அத்தியாயம் - 4
தன் குரல் கேட்டுப் பதறி நிமிர்ந்த மோகனாவும்,ரகுவரனும் நின்றிருந்த நிலை கண்டு.. இருவரையும் ஒரு நொடி அற்பப் பார்வை பார்த்தத் துளசிநாதன் மறு நொடி, மிகுந்த அருவெறுப்பை முகத்தில் காட்டிப் படாரென வேறு புறம் திரும்பிக் கொள்ள..
அதுவரை அதிர்ச்சியில் பேயறைந்தது போல் மாமனை நோக்கி விழித்தபடி ரகுவின் சட்டையை இறுகப்பற்றியிருந்த மோகனாவும், செயலற்றுப் போன மூளையோடு அவள் தோளைப் பற்றியபடி பிளந்த வாயுடன் நின்றிருந்த ரகுவரனும்.. அடித்துப் பிடித்துக் கொண்டு விலகினர்.
முழுக் கோபத்துடன் நின்றிருந்தவரை சமாதானம் செய்யும் பொருட்டு “மாமா…” என்றழைத்த மோகனாவின்.. யோசனை முழுதும் பூர்ணி,ஜீவரஞ்சனை சுற்றியே!
எந்த நேரத்திலும் இருவரும் தண்ணீர்த் தொட்டியின் பின்னிருந்து வெளிப்படலாம்!
அப்படி வெளிப்பட்டு இருவரும் துளசிநாதனின் கண்ணில் விழுந்தார்களெனில், ஜீவரஞ்சன் மீது துளசிநாதன் வைத்திருக்கும் ‘பொறுப்பான மகன்’ என்கிற பிம்பம் உடைய வாய்ப்பிருக்கிறது.
தண்ணீர்த் தொட்டியின் மீது ஒரு பார்வையை வைத்தபடி.. அவள் மாமனை அழைக்க..
வெடுக்கென அவள் புறம் திரும்பியவர்.. “கீழ போ” என்றார்.
எப்படியேனும் அவரை அங்கிருந்துக் கிளப்பி விடும் நோக்கத்துடன்.. மோகனா.. அவசரமாய்..
“நீங்களும் வாங்க மாமா!” எனக் கூற.. அவளை வெகுவாய் முறைத்தவரிடம்..
“எ..எ..எதுவாயிருந்தாலும் கீழ போய் பேசிக்கலாமுங்க!” எனக் கூற..
தப்பும் செய்து விட்டுத் தைரியமாய் ‘கீழ போய் பேசிக்கலாம்’ என்றழைப்பவளைக் கண்டுக் கோபம் பெருக..
“என்ன இருக்குது பேச? ம்? என்ன இருக்கு-ன்றேன்?? தொலைச்சுப் போடுவேன் ராஸ்கல்! மருவாதையா இறங்கு கீழ” என்று அவர் சத்தமிட்டதும்.. முகத்தைச் சுருக்கியவள்..
“இப்ப என்னத்துக்குக் கத்துறீங்க மாமா?” எனக் கேட்டுப் பின் “கீழ தான போகோனும்? போறேனுங்க” என்று விட்டு.. விறுவிறுவெனப் படியிறங்கி விட்டாள்.
மாமனிடம் காட்ட முடியாதக் கோபத்தை நடையில் காட்டியவளுக்கு அவர் தன்னையும்,ரகுவரனையும் கண்ட நிலை தவறான யூகங்களுக்கு வழி வகுக்குமென்கிற எண்ணம் துளி கூட இல்லை.
அவள் இறங்கிச் சென்ற அடுத்த நொடி..
“என்றா நடக்குது இங்க?” என மகனை நோக்கி உறுமினார் துளசிநாதன்.
மடித்துக் கட்டிய வேஷ்டியுடன்.. கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு இறுகிய முகத்தோடுத் தரையை நோக்கியபடி நின்றிருந்த ரகுவரன்.. அவரது எண்ணப் போக்கை உணர்ந்து.. வெடுக்கென நிமிர்ந்து.. எரிச்சலுடன் அவர் முகம் பார்த்து..
“ப்பா…” என்றான்.
“உங்கம்மை செத்தப்ப எத்தனையோ சொந்தக்காரனுங்க சொன்னானுங்க, பஞ்சையும்,நெருப்பையும் பக்கத்துல வைக்கிறது சரிப்பட்டு வராது, பொம்பளப் பசங்க ரெண்டும் தனியா வளரட்டும்ன்னு! ஆனா... என்ற புள்ளைங்களை என்றனால ஒழுக்கமா வளர்க்க முடியும்ங்கிற இறுமாப்போட இருந்தவன் டா நானு! என்ற மானத்தை வாங்குறதுக்குன்னே வந்து பொறந்து தொலைச்சிருக்கியே!”
கை நீட்டித் திட்டியவரைக் கண்டுப் பல்லைக் கடித்த ரகுவரன்..
“ப்பா… உங்க கற்பனைக் குதிரைக்குக் கடிவாளத்தைப் போட்டு தயவு செஞ்சு நிப்பாட்டுங்க! நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் இங்க ஒன்னும் நடக்கல” என்று எரிச்சலுடன் கூற..
“என்ன நடக்கல? ம்? என்றா நடக்கல?, அதான் என்ற ரெண்டு கண்ணாலயும் பார்த்தேனே அந்தக் கண்றாவியை” என்று எகிறியவரை..
“ப்பாஆஆ” எனக் கத்தித் தடுத்து நிறுத்தியவன்.. மேற்கொண்டு என்ன கூறி சமாளிப்பதெனத் தெரியாமல்.. பிடரியைக் கோதினான்.
மகனின் அமைதி துளசியின் ஆத்திரத்தை அதிகரிக்க..
“எனக்குப் பொறந்த ரெண்டும் ஒழுக்கத்துல ராமனுங்கன்னு நினைச்சு வைச்சிருந்தேன் டா! ஆனா.. என்ற எண்ணத்துல மண்ணை அள்ளிப் போட்டுட்ட நீ!”
“…………..”
“உடனொத்ததுங்க யாருமில்லாம தனிச்சு நின்ன புள்ளைங்களுக்கு நீங்க ஆதரவா, பாதுகாப்பா இருப்பீங்கன்ற நம்பிக்கைல தான் டா அவங்கய்யன் கூப்பிட்டப்பக் கூட அனுப்பாம, ஒரே வீட்ல.. உங்களோட.. ஒட்டுக்கா வளர விட்டேன்! ஆனா நான் செஞ்சது தப்புன்னு இன்னிக்கு செருப்பால அடிச்சு சொல்லிப்போட்ட நீ” – என்று கத்தியவரிடம்..
“ப்பா, வாய்க்கு வந்ததெல்லாம் பேசி உங்க வளர்ப்பை நீங்களே அசிங்கப்படுத்தாதீங்க!” என்றவன் தொடர்ந்து.. கம்மிய குரலில்..
“கீழ விழப் போனவளை நான் தாங்கிப் பிடிச்சேனுங்கப்பா! அவ்ளோ தானுங்க நடந்தது.” என்றான்.
“என்ற கிட்டயே பொய் பேசுறியா நீ?”
“நான் என்னத்துக்குப் பொய் சொல்லோனும்?, தைரியமா நிமிர்ந்து.. உங்க முகத்தைப் பார்த்து நான் பேசுறதுலயே தெரியல?, என்ற நினைப்புலயும்,பேச்சுலயும் எந்தத் தப்பு எண்ணமும் இல்லன்றது!”
“நான் இப்பவே மோகனாவைக் கூப்பிட்டுக் கேட்பேன்”
“என்னன்னு? இவன் உன்னைக் கட்டிப்புடிச்சானா? இல்லையான்னா?”
“பல்லைத் தட்டிப் போடுவேன் ராஸ்கல்!, ஐயன் கிட்ட பேசுற பேச்சா இது?”
“உங்க பேச்சு மட்டும் பெத்த மகன் கிட்ட பேசுற மாதிரியா இருக்கு?”
“பதிலுக்குப் பதில் பேசுனா, ஓங்கி ஒன்னு விட்ருவேன் சொல்லிப் போட்டேன்”
“நான் எந்தத் தப்பும் பண்ணலீங்ப்பா! இதுக்கு மேல நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம்!”
விட்டேற்றியாகக் கூறியவனை அவர் முறைத்துப் பார்க்க..
“ஆமா பின்ன? என்னவோ, என்னால இந்த வீட்டுப் பொம்பளப்பசங்களுக்குப் பாதுகாப்பு இல்லன்றதாட்டம் பேசுறீங்க?, கீழ விழப் போனவளைத் தாங்கிப் பிடிச்சது குத்தமா?, என்ற குணத்தையும்,உங்க வளர்ப்பையும் ஒரே நிமிஷத்துல தூக்கிப் போட்டுட்டு.. தெருவுல போறவனை பேசுற மாதிரி எப்பிடி உங்களால பேச முடியுது? இனி ஒரு வார்த்தைத் தப்பா பேசுனீங்க.. நான் இப்பவே.. இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன் சொல்லிப் போட்டேன்!”
“போடா.. போ! ஒழுக்கங்கெட்டவனைப் பெத்துப் போட்டப் பாவத்துக்கு.. ஒரேடியா தலை முழுகுறேன்”
“போகும் போது சும்மா போ மாட்டேன்! அவளையும் இழுத்துட்டுப் போவேன்”
மூச்சு வாங்கப் பேசுபவரைக் கண்டுக் கோபம் பெருக அவன் வார்த்தைகளை விட்டதும்..
“என்றா சொன்ன?” என்று கை ஓங்கியவரைக் கண்டு அவன் ஓரடி பின் நகர.. “ச்சை” என்றதோடு சென்று விட்டார் துளசிநாதன்.
மிதமிஞ்சிய எரிச்சலில் தலையைப் பரபரவெனத் தேய்த்துக் கொண்டவனைக் கண்டு…. “ரகு…” என்றழைத்தபடி அருகே வந்தான் ஜீவரஞ்சன்.
சுருக்கிய புருவங்களுடன் யோசனையாய்த் தன் முகம் பார்த்தவனை ஆத்திரத்துடன் நோக்கியவன்..
“ஹ்ம்ம்! இப்போ வாங்க, ரகு,ரொகுன்னுட்டு” என சீற..
“என்றா??” என்றான் ஜீவன் புரியாமல்.
அவனுக்குப் பதில் கூறாமல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன், ஜீவனின் பின்னால் வந்து நின்ற பூர்ணியை நோக்கினான்.
ஜாதிமல்லியின் மணம் பரப்பியபடி நீல நிற தாவணியில் கலையாத கோலமாய் வந்து நின்றவளைக் கண்டு, அண்ணன் மீதிருந்தக் கோபம் மட்டுப்பட..
“நீ இங்க என்ன பண்ற?” எனக் கேட்டான்.
புருவம் தூக்கி ஜீவரஞ்சனை ஒரு பார்வை பார்த்தவள், சங்கடத்துடன் தலை குனிந்தபடி “வ..வந்து.. மாமா தான் சு..சும்மா பேசோனும்ன்னு கூப்பிட்டு வந்தார் டா” எனக் கூற..
“சும்மா பேசோனும்ன்னு வந்தவங்களுக்கு, இவ்ளோ பெரிய மாடியில இடமே இல்லையின்னு தான், தண்ணித் தொட்டி பின்னாடி போனீங்களாக்கும்?” – நக்கலாகக் கூறியவனை..
“டேய்” என ஜீவன் அதட்ட..
“என்ன?ம்? என்ன அதட்டுறீங்க? தப்பும் பண்ணிட்டு என்ன அதட்டல் வேண்டிக் கிடக்கு?” என்று எகிறினான் ரகுவரன்.
“தப்பு பண்ணேனா?”
“ஆமா! பேசோனும்ன்னு வந்தவரு, என்னத்துக்கு அவளைத் தண்ணி தொட்டி பின்னால கூட்டிப் போகோனும்?
ரகுவின் பேச்சில் குற்ற உணர்வு தலை தூக்க.. முகத்தை மண்ணோடு ஒட்டிக் கொள்ளும் நோக்கத்துடன்.. குனிந்து நின்ற பூர்ணியின் தோளை வளைத்து அருகில் நிறுத்திக் கொண்ட ஜீவன்..
“என்ற பொண்டாட்டியோட நான் எங்கன்னாலும் நின்னு பேசுவேன்! உனக்கென்னடா வந்தது?” என்று தம்பியிடம் கத்த..
