்தத் தொடங்கவும்,

“ஏய்ய்ய்ய் மூச்.. மூச்” – என வாயில் விரலை வைத்துக் கண்ணாலேயே மிரட்டிக் கொண்டிருந்தவளைக் கண்டு “ஹே,ஹேய்,ஹேய்ய்ய்” என்று அவசரமாய் அருகே ஓடி வந்தான் சசி.

“கோழிக் குஞ்சு!, ஏன் டா அழுகுற?” – எனக் கேட்டபடியே அருகே வந்துக் குழந்தையை அவன் தூக்குவது பார்த்து,

முகத்தைச் சுருக்கிய சக்தி, “கோழிக் குஞ்சா?, கருமம், என்ன பேர் இது?” – என்று அலட்சியமாய் நின்றாள்.

“சித்தப்பாஆஆஆ, அந்தக்கா என்னைய அடிச்சிருச்சூஊஊஊஊ” – என்று ஓலமிட்டபடியே அழுதவளிடம் பொங்கி,

“ஏய்ய், கழுதக்குட்டி!, பொய்யா சொல்ற?, நான் சும்மா குடுமியைப் பிடிச்சுத் தான ஆட்டுனேன்?” – என அவள் எகிறவும்,

“வலி…க்….கு…து…”-என மீண்டும் வீறிட்டாள் சிறுமி.

“சரி,சரி,சரி, அழுகாத,அழுகாத!” – என்ற சசி, சக்தியின் புறம் திரும்பி எரிச்சலாய் நோக்க, கோபம் கொண்டவள்,

“ஹலோ!, என்ன என்னை முறைக்குறீங்க?, உங்க பாப்பா பொய் சொல்லுது!, தட்டைச் சுத்தி ஓடாத-ன்னு நான் சொல்லியும் கேட்காம, ஒரு கொத்து திராட்சைப் பழத்தை மிதிச்சு நசுக்கிருச்சு” என்றாள் கம்ப்ளைண்ட் ஆக.

“ஏங்க, இது ஒரு பிரச்சனையாங்க?”

“ம்ம்ம், பழம் கொண்டு வந்தது பொண்ணு வீட்டு சைடு ஆன நாங்க!”

“அதனால?”

“ஓடக் கூடாதுன்னு சும்மா மிரட்ட தான் செஞ்சேன்! அதுக்கு அழுகுது” – என்று அவள் முகத்தைச் சுழிக்கும் விதத்தை, ‘அய்யய்ய, இதென்ன இந்தப் பொண்ணு சின்னப்புள்ளத்தனமா பண்ணுது’ என்றெண்ணியவாறு நோக்கி விட்டு,

“நீ அழாத டா கோழிக்குஞ்சு” என்றவன் குரலைத் தணித்து,

“அந்தக்கா ஒரு மான்ஸ்டர்!, எல்லாரையும் பயமுறுத்திக்கிட்டே இருக்கும்!, சித்தப்பா-லாம் அந்தக்காவை பார்த்தாலே ஓடிருவேன்! நீயும் இனிமே கேர்ஃபுல்-ஆ இருந்துக்க சரியா?” – எனக் கேட்க,

“சித்தப்பா, நாம போலீஸூக்கு ஃபோன் பண்ணிருவோமா?, போலீஸ் வந்தா, அந்தக்காவை cage-ல போட்டு தூக்கிட்டுப் போயிடும்” – என்று சிறுமியும் கமுக்கமாய் வினவ,

“சம்பத் ஃபங்க்ஷன் முடியட்டும்! அப்புறமா பிடிச்சுக் கொடுப்போம். சரியா?”

-குசுகுசுவென அந்தச் சிறுமியிடம் உரையாடியவன், அவளது கண்ணைத் துடைத்து, கலைந்தத் தலையை சரி செய்து, அழுகை நிற்க சமாதானம் செய்வதை ஒரு நொடி தூக்கிய புருவங்களுடன் பார்த்தபடி நின்றவள், பின் யோசனையானாள்.

