அத்தியாயம் - 11

I Love you!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான சக்ஸஸ் பார்ட்டி அன்று மாலை ஆர்.ஏ.புரம் லீலா பேலஸில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய பார்ட்டிக்கான ஏற்பாடுகளுக்கு சம்பத்தும், அவருடைய குழுவும் பொறுப்பேற்றிருந்த படியால் டீக்காக டிரஸ் செய்து கொண்டு வந்து அங்கு போடப்படும் உணவுகளை அள்ளிக் கொட்டிக் கொள்வது மட்டுமே ரிஷியைச் சேர்ந்தவர்களின் வேலையாக இருந்தது.

வருகை தந்த ஒவ்வொருவரையும் வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த சம்பத் கோட் பட்டனை சரிசெய்தபடி விறுவிறுவெனப் படியேறி வந்த ரிஷியைக் கண்டு “என்ன டைரக்டர் சார், நீங்களே லேட்டா வரலாமா?” என்று தோள் தட்டி “குட் வர்க் டா. வே டூ கோ” என்று கைக் குலுக்கினார்.

நெற்றி வியர்வையைத் துடைத்து சட்டைக் காலரை சரி செய்தவன் “தேங்க்யூ சார். சீஃப் வந்தாச்சா?” என்று விசாரித்தான். “இல்லடா அவருக்குத் தான் வெயிட்டிங்” என்றவருடன் சேர்ந்து தானும் அங்கேயே நின்று கதையளக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் உம்மென்ற முகத்துடன் வருகை தந்த அர்ஜூனிடம் “அனு எங்கடா?” என்று ரிஷி விசாரிக்க “அவ அந்த அஜய் பயலோட வர்றாளாம்டா” எனக் கூறி விட்டு எரிச்சலுடன் உள்ளே சென்றான்.

அர்ஜூன் சென்ற பத்து நிமிடத்தில் அஜய்யுடன் ஜோடியாக வந்திறங்கிய அனுவைக் கண்டு “ம்க்க்க்க்க்கும்” என்ற சம்பத் “இவனை நான் இன்வைட் பண்ணவே இல்லையேடா”என்று புலம்பிக் கொண்டே அவனிடம் கைக்குலுக்கி வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்.

திடீரென வாசலில் “ஹேஏஏஏஏ…. ஊஊஊஊஊஊஊ” என்ற கோலாகலமானச் சத்தமும் அதைத் தொடர்ந்து டப் என வெடிக்கப்பட்ட கலர்ட் பேப்பர் க்ராக்கர்ஸின் சத்தமும் காதைக் கிழித்தது.

எங்கிருந்தோ தெளிக்கப்பட்ட ஸ்நோ ஸ்ப்ரேக்கள் அனைவர் தலையையும் வெள்ளையாக்க… “ஹே.. கும்த்தலக்கடி கும்மாவா டீம்-டீன்னா சும்மாவா?,ஹிப்பிப்…. ஹூரே… ஹிப்பிப்…. ஹூரேஏஏஏஏ” என்று கத்திக் கொண்டும்,ஆடிக் கொண்டும் டீம்-டீயைச் சேர்ந்த ரிஷியின் மக்கள் ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தனர்.

கலகலவெனச் சிரித்தபடி இரு கைகளையும் ஆட்டி வரவேற்ற ரிஷியும் உதட்டை மடித்து அவர்களைப் போலவே ஆடத் தொடங்க.. அவனருகே வந்ததும் “நடத்துற ப்ரோக்ராம் எல்லாத்தையும் சக்ஸஸ் ஆக்கி நமக்கு சோறு போட்டு வாழ வைக்கிற டைரக்டர் சாருக்கு ஒரு ‘ஓ’-வைப் போட்டு ஆரம்பிங்கடா” என்று சுதன் சத்தமிட்டதும் “ஓஹோஹோஹோஹோ” என்று கத்தியவர்கள் அவன் கையைப் பிடித்துக் குலுக்கி, தோளைத் தட்டித் தலையைக் களைத்து ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

“ரௌடி… ரௌடிப் பசங்கடா நீங்கள்லாம்” என்று சிரித்த ரிஷி களைந்த தலை முடியை சரி செய்தபடித் திரும்புகையில் வாசலின் மூலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் ரசித்தபடி சிரிப்புடன் நின்றிருந்த ஹரிணி தெரிந்தாள்.

