அத்தியாயம் - 6

I can’t forget you!

“சாக்கோ ப்ரௌனீஸ்” - பெசண்ட் நகர் பீச் அருகே அமைந்திருக்கும் காபி ஷாப்களில் ஓரளவு பிரபலமான கடை அது. சாக்லேட் நிறத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகின் கீழிருந்த கண்ணாடிக் கதவைத் தாண்டி உள்ளே பெரிது,பெரிதாகப் போடப்பட்டிருந்த ஷோபாக்களில் ஆங்காங்கு ஜோடியாய் சிலரும், கூட்டமாய் சிலரும் அமர்ந்திருந்தனர்.

“2 வெண்ணிலா காப்பசீனோ, 1 எஸ்ப்ரஸொ அண்ட் 1 அமேரிக்கானோ” – டேபிள் எண் நான்கில் அமர்ந்திருந்த பெண் கூறிய ஆர்டரை கவனமாகக் கையிலிருந்த சிறிய நோட்பேடில் எழுதி வைத்துக் கொண்டிருந்தாள் திவ்யஹரிணி. “ஐந்து நிமிடத்தில் கொண்டு வருகிறேன் மேடம்”எனக் கூறி விட்டு எதிரே இருந்த ஓபன் கிட்சனில் நின்றிருந்த பாரிஸ்டாவிடம் ஆர்டரைக் கூறினாள்.

அருகேயிருந்த கல்லாவில் அமர்ந்திருந்த முதியவர் தன் பேத்தியை வாஞ்சையுடன் நோக்கி “ஏன்டாம்மா டிவி,ரேடியோன்னு இருபத்திநாலு மணி நேரத்தில பாதிக்கும் மேல வேலை பார்த்துக் களைச்சுப் போய் வீட்டுக்கு வர்ற? கிடைக்குற கொஞ்ச நேரத்துல நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாமில்லையா?”-என்றார்.

“ரெஸ்ட் என்ன தாத்தா ரெஸ்ட்?, அதெல்லாம் உன்னை மாதிரி வயசானவங்களுக்குத் தான். நான் யூத் தாத்தா. வயசும்,இளமையும் இருக்கிற வரை நல்லா ஓடி உழைக்கனும்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க?”

“அதுசரி,அதுக்காக ராத்திரி,பகல் பார்க்காம உன்னையே வருத்திக்கிட்டு வேலை பார்ப்பன்னு நினைச்சா சொன்னேன்?”

“தாத்தா…. தாத்தா.. போதுமான அளவு தூங்கி, ஹெல்த்தியான உணவா சாப்பிட்டு நான் நல்லா திடமாத் தான் இருக்கேன். என்னை நம்பு. சரியா?”

“உன்னை நம்பாம நான் யாரை நம்பப் போறேன்?.எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும் தான கண்ணு?, அமெரிக்கவில் இருக்கிற உன் அம்மா,அப்பா எத்தனையோ முறை தங்களோட வந்துடுன்னு உன்னை வற்புறுத்தியும் நீ போகாம இருக்கிறது இந்தத் தாத்தாவுக்காகத் தானே?”

“ஷ்ஷ்ஷ்… ஆரம்பிச்சுட்டியா?, நீ ஏன் உன் பையன் உன்னை அமெரிக்காவுக்கு அத்தனை முறை கூப்பிட்டும் போக மறுத்துட்ட?, இந்த ஊர்,நாடு,இட்லி,சாம்பார்ன்னு எதையும் விட்டு வரமுடியாதுன்னு தானே?, அதே காரணம் தான் எனக்கும். மத்தபடி உனக்காக ஒன்னும் நான் இங்க இல்ல. சரியா?” – என்றவளிடம் சிரித்துக் கொண்டே “நம்பிட்டேன். நம்பிட்டேன்”என்றார் தாத்தா.

அவரை முறைத்தபடி பாரிஸ்டாவிடம் திரும்பியவள் “மூர்த்தி அண்ணா.. தாத்தா வேளா,வேளைக்குச் சரியா சாப்பிடுறாரான்னு கவனிச்சு என் கிட்ட ரிபோர்ட் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு. ஓகேவா?”என்றாள். அவர் “யெஸ் பாஸ்”எனத் தலையாட்டியதும் சிரித்து விட்டு “சரி தாத்தா. எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன். நாளைக்கு மார்னிங் தான் ஷூட் முடியுது. சோ இன்னிக்கு நைட் வர மாட்டேன். பாய் தாத்தா.. பாய் அண்ணா”-என்றவள் அணிந்திருந்த ஏப்ரன்,கேப்பைக் கழட்டி விட்டுத் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு விரைந்தாள்.

ஓட்டமும்,நடையுமாகச் செல்லும் பேத்தியைக் கண்ட ருத்ரனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. இரண்டு நாட்கள் வேலைக்குச் செல்லாமல் எதற்காக வீட்டிற்குள் அடைந்து கிடந்தாள்?, இரண்டாம் நாள் மாலை அவளது தோழிகள் ஆஷாவும்,ஆனந்தியும் வரும் வரை ஏதோ யோசனையிலேயே தானிருந்தாள். என்னவாயிருக்கும்?, ஹ்ம்ம்ம்ம்! பத்து வருடத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு மழையில் நனைந்த ஈர உடையுடன், தலை விரி கோலமாய் கண்களில் உணர்ச்சியற்று ஜடம் போல் வாசல் முன்பு நின்றவள்.. ஏன்,என்னவென்று காரணம் ஏதும் சொல்லாமலேயே மாறிப் போனாள். சொந்த ஊரான ஊட்டியை விட்டுக் காலி செய்து சென்னை வந்து சேர்ந்தாள்.

நடை,உடை,சிரிப்பு,கோபம் என அத்தனையையும் மாற்றிக் கொண்டாள். பெரிதாக எந்த உணர்வையும் வெளிக் காட்டுவதில்லை. இந்தப் பத்து வருடத்தில் ஒரு முறை கூட எதற்காகவும் கண்ணீர் விடவில்லை. அவ்வப்போது தூக்கத்தில் பய உணர்வை மட்டும் வெளிக்காட்டியிருக்கிறாள். மற்றபடி பதினெட்டு வயதில் புள்ளி மானாய் பாய்ந்தோடிக் கொண்டிருந்த அவளது மகிழ்ச்சி ஏதோ காரணத்தால் மறைந்து போய் விட்டது.

என்ன நடந்தது?, எதனால் இப்படி மாறினாள் எனத் தெரிந்து கொள்ள அவர் முயற்சிக்கவேயில்லை. அவளது போக்கில் அவளுக்காகவே உடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தாத்தா. என்றேனும் ஒரு நாள் எல்லாம் மாறிப் பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன்!

தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சேனல் ரெட் அலுவலகம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஹரிணியின் மனம் நேற்று சம்பத் கூறியவற்றை நினைத்துப் பார்த்தது. கபிள் ஃபேண்டஸி என்கிற புது நிகழ்ச்சி ஒன்றை டீம் D ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் அவள் கலந்து கொண்டு வேலை செய்தால் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒரு நிகழ்ச்சியில் நடப்பவற்றைத் தெரிந்து கொள்ளும் நல்ல அனுபவமாக இருக்குமென்றும் அவர் கூற, அவளும் மகிழ்ச்சியாகத் தலையாட்டினாள். சொல்லப் போனால் ஹலோ டாக்டர் நிகழ்ச்சியால் அவள் கொஞ்சம் போரடித்துத் தான் போயிருந்தாள்.

