அத்தியாயம் - 4
It’s because I only Love you!
“ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்..
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்…” - பாடல் வரிகளின் அர்த்தத்திற்கேற்ப முக பாவனைகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தியபடித் தன் ஜோடியைச் சுற்றி ஆடிக் கொண்டிருந்த பெண்ணை ‘பே’-வென நோக்கிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
அவன் தலையைத் தட்டி காஃபியை நீட்டிய அனு “அழகாவா இருக்கா அவ?, இப்டி பார்க்குற?,” என்றாள்.
“அவ முகத்தை யார் பார்த்தா?, வாட் அ பாடி?,என்னமா இடுப்ப ஆட்டுறா பாரு”-அர்ஜூன்.
“ச்சி,நாயே.. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையாடா?”-அனு
“நான் ஏன் வெட்கப்படனும்?, நேத்து அதர்வா போஸ்டரைப் பார்த்து வாட் அ பாடி-ன்னு நீ வாயைப் பொளக்கல?,அந்த மாதிரி தான் இது!, பசங்களைப் பொண்ணுங்க ஆ-ன்னு பார்க்குறதும், பொண்ணுங்க பசங்களை ஆ-ன்னு பார்க்குறதும் சகஜம் தான?”
“ஆமாமா, உன் பார்வையெல்லாம் எங்க போகும்னு எனக்குத் தெரியாது?, பொறுக்கி”
“எங்க போகும்னு தெரிஞ்சும் நீ ஏன் இவ்ளோ பக்கத்துல நிற்கிற?”
“வாயை மூடுடா”
“இன்னிக்கு என்ன ப்ரொடக்ஷன்ல பொங்கலா?”
“இல்ல உப்புமா. அதை விடு. டேய்,ரிஷிக்கு என்னடா ஆச்சு?, இரண்டு நாளா தூங்காம வேலை பார்க்கிறானாம். எடிட்டிங் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறான்னு வைபவ் சொன்னான். கம்ப்யூட்டர்ல இருந்து கண்ணை எடுக்க மாட்டேங்குறான். பார்க்க ஜோம்பி மாதிரி இருக்கான்னு சொன்னான். ஏன் டா?, என்ன நடந்தது?, மறைக்காம என் கிட்ட உண்மையை சொல்லுடா. அவனுக்கு என்ன தான் டா பிரச்சனை?”
பதில் கூறாமல் காஃபியை உறிஞ்சினான் அர்ஜூன்.
“டேய் உன் கிட்ட தான் பேசிட்டிருக்கேன்”
“அவனுக்கு ஒன்னுமாகல. தானாவே சரியாய்டுவான்”
“நான் வேணா போய் பார்க்கட்டுமா?”-அனு
“உனக்கு ஏன்டி தேவையில்லாத வேலை?, உன் லவர் மகேஷை நேத்து பார்ல வைச்சு அடிச்சுட்டேன். முதல்ல அவனைப் போய்ப் பாரு.”
“என்னடா சொல்ற?,டேய்.. அவனை ஏன் டா அடிச்ச?”
ஒரே மூச்சில் காஃபியை வாயில் ஊற்றிக் கொண்டவன் “அவனைப் போய்க் கேளு”- என்று எழுந்தான்.
“டேய்.. நில்லுடா. எரும, மரியாதையா ஏன் அடிச்சன்னு சொல்லிட்டுப் போ..” – என்று அவள் கத்திக் கொண்டிருக்கையிலேயே அவன் வெளியேறி விட்டான்.
“ஆண்டவா”-என முன் தலை முடியைக் களைத்துக் கொண்டவள் வேகமாய்த் தன் செல்போனைக் கையில் எடுத்தாள். ப்ச்,இவனுடன் ப்ரேக் அப் செய்து இரண்டு மாதமாகி விட்டது. என்னவென்று கேட்பாள்?, இந்த அர்ஜூன் இருக்கிறானே! படுபாவி! ட்ரபிள் மேக்கர்! இவன் என் வாழ்க்கையில் இருக்கும் வரை எதுவும் சரியாக நடக்கப் போவதில்லை. ச்ச!, தன் போக்கில் இங்குமங்கும் நகம் கடித்தபடி நடந்தவள் ஒரு பெருமூச்சுடன் செல்ஃபோனை எடுத்து மகேஷின் எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹ.. ஹலோ மகேஷ், நான் அனு பேசுறேன். வ….வந்து அர்ஜூன், அர்ஜூன் பண்ணினதுக்கு மன்னிப்புக் கேட்கத் தான் ஃபோன் பண்ணினேன். ப்ளீஸ், அவனுக்கு ஒரு மூடி குடிச்சாலே நிதானம் தப்பிடும். அதுக்கப்புறம் என்ன பண்றான்னு அவனுக்கே தெரியாது. அவன்… அவன் உங்களை அடிச்சதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.-என்று விடாது பேசியவளை “ஏய்,நிறுத்து, நிறுத்து” என்றான் அவன்.
“ஹாஹாஹா, அடிச்சானா?, அவன்.. அவன் என்னை அடிச்சானா?, இப்டி வேற வெளிய சொல்லிக்கிறானா அவன்?, பரதேசி. மொத்தமாக் குடிச்சு மட்டையாகி பார் வாசல்ல உட்கார்ந்து போற,வர்ற பொண்ணுங்களையெல்லாம் பார்த்து அனு,ரேகா, ப்ரீத்தின்னு புலம்பிட்டு இருந்தான். நான் தான் பாவமேன்னு கூப்பிட்டுப் போய் அவன் வீட்ல விட்டேன். வீட்டுக்குப் போற வழி முழுக்க உன்னைக் கேவல,கேவலமா திட்டுனான். நீ என்ன பெரிய அழகியா?, உன் பல்லு சரியில்ல. நல்ல பாடி ஷேப் இல்ல. கழுதைக் காது, தவளை வாய் அது,இதுன்னு!”
அனுவின் உஷ்ண மூச்சு அறை முழுதையும் சூடாக்க “வேற என்ன சொன்னான்?”- என அடிக்குரலில் வினவினாள்.
“ஹ்ம், இரு யோசிக்கிறேன். ஹ்ம்ம்ம்ம் நீ அவனைப் பத்து வருஷமா உன் பின்னாடியே அலைய விட்றியாம். ரேகா,ப்ரீத்தி,சங்கீதான்னு யார் கூடவும் அவனை சந்தோசமா இருக்க விட மாட்டேங்கிறியாம். ஒரு வருஷத்துல அவனுக்காக கிராமத்துல காத்துட்டிருக்கிற அத்தைப் பொண்ணு அருக்காணி மல்லிகாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கானாம்.”
