அத்தியாயம் - 5
ஒரு குழந்தை கிட்டப் போய் ‘நீ போட்டிருக்கிற டிரஸ்,கைல வைச்சிருக்கிற பொம்மை இதெல்லாம் யாரு வாங்கிக் கொடுத்ததுன்னு’ கேட்டா.. அந்தக் குழந்தை ‘என் அப்பா வாங்கிக் கொடுத்ததுன்னு’ பதில் சொல்லும்.
அதே குழந்தைக் கிட்ட ‘உனக்கு யாரு இன்னிக்கு சாப்பாடு ஊட்டி விட்டதுன்னு’ கேட்டா.. ‘என் அம்மான்னு’ பதில் சொல்லும்.
சமத்துவ உரிமையைப் பத்தி பார்லிமெண்ட்ல பேசுறதுக்கு முன்னாடி ஃபேமிலில தொடங்கிட்டா நல்லதுன்னு எனக்குத் தோணுது.
சமையலும்,குழந்தை வளர்ப்பும் தன்னோட வேலை மட்டும் தான்னு நினைச்சு அதை இயல்பாகப் பார்க்கிற பெண்கள் தான் அதிகம் இங்க! ஆம்பள அப்டித் தான் இருப்பான்னு பெண்களே சொல்றதைக் கேட்டு வளர்ந்த ஆட்கள் நாம! இதைப் பத்தி பாரதி அன்னிக்கே சொல்லிட்டார்!, ஆணுடைய அகம்பாவத்தை விட, பெண்களுடைய இந்த மனோபாவம் தான் ரொம்பவும் ஆபத்தானதுன்னு!
அதுக்காக ஆண்கள் எல்லாரும் அகம்பாவம் பிடிச்சவங்க, அவங்களை அடக்கி ஆள்றது தான் பெண்ணியம்ன்னு நினைக்கறதெல்லாம் மிகப் பெரிய முட்டாள்தனம்!
சக உயிர்களை சரி சமமா நடத்த வேண்டியது திங்குறது,தூங்குறது மாதிரி நம்ம கடமைகள்ல ஒன்னு! உயிர்கள்ன்னு நான் சொன்னதுல ஆண்,பெண்,காக்கா,நாய்,பூனை,பன்னி எல்லாம் அடக்கம் தான்!
இது நம்ம எல்லாருக்குமான பூமி! மீசை வைச்சிருக்கிறவங்க பெரியாளு-ன்னோ! கரண்டி பிடிக்கிறவங்க, எல்லாருக்கும் அடிமை-ன்னோ எங்கேயும் யாரும் இதுவரை சட்டம் அமைச்சு வைக்கல! அதே போல நான் மனுஷன்றதால மற்ற உயிரினங்களை என்னன்னாலும் பண்ணலாம்ன்ற மனப்பான்மை இருக்கிறதும் கூடத் தப்பு தான்! ஆதிக்கம்,அடக்குமுறை எந்த இடத்துல இருந்தாலும், அந்த இடம் ஒரு நாள் மொத்தமா அழிஞ்சு நாசமாப் போயிடும்!
-இவன்.
மோகனா மற்றும் ரகுவரன் இருவரும் தங்களது இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு.. வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருந்த காலகட்டம் அது!
எப்படியேனும் வீட்டாரைச் சமாளித்து அமெரிக்காவில் அக்கௌண்ட்ஸ் சம்மந்தப்பட்ட கம்ப்யூட்டர் படிப்பைப் பயின்று விட வேண்டுமென்கிற நோக்கத்தோடு சுற்றிக் கொண்டிருந்தாலும், நாள் தவறாது ஜீவன் மற்றும் துளசியுடன் ஸ்பின்னிங் மில்லுக்கும், தந்தையோடு டெக்ஸ்டைல்ஸ்க்கும் சென்று தொழில் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாள் மோகனா.
யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டராக கோல்ட் மெடல் வாங்கிய ரகுவரனோ.. அடுத்து என்ன செய்வதாக இருக்கிறாய் என்ற வீட்டாரின் கேள்விக்கு வழக்கம் போல் எந்தப் பதிலும் கூறாமல் பூட்டிய அறைக்குள்ளேயே நாட்களைக் கடத்தித் துளசியின் பி.பியை எகிற வைக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
என்ன செய்கிறான், ஏது செய்கிறானென யாருக்கும் தெரியவில்லை! கண்ணில் தென்பட்ட போது புத்தகமும்,கையுமாகக் காட்சியளித்தான். இது போதாதென்று அடிக்கடி வெளியூர்களுக்கு வேறு சென்று வந்து கொண்டிருந்தான்.
அப்படி என்ன தான் செய்கிறாய் என்ற சுவாமிநாதனின் கேள்விக்கு, மோகனாவிடம் கூறுவது போல “அதெல்லாம் உங்களுக்கு சொன்னாப் புரியாதுங்கய்யா” என்று விட்டான்.
படிப்பை முடித்து விட்டு ஜீவனைப் போல மில்லில் கால் பதிப்பான் என்று நம்பியிருந்தத் துளசிக்கு மகனது போக்கு படு ஏமாற்றம் தானென்றாலும், ‘அவனே வருவான் சாமி, கொஞ்ச நாள் போகட்டும்!’ என்ற சுவாமிநாதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவனை முறைத்தபடி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
மனைவியோடு வாழ்ந்த ஒன்றரை வருட வாழ்வு கொடுத்தத் தாக்கத்தில், சுவாமிநாதன் எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும் கூட கணபதி தனி வீட்டில் வசித்து வந்தாரென்பது ஊரறிந்த சேதி.
ஆனால் உறங்கும் நேரம் மட்டும் தான் அவர் தனிமை நாடி தன் இல்லம் செல்வது. மற்றபடி ஃபேக்டரியில் கழியும் நேரம் போக, மிச்ச நேரத்தைத் துளசிநாதனின் வீட்டில் தான் செலவழிப்பார்!
மூன்று வேளை சாப்பாட்டில் தொடங்கி காஃபி,சிற்றுண்டி வரை அனைத்தையும் பிள்ளைகளோடு உட்கொள்வதைத் தான் வழக்கமாக வைத்திருந்தார்.
அப்படியிருக்கையில்.. ஒரு நாள் மாலை சிற்றுண்டி நேரம் கடந்தும் வீட்டிற்கு வராதிருந்த கணபதியை அழைக்க வேண்டி மில்லுக்கு ஃபோன் செய்தத் துளசி, அந்தப் பக்கம் கூறிய செய்தி கேட்டுத் திகைத்து.. எவரிடமும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் சட்டையை மாட்டிக் கொண்டுப் புறப்பட்டு விட்டார்.
நேராக அவரது கார் சென்று நின்றது நகரத்தின் பிரபல மருத்துவமனையின் முன்பு.
அவசரமாக உள் நுழைந்தவரை கணபதியின் ஃபேக்டரியில் வேலை செய்யும் கணக்கர் எதிர் கொள்ள..
“என்னாச்சு கணக்கு?” என்று விசாரித்தார்.
“வ…வந்து.. க..கணபதி அய்யாவுக்கு நெஞ்சு வலின்னு சொல்லி அட்மிட் பண்ணியிருக்காங்கய்யா, எனக்கும் ஒன்னும் புரிபடலங்க”
பதட்டத்தில் முழித்தக் கணக்கரிடம்..
“எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்றதை விட்டுப் போட்டு நீயா என்றா முடிவெடுக்கிறது?” என்று துளசிநாதன் பாய..
“இல்லீங்கய்யா, கணபதி அய்யா தான் யாரையும் பயப்படுத்த வேணாம். நாமளே சத்தமில்லாம ஆஸ்பத்திரில காட்டிப்போட்டு வூடு போய்ச் சேரலாம்ன்னு சொன்னாருங்க” – எனப் பம்மினார்.
“அவன் சொன்னா, அவன் சொன்னா நீ அப்பிடியே கேட்பியா?, ஆஸ்பத்திரில காட்டிப் போட்டு வீடு திரும்ப வந்தவன், என்னத்துக்கு டா அட்மிட் ஆகிப் படுத்திருக்கோனும்?”
“அதில்லீங்கய்யா! நாங்க ரெண்டு பேரும் கொடவுனுக்கு போறதா இருந்ததுங்க! இடது கை நமத்துப் போய் நெஞ்சு பாரமா இருக்குறதா சொன்னாருங்க, ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்துப் போட்டு கொடவுனுக்குப் போகலாம்ன்னாரு. ஆஸ்பத்திரிக்கு வந்ததும் வலி அதிகமாக.. அட்மிட் பண்ணோனும்ன்னு சொல்லிட்டாங்கய்யா”
கணக்கர் கூறியதைக் கேட்ட துளசிக்கு நெற்றி வியர்த்து விட.. படபடத்த இதயத்தை அடக்கியபடி செய்வதறியாது ஒரு நொடி.. சொட்டையைத் தேய்த்துக் கொண்டார்.
பின் வேகமாக ரிசப்ஷனை நோக்கி நடந்தவர், மில்லுக்கு ஃபோனைப் போட்டு ஜீவனை உடனே வரவழைத்தார்.
பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த ஜீவன், செயலற்று அமர்ந்திருந்தத் தந்தையைக் கண்டதும் அவரது மனநிலை புரிந்து.. சூழ்நிலையைக் கையாள..
டாக்டரை சந்திக்கச் சென்றவனிடம்.. “வீட்ல யார்க்கிட்டயும் எதுவும் சொல்ல வேணாம் தம்பி” என்று துளசிநாதன் கூற சரியெனத் தலையாட்டினான்.
அதன் பின்பு தங்களது செல்வாக்கில் சில,பல டாக்டர்களை அவன் சந்திக்க.. கணபதியின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட் உடனே அவன் கைக்கு வந்தது.
இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த முறை அவர் முன் கூட்டியே மருத்துவமனைக்கு வந்து விட்டதால், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க முடிந்ததெனவும் கூறிய மருத்துவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பைபாஸ் சர்ஜரி செய்வது நல்லதென்றும் கூறினார்.
