அத்தியாயம் - 10
இமைகளின் தாழ்வில்.. உடைகளின் தளர்வில்..
என்னோடு பேச மட்டும்.. குயிலாகும் உன் குரலில்..
-நாங்க கல்யாணம் முடிஞ்சு பார்த்த, ஃபர்ஸ்ட் படம்! கல்யாணத்துல இந்தப் படத்தோட பாடல்கள் தான் ஒலிச்சது! அதனால.. இதைக் கேட்கும் போதெல்லாம் அந்த நாள் நியாபகம் தான்! ‘ஏய்,எங்க இலையில் சட்னி கம்மியா இருக்கு!, முறை,முறைன்னு ஒன்னு இருக்குல்ல’-ன்னு பெருசுங்க அடிச்சுக்கிட்டாலும்… மேடை மேல நின்னுட்டிருந்த எங்க 2 பேர் முகத்திலயும் காதல் கை கூடி விட்டப் பெருமையும்,சந்தோசமும் மட்டுமே! அங்கிட்டுப் போய் விளையாடுங்கடான்னு அசால்ட்டா சொல்லிட்டு, ரொமான்ஸ் பண்ணப் போயிட்டோம்! ஹாஹா! படம் பார்த்து முடித்ததும் ‘ஜிங்க்ஸ்’-ன்னு ஸ்டோர் பண்ணி வைச்சிருந்த என் பேரை கண்மணின்னு மாத்தி ஸ்டோர் பண்ணிட்டான் நம்மாளு! ஹாஹா.. ஹௌ ஸ்வீட்!! ஜூஜூஜூ! இல்ல,இப்படித் தான் நான் ரியாக்ட் பண்ணேன்! கண்டுக்காதீங்க!
அந்தக் கல்லூரிச் சம்பவத்திற்குப் பிறகு சேத்ரனைச் சந்திப்பதற்கு நயனாவுக்குச் சந்தர்ப்பம் கிட்டவேயில்லை. தேவையும் ஏற்படவில்லை! நல்லபடியாகக் கோர்ஸையும்,இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங்கையும் முடித்து மேலும் இரண்டு மாதங்கள் கடந்திருந்த சமயம், எப்படியேனும் தனது பேக்கரி ஆசை நிறைவேற்றப்பட்டுவிடும் என்று அவள் நம்பிக்கைக் கொண்டிருந்தத் தருணம், கல்யாணம் என்கிற பெயரில் அவளது கனவுக் கோட்டையின் மீது புல்டோசரை ஏற்றினார் சேஷன்.!
கல்யாண விசயத்தில் தந்தையைப் பெரிதாக எதிர்க்கும் எண்ணமெல்லாம் நயனாவுக்குக் கிடையாது! நெட்டையோ,குட்டையோ என்றேனும் ஒரு நாள் யாரையாவதுத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை,குட்டியென வாழ்க்கையை ஓட்டத் தான் போகிறாள்! அதனால் தந்தையிடம் மறுத்துப் பேசி அவரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை அவள்!
ஆனால் ஒரே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது! வருபவன் நிச்சயம் அவள் தந்தையைப் போன்ற ஆணாதிக்கவாதியாக இருந்து விடக் கூடாது என்பது தான். இத்தனை வருடமாக பாலைவனத்தில் வாழ்ந்தவளை மீண்டும் எரிமலையில் குடித்தனம் நடத்தச் சொன்னால்.. நிச்சயம் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது!
ஆனால் இனம்,இனத்தோடு தான் சேரும் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னைப் போல் ஒருவனையே மருமகனாகத் தேர்ந்தெடுத்து அவள் தலையில் தணலைக் கொட்டினார் சேஷன்.
“இன்னைக்கு உன்னைப் பெண் பார்க்க வர்றாங்கடி நயனா”- என்று பாட்டி கூறிய போது யார்,என்னவென்று கூட விசாரிக்கத் தோன்றவில்லை அவளுக்கு.
ஆனால் வந்தவனை நேரில் கண்டதும் தலை முதல் கால் வரை கதி கலங்கிப் போனது. அவன் முன்னமே அவளுக்கு அறிமுகமானவன் தான்! சேஷனின் ஒன்று விட்ட தங்கை மகன் லட்சுமணன்!
