அத்தியாயம் - 6
‘இனிக் கண்டிப்பா சல்வார் போட்டுக்கிட்டுத் தான் ஃபேக்டரிக்குப் போகோனும்’
காருக்குள் அமர்ந்திருந்தபடித் தான் அணிந்திருந்த கருப்பு நிற நீள ஸ்கர்ட்டையும், ஆலிவ் க்ரீன் சட்டையையும் குனிந்து நோக்கிய மோகனாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தத் தீர்மானம் அது!
அன்று காலை ஜீவன் கொடுத்திருந்த வேலை குறித்து அவர்களது மில்லில் வேலை செய்யும் கணக்கரிடம் அவள் சந்தேகம் கேட்கச் சென்ற போது.. அவளை மேலும்,கீழுமாய் ஒரு நொடி நோக்கிய கணக்கு, அவள் அணிந்திருந்த உடையைக் கண்டு.. அவளைப் பொழுது போக்கிற்காக மில்லுக்கு வந்து செல்பவளைப் போல எண்ணிக் கொண்டு.. பெரிதாக ஆர்வம் காட்டாமல், முதலாளியின் மகள் கேட்டு விட்டாலே என்ற காரணத்தினால், மேம்போக்காக அவள் கேட்டதைச் சொல்லிக் கொடுத்து நகர்ந்து விட்டிருந்தார்.
அவர் பாவனையில் எரிச்சலுற்றிருந்ததன் விளைவால் அவள் எடுத்திருந்த அவசரத் தீர்மானம் இது.
‘இடத்துக்குத் தக்க அணியக் கத்துக்கோனும்! முதலாளி சீட்ல உட்கார ஆசைப்பட்டா மட்டும் போதுமா, அதுக்கான கண்ணியமும்,கம்பீரமும் தோற்றத்துல இருக்க வேண்டாமா!’ – என்றெண்ணிக் கொண்டவள் காட்டன் சல்வார்கள் மட்டுமே நிறைந்திருக்கும் பூர்ணியின் கப்போர்டை அன்றே சூறையாட முடிவு செய்தாள்.
கார் வீட்டில் நின்றதும்.. பசி பிராண்டிய வயிற்றை நீவியபடி அவள் கதவைத் திறந்துக் கீழிறங்குகையில்.. அவளுக்காகவேக் காத்திருந்தவள் போன்று.. வாசலில் நின்றிருந்தப் பூர்ணி,
“மோகனாஆஆஆ” எனக் கூவியபடி முழு சிரிப்புடன் அவளருகே ஓடி வந்து.. கையில் வைத்திருந்த ஜாமூனை அவள் வாயில் திணித்தாள்.
அவள் திணித்ததில் வழிந்த ஜீராவை அவசரமாய் விரலில் தேக்கியவள்.. அதை நக்கியபடியேத் தமக்கையின் புறம் திரும்பி..
“ரொம்ப சந்தோஷமா இருக்கியாட்ருக்கு?? ஸ்வீட்டெல்லாம் வாசலுக்கு வருது?” என்று வினவியபடியே முன்னே நடக்க.. தங்கையைத் தொடர்ந்துத் தானும் பின்னே நடந்த பூர்ணி..
“ஆமா! பின்ன! நானும்,என்ற தங்கச்சியும் ஒரே வீட்ல வாக்கப்பட்டு, காலம் பூரா ஒட்டுக்கா வாழப் போறோம்ன்றதை நினைச்சா சந்தோஷம் வராதா?” எனக் கேட்டு..
தொடர்ந்து “மாமா காலைல என்ற கிட்ட விஷயத்தைச் சொன்னதும் முடிவு பண்ணிட்டேன்! இந்த சந்தோசமான சேதியை உன்ற கிட்ட சொல்ற முதல் ஆள் நானாத் தான் இருக்கோனும்ன்னு!” எனத் தன் போக்கில் பேசிக் கொண்டே முன்னே சென்றாள், தான் கூறிய முதல் வாக்கியத்தைக் கேட்டதுமே, நடப்பதை நிறுத்தித் தங்கை தேங்கி விட்டதை அறியாமல்!
ஒரு நொடி தான்! மென்று கொண்டிருந்த ஜாமூனை நிறுத்தித் தன் அதிர்ச்சியை அவள் வெளிப்படுத்தியது.
மறு நொடி இரு மடங்கு வேகத்துடன் அவள் மென்ற விதத்தில்.. மொத்தமாக உருக்குலைந்து.. சிதைந்து போன ஜாமூன்.. மிச்ச சொச்ச உயிரையும் பறி கொடுத்து.. அவள் தொண்டையில் சரிந்து கொண்டிருந்தது.
அவளிடமிருந்து பதில் வராது போனதும் திரும்பி அவளது முகம் பார்த்த பூர்ணி.. புருவம் சுருக்கி..
“என்னடி?” என்றாள்.
நிதானமாக மீதி ஜாமூனையும் மென்று முழுங்கியவள் “இல்ல.. ஒட்டுக்கான்னா எப்பிடின்றதைப் பத்தி யோசிச்சிட்டிருந்தேன்” எனக் கூறி..
“ரெண்டு பேரும் ஜீவன் மாமாவைக் கட்டிக்கிட்டு, ஒரே வீட்லக் குடித்தனம் பண்ணப் போறோமா?, உனக்கொன்னும் இதுல ஆட்சேபனையில்லையே!” என்றபடி ஸ்கர்ட் பாக்கெட்டுக்குள் கைகளைத் திணித்துக் கொள்ள..
“என்ன பேச்சு பேசுறவ??” என்றபடித் தங்,தங்கென நடந்து வந்துத் தங்கையை முறைத்து நின்ற பூர்ணி..
“அப்பிடியே வாய்லயே ஒன்னு போட்ருவேன் சொல்லிப் போட்டேன்! ஏன், இந்த வீட்ல என்ற மாமன் ஒருத்தன் தான் ஆம்பளையா?” என்றாள் நொடித்தபடி.
“வேற யாரை ஆம்பளைன்ற?” – பொறுமையாகக் கேட்டவளிடம்..
“மோகனா…” – என்று பூர்ணி கத்த...
“…………” – பதிலற்று மெல்லச் சிரித்தபடி தலையை அசைத்தவளின் முகம், இதழ் காட்டிய சிரிப்பிற்கு நேர் எதிராக உக்கிரமாய் மாறியிருந்தது.
யோசனையுடன் நின்றிருந்தவளின் கையைப் பற்றிய பூர்ணியிடம்..
“பசிக்குது. என்ன சமைச்சு வைச்சிருக்க?” எனக் கேட்டாள் மோகனா.
“உனக்குப் பிடிச்ச எலுமிச்சை சேவை”
“நிலக்கடலைச் சட்னி அரைச்சிருக்கியா?”
“அரைச்சிருக்கேன்! இன்னிக்கு எல்லாமே உனக்குப் பிடிச்சது தான்” – என்றவளிடம் பதில் சொல்லாமல் மோகனா முன்னே செல்ல..
“நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?, நீ என்றி பசை போட்டதாட்டம் வாயை இறுக்க மூடி வைச்சிருக்கிறவ?” – எனக் கேட்டபடிப் பின் தொடர்ந்தாள் பூர்ணி.
தட்டிலிருந்ததைக் காலி செய்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்த பூர்ணி, தனக்கிருக்கும் மகிழ்ச்சியில் ஒரு சதவீதத்தைக் கூட அவள் முகம் பிரதபலிக்காததை உணர்ந்துக் குழப்பத்துடன்.. நின்றிருந்தாள்.
அவள் உண்டு முடிக்கையில்.. வீட்டிற்குள் பிரவேசித்தத் துளசிநாதன், அவளைக் கண்டதும் பளீர் புன்னகையை உதிர்த்து..
“வந்துட்டியா கண்ணு?” எனக் கேட்டுப் பின் “பூர்ணி, டீ கொடு சாமி” என்றபடியே விறுவிறுவெனத் தன்னறைக்குள் செல்ல..
அத்தனை நாளாயிருந்த சோர்வு மறைந்து.. மாமனின் நடையில் உற்சாகம் தொற்றியிருப்பதைக் கண்டபடி அசைவற்று அமர்ந்திருந்த மோகனா.. பின் எழுந்து பூர்ணியிடமிருந்து டீயை வாங்கிக் கொண்டு அவரது அறைக்குச் சென்றாள்.
“மாமா டீ…”
“அங்க வை சாமி, இதோ வர்றேன்” – என்றவர் “தேடும் போது தான் எதுவும் கைக்கு சிக்காது” என்று புலம்பியபடியே இரும்பு பெட்டிக்குள் தலையை விட்டிருக்க… கைகளைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றபடி அவரையே பார்த்திருந்தாள் மோகனா.
“ரொம்ப பிஸியா இருக்கீங்களாட்ருக்கு மாமா! மில்லு பக்கம் கூட வரல?”
“ஆமாங்கண்ணு! உன்றப்பன் ரெண்டு கல்யாணத்தையும் ஒட்டுக்கா வைக்கோனும்ன்னு சொன்னதுல இருந்து எனக்குக் கையும்,காலும் ஒரு நிலையில இல்ல”
“ரெண்டு கல்யாணம்ன்னு எதைச் சொல்றீங் மாமா?”
அவள் கேள்வியில் நிமிர்ந்து அவளது முகம் பார்த்தத் துளசி, கையைக் கட்டிக் கொண்டு அவள் நின்றிருந்தத் தோரணையைக் கண்டுப் புருவம் சுருக்கினார்.
நின்றிருந்த இடத்திலிருந்து நகர்ந்து முன்னே வந்தவள்.. படுக்கையின் மீது அவர் பரப்பி வைத்திருந்தக் காகிதங்களை எடுத்து அடுக்கியபடி…
“என்றக்காளுக்கும்,என்ற மாமனுக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்றது எனக்குத் தெரிஞ்ச சேதி தான்! ஆனா.. அந்த இன்னொரு கல்யாணம் யாருக்குங் மாமா?” என்றவள் ஒரு நொடி நிறுத்தி.. “நம்ம குருவம்மாக்காவுக்கும், வேலண்ணன்னுக்குமா?,” – எனக் கேட்க…
மருமகளின் முகத்தை ஒரு நொடிக் கூர்ந்து நோக்கிய துளசி ஒரு பெருமூச்சுடன் கையிலிருந்ததைப் பெட்டிக்குள் எறிந்து விட்டு அவளருகே வந்து நின்றார்.
“பூர்ணி உன்ற கிட்ட எதுவும் சொல்லலியா கண்ணு?”
“என்ன சொல்லோனுங் மாமா?”
“மோகனா..” – எனக் குரல் உயர்த்தியவரிடம்..
“கல்யாணம் யாருக்குன்னு நான் கேட்டக் கேள்விக்கு இன்னும் பதில் வரலீங் மாமா?” – எனப் பல்லைக் கடித்தபடி அவள் கூற..
“ஏன் கண்ணு?, உனக்கு இதுல சம்மதமில்லையா?” – என்றவரின் குரலில் உற்சாகம் மொத்தமாக வடிந்திருந்தது.
“என்ற சம்மதம் இருந்தாகுற அளவுக்கு, அப்பிடி யாருக்குங் மாமா இந்த வீட்ல கல்யாணம்?”
“இது விளையாடுற நேரமில்ல கண்ணு”
“அதையேத் தான் நானும் சொல்றேனுங் மாமா! என்ற வாழ்க்கை விளையாட்டு இல்லீங்க”
அழுத்தமாய்க் கூறியவளைக் கேட்டு உதட்டை ஈரப்படுத்தி சொட்டையைத் தடவிக் கொண்டத் துளசிநாதனுக்கு பொறுமை சிறிது,சிறிதாகக் குறைய.. அதுவரையிருந்த மகிழ்ச்சி மறைந்து முகம் மாற நின்றவரிடம்..
“அப்பாவுக்கு என்னங் மாமா?” எனக் கேட்டு இவர்களது முடிவின் முகப்பிற்கு வந்து நின்றாள் மோகனா.
அவளிடமிருந்து அந்தக் கேள்வியை எதிர்பாராது திடுக்கிட்டு அவள் முகம் நோக்கியவர்... பின்..
“உங்கப்பனுக்கென்ன? நல்லாத் தான் இருக்கான்! மகளுக்குக் கல்யாணம்ங்குற கூடுதல் சந்தோஷத்தோட” – என்றார், நீ அதைக் கெடுக்க நினைக்கிறாய் என்கிற குற்றச்சாட்டைக் கண்களில் தேக்கியபடி.
“நல்லாத் தான் இருக்காருன்னா.. இந்த ஏற்பாட்டுக்கு என்ன அவசியம் வந்ததுங்க மாமா?, அதுவும் அவசரமா பூர்ணி கல்யாணத்தோட சேர்ந்து நடந்தாகோனும்ன்னு?”
தீர்க்கமாய்த் தன் கண்ணைப் பார்த்துக் கேள்வி கேட்பவளிடம் என்ன பதில் கூறுவதெனப் புரியாமல் திணறிய துளசி..
“அவசியத்துக்கும்,அவசரத்துக்கும் என்ற கிட்ட விளக்கம் கிடையாது கண்ணு! இது என்ற ஆசை! நண்பனா மட்டும் இருக்கிற உன்றப்பனை,என்ற சொந்தக்காரனா ஆக்கிக்கோனும்ன்றது என்ற நீண்ட நாள் கனவு! உன்றப்பனும் விருப்பப்பட்டான்! ஆசையைப் பகிர்ந்துக்கிட்டப்புறம், ஏன் தள்ளிப் போடோனும்! ரெண்டு கல்யாணத்தையும் ஒட்டுக்கா நடத்துனா என்னன்னு எங்களுக்குத் தோணுச்சு! ஏற்பாட்டைத் தொடங்கிட்டோம். அவ்ளோ தான்”
“இது தான் காரணமுங்களா?”
“ஆமா”
“இல்ல, இதெல்லாத்தையும் தாண்டி ஏதோ இருக்கு! அதை என்ற கிட்டயிருந்து மறைக்கப் பார்க்குறீங்க நீங்க” – என்றவளை..
“உன்ற கற்பனைக்கெல்லாம் என்றனால பதில் சொல்ல முடியாது” – எனக் கோபமாய்க் கூறியபடி விலக்கி நிறுத்தப் பார்க்க..
“எனக்கு இதுல விருப்பமில்லீங் மாமா” – எனச் சொல்லி அவர் தலையில் மண்ணை அள்ளிப் போட்டாள் அவள்.
“மோகனா…”
“சத்தம் போட வேண்டியது நானுங் மாமா! நீங்க என்னத்துக்குக் குரலை உசத்துறீங்க?”
“எதிர்த்தா பேசுற கழுத?”
“எதிர்த்துப் பேசல! என்ற விருப்பத்தைச் சொல்றேன்”
“உன்ற விருப்பத்துக்காக இங்க யாரும் காத்திருக்கல”
“உங்க முடிவை ஏத்துக்கிற நிலையில நானும் இல்ல”
“வாயை மூடு முதல்ல. பேசிப் பேசி என்ற ஆத்திரத்தை அதிகப்படுத்தாத” – ஆத்திரத்துடன் கையை ஓங்கியவரிடம்..
“என்ன செய்வீங்க? ம்? அடிப்பீங்களா? எவ்ளோ வேணாலும் அடிங்க! வாங்கிக்கிறேன்!, ஆனா இந்த ஏற்பாட்டுக்கு என்றனால சம்மதிக்க முடியாது” – என்று அவள் கூற..
கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன்.. மூச்சு வாங்க சிவந்த கண்களுடன் அவளை நோக்கியவரைக் கண்டு.. நெற்றியைத் தேய்த்தவள்.. கண் மூடித் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு..
“நான் சொல்றதைக் கேளுங் மாமா” என்றவள்.. பொறுமையுடன்..
“என்ற வாழ்க்கைல கல்யாணம்ன்றதைப் பத்தியெல்லாம் நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கலீங் மாமா! படிப்பு,வேலைன்னு என்ற கனவுக்கும்,லட்சியத்துக்கும் நான் உயிர் கொடுக்கத் தொடங்குன இந்த நேரத்துல.. அத்தனையையும் மொத்தமா குழில தள்ளி சமாதி கட்டச் சொன்னா எப்பிடிங் மாமா?” என்றாள்.
அவள் பேச்சில் கோபம் குறைந்து.. அவள் கையைப் பற்றிய துளசி..
“இந்தக் கல்யாணத்தால உன்ற லட்சியத்துக்கு எந்தப் பங்கமும் வராது கண்ணு! நீ நினைக்குறதைப் படி! ஃபேக்டரிக்குப் போ, வேலை கத்துக்க! இனி நீ தான் அங்க முதலாளி! சரி தான?” எனக் கூற..
“அப்பிடி இந்தக் கல்யாணம் நடந்தாகோனும்ன்னு என்ன கட்டாயமுங் மாமா?, என்ற கிட்ட உண்மையான காரணத்தைச் சொல்லுங்களேன்” – என்றாள் அவள் சலிப்புடன்.
“நான் ஆசைப்பட்டேன்! உன்றப்பன் ஆசைப்பட்டான்! உன்றப்புச்சி சம்மதிச்சாரு! இதுக்கு மேல எந்தக் காரணத்தை கண்ணு எதிர்பார்க்குற நீ? ”
“நீங்க ஆசைப்பட்டா மட்டும் போதுங்ளா மாமா? கல்யாணம் என்றப்புச்சிக்கும்,என்றப்பனுக்குமா நடக்குது?, என்ற விருப்பத்தைக் கேட்கோனும்ன்னு உங்களுக்குத் தோணவே இல்லீங்களா?”
“மறுக்க உன்ற கிட்ட என்ன காரணம் இருந்துடப் போகுது?”
“ஏன் இல்ல?? ஓராயிரம் காரணம் இருக்கு என்ற கிட்ட”
“ஆனா.. அதையெல்லாம் பொருட்படுத்துற நிலையில நாங்க இல்ல கண்ணு”
“இது அராஜகமுங் மாமா! பொண்ணு தான இவ! எதிர்த்து என்ன செஞ்சுடப் போறா-ன்னு இளக்காரமா நினைக்காதீங்க! நான் நினைச்சா.. இப்பவே போய் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிற்க முடியும்! என்ற விருப்பத்தை மீறி எனக்குக் கல்யாணம் செய்யப் பார்க்குறாங்கன்னு ஒட்டு மொத்தக் குடும்பத்து மேலேயும் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியும்”
மிதமிஞ்சிய கோபத்தில் உதடு துடிக்கக் கூறியவளைக் கண்டவருக்கு சிரிப்பு வர..
