அத்தியாயம் - 5

The look of love in your eyes…

ரவு வேளையின் கரு நிறத்தை முழுமையாகப் பூசியிருந்த அந்த அபார்ட்மெண்ட்டின் நான்காவது தளம் ஆள் நடமாட்டம் ஏதுமின்றி காலியாயிருந்தது. எதிரெதிர் புறமாக பத்து வீடுகளைக் கொண்டிருந்த அந்தத் தளத்தின் கடைசி ப்ளாட்டின் மூடிய ஜன்னலிலிருந்து மங்கிய விளக்கொளியும்,அதன் வழி இரு உருவங்களும் தென்பட்டன. அந்த வீட்டின் ஹால் முழுதும் இருளில் மூழ்கியிருக்க.. சாத்தப்பட்டிருந்த அறையினுள்ளிருந்து வெளி வந்த மதுவின் நெடி மூக்கைச் சுருக்க வைத்தது.

அந்த அறையின் வலது புறமிருந்த மேஜையில் வோட்கா பாட்டில்களும்,பியர் பாட்டில்களும் நிரம்பியிருக்க.. அருகே ஒரு தட்டில் வறுத்த முந்திரிகளும்,பழங்களும் சிதறிக் கிடந்தன. கையில் வோட்காவுடன் சுவரை நோக்கியபடி நின்றிருந்த அர்ஜூன் திரும்பித் தன் வாயைத் திறந்த நொடி.. அருகேயிருந்த சௌண்ட் சிஸ்டத்திலிருந்து ஆங்கிலப் பாடலொன்று காதைக் கிழிக்கும் ஓசையுடன் ஒலிக்கத் தொடங்கியது. தானும் ஆடியபடி உடன் பாடினான் அர்ஜூன்.

“"My first went a little like this pch...And twist.. pch..pch.. and twist..

In the back of the car

On our way to the bar

I got you on my lips

At the foot of the stairs

With my fingers in your hair

Baby, this is it” – தன்னருகே கையில் பியர் க்ளாஸ் ஒன்றை ஏந்தியபடி பொங்கிய சிரிப்புடன் ஆடிக் கொண்டிருந்த அனுவின் இடையைப் பற்றி அருகிலிழுத்தான் அர்ஜூன். “She won't ever get enough.. Once she gets a little touch”- என இருவரும் பாடிக் கொண்டேக் குதித்து ஆடிக் கொண்டிருந்தனர்.

பாடல் முடிந்து ஆட்டம் நின்றதும் தன் கையிலிருந்த பியர் க்ளாஸை ஒரே மூச்சாகக் குடித்த அனு “டேய் அர்ஜூன்…” என்றாள்.

“என்னடி?, ஹாட் அடிக்கிறியா?”-அர்ஜூன்

“ம்ஹூம்.”எனத் தலையசைத்தவள் அவன் தோளைப் பற்றி அருகிலிழுத்து “ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்கிற வேலைகளுக்கு நடுவுல கிடைக்குற இந்த மாதிரி வீக்-எண்ட்க்காக என்ன வேணாலும் பண்ணலாம்னு தோணுது. எவ்ளோ ஜாலியா இருக்குல?, வீட்டுக்குள்ளேயே பாட்டு,டிரிங்க்ஸ்,ஆட்டம்! வாவ்!!!! ஐம் டோட்டலி எஞ்சாயிங் திஸ்!!!”

“ஆமாம்,பின்ன?, போன தடவை பாஷால (சென்னையிலுள்ள ஒரு நைட் க்ளப்) நீ போட்ட ஆட்டத்தை பார்த்தப் பின்னும் நான் உன்னை வெளியே கூப்பிட்டு போவேனாடி?,அதனால தான் இந்த செட்-அப். எப்படி அய்யாவோட ஐடியா?”

“க்ரேட், க்ரேட் அர்ஜூன் சார்”

“தாங்க் யூ மேடம். இன்னொரு ரௌண்ட் போகலாமா?”

“ஹய்யோ வேண்டாம் டா. நான் டயர்ட் ஆயிட்டேன்”-என்று பொத்தென மெத்தை மீது விழுந்தவள் பின் எழுந்து..

“ஏன் டா நேத்து ஹலோ டாக்டர் செட்டுக்கு அவ்ளோ அவசரமா ஓடி வந்த?, யாருடா அந்தப் பொண்ணு?, ரிஷி ஏன் அவளோட பேசிட்டிருந்தான்?, ரிஷிக்கு அவளை ஏற்கனவே தெரியுமா?”

“எத்தனை கேள்வி!”-எனத் தன் க்ளாஸில் இருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டவன் அருகேயிருந்த மேஜை மீது காலிக் கோப்பையை வைத்துவிட்டு அவளருகே அமர்ந்தான்.