சேஷனை விட இரண்டு பங்கு ஆளுமை நிறைந்தவர் லட்சுமணனின் தந்தை! அந்த வீட்டைப் பொறுத்தவரை தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளுக்கும்,அடுப்படியில் சமைக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. கட்டுப்பாடு,கலாச்சாரம் என்கிற பெயரில் அப்பெண்களது எண்ணங்களும்,விருப்பங்களும் மடிசாருக்குள் மடித்து வைக்கப்பட்டு விடும்! அப்பேர்ப்பட்ட வீட்டில் வாழ்க்கை முழுதையும் கழிப்பதா?
கண் கலங்கி அழுகை பொங்கி விட்டது நயனாவிற்கு! பெண் பார்க்கவென்று வந்தவர்கள் தட்டை மாற்றி நிச்சயம் வேறு செய்து விடவும்,மொத்தமாய் நொறுங்கிப் போனாள்.
மாப்பிள்ளையை உனக்குப் பிடித்திருக்கிறதா என்று கூட சேஷன் கேட்கவில்லை. அவரிடம் அப்படி எதையும் எதிர்பார்க்க முடியாது தான்! பொட்டக் கழுதை வீட்டை விட்டு ஒழிந்தால் போதுமென்று பதினெட்டு ஆண்டுகள் ‘கதியே’ என்று வளர்த்தவராயிற்றே! பாச,நேசமெல்லாம் அமெரிக்காவில் ஆடு மேய்க்கும் அண்ணனுக்கு மட்டும் தான்!
அவர்கள் சென்றதும் அன்னையிடமும்,பாட்டியிடமும் ‘திருமணம் வேண்டாமென்று’ கதறித் தீர்த்து விட்டாள். சேஷனை எதிர்த்துப் பேசிப் பழகியிராத இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவர்களிருவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை என்று புரிந்து கொண்டவள், தானே தந்தையை எதிர் கொண்டாள்.
இரவு உணவை முடித்து விட்டு ஏதோ ஒரு பாகவதர் பாட்டைக் கேட்டபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் அருகே சென்றாள். முழு பயத்துடன் தான்!
“அப்பா… உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசனும்ப்பா”
வினோத ஜந்துவைப் பார்ப்பதுப் போல் ஒரு பார்வையை வீசியவரிடம் முயன்று.. “எ..எ..எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லப்பா” என்றாள். வாக்கியத்தை முடிக்கும் முன் கண்ணீர் வேறு வழிந்து தொலைத்தது.
ஒரு நிமிடம் பதில் ஏதும் பேசாமல் அமைதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தவர், கண்ணைத் திறவாமலே “ஏன்?” என்றார்.
என்னவென்று கூறுவாள்! உங்களைப் போல ஆணாதிக்கவாதிக்கு மகளாய்ப் பிறந்தது போதாதென்று இன்னொரு காட்டானுக்குப் பெண்டாட்டி என்கிற பெயரில் அடிமையாய் வாழ்ந்து காலம் கடத்த முடியாதென்றா கூற முடியும்?, ஏற்கனவே எண்ணி வைத்தபடி..
“நா.. நான் இன்னும் படிக்கனும். வேலைக்குப் போகனும்ப்பா” – என்றாள்.
“படிச்சு,வேலைக்குப் போய் காசு சம்பாதிக்கப் போறியா?, அதான் நம்மக் கிட்ட நிறைய இருக்கே!”
“காசு சம்பாதிக்க மட்டும் தான் எல்லாரும் படிக்கிறாங்களாப்பா?”
“பின்ன?”
“அமெரிக்கால அண்ணன் படிக்கிறது காசு சம்பாதிக்க மட்டுமா?” – மிதமிஞ்சிய கோபத்தில் பட்டெனக் கேள்வி கேட்டவளைக் கண்டு எரிச்சலாகி நிமிர்ந்து அமர்ந்தவர்..
“அவன் ஆண் பிள்ளைடி! அமெரிக்கா என்ன?, அண்டார்டிகா போய் கூட அவன் படிக்கலாம்! அவன் சம்பாதிச்சுத் தான் இந்த வீடு நிறையனும்னு எந்த அவசியமும் இல்ல! ஏன்னா.. நான் கோடி,கோடியா சொத்து சேர்க்குறது என் மகனுக்காகத் தான்!”
“அப்போ நான் உங்க பொண்ணு இல்லையாப்பா?, எனக்குன்னு எந்த விருப்பமும் இருக்கக் கூடாதா?”
