அத்தியாயம் - 13
I’m sorry!
அந்த இரவுக்குப் பிறகு இருவரும் எப்போதும் போல் சாதாரணமாகப் பேசிக் கொள்ளப் பழகியிருந்தனர். காலையில் வந்ததும் ஒரு ‘குட்மார்னிங்’, வகுப்பு முடிந்து கிளம்புகையில் ஒரு ‘பாய்,சீ யூ’. அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து லஞ்ச், ஏதேதோ பேசி அரட்டை அடித்தபடி மாலை ஹாஸ்டலுக்கு ஒன்றாக செல்வது எனச் சின்ன,சின்ன விசயங்களை ஒன்றாகச் சேர்ந்து கழிக்கக் கற்றிருந்தனர்.
“என்ன மேன், ஹரிணி கூட எல்லாம் செட் ஆகி ஸ்மூத்தா போயிட்டிருக்கு போல?” – அன்று மதிய உணவின் போது க்யூவில் நின்றுத் தட்டுக்களை நிரப்பிக் கொண்டிருந்த போது, ரிஷியிடம் கேள்வி கேட்டான் சார்லஸ்.
“உன் கண்ணு ஏன் டா எப்பவும் எங்க 2 பேர் மேல மட்டுமே இருக்கு?”-ரிஷி
“டேய்… நீங்க நம்ம க்ளாஸோட ஹாட் கபிள் டா”
“அது மட்டும் தான் காரணமா?”-ரிஷி
“இல்லடா. நான் ஏழாங்க்ளாஸ்ல ஹரிணிக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கேன். எக்ஸ்-லவர் மேல இருக்கிற ஒரு பாசத்துல தான் அடிக்கடி கேக்குறேன்”
“அடப் பரதேசி!”
“சரி, நீ உன் கதையை சொல்லு”
“எங்க 2 பேருக்கிடையில இருக்கிறது என்னன்னு இப்ப வரைக்கும் எனக்குக் கன்ஃபியூசிங்கா தான் டா இருக்கு”
“இதுல கன்ஃபியூஸ் ஆக என்ன இருக்கு?, இது லவ் தான்”-சார்லஸ்
“மீசை முளைச்சதும் வர்ற ஃபீலிங்ஸை எப்படிடா லவ்ன்னு சொல்லுவ?, ஒரு வேளை இன்ஃபேக்சுவேஷனா கூட இருக்கலாம்ல?”
“டேய்… நாம பார்க்குற படம்,படிக்கிற புக்ஸ்ன்னு அத்தனைலயும் இதை லவ்ன்னு தாண்டா சொல்லி வைச்சுருக்கானுக”
“அப்போ, உன்னால சொந்தமா உன் மூளையை வைச்சு யோசிச்சு, யெஸ். என் மனசுல இருக்கிற இந்த ஃபீலிங்க்ஸ்க்கு பேரு லவ் தான் அப்டின்னு சொல்ல முடியாதா?”
“டேய்…. அப்டி இல்லடா. எப்டி சொல்றது?, நீ ஏன் டா சின்ன விசயத்தை இவ்ளோ காம்ப்ளிகேட் பண்ணுற?” – சார்லஸ்
“இல்லப்பா, இந்த விசயத்தை சிம்பிளா பார்க்குற உன் கிட்ட இதுக்கான விளக்கத்தைத் தான் நான் கேட்குறேன்”
“டேய்…. வந்து… காதல்ன்னா மனசைப் பார்த்து வர்ற விசயம்டா. இனக்கவர்ச்சின்றது உடம்பைப் பார்த்து வர்ற விசயம்.”
“அப்போ காதலிக்கிறவன் எல்லாம் கட்டிப் பிடிச்சுக்காம, முத்தம் கொடுத்துக்காம இருக்கானுகன்னு சொல்றியா?”
“அப்டியும் சொல்ல முடியாது”
“பின்ன?”
“டேய் ரிஷி… புரிஞ்சுடுச்சு எனக்கு, நீ என்ன பதிலை எதிர்பார்க்குறன்னு!, இதுக்கெல்லாம் காலம் தான் டா பதில் சொல்லனும். அவ மேல இருக்கிற ஃபீலிங்க்ஸ் நீண்ட காலத்துக்கு தொடருச்சுன்னா அது காதல் டா. வெறும் டெம்ப்ரரி ஃப்லிங்க்ஸா இருந்தா அது இனக்கவர்ச்சி. சரியா?”
“எக்ஸாக்ட்லி. அதனால தான் இது என்ன ஃபீலிங்க்ஸ்ன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்னு இருக்கேன்”
“அதுக்குள்ள உனக்கு நரை முடி வந்துடும். அடப் போடா”-என்று அவன் பொறுமையின்றி நகர்ந்து விட, சிரித்துக் கொண்டே சென்று விட்டான் ரிஷி.
