அத்தியாயம் - 14
I Just Just Just Love Her
திடுக்கிட்டுக் கனவிலிருந்து விழித்தெழுந்தமர்ந்தான் ரிஷி கார்த்திகேயன். வியர்த்துப் போயிருந்த நெற்றியுடன், நடுங்கிய கைகளுடன் சுற்றும்,முற்றும் பார்த்தவன்.. அது ஊட்டி மலைத் தொடர் இல்லையென்றும்,தனது பள்ளி வளாகம் இல்லையென்றும், முக்கியமாக அவனருகில் ஹரிணி இல்லையென்றும் உறுதி படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஃப்ரிட்ஜைத் திறந்துத் தண்ணீரைப் பருகினான்.
சுயநினைவற்று, போதையிலிருந்த அவனுக்கே அந்த இரவு இத்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கையில் உடல் வலியையும்,மன வலியையும் ஒரே சமயத்தில் உணர நேர்ந்த அவளுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்! தண்ணீர் பாட்டிலை இறுகப் பற்றியவனின் கண்களிலிருந்துக் கண்ணீர் வழிந்து அவனை மண்டியிட்டு அமரச் செய்தது.
ஹரிணி கைக்காட்டி விட்டுச் சென்ற பின் அவசரமாக முன்னே சென்று பார்த்த செக்யூரிட்டி ஜெர்ரியின் நிலையைக் கண்டு கணமும் தாமதப்படுத்தாமல் ஆம்புலன்சிற்கு ஃபோன் செய்தார். அவனை ஆம்புலன்சில் ஏற்றுகையில் சயின்ஸ்-லேப்பிலிருந்து ஒலித்த முணங்கல் சத்தத்தைக் கேட்டு ரிஷியையும் அதிலேயே ஏற்றி உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரும் போதையின் கீழ் முழுதாகக் கட்டுண்டிருப்பதும்!, அதிக போதை மருந்து எடுத்துக் கொண்ட காரணத்தினால் ஜெர்ரியின் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அவன் கோமா நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதையும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி பள்ளி முழுதும் பரவி…. ரிஷியின் நண்பர்களை திகைக்க வைத்தது.
“இது நிச்சயமாக உண்மையில்லை”-எனக் கடைசி வரை நண்பனுக்காக வக்காலத்து வாங்கிய அர்ஜூன் மட்டுமே அவனுக்குத் துணையாக மருத்துவமனையிலிருந்தான். போலீஸ்,வழக்கென்று போனால் ஸ்கூல் மானம் நாறி விடுமென்று பள்ளி நிர்வாகமே விசயம் வெளியே போகாமல் காப்பாற்றி இருவரையும் டிஸ்மிஸ் செய்தது. ஜெர்ரி அடுத்த சில நாட்களிலேயே தன் சொந்த நாட்டிற்கு கோமா நிலையிலேயே அனுப்பப்பட்டான்.
போதை தெளியும் வரை சுயநினைவற்றுக் கிடந்த ரிஷிகார்த்திகேயனுக்கு நினைவு திரும்பியதும், முதலில் நிழலாடியது ஹரிணியின் அழுகை உருவம் தான்! திடீரென விழித்தெழுந்தவன் இடது கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்ஸை கழட்டித் தூக்கியெறிந்து விட்டு “ஹரிணி…. ஹரிணி….”என்று ஓடத் துடிக்க.. நர்ஸ்களின் உதவியுடன் அவனைப் பிடித்து நிறுத்தி வைத்தான் அர்ஜூன்.
அவன் கூறும் வரை ஹரிணியைப் பற்றிய எண்ணமில்லாதிருந்தவன் அதன் பிறகு தான், அந்த இரவுக்குப் பிறகு அவளும் காணாமல் போய் விட்டதை உணர்ந்து மலைத்து என்ன நடந்திருக்குமோ என்று கற்பனை செய்து கூடப் பார்க்க விரும்பாமல் பயந்து, ரிஷி தன் வாய் வழியாகக் கூறப்போகும் மொழிக்காகக் காத்திருந்தான்.