தொலைக்காட்சியில் வேலை செய்யத் தொடங்கி விட்டதால் அவள் வழங்கிக் கொண்டிருந்த இளையராஜாவின் இனியராகங்கள் ரேடியோ நிகழ்ச்சி வாரக் கடைசி நாட்களில் மட்டுமே இனி ஒளிபரப்பப்பட இருக்கிறது. சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் ரெக்கார்டிங்கிற்கு வர வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சேனல் ரெட்-உடைய பண்பலை என்பதால் இரண்டு கட்டிடங்களும் ஒரே வளாகத்தினுள் தான் இருக்கிறது. அதனால் பிரச்சனையில்லை.

வாகன நெரிசல்களுக்குள் மிதந்து ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தவள் டீம் D-ஐச் சேர்ந்த மக்கள் வேலை செய்யும் நான்காவது தளத்தை அடைந்தாள். யாரை அணுகுவது என அவள் விழித்துக் கொண்டிருந்த சமயம் “ஹாய் திவ்யா..”- என்று ஒரு பெண் குரல் ஒலித்தது.

தன் இருக்கையில் அமர்ந்தபடி நிமிர்ந்து கைக் காட்டினாள் அந்தப் பெண். “ஹாய் ரோஷினி…” என்றபடி அருகே சென்றவளிடம் “டேக் யுவர் சீட். ஹ்ம்ம், எப்படி இருக்கீங்க?, சேனல்ல வேலை பார்க்கிறது இது தான் முதல் முறை இல்லையா?” என்று வினவினாள் ரோஷினி.

“ஹ்ம்ம்,ஆமாம். கொஞ்சம் கஷ்டமா தானிருக்கு. பட் இண்ட்ரெஸ்ட்டிங்கான வேலைன்றதால கத்துக்கிட்டா பழகிடும்னு நினைக்கிறேன்.”

“ஹாஹா அது என்னவோ உண்மை தான். இன்னும் பத்து நிமிஷத்துல டைரக்டர் வந்துடுவார். இது.. எபிசோட் வைஸ் இனிஷியல் ஸ்கிர்ப்ட். படிச்சுப் பார்த்துக்கோங்க. இப்போதைக்கு ஃபர்ஸ்ட் எபிசோட் படிங்க. ஸ்க்ரிப்ட் எந்த டைம் வேணாலும் மாறும். வி வில் கீப் யூ அப்டேடட். மத்தபடி டைரக்டர் இன்ஸ்ட்ரக்ஷனை ஃபாலோ பண்ணினா போதும். அத்தோட எனி டைம் ஹெல்ப் பண்றதுக்கு நாங்க இருக்கோம்.”

“ரொம்ப தேங்க்ஸ் ரோஷினி”

“டைரக்டர் இன்னும் பத்து நிமிசத்துல வந்துடுவார். மீட்டிங் முடிச்சதும் வேலையை ஆரம்பிக்கலாம்”

“ஓகே!”

“அப்புறம், ஹேய்.. நீங்க ஆர்.ஜே-ன்னு பேசிக்கிறாங்களே எல்லாரும்? உண்மையா?, என்ன ஷோ ஹோஸ்ட் பண்றீங்க?”

“இளையராஜாவின் இனியராகங்கள்”

“வாவ்! எனக்கு ரொம்பப் பிடிச்ச ஷோ அது. ஈவன் நம்ம டைரக்டருக்கு உங்க ஷோ-ன்னா உயிர். தினம் உங்க ஷோ நடக்குற நேரம் ப்ரேக் எடுத்துட்டு மனுஷன் யெஸ் ஆயிடுவார். குட் டூ ஹேவ் யூ அரௌண்ட்.”

“ஹாஹா தேங்க்ஸ் ரோஷினி”

“ஏய்.. ரோஸ்மேரி.. யாரோட காலையிலயே மொக்கை போட்டுட்டிருக்க?” – கலாய்த்தபடி அருகே வந்தான் அர்ஜூன்.

“என் பேரு ரோஸ்மேரி இல்ல”-எனப் பல்லைக் கடித்தவள் “நம்ம டீமோட நியூ ஜாயினி திவ்யாகூட பேசிட்டிருக்கேன். திவ்யா,மீட் மிஸ்டர்.அர்ஜூன். நம்ம டீமைச் சேர்ந்த வால் முளைக்காத ஒரு குரங்கு”என்று அறிமுகம் செய்தாள்.

அர்ஜூனை அங்கு எதிர்பாராததால் திகைத்து எழுந்து நின்ற திவ்யா பதில் கூறாமல் நிற்பதைக் கண்டு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஹலோ திவ்யா” என்றான் அர்ஜூன்.

மேலும் விழி விரிய முழித்துக் கொண்டிருப்பவளைக் கண்டு “இதுக்கே ஷாக் ஆனா எப்படி?, பின்னாடி ஒருத்தன் வர்றான். அவனைப் பார்த்தா.. மயக்கம் போட்டு விழுந்துடுவ போல.!”-என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு “வெல்கம் டூ டீம் D”என்றான். சட்டெனத் தன்னை சுதாரித்துக் கொண்டு “தேங்க்ஸ்”எனத் தலையாட்டினாள் ஹரிணி.

“ஹே கைஸ்... எல்லாரும் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வாங்க. டைரக்டர் வந்தாச்சு”-என்று ஒரு குரல் கேட்கவும் பத்து பேர் கொண்ட அந்தக் குழு எழுந்து கான்பரன்ஸ் அறைக்கு விரைந்தது.

கையிலிருந்த காகிதங்களுடன் அந்த நீள டேபிளின் கடைசியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அனைவரையும் வரவேற்ற வண்ணம் அமர்ந்திருந்தான் ரிஷி. “ஹாய் ரிஷி, ஹலோ பாஸ், வணக்கம் தலைவரே, நமஸ்தே சாப்,”-என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் ஹாய் சொல்லிவிட்டு அமர்ந்தனர்.

கடைசியாக உள் நுழைந்த ஹரிணி நேரெதிரே அமர்ந்திருந்தவனைக் கண்டுத் திடுக்கிட்டுக் கதவைப் பற்றிய வண்ணம் அப்படியே நின்று விட.. நிதானமாய் நிமிர்ந்து அவளை நோக்கிய ரிஷி “உள்ளே வர்றீங்களா? இல்லை வெளியே போறீங்களா?, கதவு ஓபன்ல இருக்குறது எனக்கு டிஸ்டர்பிங்கா இருக்கு”என்றான்.

அனைவரும் தன்னையே பார்ப்பதைக் கண்டு மேலும் தடுமாறி “இ..இல்ல.. நா…நான்..” என்று அவள் வாயால் டைப் அடித்துக் கொண்டிருந்த சமயம் “உள்ளே வா திவ்யா..” என்று ஆபத்பாந்தவனாகக் குரல் கொடுத்தாள் ரோஷினி.

அதையே உந்துசக்தியாக நினைத்துக் கொண்டு “பதறாதே ஹரிணி. ஆஷா,ஆனந்தி சொன்னதெல்லாம் மறந்து போச்சா” என்று தன்னைத் தானே திட்டியபடி வந்தமர்ந்தாள்.

“டைரக்டர் சாப், இவ நம்ம டீம்ல புதுசா சேர்ந்திருக்கா. பேர் திவ்யா ரெட் எப்.எம்ல ஆர்.ஜே-வாக இருக்கா.”

“ஹ்ம்ம்,சம்பத் சொன்னார். ஹலோ.. திவ்யா..”என்று அவள்புறம் பார்த்துப் புன்னகை புரிந்தவன் “கேன் ஐ ஆஸ்க் யூ டூ இன்ட்ரோடொயூஸ் யுவர்செல்ஃப் டூ த டீம்?” – ரிஷி.

