அத்தியாயம் - 12
Say I Love You!
கண்களை இறுக மூடித் தூங்க முயற்சி செய்து கொண்டிருந்த ரிஷி, தூக்கம் வராமல் நான்காவது முறையாக படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தான். கண்ணீரும்,கோபமுமாய் அவனை நிமிர்ந்து நோக்கிய ஹரிணியின் முகம் கண் முன் நின்று அவனைத் தூங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. அவசரப்பட்டு விட்டானோ?, தான் செய்த தவறுகளனைத்திற்கும் மண்டியிட்டுத் தண்டனையளிக்கும்படி மன்றாடி, அவளாகவே கோப,தாபங்களனைத்தும் மறந்து மனம் மாறி வந்த பிறகு தான் தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தான்.
ஆனால் அது வரைக் காத்திருக்காமல் இன்று அவசரப்பட்டு முட்டாள்த்தனமாகக் கூறி விட்டான். என்ன நினைத்திருப்பாள் அவள்!, அவள் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?, நிச்சயம் அவனை முதுகெலும்பில்லாதப் புழுவாகத் தான் எண்ணியிருப்பாள்! அவனும் என்ன தான் செய்வது! பத்தாண்டுகளாக அவன் ஏங்கித் தவித்த அவனுடைய காதலி திடீரென அவன் கண் முன்னே தினம்,தினம் சிரிப்பு,கோபம்,அழுகை,பயம் என அவனைக் காணும் போதெல்லாம் வித,விதமான முக பாவனைகளை வெளிப்படுத்தி வலம் வரும் போது… அவனால் என்ன செய்ய முடியும்?
அவளைக் கண்டதும் அணைக்கத் துடித்தக் கரங்களை அவனால் ஒரு நிலைக்குப் பிறகு சத்தியமாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவள் கரத்தைப் பிடிப்பதற்குக் கூடத் தனக்குத் தகுதியில்லை எனப் பத்து வருடங்களாக அவன் விழுந்து,புரண்டு அழுதிருந்தாலும்.. அவனுடைய அந்தரங்க எண்ணங்கள் அனைத்தும் அவள் ஒருத்தியைக் கண்டால் மட்டும் தானே முன்னே வந்து பேயாட்டம் போடுகின்றன?, அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தானே திண்டாடிப் போய்த் திரிகிறான்? இதுக்கு என்ன தான் முடிவு?
பெருமூச்சை வெளியிட்டபடிக் கண் மூடியவனுக்கு இதே போன்ற ஒரு குழப்பம் மிகுந்த பொருத்தமற்ற சூழ்நிலையில் ஹரிணி அவனிடம் கூறிய அந்த மூன்றெழுத்து வார்த்தை நினைவிற்கு வந்து அவனது தூக்கத்தை முழுதாக விரட்டிக் கொண்டிருந்தது.
09.09.2005
குவார்ட்டர்-இயர் ஃபெஸ்டிவல் என்றழைக்கப்படும் மூன்று நாள் திருவிழா ஹரிணியின் பள்ளியில் காலாண்டுக்கொரு முறை நடப்பது வழக்கமாகயிருந்தது. டான்ஸ்,பாட்டு,நாடகம் போன்ற மேடை நிகழ்ச்சிகளும், அறிவியல் கண்காட்சியும், அத்தோடு மாணவர்களை உற்சாகப்படுத்த ஒரு சிறிய பொருட்காட்சியும் பள்ளி வளாகத்தில் போடப்பட்டிருக்கும்.
சிறுவர்,சிறுமிகளைக் கவரும் விதவித தின்பண்டங்களும், வயது வந்த மாணவ,மாணவிகளுக்காக ஆடை,அணிகலன்களும், ராட்டினம்,குதிரை,சைக்கிள் சவாரிகளும் க்ரௌண்ட் முழுதையும் நிறைத்து அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.
கை நிறையத் தின்பண்டங்களுடன் போகிற,வருகிறவர்களைக் கமெண்ட் அடித்த படி ஆனந்தி,ஆஷா மற்றும் ஹரிணி பொருட்காட்சி முழுதிலும் வலம் வந்து கொண்டிருந்தனர். “நம்ம ஹெலன் மேம் போட்டிருந்த சல்வாரைப் பார்த்தியாடி?, ஃபேஷன்னா என்னன்னு அந்தம்மா கிட்ட தான் டி கத்துக்கனும்” – சிப்ஸை வாயில் அடைத்தபடி வளவளத்துக் கொண்டிருந்த ஆனந்தி “இவ ஏன் டி இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி கனவுலகத்துலேயே இருக்கா?” என ஹரிணியைக் கை காட்டினாள்.
“ஹாஹா, விசயம் தெரியாதா உனக்கு?, மேடம் இப்போ காதல் மயக்கத்துல இருக்காங்க”-ஆஷா
“லவ்வா?, யாரோட?, இரு,இரு நானே கெஸ் பண்றேன். ரிஷி??, ரிஷி தான?, அன்னிக்கு உன் பர்த்டே பார்ட்டில இவ அவனைப் பார்த்ததுல இருந்து ஒரு மாதிரியே தான் இருக்கா. ஆனா.. அவன் பாரேன், எவ்ளோ மாறிட்டான்னு!, செம ஹாண்ட்சம்டி!”
“அதோட நிறுத்து. இதுக்கப்புறம் ஏதும் சொன்னேனா அவ அடிக்க வருவா”-ஆஷா
“ஏன் ஹரிணி, நாங்க அவனை சைட் கூட அடிக்கக் கூடாதா?, ஹரிணி… ஏய் ஹரிணி.. உன்னைத் தான்” – எங்கோ பார்த்துக் கொண்டு நடந்தவளின் தலையில் தட்டினாள் ஆனந்தி.
“என்ன?, என்னடி கேட்ட?”
“அதுசரி” – என்று ஆனந்தி அவளை முறைத்த சமயம் ஆஷா “திங்க் அபௌட் த டெவில்” என்றாள். இருவரும் என்னவென்று நிமிர்ந்து பார்த்த போது அர்ஜூன்,சார்லஸூடன் ரிஷி எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் சட்டெனத் திரும்பிக் கொண்ட ஹரிணி “அப்டியே திரும்பி நடங்கடி போயிடலாம்” என்றாள்.
