அத்தியாயம் - 3

மதங்கள் ஏன் உருவாக்கப்பட்டதா நீங்க நினைக்குறீங்க?

ஓரு வீட்ல.. ஒரு குழந்தை இருக்கு. அந்தக் குழந்தையோட அம்மா, தன் குழந்தைக்கு காய்கறிகளையும்,கீரையும் கொடுத்து ஆரோக்கியமா வளர்க்குறாங்க. பக்கத்து வீட்ல இன்னொரு குழந்தையிருக்கு. அதை வளர்க்குற தாய், தன் குழந்தைக்கு முட்டையும்,இறைச்சியும் கொடுத்து சத்து குறையாம வளர்க்குறாங்க.

இந்த ரெண்டு அம்மாக்களோட நோக்கமும் குழந்தை ஆரோக்கியமா வளரனும்ங்கிறது தான். இல்லையா? ஆனா இங்க, பிரச்சனை எப்போ தொடங்குது?

காயும்,கீரையும் சாப்பிடுற என் குழந்தை தான் நல்லா வளரும்! அதனால நீயும் அதையே கொடுன்னு அந்தம்மா வற்புறுத்தும் போதும்! காயையும்,கீரையையும் திங்க குழந்தைங்க என்ன ஆடா,மாடா, கோழியையும்,கறியையும் கொடுத்துத் தான் புள்ளைய வளர்க்கனும், அதனால நீயும் அதையே கொடுன்னு இந்தம்மா தன் கருத்தை அந்தம்மா மேல திணிக்கும் போதும்!

ஆக மொத்தம், காய்கறி பெருசா இல்ல கோழிக்கறி பெருசான்னு நடக்குற சண்டைல.. குழந்தைங்களை ஆரோக்கியமா வளர்க்கனும்ன்ற அவங்களோட அடிப்படை நோக்கம் அடிபட்டுப் போயிடுது! இல்லையா?

மதவாதிகளின் நிலையும் இது தான்! எதற்காக மதங்கள் உருவாக்கப்பட்டதென்கிற அடிப்படையையே மறந்துட்டு.. உன் மதம் பெருசா என் மதம் பெருசான்னு சண்டை போடுறதுல ஆர்வம் காட்டுறாங்க!

பேச்சு சுதந்திரமும்,கருத்து சுதந்திரமும் இருக்கிற நாட்டுல தான் நாம வாழ்ந்திட்டிருக்கோம். இல்லைன்னு சொல்லல! ஆனா.. அந்த சுதந்திரம்.. அவனவன் நாக்கு நுனியோடு நின்னுட்டா.. ரொம்பவும் நல்லது!

இது மதத்துக்கு மட்டுமில்ல! எல்லாத்துக்குமே பொருந்தும்! உன்னை விட நான் தான் அழகு, நான் தான் அறிவாளி, நான் தான் பணக்காரன், நான் தான் உயர்ந்தவன்னு அடுத்தவனைத் தாழ்த்தி காலரைத் தூக்கி விட்டுக்கிற மனுஷப் பயலுக இருக்கிற வரைக்கும் எதுவும் மாறப் போறதில்லை!

என் பக்கத்துல நிற்குறவனும் என்னைப் போல சாதாரண மனுஷன் தான்னு மதிச்சு, ஒரு மனுஷன், இன்னொரு மனுஷனை தனக்கு சமமானவனா, இணையானவனா நினைச்சு.. மற்ற காரணங்களையெல்லாம் பின்னிருத்தி.. மனிதத்தை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்காத வரை.. இந்த சண்டைகளும்,சச்சரவுகளும் என்றைக்கும் ஓயப் போறதில்ல!

-இவன்.

ப்புச்சி, ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்ல சைன் பண்ணுங்க, சப்மிட் பண்ண இன்னிக்கு தான் கடைசி நாள். அப்புறம், எகனாமிக்ஸ்ல மட்டும் மார்க் குறைஞ்சு போச்சு! அதான் செகண்ட் ரேங்குக்குப் போயிட்டேன்! ஏன்னுல்லாம் கேட்காதீங்க”

ரெட்டைப் பின்னலுடன் பள்ளிச் சீருடையில் நின்ற மோகனா சுவாமிநாதனையே மிரட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னத்துக்குக் கேட்கக் கூடாது?”

கேள்வி, சுவாமிநாதனின் அருகே சோபாவில் அமர்ந்திருந்த கணபதியிடமிருந்து வந்தது.

“அதையெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது” – வெடுக்கெனக் கூறியவளை..

“மோகன்ன்ன்” என்று அதட்டியபடியே தன்னறையிலிருந்துப் படியிறங்கி வந்து கொண்டிருந்தான் ரகுவரன்.

“என்ன கண்ணு?, ஐயன் கிட்ட இப்பிடித் தான் பேசுறதா?” – சுவாமிநாதன் அவளைச் சமாதானப்படுத்தும் குரலுடன் கேட்க..

“நீங்க செல்லம் கொடுத்துத் தானுங்ப்பா இவ இப்பிடி மட்டு,மரியாதை தெரியாம வளர்ந்து நிற்குறா!, பேசுற பேச்சுல இருந்து உடுத்துற உடை வரைக்கும் அத்தனையிலயும் அகராதித்தனம் தாண்டவமாடுதுங்க” -என்று கணபதி புலம்பத் தொடங்கினார்.

தந்தையின் பேச்சை ஒரு வித உதட்டுச் சுழிப்புடன் உள் வாங்கிக் கொண்டிருந்த மோகனா கையைத் திருப்பி மணி பார்த்தபடி..

“அப்புச்சி…” என்றாள் பொறுமையற்ற குரலில்.

“இந்தா போட்றேன் கண்ணு” – என்றவர் அவளது குரலுக்கு அடிபணியும் விதத்தைக் கண்டு பொங்கிப் போன கணபதி..

“அப்புச்சி கிட்டயே குரலை உசத்துறியா நீ?” எனப் பாய..

“என்ன தானுங்ப்பா உங்க பிரச்சனை?, இப்ப நான் ஸ்கூலுக்குப் போறதா, இல்ல உங்களோட சண்டை கட்டிக்கிட்டு நிற்கிறதா?” – என்றாள் மோகனா.

“மார்க் ஏன் குறைஞ்சதுன்னு கேள்வி கேட்டா பதில் சொல்றதை விட்டுப் போட்டு, என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னு சட்டம் போடுவியா நீ?

“சட்டம் போடுறதுக்கு நான் என்ன தமிழ்நாடு கவர்மெண்ட்-ஆ?. அய்யய்யய்ய, அப்புச்சி, இதென்ன காலங்கார்த்தால இந்த மனுஷனோட.. ஒரே அக்கப்போரா இருக்கு?”

அங்கலாய்ப்புடன் கூறியவளை கணபதி முகம் சிவக்கப் பார்த்துக் கொண்டிருந்த வேளை..

“மோகனா.. என்ன வார்த்தை வரைமுறையில்லாம போயிட்டிருக்கு?” – எனக் கேட்டபடி சோபாவில் வந்தமர்ந்தார் துளசிநாதன்.

மாமனைக் கண்டதும் அடங்கிய மோகனா அதுவரையிருந்த அலட்சிய பாவனை மறைய..

“ஸ்கூலுக்கு லேட்டாச்சுங் மாமா, ரேங்க் கார்டுல கையெழுத்து வேணுமுங்க” என்றாள் மெல்லிய குரலில்.

“எங்க ரேங்க் கார்டு?, கொண்டு வா பார்ப்போம்” – என்றதும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு.. அப்புச்சியிடமிருந்து ரிப்போர்ட்டை வாங்கி மாமனிடம் நீட்டினாள்.

“ஏன் எகனாமிக்ஸ்ல மார்க் குறைஞ்சு போச்சு?”

“அது வந்துங் மாமா..”

“ம்ம்”

“அந்த டீச்சரோட கொ..கொஞ்சம் தகராறாய்ப் போச்சுங்க. அதான்..”

“தகராறா?”

“ஆமாங் மாமா”

“வீட்ல பண்றது பத்தாதுன்னு இப்ப ஸ்கூலையும் விட்டு வைக்குறதில்லை போலீங்ப்பா” – கணபதி வேறு இடையில்.

திரும்பித் தந்தையை முறைத்தவள் பின் மாமனிடம்..

“அந்த டீச்சர் பொண்ணு பாய்ஸ் ஹை ஸ்கூல் பையன் ஒருத்தனோட சிநேகிதம் வைச்சுக்கிட்டு சுத்துறாளுங் மாமா, அதை நான் ஹெட் மாஸ்டர் கிட்டப் போட்டுக் கொடுத்துட்டேன்னு அந்த டீச்சருக்கு என் மேல சடவுங்க” – என்றாள்.

“ஸ்கூலுக்குப் போனா படிக்கிற வேலையை மட்டும் பார்க்கோனும், தேவையில்லாத பிரச்சனையெல்லாம் இழுத்துட்டு வரக் கூடாது. புரியுதல்லோ?”

“அதில்லைங் மாமா, நல்லா படிக்குற புள்ளைக்கு எதுக்கு ஆகாத வேலைன்னு தான் அப்படிப் பண்ணேனுங்க! நான் அவங்கம்மா கிட்ட சொல்லியிருந்தாலும் அந்தப் பொண்ணு அடங்கியிருக்காதுங்க”

“அது நமக்குத் தேவையில்லாத பிரச்சனை கண்ணு”

“புரிஞ்சதுங் மாமா”

மாமனின் பேச்சை மறு பேச்சின்றி மகள் ஒத்துக் கொள்வது கண்ணில் பட்டு கணபதிக்குக் கர்வத்தை அளித்தாலும்.. வெளியே முகத்தை உர்ரென வைத்துக் கொண்டார்.