“பதில் சொல்லுடா. தெரிஞ்சுக்காட்டி எனக்குத் தலையே வெடிச்சிடும்”

“ஹ்ம்ம், நீ இந்நேரம் உன்னோட கற்பனைச் சிறகைப் பறக்க விட்டு நிறைய யோசிச்சிருப்பியே!, என்ன கெஸ் பண்ணின?”

“ஹ்ம்ம்.. என் கெஸ் படி.. அந்தப் பொண்ணு தான் ரிஷியோட லவர். கரெக்டா?"

“லவர்???, அடேங்கப்பா!”

“ஆனா.. அப்போ அந்தப் பொண்ணுக்காகத் தான் அவன் இத்தனை வருஷமா இப்படி இருக்கானா?,அப்படி என்ன நடந்தது இரண்டு பேருக்கிடையில்?, லவ் பெயிலர்க்காக ஒரு மனுஷன் பத்து வருஷமா எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காம, தன்னைப் பற்றின கவலையில்லாம ஜடம் மாதிரி வாழ்வானா?, டேய்.. என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியும் தான? சொல்லுடா ப்ளீஸ்..”

“அது… வந்து.. அப்படித் தான்..! அவன் ஒரு பெரிய்ய்ய்ய தப்பு பண்ணினதால அந்தப் பொண்ணு அவனைப் பிரிந்து போயிட்டா. அதிலிருந்து அவன் இப்படி எதையோ பறி கொடுத்தவன் மாதிரி ஆயிட்டான். அவ்ளோ தான் சொல்ல முடியும் என்னால.”

“அப்படி என்ன பெரிய தப்பு? ஹ்ம்ம்ம்…. நாம காலேஜ் படிக்கும் போதிருந்து அவன் இப்படித் தான் இருக்கான். அப்டின்னா ஸ்கூல் டைம்ல வந்த லவ்வாடா? சில்லி! பன்னிரெண்டாங்கிளாஸ்ல என் கூடப் படிச்ச கிரண்குமாரை நானும் தான் சின்சியரா காதலிச்சேன். காட்!, காலம் ஓடிடுச்சு, வயசு மாறிடுச்சு. இன்னும் அதையே நினைச்சுட்டு இப்படி இருக்கான்?”

“அனுப்ரியா…. காதல்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பைக் கொடுக்கும். அந்த பாதிப்போட அளவைப் பொறுத்துத் தான் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையும். உன்னை அந்தக் கிரண் குமாரும் பாதிக்கல. இந்த அர்ஜூன் குமாரும் பாதிக்கல.அதான் உண்மை”– என்றவனை சட்டென நிமிர்ந்து நோக்கினாள் அனு.

மதுவின் தாக்கத்தில் சிவந்திருந்த அவனது பெரிய கண்கள் அவளை தீர்க்கமாய் நோக்கிக் கொண்டிருந்தது. வேகமாய்ப் பார்வையை மறுபுறம் திருப்பியவள் “பா..பாதிக்காம என்ன?, உங்க பெயரெல்லாம் நான் நியாபகம் வைச்சிருக்கிறதே பெரிய பாதிப்பு தான?”-என்றாள்.

லேசாய்த் தோள் குலுங்க நக்கலாய்ச் சிரித்தவன் குனிந்து தரையை நோக்கினான்.

“எ..என்ன சிரிப்பு?, ஏன் டா நீ மட்டும் என்ன ஒழுங்கா?, உன் லவர்ஸ் லிஸ்ட் உனக்கு நியாபகம் இருக்காடா?, எனக்கு ப்ரபோஸ் பண்ணின ரெண்டாவது நாளே நீ அந்த அனிதாவுக்கு ரோஸ் கொடுத்தது எனக்குத்தெரியாதுன்னு நினைக்கிறியா?,”

“ப்ச்… போடி..” – என்றவன் சோர்வுடன் அப்படியே படுக்கையில் விழுந்தான்.

“ஏய்… எழுந்திருடா. என்னடா ரியாக்ஷன் இது?, என்ன சொல்ல வர்ற நீ இப்போ?, நான் கெட்டவ, நீ ரொம்பபப நல்லவன்னு சொல்றியா?, அதெப்படிடா, பையன் 4 பேரோட சுத்துனா அது தப்பில்ல. பொண்ணு அப்படியிருந்தா தப்பா?”-என அருகேயிருந்தத் தலையணையினால் அவனை அவள் அடிக்கத் தொடங்கியதும்..

