அத்தியாயம் - 8

ந்த மருத்துவமனையின் காரிடாரில் கையைக் கட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் விறைத்துப் போய் நின்றிருந்த மோகனாவிற்குப் பொறுமையின் அளவு கொஞ்சம்,கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கும் உணர்வு.

“பணத்தைக் கொடுத்து விஷயத்தை அமுக்கிப் போடலாம்ன்னு பார்க்குறீங்களாம்மிணி?, யாருக்கு வேணுமுங்க உங்க காசு? தொழிலாளிங்கன்னா இளக்காரமாப் போச்சுங்ளா?, நாங்க இல்லாம உங்களால தொழில் நடத்திட முடியுமுங்களா?, என்ற பொண்டாட்டி உசுருக்கு ஆபத்தில்லன்றதால தான் உங்களைச் சும்மா விட்றேன்! இல்ல நடக்குறதே வேற”

-விரலை நீட்டி எதிரில் நின்றவன் கூறிய விதத்தில் கோபம் கொப்பளிக்க.. “என்ன மிரட்டுறியா?” – அதுவரை பேச்சில் தொக்கி நின்ற மரியாதை காணாமல் போயிருக்க, கடித்தப் பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கக்கினாள் மோகனா.

“மருவாதையில்லாம பேசுறியா நீயி” எனப் பொங்கிய மனிதர் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு எகிற.. ஆத்திரத்தில் முகம் சிவக்க நின்றவள், மேலே என்ன கூறியிருப்பாளோ.. அதற்குள் “முருகன்ண்ணா..” என்றழைத்தபடி அருகே வந்திருந்தான் ரகுவரன்.

அன்று காலை பஞ்சு மூட்டைகளைக் கீழிறக்கும் வேலை செய்பவர்களின் கவனக்குறைவால் பஞ்சு மூட்டை ஒன்று அங்கு வேலை செய்யும் தெய்வானையின் தலையில் விழுந்ததன் விளைவு.. குற்றுயிரும்,குலையுயிருமாக சாகக் கிடந்தவளை மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு வந்திருந்த அவளது கணவன் முருகன், ‘நீ என்ன ஃபேக்டரியை நடத்துற’ ரீதியில் மோகனாவிடம், கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்.

அதுவரை வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவளிடம் எகிறிக் கொண்டிருந்தவர், ரகுவரனைக் கண்டதும் வேஷ்டியை இறக்கி விட்டு.. “தம்பி..” என்றபடி அவன் கையைப் பற்றிக் கொண்டு.. கண்ணீரை வெளியிட்டு..

“பஞ்சு மூட்டைத் தலையில விழுந்து என்ற பொஞ்சாதி பேச்சு,மூச்சு இல்லாம கிடந்ததை பார்க்கையில, எனக்கு உசுரே போனதாட்டம் இருந்துச்சுங் தம்பி” எனக் கூற..

“கவலைப்பட எதுவுமில்லீங்ண்ணா! நான் டாக்டர்கிட்டப் பேசிட்டேனுங்! ஆபத்தான கட்டத்தையெல்லாம் அவங்க தாண்டிட்டாங்க! 2,3 நாள் ஆஸ்பத்திரில இருந்தாப் போதும்ன்னு சொல்லியிருக்காங்க!” என்ற ரகுவரன் தொடர்ந்து..

“ஒரு மாசத்துக்கு அவங்க வேலைக்கு வர வேணாம்! ரெண்டு மாச சம்பளத்தைக் கைல வாங்கிக்கோங்க! ஆஸ்பத்திரி செலவெல்லாம் கம்பெனி பார்த்துக்கும்! நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட வேணாம்! “ – என அவர் கையைப் பற்றியபடி கூற..

“ஆட்காரு போறது,வாரது கூடத் தெரியாம பஞ்சு மூட்டையைக் கீழ தள்ளியிருக்குறானுங்க தம்பி! கவனக்குறைவா நடந்துக்கிட்டவனை வேலையை விட்டுத் தூக்கோனுமின்னு கேட்டுக்கிட்டதுக்கு.. இந்தம்மிணி தெரியாம நடந்ததைப் பெருசு படுத்தாதீங்கன்னு விட்டேத்தியா பேசுதுங்க தம்பி! தண்டனை வாங்காம தப்பிச்சுக்கிறவன், நாளைக்கு இதை மறுக்கா செய்ய மாட்டான்றதுக்கு என்னங் தம்பி உத்தரவாதம்?” – என்று அவர் எகிற..

“ண்ணா.. கோவத்தை விட்டுட்டுக் கொஞ்சம் பொறுமையா யோசிங்ண்ணா! பஞ்சு மூட்டையைக் கீழ தள்ளுன பொன்ராசுக்குப் போன வாரம் தானுங்ண்ணா குழந்தை பிறந்திருக்கு! அவனும் உங்களாட்டம் பிள்ளை,குட்டிக்காரன் தானுங்! வேலையை விட்டுத் துரத்திட்டா.. அவன் குடும்பம் எப்பிடிங்ண்ணா பொழப்பு நடத்தும்?, தெரியாம அவன் செஞ்சத் தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுக்கோனுமுங்களா?”

“அப்டின்னா.. அப்டின்னா இதை இப்பிடியே விட்றனுமுங்களா தம்பி?”

“நிச்சயம் இல்ல! ரெண்டு பேரா நிற்க வேண்டிய இடத்துல ஒருத்தர் மட்டும் வேலை பார்த்ததுக்காக, அவங்க ரெண்டு பேரையும் ரெண்டு வாரத்துக்கு வேலைக்கு வரக் கூடாதுன்னு சொல்லியாச்சுங்! சம்பளத்தையும் பிடிச்சுக்கிட்டுத் தானுங் கொடுக்கப் போறோம்! இனி இது போல சம்பவம் நடக்காம இருக்கோனும்ன்றதுக்காக சூபர்வைசர் இல்லாம, இனி பஞ்சு மூட்டையை இறக்கக் கூடாதுன்னு புதுசா சட்டமும் போட்டாச்சுங்”

“………..” – முகம் திருப்தியின்மையைக் காட்டினாலும், அவனை எதிர்த்தெதுவும் பேசாது நின்றவரிடம்..

“தலைக்கு வந்தது, தலப்பாகையோட போச்சுதுன்னு நினைங்கண்ணா! உங்க சம்சாரம் சீக்கிரமே சரியாகி எழுந்து வந்துடுவாங்க! அதுக்கு நான் பொறுப்புங்! கவலையை விடுங்க” என்று ரகுவரன் சிரித்தபடி கூற.. மெல்லப் புன்னகைத்த மனிதர்..

இன்னும் முறைப்பு குறையாது நின்றிருந்த மோகனாவைக் கண்டு முகத்தை இறுக்கிக் கொண்டு “நான் உள்ளார இருக்கேனுங் தம்பி” எனக் கூறிச் செல்ல.. தலையைக் கோதியபடிப் பெருமூச்சை வெளியிட்ட ரகுவரன், இறுகிப் போய் நின்றவளின் முகம் கண்டு, அவள் தோள் தொட்டு ‘வெளியே போகலாம்’ என்பது போல் கண்ணைக் காட்டி, அவளை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்துச் சென்றான்.

“எதுக்கு அப்பிடிப் பேசுற அவர் கிட்ட? நமக்குக் கீழ வேலை செய்றவன் தான-ன்ற நோக்கத்தோட தரக்குறைவா அவங்களை நாம ட்ரீட் பண்ண முடியாது” – பொறுமையாக விளக்கப் பார்த்தவனிடம்..

“என்னைப் பார்த்தா.. அப்பிடித் திமிர் காட்டுற ஆளாட்டம் தெரியுதா உனக்கு?” – என்றவளுக்கு அதிகபட்ச கோபத்தில் மூச்சு வாங்கத் தொடங்க.. கண்களை இறுக மூடிக் கொண்டு.. தன்னை சமன்படுத்த முயன்று கொண்டிருந்தவளின்.. மூடியிருந்தக் கைகளைப் பற்றியவன்..

அவள் விரல்களைப் பிரித்துத் தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு..

“நான் அப்பிடி சொல்லல டா மோகன்” என்று சமாதானமாகக் கூற..

“நீ சொன்ன அத்தனையையும் நான் ஏற்கனவே அந்தாளு கிட்ட சொல்லிட்டேன்! ஆனாலும் எகிறுனான்! பொம்பள தான இவ, இவ பேச்சை நாம கேட்கோனுமா-ங்குறதாட்டம்” – எனச் சொல்லிப் பல்லைக் கடிக்க.. ஒரு பெரு மூச்சுடன்.. பற்றியிருந்த அவள் கையை இழுத்துத் தன் முகம் பார்க்கச் செய்தவன்..

“இதையெல்லாம் எதிர்பார்க்காமலா டா மோகன் நீ முதலாளி சீட்ல உட்கார்ந்த?, ம்? எதிர்ல நிற்கிறவன் உன்னை மதிக்கிறானா, இல்லையான்னு யோசிக்குற அளவுக்கு, நீ எதுக்கு அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்குற?, சம்பளம் கொடுக்குற முதலாளி ஆணா,பெண்ணான்னு வித்தியாசம் பார்த்து மரியாதை கொடுக்கலாமா ,வேணாமான்னு அவன் பொறுமையா தீர்மானம் பண்ணிக்கட்டும்! உனக்கு அந்த வித்தியாசமெல்லாம் அநாவசியம்! ஒரு முதலாளியா.. பொறுப்பான இடத்துல இருக்கிற நீ, அந்தப் பொறுப்பை ஜஸ்டிஃபை பண்ற அளவுக்கு, என்ன பேசோனும்ன்னு நினைக்கிறியோ அதைப் பேசு! அத்தோட உன்ற கடமை முடிஞ்சது! அதை அவன் எப்பிடி எடுத்துக்குறான்றது உனக்கு அவசியமில்லாதது! நான் பொண்ணுன்றதால தான் இவன் எகிறுறானோன்னு நீ ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சா.. இந்த மாதிரி ஆட்கள் உன்னைக் காலம் முழுக்கத் துரத்திக்கிட்டே தான் இருப்பாங்க! இது நமக்கான உலகம் இல்ல போல-ன்ற எண்ணத்தை உன்னையறியாமலே உனக்குள்ள விதைப்பாங்க! போராடித் தான் முன்னால வரனும், பெண்ணியம் பேசித் தான் ஜெயிக்கோனும்ன்னு ஒரு மனநிலையை உண்டாக்குவாங்க! இந்த மாதிரி ஆளுங்களுக்கு எதிரி-ன்ற பேர் கொடுத்து உனக்குச் சமமா நிற்க வைக்கும் போது தான் போராடனும்ன்ற எண்ணமெல்லாம் வரும்! இந்த மாதிரி ஆட்களுக்கும், அவங்க பேச்சுக்களுக்கும் பெருசா எந்த ரியாக்ஷனும் கொடுக்காம நீ பாட்டுக்க பண்றதைப் பண்ணிட்டு, உன்ற வழில போ! குலைக்குற நாய் குலைச்சிக்கிட்டே கிடக்கட்டும்!” -எனக் கூற..

-முழு நீளப் பேச்சோடு தன் முன்னே நின்றவனை நிமிர்ந்து பார்த்த மோகனாவுக்கு, சிறுபிள்ளைத்தனத்தோடுப் பூர்ணியின் பின்னே திரிந்தவனை, முதிர்ச்சியற்றவனாய்த் தான் எண்ணி வைத்திருந்த நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது.

“என்ன அப்பிடிப் பார்க்குற?” – அவள் கையை விடுத்துக் கேள்வி கேட்டவனிடம்… உதட்டைப் பிதுக்கியவள்.. எங்கோ நோக்கியபடி..

“நீ ரொம்ப மாறிட்ட” எனக் கூற.. புருவத்தைச் சொரிந்தவன்..

“நான் மட்டுமா? நீயும் தான் ரொம்ப மாறிட்ட” என்றான்.

“நானா?”

“ஆமா! நான் இவ்ளோ நேரம் பேசுன பேச்சுக்கு, எதிர்த்து எதுவும் பேசாம, அமைதியா நான் சொன்னதைக் கேட்டுக்கிட்டியே! அதை வைச்சு சொல்றேன்”

“அப்பிடி எத்தனை தடவை நான் உன்ற கிட்ட எதிர்த்துப் பேசியிருக்கேன்?” – எகிறியவளைத் தள்ளி நின்று நோக்கியவன்..

“இப்போ நீ பழைய மோகனா தான்” என்று விட்டு “சரி வா, அன்னப்பூர்ணால டிஃபனை முடிச்சுப் போட்டு வீடு போய்ச் சேருவோம்” எனக் கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

முன்னால் செல்பவனைக் கவனித்தபடி நடந்து கொண்டிருந்த மோகனாவிற்கு மனம் முழுதும் அவனைப் பற்றிய சிந்தனைகளே!

வள் நாடு திரும்பி, ஃபேக்டரிக்குச் செல்லத் தொடங்கி இரண்டு,மூன்று மாதங்கள் கடந்திருந்தது. முதல் இரண்டு மாதங்கள், முழுதாக உடனிருந்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன், அதன் பின்பு அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக்கினான்.

அப்படி என்ன செய்கிறான் எனக் கேள்வி கேட்டாலும், அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது! இதுவரை அவன் என்ன செய்கிறான்,ஏது செய்கிறான் என்பதில் பெரிதாக அக்கறை காட்டாதிருந்தவள், முதன் முறையாக அவன் அறைக்குள் பிரவேசித்து அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தாள்.

முழுக்க முழுக்கப் புத்தகங்கள் நிரம்பியிருந்த அறை அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும், அவன் அமரும் மேஜையிலிருந்த டைப்ரைட்டரையும், அருகேயிருந்த குறிப்புகளையும், காகிதங்களையும் கண்டவள் அவன் செய்யும் வேலையை எண்ணி ஆச்சரியத்துடன் விழி விரித்தாள்.

‘இவன்’ என்கிற பெயரில் கடந்த இரண்டு,மூன்று வருடங்களாக அவன் எழுதி வெளி வரும் கட்டுரைகளையும்,நாவல்களையும் அவள் கண்ணுற்றிருக்கிறாள். ஆனால் பிசினஸ் சம்மந்தப்பட்டப் புத்தகங்களில் மட்டுமே அவள் ஆர்வம் காட்டுபவள் என்பதால், ‘இவன்’ எழுதும் புத்தகங்களில் பார்வை போனதில்லை. அதனால் அந்த ‘இவன்’ ரகுவரனாயிருந்ததில் பெரிய ஆச்சரியம் அவளுக்கு!

மேலும் அவன் அறையை ஆராய்ந்து அவனது எழுத்தில் வெளியானப் புத்தகங்களைத் தேடி எடுத்து, அடுத்த நான்கைந்து நாட்களையும் அவனது புத்தகங்களை வாசிப்பதில் செலவழித்தாள்.