அன்று மாலை டென்னிஸ் கோர்ட்டில் விளையாடிக் கொண்டிருந்தவனை “ரிஷி….. டேய்…” என்று அர்ஜூன் அழைத்ததும் மூச்சு வாங்கத் திரும்பி நோக்கியவன் கையில் புத்தகத்துடன் ஹரிணி நிற்பதைக் கண்டான்.
சுற்றியிருந்த ஜூனியர் பாய்ஸ் அனைவரும் “அண்ணா உங்காளு வந்திருக்காங்க!,” என்றும் “ஹனினினினினினினி” என்று கோரசாய்க் கத்தியும் “ஒரு மாலை இளவெயில் நேரம்.. அழகான இலையுதிர் காலம்” என்று பாடியும் கலாய்க்க… அவளருகே ஓடிச் சென்றான்.
“இங்கே ஏன் வந்த?”
“இ..இல்ல.. சும்மா இந்தப் பக்கம் க்ராஸ் பண்ணேன். அதான்..”
“என்னைப் பார்க்கத் தான் வந்தியா?”-ரிஷி
எரிச்சலுடன் பல்லைக் கடித்தவள் வெறுமனே நிற்க… “இதோ வர்றேன்” என்று விட்டு டவலையும்,தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு அவளுடன் நடந்தான். கோர்ட்டைத் தாண்டியிருந்த கல் பெஞ்சு ஒன்றில் அமர்ந்ததும் என்னவென்று விசாரித்தான்.
“வ..வந்து…. பெருசா ஒன்னுமில்ல.” என்று விட்டுத் தன் இடது கையை அவனிடம் நீட்டி “புதுசா ஒரு ரிங் வாங்கினேன். நல்லாயிருக்கா?” என்று ஆர்வமாய் வினவினாள்.
திகைத்து விழித்தவனுக்கு இதற்காகவா அழைத்தாள் என்றும், இதை ஏன் தன்னிடம் காட்டி விருப்பம் கேட்கிறாள் என்றும், அவள் அப்படிக் கேட்பது அவனுள் புதிதாக ஓர் எண்ணெத்தை உருவாக்குவதையும் உணர்ந்து மெல்லச் சிரித்தபடி அவள் கை விரல்களைப் பற்றி “நல்லாயிருக்கு” என்றான்.
அவளும் பெருந்தயக்கத்துக்கிடையே தான் அவனிடம் காட்டியிருக்க வேண்டும். அவன் சிரித்ததும், அவளும் மறுபுறம் திரும்பி கண்களை இறுக மூடி உதட்டைக் கடித்துச் சிரித்தாள்.
அதன் பிறகு புதுக் கம்மல், புது ஷூ, புத்தாடை என அனைத்திற்கும் அவனிடம் விருப்பம் கேட்பதை வழக்கமாக்கி வைத்திருந்தாள். “நல்லாயிருக்கு” என்பதைத் தாண்டி அவன் வாய் மொழியாக எதுவுமே கூற மாட்டான் தான்! ஆனால்.. அவன் கண்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளை வாசிக்கத் தெரிந்தவளாக அவள் இருக்க வேண்டும்!, அதனால் தான் மறுபடி,மறுபடி அவனைத் தொல்லை செய்கிறாள்.
அனைத்தும்… அனைத்துமே சுபமாகச் சென்று கொண்டிருந்தது அன்று ரிஷி வீட்டின் தோட்டக்காரர் கார்மேகம் அவனை வந்து சந்திக்கும் வரை! அது அவனை இனிமையான கனவிலிருந்து உலுக்கி எழுப்பப்பட்டவனைப் போல் பதறியெழ வைத்தது.
எப்போதும் போல அன்று மாலையும் ஃபுட் பால் ப்ராக்டிஸில் இருந்தவனைப் ப்யூன் வந்தழைத்து அவனைக் காண யாரோ வந்திருப்பதாகச் சொல்லி விட்டுச் செல்ல யோசனையுடனே சென்றான்.
அங்கு அவனது தோட்டக்காரர் கார்மேகம் நின்று கொண்டிருப்பதைக் கண்டு “அங்கிள் என்னாச்சு?,” என்றபடி அவசரமாக அருகே ஓடிச் சென்றான்.
“த…தம்பி… உ..உங்கம்மா வாழ்ந்த வீட்டை, உன் அம்மா வாழ்ந்த வீட்டை உன் அனுமதியில்லாம இடிச்சுத் தள்ளிட்டிருக்காங்க தம்பி”என்று அவர் அழுகைக்கிடையே கூறப் பதறிப் போனவன் விழுந்தடித்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.
மூச்சு வாங்க, கால் முட்டிகளைப் பிடித்தபடி அவன் வீட்டின் முன்பு நின்ற போது அது பாதி தரை மட்டமாகி விட்டிருந்தது. அவன் அன்னையின் விருப்பத்திற்கேற்ப பார்த்துப் பார்த்து தாத்தா கட்டிய வீடு அது! அன்னையின் சொத்து! அதிலிருக்கும் ஒவ்வொரு செங்கலும் அவளது மேற்பார்வையின் கீழ் நடப்பட்டுக் கட்டிடடமாக்கப் பட்டது.
