அத்தியாயம் - 5

வெகு நாளைக்குப் பிறகு அன்று மார்னிங் ஷிஃப்ட் என்பதால், அதிகாலையிலேயே அலுவலகத்தை அடைந்திருந்தான் சசிதரன்.

இரவு முழுதும் மழை பெய்து ஓய்ந்ததற்கான அறிகுறியாக சாலையெங்கும் நீரின் தடம்!

ஹெல்மெட்டைத் தாண்டி காதைத் தீண்டிய சில் காற்று சிலிர்க்கச் செய்ததில், உடலைக் குலுக்கி வண்டியிலிருந்து இறங்கியவன், தனக்கு முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு லிஃப்ட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சக்தியைக் கண்டபடி, கலைந்திருந்த முன்னுச்சி முடியைக் கோதினான்.

சைட் மிர்ரரை நோக்கிக் குனிந்திருந்தவன், கண்ணாடியின் மீது ஒரு பார்வையும், சக்தியின் மீது ஒரு பார்வையும் வைத்துக் கொண்டு, தலையைச் சரி செய்தபடி,

“சிக்காத சிட்டொன்னு கையில் வந்தா… திக்காம பாட்டு வரு…ம்!” – என்று முடிப்பதற்குள்,

“எங்க, மறுக்கா பாடு” – எனக் கூறி அவன் பின்னால் வந்து வண்டியை நிறுத்தினான் அலெக்ஸ்.

நண்பனின் குரலைக் கேட்டதும், அலெர்ட் ஆகி,

“சிறுக்கி சிரிச்சு வந்தா சீனா தானா டோய்” – எனப் பாட்டை மாற்றி பொறுமையாய்த் திரும்பியவன்,

“ப்ரோ! நீங்களா!” என வேண்டுமென்றே ஆச்சரியப்பட்டு,

“மார்னிங் ஷிஃப்ட்ன்னாலே, மண்ட வலி வருதுன்னு சொன்னீங்களே ப்ரோ” என்றான் பையைத் தோளுக்கு மாற்றியபடி.

“ஹ!” – மொசை புடிக்குற நாய், மூக்கை மறைக்க என்னல்லாம் பேசுது பாரு!, என அலட்சியமாய் சிரித்தபடி அலெக்ஸ்.

“நான் வேணும்ன்னா, நம்ம கோமதியக்காட்ட இருந்து கோடாரித் தைலம் வாங்கித் தரட்டுமா?”

“பேசுங்க ப்ரோ!நீங்க பேசுங்க” – ‘நீ நடத்து டா ராசா’ ரீதியில் அலெக்ஸ்.

“ஏன் ப்….ரோ?”

“எப்பிடியெப்படி?, சிக்காத சிட்டா?, சிட்டுக்கு ரெக்கை இருக்கு ப்ரோ!, எப்ப வேணாலும் ‘உஷ்ஷ்ஷ்ஷ்’-ன்னு பறந்துடும்” – சைகை செய்து காட்டியவனைக் கண்டு கொள்ளாது,

“என் கைல சிட்டெல்லாம் இல்ல ப்ரோ! சிகரெட்டு தான் இருக்கு. உங்களுக்கும் வேணுமா?” என்றான் சசி.

“வேணாம்! புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடு”

“பார்றா”

-தொணத் தொணவெனப் பேசியபடி நடை போட்ட இருவரும், சக்தி ஏறியிருந்த லிஃப்ட் மூடுவதற்குள் பொத்தானை அழுத்தி, தாங்களும் ஏறினர்.

“என்ன ரெட்-டூ மூக்குத்தி, வெளிய குளிர் அதிகம் போலயே! மூக்கு விறைச்சு, மூனு செண்டிமீட்டர் முன்னால நிக்குது?” – அலெக்ஸ் வம்பிழுத்ததும்,

“பல்லை உடைச்சுருவேன்” – என்று சக்தி எகிற,

“கா…ம் டவுன்” – என ராகம் பாடியபடி 9-வது பொத்தானை சசி அழுத்துகையில், அவசரமாய் மூன்று சக்கர வண்டியொன்று உள்ளே ஏறியது.

வண்டியோடு வஞ்சியொருத்தியும்!

மேல் நோக்கி நகரத் தொடங்கியிருந்த லிஃப்ட்டின் உள்ளே.. எதிர்ப் புறத்திலிருந்த கண்ணாடி நால்வரைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

டொய்ங்! டொய்ங்! டொய்ங்! டொடொய்ய்ய்ங்!

டொய்ங் – பின்னால் சாய்ந்து, கையைக் கட்டிக் கொண்டு தனக்கு முன்னால் நின்றிருந்த இருவரையும் ஒரு தினுசாய்ப் பார்த்தபடி சக்தி.

டொய்ங்,டொய்ங் – ஜொள்ளு வடித்துக் கொண்டிருக்கும் வாயைத் துடைக்க மறந்து, ஜென் நிலையில் சசியும்,அலெக்ஸூம்.

டொடொய்ய்ய்ங் – ‘நித்யானந்தா மோடில்’ நிற்கும் இருவரின் நிலை புரியாது, நிர்மலமான முகத்துடன் ஜ..ல..ஜா.

“என்ன ப்ரோ, பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்ததும், பக்கவாதம் வந்த மாதிரி நிற்குறீங்க?” – சசியின் காதோரம் மெல்லமாய் அலெக்ஸ்.

“பச்சைக் கலர் மூக்குத்தி ப்ரோ” - பரவசமாய் சசி.

“மூக்குத்தின்னாலே, நீங்க மூர்க்கமாயிடுறீங்க!, என்ன ப்ரோ”

“அது…. மூக்குத்திக்கு, மூளையைத் தாக்குற சக்தி இருக்கு ப்ரோ!, அதான்”

“அதே மூக்குத்திக்கு, முக்காடு போட வைக்குற சக்தியும் இருக்கு ப்ரோ” – அடக்கமாய்க் கூறிய அலெக்ஸை ஆச்சரிய பாவனையுடன் நோக்கி,

“ஃபாக்ட்டு ப்ரோ!” எனக் கையைக் குலுக்கிய சசி,

“நம்ம அடுத்தக்கட்ட நடவடிக்கை, என்ன ப்ரோ?” எனக் கேட்டான்.

“வண்டில இருக்குற மாப்-ஐ எடுத்து நான் தரையை மொழுகி விட்றவா?”

“அப்ப நானு?”

“நீங்க, ஹார்பிக்கை எடுத்துட்டுப் போய், கக்கூஸை டேக்-கேர் பண்ணுங்க ப்ரோ”

“ப்…..ரோ….”

“பின்ன, க்ளீன் பண்றது ஜலஜா-ங்குறதுக்காக, ஜக்கூசியா வைச்சிருப்பாய்ங்க?”

-முணுமுணுவென இருவரும் பேசிக் கொள்வது கேட்காததால்,கடுப்பான சக்தி, ‘அப்பிடி என்ன பேசுறாங்க’என்றெண்ணியபடி, மெல்ல முன்னே நகர்ந்து, ஒட்டி நின்றிருந்த இருவரது முகங்களுக்கிடையே காதை வைப்பது கண்டு,

“ஷ்ஷ்ஷ், இந்த ரெட்-டூ கலர் மூக்குத்தியை, கார்னர் கண்ணுல பார்த்தாக் கூட காண்டாகுது ப்ரோ” – என்ற அலெக்ஸ், தன் கை முட்டியைக் கொண்டு அவள் முகத்தைத் தாக்கியதில்,

‘ஆஆஆஆ’-வென மூக்கைப் பற்றியபடி மூலையில் ஒன்றி விட்டாள் சக்தி.

ன்பதாம் தளத்தில் இறங்கிய ஜலஜாவின் பின்னே செல்ல முயன்ற இருவரையும் தடுத்து நின்றபடி,

“ஒரேய் சசி, வின்னாவா?, டீம் அவுட்டிங் குறிஞ்ச்சி டாக்(talk) ஜருகுத்துந்தி” என்றான் ரவி.

“பழைய்ய மேட்டரை பரவசத்தோட சொல்றான் பாரேன்!, ரேய் ரவி, உனக்கு இப்புடு தான் தெலுசா டா?” – சலிப்பாய் அலெக்ஸ்.

“ரேய், ஈ வீக் எண்ட் வெல்லேதானிக்கி ப்ளான் சேஸ்துன்னாரு ரா”

“அவுனா பய்யா?, எக்கடக்கி?” – இருவரையும் தாண்டி முன்னே வந்து நின்று, ஆர்வமாய் ரவியிடம் வினவினாள் சக்தி.

“கேரளா அனி செப்துன்னாரு! 3 டேஸ்!, நுவ்வு வஸ்தாவா?”

“மறி??, தப்பகுண்ட வஸ்தா!, நேனு தீனிகோசம் வெய்ட்டிங்” – என அவள் ரவியிடம் கூறுவதைக் காதில் வாங்கிக் கொண்டான் சசி.

தன் பின்பு ரவி unofficial-ஆகக் கூறிய விசயத்தை அன்றைய டீம் மீட்டிங்கில் official-ஆக அறிவித்தார் சுந்தர்.

“கைஸ், ஃபைனலி நீங்க ஆவலோடு எதிர்பார்த்த டீம் அவுட்டிங்குக்கு ப்ராஜக்ட் ஒரு வழியா ஃபண்ட் பண்ணிடுச்சு!” – என்று கூறியதும்,

“ஹேஏஏஏஏஏ” – எனக் கைத்தட்டலும், விசில் சத்தமும் மீட்டிங் அறையைப் பிளக்க வைத்தது.

“கோவா போலாம் சுந்தர்”

“வேணாம், வேணாம் லடாக் போலாம்”

“வாயை மூடுங்க டா!, அவுரு கடைசில மகாபலிபுரம்ன்னு சொல்லிடப் போறாரு”

ஆளாளுக்கு ஒவ்வொன்று கூற, “சைலன்ஸ்! சைலன்ஸ்” என்ற சுந்தர்,

“இந்த வீக், லாங்க் வீக் எண்ட்-ன்றதால, 3 டேஸ் ட்ரிப்-ஆ நாம கேரளா போறோம்” என்றார்.

“ஊஊஊஊஊஊஊஊ”-ஆர்ப்பரித்தக் கூட்டத்திடம், மூன்று நாள் திட்டம் குறித்தும், தாங்கள் செல்லவிருக்கும் இடங்களைப் பற்றியும் விவரித்த சுந்தர், “யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!” என்று கூற,

“ஆமாமா!, வர மாட்டேன்னு சொல்றவங்களுக்கெல்லாம் 100 ரூபா ஃபைன்” என்றான் அலெக்ஸ்.

“மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் போபன் & சசி கிட்டக் கேளுங்க!, திஸ் இஸ் கோன்ன பீ ஃபன் ஃபார் ஷ்யூர்!, சோ, டோண்ட் மிஸ் இட்” என்று விட்டு வெளியேறினார் சுந்தர்.

“டேய் சசி, இது உன் ஐடியா தான?, ட்ரெக்கிங்,அது,இதுன்னுலாம்?” – கம்ப்ளைண்ட் ஆகக் கேட்ட சுஷ்மாவிடம்,

“ஏன் சுஷ் மம்மி?, உங்களுக்கு ஓகே இல்லையா?” – சிரித்தபடி வினவினான் சசி.

“ட்ரெக்கிங் எல்லாம் எனக்குக் கஷ்டம் டா”

“ரைட்டு விடுங்க!, ட்ரெக்கிங் ப்ளான் பசங்களுக்குத் தான்!, நீங்க டேம்,வாட்டர் ஃபால்ஸ்ன்னு சுத்திட்டு ரிசார்ட்ல காலாட்டிக்கிட்டு சன் பாத் எடுக்கலாம்!, நோ இஷ்யூஸ்”

“அப்போ ஓகே”

“ரேய் சசி, நீ இன்ஸ்டக்ராம் பேஜ்-லோ பனசுரா ஹில்ஸ் ஃபோட்டோஸ் உந்தா ரா?” – ரவி.

“இல்ல டா!, நானும் இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் போறேன்”

“மறி, இதி ஏன்ட்டி ரா?”

“இது அதிரப்பள்ளி டா”

“அவுனா?” – என்ற ரவியின் கையிலிருந்த ஃபோனில், ‘Moon and Rain’ என்றிருந்த இன்ஸ்டாக்ராம் பேஜை அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுத் தானும் இடைபுகுந்தாள் பவித்ரா.

“Moon and Rain-ஆ? யார் பேஜ் இது?” – பவித்ரா.

“இது சசியுடே பேஜ் ஆனு! பவித்ரைக்கு அறியல்லே?” – ரவியினருகே நின்றிருந்த போபன்.

“தெரியாதே எனக்கு!, எங்க இங்க கொடுங்க” – என்ற பவித்ரா, ரவியுடைய ஃபோனைப் பிடுங்கி, சுஷ்மாவிடம் வளவளத்துக் கொண்டிருந்த சக்தியிடம் சென்று நீட்டினாள்.

“ஏய் சக்தி, இங்க பாரேன்!, சசியண்ணா இன்ஸ்டா பேஜ் எல்லாம் வைச்சிருக்காரு!” – என்று பவித்ரா நீட்டிய பேஜைக் கண்டு புருவம் சுருக்கினாள் சக்தி.

Moon and Rain-என்றிருந்த பேஜ்-க்குக் கீழ் நிறைய வைல்ட் லைஃப் ஃபோட்டோஸ்.

எலிக்குட்டியிலிருந்து எருமைக்குட்டி வரை, பல்லியிலிருந்து பாம்பு வரை சிங்கம் முதல் சிற்றெறும்பு வரை பற்பல உயிரினங்கள், பேஜ் முழுதையும் ஆக்கிரமித்திருந்தன.

“இதெல்லாம் நீங்க க்ளிக் பண்ணுனதா சசிண்ணா?,நிஜமாவா?,நம்பவே முடியல!” என்று ஆச்சரியம் காட்டிய பவித்ராவை சசி முறைத்துப் பார்த்தான்.

“ஆமா-ண்ணா!, உங்களுக்குள்ள இப்பிடியொரு திறமையா?, ச்ச!, அதுவும் 20K followers வைச்சிருக்கீங்களேண்ணா!”.

“அதுல 10K என் சொந்தக்காரங்க-ம்மா”

“அய்யய்ய!,” என்ற பவித்ரா “சக்தி கூட நல்லா ஃபோட்டோ எடுப்பா தெரியுமா?” என்றாள்.

“எது?, சன் கிஸ்ட்ன்னு போன வாரம் ஸ்டேட்டஸ்ல ஒரு ஃபோட்டோ வைச்சிருந்தியே அதுவா?” – சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனான் அலெக்ஸ்.

“அது தான்!, ஏன், அந்த ஃபோட்டோவுக்கு என்ன குறைச்சல்?”

“ஹா ஹா ஹா” – லேப்டாப்பைத் தட்டிக் கொண்டிருந்த சசி.

“ஹல்ல்லோஓஓஓ” – எரிச்சலாய் சக்தி.

“ஐயோ! சாரிங்க!” – அவசரமாய்க் கூறி, வாய் மூடிக் கொண்டவன் கண்ணால் சிரிப்பது கண்டு கடுப்பானாலும், தனது இன்ஸ்டா அக்கௌன்ட்டிலிருந்து ‘மூன் அண்ட் ரெய்ன்’ பேஜ்க்கு ஃபாலோ பட்டனைக் கொட்டினாள் சக்தி.