“குழந்தைகளோட உங்களுக்கு நல்லா ஒத்துப் போகும் போலயே” – என்றவளைத் திரும்பி நோக்கி,

“உங்களுக்கு சுத்தமா ஒத்துப் போகாது போல” என்றான் அவன்.

‘ஹ்ம்’ எனத் தோளைக் குலுக்கியவள் “சும்மா தூக்கி வைச்சுக் கொஞ்சி 2 நிமிசத்துல இறக்கி விட்றதெல்லாம் ஒரு மேட்டரா?, அதுங்களுக்கு பசிச்சா சோறு ஊட்டனும், கக்கா போனா கழுவி விடனும், உச்சா போனா டயாபர் மாத்தனும், புட்டில பால் கொடுக்குறது, தொட்டில் ஆட்டுறது, க்ரீப் வாட்டர் ஊத்துறதுன்னு நிறைய்ய்ய்ய்ய இருக்கு” என்றாள்.

“ஆமா!, நமக்கும் இதெல்லாம் பண்ணி தான வளர்த்தாங்க?”

“நீங்க இதெல்லாம் பண்ணுவீங்களா?”

“என்ன கேள்வி இது?”

“ப்ச், பதில் சொல்லுங்க”

“தேவைப்பட்டா பண்ண வேண்டியது தான்” – என்றவன், “சித்தப்பாஆஆ, மான்ஸ்டர் கூட பேசாத, வா போலாம்” – என சிறுமி தன் காலரைப் பற்றியிழுத்ததும்,

“மான்ஸ்டரா?”-என நெற்றிக் கண்ணைத் திறந்தவளிடமிருந்துத் தப்பித்து அவசரமாய் நகர்ந்து விட்டான்.

அதன் பின்பு ஃபங்க்ஷன் முடிந்து கிளம்பும் நேரம், அனைவரும் கோவில் வாசலில் நிற்க, தன்னருகேயிருந்த சக்தியின் கன்னத்தை வழித்த விசாலம்,

“அழகு பெத்த புள்ளை டா இது!, எனக்குத் தான் கொடுத்து வைக்காம போச்சு” என்று வருத்தமாய்க் கூற,

தன்னைப் போல, தன் அன்னையும் அவளிடம் வழிவதை ஓரக்கண்ணில் பார்த்தபடி நின்றிருந்தவன், அவர் பேசிய பேச்சில் அதிர்ந்து,

“ம்மாஆஆ” என அடிக்குரலில் அழைத்து அவர் கையைப் பற்றி அழுத்தினான்.

“சரி, இர்றா” என்றவர், “உங்கம்மாகாரியை இழுத்துக்கிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வா டா கண்ணு!, இன்னைக்கு வரேன், நாளைக்கு வரேன்னு இழுத்தடிச்சுட்டு கிடக்குறா அவ” என்றார்.

“நீங்களும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க அத்தை, உங்க பையனைக் கூப்பிட்டுக்கிட்டு” – என்றாள் சக்தி வேண்டுமென்றே அவனை வம்பிழுக்கும் நோக்கத்துடன்.

“வர்றேன் கண்ணு” – என்றவர் பெருமூச்சோடு அவள் கையைப் பற்றிக் கொண்டார்.

விசாலத்தின் பேச்சும்,எண்ணமும் சிரிப்பைக் கொடுத்தாலும், அடக்கி.. அடக்கமாய் நின்றாள் சக்தி.

“ம்மா, வேன் வந்துருச்சு, வா வா” என்ற சசி, அவசரமாய்த் தன் அன்னையை, அவளிடமிருந்துப் பிரித்து இழுத்துக் கொண்டு போய் வண்டியேற்றி விட்டான்.

“இவன் ஒருத்தன், அவசரத்துக்குப் பொறந்தவன்” எனத் திட்டியபடி ஏறியவர், ஜன்னலோர சீட் ஒன்றில் அமர்ந்ததும், வெளியிலிருந்து ஜன்னலருகே சென்று நின்றவன்,

“அந்தப் பொண்ணுக் கிட்டப் போய் உளறிட்டிருக்க?, லூசாம்மா நீ?” எனக் கடிந்து கொண்டான்.