“பொம்மனாட்டிக்கு என்ன பெரிய விருப்பம் இருந்துடப் போகுது?, கட்டின புருஷனுக்கும், பெற்ற பிள்ளைகளுக்கும் சேவை செய்யுறது மட்டும் தான் பெண் பிறப்போட தலையெழுத்து! படிக்கிறதுக்கு,வேலைக்குப் போறதுக்குன்னு வீட்டு வாசப்படியை தாண்டி, ‘அவன் கையைப் பிடிச்சு இழுத்துட்டான்,ரேப் பண்ணிட்டான்,ஆசிட் அடிச்சிட்டான்னு’ தேவையில்லாத பிரச்சனைகளை இழுத்துண்டு வர்றது!”
‘அப்படியெல்லாம் பண்ணுறது கூட உங்களை மாதிரியான வக்கிரம் பிடிச்ச ஆண்கள் தான்! – மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
“படிக்கிற ஆசையெல்லாம் கிடப்புல போடு!, லட்சுமணன் மாதிரி நல்ல மாப்பிள்ளை அமையறதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கனும்! வரதராஜன் அத்திம்பேர் என்னை மாதிரி கட்டுப்பாடும்,கண்ணியமுமா குடும்பத்தை நடத்துற பெரிய மனுஷன். அவராத்துல நீ மாட்டுப்பொண்னா போறது எந்த ஜென்மத்துப் புண்ணியமோ! வீணா.. வளவளத்துட்டிருக்காம.. போய்ப் படு. இன்னும் ஒரே மாசத்துல கல்யாணம்”
“இ..இல்லப்பா.. எனக்குக் கல்யாணம் வேண்டாம்ப்பா. எனக்கு… எனக்கு அவரைப் பிடிக்கலப்பா”
எரிச்சல் அதிகமாகிப் பட்டென எழுந்து நின்றவர் “என் பார்வை பட்டாலே நடுங்கிப் போற கழுதை, இன்னிக்கு என் முன்னாடி நின்னு பயமில்லாம பேசிண்டிருக்க?, பிடிக்குது,பிடிக்கலன்னு சொல்ற அளவுக்கு நீ பெரிய மனுஷி ஆயிட்டியோ! வெட்டிப் போட்டுடுவேன்! போ வெளியே!” என்று கத்தினார்.
“நீங்க என்னை அடிச்சாலும், ஏன் கொன்னுப் போட்டாலும்.. பரவாயில்ல!ஆனா நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்!” – தீர்க்கமாகக் கூறியவளின் கன்னத்தில் பளாரென அறைந்தார் சேஷன்.
அணிந்திருந்த கண்ணாடி தூரப் போய் விழுந்து சுக்கு நூறாய் உடைந்தது. விரல் தடம் பதிந்து விட்டக் கன்னங்களைக் கையால் பற்றியபடி சுவரோடு சாய்ந்து விட்டவளுக்கு அழுகை பொங்கி வந்தாலும்.. கலங்காமல்.. “நீங்க எவ்ளோ வேணா.. அடிச்சுக்கோங்கோ! ஆனா என் முடிவு மாறாது” என்றாள்.
“என்னடி சொன்ன?” என்று விட்டு மீண்டும் கை ஓங்கியவரை ஓடி வந்து தடுத்த நயனாவின் அன்னையும்,பாட்டியும் “வேண்டாம்,வேண்டாம்” எனக் கெஞ்ச… உச்சக்கட்ட கோபத்தில் கர்ஜித்தார் சேஷன்.
“இவனை விட எந்த மன்மதன்டி உன்னைக் கட்டிக்கக் காத்திட்டிருக்கான்?, எவனை நினைச்சிண்டு இவனை வேணாம்னு அடம்பிடிக்கிற?, உண்மையைச் சொல்லு. இல்ல, உரிச்சுப் போட்டுடுவேன்”
-அடி வாங்கிக் கலங்கி நின்ற நயனா, தந்தை இந்த வாக்கியத்தைக் கூறும் வரை அப்படி ஒரு பாணியில் யோசிக்கவேயில்லை. வேலை,படிப்பு என்று எதைச் சொன்னாலும் எப்படியேனும் அடித்து நொறுக்கிக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்து விடுவாரோ என்று பயந்து போனவள், சற்றும் யோசிக்காமல் அதைக் கூறினாள்.
“மன்மதன் தான் காத்திட்டிருக்கான்!, நா.. நான்.. நானும்,சேத்ரனும் காதலிக்கிறோம். என்னால அவரைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது!”