கணபதி முன் கூட்டியே மருத்துவமனை வந்தது குறித்து டாக்டர் கூறிய போது ஆசுவாசப்பட்டாலும், அவர் அடுத்து கூறியதைக் கேட்டு பதற்றமுற்றார் துளசி.
“அப்பா.. பைபாஸ் சர்ஜரியெல்லாம் இப்போ சாதாரணமாய்டுச்சுங்க, பயப்பட்றதுக்கு ஒன்னுமில்லீங்கப்பா. மாமா சீக்கிரமே சரியாய்டுவாருங்ப்பா. கவலைப்படாம இருங்க”
-ஜீவன் எத்தனையோ சமாதானம் கூறியும் வாடிய முகத்துடனே அமர்ந்திருந்தத் துளசி, கணபதியைக் கண்டதும் கண்ணீர் வடித்து விட்டார்.
“இப்ப என்னத்துக்குக் கண்ணைக் கசக்குறவன்?, எனக்கு ஒன்னுமில்லடா துளசி! அப்படியெல்லாம் உங்களை விட்டுப் போய்ற மாட்டேன் டா” – இழுத்துப் பிடித்த மூச்சுடன் புன்னகைத்த கணபதியைக் கண்டு ஜீவனுக்குக் கஷ்டமாகிப் போனது.
மாமா என்றழைத்தாலும் ஜீவனும்,ரகுவரனும் கணபதியைத் தந்தையாகப் பார்த்து வளர்ந்தவர்கள்! உடல்நிலைக் கோளாறென இதுவரை ஒரு முறை கூட இப்படி மருத்துவமனைப் படுக்கையில் இருவரையும் கண்டதில்லை அவன். வீடு,மில்,டெக்ஸ்டைல்ஸ் எனப் பம்பரமாய் சுற்றும் மனிதர் அவர்!
முதன் முதலாகத் தளர்ந்து கிடந்தவரின் முகத்தில் புன்னகையைத் தாண்டித் தேங்கியிருந்த பயத்தைப் புரிந்து கொண்ட ஜீவன், நொடியில் முகத்தை மாற்றிக் கொண்டு,
“மாமா” என்றபடி அவரருகே சென்றான்.
“கண்ணு” – எனக் கையை நீட்டியவரைப் பற்றிக் கொண்டவன்..
“உங்களுக்கு ஒன்னுமில்லீங் மாமா! நீங்க ஆரோக்கியமாத் தான் இருக்கீங்கன்னு டாக்டரே சொல்லிப் போட்டாருங்க! நான் எல்லாம் கேட்டுட்டேன்! அதனால நீங்க ஒன்னும் பயப்படத் தேவையில்ல! சரிங்களா?” எனக் கூற..
“எனக்குப் பயமெல்லாம் ஒன்னுமில்ல” என்றவர்.. “மூத்தவனா நீ குடும்பத்தைப் பொறுப்பா பார்த்துக்கையில, என் உயிர் போனா கூட எனக்கொன்னும் கவலை இல்லை கண்ணு” என்றார்.
பயத்திலும்,பதற்றத்திலும் உணர்ச்சி மிக்கப் பேசுபவரின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன்..
“அப்பிடியெல்லாம் சொல்லாதீங் மாமா! எங்க 4 பேருக்கும் கல்யாணம் பண்ணிப் பார்த்து, பேரன்,பேத்திகளையெல்லாம் கொஞ்ச வேண்டாமுங்களா?, நீங்க பார்க்க வேண்டிய விஷயங்களும், வாழ வேண்டியா காலமும் நிறைய இருக்குங் மாமா! அதுக்குள்ள நீங்க போக ஆசைப்பட்டா, நாங்க எப்படி சம்மதிப்போம்?” என்றான்.
நெஞ்சு குலுங்க சிரித்தவரின் கையை அழுத்தி விட்டு.. “நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா! கண்ணை மூடித் தூங்குங்க. நான் டாக்டரைப் பார்த்துட்டு வரேன்” என்றவன் தந்தையிடம் தைரியமாக இருக்கும்படி கூறி விட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
வீட்டிற்கு வந்தவன் சுவாமிநாதனைத் தனியே அழைத்து விஷயத்தைக் கூறி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
சிறுசுகளிடம் மில்லில் பிரச்சனையென்றும் அனைவரும் வீடு திரும்ப நேரமாகுமென்றும் கூறி விட்டு, துளசிநாதனுக்கும்,கணபதிக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குப் புறப்பட்டான்.
அன்றிரவு துளசியுடன் ஜீவன் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து மறுநாள் காலை கணபதியிடம் அறுவை சிகிச்சையைப் பற்றிக் கூறினான்.
அறுவை சிகிச்சையென்றதும் சட்டென அவரது முகம் இருண்டு விட.. ஒன்னும் பயமில்லீங் மாமா என்று ஜீவன் சமாதானம் கூறிய பின்பும்.. யோசனையிலேயே ஆழ்ந்திருந்தார் கணபதி.
அதன் பின்பு.. “சர்ஜரியைக் கொஞ்ச நாள் தள்ளி வைச்சுக்கலாமான்னு கேட்டுப் பாரு தம்பி” என்றவரிடம்...
“ஏனுங் மாமா?, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரத்துல பண்ணிரோனும்ன்னு டாக்டர் சொல்றாருங்” – என்று ஜீவன் கூறியதும்..
“எனக்கு… எனக்குக் கொஞ்சம் டைம் வேணும் கண்ணு” – எனத் தடுமாறி அவர் கூற..
மறுத்துப் பேச வந்தவன் என்ன நினைத்தானோ..
“நான் டாக்டர் கிட்டப் பேசுறேனுங் மாமா” என்றான்.
டாக்டருடனானப் பேச்சு வார்த்தையில் அவர் அடுத்த 4,5 மாதங்களுக்குள் கட்டாயம் சர்ஜரி வைத்துக் கொண்டாக வேண்டுமென்றும், பின் அனைத்தும் கை மீறிப் போய் விடும் என்றும் கூறி தேவையான மாத்திரை,மருந்துகளையும் எழுதிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
நேராக கணபதியின் வீட்டிற்கு வந்திறங்கிய அனைவரும் மௌனத்துடனே அமர்ந்திருந்தனர்.
“சிறுசுங்க யாருகிட்டயும் இன்னும் எதுவும் சொல்லலியே தம்பி?” – அமைதியைக் கலைத்து பேச்சைத் தொடங்கினார் துளசி.
“இன்னும் இல்லீங்ப்பா” – ஜீவன்
“எதுவும் சொல்ல வேணாங்கண்ணு” – கணபதி
“மாமா..”
“ஆமாங்கண்ணு! அதுங்கக்கிட்ட எதையும் சொல்லிப் பயப்படுத்த வேணாம்! ஆபரேஷனப்ப தேவைன்னா சொல்லிக்கலாம்!” – என்ற கணபதியின் பேச்சுக்குத் தலையாட்டிய துளசி..
“சரி தான்! மோகனா தாங்க மாட்டா! இப்போதைக்கு எதுவும் சொல்லாம இருக்குறது நல்லது தான் தம்பி” என்றார்.
ஜீவனுக்கு இதில் உடன்பாடில்லையென்றாலும் அவர்களிடம் எதிர்த்தெதுவும் பேசாமல் சரியெனத் தலையாட்டினான்.
அடுத்ததாகக் கணபதியுடன் யார் உடன் தங்குவது என்ற பேச்சு வர.. நான் தங்குகிறேன் என முன் வந்த சுவாமிநாதனிடமும், ஜீவனிடமும் மறுத்த கணபதி.. தயங்கியபடி.. மோகனா வந்து தங்கட்டும் என்றார்.
“அது சரி வராதுங் மாமா, உங்க ஹெல்த் கண்டிஷனைப் பத்தி எதுவும் தெரியாம, அவ வந்து உடனிருக்கிறதால, என்னங் மாமா பிரயோஜனம்?” - ஆட்சேபித்த ஜீவனிடம்..
“பெத்த மக, ரத்த பந்தம் உடனிருக்கோனும்ன்னு அவன் ஆசைப்பட்றதுல எந்தத் தப்புமில்ல தம்பி! விடு! மோகனா தங்கட்டும்! கூடவே நானும் இங்க இருந்துக்கிறேன்” எனக் கூறி முடித்து வைத்தார் சுவாமிநாதன்.
ஜீவனும்,துளசியும் வீடு திரும்புகையில்.. மில்லுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மோகனா.. இருவரது முகத்தையும் நோக்கி..
“என்னாச்சுங் மாமா?” எனக் கேட்டபடி அருகே வந்தாள்.
அவளைக் கண்டதும் சட்டென முகத்தை மாற்றிய துளசி..
“என்ன கண்ணு? மில்லுக்குக் கிளம்பிட்டியாட்ருக்கு?” என வரவழைத்தப் புன்னகையுடன் கேட்டார்.
“ஆமாங் மாமா! நீங்க ராத்திரி முழுக்க மில்லுலயா இருந்தீங்க?, என்ன பிரச்சனைங் மாமா?”
“வேலையாள் ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட். அதான் ராத்திரி நாங்க ஹாஸ்பிடல்ல தங்க வேண்டியதாப் போச்சு” – துளசி நாதனை முந்திக் கொண்டு பதில் கூறிய ஜீவன்..
“போய்க் குளிச்சுட்டு சாப்பிடுங்ப்பா” என்று கூறி அவரை அனுப்பி விட்டு மோகனாவின் புறம் திரும்பினான்.
நாள் தவறாமல் மில்லுக்கு வருகை தந்து தொழில் கற்றுக் கொள்பவளுக்கு ட்ரைனிங் அளிப்பதே ஜீவன் தான் என்பதால் அவளுக்குச் சில,பல வேலைகளைக் கொடுத்து அவளை பிஸியாக்க முயற்சித்தான்.
“எல்லாம் ஓகேங் மாமா! ஆனா.. டெய்லி ஈவ்னிங் 4 டூ 5 எனக்கு ப்ரேக் வேணுமுங்க”
“என்னத்துக்கு?”
“நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் சேர்ந்திருக்கேனுங் மாமா! பேசிக்ஸ் கத்துக்கிட்டிருக்கேனுங்க”
“அதுசரி! இன்னும் உன் அமெரிக்கா ஆசை தீரலியா?”