மீண்டும் நினைவிற்கு வந்து கண் விழித்த ரிஷி “ஹரிணி….. ஹரிணி……” என்றே புலம்பவும் அவன் நிறுத்தி,நிறுத்திக் கூறியதிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டான் அர்ஜூன்.
அதன் பிறகு ஹரிணியைப் பற்றி விசாரித்ததில் அவள் தீவிர டைஃபாய்ட் ஜூரத்தினால் கோயம்புத்தூர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.
யாரும் வந்து பார்க்க ஆளின்றி அநாதையாக மருத்துவமனையில் கிடந்தவனை வெங்கடேசன் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். கேள்வி ஏதும் கேட்காமல் அவர் அவனை அழைத்துச் சென்றது,அவனுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. கேடுகெட்ட அப்பனுக்குப் பிறந்தவனும் கேடுகெட்டவன் தான் என்பதை நிரூபிப்பது போல்.. மதியிழந்துக் கெட்டப் பழக்கங்களுக்கு ஆளாகி.. ஒருத்தியின் வாழ்வையே சீரழிக்க முயன்றிருக்கிறான்!
ஹரிணியின் முகமும்,அந்த இரவின் நினைவும் அவனைப் பாடாய்ப்படுத்த தினம்,தினம் இரவு தூங்க முடியாமல் தவித்து மேலும் உடல் குன்றி எலும்பும்,தோலுமாய் மாறிப் போனான்.
தினம் வீட்டிற்கு வரும் அர்ஜூனிடம் “நான் அவளைப் பார்க்கனும்டா, ப்ளீஸ்… நான் அவளைப் பார்க்கனும்”என்று கெஞ்ச… “ஹரிணி இந்த ஊர்லயே இல்லடா ரிஷி, நான் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன். அவ இருக்கிற இடம் ஆஷா,ஆனந்தி யாருக்குமே தெரியல” என்று கூறி அடக்கி வைத்தான்.
மனசாட்சியுடைய எந்த நல்லவனுக்குத் தான் அந்த இரவை மன்னிக்கத் தோன்றும்?, மனிதன் என்பதையே மறந்து மிருகம் போல் நடந்து கொண்டு மென்மையானவளைக் காயப்படுத்த முயற்சித்திருக்கிறானே!, தான் ஒரு மூன்றாம் தர மனிதனாய், அவன் தந்தையை விடக் கேவலமானவனாய் மாறிப் போய் விட்டதாக எண்ணி தற்கொலைக்கு முயற்சித்து விட்டான்.
“ஹரிணி,ஹரிணி”எனப் புலம்பிச் சாக நினைப்பவனிடம் “ஹரிணி எங்கேயோ ஒரு மூலைல நல்ல படியா இருக்கான்னு நம்பு ரிஷி. நிச்சயம் என்னிக்காவது அவளைப் பார்ப்ப”என்று சமாதானம் செய்தான் அர்ஜூன்.
இங்கேயே இருந்தால் இவன் சரிப்பட்டு வர மாட்டான் என்று நினைத்த வெங்கடேசன் அவனை மெட்ராஸூக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். (பின்னாளில் அவரே அவன் சொத்துக்களை மீட்டு அவன் கையிலும் சேர்ப்பித்தார்). அன்று அவருடைய சட்டையைப் பிடித்து அவன் சண்டை போட்ட பிறகு இன்று வரை அவனுடன் ஒரு வார்த்தை பேசுவதில்லை அவர். ஆனாலும் அவனுக்கு எல்லா விதத்திலும் உதவி புரிகிறார். எதுவும் பேசாமல் அவர் சொன்னபடி சென்னைக்கு இடம் பெயர்ந்தான் அவன். ஹரிணியைப் பற்றியும்,ஜெர்ரியைப் பற்றியும் எந்த விதத் தகவலும் கடைசி வரை அவனுக்குக் கிட்டவேயில்லை.