“ஏன் ஏன் ஏன்?, அவன் உன் லவர்ன்னு எல்லாரும் சொல்றது பொய்யா?, ஏன் டி எங்க கிட்ட கூட எதுவும் சொல்ல மாட்டேங்குற?, என்ன தான் நடக்குது உங்க ரெண்டு பேருக்குமிடையில?”-ஆஷா
“எல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ போகலாம் ப்ளீஸ்”-ஹரிணி
“நோ நோ நோ!, ஆஷா, அமைதியா இரு. எது உண்மை,எது பொய்ன்னு இப்போ நாமளே விட்னெஸ் பண்ணலாம்” என்ற ஆனந்தி “ஹாய்ய் ரிஷி….”எனக் கையசைத்தாள், “ஆனந்தி நாயே…”-என முணங்கிய ஹரிணியைப் பொருட்படுத்தாமல்!
அவள் தன்னை அழைத்ததும் சட்டெனத் திரும்பிய ரிஷியின் பார்வை முதலில் சென்றது ஹரிணியிடம் தான். பின் அவர்களருகே சென்று நின்றவன் அவளைப் பார்த்த வண்ணம் “ஹாய் ஆனந்தி” என்றான்.
“இங்க.. இங்க… நான் இங்க இருக்கேன்”-ஆனந்தி
“ஹிஹிஹி!, ஹாப்பி, உன்னைக் கலாய்க்குறாளாம் மாப்ள” – சார்லஸ் (ஆனந்தியின் பட்டப் பெயர் ஹாப்பி)
“ஈஈஈஈஈ, நீ வாயை மூடு. நான் உன் கிட்ட பேசல”-ஆனந்தி
எதுவும் பேசாமல் ரிஷி நெற்றியைச் சொரிய, இவர்கள் பேச்செதையும் கவனிக்காதவள் போன்று அருகிலிருந்த ஸ்டாலில் காதணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.
இருவரையும் கைக்காட்டி என்ன என்பது போல் சைகையில் ஆஷா, அர்ஜூனிடம் வினவ தோளைக் குலுக்கியவன் “நாம் இருவரையும் விட்டு விட்டுத் தனியே நகரலாம்"”என சைகையிலேயே கூறத் தலையாட்டியவள் “அப்புறம் ரிஷி கண்ணா, நாங்க எல்லாரும் ஹார்ஸ் ரைட் போறோம். நீ, ஹரிணியைப் பத்திரமா கொண்டு போய் டார்ம்ல விட்ரு” எனக் கூறி விட்டு “கைஸ், லெட்ஸ் கோ” என்று ஓடி விட… “ஏ…ஏய்ய் ஆஷா… ஏய்ய்ய்” எனப் பல்லைக் கடித்த ஹரிணிக்கு அப்படியே அங்கேயே புதைந்து விடலாம் போலிருந்தது.
ஏனெனில் இருவருக்குமிடையே நடந்த முந்தைய சம்பவத்திற்குப் பிறகு இருவரும் இப்போதெல்லாம் சரியாகப் பேசிக் கொள்வது கூடக் கிடையாது. ஒரே பெஞ்சில் அமர்ந்தாலும் கூட ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் நேரங்கள் மிக,மிகக் குறைவு என்றாகி விட்டது. சில சமயம் அவன் தெரிந்தே தான் தன்னைத் தவிர்க்கிறானோ என்று கூட சிந்திக்கத் தொடங்கியிருந்தாள் அவள்.
அனைவரும் சென்ற திசையைப் பார்த்தபடி நின்றவள் அய்யோ! எனக் கையை மடக்கி, காலை உதைத்தபடி அவன் புறம் திரும்ப, அதுவரை அணிந்திருந்த ஜெர்க்கினில் கை நுழைத்தபடி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டெனக் குனிந்து ஸ்டாலிலிருந்தக் காதணிகளை நோக்கினான்.
என்ன செய்வதென யோசித்து நகம் கடித்தவள் “நா…நான்…” என்று தொடங்குகையில் “போகலாமா??” என்றான் அவன். அவன் கேள்வியில் விழித்தவளை நன்றாக நோக்கி “போகலாமான்னு கேட்டேன்” என முன்னே கைக் காட்டினான். அப்போதும் விழித்தவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு அவன் முன்னே நடக்க, வேறு வழியின்றித் தானும் பின்னே நடந்தாள் ஹரிணி.
ஜனசந்தடியைக் கடந்து இரு புறமும் மரம் சூழ்ந்த பாதையில் இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர். தன்னை விட்டு இரண்டடித் தள்ளி ஒரே நேர்க்கோட்டில் நடந்து கொண்டிருப்பவனை கடைக்கண்ணால் நோக்கினாள் ஹரிணி.
ப்ளூ ஜீன்ஸூம்,கருப்பு நிற ஜெர்க்கினும் அணிந்திருந்தவன் ஆறடி உயரமும், அகன்ற தோள்களுமாய் கம்பீரமாயிருந்தான். ஏற்றிச் சீவப்பட்டிருந்த முடியும், பெரிய கண்களும்,கூரான மூக்கும், கன்னம் முழுதிலும் படர்ந்திருந்த தாடியும் அவனை ஆண்மையானவனாகக் காட்டிக் கொண்டிருந்தது.
அவள் பார்வையை உணர்ந்து அவள் புறம் திரும்பியவனைக் கண்டுத் தன் விரல் நகங்களைப் பார்த்தபடிக் குனிந்தவளை சுருக்கிய புருவங்களுடன் ஒரு மாதிரி நோக்கினான் அவன்.