“வவலிக்குது விடுடி. ஏய்.. வேண்டாம். ஆ… வலிக்குதுடி”- என்றவன் சட்டென அவள் கைகளிரெண்டையும் பற்றித் தடுத்து தன்னருகே அமர்ந்திருந்தவளைப் படுக்கையில் சாய்த்தான்.

“ஆம்பளடி! அசால்ட்டா அடிக்கிற” என்று அசாத்தியமாக அவளது திமிறல்களைத் தடுத்தவன் பொறுமையாய் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான். தன் இரு கைகளையும் பற்றிக் கொண்டு தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் முகத்தைக் கண்டு லேசாய் உதற.. “க….கை… கையை விடுடா…” என மேலும் திமிறினாள் அனு.

“நீ வைச்ச மிச்ச சாப்பாடு, நீ குடிச்ச எச்சில் க்ளாஸ்ன்னு அத்தனையையும் உன்னோட பகிர்ந்துகிட்ட நான், இதுவரை ஒருமுறை கூட உன் க்ளாஸ்ஸி லிப்ஸை டேஸ்ட் பண்ண முயற்சித்ததேயில்ல.”-எனக் கூறியபடி அவளது இதழ்களை மெல்ல வருடினான் அவன்.

விழி மணியைச் சுழற்றி முகத்தை மறுபுறம் திருப்பிய அனு “இதே டயலாக்கை ரேகா,ப்ரீத்தி,சங்கீதான்னு எல்லார்க்கிட்டேயும் சொல்லிருப்ப?”- என்று வினவ.. அவள் முகமிருக்கும் திசையில் தானும் தலை சாய்த்துக் குனிந்த அர்ஜூன்.. “ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ… இதுவரைக்கும் என் லவர்ஸ் லிஸ்ட்ல இருக்கிற ஒரு பொண்ணையும் நான் கிஸ் பண்ணினதேயில்ல.”-என்றான்.

விழிகள் பளிச்சிட அவனை நோக்கியவள் பின் உதட்டைப் பிதுக்கி “இதை நான் நம்பனும்??,ஹ்ம்!”என்றாள்.

“ஆமாம். நம்பனும்.”என்றவன் தொடர்ந்து “அங்க எப்படி?”என்று தலையை அவள் புறம் நோக்கி ஆட்டினான்.

கோபமாய் அவன் புறம் நோக்கியவள் “மகேஷ் கூட பிரேக் அப் ஆனதே, அவன் என்னைக் கிஸ் பண்ண வந்தப்போ நான் தள்ளிவிட்டதால தான்.” என்று கூற.. கண் மூடி அழகாய் முறுவலித்தான் அர்ஜூன்.

“ம்ஹ்ம்??, உன்னைக் கிஸ் பண்ண முழு உரிமையும்,தகுதியும் இருக்கிறவன் நான் மட்டும் தான்னு உன் மனசாட்சி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கு போல!, அப்போ நான் ட்ரை பண்ணலாம். என்னைத் தள்ளிவிட மாட்ட?”- என்றவனை முறைத்தவள் “மரியாதையாக் கையை விட்டு எழுந்து போடா”-என்றாள்.

“நான் என்ன ரேப்பா பண்ணப் போறேன்?, ஜஸ்ட் அ கிஸ். அதுவும் ஃபர்ஸ்ட் கிஸ்”- என்றவன் அவளது காதோர முடியை ஒதுக்கிக் குனிந்து “அனு….” என்றான்.

“ஹ்ம்??”- அனு

“ஐ லவ் யூ”- அர்ஜூன்

“………………………………………………………………….”

வெளுப்பு நிறம் மாறி அவளது முகம் மெல்ல,மெல்ல சிவந்து கொண்டிருப்பதைக் கண்டவன் அவளை நோக்கிக் குனிந்தான். கண்களை அகலத் திறந்து வைத்து அவனையே இமைக்காமல் நோக்கியவளிடம்..

“கிஸ் பண்ண வந்தா கண்ணை மூடனும்டி.” என்றவன் “இடியட்..”என்றபடித் தன் நெற்றியை அவள் நாடியில் பதித்தான்.

அப்பாடா!-எனப் பெருமூச்சை வெளியிட்ட அனு “யா..யாருடா இடியட்?,ராஸ்கல்.. தனியா இருக்கிற பொண்ணு கிட்ட கலாட்டாவா பண்ணுற?,எழுந்திருடா.. எழுந்திருருருரு…”என அவனைத் தன் மீதிருந்து அகற்றிக் கீழே தள்ளினாள்.

டமாலெனக் கீழே விழுந்தவன்.. தரையில் கிடந்தத் தலையணையைத் தலைக்கு வைத்துக் கொண்டு “குட்நைட் டி”எனக் கண் மூடினான். றுநாள் காலை ஆளுக்கொரு மூலையில் படுத்துக் கிடந்த இருவரையும் ரிஷி தட்டி எழுப்பினான்.