“தீருறதுக்கு அதென்ன பாலா? டீயா? லட்சியமுங்க மாமா”
“சரி,சரி! கொடுத்த வேலையை முடிச்சு வைக்கப் பாரு” – என்றதோடு வீட்டுக்குள் சென்று விட்டான்.
அறைக்குச் செல்ல வேண்டி மாடிப்படியருகே சென்றவன், இளையராஜாவோடு இணைந்து வந்த இஞ்சி டீயின் நறுமணத்தை உணர்ந்து நின்று சமையலறையை எட்டிப் பார்த்தான்.
ஒலித்த பாடலை முணுமுணுத்தபடி காலைச் சாப்பாட்டில் ஈடுபட்டிருந்தப் பூர்ணியைக் கண்டு அதுவரையிருந்த டென்ஷன் குறைய.. கண் மூடிப் பெருமூச்சை வெளியிட்டு அடுப்படியை நோக்கிச் சென்றான் ஜீவன்.
டீ ஒரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்க, மறு அடுப்பில் தக்காளி குருமாவிற்கு அரைத்து ஊற்றிக் கொண்டிருந்தவளைக் கண்டபடியே சமையலறை மேடையில் சாய்ந்து நின்றான்.
அவனைக் கண்டதும் விழியைப் பெரிதாக்கி.. முகம் மலர..
“எப்போ வந்தீங் மாமா?” என்றவள்.. தொடர்ந்து.. “ஏனுங் மாமா முகம் ஒரு மாதிரியிருக்கு?” என்றாள்.
அவள் கேள்வியில் புன்னகைத்து சிவந்திருந்த கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவன்..
“சரியாத் தூங்காததால இருக்குமாட்ருக்கும்” என்றான்.
“ஆமா, கேட்கோனும்ன்னு நினைச்சேன்! ராத்திரி பூரா மில்லுல இருந்தீங்களா? என்ன பிரச்சனைங் மாமா?” – என்றவளிடம் மோகனாவிடம் கூறிய அதே காரணத்தை அவன் கூற..
“குணமாயிட்டாங்க தான?, ஒன்னும் கவலையில்லீங்ளே?” என்றாள்.
“ஹ்ம்ம்.” என முடித்துக் கொண்டவனிடம்..
“டீ தரட்டுமுங்களா?” என்றாள் அவள்.
அவள் முகத்தையே கண்டபடி இரு கைகளையும் பின்னால் பதித்துத் தலையைச் சாய்த்தவன்..
“ஹார்லிக்ஸ் பாட்டிலாட்டம் கண்ணு முன்னால நீயிருக்கும் போது டீயெல்லாம் எவன் டி குடிப்பான்?” என்றான்.
நெற்றியைச் சுருக்கி நாடியை இறக்கியவள், உதட்டைக் கோணலாக்கி..
“ஹார்லிக்ஸ் பாட்டிலா?” என்று வினவ..
“ஆமா, உன்னைப் பார்க்கும் போதெல்லாம் அப்படியே சாப்பிடுவேன்னு சொல்லத் தோணுது” எனக் கூறியபடியே அவள் கையைப் பற்றியிழுத்துத் தன்னருகே வரச் செய்தவன்..
“அன்னிக்குக் காலைச் சாப்பாட்டப்ப வேகமா டிவியை ஆஃப் பண்ணிப் போட்டியே! என்னத்துக்கு டி?” என்றான்.
சமையலறை வாசலைப் பார்த்தபடி பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கையை விலக்க முயற்சித்தவள்..
“ம்ம்ம், பெரியவங்க முன்னால பார்க்க வேண்டிய பாட்டுங்ளா மாமா அது?” என்றாள்.
“அப்படியென்னடி இருக்கு அந்தப் பாட்டுல?”
“அதெல்லாம் உங்கக் கிட்ட சொல்ல முடியாதுங் மாமா”
“ஏன்வாம்?” என்றவன் தொடர்ந்து..
“லிப்கிஸ் தான?? எனக்குத் தெரியும்” – என்றான்.
“நீங்க எப்ப பார்த்தீங்க?, இதுக்கெல்லாம் உங்களுக்கு ஏது நேரமுங் மாமா?”
“பின்ன?, பார்க்க மாட்டேனா? என்னை என்ன மெஷின்னு நினைச்சியா?”
“ஓஹோ”
“என்ன ஓஹோ! இது கம்ப்யூட்டர் காலம்டி! இன்னுமா கிஸ் சீன் பார்க்க வெட்கப்பட்டுக்கிட்டு இருப்பாங்க?”
“இதையே மாமா முன்னாடி தைரியமா சொல்லிப் பாருங்க, அப்புறம் தெரியும்”
“ஏன், சொல்லுவேனே! நிச்சயதார்த்த மோதிரத்தை சுமந்துக்கிட்டிருக்கிற உன்ற விரல் கிட்டக் கேளுடி, என்ற தைரியத்தோட அளவை”
“ஆமாமா, தினம் தினம் எக்குத்தப்பா முத்தம் வாங்குறது அது தான?”
“யெஸ்! அதான்.. இன்னிக்கு ஒரு சேஞ்ச்க்கு அந்தப் பாட்டுல வந்த பிரபுதேவா மாதிரி ட்ரை பண்ணலாம்ன்னு இருக்கறேன்”
“எ…எ..என்ன சொல்றீங்க?, இதெல்லாம் ரொம்ப ஓவருங் மாமா! தக்காளி குருமா கொதிச்சுட்ருக்கு! நகருங்க முதல்ல”
“நானும் தான் டி கொதிச்சுப் போயிருக்கேன்” – என்றபடி அவன் தன் இரு கைகளால் அவள் முகம் பற்றிக் கொள்ள.. இறுகக் கண் மூடிக் கொண்டாள் அவள்.
அந்தக் காலை வேளையிலேயே மஞ்சள் வாசனையுடன் மினுமினுத்தவளின் முகத்தை ஆசையாக நோக்கி.. மெல்லக் குனிந்தவன்.. பின் என்ன நினைத்தானோ.. தன் கைகளை இறக்கி.. அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள.. ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்ட பூர்ணி..
“என்னங் மாமா பண்றீங்க?, குருவம்மாக்கா வந்துரும்ங் மாமா, விடுங்க முதல்ல” என அடிக்குரலில் எச்சரிக்க.. கண்டு கொள்ளாமல் கண் மூடி அவள் கூந்தலில் கன்னம் பதித்திருந்தவன்… “ம்க்க்க்க்க்கும்” என்ற கழுதைக் கணைப்பில் அடித்துப் பிடித்துக் கொண்டு அவளை விட்டு விலகி நின்றான்.
அங்கே சமையலறை வாசலில் மடித்துக் கட்டிய வேஷ்டியுடன் கைகளைக் கட்டிக் கொண்டு நிலப்படியில் சாய்ந்து நின்றபடி.. உதட்டை வளைத்துக் கொண்டு நின்றது.. ரகுவரனைத் தவிர வேறு யாராயிருக்க முடியும்??
கண்களைச் சுருக்கி சங்கடத்துடன் திரும்பிக் கொண்ட பூர்ணி ‘எல்லாம் இவரால தான்’ என்று புலம்பியபடி அருகிலிருந்து சொம்புத் தண்ணீரைத் தூக்கி குருமாவில் ஊற்ற..
“இப்ப எப்பிடி, வந்த வழியே நான் வெளிய போய்றோனுமா?” எனக் கேட்டான் ரகு.
“ஆமா! பார்க் பண்ண வண்டியை அப்டியே ரிவர்ஸ்ல விடு” – ஜீவன்.
“மாமாஆஆ..” – குதிக்காத குறையாகப் பூர்ணி.
“டீ குடு பூர்ணி” – அண்ணனின் வார்த்தைகளையும்,அங்கு தான் கண்டதையும் முற்றிலுமாகப் புறக்கணித்தபடி ரகுவரன்.
“ஏன் உனக்குக் கை இல்ல?, வந்து ஊத்திட்டுப் போடா” – ஜீவன்.
“கொஞ்சம் சும்மா இருங்களேன் மாமா, பல்லு விளக்கிட்டியா கண்ணு?” – சாதாரணமாகப் பேச முயற்சித்தபடி பூர்ணி.
“ஏன், அவன் இல்லைன்னு சொன்னா.. நீ விளக்கி விடப் போறியா?”
“மா…மாஆஆ” – உச்சகட்டக் கோபத்தில் அவள்.
“ஏன், விளக்கி விடுவாளே! அதுல உங்களுக்கென்ன சந்தேகம்?” என்ற ரகு.. “தாலி இன்னும் அவ கழுத்துல ஏறலன்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லியா?” என்றான்.
“அதான் மோதிரம் ஏறியிருக்கே! அப்புறம் என்ன?” – அலட்சிய பாவனையில் ஜீவன்.
“அதெல்லாம் இந்த வீட்ல செல்லாது”
“அதை அவ சொல்லட்டும்”
“தம்பு, இந்தா டா டீ”
“சர்க்கரை போட்ருக்கியா?” – ரகு.
“போட்ருப்பா போட்ருப்பா அதெல்லாம்! கிலோ கணக்குல” – ஜீவன்.
“கிலோ கணக்கெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களுக்குத் தான்! எங்க டம்ளர்ல ரெண்டே ஸ்பூன் தான் விழும்?”
“ஏன் டா அப்பிடி சொல்ற?, நான் வேணா இன்னும் கொஞ்சம் சர்க்கரை போடட்டுமா?” – இடையில் பூர்ணி வேறு இவர்களது பேச்சு புரியாமல்.
“எம்பொண்டாட்டி எனக்குக் கிலோ கணக்குல என்ன, டன் கணக்குல கூட போடுவா? உனக்கென்றா?” – ஜீவன்.
“போடட்டும்! போடட்டும்! சொக்கிப் போய் கிடக்குற நீங்க, சுகர் வந்தாவது அடங்குறீங்களான்னு பார்ப்போம்”
“டேய் தம்பு…” – அதட்டியவளிடம்..