அன்று முழுதும் ஆளாளுக்கு மாறி,மாறி வந்து ட்ரிப் குறித்து சசியிடம் உரையாடிவாறு இருக்க, அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த சக்தி, மாலை நெருங்கும் வேளை, கையில் காஃபி கப்புடன் அவனருகே சென்றாள்.

“காஃபி குடிக்கல?” – தன் பின்னே நின்றபடி வினவியவளைத் திரும்பி நோக்கியவன், இல்லையென்பது போல் தலையாட்டிப் பின் என்ன-என்பது போல் நோக்கினான்.

ஒரு நொடி பதில் கூறாது, அவன் டெஸ்க்கில் சாய்ந்து நின்று ஒரு மடக்குக் காஃபியை உறிஞ்சியவள், பின் கப்பைக் கீழே வைத்து விட்டுத் தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோனைக் கையிலெடுத்து அவன் முன்னே நீட்டி,

“இந்த ஃபோட்டோ எனக்கு வேணும்” என்றாள்.

அவனது ‘மூன் அண்ட் ரெய்ன்’ பேஜ்ஜிலிருந்தப் புகைப்படம் அது!

மஞ்சள் வெயில் முகத்தில் பட படுத்தவாக்கிலிருந்த பெண் சிங்கத்தின் பக்கவாட்டுத் தோற்றமும், அதை நோக்கி முன்னேறி வரும் ஆண் சிங்கத்தின் முகமும்!

படத்தையும்,அவளையும் ஒரு முறை பார்த்து,

“கா..காப்பிரைட்ஸ் இருக்குங்களே” என்றான் சசி.

“எவ்ளோ கொடுத்தா, படத்தை எனக்குத் தருவீங்க?” - கையைக் கட்டிக் கொண்டு, அவனை நேராய் நோக்கியபடி அவள்.

“உ…உங்க மூக்குத்தி என்ன விலை?” – தயக்கமாய் அவன்.

“ஏன்?”

“ஏன்னா, உங்க மூக்குத்தி மாதிரி தான்ங்க என் படமும், அதுக்கு விலைமதிப்பே கிடையாது” – முணுமுணுத்தவனிடம் அவள்,

“கேட்கல” என்று கூற,

“ம்க்க்கும்” எனத் தொண்டையைச் செருமி நிமிர்ந்தமர்ந்தவன், முகத்தைச் சாதாரணமாக்கி,

“ஒரு ரூபா கொடுங்கங்க” என்றான்.

உடனே தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவன் முன்னே நீட்டியவள், பின் அவசரமாய் கையை மடக்கி,

“இதை வைச்சுக்கிட்டு, ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்’-ன்னுலாம் பாடக் கூடாது” என்று கூறியதும்,

பட்டெனத் தன் இருக்கையிலிருந்து எழுந்த சசி, தனக்கு வெகு அருகே நின்றிருந்தவளின் கையிலிருந்த நாணயத்தைப் பிடுங்கித் தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் பதுக்கியபடி,

“அதெல்லாம் பொண்ணுங்க பாடுற பாட்டுங்க!, எங்களுக்கு வேற இருக்கு” – என்று விட்டு அவளைக் கடந்து சென்றான்.

தன் பின்பு காஃபடீரியாவில் ஈவ்னிங் ஸ்நாக்ஸை முடித்துக் கொண்டு அவள் டெஸ்க்கிற்குத் திரும்புகையில், சசியும்,அலெக்ஸூம் கடையை சாற்றிக் கொண்டிருந்தனர்.

“ஏய், ரெட்டூ மூக்குத்தி, நீயும் மார்னிங் ஷிஃப்ட் தான?,வீட்டுக்குக் கிளம்பல?”

“இதோ கிளம்பிட்டேன்” – என்றவள் நின்றபடியே லாப்டாப்பைத் தட்டிக் கொண்டு,

“அந்தத் தாமஸோட இஷ்யூவை என்ன பண்றது?” என சசியிடம் கேட்க,

“டேய் சசி, நான் ரெஸ்ட் ரூம் கிட்ட நிற்குறேன்! நீ வா” – இடையில் அலெக்ஸ்.

“ம்ம்” – என அலெக்ஸிடம் பதிலளித்த சசி,

“பென்டிங்ல போடுங்க, நாளைக்கும் மானிடர் பண்ணிட்டு அப்டேட் பண்ணிக்கலாம்” – என்றான்.

“ஹ்ம்ம்” என்று விட்டுத் தானும் சைன் அவுட் செய்து, தோள்ப்பையினுள் லாப்டாப்பை வைத்தவளின் பார்வை, சசியின் டெஸ்க்கிலிருந்தத் தனது காஃபி கப்பை நோக்கிச் சென்றது.

காலியாக இருந்தக் கோப்பையைக் கண்டுக் கண்ணைச் சுருக்கியவள்,

‘ஒரு சிப் மட்டும் தான் குடிச்சேன்! நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் பவித்ரா கூப்பிட்டான்னு காஃபடீரியா போயிட்டேன்!, அப்புறம் எப்பிடி கப் காலியாச்சு?’

லாப்டாப் பையைத் தன் தோளுக்கு மாற்றியபடி அவள் புறம் நிமிர்ந்த சசி, யோசனையுடன் காஃபி கப்பைக் கண்டபடி நிற்பவளைக் கண்டு ஜெர்க் ஆகும் நேரம், சந்தேகப் பார்வையுடன் அவனை நோக்கினாள் அவள்.

“வ..வ..வந்து.. க..க..கப் உங்களுதுங்களா?” – தந்தியடிப்பதைத் தடுக்க முடியாத, தத்தியாய் அவன்.

“கப் மட்டுமில்ல!, உள்ள இருந்த காஃபியும் என்னுது தான்”

மாட்டிக் கொண்ட தினுசில் முகத்தைத் திருப்பிப் பிடரியைக் கோதியபடி,

“ஆனா பால்,சக்கரை,காபி பவுடரெல்லாம் கம்பெனியோடதுங்க” என்றான்.

“அதனால?” – மூக்கை விடைத்தவளைக் கண்டு, அவசரமாய்க் கப்பைக் கையிலெடுத்து,

“நா..நானே கழுவி வைச்சுடுறேன்ங்க” – எனக் கூறியபடி ஓடி விட்டான் சசி.

அன்றிரவு சக்தியின் இல்லத்தில்…..

“ஏன் டி காலங்கார்த்தால 4 மணிக்கு எந்திரிச்சு ஆஃபிஸ் போறவ, நைட் கொஞ்சம் சீக்கிரம் தூங்குனா தான் என்ன?”

-கையில் செல்ஃபோனுடன் சோபாவில் சாய்ந்திருந்தவளைக் கடிந்து கொண்டிருந்த கோகிலாவை, சக்தி கவனித்ததாகவே தெரியவில்லை.

“இந்தப் பாத்திரத்தையாவது கழுவிக் கொடேன் டி”

“ப்ச், போம்மா”

“வாப்பா, ப்ளீஸ் ப்ளீஸ்!, அம்மாவுக்கு முட்டி ரொம்ப வலியெடுக்குது”

“ப்ச்” என உச்சுக் கொட்டியபடி எழுந்து வந்தவள்,

“80 வயசு பாட்டி, ஒரு ஊருக்கே 1 ரூபாய்க்கு இட்லி சுட்டு விக்குதாமாம்! நீயெல்லாம் 55 வயசுலயே, முட்டி வலிக்குது, முதுகு வலிக்குதுன்னு என் உயிரை வாங்குற” – எனத் திட்டியபடிப் பாத்திரத்தைக் கழுவத் தொடங்க,

அவள் முடிக்கும் வரைத் தானும் சமையல் செய்தபடி அவளை ஓரக் கண்ணால் நோட்டம் விட்டக் கோகிலா,கழுவி முடித்துக் கை துடைத்துக் கொண்டிருந்தவளிடம்,

“சக்தி” என்றார்.

“ம்ம்”

“சக்தி……”

“என்னம்மா?”

“அம்மா ஒன்னு சொல்லுவேன்! நீ எதிர்த்துப் பேசாம சரின்னு கேட்டுக்கனும்”

“என்ன?”

“……….” – பதில் கூறாதுத் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவரைக் கண்டு,

“ப்ச், என்னம்மா?” எரிச்சலானவளிடம்,

“விசாலம் மகன் சசியைவே உனக்கு பேசி முடிச்சிடலாம்ன்னு நானும்,அப்பாவும் முடிவெடுத்துருக்கோம்” – என்றார் தயக்கமாய்.

“ஓ” – எனப் புருவம் தூக்கியவளின் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாது கோகிலா விழித்து நிற்க,

“ஒத்து வராதுன்னு சொன்னவங்க எப்பிடி ஒத்துக்கிட்டாங்களாம்?” எனக் கேட்டாள் அவள்.

“தெரியலடி!, பொண்ணு அழகா ரோசாப் பூ மாதிரி இருக்குது, என் பையன் கரிக்கட்டைக் கலர்ல இருக்கான், இதெல்லாம் ஒத்து வராதுன்னு விசாலம் தான் சொன்னா”

“இப்பயும் நான் ரோசாப்பூ மாதிரி தான இருக்கேன்?”

“அவளாத் தான்டி திடீர்ன்னு ஃபோன் பண்ணி, சக்தியை,சசிக்குக் கொடுக்குறியான்னு கேட்டா”

“நீயும் பிகு பண்ணாம ஒத்துக்கிட்ட?”

“ப்ச், விசாலம் வீட்ல பிக்கல்,பிடுங்கல் எதுவுமில்லடி! மாமியார் பிரச்சனையே உனக்கு வராது!, உன் நாத்தனார்காரியோடயும் எந்தப் பேச்சு வார்த்தையுமில்லையாம்!, உங்கக் கல்யாணத்தை வைச்சு அவளோட ஒன்னு சேர்ந்துக்கிட்டாலும் நீ பெருசா அலட்டிக்க வேணாம்! ஏன்னா, விசாலம் மாதிரி சத்யாவும் அப்புரானிப் புள்ள! எந்த வம்பு,தும்புக்கும் போகாது!”

“ஹ்ம்ம் அப்புறம்?”

“சசியைப் பத்தி சொல்லவே வேணாம்! குடும்பத்தை அனுசரிச்சு நடந்துக்கிறவன்! சொந்தபந்தங்களோட எவ்ளோ பாசமா பழகுறான்னு பார்த்தேல?, நமக்குக் குணம் தான் டி முக்கியம்! அழகெல்லாம் அப்புறம் தான்”

“ஓஹோ”

“என்னடி?”

“என்னவோ பண்ணு!”- என்றபடிக் கையிலிருந்தத் துண்டை சோபாவின் மீதெறிந்தவள், தன் அறையை நோக்கி நடந்தபடி,

“என்னைக்குக் கல்யாணம்ன்னு முன்னாடியே சொல்லிடு! ஆஃபிஸ்ல லீவ் சொல்லனும்!” என அசால்ட்டாகக் கூறிச் செல்ல,

“அடிக்கழுத! கல்யாணம் உனக்குத் தான் டி! என்னமோ ஊரான்வீட்டு விசேசத்துக்குப் போற மாதிரி ஆபிஸ்ல லீவ் சொல்லனும்ங்குற”

“ப்ச், இப்ப என்னன்ற?”

“உனக்கு விருப்பமா,இல்லையாடி?”

“நீயும்,அப்பாவும் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான்”

“அடேங்கப்பா!, அவ்ளோ நல்லவளாடி நீ?”

“குட்நைட்ம்மாஆஆ” – அறைக்குள்ளிருந்துக் கத்தியவளைக் கேட்டுக் கடுப்பான கோகிலா, சாப்பிட வந்தமர்ந்தக் கணவரை நோக்க,

“நீ மேல ஆகுற விசயத்தைப் பாரு!, பிடிக்காட்டி இந்நேரம் ஆடியிருக்க மாட்டாளா?, விடு விடு!” என்று சென்னியப்பன் கூறியதும்,

“இஷ்டம் தான்னு வாயைத் திறந்து சொல்ல முடியாதாமா?, என்ன பொண்ணோ இவ! இவளைக் கட்டிக்கிட்டு சசி என்ன பாடுபடப் போறானோ” – என்று புலம்பியபடிக் கிட்சனை நோக்கிச் சென்றார்.

ர்ர்ர்ர்ர்ரென ஓடி விட்ட அந்த வாரம் சடாரென சனிக்கிழமையில் வந்து நிற்க, டீம் அவுட்டிங்கிற்காக ஜில்லெனக் கிளம்பினர் சுந்தரின் குழுவினர்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அலுவலகத்தின் முன்பு ஒவ்வொருவராக வந்திறங்கியவர்களை, வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர் அலெக்ஸூம்,போபனும்.

“டேய் சசி, டைம் ஆச்சு!, எல்லாரும் வந்தாச்சா?” – வண்டியிலிருந்துக் கத்திய சுந்தரிடம்,

கீழே நின்றிருந்த அலெக்ஸ், “ரெண்டு ஜூனியர்ஸ் மட்டும் ஜூட் விட்ருச்சுங்க சுந்தர்” – என்று பதிலளித்துக் கொண்டிருக்கையில்.

கட்டக் கடைசியாக ஸ்கூட்டியில் அவசரமாய் வந்திறங்கினர் சக்தியும்,பவித்ராவும் “சாரி,சாரி” என்றபடி.

“ஏய்ய்ய், பங்க்சுவாலிட்டின்னா என்னன்னு தெரியாதா உங்களுக்கு?, 12 மணிக்கே வந்து உட்கார்ந்திருக்கிற நாங்கல்லாம் லூசா?” – வழக்கம் போல் திட்டித் தீர்த்த அலெக்ஸிடம்,

“அதான் சாரி சொல்லிட்டோம்ல?, விடுங்கண்ணா! ட்ரிப் மூட்-ஐக் கெடுக்காதீங்க” – என்றபடி பவித்ரா அவசரமாய் வண்டியில் ஏறிக் கொள்ள,

ஒருவரையும் கண்டு கொள்ளாதுத் தன் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்தபடி நின்றிருந்தான் சசி.

பையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவளிடம் அலெக்ஸ் பையை வாங்கி, அதன் இடத்தில் வைக்கச் செல்ல, அப்போது தான் சசியைக் கவனித்தவள்,

“என்ன?” என்றாள் மூச்சுவாங்க.

“இந்த நேரத்துல தனியா வர்றீங்க?”

“ஸோ?”

“அதுவும் ஸ்கூட்டில?, ஹெல்மெட் கூட போடாம?”

“அதனால என்ன இப்போ?”

“வண்டி இடைல நின்னு போயிருந்தா?”

“அதெல்லாம் நிக்காது!”

“ஒரு வேளை நின்னு போயிருந்தா”

“ஹெல்ப்புக்கு யாரையாவது கூப்பிட்டிருப்பேன்”

“நடுரோட்டுல நின்னுட்டு, யாரைக் கூப்பிட்டிருப்பீங்க?”

“உங்களைத் தான்!, ஏன், நீங்க வர மாட்டீங்களா?” – அதுவரை நடந்து கொண்டிருந்தவள் நின்று, கையைக் கட்டிக் கொண்டுப் புருவம் தூக்கி வினவுவதைக் கண்டு, ஒரு அடி பின்னே நகர்ந்தான் சசிதரன்.

சரியாக உறங்காததாலோ என்னவோ, உப்பிப் போன கன்னமும், உள்ளே சென்றிருந்த கண்ணுமாக, தூக்கிக் கட்டியிருந்தக் கொண்டையின் கீழ் அவளது முகம் பலூன் போல வீங்கியிருந்தாலும், அத்தனை சோர்வையும் முழுதாய் மறைத்துப் பளீரென பளிச்சிட்ட மூக்குத்தி, அம்முகத்திற்களித்த அழகைக் கண்டு, அடித்துக் கொண்ட மனதை அடக்கி, பிடரியைக் கோதியவன், அவள் முகம் பாராது,

“நா..நா..நான் ஏன் வரனும்?” எனக் திக்க,

“ஓரு பேச்சுக்காவது, வருவேன்னு சொல்லலாம்ல?”