சிறுபிள்ளைத்தனமான,முதிர்ச்சியற்ற இளைஞனாய் அவன் தன்னைக் காட்டிக் கொள்வதற்கும், அவன் எழுத்துக்கும் சற்றும் சம்மந்தமில்லையென்றே தோன்றியது அவளுக்கு. அவன் சிந்தனையிலும், எழுத்திலும் இருந்த தெளிவு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

படிப்பு,ஃபேக்டரி,நிர்வாகம்,பணம் சம்பாதிப்பதெனத், தான் மிகக் குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டிருப்பதாகவும், அவனது விசால அறிவும்,சிந்திக்கும் பாங்கும் எல்லைகளற்று நீண்டிருப்பதாகவும் பட்டது!

அவனது எழுத்தும்,அவன் செய்கைகளும் கொடுத்தத் தாக்கத்தின் விளைவு, ஃபேக்டரி நிர்வாக நேரம் போக மனம் முழுதும் அவன் குறித்த சிந்தனைகளே அவளுக்கு!

“கொடியிலே.. மல்லியப் பூ.. மணக்குதே மானே..”

பூத்துக் குலுங்கும் அந்த ஜாதிமல்லிச் செடியினருகே, கையில் கூடையுடன் நின்றிருந்த பூர்ணி, மெல்லிய குரலில் பாட்டு பாடியபடித் தீவிரமாய் பூ பறித்துக் கொண்டிருந்தாள்.

“பூர்ணி எங்கங்க்கா?” – என்ற மோகனாவின் குரல் அடுக்களையருகே ஒலிப்பதும், அதைத் தொடர்ந்து அவள் கொல்லையை நோக்கி வருவதும் தெரிந்து.. பாட்டை நிறுத்தி முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டவள், வேக,வேகமாய்ப் பூக்களைப் பறித்துக் கூடைக்குள் போட..

தமக்கையைக் கண்டபடி அருகே வந்த மோகனா “என்னத்துக்கு இப்ப வெடுக்கு,வெடுக்குன்னு பூவைப் பிய்ச்சுப் போட்டுட்டிருக்கவ?, என்ற மேல இருக்குற கோவத்தை பூ மேல காட்றியாக்கும்?” – எனக் கேட்க.. அவளைக் கண்டுகொள்ளாத வாக்கில் முகத்தை வைத்துக் கொண்டாலும், வேகத்தைக் குறைத்தாள் பூர்ணி.

அவளோடு சேர்ந்துத் தானும் பூக்களைப் பறித்துக் கூடையிலிட்ட மோகனா.. அதை முகர்ந்தபடியே..

“நல்ல வாசம்! ஆமா, தினம் தலை நிறைய மல்லிப்பூ வைச்சிக்கிறியே! எதுக்கு?” என்று விட்டுப் பின்..

“மாமாவை மயக்கத் தான?” – எனக் கேட்டுக் கண்ணடிக்க.. அவளை முறைத்துப் பார்த்தப் பூர்ணி.. பின் முகத்தைத் திருப்பிக் கொண்டு..

“இப்பிடிப் பேச்செல்லாம் என்ற கிட்ட வைச்சிக்க வேண்டாம்” எனக் கூற.. உதட்டைச் சுழித்துப் புருவத்தைத் தூக்கியவள்..

“பேசுறதுக்கே இப்பிடியாஆஆ?” எனக் கேட்டுச் சிரிக்க.. நிறைந்து விட்டக் கூடையை தரை அதிரக் கீழே வைத்த பூர்ணி, மீதி பூக்களைத் தன் முந்தானையில் சேகரிக்கத் தொடங்க..

“எதுக்கு இவ்ளோ பூ பறிக்கிற?, ஏதாவது பூஜையா?” – எனக் கேட்டாள் மோகனா.

“…….” - பதிலின்றி முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு பூவைப் பறித்தவளைக் கண்டு உதட்டைப் பிதுக்கி..

“வாயைத் திறந்து பதில் சொல்லாத் தான் என்னவாம்?” என்று முணுமுணுத்தபடி பக்கவாட்டில் நின்றிருந்தவளின் முகத்தைத் திரும்பி நோக்கினாள் மோகனா.

நெற்றியில் குங்குமமும், டாலடித்த ஒற்றைக் கல் மூக்குத்தியுமாய் நின்றவளிடமிருந்துப் புறப்பட்ட மஞ்சள் வாசனை, அந்தப் பூக்களின் மணத்தோடு போட்டி போடுவதைக் கண்டு.. மனம் நிறைய.. அவளை நெருங்கி நின்றவள்… இத்தனை நாட்களாய் உள்ளே உறுத்திக் கொண்டிருந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“நீ சந்தோஷமா இருக்கியா பூர்ணி?”

தங்கையின் கேள்வியில் திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து நோக்கிய பூர்ணி, பின் இகழ்ச்சியாக உதட்டை வளைத்து.. ஒரு தோள் குலுக்கலுடன் அமைதியாகி விட..

“பதில் பேசுக்கா!” – என்றாள் மோகனா.

அவள் அழுத்திக் கேட்டும் பதில் பேசாமல், மௌனமாய் பூ பறித்துக் கொண்டிருந்த பூர்ணியின் கையைப் பற்றியவள்.. தன் புறம் திருப்பி.. அவள் முகம் பார்க்க..

கெஞ்சும் பார்வையுடன் தன்னை நோக்கியத் தங்கையை ஆராய்ச்சியுடன் நோக்கிய பூர்ணி,

“என்ன புதுசா எல்லார் மேலயும் அக்கறைப் பட்ற?” எனக் கேட்க..

பற்களைக் கடித்தபடி மூக்கு விடைக்க நின்றாள் மோகனா.

“பொதுவா உன்ற குணத்துக்கு, இவ எப்படிப் போனா என்னன்னு விட்டேத்தியாத் தான இருக்கோனும்?,”

“ஏன் இப்பிடிப் பேசுற பூர்ணி?”

“என்ன தப்பா பேசிட்டேன்?, சுயநலவாதி தானடி நீ?, உன்ற லட்சியமும்,நோக்கமும் தான் முக்கியம்ன்னு தன்னலமா யோசிச்சு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவலையில தள்ளி விட்டுப் போன ஆளாச்சே! பெத்த அப்பன் ஆஸ்பத்திரிப் படுக்கைல அறுபட்டுக் கிடந்தும் மனசாட்சியே இல்லாம ஊரை விட்டு ஓடுன! பெத்தவங்களை பெருசா நினைச்சு, அவங்க விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு உன்ற கழுத்துல சங்கிலியை மாட்டுனவனை மதிக்காம விட்டுட்டுப் போன?, உன்றனால.. உன்னை நினைச்சு.. நீயில்லாத ஒரு வருஷமும் இந்த வீடு என்ன கதியில இருந்ததுன்னு தெரியுமா உனக்கு?”

“பூர்ணி..”

“என்ற பேரைச் சொல்லிக் கூப்பிடாத!”

“………..”

“என்ன கேட்ட? சந்தோஷமா இருக்கியான்னா?, நான் உன்னாட்டம் சுயநலவாதி கிடையாது! வெளியே காட்டிக்காட்டியும், ஒட்டு மொத்தக் குடும்பமும் உன்ற நினைப்புல ஊமையா அழுதுட்ருக்கும் போது, என்ற சந்தோஷத்தை மட்டும் பெருசா நினைக்கிறதுக்கு”

“என்ன சொல்ற நீ?” – அவள் கூறியதன் அர்த்தத்தைக் கிரகிக்க முயன்று தொண்டை அடைக்கக் கேள்வி கேட்ட மோகனாவிடம்..

“ம்ம்ம், நான் இன்னமும் துளசிநாதன் வளர்த்தப் பூர்ணியாத் தான் இருக்கேன்னு சொல்றேன்” – என்றாள்.

கால்கள் தடுமாற செடியைப் பற்றிக் கொண்டு.. நெற்றியைத் தடவியபடி எச்சில் விழுங்கிய மோகனாவிற்கு, விரல்களில் நடுக்கமெடுக்க..

“நான்… என்.. என்றனாலயா?, நா.. நான் தான் காரணமா?” எனத் தள்ளாடும் உதடுகளுடன் கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் பதிலின்றி நகரப் பார்த்தப் பூர்ணியின் தோளைப் பற்றி நிறுத்தியவள்..

“எனக்குப் பதில் சொல்லு” -என்கையிலேயே மூச்சு சீரற்றுப் போக.. பதறிப் போன பூர்ணி..

“இ..இப்ப என்னத்துக்கு மூச்சு வாங்குற?, முதல்ல.. முதல்ல உட்காரு.. உட்காரு” எனக் கூறி அங்கிருந்த திண்டில் அமர வைக்க.. வியர்த்து வழிந்த கழுத்தைத் துடைத்துக் கொண்டு, ஆழ மூச்செடுத்துத் தன்னை சமன் படுத்திய மோகனா.. கவலையாய் தன் முகம் பார்த்தப் பூர்ணியிடம்..

“என்னை நினைச்சு, நீ என்னத்துக்கு உன்ற வாழ்க்கையை வாழாம இருக்கோனும்?” – கோர்த்து விட்டக் கண்ணீரை நிறுத்தி வைத்து.. விடைத்த மூக்குடன் கேள்வி கேட்டாள் அவள்.

“என்ற கையால சோறூட்டி, என்ற கையால குளிப்பாட்டி, பெத்தப் பசங்களாட்டம் உங்க ரெண்டு பேரையும் வளர்த்திருக்கேன்! உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் கேள்விக்குறியா நிற்குறப்ப, நான் எப்பிட்றி என்னைப் பத்தி மட்டும் யோசிக்க முடியும்?”

“ஏன் பூர்ணி இப்பிடிப் பண்ற?”

“அப்படியாவது உன்ற மனசு மாறும்ன்ற நம்பிக்கை தான்”

“அப்பா மாதிரி நீயும் பாசத்தைக் காட்டி என்னை ப்ளாக்மெய்ல் பண்ணுற”

“எங்க பாசம் உனக்கு ப்ளாக்மெய்ல்-ஆ தெரியுறதால தான் நாங்க உன்னை விட்டு ஒதுங்கியிருக்கோம்”

“பூர்ணி..”

“எங்களை விடு! ரகு என்ன தப்பு பண்ணுனான்? அவனுக்கு நீ கொடுக்குற தண்டனை ரொம்பவே ஜாஸ்தி”

“………….”

“பெரியவங்க எடுக்குற முடிவு நிச்சயம் நன்மையைத் தான் தரும்! அதுல எந்த மாற்றமும் இல்ல! அதை நீயா உணர்ற வரை, நான் உன்ற கிட்டப் பேசப் போறதில்ல!”

-தொண்டை அடைக்க கரகரத்தக் குரலில் கூறிய பூர்ணி, பூக்கூடையை எடுத்துக் கொண்டு விறுவிறுவெனச் சென்று விட.. சுவரை வெறித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்த மோகனாவின் காதுக்குள் ‘இன்னும் நான் துளசிநாதன் வளர்த்தப் பூர்ணியாத் தான் இருக்குறேன்’ – என்று அவள் கூறிய வார்த்தைகள் மட்டும் ரிபீட் மோட்-ல் ஒலித்துக் கொண்டிருந்தது.

கடந்த ஒரு வருடத்தில்.. அமெரிக்காவில் இருந்து கொண்டு, வீட்டிற்கு தொலைபேசும் நாட்களில் பூர்ணி சொல்லப் போகும் சுபசெய்திக்காகப் பலமுறை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறாள்.

அன்னையாய்த் தன்னை வளர்த்தவளுக்குப் பிறக்கும் குழந்தையைத் தன் பிள்ளையாக எண்ணி வளர்க்க வேண்டுமென்கிற அளவிற்கு ஆசை கொண்டிருந்தாள்!

தான் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயத்திற்கு அறிந்தோ,அறியாமலோ தானே தடையாக இருப்பதாகத் தோன்ற.. தன் விருப்பத்திற்கெதிராகத் தன்னை வற்புறுத்திய தகப்பனையும்,மாமனையும் தண்டிப்பதாய் நினைத்து.. தான் செய்த காரியத்திற்கு.. சம்மந்தமின்றி பூர்ணி பாதிப்படைவதைக் குறித்துப் பெரிதும் வருந்தினாள். அதன் பின்பு வெகு நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவளின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.

ன்று மாலை சிற்றுண்டியின் போது ஒட்டு மொத்தக் குடும்பமும் டைனிங் டேபிளில் ஒன்று கூடியிருக்க..

தனக்குப் பரிமாறும் பூர்ணியிடம்.. “நீ சாப்பிட்டியா?” எனக் கேட்கும் ஜீவனையும், “அப்புறம் சாப்பிட்டுக்கிறேனுங் மாமா, பசியில்ல” எனக் கூறுபவளையும் கண்டபடி முள்ளு முருங்கை அடையை ருசித்துக் கொண்டிருந்த மோகனா.. திடீரென “அப்புச்சி..” என்றழைத்தாள்.

உண்டு கொண்டிருந்த சுவாமிநாதன் நிமிர்ந்து “சொல்லு சாமி?” என்றதும்..

“நேத்து எனக்கு ஒரு கனவு-ங்கப்புச்சி” – எனத் தொடங்கினாள்.

“என்ன கனவு கண்ணு?”

“கொழு,கொழுன்னு ஒரு குழந்தைங்கப்புச்சி!, ஆறு மாசமாவது இருக்கும்! நல்லா செவ,செவன்னு நம்ம பூர்ணி கலருல, முக ஜாடை அப்பிடியே ஜீவன் மாமாவாட்டம்..“ – என்று அவள் கூறிக் கொண்டிருக்கையிலேயே ‘லொக்,லொக்’ என இருமத் தொடங்கிய ஜீவன் கண்களைப் பெரிதாக்கி அவளை நோக்க..

எப்போதும் பட்டென விஷயத்தை நேரடியாகப் பேசி சட்டென அதற்குத் தீர்வும் கண்டு விடும், அதிரடி ஆட்டக்காரியின் இருப்பின்றிக் கிடப்பில் கிடந்த விஷயம், இன்று அவளது வரவால் தூசி தட்டி வெளியே எடுக்கப்பட.. அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவளே, முடிவையும் தீர்மானிப்பதை எண்ணி நமுட்டுச் சிரிப்புடன் அண்ணனிடம் தண்ணீரை நீட்டினான் ரகு.

பூரிப்புடன் வர்ணித்து அவள் கூறும் விதத்தைக் கொண்டே அவளது முயற்சியைப் புரிந்து கொண்ட சுவாமிநாதன்,

“குழந்தை ஆணா,பொண்ணா கண்ணு?” – என்றார் ஆர்வமாய்.