கருநீல நிற எளிமையான சல்வாரில் தன் நீண்டக் கருங்கூந்தல் அனைத்தையும் வலது பக்கமிட்டு சின்னதாக புருவ மத்தியில் கருப்புப் பொட்டிட்டு, கண்களுக்கு மை தடவி லேசாக உதட்டுச் சாயம் பூசியிருந்தாள். அதுவே அவளைப் பேரழகியாகக் காட்ட மூச்சு விட முடியாமல் முகம் மாறித் திண்டாடிப் போனான் ரிஷி.

“பாஸ்.. பாஸ்.. ஒரே ஒரு செல்ஃபி”-என்ற ரோஷினி அவனருகே வந்து நின்று இரு விரல்களை நீட்டி வீ –எனக் காட்டிப் போஸ் கொடுக்கத் தானும் சிரித்தபடி போஸ் கொடுத்தான். ஆளாளுக்கு ஒவ்வொருவராக மாறி,மாறி அவனருகே வந்து விதவிதமாக செல்ஃபி எடுத்துக் கொண்டு செல்ல… அவர்களுக்கேற்றவாறு ஈஈஈஈயென்றும், ஹிப்-ஹாப் ஸ்டைலில் இரு கைவிரல்களை நீட்டியபடியும், ஆஆஆ-வென வாயைத் திறந்தபடியும் விதவிதமாக போஸ் கொடுத்த ரிஷியைக் கண்டு ஹரிணிக்கு சிரிப்பு வந்தது.

“திவ்யா… ஏன் ஓரமா நிற்கிற?, இங்க வா… நீயும் ஃபோட்டோல நில்லு”-என அவளை இழுத்துக் கொண்டு வந்த ரோஷினி ரிஷியின் அருகில் நிப்பாட்டி வினோத்தை நோக்கிக் கண்ணடித்தாள்.

தயங்கியபடித் தலை குனிந்து நின்றிருந்த இருவரும் ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்க்கக் கூசி அருகருகே நிற்க முயற்சித்து முடியாமல் ஆளுக்கொரு பக்கமாய் இரண்டடி தள்ளி நின்றனர்.

இருவரையும் கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்த வினோத்திற்கு இருவரையும் கண்டு முகத்தில் புன்முறுவல் பூத்தது. என்ன.. என்ன பண்றானுக இவனுக ரெண்டு பேரும்?, என்று முணங்கியபடி “ஆர்.கே, கொஞ்சம் அவ பக்கத்துல ஒட்ட்ட்ட்ட்டி நில்லுங்களேன். ஃப்ரேம் செட் ஆகல” எனக் கூறியதும் அனைவரும் “ஊஊஊஊஊஊ” என்று கூச்சலிட்டனர்.

“டேய்… உன்னை சாவடிச்சிடுவேன்” என்று சிரிப்புடன் கத்திய ரிஷியைக் கண்டு “வாவ்வ்வ்வ்வ்வ் ஆர்.கே வெட்கப்படுறார்!, ஓஓஓஓஓஓஓஓஓஓஓ” என்று அதற்கும் கத்தினர்.

“படுத்தாதீங்கடா ப்ளீஸ்” என்றவன் ஓரடி தள்ளி அவளருகே நின்றதும் “பத்தல…..” என்று வினோத் சத்தமிட… சிரிப்பை அடக்க முயன்றுத் தோற்று இருவரும் கலகலத்தனர். முதன்முறையாக அருகருகே சிரித்தபடி நிற்கும் இருவரையும் அழகாக படம் பிடித்துக் கொண்டது வினோத்தின் கேமரா.

பார்ட்டி ஆரம்பித்ததும் ஒவ்வொருவராக சம்பத் மற்றும் அவருடைய குழுக்களைச் சேர்ந்த மக்களை பாராட்டித் தங்களது வார்த்தைகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.

கடைசியாக ரிஷியை அழைத்ததும் கோட் பட்டனை சரி செய்தபடி தன்னிருக்கையிலிருந்து எழுந்தவனைக் கண்டு, வழக்கம் போல் கைத் தட்டலும்,விசிலும் பறக்க பக்கென சிரித்துத் தலை கோதியபடி இரண்டடி முன்னும்,பின்னுமாய் நடந்து போதும்,போதும் எனக் கைக்காட்டி நன்றி என்றான்.