முதுகு முழுதும் படர்ந்திருந்த அவளது ஆறடிக் கூந்தல் காற்றில் நடனமாடிய வண்ணம் அவள் பின்னே பறந்து கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த கருப்பு நிற ஸ்கர்ட்டும்,சட்டையும் அவளது பளீர் வெள்ளை நிறத்தை அதிக வெள்ளையாய்க் காட்ட.. ஒப்பனையேதுமின்றியே ஒளிர்ந்த அவள் முகத்தை ஆச்சரியமாக நோக்கினான் ரிஷி. திருத்தப்படாமல் இயற்கையாகவே அடர்ந்து படர்ந்திருந்த புருவங்களும்,வெற்று நெற்றியில் புரண்ட கற்றை முடியும், சிவந்த இதழ்களும் என்ன… என்ன எழவிற்காக அவனை இப்படி ஈர்க்கிறது! பதினெட்டு வயதிற்குரிய ஒட்டுமொத்த அழகையும் குறையாமல் பெற்றிருப்பவளை விட்டு எந்த மடையனால் ஒதுங்கி நிற்க முடியும்?, இதற்காக.. இதற்காகத் தான் இவளிருக்கும் திசையில் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை அவன்! ஏதேதோ வித்தியாசமான எண்ணங்களையெல்லாம் எளிதாகத் தூண்டி விடுகிறாள்! எரிச்சலுடன் பல்லைக் கடித்தான்.
எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவன் போகிற போக்கில் உடன் நடந்து கொண்டிருந்த ஹரிணி ஹாஸ்டலுக்குச் செல்லும் திசையை விட்டு வெகு தூரம் வந்து விட்டதை உணர்ந்து சட்டென நின்றாள்.
அவள் நின்றதும் அவள் புறம் திரும்பி என்ன என்பது போல் பார்த்தவனிடம் சுற்றி நோக்கி வழி மாறி வந்து விட்டதை உணர்த்தினாள். “ஓஓஓஓஓஓ” என்றபடி சுற்றும் முற்றும் நோக்கிய ரிஷி என்ன நினைத்தானோ “அ..அங்க உட்காரலாமா கொஞ்ச நேரம்?” என்று வினவினான்.
அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு முன்னே நடந்து சென்று அங்கிருந்தக் கல் பெஞ்சில் அமர்ந்து அவளை நோக்கினான். ஏன் என்று புரியா விட்டாலும் காதோர முடியை ஒதுக்கியபடி அவனருகே வந்தமர்ந்தாள் ஹரிணி. எதுவுமே பேசாமல் முழுதாக ஐந்து நிமிடம் அமைதியாகக் கரைந்தது.
“ஆக்வர்ட்! ஆக்வர்ட்! ஆக்வர்ட்! காட்!!!” – எனத் தலை முடியைக் கோதிய ரிஷி சட்டென அவள் புறம் திரும்பி “சாப்ட்டியா?” என்றான்.
“ம்???, ம்ம்ம்ம்ம்” – சாப்பிட்டேன் என்பது போல் தலையாட்டினாள் அவள்.
ஹப்பாடா! ஒரு வார்த்தை பேசி விட்டாள். அவளது குரல் எதற்காக அவன் காதுக்குள் வித்தியாசமாக ஒலித்து மீண்டும்,மீண்டும் கேட்கும் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும்?,
பெருமூச்சை வெளியிட்டபடி சாய்ந்து அமர்ந்தவன் அவளது நீண்ட இமைகளையும்,விடாது அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் கருமணிகளையும் கண்டபடி பேச்சற்றிருந்தான்.
“இப்போ எனக்கிருக்கிற ஓராயிரெத்தெட்டு பிரச்சனையில ரொம்பப் பெருசா தெரியுறது உன்னை ஃபேஸ் பண்றது தான்”-ரிஷி
“……………………………”
“உன் முன்னாடி இயல்பா இருக்கிறது ரொம்பக்…….. கஷ்டமாயிருக்கு. உன் கண்ணை தைரியமா பார்க்கிறதும், முகத்தைப் பார்த்துப் பேசுறதும் இவ்ளோ பெரிய சவாலாயிருக்கும்னு நினைச்சதேயில்லை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ரொம்ப… ரொம்பக் கோபம் வருது… என் பிரச்சனைகள் எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளிட்டு முன்னாடி நிற்கிற உன் முகம் என்னை அதிகமா தொந்தரவு பண்ணுது.”
“…………………………….”
எரிச்சலும்,கோபமுமாய் அவளை நோக்கிக் கொண்டிருந்தவனின் தோளில் இடது புறமாக அவளிட்டிருந்த நீளக் கூந்தல் காற்றிலாடி உரசிச் சிலிர்க்கச் செய்ய.. குனிந்து அதை நோக்கினான். போதையேற்றுகிறாள்! மறுபடியும்!
அவன் பார்வையைத் தொடர்ந்து தானும் நோக்கிய ஹரிணி திடுக்கிட்டு, “சா…சாரி….” என்றபடிக் கூந்தலை இழுத்துக் கொண்டு எழ முயற்சிக்க சட்டென அவள் கையைப் பற்றித் தடுத்தவன்.. அவள் கையை மேலும் அழுந்தப் பற்றி கண்களை மூடியபடி, தன்னருகே நின்றிருந்தவளின் வயிற்றில் நெற்றியை அழுத்தினான்.
“ஜஸ்ட் கெட் த ஹெல் அவுட் ஆஃப் மை சைட் ஹரிணி….. ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ ரைட் நௌ”
அவன் கூறி முடித்ததும் கன்னங்கள் சூடேறிச் சிவந்து போய் விட நேரெதிரே வெறித்தபடி விறைத்துப் போய் நின்றவளிடமிருந்து சட்டென விலகி எழுந்து சென்றான் அவன்.
அன்று நள்ளிரவு வரைக் கூட்டமாய் அமர்ந்து அரட்டையில் ஈடுபட்டிருந்த ஆஷா மற்றும் பெண்களை அவர்களது வகுப்புத் தோழியொருத்தி அவசரமாக அழைத்தாள்.
“கேர்ள்ஸ், கேர்ள்ஸ், இப்போ தான் பசங்க கிட்டயிருந்து கால் வந்தது. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நம்ம க்ளாஸ்ல எல்லாரும் அசெம்பிள் ஆகுறோம்.”