“பாசமான பொண்ணு டா சசி!, ப்ச், வயித்தெரிச்சலா இருக்கு டா!” – என விசாலம் புலம்புவதைக் கேட்டு,

“உனக்கு மட்டுமா?” – என ஃப்ளோவில் சொல்லி விட்டவன்,

அன்னை தன்னை ஒரு மாதிரி பார்ப்பது கண்டு பதறி, “அது….” என்று திணறுகையில்,

பக்கத்திலிருந்த வேன் அருகே கோகிலா,

“ஏய் சக்தி, அந்த ஃபோனை நோண்டிக்கிட்டே நிற்காம, சித்தி கைல இருந்து அந்தத் தாம்பாளத்தை வாங்கு டி!,” என்று திட்டுவதும்,

அதற்கு அவள் மொபைலிலிருந்துத் தலையை நிமிர்த்தாது, “தூக்கிட்டு வா சித்தி!, அப்பத் தான் உடம்பு குறையும்” என்று நக்கலாக பதில் கூறுவதையும் கேட்டு..

தன்னை மீறிப் புன்னகைத்து, சிகப்பு நிற சுரிதாரில்.. சில்லென நிற்பவளை ரசனையாய் நோக்கினான்.

அவன் பார்வை போகும் திக்கைக் கண்ட விசாலம் மகனிடம்,

“உனக்கும் பிடிச்சிருக்குத் தான் போலயே டா சசி” என்று வினவ,

“ரொம்பப் பிடிச்சதால தான்ம்மா வேண்டாம்ன்னு சொல்றேன்” என்றவனைக் கண்டு அவர்,

“என்னா டா சொல்ற?” என்று பரபரப்பாக,

“ப்ச், ம்மா, சும்மா கண்டதையும் பேசி, என்னை உசுப்பேத்தாத!, நான் ஏற்கனவே உனக்காக ஜான் மேரி ஜான் ஜலஜா-ன்னு ஒரு பொண்ணு பார்த்து வைச்சுருக்கேன்” – என்றான் பக்கத்து வேனைப் பார்த்தபடி, உளறலாய்.

“ஜலஜாவா, அது யாரு டா?”

“ஜானிடர்”

“ஜானிடருன்னா?”

“ஜ..ஜ..ஜன்னல் செய்றவங்கம்மா”

“ஆசாரியா டா?, நம்மாளுக இல்லையா?, டேய்… என்னாடா சொல்ற?, இதெல்லாம் எப்பிடி டா ஒத்து வரும்?, ஏன் டா இப்பிடி பண்ற?” – இன்ஸ்டண்ட் ஆக புலம்பத் தொடங்கி விட்ட அன்னையை அடக்க முடியாது அவன்,

“ப்ச், முதல்ல வீட்டுக்குப் போம்மா.. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்று சமாதானப்படுத்த முயல,

“எப்பப் பேசுனாலும் என்னால ஒத்துக்க முடியாது டா!, என் வயித்துல பொறந்ததுக பூரா இப்பிடியா பண்ணித் தொலையும்ங்க!, கட்டைல போறவ, எவ அவ! பேரைப் பாரு ஜலஜாவாம் ஜலஜா…” – என விசாலத்தின் புலம்பல் காற்றோடு காற்றாய் போவதை.. அதுவரை தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

அன்றிரவு சக்தியின் வீட்டில்….

விசேஷத்தில் மீந்து விட்ட சாம்பாரை, கீதாவின் அன்னை கட்டிக் கொடுத்து விட்டிருக்க, அதைத் தொட்டுக் கொண்டு தோசையை விழுங்கிக் கொண்டிருந்த சக்தியைக் கண்டபடி கோகிலம் தன் கணவரிடம்,

“வைதேகியோட கொழுந்தியா மகனை சக்திக்குக் கேட்கலாமான்னு சேகர் என் கிட்டக் கேட்டாரு!” என்றார்.

“யாரு மணிமாறன் மகனையா?”