கோப நரம்புகள் மூளை எங்கும் விடைத்தெழுந்து அவனது ஆத்திரத்தை அதிகப்படுத்த ஓடிச் சென்று, தந்தையென்றும் கூடப் பாராமல் விஸ்வநாதனின் சட்டையைக் கிழித்தான் ரிஷி.
ஆத்திர மிகுதியில் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்தவனை “அவரை விடு, விடு….” எனக் கத்தி அவரிடமிருந்து அவனைப் பிரித்துத் தூரமாகத் தள்ளினாள் அவரருகே நின்றிருந்த காமினி.
விழுந்த இடத்திலிருந்து எழுந்த ரிஷி அருகே குப்பலாக ஏதோ எரிந்து கொண்டிருப்பதைக் கண்டுக் கண்களை மறைத்தக் கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு அருகே சென்று நோக்கினான்.
அது அனைத்தும் அவனது அன்னையின் சேலை,துணி மணிகள், அவள் உபயோகித்தப் பொருட்கள், அவளிருந்தப் புகைப்படம்! நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் தொண்டை வரை நிற்க செய்வதறியாது அங்குமிங்கும் பதறி ஓடியவன் தான் அணிந்திருந்த கோட்டைக் கழட்டித் தீயை அணைக்க முயன்றான்.
அப்படியும் முடியாமல் போக, பத்திக் கொண்டு எழுந்த தீயின் முன்பு அமர்ந்தவனுக்குக் கண்ணீர் சாரை,சாரையாகப் பெருகி அவன் கன்னங்களில் வழிந்தது. அன்னையையும்,அவளைச் சேர்ந்த எதையும் அவனால் கடைசி வரைக் காப்பாற்ற முடியவில்லை! அவளளித்த அவனது உயிரைத் தவிர!
பற்றியெரியும் தணலில் அன்னையின் பொருட்களோடு சேர்த்து அவர்களிருவரையும் எரித்து விட வேண்டுமென்கிற வெறி அவனுள் கொழுந்து விட்டு எரிந்தது. பாதியெரிந்து முடிந்திருந்தத் தனது கோட்டை கை நீட்டி எடுத்தவன், கொஞ்சமும் யோசிக்காமல் அவர்கள் மீது விட்டெறிந்தான்.
தரையைத் துடைத்துக் கொண்டிருந்த காமினியின் சேலை மீது நெருப்புப் பற்றிக் கொள்ள வேகமாக அதைத் தன் காலால் மிதித்து அணைத்தார் விஸ்வநாதன்.
அதற்குள் “ஆ….ஆ….ஆ” எனக் கத்தி விட்ட காமினி “கால் த போலீஸ் விசு!, இவனை இப்படியே விட்டால் என்னை நிச்சயம் கொன்று விடுவான்” எனப் போலிக் கண்ணீர் வடிக்க அருவெறுப்பில் முகத்தை சுழித்தான் ரிஷி.
மகனருகே நடந்து வந்து அவனது சட்டைக் காலரைப் பற்றித் தூக்கிய விஸ்வநாதன் “எவ்வளவு சொன்னாலும் நீ திருந்த மாட்ட?”என்று கையை ஓங்க, அவரைத் தடுத்து “எவ்ளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா?”என்று கோபமாய் வினவினான்.
“தான் மட்டும் தான் சொத்துக்காரின்னு ஆணவமா இருந்ததால் தான் டா உன் அம்மாவுக்கு அப்படியொரு சாவு கிடைச்சது. நீயும் அவளை மாதிரி தான் ஆகப் போற”
“இனி என் அம்மாவைப் பத்தி ஒரு வார்த்தை பேசுனீங்கன்னா, நிச்சயம் கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன். இந்த மாதிரி பொம்பளைங்களோட குடும்பம் நடத்த நினைக்குற உனக்கெல்லாம் என் அம்மாவோட மதிப்பு எப்படிய்யா தெரியும்?”
“தெரிய வேண்டாம்டா. நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல. காமினி பேச்சைக் கேட்டு உன் பேர்ல இருக்குற சொத்துக்களையெல்லாம் என் பேருக்கு மாத்திக்கிட்டது நல்லதாப் போச்சு. இனி, நீ சோத்துக்குக் கூட என் கிட்ட தான் டா வந்தாகனும்”
“எ..என்ன சொன்னீங்க?”
“நீ சரியாத் தான் கேட்ட. நான் சொன்ன எல்லாம் உண்மை! இனி என்னை அப்பாவாகவும், இவளை சித்தியாகவும் ஏத்துக்கிறதா இருந்தா என்னைத் தேடி வா.”- என்று கூறி விட்டு அவர் காமினியுடன் சென்று விட, செய்வதறியாமல் விழித்தபடி வீதியில் நின்றான் அந்தப் பதினெட்டு வயது சிறுவன்.