கையெழுத்திட்டுக் கையில் கொடுத்தவரிடம் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள் தன் பைக்குள் அதைத் திணித்தபடியே..

“பூர்ணி.. சாப்பாடு எடுத்து வை, எனக்கு நேரமாச்சு” எனக் குரல் கொடுக்க..

“ஏன், நீ போய் போட்டுத் திங்க மாட்டியோ?” என அதற்கும் மகளிடம் பாய்ந்தார் கணபதி.

“நீ என்றா அவ கூட எல்லாத்துக்கும் சண்டை கட்டிட்டிருக்க?, நீ இப்பிடியே பண்றதால தான் ஐயனுக்கு நம்ம மேல பாசமில்லயாட்ருக்குன்னு நினைச்சு புள்ள பொக்குன்னு போச்சு” எனக் கூறியபடி நண்பனருகே வந்தமர்ந்தார் துளசிநாதன்.

“பெருசைப் போல இல்லாம இவ இப்பிடி அடங்காத கழுதையா வளர்ந்து நிற்குறாளே டா துளசி?”

“இப்ப அவளுக்கென்ன குறை? மூத்ததுக்கில்லாத தெளிவும்,அறிவும் இவ கிட்ட இருக்கு! நீ சும்மா அவளைப் போட்டு பாடாப்படுத்துறதை நிறுத்து”

“சரி, இவ பேச்சை விடு, பூர்ணிக்கு மாப்பிள்ளை பார்க்கனும்ன்னு சொன்னியே! தனசேகரை வரச் சொல்லட்டுமா? ரெண்டு,மூணு இடம் நமக்குப் பொருந்தி வரும்ன்னு சொன்னான்”

அதுவரை இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு காலை உணவை உள்ளே தள்ளியபடி அமர்ந்திருந்த ரகுவரன் ‘பூர்ணிக்கு மாப்பிள்ளை’ என்றதில் தடுமாறி ‘லொக்,லொக்’ என இருமியபடி அதிர்ந்து சோபாவில் அமர்ந்திருந்தவர்களை நோக்க…. அவனது முக மாற்றத்தைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கிக் கொண்டு மாமனின் அருகே வந்தமர்ந்தாள் மோகனா.

“யாருக்குங்ப்பா மாப்பிள்ளை” – தக்காளி சேவையை மென்றபடி கேட்டவளிடம்..

“பூர்ணிக்குத் தான் கண்ணு” என்றார் துளசிநாதன்.

“அக்காவுக்கா? ப்ச்! கைல வெண்ணையை வைச்சுக்கிட்டு யாராவது நெய்க்கு அலைவாங்களாங் மாமா?”

அவளின் எண்ணப்போக்கு புரிந்து ‘அடிப்பாவி!’ என்ற மனநிலையோடுத் திகைத்து ரகுவரன் மோகனாவை நோக்க.. அவனிடம் ஒரு பார்வையைச் செலுத்தியவள் பின்..

“நான் சொல்றது புரியுதுங்களா மாமா” என்றாள்.

“என்ன கண்ணு சொல்ற?” – அவளது நோக்கத்தை அறிந்து கொண்டு மலர்ந்த முகத்துடன் கேள்வி கேட்ட சுவாமிநாதனிடம்..

“உங்க யூகம் சரிதானுங் அப்புச்சி! சொந்தத் தாய்மாமன் மகனை விட்டுப் போட்டு யாராவது வெளியே மாப்பிள்ளை தேடுவாங்களா?”– என்றாள்.

“மோகனா.. பெரியவங்க பேசிட்டிருக்கும் போது நீ என்ன இடையில பேசுறது?” – கணபதி கோபத்துடன்.

“ப்ச், இப்ப என்னங்ப்பா தப்பா சொல்லிப் போட்டேன்! மாமா.. நீங்க சொல்லுங்க! பூர்ணியை ஏன் நம்ம ஜீவா மாமாவுக்குக் கட்டிக் கொடுக்கக் கூடாது?” – ஐடியா மணியாகவே உருமாறியிருந்த மோகனாவைக் கண்டு...

தட்டிலிருந்த சேவையைப் பிசைவதைத் தவிர எதுவும் செய்ய முடியாமல்.. கடித்தப் பற்களுடன் வெம்பிப் போய் அமர்ந்திருந்தான் ரகுவரன்.

“எனக்கு இந்த யோசனை ஆரம்பத்துல இருந்தே இருக்கு கண்ணு! உன்ற மாமனும்,அப்பனும் என்ன சொல்லுவானுங்களோன்னு தான் நான் வாயைத் திறக்காம இருந்தேன்” – மோகனாவிடம் கூறுவது போல் தனது உள் மனது ஆசையை வெளியிட்டார் சுவாமிநாதன்.

“நாங்க என்னங்ப்பா சொல்லிடப் போறோம்?, எனக்கு இதுல பரிபூர்ண சம்மதம்” – என்ற கணபதி மலர்ச்சியுடன் திரும்பி துளசிநாதனின் முகம் பார்த்தார்.

“என்றா யோசனை உனக்கு?” – நண்பனின் முகம் நோக்கிக் கேட்ட கணபதியிடம்..

“ரத்த சொந்தத்துக்குள்ள கொடுக்குறது சரி வருமா? நாளைக்கு அதுங்களுக்குப் பொறக்குற குழந்தைகளுக்கு பிரச்சனை அப்பிடி,இப்பிடின்னு எதுவும் வந்தா?” – என்றார் துளசிநாதன்.

“ப்ச்,மாமா ரத்த சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்றது ரிஸ்க் தானுங்க! ஆனா.. எல்லாருக்கும் ஒரே போல நடக்காதுங்க மாமா! பூர்ணிக்காவுக்கு ஜீவன் மாமா தான் சரியான பொருத்தம்! யோசிக்காம காரியத்துல இறங்குங்க”

தட்டிலிருந்ததைக் காலி செய்தபடியே சட்டமாகப் பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டு..

“மோகனா சொல்றதும் சரி தான்” – என முதல் முறையாகக் கணபதித் தன் மகள் கூறுவதை ஆமோதிக்க.. அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்த ரகுவரன், மோகனாவின் மீது கொலைவெறியோடுக் காத்திருந்தான்.

“துளசி, இதுல யோசிக்க எதுவுமில்ல! பூர்ணிக்கு ஜீவனை விடப் பொருத்தமான மாப்பிள்ளை தேடுனாலும் கிடைக்காது!”

சுவாமிநாதன் திடமாகக் கூறியதும்.. “நீங்க சொல்றது சரிதானுங்ப்பா! ரெண்டு பேரும் என்ன நினைக்குறாங்கன்னு கூப்பிட்டு வைச்சுப் பேசிடுவோம்” என்று துளசிநாதன் முடித்து விட..

கடைசி வாய் சேவையை அள்ளி வாய் நிறையத் திணித்த மோகனா.. வந்த வேலை முடிந்ததில் சோபாவைக் காலி செய்தாள்.

பொறுமலுடன் அவள் செய்கையைக் கவனித்துக் கொண்டிருந்த ரகுவரனுக்கு.. பூர்ணியுடனான லெட்டர் சம்பவம் நினைவுக்கு வந்தது.

ன்று இருவரும் சேர்ந்து பாடி முடித்ததும் பெரிதாய்ப் புன்னகைத்த பூர்ணி..

“காதல் ரசம் சொட்டுதே கண்ணு! யாரை நினைச்சு எழுதியிருக்கற?” என்றாள்.

பூர்ணியின் கேள்விக்குப் பதில் கூறாமல், வியர்த்துப் போன முகத்துடன் அவள் விழி காணாது எங்கோ நோக்கியபடி நின்ற ரகுவரனின் தோளில் இடித்து..

“கேட்குறாங்கல்ல?, சொல்லு கண்ணு” என்றாள் மோகனா.

“ப்ச்” என்றபடி அவளை முறைத்தவன் பதிலின்றி மீண்டும் எதிர் சுவற்றை வெறித்தான்.

“சார் வாயைத் திறந்து சொல்ல மாட்டாரு” – நக்கலாய்க் கூறிய மோகனாவிடம்..

“சரி விட்றி! வெட்கப்பட்றானாயிருக்கும்” – என்ற பூர்ணி அவன் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி..

“நீ யாரை நினைச்சு எழுதியிருந்தாலும் சரி, அந்தப் பொண்ணுக்கான உன்ற எண்ணம் நிச்சயம் ஈடேறும் கண்ணு” என்றாள்.

மலர்ந்த சிரிப்புடன் தன் முகத்திலிருந்த அவள் கரத்தைப் பற்றியவனின் கையை மெல்ல விலக்கி விட்ட மோகனா..

“அப்படியெல்லாம் யாருன்னே தெரியாம நீ பாட்டுக்க வாழ்த்தாதக்கா” என்றாள்.

‘அடிக்கிராதகி’ ரீதியில் அடிக்கண்ணில் அவளை முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல்..

“முதல்ல அந்தப் பொண்ணு யார்ன்னு கேளு” என்றாள்.

“அதான, ஏன் கண்ணு?, என்ற கிட்ட சொல்லக் கூடாதா?” – சுருங்கிய முகத்துடன் கேட்டவளிடம் ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவன் என்ன சொல்வதெனப் புரியாமல் தவிப்புடன் பிடரியைக் கோத..

“ஏன் பூர்ணி, அந்தப் பொண்ணு நீயாயிருந்தா என்ன பண்ணுவ?” என்றாள் மோகனா.

அவள் இப்படிப் பட்டெனக் கூறி விடுவாளென்றறியாத ரகுவரன், பதறி பூர்ணியின் முகத்தை நோக்கினான்.