“ஆமா! கொஞ்சம் பெரிய இடம்தானாம்!, இருந்தாலும் பேசிப் பார்க்கலாம்ன்னு சொல்றாரு”

“பெரிய இடம்ன்னா, எவ்ளோ ஏக்கர் வைச்சிருக்காங்களாம்?” – அன்னை,தந்தையின் பேச்சில் இடை புகுந்தபடி சக்தி.

“ம்ம்ம்ம்ம், உங்கப்பாவும்,நீயும் எவ்ளோ ஏக்கர் டி வைச்சிருக்கீங்க?”

“அய்யய்யய்ய, உனக்கு வேற வேலையே இல்லையாம்மா?”

“கல்யாண வயசுல பொண்ணை வைச்சிருக்கிற எனக்கு, இதை விட வேற என்ன டி பெரிய வேலை”

“கரெக்ட்டு தான்! ஒத்துக்கிறேன்!, ஆனா… இதுக்கு முன்னாடி விசாலம் அத்தை மகனைக் கேட்டு ரொம்பத் தீவிர முயற்சில இறங்கியிருந்த?”

“அது தான் ஒத்து வரலையே டி”

“யாருக்கு?”

“உனக்குத் தான்”

“அப்டின்னு நான் எப்போ சொன்னேன்?”

“என்னடி சொல்ற?” – கண்ணை விரித்தபடி கோகிலம்.

“ப்ச்,ப்ச்,ப்ச், உண்மையை மட்டும் தான் பேசனும் கோகிலாம்மா. ஒத்து வராதுன்னு சொன்னது நானா?, அவங்களா?”

“அவங்க தான்”

“அப்ப சரி! நீ இந்தப் பெரிய்ய்ய்ய இடத்தையே பாரு”

“…………” – மகளை ஒரு மாதிரி பார்த்தபடி கோகிலம்.

“ஆனாலும் கோகிலாம்மா, உங்கப் பொண்ணைப் பார்த்து அவங்க, வேணாம்ன்னு சொன்னதைக் கேட்டும், நீ சும்மாயிருந்திருக்க பார்த்தியா?”

“அவன் உனக்காகத் தான டி வேணாம்ன்னு சொன்னான்?”

“அப்ப ரிஜெக்ட் பண்ணது நானாத் தான இருந்திருக்கனும்?”

“ஏய்ய்ய் என்னா டி சொல்ற?”

“மிஸ்டர்.மணிமாறன் சன்-ஓட FB profile தெரியுமா உனக்கு?”

“எனக்கெப்பிட்றி தெரியும்?”

“வேணாம்ன்னு சொல்லிட்டு இந்த விசாலம் அத்தை, வக்கணையா என்னை வீட்டுக்குக் கூப்பிட்ருக்கு பாரேன்! அதுக்கு எவ்ளோ ‘இது’ இருக்கனும்” - ஃபோனிலேயே முனைப்பாக இருப்பது போல் அவள்.

“அவளை ஏன் டி திட்டுற?”

“மணிமாறன் சன் பேர் என்ன சொன்னீங்கப்பா?, மகேந்திரனா?”

“நான் சொல்லவேயில்லயேம்மா” – என்றவரைக் காதில் வாங்காமல்,

“ம…கே…ந்திர…ன்” – என ஃபோனில் டைப் செய்தவள்,

“இனி அந்த விசாலம் அத்தைக் கூட நீ பேச்சு வைச்சுக்காதம்மா!, உன் மகளைப் போய் வேணாம்ன்னு சொல்லிருச்சு பாரேன்” – எனக் கூறியபடியே.. அன்னையின் ‘என்ன தான் பிரச்சனை இவளுக்கு’ என்ற குழப்பம் சூழ்ந்த முகத்தைப் பார்த்து விட்டு, நமுட்டுச் சிரிப்புடன் தன் அறைக்குச் சென்று விட்டாள்.

“கோகிலா…” – சாம்பாருக்குள் சோற்றைப் போட்டுப் பிசைந்து கொண்டிருந்த மனைவியை மெல்ல அழைத்த சென்னியப்பன்,

“நீ ஏன் விசாலம் மவனையே, மறுபடி சக்திக்குக் கேட்கக் கூடாது?” எனக் கேட்டார்.