“போதும். நிறுத்துங்க. போதும்.”
“ஹ்ம்ம்ம், ஓகே! என் வேலை முடிஞ்சது. பாய்” – என வைத்து விட்டான் அவன்.
“இவன் இவ்ளோ டீடெயிலா சொல்லியே ஆகனுமா?, ச்சி,ச்சி இவன் மீது கோபப்படுவது சுத்த வேஸ்ட்! அவன்.. அவன்.. இந்த அர்ஜூன்.. ராஸ்கல்..” – பல்லைக் கடித்தபடி வெளியே செல்லப் பார்த்தவளை நிறுத்திய சங்கர் “அக்கா, இன்னும் ஷூட் முடியல. எங்க போறீங்க?”என்றான்.
பொறுமையாய் அடுத்த நான்கு மணி நேரத்தைக் கடத்தியவள் மேக்கப்பைக் கூடக் களைக்காமல் அப்படியே கிளம்பி விட்டாள். “ராஸ்கல்! இவனைக் கொல்லாம விடக் கூடாது. ப்ரேக்-அப் பண்ண ஒருத்தன் கிட்ட இப்படி என் மானத்தை வாங்கி வைச்சிட்டானே! டேய்,மவனே! இன்னிக்கு உனக்கு சங்கு தான் டா”
விறுவிறுவென அவள் ஆஃபிஸ் படியேறிய போது மணி இரவு ஒன்பது முப்பது. எதிர்ப்பட்டவர்களிடம் அவன் எங்கே என விசாரித்து நேராக எடிட்டிங் அறையை நோக்கிச் சென்றாள்.
அந்த இரண்டு நாட்களில் நான்காவது முறையாக எடிட்டிங் அறைக்கு வருகை புரிந்திருந்தான் அர்ஜூன். வேலையைத் தவிர வேறு எதைப் பற்றிப் பேசினாலும் ரிஷி பதில் சொல்ல மாட்டேன் என்கிறான்.
ஹரிணியைத் தான் பார்த்தேன் என்று அவன் கதறிய அன்று உடனேயே கேமராவில் பதிந்து போயிருந்த அவளது முகத்தைக் காண இருவரும் முயற்சித்தனர். அவளிட்டிருந்த முக்காடும்,முன் நெற்றி முடியும் அவள் முகத்தை முற்றிலும் மறைத்து விட்டிருந்தது. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் ரிஷி அத்துடன் விட்டு விடவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் அந்த சாலையிலேயேத் தவமிருந்தான். அவள் தென்படவில்லை. தெருவிலேயே வசிக்கத் தொடங்கி விட்டவனைப் பக்கம்,பக்கமாக வசனம் பேசி,சண்டையிட்டுத் தான் இழுத்து வந்திருந்தான் அர்ஜூன்.
அதன் பின்பு மீண்டும் வேலை,வேலையெனத் தூங்காமல் அமர்ந்து விட்டான். “வீட்டுக்கு வந்தா.. அவளை நினைச்சிட்டே இருப்பேன். மறுபடியும் தெருவுக்குப் போகனும்னு தோணும். பரவாயில்லையா? – என்றவனிடம் பதில் கூற முடியவில்லை அர்ஜூனால்.
கம்ப்யூட்டரிடமிருந்து கண் எடுக்காமல் ஆழ்ந்து போயிருந்தவனைக் கண்டு பொறுமையின்றி “டேய்…..”என்று அவன் கத்திய நேரம் சரியாக உள்ளே நுழைந்தாள் அனு.
கையில் கட்டை போன்று எதையோ வைத்திருந்தாள். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ப்ராபர்ட்டி ரௌண்டில் உபயோகித்தது போலும்! அடித்தால் வலிக்குமோ! சற்று பீதியுடன் “அனு டார்லிங்” என்று அர்ஜூன் மெல்ல எழுந்து நின்றான்.
தங்,தங்கென அவனருகே வந்து நின்றவள் “மகேஷ் கிட்ட என்னைப் பத்தி என்னடா சொன்ன?” என்றாள்.
“வ..வந்து.. போதையில இருந்தேன் டா. அதான் மாமாவுக்கு எதுவும் நியாபகம் இல்ல. ஆனா.. பொளீர்ன்னு அவன் முகத்துல ஒரு அறை விட்டேன் டா. அது மட்டும் நினைவிருக்கு.”
“யாரு நீ?, பொளீர்ன்னு அவனை அறைஞ்ச?, ஹ்ம்,டெய்லி விடாம ஜிம் போய் இவ்ளோ,இவ்ளோ பெருசா ஆர்ம்ஸ் வைச்சிருக்கிறவனை நீ இந்த ‘பாலாஜி’ பாடியை வைச்சிக்கிட்டு அறைஞ்ச?”
“ஏய்…. நானும் தான் டி சிக்ஸ் பேக் வைச்சிருக்கேன்!”
“நாயே… நாயே… நீ.. நீ பேசாதடா உன்னைக் கொல்லாம விட மாட்டேன் டா”- என்றவள் கையிலிருப்பதைத் தூக்கி அடிக்கத் துவங்க “வலிக்குதுடி” என அவன் துள்ளி ஓடத் தொடங்கினான்.
“எனக்கு பல்லு சரியில்லையா?, கழுதைக் காது, தவளை வாயா டா நான்?, அப்புறம் எதுக்குடா தினம் உன் முகத்தைப் பார்க்கனும்னு என்னைத் தேடித் தேடி வர்ற?, பொறுக்கி! அதெப்படிடா உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் கிராமத்துல ஒரு மாமா பொண்ணு இருந்துடுறா?, அவளைத் தான் கட்டிப்பேன்னு வேற சொல்லிருக்க? பரதேசி…”
“ஏய் அடிக்காம பேசுடி. வலிக்குதுடி எரும” – என்றவன் ரிஷியின் பின்பு சென்று நிற்க.. அப்போது தான் அவனை கவனித்தாள் அனு.