“அர்ஜூன்.. டேய்.. எழுந்திருடா.. ஏன் டா வீக்-எண்ட் ஆனா இப்படி வீட்டை அசிங்கம் பண்ணுறீங்க?,உங்களை மாதிரி ஆளுங்களுக்காகத் தான் நைட் க்ளப்,பப்-ன்னு நிறைய இருக்கே!, லவர்ஸ் ஒன்னு சேர்ந்தா என்னன்னவோ பண்ணுவாங்க,ஆனா.. இதுங்க இரண்டும் தண்ணி அடிக்குதுங்க!, ச்சை!” – ரிஷி

“வீ ஆர் நாட் லவர்ஸ் ப்ளடி.”-கோரஸாக பதில் சொல்லிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் தலைமுடியைக் கொண்டையிட்டபடி கோபத்துடன் எழுந்த அனு, “சத்தமா லவர்ஸ் இல்லன்னு சொல்ற?, அப்போ நேத்து நைட் ஏன் டா அப்படி டயலாக் விட்ட?”என்றாள்.

“ஹூ?, மீ? நான் என்ன சொன்னேன்? பாட்டு பாடிட்டே தூங்குனது தான் நியாபகம் இருக்கு எனக்கு. அய்யோ!, என்னடி நடந்தது?, உன்னைக் கட்டிப் பிடிச்சேனா? கிஸ்? ம்ஹ்ம்?? இல்லையா?”-எனத் தலையாட்ட.. “ராஸ்கல்…”எனப் பல்லைக் கடித்தாள் அனு.

“எதுவும் நடக்கலேன்னா.. எதுக்கு சீன் போடுற?, ஹய்யோ.. இன்னிக்கு சங்கீதா கூட ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுறதா வாக்குக் கொடுத்திருக்கேனே!, மை காட்!” –எனக் கத்தியபடியே பாத்ரூமை நோக்கி ஓடினான் அர்ஜூன்.

கோபமாய் நின்றிருந்தவளிடம் “நீ இவனுக்காக வெயிட் பண்றதை நிறுத்திட்டு பேசாம மகேஷ் கூட செட்டில் ஆகலாமே!”-என்று இலவச ஆலோசனை வழங்கினான் ரிஷி.

“நான் இவனுக்கு வெயிட் பண்றேனா?, மை ஃபூட்! இப்போ நான் “ஊரெங்கும் கொண்டாட்டம்”சீரியல் ஆக்டர் அஜய் கூட டேட் பண்ணிட்டிருக்கேன்.” என்றவள் தொடர்ந்து… “டேய் ரிஷி.. உன் மேல நான் ஏற்கனவே காண்டுல இருக்கேன். இதுல நீ இன்னும் வேற இரிடேட் பண்றியா?”என்றாள்.

“என் மேல என்ன கோபம்?”

“டேய்.. ஹலோ டாக்டர் செட்-ல ஒரு பொண்ணோட நின்னு பேசிட்டிருந்தியே! யாருடா அவ?”

‘“நீ எப்போ அவளோட என்னைப் பார்த்த?”

“பார்க்குறது என்ன?, எனக்கு உங்க இரண்டு பேரைப் பத்தின அத்தனை விசயமும் தெரியும்”

“எ…என்ன?,என்ன தெரியும்? அர்ஜூன்… குடிகார நாயே… என்னடா உளறி வைச்சிருக்க?”- பாத்ரூமை நோக்கிக் கத்தினான் ரிஷி.

“நீங்க 2 பேரும் லவர்ஸ்-ன்னும், நீ ஏதோ ஒரு பெரிய தப்பு பண்ணினதால் அவ உன்னை விட்டுப் பிரிஞ்சு போயிட்டான்னும் நான் கேள்விப் பட்டேன். டோண்ட் வர்ரி டா ரிஷி. உன்னை அவளோட சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு. இத்தனை வருஷமா அந்தப் பொண்ணுக்காக நீ உன்னையே அழிச்சிட்டு இருக்கிறதை நினைச்சா.. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா. ட்ரூ லவ்-ன்னு ஒரு விசயம் உலகத்துல இருக்குதுன்னு உன்னைப் பார்த்தப்புறம் தான் நான் நம்புனேன். க்ரேட் டா!” – எனத் தன் போக்கில் பேசிக் கொண்டு சென்றவளைக் கண்டு ரிஷி பேந்தப் பேந்த விழித்தான்.

பாத்ரூமிலிருந்து வெளி வந்த நண்பனைக் கண்டு “அர்ஜூன்…. என்னடா இதெல்லாம்?” என்றான்.