“அதை மட்டும் கண்டுபிடிக்க முடிலீங்கப்புச்சி, ஏன்னா, குழந்தை ஜட்டி போட்டிருந்துச்சு! கழட்டிப் பார்க்குறது நாகரீகமா இருக்காதல்லோ?”

“அதுசரி, அதுசரி”

“கனவு கலைஞ்சு, காலைல கண்ணு முழிச்சப்புறம் எனக்கு என்ன தோணுச்சு தெரியுமுங்களாப்புச்சி?”

“என்ன கண்ணு?”

“கனவுல பார்த்த அத்தனையும், நிஜத்துல நடந்தா.. எவ்ளோ நல்லாயிருக்கும்ன்றது தான்..” என்று அனுபவித்துக் கூறியவள், மேலே தொடர்வதற்குள் அவள் வாயில் அடையை அடைத்த பூர்ணி..

“ஒழுங்கு மருவாதையா வாயை மூடிட்டுத் தின்னுட்டு எழுந்திருக்கல?, கொன்னு போடுவேன்! சொல்லிட்டேன்” என்று மெல்லிய குரலில் மிரட்ட.. அசராமல் அனைத்தையும் மென்று முழுங்கியவள்.. யோசனையாய் அமர்ந்திருந்த துளசி மற்றும் கணபதியிடம்..

“எது உங்களைத் தடுக்குதுன்னு இத்தனை நாளா அக்காவுக்கும்,மாமாவுக்கும் நாள் குறிக்காம தள்ளிப் போட்டுட்டிருக்கீங்க?” – என நேரடியாகவே கேட்க..

“மோகனா..” என அதட்டிய ஜீவனிடம் பார்வையைத் திருப்பாமல் அவர்களிருவரையே நோக்கினாள் மோகனா.

“உங்க ரெண்டு பேருக்கும் வயசு என்ன வாழுதுங்ளா?, சட்டு,புட்டுன்னு பேரன்,பேத்தியை எடுக்கோனும்ங்குற ஆசையே இல்லாம சுத்திட்டிருக்கீங்க?”

‘எல்லாத்தையும்ம் செஞ்சு போட்டு கேட்குற கேள்வியைப் பாரு’ ரீதியில் கணபதி மகளை முறைக்க, துளசிநாதன் குற்ற உணர்ச்சியுடன் சங்கடமாய் அமர்ந்திருந்தார்.

“கேட்குறேனுங் மாமா”

அவள் குரல் உயர்த்தியதில் கடுப்பான பூர்ணி.. பெரியவர்களின் முன் எதுவும் கூற முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்க..

“சரி, ஆனது ஆகட்டுமுங் அப்புச்சி! இவங்க ரெண்டு பேரும் வாயைத் தொறக்கப் போறதில்ல! நான் அழுத்திக் கேட்டா.. உன்றனால தான்னு, என்னைக் கை காட்டுவாங்க! ஏனுங்கப்புச்சி, இந்த ஒரு வருஷமும் இந்த வீட்ல எல்லாரும் என்ற நினைப்புல திங்காம,தூங்காம இருந்தீங்களா? இல்ல தானுங்களே? எது என்ன ஆனாலும், யாரு எப்பிடிப் போனாலும், ஓடுற காலத்தோடு சேர்ந்து நாம ஓடித் தானுங் ஆகோனும்?, அந்தக் காரணத்தால தான உங்களாலயும்,என்னாலயும் சாப்பிட முடிஞ்சது,தூங்க முடிஞ்சது? அவசியமான காரியங்களைச் செய்ய தயக்கம் காட்டாத நீங்க, இந்த விஷயத்தை மட்டும் எப்பிடிக் கண்டுக்காம விட்டீங்கப்புச்சி?”

அவர்களிருவரையும் வெளுத்து வாங்கும் சாக்கில், தன்னிடம் கேள்வி கேட்பவளிடம் என்ன கூறுவதெனப் புரியாமல்..

“உன்றக்காளும்,ஜீவனும் தாங்கண்ணு இப்போதைக்கு எந்த ஏற்பாடும் வேணாமுன்னு தள்ளிப் போட்டது” என்றார்.

“அந்த இப்போதைக்கு-ன்றது, ஒரு வருஷமா கடக்குறதை நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கீங்க?”

“அ..அது வந்து கண்ணு”

“எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சரியாகாம, நாங்க வாழத் தயாராயில்லன்னு இவங்க சொல்லியிருப்பாங்க! நீங்களும் அதைக் கேட்டு, 4 பேர் வாழ்க்கையும் இப்படி அந்தரத்துல நிற்குதேன்னு கண்ணீர் வடிக்கிறதோட உங்க வேலை முடிஞ்சு போச்சுன்னு நிம்மதியா இருந்திருப்பீங்க. அப்பிடித் தானுங்கப்புச்சி?”

“மோகனா.. வாயைக் குறை” – எரிச்சலுடன் ஜீவன் இடையிட்ட போது.. ஹாலிலிருந்து “மோகனாம்மிணி..” என்ற வேலனின் குரலில் அனைவரும் திரும்பி நோக்கினர்.

தோளில் பெரிய கூடையுடன் நின்ற வேலன் “இதை எங்க வைக்கட்டுமுங்கம்மிணி?” எனக் கேட்க..

“கொண்டு வந்துட்டீங்களாங்ண்ணா? தேங்க்ஸ்ங்ண்ணா! அப்பிடியே மேல போய் என்றக்கா ரூம் முன்னாடி வைச்சிருங்ண்ணா” என்று அவள் கூறியதும்.. மேலே செல்பவரையே அனைவரது பார்வையும் தொடர்ந்தது.

“என்ன கண்ணு அது? கூடை நிறையா?”

“பூவுங்கப்புச்சி! ராத்திரி அலங்காரத்துக்கு வேணுமின்னு வரவழைச்சேனுங்”

கடைசி வாய் அடையைச் சட்னியுடன் வழித்து வாயில் வைத்தபடிக் கூறியவளைக் கேட்டு.. அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற பூர்ணி ‘அடிப்பாவி’ ரீதியில் வாயில் கை வைத்து நிற்க.. அனைத்தையும் வெகுச் சாதாரணமாகக் கூறுபவளைக் கண்டு சிரிப்பு பொங்கியது ரகுவரனுக்கு.

“மோகனா.. என்ன ட்ரை பண்ற நீ?” – சாப்பிடுவதை நிறுத்தி விட்டு ஜீவன் அவளிடம் நேர்ப்பார்வையாய் கேட்க..

“நம்ம குடும்ப ஜோசியரு சபாபதி மாமா கிட்ட ஃபோன் போட்டுக் கேட்டேனுங் மாமா! இன்னிக்கு நாள் நல்லாயிருக்குன்னு சொல்லி நேரம் குறிச்சுக் கொடுத்திருக்காருங்..” – என்றாள் அமைதியாக.

“என்னத்துக்கு?”

“……..”

“உன்னைத் தான் கேட்குறேன்”

“எனக்கொன்னும் பிரச்சனையில்லீங் மாமா! நான் வெளிப்படையா சொல்லிப் போடுவேனுங், ஆனா.. என்றக்கா கூச்சப்படுவாளேன்னு தானுங் அமைதியா இருக்கேன்”

“ஹாஹாஹாஹா” – அடக்கிப் பார்த்தும் முடியாமல் வாய் விட்டு சிரித்த ரகுவரனை ஜீவன் முறைத்துப் பார்க்க… உடனே சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன், நிமிர்ந்து மோகனாவை நோக்கினான்.

அவனது சிரிப்பைத் தானும் பிரதிபலித்து, காலாட்டியபடி அமர்ந்திருந்தவள், இடது கண்ணை அடித்து, மூக்கைத் தூக்கிச் சிரித்துக் காட்ட, அவளது செய்கையில் சிரிப்பு மறைய… எக்கி நின்ற அவளது கன்னத்து எலும்புகளைப் பார்வையிட்டபடி.. அசைவற்று அமர்ந்து விட்டான் ரகுவரன்.

அவனது முக மாற்றத்தை உணர்ந்து புருவம் சுருக்கியவள் “மோகனா” என்றழைத்த ஜீவனின் குரலில் திரும்பி அவனை நோக்கினாள்.

“நீ பண்றது நாகரீகமாத் தெரியல எனக்கு! எங்க ப்ரைவேட் லைஃப்-ல நீ எதுக்குத் தலையிடுற?”

“என்ன பண்றதுங் மாமா, அந்த ப்ரைவேட் லைஃப்-ல பொறக்குற குழந்தையை வளர்க்கப் போறது நானாச்சுங்களே?”

“நீ வளர்த்துக் கிழிச்சிடுவ! ஃபேக்டரிக்குப் போய் உட்கார்ந்தா, வீடு திரும்புற எண்ணம் கூட இல்லாம வேலை,வேலைன்னு சுத்துறவளுக்கு இந்த ஆசை வேற?” – இடையில் பொங்கியபடி பூர்ணி.

“ஏன், நான் ஃபேக்டரிக்குப் போனா.. என்ற கிட்டப் புள்ளையைத் தர மாட்டியா நீ?, ஆறு மாசம்,இல்ல ஒரு வருஷம் கூட நீ வைச்சுப் பார்த்துக்க, புள்ளைக்கு எதைன்னாலும் சாப்பிடக் கொடுக்கலாம்ன்ற ஸ்டேஜ் வந்தப்புறம், நான் என்ற கூட அதையும் ஃபேக்டரிக்குத் தூக்கிட்டுப் போயிடுவேன்”

-ரோஷமாய் எகிறிக் கொண்டு வந்தவளைக் கண்டு பூர்ணிக்கு சிரிப்பு வர.. அதைத் தொடர்ந்து தன்னாலேயே, ஃபேக்டரியில் தன் குழந்தையோடு தங்கை வலம் வரும் காட்சி கற்பனையில் தோன்றவும்.. முகம் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்க ஜீவனைத் திரும்பி நோக்கினாள் பூர்ணி.

“என்றக்கா கவுந்துட்டா!” என முணுமுணுத்த மோகனா சுவாமிநாதனிடம்..

“ஜீவன் மாமா, என்ற மேல இருக்குற கோவத்தை மனசுல வைச்சுக்கிட்டு இப்பிடிப் பேசுறாருங்கப்புச்சி! இந்த விஷயத்தைத் தள்ளிப் போட்டு, நீங்க-லாம் இவ்ளோ யோசிக்குற அளவுக்கு, அப்பிடி என்ன எங்க ரெண்டு பேரோட நிலைமையும் கவலைக்கிடமா இருக்குங்கப்புச்சி?” -எனக் கேட்டாள்.

“அதான, ஒட்டுக்கா வேலைக்குப் போய்ட்டு,வந்துக்கிட்டு.. ஜோடியா ரெண்டு பேரும் நல்லாத் தான இருக்காங்க?, இன்னும் என்னங்கடா உங்க பிரச்சனை?” – சுவாமிநாதன் தன் போக்கிற்கு எகிற.. அவர் புறம் குனிந்தவள்..

“நீங்க சொல்ற விஷயம் சரி தான்னாலும், சொன்ன விதம் ஒரு மாதிரியிருக்குங்களே அப்புச்சி?” – என மெல்லிய குரலில் கேட்க..

“அப்பிடிச் சொன்னாத் தான் கண்ணு, இவனுங்க உன்ற திட்டத்துக்கு ஒப்புக்குவானுங்க” என்ற சுவாமிநாதனிடம் “ம்ம்” எனத் தலையாட்டினாள் மோகனா.

அதுவரை அமைதியாயிருந்தத் துளசி “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியபடி..

“நானும் ஒரு வார்த்தை சபாபதிகிட்டக் கேட்டுக்கிறேன்” எனக் கிளம்ப..

“இனி கேட்குறதுக்கு என்னங் மாமா இருக்குது?, பூ வாடுறதுக்குள்ள அலங்காரத்தை முடிக்கோனுமுங்க” என்று அவசரப்படுத்த.. அவளைக் கண்டு கொள்ளாமல் தந்தையிடம் திரும்பிய ஜீவன்..

“ப்பா, அவ சொல்றா-ன்னு எதையும் முடிவு பண்ண வேணாமுங்க. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாமுங்க” என்றான்.

“எப்புறம் கண்ணு?, ஏற்கனவே ஒரு வருஷம் ஓடிப் போச்சல்ல?, இனியும் தள்ளிப் போட வேணாம் கண்ணு?” – என்ற கணபதி ஜீவனின் கையைப் பிடித்தபடி கூற.. நிமிர்ந்து பூர்ணியின் முகத்தை நோக்கினான் ஜீவரஞ்சன்.

அவன் பார்வையைத் தவிர்த்தபடி, கருமணிகள் அலைபாய தலை குனிந்து நின்றவளைக் கண்டு சிரிப்புடன் இமைகளைத் தாழ்த்தியவனின் முகத்தில் ‘சம்மதம்’ என்கிற வார்த்தை எழுதி ஒட்டப்படாத குறையாகத் தெளிவாய்த் தெரிய.. உற்சாகத்துடன் மாடியறையை நோக்கிப் படையெடுத்தாள் மோகனா.

கூடையிலிருந்தப் பூக்களால் படுக்கையை அலங்கரித்துக் கொண்டிருந்தவளைக் கண்டபடி வாசலருகே வந்து நின்றான் ஜீவரஞ்சன்.

“நீங்க இங்க நாட்-அலவ்ட்ங் மாமா! அலங்காரத்தை முடிச்சப்புறம் வாங்க! இப்ப கிளம்புங்க”

“………”

“ஏனுங் மாமா?”

“எதுக்கு இதெல்லாம்?”

“ஏனுங் மாமா, பூ அலங்காரமெல்லாம் உங்களுக்குப் பிடித்தமில்லீங்களா?, வேற என்ன டெகரேஷன் வேணும்? சொல்லுங்க பண்ணிட்றேன்! இன்னும் 4 மணி நேரம் டைம் இருக்கு”

“நாங்களா மனசு வைக்குற வரையும், உன் முயற்சி எதுவும் பலிக்கப் போறதில்லன்றது புரியுதா உனக்கு?”

அவளை அழுத்தமாய்ப் பார்த்தபடி கூறியவனைக் கண்டுத் தயக்கத்துடன் கையிலிருந்தப் பூவை படுக்கையில் வைத்தவள்..

“உ..உறுத்தலா இருந்ததுங் மாமா! நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்றது எனக்கு நல்லாத் தெரியும்! இ..இருந்தும்.. பிரிஞ்சு இருக்கீங்கன்னா.. அது.. அது.. எ..என்றனால தானோன்னு தோணுச்சுங்” – என்றாள் விரல்களைப் பார்த்தபடி.