“ப்ச், இதென்ன விவஸ்தை கெட்ட பேச்சு? வாயை மூட்றி”

முகத்தைச் சுருக்கிக் கொண்டு சிடுசிடுத்த பூர்ணியிடம்...

“ப்ச்! ஒரு வேளை.. ஒரு வேளை.. உன்ற தம்பு இந்த லவ் லெட்டரை உனக்காக எழுதியிருந்தா நீ என்ன பண்ணியிருப்ப?” – அழுத்தமாய்க் கேட்டுக் கொக்கிப் பிடி போட்ட மோகனாவின் திறமையை மெச்சியபடியே.. பதில் தெரிய வேண்டி அவள் முகம் பார்த்தான் ரகுவரன்.

சுருக்கிய புருவங்களுடனே ஒரு நொடி யோசித்தவள் பின்.. தெளிச்சியுடன் இருவரையும் நோக்கி..

“லவ்-ன்னா என்ன?” என்றாள்.

“காதல், ப்யார், ப்ரேமம்” – வரிசையாகக் கூறிய மோகனாவை..

“ப்ச்” – எனப் பூர்ணி முறைக்க..

“சரி, நீயே சொல்லு”- என்றாள்.

“காதல்ன்னா அன்பு. சரி தான?” – சொற்பொழிவாற்றக் கிளம்பியவளிடம் உதட்டை வளைத்து..

“அடேங்கப்பா!” என்ற மோகனா “கேட்டுக்க தம்பு” என ரகுவரனின் தோளை இடித்தாள்.

“எனக்கான அவனோட அன்பைக் கடுதாசியா எழுதியிருக்கான்னு நினைச்சுப் பெருமை பட்டுக்க வேண்டியது தான்! சில வரிகளெல்லாம் அத்து மீறிப் போயிருக்குதுன்னாலும்.. “ எனக் கூறி பக்கவாட்டில் நின்றிருந்தவனை முறைத்தவள்..

“ம்க்கும்” எனச் செருமிக் கொண்டு “என்ற மேல இருக்குறப் பாசத்துல எழுதியிருக்கிறான்னு நினைச்சுக்கிறேன்” என்றாள்.

அவ்ளோ தான்! விஷயம் முடிஞ்சது! என்றது போல் பட்,பட்டெனக் கையைத் தட்டிய மோகனா..

“க்ரேட்! க்ரேட்! க்ரேட் பூர்ணி” எனக் கூறி அவள் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு..

“எல்லாத்தையும் கேட்டாச்சுல்ல? வா போகலாம்” எனக் கூறி ரகுவரனின் கையைப் பற்றிக் கொல்லைக்கு இழுத்துச் சென்றாள்.

இரவு முழுக்கத் தூங்காமல் யோசனையோடுக் கிடந்ததன் விளைவு மூளை தன் செயல்பாட்டை நிறுத்தியிருக்க.. தெளிவற்றத் தன் எண்ணப் போக்கை சபித்துக் கொண்டிருந்தவனுக்கு.. பூர்ணியின் இந்தப் பதில் ஏமாற்றத்தைக் கொடுக்க.. தன்னைப் பற்றியிருந்த மோகனாவின் கையை உதறியவன்.. அங்கிருந்தத் துவைக்கும் கல்லில் சோர்வுடன் அமர்ந்தான்.

“என்றா முகத்தை அப்படி வைச்சுக்கற?”

“ப்ச்”

“அடேங்கப்பா! என்ன சலிப்பு வேண்டிக் கிடக்கு?”

“நீ உதவி செஞ்ச வரைக்கும் போதும் டா மோகன்! தயவு செஞ்சு இடத்தைக் காலி பண்ணு” – கையெடுத்துக் கும்பிட்டவனிடம்..

“என்ற மேல கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?, நியாயமா பார்த்தா.. நீ எனக்கு நன்றி சொல்லோனும்” – என்றவளை நிமிர்ந்து முறைத்தான் அவன்.

“ஆமா! பின்ன? நீ செஞ்ச பொறுக்கித்தனத்தை யாருக்கும் தெரியாம கமுக்கமா ஹாண்டில் பண்ணியிருக்கிறேனல்ல?”

“மோகன்ன்ன்”

“பின்ன?? அது பேரு பொறுக்கித்தனமில்லாம வேற என்ன? உன்னை விட வயசு மூத்தவளுக்கு லவ் லெட்டர் எழுதுவியா நீ? மாமாவுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமல்ல? உன்னை.. வீட்டுக்குள்ளயே நுழைய முடியாத மாதிரி பண்ணிடுவார்”

அடிக்குரலில் காய்ந்து கொண்டிருந்தவளைக் கண்டு கோபம் பொங்க.. அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றவன்.. அவளை நெருங்கி..

“என்ன?? மிரட்டுறியா? போ! போய் சொல்லு! சொல்லித் தான் பாரேன்! பார்ப்போம்” என்றான்.

தான் நிமிர்ந்து பார்க்கும் உயரத்துடன், கையில்லாத பனியனும், மடித்துக் கட்டிய வேஷ்டியுமாய் தாடி,மீசையுடன்.. அடர்ந்து கலைந்தத் தலை முடியோடு நின்றவனை ஒரு நொடி விழி விரிய நோக்கியவள்.. பின் இரண்டடி நகர்ந்து..

“சொல்ல மாட்டேன்னு நினைக்குறியா” என்றாள்.

“ப்ச்” என்றபடி அவள் முகம் நோக்கியவன் பின் “நான் ஏகத்துக்கும் எரிச்சல்ல இருக்கேன் டா மோகன்! பேசாம போ..” என்றான்.

“போறேன்! போறதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிட்டுப் போறேன்! என்ற கைல இருந்த கொய்யாக்காயை எவனோ பறிச்சுட்டுப் போய்ட்டான்ற மாதிரி, பூர்ணியைப் பார்க்கும் போதெல்லாம் பரிதாபமா முழிக்குறதை தயவு செஞ்சு இத்தோட நிறுத்திக்க. சகிக்க முடியல” -என்றவளை முறைத்து.. முழுக்கடுப்புடன்.. அவன்

“மோகன்ன்” – என்றழைக்க..

“கிளம்பிட்டேன்!” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விட்டாள்.

உதவி செய்பவளைப் போன்று கடிதத்தை வாங்கிக் கொண்டுக் கடைசியில் வில்லி வேலை பார்த்து விட்டுச் சென்றவளைக் கண்டு பல்லைக் கடிப்பதைத் தவிர அப்போது வேறு வழியில்லாமற் போனது அவனுக்கு.

அத்தோடு நிறுத்தாமல்.. இன்று பூர்ணியின் கல்யாணப் பேச்சிலும் இடையில் புகுந்து நாரதர் ரோல் ப்ளே செய்பவளை எண்ணி எரிச்சல் பொங்கியது.

பையை எடுத்துக் கொண்டுப் பள்ளிக்கு சைக்கிளில் கிளம்பியவளின் பின்னோடு சென்று தடுத்து நிறுத்தினான் ரகுவரன்.

“என்ன??” – எரிச்சலுடன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளை ‘அடிப்பாவி’ பாவனையோடு நோக்கியவன்..

“நான் தான் டா மோகன் உன்ற மேல கோவப்படோனும்” என்றான்.

“ஏன்வாமா?”

“பின்ன?, நீ செஞ்ச காரியத்துக்குக் கோபப்படாம, கொஞ்சுவாங்களா?”

“நான் என்ன பண்ணுனேன்?”

“நடிக்காத டா மோகன்”

“ப்ச், உன்ற கூட சண்டை கட்ட எனக்கு நேரமில்ல! ஸ்கூலுக்கு நேரமாச்சு. தள்ளு நான் கிளம்போனும்”

“என்றா மோகன்?, தப்பிக்கப் பார்க்குறியா?, ஒழுங்கு மரியாதையா நின்னு பேசிட்டுப் போ”

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… இதென்ன உன்னோட ரோதனையா இருக்கு?, நான் என்னத்துக்கு உன்ற கிட்டயிருந்து தப்பிக்கோனும்! ஒன்னு பண்ணு! பேசாம, நீயும் சைக்கிள்ல ஏறு! ரெண்டு பேரும் பேசிக்கிட்டே போயிடலாம்! நீ பேசுன மாதிரியாச்சு! நானும் ஸ்கூலுக்கு போன மாதிரி ஆச்சு”

“என்னை ரொம்ப வெறுப்பேத்துற டா மோகன் நீ”

“டீல் ஓகே இல்லன்னா, வழியை விடு. நான் கிளம்புறேன்” – என்றவள் சைக்கிளைத் தள்ள..

“ஏய்.ஏய்,ஏய்..” என்றவன் “நீ பின்னால உட்காரு. நான் ஓட்டுறேன்” என்றான்.

உதட்டைப் பிதுக்கித் தலையசைத்தவள் சைக்கிளில் ஏறியமர்ந்தாள்.

வீட்டுக் காம்பவுண்டைக் கடந்து வெளியே சென்றதும்..

“உனக்கு என்ற மேல தனிப்பட்ட முறையில ஏதும் கோபமிருக்கா டா மோகன்?” என்று தொடங்கினான்.

“இல்லியே! எனக்கென்ன கோபம்?”

“அப்டின்னா.. இயல்புலயே நீ ஒரு நாரதராட்ருக்கு டா மோகன்”

“இதுக்கு நான் கோபப்பட மாட்டேன்! ஏன்னா.. நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க”

“யாருக்கு நன்மையில முடியும்ன்ற?”

“என்ற அக்காளுக்குத் தான், அதுல என்ன சந்தேகம்?”

“என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டியா டா மோகன்”

“உன்னைப் பத்தி என்ன யோசிக்கோனும்?”

“………..”

“பூர்ணியை உனக்குக் கட்டி வைக்கச் சொல்லி நான் வேணா மாமா கிட்ட கேட்கட்டுமா?”