“என்னடி சொல்ற?”-ஆனந்தி
“ஹாப்பி, ஏன் வாயைப் பொளக்கிற?, இது வருஷா வருஷம் நடக்குறது தான?, எவ்ரி இயர் ட்வெல்த் ஸ்டாண்டர்ட் ஸ்டூடன்ட்ஸ் குவார்ட்டர் இயர் ஃபெஸ்டிவல் அப்போ யாருக்கும் தெரியாம நடுராத்திரி மொத்தமா மீட் பண்ணி விடிய,விடிய பாட்டு,டான்ஸ்,கேம்ஸ்ன்னு கூத்தடிக்கிறது வழக்கம் தான?” – வைலட்
“ஓஓஓஓஓஓஓ!, அப்டின்னா நாமளும் அதை ஃபாலோ பண்றோமா?”- ஆஷா
“பின்ன?, பசங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானுக. நாமளும் கிளம்பலாம்”
“வார்டன், செக்யூரிட்டி எல்லாரையும் எப்படி சமாளிக்கிறது?” –ஆனந்தி
“செக்யூரிட்டியை பசங்க குவார்ட்டர் வாங்கிக் கொடுத்து தூங்க வைச்சிட்டானுக, நம்ம வார்டனோட குரட்டை சத்தத்தை கன்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் நான் இங்க வந்தேன்"- வைலட்
“சோ?, ஆல் செட்??” - ஆனந்தி
“பக்கா” – வைலட்
“மொத்தமா போக வேண்டாம்டி. அந்தம்மா எழுந்துடுச்சுன்னா பிரச்சனை ஆயிடும். 2,3 பேரா வரிசையா போகலாம். வாட் டூ யூ சே?” – என்று ஆஷா கேட்டதும் அனைவரும் ஒப்புக் கொண்டு வரிசையாகக் கிளம்பி விட்டனர். வழக்கம் போல் விட்டத்தை வெறித்தபடி அவர்களது உரையாடலில் தலையிடாதிருந்த ஹரிணியையும் தட்டிக் கிளப்பினர்.
பாதி மட்டுமே சாத்தப்பட்டிருந்த வகுப்புக் கதவினுள் ஒவ்வொருவராக சத்தமில்லாமல் நுழைந்து உள்ளே இருட்டாயிருப்பதைக் கண்டு திகைத்தனர். “ஏய்… நம்மளைக் கவுக்க போட்ட ட்ராப்பா இது?, எவனும் இருக்குற மாதிரியே தெரியல. வைலட் நாயே..” என்று ஆனந்தி முணுமுணுக்கையில் யாரோ கதவைச் சாத்தும் சத்தமும் அதைத் தொடர்ந்த லைட் வெளிச்சமும், “ஊஊஊஊஊஊ” – என்கிற சத்தமும் காதைக் கிழித்து அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்தது.
கையிலிருந்த கலர் பேப்பரையும்,முகச் சாயங்களையும் ஒன்றாய்க் கூடியிருந்தப் பெண்களின் மீது பையன்கள் அள்ளித் தூவ, தாங்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லையென்பதைக் காட்ட கலர்,கலர் ஜிகினாக்களையும், பேனா மையையும் மாறி மாறித் தெளித்தபடி பெண்கள் கும்மாளமிட்டனர்.
ஆஷாவையும்,ஆனந்தியையும் முன்னே அனுப்பி விட்டுப் பின்னே வந்த ஹரிணி வாசலருகே வந்ததும், உள்ளே கிளம்பிய சத்தத்தையும்,அதைத் தொடர்ந்த கூச்சல்களையும் கண்டு இப்போ உள்ள போனா நாறடிச்சடிவானுகளே! எனத் தயங்கியபடி நின்ற போது சரியாக வந்து சேர்ந்தான் ரிஷி.
எட்டி எட்டிப் பார்த்தபடித் தயங்கி நின்றவளைக் கண்டு கொள்ளாமல் அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல தானும் உடன் நுழைந்தாள் ஹரிணி. இருவரையும் ஒன்றாகக் கண்டதும் “என்னடா?, 2 பேரும் சேர்ந்து வர்றீங்க?, ரொமான்ஸா?” எனக் கண்ணடித்த அர்ஜூனின் வாயை ஜிகினாவை அள்ளித் தூவி மூடச் செய்தான் ரிஷி.
அதன் பிறகு அவன் இந்த ஆட்டங்களுக்கும்,தனக்கும் சம்பந்தமில்லையென்பது போல் பின் பெஞ்சில் அமர்ந்து கொண்டுத் தன் கைப்பேசியை பார்க்கத் தொடங்கி விட.. அவ்வப்போது அவன் புறம் பார்வையை செலுத்தியபடி முன்னே அமர்ந்திருந்தாள் ஹரிணி. அதன் பிறகு அந்த வருடத்தின் பிரபலமான தமிழ்,ஹிந்தி,ஆங்கிலப் பாடல்களுக்கு ஆடியும்,பாடியும் அடுத்த இரண்டு மணி நேரத்தைக் குதூகலமாகக் கழித்தனர் மக்கள்.
“டேய்… டான்ஸ் ஆடுனது போதும். கேம் விளையாடலாம்” – வைலட்
“என்ன கேம்?, எதுவும் ப்ரிபேர் பண்ணியிருக்கீங்களா?”-சார்லஸ்
“யெஸ்”என்று அவள் மர்மமாகச் சிரித்தபடி அறை மூலையிலிருந்த கபோர்டைத் திறந்து ஒரு பெரியக் கண்ணாடிக் குடுவையை வெளியே எடுத்தாள்.
“என்ன இது?”-அர்ஜூன்
“வெயிட்,வெயிட் என்ன அவசரம்?, எல்லாரும் வட்டமா சுத்தி நில்லுங்க. நான் கேம்க்கான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்னன்னு சொல்றேன்”-என்று ஆனந்தி கூறியதும் அனைவரும் அரைவட்டமாக அவளை நோக்கியபடி நின்றனர்.
“ஹேய் லவ் பேர்ட்ஸ், நீங்களும் வாங்கடா” –என்று ரிஷியையும்,ஹரிணியையும் அழைத்ததும் வேண்டாவெறுப்பாக இருவரும் வந்து நின்றனர்.