“மிரட்டுறியா கண்ணு?” எனக் கேட்டார்.
“அப்டித்தான்னு வைச்சுக்கோங்க”
“போலீஸ் ஸ்டேசனெல்லாம் போகோனும்ன்னா உனக்கு முதல்ல கால் இருக்கோனும்ல்ல கண்ணு!”
“மாமா..”
“உன்ற காலை ஒடிச்சுப் போட்டு உன்னை முடமாக்கக் கூடத் தயங்க மாட்டேன்னு சொல்ல வர்றேன்! இதோ பாரு கண்ணு! உன்னை வளர்த்த பாவத்துக்கு, உன்ற கூட இத்தனை நேரமா உட்கார்ந்து பேசி.. உனக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணிட்டேன்! இதுக்கு மேல உன்ற சிறு பிள்ளைத்தனமான பிடிவாதத்துக்கு செவி சாய்க்க என்றனால முடியாது! ஏன்னா.. மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க நான் இப்போ போயாகோனும்”
-முடிவாகக் கூறியபடி எழுந்தவரைக் கண்டு அசையாமல் அவள் அமர்ந்திருக்க.. அவளைக் கண்டு கொள்ளாமல் வெளியேற நினைத்தவர் பின் நின்று அவள் முகம் பார்த்தார்.
அவர் தன் முகம் கண்டதும், அவரை நோக்கியவள்..
“என்றனால ரகுவை அப்பிடியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியலைங் மாமா” எனக் கம்மிய குரலில் கூற..
வெகுவாக முறைத்தவர்.. “நினைச்சுக் கூடப் பார்க்க முடியாமத் தான் அர்த்தஜாமத்துல மொட்டைமாடியில அவனோட அப்பிடி நின்னியாக்கும்?” – எனக் காய..
“இதுக்கான விளக்கத்தை உங்கக்கிட்ட ஏற்கனவே நான் கொடுத்துட்டதா ஞாபகம்” – எனப் பல்லைக் கடித்தாள் அவள்.
“சரி, ரகுவரன் வேண்டாம்! வேற எவனை உனக்கு மாப்பிள்ளையாக்கோனும்? சொல்லு. உன்றக்காளுக்கும், உனக்கும் ஒட்டுக்காக் கல்யாணம் பண்ணோனும்ன்றது எங்க முடிவு! எவனைக் கட்டோனும்ன்றதை நீ முடிவு பண்ணு”
“எனக்கு இப்ப கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டிருக்கேனுங் மாமா நான்”
“உனக்கு நான் சாய்ஸ் கொடுத்தது மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்துல மட்டும் தான் கண்ணு! கல்யாணம்ன்றது ஏற்கனவே முடிவு செஞ்ச விஷயம்”
“நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் நான் சாப்பிட்ற சாப்பாட்டுல இருந்து, உடுத்துற துணி, படிச்ச படிப்புன்னு அத்தனைக்கும் என்ற விருப்பத்துக்கேத்த மாதிரி நீங்க தலையாட்டுனதெல்லாம் இப்பிடி ஒரு விஷயத்துல செக் வைக்குறதுக்குத் தானுங்களா?, அப்போ இருந்தே உங்க எண்ணத்துக்கும்,விருப்பத்துக்கும் தலையாட்டுற பொம்மையா என்னை வளர்த்திருந்தா.. இன்னிக்கு எனக்கு இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காதுங்களே மாமா?”
“………….”
“இத்தனை நேரமும் உங்க கூட நான் தர்க்கம் பண்ண ஒரே காரணம் என்னைப் பெத்தவரை விட, என்னை வளர்த்த உங்க மேல நான் வைச்சிருந்தப் பாசம் தானுங்க காரணம்! என்னைப் புரிஞ்சு நீங்க எனக்காகப் பரிஞ்சு பேசுவீங்கன்னு நம்புனேனுங்க! ஆனா.. பாசத்துக்கெல்லாம் உங்க நெஞ்சுல இடமில்லன்னு தெரிஞ்சு போச்சுங்க?, என் இஷ்டம்,விருப்பம் எதுக்கும் நீங்க மதிப்பு கொடுக்க மாட்டீங்கன்னு புரிஞ்சுப் போச்சுங்க! நான் போறேனுங் மாமா! என்றப்பன் கிட்டப் போறேனுங்க! அவர் முகம் பார்த்துச் சொல்றேன்! இந்த ஏற்பாட்டுக்கு நான் இந்த ஜென்மத்துல சம்மதிக்க மாட்டேன்னு”
-ஆவேசமாகக் கூறியபடி வாசலைக் கடக்கப் பார்த்தவளிடம்..
“உன்றப்பன் கிட்ட எதையும் பேசி அவனை நோகடிக்காத! மோகனா.. நான் சொல்றதைக் கேளு கண்ணு! “ – என்றபடியே அவள் பின்னால் வந்தவரைக் கண்டு கொள்ளாமல் விறுவிறுவெனச் சென்று விட்டாள் கணபதியின் வீட்டை நோக்கி!
ஹால் சோபாவில்.. கையிலிருந்தக் கணக்கு நோட்டைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்த கணபதியின் முன்னே சென்று மூச்சு வாங்க நின்றாள் மோகனா.
கலைந்தத் தலையும், சிவந்த கண்களுமாய் வந்து நின்றவளை புருவம் சுருக்கி ஒரு நொடி நோக்கிய கணபதி.. அவள் முகத்திலிருந்தே அவள் மனதைக் கண்டறிந்து.. பின் முகம் இறுக..
“கல்யாணத்தை நிறுத்துறதைப் பத்தி எதுவும் பேச வந்திருந்தயின்னா.. நீ அப்பிடியே திரும்பிப் போகலாம்! ஏன்னா.. உன்ற பேச்சைக் காது கொடுத்துக் கேட்குற திட்டமெதுவும் எனக்கு இல்ல” என்றார்.
தனக்குப் பேச வாய்ப்பளிக்காமல்.. கத்தரித்து அனுப்பும் தந்தையின் செயலில் வெகுண்டெழுந்த மோகனா..
“எனக்கும் தான்! கல்யாணம்ன்ற பேர்ல நீங்க போட்டு வைச்சிருக்கிற திட்டத்துக்குத் தலையாட்டுற எண்ணம் சுத்தமா இல்ல” என்றவள்..
“சொல்லி வைச்சதாட்டம் அத்தனை பேரும் ஒரே மாதிரி பேசி என்ற வாயை அடைக்கப் பார்க்குறீங்களா?, உங்க அதட்டலும்,மிரட்டலும் என்ற கிட்ட பலிக்கும்ன்னா நினைக்குறீங்க?, உங்க விருப்பத்துக்கு நான் இதுக்கு முன்னால எந்த விஷயத்துல தலையாட்டிருக்கேன்னு இப்படி ஒரு முடிவை எடுத்து, நான் அதுக்கு ஒத்துக்கோனும்ன்னு வேற எதிர்பார்க்குறீங்க? மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுப்பாங்களாம்!, செலவு கணக்குப் பார்ப்பாங்களாம்! என்ன நினைச்சுட்டிருக்கீங்க உங்க மனசுல? நான் தூக்குல தொங்கியாச்சும் இந்தக் கல்யாணத்தை நிறுத்துவேன்றதை நினைவுல வைச்சுக்கிட்டு என்னன்னாலும் பண்ணுங்க”
“மோகனாஆஆ…………” எனக் கத்தியபடி எழுந்து நின்ற கணபதி ஆத்திரத்தில் கையோங்க.. கண்களை அழுந்த மூடி, பல்லைக் கடித்துக் கொண்டு.. அவரது அடிக்குக் கன்னதைக் காட்டி விட்டு மூச்சு வாங்க நின்றாள் மோகனா.
“என்ற முகத்துலயே முழிக்காத” – கோபத்தில் தொண்டை அடைக்கக் கரகரத்தக் குரலில் கூறியவரிடம்..
“நீங்களும் தானுங்ப்பா! நான் செத்தாக் கூட என்ற முகத்துல முழிச்சிடாதீங்க! பார்க்குற நேரமெல்லாம் கோபத்தைக் காட்டுனாலும், என்ற மேல நீங்க பாசம் வைச்சிருக்கீங்கன்னு நம்புனேனுங்கப்பா! ஆனா.. என்ற நம்பிக்கையை நீங்க பொய்யாக்கிட்டீங்க” என்றவளின் குரல்.. சீரற்ற மூச்சால்.. தடுமாறி ஒலிக்க..
“ஆமா! எனக்குப் பாசமில்ல! போ! முதல்ல இங்கயிருந்து போ..” என அவள் தோளைப் பற்றித் தள்ளியவர்..
“போய் உன்ற மாமன் கிட்டச் சண்டை போடு! கல்யாணத்தை நிறுத்து! அப்பிடியே உன்னை உடன் பிறந்தவளாட்டம் பாசமா வளர்த்த உன்றக்கா தலைல மண்ணை வாரிப் போடு! அவளுக்குக் கல்யாணம் கூடி வந்திருக்கிற இந்த நேரத்துல நீ இப்பிடி எங்களை நிம்மதியில்லாம பண்ணுறது தெரிஞ்சா.., இப்ப இருக்குற சூழ்நிலைல எனக்கு எதுக்குக் கல்யாணம்ன்னு அவ எல்லாத்தையும் நிறுத்தத் தான் பார்ப்பா! அவ வயசுப் பொண்ணுங்க எல்லாம் ரெண்டு குழந்தைகளைப் பெத்து குடும்பமாய்டுச்சுங்க! உங்களுக்காகப் பார்த்துக்கிட்டு இத்தனை நாள் காத்துக் கிடந்த ஆளுக்கு, நீ நல்லாத் திருப்பி செய்! போ” – எனக் கூற…
“அக்கா கல்யாணத்தை எதுக்கு இதோட முடிச்சுப் போடுறீங்க? அவ கல்யாணம் என்னைக்கோ முடிவு பண்ணுன ஒன்னு” – எனக் கத்தினாள் மோகனா.
“எங்க விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு அவ ஒத்துக்கல? உனக்கு மட்டும் ஏன் இந்த வீண் பிடிவாதம்?”
“அவளுக்கு மாமாவைப் பிடிச்சிருந்ததுங்ப்பா”
“உனக்கு ஏன் ரகுவைப் பிடிக்கல? என்ன குறை அவனுக்கு?
“குறையில்ல! ஆனா.. எனக்கும்,அவனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்குங்ப்பா”
“என்ன பெரிய வித்தியாசம்?”
“வேலை,தொழில்,சம்பாதிக்குறது,முன்னேறுறது, இது மாதிரி எண்ணமெல்லாம் அவன் மூளையோட எந்த மூலைலயும் கிடையாதுங்கப்பா! யாருக்கும் நிற்காம ஓடிட்டிருக்க இந்த உலகத்தோட வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பின்னால ஓடோனும்ன்னு நினைக்குற ஆளு நான்! ஆனா அவன்.. இந்த ரேஸ்ல கலந்துக்கக் கூட முயற்சிக்காத ஆளுங்ப்பா! முளைக்குற பூவையும், அடிக்குற காத்தையும், ஓடுற தண்ணியையும் ரசிச்சுக்கிட்டு நிதானமா வாழோனும்ன்னு நினைக்குற ஆளு அவன்! என்ற முயல் வேகத்துக்கும், அவனோட ஆமை வேகத்துக்கும் என்னைக்கும் ஒத்தே வராதுங்ப்பா”
“வேற?”
“…………..”
“எதிர் துருவங்கள் தான் ஒன்னையொன்னு அதிகமா ஈர்க்கும் டா கண்ணு” – பொறுமையாய் மகளுக்குப் புரிய வைக்க முயற்சித்தபடி கணபதி.
“நான் எகனாமிக்ஸ் ஸ்டூடண்ட்ங்ப்பா! சயின்ஸெல்லாம் என்ற கிட்ட வேலை செய்யாதுங்க! 23 வருஷம் அவன் கூட வளர்ந்திருக்கேன்! இதுவரை வராத ஈர்ப்பு, இனிமே வந்துரும்ங்களா?
“……….”
“என்ற பேச்சைக் கேளுங்ப்பா! தயவு செஞ்சு என்ற எண்ணத்துக்கு மதிப்பு கொடுங்க! பெண்பிள்ளைன்னாலே.. சேலை கட்டி சிங்காரிச்சு, கல்யாணத்துக்கு உட்கார வைச்சிடோனும்ன்னு என்ன கட்டாயம் இருக்கு?, என்னை அமெரிக்கா அனுப்புங்க! நான் படிக்கோனும்! படிச்சுட்டு வந்து.. நீங்க பெருமை பட்ற அளவுக்கு தொழிலை வளர்த்துட்டுக் காட்டுவேனுங்ப்பா!”
“ஆனா.. அதையெல்லாம் பார்க்க நான் உயிரோட இருக்கோனுமே கண்ணு?”
“ப்பாஆஆ..” அதிர்வாய் அவர் முகம் நோக்கியவளிடம்..
“இந்தக் கல்யாணம் நடக்காட்டி, நான் நடைபிணம் தாங்கண்ணு” என்றவர்.. மகளின் முகம் பார்க்க விளையாமல்.. தள்ளாடி நடந்தபடித் தன்னறைக்குள் செல்ல..
அதுவரையிருந்தத் தைரியமும்,துணிவும் மறைந்து.. கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்ய.. உதட்டை அழுந்தக் கடித்துக் விழி நீரை உள்ளே தள்ளியவள்.. வியர்த்து வழிந்து நடுங்கிய உடலோடு.. காற்றுக்குத் தவித்து.. ஏறி,இறங்கிய நெஞ்சுடன்.. விறுவிறுவென வாசலை நோக்கிச் சென்றாள்.
கன்னத்தில் ஓடிய கண்ணீரைத் துடைத்தபடி படி.. மூச்சு வாங்க வேகமாய் நடந்து வந்தவளைக் கண்டபடியே படியேறிய ரகுவரன்.. தன் மார்பில் வந்து மோதியவளின் கையைப் பற்றி நிறுத்தினான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்.. வெறுப்புடன் அவன் கையை உதறித் தடுமாற.. தாங்கிப் பிடிக்க வந்தவனை விலக்கித் தள்ளி.. சாலையில் இறங்கி நடந்து சென்று விட்டாள்.
கோபமாய் அவள் செல்வதைக் கண்டு செய்வதறியாது பிடரியைக் கோதியவன்.. பின் அவசரமாய் மாமனிடம் சென்றான்.
இரு கைகளையும் கட்டிலில் ஊன்றித் தரையில் பார்வையைப் பதித்து அமர்ந்திருந்தவரைக் கண்டு… “மாமா…” என்றழைத்தபடி அறை வாசலில் நின்றான்.
“மோகனா…..” – என்றவரிடம்..
“கோபமா போறா-ங் மாமா!” என்றான்.
“ம்ம்” – எனத் தலையாட்டியவர்..
“இப்ப நான் என்ன கண்ணு பண்ணட்டும்?” – எனக் கேட்டார்.
நிராசை நிறைந்திருந்த அவர் விழிகளை ஏறிட்டவன்.. என்ன பதில் கூறி அவரை சமாளிப்பதெனத் தெரியாமல்.. அமைதியாய் நின்றான்.
“இந்த கல்யாணம் நடந்தாகோனும் கண்ணு! அவ என்ன பிடிவாதம் பிடிச்சாலும் சரி”
“கல்யாணம் பண்ணி வைக்குறது தான் முடிவுன்னு நீங்க நினைக்குறீங்களா மாமா?”
“…………”
“அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கை இருக்குதுங்களே”
“நீ.. எனக்காக அவளைப் பொறுத்துப் போக மாட்டியா?” – உரிமையாய்க் கேட்டவரிடம்..
“நான் பொறுத்துப் போனா.. எல்லாம் சரியாய்டுமுங்களா?” – என்றான் அவன்.
“எனக்கு வேற வழி தெரியல கண்ணு! என்ற உடல் ரொம்ப நாளைக்கு என்ற மனசு சொல்ற பேச்சுக்கு ஒத்துழைக்கும்ன்னு தோணல”
“உங்களுக்கு இருக்கிறது வெறும் பயம்-ங்க மாமா! 52 வயசுல நீங்க இவ்ளோ கவலைப்படோனும்ன்னு எந்த அவசியமும் இல்லீங்க”
“இல்ல கண்ணு! என்ற மனசு ஒரு நிலையில இல்ல” என்றவர்.. வியர்த்த நெற்றியைத் துடைத்துக் கொள்ள.. பதறிப் போனவன்..
“மாமா.. மாமா இங்க பாருங்க! உங்க பி.பி கன்ட்ரோல்ல இருக்கோனும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கிறாருங்! நீங்க அநாவசியமா எதைப் பத்தியும் யோசிக்காதீங் மாமா! தயவு செஞ்சு டென்ஷனைக் குறைங்க! இப்ப என்னங் மாமா? இந்தக் கல்யாணம் நடந்தாகோனும் அவ்ளோ தான? நடக்குமுங் மாமா! கண்டிப்பா! கவலையை விடுங்க” எனக் கூறி அவரைச் சமாதானப்படுத்த..
அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டுக் கட்டிலில் சாய்ந்தவர்.. பெருமூச்சுடன் கண் மூடிக் கொள்ள.. பதற்றம் குறையாமல் அவரையே பார்த்திருந்தான் ரகுவரன்.
அதன் பிறகு பூர்ணி கொடுத்தனுப்பிய உணவை உண்ண வைத்து, மாத்திரைகளைக் கொடுத்து அவர் உறங்கியதும்… சுவாமிநாதனைக் காவலுக்கு வைத்து விட்டு.. விறுவிறுவெனத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.
மூச்சு வாங்க வீடு வந்த சேர்ந்த மோகனா.. கோபமும்,ஆத்திரமுமாய் இறுகிப் போய் சோபாவில் அமர்ந்திருந்த துளசிநாதனைக் கண்டு கொள்ளாமல் நேராகத் தன்னறைக்குச் சென்றாள்.