“பொண்டாட்டியா? எங்களுக்குத் தெரியாம எப்ப அவ கழுத்துல தாலி கட்டுனீங்க?” – எனக் கேள்வி கேட்டான் ரகுவரன்.
“டேய்” – கோபத்துடன் விரலை நீட்டியவனைக் கண்டு கொள்ளாது.. அவனது கைகளிலிருந்துப் பூர்ணியை விடுவித்துத் தன் புறம் இழுத்துக் கொண்டவன்..
“கழுத்துல தாலி ஏறுற வரைக்கும், பொண்டாட்டி,கிண்டாட்டின்னு அவளைத் தனியா தள்ளிட்டு போற வேலையையெல்லாம் இத்தோட நிறுத்திக்கோங்க” – எனக் கூற..
“என்றா மிரட்டுற?” – சட்டையை மடித்து விட்டபடி சண்டைக்கு நின்ற ஜீவனை அவசரமாய்த் தடுத்த பூர்ணி..
“அய்யோ மாமா.. கொஞ்சம் சும்மா இருங்களேன்! தம்பு, நான் செஞ்சது தப்பு தான் டா! மன்னிச்சுடு டா! மூத்தவளா பொறுப்போட நடந்துக்கோனும்ன்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாம புத்தி கெட்டுப் போய் இந்த மனுஷன் கூப்பிட்டதும் பின்னாடியே வந்துட்டேன்!! சண்டை வேணாம் டா! விட்டுடா”
‘சாந்தி,சாந்தி’ என்றபடி ரகுவரனின் தோளைப் பற்றியபடிக் கெஞ்ச...
“நீ என்னத்துக்கு மன்னிப்பு கேட்குற? இந்த வீட்லயே நான் தான் நல்லவன்,வல்லவன்றதாட்டம் வேஷம் போட்டுக்கிட்டுக் கமுக்கமா எல்லா வேலையும் பண்ணி.. ஊரை ஏமாத்திட்டிருக்க மனுஷனே.. கம்முன்னு நிற்கும் போது”
தன்னை ஓரப்பார்வையால் நோக்கியபடி நக்கலடித்தவனைக் கண்டுப் பல்லைக் கடித்த ஜீவன்.. “யாருடா ஏமாத்துறா? அடிச்சுப் பல்லைக் கழட்டிடுவேன் சொல்லிப் போட்டேன்! அப்பிடி என்றா பண்ணிட்டேன் நான்? கட்டிக்கப் போறவ கூட பத்து நிமிஷம் தனியா பேசுனது குத்தமா டா?” – என வயிற்றெரிச்சலோடு கேட்டான்.
“பேசுறவரு என்னத்துக்குத் தண்ணித் தொட்டிப் பின்னாடி போகோனும்?”
“அதையே திரும்பத் திரும்ப சொல்லாத டா“
“தப்பைத் தப்புன்னு சொல்லாம, வேற என்னன்னு சொல்றது?”
“தம்பு விடு டா! ப்ளீஸ் டா” – பூர்ணி வேறு இடையில்.
“நீ என்றி, என்னை விட்டுப் போட்டு அவனுக்கு சமாதானம் சொல்லிட்டிருக்கவ?”
“ஆமா, நான் பண்ணது தப்புத் தான?”
“அடிப்பாவி”
“ஆமாங் மாமா! இதே என்றம்மை,அப்பன் இருந்திருந்தா.. கல்யாணத்துக்கு முன்னாடி என்னை இப்டியெல்லாம் உங்களோட தனியா பேச அனுமதிச்சிருப்பாங்களா?, இல்ல தான?, இவன் எனக்கு அம்மா-அப்பா ஸ்தானத்துல இருந்து என்னைக் கண்டிக்கிறான்! அவன் மேல எப்படிங்க மாமா நான் கோபப்படுறது?” – என்றவளைப் பார்வையில் லிட்டர்,லிட்டராய்ப் பாசம் வழிய முழுப்பரவசத்துடன் நோக்கிக் கொண்டிருந்த ரகுவைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்ட ஜீவன்..
“கல்யாணத்துக்குப் பிறகாச்சும், என்ற கூட பேச உன்னை அனுமதிப்பானான்னு எதுக்கும் இப்பவே கேட்டு வைச்சுக்கடி” என்று கூறி விட்டு எரிச்சலுடன் இறங்கிச் சென்று விட..
“தம்பு என்ற மேல கோவமா டா?” என்றாள் பூர்ணி.
“ச்ச,ச்ச உன்ற மேல எனக்கென்ன கோவம்?”
“நீ எப்போடா இங்க வந்த?”
“ஏன் நான் வந்தது உங்களுக்குத் தொந்தரவா போச்சாக்கும்?”
“ஏன் டா இப்பிடி பேசுற”
“பின்ன?, உனக்கடுத்து ஒருத்தியிருக்கா. இதையெல்லாம் பார்த்தா, அவ மனசு சலனப்படாதா? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?”
“தப்பு தான் டா தம்பு!, இனி இப்பிடி பண்ண மாட்டேன்”
“பார்ப்போம்”
“என்றா”
“நாளைக்கே அந்த மனுஷன் கூப்பிட்டா பின்னாடியே போகத் தான் போற! என்னவோ பெருசா என்ற பேச்சைக் கேட்கப் போறவ மாதிரி தலையை உருட்டுற”
“…………”
“என்னை விட ம்க்க்கும், எங்களை விட உனக்கு அவரைத் தான் பிடிக்கும்! என்ன பூர்ணி?”
“அப்பிடியெல்லாம் இல்லடா ரகு! ஏன் இப்பிடி பேசுற?, இப்பிடியெல்லாம் பேசுனேனா.. நான் அழுதுடுவேன் சொல்லிப் போட்டேன்”
“வேணாம்! வேணாம்! எதுக்குடா என்ற பொண்டாட்டியை அழ விட்றன்னு கேட்டு என்ற உடன்பொறப்பு சண்டைக்கு வந்துடப் போறாரு” – என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே “பூர்ணி….” என்ற ஜீவனின் குரல் கீழிருந்து கேட்க..
அதுவரை ரகுவிடம் அள்ளி விட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு “இதோ வந்துட்டேனுங் மாமா” எனக் குரல் கொடுத்து விட்டுப் பின் ரகுவிடம் அசடு வழிந்தபடித் தலையைச் சொரிந்த பூர்ணி..
“அ…அது.. சாப்பாடு எடுத்து வைக்கக் கூப்பிட்றாங்களாட்ருக்குடா ரகு” எனக் கூற.. மெல்ல சிரித்தவன்.. “போ போ போ” என்றான்.
அவள் சென்றதும் ஆழ மூச்செடுத்தவனுக்கு.. மூளையின் ஓரத்தில் அவஸ்தையாய், சங்கடமாய் ஓர் உணர்வு! அழுத்தமாய்ப் பிடரியைக் கோதிக் கொண்டவன்.. கீழே செல்லத் தோன்றாமல்.. அங்குமிங்குமாய் நடந்தபடி மாடியிலேயே தேங்கி விட்டான்.
அவன் வருகைக்காகக் காத்திருந்த மோகனா.. டைனிங் டேபிளில் நகம் கடித்தபடி மாடிப்படியில் பார்வையை பதித்து அமர்ந்திருந்தாள்.
நள்ளிரவில் கீழிறங்கி வந்தவன், அவளை எதிர்பாராது ஒரு நொடி திடுக்கிட்டுப் பின் அவளைக் கண்டு கொள்ளாது அடுக்களையை நோக்கிச் செல்ல, அவன் பின்னேயே சென்றாள் மோகனா.
“மாமா உன்ற கிட்ட என்ன சொன்னாரு?”
பானையிலிருந்தத் தண்ணீரை தம்ளரில் அள்ளிப் பருகிக் கொண்டிருந்தவனிடம் கேள்வி கேட்டாள்.
அவள் முகம் பார்க்காது நின்றவனிடம்..
“உன்ற கிட்ட தான் பேசிட்டிருக்கேன்” என்றவளை உதாசீனப்படுத்தி விட்டு அவன் முன்னே நடக்க…
“பேசிட்டிருக்கேனல்ல?, பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” என்று எகிறியவள்.. “நில்லு.. அட நில்லுன்னு சொல்றேனல்ல” என்றபடி அவன் கையைப் பற்றப் போக..
பட்டெனக் கையைப் பின்னிழுத்துக் கொண்டவன் பல்லைக் கடித்தபடி அவளை முறைத்தான்.
அவன் செய்கையில் வியந்து.. “எ..என்ன??” என்றவளை ஒரு நொடி அசையாது நோக்கியவன்.. பின் முகத்தை அநியாயத்திற்கு சுழித்து.. “போடி..” என்றபடி நகர்ந்து விட்டான்.
புருவத்தை உயர்த்தி வாயைப் பிளந்தவள் “யாரை டா டி-ன்ற?” என்று கத்தியதைப் பொருட்படுத்தாது!
மறு நாள் காலை கல்லூரி செல்லும் நேரம், டிவி பார்த்தபடி சாப்பாட்டுத் தட்டுடன் சோபாவில் அமர்ந்திருந்த ரகுவரனின் அருகே வந்தமர்ந்தாள் மோகனா.
ஓரக்கண்ணில் அவள் வருகையை உணர்ந்தவன், அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைய.. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு டிவியையே நோக்கினான்.
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுத் தானும் டிவியின் புறம் திரும்பிய மோகனா கையிலிருந்ததை உண்ணத் துவங்க...
அத்தனை நேரமாகப் பாடிக் கொண்டிருந்த பழைய பாடல் முடிந்து.. முத்தக் காட்சியுடன்..
“ஓம் நமஹ உருகும் உயிருக்கு..
ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்..” எனத் துவங்க.. ‘காலங்கார்த்தால என்ன பாட்டு போடுறானுங்க பாரு” என்று முணுமுணுத்த ரகு..வெடுக்கென எழுந்து சென்று.. அந்த டப்பா சாலிடேர் டிவியை அணைத்து விட்டு வந்தமர்ந்து கொள்ள..
பொங்கிய சிரிப்பை அடக்கிய மோகனா அவன் புறம் திரும்பி..
“இப்போ என்னத்துக்கு டிவியை ஆஃப் பண்ணவன்?” எனக் கேட்டாள்.
அவளுக்குப் பதில் கூறாமல், அவள் புறம் திரும்பாமல் நேரே வெறித்தபடி உண்டு கொண்டிருந்தவனைக் கண்டு..
“கிஸ் சீன்-ன்றந்தங்காட்டி தான ஆஃப் பண்ணிப் போட்ட?” என வினவ.. சட்டெனத் திரும்பி அவளை முறைத்தான் அவன்.
தட்டைக் நெஞ்சருகே பிடித்தபடி அமர்ந்திருந்தவள்.. உண்டபடியே… காலாட்டிக் கொண்டு நக்கலாய்க் கேட்க..
“ஆம்பளப்பசங்கக் கிட்ட இப்பிடித்தான் வரைமுறையில்லாம பேசுவியா?” என்றான்.
புருவம் உயர்த்தி உதட்டை வளைத்தவள்..
“ஆம்பளைப் பையனா?, அது யாரு?” என்று வினவ.. மூச்சு வாங்கக் கோபமாய் அவளை முறைத்தவனைக் கண்டு கொள்ளாது நமுட்டுச் சிரிப்புடன் அடை தோசையை வாயிலடைத்துக் கொண்டாள் மோகனா.
சிரித்தபடி அமர்ந்திருந்த மோகனாவையும், அவள் முகம் நோக்கித் திரும்பியிருந்த ரகுவரனையும் கண்டபடி நடந்து வந்தத் துளசிநாதன், “ம்க்க்க்கும்” எனத் தொண்டையைச் செருமினார்.
தந்தையின் குரல் கேட்டு நிமிர்ந்த ரகுவரனை அவர் தீப்பார்வை பார்க்க..
‘இந்த மனுஷன் வேற உப்புசப்பில்லாத விஷயத்துக்குக் கூட உக்கிரமா நிற்பார்’ என முணுமுணுத்து விட்டுத் தட்டை நோக்கிக் குனிந்தவன்.. இன்னமும் தன்னை முறைத்துக் கொண்டே நின்றத் தந்தையை உணர்ந்து கண்களை மூடிப் பல்லைக் கடித்தவன் “ச்சை” என்றபடித் தட்டில் கையை உதறி விட்டு எழுந்து செல்ல..
கோபமாய் செல்லும் மகனைக் கண்டு கொள்ளாது.. தங்களிருவரையும் ஆராய்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்த மோகனாவின் அருகே அமர்ந்தார் துளசி.