“டேய் அர்ஜூன், நீ ஒன் ல இருந்து நம்பர் ஸ்டார்ட் பண்ணு, அப்டியே வரிசையா எல்லாரும் கவுண்ட் பண்ணுங்க. ஆஷா,நீ கேர்ள்ஸ் சைட் இருந்து நம்பர் சொல்லு. இப்போ ஆட் நம்பர்ஸ்ல இருக்குற பசங்க, ஈவன் நம்பர்ல இருக்கிற பொண்ணுங்களோடயும், ஈவன் நம்பர்ஸ்ல நிற்கிற பசங்க ஆட் நம்பர்ல இருக்கிற பொண்ணுங்களோடயும் பேர் ஆய்க்கனும்” – ஆனந்தி
“அய்யோ ஹாப்பி!, பொண்ணுங்க ஸ்ட்ரெங்க்த் கம்மியா இருக்கே!”-சார்லஸ்
“உன் தலையெழுத்து பையனோட தான் ஜோடி சேரனும்னு இருந்தா, ஒன்னும் பண்ண முடியாதுடா. எஞ்சியிருக்கிற பாய்ஸ், உங்களுக்குள்ள தான் டா ஜோடி சேரனும். வேற வழியில்ல” – ஆஷா
“ஹாஹாஹா”-எனச் சிரிப்புச் சத்தமும் “டேய்,நீ அங்க போடா, ஏய்ய் ஏய்ய் நீ இங்க” என்கிற குரல்களும் கிளம்ப, அடுத்த பத்தாவது நிமிடம் அனைவரும் தங்களுடைய ஜோடிகளோடு நின்றனர்.
ஹரிணியின் அருகே ரிஷி நிற்பதைக் கண்டு “உங்களுக்கு மட்டும் எப்படிடா ஆண்டவனாப் பார்த்து அமைச்சு விட்றான்??”என்ற சார்லஸ் தன் ஜோடியான ஜெர்ரியின் முதுகில் ஓங்கி அடித்தான்.
“ஓகே!, இப்போ இந்த பாக்ஸ்ல இருக்கிற பேப்பர்ல ஒன்னை நீங்க உங்க ஜோடியோட வந்து எடுத்து, அதுல எழுதியிருக்கிற ஆக்டிவிட்டியை பண்ணிக் காட்டனும்.” – ஆனந்தி
“அதுல என்ன எழுதியிருக்கும்?”-அர்ஜூன்
“டான்ஸ்,பாட்டு.. இப்டி எதுவேன்னாலும் இருக்கலாம்”-வைலட்
“ச்ச, அவ்ளோ தானா?, போரிங்ங்ங்……”என்றிழுத்த சார்லஸிடம் “டேய்,பொறு டா, பொறுடா. நாங்க இதுல நிறைய ட்விஸ்ட் வைச்சிருக்கோம்”என்று மர்மமாகச் சிரித்தாள் ஆஷா. ஒப்புக் கொண்டு அனைவரும் அமர்ந்த பின் முதல் ஜோடியாக சார்லஸூம், ஜெர்ரியும் மேடை மீது ஏறினர்.
“அய்யோ எனக்கு டான்ஸ்,பாட்டுன்னு ஒன்னும் வராதே!, என்ன வைச்சிருக்கானுகளோ!”-எனப் புலம்பிய சார்லஸ் குடுவையை நன்றாகக் குலுக்கி விட்டு அடியிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் பிரித்தான்.
அதில் என்ன எழுதியிருக்கிறதென்பதை எட்டிப் பார்த்த ஜெர்ரி பக்கெனச் சிரித்து சார்லஸின் கன்னத்தில் அடிக்கக் கை ஓங்க, அவனைத் தடுத்த சார்லஸ், அவனுடைய கன்னத்தில் அடிக்கக் கை ஓங்கினான். அடுத்த ஐந்து நிமிடத்திற்கு விழுந்து விழுந்து சிரித்தபடி,சட்டையைப் பிடித்துக் கொண்டு ஒருவரையொருவர் அடிக்க முயற்சித்த இருவரும் தங்களது சீட்டைத் திருப்பி அனைவரிடமும் காட்டினர்.
“ஸ்லாப் ஹிம் ஆன் ஹிஸ் ரைட் சீக்” – என்று எழுதியிருப்பதைக் கண்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“ஹே,கேம் நல்லாயிருக்கு, நல்லாயிருக்கு!” என்று குதித்துக் கொண்டு அடுத்த ஜோடியான அர்ஜூன்-ஆஷா மேடையேறியது.
“போச்சு!, எனக்கு கிக் ஹிம்ன்னு வரப் போகுது!, இவ என்னை நல்லா எட்டி மிதிக்கப் போறா” – என்று புலம்பியபடி ஆஷாவிடம் “நீயே உன் கையால எடும்மா” என்றான்.
சிரித்தபடி ஒரு சீட்டை எடுத்துப் பிரித்தவள், படித்ததும் அதை பின்னே மறைத்துக் கொண்டு “ராஸ்கல்ஸ், யார் செஞ்ச சதி இது?”எனப் பல்லைக் கடிக்க, அர்ஜூனோ “ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய், சக்ஸஸ்!!!!!!!” என்று குதித்தான். என்ன,என்ன என்று கத்தியவர்களிடம் அவளிடமிருந்து சீட்டைப் பிடுங்கிக் காட்டினான்.
“நீல் டௌன் அண்ட் கிவ் ஹெர் அ ரோஸ்” – என்று எழுதியிருந்தது. வகுப்பு முழுதும் கைத்தட்டல் பறக்க.. காலரைத் தூக்கி விட்டபடி நடந்து சென்று மேடையின் கீழிருந்து வைலட் நீட்டிய ரோஜாப்பூவை வாங்கிக் கொண்டு அவளருகே சென்றான்.
வெட்கமும்,சிரிப்புமாய் கையைக் கட்டிக் கொண்டு நின்றவளின் முன்னே சென்று மண்டியிட்டு ரோஜாப்பூவை நீட்டியவன்…
“ரோஜா…. ரோஜா.. ரோஜா.. ரோஜா…
கண்டபின்னே….. உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்…… “என்று பாட “ஓஓஓஓஓஓஓஓஓஓ!” என்று அனைவரும் கோரசாய் சத்தமிட்டனர். “டேய்.. அர்ஜூன், இதுக்குத் தான இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டிருந்த?” என்ற சார்லஸின் குரல் கூட்டத்தின் நடுவே ஒலித்தது.
வெற்றிச் சிரிப்பு சிரித்தபடி அவன் இறங்கி வந்ததும் அடுத்தடுத்த ஜோடிகள் மேடையேறி வகுப்பு முழுதையும் நகைச்சுவைக் கடலில் மூழ்கடித்துக் கொண்டிருந்தனர்.