“நீ என்னடா?, ம்?? உனக்கு என்னடா பிரச்சனை?, துறவி மாதிரி தலைமுடி,தாடியோட இப்பிடி இருக்க?, குளிச்சியா இல்லையாடா?, நீ குளிக்காட்டி உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. பக்கத்துல வர்ற எங்களுக்குத் தான் பிரச்சனை. பல்லு விளக்குனியா?, உங்களுக்கெல்லாம் என்ன தான் டா கவலை?, ஒருத்தன் பேசியே சாவடிக்கிறான். ஒருத்தன் பேசாமலே சாவடிக்கிறான். உங்களோடெல்லாம் பொழப்பு நடத்தனும்னு எனக்குத் தலையெழுத்து. டேய்.. நீ மரியாதையா இந்தப் பக்கம் வந்துடு. ஏய்… நீ ஏன் டா இப்பிடி ரொமாண்ட்டிக்கா பார்க்குற?, தொண்டைத் தண்ணி வத்திப் போற அளவுக்கு நான் கத்திட்டு இருக்கேன். உனக்கு என்னடா லுக்கு?”, - என்றவளைக் கண்டு மென்மையாய்ப் புன்னகை புரிந்தான் ரிஷி.
“எதுக்கு சிரிக்கிற?, நீ என்னை சைட் அடிக்கிற தான?, உண்மையை சொல்லுடா” – என்றவள் அவனை அடிக்கக் கை ஓங்க.. வேகமாய் அவள் கையைப் பற்றினான்.
“ஏய்.. ஏய்… அவ என் ஆளு. கையை விடுடா..” என அவள் வாயைத் திறக்கும் முன் தான் திறந்து விட்டிருந்தான் அர்ஜூன். சட்டென அவள் கையை விடுத்து விட்டு சுவற்றை நோக்கினான் ரிஷி.
“பாரு டா தங்கம், இத்தனை நாளா சும்மா பார்த்துட்டு இருந்தவன், இப்போ உன் கையைப் பிடிக்கிறான். இனிமே அவன் கிட்டவே வராதடா”
“யாரு?, யாரோட ஆளு?, நீ தான் அந்த கிராமத்துக்குயில கட்டிக்கப் போறேல?, அப்போ நான் எதுக்குடா?, ரிஷி…. நீ என் கையை நல்லா பிடிச்சுக்கோடா”
“டேய். ரிஷி அவளைத் தொட்டேனா.. உன்னை சாவடிச்சிடுவேன் டா”
“நீ என்னடா சொல்றது?”-என்றவள் வேகமாக ரிஷியின் அருகே செல்ல.. அதை விட விரைவாக சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு அறையின் மூலைக்குச் சென்று விட்டான் ரிஷி.
“ஹா ஹா ஹா.. அவன் என் நண்பன்டி!!” –கொக்கரித்தான் அர்ஜூன்.
“டேய்.. நீ பேசாதடா. நான் ரொம்ப ரொம்பக் கோபத்துல இருக்கேன் உன் மேல”- அனு.
சிரிப்புடன் நாற்காலியை விட்டு எழுந்த ரிஷி “நான் வீட்டுக்குப் போறேன் டா” என்று கூற இருவரும் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு ரிஷியை ஆவென நோக்கினர். மெல்ல நடந்து அவளருகே வந்தவன் அவளது முன் நெற்றி முடியை ஊதி விட்டு வெளியேறினான்.
செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் “என்னடி நடக்குது இங்க?” என்றான்.
“எப்படியோ அவன் இந்த ரூமை விட்டு எழுந்தானே, அதுவே போதும்டா”
“ஹ்ம்ம், சரி சரி வா டார்லிங் நாம போய் காஃபடீரியால ஃபிங்கர் சிப்ஸ் சாப்பிடலாம்”- என அவள் தோளில் கையிட்டு இழுத்துச் செல்ல.. “ஏய்.. விடு,விடு டா.. மல்லிகாவா, ஜாஸ்மீனா?, அந்த மாமா பொண்ணைக் கூப்பிட்டுப் போ, என்னை விடுடா” என்று திமிறியவளை இழுத்துக் கொண்டு நடந்து சென்றான் அர்ஜூன்.
அன்று காலை ஆழ்ந்த நித்திரையிலிருந்த ரிஷியை வீட்டின் அழைப்பு மணியும், செல்ஃபோனும் ஒரே நேரத்தில் சத்தமிட்டு எழுப்பியது. செல்ஃபோனில் தெரிந்த சம்பத்தின் எண்ணை நோக்கியபடி “அர்ஜூன்…. அர்ஜூன் டேய்.. காலிங் பெல் அடிக்குதுடா” என்று சத்தமிட்டுக் கொண்டே அலைபேசியின் பட்டனை அழுத்தி “ஒரு நிமிஷம் சார்” என்றான்.
“அர்ஜூன்.. நாயே.. பெல் அடிக்குறது கேக்கலையாடா?”
“டேய் அவன் ஆபிஸ்ல இருக்கான் டா. அங்க என்ன கத்திட்டிருக்க?”- அலைபேசியில் சம்பத்.
“ஓ!, வீட்ல இல்லையா அவன்?”-என்றபடி எழுந்து சென்று கதவைத் திறந்தான்.
வழக்கம் போல் அனு நின்றிருந்தாள். “கதவைத் திறக்க இவ்ளோ நேரமா?”- என்று திட்டியபடி வேகமாக உள்ளே நுழைந்து கையிலிருந்த டப்பாவை ஃபிரிட்ஜூக்குள் திணித்தாள்.
“இவ்ளோ சம்பாதிக்கிற? ஒரு ப்ரிட்ஜ் புதுசா வாங்க மாட்டியா?”-ரிஷி.
“எங்கடா நேரமிருக்கு?, ஆன்லைன்ல தான் ஆர்டர் பண்ணனும். ஏன் உன் வீட்டு ஃப்ரிட்ஜ் வெட்டியா தான இருக்கு?, ரொம்பப் பண்ணாதீங்கடா”-எனத் திட்டியபடி பாய் சொல்லிக் கிளம்பி விட்டாள்.
“யாருடா?”-சம்பத்
“அனு சார். பக்கத்து,பக்கத்து ஃப்ளாட்ல நாங்க இருக்குற வரை இவ தொல்லையை சகிச்சுத் தான் ஆகனும்”
“ரொம்ப அலட்டிக்காதீங்கடா. பாவம் சின்னப் பொண்ணு”
“அதுசரி, நீங்க எதுக்கு கூப்பிட்டீங்க?”
“டேய்.. கபிள் ஃபேண்டஸி ப்ரோக்ராமுக்கு இன்னிக்கு காஸ்ட்டிங் டிஸ்கஸ் பண்றோம். நீ வாடா”
“எங்க வரனும்?”