-அவள் கூறி முடித்ததும் அதிர்ந்து போய் நின்ற மூவரும் அடுத்த ஒரு நிமிடத்திற்கு எதுவுமே பேசவில்லை. தந்தையின் முகத்தை மெல்ல நிமிர்ந்து பார்த்த நயனாவுக்கு அவர் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தைக் கண்டதும் மிச்ச,சொச்ச தைரியமும் டாட்டா காட்டி விட.. கை,கால்கள் நடுங்கி வெலவெலத்துப் போனாள்.
அடுத்து அவர் கொடுத்த ஒரே அறையில் நின்றிருந்த அறை மூலைக்குச் சென்று விழுந்தவள் மூர்ச்சையாகிப் போனாள்.
“அநாதைப் பயலாச்சேன்னு வேலை போட்டுக் கொடுத்தா.. அடி மடியிலேயே கை வைச்சிட்டானே சண்டாளன்! எல்லாம் அவன் மாமனைச் சொல்லனும்! காலில் விழாத குறையா கதறினான்! நீங்க தான் என் தங்கை பையன் வாழ்க்கைல விளக்கேத்தி வைக்கனும்னு! சொந்தக்காரன்னு கூட வைச்சிக்கிட்டதுக்கு அவனுக்கு இந்த ஆதிசேஷன் பொண்ணு கேக்கறதோ! போக்கேத்த நாய்கள்!, அவனை உண்டு இல்லன்னு பண்ணிட்டு வந்து இவளைக் கவனிக்கிறேன்! அதுவரை இந்த ரூம் கதவை யாரும் திறந்தீங்க.. நேரா சொர்க்கத்துக்கு போக வேண்டியது தான்” – அழுகையுடன் நின்றிருந்த நயனாவின் அன்னையையும்,பாட்டியையும் மிரட்டியவர் சட்டையை மாட்டிக் கொண்டு கிட்டுவின் வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டார்.
சேத்ரனது நல்ல நேரம்! அவன் ஹோட்டலில் இருந்த படியால் கிட்டுவின் வீட்டில் அவரையும்,அவர் மனைவியையும் தவிர யாருமில்லை.
“டேய் கிட்டு…” என்று உச்சஸ்தாதியில் கத்தியபடி ஆங்காரத்துடன் உள்ளே நுழைபவரைக் கண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தக் கிட்டு வாயில் அடைத்த வடையுடன் பதறி எழுந்து “அண்ணா… வாங்கோண்ணா.. வாங்கோ” என்று வரவேற்றார்.
“என்னடா வரவேற்பு வேண்டிக் கிடக்கு?, எங்கடா உன் தங்கை மகன்?, எல்லாத்துக்கும் அகராதியாட்டம் வியாக்யானம் பேசுவானே!, இப்போ இவன் பார்த்து வைச்சிருக்கிற வேலைக்கு என்ன பதில் சொல்லப் போறான்?”
“அய்யோ!, கொஞ்ச நாளா.. அமைதியா ஹோட்டலுக்கு போயிண்டு வந்திண்டிருக்கான்னு நினைச்சேனே! அதுக்குள்ள பிரச்சனையை இழுத்துண்டு வந்துட்டானா?, இப்போ என்ன செஞ்சு வைச்சிருக்கானோ தெரியலயே!, அண்ணா… அவன் என்ன பண்ணியிருந்தாலும் மன்னிச்சுடுங்கோண்ணா! பையன் கொஞ்சம் துடுக்கானவன்! மத்தபடி சூதுவாதில்லவன்ணா”
“அவனா சூதுவாது இல்லாதவன்?, ப்ளான் பண்ணி அடிமடியிலேயே கையை வைச்சவன்டா அவன்! வெளிநாடு போய் சம்பாதிக்க வக்கில்லன்னு தெரிஞ்சதும்,பணக்காரப் பெண்ணாப் பார்த்து கல்யாணம் கட்டிண்டு நினைச்சதை சாதிக்கலாம்ன்னு நினைச்சிருக்கான்! அவனா வஞ்சகமில்லாதவன்?”
“என்னண்ணா சொல்றேள்?, நேக்கு ஒன்னுமே புரியலை?”
“புரியலையா?, இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?, என் கூட சம்பந்தம் பண்ணுற அளவுக்கு நீ எப்போ டா பெரியாள் ஆன? ஒரு தராதரம் வேண்டாம்?”
“அய்யோ! உங்க கூட சம்பந்தமா?, என் கனவிலேயும் நான் அப்படி நினைக்க முடியுமாண்ணா? உங்க உயரம் என்ன?,என் உயரம் என்ன?,கோபுரத்துல நிற்குற உங்களோட, குப்பை மேட்டுல இருக்கிற நான் எப்படிண்ணா சம்பந்தம் வைச்சுக்க முடியும்?”