“நெக்ஸ்ட் நம்ம லவ் பேர்ட்ஸ்!, ரிஷி, போடா…”-என்று அர்ஜூன் பிடித்துத் தள்ளியதும் ரிஷியும்,ஹரிணியும் மேடையேறினர். அந்த வகுப்பிலேயே அழகன் என்றழைக்கப்பட்டவனும்,அழகி என்றழைக்கப்பட்டவளும் ஒரே மேடையில் நிற்பது அனைவரையும் ஆ-வெனப் பார்க்க வைத்தது.
வழக்கம் போல ஆளுக்கொரு புறமாய் நின்றிருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்வையைத் தவிர்க்க.. இருவரது முகமும் பிரதிபலித்த உணர்ச்சிகள் கீழே அமர்ந்திருப்போரைப் பொறாமை கொள்ள வைத்துக் கொண்டிருந்தது.
“ஸ்டார்ட், ஸ்டார்ட்” –என்று ஆஷா கைத் தட்டியதும் முன்னே வந்து ஒரு சீட்டை எடுத்துப் பிரித்தவன் புருவத்தைச் சொரிந்தபடி அவளிடம் காட்டினான்.
காகிதத்திலிருப்பதை வாசித்தவள் முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டு போர்டின் புறம் திரும்ப “என்ன, என்ன”-வென்று அனைவரும் பரபரத்தனர்.
காகிதத்தைக் கசக்கி பாக்கெட்டில் திணித்துக் கொண்டு ரிஷி மேடையை விட்டிறங்க.. “ஏய்ய்ய்… ஏய்ய்ய்ய்ய்..”என ஓடி வந்த அர்ஜூனும்,சார்லஸூம் அவனைத் தடுத்து மீண்டும் மேலே ஏற்றி பாக்கெட்டிலிருந்த சீட்டை சண்டையிட்டுப் பறித்தனர்.
“என்னடா எழுதியிருக்கு?”- பரபரப்புடன் ஆஷா.
தங்களிடமிருந்துக் காகிதத்தை பறிக்க விடாது முயற்சித்துக் கொண்டிருந்த ரிஷியிடம் போராடியபடி “ஸே…. ஐ லவ் யூயூயூயூயூயூயூயூ” என்று கத்தினர் இருவரும்.
“வாவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!, ஊஊஊஊஊஊ”-என ஆளாளுக்கு எழுந்து நின்றுக் கைத் தட்டத் தொடங்க.. “திஸ் இஸ் அ கன்ஸ்பிரஸி. என்னால பண்ண முடியாது” என்றான் ரிஷி.
“டேய்…. எல்லாரும் மறுப்பு சொல்லாம விளையாடிட்டிருக்காங்க. உனக்கு மட்டும் என்ன?, இட்ஸ் ஜஸ்ட் அ கேம் டா” – ஆனந்தி
“உங்க மூஞ்சிகளையெல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே!” – ரிஷி
“டூ இட், டூ இட், டூ இட்”- என நாலாபுறமும் அனைவரும் சத்தமிட.. வேறு வழியின்றி மேடையேறி நின்றான் ரிஷி.
“லேடீஸ் ஃபர்ஸ்ட், ஹரிணி நீ தான் முதல்ல சொல்லனும்”-சார்லஸ்
“அடி,ராஸ்கல்”-பல்லைக் கடித்த ஹரிணியிடம் “லேடீஸ் ஃபர்ஸ்ட், லேடீஸ் ஃபர்ஸ்ட்”எனக் கத்தினர் அனைவரும்.
என்ன செய்வதென்று புரியாமல் தன்னருகே நின்றிருந்தவனை அவள் நோக்க அவனும் தோளைக் குலுக்கி “லேடீஸ் ஃபர்ஸ்ட்” என்றான். நெற்றியை அழுத்தியபடி வேறு வழியின்றி அவன் புறம் திரும்பி நின்றவள் “ஓகே!!”-எனக் கூற அனைவரும் “ஓஓஓஓஓஓஓஓ”என்றனர்.
பெரிய,பெரிய மூச்சுக்களால் தன்னைச் சமாளித்துக் கொண்டு நிற்பவளையும், அவள் முகத்தையே ஆர்வத்துடன் நோக்கியபடி கண்ணிமைக்காமல் நிற்பவனையும் கண்டு வகுப்பு முழுதும் அமைதியடைய… அனைவரின் பார்வையும் மேடையிலிருந்த இருவரின் மீது மட்டுமே பதிந்திருந்தது.
“ஹரிணி, டைம் போயிட்டே இருக்குடி…”-ஆஷா
“ஷட்-அப், மூடைக் கெடுக்காதே” – அர்ஜூன்
இருவரும் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத ஹரிணி ஒரு முடிவுடன் தலை நிமிர்ந்து அவனை நோக்கி வாயைத் திறந்த நேரம் திடீரென விளக்கணைந்து வகுப்பறை முழுதும் இருள் சூழ்ந்தது.
“ஓஓஓஓஓ”-என்று ஏமாற்றத்துடன் ஆங்காங்கு எழுந்த சத்தத்தின் மத்தியில் ஒருவன் “டேய்… செக்யூரிட்டி டா” என்று குரல் கொடுக்க, ஜன்னலை நோக்கிய அனைவரும் தூரத்தில் டார்ச்சுடன் நடந்த வந்த செக்யூரிட்டியைக் கண்டு அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கூட்டம் களைந்து ஓடுவதையும்,விடாது ஒலித்த கூச்சல்களையும் கண்டு கொள்ளாது அவள் முகத்தை அதே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, அந்த மேடையை விட்டு நகரும் திட்டமே இல்லாதவன் போன்று அசையாது நின்றிருந்தான்.
அனைவரும் சென்று விட்டதற்கு அடையாளமாக வகுப்பு முழு அமைதியாகி விட.. ஜன்னல் வழி ஊடுருவிக் கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவன் கண்களை நோக்கியவள், தனக்கேக் கேட்காத உள்ளே சென்று விட்ட குரலுடன்….
“ஐ…. ஐ…. ஐ லவ் யூ…..”-என்றாள்.