இன்ஹேலரின் உதவியுடன் மூச்சைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தவளைக் கவலையுடன் நோக்கியபடி அவளருகே நின்றாள் பூர்ணி.
“ஏன் டி இப்பிடி பண்ற?, என்ன பிரச்சனை உனக்கு?”
தமக்கையின் கேள்வியில் கண்களை அழுந்த மூடிக் கொண்டவளைக் கண்டபடி நின்றவள்.. “பூர்ணி..” என்ற ஜீவனின் குரலில் வெளியே ஓடிச் சென்றாள்.
மோகனாவின் ரியாக்ஷனை எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ.. மில்லிலிருந்து வீடு திரும்பிய ஜீவன், வீட்டுச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு.. தந்தையைச் சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க அனுப்பினான்.
அவன் முகம் பார்த்து நின்ற பூர்ணியிடம்.. “போய் அவளைச் சாப்பிட வை” என்றவன் வேறெதுவும் சொல்லாமல் தன்னறைக்குச் சென்று விட்டான்.
காலையிலிருந்த மனநிலை மாறி.. ஆளுக்கொரு மூலையில் கிடப்பதைக் கண்டு கவலை கொண்ட பூர்ணி, யோசனையில் ஆழ்ந்தபடி உறங்கிப் போக.. அனைவரும் உறங்கியதும்.. விழிப்பு தட்ட எழுந்தமர்ந்த மோகனா.. உறக்கம் வராமல்.. மாடியேறினாள்.
மோகனாவைக் காண வேண்டி வீட்டிற்குள் நுழைந்த ரகுவரன்.. அவளது அறையை நோக்கி ஒரு எட்டு வைத்துப் பின்.. விறுவிறுவென மாடியேறினான்.
அவன் எதிர்பார்த்தபடி.. பௌர்ணமி வெளிச்சத்தைக் கிரகித்துக் கொண்டு நிலவோடு, நிலவாக நின்றிருந்தவளைக் கண்டு.. அவன் கடைசிப்படியில் நிற்க.. அரவம் கேட்டுப் படியை நோக்கியவள்..
அவனைக் கண்டதும், தொண்டைக்குழி ஏறி,இறங்க துக்கப் பார்வையுடன் அவன் முகம் பார்த்து நின்றாள்.
கண் இமைக்காது தீர்க்கமாய் தன்னை ஏறிடும் அவள் பார்வையைக் கண்டு.. இறுகிய முகத்துடன் முன்னே நடந்து வந்து அவளருகே நின்றான்.
கைகளைக் கட்டிக் கொண்டு வெட்டாவெளியை வெறித்துக் கொண்டிருந்தவளின் புறம் திரும்பி.. அவளது தடித்த கண்களையும், சிவந்திருந்த நாசியையும் நோக்கி..
“உனக்கு அழுகையெல்லாம் வரும்ன்றதே இன்னிக்குத் தான் டா மோகன் எனக்குத் தெரியும்” என்றான்.
திரும்பி அவனை முறைத்தவளிடம்..
“உண்ணா விரதம் எதுவும் ப்ளான் பண்ணியிருக்கியா?” எனக் கேட்டான்.
“5 தோசை! மூக்கு முட்டத் தின்னுருக்கேன்! நான் என்ன இதுக்கு உண்ணா விரதம் இருக்கோனும்?”
“இல்ல, பொதுவா நீ கை கட்டி நிற்கும் போது, உன்ற தொப்பை, உன்ற கைக்குக் கீழ ஸ்டாண்ட்-ஆட்டம் நிற்கும்! இன்னிக்கு ஸ்டாண்ட் மிஸ்ஸிங். அதான் கேட்டேன்!”
“எனக்கு சிரிப்பு வரல”
“தெரியுது! உராங்குட்டானாட்டம் உன்ற மூஞ்சி இருக்குற நிலையிலயே!”
“ரகு….” – அடிக்குரலில் அவள் அழுத்தமாய் அவன் பெயர் சொல்லி அழைத்ததும்.. பெருமூச்சை வெளியிட்டவன்..
“என்ற மேல கோப்பட்றதால எந்தப் பிரயோஜனமும் இல்ல டா மோகன்” என்றான்.
“உன்ற மேல கோபம்ன்னு நான் எப்போ சொன்னேன்?, எனக்குத் தெரியும். உன்னையும் ஏதாவது சொல்லி கார்னர் பண்ணியிருப்பாங்கன்னு”
அவள் கூறியதைக் கேட்டுக் கையைக் கட்டிக் கொண்டுப் பார்வையை அவளிடமிருந்துத் திருப்பியவன்..
“என்னை யாரும் கார்னர் பண்ணல” என்றான்.
அதிர்வாய் அவன் முகம் பார்த்தவளிடம்..
“கட்டிக்கோன்னு என்ற மாமா சொன்னாரு, கட்டிக்கிறேன்னு நானும் ஒத்துக்கிட்டேன்” என்று அவன் கூற.. ஆத்திரத்துடன் அவனை வெறித்து நோக்கியவள்..
“உங்க ரெண்டு பேரோட பாசப் பிணைப்புக்கு நான் என்னத்துக்கு பலிகெடாவாகோனும்?” – என்று கத்த..
“சத்தம் போடாத! பொழுது சாய்ஞ்சதுல இருந்து நீ ஆடுன ஆட்டத்தை மறந்து, இப்ப தான் எல்லாரும் உறங்கத் தொடங்கியிருக்காங்க. ” – என அடிக்குரலில் எச்சரித்தவனைக் கண்டு.. வெறுப்புடன் விலகிச் சென்று அவனிடமிருந்துப் பத்தடி தள்ளி நின்றாள்.
மிதமிஞ்சிய ஆத்திரத்துடன் நடை பயின்று கொண்டிருந்தவளை.. கைகளைக் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றபடி வேடிக்கை பார்த்தான் ரகுவரன்.
“கோபத்தைக் குறைச்சு கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாரு டா மோகன், காரணமில்லாம எதுவும் நடக்கல இங்க”
“நிதானமா யோசிச்சு என்ன செய்யோனும்?, உன்னைக் கட்டிக்கிறேன்னு சம்மதம் சொல்லோனுமா?”
“……….”
“அப்பிடி என்ன காரணம், காரணம்ன்றீங்க எல்லாரும்?, எனக்குத் தெரியக் கூடாத அளவுக்குப் பெரிய காரணம்?, எனக்குச் சத்தியமா புரியல”
“………….”
“என்றப்பனை கொடிய நோய் எதுவும் தாக்கியிருக்கா?” – அசால்ட்டாய்க் கேட்டவளை அவன் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க..
“சொல்லு! அதனால தான் இப்பவே என்ற கல்யாணத்தை நடத்தோனும்ன்னு ஒத்தக் கால்ல நிற்குறாரா?, ஆனா.. தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, விருப்பமில்லாத விஷயத்தைச் செய்யச் சொல்லி, பெத்தப் பிள்ளைங்களை ப்ளாக்மெய்ல் பண்றது எவ்ளோ சின்னத்தனம் தெரியுமா?“ – எனத் தன் போக்கில் பொங்கியவளைக் கோபத்துடன் நோக்கி..
வாயை மூட்றா மோகன்” – என்று அவன் சீற..
“அப்புறம் என்ன தான் டா காரணம்?, சொல்லித் தொலைங்களேன்”
“………..”
“ஆனா… நீ..! நீ ஏன் எந்த எதிர்ப்பும் காட்டாம, அமைதியா இருக்குற?, உனக்கு இந்த ஏற்பாட்டுல சம்மதம்ங்குற மாதிரி?” – சுருங்கிப் போன குரலில் கலக்கமாய்க் கேட்டவளிடம்..
“என்ற மாமன் கிட்ட என்றனால எதையும் மறுக்க முடியாது டா மோகன்! என்ற விருப்பம்,விருப்பமின்மையைக் கடந்தது.. நான் அவர் மேல வைச்சிருக்கிற பாசம்” – என்று அவன் கூற..
“அதனால? ம்? அவர் சொன்ன ஒரு காரணத்துக்காக என்ற கழுத்துல தாலி கட்டி என்னைப் பொண்டாட்டியா ஏத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டியாக்கும்?”
கல்யாணம்,தாலி,பொண்டாட்டி என்கிற வார்த்தைகளெல்லாம் அவர்களுக்கிடையே வந்து போவது.. சங்கடமாய்த் தோன்ற.. கன்றிய முகத்துடன்.. அவள் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் வேறு புறம் நோக்கியவனிடம்..
“கல்யாணம்ன்ற வரையில தான் அத்தனை பேரும் யோசிக்குறாங்க! கல்யாணம் நடந்துட்டா மட்டும் போதுமா? எல்லாரும் கட்டாயப்படுத்துறாங்க-ன்றதுக்காக பல்லைக் கடிச்சுக்கிட்டு, அந்த ஒரு நாளை சகிச்சுக்கிட்டு.. என்றனால.. அவங்க ஏற்பாட்டுக்கு சம்மதிச்சுப் எல்லாத்தையும் பொறுத்துப் போய்ட முடியும்! ஆனா… அந்த நாளோட முடிஞ்சு போற பந்தமா அது?, அதுக்கப்புறம் நாம வாழ வேண்டிய வாழ்க்கையைப் பத்தி யோசிக்க, ஏன் நினைச்சுப் பார்க்கக் கூட இங்க யாருக்கும் தோணலயேன்றது தான் என்ற ஆதங்கமே! விருப்பமில்லாமத் தொடங்குற உறவு காலத்துக்கும் நிலைக்குமா?” என்று அவள் ஆவேசமாகக் கேள்வி கேட்க..
பதிலின்றிப் பிடரியைக் கோதியவன்.. அவளருகே வந்து நின்றுத் தவிப்புடன் அவள் முகம் பார்த்து.. “நீ இவ்ளோ தூரம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல டா மோகன்!” -என்றான்.
“ஏன்?”
“இந்தக் கல்யாணம் நம்ம குடும்பத்துக்காக மட்டும் தான்”
“அப்புறம்?”
அவளது ஒற்றைக் கேள்வியில் திணறியவன்.. “கல்யாணத்தை மட்டும் பெரியவங்க போக்குல விடு! அதுக்கப்புறம் நீ என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறியோ.. நான் அதுக்கு சம்மதிக்கிறேன்”-என்றான்.
“அப்டின்னா?”
“…………”
“பேருக்குக் கல்யாணம் கட்டிக்கிட்டு, ஆளுக்கொரு வழியைப் பார்த்துட்டுப் போயிடலாம்ன்றியா?”
“உனக்கு அது தான் விருப்பம்ன்னா, நான் அதுக்கும் தயாராத் தான் இருக்கேன்”
கம்மிய குரலோடு வந்த அவனது பதிலில் ஆத்திரம் தலைக்கேற.. தாளம் தப்பத் தொடங்கிய மூச்சைக் கண்களை மூடி கட்டுக்குள் கொண்டு வந்தவள்.. நிதானத்துடன்..
“படிக்குற படிப்பு,பார்க்குற வேலை, போட்டுக்கிற டிரஸ்ன்னு அத்தனையிலயும் நாகரீக மாற்றத்தைத் தேடுனாலும்.. அடிப்படைல நம்ம பண்பாடும்,கலாச்சாரமும் ஊறிப் போயிருக்கிற சாதாரண தமிழ் குடும்பத்துப் பொண்ணு நான்! என்னைப் பொறுத்த வரைக்கும் கல்யாணம்ன்றது ஒரு தடவை தான்! பொண்டாட்டி செத்தும் கூட.. வேற துணை தேடாம இன்னைக்கு வரைக்கும் ஒத்தையா நிற்குற.. என்ற மாமனையும்,அப்பனையும் பார்த்து வளர்ந்த எனக்கு அந்த மாதிரி யோசனையெல்லாம் நிச்சயம் வராது!”
“அப்போ என்ன தான் செய்யனும்ன்ற?”
“இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது”
“அதை முடிவு பண்ணுற உரிமை நம்மக்கிட்டயிருந்து எப்பவோ பறி போயாச்சு டா மோகன்”
“நம்மை மீறி எதுவும் நடக்காது!”
“இது முட்டாள்தனமான நம்பிக்கை”
“நீ ஏன் என்னைப் போல மறுக்க மாட்டேங்குற?”
“மறுக்க என்ற கிட்ட எந்தக் காரணமும் இல்ல!, என்ற கையைப் புடிச்சு.. என்ற கண்ணைப் பார்த்துக் கேட்டாரு உங்கப்பா… என்ற மவளைக் கட்டிக்கிறியான்னு?, மாட்டேன்,முடியாதுன்னு எப்பிடி மறுக்க முடியும் என்றனால?”
“ஏன் முடியாது?, நீ அவர் மேல வைச்சிருக்கிற அதே அளவு பாசத்தை அவரும் உன்ற மேல வைச்சிருக்கிறார் தான?, என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது மாமான்னு நீ சொல்றதை ஏத்துக்காமலா போயிடப் போறார்?”
“உன்றனால என்றப்பன் கிட்டப் புரிய வைக்க முடிஞ்சதா?”
“அவர் என்ற பேச்சை நின்னுக் கேட்கக் கூடத் தயாராயில்ல”
“எனக்கும் அதே நிலைமை தான்!”
“அதனால? எதிர்த்துப் பேசாம சரின்னு ஒத்துக்கிட்டியாக்கும்?”
“வேற என்ன செய்ய சொல்ற என்னை?” – சலிப்புடன் கைகளை உயர்த்தியவனிடம்.. அருகே நெருங்கி வந்தவள்.. அவன் சட்டைக் காலரைப் பற்றி..
“தாலி கட்டுறதோட எல்லாம் முடிஞ்சுடும்ன்னு நினைச்சியா?, ஒரே ரூம்க்குள்ள.. ஒரே கட்டில்ல.. என்னோட.. உ..உ..ன்றனால யோசிச்சுப் பார்க்க முடியுதா?”
கண்களில் நீர் தேங்க.. ஒவ்வாமையுடன் கேள்வி கேட்டவளைக் கண்டு மூச்சடைக்க.. பட்டென அவள் கைகளைத் தட்டி விட்டுத் திரும்பி நின்றவனின் முதுகை வெறித்தவள்..
“கேட்கவே நாராசமா இருக்கிற விஷயம்.. நாளைக்கு நடக்குறப்ப உன்றனால ஹாண்டில் பண்ண முடியுமா?” – எனத் தொடர்ந்து கூற..
‘என்னவெல்லாம் பேசுகிறாள்’ என்றெண்ணியவனுக்கு.. மனம் குழம்பிப் போக.. அவள் குரல் கேட்காத தூரத்திற்குத் தள்ளி வந்து நின்று கொண்டவன்.. கண்களை அழுந்த மூடிப் பிடரியைக் கோதிக் கொண்டான்.
மூச்சை இழுத்து,இழுத்து விட்டபடி அவளும், தலையைக் கோதியபடி அவனும் தங்களைக் கட்டுக்குள் கொண்டு வர எடுத்துக் கொண்டப் பத்து நிமிடங்களும் அமைதியில் கரைய.. மெல்ல அவள் புறம் திரும்பி நின்றான் ரகுவரன்.
“இப்போ என்ன பண்ணலாம்ன்னு நினைக்குற?” – அவள் முகம் பார்க்காமல் கேள்வி கேட்டவனிடம்..
“கல்யாணத்தை எப்பிடியாவது நிறுத்தனும்” என்றாள்.
“உன்றப்பனும்,என்றப்பனும் இருக்குற வரைக்கும் அது நடக்காது”
“நீ இப்பிடிப் பேசுறதை நிறுத்து முதல்ல”
“இது நிதர்சனம் டா மோகன்”
“பொல்லாத நிதர்சனம்! எல்லாம் உன்றனால தான்! அவங்க சொல்ற அத்தனைக்கும் தலையாட்டிக் கடைசில எனக்குத் தலைவலியைக் கொடுக்குற நீ!”
“எனக்கு வேற வழி தெரியல டா மோகன்” – சலிப்பாகக் கூறியவனிடம்..
“வழி தெரிஞ்சா எனக்கு ஒத்துழைப்பியா?” – எனக் கேட்டாள் அவள்.
“புரியல”
“கல்யாணத்தை நிறுத்த வழி தெரிஞ்சா.. நீ எனக்கு ஒத்துழைப்பியான்னு கேட்டேன்” – விழிகள் பளபளக்கக் கேட்டவளின் முகம் பார்த்தபடி அவன் அமைதியாக நிற்க.. அதுவரையிருந்த இயலாமை உணர்வு மறைந்து.. உற்சாகம் குடியேற.. இழுத்து மூச்சை வெளியிட்டவளைக் கண்டவனுக்கு.. அவள் பெரிதாய் ஏதோ திட்டம் தீட்டி விட்டதாகத் தோன்றியது.
அதன் பின்பு அடுத்த இரண்டு நாட்களுக்கு திருமண வேலைகள் எதையும் தொடராமல் அமைதி காத்தப் பெரியவர்கள், கடைசியில் கணபதி ‘இவளுக்குப் பயந்து நாம என்னத்துக்கு அமைதியா இருக்கோனும்! நாம கல்யாண வேலையைப் பார்ப்போம்! என்ன நடக்கனும்ன்னு இருக்கோ, அது நடக்கட்டும்’ எனக் கூறி விட, முன்னிருந்த உற்சாகம் மறைந்திருந்தாலும், ஓரளவு மகிழ்ச்சியுடனே வேலைகளைத் தொடர்ந்தார் துளசி.
அந்த ஒரு நாளுக்குப் பிறகு மோகனா வீட்டில் எவருடனும் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. அவளுடன் முகம் கொடுத்துப் பேச எவரும் முன் வரவில்லை என்பது வேறு விஷயம்! ‘நடத்துங்க,நடத்துங்க! எவ்ளோ தூரம் போறீங்கன்னுப் பார்த்துடுவோம்’ ரீதியில், தன் போக்கில் மில்லுக்குச் செல்வதும்,வருவதுமாய் நாட்களைக் கடத்தினாள்.