“ஹாஹாஹா… ஐ லைக் யுவர் முழி டா”

“டேய்.. நாயே… அசிங்கமா வருது வாய்ல. நீயே இந்த லூசை சமாளி!”-என்று விட்டு அவன் வெளியே செல்ல… “ஹாஆஆஆங்க்…….???? லூ…லூசு?,ஏய்… யா..யாருடா லூசு?”-என்று பொங்கிய அனுவின் வாயைப் பொத்தி அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

கரின் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஃபேஷன் ஷோவிற்கு வருகை தந்திருந்தான் ரிஷிகார்த்திகேயன். ஃபேஷன் உலகில் முன்னணியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ப்ராண்ட் ஒன்றின் தற்போதைய கலெக்ஷன்கள் அனைத்தையும் மக்களுக்கு எடுத்துக் காட்டும் விதமாக சில முன்னணி நடிகர்,நடிகைகளும், மாடல்களும் விதவித உடைகளில்,அலங்காரங்களில் பொம்மைகளைப் போல் மேடையில் அணிவகுத்து நடந்து கொண்டிருந்தனர்.

மேடையைச் சுற்றி நான்கு வரிசையில் அமர்ந்திருந்த மனிதர்களுக்கு இடையே கையில் கற்றைக் காகிதங்களுடன் அமர்ந்திருந்தான் ரிஷி. “திஸ் ஒன் இஸ் வெரி இம்ப்ரஸிவ்… வெல் டிசைண்ட் மை கேர்ள்!”-எனத் தன் முன்னே அமர்ந்திருந்தவர் அருகே இருந்த பெண்ணிடம் தோளைத் தட்டிப் பாராட்டியதைக் கண்டபடி கையிலிருந்த காகிதங்களை நோக்கினான்.

“‘சித்தார்த் ராமகிருஷ்ணன்’”-என உச்சரித்தபடி காகிதங்களுக்கிடையே இருந்த ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தான். ஹ்ம்ம்ம்.. பெரிய கண்கள், சிரித்த முகம்! ஹேண்ட்சம்மாகத் தானிருக்கிறான்! நிச்சயம் இளம் பெண் ரசிகைகள் பலரைக் கவர்ந்து விடுவான். சந்தேகமில்லை! ஆனால்.. நடிக்கத் தெரிந்திருக்க வேண்டுமே! யோசித்தபடியே அவன் நிமிர்கையில் “ஹேய்.. இட்ஸ் சித்!”-எனப் பெண்கள் சிலர் கூச்சலிட நிமிர்ந்து மேடையை நோக்கினான் ரிஷி.

கருப்பு நிற கோட்,சூட் சகிதம் வலது கையை பேண்ட் பாக்கெட்டில் இட்டபடி அளவான சிரிப்புடன் தனது நீளக் கால்களால் எட்டு வைத்து அந்த மேடையில் நடந்து வந்தான் சித்தார்த்.

கச்சிதமான உடற்கட்டு,நல்ல உயரம்,பளீர் நிறம், வடிவான முகம் என ஒரு மாடலுக்கே உரிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருந்தான் அவன். ரிஷியின் டைரக்டர் மூளை அவனை மேலும்,கீழுமாகக் கடகடவென அளவெடுத்தது. மேடை முன்னே வந்து நின்றதும் இடது கையைத் தூக்கி ‘ஹாய்’ என்பது போல் ஐவிரல்களையும் விரித்துப் போஸ் கொடுத்து விட்டு ஒரு பளீர்ப் புன்னகையையும் வீசி விட்டுத் திரும்பி நடந்தான்.

கபிள் ஃபேண்டஸி ப்ரோக்ராமின் காஸ்ட்டிங்கிற்காக ஒரு வாரமாக ரிஷியும்,அவனது குழுவைச் சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இளமையான,இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாடர்ன் ஜோடியைத் தேடும் அவர்களது முயற்சியில் பத்தாவது ஆளாகச் சிக்கியவன் தான் இந்த சித்தார்த். வளர்ந்து வரும் மாடல்!

மக்களுக்குப் பரிட்சயமான தொலைக்காட்சி முகங்கள் சிலரை இதற்கு முன்பு ஸ்க்ரீன் டெஸ்ட் செய்து பார்த்தனர். “இதெல்லாம் சீரியல் கேஸா இருக்கேடா அர்ஜூன், நான் பண்ணப் போறது ரியாலிட்டி ஷோ டா. எனக்கு கேஸ்வல்,ஜாலியா, ரொம்பவும் அலட்டிக்காத இயல்பான ஆட்கள் வேணும்டா. இவங்கள்லாம் ஒன்னு அழறாங்க,இல்ல வில்லி மாதிரி டயலாக் பேசிக்காட்டுறாங்க. ஃப்ரஸ்ரேட்டிங்கா இருக்குடா. உனக்குப் புரியுதா நான் எதிர்பார்க்குறது?” என்றவனிடம் “ஹ்ம், சிம்பிளா சொல்லனும்னா ஓகே கண்மணி துல்கர்,நித்யா மாதிரி இரண்டு பேரைத் தேடுற?, கரெக்டா?” என்றான் அர்ஜூன்.