“ஹலோ டாக்டர் செட்டுக்கு வாடா. லஞ்ச் முடிச்சிட்டு ஆபிஸ் போகலாம்”
“என் கூட லஞ்ச் சாப்பிட உங்களுக்கு ஏன் அவ்ளோ ஆசை?, நான் நேரா ஆபிஸ் வரேன்”
“டேய் சுதாகர் பர்த்டே இன்னிக்கு. வாடா.. பசங்க உன்னைப் பார்த்துப் பல நாள் ஆச்சுன்னு சொல்றானுக”
“சரி,சரி வரேன். நீங்க பீர் அடிக்கிறதை ஃபோட்டோ எடுத்து உங்க வைஃப்க்கு அனுப்பவாச்சும் வரேன்”-என்று முடித்தான்.
ரிஷி ப்ரசாத் ஸ்டுடியோவில் ஹலோ டாக்டர் செட்டை அடைந்த போது மணி பன்னிரெண்டாகியாயிருந்தது. பாக்கெட்டிலிருந்த செல்ஃபோனை எடுத்து “டேய்,எங்கடா இருக்க?”-என்று அர்ஜூனுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜைத் தட்டினான்.
அருகே தட்டு நிறைய அடுக்கப்பட்டிருந்த குளிர்பான டின் ஒன்றை எடுத்துக் கொண்டுக் குடித்தபடி உள்ளே நடந்தான்.
“சௌண்ட் சௌந்தர்யா கூட லஞ்ச்ல இருக்கேன் டா”-ஃபோட்டோ ஒன்றுடன் வந்து சேர்ந்தது அவனது பதில் மெசேஜ்.
சிரித்தபடி அந்த மெசேஜை அவனும்,அனுவும்,அர்ஜூனும் இருக்கிற குரூப்பில் அனுப்பி வைத்து விட்டு பானத்தை வாயில் ஊற்றினான்.
“நாயே.. நீ என் நண்பன் இல்லடா. எதிரி”-அர்ஜூன்
“அவனை ஏன் டா திட்டுற?, என்னடா?,சௌந்தர்யா தான் உன் அடுத்த டார்கெட்டா?” – அனு
“ச்சி,ச்சி, பங்காரம்.. சும்மா காஃபடீரியால சௌண்டைப் பார்த்தேன்.ஜஸ்ட் ஹாய் சொன்னேன். தட்ஸ் இட்”-அர்ஜூன்
“ஆமா, ஜஸ்ட் ஹாய் சொன்னதுக்குத் தான் உன் தோள்ல சாஞ்சு போஸ் குடுத்திருக்கா. நீ ஃப்ராட் டா”-அனு
“அட,ஆமா… உனக்கு சொந்தமான என் தோள்ல அவ சாய்ந்திருக்கா பாரு. பேட் கேர்ள்டா அவ”-அர்ஜூன்
“டேய்,.. என்னடா தனியா நின்னு சிரிச்சிட்டு இருக்க?”-சம்பத்
“இல்ல சார், அனு,அர்ஜூனால 24 மணி நேரமும் எப்படி சண்டை போட்டுக்க முடியுதுன்னு நினைச்சு சிரிக்கிறேன்.”
“உனக்கு ஒருத்தி மாட்டுவாடா. அப்போவும் நீ இப்படி சிரிக்கிறியான்னு பார்ப்போம்”
“ஹ்ம்,ஹ்ம்,.. அந்த ஒருத்திக்காகத் தான் வெயிட்டிங்” – என்று அவன் கூறிக் கொண்டிருக்கையில் ஜீன்ஸ் அணிந்த பெண்ணொருத்தி அவனைக் கடந்து நடந்து சென்றாள்.
தலையைத் தூக்கி குளிர்பானத்தைப் பருகிக் கொண்டிருந்தவன் விழி மணியைச் சுழற்றி அந்தப் பெண்ணை நோக்கினான்.
நீளக் கருங்கூந்தலைப் பெற்றிருப்பாள் போலும்! தூக்கிக் கொண்டையிட்டிருந்தாள். இரு புறமும் முடிக்கற்றைகள் கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தது. பிங்க் நிற டீஷர்ட்டும்,ப்ளூ ஜீன்ஸூம் அணிந்திருந்தாள்.
அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவளின் கைகளிரெண்டும் பளீரென வெள்ளை நிறத்தில் இருந்தன. பாக்கெட்டிலிருந்த செல்ஃபோனை எடுத்து யாரிடமோ உரையாடியவள் அதையே பார்த்தபடி அவன் புறம் திரும்பிய போது குடித்துக் கொண்டிருந்தக் குளிர் பானம் புரையேறி விட்டிருந்தது ரிஷிக்கு.
லொக்,லொக்கென இருமியபடித் திகைத்து நின்று விட்டவனின் பார்வையைத் தொடர்ந்து அவளை நோக்கிய சம்பத் “இந்தப் பொண்ணு புதுசு டா. ஏ.டியா ஜாயின் பண்ணிருக்கா. பேரு திவ்யா. லேசா நம்ம அனுவோட சாயல் இருக்குல்ல? மீடியால எக்ஸ்போஷர் இருக்கு. ஆர்.ஜே-ஆ இருக்கா. நல்ல பொண்ணு. ஜாயின் பண்ணின ஒரு வாரத்துலேயே தெரியுது நல்ல உழைப்பாளின்னு”
“தி… திவ்யாவா?”
“ஆமா, ஏன் அவளை உனக்குத் தெரியுமா?”
பதில் கூறாமல் விழி விரிய அவளையே நோக்கிக் கொண்டிருந்தான் ரிஷி.
என்ன? என்ன விதி இது?, தெருத் தெருவாக இவளைத் தேடிப் போன வாரம் வரை அவன் அலைந்து கொண்டிருக்க.. இவள்.. இவள் இங்கே… அவன் வேலை பார்க்கும் இடத்திலேயே சக ஊழியனாக வலம் வந்து கொண்டிருக்கிறாள். காட் டாமிட்! நம்ப முடியாமல் தலையை அழுந்தக் கோதினான் ரிஷி.
மகிழ்ச்சி இதயம்,மூளையைத் தாண்டி உடல் முழுதும் பரவி பரவசப்படுத்த அவசர,அவசரமாய் சந்தோசக்கடலிலிருந்து திரும்பி நிஜத்திற்கு வந்து அவளை மேலிருந்து கீழ் வரை கட,கடவென நோக்கினான்.