“நான் ஏன் சொல்லனும்?” – என்றவன்,

“இனி அன்-டைம்ல வர்றதா இருந்தா, உங்கப்பாவோட வாங்க!” எனக் கூறி, உதட்டை வளைத்து அலட்சியமாய்த் தோளைக் குலுக்குபவளைக் கண்டு கொள்ளாது, விறுவிறுவென வண்டி ஏறி விட்டான்.

தானும் அவனைத் தொடர்ந்து ஏறியவள், நேராக பவித்ராவினருகே சென்றமரவும், “ஆல்செட்??” என்ற அலெக்ஸ், “போலாம் ரைட்ட்ட்ட்ட்” எனக் கூவ, “ஊஊஊஊஊஊ” என ஊளையிட்ட அனைவரும் , அத்தோடுத் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு உறங்கத் தொடங்கினர்.

நள்ளிரவில் வண்டியேறியதாலோ என்னவோ, சேட்டையை விடுத்து அனைவரும் கம்மெனக் கட்டையை நீட்டி விட, வேனில் ஒலித்தப் பாட்டுச் சத்தத்தைக் கேட்டுக் காண்டாகிப் போய், தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர் பவித்ராவும்,சக்தியும்.

பின்னே, “வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட,

ராசாதி ராசா தொடுத்த மாலை தான்” – என்றொலித்துக் கொண்டிருந்த பாடலையும், அதை ரசித்துக் கேட்டபடி முன்னே அமர்ந்திருந்த மூவரையும் கண்டு உச்சுக் கொட்டினாள் சக்தி.

“சுந்தருமா இப்பிடி?, ச்சை” என்ற பவித்ரா,

“ண்ணாஆஆ… என்னண்ணா பாட்டு இது?” என்று கடியாக,

“ஏய்ய்ய், இதெல்லாம் டவுன் பஸ் கீதங்கள்! உனக்குப் புரியாது! அடுத்துத் தூதுவளை இலை அரைச்சுன்னு வரும், நீ பேசாம தூங்கு!, லேட்டா வந்ததுமில்லாம, பாட்டு வேற இவுங்க சாய்ஸ்க்கு வேணுமாம்! என்ன?” – என்று அலெக்ஸ் அதட்டவும்,

“ப்ச்” என சலித்த சக்தியிடம், “ஹெட்செட் வேஸ்கோ சக்தி” என்று பிரச்சனையைத் தீர்த்து வைத்தான் ரவி.

தன் பின்பு மறுநாள் மதியம் 12 மணி வாக்கில், வயநாட்டின் கல்பேட்டா எனும் இடத்திலிருந்த ரிசார்ட்டை வந்தடைந்தது அவர்களது வேன்.

வேனை விட்டிறங்கிய அனைவரும், காற்றிலிருந்தக் குளுமையையும், கண்ணில் தெரிந்த பசுமையையும் அனுபவித்தபடி உற்சாகமாக நடக்கையில்,

“கைஸ், ரெஃப்ரஷ் பண்ணிட்டு வாங்க! லஞ்ச் முடிச்சுட்டு பனசுரா சாகர் டேம்க்கு போய்ட்டு வரலாம்” – என்ற சுந்தரிடம் தலையாட்டி விட்டு ஆளாளுக்கு ஒரு புறம் வேடிக்கை பார்த்தபடி ரிசார்ட்டுக்குள் நுழைந்தனர்.

குளித்து உண்டு முடித்ததும், Off Road drive ஆக சில,பல ஜீப்களை வாடகைக்கு எடுத்து பனசுரா சாகர் டேமை அடைந்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பனசுரா சாகர் டேமின் பெரும் நீர்ப்பரப்பைப் பார்வையிட்டபடி நடை போட்டனர்.

அங்கங்கு பச்சையாய் மலைக் குன்றுகளும், அதன் நடுவில் ஆர்ப்பரிப்பில்லாத நீல நீர்ப்பரப்பும், மங்கியிருந்த வானமும், குளிர்க்காற்றும் சூழ்நிலையை ரசிக்கச் சொல்ல, நகரத்தின் பரபரப்பிற்கு மாற்றாய், இங்கு அனைவரும் தளர்ந்த மனநிலையோடு காணப்பட்டனர்.

ஹார்ஸ் ரைடிங், போட்டிங் என இருள் சூழும் வரை அங்கேயே சுற்றி விட்டு, மாலையானதும் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

கரையோரமாய் அமைந்திருந்த wooden வீடுகளில் இரண்டை இவர்கள் புக் செய்திருந்த படியால், அந்த மங்கிய மாலை நேரம், வண்டுகளின் ரீங்காரத்துக்கு மத்தியில், ஏரி நீரின் சில்லிப்போடு ஏகாந்தமாயிருந்தது.

ணிந்திருந்த ஸ்வெட்டரை மீறி உடலைத் தாக்கியக் குளிரை உணர்ந்தபடி பால்கனியில் வந்து நின்ற சக்தி, சற்றுத் தள்ளிக் கேட்ட சலசலப்பில் குனிந்து நோக்கினாள்.

ஏரியோரமாயிருந்தப் புல்வெளியில், விரிப்பின் நடுவே கொறிக்கும் சமாச்சாரங்கள் நிறைந்திருக்க, ஒரு புறம் சீட்டுக்கட்டுக்களும், மறு புறம் பாட்டுக் கச்சேரியுமாய், பச்சை நிற பாட்டில்கள் பலவற்றுடன் ஜெகஜோதியாய்த் தங்களது டூரின், ஃபர்ஸ்ட் நைட்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் ஆண்கள்.

அடக்குடிகார நாய்ங்களா!

என்னமா எஞ்சாய் பண்றானுங்க பசங்க!

இவளுங்களும் தான் இருக்காளுங்களே!

டாம்-ல நடந்துட்டு வந்ததுக்கே டங்குவாரு அந்து போய் கிடக்குறாளுங்க!

-புலம்பியபடி நின்றிருந்த சக்தி, அலெக்ஸூம்,சசியும் ஒரு புறம் கவர்ச்சி நடனம் ஆடிக் கொண்டிருப்பது கண்டு, ‘என்னா பண்றானுங்க இவனுங்க’ – என்றெண்ணியவாறு பால்கனியின் மறு மூலைக்குச் சென்று அவர்களை உற்றுக் கவனித்தாள்.

கீழமர்ந்தபடி பரத் என்பவன் பாடல்களை மாற்றி மாற்றி ப்ளே செய்தவண்ணமிருக்க, இருவரும் இஷ்டத்திற்கு இடுப்பை வளைத்து, ஆட்டி அனைவரையும் எண்டர்டெய்ன் செய்து கொண்டிருந்தனர்.

‘சிறு பாவாட சூடும் பூந்தேரு! இது பூ வாட வீசும் பாலாறு!

அட மூச்சுக்கு,மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு..

ராசாவே, சிட்டெறும்பு என்னைக் கடிக்குது.. ‘

-அலெக்ஸின் தோளை பலமாக இடித்தபடி சசியும், வெட்கம் என்கிற பெயரில், வெட்கங்கெட்ட எக்ஸ்ப்ரஷன்களோடு அலெக்ஸூம், பிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கையில், பரத் பாட்டை மாற்ற,

டொய்ங்,டொய்ங்,டொய்ங் எனத் தொடங்கிய இசைக்கு, அணிந்திருந்த ஷார்ட்ஸைப் பற்றிக் கொண்டு, இடுப்பை ஆட்டி இரண்டடி முன்னே சென்ற இருவரில் சசி,

‘உன்னை நான் கட்டிக் கொள்ள, எப்பவும் நினைச்சதில்ல,

கல்லைக் கட்டித் தண்ணிக்குள்ள.. முங்குறவன் யாருமில்ல

வேணாண்டி விட்டு விடடி” – எனக் கெஞ்சிக் கொண்டிருப்பது கண்டு,

கெக்கே,பெக்கேவென வந்த சிரிப்பை அடக்கி, அவசரமாய் ஸ்வெட்டர் பாக்கெட்டுக்குள்ளிருந்து செல்ஃபோனை எடுத்து இருவரின் ஆட்டத்தை வீடியோ எடுத்தபடி அப்படியேக் குத்த வைத்துக் கீழே அமர்ந்து விட்டாள் சக்தி.

அனைவருக்கும் ஸ்ருதி எக்குத்தப்பாக ஏறியதில், மூடு மாறிப் போன பரத்தின் அடுத்த பாடல், அடுத்த லெவலை எட்டி,

“ம்ச்சுக்குச்சாக், ம்ச்சுக்குச்சாக்” எனத் தொடங்கி விட,

“ஊஊஊஊஊஊஊஊஊ” எனக் கூவிய கூட்டத்தினரின் அலப்பரையில், பரவச நிலையை அடைந்த இருவரில் சசி, “ஏ வாடா, வாடா..” என்று அலெக்ஸை அருகிலிழுத்து, பின்னிருந்தவாறு ஒரு கையால் அவன் வயிற்றைக் கட்டிக் கொள்ள, முன்னிருந்தபடி அலெக்ஸ், சசியின் பிடரியில் தன் வலது கையை வைத்துக் கொண்டான்.

“இப்ப சாத்து, நடை சாத்து… ம்ச்சுக்குச்சாக்சாக்

குளிர்க் காத்து காப்பாத்து… ம்ச்சுக்குச்சாக்சாக்.” – அந்த ம்ச்சுக்குச்சாக்சாக்-கிற்கு ஒரு சேர நெஞ்சை விரித்த இருவரையும் கண்டு, “ஐயையோ”-வென வாயைப் பொத்திய சக்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

என்ன டா பாட்டு இதெல்லாம்???

“ஏய் ஏய் ஏய் சசி!, சசி! ஓவரா போயிட்டிருக்கு டா” – என சுந்தர் இடை புகுந்து சென்சார் போட,

“ஹேய் ஆமாமாம்! நோ 18+, நோ 18+” என்ற சசி, “டேய் பரத், பாட்டை மாத்துடா” என்றதும், அவனும் பாட்டை மாற்றி விட,

தண்ணீர்க் கேட்டுத் தொல்லை செய்தத் தொண்டையை நனைக்க, மூச்சு வாங்கியபடி ஆட்டத்தை நிறுத்தி விட்டு சற்றுத் தள்ளி வந்தவன், தண்ணீரை எடுத்து, நிமிர்ந்து வாட்டர் பாட்டிலை வாயில் சரிக்கையில், சக்தி கண்ணில் பட,

வாயில் வைத்த வாட்டர் பாட்டிலுடன் புருவத்தைத் தூக்கினான்.

அவன் தன்னைக் கண்டு கொண்டதும், அவசரமாய் கேமராவை ஏரியின் புறம் திருப்பியவள், பின் ஃபோனை ஆஃப் செய்து பாக்கெட்டுக்குள் இட்டுக் கொண்டு, பபிள் கம்மை மென்றபடித் தன்னையே பார்ப்பவனைக் கண்டு, இதழோரம் தோன்றிய புன்னகையை அடக்கினாள்.

பாக்கெட்டுக்குள் இரு கைகளையும் நுழைத்து, அவளையே பார்த்தவாறு, குறையாத vibe-உடன் பாடலுக்கேற்றபடி தலையை ஆட்டிக் கொண்டிருந்தவன்,

பின்னால் பரத், ‘அடி சீனிசக்கரை செல்லக்குட்டி, ஏன் டி நிற்குற ரொம்ப எட்டி…’ எனத் தொடங்கவும், உடன் சேர்ந்து,

‘நீ தான் டி கட்டிக்கரும்பு! உன்னை சுத்தி வரும் நான் தான் டி கட்ட எறும்பு’ – என வேண்டுமென்றே அவளைப் பார்த்துக் கத்திப் பாடினான்.

தைரியத்தைப் பார்றா!

மப்புல இருக்கான் போல!

வாய்ஸ் வானம் வரைக்கும் எகிறுது!

அப்புறம், அப்புறம், அப்புறம் மச்சி?? – என்றெண்ணியவாறு, கையைக் கட்டிக் கொண்டுத் தலையைச் சாய்த்து,கண்ணைச் சுருக்கி அவனைக் கேள்வியாய் நோக்கியவளைக் கண்டு,

பபிள் கம்மை மென்றபடித் தானும் கண்ணைச் சுருக்கியவன்,

பின் ஜெமினி பட விக்ரம் போல.. வலது கையின் இருவிரல்களை கண்ணருகேயும், இடது கையின் ஐவிரல்களை அவள் புறம் நீட்டியும் வைத்து, கண்ணருகேயிருந்த இரு விரல்களின் இடுக்கில் அவளை நோக்க, “ஹாஹாஹா”-வென தலை சாய்த்துச் சிரித்தாள் சக்தி.

அப்புறம்? – என்றவளின் எக்ஸ்ப்ரஷனுக்குப் பதிலாய்,

அருகிலிருந்த மரத்திலிருந்து ஒரு வெள்ளை நிற பூவைப் பறித்துத் தன் நெஞ்சருகே வைத்துப் பின், தன் இடது கையை இதயத்திலும், வலது கையிலிருந்தப் பூவை அவள் புறமும் நீட்டி, கண்ணை மூடிச் சுருக்கி, உதட்டைக் குவித்து “உம் உம் உம் உம்ம்ம்ம்மா” – எனக் க்யூட்நெஸ் காட்டியவனைக் கண்டு, வயிற்றைப் பற்றிக் கொண்டுக் கண்ணில் நீர் வரச் சிரித்தவள்,

காலம் போன காலத்துல க்யூட்நெஸ் வேற! கெடா மாடு! -என்றாள்.

அவள் சிரிப்பதைக் கண்டுக் கையை இறக்கிப் பாக்கெட்டுக்குள் நுழைத்தவன், பபிள் கம்மை வாயில் அரைத்தபடி, ஒரு நொடி அதே புன்னகையுடன் அவளை நோக்கி, மீண்டும் ஒற்றைக் கண்ணைச் சுருக்கி, மறு கண்ணால் அவளைப் பார்க்க,

தைரியமாய் அவன் செய்யும் சேட்டையில் விடாது சிரிப்பவளை, அவன் ரசித்துக் கொண்டிருந்த வேளை,

பட்டெனப் பிடரியில் விழுந்த அடியில் கதி கலங்கி, விண்ணிலிருந்து பொத்தென மண்ணில் விழுந்த சசி, ஒரு நொடி கண்ணை மூடித் திறந்து, தலையை உலுக்கி, மெல்லத் திரும்புகையில்,

கைகளைப் பின்னே கட்டியவாறு நின்றிருந்த அலெக்ஸ்,

“அது ஒன்னுமில்ல ப்ரோ!, பொடனில ஒரு பொன்வண்டு உட்கார்ந்திருச்சு, அதான் பொளீஈஈஈர்ன்னு ஒன்னு வுட்டேன்” என்றான்.

“வ..வண்டு செத்துருச்சா ப்ரோ?”