அப்பனும்,மகளும் தன்னைக் குழப்புவது கண்டு கோகிலம் தலையைப் பிடிக்கையில் விசாலத்திடமிருந்து ஃபோன் வந்தது.

“ஹலோ” என்றவரிடம் அவசரமாய் விசாலம்,

“அடியேய் கோகிலா, என் மவனுக்கு, உன் மவளைக் கட்டிக் கொடுக்குறியாடி?” – எனக் கேட்டார்.

துணுக்… துணுக்.. துணுக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….

ஃபேஸ்புக் காண்டாக்ட் ஒருத்தியின் மூலமாக சத்யாவின் வீட்டு அட்ரஸைக் கண்டுபிடித்து, அவள் இல்லத்திற்கு சக்தி, சென்று திரும்பிய நாள் அன்று இரவு….. சக்தியின் வீட்டில்..

கோகிலாவும்,சென்னியப்பனும் நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்திருக்க, உறக்கம் வராதுத் தன்னறையில் புரண்டு கொண்டிருந்த சக்தி, செல்ஃபோனைக் கையில் எடுத்து மணி பார்த்தாள்.

11.00 PM – என்று காட்டியத் திரையை உற்று நோக்கியவளுக்கு,

அந்த 11 மணி, பதினோறு மணி, பதினோறு மணி, பதி….னோறு ம…ணி.. – என்று பல குரல்களில், பல வடிவத்தில் அவள் மூளையைத் தாக்கி டிஸ்டர்ப் செய்ய, புருவம் சுருக்கியவள், பின் மெல்ல எழுந்து கிட்சனுக்குச் சென்றாள்.

அடுப்படி விளக்கைப் போட்டு, ஃப்ரிஜ்ஜிலிருந்த மாவை வெளியிலெடுத்து அடுப்பில் தோசைக் கல்லை ஏற்றினாள்.

மாவுக் கரண்டியுடன், அடுப்பின் முன்னே நின்றவளின் முகத்தில், மகாதீவிரமான பாவனை!

‘வாழ்க்கைல முதன் முறையா தோசை ஊத்துறேன்!, கண்டிப்பா வெற்றி கிடைக்கனும்!’ – என்று அவள் வேண்டிக் கொண்ட நேரம்,

சட்டிக் காய்ந்து புகை வரத் துவங்க, கரண்டியில் மாவை அள்ளி, சட்டியில் வட்டமாகப் பரப்பினாள்.

ஓவராக சூடேறிப் போயிருந்த சட்டி, மாவைத் தன் இழுப்பிற்கு இழுத்துக் கொள்ள,

‘ப்ச், ஃபர்ஸ்ட் தோசையே ஃப்ளாப் ஆயிடுச்சே’ – என்றெண்ணியவள், அது வெந்ததும் தூக்கி எறிந்து விட்டு, அடுத்தடுத்து தோசைகளை ஊற்றினாள்.

சுட்ட ஆறு தோசையும், ஆஆஆ-வென மரணமடைந்து விட, ‘ப்ச்’ என உச்சுக் கொட்டி அடுப்பை அணைத்து, இடுப்பில் கை வைத்துப் பெருமூச்செறிந்தவளின் காதில், சத்யா கூறிய,

‘நைட் பதினோறு மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், என்னைய எழுப்பி விட்டு தோசை ஊத்தித் தர சொல்லுவான் சசி’ – என்ற வாசகமே ரிபீட் மோடில் ஓட,

“பதினோறு மணிக்கு வீட்டுக்கு வர்றவன், வெளியவே சாப்பிட்டு வர வேண்டியது தான?, வீட்ல இருக்கிறவங்களை எழுப்பி விட்டு ஏன் உயிரை வாங்குறான்” – என்று தனக்குத் தானே பேசிக் கொண்டுப் பின்,

“நாளைக்கு முதல் வேலையா அம்மாக்கிட்ட, தோசை ஊத்த ட்ரெயினிங் எடுக்கனும்! “ – என்றெண்ணியவாறுத் தன் அறையை நோக்கிச் சென்றாள்.