வெற்று நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்த முடியை மெல்லக் காதோரத்தில் ஒதுக்கியவளது கண்கள் அடர்ப்புருவத்திற்குக் கீழே ப்ரௌன் நிறக் கருமணிகளுடன் பெரிதாய் இருந்தது. சிறிய மூக்கைத் தொடர்ந்திருந்த இதழ்கள் லேசாய்ச் சாயம் பூசப்பட்டிருந்தது. கொஞ்சம் கூட மாறாமல்.. அப்படியே தானிருக்கிறாள். பதினெட்டு வயதிலிருந்தபடி அநியாயத்திற்கு அழகுடன்!!
ப்ச், இப்போது இதற்கெல்லாம் நேரமில்லை. இவள் மின்னலைப் போன்றவள்! நிமிடத்தில் மறைந்து விடுவாள். இப்போதே… இப்போதே.. அவள் முன்பு சென்று நின்றாக வேண்டும். திகைப்பாளா?,முறைப்பாளா?, அடித்தால் கூட வாங்கிக் கொள்ள அவன் தயார். ஆனால் அவள் வேண்டும் அவனுக்கு! எப்படியேனும்!
“என்னடா கனவு கண்டுட்டு இருக்க?, இரு,அவளை இன்ட்ரோ கொடுக்கிறேன்” என்ற சம்பத் அவன் “சார்,சார்” என்பதற்குள் “திவ்யா” என்றழைத்து விட்டிருந்தார். அவர் புறம் திரும்பி லேசாய் முறுவலித்தவள் இருவரையும் நோக்கி நடந்து வந்தாள்.
வழக்கத்திற்கு அதிகமாக இதயம் வெகு வேகமாய் அடித்துக் கொள்ளத் துவங்க.. வியர்த்துப் போன உள்ளங்கையை அழுந்த மூடினான் ரிஷி. மரத்தடிக் காற்றில் நின்றிருந்தும் கூட.. காதோரத்தில் வியர்வை வழிவதை அவனால் உணர முடிந்தது. சுற்றியிருந்த மனிதர்களும்,விடாது பேசிக் கொண்டிருந்த சம்பத்தும் அவனது விழிகளுக்கு எட்டாமல் போனார்கள்.
தன்னை நோக்கி வருபவளை விழி விரிய நோக்கிக் கொண்டிருந்தவனின் பார்வை இமைப்பதைக் கூட மறந்து விட்டிருந்தது.
“குட் ஆஃப்டர்னூன் மா. வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?”
“குட் ஆப்டர்னூன் சார். வேலை நல்லாப் போயிட்டிருக்கு. வாங்கி வைச்ச பூண்டு அழுகிடுச்சாம். அதான் புதுசா வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.”
“இன்னிக்கு கேஸ் ட்ரபிள் பத்தியா பேசப் போறாங்க?”
“இல்ல சார்.. ஸ்கின் ப்ராப்ளம்ஸ் பத்தி பேசுறாங்க”
“ஓஹோ, இருக்கட்டும்,இருக்கட்டும். நான் உன்னை ஏன் கூப்பிட்டேன்னா… இவனை இண்ட்ரொடியூஸ் பண்ணத் தான்.”-என்று அருகேயிருப்பவனைக் கை காட்டினார் சம்பத்.
அதுவரை ஒரு முறை கூட அவன் புறம் திரும்பாதிருந்தவளை தின்று விடுபவன் போன்று பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன் புறம் திரும்பியதும்… அவளது கண்ணோடு,கண் நோக்கியதும் அவனறியாமல் விழி முழுதிலும் கண்ணீர்க் குட்டையாய் நிரம்பியது.
இந்தப் பத்து வருடத்தில் எத்தனை முறை இந்த நொடியை நினைத்துப் பார்த்திருப்பான்! அவளை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்! அன்று செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்! இல்லையில்லை.. தண்டனையளிக்கும் படி மன்றாட வேண்டும்! அவளது கோபம் தீரும் வரை தன்னை அறைந்து கொள்ளும்படி கன்னத்தைக் காட்ட வேண்டும்! இத்தனை நாட்களாக உயிருடன் இருப்பது இந்த நொடிக்காக மட்டும் தானெனப் புரிய வைத்தாக வேண்டும்! அவனுக்கு… அவள் எவ்வளவு தேவையென்பதை எடுத்துச் சொல்லியாக வேண்டும்!
ஆனால்.. இந்த நொடி… அவளை,இவ்வளவு நாட்கள் கழித்து.. இத்தனை அருகில் பார்த்து விட்ட பின்பு அவனது கண்கள் பேசும் அளவிற்குக் கூட வாய் வரவில்லை. வார்த்தைகளை முந்திக் கொண்டு கண்ணீர் வேறு வந்துத் தொலைத்து விட.. அவளையே நோக்கியபடி அமைதியாய் நின்றிருந்தான்.
அவன் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை சலனமின்றி நோக்கியவள் “யார் இவன்” என்பது போல் சம்பத்தை நோக்கினாள்.
“இவன் பேரு ஆர்.கே. ரிஷிகார்த்திகேயன். நம்ம டீம் தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோட டைரக்டர். ரொம்ப முக்கியப்புள்ளி.” – என்று சம்பத் கூறவும் சம்பிரதாயமாய் லேசான புன்னகையைச் சிந்தினாள்.
“இவ பேர் திவ்யாடா. நியூ ஜாயினி. கெட் அலாங் வெல்”
அவன் யாரென்றே தெரியாதவள் போன்று அவளளித்த பார்வையும், அதைத் தொடர்ந்த புன்னகையும் ரிஷியைப் பெரிதாய் அதிர வைத்தது. மறந்து விட்டாளா?, எப்படி.. எப்படி மறக்க முடியும்?, இல்லையில்லை. நடிக்கிறாள். நிச்சயமாக நடிக்கிறாள். ஆனால் ஏன்? ஹரிணி.. ப்ளீஸ்.. கோபத்தை நேரில் காட்டு. திட்டு,அடி.. ஏன் நீ என்னைக் கொலை கூட செய்யலாம். ஆனால்.. இது.. இப்படி, யாரென்றே தெரியாதவள் போன்று நடந்து கொள்ளாதே. ப்ளீஸ்!
குழப்பமும்,தவிப்புமாய்.. அவன் அவளது முகத்தை நிமிர்ந்து நோக்குகையில் அவள் சம்பத்திடம் “அ..அப்போ, நா..நான் கிளம்புறேன் சார். வேலையிருக்கு” என்றவள் அவன் முகம் பாராது லேசாய்த் தலையசைத்து விட்டு நடந்து சென்று விட்டாள்.