“ம்ம்?”என விழித்தவள் பின்பு ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று “ஹாய் எவ்ரிஒன், ஐம் திவ்யா”என்று ஆரம்பித்து தன்னைப் பற்றிய சில விவரங்களைக் கூறினாள்.

“ஹ்ம்ம், வேர் ஆர் யூ ஃப்ரம் பேசிக்கலி?”-ரிஷி

வெளிப்படையாகப் பல்லைக் கடித்தவள் “செ..சென்னை தான்” என்றாள்.

“ஓ!, என்ன படிச்சிருக்கீங்க?, எங்க படிச்சீங்க?”-வினோத்

“எம்.எஸ்.ஸி விஸ்காம். மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜ்”

“முகத்துக்கு என்ன க்ரீம் போடுறீங்க?”- சுதன்

“டேய்……………..”-அர்ஜூன்

“சென்னைல வீடு எங்க இருக்கு?”-ரிஷி

“அதை நீங்க ஏன் தெரிஞ்சுக்கனும்?”-கோபமாய் இடைமறித்தாள் அவள்.

அனைவரும் சற்று வியப்புடன் அவளை நோக்க நிதானத்திற்கு வந்தவள் “பெசண்ட் நகர்” என்றாள்.

“பெசண்ட் நகர்ல எங்க?”-ரோஷினி

“சா.. சாக்கோ ப்ரௌனீஸ் காஃபி ஷாப் பக்கத்துல.”

“ஹேய்… சாக்கோ ப்ரௌனீஸ் எனக்கு ரொம்பப் பிடிச்ச கடை. அங்க கிடைக்குற கேஃபே லட்டேவை அடிச்சுக்க யாராலும் முடியாது. அங்கிருக்கிற ஓனர் தாத்தா கூட ரொம்ப ஜாலி டைப்!”

“அ..அவர் என் தாத்தா தான். அந்த காஃபி ஷாப் எங்களோடது.”-என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். சட்டென நிமிர்ந்து நோக்கிய ரிஷி “தாத்தா??”என்று விழி விரித்து அர்ஜூனிடம் ஜாடை செய்தான்.

பின் “ஓகே! வெல்கம் டூ த டீம் திவ்யா. இனி வரப் போகிற நாட்கள் நிச்சயம் உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்னு நம்புறேன்”என்றவன் அவள் விருட்டென நிமிர்வதைக் கண்டு “வேலைரீதியாக”என்று முடித்தான்.

“ம்க்கும், சரி இனி வேலையைப் பற்றிப் பார்ப்போம்”

“ஆமாமா, அதான் போதுமான அளவு டீடெயில் கலெக்ட் பண்ணிட்டியே! இனி வேலையைப் பார்க்க வேண்டியது தான்!”-என்று அர்ஜூன் முணுமுணுத்தான்.

“நம்ம ப்ரோக்ராம் பத்தின இன்ட்ரொடக்ஷன்,காஸ்ட்டிங்,லொகேஷன்ஸ் எல்லாம் உங்க கையிலிருக்கிற ஸ்கிர்ப்ட்ல இருக்கு. இந்த நிகழ்ச்சில கலந்து கொள்ளப் போற சித்தார்த்,மீரா இரண்டு பேருக்கும் மக்கள் மத்தில அவ்வளவு பரிச்சயம் கிடையாது. இந்த இண்டஸ்ட்ரில அவங்க கால் பதிக்க நம்ம ப்ரோக்ராம் ஒரு நல்ல ப்ளாட்ஃபார்மா அமையும்னு நம்புறேன்”

“இதுவரைக்கும் செட்டுக்குள்ள மட்டுமே வர்க் பண்ணிட்டிருந்த நம்மள்ல சிலருக்கு இந்த அவுட் டோர் ஷூட் புது அனுபவமா இருக்கும். லொகேஷன்ஸ் எல்லாம் எபிசோட் வைஸ் மாறுபடும். சோ, நமக்கு வேலை நிறையவே இருக்கு. இன்னும் இரண்டு பேருக்கும் தன்னோட நடிக்கப் போறது யாருன்னு தெரியாது. எக்ஸ்ப்ரஸன்ஸ் எல்லாம் இயல்பா இருக்கனும்னு எதையும் நாம அவங்ககிட்ட வெளிப்படுத்தல. அடுத்த வாரத்திலிருந்து ஷூட் ஸ்டார்ட் ஆகுது. வழக்கம் போல டீம்-D-யோட டெடிகேடட் வர்க்கிங் ஸ்டைலை எதிர்பார்க்குறேன். நிச்சயம் இந்த ஷோ நம்ம எல்லாருக்கும் ஒவ்வொரு வகைல புது அனுபவமா இருக்கும். லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் த ஸ்கிரிப்ட் இன் டீடெயில்” என்று மேலும் ஒரு மணி நேரம் அனைவரிடமும் அடுத்த வாரம் தொடங்கிவிருந்த முதல் பகுதியை விவாதிக்கத் தொடங்கினான்.

கான்பரண்ஸ் அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக ஆஷாவிற்குக் கால் செய்தாள் ஹரிணி. “எங்க இருக்க?, ஹ்ம், நான் ஆஃபிஸ்ல தானிருக்கேன். கேஃபடீரியால மீட் பண்ணலாம்”என்று விட்டு விறுவிறுவென லிஃப்ட்டில் ஏறினாள்.

“ம்ஹூம், இது சரிவராது. இவனுடைய டீமில், இவனுக்குக் கீழே வேலை பார்ப்பதா?, வாய்ப்பேயில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகி விட வேண்டும். இத்தனை வருடங்களாக அவன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்ந்து விடவில்லையா?, இனியும் அப்படியே தொடர வேண்டியது தான். இந்த வேலை இல்லையென்றால்.. வேறு வேலை! அனைத்தையும் தலை முழுகி விட்டு மறுபடி ஓட வேண்டியது தான்!”

“ஹாய்டி.. ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டியா?”-என்றபடித் தோசையைத் தன் வாயில் அடைத்துக் கொண்டிருந்த ஆஷாவிடம் கடகடவெனத் தன் எண்ணங்கள் முழுதையும் கொட்டினாள் ஹரிணி.

“நான் இந்த வேலை,வீடுன்னு அத்தனையையும் மாத்தப் போறேன் ஆஷா. இது… இது ஒத்துவராதுடி. ஒரே ஆபிஸ்ல அவனைத் தினம் தினம் பார்த்துட்டு கழிக்கிற நரகமான வாழ்க்கையை எதிர்கொள்ள நான் தயாரா இல்லடி. இத்தனை வருஷம் இருந்த மாதிரி இனியும் இருந்துட்டுப் போறேன்” – எனப் பொறிந்தவளிடம் அருகேயிருந்த ஆரஞ்சு ஜூஸை நீட்டினாள் ஆஷா.

“இதைக் குடிச்சிட்டு நிதானத்துக்கு வா. அதுக்குள்ள நான் இந்த தோசையை முடிக்கிறேன்” –என்றவள் அடுத்த பத்து நிமிடம் சாப்பிட மட்டுமே வாயைத் திறந்தாள்.

பின் அலுவலக வளாகத்தில் ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்தக் கல் பெஞ்சில் அவளை அமர வைத்து விட்டுத் தானும் அமர்ந்த ஆஷா.. “எத்தனை நாள் இந்த ஓட்டத்தைத் தொடரலாம்னு ஐடியா?” என்றாள்.

நேரெதிரே தெரிந்த கட்டிடத்தை வெறித்த வண்ணம் “தெரியல” என்று பதிலளித்தாள் ஹரிணி.

