அத்தியாயம் - 7

I’m happy to see you again!

11.08.2005. உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.

ன்னம்மா ஹரிணி.. ஸ்கூல் லீவா?, கடைப்பக்கமெல்லாம் வர்றியே?, உன் தாத்தா இரண்டு நாளா வாக்கிங் வராததுக்கான காரணம் நீ தானா?” – தன் இல்லத்திற்கு அருகிலிருக்கும் ஃப்ளாரிஸ்ட் ஷாப் ஒன்றிற்கு வருகை தந்திருந்த பதினேழு வயது ஹரிணியிடம் கடைக்காரர் மோசஸ் வாயாடிக் கொண்டிருந்தார்.

“ஆமா அண்ணா. ஸ்டடி ஹாலி டேஸ் விட்டாச்சு. அதான் வீட்டுக்கு வந்திருக்கேன். அதை சாக்கா வைச்சிக்கிட்டு தாத்தா வாக்கிங்கைக் கட் அடிக்கிறாரா?, போய் வைச்சிக்கிறேன்.”-என்றபடியே அங்கிருந்த பூக்களைக் கைகளால் வருடியபடி சுற்றி நோக்கிக் கொண்டிருந்த ஹரிணி முட்டி வரை நீண்ட ஸ்கர்ட்டும், முழங்கை வரைக் கை வைத்த சட்டையும் அணிந்திருந்தாள். இடுப்புக்குக் கீழே அலை,அலையாக தொங்கிக் கொண்டிருந்த முடியும்,அவளது பெரிய கண்களும் காண்பவர் அனைவரையும் “ஏஞ்சல்…” எனத் திகைத்த வைத்தது.

தனக்குப் பிடித்த சிகப்பு நிற ரோஜாப் பூங்கொத்தை எடுத்துக் கொண்டவள் “அண்ணா.. நான் இதை எடுத்துக்கிறேன். எவ்ளோ ஆச்சு?”-என்று வினவினாள்.

“650-ம்மா. யாருக்கும்மா இவ்ளோ பெரிய பொக்கே?”

“என் ஃப்ரண்ட் ஆஷா இருக்கால்ல?. அவளுக்கு இன்னிக்கு பர்த்டே. அவளுக்காகத் தான் வாங்குறேன். இந்தாங்க காசு. நான் வரேன் அண்ணா” –என்றபடி வெளியே நிறுத்தப்பட்டிருந்தத் தன் சைக்கிளை நோக்கிச் சென்றாள். கைப்பையிலிருந்தத் தனது சோனி-NW-E507 வாக்மேனை ஆன் செய்து ஹெட்செட்டைக் காதில் செருகிக் கொண்டு சைக்கிளில் மின்னலாய்ப் பறந்தாள்.

“மயிலறகே.. மயிலிறகே….. வருடுகிறாய் மெல்ல…

மழை நிலவே.. மழை நிலவே… விழியில் எல்லாம் உன் உலா…”

காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு மெலிதாய் அவள் உதட்டோரத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. என்றும் போல அன்றும் கூட ஊட்டியின் அழகு அவளைப் பெரிதாய்க் கவர்ந்தது. அனைவரையும் போல் ஊட்டி என்றால் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ என்றதோடு நின்று விடாமல் அந்த அழகு மலைத்தொடர் தனக்கு சொந்த ஊராக அமைந்து விட்டதை எண்ணி அன்றும் பெருமை கொண்டாள். “ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்”- காற்றில் தான் எத்தனை குளுமை,என்னவொரு வாசம்?, மரங்களையெல்லாம் அழித்து விட்டு வாகனப் புகையை சுவாசித்துக் கொண்டு வாழும் நகர மக்கள் சாபத்திற்கு ஆளானவர்கள் தான்!

கடவுளே!, இன்று போல என்றும் இந்த மலையின் அழகையும், குளிரையும் என் வாழ்வின் இறுதி மூச்சு வரை அனுபவிக்கும் எனது பேராசையை எப்படியேனும் நிறைவேற்றி விடப்பா!! எங்கே!, இன்று காலை கூட அமெரிக்காவிலிருக்கும் அம்மாவுடன் பயங்கர சண்டை! அவளது தம்பியைப் போல் அவளும் அமெரிக்காவில் தான் படிக்க வேண்டுமாம். உடன் பிறந்த தம்பி தான் ஆனாலும், அவனுடன் நெருங்குவதற்கு அவளுக்குச் சற்று சிரமமாகத் தான் உள்ளது.