“எக்ஸாக்ட்லி”-என்று ரிஷி துள்ளியதும் “அதுக்கு நீ புதுசா இரண்டு பேரைத்தான் பிடிக்கனும். நம்ம ஜோடி நம்பர் ஒன் பசங்களைப் பார்க்குறியா?”

“ம்ஹ்ம் நோ டா.”

“அப்போ மாடல்ஸ்?”

“அவங்க யாருடா டெலிவிஷன்க்கு வரப் போறாங்க?”

“ஹ்ம்ம்ம்ம், டேய்.. நான் சொல்ற 2 பேரை நீ போய்ப் பாரு. இரண்டு பேரும் வளர்ந்து வரும் மாடல்ஸ். நிறைய ஆட்ஸ்ல கூட நீ பார்த்திருப்ப. ஆக்டிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்குறதா இரண்டு பேரும் சொல்லிக் கேட்டிருக்கேன். உனக்கு ஓகேன்னா.. நான் ஸ்க்ரீன் டெஸ்ட்க்கு ஏற்பாடு பண்றேன்.”- என்றவன் இருவரின் ஃபோட்டோ,பயோடேட்டாவையும் கொடுத்து ஃபேஷன் ஷோ பற்றிய விவரத்தையும் சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.

பாக்கெட்டில் வைப்ரேட் ஆகிய செல்ஃபோன் ரிஷியின் பார்வையைத் திருப்பிக் கீழே நோக்க வைத்தது. “ஹலோ..”என்றபடியே விழா நடந்து கொண்டிருந்த இடத்தை விட்டு வெளியே வந்தவன் தொடர்ந்து பேசத் தொடங்கினான்.

“ஹ்ம்ம் சம்பத் சார். நான் சித்தார்த்தோட ஷோ பார்க்க வந்தேன். எனக்கு 90% ஓகே தான் சார். ஸ்க்ரீன் டெஸ்ட் முடிச்சுட்டா டேட்ஸ் டிசைட் பண்ணிடலாம். பையன் நான் எதிர்பார்க்குற மாதிரி தான் இருக்கான்”

“ரொம்ப சந்தோசம்டா ரிஷி. இன்னும் ஒரே வாரத்துல ஷூட்டிங் தொடங்கியாகனும். அப்புறம் நீ சொன்ன அந்தப் பொண்ணு மீரா நந்தன் அவளும் ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு ஒத்துக்கிட்டா. இன்னிக்கு மதியம் 3.30 க்கு நம்ம ஆபிஸ்ல ஏற்பாடு பண்ணு”

“ஓகே சார்”-என்றவன் “ரிஷி…”என்ற சத்தம் கேட்டுத் திரும்பி நோக்கினான்.

புன்னகையுடன் நின்றிருந்த சித்தார்த் “நீங்க ரிஷி தானே?,”என்று மறுபடி வினவினான். தானும் பதிலுக்குப் புன்னகை புரிந்த ரிஷி “யெஸ்”என்று விட்டுக் கை குலுக்கினான். இருவரும் பேசியபடி நடந்து சென்று அந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்குள் நுழைந்தனர்.

“பொதுவா எங்களை மாதிரி வளர்ந்துட்டிருக்கிற ஆர்ட்டிஸ்ட் எல்லாம் தானாகத் தானே டைரக்டரைத் தேடிப் போவாங்க?,ஆனா நீங்க என்னை நேரில் பார்க்க வந்திருக்கிறது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு”

“பெருசா காரணம் எதுவுமில்லை. உங்க ரேம்ப் வாக்கைப் பார்த்துட்டு உங்களை நேர்ல மீட் பண்ணலாமா வேண்டாமான்னு டிசைட் பண்ணலாம்னு இருந்தேன்.. அவ்ளோ தான்”

“அப்போ அது தான் லெவல் ஒன் டெஸ்ட்-ஆ?”

“அஃப்கோர்ஸ்!, சரி, உங்களைப் பத்தி சொல்லுங்க சித்தார்த். நீங்க ஒரு மாடல்-ன்றதைத் தாண்டி?”-அவன் பதில் சொல்லத் தொடங்கியதும் பொறுமையாய் அவனை கவனித்தான் ரிஷி.