“ப்ச், மோகன்ன்ன்”

“பின்ன உன்ற நினைப்பு தான் என்ன?, நீயும் கட்டிக்க மாட்ட? ஜீவா மாமாவும் கட்டிக்கக் கூடாதுன்ற?,அப்டின்னா.. கடைசி வரைக்கும் என்றக்கா உனக்குப் பூரி சுட்டுக் கொடுத்தே வாழ்க்கையை ஓட்டனும்ன்னு எதிர்பார்க்குறியா?”

“…………..”

“ஏய்ய்.. என்ன?”

“ப்ச்”

“ப்ச்-ன்னா?”

“எனக்கு… எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டா மோகன்”

“என்ன குழப்பம்?”

“அதையெல்லாம் உன்ற கிட்ட சொல்ல முடியாது! நீ சின்னப் பொண்ணு”

“ஆமா நான் சின்னப் பொண்ணு! நீ ரொம்பப் பெரிய மனுஷன்”

“என்னைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா டா மோகன்?”

“இல்ல! ரொம்ப ஆச்சரியமா இருக்கு! உன்ற மூஞ்சியும்,பார்வையும், உன்ற நினைப்பு போற போக்கும்”

“ரொம்பப் பேசுனேனா.. யோசிக்காம கீழ உருட்டி விட்ருவேன் டா மோகன்”

“அப்பிடியெல்லாம் பண்ணித் தொலைஞ்சுடாத! இன்னிக்கு ப்ரேயர்ல நான் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடோனும்”

“ஆமா, இவ பாடாட்டி ப்ரேயரே நடக்காதுன்றது போலத் தான்” என முணுமுணுத்தவனிடம்..

“என்ன சொன்ன?” -என்றாள் அவள்.

“ஒன்னுமில்ல டா மோகன்! பார்க்க ஒல்லியாத் தெரிஞ்சாலும், பொண கனம் கனக்குறியே! சைக்கிளைத் தள்ள முடியலன்னு புலம்பிட்டிருக்கேன்” என்றவன் “ம்மா,ம்மாஆஆ” என்றபடியே கஷ்டப்பட்டு மிதிப்பது போல் பாவனைக் காட்ட.. அவன் தோளை அடித்துத் திட்டிக் கொண்டே ஒரு வழியாக பள்ளிக்கு வந்து சேர்ந்தாள் மோகனா.

மோகனா பற்ற வைத்த நெருப்பு… அன்றிரவு சாப்பாட்டின் போது ஜெகஜோதியாக சுடர் விட்டு எரியத் தொடங்க.. காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தோடு முன்னே ஓடிக் கொண்டிருக்கும் விதியை சபித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தான் ரகுவரன்.

இரவு உணவுக்காக டைனிங் டேபிளில் வந்தமர்ந்த துளசிநாதன், பொறுப்பாய் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தப் பூர்ணியை வாஞ்சையுடன் நோக்கினார்.

“அரிசி-பருப்பு சாதம் போட்டுக்குறீங்களா?, இல்ல பனியாரம் வைக்கட்டுமுங்களா?”

ஜீவனின் அருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தவளிடம்..

“சாதமே வை” என்ற ஜீவன்.. “நீ சாப்பிட்டியா?” என்று கேட்பதைக் கண்டு மெல்லப் புன்னகைத்துக் கொண்டவர்..

“பூர்ணி… இங்க வா சாமி” என்றார்.

“ஏனுங் மாமா?”

“இங்க வா கண்ணு, வந்து உட்காரு” – என்றவர் தன்னருகேயிருந்த இருக்கையைக் கை காட்டினார்.

நெற்றியில் வழியும் வியர்வையைத் தன் தாவணியில் துடைத்தபடி வந்தமர்ந்தவளிடம்..

“சமையலுக்கு வேணுமின்னா.. ஆள் போட்டுக்கலாமா கண்ணு?” எனத் துவங்கினார் துளசி.

“எதுக்குங் மாமா? என்ற சமையல் அதுக்குள்ள உங்களுக்கு போர் அடிச்சுப் போச்சுங்களா?” – சிரிப்புடன் கேள்வி கேட்டவளிடம்..

“அப்பிடியில்ல கண்ணு! உன்னைக் கட்டிக் கொடுத்து, நீ இன்னொரு வீட்டுக்கு வாழப் போனப்புறம்.. பொறந்து,வளர்ந்த இடம்ன்னு நீ இங்க வரும் போது உனக்கு ருசியாச் சமைச்சுப் போட ஆள் இருக்கோனுமில்ல?” என்றார் அவர்.

மின்னாமல், முழங்காமல் தலையில் இடியை இறக்கியவரைக் கண்டு அதிர்ச்சியில் வாய் பிளக்க.. முழியைப் பெரிதாக்கிய பூர்ணிக்கு.. நிமிடத்தில் விழிகளில் நீர் சேர்ந்து விட்டது.

அவள் மறுத்துப் பேச வாயெடுக்கும் முன் “ப்பா, என்ன பேச்சு இது” எனத் தந்தையை அதட்டினான் ஜீவரஞ்சன்.

“என்ன சொல்லிப் போட்டேன் இப்ப? பொம்பளப் பசங்களை காலாகாலத்துல கட்டிக் கொடுக்க வேண்டியது பெத்தவங்கக் கடமையில்லையா”

“அது சரி தானுங்க! ஆனா.. கல்யாணம் கட்டிக்கிட்டாலும், அவ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டா-ங்ப்பா.”

“அதெப்படி கண்ணு சாத்தியமாகும்?”

“சாத்தியம் தானுங்ப்பா! ஏன்னா.. அவ கட்டிக்கப் போறதே என்னைத் தானுங்க”

தன் போக்கில் தட்டிலிருந்ததைக் காலி செய்தபடியே மிகச் சாதாரணமாகக் கூறியவனைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன் மோகனா தலை குனிந்து கொள்ள.. அண்ணனின் தைரியத்தைக் கண்டு உதட்டைப் பிதுக்கினான் ரகுவரன்.

அவன் கூறியதைக் கேட்டுக் கலவர முகத்துடன் மாமனை ஏறிட்டப் பூர்ணிக்கு.. அவர் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாமல் போனது.

“நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டியாட்ருக்கு!”

“ஆமாங்ப்பா! உங்களுக்கா தோணும்ன்னு நினைச்சேனுங்க! உங்களுக்குத் தோணலைன்றதால.. நான் என்ற முடிவை சொல்ல வேண்டியதாயிடுச்சுங்க”

மகனுக்குப் பதில் சொல்லாமல் பூர்ணியை நோக்கியவர்..

“உனக்கு உன்ற மாமன் மவனைக் கட்டிக்க சம்மதமா கண்ணு” என்றார்.

என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் ஒரு நொடி ஜீவரஞ்சனை நோக்கினாள் பூர்ணி.

அவன் சலனமற்ற பார்வையுடன் அவளைப் பார்த்தபடி சாதத்தை விழுங்கிக் கொண்டிருந்தான்.

பின்.. தலை குனிந்தபடி.. “நீங்க என்ன முடிவு பண்ணுனாலும், எனக்கு சரிதானுங் மாமா” என்றாள்.

“அப்ப சரி, தனசேகர் இன்னிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை ஒருத்தனோட ஜாதகம் வந்திருக்குன்னு சொன்னான்! அவனையே பார்த்துட வேண்டியது தான்”

-மருமகளின் முகத்தைக் கண்டபடி நக்கலாகக் கூறியவரை அவள் தவிப்புடன் நோக்க.. “ப்பா” என்று மீண்டும் அதட்டினான் ஜீவன்.

அவன் அடுத்து வாய் திறப்பதற்குள் மாமனின் கையைப் பற்றிய பூர்ணி, அவர் முகம் பார்க்காமல்..

“எ..எ..எனக்குக் கடைசி வரைக்கும் இந்த வீட்லயே.. உங்க கூடவே வாழ்ந்திரனும்ங்கிறது தான் ஆசை-ங்க மாமா! அதுக்கு மேல உங்க விருப்பமுங்க” என்று கூறி.. விறுவிறுவென எழுந்து சென்று விட.. அவள் செல்லும் வேகத்தைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தார் துளசிநாதன்.

“என்னங்ப்பா விளையாட்டு இது?” என்ற ஜீவரஞ்சன் அவரது பேச்சைப் பெரிதுபடுத்தாமல்.. தொடர்ந்து மில் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேச.. மோகனாவும்,ரகுவரனும் உண்டு முடித்து எழுந்து சென்றனர்.

பேச்சின் முடிவில் மகனிடம்.. மெல்ல..

“கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கற தம்பி?” என்றார் துளசி.

ஒரு நொடி யோசித்த ஜீவன் பின் “ரெண்டு,மூனு வருஷம் போகட்டும்ங்ப்பா” என்றான்.

அவன் பதிலைக் கேட்டு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தபடிக் கதவின் பின்னே பூர்ணியும், மாடியறையிலிருந்து கீழே பார்த்தபடி மோகனாவும்,ரகுவரனும் நின்றிருந்தனர்.

“ஏன் சாமி அப்பிடி சொல்ற?, பொம்பளப் பிள்ளையை கல்யாணம் பண்ணிக் கொடுக்காம அத்தனை வருஷம் எப்பிடி வீட்ல வைச்சிருக்க முடியும்?”

“அதெல்லாம் முடியும்ங்கப்பா! எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க? வேணும்ன்னா இப்போதைக்கு நிச்சயதார்த்தம் மாதிரி ஏதாவது சிம்பிள்-ஆ வைச்சுக்கலாமுங்கப்பா”

“ஏன் தம்பி?”

