அத்தியாயம் - 7

து ஆண்களுக்கான உலகம்ன்னு நிரூபிக்க, காலகாலமாக இந்த சமூகம்.. பெண்களுக்கு ‘இது’ சாத்தியமில்லன்னு சொல்லி முன் வைக்குற சில விஷயங்கள் இருக்கு.

அதுல முதல் விஷயம்.. இரவு நேரத்துலத் தனியா வெளியே நடமாடுறது பெண்களுக்குப் பாதுகாப்பானதல்லன்னு சொல்றது!

இப்போ, பை நிறையப் பணத்தை வைச்சுக்கிட்டு ஒரு ஆண், தன்னந்தனியா நடுநிசில வெளியே நடமாடுறான்னு வைச்சுக்குவோம்! அவன் கிட்டப் பணம் இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிற இரண்டு கயவர்கள், அவனை சுத்தி வளைச்சு அடிச்சு,நொறுக்கி சாகடிச்சுப் பணத்தைப் பிடுங்கிட்டு போயிட்றாங்க!

இதே சூழ்நிலையில இப்போ ஒரு பெண்ணைப் பொருத்துவோம்! கை நிறைய பணத்துக்குப் பதிலா, ஆண்டவன் அவளுக்கு, மடி நிறைய கற்பைக் கொடுத்திட்டதால, ஆண் கிட்டப் பணத்தைப் பறிக்கிற அதே ரெண்டு கயவர்கள், இவ எதிர் பாலினம்ன்றதால கற்பைப் பறிக்கிறாங்க!

ஆக, கைல ஆயுதமெதுவும் இல்லாம, நிராதரவா நிற்குற மனுஷன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்.. எண்ணிக்கையில் அதிகமா, தன்னை விட பலமா, ரெண்டு பேர் தாக்க வரும் போது, தங்களைக் காப்பாத்திக்க முடியாமத் தான் போகுது!

அப்டிப் பார்த்தா.. இரவு நேரத்துல வெளியே நடமாடுறது தவறுன்னு ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுவா சொல்லி வைக்கிறது தான நியாயம்? ஏன் பெண்ணுக்கு மட்டும் முட்டுக்கட்டைப் போடுறாங்க?,

ரெண்டாவது விஷயம்… ரஜினிகாந்த்தும்,பூர்ணிமா பாக்கியராஜூம் போட்டி போட்டுக்கிட்டு ஒரு பாட்டு பாடுவாங்களே! ஹே… உன்னைத் தானே-ன்னு! போட்டியோடு முடிவுல ரஜினிகாந்த் சட்டையைக் கழட்டி வீசுவார், பூர்ணிமா ஒரு பெண் என்பதால, அப்பிடிப் பண்ண முடியாது! அதனால அவங்க போட்டில தோத்துடுவாங்க! How funny!

நிர்வாணம்-ன்றது அவங்கவங்க மனசைப் பொறுத்தது! கூச்ச,நாச்சமெல்லாம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுவான ஒன்னு! வெட்கத்தை விட்டு ஒட்டுத் துணியில்லாமத் தைரியமா என்னால நடமாட முடியும்ன்னு சொல்ல ஆணாக மட்டும் தான் இருந்தாகனும்ன்னு இல்ல! அதுக்காக ‘ஆதம்-ஏவல்’ காலம் மாதிரி எல்லாரும் கழட்டிப் போட்டு சுத்துறது தான் புரட்சின்னு நான் சொல்ல வரல! இது ஆண்-ன்றதால என்னால முடியும், நீ பெண்-ன்றதால உன்றனால முடியாதுன்னு சொல்லாதீங்க!

வீட்டுப் பெண்களைத் தவிர்த்து, வேறு யாரையும் பார்த்தா.. உடனே சட்டையை எடுத்து மாட்டிக்கிற ஆண்கள் எத்தனையோ பேர் இருக்காங்க! அதே நேரத்துல கவர்ச்சியா உடை அணிய ஆசைப் பட்ற பெண்களும் இதே உலகத்துல தான் இருக்காங்க! அதனால, இது அவங்கவங்களோட சுபாவத்தைப் பொறுத்தது! இதுல ஆண்-பெண்ன்னு வித்தியாசம் பார்க்கிறதெல்லாம் முட்டாள்தனம்!

பெண்ணியம்,பெண்ணடிமைத்தனம்,பெண் சுதந்திரம் இதெல்லாம் நாமளே உருவாக்கி வைச்சிருக்கிற வெற்று வார்த்தைகள்! இது மனுஷங்களுக்கான உலகம்! அதுல ஆண்,பெண் என்கிற பிரிவெல்லாம் கிடையாது! இருக்கவும் கூடாது. ஆணோ,பெண்ணோ.. மனுஷனா இருக்கிறவங்களுக்கு... எந்த விஷயத்தையும் எதிர்த்து நிற்கத் துணிவு அவசியம்! துணிந்து விட்டால்.. எதுவும் சாத்தியம்!

-இவன்.

ன்றைய செய்தித் தாளில் பாதி பக்கத்தை அடைத்திருந்த ‘வாலி’ பட போஸ்டரைப் பார்வையிட்டபடி அமர்ந்திருந்த ரகுவரன் , நிமிர்ந்து எதிரேயிருந்த அறிவிப்புப் பலகையை நோக்கினான்.

சென்னையிலிருந்து கோவை வரும் விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கவிருப்பதாக அது கூற.. கையிலிருந்த செய்தித் தாளை கீழே வைத்து விட்டு விமான நிலையத்திற்குள் நடந்தான், முழுதாக ஒரு வருடம் கழித்து ஊர் திரும்பும் அவர்களது இல்லத்தின் கடைக்குட்டி சிங்கத்தை வரவேற்கும் பொருட்டு!

ன்று கோபமாக விமானநிலையத்திலிருந்து மருத்துவமனை திரும்பியவனிடம் மோகனா எங்கு சென்றிருக்கிறாள் என வீட்டினர் அனைவரும் விசாரிக்க.. ‘தெரியவில்லை’ என்பது போல் தலையாட்டியவன் மௌனமாக அமர்ந்து விட.. அவனது கோப முகத்தைக் கண்டு கொண்ட ஜீவரஞ்சனும், மேலும் கேள்வி கேட்டுத் துருவாமல் அமைதியாக நகர்ந்து விட்டான்.

அதன் பின்பு நண்பனை விட்டு நகர மாட்டேன் என அடம்பிடித்தத் துளசியுடன் தான் இருப்பதாகக் கூறி ஜீவரஞ்சனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ரகுவரன்.

சுவாமிநாதனோடு வீடு திரும்பிய பூர்ணி மற்றும் ஜீவனின் முகங்களில் புதிதாய் மணம் புரிந்த தம்பதிக்கானப் பூரிப்பு சிறிதுமில்லை. முழுக்க முழுக்க சோர்வும்,, சோர்வைத் தாண்டிய கவலையுமாய் கண் முன்னே நின்ற இருவரையும் வருத்தமாய் நோக்கிய சுவாமிநாதன் பின்.. ‘எல்லாம் சரியாய்டுமுங் அப்புச்சி, நீங்க சாப்ட்டுப் போட்டுப் படுங்க’ எனக் கூறிய பூர்ணியிடம் மௌனமாய் தலையசைத்து, அவளிட்ட உணவை உண்டு விட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டார்.

அவர் சென்றதும், பேருக்கு உண்டு விட்டுத் தன்னறையை நோக்கிச் சென்ற பூர்ணியைத் தடுத்து நிறுத்தினான் ஜீவரஞ்சன்.

“ஏனுங் மாமா?, ஏதாவது வேணுமுங்களா?” – துக்கமும்,தூக்கமும் கலந்திருந்த முகத்தோடுக் கேள்வியாய் தன்னை ஏறிட்டவளை.. துவாலையில் தன் ஈரக்கையைத் துடைத்தபடி ஆராய்ச்சியாய் நோக்கியவன்..

“எங்க போற?” எனக் கேட்டான்.

“தூங்குறதுக்குத் தான்”

“அங்க எங்க போற-ன்னு கேட்டேன்”

– புருவத்தைத் தூக்கி அவளது அறையைச் சுட்டிக் காட்டியபடி அவன் கேள்வி கேட்டதும், அதுவரையிருந்த சோர்வு மறைய.. படபடத்த விழிகளை இறக்கி விரல்களை நோக்கியபடி சங்கடமாய்த் தலை குனிந்தாள் பூர்ணி.

கையிலிருந்தத் துவாலையை நாற்காலியின் மீது எறிந்து விட்டு.. விரல்களை எண்ணிக் கொண்டு நின்றிருந்தவளின் தோளில் கையிட்டு.. “வா..” எனக் கூறி நடத்திச் சென்றான் ஜீவன்.

அவன் கையை விலக்க முயற்சித்தபடி “பெ..பெரியவங்களா பார்த்து சொல்லாம, நா…நாமளா இ..இதையெல்லாம் முடிவு பண்றது ரொம்பத் தப்புங் மாமா” – எனப் பேசிக் கொண்டே உடன் நடந்தவளிடம்..

“எதையெல்லாம்?” – என்று அவன் கேட்க..

“ப்ச், மாமாஆஆ” என முறைத்தாள் அவள்.

“பெரியவங்க பார்த்து சொல்லும் போது மத்ததெல்லாம் வைச்சுக்கலாம்! அதுக்காக உன்ற கழுத்துல தாலி கட்டி என்ற பொண்டாட்டியாக்குனதுக்குப் பிறகும், என்றனால தனியா படுத்துத் தூங்க முடியாது!”

சட்டமாகச் சொல்லியபடி அறைக் கதவைத் திறந்து, அவளையும் இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன்.. கதவைச் சாத்தி விட்டு குளியலறைக்குச் சென்று விட்டான்.

முதன் முறையல்ல, அவன் அறைக்குள் அவள் நுழைவது! ஆனாலும் புதிதாய் முளைத்த உணர்வுடன்.. தயக்கமாய் அவன் அறையை சுற்றி நோக்கியவள், ஆங்காங்கு அவன் பரப்பி வைத்திருந்தப் பொருட்களைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டு, ஒவ்வொன்றாய் எடுத்து உரிய இடத்தில் அடுக்கலானாள்.

ஜீவன் குளியலறையிலிருந்து வெளி வருகையில்.. கட்டிலில் கிடந்தத் துணிகளை மடித்து வைத்தபடி அவள் நின்றிருக்க.. அவளது பொறுப்புணர்வு கொடுத்த புன்னகையில்.. விரிந்த இதழ்களுடன் அவளருகே வந்து நின்றான் ஜீவன்.

“காலைல எத்தனை மணிக்குப் போகனுமுங் மாமா?”

“4 மணிக்கு”

“ம்ம்” – என்றவளின் கைகள் தன் போக்கில் துணிகளை மடித்த வண்ணமிருக்க “ப்ச்” என்றவன்..