அங்கு ரகுவரனோ, தன் உடல்நிலை காரணமாகப் பெரிதாக வெளியில் செல்லாது வீட்டில் இருந்தபடியேத் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தக் கணபதிக்கு வலது கையாய் மாறிப் போயிருந்தான். வேளை தவறாமல் அவருக்கு மருந்து,மாத்திரை வழங்குவதிலிருந்துத் தொடங்கி அவரது வரவு,செலவுகளைப் கவனித்துக் கொண்டும், ஃபேக்டரி குறித்து அவர் சொல்லும் வேலைகளைப் பார்த்துக் கொண்டும் அவருடனே திரிந்தான். மகனாய் நினைத்தவனே, தன் மகளை மணந்து கொண்டு மருமகனாய் வரப் போவதில் அவன் மீது கூடுதல் உரிமை தோன்ற, மகளின் பேச்சிலும்,அவளது விலகலிலும் உண்டான மன வலியை ரகுவரனை அருகில் வைத்துக் கொள்வதன் மூலம் தீர்த்துக் கொண்டிருந்தார் கணபதி.
பெரியவர்கள் இருவரும் மோகனா மீதான தங்களது ஏமாற்றத்தை வெளியே சொல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும்.. உள்ளூர அவர்களிக்கிருந்த வருத்தத்தை ஜீவரஞ்சன் சரியாகப் புரிந்து வைத்திருந்தான்.
அந்த வருத்தத்தைத் தீர்க்க எண்ணினாலும்.. இந்தத் திருமணம் குறித்து மோகனாவிடம் இதுவரை ஒரு வார்த்தை பேசவில்லை அவன்.
ரகுவரனைப் போல அல்ல அவள்! பக்கம்,பக்கமாகப் பேசினாலும், கோபம் கொண்டாலும், எதிர்த்து நின்றாலும்.. உறவுகளுக்குக் கட்டுப்பட்டவன் அவன்! அவனது கையைப் பிடித்து செண்டிமெண்ட் ஆக நான்கு வார்த்தை பேசி விட்டால், உருகிப் போய் விடும் ரகம் அவன்! கிட்டத்தட்டப் பூர்ணியைப் போல! அதனால்.. வீட்டினர் அனைவரும் ஒன்று கூடி எடுத்த இந்த முடிவை எதிர்க்க வேண்டுமென்கிற எண்ணம் அவனுக்குச் சிறிதும் இருக்க வாய்ப்பில்லை!
ஆனால்.. மோகனா அப்படியல்ல! அவள் நினைத்தக் காரியத்தை சாதிக்க எவரையும் எதிர்த்து நிற்பாள். குடும்ப செண்டிமெண்டுகளெல்லாம் அவளிடம் பலிக்காது. அவளது தந்தையின் உடல்நிலையை எடுத்துக் கூறினால் கூட, அவள் இந்தத் திருமணத்திற்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டாள் என்றே தோன்றியது ஜீவனுக்கு.
அதனால் என்ன செய்து இந்த ஏற்பாட்டை அவள் தடுத்து நிறுத்தப் போகிறாள் என எதிர்பார்த்தபடி… அவளது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு அமைதியாய் வலம் வந்தான்.
அன்று இரண்டு ஜோடிகளுக்கும் நலங்கு வைப்பதாக ஏற்பாடு.
காலையில் அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவளின் முன்னே வந்து ஒரு சேலையை நீட்டினாள் பூர்ணி. மாமனையும், சித்தப்பனையும் எதிர்த்துப் பேசியதாலும், அவளது செல்லத் தம்பு ரகுவுடனான திருமணத்தை மறுப்பதாலும், தங்கையுடன் பேச்சு வைத்துக் கொள்வதில்லை அவள்.
“என்ன இது?”
எந்நேரமும் யோசனையில் திரிவதாலோ என்னவோ, ஏற்கனவே உர்ரென்றிருந்த மோகனாவின் முகம், இப்போது உர்ர்ர்ர்ராகியிருந்தது.
“இன்னிக்கு நலங்கு வைக்குறாங்க” – எங்கோ பார்த்துக் கொண்டுக் கூறியவளிடம்…
“உனக்குத் தான நலங்கு?, நான் என்னத்துக்குப் பட்டுச் சீல கட்டோனும்?” – என மோகனா கேட்க.. சட்டென முகத்தைத் திருப்பித் தங்கையை முறைத்தவள்..
“நீ என்ன நினைச்சிட்டிருக்கியோ எனக்குத் தெரியாது! ஆனா.. நாங்க எல்லாரும் இந்த வீட்ல ரெண்டு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு நம்பிக்கிட்டிருக்கோம்” எனக் கூற.. ஒன்றும் கூறாமல் சேலையைக் கையில் எடுத்தவள்..
“எனக்குப் புடவை கட்டத் தெரியாது” என்றாள்.
மிகச் சாதாரணமாக ஒலித்த அவள் குரலில் வியந்து..
“அப்டின்னா? கட்டிக்கிறியா?” எனக் கேட்டாள் பூர்ணி.
“சேலையைத் தான?”
“மோகனா…” – பல்லைக் கடித்தவளைக் கண்டு கொள்ளாது..
“அப்டின்னா இன்னிக்கு மில்லுக்குப் போக முடியாதா?” எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தவளை ஆத்திரத்துடன் நோக்கி…
“உன்னை மாதிரி ஒரு அழுத்தக்காரியை இந்த உலகத்துலயே பார்க்க முடியாதுடி” – எனக் காய்ந்தாள் பூர்ணி.
“தேங்க்ஸ்”
“அப்பிடி என்ன உனக்குப் பிடிவாதம்? ம்? உன்னைப் பெத்து,வளர்த்தவங்களுக்குத் தெரியாதா டி, உனக்கு எது நல்லது,எது கெட்டதுன்னு?, ரெண்டு கல்யாணத்தைப் பார்க்கப் போற வீடு மாதிரியா இருக்கு இது?, ம்? யார் முகத்துலயாவது முழு சந்தோஷத்தைப் பார்க்க முடியுதா?, எல்லாத்தையும் கெடுக்குறோமேன்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லியா உனக்கு?”
“எனக்கு என்னத்துக்கு உறுத்தோனும்?, நானா கேட்டேன் எனக்குக் கல்யாணம் பண்ணி வைய்ங்கன்னு?”
“எகத்தாளமா பேசுனேயின்னா.. அறைஞ்சு போடுவேன் சொல்லிட்டேன்”
“அடிச்சுக்க! அடிச்சுக்க! என்னை அடிக்க உனக்கு முழு ரைட்ஸூம் இருக்கு” – கட்டிலில் கைகளை ஊன்றிக் கொண்டு காலாட்டியபடி கூறியவளைக் கண்டு உள்ளே கொதிக்க..
“அவனுக்கு என்னடி குறை? ஏன் அவனை வேணான்ற?” – எனக் கேட்டப் பூர்ணிக்குக் கண்களில் நீர் தேங்கி விட.. எரிச்சலுடன் அவளை ஏறிட்டவள்..
“என்னத்துக்கு இப்ப அழுகுறவ?, கண்ணைத் துடை முதல்ல! அவனுக்குக் குறையிருக்குன்னு நான் எப்போ சொன்னேன்?, எனக்கும் அவனுக்கும் ஒத்து வராதுன்றதால தான வேணான்னு சொல்றேன்”
“ஒத்து வருமா,வராதன்றதை வாழ்ந்து பார்க்காமலேயே நீ முடிவு பண்ணிடுவியாக்கும்?”
“அதுக்காக ட்ரையல் பார்க்கவா முடியும்?”
“மோகனா….”
“ப்ச், அழுகையை நிறுத்துக்கா! இத்தனை வருஷம் காத்திருந்து உன்ற மனசுக்குப் பிடிச்சவரையே கட்டிக்கப் போற நீ! அதை நினைச்சு சந்தோஷப்படுறதை விட்டுப் போட்டு.. கண்டதை நினைச்சு என்னத்துக்கு அழற?”
“உன்றனால வீடே கலையிழந்து கிடக்குறது உனக்குப் புரியுதா இல்லையா டி?”
“கவலைப்படாத! நாளைக்கே வீட்டுக்குப் பெய்ண்ட் அடிக்கச் சொல்றேன்! இழந்த கலையெல்லாம் தன்னால வந்துடும்”
-நக்கலாய்க் கூறியவளையே வெறித்துப் பார்த்தவள்..
“ஒன்னு சொல்றேன் நல்லாக் கேட்டுக்க! நீ மட்டும் ஏதாவது கோக்குமாக்கு பண்ணி இந்தக் கல்யாணத்தை நிறுத்தோனும்ன்னு திட்டம் போட்டேனா.. என்ற கல்யாணமும் நடக்காது சொல்லிப்போட்டேன்” – விரல் நீட்டி எச்சரிக்க..
அவளது சபதத்தில் ஆத்திரம் தலைக்கேற… “பூர்ணி..” எனக் கத்தியபடி எழுந்து நின்ற மோகனா..
“பைத்தியம் மாதிரி பேசாத!” என கர்ஜிக்க..
“எதுக்குடி கத்துற?, ம்? எதுக்குக் கத்துற?, நான் உன்னாட்டம் சுயநலவாதி இல்ல, என்ற விருப்பம்,என்ற சந்தோஷம்ன்ற பேர்ல சுத்தியிருக்கிறவங்களை நோகடிக்கிறதுக்கு! எனக்கு என்ற குடும்பம் முக்கியம்! என்ற குடும்பத்துல இருக்கிறவங்களோட நிம்மதி முக்கியம்!, உன்ற வாழ்க்கைல நீயே மண்ணள்ளிப் போட்டுக்கிறதை என்றனால வேடிக்கை பார்த்துக்கிட்டு நிற்க முடியாது” – கண்ணீரைத் துடைத்துக் கொண்டுத் தீர்மானமாகக் கூறிய பூர்ணி விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி விட்டாள்.
இயலாமையில் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, நெற்றியைத் தேய்த்தபடிக் கட்டிலில் அமர்ந்திருந்தவள், அரவம் உணர்ந்து அறை வாசலை நோக்க.. அங்கே கைகளிரெண்டையும் பின்னே கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி சுவாமிநாதன் நின்றிருந்தார்.
இரண்டு,மூன்று முறை அவளிடம் பேச வந்தவரை உதாசீனப்படுத்தியிருந்தவளுக்கு, இன்று பூர்ணியின் பேச்சால் உண்டான அதிர்ச்சியில் தன்னாலேயே அவரது பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை கவிழ.. அவளருகே நெருங்கி அவள் தலையை வருடியவர், ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றார்.
இங்கு கணபதியின் வீட்டில், அவர் கூறிய வேலையை செய்து முடிக்க வேண்டி ஃபேக்டரிக்குக் கிளம்பிய ரகுவரனை வழிமறித்தபடி வந்து நின்றான் ஜீவன்.
“ஏனுங்ண்ணா?”
முகம் முழுக்க முளைத்திருந்தத் தாடியும், ஒளி குறைந்திருந்த கண்களுமாய்ப் பரிதாபமாய்க் காட்சி தந்தவனைக் கண்டு கவலை கொண்டாலும், மறுபுறம் சிரிப்பு வந்தது ஜீவனுக்கு. அப்பாவியான தம்பிக்கு அடப்பாவியான மோகனாவை ஜோடி சேர்த்து வைக்கும் விதியை நினைத்து!
“எங்கடா கிளம்பிட்ட?”
“ஃபேக்டரிக்குங்ண்ணா, மாமா கணக்கரைப் பார்க்கச் சொன்னாருங்க”
“அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! இன்னிக்கு நலங்கு வைக்குறாங்க! அதனால நீ வீட்ல தான் இருக்கோனும்”
“நலங்கா? யாருக்குங்ண்ணா?”
“யாருக்கா?, சரியாப் போச்சு போ!”
“……..”
“டேய்.. என்றா??”
“இப்ப இருக்குற சூழ்நிலைல இதெல்லாம் தேவை தானுங்ளாண்ணா?” – சன்னமாய் முணுமுணுத்தவனின் தோளைப் பற்றியவன்..
“நம்மை மீறி அவ எதுவும் செஞ்சுட மாட்டா டா” – எனக் கூற..
“அப்டின்னு நீங்க நம்புறீங்களா?” – எனக் கேட்டவனை.. பதிலின்றி அவன் நோக்க.. தயக்கத்துடன் அவனிடம்..
“உ..உங்களுக்கு எதுவும் தெரிய வரலீங்ளா?” என்றான் ரகுவரன்.
இல்லையெனத் தலையாட்டித் தாடியைச் சொரிந்த ஜீவன் “அக்கௌண்ட்ல இருந்து நிறைய பணமெடுத்திருக்கா. எதுக்குன்னு தெரியல! கமுக்கமா ஏதோ வேலை பார்க்குறாளாட்ருக்கு!” எனக் கூற..
“எந்த வகைலயும் மாமா வருத்தப்பட்டுடக் கூடாதுங்ண்ணா”- என்ற ரகுவரனைக் கண்டு ஆம் என்பது போல் தலையாட்டினான் ஜீவரஞ்சன்.
பெரிதாக அலங்காரமேதுமில்லாமல் பட்டுச்சீலையும், கழுத்தில் மாலையுமாக, அளவான பொன்னகைகளுடன் புன்னகையின்றி அமர்ந்திருந்தனர் பூர்ணியும், மோகனாவும்.
தயாரித்து வைத்திருந்த நலங்கு மாவை உறவுக்காரப் பெண்கள் அவர்களது முகத்திலும்,கைகளிலும் தடவி ஆசீர்வதித்து விட்டுச் சென்று கொண்டிருக்க..
“பசங்க ரெண்டு பேரையும் இவங்களோடவே உட்காரச் சொல்லிருவோமுங்ண்ணா, அவங்களுக்கு வேற ஒரு தடவை தனியா வைக்குறதா?” – என சொந்தக்காரப் பெண்ணொருத்தி கூற.. “அதுவும் சரி தான்” என்ற துளசி..
உறவுக்காரர்களோடு உரையாடியபடி ஹாலில் அமர்ந்திருந்த ரகுவரனையும்,ஜீவரஞ்சனையும் அழைத்து வந்து பெண்களருகே அமர வைத்தார்.
மஞ்சள் அப்பிய முகத்துடன் தன்னை நிமிர்ந்து பார்த்தப் பூர்ணியைக் கண்டு கண்ணடித்து விட்டு அவளருகே ஜீவன் அமர, அதுவரையிருந்த இறுக்கம் குறைந்து.. லேசாய் அவனை முறைத்தபடி நிமிர்ந்தமர்ந்தாள் பூர்ணி.
மோகனாவினருகே போடப்பட்டிருந்த நாற்காலியைக் கண்டுத் தயங்கி ஒரு நொடி அவள் முகம் பார்த்த ரகுவரன், அவள் நேரே வெறித்தபடி அசைவற்று அமர்ந்திருப்பதைக் கண்டு.. முகம் இறுக.. வேறு வழியின்றி அவளருகே அமர்ந்தான்.
இருவர் முகத்திலும் மாவைத் தடவி, தலையில் பூவைப் போட்டு ஆசிர்வதித்தவர்களிடம்.. மோகனாவிற்கும் சேர்த்து சிரித்து,பதில் பேசியபடி.. உள்ளே நடக்கும் பூசல் எதையும் வெளிக்காட்டாதவாறு அழகாய் மறைத்திருந்தான் ரகுவரன்.
“ரெண்டு ஜோடியையும் தனியா நிற்க வைச்சு ஃபோட்டோ எடுத்துடலாமுங்கய்யா” – எனக் கேமராவுடன் முன்னே வந்த ஃபோட்டோக்ராஃபரை நிப்பாட்டி..
“நான் இன்னும் பூர்ணி முகத்துல மஞ்சள் தடவவேயில்லியே?” என சுற்றி நின்ற உறவுப் பெண்களிடம் கேட்ட ஜீவன் “எனக்கெல்லாம் அந்த உரிமை கிடையாதுங்ளா?” எனக் கூற.. பெரிதாய் நகைத்த கூட்டம்..
“உனக்கில்லாத உரிமையா கண்ணு?, தம்பி ஆசைப்படுதல்ல, மஞ்சள் கிண்ணத்தை மாப்பிள்ளை கிட்ட நீட்டுங்கடி” என்று ஒருத்தி குரல் கொடுத்ததில்.. கையில் மஞ்சளை வழித்த ஜீவன், தன்னருகே வெட்கமும்,புன்னகையுமாய் அமர்ந்திருந்த பூர்ணியின் கன்னத்தில் தடவி.. மஞ்சளாயிருந்த அவள் முகத்தை சிகப்பாக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
“சின்னவனே! அண்ணனுக்கு நான் குறைஞ்சவன் இல்லன்னு நீ காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு கண்ணு! அவனுக்குப் போட்டியா நீயும் உன்ற பொண்டாட்டி கன்னத்துல மஞ்சளைத் தேய்க்க வேணாமா?” – பெண்களின் குரல் தன் பக்கம் திரும்புவதைக் கண்டு அரண்டு..
“அ..அதெல்லாம் வேணாம்ங்கக்கா”- என்று ரகுவரன் பம்ம..
“அப்பிடியெல்லாம் உன்னை விட்ற முடியாது கண்ணு! இப்ப நீ மோகனா முகத்துல மஞ்சளைத் தடவியே ஆகோனும், பாப்பா, கிண்ணியை இந்தப்பக்கம் கொடு” – என்று குரல் கொடுத்தவரைத் தொடர்ந்து கிண்ணம் அவனது கைக்கு வர..
அவசரமாய் எழுந்து நின்றவன்.. கழுத்திலிருந்த மாலையைக் கழட்டியபடி..
“நான் கொஞ்சம் கூச்ச சுபாவமுங்க்கா! எனக்கு இதெல்லாம் வராது. என்னை விட்ருங்க” எனக் கையைத் தூக்கிக் கும்பிட்டவனைக் கண்டு நகைத்த கூட்டம்..
“கன்னத்தைத் தொடுறதுக்கே இப்பிடியா??” – எனக் கேட்டுக் கேலி செய்ய.. பல்லைக் கடித்துக் கொண்டு கைகளை இறுக்கிய மோகனாவைக் கண்டு.. ‘இதுங்க வாயை மூடாதுங்களா’ எனக் கடுப்பாகிப் போன ரகுவரன்..