ஆமாம், பின்னே!, இவளுக்குக் காரமான சிக்கன் பிரியாணி என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால் அவன் காரத்தை சுவைத்தாலே ஷ்ஷ்ஷ்ஷ் என்று நான்கு டம்ளர் தண்ணீர் குடிக்கிறான். டின் களில் அடைக்கப்பட்ட சிக்கனையும், தக்காளிச் சாறு கலந்த பீன்ஸையும் தின்கிறான். அவன் விளையாடும் விளையாட்டும்,அவனுக்கு விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அவளுக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை. இரண்டாண்டு ஆண்டுகள் வித்தியாசத்திலிருக்கும் தம்பியிடம் என்னன்னவோ பேசலாம் தான். ஆனால் அவனோடு அவளால் கடைசி வரை ஒன்ற முடியவில்லை. அதே போலத் தான் அப்பாவிடமும். அவள் பிறந்ததிலிருந்து வருடத்திற்கொரு முறை தான் இந்தியா வருகிறார் அப்பா. மகளே என்று ஒரு முறை கூட வாரி அணைத்துக் கொண்டதில்லை.

ஆனால் அவள் அம்மா அப்படியல்ல. கண்ணே,மணியே என்று கொஞ்சா விடினும் வரும் போதெல்லாம் அக்கறையாகப் பார்த்துக் கொள்கிறாள். இருந்தாலும் ஏனோ…. அவளுக்குத் தாத்தாவை விட்டுச் செல்ல மனதில்லை. நான்கு வருடத்திற்கு முன்பு வரை பாட்டியும்! அவள் சென்ற பிறகு அன்னை,தந்தை அனைத்துமே தாத்தா தான்!

தாத்தா ருத்ரன் – ஊட்டியின் பல ஏலத்தோட்டங்களுக்கும், பழத்தோட்டங்களுக்கும் சொந்தக்காரர். இந்தியா முழுதும் அதனை ஏற்றுமதி செய்யும் பெரும்பணக்காரர். அவரது மகன் அதாவது ஹரிணியின் அப்பா மேற்படிப்பு படித்ததெல்லாம் அமெரிக்காவில் அங்கேயே வேலையைத் தொடர்ந்தவர் புதிதாக கம்பெனி ஒன்றைத் தொடங்கி அங்கேயே செட்டில் ஆகி விட்டார். குடும்பத்தில் பணத்திற்குப் பஞ்சமில்லை.

ஊட்டியின் பிரபலமான இண்டர்நேஷனல் ஸ்கூல் ஒன்றில் தான் ஹரிணி படித்துக் கொண்டிருக்கிறாள்.உள்ளூர் தான் என்றாலும் அவளது படிப்பை மனதிற்கொண்டு பள்ளியின் டார்மிட்ரியில் தங்க வைத்திருந்தார் தாத்தா. விடுமுறை நாட்களில் மட்டும் தவறாமல் வீட்டிற்கு வந்து தாத்தாவுக்குத் தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.

செல்கிற வழியிலிருக்கும் நூலகத்தில் தாத்தா கொடுத்த புத்தகத்தை ரிடர்ன் செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைவு படுத்திக் கொண்டு மிதிவண்டியை மிதித்தாள். நூலகத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு பூங்கொத்துடன் உள்ளே சென்றவள் புத்தகத்தை திருப்பியளித்துக் கையெழுத்திட்டாள்.

பின் தாத்தா கேட்டனுப்பிய கல்கியின் புத்தகங்கள் சிலவற்றை எடுத்துச் செல்லலாம் என்றெண்ணிக் கையிலிருந்த பூங்கொத்தை அருகேயிருந்த மேஜையில் வைத்து விட்டு உள்ளே சென்றாள். புத்தகங்களைப் பார்வையிட்டபடி வலம் வந்தவள் நேரம் போவது தெரியாமல் மூழ்கிவிட, திடீரெனக் கைப்பையில் ஒலிக்கத் தொடங்கிய செல்ஃபோனை எடுத்து நோக்கினாள்.