“அவர் தான் தொடங்குனாரு. நான் இல்ல” – என்றவன் டீயைக் குடித்தபடி டைனிங் டேபிளை நோக்கி நடக்க..
தாவணியைத் திருகிக் கொண்டு அவன் செல்வதையே பார்த்தபடி முகம் கலங்க நின்றிருந்தப் பூர்ணியை இறுக அணைத்து.. அவள் கன்னத்தில் எச்சில் பதிய முத்தமிட்டு.. அவள் அடிக்குரலில் கத்திக் குவிப்பதைப் பொருட்படுத்தாமல் தன் அறைக்கு நடந்து விட்டான் ஜீவன்.
ஜீவனிடம் தலையாட்டி விட்டு மில்லுக்குப் புறப்பட்ட மோகனா, என்ன நினைத்தாளோ.. நேராகத் தன் தந்தையின் இல்லத்தை நோக்கி நடை போட்டாள்.
“அப்புச்சி” எனக் குரல் கொடுத்தபடியே உள் நுழைந்தவளைக் கண்டு திடுக்கிட்ட சுவாமிநாதன்.. மெல்ல வெளியே வர..
“என்னங்கப்புச்சி நேரா இங்க வந்துட்டீங்க? அப்பா எங்கயிருக்காரு?” எனக் கேட்டாள்.
“அ..அது வந்து கண்ணு.. ராத்திரி பூரா கண்ணு முழிச்சானல்ல, அதான் வந்ததுமே உறங்கப் போய்ட்டான்”
“உறங்குறாரா?” என்றவள் தாத்தனைத் தாண்டிச் சென்று தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.
துயிலில் ஆழ்ந்திருந்தவரிடம் பார்வையைச் செலுத்தியவள், அவர் கையில் செருகியிருந்த venflon-ஐக் கண்டு.. புருவம் சுருக்கி..
“எதுக்குங் அப்புச்சி ட்ரிப் போட்டிருக்காங்க?” எனக் கேட்க..
அவளது குரல் கேட்டுக் கண் விழித்த கணபதி..
“மோகனா” என்றார்.
தந்தையின் குரலிலிருந்தத் தளர்வை உணர்ந்து.. குழம்பியவள்..
“என்னாச்சுங்ப்பா?” எனக் கேட்டாள்.
சர்ஜரி பற்றிக் கேட்டதிலிருந்தே பயத்தில் சோர்ந்திருந்த கணபதி மகளைக் கண்ட மகிழ்ச்சியில் பட்டென எழுந்தமர்ந்து..
“ஒன்னுமில்ல கண்ணு! ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சதுல காலைல லேசா தலை சுத்திருச்சு! இதான் சாக்குன்னு அந்த டாக்டரு படுக்க வைச்சு ட்ரிப்பை ஏத்திப் போட்டான்!” என்றார்.
“அவ்ளோ தானுங்களா?
“ஆமாங்கண்ணு”
“ப்பா…” – தந்தையின் தெளிவற்ற பதிலில், அவர் முகம் பார்த்தவளிடம்..
“நிசமா தான் கண்ணு” எனக் கூற.. அவரைச் சந்தேகத்துடன் நோக்கியபடியே ஒன்றும் கூறாமல் எழுந்து நின்றாள்.
“மில்லுக்குக் கிளம்பிட்டியா?”
“ஆமாங்ப்பா!”
“சரி கண்ணு, கவனமா போய்ட்டு வா”
“ஹ்ம்ம்,” என்றவள் தொடர்ந்து.. “அப்புறமுங்ப்பா! நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் சேர்ந்திருக்கிறேனுங்க. தினம் பொழுசாய 4-ல இருந்து 5 வரைக்கும்” எனக் கூறியபடியே அவரது கோபத்தை எதிர்பார்த்து அவர் முகம் நோக்கினாள்.
“சரி கண்ணு” – பட்டென ஒப்புக் கொண்டவரை..
“ப்பா…” – என அவள் ஆச்சரியத்துடன் அழைக்க..
“என்ன கண்ணு?” – என்றார் அவர்.
“திட்டுவீங்கன்னு நினைச்சேனுங்! மறுபேச்சில்லாம ஒத்துக்கிட்டீங்க!”
விழி விரியக் கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவதெனத் தெரியாமல்.. அவர் அமைதி காக்க..
“தூங்கிட்டிருந்தவனை எழுப்பி விட்டுப் போட்டு, ஏன் திட்டலன்னு கேட்டா.. அவன் என்ன சொல்லுவான்?, ஏன் சாமி?” என்று கேட்டுக் கணபதிக்கு உதவி செய்த சுவாமிநாதன் அதை,இதைப் பேசி.. சந்தேகத்துடனே தந்தையை நோக்கிக் கொண்டிருந்த மோகனாவைக் கிளப்பி வைத்தார்.
அன்றிரவு உணவின் போது மோகனாவை இனி தினம் இரவு கணபதியுடன் தங்கிக் கொள்ளச் சொல்லி துளசிநாதன் கூற..
“எதுக்குங் மாமா?” – எனக் கேள்வி வந்தது பூர்ணியிடமிருந்து.
“……..” – பதிலின்றி உணவைக் கொறித்தவரிடம்..
“என்னாச்சுங் மாமா சித்தப்பாவுக்கு?, பார்க்கவே ரொம்ப டல்லாத் தெரிஞ்சாரு?” எனக் கேள்வி கேட்டவளுக்கு..
“அவருக்கு பி.பி இருக்கறது உனக்குத் தெரியுமல்ல?, திருப்பூர்ல கம்பெனி தொடங்குறது விஷயமா பிஸியா சுத்திட்டிருந்த மனுஷன், நேரத்துக்கு சாப்பிடாம,தூங்காம இருந்திருப்பாராட்ருக்கு. அதுல பி.பி அதிகமாயிருக்கு. அவ்ளோ தான். வேற ஒன்னுமில்ல” – என ஜீவன் பதில் கூறியதும்..
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிய துளசி..
“இனி அவனுக்குன்னு தனியா சாப்பாடு தயார் பண்ணப் பாரு கண்ணு! கொழுப்பில்லாம பார்த்துக்க” என்று பூர்ணியிடம் கூற.. அவளும் சரியெனத் தலையாட்டினாள்.
“வே…வேற ஒன்னுமில்லீங்களே மாமா?” – கவலையுடன் கேட்டவளிடம்.. அவர் இல்லையெனத் தலையசைக்க.. மெல்லத் திரும்பி மோகனாவை நோக்கினாள் பூர்ணி.
நடப்பவை அனைத்தையும் காதில் வாங்கியபடி பரோட்டாவை வாயில் அடைத்துக் கொண்டிருந்தவளின் முகத்திலிருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை அவளால்.
“அப்புச்சியும் இனி அங்க இருந்துக்கிறதா சொல்றாரு கண்ணு, 2,3 நாளைக்கு ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்தனுப்பிப் போடு! கணபதி மில்லுக்குப் போக ஆரம்பிச்சதும் தோது பார்த்து பண்ணிக்குவோம்”
பூர்ணியிடம் சொல்லிக் கொண்டிருந்தத் துளசிநாதனை “ப்பா” என்று இடைமறித்தான், அத்தனை நேரமாக அமைதியுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்த ரகுவரன்.
அவர் நிமிர்ந்து அவனைப் பார்த்ததும்..
“இனி நானும் மாமாவோட அந்த வீட்ல இருந்துக்கிறேனுங்க” என்றான்.
மோகனா இதைக் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க வேண்டும்! நமுட்டுச் சிரிப்புடன்.. கோழி காலைக் கடித்தாள்.
“நீ என்னத்துக்கு அங்க இருக்கோனும்ன்ற?” - துளசி
“ஏன் இருந்தா என்னத் தப்பு?”
“ரகு…” – தம்பியை அதட்டியபடி ஜீவன்.
“….” பதிலின்றி தட்டிலிருந்த சேவையில் பாயாவை ஊற்றிக் கொண்டிருந்தத் துளசியிடம்..
“உடல்நிலை சரியில்லன்னு தெரிஞ்சப்புறமும் கூட, அப்பிடி என்னத்துக்கு அவரைத் தனியா விடோனும்?, அதுலயும் இவளை மட்டும் என்னத்துக்கு போகச் சொல்லுறீங்க?, அவர் பெத்த பொண்ணுன்றதாலயா?, எல்லாரும் ஒன்னாத் தானுங்கப்பா வளர்ந்தோம்?” எப்பயிருந்து இப்டி வித்தியாசம் பார்க்க ஆரம்பிச்சீங்க?,– என்று அவன் மாமனின் மீதிருந்த பாசத்தை ஆதங்கத்துடன் வெளிப்படுத்த.. “ப்ச்” என்ற துளசி…
“அந்த வூட்ல தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறவனை எதிர்த்து என்னை என்றா செய்யச் சொல்றவன்?” எனக் கேட்டார்.
“அப்பிடி என்ன இருக்காமாம் அந்த வீட்ல?” – எரிச்சலுடன் முணுமுணுத்தவனிடம்..
“அது அத்தையோட அவர் வாழ்ந்த வீடு டா ரகு. அவர் செண்டிமெண்ட் பார்க்குறாராட்ருக்கும்” – என்று மெல்லிய குரலில் அவன் அருகில் அமர்ந்திருந்த ஜீவன் கூற..
“உடல்நிலை கெட்டுக் கிடக்குறப்ப என்னங்ண்ணா செண்டிமெண்ட் வேண்டிக் கிடக்கு?” – என மறு கேள்வி கேட்டவனிடம்..
“அதெல்லாம் உனக்கு சொன்னாப் புரியாது” என்று ஜீவன் கூற.. நிமிர்ந்து முறைத்தான் ரகுவரன்.
“சரிங்ப்பா. அவர் ஆசைப்படி அங்கேயே இருக்கட்டுமுங்க. ஆனா நானும் இனி அங்க தானுங்ப்பா இருப்பேன்!” – ரகு.
“……………”
“எதையாவது மனசுல வைச்சுக்கிட்டு என்ற பேச்சை மறுக்க நினைக்காதீங்க”
“அப்பிடி எதை மனசுல வைச்சிருக்காருன்ற நீ?” – மீண்டும் தம்பியிடம் முணுமுணுத்தபடி ஜீவன்.