“அதெல்லாம் அப்புறம் மடிச்சு வைச்சுக்கலாம்! முதல்ல படு, டயர்ட்-ஆ இல்லியா?” – எனக் கேட்டான்.

“ப்ச், தூக்கம் வரும்ன்னு தோணலங் மாமா”

“ஏன்?”

“சித்தப்பாவை நினைச்சுத் தானுங்! பாவம் அவரு!” –சுருங்கிய முகத்துடன் கூறியவளை ஏறிட்டவன்..

“மாமாவை நினைச்சு மட்டும் தானா?” – என அமைதியான குரலில் கேட்க.. நிமிர்ந்து அவனை நோக்கியவள்.. பொங்கிய கண்ணீரை அடக்கிப் படுக்கையில் அமர்ந்துப் பின் மூக்கு விடைக்க விழி நீரைத் துடைத்தெறிந்து..

“அ..அவளை நினைச்செல்லாம் நான் அழறதா இல்லீங் மாமா! அழுத்தக்காரி! சுயநலவாதி! பெத்தத் தகப்பன் மேல அக்கறை காட்டாம, வளர்த்தவங்களைப் பத்தின கவலையில்லாம தன் சந்தோசம் தான் முக்கியம்ன்னு கிளம்பிப் போயிருக்காளே! இவளை மாதிரி ஒரு பொண்ணை உலகத்துலயே பார்க்க முடியாதுங்” – என்று சீற.. கையைக் கட்டிக் கொண்டு அவளை நோக்கிய ஜீவன்..

“அப்போ மாமா மேல எந்தத் தப்புமில்லன்றியா?” – எனக் கேட்டான்.

“அவர் மேல என்னத் தப்பிருக்கு? பெத்த மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சதுத் தப்பா? இவளுக்கெல்லாம் என்ற தம்பு மாதிரி ஒரு மாப்பிள்ளை தேடுனாலும் கிடைப்பானா?”

“அவனை எப்போ அவ குறை சொன்னா?”

“அப்போ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லோனும்?”

“அவளுக்கு இஷ்டமில்லாத விஷயத்தைச் செய்யச் சொல்லி மாமா வற்புறுத்துனது தப்பு தான பூர்ணி?”

“என்னத்துக்கு இஷ்டமில்லாம போகோனும்?”

“என்னைத் தவிர வேற எவனையும் கை காட்டி இவனைத் தான் கட்டிக்கோனும்ன்னு உன்ற மாமா சொன்னா.. நீ ஒத்துட்டிருப்பியா?”

“ப்ச், மாமாஆஆ”

“கேட்கக் கூடப் பிடிக்கலை தான உனக்கு? அவளுக்கும் இதே மாதிரி இருந்திருக்கலாம்”

“நான் உங்களை விரும்புறேன், அதனால வேணாம்ன்னு சொல்லுவேன்! இவளுக்கு என்ன வந்ததாம்?”

“இவனை வேண்டாம்ன்னு சொல்ல, அவ இன்னொருத்தனை விரும்பியாகனும்ன்னு என்ன இருக்கு?”

“பின்ன என்ன தான் காரணமுங்?, எனக்குப் புரியவேயில்லங். சித்தப்பாவை ஹாஸ்பிடல் பெட்ல பார்த்தும் கூட அவளுக்கு மனசு இறங்கலியே..”

“சரி, நீ இப்பிடியே புலம்பிட்டிரு! நான் தூங்குறேன்”

“உங்களுக்கு இந்தக் கவலையெல்லாம் இல்லீங்ளா?”

“இருக்கு தான்! அதுக்காக சும்மா புலம்புனா சரியாப் போய்டுமா?”

“இல்ல தான்..”

“அப்புறம் என்ன, பேசாம படு”

“படு,படுன்னா எங்க படுக்குறது?, பீரோல இருக்குற துணியையெல்லாம் அள்ளிப் போட்டு இப்பிடி கட்டிலை நிரப்பி வைச்சிருக்கறீங்க?” – எரிச்சலுடன் கேட்டபடித் துணிகளைக் கை காட்டியவளிடம்..

“கல்யாணக் களேபரத்துல இதெல்லாம் சகஜம்டி” என்ற ஜீவன் ஒட்டுமொத்தத் துணிகளையும் ஒதுக்கிக் கீழே தள்ளி விட்டு.. அவள் கைப் பற்றியிழுத்துத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“கீழ கிடக்குறதை யாருங் மாமா எடுத்து வைக்குறது?”

“நீ தான்”

“அதுக்கு நான் மடிச்சு வைச்சுப் போட்டே படுத்திருப்பேனல்ல”

“காலைல பார்த்துக்கலாம். இப்பத் தூங்கு” – என்றவன் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள.. அவன் மார்பில் சாய்ந்தபடி ஒரு நொடி விழி மூடியவள்.. பின் நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.

“என்ன?”

“எ..எல்லாம் சரியாய்டுமுங்களா மாமா?”

கவலையைக் கண்களில் தேக்கிக் கேள்வி கேட்டவளை ஒரு நொடி இமைக்காது நோக்கிய ஜீவரஞ்சன், அவள் காதோர முடிகளை ஒதுக்கியபடி ஆம் என்பது போல் தலையாட்டி.. அவள் முகம் முழுதும் பார்வையால் வருட.. அவன் விழிகளில் தென்பட்ட மாற்றத்தை உணர்ந்து மெல்ல இமை தாழ்த்தியவளின் முகம் நிமிர்த்தி.. அவள் நெற்றியில் முத்தமிட்ட ஜீவன், அவளைத் தன்னோடு சேர்த்தபடித் துயிலில் ஆழ்ந்து விட்டான்.

றுவைசிகிச்சை முடிந்து ஒரு வாரம் கடந்த பின் ஓரளவு உடம்பு தேறி அன்று வீடு திரும்பியிருந்தார் கணபதி. அன்றைய நாளுக்குப் பிறகு மருத்துவமனையின் பக்கம் மோகனா எட்டிக் கூடப் பார்க்காததிலேயே புரிந்தது, அவளுக்குத் தன் மீதிருக்கும் கோபத்தைப் பற்றி!

எவரிடமும் அவள் குறித்தப் பேச்சை எடுக்கா விட்டாலும், மாமனின் கண்கள் மகளைத் தேடுவதைக் கவனித்த ரகுவரன், அவரிடம் வெளிப்படையாகவே “மோகனா இங்க இல்லீங் மாமா” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு ஒரு நொடி அமைதியானவர் பின் யோசனையுடன் சரியெனத் தலையசைத்தார்.

அதன் பிறகு அவளைப் பற்றி அவர் எதுவும் கேட்டுக் கொள்ளாவிட்டாலும், மகள் குறித்த கவலையில் அவள் ஆழ்ந்திருப்பது புரிந்து, அவரைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்று.. அவருடனே முழு நேரத்தையும் செலவிட்டான் ரகுவரன்.

ருத்துவமனையிலிருந்துத் திரும்பியதும் தன் வீட்டிற்குச் செல்கிறேன் என்று அடம்பிடித்தக் கணபதியைத் துளசிநாதன் முறைக்கத் தொடங்க… அவரை முந்திக் கொண்டு சித்தப்பனிடம்..

“அதெல்லாம் சரி வராதுங் சித்தப்பா, கொஞ்ச நாள் போகட்டுமுங்க! உங்க உடம்பு தேறுனதும் பொறுமையா அங்க போய்க்கலாமுங்! இந்த விஷயத்துல நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கப் போறதில்லீங் சித்தப்பா! டாக்டர் கிட்ட.. நீங்க என்னென்ன சாப்பிடோனும்ன்னு நான் லிஸ்ட் வாங்கிட்டு வந்திருக்கேனுங்! இனி நீங்க என்ற கண் பார்வையில தானுங் சித்தப்பா இருக்கோனும்” – என்று பூர்ணி ஸ்ட்ரிக்ட் ஆகக் கூறி விட.. வளர்த்த மகளாய் இருந்தாலும்.. அவளுக்குத் தன் மீதிருக்கும் பாசத்தை எண்ணிப் பூரித்துப் போனது கணபதிக்கு.

“சரி கண்ணு! நீ சொல்லிப் போட்டேல? இனி இங்கயே இருந்துக்கிறேன்! சரி தான?” – சிரிப்புடன் கேட்டவரை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஜீவன்.. டெலிஃபோன் அடித்ததும் எழுந்து சென்றான்.

“ரகு, என்ன நேரத்துக்கு என்ன மருந்து,மாத்திரையெல்லாம் கொடுக்கோனும்ன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துடு” – என ரகுவிடம் பேசிக் கொண்டிருந்தப் பூர்ணியின் மீது ஒரு பார்வையை வைத்தபடி ஃபோனைக் காதுக்குக் கொடுத்து “ஹலோ” என்றான்.

“ஹலோ.. ஜீவன் மாமா..”

-வெகு நாளுக்குப் பின் ஒலித்த மோகனாவின் குரல் கேட்டு ஒரு நொடி ஆசுவாச மூச்செழ.. கண்களை மூடி மூச்சை வெளியிட்டவன்.. பின் கார்ட்லெஸ்ஸைக் கையில் எடுத்துக் கொண்டு..

“ம், சொல்லு” – என்றபடி யாருடைய கவனத்தையும் கவரா வண்ணம் மெல்ல நகர்ந்து கொல்லைக்குச் சென்று விட்டான்.

“நான் ‘Boston’ வந்துட்டேனுங் மாமா”

குரலில் கொஞ்சமும் உறுத்தலின்றி.. என்னவோ வீட்டினர் அனைவரின் சம்மதத்துடனும் அமெரிக்க மண்ணை மிதித்திருப்பவள் போன்று வெகு சாதாரணமாக செய்தி கூறியவளை எண்ணி.. எப்போதும் போல் வியந்து..

“தெரியும்” என்றான் ஜீவன்.

“எப்படித் தெரியும்?”

“நீ புதன் கிழமை நைட் ஃப்ளைட் ஏறுனது வரை தெரியும்”

“அமெரிக்காவுலயும் ஸ்பை வைச்சிருக்கறீங்களா?”

“இல்ல! என்ற பவரெல்லாம் சென்னையோட எல்லை வரை தான்”

“பின்ன நான் இங்க என்ன பண்றேன், ஏது பண்றேன்னு எப்படித் தெரிஞ்சுக்குவீங்க?”

“நீயா சொன்னாத் தான் உண்டு”

“………….”

“ஹலோ…”

“அப்பா இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆயிட்டாருங்களா?”

“ம்ம், வந்துட்டாரு!”

“சரிங் மாமா”

“அவ்ளோ தானா உன்ற அக்கறை?” – நக்கலாய் வந்த அவன் கேள்வியை நிராகரித்து..

“இனி பூர்ணி பார்த்துக்குவாங் மாமா” என்றாள் அவள் கர்வத்துடன்.

அவள் நம்பிக்கையைக் கண்டு சிரிப்பு வந்தாலும் “எத்தனை பேர் அவரை அன்பால குளிப்பாட்டுனாலும், அவர் கண்ணு தேடுறது உன்னை மட்டும் தான்” – என உண்மை நிலையை எடுத்துரைத்தான் ஜீவன்.