இந்தச் சம்பவத்தில் தானாகவே மாட்டிக்கொண்டு ஆபத்தை இழுத்துக் கொண்ட ஹரிணி, அன்றைய இரவுக்குப் பின் முழுதாக பதினைந்து நாட்கள் மருத்துவமனையிலேயே கழித்தாள். விடாது தொடர்ந்து காய்ச்சலும்,அவளது புலம்பலும் அவளுடைய தாத்தாவை கவலை கொள்ள வைத்தது.
தெளிவாக விழித்திருக்கும் நேரங்களில் எவ்வளவு கேட்டும் காரணம் சொல்ல மறுத்தவள் “தாத்தா, நான் ஊட்டிக்குப் போகல தாத்தா. என்னை இப்படியே ஹாஸ்பிடல்ல இருந்து வேற எங்கேயாவது அனுப்பிடுங்க. நான் வரல தாத்தா. ப்ளீஸ்” எனக் கண்ணீர் சிந்த சரியென ஒப்புக் கொண்டார் ருத்ரன்.
அந்தப் பதினைந்து நாட்களும் பிரம்மை பிடித்தவள் போல் சரியாக உண்ணாமல், உறங்காமல், இருளைக் கண்டாலே பயந்து நடுங்கியபடி பைத்தியமாகத் தெரிந்தவளை என்ன செய்வதென்றும் புரியவில்லை அவருக்கு. அவள் சொல்படி அவளை நேராக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு வருடம் கழித்து ஆஷாவும்,ஆனந்தியும் சென்னையில் அவளை சந்திக்க நேர்கையில்.. அவளிடமிருந்து அரைகுறையாக அன்று நடந்ததைக் கேட்டறிந்து கொண்டவர்கள் இன்று வரை அவளுக்குப் பக்கபலமாக உடனிருக்கிறார்கள்.
“ஹலோ ரிஷி… எங்கடா இருக்க?” – ஃபோன் வழியாக அர்ஜூன் குரல் ஒலித்ததும் “வந்துட்டேன் ஆஃபிஸ்க்கு. சம்பத் சாரை மீட் பண்ணி நம்ம அவுட்டிங் ப்ளானை பத்திப் பேசிட்டு எடிட்டிங் ரூமுக்கு வரேன்” எனக் கூறி விட்டு ஃபோனைக் கட் செய்தான் ரிஷி.
மீட்டிங் ரூமில் தன் குழுவுடன் டிஸ்கஷனிலிருந்த சம்பத்தைக் கண்ணாடிக் கதவு வழியாக நோக்கி வெளியே காத்திருப்பதாக சைகை செய்து விட்டு நகர்ந்தான். சிறிது நேரத்திலேயே இரண்டு கப் காஃபிக்களுடன் அவனை சந்திக்க வந்தவர் ஒரு கப்பை அவனிடம் நீட்டி விட்டு “சொல்லுடா” என்றபடி அருகே அமர்ந்தார்.
“சார், எங்க டீமோட கொடைக்கானல் ப்ளான் பத்தி நேத்து ஃபோன்ல சொன்னேனே, என்ன சொல்றீங்க?, ஸ்பான்சர் பண்ணுவீங்களா?, இல்ல வழக்கம் போல டீல்ல விடப் போறீங்களா?”-ரிஷி
“டேய்.. அதான் லீலா பேலஸ் கூப்பிட்டுப் போய் சாப்பாடு போட்டேனே, அது போதாதா?”-சம்பத்
“சாப்பாடு சகிக்கல, வெரைட்டியா இல்லன்னு மறு நாளே வாட்ஸ்-ஆப் குருப்ல பசங்க கழுவிக் கழுவி ஊத்துனதை நீங்க பார்க்கவே இல்லையாக்கும்?”