“ஒரு விசயத்தோட பாதிப்பு இத்தனை வருஷமாகியும் கொஞ்சம் கூட வீரியம் குறையாம இருக்கிறது ரொம்பவும் சில பேருக்குத் தான். காலம் தான் சிறந்த மருந்துன்னு சொல்றதெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு பொருந்தவே பொருந்தாத வாக்கியம். ஆனா காலச்சக்கரம் அந்த நாளோட நின்னு போயிடலேயே.. நகர்ந்து போயிட்டே தான இருக்கு?, காலத்தோடு சேர்ந்து நம்ம முகம்,உடல், சுத்தியிருக்கிற விசயங்கள்ன்னு எத்தனையோ மாற்றமடையும் போது மனசை மட்டும் ஒரே மாதிரி வைச்சிக்கிட்டு சண்டித்தனம் செய்யுறது எந்த விதத்துல நியாயம்?, இந்தப் பத்து வருசத்துல எவ்ளோ புது விசயங்களைக் கத்துக்கிட்ட?, அதுல ஒன்னு கூட மனதைரியம்-ன்னு ஒன்னைக் கத்துக் கொடுக்கலையா உனக்கு?, ஓடி ஒளியுறது உனக்குப் புதுசில்ல. ஆனா.. ஒரு தடவை எதிர்த்து நின்னு ஃபேஸ் பண்ணிப் பாரேன். உன்னால முடியலன்னு நீ நினைக்குற சமயம்.. நீ இந்த உலகத்துல எந்த மூலைக்குப் போறதுக்கும் நான் உதவி செய்யுறேன்”

“…………………………………………..”

“உன்னையே நம்பி, உன் இஷ்டத்துக்கு ஆடுற தாத்தாவை நினைச்சுப் பாரு. இதுவரை உன் வாழ்க்கைல நீ காட்டின அத்தனை மாற்றத்துக்கும் அவர் காரணம் கேட்டதில்ல. அவருக்காகவேனும் ஒரு முறை.. இதைத் தாண்டி வர முயற்சி பண்ணுடி. ப்ளீஸ்”

“என்னால முடியும்னு எனக்குத் தோணல ஆஷா. இருட்டு, மின்னல் –ன்னு சில விசயங்கள் சில பேருக்குப் பயத்தைக் கொடுக்குதில்ல?, அந்த மாதிரி எனக்கு அவன்னா பயம்டி. ஃபோபியா மாதிரி! விலகிப் போயிட்றது தான் ஈஸியா படுது.”

“இருட்டு,மின்னல்ன்னு பயப்படுறவங்க கூட அதை ஓவர்கம் பண்ணனும்னு என்னன்னவோ முயற்சி பண்ணுவாங்க. ஆனா நீ எதுக்கும் தயாராயில்ல. இதைத் தாண்டி வந்தப்புறம் உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு ஹரிணி. எத்தனை நாள் இப்படியே வாழப் போற?, கல்யாணம்,குழந்தை,குடும்பம்ன்னு இருக்குறது தான் டி மனித வாழ்க்கை”

“எனக்கு அதெல்லாம் தேவையில்ல.”

“பல்லைக் கழட்டிடுவேன்”

“என்னைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு ஆஷா.ப்ளீஸ்”

“ஹ்ம்ம்ம்ம், நான் சொல்றதை சொல்லிட்டேன். இனி முடிவு எடுக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ எங்கேயாவது ஓடப் போறதா இருந்தா தாத்தாவை இனி நானே பார்த்துக்கிறேன். உன்னை மாதிரி ஒரு பேத்தி அந்த நல்ல மனுஷனுக்குத் தேவையில்ல” – என்று கூறி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டாள் ஆஷா.

கான்பரன்ஸ் அறையிலிருந்து அனைவரும் எழுந்து சென்றதும் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் காலரைப் பின்னுக்குத் தள்ளி ஊஃப்ஃப்ஃப் எனப் பெருமூச்சை வெளியிட்டான் ரிஷி.

“முடியலடா அர்ஜூன். சத்தியமா அவளோட ஒரு இடத்தில ஒன்னா சேர்ந்து வேலை பார்க்க முடியும்னு தோணல. அவ என்னை நிமிர்ந்து பார்க்கிற ஒவ்வொரு நொடியும் மூச்சடைக்கிற மாதிரி இருக்குடா. இத்தனை வருசமா அவளைத் தேடித் தானே நாடோடி மாதிரி திரிஞ்சேன்? இப்போ… இப்போ என் கண் முன்னாடி இருக்கிறவளை எப்படிடா கண்டுக்காம இருக்க சொல்ற?, முடியாதுடா நிச்சயம்”

“………………………….” – பதில் பேசாமல் அவனையே வெறித்தான் அர்ஜூன்.

“ஆஆஆஆஆ….. தலை வெடிக்குதுடா எனக்கு. எப்போடா எனக்கு வாய்ப்பு கொடுக்கப் போறா?, எப்போ நான் செஞ்ச தப்புக்கு அவளால நான் தண்டனை அனுபவிக்கிறது?, அவ மனசுல என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்க முடியாம தவிக்கிறது பெரிய வேதனையா இருக்குடா.”

“ரிஷி…. ரிஷி…. இத்தனை வருஷமா பொறுமையா தானே டா இருந்த?, இன்னும் கொஞ்ச நாள்.. அவ நீ சொல்றதைக் காது கொடுத்துக் கேக்குற நேரம் வரும் வரைக்கும் நிதானம் காட்ட முடியாதா?”

“இத்தனை வருஷமா இருந்த பொறுமை, இப்போ துளி அளவு கூட இல்லன்னு தோணுதுடா. எப்படிடா முடியும் என்னால?. ஒன்றரை மணி நேரத்துல ஒரு கோடி தடவையாச்சும் நான் அவ முகத்தைப் பார்த்திருப்பேன். நான் அவ கிட்ட மனசு விட்டுப் பேசனும் அர்ஜூன்”

“பேசலாம். நிச்சயம் பேசலாம். கொஞ்சம் பொறுமையா இருடா ரிஷி. மறுபடி அவளை ஓட வைச்சுடாதே”-எனத் தன் நண்பனை சமாதானம் செய்தான் அர்ஜூன்.

திட்டமிட்டது போல் அடுத்த வியாழனன்று கபிள் ஃபேண்டஸி நிகழ்ச்சியின் முதல் நாள் ஷூட்டிங் தொடங்கியது. ஆஷா அன்று திட்டிவிட்டுச் சென்றபின்பு வெகுவாக யோசித்து முடிந்த வரை தன் மனதோடு போராடுவதென முடிவெடுத்து விட்டாள். பத்து வருடத்திற்கு முன்பு அறியாப் பருவத்தில் செய்வதறியாது ஓடி விட நினைத்தாள் சரி, இப்போது படிப்பு,வேலையென தன்னை பலம் வாய்ந்தவளாக மாற்றிக் கொண்ட பின்பும் ஓட நினைத்தால் எப்படி?, முடிந்த வரை அவனை நெருங்காமல் தன்னைத் தானே அவள் காத்துக் கொள்ள வேண்டியது தான்.

இவ்வாறு முடிவு செய்து விட்டபின் தைரியமான மனநிலையுடன் வேலையைத் தொடங்கினாள். முதல் எபிசோட் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் தேவையானவற்றை அர்ஜூனுடன் இணைந்து செய்தாள். ஆனால் அர்ஜூன் எதற்காக ஒரு முறை கூட அவளைத் தெரிந்தவன் போன்று காட்டிக் கொள்ளவில்லை? இதுவும் நன்மைக்குத் தான்! இல்லையென்றால் பணிபுரியும் இடத்தில் தேவையில்லாத கேள்விகளுக்கு ஆளாக நேரிடும் என்று தீர்மானித்தாள்.