அவன் கண்கள், அவனையும் மீறிப் பளிச்சிட்டு அவனது உள் மனது எண்ணங்களை வெளிப்படையாகக் காட்ட.. அடக்க முயன்றும் முடியாமல் இதழோரத்தில் பூத்தப் புன்முறுவலுடன் மறுமுறம் திரும்பினான் ரிஷி.
அவனது பதிலை எதிர்நோக்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் புருவம் சுருக்கி “என்ன?” என்றான். லேசாக அவன் புறம் கையை நகர்த்தி “நீ…. நீ சொல்லல?” என்பது போல் பார்த்தவளின் கையை இறுகப் பற்றியவன் “இப்போதைக்கு எனக்கு அதை சொல்ற ஐடியா இல்ல”என்று விட்டு அவளை இழுத்துக் கொண்டு விறுவிறுவென மேடையை விட்டு இறங்கி ஓடி அறையின் கடைசியில் போடப்பட்டிருந்த பெஞ்சின் அடியில் சென்று ஒளிந்து கொண்டான்.
என்ன,ஏதென்று புரியாமல் அவன் இழுத்த,இழுப்பிற்கு ஓடியவள் பெஞ்சுக்கு அடியில் அமர்ந்த பின் “எ….என்னாச்சு?”என்று வினவ… அவள் வாயை மூடித் தன் நெஞ்சில் அழுத்தியவன் ஜன்னலருகே நின்றிருந்த செக்யூரிட்டியைக் கைக் காட்டினான்.
டார்ச்சை அடித்து வகுப்பறை முழுதும் சோதித்த செக்யூரிட்டி உள்ளே யாருமில்லாததை உறுதி செய்து விட்டு கதவைத் தாழிட்டு பூட்டு போட்டு விட்டுச் செல்ல “க…கதவைப் பூட்டிட்டார்….”என்று கலக்கத்துடன் முணுமுணுத்தாள் ஹரிணி.
“ஷ்ஷ்ஷ்ஷ்”என்று அவளை அடக்கிய அவனும் கதவை எட்டிப் பார்த்துக் கலக்கமுற்றான். அவர் சென்றதும் மூச்சு விட்ட இருவரும், பெஞ்சின் அடியிலிருந்து வெளியேறி ஓடிச் சென்று கதவை இழுத்துப் பார்த்தனர். முடியாது போக ஒருவரையொருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டனர்.
“இ….இப்போ எப்படி வெளியே போறது?”-ஹரிணி
“இரு பசங்க கண்ணுல பட்றானுகளான்னு பார்க்கலாம்” – என்றவன் ஜன்னல் வழியே நோக்கி விட்டு “யா..யாரையும் காணோம்” என்றான்.
“அதெப்படி நாம இல்லைன்றது கூட தெரியாம விட்டுட்டு போவாங்க?”-ஹரிணி
“நியாயமா பார்த்தா போகக் கூடாது தான்!, ஆனா இந்த பன்னாடைங்க, இரண்டு பேரும் உள்ள ட்ராப் ஆயிட்டாங்களா?, ஐ! ஜாலின்னு சொல்றவனுங்க!, இவனுங்க எங்க வந்து காப்பாத்தப் போறானுக?, இந்த சார்லஸ் டாக் இதுக்காக நாளைக்கு என் கிட்ட ட்ரீட் கேட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. ஃபோன் பண்ணாக் கூட எடுக்க மாட்டேங்குறானுக” – எரிச்சலுடன் முணுமுணுத்தான் ரிஷி.
“இப்போ என்ன பண்றது?”
“என்ன பண்ண முடியும்?, போனவனுங்க திரும்பி வந்து நம்மள விடுதலை பண்ணா தான் உண்டு”
“இ..இல்லேன்னா?”
“விடியுற வரைக்கும் இங்க தான்.” – அசால்ட்டாகக் கூறினான் அவன்.
“அ… அட்லீஸ்ட் மொ..மொபைல் டார்ச்சையாவது ஆன் பண்ணலாம்ல?, ரொம்ப இருட்டா இருக்கு”-ஹரிணி
“ஏன்?, போன செக்யூரிட்டிய திருப்பி வர வைக்கலாம்னு ப்ளான் பண்ணுறியா?”
“இ..இல்ல…. நீ… நீ எங்க நிக்கிறன்னு கூடத் தெரியல எனக்கு” – அவள் கூறியதும் மனம் நெகிழ்ந்து விட அவள் புறம் நகர்ந்து சென்று அவளது கை விரல்களைப் பற்றியவன் “இங்க தான் இருக்கேன்”-என்றான்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் மௌனத்துடனே கரைந்து விட மீண்டும் ஜன்னலருகே சென்று நண்பர்கள் யாரும் தென்படுகிறார்களா என்று பார்த்தான். ஒருவரையும் காணாமல் எரிச்சலுற்றவன் தன் மொபைலிலிருந்த டார்ச்சை ஆன் செய்து விட்டு முன் பெஞ்சில் அமர்ந்தான்.
“உட்காரலாம்ல?, எவ்ளோ நேரமா நின்னுட்டே இருப்ப?”-ரிஷி.
இருட்டில் தனியாக.. அதுவும் இவனுடன் விடப்பட்டத் தன் தலையெழுத்தை நொந்தபடி அமர்ந்தவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அதைத் தாண்டி அவள் கூறிய “ஐ லவ் யூ” வேறு மறுபடி மறுபடி ஒலித்து அவனை போதையேற்றிக் கொண்டிருந்தது.
“வ….வந்து……”-ஹரிணி
“சொல்லு…” –ரிஷி
“கதவைத் திறக்க முயற்சி பண்ணிப் பார்க்கலாமா?”
“வெளிப்பக்கமா பூட்டிருக்கக் கதவை எப்படித் திறக்க முடியும்னு நினைக்கிற?”
“பாஸிபிள் இல்லை தான்.. இருந்தாலும்………………………….”
“ஏன்?, என் கூட தனியா இருக்கிறது அவ்ளோ கஷ்டமா இருக்கா என்ன?”
“எனக்கில்ல. உனக்குத் தான் ரொம்ப கஷ்டமாயிருக்கும்”
“எதை வைச்சு சொல்ற?”