“…….”

“மோகனா…”

“9 மாச கோர்ஸ்ங் மாமா! முடிச்சுப் போட்டு வந்துடுவேனுங்க.” – குரலில் லேசாய் கவலை தோய்ந்திருந்தாலும், உறுதியாய்க் கூறினாள் அவள்.

“……..”

“என்ற ஃப்ரெண்டு சித்ரா இருக்கா அல்ல, அவ வீட்ல தானுங் மாமா பேயிங் கெஸ்ட்-ஆ தங்கியிருக்கறேன்”

“பணத்துக்கு என்ன பண்றவ?”

“வித் ட்ரா பண்ணின காசு கைல இருக்குங் மாமா”

“அது தீர்ந்ததும் என்ன பண்ணுவ?”

“பார்ட்-டைம் வேலைக்குக் கேட்ருக்கேனுங்”

“அதெல்லாம் வேணாம்! நீ படிக்குற வேலையை மட்டும் பாரு! காசு நான் போட்டு விட்றேன்” – பாசத்தை வெளிக்காட்டிராத வண்ணம் கவனமாய்க் கூறினான் ஜீவன்.

“…………..”

“உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்றதோட அர்த்தம், உன்ற வீண் பிடிவாதத்துக்கும்,வெட்டிக் கோபத்துக்கும் நான் துணை நிற்கிறேன்றதல்ல!”

“நீங்களும் வீண் பிடிவாதம்ன்னு தான் நினைக்குறீங்களா மாமா?” – ஆதங்கத்துடன் மோகனா.

“இல்ல தான்! அதனால தான் உன்ற கிட்ட இவ்ளோ பொறுமையா பேசிட்டிருக்கேன்”

“பெத்தவங்க பார்த்து பண்ணி வைக்குற கல்யாணத்தை எதிர்க்குற ஆள் கிடையாதுங் மாமா நான்! ஆனா.. கட்டிக்கப் போறவங்களோட சம்மதத்தைக் கூட எதிர்பார்க்காம, அவங்களாவே முடிவு பண்ணது தப்புன்னு சொல்றேனுங் மாமா! கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராம போய், நாங்க நிம்மதி இழந்து, சந்தோஷத்தை இழந்து, மொத்தமா வாழ்க்கையையும் தொலைச்சிட்டு நின்னா பரவாயில்லையாங் மாமா?”

“உங்க விஷயத்துலப் பெரியவங்க மேலயும் தப்பு இருக்கு தான்”

“அவங்க மேல தான் ஒட்டுமொத்தத் தப்பும். என்றப்பாவோட உடல்நிலையைப் பத்தி என்ற கிட்ட ஏனுங் மாமா எல்லாரும் சேர்ந்து மறைக்கோனும்? கவலைப் படுவேன் தான், அழுவேன் தான்! அதெல்லாம் மனசுல இருந்து வர்ற பாசத்துனால! ஆனா… மூளை,மூளைன்னு ஒன்னு இருக்குங்ளே மாமா? அடுத்து என்ன செஞ்சு என்றப்பனைக் காப்பத்தலாம்ன்னு அது யோசிக்காமலா இருக்கும்? எனக்கு மட்டும் விஷயம் முன்னமே தெரிஞ்சுருந்தா, எப்படியாவது அப்பாவை ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைச்சிருப்பேனுங்! தேவையில்லாம இவ்ளோ பிரச்சனையும் வந்திருக்காதுங்”

“பிடிவாதம் பிடிக்குற குணம் உனக்கு மாமா கிட்டயிருந்து வந்திருக்காட்ருக்கு! அவரும் இதே மாதிரி தான், மோகனா கிட்ட என்ற உடல்நிலையைப் பத்திச் சொல்லக் கூடாதுன்னு சொல்லி என்ற கிட்ட அடம் பிடிக்காத குறையா நின்னாரு”

“பைபாஸ் சர்ஜரின்றதெல்லாம் இப்ப சாதாரணமாய்டுச்சுங் மாமா!”

“அது உனக்கும்,எனக்கும் தெரியும்! உன்றப்பாவுக்குப் புரியுமா?, மோகனா.. அவங்க எல்லாரும் பழைய காலத்து ஆளுங்க! காய்ச்சல்,தலைவலின்னா கூட ஆஸ்பத்திரிப் பக்கம் தலை காட்டாதவங்க! அப்பேர்ப்பட்ட ஆளு கிட்ட உனக்கு இதயத்துல கோளாறு, ஆபரேஷன் பண்ணோனும்ன்னு சொன்னா.. பயப்பட மாட்டாரா?, ஆபரேஷன் முடிஞ்சு நல்ல படியா திரும்பி வருவோமா, மாட்டோமான்றதெல்லாம் அவர் நினைப்புலயே இல்ல! இது எல்லாத்துக்கும் முன்னால எப்படியாவது மகளை செட்டில் பண்ணிடோனும்ன்னு நினைச்சாரு அவரு! பிறந்த, வளர்ந்து வீட்லயே வாக்கப்பட்டா.. நீ நல்லாயிருப்ப-ன்ற எண்ணத்துல ரகு கிட்டப் பேசி சம்மதம் வாங்குனாரு”

“………………”

“மூளை உனக்கு மட்டுமில்ல! எல்லாருக்கும் தான் இருக்கு! எல்லாருமே, எப்பவுமே.. மூளையிலிருந்து மட்டுமே யோசிக்கறதில்ல! நாம எல்லாரும் மனசாட்சி இருக்குற ஆளுங்க! பாசத்துக்கும்,குடும்பத்துக்கும் கட்டுப்பட்டவங்க! இது உனக்கு கட்டுப்பெட்டித்தனமா தெரியலாம்! ஆனா.. இப்படித் தான், உறவு, சொந்தம்,பந்தம்ன்றதெல்லாம்! இந்தப் பின்னலுக்குள்ள தான் நீயும்,நானும் பிறந்தோம்! வளர்ந்தோம்! வாழ்ந்துட்டும் இருக்கோம்! இதை விட்டு வெளியே வந்தா.. நாம வெறும் இயந்திரங்களாத் தான் நடமாடுவோம்”

“………….”

“அவன் உன்ற கழுத்துல போட்ட செயினை என்ன பண்ணுன?”

“………”

“கழட்டி வீசிட்டியா?”

“…………”

“ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ! உன்றப்பனோட பிடிவாதத்தையும், ரகுவரனோட கடமை உணர்வையும் தாண்டி அந்தச் செயின்ல உன்றம்மையோட ஆசீர்வாதம் இருக்கு! என்ன சொல்றேன்னு புரியுதா? அந்தச் செயின் உன்றம்மையோட தாலிக்கொடில செஞ்சது! உன்றப்பனோட வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியா.. உயிரோட இருக்குற வரைக்கும், அவங்க தன் கழுத்துல சுமந்திட்டிருந்தத் தாலி அது! அவங்க செத்தும் கூட, பொண்டாட்டியை மறக்க முடியாத உன்றப்பன், அதை சங்கிலியா மாத்தி.. கழுத்தோடவே போட்டுட்டுத் திரிஞ்ச நினைவுச் சின்னம் அது!”

“………….”

“அதை மதிக்கிறதும்,மதிக்காம தூக்கி எறியறதும் உன்ற இஷ்டம்! சொல்லோனும்ன்னு தோணுச்சு! சொல்லிட்டேன்!” – என்ற ஜீவன்.. அவளது பதிலை எதிர்பாராமல் ஃபோனை கட் செய்து விட்டு.. தலையைக் கோதிக் கொண்டான்.

பெருமூச்சுடன் திரும்பியவனின் முன்னே கையை பின்னே கட்டியபடி நின்றிருந்தார் துளசிநாதன்.

“என்னங்ப்பா?”

“எங்க இருக்காளாமா?”

“யாரு?”

“ம்க்க்க்கும்” – கனைத்தபடி அவர் மகனை முறைத்துப் பார்க்க.. கடுப்பு குறையாது அவரை நோக்கியவன்..

“அமெரிக்கால இருக்கா” – எனக் கூற.. அதிர்ச்சியை வெளிப்படுத்தி ஒரு நொடி அமைதியாய் நின்றவர்..

“உனக்கு அவ அமெரிக்கா போற விஷயம் ஏற்கனவே தெரியுமா?” எனக் கேட்டார்.

“தெரியுமுங்ப்பா”

“ஏன் என்ற கிட்ட சொல்லல?”

“விஷயம் தெரிஞ்ச உங்க நண்பரே, உங்கக்கிட்ட எதையும் பகிர்ந்துக்கல! அதானுங்ப்பா நானும் எதுவும் சொல்லல”

“ம்ம்” என்றவர் அவள் எங்கு தங்கியிருக்கிறாள், பணத்துக்கு என்ன செய்கிறாள் என விவரம் கேட்டு விட்டு இறுகிய முகத்துடனே விலகிச் சென்றார்.

கணபதியிடம் மோகனாவைப் பற்றிய விவரத்தை ஜீவரஞ்சன் கூற..

“கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு போகத் தான் திட்டம் போட்டிருக்கான்னு நான் நினைச்சேன் கண்ணு” என்றவரிடம்.. பதில் கூறாமல்.. அவளைப் பற்றிய பேச்சைக் கேட்க விரும்பாதவன் போன்று, இறுகிய முகத்துடன் அறையிலிருந்து வெளியே சென்றத் தம்பியை நோக்கினான் ஜீவன்.

தவிர்க்க நினைப்பவர்களை இணைத்து வைப்பது தானே விதியின் வேலை?

ன்று காலை உணவின் போது கணபதியுடன் போராடிக் கொண்டிருந்தப் பூர்ணியை நோக்கிச் சிரித்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான் ரகுவரன்.

“இன்னும் எத்தனை நாளுக்கு சாமி இட்லியையும்,இடியாப்பத்தையும் திங்குறது?, முறுகலா ரெண்டு தோசையை சுட்டுப் போட்டா, உன்றப்பன் சந்தோஷப்படுவேனல்ல?”

வாய் விட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்த கணபதியை முறைத்தபடி..

“எண்ணெய் விட்டப் பலகாரமெல்லாம் செரிக்க நேரமாகுமுங் சித்தப்பா! நீங்க இடியாப்பம் தான் திங்கோனும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கிறாருங்” – எனப் பூர்ணி கூற..

“அடப் போ கண்ணு! “ என்றவர் சலித்தபடி உணவை உண்டு எழுந்து செல்ல..

“என்னத்துக்கு டா வெறும் வட்டலைத் தேய்ச்சிட்டிருக்கவன்?, சட்னி போட்டுக்க வேண்டியது தான?, மில்லுக்குப் போக நேரமாகலியா?” – எனக் கூறி ரகுவின் தட்டில் சட்னியை ஊற்றியவளைப் புன்னகையுடன் நோக்கினான் ரகு.