“டேய்.. சேனல் எவ்ளோ காசு கொடுக்குதோ அதுக்கேத்த மாதிரி தானடா என்னால உங்களை கவனிக்க முடியும்?”
“சார், சார் ட்ரை பண்ணுங்க சார். கொடைக்கானல் போயே ஆகனும்னு பசங்க டெய்லி என்னை டார்ச்சர் பண்றானுக”
“பேசாம, உன் கபிள் ஃபேண்டஸீ ஷூட்டிங்கை கொடைக்கானல்ல நடத்தி ட்ரிப்பை வர்க்-ரிலேடட்டா மாத்துனேனா, என்னால ஈஸியா ஸ்பான்சர்ஷிப் வாங்கித் தர முடியும் டா”
“பேசாம போங்க சார், நல்லா வாய்ல வந்துடும் எனக்கு”
“சரி, பேசிப் பார்த்துட்டு சொல்றேண்டா. மொத்த க்ரியூவும்னா, ஆர்ட்டிஸ்ட்டையும் சேர்த்தா டா அழைச்சிட்டுப் போறீங்க?,”
“ஆமா சார்.”
“அப்போ நான்?”
“நீங்க உங்க அம்புஜத்தோட அஷ்டலட்சுமி கோவிலை சுத்திப் பாருங்க” – காஃபியை ஒரே மூச்சாக வாயில் ஊற்றி விட்டு விடைபெற்றுக் கிளம்பினான் ரிஷி.
செல்கிற வழியிலேயே கஃபேடீரியாவில் நின்று கை நிறைய ஸ்நாக்ஸ்,ட்ரிங்க்ஸ் என வாங்கிக் கொண்டு லிஃப்ட் ஏறியவன் எடிட்டிங் ரூமிற்குச் சென்று கதவைத் திறந்து “அர்ஜூ…….ன்ன்ன்ன்” என அழைக்க முற்பட்டவன், அங்கே மூன்று கம்ப்யூட்டர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த ஹரிணியைக் கண்டு புருவம் உயர்த்தினான்.
மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தவள், இரண்டு கம்ப்யூட்டர் திரைகளிலும் தெரிந்த சித்தார்த்,மீராவின் முகங்களைச் சரிப்படுத்தியபடி சீன் பை சீனாக எடிட் செய்து கொண்டிருந்தாள்.
மெல்ல நடந்து சென்றுக் கையிலிருந்த பாக்கெட்டுகளை அவன் அவளருகே வைத்ததும் நிமிர்ந்து நோக்கியவள் “ஹா…ஹாய்….”என்றபடி சட்டென எழ… உட்கார் என்பது போல் கைக்காட்டி விட்டு எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்து திரையிலிருந்ததைப் பார்வையிட்டான்.
அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை அவன் புறம் சுழற்றித் திரும்பியவள் “வ..வந்து அர்ஜூன்,வைபவ் வெளியே போயிட்டாங்க. அந்த கேப்ல தான் நா….நான் வர்க் பண்ண ஆரம்பிச்சேன்” என்று கூற.. சுருக்கிய புருவங்களுடன் அவளையே ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“எ…எ..என்ன?”-ஹரிணி
“எப்போ இருந்து கண்ணாடி போட ஆரம்பிச்ச?”
“ஹான்??”-எனத் திகைத்தவளிடம் “ஸ்பெக்டகில்ஸ்” என்று கைக்காட்டினான்.
நான் என்ன பேசுறேன்,இவன் என்ன பேசுறான்- என்கிற ரீதியில் விழித்தவள் பின் “இப்போ.. கொஞ்ச நாளா தான்..” என்றபடி வேகமாகக் கண்ணாடியைக் கழட்ட.. “ஹே.. போட்டுக்கோ,போட்டுக்கோ. ந…நல்லாயிருந்தது. அதான் கேட்டேன்… “ என்றவன்.. அவள் பல்லைக் கடித்தபடி மறுபுறம் திரும்புவதைக் கண்டு புன்னகை புரிந்து பின் உள்ளே ஒரு பெரிய வலியையும் உணர்ந்தான்.