“அதை அவர் தான் சொல்லோனும்”
“எல்லாம் சரி, நீ பாட்டுக்க கிளம்பிப் போய்ட்டா, உன்ற பூர்ணியை யாரு டா காவ (காவல்) காப்பா?”
“என்ற பூர்ணி?”
“நீ தான அடிக்கடி சொல்லுவ, இன்னும் தாலியேறலியேன்னு?”
“ஆனா… முக்கியமா உங்க இம்சையிலிருந்துத் தப்பிக்கத் தானுங்ண்ணா நான் போகோனும்ன்றேன்” – பல்லைக் கடித்தவனிடம்..
“அப்போ சரி!” – எனத் தோளைக் குலுக்கினான் ஜீவன்.
இவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே எழுந்த துளசி மோகனாவிடம்..
“அப்புச்சிக்கும்,அப்பாவுக்கும் சாப்பாடு எடுத்துட்டுப் போ கண்ணு” என்று கூறி விட்டு நகர்ந்து விட..
“இங்க ஒரு மனுஷன் கேள்வி கேட்டானே! பதில் சொல்லிட்டுப் போகோனும்ன்னு இவருக்குத் தோணுதா பாரு” என்று முணுமுணுத்த ரகு.. உண்டு முடித்துக் கையை கழுவி விட்டு.. தன்னறைக்குச் சென்றுக் கண்ணில் பட்டதைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் மாமனின் வீட்டில் வாசம் செய்ய.
பெரிய்ய்ய பையுடன் மாடியறையிலிருந்து இறங்கியவனைக் கண்டு உதட்டைப் பிதுக்கிய மோகனா..
“2 நிமிஷ நடைல இருக்கிற வீட்டுக்குப் போறதுக்கு, நீ 2 வருஷத்துக்குத் தேவையான துணி,மணியைத் தூக்குறதெல்லாம் ரொம்ப ஓவர்! எப்படா இப்பிடியொரு சான்ஸ் வரும், வீட்டை விட்டுப் போகலாம்ன்னு காத்துட்டு இருந்திருப்பியாட்ருக்கு! அதனால தான்.. இதான் சாக்குன்னு பொட்டியைக் கட்டிப் போட்ட” என்றாள்.
“ஆமா டா மோகன்! அப்பிடித் தான் வைச்சுக்கோயேன்” என்றவன்..
“பூர்ணி.. நாளைலயிருந்து எனக்கும் சேர்த்து சாப்பாடு கொடுத்து விட்ரு” எனத் தந்தையின் காதுகளை எட்டுமளவிற்குக் கத்தி விட்டுக் கிளம்பி விட்டான்.
அவன் செய்கையில் சிரித்துக் கொண்டிருந்த ஜீவன், பூர்ணியிடம்.. “இப்ப தான் நிம்மதியாயிருக்கு! இன்னொரு பரோட்டா வை!” என்று கூற… அவனை மூச்சு வாங்க முறைத்து “ஹ்ம்ம்” என முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டாள் பூர்ணி.
சாப்பாட்டு கேரியரைத் தூக்கிக் கொண்ட மோகனா நேராகத் துளசியிடம் சென்றாள்.
“கிளம்பிட்டியா கண்ணு?”
“ஆமாங் மாமா”
“சரி கண்ணு! உங்கய்யனைக் கவனமா இனி நீ தான் பார்த்துக்கோனும். புரியுதல்ல?, அவன் உன்ற ஒருத்திக்காகத் தான் உசுரோட நடமாடிட்டிருக்கான்” – என்றவரிடம்…
“ஒருத்திக்காகத் தான்னு என்னை மட்டும் சொல்லாதீங் மாமா! அநேகமா இந்நேரம்.. ரகுவும்,என்றப்பாரும் பெரிய பாசப் போராட்டமே நடத்திட்டிருப்பாங்க! என்னை விட அவருக்கு அவன் மேல தானுங் மாமா பிரியம் ஜாஸ்தி! நீங்க என்ற மேல பாசமா இருக்கறதாட்டம்” – என்றாள்.
மருமகளின் பேச்சில் புன்னகைத்தவர் “உண்மை தான் கண்ணு” எனக் கூற.. தயங்கியபடி அவர் முகம் பார்த்தவள்..
“உ..உங்களுக்கொன்னும் வருத்தமில்லீங்ளே மாமா?” என்றாள்.
“………..”
“நான் அன்னிக்கு சும்மா பையைத் தூக்குனதுக்கே, நானும் உன்ற கூட வர்றேன்னு கிளம்புனீங்க”
“இப்பவும் அதே நிலைமை தாங்கண்ணு! ஆனா.. உன்றப்பனையும் தனியா விட முடியாதல்ல?, உன்றம்மை வாழ்ந்த வீட்டை விட்டு அவனை இங்க வர வைக்கிறதும் நல்லாயிருக்காது”
“விடுங் மாமா! பகல்ல இங்க, ராத்திரி அங்கன்னு இருந்துக்கறேன்”
“சரி கண்ணு” – என்றவருக்குத் தினம் நடுநிசியில் தண்ணீர் பருக எழும் போது.. விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் பூர்ணி மற்றும் மோகனாவின் பேச்சுக் குரல்களைக் கேட்டுப் புன்னகைத்துக் கொள்ளும் நொடி இனியமையாதென்பதைப் போன்றொரு உணர்வு தோன்ற.. அமைதியாய் அவளை வழியனுப்பி வைத்தார்.
மோகனா வீட்டை அடைந்த போது.. அவள் எண்ணியபடி அங்கே கணபதியுடன் சண்டை கட்டிக் கொண்டிருந்தான் ரகு.
“நான் உங்கக் கிட்ட இதுவரை எதையும் மறைச்சிருக்கேனுங்ளா மாமா?, டிராயிங் & பெயிண்டிங் சம்மந்தப்பட்டக் காலேஜ்ல நான் சேரோனும்ன்னு ஆசைப்பட்டப்ப கூட, ஊட்டி காலேஜ்ல எனக்கு சீட் வாங்கிக் கொடுத்ததே நீங்க தானுங் மாமா?, அப்ளிகேஷனைப் போட்டுட்டுத் தான நாம என்றப்பன் கிட்டயே பேசுனோம்?”
‘அடக்களவாணிகளா’ – என்றெண்ணிக் கொண்ட மோகனா, இன்னும் ஏதேனும் உண்மை வரும் என நம்பி அறை வாசலிலேயே நின்றாள்.
“ஆனா நீங்க உங்க உடல்நிலையைப் பத்தி என்ற கிட்ட ஒரு வார்த்தை கூட பகிர்ந்துக்கலீங்களே?”
‘இந்தக் கிறுக்கன் என்ன எதிர்பார்க்குறான்?, எனக்கு உடம்பு சரியில்ல,எனக்கு உடம்பு சரியில்லன்னு அவரு தம்பட்டம் அடிக்கோனும்ன்னா?’ –மனதுக்குள் மோகனா.
“என்றப்பனை விட நான் அதிகமா பிரியம் வைச்சிருக்கிறது உங்க மேல தான்னு உங்களுக்குத் தெரியாதுங்ளா மாமா?”
‘அடப்பாவி! இதை மட்டும் அவரு கேக்கோனும்’ – எனத் தலையிலடித்துக் கொண்டாள் மோகனா.
அவன் பாசத்தில் குளிர்ந்து போன கணபதி அவன் கையைப் பற்றிக் கொண்டு..
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது கண்ணு! என்னை விட உன்ற மேல அதிக பாசம் வைச்சிருக்கிறவன் துளசி தான்” எனக் கூற..
“ஆமாமாம்” என நொடித்துக் கொண்டவன் “ஆ,ஊன்னா அவர் கை ஓங்குறது என்ற கிட்ட மட்டும் தான்! அந்த வகைல அவருக்கு என்ற மேல ரொம்பப் பாசம் தான்” என்றான்.
அவன் பேச்சில் சோர்வாய் நகைத்தவரை கண்டும் காணாமல் கவனித்தவன்.. அவர் முகத்திலிருந்த தளர்வைக் கண்டு கவலை கொண்டான்.
தன் தோள் மீது பதிந்திருந்த அவரது கையைப் பற்றியவன்..
“எனக்குக் கர்லாகட்டைத் தூக்கச் சொல்லித் தந்த நீங்க, எப்படிங் மாமா உங்க உடம்பை கவனிக்காம விட்டுப் போட்டீங்க?” எனக் கேட்டான்.
“வயசானதும் உடம்பு நோய்,நொடி காண்குறது சகஜம் தான கண்ணு?”
“ப்ச், நூறு வயசு தாண்டி உயிர் வாழ்ற ஆட்களும் இருக்காங்க இங்க. பி.பியெல்லாம் பெரிய விஷயமில்லீங் மாமா! ப்ராபர் எக்ஸர்சைஸ், ஃபுட் எல்லாம் எடுத்துக்கிட்டா குணமாயிடுமுங்க”
“நீ சொன்னா சரி தான் கண்ணு” – பளீரெனப் புன்னகைத்தவரை ஒரு நொடி நோக்கியவன்..
“கவனமா இருக்கோனும்ங் மாமா” என்றான்.
பதிலற்று அவர் தலையசைத்ததும் எழுந்தவன்..
“ஆனாலும் உங்க நண்பரோட அறிவை நாம மெச்சுக்கோனுங் மாமா”
“ஏன் சாமி?”
“உங்க மவளாட்டம் ஒருத்தியை ஒத்தாசைக்கு அனுப்பி, உங்க பி.பிக்கு வைத்தியம் பார்க்க நினைச்சிருக்காரு பாருங்க! அடேங்கப்பா”
“அடேய்ய்ய்” – அத்தனை நேரமிருந்த பொறுமை மாறப் பல்லைக் கடித்த மோகனா.. விறுவிறுவென உள் நுழைந்து.. அவனை ஒரு பார்வையில் முறைத்து ‘உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்’ என்று விட்டுத் தந்தையிடம்..