காட்டன் புடவையில், ஒற்றைப் பின்னலுடன், நெற்றியில் புருவ மத்திக்கு மேலே பெரிய்ய்ய பொட்டு வைத்து, வகிட்டில் குங்குமத்துடன்.. அழகே உருவாய் நின்ற பூர்ணியிடம்..

“அம்சமா இருக்க பூர்ணி” என்று அவன் மலர்ந்த முகத்துடன் கூற..

“அடப் போடா” என சலித்தபடி கூறினாலும்.. லேசாய் பளிச்சிட்ட அவள் விழிகள்.. இருவரது பேச்சையும் கவனித்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிந்த ஜீவனை நோக்கியது.

“ம்க்க்க்கும்” – எனச் செருமியபடியே வந்தமர்ந்தவன்.. தன் தட்டில் பரிமாறியப் பூர்ணியிடம்..

“நீ சாப்ட்டியா?” என வினவியபடி உண்ணத் துவங்க..

“சாப்பிட்டேனுங்” என்றாள் அவள்.

“இன்னிக்கு லோடு வந்திறங்குது. ராத்திரிக்கு நான் வர லேட் ஆகும். எனக்காகக் காத்திட்டிருக்காம நீ சாப்பிட்டுத் தூங்கு. சரியா?”

“எத்தனை மணியாகும்?”

“ப்ச், எனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்காதன்னு சொன்னேன்”

“நான் தான் பகல்ல ஒரு தடவை உறங்கி எந்திரிக்கிறேனல்ல, உங்களுக்காகக் காத்திருக்கிறதால, என்ற தூக்கம் ஒன்னும் கெட்டுடாது”

“என்னவோ பண்ணு”

“ரொம்பத் தான் சலிச்சுக்கிறீங் மாமா” – என்றவள் அவனை முறைத்து விட்டு முசுட்டு முகத்துடன் அடுக்களைக்குள் நுழைந்து கொள்ள.. அவசரமாய்த் தட்டிலிருந்ததை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு.. அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றவன்.. என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்தினானோ.. சிறிது நேரத்தில் புன்னகையுடன் வெளி வந்த ஜீவன், தன் பின்னே நின்றவளிடம் “கிளம்புறேன்” எனக் கூறி விடைபெற.. அழகான சிரிப்புடன் தலையாட்டினாள் அவள்.

இருவரையும் கண்டும் காணாமல் கவனித்தபடி டிவி திரையில் பார்வையைப் பதித்திருந்த ரகுவரனுக்கு.. மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைய.. அவர்களிருவரையும் அவன் நோட்டம் விடும் தருணமெல்லாம் தன் மனநிலை குறித்து ரன்னிங் கமெண்டரி கொடுக்கும் மோகனாவின் நினைவு வர.. எச்சில் விழுங்கி… அதை உள்ளே அனுப்பியவன், எழுந்து கணபதியின் இல்லம் நோக்கிச் சென்றான்.

கணபதி மீண்டும் தொழிலுக்கு வரத் தொடங்கி விட்டதால், அவரும்,ரகுவரனும் பழையபடி கணபதியின் வீட்டில் ஜாகையை மாற்றி விட்டிருந்தனர்.

ஹால் சோபாவில் கிடந்தக் ‘Computer – Basics’ புத்தகத்தைக் கையில் எடுத்து.. அதைப் பார்வையிட்டபடி நின்றவனை டெலிஃபோன் அழைக்க.. புத்தகத்திலிருந்துக் கண்களை எடுக்காமல், ரிசீவரைக் காதுக்குக் கொடுத்தவன் “ஹலோ” என்றான்.

எதிர்ப்புறம் அமைதியாக இருக்கவும்.. மறு முறை.. அவன் “ஹலோ..” என்கையில்..

“நான் என்றப்பா கிட்டப் பேசோனும்” – என்ற மோகனாவின் குரல் ஒலித்தது.

மெலிதாய் அதிர்ந்த இதயத்தோடு திடுக்கிட்டு ஒரு நொடி ரிசீவரைக் காதிலிருந்து விலக்கி, மீண்டும் காதுக்குக் கொடுத்தவனுக்கு.. தலை முதல் கால் வரை ஓர் சிலிர்ப்பு ஓட.. தடுமாறி நின்ற மூளையை நிலைப்படுத்தி.. கடைசியாக அவள் கூறிச் சென்றதை மனதில் முன்னிருத்தி கோபத்தை மேலே எழுப்பி “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியவன்..

“அப்பிடி யாரும் இங்க இல்ல” என்றான்.

“என்றா திமிரா?” – பல்லைக் கடித்தபடி அவள்.

“உனக்கு இருக்கிறதை விடக் கம்மி தான்”

“ப்ச், உன்ற கிட்ட எனக்கென்னப் பேச்சு?, என்றப்பா எங்க? நான் அவர் கிட்டப் பேசோனும்”

“என்றி பெருசா என்றப்பா,என்றப்பா-ங்குற? ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கையாக் கிடந்த மனுஷனை எட்டிக் கூடப் பார்க்கல?, ஒரு மகளா அவருக்கு எந்தச் சேவகமும் பண்ணல?, யாரும் தேவையில்லன்னு கிளம்பிப் போனவளுக்கு, 3 மாசத்துக்கப்புறம் என்ன அக்கறை வேண்டிக் கிடக்கு?”

“அக்கறை தான்! 3 மாசத்துக்கப்புறம் வந்தது தான்! இப்ப என்ன-ன்ற?”

“இந்தத் திமிரு தான் டி உன்னை இப்பிடி ஒரு நிலைமைல உட்கார வைச்சிருக்கு?”

“எப்பிடி நிலைமைல உட்கார வைச்சிருக்குன்னு பார்த்த நீ?”

“யாருமே இல்லாம, தன்னந்தனியா.. நாடு விட்டு நாடு.. எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கேயல்ல?”

“என்னை என்ன உன்னாட்டம் நினைச்சியா? எனக்கு கிடைச்சத் தனிமையை,சுதந்திரத்தை முழுசா எஞ்சாய் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கேன் நான்”

“சந்தோஷமாயிருக்கியா?”

“ஆமா”

“மனசாட்சியில்லாம பேசாத?”

“இப்ப எதுக்கு மனசாட்சியையெல்லாம் இழுக்குற?”

“பின்ன, சுதந்திரம் கொடுக்காம, இங்க எல்லாரும் உன்னை இழுத்துப் பிடிச்சு வைச்சிருந்ததாட்டம் பேசுற?”

“ஆமா தான?, பிடிக்கல, விருப்பமில்லன்னு சொல்லியும் உன்னை எனக்குக் கட்டி வைக்கப் பார்த்த இடத்துல.. எனக்கான சுதந்திரம் எங்க இருந்தது?”

-அழுத்தமாய் ஒலித்த அவள் வார்த்தைகள்.. அதுவரை அவள் குரல் கேட்டதில் உண்டாகியிருந்த மகிழ்ச்சியை மறையச் செய்ய.. இயலாமை உணர்வொன்று எழுந்து இதயத்தை இறுக்கியதில்.. உடல் விறைத்தவன்..

“இப்ப உனக்கு என்ன வேணும்?” என்றான் அடைத்தத் தொண்டையை சரிப்படுத்தி.

“என்றப்பா கிட்ட ஃபோனைக் கொடு. நான் அவர் கிட்டப் பேசோனும்”

“மாமா இங்க இல்ல”

“சரி, நான் மில்லுக்கு ஃபோன் பண்ணிக்கிறேன்”

-உள்ளே எரிந்த நெருப்பை அணைக்கும் வழி தெரியாது.. அவன் ரிசீவரைக் காதிலிருந்து எடுக்கவிருந்த நொடி..

“நீ எப்படி இருக்க?” என மிகச் சாதாரணமான குரலில் கேட்டாள் அவள்.

கோபத்தில் பல்லைக் கடித்தவன்..

“நான் போட்டு விட்டச் செயினைக் கழட்டித் தூக்கி எறிஞ்சவ கிட்டயெல்லாம், நான் எப்படி இருக்கேன்னு சொல்ல வேண்டிய அவசியமில்ல” எனக் கூற..

“தூக்கி வீசல! கழட்டிப் பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன்! எதுக்குத் தெரியுமா? பார்சல் கட்டி உனக்கு அனுப்பி விடலாம்ன்னு! வந்ததும் வாங்கி, அதை உன்ற மாமா கழுத்துல கட்டி விடு. ஏன்னா.. இந்த உலகத்துலயே ரொம்பப் பொருத்தமான ஜோடின்னு நான் நினைக்குறது உங்க ரெண்டு பேரைத்தான்! இப்பிடியே ஒட்டுக்கா குடும்பம் நடத்துறதை கண்டினியூ பண்ணீங்கன்னா.. மனமொத்தத் தம்பதிகள் லிஸ்ட்ல சீக்கிரமே சேர்ந்துடுவீங்க” என நக்கலடித்தவளிடம்..

“ரொம்பப் பேசாத!, பல்லை உடைச்சுப் போடுவேன்” என்று இவன் பொங்க..

“பின்ன என்றா?, என்ற கோபத்தை விட்டு, இந்த 3 மாசத்துல 300 தடவை அவரோட பேச முயற்சி பண்ணிட்டேன்! நான் உன்ற கூடப் பேசுனா தான் என்ற கூட பேசுவேன்னு பிடிவாதமா இருக்காரு மனுஷன்! அப்பிடி என்ன என்னை விட உன்ற மேல பாசம் அவருக்கு?” என எரிச்சலுடன் கூறினாள் அவள்.

மாமனின் பிடிவாதத்தை எண்ணி வந்த சிரிப்பை ஒதுக்கி.. “அப்டின்னா மாமா இங்க இல்லன்னு தெரிஞ்சு தான் கூப்ட்டியா?” – மறைந்த மகிழ்ச்சி மீண்டும் மலர.. கிளர்ந்த மனதை அடக்கி கேள்வி கேட்டான் அவன்.

“ஆமா”

“என்ற கூடப் பேசுறதுக்கா?”

“…………”

“ஏய்ய்..”

“ப்ச், ஆமா”

“ஹாஹாஹா.. அப்புறம் என்னத்துக்குடி என்றப்பா கிட்டக் கொடுன்னு கத்துனவ?”

“உன்ற கூட பேச வேறென்ன இருக்கு எனக்கு?”

“எனக்கிருக்கு. நான் பேசட்டுமா?” – கையிலிருந்தப் புத்தகத்தைக் கீழே வைத்தபடி அடிக்குரலில் கேட்டவனிடம்..

“இப்ப எதுக்கு வாய்ஸ் மாறுது உனக்கு?” – என்றாள் அவள்.

ஒவ்வொரு முறையும் அவளிடம் தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தி… அசிங்கப்பட்டு நிற்கும் மனதை நினைத்து நொந்தபடி “ம்க்க்க்க்கும்” எனச் செருமி குரலைச் சரி செய்தவன், முயன்று “நான் சாதாரணமாத் தான் பேசுறேன்” என்றான்.