“மோகனாவும்,ரகுவரனும் படிப்பை முடிக்கட்டும்ங்கப்பா! அப்புறம் இந்தப் பேச்சைத் தொடங்கலாமுங்க”

“அதுக்கும் உன்ற கல்யாணத்துக்கும் என்ன கண்ணு சம்பந்தம்?”

“மூத்தவனா நான், எனக்குக் கீழ இருக்குறதுங்களை செட்டில் பண்ணாம, சுயநலமா எப்பிடிப்பா என்ற வாழ்க்கையைப் பத்தி மட்டும் யோசிக்க முடியும்?, அது என்ற கடமை இல்லீங்களா?, எல்லாரையும் போல சாதாரண குடும்ப சூழல்ல வளர்ந்த பிள்ளைங்களா நாங்களா? இல்ல தானுங்களே?, ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாத் தான் இப்போ வரைக்கும் வளர்ந்திருக்கிறோம்! இனியும் அப்படியிருக்கனும்ன்னு தானுங்ப்பா நான் ஆசைப்பட்றேன்”

மகனின் பதிலில் பூரித்துப் போன துளசிநாதன் தொண்டை கரகரக்க…

“கல்யாணம், குழந்தைங்கன்னு ஆயிட்டா.. சிறுசுங்க மேல கவனம் வைக்க முடியாதோன்னு கவலைப்பட்றியா தம்பி?” என்றார்.

“தெரியலீங்ப்பா! ஆனா.. கடமையா நினைச்சதை நடத்தி முடிக்காம, என்ற வாழ்க்கையைத் தொடங்க.. எனக்கு விருப்பமல்லீங்க! பூர்ணியும்.. நிச்சயம் இப்படித் தானுங்கப்பா யோசிப்பா..” என்றவன் திரும்பிப் பூர்ணியைப் பார்க்க.. சமையலறையிலிருந்து வெளிப்பட்டவளின் கண்களில் அத்தனைக் காதலும்,திருப்தியும்! அவனுடன் மாமன் அமர்ந்திருப்பதைக் கூட மறந்து விட்டு.. சிரிப்பும்,கண்ணீருமாய் ஜீவரஞ்சனையே நோக்கினாள் அவள்.

அவள் பார்வையை உணர்ந்து புன்னகை கொண்டவன் பின் தந்தையிடம்..

“நிச்சயதார்த்ததுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா! கல்யாணத்தைப் பத்தி அப்புறம் யோசிக்கலாமுங்க! பூர்ணிக்கு அப்படியொன்னும் வயசாயிடல. சரிங்களா?” என்றான்.

மகனைப் பெருமையுடன் நோக்கிப் புன்னகைத்தவர் மகிழ்ச்சியில்.. பேச்சற்று மெல்லத் தலையசைத்தார்.

“நிச்சயம்ன்னு சொன்னதும் என்ற அக்கா முகத்துல வெட்கத்தைப் பாரு! அடேங்கப்பாஆஆஆ!”

-முழுப் புன்னகையுடன் மாடியிலிருந்துக் குரல் கொடுத்த மோகனாவைக் கண்டுப் பதறி.. முகத்தை மாற்ற முயற்சித்து முடியாமல் பூர்ணி குடுகுடுவென ஓடி விட.. இளசுகளின் கொண்டாட்டத்தை ரசித்தபடி அவர்களுக்கு இடம் கொடுத்துத் துளசிநாதன் எழுந்து சென்றார்.

அடுத்து மோகனா தன்னைத் தாக்குவாள் என்றறிந்து ஜீவன் கையைக் கழுவிக் கொண்டு சைலண்ட்-ஆக நழுவப் பார்க்க..

“மாமோய்ய்ய்.. எங்க ஓடப் பார்க்குறீரு?” – எனக் கேட்டபடியேப் படியில் குதித்திறங்கியவளைக் கண்டு ஜீவன் நிற்க..

அவன் முன்னே கையை நீட்டியவள் “கங்ராஜூலேஷன்ஸ் மாமா” என்றாள்.

“தேங்க்ஸ்” என்றபடி அவள் கையைக் குலுக்கியவன்..

“அப்பா இந்த டாபிக்கை எடுப்பாருன்னு நீ என்ற கிட்ட முன்னாடியே சொன்னதுக்கு” என்றான்.

“நான் சொல்லியிருக்காட்டியும், நீங்க கூல்-ஆ ஹாண்டில் பண்ணியிருப்பீங்க மாமா” என்று கூறித் தொடர்ந்து..

“இருந்தாலும்.. கல்யாணத்தை ரெண்டு,மூனு வருஷம் தள்ளி வைச்சுக்கலாம்ன்னு சொல்லி.. என்ற அக்கா மனசுல பாரத்தை ஏத்திப் போட்டீங்க மாமா நீங்க” என்று சலித்துக் கொண்டவள்..

“கல்யாணத்தைத் தள்ளி வைக்கோனும்ன்னு சொன்னவளே உன்ற அக்கா தான்” என்ற ஜீவனின் பதிலைக் கேட்டு விழி விரித்தாள்.

“நிஜமாவா மாமா?”

“ம்ம்” என்றவன் “போய் உன்றக்காக் கிட்டயே கேளு” என்றதோடு நகர்ந்து விட..

டைனிங் டேபிளில் பாத்திரங்களை ஒதுக்கிக் கொண்டிருந்தப் பூர்ணியிடம் சென்றவள்..

“நீ ஏன் பூர்ணி அப்படி சொன்ன?” எனக் கேட்டாள்.

“என்னன்னு?”

“ப்ச், நான் மாமா கூட பேசுனது உன்ற காதுல விழலையாக்கும்?”

“அதுக்கென்னடி இப்போ?”

தன் போக்கில் வேலை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவளின் தோளைப் பற்றித் தன் முகம் காணச் செய்தவள்..

“எங்களை யோசிச்சு ஏன் பூர்ணி, நீ உன்ற வாழ்க்கையைத் தள்ளிப் போடோனும்?” என்றாள் மெல்லிய குரலில்.

“நீங்க இல்லாம எனக்கென்ன வாழ்க்கை இருக்கு?” – அசால்ட்டாகக் கூறியவளைக் கண்டு பாசம் பொங்க..

“பூர்ணி…….” என்றழைத்தவளைக் கண்டு கொள்ளாமல்..

“உனக்கு ஹார்லிக்ஸ் கலக்கவா?, இல்ல வெறும் பால் வேணுமா?” என்றாள்.

தங்கை அமைதியாய் தன் முகம் பார்ப்பதைக் கண்டு..

“என்னடி??” என்றவள் பின்.. “மாமா மாதிரி பொறுப்பு,கடமைன்னு எனக்கு விளக்கம் கொடுக்கத் தெரியாது! ஆனா.. என்னமோ… இது தான் சரின்னு என்ற மனசுக்குப் பட்டுச்சு! அதான்.. மாமா கிட்ட அப்பிடி சொன்னேன்” எனக் கூற.. தோள் குலுங்க மெல்லச் சிரித்த மோகனா… தமக்கையை இழுத்துக் கட்டிக் கொண்டாள்.

இருவரையும் சிரிப்புடன் நோக்கிப் படியேறிய ஜீவன், மாடியருகே நின்றபடி மெல்லிய புன்னகையுடன் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தத் தம்பியின் தோளில் அடித்தான்.

ஏனோ அவன் முகம் பார்க்கத் தயங்கி எங்கோ நோக்கிய ரகுவரனிடம்..

“கல்யாணம் முடியுற வரைக்கும் பூர்ணி கையைப் பிடிக்க மாட்டேன் டா! கவலைப்படாத” எனக் கூற..

புருவம் உயர்த்தியபடித் தமையனின் புறம் திரும்பியவன்…

“அந்த ஆசையெல்லாம் வேற இருக்குதுங்களா உங்களுக்கு?” என்றான்.

“உனக்குப் பயந்து தான் டா நான் கல்யாணத்தையேத் தள்ளி வைச்சிருக்கேன்! என்ற மேல இருக்குற கோபத்துல, நீ பாட்டுக்க கல்யாணத்தன்னைக்கு சீப்பை ஒளிச்சு வைச்சுட்டன்னு வை! பெரிய பிரச்சனையாய்ப் போயிடாது??”

-நக்கலுடன் கூறிச் சிரித்த அண்ணனை முறைத்தவன்..

“என்னைப் பார்த்தா.. சின்னப் பையன் மாதிரி தெரியுதா உங்களுக்கு?” என்றான்.

“மாதிரி என்ன?, நீ சின்னப் பையனே தான்” என்றவனை அவன் கோபமாய் நோக்க வாய் விட்டுச் சிரித்தபடித் தன் அறையை நோக்கி நடந்தான் ஜீவன்.

என்ன தோன்றியதோ! முன்னே செல்பவனை “ண்ணா…” என்றழைத்து நிறுத்திய ரகுவரன்..

அவன் முகம் பார்க்காமல் “தேங்க்ஸ்” என்றான்.

பதிலற்று.. உதட்டை வளைத்துப் புன்னகைத்தபடி அவன் உள்ளே சென்று விட.. தானும் புன்னகையோடு அறையை நோக்கித் திரும்பியவன்… கையைக் கட்டிக் கொண்டுத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மோகனாவைக் கண்டு நின்றான்.

“என்றா மோகன்?”

“தெளிஞ்சுட்டயாட்ருக்கு?”

“புரியல”

“செஞ்ச முட்டாள்தனம் புரிஞ்சு தெளிவு வந்துடுச்சான்னு கேட்குறேன்”

“எதை முட்டாள்தனம்ன்ற டா மோகன்?”

“அடப்பாவி”

“பூர்ணிக்கான என்னோட காதலையா?”

“வாயை மூட்றா போக்கேத்தவனே” – என்று அடிக்குரலில் சீறிய மோகனா அவசர,அவசரமாய் நாலாபுறமும் நோக்கினாள்.