முதல் காட்சி சித்தார்த்தின் வீட்டின் முன்பு படமாக்கப்பட்டது. அடையாறு காந்தி நகரிலிருந்த அந்தத் தனி வீட்டின் முன்பிருந்த மரக்கதவைத் திறந்தபடி க்ரே நிற பேண்ட்,வெள்ளை நிற சட்டை சகிதம் சிரிப்புடன் வெளிப்பட்டான் சித்தார்த். அவன் நடந்து வருகையில் பின்னால் ஒலிக்கப்பட வேண்டிய பாட்டை ரிஷியின் மூளை ஸ்டோர் செய்து கொண்டிருந்தது. பின் அந்த வீட்டின் கார்டனில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்த சித்தார்த் கேமராவின் முன்பு பேசத் தொடங்கினான்.

“சேனல் ரெட் வியூவர்ஸ் எல்லாருக்கும் என்னோட வணக்கம். என் பெயர் சித்தார்த் ராமகிருஷ்ணன். நான் ஒரு மாடல். சில கமர்ஷியல் விளம்பரங்கள்ல நீங்க என்னைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. எஞ்சினியரிங் முடிச்சிட்டு வேலை கிடைக்காம சும்மா சுத்திட்டிருந்த என்னை ப்ரண்ட்ஸ் தான் மாடலிங் பண்ண வற்புறுத்தினாங்க.” – அவன் உரையாடுகையில் கையசைவையும்,முக அசைவையும் கேமராமேன் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அந்த நான்கு வரிக்கு ஐந்து டேக் வாங்கிக் கொண்டவன் மேலும் தொடர்ந்தான்.. “கபிள் ஃபேண்டஸி ப்ரோக்ராம் பத்தி நிறைய ப்ரமோஸ்,நியூஸ் எல்லாம் பார்த்திருப்பீங்க. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நீங்க என்னை சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்புறேன். நிச்சயம் என்னால முடிஞ்ச வரை இந்த ஷோவை எண்டர்டெயினிங்கா கொடுக்க இந்தக் க்ரியூவோட சேர்ந்து நானும் முயற்சி செய்றேன்”– அவன் முடித்ததும் மேலும் சிறிது நேரம் அவனை ஏதேதோ பேச வைத்து அவன் சிரிப்பை,அவனது முக மாறுதல்களை அழகாகப் படம் பிடித்துக் கொண்டனர்.

அதன் பின்பு எழுந்தவன் நடந்தபடியே “இந்த ப்ரோக்ராம்ல என் கூட பயணிக்கப் போகிற பொண்ணு யாருன்னு இந்த டைரக்டர் சார் இன்னும் சொல்லவேயில்ல. ஒரு வேளை எனக்கு முன்னாடியே அவங்களை பிலிம் பண்ணிட்டாங்களான்னும் தெரியல. உங்களை மாதிரியே நானும் பயங்கர ஆர்வமா இருக்கேன். ஹ்ம்ம், இப்போ எங்க போறோம் டைரக்டர் சார்?”என்று கேமராவை நோக்கி வினவினான்.

“உங்க ஜோடியை பார்க்கத் தான் போறோம்..” கேமராவின் பின்னிருந்து குரல் வந்தது. “நிஜமாவா?, எனக்கு லைட்டா உதர்ற மாதிரி இருக்கே?, ஊஃப்ஃப்ஃப்ஃப்.. பாருங்க, கையெல்லாம் சில்லுன்னு ஆயிடுச்சு” – அவன் கைகளை விரித்தை கேமரா படம் பிடித்தது.

“என் மேக்கப் களைஞ்சிடலயே, நான் இன்னிக்கு ஸ்மார்ட்டா இருக்கேனா?”-என்று அவன் கேட்ட கேள்விகள் அனைத்தையும் படம் பிடித்தபடி முன்னே நடந்து சென்றவனின் பின்னே சென்றது கேமரா.

அடுத்த காட்சி ஒரு ப்ரைவேட் பஸ்ஸினுள் நடந்தது.

“இப்போ நாங்க உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கப் போறோம். நீங்க அதுக்கு பதில் சொல்லனும்.”-கேமராவின் பின்னே கையில் காகிதத்துடன் ஹரிணி.

“ஹ்ம்ம் ஷ்யூர். ஜி,கே கொஸ்டின் ஏதும் கேக்கப் போறீங்களா?, ஹய்யோ, ஃபெயில் ஆனா திருப்பி அனுப்பிட மாட்டீங்களே?” – கேமராவை நோக்கியபடி சித்தார்த்.

“உங்களோட ஜோடி யாரா இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க?” - ஹரிணி

“ஹ்ம், இப்படி மொட்டையா கேட்டா எப்படி?, எனக்கு ஜோடியா மிராண்டா கெர் வரனும்னு ஆசைப்படுறேன். கூப்பிட்டு வருவீங்களா? ஹாஹாஹா”

“உங்க ஆசை பேராசையா இருக்கு மிஸ்டர்.சித்தார்த். எங்க பட்ஜெட்டுக்கு தமிழ்ப்பொண்ணு தான் செட் ஆச்சு. ஓகே நான் சாய்ஸஸ் தர்றேன். சினிமாத் துறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் பிரபலத்துல ஒருத்தர்னா யாரை விரும்புவீங்க?”

“ஹ்ம்ம்ம்ம் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லேன்னா ‘கயல்’ ஆனந்தி?”

“நல்ல சாய்ஸ். மாடலிங்கைச் சேர்ந்தவராயிருந்தா?”

“ஹ்ம்ம், அப்போ நிறைய சாய்ஸ் இருக்கே! ஹ்ம்ம்ம்ம்ம்ம்… சட்டுன்னு நினைவுக்கு வர்றது மீரா.. மீரா நந்தன். அவங்க தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ்”

“ஓகே!, டெலிவிஷன்ல இருந்து ஒருத்தரா இருந்தா?”

“ஹ்ம்ம், யோசிக்காம சொல்லுவேன். ஆங்கர் அனுப்ரியா.”

“அடி.. ராஸ்கல்”-மெல்ல முணுமுணுத்தான் அர்ஜூன்.

“நீங்க சொன்ன ஆட்கள்ல இருந்து ஒருத்தரே உங்களோட ஜோடியா அமைய என்னோட வாழ்த்துக்கள் சித்தார்த்”-என்று ஹரிணியின் குரல் முடித்ததும் பஸ் நின்றது.

“தேங்க்யூ”என்றபடி எழுந்தவன் “எங்கே வந்திருக்கோம்?, என் ஜோடி இங்கே தான் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்களா?” –என்றபடிக் கீழிறங்கினான்.

ஈசீஆர் ரோட்டில் அமைந்துள்ள சீ-வியூ ரெஸ்டாரண்ட் அது. பகல் வேளையில் ஜனசந்தடி குறைவாயிருந்த அந்த ஹோட்டலில் அடுத்த காட்சி படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

சித்தார்த்தின் மேக்கப் மேன் அவனை டச்-அப் செய்து கொண்டிருக்க.. ரெஸ்டாரண்ட்டின் உள்ளே படப்பிடிப்புக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. கையிலிருந்த சாண்ட்விட்சை வேகமாக வாயில் அடைத்துக் கொண்டிருந்த ரிஷி “வினோத் மீராவோட மேனேஜர்க்கு கால் பண்ணி ரெடியான்னு கேளு. இன்னும் மூணு மணி நேரத்துல அவளோட பார்ட் ஸ்டார்ட் பண்ணியாகனும்.” என்றான்.