“இல்ல”

“சரி இல்ல, அதனால என்ன இப்போ?”

“நான் வைக்குறேன்”

“மோகனா…”

“ஷ்ஷ்ஷ்ஷ்..” – உச்சகட்ட எரிச்சலில் அவள்.

“நான் பேசுறதைக் கேட்க அவ்ளோ கடுப்பா இருக்குன்னா.. என்ன இதுக்குடி ஃபோன் பண்ணவ?, வைச்சுட்டுப் போடி”

“ம்ம், இந்த டோன்ல பேசு! கேட்க எவ்ளோ நல்லா இருக்கு”

“சாப்பாடெல்லாம் அங்க ஒத்து வருதா?”

“சாப்பாட்டுக்கு என்ன குறை? சமைச்சுப் போடுறது என்ற ஃப்ரெண்ட்! திங்குறது மட்டும் தான் என்ற வேலை!”

“சமைச்சுப் போட்டுத் தான ஆகோனும்!, மாசம் தவறாம உன்ற மாமா, ஏதேதோ காரணம் சொல்லி அந்த சித்ரா வீட்டுக்கு அரிசியும்,பருப்பும் மூடை,மூடையாகக் கொடுக்குறாரே”

“………..”

“மோகனா…”

“கேட்குது.”

“நீ உன்ற மாமா கூட இன்னும் பேசலயாட்ருக்கு”

“பேச முடியாது”

“ஏய்..”

“சின்னதுலிருந்து ஒரு முறை கூட என்ற கிட்ட குரலை உயர்த்திக் கூடப் பேசாத மனுஷன், கையை ஓங்கிக்கிட்டு அடிக்க வந்தாரு தெரியுமல்ல?”

“அதனால?”

“என்ற கோபம் குறையற வரைக்கும் என்றனால அவரு கிட்டப் பேச முடியாது!”

“இப்பிடிப் பிடிவாதம் பிடிச்சு என்னத்த சாதிக்கப் போற நீ?”

“அதை 6 மாசம் கழிச்சு ஊருக்கு வரும் போது காமிக்கிறேன்”

“படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?”

“நல்லாப் போகுது”

“எப்போவாவது என்னை நினைப்பியா?” – பேச்சோடு பேச்சாகக் கேட்டவனிடம்..

“என்ன பேச்சு ஒரு மாதிரி போகுது?” – என முகத்தைத் தூக்கினாள் அவள்.

“பதில் சொல்லுடி”

“எப்போவாவது என்ன! தினம் உன்ற நினைப்பு தான்”

“அப்டியா என்ன?”

“ஆமா! அப்பா ஆபரேஷன் முடியற வரை நீ காணாம போயிருந்தேயின்னா.. நிறைய பிரச்சனைகளை அவாய்ட் பண்ணியிருக்கலாமேன்னு தினம் உன்னை நினைச்சு.. கேவலமா மனசுக்குள்ளத் திட்டுவேன்”

“உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கிறதை விட்டுட்டு, உன்னைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி எப்போ தான் யோசிக்கப் போற?”

“யோசிக்காம இருக்கேன்னு நினைக்குறியா?”

“அப்புறம் எதுக்குடித் தினம் என்னைத் திட்றவ?”

“அன்னிக்கு முழுக்க எங்கயிருந்த நீ?”

“சும்மா அப்டியே ஊர் சுத்திட்டிருந்தேன்!”

“நீ திரும்பி வர்ற வரை நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா?”

“ஏன் பயப்படனும்? நியாயமாப் பார்த்தா சந்தோஷப்பட்டிருக்கோனுமே! இவன் ஒரேடியா போயிட்டா.. எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடும்ன்னு நினைச்சு?”

“அப்பிடி ஏதாவது ஆகியிருந்தா.. நான் உயிரோட இருந்திருக்கவே மாட்டேன்“ – மரத்த குரலில் கூறியவளைக் கேட்டு.. உள்ளே ஏதோ செய்ய..

“வாயை மூடு! பார்க்க முடியாத தூரத்துல இருந்துக்கிட்டு கண்டதையும் பேசாத” – எனச் சீறினான் அவன்.

“ஆரம்பிச்சது நீ தான்!”

“சரி பேச்சை விடு!”

“………….”

“எப்போ வருவ?”

“ஆறு மாசத்துக்கு மேல ஆகும்”

“அதுவரை என்ற கூட பேசுவியா?”

“எதுக்கு?”

“சும்மா தான்”

“உன்ற டோனும், உன்ற பேச்சும் மாறட்டும்! அப்புறம் யோசிக்கிறேன்”

“அது இந்த ஜென்மத்துல மாறப் போறதில்ல”

“அப்டின்னா.. நானும் இந்த ஜென்மத்துல பேசப் போறதில்ல” – என்றவள் டொக்கென ஃபோனை வைத்து விட.. வெகு நாளுக்குப் பிறகு.. ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டவன்.. சிரிப்புடனே கணபதியைத் தேடி மில்லுக்குச் சென்றான்.

அதன் பிறகு அவள் கணபதியிடம் பேச வேண்டி செய்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்காமல் போக, வேண்டுமென்றேத் தன் இருப்பைத் தந்தைக்கு உணர்த்த வேண்டி அவள் ஃபோன் செய்யும் வேளைகளில் அவ்வப்போது அவளுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான் ரகுவரன்.

இதோ, 9 மாத கோர்ஸை முடித்து மேலும் மூன்று மாதங்கள் கடந்து.. முழுதாக ஒரு வருடம் கழித்து ஊர் திரும்புபவளை வரவேற்க விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்தான்.

விமானம் தரையிறங்கி விட்டதாக அறிவிப்பு வந்த அரை மணி நேரத்தில் சிடுசிடுவென்கிற முகத்துடன் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடி ட்ராலியைத் தள்ளிக் கொண்டு நடந்து வந்தவள்… தன்னை வரவேற்க நின்றிருந்த ரகுவரனை எதிர்பாராமல்.. ஒரு நொடி திகைத்து.. மறு நொடி.. சுருக்கிய புருவங்களுடன் அவனைக் கண்டபடியே முன்னே நடந்து வந்தாள்.

அவள் பார்வையைத் தாங்கிக் கையைக் கட்டிக் கொண்டு நின்றவனது கண்கள் தடுமாற்றமின்றி.. தலை முதல் கால் வரை பொறுமையாய் அவளை ஆராய்ந்தது.

ப்ரௌன் நிறத்தில் நீளமாய் கவுன் அணிந்திருந்தாள். அதன் மேலே அடர் நீல நிறத்தில் டெனிம் ஜாக்கெட். தூக்கிக் கட்டியிருந்தக் கூந்தலைத் தொடர்ந்து சின்னதாயிருந்த வெற்று நெற்றி, அடர்த்தியானப் புருவங்களைத் தாங்கி நின்றது. சுருக்கிய புருவங்களுக்குத் துணை நின்றதில் சின்னதாய்த் தெரிந்த கண்கள்.. தன்னிரு கருமணிகள் முழுதிலும் அவன் பிம்பத்தை நிறைத்திருந்த அழகைக் கண்டபடி நின்றான் அவன்.

அவனருகில் நெருங்கியதும் இகழ்ச்சியாய் வளைந்து நின்ற உதடுகளுடன்.. அவனை ஏறிட்டாள் அவள்.

அவளது உதடுகள் வளைந்த விதத்தில் அவள் மனதைப் புரிந்து கொண்டவன்.. அதைக் கண்டு கொள்ளாமல்..

“என்னத்துக்கு மூஞ்சியை அப்பிடி வைச்சிருக்கிறவ?” – எனக் கேட்டான்.

“ஏன்? என்ற மூஞ்சிக்கு என்ன குறை?”

“முணுமுணுத்துக்கிட்டே வேற வந்த?, யாரைப் போட்டு இறக்கிட்டிருக்க?”

“பின்ன என்ன, உலகத்துலயே பச்சைக் கலர் பை வைச்சிருக்கிற ஒரே ஆள் நான் தான்-ன்ற மாதிரி அந்த லேடி, என்ற பையைத் தூக்கி வைச்சுக்கிட்டுத் தர மாட்டேன்னு பிரச்சனை பண்ணுது!”

“வந்ததுமேவா?”

“ம்ம்ம்ம்” – இழுத்தபடி முறைத்தவளிடம்..

“இப்டியே தான் வரப் போறியா?” எனக் கேட்டான்.

“ஏன்?”

“சிரிக்கப் போறதில்லியான்னு கேட்டேன்”

அவன் கேள்வியில்.. அதுவரை சுருங்கிக் கிடந்தப் புருவங்களை விடுவித்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், உடனே பல்லைக் கடித்து..

“நீ எதுக்கு வந்த?” எனக் கேட்டாள்.

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல்.. அவள் கையிலிருந்த ட்ராலியைப் பற்றித் தள்ளிக் கொண்டு முன்னே நடந்தவனிடம்..

“போன எனக்குத் திரும்பி வர வழி தெரியாதா?” – எனக் கத்தியபடியே பின் தொடர்ந்தவள்.. அவன் கையைப் பற்றி நிறுத்தி..

“கேட்குறேனல்ல? பதில் சொல்லு” – என்றாள்.

அவள் கையிலிருந்துத் தன் கரத்தை விடுவித்தபடிப் பக்கவாட்டில் திரும்பி அவள் முகம் பார்த்தவன்..

“உன்னைப் பார்க்குற முதல் ஆள் நானா தான் இருக்கோனும்ன்னு தோணுச்சு. அதான் வந்தேன்” என்றான்.

அவன் பதிலில் திகைத்த விழிகளையும்,பிளந்த வாயையும், எச்சில் விழுங்கி மூடியவள்.. மூக்கு விடைக்கத் தாடையை இறக்கி அவனை முறைத்துப் பார்க்க..

“என்ன? என்ற பார்வை சரியில்லையா?, உன்னைப் பார்க்குற விதத்தை நான் மாத்திக்கோனுமா?” – எனக் கேட்டவன் தொடர்ந்து..

“மாத்திக்க முடியாது. இப்ப-ன்னு இல்ல. எப்பவும்!” என்றான்.

அவன் பேச்சிலும்,பார்வையிலுமிருந்த நிதானமும்,ஆளுமையும் அவளை அதிரச் செய்ய.. வார்த்தைகளற்று அசையாது நின்றாள் அவள்.

“இனி 24 மணி நேரமும் உன்ற கூடத் தான் இருக்கப் போறேன், இதே பார்வையோட! அதனால, என்னை மாத்திக்க சொல்றதை விட்டுப் போட்டு… முடிஞ்சா.. உன்னை மாத்திக்க” – என்றவன்.. முற்றிலும் முகம் மாற.. அவனை எதிர்த்துப் பேசச் சொல்லி பரபரத்த விழிகளுடன்.. வாய் வராது.. நின்றவளைக் கண்டுத் தோளைக் குலுக்கி முன்னே நடந்து சென்று விட்டான்.