“ஃபோட்டோக்ராஃபர் அண்ணா.. நீங்க உங்க வேலையைத் தொடங்குங்க” எனக் கூற..
“நான் என்ற வேலையைத் தொடங்குறது இருக்கட்டும்! நீங்க அவங்களுக்கு மஞ்சள் வெய்ங்ண்ணா!” என அவரும் காலை வார.. எரிச்சலுடன் நின்றவனிடம்..
“நீ தப்பிக்க முடியாது கண்ணு” என்ற கூட்டத்தைக் கண்டு.. அவன் நெற்றியை கட்டை விரலால் தேய்த்துக் கொண்டு, இடுப்பில் கை வைத்து நிற்க..
“அவன் தான் முடியாதுன்னு சொல்றானல்லங் அண்ணி?, என்னத்துக்குக் கட்டாயப்படுத்துறீங்க?” – என்று உச்சகட்ட கடுப்பில் வாயை விட்டாள் மோகனா.
“இன்னும் என்னடி அவன்,இவன்-ன்னு சொல்லிட்டிருக்கவ?” எனத் தொடங்கிய அந்தப் பெண்மணி “பையைத் தூக்கிட்டு அவன் பின்னால சைக்கிள்ல உட்கார்ந்து போன காலத்துல இருக்கிறதா நினைப்பா உனக்கு?, மரியாதை கொடுத்து பேசத் தெரியாதா?” – என ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவள் கன்னத்தை இடிக்க.. அவரை அப்பட்டமாய் முறைத்தபடிப் பொறுமலுடன் அமர்ந்திருந்தவளின் கன்னத்தைக் காப்பாற்றும் பொருட்டு முன்னே வந்த ரகுவரன்..
“வி..விடுங்க்கா.. பழக்க தோஷத்துல சொல்லிட்டா! இப்ப என்ன இந்த மஞ்சளைப் பூசோனும்? அவ்வளவு தான?” என்றவன் அவர் கையிலிருந்த மஞ்சள் கிண்ணத்தில் விரல்களை நனைத்து.. அவள் கன்னத்தினருகே கைகளைக் கொண்டு சென்றான்.
முதல் நாள் பள்ளியில் அமர்ந்திருக்கும் சிறுமியைப் போன்று.. விழி முழுக்கத் தேங்கியிருந்த நீருடன், விடைத்து நின்ற மூக்குமாய்.. கோபம் பொங்கக் காட்சியளித்தவளைக் கண்டு சிரிப்பு வர.. அடக்கிப் பார்த்தும் முடியாமல்.. பற்கள் தெரிய புன்னகை கொண்டவனைக் கண்டு.. அவள் பல்லைக் கடித்து முறைக்க..
மரகதப்பச்சையில் பட்டுச் சீலை அணிந்து, காதில் ஜிமிக்கியும், கழுத்தில் மாலையும், கன்னத்தில் மஞ்சளுமாய் கண் முன் தெரிந்தவளை.. தடுமாற்றத்துடன் தீண்டிய அவன் கண்கள்.. மூளை கொடுத்த எச்சரிக்கையையும் மீறி.. அவளை ரசித்துப் பார்க்க.. இமை தட்ட மறந்து அவளையே நோக்கியவனுக்கு.. அவள் கன்னத்திலிருந்து கையை விலக்கும் எண்ணம் இல்லாமற் போனது.
“மாப்ள, மிச்சத்தைக் கல்யாணத்தன்னிக்குப் பார்த்துக்கலாம்! இப்ப கையை எடு” எனக் கூட்டம் கேலி செய்ததும்.. வெடுக்கெனக் கையை விலக்கிக் கொண்டவன், அவளை நிமிர்ந்து பார்க்கத் தயங்கி கூட்டத்தை நோக்கினான்.
அதன் பின்பு ஃபோட்டோக்ராஃபர் செய்த அட்டூழியத்திலும், நலங்கு முடிந்து குளிக்கச் செல்கையில் பெண்கள் செய்த கேலிகளிலும், சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தக் கதையாகி விட.., விழா முடிந்து வீடு அமைதியானதும்.. ரகுவரனின் அறை வாசலில் வந்து நின்றாள் மோகனா.
இரு கைகளையும் தலைக்கடியில் வைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தபடிப் படுத்திருந்தவன், வாசலில் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்க்க..
“மாடிக்கு வா” என்றவள்.. அவனது பதிலை எதிர்பாராது விறுவிறுவென நடந்து சென்று விட்டிருந்தாள்.
எழுந்தமர்ந்துப் பிடரியைக் கோதியவன், பின் பெருமூச்சை வெளியிட்டபடி அவள் பின்னே சென்றான்.
தேய்பிறை நிலவு அவனது மனநிலையைப் பிரதிபலிக்க.. அவள் முன்னே வந்து நின்றவனை நிமிர்ந்து நோக்கினாள் மோகனா.
சீகைக்காயின் உபயோகத்தால்.. காற்றில் பறந்து அவளது முன் நெற்றியை அலங்கரித்த கற்றைக் கூந்தலை காதுக்குள் செருகிக் கொண்டவளைக் கண்டவனுக்கு.. அவளை ரசிக்கச் சொல்லிக் கட்டளையிட்ட மூளையையும் மீறி.. தயங்கி நின்ற கண்களை எண்ணி.. இயலாமை உணர்வொன்று எழுந்து நெஞ்சை அடைக்க வைத்தது.
மஞ்சள் நிறம் மறையாத அவள் கன்னங்களிலிருந்துக் கிளம்பி வந்த வாசனை.. நுரையீரலைக் கடந்து நேராக அவன் இதயத்தைத் தாக்குவதாய் உணர்ந்தவன்.. சட்டெனப் பொங்கிய உணர்வில்.. மறுபுறம் திரும்பி நின்றான்.
“என்ன?”
ஒற்றைக் கேள்வியுடன் அவன் முதுகை வெறித்தவளிடம்..
“எதுக்கு வர சொன்ன?” எனக் கேட்டான் அவன்.
“அதைச் சொல்லோனும்ன்னா.. நீ முதல்ல, என்ற முகத்தைப் பார்த்து நிக்கோனும்”
“பரவாயில்ல! எனக்குக் காது நல்லா கேட்குது. இப்பிடியே சொல்லு”
அவன் பதிலில் எரிச்சலுற்று அவள் உஷ்ணமாய் மூச்சு விடுவதை உணர்ந்தாலும்.. அவள் புறம் திரும்பவில்லை அவன்.
“இந்தக் கல்யாணத்தை நிறுத்த நான் வழி சொன்னா.. ஒத்துழைக்குறதா அன்னிக்கு சொன்னியே! ஞாபகம் இருக்கா?”
“அதுக்கு?”
“நான் வழி கண்டுபிடிச்சிட்டேன்”
-பட்டெனத் திரும்பி தன் முகம் பார்த்தவனிடம்.. தன் கையிலிருந்த பாஸ்போர்ட்டை நீட்டினாள் அவள்.
“அமெரிக்கா போறதுக்கான விசா! ஸ்டாம்ப் ஆகி நேத்து தான் வந்தது!”
விழி விரிய அவள் கையிலிருந்ததை வெறித்தவன்.. ஆச்சரியம் குறையாமல் அவள் முகம் பார்க்க..
“என்ன அப்பிடிப் பார்க்குற?, இதெல்லாம் எப்பிடி சாத்தியம்ன்னா?” எனக் கேட்டாள்.
இல்லையென்பதைப் போல் தலையசைத்தவன்..
“எதிர்பார்த்தது தான்” எனக் கூறி “எப்போ கிளம்புற?” எனக் கேட்டான் குரலைச் சாதாரணமாக்கி.
அவன் கேள்விக்குப் பதில் கூறாமல் கைகளைக் கட்டிக் கொண்டு ஒரு நொடி யோசித்தவள்..
“நிச்சயம்.. கல்யாணத்துக்கு முன்னாடி இல்ல” என்றாள்.
“பின்ன?,”
“…….”
“என்னைக் கட்டிக்கிட்டு என்னையும் கூட்டிப் போற ஐடியால இருக்கியா?” – அவன் நக்கலாய்க் கேட்டதும் வெடுக்கென அவன் முகம் பார்த்தவள்..
“விசா இல்லாமலே நீ நாடு விட்டு நாடு போய்ருவியாக்கும்? முதல்ல உன்ற கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?” -என்றாள்.
“இருந்தா.. கூட்டிட்டுப் போயிடுவியா?” – கைகளைக் கட்டிக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் கேட்டவனை.. சுருக்கியப் புருவங்களுடன் நோக்கியவள்..
“உன்ற பார்வைல நிறைய மாற்றம் தெரியுதே” எனக் கூற.. பட்டெனக் கைகளை விரித்து வேறு புறம் திரும்பியவன்..
“கண்ணுக்கு விளக்கெண்ணெய் விட்ருக்கேன்! அதனால வேற மாதிரி தெரியுதாட்ருக்கும்” எனக் கூற…
“நீயே ஒரு விளக்கெண்ண, உனக்கென்னத்துக்கு விளக்கெண்ண” என முணுமுணுத்தவளைக் கண்டு.. கோபம் பொங்க..
“என்றா மோகன், நக்கலா??, எல்லா நேரமும் நான் உன்னைப் பொறுத்துப் போவேன்னு நினைக்காத” என்று அவன் எகிறவும்..
“டாபிக்கை மாத்தி, என்னை அநாவசியமா பேச வைக்குறதே நீ தான்” என்றவள் “நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லையா?” எனக் கேட்டாள்.
“சொல்லித் தொலை”
“நான் கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணுனா, தன்னோட கல்யாணமும் நடக்காதுன்னு சொல்லி பூர்ணி என்னை மிரட்டுனா.”
“இதென்ன பைத்தியக்காரத்தனமான பேச்சு? அப்டியெல்லாம் எதுவும் நடக்காது”
“நடக்கவும் கூடாது! அதனால தான் என்றனால கல்யாணத்துக்கு முன்னால இங்கயிருந்து கிளம்ப முடியாதுன்னு சொல்றேன்!”
“பூர்ணி பேசுறதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்கோனும்ன்னு அவசியமில்ல”
“அப்பிடிக் கிடையாது! பூர்ணி ரொம்ப இமோஷனல் ஆன ஆளு! என்ற மேல இருக்கிற கோபத்துல தனக்குக் கல்யாணமே வேணாம்ன்னு முடிவு பண்ணுனாலும் பண்ணுவா”
“அதனால?”
“கல்யாணம் வரைக்கும் நான் எந்தப் பிரச்சனையும் பண்ணப் போறதில்ல”
“பின்ன எப்பிடி நம்ம கல்யாணம் நிற்கும்?”
“கல்யாணத்தன்னிக்கு………”
“ஓடிடலாம்ன்னு இருக்கியா?”
“இல்ல”
“பின்ன?”
“ஓடப் போறது நான் இல்ல”
“………”
“நீ”
-அவள் கூறி முடித்ததும் ஒரு நொடி வாயைப் பிளந்தபடி நின்றவன்…. “எ…எ…என்ன சொன்ன?” என்று தட்டுத்தடுமாறி கேட்க..
அவன் முட்டியைப் பற்றியபடி அவனருகே நின்றவள்..
“கல்யாணத்தன்னிக்குப் பொண்ணு காணாம போனா… ஏகப்பட்டப் பிரச்சனை உருவாக வாய்ப்பிருக்கு! காலம் முழுக்க எனக்கு ‘ஓடிப்போனவ’ பட்டம் கொடுத்து இதைக் காரணமா வைச்சே என்னை மொத்தமா முடக்கிப் போட்டுடுவாங்க”
“அதனால?”
“நீ காணாம போய்ட்டேன்னு வையேன், பெருசா எந்தப் பிரச்சனையும் வராது! இதைச் சொல்ல எனக்குப் பிடிக்கல, ஆனாலும் சொல்றேன், ஆண்பிள்ளையா இருக்கிறதோட அட்வாண்டேஜ் என்ன தெரியுமா?, நீங்க என்ன செஞ்சாலும், உங்களை இந்த உலகம் குத்தம் சொல்லாது”
“அதெல்லாம் மனசாட்சி இல்லாதவனுக்குடி! நான் சூடு,சொரணையோட வாழ்ற ஆளு! கல்யாணத்தன்னிக்கு ஓடிட்டேன்ற பேரோட என்னால மட்டும் வாழ்க்கையை ஓட்டிட முடியுமா? பெருசா யோசனை சொல்ல வந்துட்டா.. போடி..” – என்றவன் கோபமாய் இறங்கிச் செல்லப் பார்க்க..
“ரகு.. ரகு.. ரகு..,” என்று அவன் கையைப் பற்றியவள்..
“நான் சொல்றதைக் கேளு ரகு! இதைத் தவிர என்ற கிட்ட வேற வழியில்ல ப்ளீஸ்” எனக் கெஞ்ச.. அவள் கையை உதறியவன்..
“இவ்ளோ பெரிய சுயநலவாதியா டி நீ?, அடுத்தவன் என்ன ஆனாலும் பரவாயில்ல! நீ மட்டும் சேஃபா இருக்கோனும்ன்னு யோசிக்குற?” என்று பாய..
மறுத்துப் பேச முயலாமல்.. கையைக் கட்டிக் கொண்டு அவன் முகம் பார்த்து நின்றாள் அவள்.
“எகத்தாளமா இப்பிடிப் பார்க்காதடி! அப்டியே மூஞ்சியைப் பேத்துடோனும்ன்னு தோணுது”
“………”
அவளை முறைத்துப் பிரயோஜமின்றி.. பிடரியைக் கோதிக் கொண்டு அங்குமிங்கும் நடைபயின்றவனிடம்..
“நான் தான் சுயநலமா யோசிக்கிற ஆளு! நீ பொதுநலமா யோசிச்சு இந்தக் கல்யாணத்தை நிறுத்த ஒரு வழி சொல்லேன்” என்று அவள் கூற..
“இந்தக் கல்யாணத்தை நிறுத்தியே ஆகோனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துறது நீ தான். நான் இல்ல! நான் என்ன மசுருக்கு வழி சொல்லோனும்?” –எனப் பாய்ந்தவனிடம்..
“அப்டின்னா.. இந்தக் கல்யாணம் நடக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல?”
“அப்டின்னு நான் சொன்னேனா?”
“பின்ன இந்தக் கருமாந்திரம் புடிச்ச சூழ்நிலைக்கு என்ன தான் முடிவு?” – கையிலிருந்த பாஸ்போர்ட்டை தூக்கியெறிந்தபடிச் சத்தமிட்டவளைக் கண்டு.. வேறுபுறம் திரும்பிக் கொண்டான் ரகுவரன்.
ஆளுக்கொரு மூலையில்.. ஆவேச மூச்சுடன் நிற்க.. இருவருக்கிடையே உலா வந்த காற்று, இருவரையும் ஆசுவாசப்படுத்த முயன்று கொண்டிருந்தது.
“மோகனா.. நீ என்ன சொன்னாலும் சரி, இதுக்கு என்றனால ஒத்துக்க முடியாது”
அதுவரையிருந்த அமைதியைக் கலைத்து அவன் குரல் முடிவாக ஒலிக்க.. பதில் கூறாமல் மௌனமாய் நின்றாள் அவள்.
“அப்டின்னா என்ற கிட்ட மிச்சமிருக்கிறது ஒரே ஒரு வழி தான்”
“என்ன?”
“சூசைட் அட்டெம்ப்ட்” – மிகச் சாதாரணமாகக் கூறியவளைக் கேட்டவனுக்கு விதிர்,விதிர்த்துப் போய் விட..
“உளறாத” என்று கர்ஜித்தவன் நடுக்கம் குறையாமல் அவளருகே வந்து நின்றான்.
“கவலைப்படாத! அப்டியெல்லாம் செத்துட மாட்டேன் நான்! என்ற ஃப்ரெண்ட் ஒருத்தி ஃபார்மெஸிஸ்ட்-ஆ இருக்கா! அவ கிட்ட, செத்துப் போகாம சூசைட் அட்டெம்ப்ட் பண்றதுக்கு மருந்து இருக்கான்னு கேட்டு வைச்சிருக்கேன்! நீ எப்பிடியும் என்ற திட்டத்துக்கு ஒத்துக்க மாட்டன்னு தெரியும்! அதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு சொல்லி வைச்சேன்”
“அதுக்கெதுக்கு மருந்து? நானே உன்ற கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்றேன்! பக்கத்துல வா”
எரிச்சலுடன் அவன் கத்துவதைப் பொருட்படுத்தாமல் இருளை வெறித்தபடி அழுத்தமாய் நின்றவளைக் கண்டு.. தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகப் பரபரவென தேய்த்த ரகுவரன்..
“ஆனா.. ஒன்னு சொல்றேன்! கல்யாணம் முடியறதுக்குள்ள.. நீ கண்டிப்பா என்னை சூசைட் பண்ண வைச்சிடுவடி”என்று காய்ந்தான்.
தன் திட்டங்களனைத்தையும் வெளிப்படுத்தி விட்டு இனியும் சொல்ல ஒன்றுமில்லை என்பது போல் கைகளைக் கட்டிக் கொண்டு கெத்தாய் நின்றாள் மோகனா.
நேரம் கழிந்து கொண்டிருக்க.. கடைசியில் இறங்கி வந்து.. அவள் முன்னே நின்று.. “இப்ப என்ன தான் டா மோகன் என்னைப் பண்ணச் சொல்ற?” எனக் கேட்டான் ரகுவரன்.
“காலைல 6 மணி முகூர்த்தத்துல பூர்ணிக்கும், 10 மணி முகூர்த்தத்துல நமக்கும் கல்யாணம்ன்னு ப்ளான் பண்ணியிருக்காங்க இல்லியா?”
“………..”
“நீ பூர்ணி-ஜீவன் மாமா கல்யாணம் முடிஞ்சதும், எப்படியாவது மண்டபத்தை விட்டுப் போயிடு”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன? பிரச்சனை வெடிக்கும்! ஊரே உன்னைத் தப்பாப் பேசும்! “
“ஓஹோ”
“பட், நீ அதை நினைச்செல்லாம் ஃபீல் பண்ணாத! இதெல்லாம் டெம்ப்ரரி”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன? ஊர் வாயை அடைக்க முடியாம, என்றப்பாவோ,உன்றப்பாவோ நெஞ்சைப் பிடிச்சுட்டுக் கீழ விழலாம்!”