ரெஸ்ட்டாரண்ட்டினுள் ஏற்பாடுகள் தயாரானதும் அடுத்த காட்சி தொடங்கியது. “ரெடி.. ஆக்ஷன்..” என்று ரிஷி சத்தமிட்டதும் “இப்போ நாம் ஈசீஆர்-ல இருக்கிற ரெஸ்டாரண்ட்டுக்கு வந்திருக்கோம். உள்ளே என்னோட ஜோடி இருக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல சஸ்பென்ஸ் ரிவீல் ஆயிடும். லெட்ஸ் கோ”- நடந்து கொண்டே கேமராவிடம் பேசியவன் உள்ளே நுழைந்தான்.

பெரிய எதிர்பார்ப்புடன் கதவைத்திறந்து லேசாகத் தலை நிமிர்த்தி சுற்றித் தேடியவனின் கண்களில் ஒரு பெண்ணின் பின்புறம் தெரிந்தது. தயக்கத்துடன் நடந்து சென்று முன்னே வந்தவன், எதிரில் தெரிந்த அனுப்ரியாவைக் கண்டு “வாவ்வ்வ்!”-என்றபடி இரு கைகளைச் சேர்த்துத் தலைக்குப் பின்னே வைத்து “க்ரேசி,க்ரேசி, வாவ்வ்…. ஐ ஜஸ்ட் காண்ட் பிலீவ் திஸ்” என்று சிரிக்கத் தொடங்க.. “ஹலோ சித்தார்த்..”என்று எழுந்து நின்ற அனு அவனது முகமாற்றத்தைக் கண்டுத் தானும் சிரித்தாள்.

“ரிஷி. நாயே… அனு இன்னிக்கு ஷூட்-க்கு வர்றான்னு ஏன் டா என் கிட்ட சொல்லல?, யாரைக் கேட்டு நீ அவளை வர வைச்ச?, திருட்டு ராஸ்கல்?”- என்று அடிக்குரலில் பொறுமிய அர்ஜூனிடம் “ஷ்ஷ்ஷ்ஷ்”என்று சைகை செய்தான் ரிஷி.

அருகே புரியாமல் அவனை நோக்கிய ஹரிணியைக் கண்டுத் தலையைச் சொரிந்துப் பின் எங்கோ பார்த்தபடி “அது என் ஆளு.”என்றான். உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கண்ணால் சிரித்தவளிடம் “அவனை நம்பாதே திவ்யா. நம்ம சேனல்ல இருக்குற அழகான பொண்ணுங்க அத்தனையையும் அவன் ஆளுன்னு சொல்லுவான்” என ரோஷினி கூற மேலும் முறுவலித்தாள் அவள்.

“ரோஸ்மேரி.. என்ன திமிரா?”-என்று எரிச்சலுற்ற அர்ஜூன் தன்னை மறந்து முறுவல் கொண்ட ஹரிணியை வியப்புடன் நோக்கி விட்டு மெல்லத் திரும்பி ரிஷியைப் பார்த்தான். “அதான?, மாப்ள இதெல்லாம் மிஸ் பண்ணவே மாட்டானே!” என்று விட்டுத் தோளைக் குலுக்கினான்.

“என்னால நம்பவே முடியல. என்ன பேசுறதுன்னு கூட தெரியல. நை… நைஸ் டூ மீட் யூ அனு”-என்று கைக் குலுக்கியவனிடம் தானும் கைக் குலுக்கி விட்டு எதிரே அமர்ந்தாள் அனு.

“லிட்டர்,லிட்டரா வழியுறான் பாரேன், டேய்…. உனக்கு இதை விட அழகான பொண்ணை ஏற்கனவே செட்-அப் பண்ணியாச்சுடா. அவ என் ஆளுடா.. அவளை விடுடா. இவளும் பதிலுக்கு சிரிக்கிறா பாரு.. ”-அர்ஜூனின் மனம் விடாமல் குமுறிக் கொண்டிருந்தது.

தன்னையே நோக்கியபடி ஸ்டைலாக சிரித்து நம்ப முடியாமல் தலையை இருபுறமும் ஆட்டிக் கொண்டிருந்தவனை கண்டுத் தன் கருவிழிகளை அகல விரித்து அருகேயிருந்த காக்டெயிலை வாயில் ஊற்றினாள் அனு.

“இப்போ.. இப்போ தான் உங்களை நான் முதன்முறையா இவ்ளோ பக்கத்துல பார்க்கிறேன்”-சித்தார்த்.

“ஹய்யோ, நீங்க இவ்ளோ எக்ஸைட் ஆகுற அளவுக்கு நான் பெரிய செலிப்ரிட்டி இல்ல”

“என்ன இப்டி சொல்லிட்டீங்க?, தமிழ்நாட்டுல உங்களுக்கு ரசிகர் மன்றம் இல்லாத குறை தான். அவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்க”

“ஹிஹி.. கலாய்க்கிறீங்களா?”

“நோ அனு . ஐம் சீரியஸ்.”

“ரொம்ப தேங்க்ஸ்… ஏதாவது ஆர்டர் பண்ணலாமா?, ரொம்பப் பசிக்குது”

“யா.. ஷ்யூர்… ஷ்யூர்.. பேரர்….” –என்றழைத்து இருவரும் ஆர்டர் வழங்கினர்.

“ஹ்ம் அப்புறம் சொல்லுங்க. என்ன பண்ணுறீங்க நீங்க?”

“ஹ்ம்ம், ஒரு லிவிங் டாலோட பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டிருக்கேன்”

“ஹாஹாஹா நல்லா ஃப்ளர்ட் பண்றீங்க!”

“ச்சி,ச்சி இல்லங்க. ரொம்பவும் அழகான பொண்ணுங்களை மட்டும் தான் ஃப்ளர்ட் பண்ணுவேன்”

“ஹாஹா தேங்க்யூ. மாடலிங் தவிர என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“அப்பாவோட டெக்ஸ்டைல் பிஸினஸைக் கொஞ்சம்,கொஞ்சமா கத்துக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். அப்பப்போ டிரெஸ் டிசைன் கூட பண்ணுவேன்”

“ரியலி?, எனக்கு ஒரு டிரெஸ் டிசைன் பண்ணித் தர்றீங்களா? இப்போவே?”

“இப்போவேவா?”-எனத் திகைத்தவன் “ஹாஹாஹா ஷ்யூர்”-என்று விட்டு பேப்பர்,பென்சிலுக்காகக் கை நீட்டினான். அவன் கேட்டது கொடுக்கப்பட்டதும் கடகடவென மனதில் தோன்றியதை அவன் வரையத் தொடங்க சிரிப்புடன் பேசிக் கொண்டே காகிதத்தைக் கவனித்தாள் அனு. அடுத்த அரைமணி நேரத்தில் வரைந்து முடித்து அவள் முன்பு காகிதத்தை நீட்டினான்.

“வாவ்….!!! பெண்டாஸ்ட்டிக்! நீங்க நிஜமாவே திறமையானவர் தான் சித்தார்த்! ரொம்பவும் அழகா இருக்கு ஃப்ராக் டிசைன்”

“தேங்க்யூ”-என்று தலை தாழ்த்தியவன் “நிச்சயம் ஒரு நாள் இந்த ப்ரோக்ராம் முடியுறதுக்குள்ள நான் டிசைன் பண்ணின டிரஸ்ஸை உங்களுக்குப் ப்ரசண்ட் பண்றேன்”என்றான்.

“ம்ஹ்ம்??, டிரஸ்ஸை நீங்க எனக்குக் கொடுத்தா உங்க ஜோடி கோபிச்சுக்க மாட்டாங்களா?”