ஆண்டவா! வந்த வேலைய மறந்து விட்டு இரண்டு மணி நேரத்தை இப்படிப் போக்கி விட்டேனே! ஆஷா கெட்ட வார்த்தையில் திட்டப் போகிறாள் என்று புலம்பிக் கொண்டே தனது பிளாக்பெர்ரி 7100-ஐ கைப்பைக்குள் போட்டுக் கொண்டு விறுவிறுவென வெளியேறினாள், மேஜையில் வைத்த பூங்கொத்தை மறந்து விட்டு!

ரிணியின் செல்போன் கொடுத்த சத்தத்தில் பக்கத்து புத்தக அடுக்கில் நின்று கொண்டிருந்த ரிஷிகார்த்தியேகன் புருவத்தைச் சுருக்கி எரிச்சலுடன் எட்டிப் பார்த்தான். நூலகத்தில் செல்போன் உபயோகிக்கக் கூடாதென்கிற பொது அறிவு கூட இல்லாமல் எதற்காகத் தான் உள்ளே வருகிறார்களோ தெரியவில்லை!- என்று முணுமுணுத்தவன் விறுவிறுவெனத் தன்னைக் கடந்து செல்பவளின் பின்புறத்தை நோக்கி விட்டுக் கையிலிருந்தப் புத்தகத்தில் பார்வையை செலுத்தினான்.

அடுத்த ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பில் ஈடுபட்டிருந்தவன் நூலகம் பூட்டப்படுவதற்கான நேரமாகி விட்டதை உணர்ந்து எழுந்து சென்றான். உள்ளே வேறு யாரும் இருக்கிறார்களா எனப் பார்வையிட வந்த நூலகர் மேஜையிலிருந்தப் பூங்கொத்தைக் கண்டு “தம்பி, இது உங்களுடையதா?”என்றார். அவன் தன்னுடையதில்லை என்றதும் நினைவு வந்தவராய் “செல்ஃபோன் வைச்சிருந்த பொண்ணு கொண்டு வந்தது போல. எப்படியும் இதைத் திரும்ப எடுக்க வந்தாலும் வரலாம். தம்பி, நீங்க ஒரு பத்து நிமிஷம் இருந்து அந்தப் பொண்ணு வந்தா கொடுக்க முடியுமா?, நான் லைப்ரரியைப் பூட்டிட்டு சீக்கிரம் வீட்டுக்குப் போகனும். அதனால தான்”என்றதும் சரியெனத் தலையாட்டினான்.

பூங்கொத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றவன் அங்கிருந்த மரத்தடிப் புல்வெளியில் நின்று கொண்டு எதிரில் தெரிந்த பனி சூழ்ந்த மலையை வெறித்தான். குளிர்க்காற்று விர்,விர்ரென அடித்து காது மடலை சிவக்கச் செய்ய.. ஒரு கையைப் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி ஊஃப்-என ஊதினான். வாயிலிருந்த கிளம்பிய புகையைக் கண்டு எரிச்சலுற்றவன் “அடிக்கிற குளிர்ல இப்படி நிற்க வைச்சிட்டாளே! அழகா பொக்கே வாங்க மட்டும் தெரியுது! கீழே வைச்சதை எடுத்துட்டுப் போகத் தெரியாதா?, அப்படி என்ன மறதி! இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்”என்று திட்டியபடி நின்று கொண்டிருந்தான்.

புலம்பல்களுக்கு நடுவில் பாக்கெட்டில் வைப்ரேட் ஆகிய செல்போனை எடுத்துக் காதில் வைத்தவன் “ஹலோ”என்றான்.

“எங்கேடா இருக்க?” – எதிர்ப்புறக் குரல்.

“இன்னும் சாகல. உயிரோட தான் இருக்கேன்.”

“அடிச்சுப் பல்லைக் கழட்டிடுவேன்.

“ஆமா. பல் மட்டும் தான் விட்டுப் போச்சு. மத்தபடி என் உடம்புல எல்லாப் பகுதியும் நீங்க அடிச்ச அடியில கழண்டு போய் தான் இருக்கு.”

“இப்படி அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்கிறதை எப்போ தான் விடப் போற?”

“எது அதிகப்பிரசங்கித்தனம்?, என்னைப் பெத்த அப்பன் தினம் நைட் ஒருத்திய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறதைத் தப்புன்னு சொல்லி ஆத்திரப்படுறது அதிகப்பிரசங்கித்தனமா?”