“எப்பிட்றி எல்லாத்தையும் ரொம்பச் சாதாரணமான டோன்ல சொல்ற?”
“ப்ச், யாருக்கும் எந்த சேதாரமும் வராது. நான் சொல்றதைக் கேளு”
“அதெப்படி உனக்குத் தெரியும்?, நீ என்ன கடவுளா?”
“அதெல்லாம் அப்பிடித் தான்! உன்னைக் கண்டுப்புடிச்சு அடிச்சு,நொறுக்கி,உன்ற தோலை உரிக்கிறதுக்காகவாது ரெண்டு பேரும் உயிரைக் கையில பிடிச்சு வைச்சிருப்பாங்க”
“அப்புறம்?”
“பொழுது சாய்ஞ்சு இந்தக் களேபரமெல்லாம் அடங்குனதும் நீ வீட்டுக்குத் திரும்போனும்”
“அடி வாங்கோனும்”
“அதுவும் தான்”
“ஏய்ய்”
“உனக்காக நானும் இடைல புகுந்து அடி வாங்குறேன், திருப்தியா?”
“அப்ப்ப்புறம்?” – பல்லைக் கடித்தான் ரகுவரன்.
“அப்புறம் என்ன?, கல்யாணம் நின்னதுல எனக்குண்டான மன உளைச்சல் குறைய நான் அமெரிக்காவுக்குப் படிக்கப் போறேன்னு நான் கிளம்பிடுவேன்”
“அப்போ நான்?”
“உன்ற கிட்ட தான் பாஸ்போர்ட் இல்லயே?”
“ப்ச், என்ற நிலைமை என்னாகும்ன்னு கேட்குறேன் டி! சுயநலவாதி”
“கொஞ்ச நாள் எல்லாரும் உன்ற மேல கோபமா இருப்பாங்க! அப்புறம் எல்லாம் சரியாப் போயிடும்”
“அதெப்பிடி நம்புற?”
“சரியாய்டும்! காலம் எல்லாத்தையும் சரி பண்ணிடும்”
“……….”
“ரகு…”
“ம்ம்”
“என்ன பதிலே சொல்ல மாட்டேங்குற?”
“உன்ற திட்டத்துல எங்கேயெல்லாம் ஓட்டையிருக்குன்னு யோசிச்சிட்டிருக்கேன்”
“யோசி யோசி”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், இதை மறந்துட்ட பார்த்தியா?”
“என்ன?”
“மாப்பிள்ளை ஓடிப் போனதும், சினிமால வர்ற மாதிரி வேற எவனையாவது பிடிச்சு உனக்குக் கட்டி வைச்சுட்டாங்கன்னா?”
“அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல!”
“ஒரு வேளை அப்பிடி நடந்தா?”
“மருந்தை குடிச்சு சூசைட் அட்டெம்ப்ட் பண்ண வேண்டியது தான்”
“ப்ச், அதையே சொல்லாதடி! பயமா வருது எனக்கு”
“……….”
“மோகனா…”
“சொல்லு..”
“விளையாட்டையெல்லாம் விட்டுப்போட்டுக் கொஞ்சம் சீரியஸா பேசுவோமா?”
“நான் பேசுன அத்தனையும் விளையாட்டாவா தெரியுது உனக்கு?”
“இதெல்லாம் நடப்புக்கு ஒத்து வராத விஷயம் டா மோகன்”
“ஏன் ஒத்து வராது?”
“நம்ம குடும்ப கௌரவம்ன்னு ஒன்னு இருக்குடா மோகன்! உன்றப்பனும்,என்றப்பனும் தங்களோட உழைப்பாலயும், ஒழுக்கமான நடத்தையாலயும் சம்பாரிச்சு வைச்சது அது! ஒரே நாள்ல அதை என்றனால கெடுக்க முடியாதுடா! இந்த வீட்டுப் பெரியவங்களோட மனசு வாடக் கூடாதுன்னு, இந்தக் கல்யாண ஏற்பாட்டுக்கு சம்மதம் சொன்ன நான், அவங்க நெஞ்சைப் பிடிச்சுக் கீழ விழறதுக்குக் காரணமாவேனா?”
“…………”
“என்றனால இதுக்கு ஒத்துக்க முடியாது. சாரி” என்றவன்.. கன்றிய முகத்துடன் நின்றவளிடம் ஒரு பார்வையைச் செலுத்தி விட்டு.. விறுவிறுவெனச் சென்று விட்டான்.
அதன் பின்பு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முயலவில்லை.
இடையில் அவளது விசா விவகாரம் பற்றித் தெரிந்து கொண்ட ஜீவன், ரகுவரனிடம் கூற.. ‘கல்யாணம் முடியற வரை அவ எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டாங்ண்ணா” எனச் சொல்லி முடித்து விட்டான்.
யாருக்காகவும்,எதற்காகவும் காத்திருக்காமல் ஓடிய காலம்.. கடைசியில்… விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் வந்து நின்றது.
முதல் நாள் மாலை நிச்சயதார்த்த விழாவில் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்தபடி ரகுவரனோட நின்றவளை.. ஒட்டுமொத்தக் குடும்பமும் திருப்தியுடன் பார்க்க.. பூர்ணி ஒரு படி மேலே சென்று.. ‘என்ற தங்கச்சி டி நீ’ என்று முத்தம் கொடுத்துச் சென்றாள்.
இதுவரை வந்த பின்பு, பெரிதாக என்ன செய்து விடப் போகிறாள் என்ற எண்ணத்தில், அவளைப் பற்றியக் கவலை மறந்து.. நீல நிற பட்டுப் புடவையில் தன்னருகே வந்து நின்ற பூர்ணியை ரசித்தபடித் தன் திருமணக் கொண்டாட்டத்தில் ஐக்கியமாகி விட்டான் ஜீவரஞ்சன்.
சுவாமிநாதனும்,துளசிநாதனும் வந்தவர்களை கவனிப்பதில் பிஸியாகியிருக்க.. கணபதியின் கண்கள் மகளையே சுற்றி வந்தது.
நடக்கும் அத்தனையிலும் அவளது ஒட்டாத் தன்மை அப்பட்டமாகத் தெரிய, மண்டபத்திற்கு வந்ததிலிருந்துத் தன் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காத ரகுவரனைக் கண்டு, தேவையில்லாமல் இதில் இவனைச் சிக்க வைத்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்ற.. கவலையுடன் காட்சியளித்தார் அவர்.
சடங்குகள் முடிந்து பெண்ணும்,மாப்பிள்ளையும் அவரவர் அறைக்குச் செல்லலாம் எனக் கூறப்பட்ட வேளை “எல்லாரும் தூங்குனதும் மாடிக்கு வா” என்று அவளிடம் முணுமுணுத்து விட்டுத் தன் அண்ணனுடன் சென்று விட்டான் ரகுவரன்.
அதன் பின்பு உண்டு,உடை மாற்றி, அனைவரும் உறங்கும் வரைக் காத்திருந்த மோகனா ஓசையின்றி மண்டபத்தின் மாடியேறினாள்.
அவளுக்காகக் காத்து நின்றிருந்தவன் கொலுசொலி கேட்டு அவளைத் திரும்பி நோக்கினான்.
ஆலிவ் நிறத்தில் சில்க் புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் கனமான ஒற்றைச் சங்கிலி, காதில் தொங்கட்டான்கள், புருவ மத்தியில் சின்னதாய் வட்டப் பொட்டு, எப்போதும் அவள் இறுக்கிக் கட்டி வைத்திருக்கும் கூந்தல், இன்று காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
நின்று நிதானமாய் தலை முதல் கால் வரை அவளைப் பார்வையால் வருடியவன்.. சுருக்கிய புருவங்களுடன் தன் முகம் பார்த்தவளைக் கண்டு வலது கையை மடக்கி வாயில் வைத்து “ம்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்தான்.
“வரச் சொல்லிட்டுப் பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்?”
“நீ ரொம்ப அழகாயிருக்கன்னு அர்த்தம்”
“என்ன?” – அவன் முணுமுணுத்தது அவள் காதுகளை எட்டவில்லை போலும்!
“என்ன யோசிச்சு வைச்சிருக்க?”
“எதைப் பத்தி?”
“கல்யாணத்தை நிறுத்துறதைப் பத்தி”
“அதைப் பத்திக் கேட்க.. உனக்கு எந்த உரிமையும் இல்ல! முடியாதுன்னு சொல்லி முறுக்கிட்டுப் போன தான?, இப்ப என்னத்துக்குக் கேள்வி கேட்குற?”
“காரணமாத் தான் கேட்குறேன். பதில் சொல்லு”
“………..”
“சொல்றா மோகன்.. ப்ளீஸ்..”
-அவன் கெஞ்சிக் கேட்டதாலோ என்னவோ.. அவனை முறைத்தபடி இடுப்பில் செருகி வைத்திருந்த பாட்டிலை எடுத்து நீட்டினாள்.
முகம் சுருங்க.. பல்லைக் கடித்தவன்.. வெடுக்கென அந்த பாட்டிலைப் பிடுங்கி விசிறியடிக்க..
“ஏய்..ஏய்…ஏய்ய்ய்” எனக் கத்தியவள்..
“ஏன் டா அதை உடைச்ச?” – எனக் கோப மிகுதியில் அவன் சட்டையைப் பிடிக்க.. தன் காலரில் பதிந்திருந்த அவளது கைகளை இறுகப் பற்றியவன்..
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு அவ்ளோ பெரிய கஷ்டமா டா மோகன்?” எனக் கேட்டான்.
“………….”
“நான் மைக்கேலைப் போய்ப் பார்த்தேன்”
“……..” – எதுக்கு என்பதைப் போல் பார்த்தவளிடம்..
“உனக்கு என்னைத் தான பிடிக்கல?, அதான் அவனை மாப்பிள்ளையாக்குனா.. நீ ஒத்துக்குவியோன்ற நம்பிக்கைல” என்றவனைக் கண்டு பற்றியிருந்தக் காலரை இறுக்கியவள்..
“முட்டாளே…” என அடிக்குரலில் கர்ஜித்ததும்..
“ஆனா.. அங்க ஸ்டெல்லா… அதான் அவர் லவ்வர்! அவர் கூட இருந்ததைப் பார்த்து எதுவும் பேசாம திரும்பி வந்துட்டேன்” எனக் கூற.. ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டவள்..
அவன் காலரைப் பற்றி முன்னும்,பின்னும் இழுத்தபடி..
“அவன் கிட்ட மட்டும் நீ பேசியிருந்தன்னா.. உன்னை வெட்டிப் பொலி போட்டிருப்பேன்” எனக் கூற..
“அதான் பேசலியே?, என்ற கழுத்தை விட்றா மோகன்” என்றான்.
ஒரு வித இயலாமையோடு அவனைப் பின்னே தள்ளியபடிக் காலரிலிருந்துக் கைகளை விலக்கிக் கொண்டவள்.. இழுக்கத் தொடங்கிய மூச்சை சமன்படுத்த முயற்சித்தபடி மறுபுறம் திரும்பி நிற்க..
“நீ சொன்ன மாதிரி, அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும், நான் மண்டபத்தை விட்டுப் போயிட்றேன் டா மோகன்” – என்றவனின் குரல் கேட்டுப் பட்டென அவன் புறம் திரும்பினாள்.
விரிந்த விழிகளுடன் தன்னை நோக்குபவளை… சலனமற்ற முகத்தோடு நோக்கியவன் கைகளைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.
“நி…நிஜமாவா?”
“…………” பதிலற்றுத் தோளைக் குலுக்கியவனின் அருகே அவசரமாய் வந்து நின்றவள்.. கட்டியிருந்த அவன் கைகளைப் பற்றிக் கொண்டு
“தேங்க்ஸ்! தேங்க்ஸ்! ரொம்ப… ரொ..ம்ப.. தேங்க்ஸ் ரகு..” – என்று குதூகலிக்க.. அவள் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்க முடியாமல் அசைவற்று நின்றான் ரகுவரன்.
“தனியா சமாளிச்சுடுவியா?”
“அதெல்லாம் சமாளிச்சுடுவேன்!”
“நீ ஒழிஞ்சா மட்டும் போதும்ன்றியா?”
“ப்ச், லூசாட்டம் பேசாத”
“ரொம்ப நாளா உன் கிட்ட ஒன்னுக் கேட்கனும்ன்னு நினைச்சேன்! கேட்கட்டுமா?
“என்ன?”
“ஏன்…. நான்.. வேண்டாம்?”
“புரியல”
“என்ற கூடக் கல்யாணம் வேணாம்ன்னு ஏன் நினைக்குற”
“உன்ற கூட மட்டுமில்ல! எவன் கூடவும், என்றனால இப்போதைக்குக் கல்யாணம்ன்றதைப் பத்தி யோசிச்சுக் கூடப் பார்க்க முடியாது. எனக்குப் படிக்கோனும்! தொழிலைப் பார்க்கோனும்! பிசினஸ் வுமன்னு பேர் எடுக்கோனும்”
“சரி, கல்யாணத்தைப் பத்தி எப்போ யோசிப்ப?”
“ம்ம்ம்ம்ம், குறைஞ்சது 5,6 வருஷமாகும்”
“5,6 வருஷம் கழிச்சு.. நீ என்னைத் தான் கட்டிக்கோனும்ன்ற நிலைமை வந்தா என்ன செய்வ?”
“கண்டிப்பா நோ தான் சொல்லுவேன்”
“ஏன்?”
“உனக்கும்,எனக்கும் ஒத்து வராது டா ரகு! உனக்கு ஞாபகம் இருக்கா?, நாம சின்ன வயசுல ஃபேக்டரிக்கும் போகும் போது, நான் உள்ள இருக்கிற மெஷினையெல்லாம் ஆர்வமா பார்ப்பேன்! ஆனா.. உன்ற ஆர்வமெல்லாம் ஃபேக்டரி வாசல்ல முளைச்சு நிற்குற பூ மேல தான் இருக்கும்! இது போதாதா உனக்கும்,எனக்குமான வித்தியாசத்தைச் சொல்ல?”
அவளது பதிலில் ரகு என்ன மாதிரி உணர்ந்தானோ தெரியவில்லை! ஒரு நொடி முகம் மாற.. எங்கோ நோக்கியபடி நின்றவன்.. பின் பெருமூச்சுடன் அவள் புறம் திரும்பி..
“யாருக்கும் எதுவுமாகாதுன்னு நீ எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்க! உன்னை நம்பி.. உனக்காகத் தான் நான் போறேன்! உன் அமெரிக்க ஆசைல.. மாமாவைக் கை விட்டுடாத! அவர் ரொம்பப் பாவம்.. உன்ற கிட்ட சொல்ல முடியாத பல வேதனைகளை மனசுல சுமந்திட்டிருக்க ஆளு!– எனக் கூற..
அவன் செல்கிறான் என்ற உற்சாகத்தில்… அவன் கூறிய அனைத்திற்கும் தலையாட்டி நின்றவளைக் கண்டவன்.. திரும்பி நடக்கத் தொடங்க.. அவசரமாய்..
“ரகு..” என்றழைத்து நிறுத்தியவள்.. ஓடி வந்து.. அவனருகே நின்று.. அவன் கையைப் பற்றிக் குலுக்கி.. “ரொம்ப ரொம்ப நன்றி!! நீ எனக்கு செஞ்ச இந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்” எனக் கூற..
தன் கைக்குள் அடைபட்டிருந்த அவள் கரத்தை இறுக்கியபடி.. அவளைத் தன்னிடமிருந்து விலக்க முயற்சிக்காமல்..
“நீ இப்படியெல்லாம் பண்ணேனா.. எனக்குப் போகத் தோணாது டா மோகன், அப்புறம் நாளைக்கு பட்டு-வேஷ்டி சட்டையோட மாப்பிள்ளையா உன்ற பக்கத்துல ஜம்முன்னு உட்கார்ந்துடுவேன்” எனக் கூற..
வெடுக்கெனக் கையை உதறி அவனை விலக்கித் தள்ளியவள்.. முறைத்து நிற்க..
“நிஜமா தான்! மாமாவுக்காக மட்டும் தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு உன்ற கிட்ட சொன்னேன்! ஆனா.. இப்போ.. இப்போ… மாமாவுக்காகன்னு மட்டும் தோணல டா மோகன்” – என்றான்.
முகம் இறுக… விழியை உயர்த்தி குற்றம் சாட்டும் பார்வையுடன் அவனை நோக்கியவளைக் கண்டு.. தலையைச் சிலுப்பிக் கொண்டவன்.. தன்னை மீறி உதிர்த்த வார்த்தைகளால்.. எரிச்சலுற்று.. பின் சங்கடப்பட்டு.. அவள் முகம் காண முடியாமல்.. விறுவிறுவெனத் திரும்பிச் சென்று விட்டான்.
மறுநாள் காலை பூர்ணி-ஜீவனின் திருமணம் முடியும் வரை உடனிருந்தவன்.. அதன் பின்பு எவரும் எதிர்பாரா விதமாகக் காணாமல் போயிருந்தான்.
மண்டபம் முழுக்கத் தேடியும் அவன் கிடைக்காமல் போக.. உடனே ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அவனைத் தேடக் கிளம்பிய ஜீவனைத் தடுத்த கணபதி “வேண்டாங்கண்ணு” என்று விட.. அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் மொத்தக் குடும்பமும் ஸ்தம்பித்தது.
வந்திருந்தோரிடம் ஏதேதோ காரணங்களைச் சொல்லி.. அவர்களது துக்க வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, அவதூறு பேசியவர்களைப் பொறுத்துக் கொண்டு மண்டபத்தைக் காலி செய்து அனைவரும் வீடு வர.. அதுவரையிருந்தத் தைரியம் மறைந்து.. தளர்ந்து போய் சோபாவில் அமர்ந்த கணபதியினருகே மொத்தக் குடும்பமும் வந்து நின்றது.
“இவ தான் எதையோ செய்யப் போறா-ன்னு நான் நினைச்சேனுங் மாமா! ஆனா.. ரகு… அவனுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லீங்களா மாமா?”