மறுநாள் காலை அவனைப் பள்ளியில் சந்தித்த விஸ்வநாதனின் ஆடிட்டர் அவர் கூறியதை உறுதி படுத்தி அவனுடைய பெயரிலிருந்தப் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அவர் பெயருக்கு மாற்றி விட்டதாகக் கூறினார்.
“என் ஒப்புதல் இல்லாம, கையெழுத்தில்லாம என் பேர்ல இருக்கிற சொத்துக்களை எப்படி அங்கிள் மாத்த முடியும்?”-என்றவனிடம் அவன் வயதையொத்த பையனைத் தன் மகன் எனக் காட்டி, ஐடி ப்ரூஃப்களையும் தயார் செய்து,இல்லாதவனை இருப்பது போல் காட்டிக் கையெழுத்திட செய்து அவர் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், தானும்,இன்னும் சிலரும் அதற்கு சாட்சிக் கையெழுத்திட்டதையும் தலை குனிந்தபடிக் கூறினார் அவர்.
“நீ..நீங்களுமா அங்கிள்?, அம்மா உங்களை எவ்ளோ நம்புனாங்க?”
“எனக்கு வேற வழியில்லை தம்பி. நான் உன் அப்பாவுக்குக் கீழே வேலை செய்யுற சாதாரண வேலையாள்.”என்றவர் அவனுடைய அன்னையின் தம்பி அதாவது அவனது மாமா வெங்கடேசன் என்பவரை உடனே சென்று சந்திக்கும் படியும்,அவருடைய உதவியைப் பெற்று சொத்துக்களை மீட்குமாறும் கூறி விலாசத்தையும் தந்து விட்டுச் சென்றார்.
அவனுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இப்படியொரு மாமா இருப்பதாக அவனிடம் அவனது அன்னையே கூறியதில்லை. அப்படியிருக்க இவரிடம் சென்று அவன் என்ன உதவி கேட்பான்?, என்ன ஆனாலும் சரி!, துரும்பைப் பிடித்துக் கொண்டேனும் மேலே ஏறி வர முயற்சித்துத் தான் ஆக வேண்டும். சொத்துக்கள் எதுவும் அவன் கைக்குக் கிட்டாமல் போனால் கூடப் பரவாயில்லை. அந்த சண்டாளிக்கும்,அந்தாளுக்கும் மட்டும் கிடைக்கக் கூடாது!
இப்போதெல்லாம் தினம் மாலையானதும் இடிந்து கிடக்கும் தன் வீட்டிற்குச் சென்று விடுகிறான். உடைந்த கற்களுக்கிடையே அன்னையின் முகத்தைக் காண முயற்சிக்கிறானோ என்னவோ! அங்கு அமர்ந்தபடி வெகு நேரம் அன்னையுடன் கழித்தத் தன் சிறு வயது நிகழ்வுகளனைத்தையும் எண்ணிப் பார்த்துத் துக்கம் கொள்கிறான்.
அன்றும் அப்படித் தான் வீட்டிலிருந்து நேராக அவன் பள்ளி வளாகத்தை அடைந்த போது.. வெளியே செல்வதற்காக எதிரே வந்த ஹரிணியைப் பார்க்க நேர்ந்தது. இந்த ஒரு வாரமாக அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சம்பவங்களனைத்தும் அவளைப் பற்றிய நினைவை ஆழ் மனதுக்குள் மொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்கச் செய்திருக்க, அவளை நேரில் காண்பதையே அடியோடு தவிர்த்து விட்டிருந்தான் அவன்.
அன்று எதிர்பாராமல் காண நேர்ந்து விட்டதில் திகைத்தவன், அவள் அவனைக் கண்டதும் கையாட்டிச் சிரிப்பதை நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவென வந்த பாதையில் நடந்து அவள் கண் பார்வையிலிருந்துத் தப்பி விட்டான்.
பெண்ணாசை பிடித்துப் போய் அன்னையை வேரோடுப் பிடுங்கியெறிந்த அவன் தந்தையின் ரத்தம் தான் அவனுக்குள்ளும் ஓடுகிறதோ!, மதி மயங்கி,கிறங்கிப் போய் அவனும் தானே இத்தனை நாட்களாய் அவள் பின்னேயே கட்டுப்பாடில்லாமல் திரிந்திருக்கிறான். அப்படியானால் அவனுக்கும்,அவன் தந்தைக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது! பெண்ணாசை ஆபத்தானது! எப்பேர்ப்பட்ட பாவத்தையும் செய்யத் தூண்டும் பேராபத்து!