“பெரியவங்க விசயத்துல தலையிடுற அளவுக்கு நீ வளர்ந்துடல”

“இன்னும் ஆறு மாசத்துல ஓட்டு போடுற வயசு வந்துடும் எனக்கு. அப்போ நான் பெரிய மனுஷன் தான்னு ஊரே சொல்லும்.”

“உன் கோபமும்,ஆத்திரமும் எதையும் மாத்தப் போறதில்ல”

“ஆமா, எதையும் மாத்த முடியாம தான என் அம்மா தன்னையே அழிச்சுக்கிட்டாங்க?”

“ரிஷி, உன் அம்மா செத்துப் போனதுக்கு நான் காரணமில்ல.”

“ஷட் அப். நான் உங்களோட பேச விரும்பல. இன்னொரு முறை என்னை நீங்க காண்டாக்ட் பண்ணீங்கன்னா இந்த நம்பரையும் கூட மாத்திடுவேன்.”

“சரி, வீட்டுக்கு வராம ஃபார்ம் ஹவுஸ்ல எவ்ளோ நாள் தங்குறதா உத்தேசம்?”

“என் அம்மா இல்லாத வீடு வீடே இல்ல என்னைப் பொறுத்தவரைக்கும்”

“ஷ்ஷ்ஷ் ரிஷி, உன் அம்மாவை நீ எப்போ தான் மறக்கப் போற?, யு நோ, நானும் காமினியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவ உனக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பா. ட்ரஸ்ட் மீ.”

அடுத்து அவர் கூறும் எதையும் கேட்க விரும்பாமல் கட் செய்தவன் காதருகேயிருந்த செல்போனை எடுக்கக் கூடத் தோன்றாமல் ஆத்திரம் தலைக்கேற சிவந்த கண்களுடன் வெறி பிடித்தவன் போன்று நின்றிருந்த சமயம் பின்னால் “எக்ஸ்யூஸ்மீ” என்ற குரல் ஒலித்தது.

சட்டெனத் திரும்பியவன் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டுத் திகைத்த ஹரிணி “சா..சாரி..” என்றாள். பின் அவன் தன் முகத்தை வேறு புறம் திருப்பித் தன்னை சமன் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டு “ஃபோ…ஃபோன் பேசிட்டிருந்தீங்க போல. தெ…தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று அவசரமாய்க் கூறினாள்.

“ம்க்கும்”-என்றபடி அவளை நிமிர்ந்து நோக்கியவனின் விழிகள் பெரிதாய் விரிந்துப் பின் புன்னகையையும், குறும்பையும் நிறைத்துக் கொள்ள.. அதை மறைக்க முயன்றபடி “யெஸ்…”என்றான்.

“உ.. உங்க கையிலிருக்கிற பொ… பொக்கே என்னுடையது, லைப்ரரில மறந்து வைச்சிட்டேன். லைப்ரரி பூ..பூட்டியிருக்கிறதைப் பார்த்து பயந்தே போயிட்டேன். பட், தேங்க் காட்! பொக்கே உங்க கிட்ட இருக்கு. ரொ..ரொம்ப தேங்க்ஸ்” – என்றபடி பொக்கேவை வாங்கக் கை நீட்டினாள்.

நிதானமாய் பூங்கொத்தைப் பார்வையிட்டவன் “யாருக்கு இந்த பொக்கே?”என்றான்.

“ஹ்ம்??”-அதைத் தெரிஞ்சுக்கிட்டு இவன் என்னப் பண்ணப் போறான் என்று எண்ணமிட்டவள் “எ..என் ப்ரண்ட்க்கு”என்றாள்.

“பாய் ப்ரண்டா?”

எரிச்சலுடன் அவனை சட்டென நிமிர்ந்து நோக்கியவள் “என் ப்ரண்ட் ஆஷாவுக்கு இன்னிக்கு பர்த்டே. அவளுக்காக வாங்கின பொக்கே இது. போற வழியில தான லைப்ரரி இருக்கு? இந்த புக்ஸை ரிடர்ன் பண்ணிடுன்னு என் தாத்தா என் கிட்ட இரண்டு புக் கொடுத்தார். ரிடர்ன் பண்ணிட்டு அவர் கேட்ட இன்னொரு புக்கை எடுத்த கேப்ல இந்த பொக்கேவை லைப்ரரிலயே மறந்து வைச்சுட்டேன். “என்று மூச்சு விடாமல் கூறி விட்டுப் “போதுமா?” என்பது போல் அவனை ஏறிட்டாள்.