“செத்துருச்சு!, நீ போ.. போய்.. பார்பெக்யூ எந்த லெவல்ல இருக்குன்னு பார்த்துட்டு வா! போ!” என்று விரட்டியதும்,

பிடரியைத் தேய்த்தவாறு நடந்து செல்பவனைக் கண்டு விட்டு, சக்தியின் புறம் திரும்பிய அலெக்ஸ், மூக்கை விடைத்து,

“இங்க எதுக்கு வேடிக்கை பார்த்துட்டு நிற்குற?, போ உள்ள.. போ” என அதட்ட,

“என் காலு! நான் அப்பிடித்தான் நிற்பேன்! உனக்கென்ன? போடா வேலையைப் பார்த்துக்கிட்டு” – என்று பதிலுக்குக் கத்தியவளைக் கண்டு காண்டாகி,

“எதிர்த்துப் பேசுறதைப் பாரு! போ…போறியா என்ன, போ போ” – எனக் கீழிருந்த சிப்ஸ் பாக்கெட்டுக்களை அள்ளி,அவள் மீதெறிய,

“விவரமா, காலியான சிப்ஸ் பாக்கெட்டையா பார்த்துத் தூக்கிப் போட்றான் பாரு! பரதேசி” என்று திட்டியவள், அருகிலிருந்த பூச்சட்டியைத் தூக்கி அவன் மீதெறிய நினைத்துப் பின் “வேணாம், சட்டி டேமேஜ் ஆயிடும்” என்று விட்டு அவனை முறைத்தவாறு உள்ளே சென்றாள்.

றுநாள் காலைச் சாப்பாட்டை முடித்ததும், அனைவரும் அருகிலிருந்த மீன்முட்டி நீரருவிக்குச் சென்றனர்.

40 நிமிடங்கள் மலையேறி, வழுக்குப் பாறைகளைக் கடந்து அருவியை அடைந்த நொடியிலிருந்து ஓயாது நீரில் விளையாடிக் கொண்டிருந்த சக்தியோடு, சரிக்குச் சரியாய் பவித்ரா.

“நல்லா, நீர் யானை மாதிரி எப்பிடித் தண்ணிக்குள்ளயே கிடக்குதுங்க பாரு” – அருகிலிருந்தப் பாறையில் அமர்ந்தபடிக் காதைக் குடைந்து கொண்டிருந்த அலெக்ஸ்.

“ண்ணா, அவளை வேணும்ன்னா ஹிப்போன்னு சொல்லுங்க!, நானெல்லாம் ஃபிஃப்ட்டி கேஜி தாஜ்மஹாலாக்கும்” – என்ற பவித்ராவின் முகத்தில் நீரை வாரியிறைத்த சக்தி,

“யாரைப் பார்த்து யானைன்னு சொன்ன?” என்றுக் கொதித்தபடி, அவளைத் தண்ணிக்குள் அமுக்க,

“ஏய் ஏய் ஏய்.., கொலைக் கேஸ்ல உள்ள போய்றாத கழுதேய்” – என்ற அலெக்ஸைக் கடுப்பாய் நோக்கியவள்,

“ஏன்ய்யா, கரையோரமா உட்கார்ந்து காது குடையத் தான் 40 நிமிசம் தம் கட்டி மலையேறி வந்தியா?” எனக் கேட்டாள்.

“நான் காதைக் குடையுறேனோ, மூக்கைக் குடையுறேனோ, உனக்கென்ன?, ரெட்டூடூடூ மூக்குத்தி!”

“ஹாஹாஹா!, போடா சிம்பு மாதிரி, ரெட்டூடூ மூக்குத்தியைக் கூட கெட்ட வார்த்தையா அறிவிச்சுட்டாங்களா என்ன?” – இடையில் பவித்ரா வேறு.

“ப்ச், யோவ்! அநாவசியமா பேசாத!”

“சரி, அவசியமா நீ பேசு! நான் கேட்குறேன்”

“நீ தைரியமான ஆளா இருந்தா, என் கூட ஒத்தைக்கு ஒத்த நீச்சலடிக்க வாய்யா”-தண்ணீருக்குள் நின்று கொண்டு சவாலாய்க் கேட்டவளைக் கண்டு, “ஷ்ஷ்ஷ்ஷ்” என மூக்கைச் சொரிந்த அலெக்ஸ்,

“ஏய் சில்வண்டு! உன் கூட-லாம் போட்டி போடுறதுக்கு என்னைய என்ன ஸ்கூல் கிட்-ன்னு நினைச்சியா?”

“ஹ!, நீச்சல் தெரியாதுன்னா, தைரியமா தெரியாதுன்னு ஒத்துக்கய்யா” – விடாது வாரியவளைக் கண்டுப் பொங்கி,

“என்ன ஓவராப் பேசுற?” என்றபடியே ஆக்ரோஷமாய் எழுந்த அலெக்ஸ், நீருக்குள் இறங்கி,

“என்ன போட்டி?, சொல்லு” என்றான்.

“வெர்ரி குட்!, அதோ அங்க தெரியுது பாரு, அந்தப் பாறையைத் தொட்டுட்டு திரும்பி யார் முதல்ல வர்றாங்களோ, அவங்க தான் வின்னர்! புரியுதா?” என்றாள்.

“ஹ! அவ்ளோ தானா?” என்ற அலெக்ஸ் “நீ ஒரு குற்றாலீஸ்வரனைப் போட்டிக்குக் கூப்பிட்றங்குறதை மறந்துடாத” என்றான்.

“குற்றாலீஸ்வரனா அது யாரு?” – பவித்ரா.

“அவன் 90ஸ் கிட்ஸோட ஆபத்பாந்தவன்”

“சரி, யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்!, டர்ம்ஸ் ஓகே தான?, சீட் பண்ண நினைக்கக் கூடாது” – மிரட்டியவளிடம்,

“குழந்தைங்களோடலாம் நான் சீட் பண்றதில்ல” – கெத்தாய் கூறினான் அவன்.

“பார்ப்போம் பார்ப்போம்” என்ற சக்தி,

“பவி நீ தான் ஜட்ஜ்” என்று விட்டு, “ரெடி.. 1.. 2.. 3..” என்றதும்,

இருவரும் அதி வேகத்துடன் நீந்தத் தொடங்கினர்.

இரு கைகளாலும் எட்டு வைத்து தத்தளித்துத் தவழ்ந்த அலெக்ஸைத் தாண்டி, (Pro) ப்ரோவைப் போல் சர்ரெனச் சென்ற சக்தி, பாறையைத் தொட்டு விட்டு , அதே வேகத்தில் திரும்பி வந்து, முகத்திலிருந்த நீரை வழித்தபடி,

“ஹேஏஏஏஏ!, நான் தான் வின்னர்!!” என்று கத்த,

“என்ன இந்தப் பொண்ணு.. மீன் மாதிரி நீந்துது” என முணுமுணுத்த அலெக்ஸ்,

“ஏய்ய், மறுக்கா போலாம் வா!,நீ சின்னப் பொண்ணாச்சேன்னு போன தடவை விட்டுக் கொடுத்துட்டேன்! இந்த முறை ஈக்வல் காம்பெடிஷன்! வா வா” எனக் கூற,

நமுட்டுச் சிரிப்புடன் அவனருகே வந்து நின்ற சக்தி, மறுபடி பவித்ரா “1 2 3..” என்றவுடன் மின்னல் வேகத்தில் சென்று திரும்ப,

“ஏய்ய்ய்ய், இது சரி வராது! இரு ஆளைக் கூப்பிட்டு வரேன்” –தன் முகத்திலிருந்த நீரை வழித்தபடி அந்தப் பாறையருகே பதுங்கிய அலெக்ஸ், தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாது சுற்றிச் சுற்றிப் பார்த்து,

“டேய் பரத்! உனக்கு நீச்சல் தெரியும் தான?, வா டா இங்க! வா” என்றழைத்து அவனைப் போட்டியில் இணைக்கத் தோளைக் குலுக்கியபடி முன்னே வந்த சக்தி, பரத்துடனான போட்டியிலும் தானே ஜெயித்தாள்.

“அடுத்து டேய்.. ரவி, ரவி” என்றழைத்து “என் இரானி ச்சாய் எப்பிடி இறால்மீன் மாதிரி நீந்துவான் பாரு” என்று கெத்து காட்டிக் களமிறக்கிய அலெக்ஸ், கடைசியில் அவனும் மண்ணைக் கவ்வி விட்டது கண்டு கடுப்பாகி, எரிச்சலோடு கரையைப் பார்த்து, “போபன் நீ வர்றியா டா?” எனக் கேட்டான்.

“ஹய்யோ, இப்போலே ஞான் வெள்ளத்தில் நின்னு இறங்கி” என்று போபன் எஸ் ஆகி விட,

அடுத்தடுத்து ஆகாத,போகாத நால்வரை இறக்கித் தோல்வியைத் தழுவியவன், கையைக் கட்டிக் கொண்டு நக்கலாய்ச் சிரித்து வெறியேற்றிய சக்தியைக் கண்டு எரிச்சலாகிய போது, தூரத்தில் கையில் கேமராவோடு தென்பட்டான் சசிதரன்.

“டேய்ய்ய்ய்ய் நண்பா! சசிதரா! ஜீவரட்சகா! உன்னைத் தான் டா தேடிட்டு இருந்தேன்! வா டா வா டா இங்க! - என்று அவன் கூவியதும், புருவத்தைச் சுருக்கியபடி அருகே வந்த சசி,

“இங்க என்னடா கூட்டம் போட்டுட்டு இருக்கீங்க?” என்றபடிக் கையிலிருந்த கேமராவை போபனிடம் நீட்டி விட்டு நீருக்குள் இறங்கி வந்தான்.

மூக்கிலிருந்த நீரை வெளியேற்றியபடி நக்கல் சிரிப்போடு நின்ற சக்தியை ஒரு முறை நோக்கி விட்டு அலெக்ஸிடம் “என்னடா பலமா வரவேற்குற?” எனக் கேட்டதும்,

“டேய் சசி, நீ தான் டா என் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்! எப்பிடியாவது என் மானத்தைக் காப்பாதிரு டா!, நீ மட்டும் இந்தப் போட்டில ஜெயிச்சன்னு வையேன்!, அடுத்த ஒரு வாரத்துக்கு உன் லஞ்ச், என் செலவு டா” என்று கொக்கரித்தவனிடம் புரியாது விழித்து,

“என்ன போட்டி?” என்றான் சசி.

“நீச்சல் போட்டி டா நண்பா!, இந்த நீர் மோரு கூட” – என அலெக்ஸ் சக்தியைக் கை காட்டியதும், விழி விரித்தவன்,

“இவங்களோடயா?” எனக் கேட்க,

“ஏன் பயமா இருக்கா?” – என உதட்டை வளைத்தவளைக் கண்டு எரிச்சலான அலெக்ஸ்,

“இப்பிடித் தான் டா! இப்பிடித் தான் திமிராப் பேசியே என்னைய அப்போத்திலிருந்து உசுப்பேத்தி விட்டுட்டிருக்கு இந்த உலக உருண்டை”

“ஏய்ய் உருண்டை,கிருண்டைன்னேன்னா, உள் நாக்கை அறுத்துடுவேன்!,” – எகிறியவளிடம் பதிலுக்குச் சண்டையிட சென்ற அலெக்ஸை பிடித்திழுத்து, “ப்ரோ!, என்ன ப்ரோ!, பொண்ணு கூட போய் போட்டி போடச் சொல்றீங்க?” என முணுமுணுத்தான் சசி.

“ப்ச் ப்ரோ! உங்களுக்குப் புரியல ப்ரோ! அது பொண்ணே இல்ல!, நல்லா வஞ்சிரம் மீனு மாதிரி வளைஞ்சு,வளைஞ்சு நீந்துது!, ஆறு பேரை இறக்குனேன் ப்ரோ!, ஆறு பேருமே அதுக்கிட்ட தோத்துட்டாங்க” என்றான் அலெக்ஸ் பரிதாபமாய்.

“ரெண்டு மணி நேரமா இதைத் தான் பண்ணிட்டிருக்கீங்களா டா டேய்?”

“ப்ரோ! இது என் ஈகோ பிரச்சனையா உருமாறிடுச்சு!, எனக்கு இந்த ரெட்டூ மூக்குத்தியை தோற்கடிச்சே ஆகனும்” – சீறியவனை ஒரு மாதிரி நோக்கி,

“சிறுபிள்ளைத்தனமா பண்ற டா நீ” என்றவனிடம்,

“பரவாயில்ல! இருக்கட்டும்! எனக்காக நீ போட்டில கலந்துக்குவியா மாட்டியா?” – எகிறியவனை அடக்கி, “சரிரிரிரி கலந்துக்குறேன்” என்றவன், தன்னைக் கண்டுப் புருவம் உயர்த்துபவளைக் கண்டு கொள்ளாது, அலெக்ஸ் கைக்காட்டிய இடத்தில் நின்றான்.

“ஏய்ய் ரெட்டூ மூக்குத்தி!, நீ இத்தோட காலி” எனப் பொருமிய அலெக்ஸ்,

தன்னருகே தயார் நிலையில் நிற்கும் சக்தியை ஓரக்கண்ணால் நோட்டமிடும் சசியிடம், “டேய் சசி, அலெர்ட்டா இரு டா” என்று எச்சரித்து விட்டு, “ரெடி 1 2 3..” என்றதும், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, அதிவேகமாய் நீந்தினர்.

நான்கெட்டில் பாறையைத் தொட்டு திரும்பி விட்டவன், எழுந்து முகத்திலிருந்த நீரை வழிக்கையில், கோரசாய் அனைவரும் “ஹேஏஏஏஏஏஏஏஏஏ” எனக் கத்தும் ஒலி கேட்டு அவசரமாய்த் திரும்பினான்.

அவனுக்குப் பின்னால் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்ற சக்தி, மூச்சு வாங்க அவனை மூர்க்கமாய் முறைத்துப் பார்ப்பது கண்டுப் பதறி, “நா..நான்….” என்று அவன் திணறிக் கொண்டிருக்கையில்,

நண்பனின் தோளைப் பற்றித் தொங்கிய அலெக்ஸ், “நண்பேன் டா! நண்பேன் டா!” எனக் கூறி அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு “சசி! சசி! சசி!” என்று கையைத் தூக்கிக் கோஷமிட, தோற்ற அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனை சூழ்ந்து கொண்டனர்.

“டேய்ய் அவ்ளோ பெரிய போட்டியா டா இது?, ஏன் டா இப்பிடி அலப்பரை பண்றீங்க? அந்தப் பொண்ணு முறைக்குதுடா” – கெஞ்சியவனை நிறுத்தி,

“முறைச்சா முறைக்கட்டும்! முட்டக்கண்ணி!, ஏய்ய்.. ரெட்டூ மூக்குத்தி, இப்ப என்ன சொல்ற?” – என அலெக்ஸ் அவளை வம்பிழுத்ததும்,

அலட்சியமாய் சிலுப்பிய சக்தி, “ஸீ, ரெண்டு மணி நேரமா தண்ணிக்குள்ள நின்னு டயர்ட் ஆன என் கூட, இப்ப வந்த இவரு போட்டிப் போட்டு ஜெயிச்சதுல எந்த ஆச்சரியமும் இல்ல யு நோ!” என்றாள்.

“ஆமாமா!, டேய் சசி, நீ இப்ப தான டா வந்த?, அந்தப் பொண்ணு எவ்ளோ நேரமா தண்ணிக்குள்ள இருக்கு தெரியுமா?, டேய் அலெக்ஸ் திஸ் இஸ் நாட் ஃபேர் டா” – அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மா பஞ்சாயத்திற்கு வந்ததும்,

“சுஷ் மம்மி!, என்ன நீங்க அவ பக்கம் சாய்ஞ்சுட்டீங்க?”

“இது நியாயத்தின் குரல்! நீங்க தடுக்கக் கூடாது” – பவித்ரா வேறு இடையில்.