இத்தனை நாட்களாய்க் காதலுக்கும்,கவர்ச்சிக்கும் இடையேயிருக்கும் வித்தியாசத்தை மட்டுமே தெரிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தவன், அடுத்தடுத்த நடந்த சம்பவங்களினால் தெளிவை இழந்து அவள் மேல் வைத்திருந்த உணர்வுகளைப் பெண்ணாசையென்றுத் தானே தவறாகக் கணித்துக் கொண்டான்.
தகப்பன் மீதிருந்த கோபம்,அந்த ராட்சசியின் மீதிருந்த கோபம், தன் மீதே தோன்றியிருந்த வெறுப்பு இவையனைத்தும் அவனை மதியிழக்கச் செய்ய.. கலங்கிய முகத்துடன் அறைக்குள் நுழைந்தவனை ஜெர்ரி தன் கையில் வைத்திருந்த மாத்திரை டப்பா ஈர்த்தது.
திடீரென அவனை அங்கு எதிர்பாராததால் திகைத்த ஜெர்ரி டப்பாவை பின்னே மறைத்துக் கொள்ள “வாட் இஸ் தட்?”என்றபடி அருகே வந்தான் ரிஷி.
“ஜஸ்ட்… ஜஸ்ட் அ ஸ்லீப்பிங் பில்” என்றவனிடம் கை நீட்டி எனக்கும் கொடு என்றான். தயங்கித் தடுமாறி முடியாதென மறுத்து ஏதேதோ காரணம் கூறியவனிடம் பிடுங்காத குறையாக வாங்கி வாயில் போட்டுத் தண்ணீரைக் குடித்தான்.
அவனையே கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற ஜெர்ரி அவன் மெல்ல,மெல்ல மயங்கிச் சரிவதைக் கண்டு தலையைப் பிய்த்துக் கொண்டான்.
தன் முன்னே தெரிந்த புத்தக செல்ஃப்,ஷூ ஸ்டாண்ட், மேஜையிலிருந்த அர்ஜூனின் புகைப்படம்,கடைசியாக ஜெர்ரி.. என அவன் காண்பவை அனைத்தும் தெளிவின்றி நிழலாகத் தெரியத் துவங்க கண்ணைக் கசக்கியபடி படுக்கையில் விழுந்த ரிஷியைக் கனவும்,நினைவும் எங்கோ இழுத்துச் சென்றது.
மறுநாள் முழுக்க எழ முடியாமல் படுக்கையில் கிடந்தவனை அர்ஜூன் என்னவென்று விசாரிக்க ஒன்றுமில்லை என சமாளித்து வைத்தான். அன்று மாலையே உடனடியாகச் சென்று அவனது தாய்மாமன் வெங்கடேசனைச் சந்தித்தான்.
அன்னைக்கும்,அவருக்கும் பாசமான உறவிருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் பர்வதத்தின் மகன் என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது “நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?” என்பது போலத் தான் நோக்கினார் வெங்கடேசன்.
அவரிடம் ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் பொறுமையின்றி அவசரமாகக் கூறி முடித்தவன் சொத்துக்களை மீட்டுத் தருமாறு கெஞ்சினான்.
“உங்கம்மாவுக்கும்,அப்பாவுக்கும் காதல் திருமணம். மகள் ஆசைப்பட்ட ஒரு காரணத்துக்காக என் அப்பா, ஒன்னுமில்லாத உன் அப்பனோட அவளுக்குக் கோலகலமா கல்யாணம் செஞ்சு வைச்சார். கல்யாணமான கொஞ்ச நாள்லயே தன்னோட கைங்கரியத்தைக் காட்டத் தொடங்கின உங்கப்பனை நாங்க எல்லாரும் கண்டிச்சோம். அவனை விட்டுட்டு வந்துடுன்னு உங்கம்மாகிட்ட கெஞ்சினோம், ஆனா அவனை மாத்தி நல்ல படியா வாழ்ந்து காட்டுவேன்னு எங்களையெல்லாம் எதிர்த்துக்கிட்டு அவனோடயே வாழ்ந்தா. இதுக்கு எங்கப்பாவும் சப்போர்ட் வேற. இப்போ பாரு, அவளாலயே அவனோட அட்டூழியத்தைத் தாங்க முடியாம, தானே தூக்குல தொங்கி செத்துட்டா. நான் சொன்னதை அப்பவே கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?” – என்று அவர், தான் கூறியது சரியாகி விட்டது பார்! என்பதை நிரூபிப்பதிலேயே குறியாக இருந்தார்.
அடேய்!, இந்த மாதிரியெல்லாம் நீ தொடையைத் தட்டிச் சிரிப்பாய் என்கிற ஒரு காரணத்துக்காகத் தான்! யாரும் தன்னை இகழ்வாகப் பார்க்க வேண்டாம் என்றெண்ணிக் கொண்டு என் அம்மா தன் உயிரையே மாய்த்துக் கொண்டாள்!, போன உயிரைப் பற்றி நான்கு நல்ல வார்த்தையாகப் பேசாமல், என்ன பேச்சு இது! என்று எரிச்சல் கொண்ட ரிஷிக்கு அங்கு அவர் முன்னே அமர்ந்திருப்பது பெருங்கஷ்டமாக இருந்தது.