“வா….வாட்?, அப்போ நீங்க இல்லையா என் ஜோடி?”

“ஹாஹாஹா.. இவ்ளோ ஹேண்ட்சம்மா இருக்கிற உங்களைப் பார்த்தா எனக்கும் கூட நடிக்கனும்னு ஆசையா இருக்கு. பட், அன்லக்கி மீ!”

“ஓஓஓஓ…. தட்ஸ் டிஸப்பாயிண்ட்டிங்”

“நோ நோ சித்தார்த்! கீப் யுவர் எக்ஸ்பெக்டேஷன்ஸ் ஹை! ஏன்னா ரொம்ப ரொம்ப அழகான ஒரு க்யூட் ஏஞ்சல் உங்களோட ஜோடியா வரக் காத்துட்டிருக்காங்க”

“ஆஆஆஆஆ…….!, ஏன் இவ்ளோ சஸ்பென்ஸ்?, இதெல்லாம் ஓவர்”

“ஹாஹாஹா…. ஓகே! நான் வேணா ஒரு க்ளூ கொடுத்துட்டுப் போறேன். உங்க ஜோடியும் உங்களோட துறையைச் சேர்ந்தவங்க தான்”

“யூ மீன் மாடலிங்?”

“யெஸ். உங்களோட பேசிப் பார்த்தப்புறம் ஹானஸ்ட்டா சொல்றேன். நிச்சயம் இந்த ஷோ பெரிய அளவுல மக்கள் மத்தில உங்களைக் கொண்டு சேர்க்கப் போகுது. நாளைக்கு ஒரு பெரிய லெவல்க்கு ரீச் ஆனதும் உங்களோட ஜோடியா ஒரு 2 மணி நேரம் ஸ்பெண்ட் பண்ணின இந்த நிமிசங்களை நினைச்சுப் பார்த்து நான் நிச்சயம் பெருமைப் படுவேன்னு நம்புறேன். ஆல் த வெரி பெஸ்ட் சித்தார்த். கவலைப்படாதீங்க. நீங்க அடுத்ததா மீட் பண்ணப் போறது உங்க ஜோடியைத் தான். சோ நோ மோர் டிஸப்பாயிண்ட்மெண்ட்!”-எனக் கூறி விட்டு சிரிப்புடன் எழுந்து கேமராவின் முன்பு கைக் காட்டி விட்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினாள் அனு.

“வாவ்!, தட் வாஸ் வண்டர்புல்! அனுப்ரியா என்னோட பேவரிட் ஆங்கர். அவங்க என்னோட ஜோடி இல்லன்றது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும் இவ்ளோ டைம் ஸ்பெண்ட் பண்ண முடிஞ்சது ரொம்ப ஹேப்பியா இருக்கு. தேங்க்யூ ஃபார் கமிங் அனு. தேங்க்ஸ் அ லாட்”-என்று அவன் முடித்ததும் ப்ரேக் விடப் பட்டது. அடுத்த ஒரு மணி நேரம் சாப்பாட்டிற்கென கழிய… அடுத்து அனைவரும் மீரா இருக்குமிடத்தை நோக்கிச் சென்றனர்.

நகரின் மிகப்பெரிய நூலகம் ஒன்றில் மீரா நந்தனின் பகுதி படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நீலமும்,வெள்ளையும் கலந்த பாவாடையும்,அதற்கேற்றவாறு நீல நிற சட்டையும் அணிந்திருந்தாள். மிதமான மேக்கப்பில் முகம் மிளிர அவள் கண்களையும்,உதடுகளையும் கேமரா கச்சிதமாகப் பதிவு செய்தது.

“வணக்கம் நான் மீரா நந்தன்”-எனத் தொடங்கியவள் தன்னைப் பற்றிய அறிமுகத்தை முடித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தாள். “என்னோட ஜோடியை நான் இப்போ மீட் பண்ணப் போறதா சொல்லியிருக்காங்க. கொஞ்சம் எக்ஸைட்மெண்ட்,கொஞ்சம் பயம்னு மிக்ஸ்ட் ஃபீலிங்கா இருக்கு. அவருக்குப் பிடிச்ச இடத்துல மீட் பண்ணனும்னு நான் முடிவு பண்ணினப்போ.. டைரக்டர் என் கிட்ட அவருக்கு பிடிச்ச விசயங்கள் பத்தின லிஸ்ட் கொடுத்தார். அதுல புக்ஸ் படிக்க விருப்பம்னு இருந்தது. அதனால் தான் நான் லைப்ரரியைத் தேர்ந்தெடுத்தேன். ஏன்னா எனக்கும் புத்தகம் வாசிக்கப் பிடிக்கும்” – என்று அவள் லைப்ரரியை நோக்கி நடப்பதை படம் பிடித்துக் கட் என்றான் ரிஷி.

“ரோஸஸ் ரெடியா?, அந்தக் குழந்தைகளை வெயில் படாத இடத்துல நிற்க வைங்களேன்”-ரிஷி கத்தத் தொடங்கியதும் “யெஸ் பாஸ்”-என்று சிகப்பு நிற ரோஜாப் பூக்களுடன் முன்னே வந்து நின்றாள் ஹரிணி.

“யாருக்கு இந்த ரோஜாப்பூ?, எனக்கா?”

“இ… இல்ல.. இல்ல.. குழந்தைங்க கிட்ட கொடுக்கிறதுக்கு”

“அப்போ ஏன் இப்படியே நிக்கிற?, சீக்கிரம் கொடு. அடுத்து ஷாட் இன்னும் பத்து நிமிஷத்துல தொடங்கனும்.”

“யெ…யெஸ் பாஸ்…”

“ஹேய்… நில்லு. பஞ்ச் ஆஃப் ரோஸஸ் கேட்டிருந்தேனே?, எங்க?”

“அ..அதோ அங்கே இருக்கு..”

“நான் கேட்டது வைட் கலர் ரோஸஸ் திவ்யா”

“வை…வைட் கலர்…. ந..நல்லா இருக்காதுன்னு தோணுச்சு. அதா……..ன்….”

“நல்லா இருக்காதுன்னு தோணுச்சா?, இங்க நீ டைரக்டரா, நான் டைரக்டரா?, சொல்றதை மட்டும் செய்யாம என்ன இது அதிகப் பிரசங்கித்தனம்?”

“அ…அது வ…..வந்து….”

“ஷ்ஷ்ஷ்….. ஆரம்பிச்சுட்டா… இப்போ தான் பேசக் கத்துட்டிருக்கியா?, ஏன் ஒவ்வொரு வார்த்தைக்கும் டைப் அடிக்கிற?”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை”-ரோஷத்துடன் பட்டென பதிலளித்தாள்.

“ஹ்ம், குட். இதே ரோஷத்தோட போய் ரோஸஸை மாத்திட்டு வா..”

“முடியாது.”

“ஹ்ம்???”

“எ..எந்த ஊர்ல பொண்ணும்,பையனும் வெள்ளை ரோஸ் கொடுத்துக்கிறாங்க?, இங்க என்ன சமாதிக்கா பூ வைக்கிறோம்? வெள்ளையா வைக்கிறதுக்கு?, இந்த ப்ரோக்ராமுக்கு, இந்த சிச்சுவேஷனுக்கு ரெட் ரோஸஸ் தான் பொருத்தமா இருக்கும்”

ஆ-வென வாயைப் பிளந்தபடி அவளை நோக்கிய ரிஷி பின் தொண்டையைக் கனைத்து “டைரக்டரை எதிர்த்துப் பேசுற அளவுக்கு நீங்க இந்த செட்ல வளர்ந்துட்டீங்களோ!”-என்றபடி அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் காலரைப் பற்றினான்.