அவன் கையசையும் விதம், வார்த்தைகளுக்கேற்ப முகம் காட்டும் பாவனை, நிரந்தரமாகத் தேங்கி விட்டிருந்த சிரிப்பு என அத்தனையயும் குறிப்பெடுத்துக் கொண்டவன் “பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க. சினிமாவுக்கு ஏன் ட்ரை பண்ணல?”-என்று வினவினான்.

“முயற்சி பண்ணிட்டே தான் இருக்கேன். அழகான ஆண்கள் எல்லாருக்குமே வாய்ப்பு அமைந்து விடுவதில்லையே!, சரியான நேரத்துக்காகக் காத்திட்டிருக்கேன். அர்ஜூன் என்னைக் கூப்பிட்டு கபிள் ஃபேண்டஸி ப்ரோக்ராம் பத்தி சொன்னப்போ எனக்கு பிடிச்சிருந்தது.பாட்டு,டான்ஸ்ன்னு இருக்குற நம்ம ஊர் ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு பட்டது. மோர் ஓவர், இப்போல்லாம் சின்னத்திரைல இருந்து வெள்ளித்திரைக்குப் போறது தானே ஃபேஷன்?”

“ஆல் த பெஸ்ட் உங்க கனவு நினைவாக”

“தேங்க்யூ ரிஷி”

“அப்புறம், டெல் மீ ஒன் திங், ஆர் யூ மேரீட்?”

“கல்யாணம் ஆகியிருந்தா இப்படி சிரிச்சு,சிரிச்சு பேசுவேனா?”

“ஹாஹா… எனி லவ் எக்ஸ்பீரியன்ஸ்?”

“ஹ்ம்ம் பதினைந்து வயசுல இருந்து ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் 3 பேரைக் காதலிச்சிருக்கேன்.”

மீண்டும் நகைத்த ரிஷி “ஒரு பொண்ணுக் கிட்ட காதலை சொல்ற மாதிரி நடிச்சுக் காட்ட முடியுமா?” என்றான்.

சித்தார்த் தன் திறமை அனைத்தையும் வெளிப்படுத்தி காதல் வசனம் பேசி மண்டியிட்டு ரோஜாப்பூ கொடுக்கும் வரைப் பொறுமையாய்ப் பார்த்திருந்தவன் “எக்ஸலண்ட். தேங்க்ஸ் சித்தார்த். எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு. ஸ்டார்ட்டிங் ஃப்ரம் யுவர் லுக்ஸ், உங்க ஆட்டிடியூட், நடிக்குற விதம் அத்தனையும்!, இப்போதைக்கு இது போதும். போகப் போக மெருகேறிடுவீங்க. ஷூட்டிங்,டேட்ஸ் பத்தியெல்லாம் அர்ஜூன் உங்ககிட்ட பேசுவான். வில் மீட் யூ சூன் ஆன் தி செட்” என்று கூறி விட்டுக் கிளம்பினான் ரிஷி.

“டைரக்டர் சார்.. ஒரு நிமிஷம்.. என் கூட நடிக்கப் போறது யாருன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லயே?”

“எபிசோட்-1 சூட்டிங்ல நீங்களே தெரிஞ்சுப்பீங்க. அதுவரைக்கும் சஸ்பென்ஸ்”-எனக் கண்ணடித்து விட்டு சிரிப்புடன் நடந்தான் ரிஷி.

மதியம் 3.30 மணிக்கு சம்பத் கூறியபடி மீரா நந்தனின் ஸ்க்ரீன் டெஸ்ட்டிற்காக அலுவலகம் விரைந்தான் ரிஷி. நான்கு மணியளவில் அவன் கான்ஃபரண்ஸ் ஹாலில் நுழைந்த போது ஜீன்ஸ்,டீஷர்ட் சகிதம் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

“ஹாய் மீரா. சாரி,லேட்டா வந்ததுக்கு”-என்றபடியே அறைக்குள் நுழைந்தவனை எழுந்து நின்று வரவேற்றவள் “இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ளம்”-என்றாள். முந்தைய நாள் இரவு தான் அந்தப் பெண் நடித்த விளம்பரப் படங்கள் அத்தனையையும் போட்டுக் காட்டினான் அர்ஜூன். ஹமாம் சோப் விளம்பரத்தில் அம்மாவாக சேலையுடன், ஃபேர்னஸ் க்ரீமில் வெள்ளை உடையில், ஸ்டே ஃப்ரீ விளம்பரத்தில் ஜீன்ஸூடன் என அவளைக் கண்டு திருப்தியாகி விட்ட பின்பு தான் நேரில் காண ஒப்புக் கொண்டிருந்தான் அவன்.