“பயப்படாத டா மோகன், யாருக்கும் நம்ம பேசுறது கேட்காது”

“நான் என்னத்துக்குப் பயப்படோனும்? தப்புப் பண்றவன் நீ”

“எது தப்பு?”

“ம்ம், அண்ணனைக் கல்யாணம் பண்ணி அண்ணியா வரப் போறவளைப் போய் காதலிக்கிறேன்னு சொல்லி பிணாத்திட்டு சுத்துறியே! அது தப்பில்லாம?”

“என்ற காதலுக்கான டெஃபனிஷன் வேற டா மோகன்”

“ஓஹோ”

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.”

“அடேங்கப்பா”

அவள் சிடுசிடுப்பதைக் கண்டு கொள்ளாமல்.. பலகணியருகே சென்று நின்றான் ரகுவரன்.

அவனைத் தொடர்ந்து நடந்து வந்தவள், சலனமற்ற அவன் முகத்தை சந்தேகமாக நோக்கி..

“காலைல எனக்கு நாரதர் பட்டம் கொடுத்துத் தைய,தக்கன்னு குதிச்சுப் போட்டு, இப்போ என்றா அமைதியா நிற்குற?, எல்லாம் கை மீறிப் போச்சுன்னா?” என்றாள்.

“…………”

“ரகு…”

“அண்ணன் ரொம்பக் கொடுத்து வைச்சவன்! என்றா மோகன்?”

“என்றக்காளும் கொடுத்து வைச்சவ தான்” – முறைப்புடன் கூறியவளைக் கண்டு கொள்ளாமல்..

“என்ன இல்ல பூர்ணி கிட்ட?, எந்த ஆம்பளையால அவளை வேணாம்ன்னு சொல்லிட முடியும்?, அண்ணன் அவ மேல ஆசை வைச்சதுல எந்த ஆச்சரியமுமில்ல!” – என்றான்.

-தனக்குத் தானே பேசிக் கொள்பவனைப் போல் நின்றவனை சற்றுப் பீதியுடனே நோக்கினாள் மோகனா.

“எப்பவும் அவ முகத்துல ஒரு சிரிப்பு இருக்கும்! அவ தலையில வைச்சுக்கிற பூவுக்கும், அவளுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் கிடையாது! அவ்ளோ மென்மையானவ”

“………”

“காலைல எழுந்ததும்.. அவ வாசல்ல போட்டிருக்கிறக் கோலத்துல கண் முழிச்சு, கிட்சன்ல அவ போடுற காஃபியை நுகர்ந்துட்டாலே போதும், ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியோட தொடங்கிடலாம்”

“………..”

“அடுப்படி தொடங்கி தோட்டம் வரைக்கும் வீட்டு வேலைகள் அத்தனையையும் பொறுப்பா கவனிச்சுக்கிற அழகாகட்டும்! வீட்ல இருக்கிறவங்களோட நலன்ல காட்டுற அக்கறையாகட்டும்! எப்படி இயல்பாவே அவளுக்கு இவ்ளோ பொறுமையைக் கொடுத்திருக்கான் ஆண்டவன்னு எத்தனை முறை ஆச்சரியப்பட்டிருக்கேன் தெரியுமா?, ஒரு நாளாவது அவ ரெஸ்ட் எடுத்துப் பார்த்திருக்கியா? எப்பவும் நம்ம யாரையாவது கவனிச்சுக்கிட்டு, நம்ம பின்னாடி சுத்துறதைத் தான் வேலையா வைச்சிருப்பா!”

“……………”

“ஒவ்வொரு ஆணுக்குமிருக்கிற எதிர்பார்ப்பு என்னன்னு தெரியுமா டா மோகன்?”

“……….”

“ஆஃபிஸ்ல இருந்து சோர்வோட வீடு திரும்பும் போது, முழு சிரிப்போட கதவைத் திறக்குற பொண்டாட்டி வேணும்ன்றது தான்! அந்த முகத்தைப் பார்க்கும் போதே, டயர்ட்னெஸ் எல்லாம் பறந்து போயிடனும்.”

“………………”

“பூர்ணி…. பூர்ணிக்குக் கூட அந்த மாதிரி முகம் தான். பூத்து நிற்குற ரோஜாப்பூவை பார்க்கும் போது… தன்னாலயே நம்ம மனசும் மலர்ந்திருமில்லையா?, அது மாதிரி.. அவ முகத்தைப் பார்த்தாலே.. கவலையெல்லாம் மறந்து ஒரு சிரிப்பு வந்துடும்”

கடனே என்று அவன் புலம்புவதை… ம்க்க்க்கும், கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மோகனாவிற்குக் கொட்டாவி வந்தது.

பெரிதாய் வாயைப் பிளந்து ‘ஹாவ்வ்வ்வ்” என்ற ஓசையுடன் கொட்டாவியை வெளியிட்டவளை அற்பப் பார்வையுடன் ஏறிட்டான் ரகுவரன்.

“நான் சொன்னதுல ஒரு சதவீதத்தையாவது காதுல வாங்குனியா டா மோகன்?”

“…………”

“உன்ற கிட்டப் பேசுறதும், இதோ இந்தத் தூண் கிட்டப் பேசுறதும் ஒன்னு தான் டா மோகன்”

“அடச்சீ நிறுத்து”

“ஏய்ய்”

“பின்ன?, உறங்குற நேரத்துல இப்படிப் பிணாத்திட்டிருந்தா கொட்டாவி வராம என்ன செய்யும்?”

“பிணாத்துறேனா?”

“ஆமா! பின்ன?, இவனுங்க ஆஃபிஸ்ல இருந்து வீட்டுக்கு வரும் போது கதவு தொறந்து விட்றதுக்கு பொண்டாட்டி வேணுமாம்! அதுக்கெதுக்கு டா பொண்டாட்டி? நல்ல வாட்ச்மேனா பார்த்து வைச்சுக்கிட்டாப் போதாது? இதுல சிரிச்சா மாதிரி வேற இருக்கோனுமாம்! அதே வாட்ச்மேனுக்கு சம்பளத்துல 10 ரூபா எக்ஸ்ட்ரா போட்டுக் கொடு. இளிச்சவாயோடயே தினம் கதவு தொறந்து விடட்டும்”

“மோகன்ன்ன்”

“ஒன்னு தேவதை ரேஞ்சுக்குப் பொண்ணுங்களை சித்தரிக்க வேண்டியது! இல்ல, தெருவுல தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டியது! நீங்க எங்களை உயர நிறுத்தவும் வேணாம், தாழ்த்தி பார்க்கவும் வேணாம்! சமமா நிற்க வைங்க! அதுவே போதும்!”

மண்டைய காய.. நெற்றியைத் தேய்த்த ரகு.. “நான் என்ன சொல்லிட்டிருக்கேன்?, நீ என்றா மோகன் பேசுற?” என்றான் பரிதாபமாய்.

“இது பூர்ணி மாதிரி பொண்ணுங்க மட்டுமே வாழுற உலகம் கிடையாது ரகு”

“தெரியுமே! அதான் நீயிருக்கியே! அவளுக்கு அப்பிடியே எதிரா”

“தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரி உன்ற எதிர்பார்ப்பை வைச்சிக்காத”

“அடிப்பாவி”

“ஆமா! மன்னன் படம் பார்த்திருக்கியா?, சிங்கம் மாதிரி ஃபேக்டரில உலா வர்ற விஜயசாந்தி கைல கடைசில தூக்குபோசைக் கொடுத்து படத்தை முடிச்சிடுவாங்க”

“உன் ஆதங்கம் எனக்குப் புரியுது டா மோகன்”

“பொண்ணுங்கன்னாலே கோலம் போடோனும், யார் மனசும் கோணாம நடந்துக்கோனும்ன்னு சட்டம் போடாதீங்க.”

“சரி டா மோகன்! இனி இந்த மாதிரி பேச மாட்டேன்”

“ஹ்ம்ம், குட்” என்றவள் மற்றுமொரு கொட்டாவியை வெளியேற்றியபடி நகர்ந்து விட.. “ஊஃப்ஃப்ஃப்ஃப்” என மூச்சு விட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தமர்ந்தான் ரகுவரன்.

தன் பின்பு அந்த வருடப் படிப்பை முடித்த ரகுவரனுக்கு டெல்லியில் நடைபெற்ற ஆர்ட் எக்ஸிபிஷன் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அவன் பயின்ற கல்லூரியில் நடத்தப்பட்டப் போட்டியொன்றில் அவன் வரைந்தப் படங்களைக் கண்ட டிசைனிங் கம்பெனியொன்று அவனுக்கு ஸ்பான்சர் செய்ய.. டெல்லி எக்ஸிபிஷனில் அவன் வரைந்த படங்களும் வைக்கப்பட்டது.

தாயின் கருவறையிலிருக்கும் குழந்தையானது.. வெளியே ஒலிக்கும் இன்னிசை நாதத்தை என்ன மாதிரியாக சித்தரிக்கிறது என்பதைப் படமாக வரைந்திருந்தான் அவன்.

வெளிநாட்டவர் சிலரால் பல லட்சங்களுக்கு விலை போன அந்தப் படத்தைக் கண்டுத் துளசிநாதன் பூரிக்காத நாளில்லை!

அவனை ஸ்பான்சர் செய்த கம்பெனியே அவனுக்கு வேலை தருவதாகக் கூறுகையில் மறுத்து விட்டவன், மீண்டும் வீடு திரும்பித் தான் ‘பி,காம்’ படிக்கப் போவதாக வீட்டினரிடம் அறிவித்தான்.

“இது என்ன காதை சுத்தி மூக்கைத் தொடுற கதையா இருக்கு?, ரெண்டு வருஷத்துக்கு முன்னால இதைத் தான நாங்க சொன்னோம்?” – என்ற சுவாமிநாதனிடம்..