இ..இவ்வளவு தானா?, அவள்.. அவனைத் தெரியாதவள் போன்று நடந்து கொண்டால்.. அவன் அமைதியாக நின்று அவளுக்கு ஒத்துப் போக வேண்டுமா?, பத்து வருடப் பசிக்கு தீனி கிடைத்திருக்கிறது. அதை ஒதுக்க அவன் என்ன முட்டாளா?, ஹரிணி.. உன்னை விடுவதாக இல்லை! – யோசித்து முடிப்பதற்குள் அவன் கால்கள் அவளை நோக்கி ஓடி விட்டிருந்தது.
“டேய்.. ரிஷி…” – என்ற சம்பத்தைத் தவிர்த்து விட்டு விறு விறுவென ஓடி.. அவள் முன்னே சென்று அவளை வழி மறித்தான்.
மூச்சு வாங்கத் தன் முன்னே நிற்பவனை ரோபோ பார்வையுடன் நோக்கியவள் “எக்ஸ்யூஸ் மீ” என்றாள். அவனைக் கடந்து நடந்து செல்லப் பார்த்தவளை “ஒரு நிமிஷம்” எனத் தடுத்தவன்.. இடுப்பில் கை வைத்துத் தலையைக் கோதிக் கொண்டு பெரு மூச்சை வெளியிட்டு “நா… நான்.. என்னைத் தெரியலையா?” என்றான்.
மறுத்துத் தலையசைத்தவள் “இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்திருக்கேனா?” என்று வினவினாள்.
“ஹரிணி………….”
“திவ்யா”
“சரி,திவ்யா. ஓகே?, என்னை… என்னை நியாபகமில்லையா?,ஊ..ஊட்டி.. கா..கான்வெண்ட்..”-என்று அவன் திக்கித் திணறிக் கொண்டிருக்கையில் “திவ்யா…..” என யாரோ அழைக்க அவனைக் கண்டு கொள்ளாமல் விறுவிறுவெனச் சென்று விட்டாள் அவள்.
கண் முன்னே விலகிச் செல்பவளை எதுவுமே செய்ய முடியாமல் செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தான் ரிஷி. உலகமே.. பொலிவிழந்து.. களையிழந்து போனது போல் ஆனது அவனுக்கு.
அதன் பின்பு சம்பத் அவனருகே வந்து பேசியது எதுவும் அவன் காதுகளைச் சென்றடையவில்லை. பார்வை விடாது அவளையே தொடர்ந்து கொண்டிருக்க.. ஏக்கத்தையும்,தவிப்பையும் மட்டுமே சுமந்திருந்தன அவன் விழிகள்.
இல்லையில்லை! சோர்ந்து விடக் கூடாது. எப்படியும்,அவளைக் காணும் நொடி இனிப்பாக அமையுமென்று அவன் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை தான். ஆனால் அதையும் தாண்டி ஏதோ ஒரு ஏக்கம்! கண்டதும் திகைத்துப் பின் கோபம் கொண்டு… அழுது.. அடித்துப் பின் என்றோ ஒரு நாள் சமாதானம் அடைந்து அவனை ஏற்றுக் கொள்வாள் என நெஞ்சில் எங்கோ ஓர் மூலையில் அவனுக்கு ஏக்கம் இருந்திருக்கிறது போலும்! அதனால் தான் ஏமாற்றமடைந்ததும் சோர்ந்து விட்டது.
கூடாது! கூடாது! நேற்று வரை அவள் எங்கிருக்கிறாள் என்கிற விவரம் கூட தெரியாது பாதி உயிருடன் பிணம் போல் வலம் வந்து கொண்டிருந்தான். இன்று.. அவள், அவன் கண் முன்னே நடமாடுகிறாள். அவன் வேலை செய்யுமிடத்தில் அவளும் உடனிருக்கிறாள். இனித் தினம்,தினம் அவளைக் காண முடியும்! பேச முடியும்! மன்னிக்கும்படி கெஞ்ச முடியும்! இந்த மட்டிலேனும் அவன் அதிர்ஷ்டசாலி தான்! பெருமூச்சுடன் நிமிர்ந்தவன் தன் பார்வையிலிருந்துத் தப்பி விட்டவளை அவசரமாய்த் தேடினான்.
ரிஷியிடமிருந்துத் தப்பித்து அடித்துப்பிடித்து ஓடி விட்டிருந்த திவ்யஹரிணி அவன் பார்வை படாத மூலைக்குச் சென்று சுவரோரமாய் ஒளிந்து நின்றாள். கையிலிருந்த செல்ஃபோனை இறுகப் பற்றியவள் வலது கையை விரித்து உள்ளங்கையை நோக்கினாள். ஐந்து விரல்களும் கிடுகிடுவென நடுங்கியபடியிருக்க.. இதயமோ வெடித்து விடுமளவிற்குத் துடித்துக் கொண்டிருந்தது.
மூளை முழுவதிலும் பய நரம்புகளில் ரத்தம் முழு வேகத்துடன் பாய.. கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டது. உதட்டை அழுந்தக் கடித்து பயத்தை அடக்கியவள் நடுங்கும் விரல்களால் தன் அலைபேசியில் ஆஷா என்றிருந்த எண்ணிற்கு டயல் செய்தாள்.
“ஆ…. ஆஷா….”-அழுகைக் குரலில் மெலிதாய் அழைத்தவளைக் கேட்டு எதிர்முனை பதறி “ஹரிணி…. ஹரிணி என்னாச்சு?, ஏன் அழற?, எங்கிருக்க நீ இப்ப்போ?” என அடுத்தடுத்துக் கேள்விகளை அடுக்கியது.
“நா… நான்.. அவனைப் பார்த்தேன் டி. அவன்.. அவன் இங்கே தான் வேலை செய்றான்.”
“என்ன சொல்ற?”
“ஆ..ஆமாம்.. நான் வேலை பார்க்கிற டீம்ல தான் அவனும் இருக்கான். ஆஷா… ஆஷா எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு”
“முட்டாள்த்தனமா அழுதேனா.. அறைஞ்சிடுவேன் ஹரிணி. தைரியமா இருக்கச் சொல்லி எத்தனைமுறை சொல்லியிருக்கேன்?,பத்து வருஷமா நான் உன் கூட இருந்ததெல்லாம் வீணாடி?”