அதன் பின்பு நசநசவெனப் பெண்கள் அலெக்ஸின் காதில் விடாது பேசி, கடுப்படித்ததில்,

“ச்சு, ச்சு! சைலன்ஸ்” என்று கத்தியவன், “இப்ப என்ன தான் செய்யனும்ன்றீங்க?” என்றான் சமாதானமாய்.

“ஃபேர்-ஆ ஒரு போட்டி நடத்துங்க” – சக்தி.

“எப்பிடி?, அவனையும் ரெண்டு மணி நேரம் தண்ணிக்குள்ள நிற்கச் சொல்லவா?”

“நோ!”

“பின்ன?”

“யார் ரொம்ப நேரம் தண்ணிக்குள்ள மூச்சடக்குறாங்களோ, அவங்களைத் தான் இந்த கேம் ஓட வின்னரா டிக்லேர் பண்ணனும்”

“ஹே ஹேய்!, ஃப்ஃபூ! இவ்ளோ தானா? இதெல்லாம் என் நண்பனுக்கு ஜூஜூபி!, சசி, ஓகே தான டா?,” என வினவியவன், அவன் பதில் சொல்வதற்குள், “அதெல்லாம் உனக்கு ஓகே தான்” என்று அவனே கூறி விட்டு, “ஓகே, லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்” என்றான்.

“சரி, எல்லாரும் கரைக்குப் போங்க!”

“எதுக்கு?”

“ப்ச், அப்பத் தான் அக்யுரேட்-ஆ ரிசல்ட் சொல்ல முடியும்”

“அப்பிடியா ரா ரவி?, நிஜமா தான் செப்புதா இந்த அம்மாயி” – என்று ரவியிடம் கேட்ட அலெக்ஸ்,

“அதி செப்பேதி வினு ரா”-என்று பதிலளித்தபடி, அவன் இழுத்த இழுப்புக்கு உடன் சென்று, கரையில் நின்றான்.

“கையும்,காலும் எவ்ளோ நீளமா இருக்கு பாரு!, இங்க என்ன இண்டர்நேஷனல் காம்பெடிஷனா நடக்குது?, 1,2,3-ன்னு சொன்னதும் அப்பிடி நீந்துறீங்க?” – அனைவரும் கரையில் நிற்கும் தைரியத்தில்,தன்னருகே நின்றிருந்த சசியிடம் அவள் முணுமுணுக்க,

“போ..போட்டின்னா அப்பிடித்தானங்க?, ஃபேர்-ஆ இருக்கனும் தான?”

“அய்யய்யப்பா!,இவரு பெரிய நியாயவாதி!”

“இப்ப என்னங்க?, இந்த கேம்ல நான் தோற்கனுமா?”

“ஆமா-ன்னா தோத்துடுவீங்களா?”

“முடியாதுங்க! இது என் நண்பனோட மானப் பிரச்சனை!”

“பார்றா”

“எனக்கு அவன் தான் முக்கியம்”

“ஓஹோ!” – முழுக் காண்டுடன் கூறியவள், பக்கவாட்டிலிருந்தவனைத் திரும்பிப் பார்த்து “பார்ப்போம்” என்று பல்லைக் கடிக்க, அவளது மங்காத்தா லுக்கில், மறித்துப் போய், மம்மியாகி நின்ற சசியிடம்,

“நண்பா சியர் அப் டா! எப்பிடியாவது ஜெயிச்சிடு டா ராசா” என்று அலெக்ஸ் கரையிலிருந்துக் கூவ,

“ம்ம்” எனத் தலையாட்டியவன், அவள் புறம் திரும்பாது நின்று கொண்டான்.

அதன் பின்பு அலெக்ஸ், “ஸ்டார்ட்” என்றதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நீருக்குள் மூழ்கினர் இருவரும்.

“1 2 3 4 5 6” எனக் கரையிலிருப்போர் கவுண்ட் செய்து கொண்டிருக்க,

நீருக்கடியே பட்டெனக் கண்ணைத் திறந்த சக்தி, சத்தமின்றி உள் நீச்சலடித்து சற்றுத் தள்ளி நின்றிருந்த சசியின் அருகே சென்று, “பெரிய சின்சியர் சிகாமணி இவுரு” – என்று காண்டாகியபடி அவன் வயிற்றில் டப்,டப் என ரெண்டு கும்மாங்குத்து விட,

எதிர்பாராத அவளது தாக்குதலில் திடுக்கிட்டு, மூக்கு மற்றும் வாய்க்குள் தண்ணீர் புகுந்ததில் திணறி, சட்டென நீருக்குள்ளிருந்து வெளி வந்து ‘லொக்,லொக்’ என சசி இருமவும்,

“ஹேஏஏஏஏஏஏஏஏஏ” – எனக் கூவியது பெண்கள் கூட்டம்.

“கவுத்துட்டான் பன்னாட!” – தரையில் காலை உதைத்துத் தலை முடியைப் பிய்த்துக் கொண்ட அலெக்ஸ், “தண்ணிக்குள்ள மூச்சடக்குறதுல, பெருமாள் பிச்சைக்கு அப்புறம், நீ தான் பெஸ்ட்ன்னு இத்தனை நாளா நம்பிட்டிருந்தேனே டா சசி! இப்பிடிக் காலை வாரிட்டியே டா”

(பெருமாள் பிச்சை- விக்ரமின் சாமி படத்தோட வில்லன்)

-அலெக்ஸ் ஒரு புறம் விடாது திட்டி தீர்க்க,

இங்கு பொறுமையாய் நீரிலிருந்து வெளி வந்தவளை மூச்சு வாங்க நோக்கிய சசி, “கள்ளாட்டம் ஆடுறீங்க நீங்க” என்றான் நல்லவனாய்.

“அப்டியா?” – என விழி விரித்து ஆச்சரியப்பட்ட சக்தி, “முடிஞ்சா ப்ரூவ் பண்ணுங்க” என்று விட்டுத் தன்னை நோக்கி ஓடி வந்தக் கூட்டத்தோடு கலந்து விட்டாள்.

தன் பின்பு அருவியில் குளித்ததால் கிளம்பிய பசியில், நீந்துவன-லிஸ்ட்டில் வரும் அனைத்தையும் கடைபரப்பி ஃபுல்கட்டுக் கட்டிக் கொண்டிருந்த சசியையும்,அலெக்ஸையும் கண்டு ‘ச்சை’ எனத் தலையிலடித்துக் கொண்டாள் சக்தி.

அவள் பார்வை போகும் போக்கைப் பார்த்து அவளது தட்டை எட்டிப் பார்த்த அலெக்ஸ்,

“சாம்பார் சோறு, சேப்பங்கிழங்கு! ஏய்ய் இது தடை செய்யப்பட்டப் பகுதி! தட்டைத் தூக்கிட்டு அந்தப்பக்கம் போ“ என்று விரட்டவும்,

“டேய் விட்றா” என்று முணுமுணுத்த சசியை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“உங்க ஃப்ரெண்டு சைவப் ***** தெரியுமா உங்களுக்கு?” என்றாள் அலெக்ஸிடம்.

“தெரியுமே!, சோறுன்னு வந்துட்டா சாதி பார்க்கக் கூடாதுன்னு நான் தான் அவனுக்கு சொல்லி வளர்த்துட்டிருக்கேன்” – என்று அவன் கூறவும், ‘ஹ்ம்’ என சிலுப்பியபடி நகர்ந்து விட்டாள்.

உண்ட மயக்கம் தீர உறங்கி எழுந்த அனைவரும் மறுபடி ஏரியோரமாய் ஒன்று கூட,

“டேய் சசி இன்னைக்கு சரக்கு இல்லையாடா?” என்ற பரத்திடம்,

“லேடீஸெல்லாம் வர்றாங்க! நைட் ரூம்ல வைச்சுக் குடிச்சுக்கலாம்” என்று சசி பதில் கொண்டிருக்கையில், கூட்டமாய் வந்து விட்ட பெண்களைக் கண்டு அலெக்ஸ்,

“ஓகே!, தூங்கி எழுந்து ஃப்ரெஷ்-ஆ இருக்கீங்களா எல்லாரும்?” எனக் கேட்டான்.

“யெஸ்”

“கேட்கலயே”

“யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”

“குட்!, அப்டின்னா கேம் விளையாடலாமா?”

“என்ன கேம்?” – சக்தி.

“ம்ம்ம்ம், டிக்கிலோனா! என் நண்பனோட விளையாட்றியா?” – தன்னருகே குனிந்து முணுமுணுத்த அலெக்ஸிடம், “சுஷ் மம்மிஇஇஇஇ” எனக் கத்திய சக்தி, “இந்த அலெக்ஸூ” எனத் தொடங்குவதற்குள் அவள் வாய்க்குள் ஆப்பிளைத் திணித்த அலெக்ஸ்,

“ஆப்பிள் வேணும்ன்னா, ஆறு தோப்புக்கரணம் போடனும்ன்னு சொன்னேன்! அதுக்குப் போய் உங்களைக் கூப்பிடுது. ஹிஹிஹி” என இளித்து விட்டு, நீண்ட கயிறொன்றைப் பிரித்துக் கொண்டிருந்த நண்பர்களிடம் ஓடி விட்டான்.

“காலகாலமாக கன்னியரும்,காளையரும் கொண்டாடுகிற, கயிறு இழுக்கும் விளையாட்டைத் தான் நாம இப்போ விளையாடப் போறோம்! அதாவது ரோப் புல்லிங் கேம்ம்ம்ம்” – அலெக்ஸ் பாட்டாகவே பாடியதும்,

“ஓஓஓஓஓ” என்ற கூட்டத்திடம்,

“ஆண்,பெண் பேதமில்லாத இண்டஸ்ட்ரில நாம இருக்கோம்ன்றதால, இருபாலரும் கலந்திருக்கிற மாதிரி தான் டீம்-களை உருவாக்கப் போறோம்! ஓகே?”

“ஓஓஓஓகேஏஏஏஏஏ”

வழக்கம் போல் அனைவரையும் நம்பர் சொல்லச் சொல்லி, odd number-களை ஒரு டீமாகவும், even number-களை மற்றொரு டீமாகவும் சரிசமமாகப் பிரித்தனர்.

சசியின் டீமில் ரவி,போபன் மற்றும் சக்தியுடன் இன்ன பிறரும்,

அலெக்ஸின் டீமில் சுந்தர்,பரத்,பவித்ரா மற்றும் இன்ன பிறர்.

ஜட்ஜாகக் கையில் விசிலுடன் சுஷ்மா.

தடிமனாக இருந்தக் கயிறைக் கையில் வைத்துக் கொண்டு ஆளாளுக்கு வளவளத்துக் கொண்டிருக்க, சுஷ்மாவிடம் கேமின் விதிகளைக் கூறி விட்டுத் தன் டீமினருகே வந்து நின்ற சசி,

கீழிருந்த மண்ணை எடுத்துப் பரபரவெனக் கையில் பூசிக் கொண்டு “வாங்க டா வாங்க டா வாங்க டா” என்று கொக்கரித்தபடிக் கயிற்றைப் பிடித்து முதல் ஆளாக நின்றான்.

“ரெடி?” எனக் கேட்ட சுஷ்மா “ஊஃப்ஃப்ஃப்ஃப்” என விசிலடித்ததும்,

இரு புறமும் கயிறைப் பற்றி முழு பலத்துடன் இரு அணியினரும் இழுக்கத் துவங்க சிரிப்புச் சத்தம் காதை நிறைத்தது.

சசி, “ஹேய்ய்ய்” எனக் கத்தியதும் பதிலுக்கு அலெக்ஸ் அந்தப்புறம் “ஹேய்ய்ய்ய்” என்றான்.

இவன் ‘ஏலேலோ..’ என்றதும், அலெக்ஸ் ‘ஐலசா…’ என்றான்.

ஏலேலோ.. ஐலசா..

அடிக் கருத்தப்புள்ள.. ஐலசா..

என் செண்பகமே.. ஐலசா..

என் செவத்தப்புள்ள.. ஐலசா..

அடி சிங்கா…..ரி….யே” – உற்சாகமாய் மாறி மாறி எசப்பாட்டு பாடியபடி, வியர்வை வழிய கயிறிழுத்துக் கொண்டிருந்தவன், பாடியபடியேத் தன் மீது உரசியக் கையை எதேச்சையாய்த் திரும்பி நோக்குகையில்,

அஷ்டக்கோணலாய் முகத்தை வைத்துக் கொண்டு தம் கட்டிக் கயிறிழுத்தபடித் தனக்கு வெகு அருகே நின்றிருந்த சக்தியைக் கண்டுப் பட்டெனக் கயிற்றை விட்டதில்,

எதிரணி முழுபலத்தையும் போட்டிழுத்துத் தாக்கி, சசி அணியினர் அனைவரையும் கீழே தள்ளி விட்டிருந்தது.

அவன் விட்டு விடுவான் என எதிர்பாராததால், கயிறின் போக்கிற்கு முன்னே சென்ற சக்தி “ஏய்ய் ஏய்ய் ஏய்ய்ய்” – என்றபடித் தடுமாறி அவன் மீதே விழப் பார்க்கையில், அவசரமாய் விலகி நின்றவன்,

தொப்பென அவள் கீழே விழுவதைக் காணாது, காதை மூடிக் கண்ணைப் பொத்தி ‘ஷ்ஷ்ஷ்ஷ்’ என பின்னே ஓடிச் சென்றான்.

“ரேய் சசி, வெதவா!, பிச்சா ரா நீக்கு?”

“எந்தா டா சசி!”

“பைத்தியக்கார நாயே!, ஏன் டா கயறை விட்ட?” – நாற்புறமிருந்தும் விதவித லாங்குவேஜ்களில் கிழி வாங்கிய சசி,

“சாரி டா சாரி டா சாரி சாரி” என்றபடியேக் கடைசி ஆளாக நின்று கொண்டுக் கீழே விழுந்தக் கயிற்றை எடுத்துப் பிடித்து,

“அடுத்த ரவுண்டு,அடுத்த ரவுண்ட் போகலாம்” எனறு சத்தமிட,

மூக்கில் ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்தபடி எட்டி அவனை நோக்கும் சக்தியைக் கண்டு போபனின் முதுகில் மறைந்தவன், “சுஷ் மம்மி, ம்ம்ம்” என்றான்.

அதன் பின்பு சக்தியின் மீதே கவனம் வைத்து, அவன் கேமை கை விட, மாறி மாறி ஜெயித்துத் தோற்ற இரு அணியினரில், கடைசியில் அலெக்ஸின் அணியே வின்னர் என அறிவிக்கப்பட்டது.

“எல்லாம் உன்னால தான் டா” என சசியின் குழுவினர், அவனைக் கிழித்துச் செல்வது கண்டு சங்கடமாக உதட்டை வளைத்துப் பிடரியைக் கோதியவனை, ஊஃப்,ஊஃப் என, சிவந்திருந்த உள்ளங்கையை ஊதியவாறு நின்றிருந்த சக்தி, முறைத்துப் பார்த்தாள், ‘தெண்டம்!, தெண்டம்’ என்றபடி.

டுத்ததாக நெட்டைக் (net) கட்டி ஆடிய வாலிபால் விளையாட்டில் சசி மற்றும் அலெக்ஸிற்கு எதிரணியாக நின்ற சக்தி, “இருக்கு டா உங்களுக்கு” என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் ஜெயிக்கும் போது இடை புகுந்து,

“இதெல்லாம் செல்லாது செல்லாது!, பால் போடும் போது நீ மூஞ்சியை பாக்யராஜ் மாதிரி வைச்சிருந்த”

“இது கையா?, இல்ல கிரிக்கெட் மட்டையா?, எதுக்கு இவ்ளோ வேகமா எறியுறீங்க! இது சரி வராது”

“உங்க டீம் பரத், மூக்கைத் தொடைச்சுக்கிட்டே பந்தை எறிஞ்சான்!, அதான் பவி பந்தை விட்டுட்டா!, கோவிட் கேர்!”