“என்னைப் பார்த்தாலே.. கோபமா,எரிச்சலா இருக்குன்னு நீ தான சொன்ன?” – இத்தனை நாட்கள் அவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கிக் கொண்டிருந்தவளுக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்ததோ, பட்டெனப் பதிலளித்து அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவன் “கோ…கோபம்ன்னா… அது வேற கோபம்.. திடீர்னு என் வாழ்க்கையில வந்து என்னென்னவோ மாற்றங்களை என் அனுமதியில்லாம நீ பாட்டுக்க கடகடன்னு பண்ணிட்டிருந்தேனா.. கோபம் வரத் தான் செய்யும்!, இப்போ கூட உன் கிட்ட இப்படி எக்ஸ்ப்ளைன் பண்றது எனக்கு எரிச்சலாத் தான் இருக்கு, இவ ஏன் கேள்வி கேட்குறான்னு!” என்றான்.
“ஏன்-ன்ற கேள்விக்குத் தான் நான் பதில் சொல்லிட்டேனே!”
“என்னன்னு?”
“நான் உன்னைக் காதலிக்கிறேன்னு!” – அவள் கூறிய பதிலில் மீண்டும் வாயடைத்துப் போனான் அவன். தன் பதிலை எதிர்நோக்கி அவள் தன் முகத்தைப் பார்ப்பதை உணர்ந்தவன் உதட்டைக் கடித்தபடி..
“நான் இன்னும் என் ஃபீலிங்க்ஸ்க்கு பேர் வைக்கல”-என்றான்.
இப்போது எரிச்சலும்,கோபமுமாய் தோள் குலுங்கச் சிரிப்பது ஹரிணியின் முறையானது. ஆணும்,பெண்ணும் மண்ணில் தோன்றிய அன்றே வரையறுக்கப்பட்டு விட்ட உணர்வுகளுக்கு இவன் என்னப் பெரிதாக பெயர் வைக்கப் போகிறானாம்?, எதுவும் கூறாமல் சட்டென எழுந்தவள் “எனக்குத் தூக்கம் வருது” என்று விட்டு தங்,தங்கென நடந்து பின் பெஞ்சிற்குச் சென்றாள்.
அவளது கோபமும்,முகம் திருப்பும் விதமும் மேலும் அவனை போதையேற்ற.. விருப்பமின்றி எழுந்து அவள் பின்னே சென்று “ஹரிணி…….” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
அவளுடனான சங்காத்தம் எதிலும் ஈடுபட அவனுக்குச் சுத்தமாக விருப்பமில்லை தான்!, அவனுடைய வாழ்வே, தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்ட அன்னையை நினைத்து வெம்பிக் கொண்டும், பெற்றத் தகப்பனுக்கும்,அவருடைய சக்களத்திக்கும் இடையில் மாட்டி ஊசலாடிக் கொண்டும் இருக்கையில் அவனால் எப்படி அவளையும் இந்த இடியாப்பச் சிக்கலுக்குள் இழுத்து விட முடியும்?, இம்மாதிரியான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நிலையிலா அவன் இருக்கிறான்?
ஆனாலும் முடியவில்லை! அவள் புறம் போகாதே என்றும்,அவளைப் பார்க்காதே என்றும் ஆயிரம் முறை மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தாலும்… அவளை ஒரு முறை நேரில் கண்டு விட்டால் அத்தனையும் மறந்து, அவனுடைய கட்டுப்பாட்டை மீறி அவள் பின்னே ஓடுகிறது மனது. அறிவு கொடுக்கும் உபதேசங்கள் அனைத்தும், அவள் கண்கள் அளிக்கும் போதையின் முன்னே தவிடு பொடியாகிச் சிதைந்து போவதென்னவோ உண்மை தான்!
கைகளைக் கட்டிக் கொண்டு பெஞ்சில் அமர்ந்திருந்தவளின் அருகே சென்றமர்ந்தவன் “என்னை என்ன தான் செய்ய சொல்ற?” என்று வினவினான்.
திரும்பித் தன் பெரிய கண்களால் அவனை முறைத்து விட்டு வெடுக்கெனத் திரும்பிக் கொண்டாள் அவள்.
ஆண்டவா! எத்தனை முறை தான் இந்த கண்களுக்குள் விழுந்து செத்து எழுவது! கைகளை மடக்கி டெஸ்க்கில் குத்தியவன் கன்னத்தில் கை வைத்து அவளையே நோக்கினான்.
“எ….என்ன?” – ஹரிணி
“திடீர்னு பாரேன், நமக்குள்ள இருந்த ஆக்வர்ட் ஃபீல் மறைஞ்சிடுச்சு. ஒருத்தரையொருத்தர் முகம் பார்த்து தைரியமா பேசிக்கிறோம்.”-ரிஷி
“………………………….”- உதட்டைக் கடித்தபடி அமைதியானாள் அவள்.
“நிஜமாவே தூக்கம் வருதா என்ன?”-ரிஷி
“ஆ….ஆமா..”
“அப்போ…. இங்கே சாய்ஞ்சுக்கோ….”- தன் தோளைத் தட்டிக் காட்டினான் அவன்.
“இதுக்கு மட்டும் உங்க டிக்ஸ்னரில பேர் வைச்சுட்டீங்களோ?
“ஹ்ம்ம், ஜஸ்ட்…. ஸ்லீப்பிங்” – அவன் கூலாகக் கூறியதும் முறைக்க முயன்று தோற்றவளுக்கு இதழ்க்கடையில் முறுவல் உண்டானது. அவளுடன் சேர்ந்துத் தானும் புன்னகை கொண்டவன் மீண்டும் தன் தோளைத் தட்டிக் காட்டி படுத்துக் கொள்ளுமாறு கூற.. தயக்கத்துடனே நகர்ந்து அவன் தோளில் தலை சாய்த்தாள் ஹரிணி.
உலகையே வென்று விட்ட எண்ணம் ஒன்று மனதில் தோன்றி அவனைக் கர்வம் கொள்ளச் செய்ய அவள் தலை மீது தன் கன்னத்தை சாய்த்தான் ரிஷி. ஏதேதோ பேசியபடிக் கழிந்த அந்த இரவு, இருவரது வாழ்விலும் மறக்க முடியாத இரவாகிப் போனது.