“என்ன கண்ணு, காலேஜ்க்குக் கிளம்பிட்டியா?” – நொடியில் முறைப்பை மறைத்து.. மெல்லிய புன்னகையுடன் பேசுபவரை அடிக்கண்ணில் நோக்கிய மோகனா..
“ஆமாங் மாமா” என்றாள்.
“படிப்பெல்லாம் நல்லா போகுதுல்ல கண்ணு?”
“எதுக்குங் மாமா திடீர்ன்னு கேட்குறீங்க?”
“ஏங்கண்ணு, நான் கேட்கக் கூடாதா?”
“சரி கேளுங்க”
“படிப்பு எப்பிடி போகுதுன்னு கேட்டேங்கண்ணு”
“போகுதுங் மாமா”
“அப்புறம் கண்ணு, அந்த சாந்தி-ங்குறவ உன்ற சிநேகிதி தான?” – தன் சொட்டையைத் தடவியபடி கேள்வி கேட்டவரிடம்..
“ஆமாங் மாமா, அவளுக்கென்ன?” – சந்தேகத்துடனே வினவினாள் மோகனா.
“அவளை அடிக்கடி ஒரு பையனோட பார்க்குறேனே! யாரு கண்ணு அவன்?, பொம்பளைப் பசங்க கூட நடுவீதில நின்னு பேசுற அளவுக்கு தைரியமானவன்?”
“உங்களுக்கு எப்படிங் மாமா தெரியும்?”
“என்ற கண்ணுல இருந்து எதுவும் தப்பாது கண்ணு” – பெருமையாய்க் கூறியவரிடம்..
“ஓஹோ!” என்ற மோகனா.. “அப்டின்னா நம்ம வூட்டுத் தண்ணி தொட்டி பின்னால நடக்குற விஷயமும் கூட உங்களுக்கு நல்லாத் தெரியும்ங்களாட்ருக்கு மாமா!” – எனக் கூற..
“மோகனா..” – என்று குரல் உயர்த்தினான் ரகுவரன்.
புரியாமல் தங்களிருவரையும் நோக்கும் துளசிநாதனைக் கண்டுத் தன்னை அடக்கியவள்..
“அதொன்னுல்லீங் மாமா, பூனை ஒன்னு குட்டி போட்டுக் குடும்பமா நம்ம தண்ணி தொட்டி பின்னாடி வசிச்சுட்டிருக்குங்! அதைச் சொன்னேனுங்க” என்றவள் தொடர்ந்து “என்ற சிநேகிதி தங்கமானவளுங் மாமா!, அந்தப் பையனோட நட்பாத் தான் பழகுறாளுங்க” என்றாள்.
“என்ன நட்பா இருந்தாலும் காலேஜோட நிறுத்திக்கோனும் கண்ணு! நடுவீதி வரைக்கும் வைச்சுக்கிறது என்ன பழக்கம்?” -மீசையை முறுக்கியவரிடம்..
“தப்புப் பண்றவங்க எதுக்குங் மாமா நடுவீதில நின்னு பேசோனும்? திருட்டுத்தனமா சந்திச்சுக்க இடமா இல்ல?”- என்றாள் அவள் ஆவேசத்துடன்.
“அப்பிடியெல்லாம் லாஜிக்-ஆ யோசிக்க இங்க யாருக்கும் தெளிவு கிடையாது கண்ணு! நாங்க இப்பிடித் தான்”
“இது பிடிவாதமுங்க மாமா! ஆணும்,பெண்ணும் நட்பாப் பழகுறதுல எந்தத் தப்புமில்லீங்க”
“அது சரி தான் கண்ணு! ஆனா.. நம்ம சமுதாயத்துக்கும், கலாச்சாரத்துக்கும் அதெல்லாம் ஒத்து வராது”
“இதையே எத்தனை நாளைக்குங் மாமா சொல்வீங்க? இப்படித் தான் என்ற க்ளாஸ் பொண்ணு ஒருத்தி, கூடப் படிக்கிற பையனோட புஸ்தகத்தைப் படிக்கிறதுக்காக வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருக்கா! புஸ்தகத்துல பையன் பேர் இருக்கிறதைப் பார்த்துப் போட்டு அவங்கய்யன் அவ கால்ல சூடு போட்டு விட்டாராமா! இதெல்லாம் எவ்ளோ பெரிய முட்டாள்தனமுங்க மாமா? பிள்ளைங்களைப் பெத்துப் பேர் வைச்சு, கூடவே அன்பு,பாசத்தையும் சேர்த்து வைக்குற பெத்தவங்க, ஏனுங் மாமா நம்பிக்கை வைக்க மட்டும் இவ்ளோ யோசிக்கிறாங்க? படிப்பு,வேலைன்னு வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கத் தொடங்கிட்ட பொண்ணுங்களுக்கு, பையன்,காதல்,கல்யாணமுங்கிற விஷயத்துலலாம் தெளிவு இல்லாமலா போயிடப் போகுது? நீங்களே சொல்லுங் மாமா!”
நேற்றைய சம்பவத்தைப் பற்றி அவளிடம் வெளிப்படையாகப் பேசிட முடியாது திணறிய துளசிநாதன், அவளது சிநேகிதியின் விஷயத்தைச் சொல்லி அவளை மறைமுகமாக எச்சரிக்கும் நோக்கத்துடன் தான் பேசத் துவங்கினார்!
ஆனால்.. கடைசியில் அவரது முயற்சியை முறியடித்து.. டாபிக்கை மாற்றி.. ஆவேசமாகப் பேசுபவளைக் காண்கையில், அவள் மீது தவறில்லையோ எனத் தோன்ற.. யோசனையுடன் அமர்ந்து விட்டார் துளசி.
தன் பேச்சுக்குப் பதில் வேண்டி அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மோகனா..
“ஏனுங் மாமா பசி வந்துடுச்சுங்களா? முகமே சரியில்ல?” எனக் கேட்க..
“ஆஆமாங் கண்ணு” என்று சமாளித்தவரிடம் கேவலமாய் ஒரு பார்வையைச் செலுத்தியபடி அருகே வந்து நின்றான் ரகுவரன்.
அவனைக் கண்டதும் முகத்தை இறுக்கியவரைக் கண்டு கொள்ளாமல் “பூர்ணி, நான் கிளம்புறேன்” என்று விட்டு அவன் சென்று விட..
“நானும் கிளம்புறேனுங் மாமா, நேரமாச்சு” என்றவள் எழுந்து நின்று..
“சாந்தியோட அப்பா உங்க சிநேகிதரு தானுங் மாமா?” எனக் கேட்டாள்.
“ஆமாங்கண்ணு, ஏன் கேட்குற?” – என்றவரிடம்..
“இல்ல, என்ற சிநேகிதியையும் அந்தப் பையனையும் இணைச்சு வைச்சு அவரு அசட்டுத்தனமா எதுவும் பேசுனாருங்ன்னா.. கொஞ்சம் புத்தி சொல்லுங் மாமா” – என்றாள்.
அவள் அசட்டுத்தனம் என்றது சுருக்கென்று தைக்க.. ‘நீ புத்தி சொல்ல நினைக்குறது என்ற சிநேகிதனுக்கா, இல்ல எனக்கா கண்ணு?’ என்றெண்ணியவர் அவளிடம் மையமாகத் தலையை ஆட்டி வைத்தார்.
பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த மோகனா.. தனது பைக்கை ஸ்டார்ட் செய்தபடி நின்றிருந்த ரகுவரனையும், காரைத் துடைத்தபடி நின்றிருந்த ஜீவரஞ்சனையும் கண்டு நின்றாள்.
“எங்க பையைத் தூக்கிட்டு கிளம்பிட்டவ?” – கேள்வி கேட்ட ஜீவரஞ்சனிடம்..
“நக்கலாங் மாமா?, காலேஜ்க்குத் தான்! வேறெங்க?” என்றாள்.
“இன்னிக்கு பஸ் ஸ்ட்ரைக் தெரியுமல்ல?”
“தெரியும்ங்க மாமா! அதான்.. உங்களை ட்ராப் பண்ண சொல்லலாம்ன்னு வந்தேனுங்க”
“ம்க்கும், உனக்கு ட்ரைவர் வேலை பார்த்துட்டிருந்தா, என்ற மில்லு வேலையெல்லாம் யாரு பார்க்குறது?”
“அரை மணி நேரத்துல என்ன பெரிய வேலை செஞ்சு தள்ளிடுவீங்க நீங்க? வாங்க மாமா”
“ம்ம்ம், அடை தோசை தின்னா அக்கிரமமாத் தான் பேச்சு வரும்! இந்தா.. இவனும் உன்ற காலேஜ்ல தான படிக்குறான்?, பின் சீட்டை வேற காலியா வைச்சிருக்கான்?, பேசாம அவனோட ஏறிப் போயேன்”
அதுவரை இருவரும் பேசிக் கொள்வதைக் கண்டும் காணாதது போல் கவனித்துக் கொண்டிருந்த ரகுவரன்…
“ண்ணா…” என்று கத்த..
“என்றா?” என்றான் ஜீவன்.
“அவன் இப்பத் தான் உதைச்சிட்டிருக்கானுங் மாமா, இனி வண்டி ஸ்டார்ட் ஆகி, அவன் ஓட்டத் தொடங்குறதுக்குள்ள, நாம பொள்ளாச்சி போய் புளியம்பட்டி வந்திரலாமுங்க”
நக்கலடித்தவளின் முகம் காணாது அவன் பல்லைக் கடிக்க.. தம்பி வெறுப்படைவதைக் கண்டு குஷியாகிப் போனது ஜீவனுக்கு.
“ஏன் டா ஒத்தப் படத்தை வரைஞ்சு லட்ச,லட்சமா காசு பார்த்தவனுக்கு ஒரு நல்ல வண்டி வாங்கிக்கிறதுல என்றா கஷ்டம்?”
“இவன் சரியான இண்டம் பிடிச்சவனுங் மாமா”
“ஏய் நீ வாயை மூட மாட்ட?” – நேரடியாக மோகனா மீது பாய்ந்தவனிடம்..
“என்றா அவ மேல கோபப்படுற?” – என்றான் ஜீவன்.
“……….”
“பொதுவா ரெண்டு பேரும் தோள் மேல கையைப் போட்டுக்கிட்டு ஒட்டுக்காத் தான டா சுத்துவீங்க?, இப்ப என்றா முறைச்சிட்டு நிற்குறீங்க?”
“நாங்க எப்போ அப்பிடி சுத்துனதை நீங்க பார்த்தீங்க? பொண்ணுங்க தோள்ல கையைப் போட்டு சுத்துற அளவுக்கு நான் மோசமானவனுங்களா?”
நேற்றிரவிலிருந்துத் தந்தையின் அலைவரிசையிலேயே பிரயாணித்துக் கொண்டிருந்தவனுக்கு அண்ணனின் பேச்சு கோபத்தை வரவழைக்க.. அவனிடம் எகிறியவனை வித்தியாசமாக நோக்கினர் மோகனாவும்,ஜீவனும்.
“நான் எப்போ டா அப்பிடிச் சொன்னேன்?” என்ற ஜீவனிடம்...
“சரி, பேச்சை விடுங்க”என்று அவன் முனகுகையில் வெளியே வந்தத் துளசிநாதன் மோகனாவிடம் என்னவென விசாரித்தார்.
அவள் பஸ் ஸ்ட்ரைக் பற்றிக் கூற.. ‘சரி வா கண்ணு, நான் இறக்கி விட்றேன்’ எனக் கிளம்பி விட்டார்.
“நீங்க வேற என்னத்துக்குங்ப்பா அலைஞ்சிக்கிட்டு?, ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான படிக்குறாங்க? ஒட்டுக்காப் போனா என்ன?” என்றான் ஜீவன்.
‘டுர்டுர்ரென’ ஹேண்ட்பாரை முறுக்கிக் கொண்டிருந்த மகனைக் கண்டவர்.. “ம்க்கும்” என்று விட்டு..
“வேணாம்,வேணாம்! நானே இறக்கி விட்டுக்கிறேன்” என்று விட்டு “வேலா” என ட்ரைவரை அழைக்க..
தந்தையைப் புரியாது நோக்கி விட்டு ஜீவன் தம்பியின் புறம் திரும்ப.. அவனோ உதட்டை பிதுக்கித் தோளைக் குலுக்கிக் விட்டுப் பறந்து விட்டான்.
அதன் பின்பு வந்த நாட்களில் தன்னை வெளிப்படையாகத் தவிர்க்கும் ரகுவரனை நோட்டம் விட்டபடி அமைதியாயிருந்தாள் மோகனா.