எப்படிச் சமாளித்திருப்பாள்?,இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டிருந்தவளுக்கு அந்த இரவு எத்தகைய திகிலையும்,பயத்தையும் ஏற்படுத்தியிருக்கும்!, எப்படி அதிலிருந்து மீண்டிருப்பாள்?, அவன் மீது அவள் கொண்டிருந்த காதலை அவளது வாய் வழியாக அவன் அதிகம் கேட்டிருந்ததில்லை தான். ஆனால் எந்நேரமும் அவனையே தொடர்ந்து கொண்டிருந்த அவள் பார்வை, அவன் அருகாமையை அதிகம் விரும்பிய மனப்பான்மை அனைத்தும் அவள்,அவன் மீது வைத்திருந்த காதலை அவனுக்கு உணர்த்திக் கொண்டு தானே இருந்தன?,
எத்தனை தூக்கமில்லா இரவுகளைக் கடந்திருப்பாள்?, எத்தனை மழை நாட்களை நடுக்கத்துடன் எதிர் கொண்டிருப்பாள்?, ஆசை,ஆசையாக அவள் மனதில் தோன்றிய முதல் காதலை, கள்ளம் கபடமற்ற உணர்வுகளைத் தெருப் பொறுக்கி போல் நடந்து கொண்டு மொத்தமாக அழித்து விட்டான்.
இனி அதே உணர்வுகளை, அந்த ஆசையை அவனால் அவளுக்குள் ஏற்படுத்த முடியுமா?, அதற்கான தகுதியும்,உரிமையும் அவனுக்கு இருக்கிறதா?, எப்போது மாறுவாள்?, எப்படி மாற்றுவது?
“ஹரிணி………….” – அவன் மனதிலிருந்த எண்ணங்களை அவன் குரல் பிரதிபலித்திருக்க வேண்டும். வியப்புடன் அவன் புறம் திரும்பியவளின் கண்கள் வேகமாய் அவனை அளவெடுத்தது.
“ம்க்கும்”-எனப் பார்வையைத் தழைத்துத் தன்னைச் சமாளித்துக் கொண்டவன் “வெ….வெளியே போகலாமா?”என்று வினவினான்.
தயங்கி விழித்தவளிடம் “ஜஸ்ட் காஃபி குடிக்கத்தான்” என்று கூற மறுப்பு கூற முடியாமல் எழுந்தாள்.
காஃபி கப்புகளை ஏந்தியபடி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இருவரும் வளாகத்திலிருந்த டி.ஜே க்ரௌண்ட் என்றழைக்கப்பட்ட இடத்திற்கு வந்தனர்.
வட்ட வடிவக் குளம் போலிருந்த அமைப்பொன்றில் கீழே தரையில் டி.ஜே ஃப்ளோரும், அதைச் சுற்றிலும், வட்ட வடிவில் மேல்நோக்கியபடி வரிசையாக படிக்கட்டுக்களும் அமைந்திருந்தது. அங்கிருந்த படிக்கட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டு அவளையும் அருகே அமரச் சொன்னான்.
என்ன பேசுவது!, எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் காஃபியை உறிஞ்சியபடி அவன் அமர்ந்திருக்க, இருவருக்குமிடையே லீலா பேலஸில் ஏற்பட்டக் கடைசி சந்திப்பை எண்ணியபடித் தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள் ஹரிணி.
திடீரென “உன் தாத்தாக் கிட்ட நான் பேசட்டுமா?” எனக் கேட்டவனைத் திரும்பி நோக்கினாள் ஹரிணி. காஃபி கப்பைக் கீழே வைத்து விட்டு எழுந்து வந்து அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.