“இப்பிடி சூழ்நிலை உருவாகக் காரணமானது யாரு? நம்ம வீட்டுப் பெரியவங்க தான? பாதித் தப்பை அவங்க பண்ணிப் போட்டு, உன்ற மேல மட்டும் குற்றம் சொல்றது அநியாயமாப் பட்டது எனக்கு! நாங்க பிரிஞ்சு இருந்தது.. உனக்கு மட்டுமில்ல.. அவங்களுக்கான தண்டனையும் கூடத் தான்! பெத்துட்டோம்ன்றதுக்காக, அவங்க சொல்ற அத்தனைக்கும் பிள்ளைங்க தலையாட்டோனும்ன்னு நினைக்குறது தப்புன்னு அவங்களும் உணரோனுமல்ல?? அது போக, அப்பா இன்னிக்கு வரை ரகுவோட பேசறதில்ல. ஒரு பக்கம், உன்னை நினைச்சு வருத்தப்பட்டிருந்த ஐயா,மாமா,உன்றக்கா வேற! இத்தனைப் பிரச்சனை தலைக்கு மேல நிற்குறப்போ.. எனக்கெங்க இந்த நினைப்பெல்லாம் வரும்?”

“சா..சாரிங் மாமா”

“எனக்கெதுக்கு சாரி?”

“நான் பண்ணினது தப்புன்னு இதுவரைக்கும் ஒத்துக்கத் தோணலைன்னாலும், சம்மந்தமேயில்லாம நீங்க ரெண்டு பேரும் இதுல பாதிக்கப்பட்டது அநியாயம்ன்னு தோணுச்சுங் மாமா. அதான்! ஆன வரைக்கும் போதுமுங் மாமா! எனக்கு என்றக்கா சந்தோஷமா இருக்கோனும்! நீ..நீங்க…” என்றவள் மேலே தொடர முடியாமல் தயங்கி அவன் முகம் பார்க்க..

மெல்லப் புன்னகைத்தவன்.. அறைக்குள் சென்று.. பீரோவைத் திறந்து எதையோ எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

சிகப்பு நிறத்தில் தங்க நிற வேலைப்பாடுடன் இருந்த அந்த சில்க் புடவையைக் கண்டு அவள் கேள்வியாய் அவனை நோக்க..

“உன்றக்கா கிட்ட இந்தச் சீலையைக் கட்டிட்டு வரச் சொல்லு” – என்றவனைக் கண்டு முழு சிரிப்புடன் வேகமாய் அவன் கையிலிருந்தப் புடவையைப் பிடுங்கிக் கொண்டு ஓடப் பார்த்தவளைக் கை நீட்டித் தடுத்தவன்..

“இன்னும் எனக்கொரு கேள்வி இருக்கு” எனக் கூறி அவளது கழுத்தை ஆராய்ந்தான்.

அவன் பார்வை தொடுக்கும் வினாவின் விவரம் புரிந்து கொண்டவள், கழுத்திலிருந்த சங்கிலியை வெளியே எடுத்துக் காட்டி..

“கழட்டலீங் மாமா” என்றாள்.

ஆராய்ச்சியாய் அவள் முகம் நோக்கியவன் “இதோட அர்த்தம்?” எனக் கேட்டான்.

“அர்த்தமெல்லாம் நான் இன்னும் யோசிக்கலீங் மாமா! இதுவரை, இது என்றம்மையோட சங்கிலியாத் தான் என்ற கழுத்துல இருக்குதுங்க” என்றாள்.

“எப்போ யோசிப்ப?”

“யோசிக்க அவசியம் வரலீங் மாமா”

“எப்போ அவசியம் வரும்?”

“இதுக்கு என்ற கிட்டப் பதில் இல்லீங்”

“அப்டின்னா.. வேற நல்ல பொண்ணாப் பார்த்து, ரகுவுக்குக் கல்யாணம் கட்டி வைச்சாலும்,உன்ற கிட்டயிருந்து எந்த அப்ஜெக்ஷனும் வராதல்ல?”

“அவனோட இஷ்டமுங் மாமா. ஆனா…”

“ஆனா?”

“அவன் அதுக்கெல்லாம் இஷ்டப்பட மாட்டானுங்”

அவளது பதிலில் புன்னகை பூக்கக் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நோக்கியவன், அலட்டிக் கொள்ளாத பார்வையோடு நின்றவளிடம்..

“இதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டாலும், தெரியாதுன்னு தான பதில் சொல்லப் போற?” என்றான்.

அவன் கேள்வியைக் கண்டு கொள்ளாமல் “அக்காக் கிட்டப் போய் இதைக் குடுத்துட்டு வர்ரேனுங்” என்றவள் அவனது கேலிப் பார்வையைப் புறந்தள்ளி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டாள்.

பூர்ணியிடம் சேலையை நீட்டி “நேயர் விருப்பம்! நீ இந்தச் சீலையைக் கட்டிட்டு வரோனும்றது உன்ற வீட்டுக்காரரோட ஆசை” என்று அவள் கூற.. புருவத்தைச் சுருக்கியபடி சேலையை வருடியவள் அவளை நம்பாத பார்வை பார்த்து விட்டு.. நிமிர்ந்து மாடியறையை நோக்கினாள்.

பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு அவளை நோக்கிப் புன்னகை புரிந்த ஜீவனைக் கண்டு, மெல்லத் தலை குனிந்து கொண்டவளிடம்..

“சீக்கிரம் போய் ரெடியாகுக்கா” என்று அவள் அவசரப்படுத்த.. நிமிர்ந்து அவளை முறைத்தவள்..

“ரொம்ப அதட்டாத! நினைச்சதை சாதிக்கிற இல்ல?, நீ சொல்றதை நாங்க கேட்கோனும்?, நாங்க சொல்றதை நீ கேட்க மாட்டியா?” – என்று கோபமாய்க் கூற..

“இப்ப என்ன?, பக்கத்து ரூம் படுக்கைல பூவைத் தூவி, எனக்கும், உன்ற தம்புவுக்கும் இதே ஏற்பாட்டைப் பண்ணிப் போட்டா.. உன்ற கோபம் குறையுமா? – எனக் கேட்டதும் வாயைப் பிளந்த பூர்ணி..

“வெட்கங்கெட்டவளே” என்று கடிய..

“பிறகென்ன? ஏன் ரொம்பப் பண்ணிக்கிற?, எல்லாத்தையும் அது போக்குல விடேன்! உனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை, பண்ணச் சொல்லி வற்புறுத்தும் போது, உனக்கு எவ்ளோ கோபம் வருது? இதே கோபத்தை நான் பட்டா, சுயநலவாதின்னு பட்டம் கொடுக்குற?”

“……….”

“பூர்ணி…”

“………..”

“இந்தப் புடவையைக் கட்டிக்கோ! முகத்தை சிரிச்ச மாதிரி வைச்சுக்கோ! எங்களைப் பத்தின கவலையை விடு! உனக்காக.. உன்ற வாழ்க்கையை ஆரம்பி..”

-தன் கையைப் பற்றிக் கொண்டுக் கவலையாய்க் கூறியவளைக் கண்டு கண்ணீர் வரப் பார்க்க, ஒரு தொண்டைச் செருமலில் அதைக் கண்ணோடு அடக்கியவள்.. சேலையை வாங்கிக் கொண்டு அறைக்குள் மறைந்தாள்.

பெருமூச்சுடன் தமக்கையை நோக்கிப் பின், விட்ட அலங்காரத்தை முடிக்க மாடிப்படியேறிவள், கையில் கார்ட்-லெஸ்ஸூடன் கொல்லையிலிருந்து உள்ளே நுழைந்த ரகுவரனைக் கண்டு.. பல்லைக் கடித்தபடி..

“இந்த வீட்ல நடக்குறதுக்கும்,எனக்கும் சம்மந்தமேயில்லன்ற மாதிரி நீ மட்டும் என்றா தனியா சுத்திட்டிருக்கிறவன்?” எனத் திட்ட..

“ஏன்? என்ன செய்யோனும்?” எனக் கேட்டவனிடம்..

“ரூமை அலங்காரம் பண்ணோனும். மேல வா” எனக் கூறி விட்டு அவள் மேலே நடக்க..

“கொஞ்சம் கூடக் கூச்சமேயில்லையா உனக்கு?, என்னவோ பர்த் டே டெகரஷேனுக்குக் கூப்பிட்ற மாதிரி சாதாரணமாக் கூப்பிட்ற?” எனக் கேட்டபடியே அவளைத் தொடர்ந்து படியேறினான் ரகுவரன்.

“டர்ட்டியா எதையும் யோசிக்காம, இதை வெறும் டெகரேஷனா மட்டும் பாரு” – என்றவள் கீழேயிருந்த பூச்சரங்களைக் காட்டி.. “பெட்-ஐ சுத்தி இதையெல்லாம் சரம்,சரமா தொங்க விடோனும்! சினிமால-லாம் வருமல்ல?, அதாட்டம்” என்றாள்.

“அந்த மாதிரி சீன் எல்லாம் பார்ப்பியா நீ?”

“ஏன்?, வெட்கப்பட்டு சேனலை மாத்திப் போடோனுமா? அவனுங்களே லைட் ஆஃப் பண்ணுற வரை தான் காட்டுறானுங்க! இதுல என்னக் கூச்சம் வேண்டிக் கிடக்கு?”

“ரொம்ப வருத்தமா சொல்றதாட்டமிருக்கே”

“ப்ச், வாயை மூடிட்டு வேலையைப் பாரு” என்றவள் படுக்கையின் நடுவே சிகப்பு ரோஜாக்களை வைத்து ஹார்ட் விட்டுக் கொண்டிருக்க..

அவளையே பார்வையால் தொடர்ந்தவன் திடீரென.. “எல்லாப் பூவையும் இங்கேயே யூஸ் பண்ணிட்டா, பக்கத்து ரூம் டெகரேஷனுக்கு என்ன பண்றது?” எனக் கேட்டான்.

திடுக்கிட்டு விரிந்த கண்களுடன் அவனை நிமிர்ந்து நோக்கியவளிடம்..

“என்ன பார்க்குற?, உன்றக்காளோட கோபத்தைத் தணிக்க.. பக்கத்து ரூமுலயும் இதே ஏற்பாட்டை நடத்தப் போறதா நீ தான சொன்ன?” – என்று அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க.. பல்லைக் கடித்து அவனை முறைத்தவள்..

“உனக்கு அந்த ஆசையெல்லாம் வேற இருக்கா?” என்றாள்.

“இருந்தா தப்பா?”

கை தன் போக்கில் வேலை பார்த்த வண்ணமிருக்க, அலட்டிக் கொள்ளாமல் கேள்வி கேட்டவனை வெறித்து நோக்கியவள்..

“பிடிக்குது,பிடிக்கலன்றதைத் தாண்டி இந்த மாதிரி பேச்செல்லாம் உன்ற வாய்ல இருந்து வர்றது, எனக்கு ரொம்ப அன்கம்ஃப்ர்ட்டபிள் ஆன ஃபீலைத் தருது” என்றாள்.

அதுவரை அவன் முகத்தில் ஒளிந்து விளையாடியபடி அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த புன்னகை, இப்போது சுத்தமாய் மறைந்து விட.. சுண்டிப் போன முகத்துடன் நின்றவனை கண்டு கொள்ளாது பூக்களிடம் பார்வையைச் செலுத்தியவள் பின் முடியாமல், கண்களை இறுக மூடிப் பல்லைக் கடித்து.. நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

“யாரோ யமுனாவாமா! வேலைக்கு வந்திட்டிருந்த பொண்ணை, , வேலையை விட்டு நிறுத்துனதுமில்லாம, படிக்கோனும்ன்னு அட்வைஸ் பண்ணி, அந்தப் பொண்ணு படிப்புச் செலவையும் நீயே ஏத்துட்டிருக்கிறதா கேள்வி பட்டேன்”

சம்மந்தமின்றி பேசுபவளைக் கண்டு புரியாது புருவம் சுருக்கியவன்..

“ஆமா, அதனால என்ன இப்போ?” என்றான்.

“யார் அந்தப் பொண்ணுன்னு போய்ப் பார்த்தேன்! பன்னிரெண்டாங் க்ளாஸ் படிக்குற பெரிய்ய்ய பொண்ணு” – வாயை அகட்டி முகத்தைப் பெரிதாக்கியவளிடம்..

“என்ன சொல்ல வர்ற நீ?” என்றான் ரகு.

“ஊர் உலகத்துல படிக்க வசதியில்லாம இருக்கிற பொண்ணுங்க எத்தனையோ இருந்தும், ஏன் இந்தப் பொண்ணுக்கு மட்டும் உதவி பண்ணுற நீ?”

“பொறாமைப் பட்றியா?”

“பொறாமையெல்லாம் வேற படோனுமா?”

“பின்ன என்றி உன்ற பிரச்சனை?”

“இல்ல, சொன்னேன்! நீ என்னவோ, என்ற கழுத்துல சங்கிலியை மாட்டிப் போட்டு, உன்ற வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிற்குறதாட்டம் மூக்கால அழுதிட்டிருக்கக் குடும்பத்துக்கு, நீ கேப்-ல பார்க்குற சைட் பிசினஸைப் பத்தியெல்லாம் தெரிய வரலையேன்னு வருத்தமா சொல்லறேன்”

“ஏய்.. வாய்க்கு வந்தபடி பேசுன, பல்லை உடைச்சுப் போடுவேன்!” – பொங்கியவனிடம்..

“உடைப்ப! உடைப்ப! உண்மையைச் சொன்னா, பல்லை உடைப்பியோ! உனக்கு அவ மேல சாஃப்ட் கார்னர் இருக்குன்னு ஒழுங்கா ஒத்துக்க“ – என்று அவள் எகிற..

“நான் என்ன இதுக்குடி ஒத்துக்கோனும்? புரிஞ்சு போச்சுடி எனக்கு! நீ வெள்ளைக்காரன் எவனையும் கரெக்ட் பண்ணிட்டியாட்ருக்கு!, அதான் என்னை எவளோடவோ கோர்த்து விடப் பார்க்குற?” – என்று குற்றம் சாட்டினான் அவன்.

“ஆமா, வெள்ளைக்காரனை கரெக்ட் பண்ணிட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவ?”

“ம்ம்ம்ம், டெகரேஷனுக்கெல்லாம் அவசியமில்லாமலே, பக்கத்து ரூம்ல இன்னிக்கே எல்லாத்தையும் முடிச்சுடுவேன்” – கடுகடுவென்ற முகத்துடன் பல்லைக் கடித்தபடிக் கூறியவனை அவள்..

“வரம்பு மீறிப் பேசாத” என்றபடி முறைத்துப் பார்க்க.. பதிலுக்கு முறைத்து நின்றவனைக் கண்டு..

“என்னங்கடா? முறைச்சுக்கிட்டு நிற்குறீங்க?” எனக் கேட்டபடி அறைக்குள் பிரவேசித்தான் ஜீவரஞ்சன்.

பட்டு வேட்டி சட்டையில் பர்ஃபியூம் மணம் கமழ.. வந்து நின்றவனைக் கண்டு சிரிப்புடன் எழுந்து வந்தனர் இருவரும்.