அன்று கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்தக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாது.. நண்பர்களுடன் மைதானத்தில் அமர்ந்திருந்தான் ரகுவரன்.
அப்போது எங்கிருந்தோ திடுதிடுவென ஓடி வந்த முதலாமாண்டு மாணவன் ஒருவன் “ரகுண்ணா.. உங்க மாமா பொண்ணு திடீர்ன்னு மூச்சு விட முடியாம நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு கீழ விழுந்துட்டாங்களாமா! ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிடல் கூட்டிப் போயிருக்காங்கண்ணா” எனக் கூற..
“என்றா சொல்ற” எனக் கேட்டபடி அவன் சட்டையைப் பிடித்தவன், அடுத்த நொடி.. பதறியடித்துக் கொண்டுத் தனது பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ஓட.. எந்த மருத்துவமனையென வந்தவனைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவனது நண்பர்கள், அவனைத் தொடர்ந்து ஓடினர்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தவன்.. வாசலில் அவனை எதிர் கொண்ட அவளது தோழிகளிடம் என்ன நடந்ததென விசாரித்தான்.
நடன நிகழ்ச்சியொன்றில் மோகனா பங்கெடுத்திருந்ததாகவும், மேடையேறுவதற்கு முன் ப்ராக்டிஸில் ஈடுபட்டிருந்த போதுத் திடீரென மூச்சு விட முடியாமல் திணறி கீழே அமர்ந்து விட்டதாகவும் கூற.. “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என்றபடிப் பல்லைக் கடித்துத் தலையைக் கோதிக் கொண்டவன்..
“அவளால மூச்சு வாங்க ஓடவோ,ஆடவோ முடியாதுங்ம்மா, அதிகபட்ச உடல் உழைப்பு அவளுக்கு மூச்சுத்திணறலைக் கொடுக்கும்! இது கூடத் தெரியாமலா இத்தனை நாள் அவளோட பழகுறீங்க?” என்று கத்தினான்.
“இல்லீங்ண்ணா, மோகனா ஒரு தடவை கூட தன்னோட உடல்நிலையைப் பத்தி எங்கக் கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதில்லீங்ண்ணா” என்று பயந்த குரலில் கூறிய பெண்களிடம் ஒன்றும் கூறாது.. அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு விரைந்தான் ரகுவரன்.
இன்ஹேலரின் உதவியால் மூச்சு சீராகியிருக்க.. கண் மூடிப் படுக்கையில் சாய்ந்திருந்தவளைக் கண்டு கோபத்துடன் அருகே சென்றான்.
‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ பாட்டில் வரும் ரேவதியைப் போன்று நெற்றி,நாடி,கண்ணோரங்களிலெல்லாம் பொட்டுடன்.. குறத்தி காஸ்ட்யூமிலிருந்தவளைக் கண்டு கடுப்பாக.. அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு நெருங்கி அமர்ந்தான்.
“நீ முழிச்சு தான் இருக்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஒழுங்கா கண்ணைத் திறந்து பாரு”
அவன் மிரட்டியதும் உதட்டைச் சுழித்து உச்சுக் கொட்டியபடி வெடுக்கென எழுந்தமர்ந்தாள் மோகனா.
“நீ இப்ப ஆடலன்னு யார் அழுதது? உன்ற உடல்நிலை இதுக்கெல்லாம் அனுமதிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?”
எடுத்ததும் காய்ந்தவனிடம்..
“தெரியும் தான்!” என்றாள் அவள்.
“நம்ம வீட்டாளுங்க காதுக்கு இந்த விஷயம் போச்சுன்னா.. என்னாகும்ன்னு தெரியுமல்ல?”
“அதை சமாளிக்கத் தான் நீ இருக்கேயில்ல?”
“நானா? நீ பண்ண தப்புக்கு நான் என்னத்துக்கு சொம்பு தூக்கோனும்?”
“ஆமா, ஒரே காலேஜ்ல தான படிக்கிறீங்க, அவ ஆடப் போறது உனக்குத் தெரியாதான்னு உன்னைத் தான முதல்ல விசாரிப்பாங்க?”
-கண்ணை விரித்துச் சிரிப்புடன் வினவியவளின் முகத்தை அசையாது நோக்கியவன்..
“விளையாட்டில்ல டா மோகன் இது” என்றான்.
“ப்ச், தப்புத் தான். ஒத்துக்கிறேன்! 10ங்க்ளாஸ்ல கரகத்தைத் தலையில் வைச்சு மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடுனேன் தான?, அந்தத் தைரியத்துல தான் இப்ப ஆட ஒத்துக்கிட்டு இறங்கிட்டேன்!, கடைசில இப்பிடியாகிப் போச்சு”
“அப்போ நீ ஆடுனது டான்ஸா டா மோகன்?”
“கரெக்டு தான்! நின்ன இடத்துலயே கையையும்,காலையும் அசைக்கிறதெல்லாம் டான்ஸ் இல்ல தான்!, ஹெவி ஸ்டெப்பெல்லாம் வைக்காதீங்கடின்னு நான் கெஞ்சுனதை இவளுங்க கேட்கவேயில்ல! எப்படியாவது சமாளிச்சுடலாம்ன்னு இத்தனை நாள் ப்ராக்டிஸ்ல ஏமாத்திட்டிருந்தேன்! ஆனா இன்னிக்கு மாட்டிட்டேன்”
“அலட்சியமா பேசாத டா மோகன்!”
“சரி விடேன்! அதான் தெரியாம நடந்துடுச்சுன்னு சொல்றேனல்ல?”
“தெரியாம-ன்னு சொல்லாத! நீ தெரிஞ்சு தான் பண்ணியிருக்க”
“சரி, அதனால என்ன இப்போ? ஆமா, உனக்கு என்ன புதுசா என்ற மேல அக்கறை? ம்? இத்தனை நாளா.. என்ற முகத்தைக் கூட பார்க்காம.. திருப்பிக்கிட்டு சுத்துன? இப்ப எதுக்கு அக்கறையா பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்க?”
“தப்பு தான்! வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிட்டு நான் என்ற வேலையை பார்த்திருக்கனும். அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தேன் பாரு!”
“இப்பவும் காலம் கடந்துடல, ஃபோன் பண்ணி சொல்லு! எனக்கென்ன வந்தது?”
“ப்ச், மோகன்”
“ம்ம், மோகன்,மோகன்னு வார்த்தைக்கு வார்த்தை என்னை சிநேகிதனைக் கூப்பிட்ற மாதிரி கூப்பிட்றவன், என்னத்துக்கு வாடி,போடின்னு முகத்தைத் திருப்பிட்டு சுத்துன?”
“………….”
“எனக்குத் தெரியும்”
“என்ன தெரியும்?”
“அன்னிக்கு நான் உன்னைக் கட்டிப் பிடிச்சதால தான நீ என்ற முகத்தைப் பார்க்கத் தயங்குற?”
பட்டென முகத்திற்கு நேராய் அவள் வினவியதும்.. சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவன் அவள் முகம் பாராமல்..
“நான் போறேன்” என்றான்.
“போ!”
ஒற்றை வார்த்தையால் பதிலளித்தவளைத் திரும்பி நோக்கியவனிடம்..
“நான் அப்புச்சியையோ, மாமாவையோ வரச் சொல்லி வீட்டுக்குப் போய்க்கிறேன்” எனக் கூற அவளை முறைத்தபடி மீண்டும் வந்தமர்ந்தான்.
அவள் முகத்தைப் பாராமல் எங்கோ நோக்கிக் கொண்டிருந்தவனைக் கண்டு சிரித்து..
“நான் எகனாமிக்ஸ் குரூப் தான்னாலும், பயாலஜில எனக்கு நாலேஜ் இருக்கு!” என்றவள் தொடர்ந்து.. “நான் உன்னைக் கட்டிப்பிடிச்சதுல ஏதோ ஒரு வகைல நீ டிஸ்டர்ப் ஆகியிருக்க. கரெக்டா?” – என்றாள் அவள்.
“வாயை மூடு! அர்த்தமில்லாம பேசிக்கிட்டு” – எரிச்சலுடன் கத்தியவனிடம்..
“பின்ன எதுக்கு என்ற முகத்தைப் பார்க்காம பேசுற?” என்றாள்.
“……………….”
“கதை,சினிமால-லாம் இப்பிடி ஒரு சம்பவம் நடந்தப்புறம் பொண்ணு வெட்கப்பட்டு சுத்துறதாட்டம் தான் காட்டுவாங்க,ஆனா இங்க எல்லாம் ஆப்போசிட்-ஆ இருக்கு!”
“ஏன்? ஆணுக்கும்,பெண்ணுக்கும் வித்தியாசமில்லன்னு பக்கம்,பக்கமா பேசுறவ தான நீ? வெட்கம்,கூச்சம்ன்றதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான் வருமா? எங்களுக்கு வராதா?”
“லாஜிக்கலி சரி தான்”
“………..”
“அப்போ உன்னையைத் தடுக்கத் தான் பிடிச்சேன்! வேறெந்த நோக்கமும் எனக்கு இல்ல. ஆனா.. யோசிச்சுப் பார்த்தப்போ அப்பிடிப் பண்ணினது தப்புன்னு தோணுச்சு”
“என்ன விளக்கம் கொடுக்கிறியா? அப்பிடி என்ன பெரிய நோக்கம் இருந்திருக்க முடியும்?, லூசு மாதிரி பேசிக்கிட்டு! இல்லாட்டியும் உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது?”
“அப்புறம் ஏன் டா மூஞ்சியைத் திருப்புனவன்?”
“ம்ம், அதுக்குக் காரணம் உன்ற மாமா தான்”
“மாமாவா?”
“ஆமா! என்னவோ உன்னை நான்..” எனத் தொடங்கியவன் அவள் முகம் பார்த்து நிறுத்தி.. “உன்ற கூட நான் தப்பான உறவுல இருக்கிறதாட்டம் என்ற கேரக்டரை ஸ்பாயில் பண்ணி அசிங்கமா பேசுனாரு! வீட்டுக்குள்ள நிம்மதியா இருக்க விடாம, நீயும்,நானும் என்ன பண்றோம்ன்னு சுத்தி சுத்தி வந்து ஆராய்ச்சி பண்றாரு மனுஷன்! அந்தக் கோபத்துல தான்.. உன்ற கிட்டப் பேச பிடிக்காம அப்பிடி நடந்துக்கிட்டேன்”
“ஓஹோ!” – என்றவளின் முகம் யோசனைக்குத் தாவ..
“என்ன ஓஹோ! வீட்டை பார்க்காக்கி லவ் பண்ணிட்டு சுத்துற ஆட்களையெல்லாம் மனுஷன் கண்டுக்க மாட்டார்!, சும்மா இருக்கிறவனைப் போட்டுத் தொந்தரவு பண்ணிக்கிட்டு!” – என்று புலம்பினான் அவன்.
“சரி சரி விடு! அவர் கவனம் பூர்ணி-ஜீவன் மாமா மேல திரும்பாத வரை நல்லது தான்”
“என்றா மோகன் இப்பிடி சொல்ற?”
“ஆமா, நமக்காக யோசிச்சுக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டவங்களுக்காக, நாம இது கூட செய்யாட்டி எப்பிடி?”
“அதுசரி”
“கல்யாணம் நிச்சயம் ஆகியும், ரெண்டு பேரையும் ஒரே வீட்ல வைச்சிருக்கோமே,சரிபட்டு வருமான்னு மாமா,அப்புச்சிக் கிட்ட பேசுறதை நான் கேட்டேன்! இப்பிடி இருக்கிற பட்சத்துல அவங்க ரெண்டு பேரும், ஜாலியா மொட்டைமாடில லவ் பண்ணிட்டு சுத்துறது தெரிஞ்சா, எல்லாருக்கும் சங்கடம் தான?”
“அப்பிடி என்னத்துக்கு சங்கடமான விஷயத்தைப் பண்ணோனும்?, கல்யாணம் நடக்குற வரைக்கும் பொறுத்துக்கக் கூடாதா?”
“அது.. வயசு அப்பிடி டா ரகு. நாம தப்பு சொல்ல முடியாது”
“நீ எப்பிட்றா மோகன் நூத்துக் கிழவியாட்டம் பேசுற?”
“அது அப்டித் தான்! எனக்கு இந்த மாதிரி விஷயத்துல நாலேஜ் ஜாஸ்தி”
“ஏன், நீ எவனையும் காதலிக்கிறியா?”