“உங்க பொண்ணு இந்தப் பத்து வருஷமா அனுபவிச்சிட்டிருக்கிற எல்லாத் துன்பத்துக்கும் காரணம் நான் தான் தாத்தான்னு சொல்லி மன்னிப்புக் கேட்கனும். அவ இல்லாத இத்தனை வருஷமும் எனக்கு நரகமா நகர்ந்த கதையைச் சொல்லி, இது எல்லாத்துக்கும் முடிவு கட்டுற விதமா அவர் என்னைக் கொன்னுப் போட்டாக் கூட பரவாயில்லன்னு சொல்லனும்” – கண்களில் நீர் மிதக்க அவள் முகத்தை அண்ணாந்து நோக்கியபடி அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஹரிணியின் இதயத்தை செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது.
“அன்னிக்கு நான் உனக்குப் பண்ணினது மனுஷத்தன்மையே இல்லாத காரியம். அதுக்கு நான் எந்த எக்ஸ்யூசும் சொல்லத் தயாராயில்ல. அன்னிக்கு என்னோட நிலைமை என்னவாயிருந்திருந்தாலும், ஒரு பொண்ணுக் கிட்ட தப்பா நடந்துக்கிற அளவுக்கு மதியிழந்து போனதை யாராலும் மன்னிக்க முடியாது. அந்த சம்பவம் உன்னை எப்படியெல்லாம் பாதிச்சிருக்கும்ன்னு நினைச்சு,நினைச்சே நிறைய… நிறைய இரவுகளைத் தூங்காமலே கடத்தியிருக்கேன் ஹரிணி…… எத்தனை முறை அரண்டு எழுந்திருக்கேன் தெரியுமா?, அவ்ளோ வலியை உனக்குக் கொடுத்துட்டு என்னால எப்படி ஹரிணி உயிர் வாழ்ந்திருக்க முடியும்?”
“நீ எங்கிருக்கிற?, என்ன பண்ற?, நல்லாயிருக்கியா, இல்லையான்னு எதுவுமே தெரியாம கடந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நரகத்தை விட கொடுமையா இருந்துச்சு. சில சமயம் நீ உயிரோட இல்லையோ, இனி உன்னைப் பார்க்கவே முடியாதோன்னுல்லாம் பயந்து மனநிலை சரியில்லாதவன் மாதிரி தெருத் தெருவா உன்னைத் தேடியிருக்கேன்.”
“உன் கூட இருந்த நாட்கள்ல என் மனசுல உனக்காக இருந்த ஃபீலிங்க்ஸ் என்னன்னு புரியாம நான் குழப்பத்துலேயே தான் இருந்திருக்கேன். ஆனா ஹரிணி, என்னால நீ காயப்பட்டது, எனக்கு வலிக்கத் தொடங்கின பிறகு தான் உன் மேல எனக்கிருந்த காதலை நான் தெரிஞ்சுக்கிட்டேன். அன்னிக்கு இருந்து இப்போ வரை அதோட வீரியம் குறைஞ்சதேயில்ல. உன்னைக் காதலிக்கிறதா சொல்ல எனக்கு எந்தத் தகுதியுமே இல்லன்னு எனக்கு நல்லா தெரியும். உன் விருப்பமும்,எண்ணமும் என்னன்னு தெரிஞ்சுக்காமலே என் மனசுல இருந்ததை அவசரப்பட்டு வார்த்தையா நான் வெளிப்படுத்துனது ரொம்பப் பெரியத் தப்பு.”
“ஹரிணி, உன்னோட வலிகளோட கம்பேர் பண்ணுறப்போ நான் இத்தனை வருஷமா அனுபவிச்சதெல்லாம் பெருசே இல்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும். என்னை மன்னிச்சு, என் மனநிலையைப் புரிஞ்சுக்கோன்னு கேட்டா… நான் மறுபடியும் மனசாட்சி இல்லாத மிருகமாத் தான் உன் கண்ணுக்குத் தெரிவேன். என்னை நீ மன்னிக்க வேண்டாம். அதுக்கு பதிலா பெருசா… ஏதாவது தண்டனை கொடு. வாழ்நாள் முழுசுக்கும் என்னை உயிரோட கொல்ற மாதிரி!”