-விடாது புலம்பியபடிக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தப் பூர்ணியைச் சமாதானப் படுத்த முடியாமல்.. பெரியவர்களினருகே வந்தான் ஜீவன்.
“மாமா.. எதுவும் நினைக்காதீங்க! அவன் எங்கேயும் போயிருக்க மாட்டான்! இங்க தான் எங்கேயாவது சுத்திட்டிருப்பான்! விருப்பமில்லைன்னு சொன்னவங்களை பிடிச்சு வைக்க நினைச்சது நாம! நம்ம மேல தப்பை வைச்சுக்கிட்டு அவங்களைக் குத்தம் சொல்லிப் பிரயோஜனமில்ல” என்ற ஜீவனிடம் மறுத்து எதுவும் பேசாமல் அவர் அமைதி காக்க..
பாறையாய் இறுகிக் கிடந்த முகத்தோடு.. கூண்டுப் புலியாய் கூடத்தில் நடந்து கொண்டிருந்தத் தந்தையை.. என்ன சொல்வதெனத் தெரியாமல் அருகே வந்து “ப்பா..” என்றான் ஜீவன்.
“ஒழுக்கங்கெட்டப் பிள்ளையை வளர்த்ததுக்கு.. நியாயமாப் பார்த்தா.. நான் இன்னிக்குத் தூக்குல தொங்கிருக்கோனும்! என்னத்துக்கு இந்த மானங்கெட்ட உசுரை சுமந்துக்கிட்டு நிற்கிறேனோ தெரியல,”
“ப்பா.. ஏன்ப்ப்பா இப்பிடி பேசுறீங்க”
“வாயைத் திறந்து எதிர்த்துப் பேசுனவளே, கடைசில அடங்கிக் கல்யாணத்துல அமைதியா நின்னுட்டா! ஆரம்பத்துல இருந்து அமைதியா.. அமுக்கினியாட்டம் இருந்து போட்டு.. உன்ற தம்பி என்ன காரியம் பண்ணிப் போட்டான் பார்த்தயல்ல”
“…………”
“வரட்டும் அவன்! காலை ஒடிச்சு முடமாக்கிப் போட்றேன்” – என்றவர் இன்னும் தகாத வார்த்தைகளால் அவனைத் திட்டத் துவங்க.. தூர இருந்து மாமனின் கோபத்தைக் கண்ணுற்ற மோகனாவுக்கு உள்ளே கலங்கத் தொடங்கியது.
‘என்ன சொல்லி மாமனின் கோபத்தைத் தணிக்கவென அவள் நகம் கடித்த சமயம்..
‘மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா.. என்ற தங்கச்சியை யாரு கட்டிக்குவா’ – என்ற புலம்பலோடு பூர்ணி அடுத்த அழுகைப் படலத்தைத் தொடங்கியிருந்தாள்.
‘எவனும் கட்டிக்கலன்னா, இவ புருசனை எனக்குக் கட்டி வைப்பாளாமா! அட இவ யார்றி இவ! எரியுற தீயுல எண்ணெயை ஊத்துறவ! எனக் கொதித்த மோகனா.. “பூர்ணி அழுகையை நிறுத்து முதல்ல! கல்யாணமான அன்னிக்கே யாராவது இப்பிடிக் கண்ணீர் வடிப்பாங்களா?” என்று சத்தமிட்டாள்.
வீடே ஸ்தம்பித்த நிலையிலிருந்த சமயம்.. மாலை ஆறரை மணி போல் வீட்டிற்குள் பிரவேசித்த வேலனைக் கண்டு.. அருகே சென்ற ஜீவன்..
“அவன் இருக்குற இடம் தெரிஞ்சதா வேலண்ணா?” எனக் கேட்க.. மறுப்பாய்த் தலையசைத்தவர்.. தவிப்புடன்..
“முதல்ல டிவியைப் போடுங்க தம்பி” என்றார்.
“எதுக்குங்ண்ணா?” என்றவனைக் கண்டு ஒட்டு மொத்தக் குடும்பமும் இவர்களிருவரை நோக்க..
“போடுங்க தம்பி” என்றவரின் வற்புறுத்தலால் மோகனா டிவியை ஆன் செய்ய.. அங்கே திரையின் கீழே சென்று கொண்டிருந்த செய்தியைக் கண்டு ஒட்டு மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் நின்றது.
மாலை 4 மணியிலிருந்துத் தொடங்கி கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலைப் பற்றி செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
அன்று வருகை தரவிருந்த பிரதமரைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்தோடு.. கார்,இரு சக்கர வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தக் குண்டு வெடித்தில் பலர் உயிரிழந்து விட்டதாக செய்தி கூற.. நடுங்கிப் போய் நின்றவளுக்குப் பதட்டத்தில் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
செய்தியைக் கண்டு அதிர்ந்த நிலையில் ஆளாளுக்கு ஒரு புறம் சிலையாக நிற்க.. வியர்த்து வழிந்த உடலுடன்.. “து..து..துளசி….” என ஈனஸ்வரத்தில் அழைத்த கணபதி.. சோபாவில் மயங்கிச் சரிந்திருந்தார்.
“மாமா…” “சித்தப்பா…” “கணபதி..” “அப்பா….”-வென பதறியடித்துக் கொண்டு அவரை நெருங்கிய அனைவரும்.. நொடியும் தாமதிக்காமல் அவரை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அந்தக் களேபரத்திலும் தம்பியைத் தேடும் பொறுப்பை வேலனிடம் ஒப்படைத்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்த ஜீவன், அழுது புலம்பியப் பெண்களைச் சமாதானப்படுத்தி.. ஆடிப்போய் நின்ற பெரியவர்களுக்கு ஆறுதல் கூறி.. டாக்டரிடம் சென்றான்.
டாக்டரைச் சந்தித்து விட்டு வந்தவன் துளசியிடமும், சுவாமிநாதனிடமும் சென்று.. “நாளைக்கே ஆபரேஷன் வைச்சுக்கலாம்ன்னு டாக்டர் சொல்றாருங்ப்பா” எனக் கூற…
“என்ன சொல்றீங் மாமா?, என்ன ஆபரேஷன்?” எனக் குழம்பி நின்ற பூர்ணி, மோகனாவிடம் இனியும் மறைப்பதில் பிரயோஜமில்லையென அனைத்தையும் கூறினான் ஜீவன்.
முகம் இறுக… மௌனமாகிப் போன மோகனா அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் விறைத்துப் போய்.. நின்றாள்.
மருந்தின் வீரியத்தால் உறங்கத் தொடங்கியத் தந்தையை மௌனமாய் நோக்கி.. இறுகிய முகத்துடன் வெளியே வந்தாள்.
வாசலில் வேலனுடன் பேசிக் கொண்டிருந்த ஜீவனைக் கண்டு அவசரமாய் அருகே ஓடியவள்.. “ரகு.. ரகுவைப் பத்தி எதுவும் தெரிஞ்சதுங்களா மாமா?” எனக் கேட்டாள்.
தவிப்பில் அலைபாய்ந்த விழிகளுடன் மூச்சிரைக்கத் தன்னருகே நின்று கேள்வி கேட்டவளைச் சந்தேகமாய் நோக்கிய ஜீவன் இல்லையெனத் தலையாட்ட, சற்று முன்பு கருணாநிதி நகரில் வெடித்த வெடிகுண்டு செய்தியைப் பற்றி மருத்துவமனையின் டிவி திரையில் ஓடிய செய்தியைக் கண்டு.. அஞ்சி நடுங்கி காற்று போன குரலில் “மா…..மா” என்றழைத்த மோகனா, ஆதியிலிருந்து அந்தமாகக் கடகடவெனத் தங்களது திட்டத்தைப் பற்றிக் கூறி.. அன்று காலை ரகுவரன் மண்டபத்திலிருந்துக் கிளம்பிச் சென்றதை எடுத்துரைத்து..
“இ…இ..இப்பிடி நடக்கும்ன்னு தெரியாதுங் மாமா! எ..எனக்காகத் தானுங் அவன் மண்டபத்தை விட்டுப் போனான்! பொழுது சாய்ஞ்சதும் வீட்டுக்குத் திரும்பிடுவேன்னு சொன்னானுங், இ..இப்போ.. எ..எங்க இருக்கானோ தெ..தெரியல... ரொ..ரொம்ப பயமா இருக்குங் மாமா” – எனக் கையைப் பிசைந்து கொண்டு கூற..
அவள் சொல்லச் சொல்ல முகம் கல்லாய் இறுக.. நொடியில் சிவந்த கண்களில் கோபம் கொப்பளிக்க அவளை உறுத்து விழித்த ஜீவன், தன் ஆத்திரத்தை வார்த்தைகளால் வடிக்க வாயெடுத்த சமயம்..
“ண்ணா…..” என்ற குரல் கேட்டு சட்டெனத் திரும்பி நோக்கினான்.
திட்டப்படி மாலை வீடு திரும்ப ரகுவரன் எண்ணிய வேளையில்.. நகரில் நடந்து கொண்டிருந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் பீதியைக் கிளப்பி விட்டிருக்க, ஒரு வழியாகக் கிடைத்த வண்டியிலேறி எட்டு மணியைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தவன், கணபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் குருவம்மா கூறிய செய்தியில் பதறி.. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தான்.
வெளியில் தைரியமாகக் காட்டிக் கொண்டிருந்தாலும், வெடிகுண்டு செய்தி கேட்டதிலிருந்து பதட்டத்திலும்,பயத்திலும் இறுகிப் போயிருந்த ஜீவனுக்கு, மோகனா கூறியவற்றால் உண்டான கோபமும், அவன் திரும்பி வந்ததில் உண்டான ஆசுவாசமும் ஒன்று சேர..
“மாமாவுக்கு என்னாச்சுங்ண்ணா?, அவர் எப்பிடி இருக்காரு?” – எனக் கேட்டபடி தன்னருகே நெருங்கியவனைக் கண்டு.. ஆத்திரம் அதிகரிக்க.. ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தான்.
முழுக் கோபத்தையும் வெளிக்காட்டி, பலமாக அவன் அறைந்ததில் கண்ணில் பூச்சி பறக்க.. ஒரு நொடி தடுமாறி நின்ற ரகுவரன்.. கன்னத்தைப் பற்றிக் கொண்டுப் பல்லைக் கடித்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க..
அதிர்ச்சியில் இமை நடுங்க நின்றிருந்த மோகனாவின் புறம் திரும்பிய ஜீவன்..
“உன்னை அடிக்க முடியாதல்ல, அதான்” எனக் கூறி..
“அவ சொன்னா, யாரையும்,எதையும் யோசிச்சுப் பார்க்காம நீயா முடிவெடுத்துக் கிளம்பிடுவியா டா?, பின் விளைவுகளைப் பத்தி யோசிக்க வேணாம்?, மாமாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் பொலி போட்ருவேன் சொல்லிப் போட்டேன்” – என இருவரையும் நோக்கிக் கர்ஜித்தவன்.. கோபமாக உள்ளே செல்லத் திரும்புகையில்.. ஒட்டு மொத்தக் குடும்பமும் அவன் பின்னே நின்றிருந்தது.
ஜீவன் போட்ட சத்தத்தில் வெளியே வந்தத் துளசி.. கன்னத்தைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தத் தன் சின்ன மகனைக் கண்டு.. அதுவரையிருந்த கலக்கம் தீர.. ஆசுவாச மூச்சை வெளியிட்டவர்.. அவசரமாய் தலை முதல் கால் வரை அவனை ஆராய்ந்துப் பின்.. கோபம் பொங்க.. இறுக்கியக் கைகளுடன் அவனை வெறித்துப் பார்க்க..
“ப்பா.. எதுவாயிருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாமுங்க, இப்போ மாமாவைக் கவனிக்கலாம். வாங்கப்பா” – என்ற ஜீவன் சிலையாய் நின்றவரின் கையைப் பற்றித் தள்ளிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
“எங்க சாமி போன? ஊருக்குள்ள குண்டு வெடிப்பு,அது,இதுன்னு பேசிக்கிறானுங், மனசு பதறிப் போச்சு கண்ணு” – என அவனைக் கட்டிக் கொண்டுக் கண்ணீர் வடித்த சுவாமிநாதனின் தோளை நீவி சமாதானப்படுத்திய ரகுவரன்.. “எனக்கு ஒன்னும் இல்லீங்கய்யா, நான் நல்லாத் தான் இருக்கேன்” எனக் கூற..
“ஏன் டா தம்பு இப்பிடிப் பண்ணுன, சித்தப்பா எவ்ளோ உடைஞ்சு போயிட்டாரு தெரியுமா?, “ என்றபடியே அவன் தோளைப் பற்றிக் கொண்டு அழுது புலம்பிய பூர்ணியிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றவன், மறந்தும் கூட மோகனாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.
அதுவரையிருந்த பயம்,கலக்கம்,குற்ற உணர்வு, அவனைக் கண்டதும் உண்டான நிம்மதி, தந்தையின் உடல்நிலை, வீட்டாரின் கோபம், ஜீவன் கூறிய வார்த்தைகளென அனைத்தும் மோகனாவைப் புரட்டிப் போயிருக்க.. ஏறி,இறங்கிய மூச்சுடன்.. கண்ணீரை உள்ளடக்கியபடி சிவந்து கிடந்த கண்களோடு.. அந்தக் காரிடாரின் மூலையில் கால்களைக் கட்டிக் கொண்டு.. ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் மோகனா.
அதன் பின்பு மோகனாவைத் தவிர ஒட்டு மொத்தக் குடும்பமும் கணபதியின் அருகிலிருக்க.. அவனைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்ட கணபதி..
“நீ நல்ல படியா திரும்பி வந்திடுவன்னு எனக்குத் தெரியுங்கண்ணு!” – எனக் கூற…
மாமன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைக்கப் போகும் உறுத்தலில் முதல் நாள் மாலையிலிருந்து அவர் முகம் பாராமல் தவிர்த்து வந்த ரகுவரன், இன்று தன் கையைப் பற்றிக் கொண்டு படுக்கையில் சாய்ந்திருப்பவரைக் கண்டு.. குற்ற உணர்ச்சி அதிகரிக்க.. கன்றிய முகத்தை மறைக்க முடியாது..
“நா….நான்.. என்னை மன்னிச்சிடுங் மாமா” என்றான்.
மறுத்துத் தலையசைத்தபடி அவன் முகம் பார்த்தவர்…
“தப்புப் பண்ணுனவளே அமைதியா இருக்கும் போது, நீ என்னத்துக்குக் கண்ணு மன்னிப்புக் கேட்குற?” என்றதும்.. அதிர்ந்து அவரை நோக்கியவனிடம்..
“உன்னைக் காணோம்ன்னதும் தோணுச்சு கண்ணு, காரணம் அவளாத் தான் இருப்பா-ன்னு” என்றார் அவர்.
அவசரமாய் மறுத்தபடித் தலையை இருபுறமும் அசைத்தவன்“அ..அவளுக்கு எதுவும் தெரியாதுங் மாமா! எனக்கு இந்த ஏற்பாட்டுல விருப்பமில்லாததால நானாத் தானுங் போனேன்” -என்றவனைக் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாகப் பார்த்தபடி நின்றிருந்தான் ஜீவன்.
முகத்தில் நம்பாத்தன்மையை காட்டி விட்டு ஜீவனை ஏறிட்ட கணபதி “அவளைக் கூப்பிடு கண்ணு” என்றார்.
“மோகனா..” என்றபடித் தன் முன்னே வந்து நின்ற ஜீவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல்.. அவள் தலை குனிந்தே அமர்ந்திருக்க..
“உன்றப்பா உன்னைக் கூப்பிடுறாரு, வா” என்றான்.
அவள் அசையாது அமர்ந்திருக்க..
“உன்ற கிட்டத் தான் பேசிட்டிருக்கேன்! எந்திரிச்சு வா” என்று அவன் அடிக்குரலில் கர்ஜிக்க.. பட்டென எழுந்து நின்றவள், குனிந்தத் தலையுடனே அவனைப் பின் தொடர்ந்தாள்.
தந்தையின் அருகே.. அவரது கையைப் பற்றியபடி அமர்ந்திருந்த ரகுவரனை ஒரு நொடி ஏறிட்டவள்.. பின் தந்தையை நோக்க..
“என்னைப் பெத்ததுக்கு, உங்களைப் பெருமைப் பட வைப்பேனுங்ப்பான்னு நீ சொன்னதை நான் கடைசி வரை நம்புனேன் கண்ணு” – என்றவரைக் கண்டு முகம் சுருங்க..
“அதுக்குத் தான் நீங்க எனக்கு வாய்ப்பே கொடுக்கலயே” – என்று அவள் முணுமுணுக்க..
“வாய்ப்பு கொடுக்க மாட்டேன்னு எங்க சொன்னேன்?, கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வாய்ப்பை உருவாக்கிக்கன்னு தான சொன்னேன்?”
“…………..”
“ஜீவா…”
“சொல்லுங் மாமா”
“என்ற கழுத்துல இருக்குற செயினைக் கழட்டு சாமி” – அவர் கூறியதும் யோசனையுடன் செயினைக் கழட்டியவனிடமிருந்துத் தன் கையில் வாங்கியவர்.. அதை ரகுவரனிடம் நீட்டி..
“இதை அவ கழுத்துல போடுவியா கண்ணு?” – எனக் கேட்டார்.
“மாமா….” – என ஒரு சேரக் குரல் கொடுத்தபடி அவரருகே நின்றனர் ஜீவரஞ்சனும்,ரகுவரனும்.
“நீங்க எடுத்த முடிவும் ,உங்க பிடிவாதமும் தானுங் மாமா இவ்ளோ பிரச்சனையும் இழுத்து விட்ருக்கு! எதுவாயிருந்தாலும் நாளைக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் பார்த்துக்கலாமுங்க! தயவுசெஞ்சு புதுசா எந்தக் குட்டையையும் குழப்பப் பார்க்காதீங்க” – என்று ரகுவரன் படபடக்க..
“அவன் சொல்றது சரி தானுங் மாமா! இப்போ எதையும் பேச வேண்டாமுங்க! எதுவாயிருந்தாலும் உங்க உடல்நிலை சரியாகி நீங்க வீட்டுக்கு வந்தப்புறம் பார்த்துக்கலாமுங்க” என்று ஜீவனும் தம்பிக்கு ஒத்து ஊத..