“சுஷ் மம்மி, கேம் ட்ரா!, அலெக்ஸ் கழட்டிப் போட்ட ‘ஷூ’-ல இருந்து வந்த வாடைல எனக்குக் கை சுளுக்கிடுச்சு!, அதான் பந்தை விட்டேன்!”

-என ஏதேதோ காரணங்களைச் சொல்லி, பந்தை வைத்து ஆட வேண்டிய விளையாட்டை, வாயை வைத்தே விளையாடித் தாங்கள் தான் வின்னர் என்று விட்டாள் சக்தி.

“ஏய்ய்ய், நீயெல்லாம் என்னா ஆளு?, பூசணிக்கா!, இனி வாயைத் திறந்தேனா பல்லு பேந்துடும் சொல்லிட்டேன்” – நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு வந்த அலெக்ஸின் முகத்தில் பந்தை விட்டெறிந்து அவன் மூக்கை உடைத்தவள்,

“நீ-லாம் பேசிட்டு தான் இருப்ப! நான் செஞ்சே காட்டுவேன்” – என வீர வசனம் பேச,

மூக்கில் ஒழுகிய ரத்தத்தைத் துடைத்தபடி அலெக்ஸ் சசியிடம், “போதும் டா யப்பா!, என்னால இது கூட போராட முடியாது டா!, ஆனா..ஒன்னு சொல்றேன்! இவளைக் கட்டிக்கப் போறவன் ரொம்பப் பாவம் டா” – எனக் கூற,

“நீ பார்த்த?, வாயை உடைச்சிருக்கனும் உன்னையெல்லாம்” – என விடாது பேசியவளைக் கண்டு பொங்கி அலெக்ஸ், தன் கையிலிருந்த பந்தை அவள் மீது விட்டெறிய,

முதுகைப் பற்றிக் கொண்டு “ஏய்ய்ய்ய், ஏய்ய்ய்.. ஆஆஆஆ” எனக் கத்தியவாறு ஓடியவளையும்,அவளைத் துரத்துபவனையும் கண்டு உடல் குலுங்கச் சிரித்தபடி மணலில் அமர்ந்திருந்த சசி, அணிந்திருந்த ஜெர்கினைக் கழட்டி வீசி விட்டு, அக்கடாவெனச் சாய்ந்து விட்டான்.

“நண்பா, நண்பா டேய்! அந்தப் பலாப்பழம் பந்தை விட்டு அடிச்சதுல, என் பாடி ஃபுல்-ஆ பஞ்சர் ஆகிக் கிடக்கு டா!, வா டா! ஃபால்ஸ்ல போய் ஒரு பாத் எடுத்துட்டு வருவோம்” – என்ற அலெக்ஸ், படுத்திருந்தவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அதன்பின்பு மாலை மங்கி விட, கரையோரம் ஆங்காங்கு கூட்டம் போட்டு அமர்ந்திருந்தவர்களிடம் சுந்தர்,

“நாளைக்குக் காலைல ட்ரெக்கிங் போறவங்க 4.30 மணிக்கெல்லாம் ரெடியா இருங்க. அப்போ தான் 6 மணிக்கு பனசுரா ஹில்ஸ்ல இருந்து சன் ரைஸ் பார்க்க முடியும்!, அதை முடிச்சுட்டு அப்டியே வண்டி ஏறுனா.. நேரா சென்னை தான்” – என்று கூறினார்.

“ம்க்கும், இன்னைக்கு ஆடுன ஆட்டத்துக்கே, செம டயர்ட்! இதுல ட்ரெக்கிங்-ஆ?, சான்ஸே இல்ல” என்றபடி எழுந்து சென்ற பவித்ராவைத் தொடர்ந்து அனைவரும் அறையை நோக்கி நடக்க,

தானும் எழுந்த சக்தியிடம் சுந்தர், “இந்த சசி எங்க போனான்?, நாளைக்கு ரூம்ஸ் செக் அவுட் பத்திக் கேட்கனும்!, சக்தி, கேன் யூ கால் சசி?” என்றதும்,

“யா ஷ்யூர்” என்றபடித் தன் ஃபோனை எடுத்த சக்தி, அவனுக்கு அழைக்கையில்,

அவனது ரிங் டோன் வெகு அருகே ஒலிப்பது கேட்டு, சற்றுத் தள்ளித் தரையில் கிடந்த அவனது ஜெர்க்கினை நோக்கிச் சென்றாள்.

ஜெர்கின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஃபோனை வெளியிலெடுத்தவளிடம்,

“ஓ! ஃபோனை விட்டுட்டுப் போய்ட்டானா?” என்ற சுந்தர், “சரி, அவன் வந்தப்புறம் பேசிக்கலாம்! நீ ரூம்க்கு போ” என்று விட்டு நகர,

முட்டியிட்டபடி அவனது செல்ஃபோனையே நோக்கிக் கொண்டிருந்த சக்தி, சுந்தர் கூறியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

ஏனெனில் அவள் பார்வையும்,சிந்தனையும், அவனது செல்ஃபோன் திரை காட்டிய Kanmani. Calling… -ல் குவிந்திருந்தது!

மெல்ல எழுந்துத் தன் ஸ்வெட்டர் பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி ரிசார்ட்டை நோக்கி நடந்தவளின் கண்களில், தூரத்தில் சுந்தரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் சசி தென்பட்டான்.

தன்னையே அளவிட்டபடி நடையிட்டு வருபவளைக் கண்டும் காணாதது போல் நின்றிருந்தவன், சுந்தர் நகர்ந்ததும், லேசாய் நிமிர்ந்து அவளை நோக்குகையில், அவனருகே நெருங்கியிருந்தாள் சக்தி.

லாபியின் வாயிலில் நின்றிருந்தவனை விடாது பார்த்தபடித் தன் கையிலிருந்த அவனது செல்ஃபோனை அவள் நீட்ட,

“இதெப்பிடி உங்க கைல வந்துச்சு?” – ம்யூட்டில் முணுமுணுத்தவாறு வாங்கிக் கொண்டவனை நேராகப் பார்த்து,

“கண்மணி,ஃபுல்ஸ்டாப்-ங்குற நம்பர்ல இருந்து உங்களுக்குக் கால் வந்துச்சு” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

இன்ஸ்ட்டண்ட்டாகக் கண்ணை விரித்து, வாயைப் பிளந்து, மூக்கு விடைக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன், எச்சில் விழுங்கித் தொண்டைக்குழி ஏறி,இறங்க.. அதிர்வாய்த் துடித்த இதயத்தை மறைக்கும் பொருட்டு, அவள் முகம் பாராது மெல்லத் திரும்பி, “ம்ம்ம்” என்று விட்டு நகர எத்தனித்தான்.

பின் என்ன நினைத்தானோ!, கண்களை அழுந்த மூடித் திறந்து “ஷ்ஷ்ஷ்” என்று விட்டு சட்டெனத் திரும்பி,

நின்ற இடத்திலேயே அசையாதிருப்பவளை நெருங்கி, அவள் கையிலிருந்த, அவளது செல்ஃபோனை பறிக்கப் பார்க்க,

“ஏ..ஏய்ய்” என அனிச்சையாய் இரண்டடி பின்னே நகர்ந்து, சுவரில் இடித்து நின்றவளிடமிருந்து செல்ஃபோனைப் பிடுங்கி, அன்லாக் செய்யப்பட்டிருந்தத் திரையில் அவசரமாய்த் தன் நம்பரை டயல் செய்தான்.

“Metro Train, Calling…” – என்று மின்னியதைப் பார்த்துப் பல்லைக் கடித்து,

“மெட்ரோ ட்ரைனா?” என்றவனைக் கண்டுத் தோளைக் குலுக்கிய சக்தி,

“பின்ன, மாமா-ன்னா வைக்க முடியும்?” எனக் கேட்க,

‘எனக்குப் புரிஞ்சுடுச்சும்மா, புரிஞ்சுடுச்சு! நல்லாஆஆஆப் புரிஞ்சுடுச்சு’ – என்றெண்ணியவாறு அவள் நீட்டிய கையில் பொத்தென ஃபோனை வைத்து விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான் சசி.

அன்றிரவு….

றக்கம் வராது ஏரிக்கரையோரம் ஒற்றை ஆளாக அமர்ந்திருந்த சசி, தன் கையிலிருந்த கேமராவில் இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டிருந்தப் புகைப்படங்களைப் பார்வையிட்டபடி, கழுத்தைத் தடவிக் கொண்டுக் கொட்டாவியை வெளியிட்ட நேரம், அருகில் அரவம் கேட்க, சத்தம் வந்தத் திசையைத் திரும்பி நோக்கினான்.

கழுத்தில் கேமராவும், கையில் பைனாகுலருமாக, மேட்டின் மீது நின்றிருந்த சக்தி, தூரத்தில் தெரிந்த அடர் மரங்களிடையே எதையோ தீவிரமாகப் பார்ப்பது கண்டுப் புருவம் சுருக்கியவன், எழுந்து அவளருகே சென்றான்.

“தூங்காம இங்க என்ன பண்றீங்க?” என்றவனின் கேள்வியில்,

பட்டெனத் திரும்பிய சக்தி, மூக்கை விடைத்து,

“ம்ம்ம்ம், தூர் வாரிட்டிருக்கேன்” என்று பதிலளித்துப் பின், பத்தடி தள்ளி கீழே நின்றிருந்தவனிடம்,

“இங்க வாங்களேன்” என்றழைக்க,

“எ..எதுக்கு?” என்றான் அவன்.

“ப்ச், வாங்க இங்க” என்றவள், அவன் மேட்டில் ஏறித் தன்னருகே வந்ததும் பைனாகுலரை நீட்டி,

“தூஊஊரத்துல மரங்களுக்கிடைல மினுக்,மினுக்-ன்னு ஏதோ மின்னுது பாருங்க” என்றாள்.

பைனாகுலரைக் கண்ணருகே வைத்துப் பார்த்தவனிடம்,

“fireflies போல!, இவ்ளோஓஓஓ fireflies-அ ஒரே இடத்துல மொத்தமா இப்ப தான் பார்க்குறேன்” – வியப்பாய்க் கூறியவளின் குரலிலிருந்தக் குதூகலத்தை உணர்ந்தபடி, மெல்ல அவள் முகம் பார்த்தான் சசி.

கருப்பு லெகிங்க்ஸின் மேலே கருப்பும்,வெள்ளையுமாய்ப் பெரிய,பெரிய கட்டங்களிட்ட, காலர் வைத்த நீளச் சட்டையணிந்திருந்தாள்.

குளிருக்கு இதமாய்க் காதை மறைத்தபடி, அவள் விரித்து விட்டிருந்தக் கூந்தல், தோளில் வழிந்து கொண்டிருந்தது.

சிவந்திருந்த மூக்கு நுனி, சிகப்பு மூக்குத்தியோடு போட்டி போடும் அழகைப் பார்த்தபடி அசையாது நின்றவனைத் திரும்பி நோக்கியவள், அவன் பார்வை கண்டு வழக்கம் போல் உதட்டை வளைத்தாள்.

“குடிச்சிருக்கீங்களா?”

“லை..லைட்-ஆ” – அவள் கேள்வியில் ஜெர்க் ஆகி அவசரமாய்ப் பார்வையை மாற்றியபடி அவன்.

“ஓ! லைட்-ஆ குடிச்சாலே இப்பிடி நாறுமா?” – இருவருக்குமிடையேயான இடைவெளியைப் பார்த்தபடிக் கூறியவளைக் கண்டுப் பின்னால் நகர்ந்து, நான்கடித் தள்ளி நின்றவன்,

“இப்போ ஓகே-ங்களா?” என்றான்.

அவன் கேள்வியை டீலில் விட்டு, “நான் அங்க போய் ஒரு ஸ்நாப் எடுக்கலாம்ன்னு இருக்கேன்!, நீங்க வர்றீங்களா?” என்றாள்.

“எங்க?”

“மின்மினிப் பூச்சிங்கக் கிட்ட”

“என்ன, விளையாடுறீங்களா?, கும்மிருட்டா இருக்குப் பார்த்தீங்கள்ல! பாம்பு கடிச்சாக் கூடத் தெரியாது”

“அதுக்குத் தான் உங்களைக் கூப்பிட்றேன்!, என்னைப் பாம்பு கடிச்சு நான் ‘ஆஆஆ’-ன்னு விழுந்துட்டா, நீங்க ஓடிப் போய் ஆளைக் கூட்டி வருவீங்கள்ல!”

“அப்பிடி ரிஸ்க் எடுக்கனுமா?”

“நான் போகப் போறேன்! நீங்க வராட்டிப் போங்க?” – என்றபடி, மேட்டிலிருந்து இறங்கியவளைத் தொடர்ந்து,

“இருங்க,இருங்க நானும் வரேன்” – என்று பதறியவாறு உடன் சென்றான் சசி.

ரிசார்ட்டிலிருந்து ஏரியைத் தாண்டி மரங்களடர்ந்திருந்தக் காட்டுப் பாதைக்குள், செல்ஃபோன் டார்ச்சின் உதவியுடன் இருவரும் நடக்கத் தொடங்கினர்.

மழை வரப் போவதற்கான அறிகுறியாக பளிச்சிடும் மின்னலோடு, வானம் இடி இடிக்கத் தொடங்க, விர்,விர்ரென அடித்தக் குளிர்காற்றைச் சமாளிக்க முடியாதுத் திணறியபடி, இரு கைகளையும் மார்போடு கட்டிக் கொண்டு உடன் நடந்தவளிடம்,

“ஏன் ஸ்வெட்டர் போடாம வந்தீங்க?, குளிரலையா?” எனக் கேட்டான்.

“குளிருது!, ஏதோ ஒரு ஆர்வத்துல ஸ்வெட்டர் போட மறந்து கிளம்பிட்டேன்!, ஏன், நீங்க உங்க ஜெர்கினைக் கழட்டிக் கொடுக்க மாட்டீங்களா?”

“எனக்கு மட்டும் என்ன இரும்பால செஞ்ச உடம்பா?, எனக்குக் குளிராதா?” – நியாயமாய்க் கேள்வி கேட்டவனைக் கண்டு, “கஷ்டம், கஷ்டம்” என்று புலம்பியபடி விறுவிறுவென முன்னே சென்ற சக்தி,

“ஆமா, உங்க பேஜ்க்கு ஏன் மூன் அண்ட் ரெய்ன்னு பேரு வைச்சிருக்கீங்க?” எனக் கேட்டாள்.

பின்னால் நடந்தபடி அவன்,

“அதுக்கு ஒரு காரணம் இருக்குங்க” என்றான்.

“என்ன காரணம்?”

“மழைக்காலத்துல வர்ற நிலா, ரொம்ப ஸ்பெஷல்ங்க!, அது கொஞ்சம் சேட்டை பிடிச்சதும் கூட!”

“ஹாஹா!, ஏன் அப்பிடி சொல்றீங்க?”