“நீ உன் கிட்ட இருக்கிற டாக்குமெண்ட்ஸைக் கொடுத்துட்டு போ, திரும்ப நாளைக்கு வா”-என்று கூறி விட இந்த ஆள் எங்கே உதவப் போகிறான் என்கிற மனநிலையுடன் பள்ளிக்குத் திரும்பினான் அவன்.
தூக்கமென்பதே எட்டாக்கனியாகி விட்டிருந்தவனுக்கு ஜெர்ரியின் மாத்திரை சொர்க்கமாகத் தோன்ற அன்றிரவும் ஜெர்ரியிடம் கெஞ்சி மாத்திரையைப் போட்டுக் கொண்டு சொர்க்கத்துக்குச் சென்றான்.
தினம் அவனது மாமன் வீடு சென்று வருவதும் பின் மாத்திரையைப் போட்டுக் கொள்வதும் பழக்கமாகி விட.. ஒரு நாள் கண்டிப்பாக மாத்திரை கொடுக்க முடியாதென்று அடம் பிடித்தான் ஜெர்ரி. என்னவென்று அவன் அரட்டி விசாரிக்கையில் அது வெறும் தூக்க மாத்திரையல்ல என்றும்,போதை மருந்தென்றும் கூறினான்.
அது பெரிதாக ஒன்றும் அதிர்ச்சியளிக்கவில்லை ரிஷிக்கு. அவன் ஏற்கனவே அது போதை மருந்து தான் என்பதைத் தெரிந்து வைத்திருந்தான். வாழ்வு நாசமாகித் தானும் சீரழிந்து போயாயிற்று! இனி இந்த அர்ப்ப உடலுக்கு தீங்கு வருவதால் என்னவாகி விடப் போகிறது?, விரைவிலேயே அன்னையிடம் செல்லும் பாக்கியமேனும் கிட்டும் என்கிற மனநிலையிலிருந்தவன் மீண்டும் அவனிடமிருந்து மாத்திரைகளைப் பெற்றுக் கொண்டான்.
“ஆக, தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நீ இல்லீகலா போதை மருந்து கடத்துற?” – என்று அவன் அதட்டியதும் நடுங்கிப் போன ஜெர்ரி “நோ நோ மேன், நான் இதை எப்போவாவது தான் உபயோகிப்பேன்”என்றான். அதன் பிறகு அவனை அதட்டி,மிரட்டியே தினமும் மாத்திரைகளை உட்கொண்டு தானே தன் உடலைக் கெடுத்துக் கொள்ளத் தொடங்கினான்.
வகுப்பிற்கு செல்வதைத் தவிர்த்தான். வாரத்தில் ஒன்றிரெண்டு முறை தான் பள்ளி வாசலையே மிதித்தான். அடர்ந்து வளர்ந்து போயிருந்த தலை மயிரும், தாடியும், மீசையையுமாய் கன்னம் மெலிந்து போய் விகாரமாய்த் தோற்றமளித்தவனைக் கண்டு உடனிருந்த நண்பர்கள் அனைவரும் மிரண்டனர். யாரிடமும் எந்தக் காரணமும் சொல்லாமல் விலகியே நிற்பவனை அர்ஜூனால் கூட நெருங்க முடியவில்லை.
ரிஷி,ஜெர்ரி,ஹரிணி – இவர்கள் மூவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட அந்தக் கேடு கெட்ட தினம் அன்று எப்போதும் போல் அமைதியாகத் தொடங்கியது. அன்றைய தினம் அவர்கள் மூவருக்கும் பெரிய ஆபத்தை வைத்துக் கொண்டுக் காத்திருப்பதை மூவருமே உணரவில்லை.
அந்த மாதத்தில் பத்தாவது முறையாக ரிஷியைத் தன் வீட்டிற்கு வரவழைத்து சொத்து வழக்கைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தார் வெங்கடேசன். வழக்கைப் பற்றி அதிகம் பேசுகிறாரோ இல்லையோ, அவன் அன்னையைப் பற்றி அவனிடமே குறை கூறி நன்றாக மட்டம் தட்டிக் கொண்டிருந்தார். அவன் அன்னையுடைய சொத்து மதிப்பு, அவருடைய சொத்துக்களை விட உயர்ந்திருந்ததற்கான பொறாமை அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்துக் கொண்டிருந்தது.