“ஹ்ம்ம், காதல்ன்னு சொல்லிட முடியாது! ஆனா ஒரு அட்ராக்ஷன் இருக்கு”
அவள் கூறியதைக் கேட்டு உள்ளே திக்கென்று தோன்றிய உணர்வை மறைத்து.. அசட்டையாகக் கேட்பவன் போன்று..
“யார் மேல?” என்றவனிடம்..
“எல்லாம் உனக்குத் தெரிஞ்சவங்க தான்” என்றாள் அவள்.
“யாரைச் சொல்ற?”
“வேற யாரு! டேவிட் அங்கிள் பையன் மைக்கேல் தான்” – எனக் கூறிக் கண்ணடித்தவளைக் கண்டு ஆசுவாச மூச்சை வெளியிட்டவன்..
“நல்ல சாய்ஸ் தான்!, ஆனா இண்டர்-ரிலிஜியன் மேரேஜ்க்கு மாமா ஒத்துக்க மாட்டாரே டா மோகன்” என்றான்.
“அவர் ஒத்துக்கிட்டா என்ன ஒத்துக்காம போனா என்ன, நான் டிசைட் பண்ணிட்டேன்”
“என்னன்னு?”
“என்ற பேரை மோகனா மரியம்ன்னு மாத்திப் போடலாம்ன்னு”
“சகிக்கல டா மோகன்”
“தேங்க்யூ. மரியம் – மைக்கேல் பொருத்தமா இல்ல?”
ஹாஸ்பிடல் பெட் என்றும் பாராது சம்மணங்காலிட்டு அமர்ந்து கொண்டு.. முகம் முழுக்கப் பொட்டும்,மூக்கில் வளையமுமாய் கையை ஆட்டி,ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தவளின் முகத்தைக் கண்டும்,காணாது நோக்கிக் கொண்டிருந்த ரகுவிற்கு.. ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ எனப் பாடத் தோன்றியது.
மருத்துவமனையிலிருந்து இருவரும் வீடு திரும்பிய போது இரவு வெகு நேரமாகியிருக்க.. உள்நுழைந்தவர்களை டெலிஃபோன் அழைத்தது.
எடுத்து ‘ஹலோ’ என்ற மோகனாவிடம்..
பூர்ணியின் தந்தை வழி உறவினர் ஒருவரின் துக்க சம்பவத்திற்காக அனைவரும் அருகிலிருக்கும் கிராமத்திற்கு வந்திருப்பதாகவும், மறுநாள் மதியம் தான் வீடு திரும்ப முடியுமென்றும் ஜீவன் கூற சரியெனத் தலையாட்டினாள் மோகனா.
அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஜீவனிடமிருந்து ஃபோனைப் பறித்தத் துளசிநாதன்..
“காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வர இத்தனை நேரமா கண்ணு?” என்றார்.
“ஏற்கனவே சொல்லியிருந்தேனுங்களே மாமா, இன்னிக்கு என்ற காலேஜ்ல கல்ச்சுரல்ஸ்ங்க”
“என்ன விழாவா இருந்தாலும் நேரத்தோட வீடு திரும்புறதை வழக்கமாக்கிக்கோனும்! புரியுதல்லோ? காலம் கெட்டுக் கிடக்கு! பொம்பளப்பசங்களுக்கு பாதுகாப்பு கிடையாது இந்த நாட்டுல”
“பாதுகாப்பைப் பத்தியெல்லாம் நீங்க ஏனுங்க மாமா கவலைப்பட்றீங்க?, ரகு மாமா என்ற கூட இருக்கும் போது!”
அவள் மாமா என்றதில் குடித்துக் கொண்டிருந்தத் தண்ணீர் புரையேற இருமியபடியே ரகுவரன் அவளது முகம் பார்க்க, மெல்லக் கண்ணடித்து, நாக்கை வெளியே நீட்டி நக்கலாய்ச் சிரித்தாள் மோகனா.
‘இவ போட்ற போட்டுக்கு அந்த மனுஷன் அர்த்தராத்திரின்னு கூடப் பார்க்காம அலறி அடிச்சுக்கிட்டு நேர்ல வந்து நிற்கப் போறார்’ என்றெண்ணித் தலையிலடித்துக் கொண்டான்.
மகனின் திகைப்பைத் தானும் பிரதிபலித்த துளசிநாதன்..
“ரகு மாமாவா?” என்றார்.
“ஆமா, முறைப்படி பார்த்தா நான் அவனை மாமான்னு தானுங்க மாமா கூப்பிடோனும்?, என்னை விட ரெண்டரை வயசு மூத்தவன், மரியாதையில்லாம கூப்பிட்டா நல்லாயிருக்காதல்லங்க மாமா?”
“………..”
“லைன்ல இருக்கீங்களாங் மாமா?”
“ம்க்க்கும், இருக்கேன் கண்ணு! வேலையை முடிச்சுப் போட்டு கணபதி ராத்திரிக்கு அங்க வந்து படுத்துக்கிறேன்னானே, வந்துட்டானா?”
“அப்பாவாங் மாமா? இன்னும் வரலீங்களே?”
“வந்துடுவான், வந்துடுவான்!, நீ சாப்ட்டு போட்டு நேரத்துக்குப் போய் படு கண்ணு”
“சரிங் மாமா” என்றவள் நமுட்டுச் சிரிப்புடன் ரிசீவரைத் தாங்கியில் பொருத்தி விட்டுத் திரும்பினாள்.
“இப்ப என்னத்துக்கு டா மோகன் அந்த மனுஷனை உசுப்பேத்தி விட்டுட்டிருக்க?”
“என்ன உசுப்பேத்திட்டாங்க? நீ எனக்கு மாமா தான?, மாமனை, மாமன்னு கூப்பிட்றது தப்பா?”
“வாயைக் குறை டா மோகன்”
“குறைக்க முடியாது போலங் மாமோய்”
“ஏய்..”
“அட ஆமாங் மாமா, பசி வயித்தைக் கிள்ளுதுங்க! நகருங்க! நான் போய் முதல்ல சாப்பிடோனும்” – என்றவள் விறுவிறுவென டைனிங் டேபிளருகே சென்று பாத்திரங்களை உருட்டினாள்.
“சாம்பா,சட்னியெல்லாம் இருக்கு. ஆனா.. தோசை ஊத்த குருவம்மாக்கா வரோனுமே” என்றவள் எட்டி சமையலறையின் அருகேயிருந்த சிறிய அறையை நோக்கினாள்.
குளிருக்கு இதமாய்க் கம்பளியைப் போர்த்திக் கொண்டு குருவம்மா உறக்கத்திலிருப்பது தெரிய..
“குருவம்மாக்கா உறங்குதாட்ருக்கு” என்றாள்.
“சரி,சரி நீ போய் மாமனுக்கு சுடச் சுட 4 தோசை ஊத்தி எடுத்துட்டு வா டா மோகன், ஓடு ஓடு” என்ற ரகுவரனை முறைத்தவள்..
“என்ன? ஆர்டர் போடுறியா?” என்றாள்.
“சரி, ப்ளீஸ்.. தோசை ஊத்தித் தா டா மோகன், ரெக்வஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிறேன்”
“ஏன், கிட்சன்ல பொண்ணுங்க மட்டும் தான் வேலை பார்க்கோனும்ன்னு ஏதாவது சட்டமிருக்கா?”
“அதனால?”
“நீ போய் தோசை ஊத்திக் கொண்டு வா. நான் உட்கார்ந்து சாப்பிட்றேன்”
சட்டமாகக் கூறியபடி அமர்ந்து விட்டவளைக் கண்டு பெருமூச்சை வெளியிட்டுத் தட்டை டங்கென டேபிளில் வைத்த ரகு..
“நீ வேண்டுறது சம உரிமையா? இல்ல, பெண்ணாதிக்கமா டா மோகன்?” என்றான்.
“பெண்ணாதிக்கமா?”
“ஆமா! பெண் ஆணை டாமினேட் செய்ய நினைச்சாலும், ஆண் பெண்ணை டாமினேட் செய்ய நினைச்சாலும்.. சம உரிமைன்றது என்னைக்குமே கிடைக்காது டா மோகன்”
“சோ??”
“நான் உனக்கு தோசை ஊத்தித் தர்றேன்! நீ எனக்கு ஊத்தித் தா! ப்ராப்ளம் சால்வ்ட்! எப்பிடி??”
கரண்டியை நீட்டிக் கேள்வி கேட்டவனைக் கண்டு கன்னத்தில் கையை வைத்து.. இதழ் விரியச் சிரித்து..
“உன்ற பேச்சை நான் வழிமொழிகிறேன்” என்றவள் குதித்துக் கொண்டு முன்னே செல்ல.. சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தான் ரகுவரன்.
ஓடி வந்ததில் மூச்சு வாங்க நின்றவளிடம் ஒரு பார்வையைச் செலுத்தி “இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கற, அதுக்குள்ள ஓடோனுமா டா மோகன்?, உனக்கு வராததையெல்லாம் ஏன் பண்ற நீ?” எனக் கேட்டபடியே தோசைக்கல்லை அடுப்பில் வைத்தவனிடம்.. அலட்சியமாய் முகம் சுழித்தவள்..
“முதல்ல நீ எனக்கு ஊத்தித் தா, அடுத்து நான்” எனக் கூற.. அவளைச் சந்தேகமாய் பார்த்தபடியே தோசை வார்க்கத் துவங்கினான் ரகுவரன்.
அவன் அடுக்கிய தோசைகளைத் தின்று ஏப்பம் விட்டவள், அடுத்து அவளது முறையாக வார்க்கத் தொடங்க, ஏகத்துக்கும் கோணிக் கொண்டு கல்லில் நின்ற தோசையைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டவன்..
“தோசை ஊத்தத் தெரியாதா?” எனக் கேட்டான்.
“ம்ஹ்ம், ஃபர்ஸ்ட் டைம்ன்றதால இப்பிடி இருக்கு. அடுத்த தோசை எப்பிடி ஊத்துறேன் பாரு” என்றவளின் தலையில் தட்டி அவளை வேறு புறம் நகர்த்தி விட்டுத் தானே தோசை ஊற்றிக் கொண்டான் ரகுவரன்.
“தள்ளு, நானே ஊத்துறேன்! அப்புறம் நீ பாட்டுக்க பெண்ணாதிக்கம் அது,இதுன்னு கிளம்புனேனா.. வம்பு” என்றவளிடம்..
“கொள்கை,கோட்பாடெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நமக்கு எது வரும்,வராதுன்னும் ஒன்னு இருக்கே டா மோகன்” என்றவனை.. கையைக் கட்டிக் கொண்டு முறைத்தவள்..
“அப்டின்னா எனக்கு சமையல் வராதுன்றியா?” – என்றாள்.
“ம்ஹ்ம்! காலத்துக்கும்”
“ஏன்வாம்?”
“உன் டிசைன் அப்டி டா மோகன்! உன்னை உருவாக்குன ஆண்டவன் உன்னை அப்பிடிப் படைச்சிருக்கான்”
“ஏய், நான் நினைச்சா.. இப்பவே நல்லா,அழகா வட்டமா தோசை ஊத்திடுவேன்! ஊத்திக் காட்டவா?” – சவால் விட்டவளிடம் கரண்டியைக் கொடுத்தவன்..
“இருக்குற மாவை வேஸ்ட் பண்ணிப் போடாத டா மோகன்! பூர்ணி வந்தா பொங்கிடுவா” எனக் கூறி நகர.. அடுத்தடுத்து இரண்டு தோசைகளை ஊற்றி சரியாக வராமல்.. ‘ப்ச்’ என்றபடிக் கரண்டியை மாவில் எறிந்தவளைக் கண்டுச் சிரித்து..
“போய்த் தூங்கு டா மோகன்” என்றான்.
அதன் பின்பு அவள் தன்னறையில் உறங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விழிப்பு தட்ட எழுந்தவள், சமையலறையில் விளக்கெரிவதைக் கண்டு வெளியே வந்தாள்.
சுருக்கிய புருவங்களின் சமையலறையை எட்டி நோக்கியவளின் இதழ்கள் புன்னகை கொண்டது.
ரகுவரன் தோசை வார்த்துக் கொண்டிருக்க, அவனருகே நாற்காலியின் மீதமர்ந்து அவனிடம் வளவளத்தபடி உண்டு கொண்டிருந்தார் கணபதி.
“அப்புறமுங் மாமா, உங்கக்கிட்ட ஒன்னு சொல்லோனும்ங்க”
அவர் தட்டில் தோசையை வைத்தபடி கூறியவனிடம்..