“ஒவ்வொரு தடவையும் சக்ஸஸ் பார்ட்டின்னு இப்படி வந்து நிக்கும் போது, நீங்க அடிக்கிற விசிலும்,கைத்தட்டலும் தான் டா என்னை ஸ்பிரிட்ஃபுல்லா வைச்சிருக்கு! என்னை நம்பி,நான் பார்க்குற வேலைல எனக்கு சுதந்திரம் கொடுத்து… சில சமயம் அது மக்கள்கிட்ட ரீச் ஆகாம ஃப்ளாப் ஆகும் போது எனக்காக சீஃப் கிட்டத் திட்டு வாங்கி…. ஆரம்பத்திலிருந்து இப்போ வரை எனக்கு பேக் போனா இருக்குற சம்பத் சாருக்கு… ஐ நோ!, சிம்பிளா தேங்க்ஸ்ன்னு சொல்றதெல்லாம் பத்தாது!”

“ஹூஊஊஊஊஊ”-என்று மக்களிடையே எழுந்த சத்தத்தைத் தொடர்ந்து “சம்பத் சார், என் உடல்,பொருள்,ஆவி எல்லாம் உங்களுக்குத் தான்றது தெரியும்ல உங்களுக்கு?” என்று கூற… அரங்கமே அதிரும் அளவுக்கு சிரிப்பும்,கைத்தட்டலும் நிறைந்தது.

“என் மேலயும்,சம்பத் சார் மேலயும் நம்பிக்கை வைச்சு நாங்க எடுக்கிற புது முயற்சிகளுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுற ஜேசன் சார்,அசோக் சார்,ராபின் சார் உங்களுக்கும் என்னோட நன்றி!,”

“எங்க எல்லார்க்கிட்டயும் இருக்கிறது வெறும் ஓரல் ஐடியாஸ் தான். எங்களோட கைடன்ஸை மட்டும் வைச்சிக்கிட்டு எல்லாத்துக்கும் உருவமும்,உயிரும் கொடுத்து எங்க எண்ணங்களை மெய்யாக்குறது நீங்க தான் டா பசங்களா!! நீங்க இல்லாட்டி… நான் இல்லை!” – என்று அவன் கூறியதும் எழுந்து நின்று கைத்தட்டிய அவன் குழுவினர் விடாது விசிலும்,கூச்சலுமாய் அமர்க்களப்படுத்தி விட்டனர்.

“ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ கைஸ்….. நான் திட்டுனாலும்,பாராட்டுனாலும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டு தனிப்பட்ட விரோதம் எதையும் வளர்த்துக்காம, கூட்டு முயற்சியோட கொடுக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணிக்கிற இந்த மாதிரி வண்டர்ஃபுல் டீமோட இத்தனை வருஷமா ட்ராவல் பண்ண முடிஞ்சது என்னோட மிகப்பெரிய பாக்கியம்!, ஜமாய்ங்கடா பசங்களா!!! இன்னிக்கு நாள் நம்மோடது” – என்று முடித்தவனின் முன்னே ஆளுயரப் பெரிய கேக்கைக் கொண்டு வந்து நிறுத்தினர்.

அருகிலிருந்தத் தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டவன் கேக்கைக் கண்டுக் கண்களைப் பெரிதாக விரித்தான். “சிங்கிள் கட் தான் ஆர்.கே” என்ற வினோத் நீண்ட கத்தி ஒன்றை அவனிடம் நீட்ட… “ஓகே! என்றவன் “ரெடி…… 1…….2……..3…..” என்று முடித்ததும் கத்தியால் கேக்கின் மேலிருந்துத் தொடங்கிக் கீழ் வரை ஒரே கோடாக வெட்டினான்.

அவன் வெட்டி முடித்ததும் ஆளாளுக்கு அவன் முகத்தில் க்ரீமைப் பூச.. “டேய்… டேய்.. வேண்டாம்டா”என்று அங்குமிங்கும் ஓடி அந்த இடத்தையே அதிரடியாக்கிக் கொண்டிருந்தான் ரிஷி.

ர் யூ எஞ்சாயிங் த பார்ட்டி மா?” – கையில் கூல்டிரிங்க்ஸூடன் தன்னை அணுகிய சம்பத்திடம் எழுந்து நின்று “ஹ்ம்ம்ம், நல்லா போயிட்டிருக்கு சார்” என்றாள் ஹரிணி.

“ஆர்.கே உன் கிட்ட எதுவும் வம்பு பண்றானா?”

“சார், நீங்களுமா?”-வினோத்,சுதன்.

“அ..அதெல்லாம் ஒன்னுமில்ல சார்”-ஹரிணி

“அவன் பொதுவா எந்தப் பொண்ணுங்ககிட்டயும் பெருசா இன்ட்ரெஸ்ட் எதுவும் காட்ட மாட்டான்ம்மா. ஆனா உன்னைப் பார்த்ததும் மட்டும் ஏன் இப்படி இருக்கான்னு…….”-என்று இழுத்தவரை “நீர் செத்த சாத்தரேளா சார்?”-என முணங்கிய வண்ணம் அடக்கினான் அர்ஜூன்.