“வேணாம்,வேணாம்ன்னீங்க!, இப்ப பர்ஃபியூமெல்லாம் போட்டு வாசமா வந்து நிற்குறீங்க?”

“ஏய்ய்ய்..”

“ஹாஹாஹா, டெகரேஷனெல்லாம் எப்பிடிங் மாமா?”

“அதையெல்லாம் எப்பிடியிருக்குன்னு உன்றக்கா பார்த்துச் சொல்லட்டும். நான் உன்றக்கா எப்பிடியிருக்கான்னு வேணா, பார்த்துச் சொல்றேன்!” – சிரிப்புடன் கூறியவனைக் கண்டு வாயைப் பிளந்த மோகனா, பின் கலகலவெனச் சிரிக்க..

அண்ணன்,தம்பிக்கிடையே இம்மாதிரி பேச்செல்லாம் வழக்கமில்லையென்பதால்.. சங்கடமான முகத்துடன் நின்றிருந்தாலும், ரகுவரனுக்கு மோகனாவின் ஏற்பாட்டில் பெரு மகிழ்ச்சியே!

“சரி, நேரமாச்சு! சீக்கிரம் கீழ போய் என்றக்காவை அனுப்புறேன்!” என்றவள் “நீ என்ன சிலையாட்டம் நிற்குற?, வா” என்றபடி ரகுவரனின் தோளைப் பற்றித் தள்ள.. “இரு….” என்றவன்.. தயக்கத்துடன் அண்ணனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து..

“இ…இதெல்லாம் உங்க தனிப்பட்ட விஷயம்ன்னு தானுங் நான் இதுவரை எதுவும் பேச முயற்சி பண்ணதில்ல! ஆனா.. இதுவே ரொம்ப லேட்டுங்ண்ணா.. இனியும் எதை நினைச்சும் குழம்பிக்க வேணாமுங்க” என்றான்.

சிரிப்பு மாறாமல் தம்பியின் முகம் நோக்கி “அது உன்ற கைல தானிருக்கு” – என்ற ஜீவனைக் கண்டுத் தன் தோளில் பதிந்திருந்த மோகனாவின் கரத்தைப் பற்றி.. தன் கைக்குள் இறுகப் பொதித்துக் கொண்ட ரகுவரன்..

“புரியுதுங்ண்ணா” எனக் கூற..

இருவரையும் மாறி மாறி நோக்கிய மோகனா, “இந்த டபுள் மீனிங் பேச்செல்லாம் புரியாத அளவுக்கு நான் தத்தி கிடையாது! அதனால கையை விடு” – என்றாள்.

அண்ணனும்,தம்பியும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்த நேரத்தில்.. நிதர்சனம் பேசியபடி இடை புகுந்தவளை.. ரகுவரன் முறைத்துப் பார்க்க.. ஜீவரஞ்சனோ சிரித்தபடி நகர்ந்து விட்டான்.

தன் பின்பு பூர்ணியை சிங்காரித்து, பெரியவர்களனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று, அவர்கள் நடத்தியக் கண்ணீர் போராட்டத்தை முடித்து வைத்து, அவளை அறைக்கு அனுப்பி வைத்து விட்டு மோகனா வீடு திரும்புகையில், இரவு வெகு நேரமாகியிருந்தது.

உள்ளே நுழைந்தவள், தந்தை உறங்குவதைக் கண்டு விட்டுப் பின் மாடியறையில் விளக்கெரிவதைக் கண்டுப் படியேறினாள்.

டைப் ரைட்டரின் ஒலியும்,அதைத் தொடர்ந்துத் தீவிர முகத்துடன் அதைத் தட்டிக் கொண்டிருந்த ரகுவரனின் முகமும் தெரிய.. சப்தமின்றி வந்த வழியே அவள் திரும்பிச் செல்ல எத்தனித்த போது..

“என்ன?” என்ற ரகுவரனின் கேள்வியில்.. நின்று அவனை நோக்கியவள்..

“இ..இல்ல, லைட் எரியுதேன்னு வந்தேன்! நீ எழுதிட்டிருக்கன்னு தெரியாது! நீ கண்டினியூ பண்ணு! குட் நைட்” எனக் கூற..

“அதான் டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டியே! இனி எழுத வராது. வா” என்றான் அவன்.

“டிஸ்ட்ராக்ட் பண்ணா எழுத வராதா?” – கவலையாய்க் கேட்டவளிடம்..

“அது டிஸ்ட்ராக்ட் பண்ணற ஆளைப் பொறுத்து” – என்றவனைக் கண்டு முறைத்து..

“ப்ச், நான் போறேன் போ” – என்று அவள் திரும்ப..

“ஏய்.. என்ன?, எதுக்கு வந்த? ஒன்னும் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” – என நிறுத்தினான் அவன்.

“சும்மா தான்! மனசு முழுக்க சந்தோஷத்துல நிறைஞ்சிருக்குதல்ல? தூக்கம் வராதுன்னு தோணுச்சு!. அதான் உன்ற கிட்டயாச்சும் பேசி நேரத்தைப் போக்கலாம்ன்னு வந்தேன்”

“ஓஹோ” – தன்னையே தொடரும் அவன் கண்களைக் கண்டு கொள்ளாது அவன் அறைக்குள் நுழைந்து சுற்றி நோக்கினாள் மோகனா.

ஒரு பக்க சுவர் முழுதையும் அடைத்திருந்த புத்தக அலமாரி, மேஜையின் முன்பமர்ந்து புத்தகம் வாசிக்கும் ஒரு ஆணின் உருவ வடிவிலிருந்தது.

அதனருகே சென்று கடைசி வருடம் அவன் எழுதியிருந்த ‘அண்டம்’ எனப் பெயர் கொண்ட புத்தகத்தைக் கையிலெடுத்தவள், அதன் அட்டைப்படத்தைத் தடவியபடி நிமிர்ந்து அவனது படுக்கையின் பின்னேயிருந்த சுவரை நோக்கினாள்.

80-களில் பெண்கள் அணியும் பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த பெண் உருவமொன்று.. மர்லின் மன்றோவின் தலைமுடியோடு.. உதட்டைக் குவித்து லேசாய்க் கண்களை மூடி மயக்கப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. சுவர் முழுதையும் ஆக்கிரமித்திருந்த அந்தப் பெண் உருவம் கருப்பு-வெள்ளையில் வரையப்பட்டிருந்தாலும், அதன் இதழ்களில் மட்டும் சிவப்பு நிறத்தில் பளபளத்தது.

அங்கிருந்து பார்வையைத் திருப்பியவள் தனக்கு நேரெதிரேயிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கினாள். தன்னிரு கைகளால் கண்ணாடியைத் தாங்கியபடி நின்றிருந்த பேண்ட்-சட்டை அணிந்தக் குரங்கு பொம்மையைக் கண்டு சிரிப்பு வர.. நிமிர்ந்து மேற்கூரையை பார்த்தாள்.

அவளை ஏமாற்றாமல் அங்கும் படம் வரைந்து வைத்திருந்தான் அவன். முழு நீள கரு வானமும், மின்னும் நட்சத்திரங்களும், வெள்ளி நிலவும், கருங்கடலும், அதன் மீதொரு ஆளில்லாப் படகும் தெரிய புருவம் சுருக்கியபடி அவனை நோக்கியவள்..

“படகுல ஆள் உட்கார்ந்திருக்கிறதாட்டம் வரைஞ்சிருந்தா இன்னும் பொருத்தமா இருக்குமல்ல?” எனக் கேட்டாள்.

“இருக்கலாம்! வரையனும்ன்னு எனக்குத் தோணல! வரையல”

“ம்ம்”- என்றவள் மெல்ல இங்குமங்கும் நடந்தபடித் தயக்கமாய் அவனை ஏறிட..

அவள் முக மாற்றங்களை சுவாரசியத்துடன் கவனித்தவன் கைகளைக் கட்டிக் கொண்டு “என்ன?” என்றான்.

“இ..இல்ல..” என்றவள் “நான் துளசிநாதனோட வளர்ப்புன்றதாலயோ என்னவோ, நீ வரையுறதையும்,புத்தகம் படிக்கிறதையும், பாட்டு பாடிக்கிட்டு சுத்துறதையும் பார்த்து நீ ஆகாத வேலை பார்க்குற ஒரு ஆகாவலியான ஆசாமின்னு தான் நினைச்சி வைச்சிருந்தேன்” எனக் கூற.. கண்ணைச் சுருக்கி அவளை முறைத்தவன்.. மேலே சொல் என்பது போல் பார்த்தான்.

“நீ டெல்லி எக்ஸிபிஷன்ல படம் வரைஞ்சு பெருசா காசு கொண்டு வந்தப்பக் கூட எனக்கு நீ ஒரு திறமைசாலின்ற எண்ணம் வந்ததே இல்ல”

“…….”

“மாஃபேக்டரி நிர்வாகத்தைப் பார்க்கோனும், சம்பாதிக்கோனும்,ஊர் மதிக்கிற அளவுக்குப் பெரிய ஆளா வரோனும்ன்ங்குற எந்த எண்ணமும் இல்லாம நீ இருந்ததைப் பார்த்து.. மாமா சொல்றதாட்டம் நீ பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற வெட்டிப்பய-ன்னு தான் நினைச்சேன்”

“……….”

“காலேஜ் முடிச்சப்புறம் அடிக்கடி ரூமைப் பூட்டிக்கிட்டு, நீ அப்படி என்ன தான் பண்ணுறன்னு ஒட்டு மொத்தக் குடும்பமும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டப்போ, எனக்குப் பெருசா எந்த ஆர்வமும் வரல! நீ அப்பிடி என்னத்தப் பண்ணிடப் போறன்னு ரொம்ப அசட்டையாத் தான் யோசிச்சேன்!”

“…………..”

“எல்லாத்துக்கும் மேல பூர்ணி மேல இருக்கிற அன்பு,பாசத்துக்குக் காதல்ன்னு வடிவம் கொடுத்து நீ அவ பின்னால சுத்தினதைப் பார்த்து.. வயசுக்கேத்த மெச்யூரிட்டி இல்லாத சரியான பேக்கு நீ-ன்னு நினைச்சேன். அப்பா,மாமா,ஜீவன் மாமா-வாட்டம் ஆட்களைப் பார்த்தே வளர்ந்துட்டதாலோ என்னவோ.. இந்த வீட்டு ஆண்களோட சாயல் கொஞ்சமும் இல்லாம, நீ மட்டும் தனியா ஓடிட்டிருந்த ட்ராக்கை நான் பெருசா மதிச்சதே இல்ல”

“………….”

“ஆனா.. நான் உன்ற மேல வைச்சிருக்கிற இமேஜ்ல இருந்து வெளி வந்து கொஞ்சம் தள்ளி நின்னு யோசிச்சுப் பார்த்தப்போ.. ஒன்னு தெரிஞ்சது.. அது.. நீ பயங்கர திறமைசாலி-ன்றது!,”

உதட்டைப் பெரிதாய் வளைத்து புருவத்தைத் தூக்கியவன் அவள் சொல்வதைக் கவனிக்கலானான்.

“படிப்பு,விளையாட்டு, பாட்டு,கிரிக்கெட்,சமையல்ன்னு கத்துக்கிற எல்லாத்துலயும் பெர்ஃபக்ட் ஆன அவ்ட்புட் காட்டத் தெரிஞ்ச ஆள் நீ! உன்ற சின்சியாரிட்டியும்,இன்வால்வ்மெண்ட்டும் நீ செய்யுற வேலையில தெரியுது! செய்ற வேலையை திருந்தச் செய்ற ஆள் நீ!”

“அடேங்கப்பா!”

“நிஜமா தான்! ஒரு வருஷத்துல ஒட்டு மொத்த ஃபேக்டரியையும் மாத்தியிருக்க! நீ இதைப் பண்ணியிருக்கலன்னா, நீ ஒரு ரைட்டர்ன்றது எனக்குத் தெரிய வந்திருந்தாலும் பெருசா மதிச்சிருக்க மாட்டேன், ஆகாத வேலை பார்க்குறான்னு ஒதுக்கியிருப்பேன்! ஆனா.. இப்போ நீ செய்யுற ஒவ்வொன்னையும் நின்னு பார்க்கோனும்ன்னு தோணுது! நீ எழுதுறதைப் படிச்சு, உன் சிந்தனைகளைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணோனும்ன்னு தோணுது!”

பெரிதாக ஆச்சரிய பாவனையில்லை அவள் முகத்தில்! பாராட்டுவதைப் போலவும் தெரியவில்லை! உன்னைப் பற்றிய என் எண்ண மாற்றங்களை உன்னிடம் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்கிற பாவனை மட்டுமே!

ஒரு பெருமூச்சுடன் தாடியைச் சொரிந்தவன்..

“நான் ஃபேக்டரிக்கு வராம இருந்திருந்தாலும்.. நீ என்னைப் பத்தி யோசிச்சுப் பார்த்திருந்திருப்ப” என்றான்.

“எப்பிடி சொல்ற?”

“முதல் காரணம், உன்ற கழுத்துல நான் மாட்டின செயின்! அடுத்து, ஒட்டு மொத்தக் குடும்பமும் என்னைப் பத்தி யோசிக்கச் சொல்லி உனக்குக் கொடுக்குற பிரஷர்”

“……………”

“உண்மை தான?”

யோசனையாய் மறுத்துத் தலையசைத்தவள் “இல்ல. உன்னைப் பத்தி யோசிக்கும் போது அந்த ரெண்டு காரணமும் என்ற நினைப்புலயே இல்ல. கூடவே வளர்ந்தும், உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும், எதையும் புரிஞ்சுக்காமலே இருந்திருக்கேன்னு வருத்தமாத் தான் இருந்தது!” எனக் கூற.. மெலிதாய் சிரித்தவன்..

“சரி, இப்போ ஏன் இதையெல்லாம் என்ற கிட்ட சொல்ற?” எனக் கேட்டான்.

தோளைக் குலுக்கி “பூர்ணி நல்லா சமைச்சா, பாராட்டுறேன்! ஜீவன் மாமா ஃபேக்டரியில புதுசா எதுவும் செஞ்சா, ‘என்ற மாமா எவ்ளோ பெரிய ஆளுன்னு’ மெச்சிக்குறேன்! அது போலத் தான் இதுவும்! என்ற கூட வளர்ந்தவன், ஒரே வீட்ல இருக்குறவன், புத்தகமெல்லாம் வெளியிட்றான்றப்போ, பாராட்டிப் பேசோனும்ன்னு எனக்குத் தோணாதா?” என்றாள்.

“அதுசரி” – என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே சுவர்க் கடிக்காரம் இரண்டு எனக் காட்டும் பொருட்டு இரண்டு முறை ஓசையெழுப்ப..