“வெயில்காலம்,குளிர்காலம், பனிக்காலத்துல வர்ற நிலாவையெல்லாம், வானத்தைப் பார்த்து நீங்க எந்தத் தொந்தரவுமில்லாம நிம்மதியா ரசிக்கலாம்!, ஆனா.. இந்த மழைநிலா இருக்கு இல்லீங்களா?, அது அவ்ளோ சீக்கிரம் நமக்கு முகத்தைக் காட்டாதுங்க!,

கரு மேகத்துக்குள்ள மறைஞ்சு நின்னு, ஆட்டம் போட்டு, போக்குக் காட்டி நம்மைக் காத்திருக்க வைக்கும்!, மழை கொட்டத் தொடங்கிட்டா, இன்னும் குஷி தான் அதுக்கு!, விடாம கண்ணுக்குள்ள ஊசி மாதிரி விழுகுற மழைத்தண்ணியை சகிச்சுக்கிட்டு நிமிர்ந்து வானத்தைப் பார்க்க முடியாம, நாம படுறபாட்டை ரசிச்சு ‘முடிஞ்சா என்னைப் பாருடா பார்ப்போம்’-ன்னு சவால் விடும்! சிம்பிளா சொல்லனும்ன்னா, உங்களை மாதிரிங்க... காம்ப்ளிகேடட்!”

-பேச்சோடு பேச்சாகக் கூறி விட்டவன், பின் நாக்கைக் கடித்து,

“வ…வந்து” என்று திணறி,பின் அவசரமாய் “ஏங்க, ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றான்.

நின்று என்னவெனக் கேட்டவளிடம் இடது பக்கம் கண்ணைக் காட்டியவன், மெல்ல நடந்து அருகே சென்று,

மழைத் தண்ணீரில் நீராடி, முத்து,முத்தாய் வீற்றிருந்த நீர்த்துளிகளோடு, மரத்தின் மீது மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த வெள்ளி நிறப் பாம்பின் மீது, வெளிச்சமடித்து, கோணம் பார்த்து, அதைத் தன் கேமராவில் க்ளிக்கிக் கொண்டு “போலாம்” என்றான்.

பத்தடித் தள்ளி நின்றவள், பாம்பைப் பார்த்தும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது முன்னே நடப்பதைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன்,

“பயமா இருக்குன்னா சொல்லிடுங்க” என்றான்.

“எனக்கென்ன பயம்?”

“பாம்பைப் பார்த்து பயம் இல்லையா?”

“நீங்க பயந்தீங்களா?”

“அதை நாம டிஸ்டர்ப் பண்ணாம இருந்தோம்ன்னா, அது ஒன்னும் செய்யாதுங்க”

“அந்த அறிவு எனக்கும் இருக்கு”

“ம்க்கும்” – என்றவன் அதன் பின் மௌனமாய் அவளைப் பின் தொடர, லேசாய்த் தூறல் விடத் துவங்கியது வானம்.

தங்களிருவரையும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தப் பௌர்ணமி நிலவை அண்ணார்ந்து நோக்கினாள் சக்தி.

அவன் கூறியது போல், முகத்தில் விழும் மழைத்தூறலைத் தாண்டி, நிலவை தரிசிப்பது சற்றுக் கடினமாக இருக்க,

“இத்தனை நாள் உங்களை ஒரு எடுபட்ட பய-ன்னு நினைச்சிட்டிருந்தேன்! ஆனா.. உங்களுக்குள்ளயும் ஒரு ஏஸ்தடிக் சென்ஸ் இருக்கு பாருங்களேன்” என்றவளுக்குப் பதில் கூறாமல்,

சத்தமின்றி சிரித்துக் கொண்டான் அவன்.

கொரட்,கொரட்ட்டெனத் தவளைக் கத்தும் சத்தமும், பூச்சிகளின் ரீங்காரமும், அவர்களது காலடிச் சப்தத்தோடு உடன் வர, மெல்லிய தூறல்களின் நடுவே, குளிர்க்காற்றளித்த மண் வாசனைக்கிடையே நடப்பது சொர்க்கமாக இருக்க,

இரு கைகளையும் நீட்டி, மூச்சிழுத்து சுவாசித்தவள்,

‘நான் எட்டுத்திக்கும் அலைகிறேன், நீ இல்லையென்று போவதா..,

அட, பற்றி எரியும் காட்டிலே, நான் பட்டாம்பூச்சி ஆவதா….’ – என முணுமுணுக்க..

விரிந்த அவள் கைகளுக்கிடையே புகுந்து கொள்ளத் துடித்த உடலின் புது வேட்கை புரியாது, மூச்சடக்கி நின்றவன், அதிவேகமாய் அடித்துக் கொண்ட இதயத்தின் ஓசையில் திணறி, கதகதத்த நெஞ்சின் சூடு தாங்காது, மார்பைத் தேய்த்தபடி, விறுவிறுவெனத் திரும்பி நடந்தான்.

அவனது வேக நடையின் ஓசை கேட்டுத் திரும்பியவள்,

“எங்க, எங்க போறீங்க?” எனக் கத்திக் கேட்க,

ஒரு நொடி நின்றவன் பின், அவள் முகம் பாராது,

“என்ன நினைச்சுட்டிருக்கீங்க உங்க மனசுல?” என்றான் லேசான கோபத்துடன்.

புரியாமல் கண்ணைச் சுருக்கி, “என்ன?” என்றவளிடம்,

“அர்த்த ராத்திரி, நிலா வெளிச்சத்துக்குக் கீழ, மழைல நனைஞ்சுக்கிட்டுக் காட்டுக்குள்ள தன்னந்தனியா ஒரு பொண்ணு கூட நடக்குறேன்!, கையை நீட்டி சூழ்நிலையை ரசிச்சு அனுபவிக்கிற அந்தப் பொண்ணை, அமைதியா கைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்குறதுக்கு என்னை என்ன சின்னப்பையன்னு நினைச்சீங்களா?” என்று கரகரத்தக் குரலில் கூறியவன்,

“என்னை டெம்ப்ட் பண்றீங்க நீங்க” என்றான் இயலாமையோடு, முனகலாய்.

அவன் பேச்சில் விழி விரிய நின்றவளின் நெஞ்சும் நடுக்கம் கண்டிருக்கவேண்டும்!,

ஒரு நொடி வாயடைத்துப் போனவள், அவன் வார்த்தைகளால் வரண்டு விட்டத் தொண்டையை எச்சில் விழுங்கி நனைத்துப் பின் மெல்ல,

“இனி பாடல! வாங்க” என்றாள்.

“……………” – அவன் அப்போதும் மௌனமாய் நிற்பது கண்டு,

“வாங்ங்ங்ங்ங்க…” என்று அவள் அழுத்தமாய் அழைத்ததும்,

அவன் திரும்பும் நேரம், அவளும் முன்னே திரும்பி, தன் முகத்தை அவனுக்குக் காட்டாது மறைத்துக் கொண்டாள்.

அவன் நடக்கத் தொடங்கியதை உணர்ந்து, தானும் எட்டு வைத்தவள், பல்லைக் கடித்து, கண்களை அழுந்த மூடி, உள்ளங்கையை இறுக்கிக் கொண்டாள்.

அவன் மொழியால், நொடியில் காற்றின் தட்பவெப்பநிலை மாறி, அவளை வியர்க்கச் செய்ய, சங்கடமாகி விட்ட சூழ்நிலையை மாற்றத் தெரியாது, தன்னைத் தானே கடிந்தபடி மூச்சு வாங்க நடந்தவள்,

நீள நீளமாய் வளர்ந்து நின்ற புற்களுக்கிடையே மினுக்,மினுக் என பளிச்சிட்டபடி மிதமான வேகத்துடன் பறந்து திரிந்த ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகளைக் கண்டு அப்படியே நின்று விட்டாள்.

அவள் பின்னே நான்கடி இடைவெளியில் நின்றவனின் பார்வை முழுதும், பூச்சிகளை வியப்பாய் நோக்கும் பூவையின் மீது மட்டுமே!

கழுத்திலிருந்தக் கேமராவை இயக்கி, அங்குமிங்கும் நடந்தவாறு சில,பல படங்களை க்ளிக்கிக் கொண்டவள், புல்லின் மீதமர்ந்து, இறக்கையை விரித்தபடி ஆன் அண்ட் ஆஃப் மோடிலிருந்த பூச்சியை வீடியோவாகவும் பதிந்து கொண்டாள்.

பாக்கெட்டுக்குள் கை விட்டபடி அவள் செய்கையைக் கவனித்து நின்றவனின் புறம் திரும்பி,

“நீங்க எடுக்கலையா?” எனக் கேட்டாள்.

இல்லையென்பது போல் தலையாட்டியவனிடம், தன் கேமராவை நீட்டி,

“என்னை எடுங்க” என்றவள், கூந்தலை நீவிச் சரி செய்து, கையைக் கட்டிக் கொண்டு, லேசாய்த் தலை சாய்த்து நின்று போஸ் கொடுத்தாள்.

வான்நிலவின் வெளிர் நிறத்திற்குக் கீழே, மஞ்சள் பூச்சிகளின் ஒளியை முகத்தில் பிரதிபலித்தபடி, சிகப்பு மூக்குத்தி மினுமினுக்க, தங்கச் சிலையாய் நின்றவளை, கேமராவில் மட்டுமல்ல… தன் உள்ளத்திலும் பதுக்கிக் கொண்டான் அவன்.

“சைட்-ல பாருங்க” – என்று அவன் கூறியதும், காதோரம் முடியை ஒதுக்கியபடி, பக்கவாட்டில் திரும்பியவளின் முகத்தில் மூக்குத்தியை ஃபோகஸ் செய்து ஒரு ஸ்டில் எடுத்தான்.

பின்னால் மஞ்சள் ஒளிக்கு நடுவே, அவள் மூக்குத்தியின் சிகப்பு நிறம் புகைப்படத்தில் பளீச்சிட்டது.

அதன் பின்பு சடசடவென வேகமாய்ப் பொழியத் துவங்கிய மழையிலிருந்துத் தப்பிக்க எண்ணி, இருவரும் கடகடவென ரிசார்ட்டை நோக்கி ஓடினர்.

மூச்சு வாங்க ஓடி வந்து, ரிசார்ட்டின் நுழை வாயிலில் நின்றதும், லொக்,லொக் என இருமி நெஞ்சைத் தேய்த்தபடி, மூச்சு வாங்கியவளிடம்,

“பெரிய வண்டர் வுமன்! தேவையா இதெல்லாம்?” என்று அவன் முணுமுணுக்க, பதில் பேசாமல், தண்ணீர் வைக்கப்பட்டிருந்த இடத்தினருகே சென்று, தண்ணீர் எடுத்துக் குடித்து விட்டு, அறையை நோக்கி நடந்தாள் அவள்.

எப்போதும் தான் ஒரு வார்த்தை பேசினால், நாற்பது வார்த்தையில் பதிலளிப்பவள், தன் முகம் பாராது அமைதியாய் நடந்து செல்வது கண்டு, சசிக்கு ஒரு மாதிரியாகி விட,

‘ஒரு பொண்ணுக் கிட்டப் போய் இப்பிடியாடா, கண்டதையும் பேசுவ!, அந்தப் பொண்ணு செருப்பைக் கழட்டி சாத்தியிருந்தா, என்ன பண்ணியிருப்ப!, தப்பா நினைச்சுக்கிட்டாளோ! இனி பேச மாட்டாளோ!’

-ஏதேதோ எண்ணிப் புலம்பிய மனதைக் கட்டுப்படுத்த முடியாது…

“வ…வந்து…” என்று தொடங்கினான் அவன்.

அவன் முகம் பாராது நின்றவளிடம், “உ…உங்க வாய்ஸ் நல்லா இருந்துச்சுங்க” எனப் பெரிதாய் ஆரம்பித்தவன், “புஷ்பவனம் குப்புசாமி வாய்ஸ் மாதிரி” என மெலிதாய் முடிக்க,

வெடுக்கெனத் திரும்பி அவன் முகம் பார்த்தவளிடம், பற்கள் தெரியப் புன்னகைத்து “குட்நைட்ங்க” என்று விட்டு ஓடிச் சென்றான் அவன்.

புஷ்ப..வனம்.. குப்பு..சாமியா??, யார்றா அவுரு??

றுநாள் காலை ட்ரெக்கிங் சென்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சில பெண்களில்… சக்தியும்!

“பானை மாதிரி பாடியை வைச்சுக்கிட்டு, வெக்கு,வெக்குன்னு எப்பிடி ஏறுது பாரேன்” – என சசியிடம் கூறிய அலெக்ஸ்,

“ஏம்மா, இதுக்கு முன்னாடி மலை ஏறியிருக்கியா?” என்றான் அவளிடம்.

மூச்சு வாங்க, ஏறிக் கொண்டிருந்தவள் அவனிடம்,

“எவரெஸ்ட்ல முதல்முதலா காலை வைச்ச எட்மண்ட் ஹிலாரி என் பெரியப்பா தான்! அது தெரியுமா உனக்கு?” எனக் கேட்க,

“இதெல்லாம் காமெடின்னு உனக்கு யாரு சொன்னா?” என எரிச்சலடைந்த அலெக்ஸ்,

“ஓரேய் ரவி, நில்லு ரா! நானும் வஸ்தானு” என்றபடி ரவியிடம் சென்று விட்டான்.

ஆங்காங்கு நின்று,அமர்ந்து இளைப்பாறி அனைவரும் மலை உச்சியை அடைகையில், அங்கு இவர்களுக்காக.. சொர்க்கம் பச்சை ஆடையுடன்.. பகட்டாக விரிந்திருந்தது.

லேசாய் வானத்தில் வெளுப்பை பரப்பி, தன் பொற்கரங்களைத் தூரிகையாக்கி மஞ்சளையும்,பொன் நிறத்தையும் ஊற்றி, ஓவியம் தீட்டியபடி, கம்பீரமாய் வெளி வந்த சூரியனை..

குளிர்க்காற்றில் அடைத்து நின்ற காதோடு, கட்டுப்படுத்த முடியாது மூக்கில் வழிந்த நீரோடு,

“வாஆஆஆவ்வ்வ்வ்” என்றபடி ஆ-வென பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

அடுத்தடுத்துக் கேட்ட கேமராக்களின் க்ளிக் சத்தங்கள், சூரியனின் சம்மதமின்றியே, அவரைப் பலவிதமாய்ப் படமெடுத்துக் கொண்டிருந்தது.

சசியினது கேமராவின் கோணத்தை ரசித்துப் பார்த்தபடி நின்றிருந்த மக்களைக் கண்டு உதட்டைப் பிதுக்கிய சக்திக்கு, முழு ஆரஞ்சாய் ஜொலித்து நின்ற வெய்யோனைக் காணக் கண்கள் போதவில்லை.

அதன் பின்பு கொண்டு வந்திருந்த ஸ்நாக்ஸைத் தின்றபடி நேரத்தை ஒப்பேற்றி விட்டு, ஒவ்வொருவராய் மலை இறங்கத் தொடங்கினர்.

அதுவரை தன்னை ‘செலிப்ரிட்டியைப்’ போல் உணர வைத்தவர்கள், இப்போது கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது கண்டு கோபம் வந்ததாலோ என்னவோ, சூரியன் சொகுசாய் மேகத்துக்குள் மறைந்து விட, டல்லடித்த வானம், மேகத்தின் நிறத்தைக் கருப்பாய் மாற்றிக் கொண்டிருந்தது.

“ஷ்ஷ்ஷ், வர்ஷம் வச்சேனட்டுந்தி! தொந்தரவுகா வெல்லண்ட்-ரா” – என அனைவரையும் விரட்டிய ரவியைக் கண்டு கொள்ளாது, கேமராவைக் கையில் தூக்கியபடி, எதையெதையோ இஷ்டத்திற்குப் படமெடுத்துக் கொண்டிருந்த சக்தி,

நடை பாதையிலிருந்து விலகி, அருகிலிருந்தப் பாறையில் குதித்து, மரங்களின் நடுவே மறைந்து போன சசியைக் கண்டுப் புருவம் சுருக்கியபடித் தானும் அவன் சென்ற பாதையில் குதித்தாள்.