பேச்சு வேறு பக்கம் செல்வதையும் அனைவரும் தன்னையே ஆர்வமாக நோக்குவதையும் கண்ட ஹரிணிக்கு முகம் மாறி விட “எ..எக்ஸ்யூஸ் மீ” என்றபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

நேராக வாஷ்ரூமுக்குச் சென்று முகத்தைக் கழுவியவள் ஊஃப்ஃப்ஃப்ஃப் என்றபடி நிமிர்ந்து கண்ணாடியை நோக்கினாள். எதிரிலிருந்த கதவில் எழுதப்பட்டிருந்த “சேஞ்ச் இஸ் த ஒன்லி கான்ஸ்டண்ட் இன் லைஃப்” என்கிற மேற்கோளைக் கண்டு யோசனையில் ஆழ்ந்தவள் ரிஷியின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

பக்கத்து அறையில் கண்ணாடி முன்பு நின்று முகம் முழுதும் அப்பிப் போயிருந்த க்ரீமைத் துடைத்துக் கொண்டிருந்தவன் “முகத்துல பூசாதீங்கடான்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்குறானுகளா?,லூசுப் பசங்க” என்று புலம்பியபடிக் கையிலிருந்த டிஷ்யூவினால் க்ரீமை வழித்தெடுத்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் தயங்கி வாசலில் நின்றவளைக் கண்ணாடியில் நோக்கியவன் தலையசைக்க, பதிலுக்குத் தலையசைத்துச் சிரிக்க முயற்சித்தவள் அவனையே பார்த்தபடி அங்கேயே நின்றாள்.

அவள் நகர்ந்து செல்லாததைக் கண்டவனுக்கு அவளிடம் பேச்சு கொடுக்கத் தோன்ற “ம்க்கும்” என்றவன் தொடர்ந்து.. கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்திடம் “ஹெ..ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றான்.

என்ன என்பது போல் பார்த்தவளிடம் முகத்திலிருந்த க்ரீமைக் கைக்காட்ட சற்றுத் தயங்கியவள் “ஷ்..ஷ்யூர்”என்று விட்டு அருகே வந்தாள். அவள் கையில் ஒரு டிஷ்யூ பேப்பரை நீட்டி விட்டு அவளருகே நெருங்கி நின்று முகத்தைக் காட்டினான் அவன்.

படபடத்த இமைகளை மறைத்துக் கொள்ள லேசாகக் குனிந்தவள் அவன் கண்களை பார்க்காமல் கன்னங்களில் மட்டும் பார்வையைப் பதித்து க்ரீமைத் துடைத்தாள்.

வெகுநாட்கள் கழித்து அவளை அத்தனை நெருக்கத்தில் காண்கிறான் அவன். நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளி, கண்களை மறைத்த கார் கூந்தல், நீண்டக் கரு இமைகள், நேர்த்தியான புருவம், கன்னத்திலிருந்த பருக்கள், உதட்டின் மேலிருந்த மச்சம், கீழுதட்டை அடிக்கடி தீண்டிச் சென்ற பற்கள் என எதுவும் அவன் கண்களுக்குத் தப்பவில்லை.

இத்தனை வருடங்களாகக் கனவிலும்,நினைவிலும் விடாமல் துன்புறுத்தியது போதாதென்று இப்போது இப்படி அழகே உருவமாகக் கண் முன்னே நின்று கொண்டு மேலும் கொல்கிறாள். ராட்சசி! அவன் எண்ணங்களும்,அவள் தோற்றமும் ஒன்று கூடி அவனைத் தன் வசமிழக்கச் செய்ய.. தன் கன்னத்தில் பதிந்திருந்தவளின் கைகளை மெல்லப் பற்றினான்.

திகைப்புடன் அவனை நிமிர்ந்து நோக்கியவளின் கண்களைக் காதலுடன் நோக்கிப் பின் “ஐ லவ் யூ ஹரிணி” என்றான். இதைச் சற்றும் எதிர்பாராததால் வாயடைத்துப் போனவள் அவனிடமிருந்துத் தன் கைகளை விலக்கிக் கொள்ளக் கூட முயற்சிக்காமல் விழி விரிய நின்றாள்.