வீட்டிற்கு வந்திறங்கியவள் முதலில் கண்டது, முந்தானையைக் கசக்கியபடி வீதியைப் பார்த்துக் கொண்டு நின்ற பூர்ணியைத் தான். அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் போலும்!

ஆனால் காரிலிருந்து இறங்கியவளைக் கண்டதும், வெடுக்கென முகம் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். தங்கையின் மீது கோபத்திலிருந்தவள், இந்த ஒரு வருடத்தில், ஒரு முறை கூட அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.

தமக்கையை நினைத்து சிரிப்பு மாறாமல் உள்ளே வந்தவளை “கண்ணு மோகனா… என்ற சாமி..” எனக் கூறியபடியே தள்ளாடிய நடையுடன் முன்னே வந்து வரவேற்ற சுவாமிநாதனின் தோளைப் பற்றிக் கொண்டவள்..

“எதுக்குங்கப்புச்சி எழுந்து வந்தீங்க?, நான் தான் வர்றேனல்ல?” எனக் கடிந்தபடியே அவரை சோபாவில் அமர வைத்து.. அவரிடம் நலம் விசாரித்து விட்டு..

டைனிங் டேபிளில் முழு அமைதியுடன்.. விறைத்த நிலையில் அமர்ந்தபடி.. உணவு உண்டு கொண்டிருந்தத் தந்தையையும், மாமனையும் நோக்கினாள்.

அழைத்து வந்ததோடுத் தன் பணி முடிந்ததென ரகுவரன் அறைக்குச் சென்று விட..

“வந்துட்டியா?” எனக் கேட்டபடி மாடியிலிருந்து இறங்கி வந்த ஜீவன்.. அவளை நிமிர்ந்தும் பார்க்காது மௌனமாய் அமர்ந்திருந்தத் தந்தையையும்,மாமனையும் நோக்கி.. நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

“அப்பா.. மாமா.. மோகனா வந்திருக்கா” - வேண்டுமென்றே கத்திக் கூறியவனை முறைத்தபடி சமையலறையிலிருந்து வெளியே வந்த பூர்ணி, கையிலிருந்த ஹாட்பாக்ஸை டங்கென டைனிங் டேபிளில் வைக்க..

“உன்ற தங்கச்சிடி! விடிஞ்சதுல இருந்து எப்ப வர்றா, எப்ப வர்றான்னு என்னை நச்சரிச்சியே” – என்றவனைக் கண்டு.. நமுட்டுச் சிரிப்புடன் கையைக் கட்டிக் கொண்டுத் தன்னை நோக்கிய மோகனாவை முறைத்தவள்.. பின் கணவனிடம்..

“வாயை மூடுங் மாமா” என்று விட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அனைவரையும் நோக்கி எரிச்சலுடன் உதட்டைப் பிதுக்கியவனின் தோளைத் தொட்டு..

“நான் பார்த்துக்கிறேனுங் மாமா. நீங்க சாப்பிட்டுக் கிளம்புங்க” என்றாள்.

ஒரு தோள் குலுக்கலுடன் ஜீவன் நகர்ந்து விட.. எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரின் நடுவே சென்றமர்ந்தாள் மோகனா.

சில நொடிகள் இருவரையும் அமைதியாய்ப் பார்த்திருந்தவள், பின் கணபதியின் தட்டு காலியானதைக் கண்டு ஹாட்பாக்ஸிலிருந்து இட்லியை எடுத்து அவர் தட்டில் வைத்தாள்.

உண்பதை நிறுத்தியவர்.. ஒரு நொடி தட்டை வெறித்து விட்டுப் பின்.. வெடுக்கென எழுந்து சென்று விட.. “கஷ்டம்” என உதட்டைப் பிதுக்கியவள்.. பின் மாமனை நோக்கினாள்.

மட்டன் குழம்பிலிருந்த எலும்பைக் கடித்தபடி அமர்ந்திருந்தவரை கன்னத்தில் கை வைத்தபடி நோக்கியவள்..

“நீங்க சாப்பிட்றதைப் பார்க்கும் போது நடிகர் ராஜ்கிரண் ஞாபகம் தானுங் மாமா வருது! பசியைத் தூண்டி விடுறீங் போங்க” எனக் கூற..

மௌனமாய் அவர் எலும்பை உறிஞ்சினார்.

பின் நினைவு வந்தவளாய் தன் கைப்பையிலிருந்த சாக்லேட்டை எடுத்து அவரருகே வைத்துத் தொண்டையைக் கனைத்து “சமாதானம்” என்றாள்.

சிறு வயதில் அவரிடம் கோபித்துக் கொண்டு முகம் திருப்புபவளை அவர் சாக்லேட்டை கொடுத்துத் தான் சமாதானம் செய்வார். அந்த நினைவில் அவள், அவரிடம் சாக்லேட்டை நீட்ட.. நிமிர்ந்து அவளை நோக்கினார் துளசி.

அவர் பார்வையில் லேசாக முறைத்துக் கையைக் கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவள்..

“நியாயமா பார்த்தா, கையை ஓங்கிக்கிட்டு என்னை அடிக்க வந்ததுக்கு, என்ற கூட சமாதானம் பேச வேண்டியது நீங்க தான். ஆனா, போனா போகுது பெரிய மனுஷனாச்சேன்னு, பெரிய மனசு பண்ணி.. நான் இறங்கி வந்திருக்கேனுங்க.” எனக் கூற..

ஒன்றும் கூறாமல் தட்டில் கையைக் கழுவிய துளசி, பொறுமையாய் அவள் வைத்த சாக்லேட்டைப் பிரித்து வாயில் போட்டபடி எழுந்து செல்ல..

“இதை என்னன்னு எடுத்துக்கிறது?, சமாதானம் ஆயிட்டீங்கன்னா?” – அவசரமாய் கேட்டாள் மோகனா.

அவள் கேள்வியில் நின்று, கைகளை பின்னே கட்டிக் கொண்டு எங்கோ நோக்கியவர்..

“தன் கோபத்தை மட்டும் பெருசா நினைச்சு, இவன் இருந்தா என்ன, செத்தா என்ன-ன்றதாட்டம், ஒரு வருஷமா எங்கேயோ போய் உட்கார்ந்திக்கிட்டு.. என்ற கூட பார்க்காம, பேசாம போக்குக் காட்டுனவங்களுக்கு இப்ப மட்டும் என்ன அக்கறை,பாசமெல்லாம் வேண்டிக் கிடக்கு?” – எனக் கேட்க..

“கோபத்தை பெருசா நினைச்சேன்னு சொல்லுங்க! ஒத்துக்கிறேன்! ஆனா.. நீங்க சொன்ன மத்ததையெல்லாம் என்றனால ஏத்துக்க முடியாதுங் மாமா. ஏன்னா… உங்கக் கிட்ட பேசாம இருந்தாலும், உங்களைப் பத்தின அத்தனை விஷயத்தையும் அப் டூ டேட்-அ விரல் நுனியில வைச்சிருக்கறேன்! தெரியுமா?” – என்றபடி அவர் முன்னே வந்து நின்றாள்.

பதிலற்று நின்றவரிடம்..

“போன வாரம் மூட்டு வலின்னு அந்த நாட்டு மருந்துக்கடை நாராயணசாமி கிட்ட மருந்து வாங்கி சாப்பிட்டீங்களாமா?, அந்தாளு ஒரு போலி டாக்டருன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனல்ல?” – என்று அவள் அதட்ட..

‘இந்தச் செய்தியெல்லாம் இவளுக்கு எவன் சொல்றான்’ என்பது போல புருவத்தைச் சுருக்கி “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியவர்..

“அந்தாளு,இந்தாளுன்னு மருவாதையில்லாம பேசுறதெல்லாம் என்ன பழக்கம்? அவன் என்ற சிநேகிதன்” என்று எகிறினார்.

“நல்ல சிநேகிதன்! அதான் தினத்தந்தி பத்திரைக்கைல முதல் பக்கத்துல முறைச்சிக்கிட்டு நின்னானாக்கும்” – என்று முணுமுணுத்தவள்..

“நான் உங்களைப் பத்தி இவ்ளோ தெரிஞ்சி வைச்சிருக்கிறேனல்ல, நீங்க என்னைப் பத்தி சொல்லுங்க பார்ப்போம்” எனக் கையைக் கட்டிக் கொண்டு கேட்க..

அவளைப் போலவே கையைக் கட்டிக் கொண்டு நின்றவர்..

“சித்ரா புருஷனுக்கும்,உனக்கும் ஆகவே ஆகாதாமா! புருஷன்,பொண்டாட்டி சண்டைக்குள்ள இடைல போய் தலையைக் கொடுத்து, அவனோட வம்பு வளர்த்து வைச்சிருக்கன்னு கேள்வி பட்டேன்” என்றார்.

எரிச்சல் மிகுதியில் பல்லைக் கடித்தவள்..

“உங்களுக்கு மில்லுக்கு நேரமாச்சல்ல?, கிளம்புங்க முதல்ல” என்று விட்டு விறுவிறுவென டைனிங் டேபிளை நோக்கி நடக்க.. மலர்ந்த முகத்துடன் சென்றவரைக் கண்டபடி மோகனாவின் அருகே வந்தமர்ந்தார் சுவாமிநாதன்.

“உன்னைக் கண்டதுல அவனுங்க ரெண்டு பேருக்கும் தலை,கால் புரியாத சந்தோஷமாட்ருக்குக் கண்ணு! ஆனாலும்.. வீராப்பா முகத்தை வைச்சுக்கிட்டு.. சும்மா.. விறைச்சுக்கிட்டுப் போறானுங்க! அவனுங்களா வருவானுங்க. விடு”

-சமாதானம் கூறிய சுவாமிநாதனிடம் அவள் புன்னகைத்த வேளை.. அருகே வந்த பூர்ணி..

“இட்லி,இடியாப்பம்,தக்காளி சேவை,எலுமிச்சை சேவை எல்லாமிருக்கு. எது வேணுமோ போட்டு சாப்பிடச் சொல்லுங் அப்புச்சி” என்றாள்.

“ஏன், அதை என்ற கிட்ட சொல்ல மாட்டியாக்கும்?”

“நான் யாரோடயும் பேசுறதா இல்லீங்கப்புச்சி”

“எதுக்கு இப்பிடி க்ளோஸ்ட் நெக் ப்ளொஸூம், இத்தாம்பெரிய பொட்டுமா.. மணிரத்னம் பட ஹீரோயினாட்டம் இருக்குற?”

“பின்ன, இவளை மாதிரி உடுத்திட்டு சுத்த முடியுமாங்கப்புச்சி?, வந்துட்டா.. யு.எஸ்ல இருந்து.. நைட்டியை மாட்டிக்கிட்டு”

“இது கவுன் பூர்ணி. உனக்கும் கூட ஸ்பெஷல் ஐட்டமா ரெண்டு வாங்கியிருக்கேன்!” என்றவள் எழுந்து நின்று அவள் காதுக்குள் தான் வாங்கியதைப் பற்றிக் கூற..