“மணி ஆச்சு! படுத்துத் தூங்கு” என்றவள் அலட்டிக் கொள்ளாது வெளியே செல்ல.. ‘ஏன் வந்தா, ஏன் இதையெல்லாம் சொன்னா?, ஏன் இப்போ போறா?’ ரீதியில் சிரிப்பும்,முறைப்புமாய் அவளையேப் பார்த்திருந்தான் ரகுவரன்.

றுநாள் காலை கொல்லையிலிருந்து இடையில் கட்டியத் துண்டோடு வீட்டிற்குள் நுழைந்த ஜீவரஞ்சனுக்கு தன்னுடல் முழுதிலும் மஞ்சள் வாசம் நிறைந்திருப்பதாய் ஓர் உணர்வு. மெல்லிய சிரிப்புடன் நடந்து வந்தவன் சமையலறையை எட்டிப் பார்த்தான்.

வியர்வை வழிய சமையலில் ஈடுபட்டிருந்தப் பூர்ணிக்கு இரவைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லை போலும்! அவசர,அவசரமாய் காய்,கறிகளை வதக்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் ‘அய்யோ,நேரமாயிடுச்சே’ என்கிற பதட்டம் மட்டுமே!

சுற்றிலும் பார்த்து யாரும் இல்லாததைக் கண்டு கொண்டு அடுக்களைக்குள் நுழைந்த ஜீவரஞ்சன், அடுப்பின் முன்னே நின்றவளின் அருகே சென்று அவள் தோளை இடித்தபடி நின்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அடுப்பில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு ‘என்ன?’ எனப் பார்வையாலே கேட்க..

“நல்லாத் தேய்ச்சுக் குளிச்சும், என்ற மேல மஞ்சள் வாசம் அடிக்கிறதாட்டம் இருக்குடி” -என்றவனைக் கண்டு மெலிதாய்ப் புன்னகைத்தவள்.. பின் அவன் தோளில் மூக்கைப் பதித்து..

“மைசூர் சாண்டல் வாசம் தானுங் மாமா வருது” எனக் கூற.. அவளைத் திருப்பித் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன்..

“எதுவுமே சொல்லல நீ?” எனக் கேட்டான்.

“என்ன சொல்லோனும்?”

“பிடிச்சிருந்ததா, பிடிக்கலையான்னு?”

செல்லமாய் முகம் சுருக்கிக் கேள்வி கேட்டவனைக் கண்டு இமைகளை மூடி அவன் மார்பில் சாய்ந்துத் தன் முகம் மறைத்துக் கொண்டவள்..

“போங் மாமா” எனக் கூற.. சிரிப்புடன் அவள் காதருகே முத்தமிட்டவன் “பூர்ணி…” என்ற சுவாமிநாதனின் அழைப்பில் அவளை விட்டு விலகி.. “மோகனா ஏதோ ஸ்பெஷல் டிரஸ் வாங்கியிருக்கான்னு சொன்னியே! அதை எப்போடி எனக்குப் போட்டுக் காட்டுவ?” எனக் கேட்டு.. அவளது முகம் தாறுமாறாகச் சிவப்பதை வேடிக்கை பார்த்து விட்டு “பூர்ணி, வெட்கப்பட்டுட்டிருக்காங் ஐயா.. வரக் கொஞ்சம் நேரமாகுமுங்க” எனக் கத்த.. அவன் வாயை அழுந்த மூடிப் பின் சிரித்து.. அவன் கன்னத்தில் முத்தமிட்டு “அப்புச்சி…” என்றபடியே ஓடிச் சென்றாள் பூர்ணி.

சுவாமிநாதனிடம் அவள் டீயை நீட்டிக் கொண்டிருக்கும் வேளை வாயில் டூத் ப்ரஷ்ஷூடன் வீட்டிற்குள் நுழைந்த மோகனா, தலையில் துண்டோடு,வியர்வை வழிய, கலைந்த குங்குமத்துடன் நின்றிருந்த பூர்ணியைக் கண்டு கண்ணடித்துச் சிரித்து அவளருகே சென்றாள்.

“என்ன அதுக்குள்ள எந்திரிச்சுப் போட்ட?, சினிமாவுல-லாம் வர்ற மாதிரி நீ 10 மணிக்கு மேல அடிச்சுப்பிடிச்சுக் கீழ ஓடி வருவ-ன்னு நினைச்சேன்” – என அவளை வம்பிழுக்க..

“அப்புச்சி முன்னால என்ன பேச்சுடி பேசுற?” எனத் தங்கையைக் கடிந்த பூர்ணி, முறைப்புடன் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

பல் தேய்த்தபடியே அவளை அங்குலம்,அங்குலமாக ஆராய்ந்த மோகனா.. “ஒரு டிஃபரன்ஸூம் தெரியலயேக்கா” என்றாள்.

“என்னடி வேணும் உனக்கு இப்போ? பேசாம போறியா, என்னன்ற?”

“போறேன்! போறேன்! தெரிய வேண்டியது தெரிய வரட்டும்! அப்புறம் போறேன்! இன்னிக்கு என்ன தேதி?, ஆகஸ்ட் 2. இன்னைல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள நான் தூக்கிக் கொஞ்ச, என்றக்கா குழந்தை வருமா வராதா?, சொல்லு”

“ப்ச், பேசாம போயேன் டி”

“பூர்ணி….” – விளையாட்டைக் கைவிட்டு அவள் முகம் பார்த்து மோகனா அழைக்க.. நிமிர்ந்து தங்கையைப் பார்த்தவளிடம்..

“என்ற கனவுல வந்தது பெண் குழந்தை” என்றாள்.

பதில் பேசாது காய் நறுக்கத் தொடங்கிய பூர்ணி மெல்லப் புன்னகைக்க..

“இப்பிடி சிரிச்சா என்ன அர்த்தம்?” என்றாள்.

“இல்ல….”

“சொல்லு”

“நானும் பெண் குழந்தை தான் வேணும்ன்னு நினைச்சு வைச்சிருக்கேன்!” – வெட்கத்தை வெளிக்காட்டாது அடக்கப்பட்ட உணர்வுகளுடன் கூறியவளைக் கண்டு… தன் கேள்விக்கானப் பதில் கிடைத்த சந்தோஷத்தில்..

“ஹாஹாஹா” எனச் சிரித்த மோகனா “நீ வேணா பாரு, குழந்தை அப்பிடியே என்னாட்டம் வளர்ந்து, உன்ற பி.பியை எகிற வைக்கப் போகுது” எனக் கூற.. காய் நறுக்குவதை நிறுத்தி அவள் முகம் நோக்கியவள்..

“நிச்சயம் உன்னாட்டம் தான் வளரும்! தைரியமா,துணிச்சலா, என்ன எதிர்ப்பு வந்தாலும் நின்னு சாதிக்கிறத் திமிரோட, அன்பு,பாசத்தைக் கூட அதிரடியாக் காட்டுற ஆளா.. இருக்கும்” – என உணர்ச்சிமிகுந்த குரலில் கூற..

உள்ளம் நிறைந்து.. உவகை பொங்கியதில்.. மோகனா பெரிதாய் சிரிக்க.. தன் கோபத்தை மறைந்து வார்த்தைகளை விட்டதில், நாக்கைக் கடித்துக் கொண்ட பூர்ணி..

“உன்ற மேல நான் கோவமா இருக்கேன், போடி இங்கேயிருந்து” – என்று விரட்டவும்.. “பொல்லாத கோவம்” என உதட்டைப் பிதுக்கிய மோகனா, சந்தோஷத்துடனே நகர்ந்து சென்றாள்.

மகிழ்ச்சி குறையாதுத் துள்ளலுடனே ஃபேக்டரி வந்து சேர்ந்தவள், கதவைத் திறந்து கொண்டு அலுவலக அறைக்குள் நுழைகையில்.. இண்டர்காமைக் காதுக்குக் கொடுத்தபடித் தீவிரமாய்ப் பேசியபடி நின்றிருந்த ரகுவரனைக் கண்டு..

“என்னவொரு ஆச்சரியம்! திங்கட்கிழமை அதுவுமா, ஃபேக்டரி பக்கமெல்லாம் வந்திருக்க?” எனக் கேட்க..

“இன்னிக்கு லோட் இறங்குதல்ல?” என உதட்டசைவில் கூறியவன் “ஸ்டாக் செக் பண்ணிட்டு எனக்குக் கூப்பிடுங்க வெங்கடேசன்” என்று விட்டு அவள் முகம் பார்த்து…

“ரொம்ப சந்தோஷமா இருக்கியாட்ருக்கு” என்றான்.

அவன் கேள்வியில் பெரிதாய்ப் புன்னகைத்தவள் “ஆமா பின்ன! நினைச்சது நடந்துடு…ச்ச்…சுல்ல” என்று முடிப்பதற்குள்.. கால் இடறி… தடுமாறி.. டமாலென… மொத்தமாக அவன் மீது சாய்ந்திருந்தாள்.

பேசிக் கொண்டே நடந்து வந்தவள் திடீரெனத் தன் மீது வந்து விழவும், அனிச்சையாக அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு தடுமாறித் தள்ளாடி ஒரு வழியாக நின்ற ரகுவரன்.. அவளைத் தாண்டி பின்னே பார்க்க..

துள்ளல் குறையாது நடந்து வந்திருந்தவள்.. முந்தானை காற்றிலாடிக் கதவின் பின்னே சிக்கியிருப்பதை அறியாது.. வீர நடை போட்டுக் கடைசியில் கீழே விழாத குறையாக மண்ணைக் கவ்வியிருப்பது தெரிந்தது.

“கதவுக்கெல்லாம் சீல கட்டி விடோனும்ன்னு எத்தனை நாள் ஆசைப்பட்ட நீ?” – சிரிப்புடன் கேட்டவனைத் தொடர்ந்து பின்னே நோக்கியவள்.. தலையில் அடித்தபடி..

“கடுப்பேத்தாத டா! சீல சிக்குனது தெரியாம முன்ன நடந்து வந்துட்டேன்! கீழ விழுந்திருந்தா.. நெத்தி பொளந்திருக்கும்” – எனத் தன் போக்கில் புலம்பிக் கொண்டே சென்றவள், தன்னை முழுதாக அணைத்தபடித் தன் முகம் பார்த்து நின்றவனை ஏற,இறங்க நோக்கி..

“கையை எடு! அதான் நின்னுட்டேனல்ல?” என்றாள்.

அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலித்ததாலோ என்னவோ, மலர்ந்து கிடந்த அவள் வதனத்தை நோக்கியவனின் பார்வை, முன்னே நின்ற மூக்கைக் கடந்து மேலே சென்று.. என்றுமல்லாது இன்று அவள் மையிட்டிருந்தப் பெரிய விழிகளில் தேங்கிப் பின் நிதானமாய் இதழ்களில் இறங்க… வியர்த்துக் கிடந்த மேலுதட்டைக் கண்டவனின் கண்களில் மையல் ஏறியதில், தாடி,மீசைக்குள் மறைந்து கிடந்த அவன் உதடுகள் மெல்ல விரிந்தது.

“கையை எடுன்னு சொன்னேன்” – அவளது புருவங்கள் சுருங்கத் தொடங்கியிருந்தது.

“நீ தான் எல்லாத்தையும் தொடங்கி வைக்குற. ஆனா.. நான் முடிச்சு வைக்க நினைச்சா மட்டும் கோவப்பட்ற” – அடிக்குரலில் அடக்கமாய் வெளி வந்தது அவன் குரல்.

“என்றா சம்மந்தமில்லாம ஒளப்பிரிக்கிறவன்?”

“எதுக்குக் கட்டிப்புடிச்ச இப்போ?”

“கட்டிப்புடிச்சேனா??” – அவள் கட்ட்ட்டி என்றதில், அவளது பற்கள் கடிபட.. “தெரியாம வந்து மேல விழுந்ததைத் திரிச்சு சொல்றியா நீ?” எனக் காய்ந்தாள் அவள்.

“நீ தெரியாம வந்து விழுந்த! நான் தெரிஞ்சே கட்டிப்புடிச்சிருக்கேன்! இப்போ ஓகே வா?”

“இப்போ விடப் போறியா இல்லையா நீ?”

“ஒருக்கா விட்டதுக்கே அநியாயத்துக்குப் பாடுபட்டுட்டேன்! இனி விட முடியாது” – என்றவனின் கரங்கள் உயர்ந்து அவள் கழுத்தோடு பதிந்து.. தன் நெஞ்சோடு அவளை இறுக்கிக் கொள்ள.. ஒரு நொடி உடல் அதிர மூச்சடக்கியவள், மறு நொடி அவனை விலக்கித் தள்ளி.. இரண்டடி பின்னே நகர்ந்து நின்றாள்.

உதட்டில் பூத்திருந்த வியர்வை இப்போது..முகம் முழுதிலும் கிளை பரப்பியிருக்க.. ஏறியிறங்கியத் தொண்டையுடன் மூச்சு வாங்க நின்றவளை அலட்டிக் கொள்ளாது நோக்கியவன்.. முன்னே நடந்து சென்று.. கதவில் சிக்கியிருந்த அவளது சேலையை எடுத்து விட்டு.. வெளியே சென்று விட்டான்.

தலையைப் பரபரவெனத் தேய்த்தபடி இடுப்பில் கை வைத்துக் கொண்டு வெளியே நின்றவனுக்கு.. இன்னும் அவளது முகம் தன் நெஞ்சை இடித்து நிற்கும் உணர்வு! காலர் பட்டனைத் திறந்து கழுத்தை நீவிக் கொண்டவன்.. ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்தினான்.

மீண்டும் உள்ளே வந்த போது அவன் கண்டது, அவனது வரவை விரும்பாதவள் போன்று.. விறைத்த முதுகுடன்.. முழு வேகத்தில் கீ-போர்டை டொக்,டொக்கெனத் தட்டிக் கொண்டிருந்த மோகனாவைத் தான்.

கோபமோ,வெட்கமோ அநியாயத்திற்கு சிவந்து கிடந்த அவள் முகம் இன்னமும் வியர்வையில் நனைந்த வண்ணமிருக்க.. சீரற்ற மூச்சின் விளைவால்.. ஏறியிறங்கும் மார்புடன்.. கணினியில் பார்வை பதித்திருந்தாள்.

மேஜையிலிருந்த ஃப்ளாஸ்க்கைத் திறந்துத் தம்ளரில் தண்ணீரை ஊற்றியவன், அவள் முன்பு சென்று வைத்தான்.

“வெந்நீர். குடி”

தன் முன்னே நீட்டியவனைக் கண்டு கொள்ளாது அவள் முழு வேகத்தில் கீ-போர்டைத் தட்ட.. பட்டென அவள் கையைப் பற்றி நிறுத்தியவனை நிமிர்ந்து முறைத்தாள் அவள்.