“ஏய் ஏய்.. சக்தி…” என்ற பெண்களிடம்,

“போய்க்கிட்டே இருங்க! நான் ஜாயின் பண்ணிக்கிறேன்” எனக் கூறியவள், ஒவ்வொரு அடியாகக் கவனமாக எடுத்து வைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

சரிவான மலைப்பாதையின் பக்கவாட்டில், சில,பல மீட்டர் தொலைவில்..அடர் மரங்களுக்கு நடுவே மறைந்திருந்த அந்தக் குட்டி நீர்வீழ்ச்சியைக் கண்டுத் திகைப்பில் தோன்றிய புன் சிரிப்புடன், முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்தபடி நின்றவன்,

பின்னால் “வாவ்வ்வ்வ்” என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.

சரம்,சரமாய்த் தொங்கிய விழுதுகளை விலக்கியபடி தட்டுத் தடுமாறி உள்ளே நுழைந்து கொண்டிருந்த சக்தி, “ப்யூட்ட்ட்ட்டிஃபுல்” என வாயைப் பிளந்தபடிக் கழுத்திலிருந்த கேமராவைத் தூக்கி க்ளிக்கத் தொடங்க,

இருபுறமும் தலையசைத்துச் சிரித்தபடி, தன் கையிலிருந்த கேமராவில் மூழ்கிப் போனான் சசிதரன்.

பாசி பிடித்திருந்தப் பாறையிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்த ஓணான், மழைக்குச் சிலிர்த்துப் போயிருந்த இறகுகளோடு, டௌய்ங்-என நின்றத் தலை மயிரோடு, மரத்தில் அமர்ந்திருந்த மஞ்சள் குருவி, மரத்திலிருந்துத் தாவிக் கொண்டிருந்தக் காட்டு அணில் என அவனது கேமரா கண்கள், மங்கிய வெளிச்சத்தின் கீழ் திரிந்த உயிரினங்களை படபடவென க்ளிக்கிக் கொண்டிருந்தது.

“ஹே மயில், மயில்… மயில் பாருங்க” – எனக் கூவியபடி அவனருகே வந்த சக்தி, தன் தோற்றத்திற்கு மாறாய் கேவலமான குரலுடன் கத்தும் மயிலைக் கண்டு, திகைத்தபடி, “முதன் முறையா மயில் சவுண்டு விட்டுக் கேட்குறேன்” எனக் கூறி, “ஏறக் கஷ்டப்பட்றேன்ல?, ஒரு கை கொடுங்களேன்” என்றாள்.

அவள் கூவியதெதையும் அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

விடாது சிந்திய தூறலால், அவன் அணிந்திருந்த சட்டையின் மேற்பகுதி முழுதும் தண்ணீர்த் தடங்கள் தாறுமாறாய்ப் பரவியிருந்தது. கேமராவைக் கையில் பிடித்தபடிப் பொறுமையாக, எதிரில் இருந்த மரத்தில், இலையோடு,இலையாகப் பச்சை நிறத்தில் தலையை நீட்டி நின்றிருந்த பாம்பை ஃபோகஸ் செய்து கொண்டிருந்தான்.

“ஹலோ.. உங்களைத் தான்!” – என்றவள், திரும்பி அவன் ஃபோகஸ் இருக்கும் இடத்தை நோக்கி,

“மறுபடியும் பாம்பா?, போன ஜென்மத்துல பாம்பாட்டியா பிறந்திருப்பீங்க போல!, எப்பப் பாரு, பாம்பையே ஃபோட்டோ எடுக்குறீங்க?” எனத் திட்ட,

அவளது சலசலப்பு, அவனைக் கவனம் சிதறச் செய்ததில் கடுப்பாகி,

“ப்ச்,என்ன பிரச்சனை உங்களுக்கு?” எனக் கடிந்தபடி,

கீழே நின்றிருந்தவளின் முதுகில் கை கொடுத்து, அவள் அணிந்திருந்த ‘Back Bag’-ஐ இறுகப் பற்றியவாறு, ஒற்றைக் கையாலேயே அவளைத் தூக்கித் தன்னருகே நிறுத்தினான்.

அவன் தூக்கியதும் மூச்சை நிறுத்திக் கவனமாய்ப் பார்வையை வேறு புறம் வைத்துக் கொண்டவளை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

தன் வேலை முடிந்ததென்பது போல் மீண்டும் கேமராவைத் தூக்கி, பச்சை நிறப் பாம்போடு அவன் ஐக்கியமாகி விட, இடுப்பில் கை வைத்துப் பல்லைக் கடித்தபடி அருவியை நோக்கியவள் பின், அவனைக் கீழ் கண்ணில் நோட்டம் விட்டாள்.

‘எங்க இருந்து வந்துச்சு இவனுக்கு இவ்ளோ தைரியம்?, நேத்துல இருந்து இவன் பேசுறதும்,செய்றதும், சுத்தமா சரியில்லையே! பயம் விட்டுப் போச்சோ!’ – என்றெண்ணியவாறு, எகத்தாளமாய் அவனைப் பார்த்து வைக்க..

அவசரமாய், அவளைத் தூக்கி நிறுத்தியதோடு, அந்தக் கணத்தை மறந்தே விட்டவனுக்கு, இவள் பார்வையின் காட்டம் எட்டவேயில்லை!

பின் அவள், மயிலையும்,குயிலையும்,பட்டாம்பூச்சியையும், மீன் குஞ்சையும் ஆசை தீர புகைப்படமெடுத்து முடிக்கையில், டக்,டக் எனப் பாறைகளின் நடுவே குதித்து, வந்த பாதையின் எல்லையில் நின்றவன், திரும்பி அவளைப் பார்த்து,

“வர்றதா இல்லையா?” எனக் கேட்டான்.

“இதோ” என்றவள் தட்டுத்தடுமாறி நடந்து வந்து.. அவனோடு இணைந்து கொண்டாள்.

அதன் பின்பு ரிசார்ட்டுக்குத் திரும்பிய அனைவரும் ஒரு வழியாக தங்களது மூன்று நாள் ட்ரிப்பை முடித்துக் கொண்டு, ஊர் திரும்ப வேன் ஏறினர்.

போகும் போது இருந்த உற்சாகம், திரும்புகையில் மறைந்து விட, ஆளாளுக்கு அமைதியாய் இருக்கையில் செட்டில் ஆகினர்.

ஜன்னலோர சீட் ஒன்றில் காலைத் தூக்கியமர்ந்தபடித் தலை சாய்த்துத் தன் கேமராவிலிருந்தப் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சக்தி,

“ஏய்ய் காலைக் கீழ போடு! வேற சீட் இல்ல, நான் உட்காரனும்” என்று அதட்டியபடி அலெக்ஸ் தன்னருகே வருவது கண்டு, அவசரமாய் கேமராவை ஆஃப் செய்தாள்.

“என்னைப் பார்த்ததும் எதுக்கு கேமராவை அமத்திப் போட்ட?, அவ்ளோ மரியாதையா என் மேல?” – எனக் கலாய்த்ததும் உதட்டைப் பிதுக்கியவள், ஐ மாஸ்க்கை மாட்டிக் கொண்டு, ஜன்னலில் சாய்ந்து உறங்கி விட்டாள்.

அதற்குப் பிறகான 10 மணி நேரப் பயணம் முடிந்து, நடுராத்திரியில் சென்னை வந்திறங்கினர்.

“என் கூட ஹாஸ்டல் வா சக்தி!, வீட்டுக்கு நாளைக்குப் போய்க்கலாம்! இப்ப எப்பிடி தனியா போவ?”

“அதெல்லாம் போயிடுவேன்! வண்டில தான போறேன்?, நாளைக்கு நான் வர்க் ஃப்ரம் ஹோம் தான்!, பயங்கர டயர்ட்! ஆஃபிஸெல்லாம் வர முடியாது” – என்ற சக்தி பாய் சொல்லி விட்டுத் தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.

பரத், போபனின் வண்டியில் ஏறிக் கொள்ள, பவித்ராவை ரவி ட்ராப் செய்வதாகக் கூறித் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

(van) வேனிற்கு அமௌண்ட் செட்டில் செய்து விட்டுத் தன் வண்டியருகே வந்த சசி, தன் ஸ்கூட்டியில் சாவியை திணித்துக் கொண்டிருக்கும் சக்தியைக் கண்டபடி, ஹெல்மெட்டை மாட்டினான்.

பின் தன் வண்டியிலேறி அமர்ந்து ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தவனை உணர்ந்தபடி, ஒரு நொடி யோசித்த சக்தி பின், சாவியைக் கையில் எடுத்து, அவனருகே சென்று நின்றாள்.

வண்டியை வளைத்தவன், தன்னருகே வந்து நின்றவளைக் கண்டு, ஹேண்டில் பாரை முறுக்கியபடி,

“அண்-டைமா இருந்தா உங்கப்பாவைக் கூப்பிடுங்கன்னு சொன்னேன்ல?” என்றான்.

“எங்கப்பா ஹார்ட் பேஷண்ட். Off-hours-ல கூப்பிட்டா அவருக்கு அட்டாக் வந்துடும்” – என்றவளை ‘அய்யய்ய’-வென நோக்கி விட்டு,

“சரி, வண்டி எடுங்க” என்றான்.

“எடுத்து?”

“வீட்டுக்குப் போங்க”

“தனியா போனா பரவாயில்லையா?” – நக்கலாய் வினவியவளிடம்,

“நான் பின்னால ஃபாலோ பண்றேன்!, நீங்க போங்க” – என்றான் அக்கறையாய்.

அது பிடித்திருந்தாலும், அவாய்ட் செய்து, “வேண்டாம்!, என் ஸ்கூட்டி இங்கயே இருக்கட்டும், நான் நாளைக்கு எடுத்துக்கிறேன்” – என்றாள்.

“அப்புறம் எப்பிடி வீட்டுக்குப் போவீங்க?”

“நீங்க என்னை ட்ராப் பண்ணுங்க” – ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாய் உச்சரித்தவளைக் கண்டு வாயைப் பிளந்தான் சசி.

அசால்ட்டாய் சொல்லி விட்டு அவள் கழுத்தைச் சொரிந்து கொண்டிருக்க, அவன் என்ன பதில் கூறுவதெனத் தெரியாது, திகைத்துப் போய் அமர்ந்திருந்தான்.

அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தவள், “சரி, நீங்க ரொம்ப யோசிக்குறீங்க! நான் அலெக்ஸ் கூட போய்க்கிறேன்” என்றவாறு நகரப் பார்க்க,

“ஏங்க, ஏங்க” என்றழைத்து நிறுத்தியவன்,

அவள் முகம் பாராது, “ஏ..ஏறுங்க” என்றான்.

“ம்ம்????, கேட்கல” – கையைக் கட்டிக் கொண்டு நின்றவளிடம் நிமிர்ந்து அவன், பின்னோக்கி கையைக் காட்டி, கண்ணைச் சுருக்கி “ஏறுங்க ப்ளீஸ்” என்பது போல் பார்க்கவும், புன்னகையை அடக்கி, அவன் பின்னே ஏறியமர்ந்தாள்.

ஆர்ப்பரித்த இதயத்தை அடக்கப் பெரிதாய் மூச்சை இழுத்து வெளியேற்றியவன், கண்ணை இறுக மூடித் திறந்து, ஹேண்டில் பாரை இறுக்கிப் பிடித்துப் பின் பக்கவாட்டில் திரும்பி,

“போலாமா?” எனக் கேட்டு, அவள் “ம்” என்றதும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

இருவரையும் வாயைப் பிளந்தபடி பார்த்த அலெக்ஸிடம், விரல்களை ஆட்டி, பல்லைக் காட்டி ‘பாய்ய்ய்ய்ய்’- என ராகமிழுத்த சக்தி,

“ஏய்ய்,ஏய்ய்ய், இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்ன்னு ஒழுங்கு மரியாதையா சொல்லிட்டுப் போ” என்று குதித்த அலெக்ஸை கண்டு கொள்ளாது,

கம்பியைப் பற்றிக் கொண்டு, கவனமாய் அமர்ந்தாள்.

கண்ணியமான இடைவெளியில் கணக்கச்சிதமாய் தன்னைப் பொருத்தியபடி அவளும்,

ஸ்பீட் ப்ரேக்கரைப் பூக்குவியல் போல், நிதானமாகக் கையாண்டபடி அவனும்,

ஒருவரையொருவரின் இருப்பை உணர்ந்தபடி, இருவருக்குமிடையே நீண்டிருந்த ஓரடி இடைவெளியை, மௌனத்தால் நிறைத்து.. அந்தக் குளிர் இரவின் சிலிர்ப்பை அனுபவித்தபடி, தங்களது நெடு நீண்ட வாழ்வின்.. முதல் பயணத்தை அழகாய்த் தொடர்ந்தனர்...

துணுக்…. துணுக்… துணுக்ஸ்ஸ்ஸ்ஸ்…

‘வேணும்ன்னு தான பண்ணீங்க?’ – எனக் கேட்டு சக்தியை வெறுப்பேற்றிப் பின் திக்கித் திணறி சசி, சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திய நாள் அன்று,

‘போய்யா யோவ்’ – என சலித்து ஃபோனைக் கட் செய்தவளைக் கண்டு சிரிப்புடன் ஒரு நொடி ஃபோனை நோக்கிப் பிடரியைக் கோதியபடி நின்றவன்,

பெருமூச்சை வெளியிட்டு, தூரத்தில் தெரிந்த சாலையை வெறித்தான்.

பின் சில் காற்று தாங்காது, சில்லிட்டு சிலிர்த்து நின்ற காது நுனியை ஒரு கையால் தடவியபடி, மறு கையால் ஃபோனை அன்லாக் செய்தான்.

சற்று முன் டயல் செய்த சக்தியின் அலைபேசி எண்ணைத் தடவிய அவன் விரல்கள், மெல்ல அதை எடிட் செய்தது.

Sakthi S- என ட்ரூ காலர் காட்டிய அவள் பெயரை, அப்படியே ‘save’- செய்திருந்தவன், இப்போது அதை எடிட் செய்து, ஒவ்வொரு எழுத்தாக அழித்தான்.

S i h t k a-வரை டெலிட் பட்டனைக் க்ளிக்கிய அவன் விரல்கள் கடைசி லெட்டரில் நின்று விட, பின் “ப்ச்” என்றபடி முன்னுச்சி முடியைக் கோதியவன், ஃபோனை லாக் செய்து ஷார்ட்ஸ் பாக்கெட்டுக்குள் இட்டான்.

அடுத்த இரண்டு நிமிடங்கள், இங்குமங்கும் நடந்து, கண்ணை மூடிக் கழுத்தைத் தடவி, கையை நீட்டி சோம்பல் முறித்து, தோளை இறுக்கி, தரையிலிருந்த ஈரத்தைப் பொருட்படுத்தாது, 10 புஷ் அப் எடுத்துப் பின் எரிச்சலாகி நிமிர்ந்து, மூச்சு வாங்கத் தன் செல்ஃபோனைக் கையிலெடுத்தான்.

கடகடவென ஃபோனை அன்லாக் செய்த அவன் விரல்கள், விறுவிறுவென அவளது பெயரை எடிட் செய்து, மீதமிருந்த S-ஐயும் நீக்கி விட்டுப் பின்,

Kanmani. – என டைப் செய்து ‘save’-பட்டனைக் க்ளிக்கியிருந்தது.