“என்ன கண்ணு?” எனக் கேட்டார் அவர்.
“அ..அது.. வந்துங் மாமா.. மோகனாவுக்கு இன்னிக்குப் பழையபடி மூச்சுத் திணறல் வந்துருச்சுங்க”
வாசலில் நின்றபடி சிரிப்புடன் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த மோகனா திடுக்கிட்டு ‘போட்டுக் கொடுத்துட்டியே டா எட்டப்பா’ ரீதியில் அவனை முறைத்துப் பின் பீதியுடன் தந்தை முகம் பார்த்தாள்.
தோசையை வாயருகே கொண்டு சென்ற கணபதி, நிறுத்தி.. நிமிர்ந்து மருமகனின் முகம் பார்க்க..
“டான்ஸ்ல சேர்ந்திருப்பா போலங் மாமா! அதான்..” என்று இழுத்தவன்.. “எனக்குத் தெரியாதுங் மாமா அவ கலந்துக்கப் போறதைப் பத்தி! தெரிஞ்சுருந்தா அவ காலை ஒடிச்சுப் போட்டிருப்பேனுங்க” என்றான்.
இறுகிப் போய் முகம் சுருங்க அமர்ந்திருப்பவரைக் கண்டு அவர் தோளைப் பற்றியவன்..
“சரியான நேரத்துல அவ சிநேகிதிங்க ஆஸ்பத்திரில சேர்த்துட்டாங் மாமா” எனக் கூறித் தொடர்ந்து.. “இனி இப்படியாகாம பார்த்துக்கிறேனுங், நீங்க இதை மனசுல வைச்சுக்கிட்டு அவ மேல கோபப்படாதீங்க” என்றான்.
ஒரு நொடி அமைதியாயிருந்தவர் “நீங்களா போய் ஆஸ்பத்திரில படுத்து எந்திரிச்சு வந்துட்டா, இந்த வூட்ல பெரிய மனுஷனுங்கன்னு நாங்க என்னத்துக்கு இருக்கோம்?” என்றார்.
“அதில்லீங் மாமா!, சும்மா பயப்படுத்த வேணாமேன்னு தானுங் சொல்லல! முழுசா மறைக்கோனும்ன்னு நினைச்சிருந்தா.. இப்ப உங்கக் கிட்ட சொல்லியிருப்பேனுங்களா?”
முகத்தைச் சுருக்கிக் கொண்டு கூறியவனின் பேச்சில் சற்று சமாதானம் அடைந்தவரிடம்..
“அவ என்ற பொறுப்புங் மாமா! நான் பார்த்துப்பேனுங்க! என்னை நம்புங்க” என்று அவன் கூறியதும்... புன்னகைத்தவர்..
“இப்ப நல்லாயிருக்கால்ல? ஒன்னும் பிரச்சனையில்லையே?” எனக் கேட்க..
அவர் கேள்விக்குப் பின்னிருந்த பரிதவிப்பில் சிரித்தவன்..
“ஒன்னும் பிரச்சனையில்லீங் மாமா! நான் ஊத்திக் கொடுத்தத் தோசையை மூக்கு முட்ட தின்னு போட்டு, கவுந்து படுத்துத் தூங்குறாளுங்” என்றான்.
அவன் மூக்கு முட்ட என்றதில் கொதித்துப் போன மோகனா..
“மெத்து,மெத்துன்னு மூணு தோசையை ஊத்திக் கொடுத்துப் போட்டு, என்னா ரவுசு பண்ற நீயி?” எனப் பல்லைக் கடித்துக் கேட்க..
அவளது கீச்சுக் குரல் எழுப்பிய சப்தத்தில் இருவரும் திரும்பி நோக்கினர்.
அதுவரையிருந்த தவிப்பு மாற.. மகளை முறைத்த கணபதி..
“ஆட்டக்காரியாட்டம் போட்ருக்கா பாரு வேஷம்?, மூக்கை மட்டும் ஏன் விட்டு வைச்சிருக்கிறவ, அங்கயும் ரெண்டு பொட்டை ஒட்ட வைச்சுக்க வேண்டியது தான?” என்று கூறியபடித் தட்டில் கையைக் கழுவ.. “ப்ச்” என உதட்டை சுழித்தவளைக் கண்டு..
“நீ இன்னும் தூங்கல?” எனக் கேட்டான் ரகு.
விறுவிறுவென அவனருகே வந்து நின்றவள்“ஏன், நீ வத்தி வைச்சதைக் கேட்டுப் போட்டேனேன்னு பயமா இருக்கா?” என முணுமுணுத்தாள்.
தன் தோளில் முகம் உரச, கண்ணை இடுக்கிக் கேள்வி கேட்டவளின் மெத்தென்ற நாடியில்.. அம்சமாய் வீற்றிருந்த மூன்று சிறிய பொட்டுக்கள் அழகாய்த் தோன்ற.. புன்னகை கொண்டவன்..
“தினம் இந்த மாதிரி பொட்டு வைச்சுக்கோ டா மோகன்” என்றான்.
“அப்டியே போய் குறத்தி குரூப்ல சேர்ந்துக்கச் சொல்லு! பொருத்தமா இருக்கும்” எனக் கூறியபடியே கணபதி சமையலறையை விட்டு வெளியே செல்ல.. தன்னையே முறைத்துக் கொண்டிருந்தவளிடமிருந்து விலகி நடந்தவனின் கையைப் பற்றியவள்..
“யார்க்கிட்டயும் சொல்லாதன்னு சொன்னேனல்ல?, எதுக்கு அப்பா கிட்ட சொன்ன?” என்றாள்.
அவள் கையை விலக்கியபடியே “மாமா கிட்ட என்றனால எதையும் மறைக்க முடியாது டா மோகன்” என்றான் அவன்.
“அப்பா மட்டும் நாளைக்கு இதைச் சொல்லித் திட்டட்டும், அப்புறம் இருக்கு உனக்கு”
“என்ன செஞ்சிடுவ?” – என்றபடியே அறை வாசல் நோக்கி நடந்தவனிடம்..
“ம்ம்ம்ம், இன்னொரு தடவை கட்டிப் பிடிப்பேன்” என்று கூறியவளைக் கண்டு அதிர்ந்து திரும்பி அவளை நோக்கியவனிடம்..
கைகளைக் கட்டிக் கொண்டு “அப்ப தானே நீ வெட்கப்பட்டுக்கிட்டு என்ற பக்கமே வராம இருப்ப?” – எனப் புருவம் உயர்த்தி ‘எப்பிடி என் ஐடியா’ ரீதியில் நோக்கியவளைப் பல்லைக் கடித்துக் கொண்டு முறைப்பதைத் தவிர வேறு வழியில்லாமற் போனது அவனுக்கு.
மறுநாள் மதிய வேளையில் வீடு திரும்பியிருந்தனர் துளசிநாதன், பூர்ணி மற்றும் ஜீவரஞ்சன்.
“குருவம்மாக்கா, மாமாவுக்கு சுடு தண்ணி விளாவுனீங்களா?” எனக் கேட்டபடியே உள் நுழைந்த பூர்ணியிடம்..
ஹால் சோபாவில் அமர்ந்திருந்த மோகனா “எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு” என்றவள் அவளது பின்னே வந்தத் துளசிநாதனைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
மருமகளின் முகத்திருப்பலில் புருவம் சுருக்கியவர் “என்ன கண்ணு?” என்றார்.
“ஒன்னுமில்லீங்களே”
“அப்புறம் என்னத்துக்கு என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்புறவ?”
“என்ற தலை இது! நான் எந்தப் பக்கம் வேணும்ன்னாலும் திருப்புவேனுங்க!”
“மோகனா.. பெரியவங்க கிட்ட இப்பிடித் தான் பேசுறதா?” – அதட்டிய ஜீவனிடம் புன்னகைத்தவள்..
“இது,எனக்கும்,அவருக்குமிருக்கிற டீலிங் மாமா! நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று கூற..
“அதுசரி!” என்றவன் திரும்பித் தன் அறையை நோக்கி நடந்து விட்டான்.
“எதை கண்ணு டீலிங்குன்ற?”
“நீங்க டயர்ட்-ஆ இருப்பீங்க! முதல்ல குளிச்சு,சாப்பிடுங்க மாமா! அப்புறம் பேசுவோம்” என்றவள் “பூர்ணி, அந்த நெத்திலி மீனைப் பொரிச்சுத் தா” என்றபடியே எழுந்து சென்று விட.. ஒரு நொடி குழப்பத்துடன் யோசித்தத் துளசி அவரைத் தொடர்ந்து உள்ளே சென்று விட்டார்.
அனைவரும் உண்டு எழுந்ததும், கடைசியாக டைனிங் டேபிளில் வந்தமர்ந்தத் துளசிநாதனைக் கண்டதும், கை கழுவ எழுந்த மோகனா.. அவரையேப் பார்த்தபடி அமர்ந்து விட..
“என்ன கண்ணு, புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற?” என்று கேள்வி கேட்டார் துளசி.
“புதுசா பார்க்குறது நான் மட்டும் தானுங்களா மாமா?” – மூக்கு விடைக்கக் கேள்வி கேட்டவளிடம்..
“என்ன கண்ணு சொல்ற?” என்று புருவம் சுருக்கினார் அவர்.
“என்னையும்,ரகுவையும் கண் கொத்திப் பாம்பாட்டம் நோட்டம் விட்டுட்டு சுத்துற உங்க பார்வை புதுசு இல்லீங்ளா?”
“………” – துண்டில் கையைத் துடைத்தபடி ஏப்பம் விட்டவர்.. அவள் தன்னிடம் இப்படி நேரடியாகக் கோதாவில் இறங்குவாள் என்று எதிர்பாராததால்.. யோசிக்க வேண்டிப் பார்வையைத் தழைத்தார்.
“பதில் பேசுங் மாமா”
“என்ன பதில் சொல்லோனும்?” – அமைதியான குரலில் வினவியவரிடம்..
“சந்தேகப்பட்றீங்களாங் மாமா?” என்று வெளிப்படையாகக் கேட்டாள்.
“மோகனா” என்று அவர் அதட்ட..
“சத்தம் போட வேண்டியது நான், நீங்க என்னத்துக்குக் கத்துறீங்க?” என்றவளின் முகம் அடக்கப்பட்டக் கோபத்தில் சிவந்திருந்தது.
அவள் கோபமாய்க் கூறியதும் தானும் கோபப்பட்டத் துளசிநாதன்..
“தப்பும் பண்ணிப் போட்டுக் கோபமும் வருதா உனக்கு?” என்று வார்த்தைகளை விட..
அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிக் கொண்டு படக்கென எழுந்தவள் “தப்பு பண்ணேனா? என்ன தப்பு பண்ணேன்?ம்? என்ன தப்பு பண்ணேன்?” என அதட்டிக் கேள்வி கேட்டாள்.
அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ரகுவிற்கு.. இந்தக் காட்சி கண்ணில் பட.. இருவரது சண்டையையும் கண்டு.. வாயைப் பிளந்தபடி நின்ற இடத்திலேயே தேங்கி விட்டான்.
அவளது அதட்டலில் ஆத்திரம் கொண்ட துளசி “ராத்திரில மொட்டை மாடில.. அவனோட..” என்று வீராவேசமாய்த் தொடங்கியவர்.. முடிக்க முடியாமல்..
“அதைச் சொல்லவே என்ற வாய் கூசுது” எனக் கூற..
“என்ற வாயெல்லாம் கூச்ச,நாச்சம் பார்க்காது. அதனால நான் வெளிப்படையாவே சொல்றேன்! நாங்க ரெண்டு பேரும் கட்டிப்புடிச்சுட்டு நின்னதைப் பார்த்துப் போட்டுத் தான இப்பிடி நம்பியார் வேலை பார்த்திட்டிருக்கீங்க??” என்றாள் மோகனா.
“எவ்ளோ தைரியமிருந்தா என்ற கிட்டயே இப்பிடிப் பேசுவ?” – தானும் இருக்கையிலிருந்து எழுந்தத் துளசிநாதன் அவளை நோக்கிச் சத்தமிட..
“தப்புன்னு நினைச்சிருந்தா.. என்ற வாய் இப்பிடி உங்க முன்னாடித் தைரியமா பேசாதுங் மாமா” என்றாள் அவள்.