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமுங்களாப்பா?” எனக் கேட்டு உணவு பரிமாற.. யோசனை நிறைந்த முகத்துடன் வெளியே வந்தவன்.. ஹாலில் அமர்ந்திருந்த சுவாமிநாதனிடம் சென்று நின்றான்.
“என்ன சாமி?, உன்றப்பனோட வாக்குவாதம் பண்ணியாமா?”
“அது தினம் நடக்குறது தானுங்கய்யா” என்றவன்.. அவர் எதிரே அமர்ந்து.. அவரது முகம் பார்த்தான்.
“என்ன கண்ணு?”
“ஐயா..”
“சொல்லு சாமி”
“நீங்களாவது நிஜத்தைச் சொல்லுவீங்களாய்யா?”
தீவிரமாய்த் தன் கண் பார்த்துக் கேள்வி கேட்டவனிடம்.. என்ன சொல்வதென ஒரு நொடி தடுமாறியவர்..
“எ…எந்த நிசத்தைக் கேட்குற கண்ணு?” என்றார்.
“சொல்ல மாட்டீங்க அப்போ?”
“……….”
“மாமாவுக்கு என்னங்கய்யா?, நீங்க எல்லாரும் சேர்ந்து எதையோ எங்கக்கிட்டயிருந்து மறைக்குறதாட்டம் தோணுதுங்கய்யா எனக்கு.”
“……….”
“எங்களுக்குத் தெரியக் கூடாத அளவுக்கு விஷயம் சீரியஸ் ஆனதுங்களாய்யா?, இல்ல எங்களை இன்னும் சின்னப் பசங்கன்னு நினைக்குறீங்களா?”
“அப்பிடியில்ல கண்ணு! நீ நினைக்குறதாட்டம் எதுவும் இங்க நடக்கல சாமி”
“பெருசா காரணமில்லாம, மோகனாவை இங்க அனுப்பியிருக்க மாட்டாரு எங்கப்பா”
“அப்பிடியெல்லாம் எதுவும் இல்ல கண்ணு”
“நிஜம் தானுங்களா?”
“நிஜம் தாங்கண்ணு! அவனுக்கும் வயசாய்ப் போச்சல்ல?, கூட யாரும் துணைக்கிருக்க வேணாமா?”
“………..”
“நீ எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத கண்ணு! உன்ற மாமாவுக்கு ஒரு பிரச்சனையுமில்ல”
“ஹ்ம்ம்” என்றவன் ஏதும் சொல்லாமல் எழுந்து செல்ல.. சொல்வதை மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டு தலையாட்டும் பூர்ணியை விட மோகனா,ரகுவரனின் யோசிக்கும் திறன் முதல் முறையாக சுவாமிநாதனுக்குப் பீதியைக் கொடுத்தது.
அதன் பிறகு நாட்கள் சோம்பலாகச் செல்ல.. அங்கு தன் வீட்டில் அறையைப் பூட்டிக் கொண்டு செய்த வேலையை இங்கு திறந்து வைத்தே பார்த்து வந்தான் ரகுவரன். அவனிருக்கும் அறை முதல் மாடியிலிருந்ததாலும், சுத்தம் செய்பவரைத் தவிர வேறு எவரும் படியேறி வராததும் அவனுக்குச் சாதகமாக அமைந்து போனது.
பகல் முழுக்க மில்,டெக்ஸ்டைல்ஸ்,பூர்ணியுடன் அரட்டையெனக் கழித்து விட்டு இரவு வீடு திரும்பும் மோகனாவும் இவனிடம் எந்த வம்பும் வைத்துக் கொள்ளாமலிருப்பதும் வேறு நல்லதாகிப் போனது.
பூர்ணியும்,ஜீவனும் வருகை தரும் போது மட்டும் தன்னறையை இறுகப் பூட்டி வைத்து விடுவான்.
“என்றா தம்பு, ஒரேடியா இங்கேயே இருந்துக்கிட்ட?, அந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்குறதில்ல?” – என்று புலம்பும் பூர்ணியிடம்..
“கொஞ்சம் பிஸி பூர்ணி!” என்பவன் அண்ணனிடம் மட்டும் “நான் இல்லன்றதால அவ பின்னாடியே சுத்திட்டிருக்காதீங்க! வீட்ல வேற யாரும் பார்த்தா.. அப்புறம் நீங்க வெளிய தலை காட்ட முடியாது” என்று மிரட்டி வைத்தான்.
அவ்வப்போது வெளியூர் செல்பவன், விநாயகர் சதுர்ச்சி அன்று ஈரோடு சென்று விட்டுத் திரும்புகையில் தான் அந்தத் திருட்டுச் சம்பவமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்!!
(முதல் அத்தியாயத்துக்கு வந்து நின்னாச்சு இப்போ! இதுக்கப்புறம், நடக்கறதெல்லாம் இன்று.. மாதிரி நினைத்துக் கொள்ளவும். 2020 இல்ல. இன்னும் நாம 90ஸ்ல தான் இருக்குறோம்)
இன்று…
அன்று காலை நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய கணபதி.. அதிகமான தலை சுற்றலால் தடுமாறிப் படுக்கையில் அமர்ந்தார்.
மருத்துவர் கூறியிருந்த 4,5 மாதக் கெடுவில், 4 மாதங்கள் ஓடிப் போயிருந்தது. இனியும் தாமதிக்கக் கூடாதென்று மருத்துவரும்,ஜீவனும் வற்புறுத்தியும்.. எதையோ யோசித்தபடி மௌனத்தையே பதிலாகக் கொடுத்தார் கணபதி.
அவர் தடுமாறி அமர்கையில், நல்ல வேலையாக அப்போது அவரது அறைக்குள் நுழைந்திருந்தத் துளசி, நண்பனின் நிலை கண்டு உடனடியாக மருத்துவரை வரவழைத்தார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டு வருவதாகக் கூறி விட்டுச் செல்ல..
“அப்படி எதைத் தான் டா போட்டு மனசுக்குள்ள வைச்சுக் குழப்பிட்டிருக்க நீ?, என்ன தான் உன்ற நினைப்பு?, வாயைத் திறந்து சொல்லேன்!” என்று நண்பனை நோக்கிக் கத்தினார் துளசி.
அவர் கத்தியதில் சங்கடமாய் முகம் நிமிர்த்திய கணபதி..
“சத்தம் போடாத துளசி! பசங்களுக்குக் கேட்டுடப் போகுது” எனக் கூறிக் கொண்டிருக்கையில் சுவாமிநாதன் செய்த ஃபோன் காலில் ஜீவனும் வந்து சேர்ந்தான்.
“மோகனா இங்க இல்லீங் மாமா! அந்த வீட்ல இருக்கா” என்றவன் தொடர்ந்து..
“அவங்களுக்குத் தெரிஞ்சாத் தான் இப்ப என்னாவாம்ங்க மாமா?, மோகனா நீங்க நினைக்கிற மாதிரி எமோஷனல்-ஆ யோசிக்குற பொண்ணு கிடையாதுங் மாமா” எனக் கூற..
“இல்ல,இல்ல கண்ணு! அவளைப் பயப்படுத்த வேணாம்” என்று அவசரமாகக் கூறினார் கணபதி.
“சரி டா யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்! சொல்லிக்காமலே ஆபரேஷனையும் முடிச்சுக்கலாம்! நீ சம்மதம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு! இனியும், உன்ற முகத்துக்காகப் பார்த்துட்டு அமைதியா இருக்க முடியாது என்றனால”
“கொஞ்சம் பொறுமையா பேசு துளசி! அவனே முடியாம இருக்குறவன்” –மகனை ஆசுவாசப்படுத்த முயன்றபடி சுவாமிநாதன்.
“எவ்ளோ நாள் தான் நானும் பொறுமையா பேசுறதுங்ப்பா?, நிலைமை மோசமாய்டக் கூடாதுன்னு பயம் வருதுங்ப்பா” – என்றவருக்குக் கண்ணீர் வந்து விட..
“ப்பா.. என்னங்ப்பா.. நீங்க” என்றபடி அவர் தோளைப் பற்றி அமர வைத்தான் ஜீவன்.
“எனக்கொன்னும் ஆகாது டா துளசி” – சன்னக்குரலில் கூறிய கணபதியை முறைத்து..
“அதை டாக்டர் சொல்லோனும். நீ சொல்லப்படாது” என்று பாய.. புன்னகைத்தவரிடம்..
“உன்ற மனசுல என்ன ஓடுது? மனசு விட்டுப் பேசு டா கணபதி” என்றார் துளசி கெஞ்சலுடன்.
“வ..வந்து….”
“எதுவாயிருந்தாலும் சொல்லு சாமி!” – என சுவாமிநாதனும் வற்புறுத்த.. தன் மனதிலிருப்பதை வெளியிட்டார் கணபதி.
“மோகனாவுக்கும்,ரகுவரனுக்கும் கல்யாணம் பண்ணோனும்ன்னு நான் ஆசைப்பட்றேனுங்ப்பா”
அவர் கூறி முடித்ததும் ஜீவன் அதிர்ச்சியாய் தந்தையை நோக்க.. அவரது முகம் ‘இதுக்கா டா இவ்வளவு யோசிச்ச?’ என்று கேள்வி கேட்பதைப் போலிருந்தது.
“இதைச் சொல்லவா கண்ணு இத்தனை நாளா யோசிச்ச?” – ஆசுவாசத்துடன் கூறிய சுவாமிநாதன்… “சரியான போக்கேத்தவன் நீ” எனத் திட்டியபடி அவரருகே அமர்ந்தார்.
“உங்களுக்குச் சம்மதமுங்களாப்பா?”
“இல்லைன்னு நான் ஏன் சாமி சொல்லப் போறேன்?”
“இல்ல, பூர்ணி மாதிரி இவ.. ரத்த பந்தத்துல வர மாட்டா! அ..அ..அதனால யோசிப்பீங்களோன்னு…” – என இழுத்தவரை வெகுவாக முறைத்த துளசி..