“ஓஹோ!, ஹ்ம்ம், ஆஷா வீடு இங்கிருந்து இருபது நிமிஷம், போக வர 40 நிமிஷம்ன்னு வைச்சிக்கிட்டாலும், ஹ்ம்ம், சரி வர்லையே! நீ கிளம்பினப்போ மணி 5. இப்போ 6.30. அப்டின்னா நீ பொக்கேவை இங்கே விட்டதையே மறந்து 30 நிமிஷத்துக்கும் மேல ஆஷா,ஆனந்தி கூட வாயடிச்சிட்டு இருந்துருக்க. என்ன?”

ஆமாம்!-என்பது போல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு லேசாகத் தலை குனிந்து நின்றவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு. அவனை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. சரி! ஆனால் ஆஷா,ஆனந்தியைப் பற்றி அவனுக்கு எப்படித் தெரியும் என்றாவது யோசித்துப் பார்க்கலாம் இல்லையா?, சரியான தத்தி!

“அப்போ உண்மை அது தான் போல. என்னை இந்தக் குளிர்ல 30 நிமிஷம் நிற்க வைச்சிட்டு அங்கே பொறுப்பில்லாம அரட்டை அடிச்சிட்டிருந்த உன்னை என்ன செய்யலாம்?”

“வ..வந்து சாரி, லைப்ரரி பூட்டியிருக்கிறதைப் பார்த்து பொக்கே அவ்வளவு தான் போலன்னு நினைச்சிருந்தேன். இப்படி அதைக் கையில் வைச்சுட்டு எனக்காக நீங்க வெயிட் பண்ணிட்டிருப்பீங்கன்னு தெரியாது.”

“உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேனா?”

“இ..இல்ல இல்ல. பொக்கேவை வைச்சிட்டுப் போன ஆளுக்காக” – அய்யோ! ஆண்டவா!

“சரி, இப்போ என்ன பண்ணலாம்?”

“எ..என்ன?”

“சும்மா பொக்கேவைத் திருப்பிக் கொடுத்தா, நான் 30 நிமிஷம் குளிர்ல நின்னுட்டு இருந்ததுக்கு என்ன அர்த்தம் இருக்கு?”

“???????????”

“பதில் சொல்லு”

வேகமாய் யோசித்தவள் பின் “அ..அங்க ஒரு டீ ஷாப் தெரியுதே!, டீ வாங்கித் தரட்டுமா?” என்றாள்.

ஏற,இறங்க அவளை ஏளனமாய் நோக்கியவன் “ப்ளாக்பெர்ரி ஃபோனெல்லாம் வைச்சிருக்கிற பணக்காரப் பொண்ணானா இருக்க. வெறும் டீ தானா?, நான் இருக்கிற ஏக பசிக்கு எனக்கு டீயெல்லாம் போதாது.”

“பின்ன?, பக்கத்துல வேற எதுவும் கடையில்லையே”

“பேசாம,இப்படி பண்ணா என்ன?”

“எப்படி?”

“ஆஷா பர்த்டே பார்ட்டிக்கு என்னைக் கூப்பிட்டுப் போயேன். கேக்,பிரியாணின்னு எல்லாம் கிடைக்கும். என் பசியும் அடங்கிடும். என்ன சொல்ற?”

“வா…வாட்?”

“வாவ்!, சூப்பர் ஐடியா இல்ல?, பேசிக்கலி நான் ரொம்ப இண்டெலிஜண்ட்ன்னு என் அம்மா சொல்லுவாங்க. சரி, வா வா.. சீக்கிரம் போகலாம். நம்மள விட்டுட்டு கேக் கட் பண்ணிடப் போறாங்க. அங்கே நிக்கிறது உன் சைக்கிள் தான?” – பேசிக்கொண்டே முன்னே நடப்பவனைக் கண்டுத் தலையைப் பிய்த்துக் கொண்டாள் ஹரிணி.

“நி… நில்லுங்க. நீங்க பாட்டுக்க போயிட்டே இருக்கீங்க?”

“ஏன்?”

“உ.. உங்களை எப்படி நான் கூப்பிட்டுப் போக முடியும்?”

“ஏன் முடியாது?”