கண்களை மூடிக் கொண்டு எச்சில் விழுங்கிய கணபதி.. விழியோரத்தில் துளிர்த்த நீர்த்துளியுடன்.. உதடு நடுங்க..
“அப்படின்னா.. என்ற விருப்பத்துக்கு, நான் வளர்த்துன பசங்கக் கிட்ட எந்த மதிப்பும் இல்லையா?” எனக் கேட்க.. ‘அய்யோ’ என்றானது ரகுவரனுக்கு.
“மாமா.. என்னை சங்கடப்படுத்தாதீங்க! உங்க மேல நான் வைச்சிருக்கிற அன்பு,பாசம்,மதிப்பு,மரியாதையைப் பத்தி உங்களை விட யாரும் தெரிஞ்சு வைச்சிருக்க வாய்ப்பில்ல! இப்பிடிப் பேசாதீங்க” – என ரகு சமாதானம் கூறிய வேளை..
“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க! ஜீவனில்லாம கிடக்குறவன், கெஞ்சிக் கேட்டும் கூட உங்க மனசு இறங்கலயா?, இரக்கமில்லாத பாவிங்க” என்ற துளசிநாதன் துண்டை உதறியபடி அனைவரையும் முறைத்து விட்டு வெடுக்கென வெளியேறி விட..
“செயினைக் கைல வாங்கு டா ரகு! சித்தப்பா சொல்றதைக் கேளு! “ என்று முணுமுணுத்தப் பூர்ணி…
அவள் கூறியதைக் காதில் வாங்காமல்.. கல்லாய் நின்றவனைக் கண்டு..
“பெத்தவங்க மனசை நோகடிச்சு, அவங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிற நீங்கல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடா” – எனத் திட்டி விட்டு அழுத படி அறையை விட்டு வெளியேறி விட..
கையிலிருந்த செயினை இறுகப்பற்றியபடிக் கண்களை அழுந்த மூடிக் கொண்டு.. நெஞ்சு ஏறி,இறங்க உள்ளே எழுந்த ஏமாற்றத்தை,வலியை அடக்குபவரைக் கண்டு மனம் இளக.. என்னவானாலும் சரி என்கிற எண்ணத்தோடு.. வந்து சேர்ந்த இந்த ஒரு மணி நேரத்தில்.. முதன் முறையாக.. மோகனாவை நிமிர்ந்து நோக்கினான் ரகுவரன்.
இரு கைகளையும் இறுக்கிக் கொண்டு, தரையை வெறித்தபடி.. மூச்சு வாங்க அவள் நின்றிருந்த கோலம்.. கலக்கத்தைக் கொடுத்தாலும்..
வேறு வழியின்றி கணபதியின் கையிலிருந்த சங்கிலியை வாங்கியவன்.. பட்டெனக் கண் விழித்து அவனை வியப்புடன் நோக்க்கியவரிடம்..
“இதை நான் இவ கழுத்துல போட்டு விட்டா.. சந்தோஷப்படுவீங்களா மாமா?” எனக் கேட்டான்.
“ரொ…ரொம்ப..” – கண்ணீர் வழிந்த விழிகளுடன் உணர்ச்சி பொங்கக் கூறியவரிடம் புன்னகைக்க முயன்று தோற்று.. அவளருகே சென்றவன்..
ஆத்திரத்தை அடக்க முயன்றும் முடியாமல், மூக்கு விடைக்க, வெம்பித் தணிந்த நெஞ்சுடன்.. நேர் வெறித்தபடி நின்றிருந்த மோகனாவைத் தன் புறம் திருப்பி.. பல்லைக் கடித்துக் கொண்டுத் தன் முகம் பார்த்தவளைக் கண்டு கொள்ளாது… தயக்கம் துறந்து.. அவள் கழுத்தில் சங்கிலியை அணிவித்தான்.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் மருமகனை நோக்கிக் கை உயர்த்தியவர்.. அவன் தன் கையைப் பற்றிக் கொண்டதும்.. அவன் கைகளை இறுக்கித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி.. கண்ணில் வழிந்த நீரோடு புன்னகைக்க.. பதிலுக்குப் புன்னகைத்தவன்.. நிமிர்ந்து மோகனாவை நோக்கினான்.
மருமகனைத் தொடர்ந்துத் தானும் மகளை நோக்கியவரைக் கண்டு இகழ்ச்சியாக உதட்டை வளைத்த மோகனா.. தன் கழுத்திலிருந்த சங்கிலியை இறுகப் பற்றி..
“கார்னர் பண்ணிட்டீங்கள்லப்பா?, திருப்தியா இருக்குங்ளா?, நினைச்சதைச் சாதிச்சிட்டோம்ன்னு??,” எனக் கூறி.. தன்னை மீறி வழிந்த இரு துளிக் கண்ணீரைத் துடைத்தெறிந்தவள்..
“ஒன்னு சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோங்க! ஏன்டா, இதைப் பண்ணோம்ன்னு நிச்சயம் ஒரு நாள் வருத்தப்படுவீங்க. நான் வருத்தப்பட வைப்பேன்” எனக் கூறித் தொடர்ந்து..
“என்ற கோபத்தை நான் திருப்பிக் காட்றதுக்காகவாது, நல்ல படியா ஆபரேஷனை முடிச்சுப் போட்டு நீங்க திரும்பி வருவீங்கன்னு நம்புறேன்” என்றவள்.. அதிர்ச்சியாய் அவள் முகம் நோக்கிய அனைவரையும் புறக்கணித்து விட்டு விறுவிறுவென மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டாள்.
அவளது கோபம் பழகிய ஒன்று தான் என்பதாலோ என்னவோ, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கணபதி, துளசியின் கைகளைப் பற்றிக் கொண்டு “நாம சம்மந்திகளாய்ட்டோம் டா துளசி” என்று கூற.. முழுதாகச் சந்தோசப்பட முடியாமல்.. அவரிடம் அளவாய்ப் புன்னகைத்துத் தன் மகன்களின் முகத்தை நோக்கினார் துளசி.
மாமனுக்காக, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது லேசான புன்னகையோடு நின்றிருந்தனர் இருவரும்.
அதன் பின்பு அடுத்த நாள் ஆபரேஷனுக்காக அவரைத் தயார்ப்படுத்தும் பணியில் செவிலியர்கள் இறங்கி விட.. பெருமூச்சோடு அனைவரும் வெளியே வந்தனர்.
“ஜீவா.. பூர்ணியையும்,உங்கய்யாவையும் அழைச்சிக்கிட்டு நீ வீட்டுக்குப் போ! நான் இங்க தங்கிக்கிறேன்” – என்ற துளசி, கவனமாய் ரகுவரனை தவிர்த்துப் பேச.. எரிச்சலாகிப் போன ஜீவன்..
“அப்போ இவனை என்ன செய்யட்டும்ங்கப்பா? அப்டியே தெருவுல விட்றட்டுமுங்களா?, ஏனுங்ப்பா அவர் தான் உடல்நிலை சரியில்லாம, நினைச்சதை சாதிக்கோனும்ன்னு சிறுபிள்ளைத்தனமா பிடிவாதம் பிடிக்கிறாருன்னா, நீங்க என்னங்ப்பா?,” – என மாமனின் மீதிருந்தக் கோபத்தைத் தந்தையிடம் காட்டி எகிறி விட்டான்.
“என்னத்த டா சாதிச்சுப் போட்டோம்?, பெத்த பசங்களுக்கு நல்லது நினைக்குறது குத்தமா டா?”
“ஆமா, நல்லது நினைச்சு கிழிச்சுட்டீங்க நீங்க!” எனத் திட்டியவன் “இனி அவ என்ன செய்யக் காத்திருக்காளோ” என முணுமுணுக்க..
“என்றா முனங்குற?” – கோபத்தோடு கேட்டவரிடம்..
“ஒன்னுமில்லீங்ப்பா! நீங்க அவங்களோட வீட்டுக்குக் கிளம்புங்க, நானும், அவனும் இங்க இருந்துக்கிறோம்” என்று முடித்தான் ஜீவன்.
“வேணாம்! இன்னிக்குத் தான் கல்யாணமாயிருக்கு உனக்கு! நீ ஆஸ்பத்திரில தங்குனா நல்லாயிருக்காது, நீ கிளம்பு! நான் இருந்துக்கிறேன்”
“இப்பத் தான் உங்களுக்கு ஞாபகம் வருதுங்களா? எனக்கு இன்னிக்குத் தான் கல்யாணமாயிருக்குன்னு?, என்ற கோபத்தைக் கிளறாம பேசாம கிளம்புங்ப்பா!” எனக் கூறி.. “வந்துட்டாரு பெருசா சாங்கியம் பார்க்குறதுக்கு” என்று புலம்பியபடி சென்றவனுக்கு.. விருப்பமில்லை என்று தெரிந்தும், பிரிக்க முடியா பந்தத்தில் அவர்களிருவரையும் சிக்க வைத்தப் பெரியவர்களின் மீது ஆத்திரம் வந்தது.
மோகனா அமைதியாகத் திருமணத்தில் கலந்து கொள்ளத் தொடங்கியதும், ஒருவாறு இதை அவள் ஏற்றுக் கொண்டு விட்டாள் போலும் என்றே எண்ணினான் ஜீவரஞ்சன்! ஆனால்.. இத்தனை நடந்து விட்ட பிறகு, மீண்டும் அவர்களை இழுத்துப் பிடித்து வைத்துப் பெரியவர்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என்றே தோன்றியது அவனுக்கு.
“இவனும் என்னை எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிட்டானுங்ப்பா, நான் பெத்த,வளர்த்த எதுவுமே சரியில்லையோன்னு தோணுதுங்ப்பா “ என்று சுவாமிநாதனிடம் கூறிய துளசி “என்ற நண்பனோட நான் தங்குறதுக்கு இவனுங்க என்ன எனக்கு அனுமதி கொடுக்குறது?” என்று திட்டியபடியே காரிடாரிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
தந்தையும்,தமையனும் சொற்போரில் ஈடுபட்டிருப்பதைக் கண்டபடி.. அவர்களைக் கடந்து வந்த ரகுவரன்.. ரிஷப்சனிலிருந்த ஃபோன் மூலமாக வீட்டிற்கு அழைத்தான்.
மோகனா எங்கே – என்ற அவன் கேள்விக்கு “பெருசு,பெருசா பெட்டியைத் தூக்கிக்கிட்டு எங்கேயோ கிளம்பிட்டா கண்ணு, எங்க போறன்னு நான் கேட்டதுக்கு எந்தப் பதிலும் சொல்லல சாமி, ரொம்பக் கோபமா போறதாட்டம் இருந்துச்சு கண்ணு, எனக்குக் கையும் ஓடல,காலும் ஓடல!” – என்று குருவம்மா புலம்பித் தவிக்க.. அவரைச் சமாதானப்படுத்தி ரிசீவரைத் தாங்கியில் பொருத்தியவன்.. பெருமூச்சை வெளியிட்டபடி நின்றான்.
“என்றா?” – சிலையாய் நின்றவனின் தோள் தொட்டுக் கேட்ட ஜீவனிடம்..
“அவ கிளம்பிட்டாளாட்ருக்குங்ண்ணா” எனக் கூற..
“போகட்டும் விடு” என்றான் ஜீவன்.
பதிலற்று நின்றவனைக் கண்டுப் பிடரியைக் கோதிய ஜீவன்.. “வேலண்ணா” என்று எரிச்சலுடன் அழைக்க..
அவனைத் தடுத்த ரகுவரன்.. “நான் போறேனுங்ண்ணா” என்று விட்டு.. வெளியேறினான்.
மருத்துவமனையிலிருந்து விரைந்த ரகுவரன், நேராக வந்தடைந்தது விமானநிலையத்திற்கு. பெரிய பெரிய பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வெளியேறியதாக குருவம்மா கூறியதைக் கேட்டு, ஒரு அனுமானத்தில் அவளைத் தேடி ஏர்போர்ட்டில் சுற்றித் திரிந்தவனை, ஏமாற்றாமல், பயணிகளோடு பயணிகளாய் வெய்ட்டிங் லவுஞ்சில் அமர்ந்திருந்தாள் மோகனா.
ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டபடி, வியர்த்து வழிந்த நெற்றியைத் துடைத்துக் கொண்டவன், அவளருகே சென்றமர்ந்தான்.
அருகில் அமர்ந்தவனை உணர்ந்தும் கூட, நேர்ப் பார்வையாய் வீற்றிருந்தவளை ஒரு நொடி நோக்கியவன் பின்.. தானும் முகத்தைத் திருப்பிக் கொண்டு கைகளைக் கட்டியமர்ந்தான்.
முழுதாய் இரண்டு நொடிகள் அமைதியாய்க் கடக்க.. எரிச்சலுடன் பேச்சைத் தொடங்கினாள் மோகனா.
“எதுக்கு வந்த இப்போ?”
“டாட்டா காட்டத் தான்”
வெடுக்கெனத் திரும்பி மூக்கு விடைக்க அவள் முறைக்க.. அவள் முகத்தைப் பாராமல் நேராகப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், அவள் முறைப்பைக் கண்டுத் தோளைக் குலுக்கினான்.
“கவலைப்படாத! உன்னை இங்கயிருந்து கூட்டிப் போய் கார்னர் பண்ற ஐடியா-ல்லாம் எனக்கு இல்ல” – என்றவன் தொடர்ந்து.. கம்மிய குரலில்..
“நான் என்ன செஞ்சிருக்கனும்ன்னு எதிர்பார்க்குற நீ?” – எனக் கேட்டான்.
“……………..”
“விடிஞ்சா ஆபரேஷன், கையில ட்ரிப்ஸோட நொந்து போய் படுத்திருக்கிற மனுஷன் கிட்ட என்னத்த எதிர்த்துப் பேச சொல்ற?”
“…………”
“நீ எங்க போனாலும் சரி, என்ன பண்ணாலும் சரி, இனி யாரும் எதுவும் கேட்கப் போறதில்ல” – என்றவனை இடைமறித்தவள்..
“நீங்க என்னைக் கேள்வி கேட்குற உரிமையை இழந்து பல மணி நேரமாச்சு” என கர்ஜிக்க..
“கத்தாத” என அடிக்குரலில் முணுமுணுத்து அவளை அடக்கியவன்.. ஏறி,இறங்கிய மூச்சுடன்.. சிவந்த கண்களும்,வெளுத்த முகமுமாய் அமர்ந்திருந்தவளைக் கண்டு.. உள்ளே ஏதோ செய்ய..
“நானும் தான் டா மோகன் கஷ்டப்பட்றேன்! உனக்குப் புரியலையா?” எனக் கேட்க.. இகழ்ச்சியாய் அவனை நோக்கி உதட்டை வளைத்தவளிடம்..
“இப்பிடி சிரிச்சா என்ன அர்த்தம்?” என்று அவன் கேட்ட வேளை.. சென்னை செல்லும் விமானத்திற்கான அறிவிப்பு வர.. அவனைக் கண்டு கொள்ளாமல்.. பெட்டியைத் தள்ளிக் கொண்டு நடந்தவளையே பார்த்தபடி பிடரியை அழுந்தக் கோதியவன்.. பின் விழி மூடி தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அவள் பின்னே ஓடினான்.
கோபத்தை நடையில் காட்டி.. வேகமாய் சென்று கொண்டிருந்தவளின் கையைப் பற்றி அவன் நிறுத்த.. சிவந்த விழிகளுடன் திரும்பி அவனை ஏறிட்டாள் அவள்.
ஓடி வந்ததில் மூச்சு வாங்க.. எச்சில் விழுங்கியவன்.. ஒரு நொடி தரையைப் பார்த்தபடி எதையோ யோசித்துப் பின் நிமிர்ந்து..
“மாமாவோட விருப்பத்தை நிராகரிச்சு.. பிடிவாதமா என்றனால இது.. இது.. அத்தனையையும் மறுத்திருக்க முடியும்! ஆனா.. ஏன்னு தெரியல… எனக்கு… எனக்கு மறுக்கத் தோணல” – எனக் கூற…
தன்னைப் பற்றியிருந்த அவன் கையை ஒரு நொடி வெறித்து நோக்கியவள்.. மறுநொடி பலமாக உதறி.. அவனை விட்டு இரண்டடித் தள்ளி நின்று.. தீயாய் ஒரு பார்வை பார்த்து..
“நீ என்னைப் பார்க்குற பார்வைல இருக்குற வித்தியாசத்தை புரிஞ்சுக்கக் கூட முடியாத அளவுக்கு.. என்னை முட்டாள்ன்னு நினைச்சியா?” – எனக் கேட்க….
தடுமாறித் தவித்தக் கண்களை அவளிடம் காட்டாது.. வேறு புறம் நோக்கியவனிடம்..
“இஷ்டமில்லன்னு முகத்துக்கு நேரா சொல்ற பொண்ணைக் கூட உன்றனால இந்த மாதிரி பார்க்க முடியுது இல்ல?” – என்று அவள் தொடர்ந்து அவனைக் கீழிறக்க..
கோபம் பெருக.. கன்றிய முகத்தோடு.. கைகளை இறுக்கியவனுக்கு.. உடல் விறைத்தது.
“என்னை வளர்த்தவரையும்,என்னைப் பெத்தவரையுமே மதிக்காம விலகிப் போற நான், இந்த சங்கிலிக்கு மட்டும் மரியாதை கொடுப்பேன்னு நினைக்குறியா?, ஃப்ளைட் ஏறி உட்கார்ந்ததும் நான் பண்ணப் போற முதல் வேலையே இந்த கருமத்தைக் கழட்டித் தூக்கி எறியுறது தான்”
வெறுப்போடு அவள் உதிர்த்த வார்த்தைகளை உணர்ந்து.. அதிர்ந்த விழிகளோடு ஒரு நொடி அவள் முகம் பார்த்தவன், மறு நொடி ‘சரி தான் போடி’ என்ற ரீதியில் இளக்காரமான பார்வையைப் பதிலாகக் கொடுத்து விட்டு.. மிதமிஞ்சிய கோபத்தில்.. விருட்டெனத் திரும்பி நடந்து விட்டான்.