“இப்பிடி வித்தியாசம் பார்த்துத் தான் அன்னிக்கு மோகனாவை நான் தனியா வைச்சு வளர்த்துக்கிறேன்னு சொன்னியாக்கும் நீ?, என்னைக்கு டா உன்னை வேத்தாளா பார்த்திருக்கேன் நான்?, ஒருவேளை.. நீ என்ற பசங்களை அப்பிடித் தான் பார்க்குறியோ?” – என்று திட்ட..
“அப்பிடிப் பார்த்திருந்தா.. சம்மந்தம் பேச நினைப்பேனுங்களாப்பா?” – என்ற கணபதிக்கு இன்னமும் நண்பனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
“அதென்ன அவர் கிட்டக் கேட்குறது? பையனைப் பெத்தவன் நான்! நீ என்னையல்ல கேட்கோனும்?”
துளசி கேட்டதும்.. ஒன்றும் கூறாமல் விரல்களை நோக்கியவரிடம்..
“ஏன் டா கணபதி? எனக்கு அந்த ஆசை இல்லையின்னா நினைக்குற நீ? மோகனா பிறந்ததிலிருந்தே எனக்கு இந்த யோசனை தான்! ஒரே தங்கச்சியை ராஜாமணிக்குக் கட்டிக் கொடுத்துச் சொந்தமாக்குன மாதிரி.. உன்னையும் என்ற சொந்தக்காரனாக்க.. இன்னொரு தங்கச்சியில்லையேன்னு வருத்தப்பட்டவன் நானு! உனக்குப் பொண்ணு பிறந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்! அவளை என்ற மருமவளாக்கி, உன்னைச் சொந்தக்காரனாக்குற என்ற ஆசையைத் தீர்த்துக்கோனும்ன்னு!”
அவர் கூறியதும் முகம் பளிச்சிட.. நிமிர்ந்து பார்த்தக் கணபதியிடம்..
“என்ற மருமவ படிக்கோனும்ன்னு விருப்பப்பட்றாளே! இவனும்.. தொழில்ல நாட்டமில்லாம தறுதலையா சுத்துறானே! இந்த நிலைமைல கல்யாணம் பேசோனுமான்னு தான் நான் அமைதியாயிருந்தேன். ஆனா.. உன்ற மனசுல இப்டியொரு நினைப்பை வைச்சுக்கிட்டு நீ குழப்பத்துல சுத்துறன்னு தெரிஞ்சிருந்தா.. இந்நேரம்.. ஆபரேஷனை முடிச்சு உன்னை முழுசா குணப்படுத்தி வீட்டுக்குக் கூட்டி வந்திருப்பேனா டா?” – என்று துளசி அங்கலாய்த்துக் கொள்ள..
“அ..அது.. வந்து டா துளசி..” என்று மீண்டும் இழுத்த கணபதியிடம்..
“என்றா?” என்றார் துளசி.
“பூர்ணி-ஜீவன் கல்யாணத்தோடவே இவங்க கல்யாணத்தையும் முடிச்சுப் போடோனும்ன்னு நான் விருப்பப்பட்றேன்! ஆபரேஷனோ, நான் குணமாகித் திரும்புறதோ என்ற நினைப்புல பெருசா இல்ல டா! இதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடி.. எனக்கு அதுங்கக் கல்யாணத்தைப் பார்க்கோனும்”
“அதுக்கென்ன அப்டியே பண்ணிடலாம்! உன்ற ஆபரேஷனை மனசுல வைச்சுத் தான் ஜீவன்-பூர்ணி கல்யாணப் பேச்சை ஆரம்பிக்காம இருந்தேன்! எண்ணி ஒரே மாசத்துல ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா நடத்திப் போடலாம்! கவலையை விடு” – குதூகலமாகக் கூறினார் துளசி.
சம்மந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசிக்காமல் இவர்களாக முடிவெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு நெற்றியை நீவிக் கொண்ட ஜீவன்..
“மாமா…” என இடையிட்டான்.
பேச்சைத் துவங்கி விட்டவனுக்கு என்ன கூறுவதெனப் புரியாமல் போக.. ஒரு நொடி விழித்தவன்..
“இ..இ..இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரமுங்க மாமா? முதல்ல உங்க ஆப்பரேஷன் முடியட்டும்ங்க! இது.. நீங்க நினைக்குற அளவுக்கு ரிஸ்க்கியான சர்ஜரி இல்லீங் மாமா! வெற்றி வாய்ப்பு 100%ன்னு டாக்டர் சொல்லிட்டாருங்க. நீங்க பயப்படத் தேவையில்லீங் மாமா”
“நீ சொல்றதெல்லாம் அறிவுக்குப் புரியுது கண்ணு! ஆனா.. ஆபரேஷனுக்குப் போறதுக்கு முன்னாடி மோகனா கல்யாணத்தைப் பார்த்துப் போடனும்ன்னு மனசு ஆசைப்படுதே! அதைச் சமாதானப்படுத்த முடியாம தாங்கண்ணு, இத்தனை நாளா குழம்பிப் போய்க் கிடந்தேன்”
-பரிதாபமாய்க் கூறியவரைக் கண்டு இரக்கம் தோன்ற.. பதிலின்றி நின்றவனுக்கு.. ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது. அது.. சத்தியமாக இவர்களது முடிவிற்கு அவர்களிருவரும் சம்மதிக்கப் போவதில்லை என்பது.
தீவிரமாய்க் கம்ப்யூட்டர் பயின்று வரும் மோகனா.. தனது அமெரிக்கப் படிப்பிற்காக அப்ளிகேஷன் வைத்திருப்பது வரை அனைத்தும் அறிந்தவன் ஜீவன் ஒருவன் மட்டுமே! அறையைப் பூட்டிக் கொண்டுத் தம்பி செய்யும் வேலையைக் கூட அறிந்து வைத்திருப்பவன்!
தெளிவான அறிவின் விளைவால் கலர்,கலர் கனவுகளோடுத் திரியும் அவர்கள்.. தங்களது லட்சியத்திற்குத் தடையாக நிற்கும் இந்தத் திருமண நிகழ்வுக்கு நிச்சயம் ஒத்துக் கொள்ளப் போவதில்லை!
என்ன செய்ய?, எப்படி சமாளிக்கவெனப் புரியாமல் நெற்றியைச் சொரிந்த ஜீவன்.. எவரிடமும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல்.. அறையை விட்டு வெளியேற எத்தனித்த போது.. வாசலில் நின்றிருந்த ரகுவரனைக் கண்டு திடுக்கிட்டான்.
கவலையும்,பயமும் நிறைந்திருந்த முகத்தோடு அதிர்வுடன் நின்றிருந்தவனைக் கண்டு… ஒரு நொடி நிதானித்தவன்..
“எல்லாத்தையும் கேட்டுட்டியா?” என்றான்.
ஆம் என்பது போல் தலையசைத்தவன் நிமிர்ந்து..
“ச..சர்ஜரின்னு சொன்னீங்களே?, என்ன சர்ஜரி?”– எனப் பதட்டத்துடன் கேட்க.. பயப்பட ஒன்றுமில்லையென்றவன்.. அறுவை சிகிச்சையைப் பற்றிச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள.. ஆசுவாசப் பெருமூச்சை விட்டு.. முகத்தைச் சாதாரணமாக்கியவனைக் கண்டு..
“நாங்க பேசுனதை நீ முழுசா கேட்டியா இல்லியா?” என்றான்.
அண்ணனுக்குப் பதில் கூறாமல் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே நுழைந்தான் ரகுவரன்.
திடீரென உள் நுழைந்தவனைக் கண்டு அனைவரும் அவனை நிமிர்ந்து பார்க்க..
“மாமாவுக்கு ஒன்னுமே இல்லன்னு சொன்னீங்களேய்யா?” என்றான் சுவாமிநாதனிடம்.
அவனது முகத்திலிருந்து அவன் தங்களைக் கண்டு கொண்டான் என்பது புரிய.. சங்கடமாய் அவன் முகம் பார்த்த சுவாமி..
“உன்ற மாமன் தான் கண்ணு, உங்களைப் பயப்படுத்த வேண்டாம்னுட்டான்” என்றார்.
“ஏன் உங்களுக்குப் பயமில்லீங்களா?, அப்பிடியே உங்க மவன் முகத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்க! இருளடைஞ்சு போன மாதிரி பீதியோட இருக்கிறதை”
அவனது நக்கல் பேச்சில் கணபதிக்குப் புன்னகை வர..
“அய்யனை இப்பிடித் தான் பேசுவியா கண்ணு?” என்று கூறியதும்.. அவர் புறம் திரும்பி முறைத்தவன்..
“வலி அனுபவிக்கிறது நீங்க! சர்ஜரின்னு ஹாஸ்பிடல் பெட்ல படுக்கப் போறது நீங்க! உங்களை விடவா எங்களுக்குப் பயம் இருந்திடப் போகுது?, உங்களுக்குத் தைரியம் சொல்லக் கூட எங்களுக்கு வாய்ப்பு தர மாட்டீங்களா? தப்புங்க மாமா! எங்களுக்குத் தெரியக் கூடாதுன்ற உங்க எண்ணமே ரொம்பத் தப்பு” என்றான்.
“தப்பு தாங்கண்ணு” – மருமகனிடம் மறு பேச்சு பேசாமல் தப்பென்று ஒப்புக் கொண்டவரைக் கண்டு சிரிப்பு வர.. அவர் கையைப் பற்றியவன்..
“தேவையில்லாத சிந்தனையையெல்லாம் விட்டுப் போட்டு சர்ஜரிக்கு ஒத்துக்கங் மாமா!” என்றான்.
“ஒத்துக்கிறேன் கண்ணு! அதுக்கு முன்னால, நீ என்ற ஆசையை நிறைவேத்தி வைக்கோனும்”
“…………” – பதிலின்றி அவர் முகம் பார்த்தவனிடம்..
“மோகனாவை நீ கட்டிக்கோனும்”
-என அவர் வெளிப்படையாகக் கூறியதும்.. எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல்.. இட,வலமாய்த் தடுமாறிப் பயணித்தக் கருமணிகளை ஓரிடத்தில் நிலைக்கச் செய்து.. எதிர் சுவற்றை வெறித்தவன்.. அனைவரும் தன் முகம் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து.. எச்சில் விழுங்கி.. மாமனை நோக்கிப் புன்னகைத்தவன்..