“முன்ன பின்ன தெரியாதவங்களை யாராவது வீட்டுக்குள்ள விடுவாங்களா?”

“என்னை உன் ப்ரண்ட்ன்னு சொல்லு”

“எனக்குப் பொய் சொல்ல வராது.”

“எது பொய்,எது உண்மைன்னு அங்க போனதும் தெரிஞ்சுடும். ஏய்.. உனக்காக 30 நிமிஷம் குளிர்ல நின்னுருக்கேன். எனக்காக ஒரு வேளை சாப்பாடு போட மாட்டியா?, இங்க பார்.. என் கையை.. எவ்ளோ ஜில்லுன்னு இருக்குன்னு.”- என்றபடித் தன் உள்ளங்கையை அவளது இரண்டு கன்னங்களிலும் வைத்து அழுத்தினான்.

கண்களை இறுக மூடி எரிச்சலை அடக்கியவளின் கன்னங்களை மேலும் அழுத்தியவன் பிளந்து கொண்ட அவளது இதழ்களைக் கண்டுச் சிரித்தபடி “என்னைக் கூப்பிட்டுப் போவியா?, மாட்டியா?”என்று அவளது கன்னத்தை இரண்டு புறமும் ஆம்,இல்லை என்பது போல் ஆட்டினான்.

அவனது உள்ளங்கைகளுக்கிடையில் சாண்ட்விச் ஆகி விட்டிருந்த இதழ்களைப் பிரித்து “கூப்பிட்டுப் போறேன்”- என்று அவள் ஒத்துக் கொண்டதும் “தேங்க்ஸ்,தேங்க்ஸ்”"என்று அவள் சைக்கிளில் ஏறிக் கொண்டான்.

பார்க்க டிப்-டாப்பாக டிரஸ் செய்து கொண்டு பணக்காரப் பையன் போலத் தானே தெரிகிறான்?, பின்னே எதற்காக இப்படிப் பெரும்பிச்சைக்காரன் போல சோற்றுக்கு அலைகிறான்?, ஆண்டவா! பார்ட்டியிலிருப்பவர்கள் கேள்வி கேட்டால் என்னவென்று பதில் கூறுவாள்?, தாடியும்,மீசையுமாகத் தலையில் அவ்வளவு முடியை வளர்த்துக் கொண்டு பரதேசி போல் இருப்பவனின் முகத்தை எங்கோ பார்த்தது போலிருக்கிறது. ஆனால் நினைவு தான் வரவில்லை!

மலைப் பாதையில் குளிர்க்காற்றில் சைக்கிளைத் தள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தவளின் தோளைத் தட்டி அவள் யோசனையைக் களைத்தான் அவன்.

“நீ இப்படி சைக்கிளை மிதிச்சா நாளைக் காலை பிரேக்-ஃபாஸ்ட்க்குத் தான் போக முடியும். இறங்குறியா ப்ளீஸ்?” – என்றவன் தானே ஓட்டிக் கொண்டு சென்றான். வழி நெடுக யோசனையில் ஆழ்ந்திருந்த ஹரிணி அவனுக்கு எப்படி ஆஷா வீட்டிற்கு வழி தெரியும் ­­என்பதைக் கூட கேட்கத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.

ஆஷா வீட்டினுள் ஹரிணியுடன் நுழைந்த ரிஷியை முதலில் கண்டு கொண்டவன் அர்ஜூன் தான். “டேய் ரிஷி… நீ எப்படிடா இங்கே வந்த?”என்று அவன் தன்னுடைய வெண்கலக் குரலைத் திறந்ததும் கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் சட்டெனத் திரும்பி இருவரையும் நோக்கினர்.

அர்ஜூன் கூறியதைக் கேட்டு ‘ஆ’-வென வாயைப் பிளந்தபடித் தன்னருகேயிருந்தவனை நோக்கினாள் ஹரிணி. கண்களால் சிரித்தபடி அவள் நாடியைத் தட்டி வாயை மூடச் செய்தவன் “ஹாய் பட்டீஸ்”-என்றபடி முன்னால் நடந்து சென்று விட்டான்.

“ரிஷி…. நாயே எப்படிடா இருக்க?”, “ஆளே மாறிட்ட?, “3 வருஷமா எங்கடா இருந்த?”, ”இப்போ எப்படிடா திரும்பி வந்த?” – ஆளாளுக்கு கேள்வி எழுப்பியபடி அவன் தோளைத் தட்டித் தலையைக் களைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கியதும் கூட்டத்துடன் ஐக்கியமாகி விட்டான் ரிஷி.