பற்றியிருந்த அவள் கைகளைத் தன் கன்னத்தில் அழுத்தியவன் மீண்டும் “ஐ லவ் யூ…….”என்றான்.

உண்மை தான்! கடந்த சில நாட்களாக சிரிப்பும்,கலகலப்புமாய் முற்றிலும் புது ஆளாக மாறித் தெரியும் ரிஷியின் மறு பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹரிணியின் மனது அவன் புறம் கொஞ்சமே கொஞ்சம் நெகிழ்ந்திருப்பது உண்மை தான்.

“மை பாஸ், மை ஹீரோ”- என்கிற அளவுக்கு அனைவரும் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு ஹீரோ மெட்டீரியலைக் கண்டு யாருக்குத் தான் மனம் மயங்காது?, ஷூட்டிங் சமயத்தில் சாதாரண ட்ரவுசர்,டீஷர்ட்டுடன்,கேப் அணிந்து கொண்டு மைக்கும்,கையுமாக அவனைப் பார்ப்பவர்கள் “ஹீ இஸ் சோ கூல்” என்று சொல்லுமளவுக்கு பேரழகன்! தனக்குக் கீழே பணி புரிபவர்கள் அனைவரையும் சமமாக நடத்தி, நண்பனைப் போல பழகி, செட் முழுதிலும் உற்சாகம் குறையாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கி சுற்றியிருப்போரை எளிதில் ஈர்த்து விடுபவன், அவளை மட்டும் விட்டு வைப்பானா என்ன?, எந்நேரமும் குழப்ப முகத்துடன், கொஞ்சமும் பொறுமையின்றி சிறு பிள்ளை போல் நடந்து கொண்ட அந்த ரிஷி எங்கே!, இன்று நிதானமும்,தெளிவுமாய் அனுபவசாலியாக மாறி விட்ட இந்த ரிஷி எங்கே!, காலம் அவனையும் மாற்றித் தான் விட்டிருக்கிறது! ஒரு வேளை காலத்தோடு சேர்ந்து அவளும் மாறி விட்டாளோ! இல்லையென்றால் இந்த சில நாட்களாய் அவனோடே இருபத்திநான்கு மணி நேரத்தில் பாதியைக் கழிப்பவளுக்கு, கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் போன ஜென்மம் போல் நிழலாகத் தோன்றுமா?

தலை முடியைக் கோதியபடி மறுபுறம் பார்க்கும் ரிஷி, வரிசைப் பற்களுடன் அழகாகச் சிரிக்கும் ரிஷி, பாக்கெட்டில் கை நுழைத்தபடி மைக்கைப் பிடித்திருக்கும் ரிஷி, கைகளைக் கட்டிக் கொண்டு மானிட்டரைத் தீவிரமாக நோக்கும் ரிஷி, செட்டில் சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் கண்களை விரித்து பெரிதாகக் கோபம் கொள்ளும் ரிஷி, சுருக்கிய புருவங்களுடன் எரிச்சலை வெளிப்படுத்தும் ரிஷி, அவளுடன் மட்டுமே ஏக்கப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் ரிஷியென இத்தனை நாட்களில் அவனுடைய எத்தனை பிம்பங்கள் அவள் மனதில் பதிந்து போயிருக்கிறது! இது… இது அனைத்திற்கும் என்ன காரணம்?, மனம் மறுபடியும் அவன் புறம் சாயத் தொடங்கி விட்டதா?

“ஐம் சேயிங் ஐ லவ் யூ டேம்ன் இட்” – ரிஷியின் குரல் மறுபடி ஒலித்ததும் நடப்பிற்கு வந்தவள் அவனிடமிருந்து கைகளை விலக்க முற்பட, அவள் முயற்சியைத் தடுத்து இறுகப்பற்றினான்.

“கை…. கையை விடுங்க…. நான் போகனும்”

“ஐ லவ் யூ ஹனி”

“உ…உளறாம கையை விடுங்க.. இல்லாட்டி நான் கத்துவேன்..”

“ஐ லவ் யூ”

“நா… நான் நிஜமாவே கத்தப் போறேன்…”

“ஐ லவ் யூ ஹரிணி…”

மூச்சு வாங்கக் கண்களில் கோர்த்து விட்டக் கண்ணீருடன் செயலிழந்து நின்றவளின் கன்னங்களை மெல்ல வருடியவன் மீண்டும் “ஐ லவ் யூ…” என்றான். கோபமாய் அவனை நிமிர்ந்து நோக்கி விட்டுக் கையை உதறியவள் விறுவிறுவென ஓடி விட்டாள்.