“இ…இல்ல… அவன் என் கிட்டப் பேச ட்ரை பண்ணினப்போ.. நா..நான் தைரியமாத் தான் டி பதில் சொன்னேன். ஆனா… ஆனா… பயமா இருக்குடி. ரொம்ப.. ரொம்ப பயமாயிருக்கு. அவன் பக்கத்துல வந்தாலே… பயமா இருக்கு”
“ஷ்ஷ் ஹரிணி.. பப்ளிக் ப்ளேஸ்ல அவனால உன்னை ஒன்னும் பண்ண முடியாது. அதனால் முட்டாள்த்தனமா பயப்படாதே. இதயம் சொல்றதைக் கேக்காம மூளை சொல்றதைக் கேளு. நீ தைரியமா இதை ஃபேஸ் பண்ணித் தான் ஆகனும் ஹரிணி. பீ ப்ரேவ்!”
“ஹ்ஹ்ம்ம்ம்…”
“என்னடி குரல்ல சத்தமே இல்ல?”
“தை..தைரியமா இருப்பேன் டி”
“தட்ஸ் குட்”
“நீ கிளம்பும் போது சொல்லு. உன்னை நான் பிக்-அப் பண்ணிக்கிறேன்”
“சரி”-என செல்ஃபோனைக் கட் செய்தவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கண் மூடிப் பெருமூச்சை வெளியிட்டுப் பின் விறுவிறுவென செட்டுக்குள் நுழைந்தாள்.
அடுத்த இரண்டு நாட்களும் அவளைக் காண வேண்டி தொடர்ந்து ஹலோ டாக்டர் செட்டுக்கு வருகை புரிந்தான் ரிஷி.
“என்னை ஏன் செட்டுக்கு வரச் சொல்றீங்கன்னு சலிச்சுக்கிட்ட அன்னிக்கு. இப்போ என்னடா?, தினம் வர்ற?”-என்ற சம்பத்திடம் “எல்லாம் காரணமாத் தான்”-என்றான் அவன். அந்த இரண்டு நாட்களில் பல முறை முயற்சித்துப் பார்த்தும் ஒரு முறை கூட.. அவளுடன் இரண்டு நிமிடம் நின்று அவனால் பேச முடியவில்லை.
அனுவும்,அர்ஜூனும் வேறு இவனுக்கு என்னவாயிற்று என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவளைக் கண்டு விட்டதை அர்ஜூனிடம் அவன் இன்னும் தெரிவிக்கவில்லை. பெரிதாகக் காரணம் ஏதுமில்லை. இரண்டு நாட்களாக அவன் வீட்டிற்கு வரவில்லை. நேரில் காண முடியாததால் விவரம் சொல்ல இயலவில்லை. அனைத்தையும் தாண்டி “அவள் முகத்தில் முழிக்க உனக்கு என்னடா அருகதை இருக்கிறதென்று அவன் கன்னத்தில் அறைந்தானானால் என்னசெய்வது!
ஏதேதோ யோசனையுடன் அமர்ந்திருந்தவன் ஹரிணி செட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருப்பதைக் கண்டான். எப்படியேனும் அவளிடம் இன்று பேசியாக வேண்டும். இன்னொரு வாசல் வழியாக வெளியேறி அவளுக்கு முன்னே சென்று அவள் வரும் வழியிலிருந்த மரத்தின் பின் மறைந்து கொண்டான்.
அவளருகே வந்ததும் மரத்திலிருந்து வெளி வந்து அவள் முன்னே நின்றான். திடீரென அவன் மரத்திலிருந்து வெளிப்பட்டதும் பயந்து போனவள் கையிலிருந்த செல்ஃபோனைத் தவற விட்டாள்.
பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்ட படி அமைதியாக நின்றிருந்தவன் பொறுமையாய்க் கீழே கிடந்த செல்ஃபோனை நோக்கினான். பின் குனிந்து அதைக் கையிலெடுத்தவன் ஸ்கீரினில் தெரிந்த ஊட்டி மலைத் தொடரைக் கண்டபடி அவளிடம் நீட்டினான்.
“தேங்க்ஸ்”-என்றபடி வாங்கிக் கொண்டவள் அவனைக் கடந்து நடக்க… “ஹரிணி.. நில்லு” என்றான்.
சட்டெனத் திரும்பி அவனை நோக்கியவள் “என் பேரு ஹரிணி இல்ல. திவ்யா. அதோட, நீங்க நீ,வா,போன்னு ஒருமைல பேசுற அளவுக்கு நாம நெருக்கமானவங்க இல்ல” என்றாள்.
“சரி, திவ்யா.. நான் உங்களோட பேசனும். ஒரு ஐந்து நிமிஷம், ப்ளீஸ்”
நடுங்கத் தொடங்கிய விரல்களை அழுந்த மூடிக் கையைக் கட்டிக்கொண்டு வேறு புறம் பார்த்தபடி நின்றாள் அவள். அதையே சம்மதமா ஏற்றுத் தொண்டையைக் கனைத்த ரிஷி “உனக்கு…. சாரி, உங்களுக்கு நான் யார்ன்னு நிஜமாகவே தெரியலையா?,இல்லை, தெரியாத மாதிரி காட்டிக்கிறீங்களா?”-என்றான்.
“ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்பீங்க?,நான் உங்களை முன்னே,பின்னே பார்த்ததேயில்லை”-பல்லைக் கடித்தபடி பதிலளித்தாள் அவள்.
“ஏன்?,இந்தப் பத்து வருஷத்துல தலைல ஏதும் அடிபட்டுட்டுச்சா?, அதனால தான் கடந்த காலத்தையெல்லாம் மறந்துட்டீங்களா?”
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு நினைக்கிறீங்க?”
“…………………………….”
“நான் போகலாமா?”
“நான் இன்னும் பேசி முடிக்கல”
“……….....”
“இவ்ளோ வருஷமா எங்க இருந்த?,நான்.. நான் உன்னை எங்கேயெல்லாம் தேடுனேன் தெரியுமா?,இத்தனை வருஷம் உன்னைப் பார்க்க முடியாம பித்துப் பிடிச்ச மாதிரி நடை பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். உன்னை நினைக்காத நிமிஷமே இல்ல. எங்க இருக்க,என்ன பண்றன்னு தெரியாம.. பைத்தியமா அலைஞ்சிட்டிருக்கேன். நான் உன் கிட்ட நிறைய பேசனும், எ..எல்லாத்துக்கும் முன்னாடி மன்னிப்புக் கேட்கனும். நா….” – அவன் முடிப்பதற்குள்..
“நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்குப் புரியவேயில்ல. நான் உங்களை முன்ன,பின்ன பார்த்ததேயில்ல.”
“ஹரிணி… ப்ளீஸ்..” என அவளருகே வந்தவனைக் கண்டு சட்டென நான்கடிப் பின்னே சென்றவள் “நான் திவ்யா. ஹரிணியில்ல”என்றாள் அழுத்தத்துடன்.
மூச்சு வாங்க அவளைக் கோபமாய் நோக்கியவன் முன் நெற்றி முடியை அழுந்தப் பற்றினான். பின் பொறுமையின்றி..
“திவ்யா?,ம்ம்?? திவ்யா!! என்னைத் தெரியவே தெரியாதுன்னு நீ சொன்னா.. நான் நம்பிடனுமாடி?, நான் என்ன குருடா?, நீ ஹரிணி தான் டி. என் ஹரிணி தான்! நீ ரெட்டை ஜடை போட்டப்போ, தாவணி கட்டினப்போ… ஏன்?,நீ வயசுக்கு வந்தது வரைக்கும் அத்தனையையும் கூடவே இருந்து பார்த்திருக்கேன்டி நான். இத்துணூண்டு… இத்துனூண்டு வயசுல இருந்து உன்னை எனக்குத் தெரியும். நீ… நீ… ஹரிணி இல்லைன்னு சொன்னா.. நான் நம்பனுமா?, இத்தனை நாளா என் கண்ணுல படாம இருந்து சாகடிச்சது போதாதுன்னு இப்போ இது என்னடி புதுசா?, என்னைத் தெரியாத மாதிரி நடிக்கிறது?,அவ்ளோ…. அவ்ளோ வெறுப்பாடி என் மேல??”
கோபத்துடன் அவன் குரல் ஓங்கத் தொடங்கிய நொடியிலிருந்து நிதானமிழந்து நடுங்கிப் போய் நின்றிருந்த ஹரிணி தலை சுற்றிக் கால் தடுமாறிக் கீழே விழப் பார்க்க… திகைத்து “ஹரிணி…” என அவளைப் பிடிக்கச் சென்றான் அவன்.
வேகமாய்ப் பின்னே சென்று அவன் பிடியில் சிக்காமல் விலகியவள் நடுக்கமும்,அழுகையுமாய் ஓடி விட்டாள்.
அவளைத் தொடர்ந்து செல்ல முடியாமல்.. பதிலேதும் பேசவும் தோன்றாமல்.. அவள் செல்லும் திசையையே நோக்கிக் கொண்டிருந்தவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது. அன்றும்,இன்றும் அவளது நடுக்கம் அவனுக்கு வலியைத் தந்தது.
சம்பத்தைக் காண செட்டுக்கு வந்த அனு, ரிஷி யாரோ ஒரு பெண்ணுடன் நின்று தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்துக் கண்டு விட்டு “இவன் பொதுவா பொண்ணுங்களோட பேச மாட்டானே!”-என்றபடி உடனே அர்ஜூனுக்கு ஃபோன் செய்தாள்.
“சொல்லுடா பங்காரம்”
“டேய்.. ரிஷி என்னடா ஹலோ டாக்டர் செட்ல இருக்கான்?”
“சம்பத் சாரைப் பார்க்கப் போயிருப்பான். நீ ஏன் டி அவனை சந்தேகக் கண்ணோட பார்க்குற?”
“ஏய்.. அவன் யாரோ ஒரு பொண்ணு கூடத் தீவிரமா நின்னு பேசிட்டிருக்கான் டா”
“பொண்ணா?????”
“ஆமாடா.. இதுவரைக்கும் இவளை நான் பார்த்ததேயில்ல”
வேகமாய் யோசித்த அர்ஜூன் “அவ பார்க்க எப்படியிருக்கா?”என்று விசாரித்தான்.
“நீ திருந்தவே மாட்டியாடா?”
“ஏய்.. விளையாடாம நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுடி”
“என்னடா மிரட்டுற?,ஹ்ம், ஒல்லியா.. உயரமா.. பளிச்சுன்னு வெள்ளையா இருக்கா… கண்ணு பெருசா,உதடு சின்னதா… ஹேய்,வெயிட்,இவளை நான் எங்கேயோ பார்த்திருக்கேன். எங்க…..?, ஏய்… ஹாஹா… கம் ஆன்…. இவ கண்,லிப்ஸ் என்னை மாதிரி இருக்குடா”
“வாட்??,ப்ளடி ஹெல்! அவ எப்படி அங்க வந்தா?”
“எவ டா?”
“நீ ஃபோனைக் கட் பண்ணு. நான் உடனே அங்க வர்றேன்” – அர்ஜூன் மாடிப்படிகளில் வேகமாய் இறங்குவது அனுவிற்கு நன்றாகக் கேட்டது. ஏன் பதறுகிறான்?-என யோசித்தபடித் திரும்பியவளுக்கு அந்தப் பெண் ஓடிச் செல்வது தெரிந்தது.
அதே நேரம் செட்டை விட்டு வெளி வந்த சம்பத் கோபமாய் நிற்கும் ரிஷியையும், ஓடிச் சென்ற திவ்யாவையும் கண்டுப் பதறி ரிஷியின் அருகே சென்றார்.
“ரிஷி.. என்னடா பிரச்சனை?,அந்தப் பொண்ணு அழறாளா?,டேய்.. என்னடா நடக்குது?”
“சம்பத் சார், எனக்கு அவ வேணும்”-ரிஷி
“ஹாங்???”
“கபிள் ஃபேண்டஸி ப்ரோக்ராம்ல என் கூட அவ வேலை பார்க்கனும். அவ இல்லாட்டி நான் அந்த ப்ரோக்ராமை டைரக்ட் பண்ண மாட்டேன்” – அழுத்தமாய்ச் சொல்லி விட்டு விறுவிறுவென வெளியே சென்றான் ரிஷி.
“டேய்,இங்க நான் பாஸா?, நீ பாஸா டா?, ஏன் டா ப்ரண்ட்லியா பேசுனா.. பாஸ்ன்றதைக் கூடவாடா மறந்துடுவீங்க?”-பின்புறம் சம்பத் கத்திக் கொண்டிருப்பதை அவன் கண்டுகொள்ளவேயில்லை.