“உங்க விருப்பமுங் மாமா! ஆனா.. அதுக்கு முன்னால நீங்க ஆபரேஷனுக்கு ஒத்துக்கோனுமுங்க” என்றான்.
“அவன் தான் கல்யாணத்தை முடிச்சுப் போட்டு ஆபரேஷனை வைச்சுக்குவோம்ன்னு சொல்லிப் போட்டானே! திரும்பத் திரும்ப ஏன் டா அண்ணனும்,தம்பியும் ஒரே பேச்சைப் பேசுறீங்க?” என்று பாய்ந்தத் துளசிநாதனுக்கு மகன்கள் இருவரும் கணபதியின் மனது புரியாமல் பேசுவது எரிச்சலைக் கொடுத்தது.
பதிலின்றி அமைதியாய் அமர்ந்திருந்தவனிடம்..
“கல்யாணம் முடியட்டும் கண்ணு! அடுத்த நிமிஷமே கூட நான் ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிக்கிறேன்! சரி தான?” என்று கூற…
அத்தனை நாளிருந்த வாட்டம் மறைந்து.. முகம் மலர பளிச்செனப் பேசுபவரையே பார்த்துக் கொண்டிருந்த ரகு.. எதுவும் கூறாமல்.. மெல்லப் புன்னகைக்க முயன்றான்.
அதன் பிறகு மூவரும் தங்களது போக்கில் எந்த மண்டபம் என்பதிலிருந்துத் தொடங்கி, காலைச் சாப்பாட்டில் பழக்கேசரி சேர்ப்பது வரை அனைத்தையும் பேசத் துவங்க… தம்பியின் முகம் கண்டு ஒரு பெருமூச்சை வெளியிட்டு… விறுவிறுவெனச் சென்று விட்டான் ஜீவன்.
அனைவரது கருத்தையும் கவராமல் மெல்ல வெளியே எழுந்து வந்து.. வாசலருகே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்ற ரகுவரனுக்கு.. தலை சுற்றாத நிலை!
தங்களது விருப்பத்தை அறியக் கூட முயற்சிக்காமல், ஏன், தங்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்கிற எண்ணம் கூட இல்லாது, நம்பிக்கையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களது பேச்சு வார்த்தையை நினைத்து ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.
டாக்டரை அழைத்த சுவாமிநாதனது டெலிஃபோன் பேச்சில் எழுந்து வந்தவன் தான்! இன்னும் தூக்கம் கலையவில்லை! பல் கூடத் தேய்க்கவில்லை!
கலைந்ததிருந்தத் தலைமுடியோடு மனதும் நிலையின்றிக் கலைந்து கிடக்க.. யோசிக்கக் கூட முடியாமல் திணறி.. கழுத்தைத் தேய்த்துக் கொண்டு நின்றான்.
ஏதுமறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை, திடீரென விடிகாலையில் அடித்து எழுப்பிக் குளிப்பாட்டிப் பெற்றோர் பஸ்ஸில் அழைத்துச் செல்கையில்.. அந்தக் குழந்தையின் முகம் போகும் போக்கைக் கவனித்திருக்கிறீர்களா?
ஏன் எழுப்பினார்களெனத் தெரியாது!, ஏன் பஸ்ஸில் அழைத்துச் செல்கிறாளென்பதும் புரியாது! ஆனால்.. பாதித் தூக்கத்தில் பச்சைத் தண்ணீரை முகத்தில் வாங்கிக் கொண்டு, உடல் நடுங்கப் பஸ்ஸில் அமர்ந்திருக்கும்.
தூங்கிட்டிருக்கிறவனை அப்டியே பஸ்ல அள்ளிப் போட்டுக்கிட்டுப் போறதை விட்டுப்புட்டு, என்னத்துக்கு டா எழுப்பி குளிப்பாட்டுறீங்க! -ரீதியில் தான் அதன் மனநிலையிருக்கும்!
அதே நிலை தான் ரகுவரனுக்கும்!
இதுவரை நிம்மதியான துயிலில் இருந்தவனின் முகத்தில் இப்போது தான் பச்சைத்தண்ணீரைத் தெளித்து அடித்து எழுப்பியிருக்கிறார்கள்! இனி உடல் நடுங்கப் பயணம் மேற்கொள்கையில்.. எப்படித் தாங்கப் போகிறானோ தெரியவில்லை!
கனவு எதுவும் காண்கிறேனா?, எனக்குப் போய் எப்படிக் கல்யாணம் நடக்கும்?, அதுவும்.. மோகனாவோட?
குழம்பியபடியே நின்றிருந்தவன், இடது கையைத் தூக்கி.. மணிக்கட்டின் அருகிலிருந்த சதையைக் கிள்ளி நடப்பை சோதித்துப் பார்த்தான்.
வலிப்பதைப் போலிருக்கவும்.. பரபரவெனத் தலையைத் தேய்த்துக் கொண்டவன்…
“இங்க என்றா பண்ற?” – என்ற குரலில் சட்டெனத் திரும்பி நோக்கினான்.
கைப்பிடியைப் பற்றியபடி மாடியேறி வந்து கொண்டிருந்த மோகனாவைக் கண்டவனுக்கு.. மூச்சு நின்று விட.. பல்லைக் கடித்து.. எச்சில் விழுங்கியவன்.. பதில் கூறாமல்.. உள்ளங்கையை இறுக்கினான்.
“மாமா இங்க தான் இருக்குறாரா? மில்லுக்குக் கிளம்பல?”
தொடர் கேள்வியால் அவனைத் துளைத்தெடுத்தவள்.. கடைசியில் முகம் மாற…
“அப்பாவுக்கு என்ன?” எனக் கேட்டபடி அவசர,அவசரமாய்ப் படியேறி வர.. அவளை விட அவசரமாய்.. தடுத்து நிறுத்தினான் ரகு.
“மாமாவுக்கு என்ன? ஒ..ஒன்னுமில்லையே! சாப்பாடு எடுத்துட்டு வந்தியா? நீ” எனக் கேட்டவனின் குரல் சீராக ஒலிக்க.. சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.
“எடுத்துட்டு வந்தாச்சு! உனக்காகப் பூர்ணி போட்ட ஸ்பெஷல் இஞ்சி டீயும் சேர்ந்து வந்திருக்கு! போய்க் குடி” – என்றவள் உள்ளே செல்லப் பார்க்க..
“எ..எ..எங்க போறவ?, சாப்பாட்டை வைச்சாச்சல்ல?, உன் வேலை முடிஞ்சது! ஃபேக்டரிக்குக் கிளம்பு! போ” – என்று தடுத்தபடி அவள் முன்னே நின்றவனிடம்..
“அப்பா கிட்ட சொல்லிட்டுப் போ வேண்டாமா?, நீ என்னத்துக்கு என்ற வழியை மறிச்சிட்டு நிற்குறவன்?” என்று எகிறினாள்.
“மாமா கிட்டல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம்! நீ கீழ போ..”
“எப்புறம் சொல்றது? உன்ற நடவடிக்கையே சரியில்லையே! நான் என்ன நடக்குதுன்னு உள்ள போய்ப் பார்த்தே தெரிஞ்சுக்கிறேன்”
அவனைத் தாண்டிக் கொண்டு செல்லப் பார்த்தவளை “நில்லு! நில்லு!” என வழி மறித்து நின்றவன்.. அவசரமாய் நெற்றியைத் தேய்த்து..
“மாமா, உன்ற மாமாவோடயும்,ஐயாவோடயும் திருப்பூர் புது கம்பெனி சம்மந்தமா.. முக்கியமான விஷயம் பேசிட்டிருக்காரு! அதனால.. நீ வந்துட்டுப் போனதைப் பத்தி நானே அப்புறமா அவர் கிட்ட சொல்லிக்கிறேன். நீ கிளம்பு இப்போ” – என்றான்.
“கம்பெனி சம்மந்தமா தான பேசுறாங்க?, அப்போ கண்டிப்பா நான் கேட்டே ஆகோனும்” – அவனை விலக்க எண்ணி… அவன் வலது கை முட்டியை அவள் பற்ற.. தன் கையின் மீது பதிந்திருந்த அவள் விரல்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டவன்..
“போகாதன்றேனல்ல?” என்று கூறி..
கெஞ்சலுடன்.. “நீ இப்போதைக்கு அவங்க பேசுறதைக் கேட்காம இருக்குறது தான் டா மோகன் நல்லது” என.. நிமிர்ந்துத் தன்னை… சுருக்கியப் புருவங்களுடன் நோக்கியவளின் முகத்தில்.. ஒரு நொடி தடுமாறி… மறு நொடி அழுத்தமாய்ப் பதிந்து நின்றன அவனது கருமணிகள்.
அழுந்த வாரிக் குதிரை வாலில் அவள் அடக்கியிருந்தக் கூந்தலில் ஒன்று கூட வெளி வராமலிருக்க.. அஞ்சனமில்லாமலேயே அகலமாய்த் தெரிந்த அவள் விழிகளை நோக்கியவனின் பார்வை.. கொழுத்த கன்னங்களில் அவசரமாய்ப் படர்ந்து.. தடித்த உதடுகளைத் தடுமாறிக் கடந்து.. கடைசியில் அவனையே புரியாது பார்த்துக் கொண்டிருந்த அவளது விழிகளில் மீண்டும் வந்து நின்றது.
கலைந்தத் தலைமுடியை அவன் மேலும் கலைத்திருந்ததில் அது கிட்டத்தட்டப் பரட்டையாயிருக்க.. புதராய் மண்டிக் கிடந்தத் தாடி,மீசையுடன் அவளையே நோக்கியவனிடம்..
“முகம் கழுவலையா?” என்றாள் அவள்.
அவள் கேள்வி புரியாது விழியைப் பிரித்து முழித்தவனிடம்..
“எண்ணெய் வழியுது” என முகத்தை சுழித்தவள்.. அவனைத் தள்ளி விட்டு நகர.. சுவரில் இடித்துக் கொண்டு நின்றவனுக்குக் கிறுகிறுத்துப் போன நிலை.