இத்தனை நாட்களாகப் பொறுமையுடன் அவர் கூறும் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்தவன் அன்று வெகுண்டெழுந்து அவருக்கு சொத்தை அவனிடம் மீட்டுத் தரும் திட்டமே இல்லையென்றும்,அந்தக் காமினியுடன் சேர்ந்து கொண்டு இப்போது அவரும் அவனுக்கெதிராக சதி செய்யப் பார்க்கிறாரென்றும் அவன் கோபத்தில் வார்த்தைகளை விடக் கொதித்துப் போன வெங்கடேசன் “உன் அம்மாவும் இதே போலத் தான் டா என் மேல நம்பிக்கை இல்லாம, கூடப் பிறந்த சகோதரன்றதைக் கூட மறந்து எவனோ ஒரு பிச்சைக்காரன் பின்னாடி போனா. நீ அவ பெத்த மகன் தான?, நீ மட்டும் எந்த வகைல வித்தியாசமா இருந்துடப்போற?, ரோட்டில் திரிஞ்ச அநாதையான உன்னை நடு வீட்டுல உட்கார வைச்சு உதவி செய்ய நினைக்கிறேன் பார், என்னைச் சொல்லனும். உன் கைக்கு இந்த சொத்து என்னைக்கும் கிடைக்காதுடா”-எனச் சவால் விட்டு அவனிடம் சண்டையிட….. அவர் சட்டையைப் பிடித்திழுத்துக் கத்தித் தகராறு செய்தான் ரிஷி. அவர் வீட்டு வேலையாட்கள் அவனை வீட்டை விட்டு அடித்து விரட்டியதில் மிகவும் நொந்து சோர்ந்து போனான் அவன்.
சட்டையைக் கிழித்துக் கொண்டு ரோட்டில் அலையாத குறையாகப் பைத்தியமாகத் திரிந்தவனை அரச மரத்தடியில் எதிர் கொண்ட ஜெர்ரி அன்று தன் நண்பன் ஒருவனைக் கண்டதாகவும், அவன் ஊசியில் ஏற்றப்பட்ட போதை மருந்தொன்றைத் தந்ததாகவும் கூற…. யோசிக்காமல் அவனிடம் கையை நீட்டி “ஏத்து,ஏத்து….” என்றான் அவன்.
முதலில் சற்று விழித்த ஜெர்ரி பின் அவனுக்கும்,தனக்கும் சேர்த்து ஊசியை ஏற்றினான். உடலும்,மனமும் முற்றிலுமாகச் சோர்ந்திருந்த ரிஷிக்கு அந்த போதை மருந்து நாடி,நரம்புகளனைத்திலும் விர்ரென்று ஏறி ஏதோ ஓர் மாய உலகத்துக்கு அழைத்துச் செல்ல… மரத்தடியில் மெல்லச் சரிந்து கொண்டிருந்த ஜெர்ரியைப் பார்த்தவண்ணம் முன்னே நடந்து சென்றான்.
கால் போன போக்கில் நடந்து சென்றவன் சயின்ஸ் லெபாரட்டரியின் முன்பிருந்த மரத்தில் சாய்ந்துத் தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயற்சித்த போது…. “ரிஷி…………………..” என்றபடி அருகே வந்தாள் ஹரிணி.
அவளைக் கண்டதும் கையைக் கட்டிக் கொண்டு மரத்தில் சாய்ந்தவாறு நின்றவன், அந்த மயக்கத்திலும் தன் நிலையை அவளிடம் காட்டிக் கொள்ளக் கூடாதென்பதில் தெளிவாக இருந்தான்.
அடர்த்தியாயிருந்த தாடிக்கு மத்தியில் சின்னதாகிச் சுருங்கிப் போய் விட்டிருந்த அவன் முகத்தைக் கண்டு பதறி “ரிஷி….. ரிஷி உனக்கு என்னாச்சு?, ஏன் இவ்ளோ ஒல்லியா… ஆளே மாறிப் போயிருக்க?”என்று வினவினாள்.
“ஐம் ஆல்ரைட்”என்று முணங்கியவன் கஷ்டப்பட்டுக் கையைத் தூக்கி அவளை “போ…………” என்பது போல் கையசைத்தான். பல நாட்கள் கழித்து அவனுடன் அருகே நின்று பேசக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட மனமில்லாதவள், தயங்கி அவனைக் கண்டவாறு நிற்க.. மீண்டும் கையசைத்து “போ….” என்றான்.
ஏன்?, ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?, சிரிப்பும்,மகிழ்ச்சியுமாய் அவளைக் கண்டதும் ஒளிரும் விழிகள் ஏன் இப்படி சோர்ந்து போய் உயிரற்றுக் காட்சியளிக்கின்றன?, கன்னங்கள் இருக்கும் சதைப்பகுதி முழுதையும் தாடி நிறைத்திருக்கிறது!, சாப்பாட்டையே கை விட்டு விட்டானா?, என்ன தான் கஷ்டம் இவனுக்கு?
அதற்கு மேல் அவனால் நிற்க முடியாமல் போக, தன்னையே வருத்தத்துடன் நோக்கியவாறு நின்று கொண்டிருந்தவளின் மீது மொத்தமாகச் சாய்ந்தான் ரிஷி கார்த்திகேயன்.