“அப்போ எனக்குப் படிக்கத் தோணல! இப்போ தோணுதுங்கய்யா.என்ன பண்ணட்டும்?”– என்று மறு கேள்வி கேட்டான்.

“சரி, இதை முடிச்சுப் போட்டு என்ன பண்ணலாம்ன்னு இருக்குற” என்ற ஜீவனின் கேள்விக்கு..

“அதை 3 வருஷம் கழிச்சு யோசிக்கலாம்” எனக் கூறித் துளசிநாதனின் கோபத்தை அதிகரித்தான்.

‘இவனை நினைச்சு இப்போ தானுங்கப்பா நான் பெருமைப் பட்டேன்! ஆனா அதுக்குள்ள தான் ஒரு ஆகாவலின்றதை காட்றதுக்குன்னே இப்படிப் பண்றான் பாருங்க’ என்று பொறுமியவருக்கு.. அவன் போக்கில் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போனது.

ன்று “பூர்ணி…” என்றழைத்தபடி உள் நுழைந்தக் கணபதியிடம்..

“இதோ வந்துட்டேனுங் சித்தப்பா” என்று கூவியபடியேத் தன்னறையிலிருந்து வெளி வந்தப் பூர்ணி.. சித்தப்பனைக் கண்டதும்..

“ரொம்ப வெயிலுங்களா சித்தப்பா?, மோர் கொண்டு வரட்டுங்களா?” எனக் கேட்டாள்.

“இருக்கட்டுங்கண்ணு! காலைச் சாப்பாடே நெஞ்சுல நிக்குது” என்றவரிடம்..

“அப்போ இஞ்சி போட்டு மோர் கொண்டு வர்றேன்! சீக்கிரம் செரிச்சுடும்” என்ற பூர்ணி சமையலறைக்கு ஓடிச் செல்ல.. சோபாவில் அமர்ந்து காலாட்டியபடிப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மோகனாவிடம் ஒரு பார்வையைச் செலுத்தியவர்.. ‘இது திருந்தாது’ என்பது போல் இரு புறமும் தலையாட்டி விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

“இந்தாங் சித்தப்பா”

“ரொம்ப நன்றி கண்ணு! தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குற இந்தக் கழுதையையும் அப்பப்போ வேலை வாங்கு கண்ணு! பின்னால, உடம்பு வணங்காம போயிடப் போகுது”

“ப்ச், அவ படிக்குற புள்ள மாமா! அவளைப் போய் வேலை பார்க்கச் சொல்ல முடியுமா?”

“ம்க்கும்,அதைச் சொல்லித் தான் தப்பிச்சுக்கிறாளாக்கும்? என்றவர் தொடர்ந்து “சரி! நேத்து உன்ற கிட்ட மண்டபத்துக்குக் கொடுக்கோனும்ன்னு காசு கொண்டு வந்து கொடுத்தேனே! அதை எடுத்துட்டு வா கண்ணு! “ என்றார்.

அவர் கூறியதும் சரியெனத் தலையாட்டி அறைக்குள் சென்றவளின் பின்னே தானும் சென்ற மோகனா.. பூர்ணியிடம் ஏதோ கூறி விட்டுப் பின் தந்தையின் அருகே வந்து நின்றாள்.

அவள் கொணர்ந்து கொடுத்தப் பணத்தை வாங்கிக் கொண்ட கணபதி புறப்படத் தயாராக..

“சித்தப்பா” என்றழைத்து நிறுத்திய பூர்ணி மோகனாவிடம் ஒரு பார்வையை செலுத்தித் தயங்கியபடியே..

“அ..அது வந்துங் சித்தப்பா.. மோகனா நாளைக்கு அவ ஃப்ரென்ஸ்ங்களோட சி..சினிமாவுக்குப் போறாளாமா! அ..அதைச் சொல்லத்தான்….” என்று இழுத்தவளை முறைத்தவர்..

“போறேன்னு சேதி சொல்றாளா? இல்ல போகட்டுமான்னு அனுமதி கேட்குறாளா?” – என்று கேட்க..

“ரெண்டும் தான்னு வைச்சுக்கோங்க!” எனப் பட்டெனப் பதில் கூறிய மோகனா..

“கூடப் படிக்குற சிநேகிதி ஒருத்திக் கல்யாணமாகிப் போறா-ப்பா! அவளுக்காக ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ப்ளான் பண்ணியிருக்கோம்! நான் போகோனும்” – என்று முகத்தைச் சுருக்கினாள்.

“இதென்ன புதுப் பழக்கம்? ம்? நம்ம சொந்த,பந்தம் எவனும் நீ இப்பிடி சிநேகிதங்களோட ஊர் சுத்துறதைப் பார்த்தா.. என்ற மான,மருவாதை என்னாகுறது?,”

“இதுல மானம்,மரியாதையெல்லாம் எங்க இருந்து எட்டிப் பார்க்குது?”

“வாய் பேசுனேனா.. அடிச்சுப் போடுவேன் ராஸ்கல்”

“ப்பாஆ…” – எனக் கத்தியவளை

“மோகனா” என்று அதட்டி அடக்கிய பூர்ணி..

“இப்ப இதெல்லாம் சகஜமாய்டுச்சுங்க சித்தப்பா! படிக்குற புள்ளைங்களோட தான போறா?, விடுங்களேன் சித்தப்பா” என்று கூற…

“நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது கண்ணு! ஆம்பளப்பசங்களையே கட்டுப்பாடு தவறாம வளர்க்குற குடும்பம் நம்மளோடது” - என்றார் அவர் ஸ்ட்ரிக்டாக.

“ஆமாமா! நீங்க போட்டக் கட்டுப்பாட்டையெல்லாம் அடிச்சு நொறுக்கிட்டு.. உங்க ஆசை மருமவன் நேத்து நைட் செகண்ட் ஷோ போய் படத்தைப் பார்த்துட்டு வந்துட்டான். அது கூடத் தெரியாம பேச வந்துட்டார் பெருசா” – கோபம் பொங்கி விட்டது மோகனாவிற்கு.

“மோகனா.. கொஞ்சம் சும்மா இரேன் டி! சித்தப்பா.. இதுக்கு முன்னாடி இப்பிடியெல்லாம் அவ கேட்டதில்ல தான? ஒரு தடவை அனுமதி கொடுங்களேன்” என்று கெஞ்சத் தொடங்கிய பூர்ணியிடம்..

“அக்கா! நீ ஒன்னும் இந்த மனுஷன் கிட்ட எனக்காகக் கெஞ்சத் தேவையில்ல! நான் படத்துக்கே போகல! விடு” என்ற மோகனா விறுவிறுவெனச் சென்று சோபாவில் அமர்ந்து விட.. இருவரையும் முறைத்து நகர்ந்து விட்டார் கணபதி.

அதன் பின்பு உர்ரென்ற முகத்துடன் அமர்ந்திருந்தவளைக் கண்டு ரகுவரன் என்னவென்று விசாரிக்கையில்.. பூர்ணி நடந்த அனைத்தையும் கூற.. மாலையே கையில் டெக்குடன் வந்து விட்டான் அவன்.

“மோகன்.. டேய் மோகன்…” என்றழைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தவனிடம்.. அவள் என்னவென்று வெடுக்கெனக் கேட்க..

“இங்க வா” என்றழைத்துச் சென்றவன்… டிவியைக் காட்டினான்.

விசிஆர்-ல் அவள் பார்க்க விரும்பிய ‘இந்தியன்’ படம் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு ‘வாவ்வ்வ்வ்’ எனக் குதித்தவள் “கேசட் எப்படிடா கிடைச்சது?” எனக் கேட்டு.. “இந்தக் கேசட்டை ரெண்டு நாள் கடன் கொடுக்கிறியா?, என்ற சிநேகிதிங்களும் பார்க்கனும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டாளுங்க” எனக்கூற சிரிப்புடனே தலையசைத்தான் ரகுவரன்.

விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டுக் கையில் குச்சிக் கிழங்கு,நேந்திரபழ வறுவல்களுடன்… செட்-அப் ஆக அனைவரும் சோபாவில் அமர்ந்தபடிப் படம் பார்க்கத் தொடங்கினர்.

மூன்று மணி நேரப் படம் முடிந்து சோபாவிலிருந்து எழுந்து நின்ற மோகனா.. வலித்த இடுப்பைப் பிடித்தபடி ‘வாக்கிங் போனா தேவலயாட்ருக்கு’ என்றெண்ணி.. மாடியை வந்தடைந்தாள்.

வெண்ணிலா இரவில்.. விசிறியடித்தக் காற்றின் குளுமையை ரசித்தபடிக் கைகளை கட்டியவள்.. குசுகுசுவென்கிற பேச்சு சத்தத்தை உணர்ந்து.. புருவத்தைச் சுருக்கியபடி எட்டி மாடியின் மறுகோடியிலிருந்தத் தண்ணீர் தொட்டியை நோக்கினாள்.

அன்று பொறுப்புப் பருப்பாய் தந்தையிடம் கம்பு சுத்திய ஜீவரஞ்சன், கிடைத்த கேப்பிலெல்லாம் பூர்ணியுடன் குழாவுவதை வழக்கமாக வைத்திருந்தான். அதற்கு சாம்பிளாக இன்று தண்ணீர் தொட்டியினருகே எரிந்து கொண்டிருந்த விளக்கை நோக்கிய மோகனா.. சிரிப்புடன் கீழே செல்ல எத்தனிக்கையில்..

“அன்னமே.. அன்னமே நான் சொல்லி..

வந்ததா.. தென்றலும்.. நேற்று…” எனப் பாடியபடியே மேலே வந்து கொண்டிருந்தான் ரகுவரன்.