“நியாயமா பார்த்தா.. என்னைத் தள்ளி விட்டதுக்கு நான் தான் கோவப்படோனும். நீ என்னத்துக்கு ரியாக்ட் பண்ணற இப்போ?“

சிரிப்புடன் கேட்டவனின் கையை உதறி விட்டுக் கடித்தப் பற்களுடன் வேறு புறம் பார்த்தவளின் நாடியைப் பற்றித் தன் புறம் திருப்பியவன்..

“இப்போ என்ன?, நான் செஞ்சதுத் தப்புன்னு சொல்லி சாரி கேட்கோனுமா?” என்றான்.

அவனை நிமிர்ந்து பாராமல், மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளிடம்..

“உன்ற கழுத்துல இருக்கிற செயினைக் கழட்டிப் போடு! நான் உன்னைக் கட்டிப்புடிச்சது தப்புன்னு சாரி கேட்டு உனக்கொரு கும்பிடைப் போட்டு விலகிப் போயிட்றேன்” எனக் கூற..

தன் நாடியிலிருந்த அவன் கையை விலக்கியவள்..

“ஓ! இந்தச் செயின் தான் உனக்கு இந்த உரிமையையெல்லாம் கொடுக்குதா? ஒன்னு தெரிஞ்சுக்கோ! இன்னைக்கு வரை, இதைப் பார்க்கும் போது, இது என்றம்மையோட தாலி-ன்ற நினைப்பு மட்டும் தான் இருக்கு எனக்கு. நீயோ, என்றப்பன் வற்புறுத்தல்ல அன்னைக்கு நடந்த சம்பவமோ, எனக்கு சுத்தமா நினைவுல இல்ல” என்றாள்.

பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு அவள் அமர்ந்திருந்த மேஜையில் ஒரு புறமாக சாய்ந்து நின்றவன்..

“நினைவுல நிற்கோனும்ன்னு தான் கட்டிப்புடிச்சேன்! ஆனா.. நீ தான் தள்ளி விட்டுட்டியே” எனக் கூறி.. கண்களை மூடிக் கோபத்தை அடக்கியவளைக் கண்டு புன்னகை கொள்ள..

அவனை வெறித்து நோக்கியவளின் புறம் குனிந்தவன்.. தீவிர முக பாவத்துடன்..

“ஏன் டா இப்படியொரு சம்பவத்தைப் பண்ணோம்ன்னு உங்களை வருத்தப்பட வைப்பேன்னு உன்றப்பன் கிட்ட சவால் விட்டுட்டுப் போனவ இன்னும் என்னத்துக்கு இதைக் கழுத்துல மாட்டிட்டு சுத்தோனும்?, விருப்பமில்லாம கழுத்துல ஏறுன இந்தக் கருமத்தை நான் பெருசா நினைக்கலீங்ம்மான்னு சொல்லி சாமியை கும்பிட்டு உன்றம்மை படத்து முன்னால கழட்டி வைச்சிடு! எல்லாப் பிரச்சனையும் மொத்தமா முடிஞ்சிடும்” என்றான்.

“பண்ண மாட்டேன்னு நினைக்கிறியா?”

“இதுவரை ஏன் பண்ணாம இருக்கன்னு தான் நினைக்கிறேன்”

“……….”

“மோகனா….”

அடிக்குரலில் அவன் அழைக்கும் விதம் உள்ளே ஏதோ செய்தும், அதை அசட்டை செய்து.. கண்களை இறுக மூடியவள்.. “பழி வாங்குறியா?” எனக் கேட்டாள்.

“எதுக்கு?”

“கல்யாணத்தன்னிக்கு காணாம போன மாப்பிள்ளைன்னு ஊர்,உலகமெல்லாம் உன்னை கேலி பேசுனதுக்கு?”

“ஊர்,உலகம் பேசுறதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்குற ஆளா நான்?”

“பின்ன இதுக்கென்ன அர்த்தம்?”

“நீ இன்னும் இதைக் கழுத்துல மாட்டிட்டு சுத்துறதுக்கு என்ன அர்த்தமோ?, அதே அர்த்தம் தான்”

கண்களைத் திறந்து அவனை அசையாது நோக்கியவளிடம் வெந்நீரை நீட்டியவன் “சூடு ஆறுறதுக்குள்ள குடி” எனக் கூறி விட்டு வெளியே சென்று விட்டான்.

காலையிலிருந்த மகிழ்ச்சி நிலை மாறி உர்ரென்ற முகத்துடன் பொறுமியபடி வேலையைத் தொடர்ந்தவளை அதன் பிறகு அவன் கண்டு கொள்ளவேயில்லை.

மறுநாளும் அவளுக்கு முன்பாக அலுவலக அறையில் அமர்ந்திருந்தவனைக் கண்டபடி அறைக்குள் நுழைந்த மோகனா கவனமாக முந்தானையை முன்னே பிடித்திருப்பதை.. அவன் நமுட்டுச் சிரிப்புடன் பார்வையிட..

“இந்த ஜாடைப் பார்வையெல்லாம் என்ற கிட்ட வைச்சுக்காத சொல்லிப் போட்டேன்” என விரல் நீட்டி எச்சரித்தவளின் அருகே வந்து நின்றவன்..

அவளது நீட்டிய விரலைத் தன் ஐவிரல்களுக்குள் பொதித்துக் கீழ் இறக்கி..

“காலங்கார்த்தால வாக்குவாதம் வேண்டாம்! ஸ்டிட்சிங் யூனிட்ல இன்னைக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருக்கியாட்ருக்கு! போகலாம் வா” எனக் கூறி அவளது தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஹேண்ட் பாக்-ஐ கழட்டி மேஜையில் வைத்து விட்டு.. அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியேற.. நெற்றி சுருங்க அவனது செய்கைகளைக் கவனித்தபடி எதிர்ப்பின்றி அவனைப் பின் தொடர்ந்தாள் மோகனா.

அத்தனைத் தொழிலாளர்களின் முன்னே நிமிர்வுடன் அலட்டிக் கொள்ளாமல் உரையாடுபவளை மெல்லிய சிரிப்புடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவன் பார்க்க..

அவன் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு ஸ்டிட்சிங் யூனிட் பெண்களனைவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறியபடிச் சிரித்துக் கொள்வதைக் கவனித்த மோகனா, அவர்கள் பார்வை சென்றடைந்த இடத்தைக் கண்டுப் பல்லைக் கடித்தாள்.

மீட்டிங் முடிந்ததும் தன்னுடன் நடந்தவனை நிறுத்தி..

“என்னத்துக்கு எல்லார் முன்னாலயும் வெட்கங்கெட்டத்தனமா அப்பிடிப் பார்க்குறவன்?” என எரிச்சலுடன் கேட்க..

அதே சிரிப்புடன் பதிலற்று நின்றவனிடம்..

“உன்ற கிட்டத் தான் பேசிட்டிருக்கேன்” என்று அவள் காய்ந்ததும்..

“அழகாயிருந்தா.. அப்படித் தான் பார்க்கத் தோணும்! நீ ஏன் இப்போ புதுசா கண்ணுக்கு மையெல்லாம் போட்ற?” எனக் கேட்டான்.

‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ என்றபடி எரிச்சல் மிகுதியில் உதட்டைக் கடித்து நெற்றியைச் சொரிந்தவளிடம்..

“சில்க் ஸ்மிதாவாட்டம் செக்ஸியான கண்ணு உனக்கு” என்று வேறு அவன் கூற.. அவனை நிமிர்ந்தும் பாராமல் விறுவிறுவெனத் திரும்பி நடந்து விட்டாள் மோகனா.

பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்தபடி வாய் விட்டுச் சிரித்தவனின் மனநிலை முற்றிலும் குதூகலமாகியிருந்தது. அனைத்தும் மறுநாள் மதியம் வரை மட்டுமே!

மூன்றாவது நாளாகத் தொடர்ந்து ஃபேக்டரிக்கு வருகை தருபவனைக் கவனித்தாலும், பெரிதாக கண்டு கொள்ளாதிருந்த மோகனா, அலுவலக வேலை தொடர்பாக அவனிடம் சந்தேகம் கேட்க வேண்டி, அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவள் கேட்டதும் “அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் உன்ற கம்ப்யூட்டர்லயே ஃபீட் பண்ணியிருக்கே” என்றவன் அருகே வந்து நிற்க..

“எங்க இருக்கு?” என்றபடி விறுவிறுவெனத் திரையை ஸ்க்ரால் செய்தவளிடம்..

“இன்னும் கொஞ்சம் மேல ஸ்க்ரால் பண்ணு, இன்னும்,இன்னும்” என்றவன் பேச்சு வாக்கில் மௌஸின் மீதிருந்த அவள் கை மீதுத் தன் கையைப் பதித்து க்ளிக்கி “இதோ” எனக் காட்ட..

அவனது கை தன் மீது பதிந்ததும்.. விறைத்து அமைதியாகி விட்டவளை உணராது பேசிக் கொண்டே சென்றவன்.. பின் அவளிடமிருந்து பதில் வராததைக் கண்டு திரும்பி அவள் முகத்தை நோக்கினான்.

மூச்சடக்கிக் கணினியை வெறித்திருந்தவளின் கையிலிருந்த சில்லிப்புத் தன் கையில் தெரிய, பட்டெனக் கையை விலக்கிக் கொண்டவன் ‘சாரி..’ எனத் தன்னிச்சையாக வெளியே வரவிருந்த வார்த்தையைத் தொண்டையிலேயே நிறுத்தி விட்டு அவளையே நோக்கினான்.

விரிந்த கண்கள், விரிந்ந்ந்ந்ந்த நிலையிலேயே இருக்க, அழுந்த மூடியிருந்த இதழ்களின் பின்னே அவள் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பது புரிய.. வம்பு செய்யும் நோக்கத்துடன் அவள் முன்னே சாய்ந்தவன்.. மெல்லிய குரலில்..

“chocolate perfume-ஆ?” எனக் கேட்டான்.

அவனைத் திரும்பிப் பார்த்து உதட்டை வளைத்தவள்.. மேஜையிலிருந்த பேனாவை அவன் கன்னத்தில் வைத்து.. அவனைப் பின்னே தள்ளியபடி..

“நீ பூசியிருக்கிறது என்ன ஜவ்வாதா?” எனக் கேட்க.. தோளைக் குலுக்கியவன்.. “நான் என்ன உன்னை மாதிரி ஃபாரீன் ரிடர்ன்-ஆ? செண்ட் பூசிக்கிறதுக்கு?, என்ற கிட்டயிருந்து வர்றதெல்லாம் வியர்வை வாசம் மட்டும் தான்” என்றான்.

அவன் பதிலைக் கண்டு கொள்ளாது எழுந்து சென்றவள், அறை மூலையிலிருந்த மேஜையினருகே சென்று, அதன் மீதிருந்த ஃப்ளாஸ்க்கைத் திறக்க.. அவள் பின்னே சென்று நின்றவன், அவளைத் தாண்டி.. கிட்டத்தட்ட இடித்துக் கொண்டு ஃப்ளாஸ்க்கின் அருகிலிருந்தத் தம்ளரைக் கையில் எடுக்க.. நிமிர்ந்து.. அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

இமைக்காதுத் தன்னை நோக்கிய கண்களின் உணர்ச்சியற்ற நிலை கொடுத்தத் தூண்டுதலில்.. அவளை நெருங்கி நின்றவனிடம்.. விலக முயற்சிக்காது.. இகழ்ச்சியுடன் நோக்கியவள்..

“நீ.. என்ன மாதிரி உணர்வைக் கொடுக்க இப்படியெல்லாம் முயற்சி பண்றன்னு தெரியல! ஆனா.. நீ இப்பிடிப் பண்றதையெல்லாம் பார்க்கும் போது.. பஸ்,தியேட்டர்ன்னு பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாம் பொண்ணுங்கக்கிட்ட சில்மிஷம் பண்ற வக்கிரம் பிடிச்ச ஆம்பளைங்க தான் ஞாபகத்துக்கு வராங்க எனக்கு” என்றாள்.

அவள் பேச ஆரம்பித்ததும் ஆர்வமும்,புன்னகையுமாய் அவளைக் கவனிக்கத் தொடங்கியவன், அவள் முடித்ததும், அவமானத்தில் கன்றிய முகத்தை அடக்க வழி தெரியாது, சிவந்த விழிகளுடன் ஒரு நொடி அசையாது நின்று பின் கைகளை இறுக்கித் தன் அதீத கோபத்தை கட்டுப்படுத்தி விருட்டென அவளிடமிருந்து விலகி, அந்த அறையை விட்டுச் சென்று விட்டான்.

அத்தோடு போனவன் தான்! அதன் பின்பு ஃபேக்டரி பக்கமும் தலை காட்டவில்லை! வீட்டிலும் அவனைக் காண முடியவில்லை!

‘விருப்பத்தோட நடந்தாத் தான் அது பேரு ரொமான்ஸ்! விருப்பமில்லாம நடந்தா அது பேரு ஹராஸ்மெண்ட்’ எனத் தனக்குத் தானே கூறி பொறுமியபடித் திரிந்தவள், அவனது விலகலைக் கண்டு கொள்ளாமல் கழித்தாள்.

ஆனாலும் அடுத்த சில நாட்களில் அலுவலக வேலையில் வந்த சந்தேகங்களையும்,கேள்விகளையும் தீர்க்க அவனைத் தேடியாக வேண்டியக் கட்டாயத்திற்கு அவள் தள்ளப்பட,

“இத்தனை நாள் இங்க வேலை பார்க்குறீங்க, இதையெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்க மாட்டீங்களா?” என வெங்கடேசனிடம் பாய்ந்தாள்.

வீட்டிலும் அவன் தென்படாததைக் கண்டு நேரே தந்தையிடம் சென்று “ரகு எங்கே?” என்று அவள் கேள்வி கேட்க.. அவளை மேலும்,கீழுமாய் நோக்கிய கணபதி..

“உன்ற புருஷன் எங்கன்னு என்னைய வந்து கேட்குற? வெட்கமாயில்ல உனக்கு?” எனக் கேட்டதும்..

“புருஷனா?” என்று வாயைப் பிளந்தவள் பின் எரிச்சலுடன் “ப்பா…” என்று கத்த..

“என்ன? ம்? கத்துற வேலையெல்லாம் உன்ற மாமன் கிட்டயும், உன்ற புருஷன் கிட்டயும் வைச்சுக்க! நான் உன்னைப் பெத்தவன் நினைவு இருக்குதல்ல?” – என எகிறினார்.

இது நாள் வரை அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசாத மனிதர், இன்று திட்டுவதற்கேனும் தன் முகம் பார்ப்பதைக் கண்டு அடங்கியவள்,

“அவன் எங்கன்னு தானுங்ப்பா கேட்டேன்” எனப் பம்மிய குரலில் கூற..