“ரிஷி…… ரிஷி………”எனப் பதறியவளின் தோளைப் பற்றி நிமிர்ந்து அவள் முகம் நோக்கியவன் மீண்டும் அவள் கழுத்தில் முகத்தைப் பதித்தான். அவன் முதுகைத் தடவி “என்னாச்சு,என்னாச்சு ரிஷி?” என விடாது கேட்டுக் கொண்டிருந்தவனின் குரலைத் தாண்டி அவள் மீதிருந்து புறப்பட்ட வாசம் அவன் நாசியை நிறைத்து உயிர் வரை சென்று, புதைந்து போயிருந்த உணர்வுகளையெல்லாம் கைப்பற்றி அழைத்து வந்தது.
சட்டெனக் கண் திறந்து விழித்தெழுந்தவன் அவள் இடையைப் பற்றி அருகிலிழுத்து அவள் இதழ்களைக் கவ்வி முரட்டுத்தனமாக முத்தமிட்டான். அவளைக் கண்டதிலிருந்து ஒரு மாதிரி பார்வையுடனே தெளிவற்றிருந்தவன் திடீரென அணைக்கவும் திணறிப் போன ஹரிணி திகைத்துக் கண்களை இறுக மூடினாள்.
கருமேகத்துடன் இடி,இடிக்கத் தொடங்கியிருந்த வானம் ‘சோ’-வென மழையைப் பொழிந்து இருவரையும் நனைத்தது. நிமிடங்கள் கரையக் கரைய அவனது முத்தம் மூர்க்கமாய் மாறுவதை உணர்ந்த ஹரிணி அவன் தோளை விலக்கித் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
மனித நிலையைக் கடந்து மிருகமாகிக் கொண்டிருந்தவன், அவள் முயற்சியை எளிதாகத் தடுத்து அவளைத் தன்னோடு சேர்த்தழுத்திக் கொண்டான். கடைசியில் மூச்சுக்குத் தவித்து அவள் அரும்பாடு பட்டு அவனை விலக்கித் தள்ளுகையில் அவள் கூந்தலைப் பற்றி மரத்தில் சாய்த்தவன் மறுபடிக் குனிந்தான்.
மழையும்,குளிர்க்காற்றும் அவளை உறைய வைக்க... கண் முன்னேயிருந்தவன் ஆசைக் காதலன் என்கிற எண்ணம் மாறி, மூன்றாம் தர தெருப் பொறுக்கியாகத் தோன்ற.. அதுவரையிருந்த மௌனப் போராட்டத்தைக் கைவிட்டு வாய் விட்டுக் கத்தி அவனிடம் விடுபடப் போராடினாள் திவ்யஹரிணி.
விடாது ஊற்றிய மழையும்,அவளது கத்தலும் அவனை மேலும் வெறியேற்ற ஒரு கையால் அவளைப் பற்றியிழுத்துக் கொண்டு அருகேயிருந்த சயின்ஸ் லேப்-க்குள் நுழைந்தான் அவன்.
இருள் சூழ்ந்திருந்த அறையும், சோ-வெனப் பெய்து கொண்டிருந்த மழைச்சத்தமும் அவளைத் திகிலாக்கியது. அவன் கையைக் கடித்து, நகத்தால் பிராண்டி தப்பி ஓட நினைத்தவளின் முயற்சிகளை தோற்கடித்து அவள் மீது படர எத்தனித்தவனைக் கையில் கிடைத்தக் கண்ணாடிக் குடுவையினால் ஓங்கி அடித்தாள்.
சரியாக அது அவனது தலையைப் பதம் பார்த்திருக்க வேண்டும்!, பின் மண்டையைப் பிடித்தபடி அவன் மண்டியிட்டுக் கீழே சாய…. பயமும்,அழுகையுமாய் நொடி கூடத் தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு விறுவிறுவென வெளியே ஓடினாள்.
கால் போன போக்கில் ஓடி வந்தவள் காலில் ஏதோ தட்டித் தடுமாறி விழ.. எழுந்து நின்று என்ன அது என்று நோக்கி விட்டுக் “ஆஆஆஆஆஆஆ”-வெனக் கிறீச்சிட்டாள். போதை தந்த மயக்கத்தில் மரத்தில் சரிந்திருந்த ஜெர்ரி கை,கால்கள் இழுக்கப்பட்ட நிலையில் விழிமணி மேல் நோக்கியபடிப் பிணம் போலக் கிடந்தான்.
அலறியடித்துக் கண்களை மூடிக் கொண்டு நிற்காமல் ஓடியவளை வழியில் வந்த செக்யூரிட்டி நிறுத்தி விசாரிக்க “அ…அங்கே… அங்கே….” எனக் கைக் காட்டி விட்டு அவர் என்னவென்று பார்க்க மேலே நடந்ததும் மீண்டும் தட்டுத் தடுமாறி கால் போன போக்கில் ஓடி விட்டாள்.