“…………”
“உங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் ஒன்னாப் பார்க்க அவ்வளவு அசௌகரியமா இருக்குன்னா.. சின்ன வயசுலயே எங்களைத் தனித்தனியா வைச்சு வளர்த்திருக்கோனும்! அவன் என்னை உப்புமூட்டைத் தூக்கிட்டு அலைஞ்சப்பவும், சைக்கிள்ல பின்னாடி உட்கார வைச்சு ஊரைச் சுத்த போனப்பவும், இதெல்லாம் தப்பு டா கண்ணுங்களான்னு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கோனும்! இல்ல, விசு படத்துல வர்ற மாதிரி வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டைப் போட்டு ஆம்பளைப் பசங்க அந்தப் பக்கம், பொம்பளைப்பசங்க இந்தப்பக்கம்ன்னு விதி எழுதி வைச்சிருக்கோனும்”
ஆவேசமாகப் பேசுபவளை அடக்கும் வழி தெரியாது திணறிப் போன துளசி..
“அதுவும்,இதுவும் ஒன்னா கண்ணு?” என்று இறங்கிப் போன குரலில் கேட்க..
“ஒன்னு இல்ல தான்! ஆனா.. என்ன நடந்தது,ஏது நடந்ததுன்னு விசாரிக்காம, நீங்களா இஷ்டத்துக்குக் கற்பனை பண்ணிக்கிட்டு எங்களை ‘அக்யூஸ்டு’ மாதிரி நடத்துவீங்களா?” – என்றாள்.
“………….”
“தப்புப் பண்ணினா கூட நேருக்கு நேரா ‘ஆமா பண்ணேன்னு’ ஒத்துக்கிற ஆளு நானு! என்னைப் பத்தி நீங்க புரிஞ்சு வைச்சிருக்கிறது இவ்ளோ தானுங்ளா மாமா?”
‘எங்க, ஆமா,பண்ணேன்னு நீ ஒத்துக்குவியோன்னு தான் கண்ணு உன்ற கிட்ட நான் ஒன்னும் கேட்கல’ – என்று மனதில் நினைத்ததை நல்ல வேளையாக வெளியில் சொல்லவில்லை துளசி.
“ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்கங் மாமா! அமெரிக்கால மேல் படிப்பை முடிச்சுப் போட்டு ஃபேக்டரியைப் பெருசா வளர்க்கோனும்னு கனவு கண்டுக்கிட்டிருக்கிற ஆளு நானு! நீங்க நினைக்குற சில்ற வேலையெல்லாம் பண்றதுக்கு என்ற கிட்ட நேரமில்ல. அப்படியே நான் எவன் மேலயும் ஆசைப்பட்டாலும், அதை அவன் கிட்ட சொல்றதுக்கு முன்னால உங்கக்கிட்டத் தான் சொல்வேனுங்க!”
“…………”
கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு அவள் முகத்தைப் பாராமல் எங்கோ நோக்கியபடி நின்றிருந்தவரைக் கண்டு..
“ஆனா.. எப்ப உங்களுக்கு இப்பிடியொரு சந்தேகம் வந்திருச்சோ, இனி நான் இந்த வீட்ல இருக்கிறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லீங் மாமா! நான் என்றப்பனோட அந்த வீட்ல இருந்துக்குறேனுங்க” என்றபடி டைனிங் டேபிளுக்கு அடியிலிருந்தப் பையை எடுக்க.. அதிர்ந்து அவள் முகம் பார்த்தவர்.. பல்லைக் கடித்தபடி..
“நானும் ஒரு முடிவு பண்ணிட்டேங்கண்ணு” என்றார்.
“……….”
“உன்ற கூட சேர்ந்து.. நானும்.. என்ற நண்பன் வீட்டுக்கே பொட்டியைக் கட்டிடலாம்ன்னு” – என்றவரை அவள் முறைத்துப் பார்க்க..
“பின்ன என்னைய என்ன பண்ணச் சொல்றவ?, என்ற காலத்துல பொம்பளைப் பசங்க எதிர்ல நின்னு பேசுனா கூட உன்றப்புச்சி.. காலை ஒடிச்சுப் போடுவாரு! இப்ப இருக்கிற பசங்களை.. உரிமையா கண்டிக்கக் கூட பயப்பட வேண்டியதா இருக்கு” எனக் குறை கூற..
ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றாள் அவள்.
“ஏதோ கோபத்துல புத்தி கெட்டுப் போய் புரியாம நடந்துக்கிட்டேன்! அதுக்குன்னு பையைத் தூக்கிட்டுக் கிளம்புவியா நீ? இது என்ன புதுப் பழக்கம்?, நான் உசுரோட இருக்கிற வரைக்கும் இது தான் உன்ற வீடு. நான் போய்ச் சேர்ந்தப்புறம் நீ எங்கன்னாலும் இருந்துக்க” – உணர்ச்சிவசப்பட்டக் குரலில் கூறியவரைக் கண்டு.. அவள் எரிச்சலுடன்..
“மாமா” என்று கத்த…
“இருபது வருஷ வளர்ப்பையும் ஒத்தப் பை-ல அடைச்சுடுவாளாமா?” என்றவர் கோபமாக அவள் பையைப் பற்றியிழுக்க.. காலிப் பை அவரது கையோடு வந்தது.
நிமிர்ந்து அவர் அவளை முறைத்துப் பார்த்ததும்.. தலையைச் சொரிந்தவள்..
“சு…சும்மா உங்களை மிரட்டிப் பார்க்கலாமேன்னு தானுங் மாமா காலி பையைக் கொண்டு வந்து வைச்சேன்” என்று கம்மிய குரலில் கூற…
வந்த சிரிப்பை அடக்கியவர்.. “சரி,சரி குருவம்மா கிட்ட டீயை போடச் சொல்லி, ரெண்டு வரிக்கியை எடுத்துட்டு வரச் சொல்லு” என்று கூறி விட்டு “தின்னதெல்லாம் செரிச்சுப் போச்சு, கோவேறுக் கழுதை” என்று புலம்பியபடி நகர்ந்து விட்டார்.
சொட்டையை நீவியபடியே ஹால் சோபாவை நோக்கி நடந்து வந்தவர், வழியில் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ரகுவரனைக் கண்டு.. திடுக்கிட்டுப் பின் முறைத்து..
“என்றா?” என்றார்.
“நான் அன்னிக்கு அவ்ளோ சொன்னப்போ, நம்பல நீங்க?”
“ம்க்க்கும்” என்றவர் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொள்ள..
“உங்கக்கிட்ட தானுங்ப்பா பேசிட்டிருக்கறேன்” என்றவனிடம்..
“அதுக்கென்றா பண்ணச் சொல்லற?, உன்ற கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கட்டுமா?” என்று அவர் பாய..
“ச்ச” என்று முகத்தைச் சுருக்கியபடியே விறுவிறுவென உள்ளே சென்று விட்டான் ரகுவரன்.
அதன் பிறகு மாதங்கள் பல கடந்த நிலையில்.. அன்று பூர்ணி மற்றும் ஜீவரஞ்சனின் நிச்சயதார்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கால்களில் சக்கரம் கட்டாதக் குறையாக வீட்டினர் அனைவரும் அங்குமிங்கும் சுறுசுறுப்பாய் வேலையில் ஈடுபட்டிருக்க.. ரகுவரன் மட்டும் பூர்ணியின் அறையில் அமர்ந்திருந்தான்.
பச்சை நிறப் பட்டில் முழு அலங்காரத்துடன் அம்சமாய் அமர்ந்திருந்தவளை மௌனப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.
அவனுக்குத் தலை சீவி, சோறு ஊட்டி, அவன் தேவைகளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்த அவனது பூர்ணியாய் இனி அவளைக் காண முடியாதென்கிற எண்ணம் உள்ளே பரவி.. விளக்க முடியாத உணர்வொன்றை ஊறச் செய்திருந்தது.
மணவறையில் தன் மணாளனோடு அமர்ந்திருக்கும் மகள்,இனி தன் மகளாய் மட்டும் இருக்கப் போவதில்லை என்றெண்ணும் தாயின் மனநிலையோடு அவள் முகம் பார்த்திருந்தான்.
அப்போது மரூன் நிற லெஹங்கா சோளியில் விறுவிறுவென அறைக்குள் நுழைந்த மோகனா… உறவுக்காரப் பெண்மணிகள் புடை சூழ அமர்ந்திருந்தத் தமக்கையை ஒரு பார்வை பார்த்து விட்டு.. ரகுவரனின் அருகே சென்றாள்.
“நீ இங்க என்ன பண்ற?” – பல்லைக் கடித்துக் கொண்டுக் கேள்வி கேட்டவளிடம்..
“பூர்ணி…” என்றவனுக்குப் பேச்சு வராமல் போக..
“என்ன? தொண்டை அடைக்குதா? தண்ணி வேணுமா? அப்டியே மைக் எடுத்துட்டு வரட்டுமா? எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாட்றியா?” – எனப் பொரிந்தவளை நிமிர்ந்து முறைத்தான் அவன்.
“உனக்கு என்ற ஃபீலிங்க்ஸ் நக்கலா இருக்கா டா மோகன்?”
“பின்ன, லேடீஸ்-ஆ இருக்கிற இடத்துல கூச்சமில்லாம இப்படி உட்கார்ந்திருக்கிறவன்?”
“ஆணையும்,பெண்ணையும் சமமா ட்ரீட் பண்ணோனும்ன்னு நீ தான சொல்லுவ?, இத்தனை பெண்கள் உட்கார்ந்திருக்கிற இடத்துல இந்த ஒரு ஆண் உட்கார உரிமை இல்லையா?”
“ஷ்ஷ்ஷ்ஷ்..” என்று அவள் நெற்றியைச் சொரிகையில்.. துளசிநாதன் அறைக்குள் பிரவேசித்தார்.
“கற்பகம், பொண்ணைக் கிளப்பு, நேரமாச்சல்ல?” என உறவுக்காரப் பெண்ணொருத்தியிடம் ஏவியவர்.. அவர்கள் நகர்ந்ததும்..
அறை மூலையில் நின்றிருந்த மோகனாவையும்,ரகுவரனையும் நோக்கினார்.
“இங்க என்றா பண்றீங்க ரெண்டு பேரும்?, கிடக்குற வேலையைப் பார்க்குறதை விட்டுப் போட்டு?”
“அ..அது வந்துங் மாமா.. அக்காவைப் பார்க்க வந்தோமுங்க”
“சரி,சரி வாங்க சீக்கிரம்” – என்றதோடு அவர் நகர்ந்து விட.. கையைக் கட்டிக் கொண்டு ரகுவரனை முறைத்தாள் மோகனா.
“என்றா மோகன்?, அப்பிடிப் பார்க்குற?”
“…………”
அவள் விடாது தன்னைப் பார்ப்பதைக் கண்டுத் தன் பார்வையைத் திருப்பி ஜன்னல் வழி நோக்கியவன் “என்றனால எதுவுமே செய்ய முடியலையே டா மோகன்” என்றான் விரக்தியான குரலில்.
கட்டியக் கைகளை விரித்துப் பதற்றத்துடன் அவன் புறம் குனிந்தவள்..
“ஏன், ஏன், ஏன்? இல்லாட்டியும் நீ என்ன செய்யலாம்ன்னு இருந்த?” எனக் கேட்டாள்.
“ப்ச்” என்றபடி எழுந்தவன் “உனக்கு அதெல்லாம் புரியாது டா மோகன்” எனக் கூறி நகர்ந்து விட..
“அய்யோ! இன்னிக்கு நாள் முழுக்க இவனை அடை காக்குறதே எனக்குப் பொழப்பாய்டுமாட்ருக்கு!” என்று புலம்பியபடியே பின்னே சென்றாள் மோகனா.
தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் சம்மங்கிப் பூ மாலையுடன் பூர்ணியும்,ஜீவரஞ்சனும் ஜோடியாக நின்றிருக்க.. துளசிநாதனும்,கணபதியும் தங்களது தொழில்முறை உறவுகளை மணமக்களுக்கு அறிமுகப்படுத்தியபடி அருகே நின்றிருந்தனர்.
ஜோடியாக நின்றிருந்த இருவரையும் கண்டு இதழ்களில் புன்னகை நீள.. நினைவு வந்தவளாகத் திரும்பி ரகுவரனை நோக்கினாள் மோகனா.
அவளுக்குக் குறையாத புன்னகையோடு நின்றிருந்தவனைக் கண்டு ‘என்ன டிசைன் இவன்’ என்று நினைத்துக் கொண்டவள் அவன் தோளைத் தட்டி “அந்தக் கட்டம் போட்ட சட்டை உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டிட்டிருக்காரு பாரு”எனக் கூற நொடியில் சிரிப்பைப் பெரிதாக்கியவன் “வணக்கங் சித்தப்பா நல்லாயிருக்கறீங்களா?” எனக் கேட்டபடியே அருகே சென்றான்.