-அவன் முடித்ததும் திகைப்பு குறையாமல் அவனையே நோக்கிக் கொண்டிருந்த ஹரிணிக்கு மறந்து விட்டதாய் நினைத்திருந்த கடந்த கால சம்பவங்களனைத்தும் கண் முன் தோன்றி சொல்லொணா வேதனையைக் கொடுக்க.. சட்டென எழுந்து அவனிடமிருந்து விலகி ஓட முயற்சித்தாள்.
அவள் முயற்சியைத் தடுத்துக் கையைப் பற்றி நிறுத்தியவன் “ஓடாத ஹரிணி.. ப்ளீஸ்… இனியும் நீ என்னை விட்டு விலகி ஓடித் தனியா அழறதைக் கையாலாகாதத் தனமா வேடிக்கை பார்த்துட்டு நிற்க நான் தயாரா இல்லை. ஹரிணி… ப்ளீஸ்…..” என்று கெஞ்ச… அவனிடமிருந்து முழு பலத்துடன் கையை இழுத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தவளுக்கு அழுகை பொங்க… சட்டென உதறி அவனை விட்டு விலகி ஆங்காரத்துடன் ஓங்கி அறைந்தாள்.
அவள் அறைந்த திசையில் முகத்தைத் திருப்பியவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசிக் கண்களை இறுக மூடிக் கொண்டு அமைதியாக நின்றான்.
“என் மன்னிப்பையோ, என் தண்டனையையோ வாங்கிக்கிறதுக்கு உனக்கு என்ன தகுதியிருக்கு?, அழகான உணர்வுகளால மட்டுமே வளர்க்கப்பட்ட மென்மையான என் காதலை அவமதிச்சு அருவெறுப்பை ஏற்படுத்தினது போதாதுன்னு மேலும்,மேலும் என்னைக் காயப்படுத்த நினைக்கிற உனக்கு என் தண்டனையை வாங்கிக்கிற தகுதி கொஞ்சமும் கிடையாது….” – ஆத்திரம் தலைக்கேற அழுகையுடன் கூறி விட்டு விறுவிறுவென அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ஹரிணி.
அவமானத்தில் தலை குன்றிப் போய் செயலிழந்து நின்றிருந்த ரிஷிகார்த்திகேயனுக்கு ஒரு புறம் அவள் தன் மனதைத் திறந்து அவன் மீதிருந்த வெறுப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட்டதை நினைத்து ஆறுதல் அடைந்தாலும், இது மாறவே மாறாதோ எங்கிற பயமும் தோன்றி அவனைத் தளர்வடைய வைத்தது.
இருவரையும் தேடி வந்த அர்ஜூன் அழுகையுடன் எதிரே வந்த ஹரிணியைக் கண்டு பயந்து என்ன நடந்ததென்று விசாரித்தான். அவள் ஏதும் கூறாமல் அழுகையைத் தொடர்வது கண்டு என்ன நடந்திருக்குமென்பதை ஊகித்தவன் பெருமூச்சுடன் அவளருகே சென்றான்.