விளம்பரத்தில் பார்த்ததை விட சிம்பிள் மேக்கப்பில் ரொம்பவும் அழகாகத் தெரிந்தாள். எஸ்.எஸ் மியூசிக்கில் வி.ஜேயாக ஒரு வருடம் பணி புரிந்ததாகக் கூறினாள். திரைப்படங்களில் ஹூரோயினுக்குத் தோழியாக நடிக்க வாய்ப்பு வருவதாகவும், தனக்கு இஷ்டமில்லையென்றும் கூறினாள். மேலும் சிறிது நேரம் அவளிடம் உரையாடி அவள் நடிப்பையும் கண்டு விட்டு அனுப்பி வைத்தான் ரிஷி.

கையை நீட்டி நெட்டி முறித்து சீட்டில் சாய்ந்து அமர்ந்தவன் மெல்லக் கண்களை மூடினான். மூடிய விழிகளின் முன்னே பயத்துடன் தன்னை நோக்கிய பதினெட்டு வயது ஹரிணியின் முகம் தோன்றி அவனைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தது.

“பாவி!, திவ்யாவாம் திவ்யா!, என்னைத் தெரியாதாம்! யாரிடம் பொய் சொல்கிறாள்!”-எனப் புலம்பியவன் அன்றைய சம்பவத்திற்குப் பிறகு நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான்.

அன்று அவனைக் கண்டதும் பயந்து ஓடியவள் அடுத்த இரண்டு நாட்கள் செட்டில் தென்படவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகுத் திடீரெனக் கண் முன்னே காட்சியளித்தவள், தானாகவே மறைந்து விட்டதைக் கண்டு ரிஷிக்கு பயம் வந்து விட்டது. அவள் மறுபடி தலைமறைவாவதற்குத் தானே காரணமாகி விட்டோமோ என்று அச்சம் கொண்டான்.

அவள் எங்கே தங்கியிருக்கிறாள்?,யாருடன் இருக்கிறாள் என எந்த விவரமும் தெரியாமால்.. எங்கே சென்று தேடுவான்?, ஆபிஸில் விசாரித்த வரையில் அவனுக்கு சரியான பதிலேதும் கிடைக்கவில்லை. “அந்தப் பொண்ணு யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை ரிஷி”என்றார்கள்.

முட்டாள்! முட்டாள்! அவளைக் காணாது அவன் திண்டாடிய பத்து வருடங்களை நினைத்துப் பார்த்திருந்தால் இப்படி அவளிடம் கோபத்துடன் நடந்து கொண்டிருந்திருப்பானா? அவனே துரத்தி விட்டான்! இனி மறுபடி எப்போது அவளைக் காணப் போகிறான்? தன் மீதே மூண்ட எரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் சுவற்றில் தலையை மோதிக் கொண்டவனை அர்ஜூன் தான் வழக்கம் போல் சமாதானப் படுத்தினான்.

அவளை எப்போது பார்த்தாய்,எப்படிப் பார்த்தாய் என்று எந்த கேள்வியும் அவன் கேட்கவே இல்லை. ஒரு வாரமாக அவள் பின்னே திரிந்து கொண்டிருப்பதை ஏன் டா என்னிடம் சொல்லவில்லையென்றும் அவன் கோபப்படவில்லை.

“நிதானம் டா ரிஷி. ஒரு முறை தவறு செய்து அவளை நீ ஓடச் செய்திருக்கிறாய். மறந்து விடாதே ”-என்று அவன் கூறிய போது ரிஷிக்கு முகத்தை எதைக் கொண்டு மறைப்பதென்று தெரியவில்லை.

“சாரிடா அர்ஜூன். அவளை முதல் நாள் செட்டில் பார்த்த போதே உன் கிட்ட நான் சொல்லியிருக்கனும்”- என்றவனின் தோளைத் தட்டி “முட்டாள்” என்று விட்டுப் போனான் அவன்.

மூன்றாம் நாள் தானே செட்டுக்கு செல்வதை நிறுத்தி விட்டான் ரிஷி. அவள் வந்து விட்டாளா,இல்லையா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தொண்டை வரை அடைத்து நின்றாலும் ‘பொறுமை,பொறுமை”எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வேலையை கவனித்தான்.

அவன் கேட்காமலேயே சம்பத்தின் மூலமாக அவள் வேலைக்குத் திரும்பி விட்ட சங்கதி அவன் காதில் எட்டியது. அதன் பின்பு நிம்மதியுடன் தன் பணிகளைத் தொடர்ந்தவன் அவளோட இணைந்து வேலை செய்யப் போகும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.