நின்ற இடத்திலேயே ‘பே’-வென விழித்தபடி சிலையாகி விட்டவளை யாரும் கண்டு கொள்ளவில்லை. அடுத்தப் பத்து நிமிடத்தில் தோழியை நெருங்கிய ஆஷா “ஏன்டி ரிஷியை அடையாளமே தெரியலையாம் உனக்கு?, எல்.கே.ஜில இருந்து உன் பக்கத்துலயே உட்கார்ந்திருந்த டெஸ்க் மேட்டை உன்னால கண்டு பிடிக்க முடியலையா?, வெட்கக்கேடு!” என்றுத் திட்ட, முகம் தொங்கிப் போய் விட்டது அவளுக்கு.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பார்ட்டி களை கட்டி விட வெரைட்டி உணவுகளை ரசித்து உண்டபடி அனைவரும் உற்சாகமாய் அரட்டையிலிருந்தனர். ஒவ்வொருவராக மாறி மாறி வந்து “ரிஷி உன்ன செம்மையா கலாய்ச்சிட்டானாமே!, நீ சரியான தத்தி தான் ஹரிணி!” என்று கேலி செய்து செல்ல அழுகை வரும் நிலையிலிருந்த ஹரிணி கூட்டத்தை விட்டு விலகிச் சென்று தோட்டத்தின் மூலையில் அமர்ந்தாள்.

கையில் குளிர்பானத்துடன் கோபமும்,அழுகையுமாய் அமர்ந்திருந்தவளின் தலையில் தட்டி “ஹாய் ஹனி” என்றபடி அருகே அமர்ந்த ரிஷி அவள் கையிலிருந்த பானத்தைப் பிடுங்கித் தன் வாயில் ஊற்றிக்கொண்டான்..

கோபத்துடன் அவனை நோக்கியவள் “அது நான் குடிச்சது, ஏன் டா எச்ச பண்ணுற?” என்று கத்தி விட்டுப் பின் தொடர்ந்து “ஏன் டா இத்தனை வருஷம் கழிச்சு என்னைப் பார்க்கிறியே, ஹாய் ஹரிணி எப்படியிருக்க?, என்னை அடையாளம் தெரியலையான்னு கேட்டிருந்தேனா, நான் இவ்ளோ அசிங்கப்பட வேண்டிய நிலைமை வந்துருக்குமா?”- என்று படபடவெனப் பொரிந்தாள்.

“ஹாஹாஹாஹா…. ஏன்டி எவனோ ஒருத்தன் ஆஷா,ஆனந்தின்னு உன் ப்ரண்ட்ஸ் பேரெல்லாம் சொல்றானே! ஆஷா வீடு இங்கிருந்து 20 நிமிஷம்ன்னுலாம் சொல்றானே, இவனுக்கு எப்படித் தெரியும்னு உனக்குத் தோண வேணாம்? இன்னும் ட்யூப் லைட்டாவே இருக்கியேடி?”

“நீ இப்படி தாடி,மீசையெல்லாம் வைச்சிக்கிட்டு தடிமாடு மாதிரி மாறியிருப்பன்னு எனக்கு எப்படிடா தெரியும்?, எட்டாங்கிளாஸ் வரைக்கும் என் உயரம் கூட இருக்க மாட்ட?, இப்போ பாரு ஆறடி வளர்ந்து நான் அண்ணாந்து பார்க்கிற அளவு இருக்க?,”

“இருந்தாலும் நீ உன் பெஸ்ட் ப்ரண்ட மறந்திருக்கக் கூடாது”

“நான் மறக்கல தான் டா. மூணு வருஷமா நீ எங்கயிருக்கயோ, என்ன பண்றயோன்னு தினம்,தினம் நினைச்சிட்டுத் தான் இருக்கேன்”

“பார்த்தா அப்படித் தெரியலயே! 3,4 சுத்து பெருத்துருக்க போல?”