அவன் உறவுகளுடன் ஐக்கியமானதும் தானும் நகர்ந்த மோகனா, அவ்வப்போது அவனைக் கவனித்தபடியே சுற்றி வந்து கொண்டிருந்தாள்.
கூட்டம் ஓரளவு கலையத் தொடங்கியதும் இவர்களிருவரையும் ஃபோட்டோ எடுக்கப் பூர்ணி அழைக்க, இருவரும் மேடையில் ஏறினர்.
பூர்ணியினருகே நிற்கப் போன ரகுவரனைத் தடுத்து ஜீவனின் புறம் திருப்பி விட்டவள், புன்னகையுடன் தமக்கையின் தோளைப் பற்றிக் கொண்டு போஸ் கொடுத்தாள்.
ஃபோட்டோ எடுத்து முடித்ததும் தம்பியிடம் கை நீட்டிய ஜீவன்..
“என்றா? வாழ்த்தெல்லாம் சொல்ல மாட்டியா?” என்றான்.
“ப்ச்” என்று முகம் சுழித்தவனை முறைத்த மோகனா..
“ஏன், ஏன் ஏன் கொடுக்க மாட்டானாம்?, கை தான? அதெல்லாம் நல்ல்ல்ல்லாக் கொடுப்பானே” என்று விட்டு அவன் கையைப் பற்றியிழுத்து ஜீவனின் கையருகே நீட்ட.. அவன் ‘ஹாஹாஹா’வென சிரித்து “இதையே உன்ற ஆசீர்வாதமா நினைச்சுக்கிறேன் டா ராசா” எனக் கூற..
“இவனை நல்லாப் புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க மாமா” என்ற மோகனா “இந்த சஃபாரி ட்ரெஸ் உங்களுக்குப் பொருத்தமா இருக்குங் மாமா” என்றாள்.
இவர்களிருவரது பேச்சையும் கவனிக்காது “ஏன்னா, செலக்ஷன் என்றதாக்கும்” என இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்ட பூர்ணியையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகுவரன்.
பின் என்ன நினைத்தானோ.. அவளருகே சென்று அவள் கரம் பற்றிக் கொள்ள.. சுருங்கிய புருவங்களுடன் “என்றா தம்பு?” என்றாள் பூர்ணி.
ஒன்றுமில்லையெனத் தலையாட்டியவனை ஓரப் பார்வையால் கவனித்துக் கொண்டிருந்த மோகனா, தொழில்முறை நண்பர் ஒருவரின் புறம் திரும்பி விட்ட ஜீவனைக் கண்டு நகர்ந்து இவர்களிருவரருகே வந்தாள்.
“என்றா தம்பு அப்படிப் பார்க்குற?”
“நீ சந்தோஷமா இருக்கியா பூர்ணி”
அவன் கேள்வியில் திகைத்தவள் பின் சிரித்து..
“ரொம்ப ரொம்ப!, கடைசி வரை உங்களோடவே இருக்கப் போறேனல்ல, அந்த சந்தோசம் தான்” எனக் கூற.. முகம் முழுக்கப் புன்னகையில் பூரிக்க.. அழகாய் மிளிர்ந்தவளைக் கண்டு திருப்தியாய் சிரித்தவன்.. அவள் நெற்றியை நோக்கிக் குனியும் வேளை.. அவன் இதழ் மீது ஐவிரல்கள் பதிய… புருவத்தைச் சுருக்கிப் பக்கவாட்டில் நோக்கினான் ரகு.
அப்படியே அவன் வாயோடுத் தன் விரல்களை அழுத்தி அவன் தலையைப் பின்னே தள்ளிய மோகனா.. பல்லைக் கடித்தபடி அவனை முறைத்து..
“ஒழுங்கு மருவாதையா மேடையை விட்டுக் கீழ இறங்கு” என அடிக்குரலில் மிரட்ட.. “ப்ச்” என்றவன் கடகடவென இறங்கிச் சென்று விட்டான்.
“ஏய்ய் என்றி சொன்ன அவனை?” என்று பாய்ந்த பூர்ணியிடம் “நீ மாமாவைக் கவனி-க்கா. இவனை நான் பார்த்துக்கறேன்” என்றவள் தானும் அவன் பின்னே சென்றாள்.
நிகழ்ச்சி முடிந்து.. வீட்டார், இருவரையும் அமர வைத்து ஆரத்திக் கரைக்க.. பெண்கள் அடித்த கேலியில் முகம் சிவக்கத் தடுமாறி.. அழகு ரோஜாவாய் அமர்ந்திருந்த பூர்ணியைக் கண்டு புன்னகைத்த ரகு.. உடை மாற்றி விட்டு மாடிக்குச் சென்று விட்டான்.
பூர்ணியுடனான தனது சிறு வயது ஞாபகங்களை அசை போட்டபடி நின்றிருந்தவன்.. நடுசாமத்தில் பூனை நடையுடன் படியேறி வந்த மோகனாவைக் கண்டு திடுக்கிட்டு அவசரமாய் அவளருகே சென்றான்.
“இங்க என்னத்துக்கு வந்த நீ?”
“ஏன், மாடியை மாமா உன்ற பேருக்கு உயில் எழுதி வைச்சிருக்கிறாரா?”
“ப்ச், வாயைக் குறை டா மோகன்”
“பின்ன என்ன?, என்ற வூட்டு மாடி, என்ற இஷ்டம்! நான் எப்பன்னாலும் வருவேன்,போவேன்! உனக்கென்றா வந்தது?”
“அப்போ நான் கீழ போறேன்! இன்னொரு தடவை உன்ற மாமா உன்னையும்,என்னையும் சோடியா பார்த்து எந்தப் பிரச்சனையும் தொடங்குறதுக்கு முன்னாடி”
“ரொம்பத் தான் பயப்பட்ற மாதிரி நடிக்காத! இன்னிக்கு உன்னைக் கட்டிப்பிடிக்கிற எண்ணமெல்லாம் எனக்கில்ல” – என்று அவள் முடிப்பதற்குள் பட்டென அவள் தலையில் தட்டியவன்..
“அர்த்தமில்லாம இப்பிடிப் பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது?” எனத் திட்ட…
“பின்ன? அந்த சம்பவத்தை மாமாவே மறந்து பல நாளாச்சு. நீ என்றா ரொம்பத் துள்ளுற?” எனக் கேட்கவும்.. கைகளைக் கட்டிக் கொண்டு வயல்வெளியை வெறித்தபடி அமைதியாய் நின்றான் ரகுவரன்.
அவன் முகத்தையே ஒரு மாதிரியாக நோக்கியவள்..
“கட்டிப்புடிக்கிறது கெட்ட வார்த்தைன்னா, முத்தம் கொடுக்கிறது எந்தக் கணக்குல வரும்?” என்றாள்.
எரிச்சலாய் அவள் முகம் பார்த்தவன் “ஏன்?, உனக்கு அந்த ஐடியா வேற இருக்கா?” எனக் கேட்டான்.
“ஏய்ய்ய்” என்று கை நீட்டிப் பொங்கியவள் “ஃபங்க்ஷன்ல ஊஊஊஊன்னு வாயை வைச்சுக்கிட்டுப் பூர்ணி பக்கம் சாய்ஞ்சியே! அது முத்தமில்லாம என்னது?” எனக் கோபமாய்க் கேட்டுத் தொடர்ந்து..
“உன்றனால நான் ஃபங்கஷனை சரியாக் கூட எஞ்சாய் பண்ணல! எப்போ நீ என்ன பண்ணுவியோன்னு பயந்து வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு அலைஞ்சேன் தெரியுமா?” எனக் கூற குனிந்து அவள் வயிற்றை நோக்கியவன்..
“உன் தொப்பையை சுமக்குறதுக்கே உன்ற வயித்துக்குத் நேரம் போதாது! இதுல நெருப்பையெல்லாம் வேற சுமக்குதா?” என்று நக்கலடிக்க..
“ஏய்ய் என்ற தொப்பையைப் பத்தி மட்டும் பேசுனேன்னா.. நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிப் போட்டேன்”
“இப்போ மட்டும் நீ மனுஷியா என்ன?”
“பேச்சை மாத்தாத”
“அது.. என்ற அன்போட வெளிப்பாடு டா மோகன்! கொச்சைப்படுத்தக் கூடாது”
“ஓஹோ! எந்த வெளிப்பாடா இருந்தாலும், அதுக்கு வரைமுறைன்னு ஒன்னு இருக்கு! இது கட்டுப்பாடான குடும்பம்! மறக்காத”
“என்றா மோகன் என்றய்யனை மாதிரி பேசுற?”
“உண்மை தான?”
“ப்ச், உனக்கு அதெல்லாம் புரியாது டா மோகன்”
“அடிக்கடி இந்த வசனத்தை சொல்றியே! அப்படி என்ன தான் எனக்குப் புரியாதுன்ற?”
“நீ கால்குலேட்டிவ்-ஆன ஆளு டா மோகன்! மூளையிலிருந்து தான் எல்லாத்தையும் யோசிப்ப! நான் அப்பிடிக் கிடையாது! எல்லாத்தையும் மனசுல இருந்து யோசிக்கிறவன்”
“மனசுன்னா யூ மீன் இதயம்?, இதயத்துக்கு யோசிக்கிற சக்தியெல்லாம் கிடையாது. பத்தாவது வரைக்கும் அறிவியல்ல என்னத்தப் படிச்ச?”
“பார்த்தியா இது தான் நீ! அன்பு,பாசம்,நேசம்ன்றதுக்கெல்லாம் நீ எக்ஸ்ப்ளனேஷன் கேட்ப! நான் அப்பிடிக் கிடையாது டா”
“அப்டின்னா என்னை அன்பு,பாசம்ன்னா என்னன்னு தெரியாத கல் நெஞ்சுக்காரின்றியா?”
“அப்பிடி சொல்லிட முடியாது”
“நீ எப்பிடியும் சொல்ல வேண்டாம்!”
“ப்ச், கோச்சுக்காத டா மோகன்”
“நீ பேசாத”
“டேய்.. மோகன்..”
“……….”
“டேய்.. தொப்பை வைச்ச மோகன்ன்ன்ன்ன்” – அவசரமாக அருகே வந்துக் கத்தியவனின் வாயைப் பொத்தியவளிடம் அவன் கண்ணால் சிரிக்க..
“நக்கலாப் போச்சா உனக்கு? அப்பிடியே மூக்கைப் அழுத்திக் கொன்னுடுவேன் சொல்லிப் போட்டேன்” என மிரட்டியவளின் கையைப் பற்றி விலக்கியவன்..
“என் வாயை மூடவே நீ எக்கி நிற்க வேண்டியதாயிருக்கு! மூக்கைப் பிடிக்கோனும்ன்னா.. முக்காலி வேணுமே டா மோகன்” என்று வம்பு செய்ய.. அவனை அடிக்க ஓங்கியவளின் கையை அவன் இறுகப் பற்றி சிரித்த நேரம் “ம்க்க்க்க்க்கும்” என்ற குரல் கேட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு திரும்பினர் இருவரும்.
“அ..அப்பா…”
“மா…மா”
கைகளை பின்னே கட்டிக் கொண்டு இருவரையும் ஒரு நொடி நோக்கிய துளசிநாதன் “ஹ்ம்ம்ம்” என்றபடி ஒரு பெருமூச்சை வெளியிட்டு வந்த வழியே திரும்பினார்.
இருவரும் ஒருவரையொருவர் ஒரு நொடி நோக்கிப் பின் வேகமாக அவர் பின்னே சென்றனர்.
“மாமா” என்று கையைப் பற்றியவளைக் கண்டு நின்று.. மெல்ல அவள் கையை விலக்கியவர்..
“அர்த்த ராத்திரில இங்க என்றா செய்றீங்கன்னு கேட்டா.. நீ என்றப்பன் வூட்டுக்குப் போறேன்னு பையைத் தூக்குவ! சார் உன்னை இழுத்துட்டு ஓடுவேன்னு என்ற கிட்டயே குரலை உசத்துவாரு! என்னத்துக்கு கண்ணு? நான் எதையுமே பார்க்கல! யாரையும் எதுவும் கேட்கல” என்று விட்டுப் படியிறங்கிச் செல்ல..
வாடிய முகத்துடன் திரும்பிய மோகனா.. அரும்பாடு பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த ரகுவரனைக் கண்டுப் புன்னகை பெருக.. தானும் கடகடவெனச் சிரித்தாள்.