முகம் சிவக்க “ச்சி” எனத் தங்கையை முறைத்தவள்.. அவள் தோளைப் பற்றித் தள்ளி விட்டுச் செல்ல..

“ஹாஹாஹா”-வெனப் புன்னகைத்த மோகனாவுக்கு நிம்மதிப் பெருக்கில்.. நெஞ்சு நிரம்பி வழிந்தது.

ஊர் திரும்பிய அன்றே கணபதியின் வீட்டில்.. தன்னறையில் குடியேறி விட்டவள், அடுத்த இரண்டு நாட்களையும் தூங்கியே கழித்து விட்டு, மூன்றாம் நாள் காலை மில்லுக்குப் புறப்பட்டு விட்டாள்.

சாப்பாடு இங்கேயே வந்துடுச்சா?”

-எனக் கேட்டபடி டைனிங் டேபிளில் காலை உணவிற்காக வந்தமர்ந்தவளை, நிமிர்ந்து நோக்கினர் ரகுவரனும்,கணபதியும்.

வெந்தய மஞ்சளும்,கருப்பும் கலந்த காட்டன் புடவையில், பின் கழுத்திலிருந்து சற்றுக் கீழிறங்கியிருந்தக் குதிரை வாலும், அடர் புருவ மத்தியில் சிறிய கருப்புப் பொட்டும், காதில் பச்சை நிற தோடுமாய் மிடுக்கு குறையாதத் தோற்றத்துடனிருந்தவளை விழி விரித்து நோக்கினர் இருவரும்.

“என்ன பார்க்குறீங்க?”

தோசையை வாயிலடைத்தபடி கேட்டவளைக் கண்டு.. ரகுவரன், கணபதியை நோக்க.. தொண்டையைச் செருமியவர்.. குனிந்து உண்ணத் துவங்கினார்.

“இன்னும் என்னங் மாமா கோபம் உங்களுக்கு?, அதான் அவ திரும்பி வந்துட்டா இல்ல?”

-அவரது மரத்த முகத்தைக் கண்டு, மெதுவாய் மாமனிடம் பேச்சை ஆரம்பித்தவனை முறைத்த மோகனா.. அவர் பதில் கூறும் முன்..

“நீ என்னத்துக்கு எங்க ரெண்டு பேருக்கு இடையில வர்ற?” – என வெடுக்கென கேட்க.. எரிச்சலுடன் எழுந்த கணபதி.. அவளை முறைத்து விட்டு நகரப் பார்க்க.. அவர் கையைப் பற்றி நிறுத்தியவன்..

“எங்க கிளம்புறீங் மாமா? ரெண்டு இட்லி கூட இன்னும் உள்ள போகல?, சாப்பிடாம போய் பிரஷர் ஏறுறதுக்குங்ளா?” என அதட்டி அவரை அமர வைத்து.. அவர் உண்டு முடித்ததும்.. அவர் உட் கொள்ள வேண்டிய மாத்திரைகளை எடுத்து நீட்டி..

“துளசியை பார்த்துப் போட்டு நான் மில்லுக்குக் கிளம்புறேன்” என்று கூறியவரை வழி அனுப்பி விட்டு..

தங்களிருவரையும் வேடிக்கை பார்த்தபடி அழுத்தமாய் அமர்ந்திருந்த மோகனாவின் அருகே வந்து நின்றான்.

அவன் தன்னையே நோக்குவதைக் கண்டும், அவனை நிமிர்ந்து பார்க்காமல் நேர்ப்பார்வையாய் அமர்ந்திருந்தவளினருகே ஒரு டப்பாவை வைத்தான்.

அதை ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘என்ன இது’ என்பது போல் அருகே நின்றவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவள் உயர்த்தியத் தாடையில் பார்வையை பதித்துப் பின் அவள் கண்களை நோக்கியவன், பிரிச்சுப் பார் என்பது போல் மீண்டும் டப்பாவைக் காட்டினான்.

ஒரு வித முறைப்புடனே டப்பாவைத் திறந்தவள், உள்ளிருந்த வாட்சைக் கண்டதும்.. முசுட்டு முகம் மறைந்து.. மெல்ல நிமிர்ந்து அவனை நோக்க..

மீண்டும் ‘போட்டுக்கோ’ என்பது போல் புருவத்தைத் தூக்கினான்.

“ஏன், வாயைத் திறந்து பேச மாட்டியா?”

“நீ தான் நான் பார்க்குற பார்வை அத்தனையையும் இண்டர்ப்ரெட் பண்ணத் தெரிஞ்ச பெரிய அறிவாளியாச்சே! அதான்”

“இந்த வாட்சை நான் கட்டிக்க மாட்டேன்னு சொன்னா?”

“நீ ஏற்கனவே கட்டியிருக்கிறதுக் கூட நான் வாங்கித் தந்தது தான்”

“ஷ்ஷ்ஷ்..” என்றவள், முதன்முதலாகப் படம் வரைந்து கிடைத்தப் பணத்தில் அவன் வாங்கித் தந்த வாட்சை இன்னமும் கட்டிக் கொண்டு திரியும் தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டு பின், எரிச்சலுடன் வாட்சைக் கழட்டி, புதிதை மாட்டிக் கொள்ள.. புன்னகையுடன் “ஆல் த பெஸ்ட்” எனக் கூறி நகர்ந்து விட்டான் அவன்.

தன் பின்பு துளசியின் வீட்டிற்குச் சென்று சுவாமிநாதனிடம் தான் அலுவலகம் கிளம்பி விட்டதாகக் கூற.. “நீ நினைச்சது நடந்து… நீ பெரிய ஆளா.. வரோனும் கண்ணு” என்றவரிடம் “தேங்க்ஸ் அப்புச்சி” என்றவள்.. எதிர்ப்பட்ட துளசியிடம் “இன்னும் ஒரே வருஷம் தான்! உங்களுக்கு ரிடையர்மெண்ட் கொடுத்துட்டு வீட்டுக்கு அனுப்பிடுவேன்” எனக் கூறி அவரது முறைப்பைப் பெற்றுக் கொண்டு பூர்ணியிடம் சென்றாள்.

அவள் தன்னிடம் வருவதைக் கண்ட பூர்ணி “நான் குளிக்கப் போறேனுங் குருவம்மாக்கா! செடிகளுக்குப் பூச்சி மருந்து அடிச்சது, உடம்பெல்லாம் ஒரே வாடையா இருக்குங்” – எனக் கூறியபடி கொல்லைக்குச் செல்ல..

“நல்ல வேளை சொன்ன, கட்டிப்பிடிக்கலாம்ன்னு வந்தேன்!” என்றவள்.. திரும்பி வாசலை நோக்கி நடக்கும் வேளை.. இடையே வந்த ஜீவன்.. அவள் கையில் ஒரு பேனாவை நீட்டினான்.

யோசனையாய் பார்த்தவளிடம் “வெளிநாடெல்லாம் போய் படிச்சுட்டு வந்த நீ, பிசினஸைத் தூக்கி நிறுத்துவன்ற நம்பிக்கைல உன்றக்கா உனக்கு கிஃப்ட் கொடுத்திருக்கா” என்றவனைக் கண்டு விழி விரிய அவள் சட்டெனத் திரும்பி பூர்ணியை நோக்க.. அவளோ.. முகத்தைத் திருப்பிக் கொண்டு முன்னே சென்று விட்டாள்.

ந்தோசமான மனநிலையுடன் ஃபேக்டரியில் கால் பதித்தவள், வெகுநாள் கழித்து வருகை தருவதால், ஆர்வம் தாங்காது உடனே சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டாள்.

ஸ்பின்னிங் யூனிட்டில் நின்றிருந்த கணபதி, இவளைக் கண்டதும் அங்கு வேலை செய்யும் ஒருவரைத் துணைக்கு அனுப்பி வைக்க.. ஸ்டிட்சிங் டிபார்ட்மெண்ட், ப்ரொடக்ஷன் யூனிட் என அனைத்தையும் வலம் வந்தவள்.. வேலையின் தரமும்,வேலையாட்களும் ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட வெகுவாக மாறியிருப்பதைக் கண்டு யோசனையுடன் நின்றாள்.

“பழைய ஆட்கள் நிறைய பேர் மாறிட்டாங்க போலீங்களே” – உடன் வந்தவரிடம் அவள் கேள்வி கேட்க..

“உங்களுக்கு விஷயம் தெரியாதுங்களாம்மிணி?, பழைய கணக்கர் செஞ்ச குளறுபடில நிறைய பேரை தம்பி வேலையை விட்டுத் தூக்கிப் போட்டுச்சுங்க” – என்றார்.

“தம்பியா?” – புருவம் சுருக்கியவளிடம்..

“ஆமாங்கம்மிணி! ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லாம போனதுல இருந்து, கம்பெனியைக் கவனிச்சுக்கிறதுத் தம்பி தானுங்க! மேற்பார்வை பார்க்கன்னு வந்தவரு, கணக்கரு செஞ்ச கோல்மால் அல்லாத்தையும் கண்டுபிடிச்சுப் போட்டாருங்க!, அப்புறம் கணக்கரு பக்கம் நின்ன அல்லாரும் தம்பியோடப் தகராறு பண்ணதுல, யோசிக்காம அத்தனை பேரையும் வேலையை விட்டுத் துரத்திட்டாருங்கம்மிணி!” என்றார்.

“அதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போலீங்களே” – ஓரக்கண்ணில் பார்த்தபடி கேள்வி கேட்டவளிடம் பம்மிய மனிதர்..

“அய்யய்யோ! களவாணிப் பசங்க அத்தனை பேரையும், தம்பி தைரியமா எதிர்த்து நின்னுத் துரத்திப் போட்டாருன்னு பெருமையா சொல்றேனுங்கம்மிணி” எனக் கூற..

“ம், அப்புறம்?” எனக் கதை கேட்டாள் அவள்.

“பொறவு, கம்ப்யூட்டர் பொட்டியை இறக்கி, படிச்ச 4 பேரை வேலைக்கு வைச்சாருங்கம்மிணி! கணக்கு,வழக்கு தொடங்கி, ஆட்காருக்கு போடுற சம்பளம் வரைக்கும் எல்லாத்தையும்.. இப்ப அந்தப் பொட்டி தானுங்கம்மிணி பார்த்துக்கிது”

“ம்ம்”

“தையல் யூனிட்டைல்லாம் இவ்ளோ சுத்தமா இதுக்கு முன்னால பார்த்திருக்கீங்களாம்மிணி?, சூப்பர்வைசரு, தம்பியோட சிநேகிதராமா! சுத்தமா இல்லாட்டி, சம்பளத்தைக் குறைப்போம்ன்னு ரெண்டு பேரும் சேர்ந்து மிரட்டுனதுல, அல்லாரும் அடங்கிப் போய்த் திரியுறானுங்கம்மிணி“

“ஓஹோ..”