அவனைக் கண்டதும் ‘அய்யோ… இவனா..’ எனத் தலையைச் சொரிந்தவள்… என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்க..

“என்றா மோகன்.. காத்து வாங்க வந்தியா?” என அமர்க்களமாய்க் கேட்டபடி அருகே வந்தான்.

“ஹான்… ம்ம்ம்ம், ஆமாமா” – என்றவள்..

“நீ.. என்ன இங்க?” எனக் கேட்டாள்.

“இதென்ன கேள்வி?, நானும் காத்து வாங்கத் தான் வந்தேன்” என்றவன்..

“காற்று வாங்கப் போனேன்… ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என்று பாட வேறு செய்ய.. எரிச்சலாகிப் போனவள்..

“இ..இங்க விட கொல்லைல கிணத்துக் கிட்ட நல்லாக் காத்து வரும்! அங்க போலாமா?” எனக் கேட்டு அவனைக் கிளப்பப் பார்த்தாள்.

“நானும் அப்பிடித் தான் டா மோகன் முதல்ல நினைச்சேன்! ஆனா.. முடிவை மாத்திக்கிட்டேன்”

“ஏன்?”

“ஐயா கொல்லைப் பக்கம் போறதைப் பார்த்தேன்! அதுவும் டர்,புர்ர்ன்னு சத்தத்தோட! எப்படியும், அடுத்த அரை மணி நேரத்துக்கு அந்த சுத்துவட்டாரத்துல எவனும் மூச்சு விட முடியாது! அதான்.. முடிவை மாத்திக்கிட்டு மாடிப்பக்கமா வந்துட்டேன்”

அடித்த காற்றில் கலைந்தத் தலைமுடியைக் கோதிக் கொண்டவன் பாட்டைத் தொடர்ந்தபடியே நடந்து சென்று மறுபுறம் எட்டிப் பார்க்க.. கையைப் பிசைந்தபடித் தண்ணீர்த் தொட்டியை நோக்கினாள் மோகனா.

அவள் அவஸ்தையுடன் நிற்பதைக் கண்டவன்..

“என்றா மோகன் முகத்தை அப்பிடி வைச்சிருக்க? கேஸ் ட்ரபிளா? அத்தனை சிப்ஸ்களை நீ மேயும் போதே எனக்கு நல்லாத் தெரியும்?” என்று கூற…

“வாயை மூடு” என்று சிடுசிடுத்தவள்.. பின் முகம் மலர“கொல்லைல கதவு திறக்குற சத்தம் கேட்குது! அப்புச்சி கிளம்பிட்டாரு போல! வா.. வா.. நாம கீழ போகலாம்” என்றாள்.

“வேண்டாம்டா மோகன்! மனுஷன் எப்படியும் ஏரியாவையே மணக்க விட்ருப்பார்! எதுக்கு ரிஸ்க்?” – என்றவன் முன்னே நடக்கத் தொடங்க..

“ஏய்.. ஏய்.. நில்லு, நில்லு” எனப் பின்னேயே சென்றவள்.. அவனை வழிமறித்து நின்றாள்.

“என்றா மோகன்?”

“இ..இல்ல.. ப..படத்தைப் பத்தி நீ எதுவுமே பேசலயே?”

“படத்தைப் பத்திப் பேச நிறைய இருக்கு டா மோகன்! ஆனா.. உன்ற கிட்ட சொல்ல ஒன்னுமேயில்ல”

“ஏ..ஏன்.. ஏன்??”

“ப்ச், ஒதுங்கி நில்லு முதல்ல! எதுக்கு என்ற வழியை மறிச்சுட்டிருக்க இப்போ நீ?” – என்றவன் அவளைச் சுற்றிக் கொண்டு முன்னே செல்லப் பார்க்க..

இரு கைகளையும் நீட்டி கண்களை இறுக மூடிக் கொண்டு.. ஒரு முடிவோடு அவனை மறித்து நின்றவள்..

“நீ…. நீ… அந்தப் பக்கம் போகக் கூடாது” என்றாள்.

சட்டமாகக் கூறியவளை ஒரு மாதிரியாக நோக்கி “ஏன்??” எனப் புருவம் சுருக்கியவனுக்கு அதன் பின்பே.. தண்ணீர்த் தொட்டியினருகே எரிந்து கொண்டிருந்த பல்பும், அதன் பின்னிருந்து வரும் பேச்சுக் குரல்களும் கருத்துக்கு வர.. பல்லைக் கடித்தவன்..

“அவ்ளோ அவசரம்ன்னா, கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டப்பவே ஒத்துட்டிருக்க வேண்டியது தானே?, என்ன கண்றாவி இது?” எனக் கோபமாய்க் கேட்க.. தானும் கோபம் கொண்டவள்..

“வாய்க்கு வந்தபடி பேசாத! அவங்க வரைமுறை தெரிஞ்சவங்க! கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணோட.. மாமா தனியாப் பேச ஆசைப்பட்றதுல என்ன தப்பிருக்கு?, நீ யார் அதை கமெண்ட் பண்ண? உனக்கு என்ன உரிமையிருக்கு தடுக்க?” – என வெடிக்க.. அவளைக் கண்டு கொள்ளாமல்..

“இவர் கூத்தடிக்க வீடு தான் கிடைச்சதா?, என்ன தைரியம் இருக்கோனும்?” என முணுமுணுத்தபடியே முன்னே நடந்தவனின் கையைப் பற்றித் தடுக்க முயன்றபடி..

“இதெல்லாம்.. ரொம்பத் தப்பு ரகு! எப்பிடி அவங்க முன்னால போய் நிற்ப நீ? அசிங்கமா இல்லையா உனக்கு?” எனக் கூறியவளின் கைகளில் சிக்காமல்..

“அசிங்கப்பட வேண்டியது அவர் தான்! நான் இல்லை” என்றவன் வேகமாக அவளைத் தாண்டிச் செல்ல முற்பட..

அவனைத் தடுக்கும் வழி தெரியாது திகைத்தவள்.. அவன் நெஞ்சில் கை வைத்துப் பின்னே தள்ளியபடி..

“வேணாம்.. வேணாம் ரகு.. சொன்னாக் கேளு…” என மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

அதுவரைப் பல்லைக் கடித்தபடிக் கோபத்தில் முனகிக் கொண்டிருந்தவன்..

அவள் செய்கையில் மேலும் கோபம் கொண்டு “என்ன பண்ற நீ?” எனக் கேட்டு தன் நெஞ்சில் பதிந்திருந்த அவள் கைகளை விலக்கித் தள்ளினான்.

கலைந்தத் தலையுடன் அவனை நிமிர்ந்து நோக்கியவள்.. மூச்சு வாங்க.. “ஒழுங்கு மரியாதையா நான் சொல்றதைக் கேளு!” எனக் கத்த.. ஆத்திரத்துடன் அவளை முறைத்துப் பார்த்தவன்..

“என்றா மோகன் பண்ணிட்டிருக்க நீ? அப்பா,அப்புச்சின்னு யார் இதைப் பார்த்தாலும்.. என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாவது உனக்குப் பயமிருக்கா?”

“அதைப் பத்தி அவங்க தான் கவலைப்படனும்! உனக்கு சம்பந்தமில்லாத விஷயமிது”

“அப்பிடியெல்லாம் என்றனால விட்ற முடியாது” என்றவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னேறிச் செல்ல.. ஆத்திரம் கொண்டவள்..

பட்டென அவனருகே சென்று.. தன்னிருகைகளாலும் அவனை வளைத்து.. இறுகக் கட்டிக் கொண்டு.. அவன் நெஞ்சில் தன் தலையை முட்டி.. அவன் மேலே செல்லாமல் தடுத்துப் பிடித்தபடி.. “என்னை மீறி எப்பிடிப் போறன்னு பார்ப்போம்” என்று சவால் விட..

தன் நெஞ்சை அப்பிக் கொண்டு.. தன்னோடு மொத்தமாக ஒட்டி நின்றவளின் நிலையை ஒரு நொடி.. மூச்சடைக்கக் குனிந்து நோக்கினான் ரகுவரன்.

தொட்டுப் பேசும் பழக்கம் கொண்டவர்கள் தான் இருவரும்!ஆனால் அந்தத் தொடுதல்.. இந்நாள் வரைத் தலையில் குட்டி வைப்பதிலும், தோளைத் தட்டுவதிலும், கையைப் பற்றுவதிலும் நின்று விடும்! அதிலும் பெரியவர்களின் முன்பு இரண்டடி இடைவெளியில் தான் நிற்பர்!

ஆனால்.. இன்று.. எல்லை தாண்டி.. சட்ட,திட்டம் மீறி.. கோபத்தில் தன்னிலை மறந்து.. அவன் மீது முழுதாய் அப்பிக் கொண்டு நின்றவளை உணர்ந்து.. உள்ளே கிடுகிடுக்கத் துவங்க.. அவசரமாய்.. அவள் தோளைப் பற்றித் தன்னிடமிருந்து விலக்கப் பார்த்தான் அவன்.

அவனது முயற்சிக்கு எதிர் வினையாய்ப் பிடிவாதத்துடன்.. தன் முகத்தை அவன் நெஞ்சில் அழுத்தியவளைக் கண்டு.. ஒரு நொடி இதயம் நின்று துடித்தது அவனுக்கு.

“எ…என்…னடி பண்ற நீ?” என்று முணுமுணுத்தவனுக்கு அந்தக் காற்றிலும் நெற்றி வியர்க்க... அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல்.. முழு பலத்துடன் அவன் அவளைத் தள்ள நினைக்கையில்..

“மோகனா….” என்ற துளசிநாதனின் அதட்டலில் இருவரும் அதிர்ந்து நிமிர்ந்தனர்.