“உன்ற மனசுல என்ன நினைச்சிட்டிருக்க நீ? படிக்கோனும், நிர்வாகம் பார்க்கோனும்ன்னு அடம்பிடிச்சு, கல்யாணமான அன்னிக்கு நாட்டை விட்டு ஓடுன! நானும் விட்டுப் பிடிப்போம்ன்னு அமைதியா உன்னை, உன்ற போக்குல விட்டேன்! இப்போ தான் நீ நினைச்சபடி எல்லாம் நடக்குதல்ல? இனியும் அவனோட சேர்ந்து வாழ்றதுல என்னக் கஷ்டம் உனக்கு?” என்றார்.

“உங்கக் கட்டாயத்துக்காகவெல்லாம் குடும்பம் நடத்துனா, வாழ்க்கை விளங்காதுங்ப்பா” – விட்டேற்றியாகக் கூறியவளிடம்..

“அப்ப உன்ற கழுத்துல கிடக்குறதைக் கழட்டித் தூக்கி எறி! என்ற மருமவனுக்கு வேற நல்ல பொண்ணாப் பார்த்து நான் கல்யாணம் கட்டி வைச்சிக்கறேன்” என்று அவர் சத்தமிட..

கோபத்தின் உச்சத்திற்கே சென்றவள் “கட்டி வைங்களேன்! யாரு வேணாம்ன்னு சொன்னா?, என்னவோ நான் தான் அவனோட நல்வாழ்க்கைக்குத் தடையா இருக்கிறதாட்டம் என்ற மேல ஆத்திரப்பட்றீங்க?, அவனுக்குக் கல்யாணம் பண்ணுங்க! எனக்குக் கருமாதி பண்ணுங்க! இன்னும் என்னவெல்லாம் பண்ணத் தோணுதோ, எல்லாத்தையும் பண்ணுங்க” – என்று பெருங்குரலில் கத்தி விட்டு மூச்சு வாங்கத் திரும்பியவள்..

அறை வாசலருகே சுருக்கியப் புருவங்களுடன் இருவரையும் நோக்கியபடி உள்ளே வந்து கொண்டிருந்த ரகுவரனைக் கண்டு முழுக் கோபத்துடன் முறைத்து நின்றாள்.

அவளது கோபப் பார்வையை மதியாது மாமனிடம் திரும்பியவன்..

“என்ன பிரச்சனைங் மாமா?” எனக் கேட்டான்.

வழக்கத்தை விட அதிகமாக அவன் குரல் ஏந்தி வந்த அமைதியை அவளது இதயம் கண்டு கொண்டாலும், அதை மூளை புறக்கணிக்க.. ஆத்திரம் குறையாமல் அவனையே தொடர்ந்த பார்வையுடன் நின்றாள் அவள்.

“என்ன பிரச்சனையா?, அதை நான் கேட்கோனும் கண்ணு! உங்க ரெண்டு பேருக்குள்ள ரொம்ப நாளா ஓடுற பிரச்சனை என்னைக்குத் தான் தீரும்?” – என சலித்தக் குரலில் கூறியவரைக் கண்டுக் கைகளைக் கட்டியபடித் தரையை நோக்கியவன்.. பின்..

“பிரச்சனை வர்ற அளவுக்கு எங்களுக்குள்ள எந்த உறவும் கிடையாதுங் மாமா” என்றான்.

தைரியமாக, தெளிவாக ஒலித்த அவனது குரலிலிருந்த மாற்றம், திடுக்கிடச் செய்ய.. அதிர்வாய் அவனை நோக்கும் தந்தையின் கை நடுக்கத்தைக் கண்டபடி, ‘என்ன பேசறான் இவன்?’ என்பது போல் கலவரத்துடன் அவனை நோக்கினாள்.

“ஆமாங் மாமா! எல்லாம் மாறிடும்,எல்லாம் மாறிடும்ன்னு சொல்லி இந்த ஒரு வருஷமா உங்களை ஏமாத்திட்டிருந்ததுக்கு என்னை மன்னிச்சுடுங்க! இது.. இது எதுவும் எப்பவுமே மாறப் போறது இல்லீங் மாமா”

மாமனின் முகம் நோக்காமல் பேசிக் கொண்டே செல்பவனையும், அவன் கூறுவதைக் கேட்டுத் தந்தை தளர்வுடன் படுக்கையில் அமர்வதும் தெரிய.. செய்வதறியாது விழித்தபடி நின்றாள் மோகனா.

“யாருக்கும் பாதிப்பில்லாம, என்ன சாங்கியம் பண்ணி அந்தச் செயினைக் கழட்டி எறியலாம்ன்னு முடிவு பண்ணுங் மாமா! இந்தப் பிரச்சனையெல்லாம் தீர, இந்த வீட்ல நிம்மதி பொறக்க, இது தானுங் ஒரே வழி”

தரையைப் பார்த்தபடி அனைத்தையும் கூறி முடித்தவன், பெரிய,பெரிய மூச்சுக்களை வெளியிட்டபடி அமர்ந்திருந்த மாமனிடம் ஒரு பார்வையை செலுத்தி விட்டு.. விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி விட்டான்.

சத்தியமாக.. ரகுவரனிடமிருந்து இப்படியொரு பேச்சை எதிர்பார்த்திராததாலோ என்னவோ.. மூளை மங்கிப் போய் அசையாது நின்ற மோகனா, பின் உள்ளே பொங்கிய எரிமலையை அடக்கும் வழி தெரியாது, ஆத்திரத்தில் சிவந்த முகத்துடன் தலையை உலுக்கி,

அமர்ந்த இடத்திலேயே சிலையாகி விட்டிருந்தத் தந்தையினருகே அவசரமாய்ச் சென்று.. “ப்பா..” என்று பேச முயல.. கைக் காட்டி நிறுத்தியவர் “போய் விடு…” என்பது போல் சைகை செய்யவும்.. கோபமாய் அவரை ஒரு பார்வை பார்த்தவள் பின் ரோஷத்துடன் விருட்டென வெளியேறி விட்டாள்.

இரவுச் சாப்பாட்டைப் புறக்கணித்து விட்டு அதீதக் கோபத்தில்.. கூண்டுப் புலியாய் அறைக்குள் நடைபயின்று கொண்டிருந்தவளுக்கு.. உள்ளே எழுந்த ஏமாற்ற உணர்வு ஏகத்துக்கும் அவளைக் கடுப்பேற்றி வெறியாக்கிக் கொண்டிருந்தது.

அவள் நடந்த வேகத்திற்கு முன்னே வந்து விழுந்த சங்கிலியைக் கையில் பற்றியவள் பல்லைக் கடித்தபடி ஒரு நொடி யோசித்துப் பின் விறுவிறுவென ரகுவரனின் அறையை நோக்கிப் படியேறினாள்.

படித்துக் கொண்டிருந்தப் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து வாயிலை நோக்கிய ரகுவரன், நட்ட நடு ராத்திரியில்.. கலைந்தத் தலையும்,சிவந்த கண்களுமாய் மூச்சு வாங்கத் தன் முன்னே நின்றவளைக் கண்டுப் புருவம் சுருக்கியபடி எழுந்து நின்றான்.

“அப்பா கிட்ட எதுக்கு அப்பிடி சொன்ன?”

மிதமிஞ்சிய ஆத்திரத்துடன் கேட்டவளைக் கண்டு கையிலிருந்தப் புத்தகத்தை மேஜையில் எறிந்தவன், அவளை மிஞ்சிய கோபத்துடன் பல்லைக் கடித்தபடி..

“ஏன்?, இதுக்குத் தான நீ ஆசைப்பட்ட?” எனக் கேட்டான்.

அவனது கோபம் அவளை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்ய.. “ஆசைப்பட்டேன் தான்! இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு உன்ற வாயைத் திறந்து என்றப்பன் கிட்ட நீ மறுத்துப் பேசோனும்ன்னு ஆசைப்பட்டேன் தான்! இதை நீ ஒரு வருஷத்துக்கு முன்னாடி, கல்யாணம் நிச்சயம் ஆனப்போ பண்ணியிருந்தேயின்னா.. சந்தோஷப்பட்டிருப்பேன்! மறுக்க வேண்டிய சமயத்துல எல்லாம் என்ற மாமனை கஷ்டப்படுத்த முடியாதுன்னு நல்லவனாட்டம் இருந்து போட்டு இப்ப என்னத்துக்கு டா அவர் கிட்ட இப்படிப் பேசிட்டு வந்த?” – என்று எகிறினாள்.

“இனியும் மறுத்துப் பேசாம இருக்கிறதுலப் பிரயோஜனமில்லன்னு பட்டது! அதான் அப்பிடி சொன்னேன்! என்னிக்கா இருந்தாலும், அவர் இதைக் கேட்டுத்தான ஆகோனும்?,”

“…………”

“நீ என்னைக் கட்டிக்கப் போறியா?, என்ற கூட சேர்ந்து வாழப் போறியா? ரெண்டுமே இந்த ஜென்மத்துல நடக்கப் போறதில்ல தான? அப்புறம் என்னத்துக்கு டி அந்த மனுஷனுக்கு நம்பிக்கைக் கொடுக்கச் சொல்ற?”

“………..”

“எனக்குப் புரியல. நீ என்னத்துக்குக் கோவப்பட்ற இப்ப? உன்றப்பா மனசு கோணுற அளவுக்கு நான் பேசிப் போட்டே-ன்னா? ஆனா.. உன்றப்பன் வருத்தப்படுறதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்குற ஆளா நீ?”

கோபமும்,ஆத்திரமும் தலைக்கேறியதன் விளைவால்.. சிவந்த கண்களில் கண்ணீர் கோர்த்து நிற்க.. கையை இறுக்கிக் கொண்டு அவனையே வெறித்துப் பார்த்தபடி நின்றவளின் நிலை.. அநியாயத்திற்கு மனதைத் தாக்க.. அவள் அத்தனை அவமானப்படுத்தியும், அவள் புறம் சாயும் இதயத்தின் மானங்கெட்டத்தனத்தை எண்ணி நொந்தபடித் தலையைக் கோதிக் கொண்டவன்..

“இனியாவது எந்தப் பிரச்சனையும் இல்லாம நாம நிம்மதியா இருக்கோனும்ன்னு நினைச்சுக்க! நீ உன்ற வாழ்க்கையைப் பாரு! நான் என்ற பொழப்பைப் பார்க்குறேன்” என்றவன் அத்தோடு முடிந்ததென்பதைப் போல், நாற்காலியை நோக்கித் திரும்ப…

“என்றனால இந்தச் சங்கிலியைக் கழட்ட முடியாது” என்றவளின் குரல் தீர்மானமாய் ஒலிப்பது கண்டு ஆச்சரியத்தில் பெரிதாகிய விழிகளுடன்.. சட்டெனத் திரும்பி நோக்கினான்.

வாசலருகே அசையாது நின்றவள் அவன் முகத்தைப் பாராது, எங்கோ நோக்கியபடி..

“இப்ப என்ன உன்ற வாழ்க்கை நிம்மதியா இல்லன்னு, இந்தச் செயினைக் கழட்டி வீசி நிம்மதியைத் தேடக் கிளம்பிட்டவன்?” – எனக் கூற..

உதட்டை ஈரப்படுத்திப் பல்லைக் கடித்த ரகுவரனுக்குக் கடுப்பில் மண்டை காய, பிடரியை அழுத்தமாய்க் கோதிக் கொண்டு எரிச்சலோடு நின்றான்.

அவன் முகத்தைக் காணா விட்டாலும், கோப மூச்சை வெளியிட்டபடி அவன் உஷ்ணமாயிருப்பது புரிந்தும், இறுகிப் போய் நின்றவள்..

“என்றனால இந்தச் செயினைக் கழட்ட முடியாது” என அழுத்தமாய்க் கூற..

“சரி, அப்டின்னா.. எப்போ ரெண்டு பேரும் குடும்பம் நடத்தலாம்? சொல்லு.” என்றான்.

அவன் கேள்வி பிடிக்காததைப் போல் முகத்தைச் சுருக்கியவள், தரையை நோக்கியபடி நெரித்தப் புருவங்களுடன் நிற்க..

“ரிஜெக்ட் பண்ற உரிமையெல்லாம் உனக்கு மட்டும் தான் இருக்குன்றதாட்டம் பேசுற? நீ என்னை வேண்டாம்ன்னு சொல்லலாம்! ஆனா.. நான், நீ வேணாம்ன்னு டிசைட் பண்ணக் கூடாதா?” எனக் கூறித் தொடர்ந்து..

“உன்ற நினைப்பு தான் என்ன?, சங்கிலியைக் கழட்டி வீசவும் உனக்கு மனசில்ல, என்ற கூட சேர்ந்து வாழவும் விருப்பமில்லன்னா, என்ன தான் இதுக்கு முடிவு?, அதையும் நீயே சொல்லித் தொலை” – என்றான்.

தன் எண்ணப் போக்கின் அர்த்தம் குறித்து அவளுக்கேத் தெளிவில்லாத போது, அவனிடம் என்ன கூறுவாள்? சுணங்கிப் போன முகத்துடன், என்ன பேசுவதெனத் தெரியாமல்.. குழப்பமும், கோபமுமாய் நின்றவளையே மூச்சு வாங்க நோக்கியவன்.. பின்..

“என்னைப் பாரு” என்றான்.

பதிலற்றுத் தரையை வெறித்தபடி நின்றவளிடம்.. மீண்டும்..

“பாருன்னு சொல்றேனல்ல?” என்று அவன் அழுத்திக் கூற… மெல்ல நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

மூக்கு விடைக்க, கோப மிகுதியில் கண்களில் தேங்கியிருந்தக் கண்ணீரும்,நெற்றி நிறைய வியர்வையுமாய் மூச்சு வாங்க நின்றவளைக் கண்டு, கண்களை அழுந்த மூடி, நெற்றியைத் தேய்த்தவன், பின் ஒரே இழுப்பில்.. அவளை இழுத்துத் தன்னருகே வரச் செய்து, அவளைத் தன்னோடு சேர்த்துத் தூக்கி இறுக அணைத்து, அவள் கழுத்தில் தன் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்டான்.

முதலில் திடுக்கிட்டுப் பின் அதிர்ந்து, பின் நடுங்கி, கடைசியாய்க் கோபம் கொண்டு அவன் தோளை அழுந்தப் பற்றி விலகி அவன் முகம் பார்த்தவளை.. கோபமும்,காதலுமாய் நோக்கியவன்..

“தோணும் போதெல்லாம் கட்டிக்குவேன்! அதனால இனி என்ற கண்ணு முன்னால வராத” எனக் கூறி.. துடிக்கும் உதடுகளுடன் தடுமாறும் கருமணிகளோடு மூக்கு விடைக்கத் தன்னையே நோக்குபவளை இறுகக் கட்டிக் கொண்டு… மூச்சு வாங்க.. அவள் தோளில் நெற்றியை அழுத்தி.. கண்களை மூடி நின்றான் ரகுவரன்.