“ரிஷி செஞ்ச தப்பை மன்னிக்கிறதுக்கு நீ பெரிய மதர் தெரசா இல்லன்றது எனக்கு நல்லா தெரியும் ஹரிணி. ஆனா ஒன்னு சொல்றேன். தப்புப் பண்ணிட்டோம்ன்றதை நினைச்சுக் கூனிக் குறுகி அவன் எவ்ளோ எக்ஸ்ட்ரீம் லெவலுக்கெல்லாம் போய் தன்னையே தண்டிக்க நினைச்சான்றது எனக்கு மட்டும் தான் தெரியும். அன்னிக்கு அவனைச் சுத்தியிருந்த ஏகப்பட்ட பிரச்சனைகள்ல அவன் உன்னை மட்டுமே பெருசா நினைச்சுக் கலங்குனதை இப்போ நினைச்சா கூட ஆச்சரியமா இருக்கு. அது,அவன் உன்னை எவ்ளோ தீவிரமாக் காதலிக்கிறான்றதை எனக்குப் புரிய வைச்சது “ – என ஆரம்பித்து அவன் அன்னை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது,அதற்குக் காரணமான அவனுடைய தந்தை,காமினி. இருவரும் சேர்ந்து அவனுக்கிருந்த சொத்தை அபகரிக்க செய்த முயற்சி அதைத் தொடர்ந்து ஜெர்ரியால் அவனுக்குண்டான போதைப் பழக்கம் என முதலிலிருந்துக் கடைசி வரை அனைத்தையும் கூறி முடித்தான்.
“இந்தச் சிக்கல்கள் அத்தனைக்குள்ளயும் மாட்டிக்கிட்டு முழிச்சிட்டிருந்த அவன் உன்னை அதுக்குள்ள இழுக்க விரும்பல. அதனால தான் அவன் தன் மனசுல இருந்த எதையும் உன் கிட்ட வெளிப்படுத்தாம, உன்னை விட்டு விலகியே இருந்தான். ஆனா.. காலம் எப்படி,எப்படியோ விளையாடி… எல்லாத்தையும் மாத்தி எழுதிருச்சு” எனப் பெருமூச்சை வெளியிட்டவன் மேலும் தொடர்ந்தான்.
“ரிஷி ரொம்ப,ரொம்ப நல்லவன் ஹரிணி. அப்பவும்,இப்பவும்! அவன் சந்திச்ச பலக் கஷ்டங்களை,அவன் இடத்துல இருந்து நாம அனுபவிச்சிருந்தா, அவன் அப்பா ஏமாத்துனப்பவே, கண்டிப்பா மருந்தைக் குடிச்சு செத்திருப்போம். ஆனா அவன் எல்லாத்தையும் எதிர்த்து நின்னு ஒரு ஆளா சமாளிக்கத் தான் முயற்சி செஞ்சான். பதினெட்டு வயசு அப்படி ஒன்னும் விவரம் தெரிஞ்ச வயசில்லையே! ஆனா அந்த வயசுலயே நிம்மதியில்லாம,சந்தோசமில்லாம ஏகப்பட்டக் குழப்பங்களோட இருந்திருக்கான்.”
“நான் இதையெல்லாம் உன் கிட்ட சொல்றது, அன்னிக்கு ஏன் அவன் அப்படி நடந்துக்கிட்டான்ற காரணத்தை நீ தெரிஞ்சுக்கனும்னு தான். மத்தபடி, அவனை நீ புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கனும்னு பேராசைப் படுற அளவுக்கு நான் மூடன் இல்ல”
“ஆனா ஒன்னு, இத்தனை வருஷத்தில உன்னைத் தவிர வேற எந்தப் பொண்ணையும், பொண்ணுன்ற நினைப்போட கூட அவன் பார்த்ததில்ல. உடன் வேலை பார்க்கிறவங்க தெரியாம அவனைத் தொட நேர்ந்தா கூட, தீப்பட்ட மாதிரி துள்ளி விலகிடுவான். அந்தத் தொடுகை உன்னையும்,அந்த இரவையும் நியாபகப் படுத்துறதா சொல்லுவான். அவன் மனசுல முதலும்,கடைசியுமா இருக்குற காதல் உன்னோடது தான் ஹரிணி. அதை மட்டும் தெரிஞ்சுக்கோ” – என்று கூறி விட்டுச் செல்ல பேச்சற்றுத் திகைத்து நின்றாள் ஹரிணி.