“ஐயாவோட அனுபவமும், தம்பியோட தெளிவும் நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்துடுச்சுங்கம்மிணி! இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்குத் தெரியோனும்ன்னு இல்ல!”

வழிந்த சிரிப்புடன் கூறியவரை அவள் திரும்பிப் பார்க்க..

“இதையெல்லாம் செயல்படுத்துறது தான் நான், திட்டம் போட்டதெல்லாம் அம்மிணின்னு தம்பி அடிக்கடி சொல்லுவாருங்!” என்றவரின் பேச்சைக் கேட்டு ஒரு நொடி மௌனமாய் நின்றவள் பின் நன்றி தெரிவித்து, அவரைக் கத்தரித்து விட்டு நேராக அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தவள் கண்டது, கணினியின் முன் அமர்ந்திருந்த ரகுவரனைத் தான்.

அவளது வரவை உணர்ந்து நிமிர்ந்து நோக்கியவன், தன்னை நோக்கி நடந்து வந்தவளை பார்த்தபடி இருக்க, மோகனாவின் பார்வையும், முதன் முறையாக அவனை ஆராய்ச்சியுடன் நோக்கியது.

க்ரே நிற பேண்ட்டும்,டக் இன் செய்யப்பட்ட வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டையுமாய் அமர்ந்திருந்தவன் முழு ஃபார்மல்ஸில் இருப்பதை முதன் முறையாகக் காண்கிறாள். பின் கழுத்தில் எப்போதும் படர்ந்திருக்கும் ஃபங்க் மறைந்து முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. தலைமுடிக்கு எதிராய்.. முகத்தில் தாடியும்,மீசையும் புதராய் மண்டிக் கிடந்தது.

காதலிக்கிறேன் என்கிற பெயரில் பூர்ணியின் பின்னே சிறுபிள்ளைத்தனமாய் சுற்றித் திரிந்த ரகுவரன், படிப்பை விடுத்து வரைதலைத் தொடர்வேன் எனப் பொறுப்பற்றுக் கூறிய ரகுவரன், பாட்டு,கவிதை,புத்தகம் என எப்போதும் ஆகாத வேலை எதையேனும் பார்த்தபடி வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் ரகுவரன் என இதுவரை அவன் குறித்து அவள் எழுப்பி வைத்திருந்த பிம்பத்திற்கும், இப்போது மௌஸை க்ளிக்கியபடித் தோரணையாய் அலுவலக இருக்கையில் அமர்ந்திருப்பவனுக்கும்.. ஆயிரம் வித்தியாசம் தெரிய.. உள்ளே பொங்கிய ஆச்சரிய உணர்வை அவனுக்குக் காட்டி விடாமல் கண்ணோடு அடக்கி, தலை குனிந்துத் தொண்டையைச் செருமியவள்..

அவள் தன்னை ஆராய்ச்சி செய்வதை, ஆராயும் நோக்குடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,..

“உனக்குக் கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணவெல்லாம் தெரியுமா?” எனக் கேட்டாள்.

முதன் முறையாகத் தடுமாற்றத்துடன் ஒலிக்கும் அவளது குரலிலிருந்த மாற்றத்தை உணர்ந்தபடி..

“ஏன், அமெரிக்காவுல மட்டும் தான் கம்ப்யூட்டர் இருக்கிறதா நினைப்பா உனக்கு?” – என்றவன் அவளைக் கண்டு கொள்ளாமல் கண் முன்னேயிருந்த windows 98-ல் பார்வையைப் பதித்து.. அருகிலிருந்த இண்டர்காமை காதுக்குக் கொடுத்தான்.

“வெங்கடேசன், மார்ச் மாச ஸ்டாக் டீடெய்ல்ஸ் கேட்டிருந்தேனே” எனக் கூற.. எதிர் முனை என்ன பதில் கூறியதோ.. நன்றி கூறி விட்டு வைத்தவன்.. தன்னையும்,அந்த அறையையும் ஆராய்ச்சியாய் நோக்கிக் கொண்டிருந்தவளைக் கவனித்து..

“இதெல்லாம்… உனக்காகன்னு நினைக்காத!” என்றான்.

அவள் பேச்சின்றி நிமிர்ந்து பார்க்கவும்..

“ஆபரேஷன் பண்ணோனும்ன்னு சொன்னதுல இருந்தே, மாமா தொழில்ல சரியா கவனம் செலுத்துறதில்ல! அண்ணனால எல்லாத்தையும் கவனிச்சுக்க முடியல! மாமா சொன்ன வேலையை செய்றதுக்காகத் தான் நான் உள்ள வந்தேன்! வந்தப்புறம் தான் தெரிஞ்சது கணக்கர் பண்ணின அட்டூழியமெல்லாம்!” என்றவன் அவளது முகத்தை ஒரு முறை நோக்கி விட்டுப் பின்..

“ஆபரேஷனுக்குப் பிறகு மாமாக்கு ரெஸ்ட் தேவைப்பட்டதால, நான் முழுசா எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டிய அவசியமாய்டுச்சு! கணக்கர் பிரச்சனைல பாதி பேரைத் துரத்தி விட்டதால, புதுசா ஆட்காரை சேர்த்துக்க வேண்டியதாய்டுச்சு! உரிமைக்காரி நீ! உன்ற கிட்டக் கேட்காம இதையெல்லாம் பண்ணினது தப்பு தான்!” என்றான்.

விரல்களைப் பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தவளிடம்..

“எல்லா டிபார்ட்மெண்ட்லயும் சூபர்வைசர்ல தொடங்கி மேனேஜர் வரைக்கும் எல்லாரும் ரொம்ப நம்பிக்கையான ஆளுங்க தான்! உனக்கு இனி நிச்சயம் உதவியா இருப்பாங்க” என்றான்.

“இனி உதவியா இருப்பாங்கன்னா, நீ என்ன பண்ணப் போற?”

“இதுக்கு முன்னால என்ன பண்ணிட்டிருந்தேனோ, அதைப் பண்ணுவேன்”

“இதுக்கு முன்னால என்ன பண்ணிட்டிருந்த?”

“…………..” – அவன் பதில் கூறாமல் கணினியைப் பார்க்க..

“க்க்கும்,” என்றவள் ஆர்வத்துடன்.. “எந்த அப்ளிகேஷன்ல கணக்கையெல்லாம் பார்த்துக்கறீங்க?” எனக் கேட்டாள்.

“tally தான்! Tally படிச்ச ரெண்டு பேர் வேலைக்கு இருக்காங்க! எல்லாத்தையுமே கம்ப்யூட்டரைஸ் பண்ணனும்ன்றதுக்காக, பேசிக்ஸ் தெரிஞ்ச ரெண்டு பேரை வேலைக்கு வைச்சிருக்கோம்”

“……….”

“வெங்கடேசன்னு ஒருத்தர் வருவாரு. அவரை உனக்கு உதவிக்கு வைச்சுக்கோ.”

“………..”

“என்ற இடத்துல வந்து உட்கார்ந்துக்கிட்டு, இவன் என்ன எனக்குச் சொல்லித் தர்றதுன்னு யோசிக்கிறியா?”

“அதென்ன உன்ற இடம், உரிமைக்காரின்னு ரொம்பப் பேசுற? அப்டிப் பார்த்தா.. பொறந்ததுல இருந்து நான் வளர்ந்தது,தின்னது,படிச்சதெல்லாம் உனக்கு உரிமைப்பட்ட உன்ற வீட்ல தான்! நானும் அதைச் சொல்லிக் காட்டட்டுமா?”

“அப்டின்னா நீயும்,நானும் ஒன்னு! பிரிச்சுப் பேசாத-ன்றியா?”

“நான் கிளம்புறேன்”

“இரு! வந்ததுக்கு இந்தக் கணக்கை ‘டாலி’ பண்ணிட்டுப் போ” – என்றவன் அமர்ந்ததிருந்த இடத்திலிருந்து எழுந்து.. அவளை அமரச் சொல்ல.. அவனை முறைத்தபடியே வந்தமர்ந்தவளிடம்.. குனிந்து.. திரையில் தெரிந்தவற்றைப் பற்றி அவன் விளக்கம் கொடுக்க.. தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் முகத்தைத் திரும்பி நோக்கினாள் மோகனா.

தன் போக்கில் விளக்கிக் கொண்டிருந்தவன் அவள் பார்வை திரையில் இல்லாததை உணர்ந்துத் திரும்பி அவளை நோக்கினான்.

“என்ன?”

“ஒன்னுமில்லியே”

“ஏன், என்னையே பார்க்குற?”

“நான் ஒன்னும் உன்னைப் பார்க்கலியே”

“பின்ன?”

“உன் முகத்தை விட்டு மூனு செண்டி மீட்டர் முன்னால வந்து நிற்குற தாடியைப் பார்த்தேன்! என்னத்துக்கு இப்பிடி சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறவனாட்டம் இவ்ளோ நீளத்துக்குத் தாடி வளர்த்து வைச்சிருக்கற?”

“ஏன்னு தெரிஞ்சுக்கனுமா?”

“எனக்காகன்னு மட்டும் சொல்லிடாத”

தன்னருகே தெரிந்த அவள் முகத்தை ஒரு நொடி விடாது நோக்கிப் பின் தலையை உலுக்கிப் பார்வையை கணினியிடம் திருப்பியவன்..

“உனக்காகத் தான்” என்றான்.

பதிலற்று அவள் தன் முகம் பார்ப்பதை உணர்ந்து.. அவள் புறம் திரும்பாமல்..

“விட்டுட்டுப் போனே-ல்ல?, அதான்! உன்னை நினைச்சு.. உன்றனால தாடி வளர்த்து சுத்திட்டிருக்கேன்” என்றவனின் கைவிரல்கள், மௌஸைக் க்ளிக்கிய வண்ணம் கணக்கை சரி பார்க்க.. வார்த்தைகளற்று அவன் கன்னங்களை வெறித்தவளிடம்.. அவள் முகம் பார்க்காமலே பேச்சை வளர்த்தான் ரகுவரன்.

“என்ற மேல கோபமா?”

“…………”

“நீ செய்யோனும்ன்னு நினைச்ச விஷயத்தை நான் பண்ணிட்டேனேன்னு?”

“………….”

“நான் பிள்ளையார் சுழி தான் போட்டிருக்கேன்! மிச்சத்தையெல்லாம் பார்த்துக்க வேண்டியது உன்ற பொறுப்பு தான்”

“………..”

“நீ வரும் போது.. உனக்கான அஸ்திவாரம் தயாரா இருந்தா.. நல்லாயிருக்கும்ன்னு தோணுச்சு! அதான் இந்த ஏற்பாடெல்லாம்”

-பேசி முடித்து அவள் புறம் திரும்பியவன்.. கை விரல்களை இறுக்கியபடி.. விழிகளைப் பெரிதாக்கி.. விறைத்துப் போய் அமர்ந்திருந்தவளின் முகத்தை அசையாது நோக்கினான்.