“டேய்……”

“ஹ்ம்ம், கடைசியா உன்னை எப்போ பார்த்தேன்?, ம், நீ ஏஜ் அட்டெண்ட் பண்ணி வெகேஷன் முடிஞ்சு வந்தப்போ பசங்க உனக்கு பால் சொம்பும், மல்லிகைப் பூவும் வாங்கித் தர சொன்னாங்க. அதைக் கொடுத்தப்போ மீட் பண்ணினது தானே?”

அய்யோ! என்றபடி முகத்தை மறைத்துக் கொண்ட ஹரிணி “கருமம்,கருமம் அதைச் சொல்லாதடா. ப்ளீஸ்”எனக் கூற கடகடவென சிரித்தான் ரிஷி.

அவர்களிருவரும் படித்த பள்ளியில் குறும்புக்கார மாணவர்கள் சிலரால் அறிமுகப்பட்டிருந்த பழக்கமிது. வகுப்புத் தோழி வயதுக்கு வந்து விட்டால் அவளருகே அமர்ந்திருக்கும் பையன் பால் சொம்பும்,மல்லிகைப் பூவும் வாங்கித் தருவது! கண்றாவியான வழக்கம் தான் என்றாலும் பிஞ்சிலேயே பழுத்து விட்ட இந்தக் கழிசடைகள் அனைத்தும் இதைக் கட்டாயமாக்கி கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

“அப்போவெல்லாம் அர்த்தமே தெரியாம லூசுத்தனமா பண்ணினது. இப்போ நினைச்சா சிரிப்பு வருது.”- ரிஷி

“சரி, நீ எப்படிடா இருக்க?, உன் அம்மா இறந்துட்டாங்கன்னு அர்ஜூன் சொன்னான். அதனால தான் ஸ்கூலை விட்டுப் போயிட்டியா?, மூணு வருஷமா எங்க படிச்ச?”

“கோயம்புத்தூர்ல”

“ஊட்டிக்கு மூணு வருஷமா வரவேயில்லையா?”

“அப்பப்போ வருவேன். அர்ஜூனை மட்டும் மீட் பண்ணுவேன். அவன் தான் உங்க ஃபோட்டோஸ் எல்லாம் காட்டுவான். அதுல பார்த்ததால தான் உன்னை அடையாளம் தெரிஞ்சது. இல்லேன்னா தர்பூசணி மாதிரி மாறியிருக்க உன்னை எப்படிக் கண்டு பிடிக்கிறது?”

“டேய்… திமிரா?, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுடா. என்னாச்சு உனக்கு? ஏன் திடீர்ன்னு ஊரை விட்டுப் போன?, உன் அம்மாக்கு என்னாச்சு?”

உஃப்ஃப் எனப் பெருமூச்சை வெளியிட்டவன் “அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன செய்யப் போற?,”என்றான்.

திடீரெனப் புன்னகை மாறி கல்லாகி விட்ட அவன் முகத்தைக் கண்டு வருத்தமுற்ற ஹரிணி “என்ன காரணம் வேணாலும் இருக்கட்டும் டா. நீ திரும்பி வந்ததே எனக்கு சந்தோசம் தான். சரி, பசிக்குதுன்னு சொன்னேல?, வா சாப்பிடப் போகலாம்”என்று அவன் கையைப் பற்றி எழுப்பினாள்.

அரை ட்ரவுசருடன் காப்படி உயரத்தில் ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்தவன் இன்று பதினெட்டு வயதை நெருங்கும் முழு ஆண் மகனுக்கான தகுதியுடன் அசாத்திய உயரமும்,அகன்ற தோள்களுமாய் மாறி விட்டதைக் கண்டு வியப்பும்,வெட்கமுமாய் உணர்ந்தாள் ஹரிணி.

தன்னை அடிக்கடி நோக்கி சிரிப்பவளைக் கண்டு “என்ன அப்படிப் பார்க்குற?” என்றான் அவன்.

“ஹாஹாஹா, என்னால நம்பவே முடியலடா. நீ நீ தான்னு!, உன்னை ரொம்ப,ரொம்ப மிஸ் பண்ணேன்டா. உன்னை மறுபடி பார்ப்பேனோ, மாட்டேனோன்னு வருத்தப்பட்டுட்டிருந்தேன். இப்போ நீ திருப்பி வந்துட்டது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?”-என்று அவனை இறுகக் கட்டிக் கொண்டு குதித்தவளைக் கண்டுத் திகைத்த ரிஷிக்கும் உதட்டில் லேசான சிரிப்பு உண்டானது.