சட்டென அவன் கையை விலக்கி விட்டுத் தடுமாறி பொத்தெனக் கீழே விழுந்தாள் ஹரிணி. “ஹேய்.. ஹேய்.. கேர்ஃபுல்….”எனக் கைக் கொடுக்க வந்தவனைக் கண்டு மேலும் இரண்டடி பின் சென்றவள் எழுந்து நின்று தூசு தட்டி விட்டு அவன் முகம் பாராமல் “நான் போய் ரோஸஸை மாத்திட்டு வர்றேன்”-எனச் சென்று விட்டாள்.

சுற்றியிருந்த அனைவரும் அவர்களையே நோக்கி விட்டுப் பின் வேலையைத் தொடர.. “ஹேய்…. திவி… மூட் அவுட் ஆகாத. பொதுவா செட்ல தப்பு பண்றவங்களைக் காலரைப் பிடிச்சு இழுத்துத் தான் திட்டுவார் ரிஷி. என்ன இதுவரைக்கும் எந்தப் பொண்ணுக்கிட்டயும் அப்படி நடந்துக்கிட்டதில்லை. இது தான் முதல் முறை. பட், நீ இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத. நெக்ஸ்ட் டைம் அவர் சொன்னதை மட்டும் செய்”-என ரோஷினி அறிவுரை வழங்கினாள்.

ஹரிணி வெள்ளை ரோஜாக்களுடன் திரும்பிய போது ஷூட்டிங் ஆரம்பமாகியிருந்தது. “ஹேய் திவி… நான் உனக்கு நிறைய தடவை கால் பண்ணினேன். ரெட் ரோஸ் பஞ்ச்சே இருக்கட்டும்னு டைரக்டர் சாப் சொல்லிட்டார். தெரியுமா?”என்ற ரோஷினியிடம் “ஓ”என்று விட்டு உள்ளே புகைந்தாள் ஹரிணி.

தே நேரம் லைப்ரரி வாசலை அடைந்திருந்த சித்தார்த்திடம் வெள்ளை ஃப்ராக் அணிந்த ஐந்து குழந்தைகள் ஆளுக்கொரு சிகப்பு ரோஜாவை நீட்டி அவன் கன்னத்தை எச்சில் படுத்திக் கொண்டிருந்தனர்.

“மெனி தேங்க்ஸ் லிட்டில் ஏஞ்சல்ஸ்.. பட், யார் என் கிட்ட இந்தப் பூக்களைக் கொடுக்கச் சொன்னா?”

“அக்கா….”-கோரஸாய்க் கூறினர்.

“அக்கா பேர் என்ன?”

“பேர்… பேர்….. அக்கா பேரைச் சொல்லலியே”-என்று அவர்கள் கையை விரித்ததும் சிரித்தவன் “இட்ஸ் ஓகே!, தேங்க்ஸ் அ லாட் ஃபார் திஸ் க்யூட்டீஸ்”-என்றவன் அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டு ஐந்து ரோஜாப்பூக்களை ஏந்தியபடி உள்ளே சென்றான்.

“சோ?, இட்ஸ் அ லைப்ரரி?, எனக்கு ரொம்பவும் பிடிச்ச இடம். ஏன்னா எனக்கு புக்ஸ்ன்னா ரொம்பப் பிடிக்கும்.”என்றவன் புத்தகங்களைப் பார்வையிடத் தொடங்கினான். கேமரா தொடர்ந்து அவனைப் படம் பிடித்தது.

சிறிது நேரத்தில் கையில் பூங்கொத்துடன் தேவதையாக உள்ளே நுழைந்தாள் மீரா. புத்தகங்களைப் பார்வையிட்டபடி கீழுதட்டைக் கடித்துக் கொண்டு திரும்பியவன் மீராவைக் கண்டு விழி விரித்து “ஓஓஓஓஓஓ” என்றான். பின் சிரிப்புடன் கையைக் கட்டிக் கொண்டு வலது கையால் தலை முடியைக் கோதிக் கொண்டுத் தன்னை நோக்கி நடந்து வருபவளை ஏறிட்டான். அவனைக் கண்டதும் தானும் “ஓ!, இட்ஸ் ஹிம்!”எனச் சிரித்தவள் தயக்கத்துடன் நடந்து வந்தாள்.

“திஸ் இஸ் ஃபார் யூ….”- என்று அவள் நீட்டியப் பூக்களை வாங்கிக் கொண்டவன்.. “நானும் கொடுக்கனுமே!”என்றபடி பாக்கெட்டிலிருந்து பெரிய சாக்லேட் ஒன்றைக் கொடுத்தான்.

“சா…சாரி மெல்ட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்”

“ஹாஹாஹா… பரவாயில்லை”

“வெளியே போய் பேசலாமா?, படிக்கிறவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்”

“ஷ்யூர்”- வெளியே வந்து மரத்தடியில்.. புல்தரையில் அமர்ந்த இருவரும் அடுத்த ஐந்து நிமிடங்களும் ஆளுக்கொரு புறம் பார்த்து விடாமல் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“ஃபார்மலா கூட இன்னும் இன்ட்ரொடியூஸ் பண்ணிக்கல பாருங்க.. ஐம் சித்தார்த்”

“ஐம் மீரா”

“என்னைத் தெரியும் தானே உங்களுக்கு?, ஏன்னா உங்க அளவுக்கு நான் மாடலிங்ல பிக் ஷாட் இல்ல”

“அய்யோடா.. மாடலிங்ல உங்களைத்தெரியாதவங்க தான் யாருமேயில்லன்னு நான் சொல்லனும்”

“ஹ்ம்ம், உங்க வாயால இதைக் கேக்குறது எனக்குப் பெருமையா தான் இருக்கு,”

“அப்புறம் சொல்லுங்க. என்னைப் பார்த்ததும் டிஸப்பாயிண்ட் ஆனீங்களா?”

“அய்யோ ஏன் அப்படி சொல்றீங்க?,இவ்ளோ அழகான பொண்ணைப் பார்த்ததும் யார் ஏமாற்றமடைவா?, ஐ ஃபெல்ட் லக்கி இன்ஃபேக்ட். நீ… நீங்க?”

“ஹ்ம்ம், நானும் ஹேப்பியா தான் ஃபீல் பண்ணினேன். அட்லீஸ்ட் ஒரே இண்டஸ்ட்ரீல இருக்கிற ஆள் கிடைச்சாச்சேன்னு”

“அப்போ நான் ஹேண்ட்சம்ன்ற ஒரு வார்த்தையை நீங்க கடைசி வரை சொல்ல மாட்டீங்க?”

“ஹாஹாஹா…. ஹேண்ட்சம் தான் நீங்க! ரொம்பவே!”-என்று அவள் வெட்கத்துடன் சொல்லிச் சிரித்ததைக் கேமரா வழி கண்ட ஹரிணிக்கு நினைவு பின்னோக்கி சென்றது.

லைப்ரரி, மரத்தடி, புல்வெளி! அன்றும் கூட.. இதே போல ஒரு இடத்தில் தான் அவனைச் சந்தித்தாள் அவள். இடது கையில் பூங்கொத்துடன் செல்போனில் பேசியபடி தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனிடம் அவள் “எக்ஸ்யூஸ் மீ…” என்ற போது…. சட்டெனத் திரும்பிய பத்தொன்பது வயது ரிஷியின் முகம் அவள் கண் முன் தோன்றி உடலைச் சில்லிடச் செய்தது. மெல்லத் திரும்பி அவள் தன்னையறியாது அவனை நோக்கிய போது….. அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.