“உனக்குத் தெரிஞ்சது உன் தங்கை மகனுக்குத் தெரியலையேய்யா கிட்டு”
“அண்ணா…”
“காதல்ன்ற பேர்ல எப்படியோ என் பொண்ணை மயக்கி வைச்சிருக்கான் உன் மருமகன்! என்னையே இன்னிக்கு எதிர்த்து பேசுற அளவுக்கு அவளை எனக்கு எதிரா திருப்பி வைச்சிருக்கான்! அவனை வெட்டிப் போட்டாத் தான் என் மனசு ஆறும். அவன் எங்க இருந்தாலும் இப்போவே வரச் சொல்லு” – வேஷ்டியை மடித்துக் கொண்டு கர்ஜித்தவரைக் கண்ட கிட்டுவிற்கு உயிரில் பாதி போய் விட்டது.
“அண்ணா…………” என்றபடி அவர் காலில் விழுந்தவர் “குழந்தை பாக்கியமே இல்லாத நாங்க, பிறந்ததிலிருந்து அவனை எங்க பையனாத் தான் வளர்த்திண்டிருக்கோம். வெளிநாடு போனா.. தான் படிச்சப் படிப்புக்கு பெரிய எதிர்காலம் இருக்குன்னு சொல்லியும் அவனை நாங்க அனுப்பாததுக்குக் காரணம், அவனை எங்களால பிரிஞ்சு இருக்க முடியாதுன்றது தான்ண்ணா! அவனுக்கு ஒன்னுன்னா எங்களால தாங்கிக்க முடியாது! ஏதோ வயசு வேகத்துலத் தப்பு பண்ணிட்டான்! மன்னிச்சு விட்ருங்கண்ணா! நான் அவனை எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு அனுப்பிட்றேன். இனி உங்க பொண்ணு இருக்கிறப் பக்கம் அவன் எட்டிக் கூட பார்க்க மாட்டான். மன்னிச்சுடுங்கோண்ணா.. மன்னிச்சுடுங்கோ.. “ என்று கதறினார்.
தன் காலைச் சுற்றியிருந்த அவர் கையை உதறித் தள்ளிய சேஷன் “இன்னும் ஒரு மாசத்துல வைச்சிருந்த என் பொண்ணு கல்யாணத்தை ஒரே வாரத்துல நடத்துறதா முடிவு பண்ணியிருக்கேன்! அவ கல்யாணம் முடியுற வரை உன் பையன் இருக்கிற இடம் தெரியக் கூடாது. மீறி எதுவும் பண்ணான்னா.. அரவமே இல்லாம உங்க 3 பேரையும் கொன்னுடுவேன்! பார்த்து நடந்துக்க!” என்று மிரட்டி விட்டு விறுவிறுவென வெளியேறினார்.
ஹோட்டலிலிருந்து இரவு வீடு திரும்பிய சேத்ரனை வீட்டின் மயான அமைதி சந்தேகம் கொள்ள வைத்தது. பதினோறு மணி வரை டிவி பார்க்கும் மாமி, எழவு விழுந்தது போல முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு அறை மூலையில் அமர்ந்திருந்தார். கிட்டு மாமாவைக் கேட்கவே வேண்டாம்! எப்போதும் உர்ரென்று இருக்கும் அவர் முகம்.. இப்போது மேலும் உர்ராகியிருந்தது.
“என்னாச்சு மாமி?, ஏன் டல்லா இருக்கேள்?”-சேத்ரன்
“அம்புஜம், அவனுக்கு சாப்பாடு எடுத்து வை” – கிட்டு
“நான் ஹோட்டல்லயே சாப்பிட்டேன். உங்களுக்கு என்னத் திடீர்ன்னு என் மேல அக்கறை?, இன்னிக்கு ஏதோ என்னைக் கரிச்சுக் கொட்டப் போறீங்க. அதுக்குத் தானே முகத்தை இப்படி வைச்சிருக்கீங்க?, உங்க விருப்பப்படி தான் நான் அந்த அகங்காரன் ஆதிசேஷனையும் பொறுத்துண்டு அவர் ஹோட்டல்ல வேலை பார்த்துட்டிருக்கேனே! இன்னும் என்ன மாமா?”
“……………………”
“பேசுங்கோ. ஏன் அமைதியாய்ட்டேள்?”
“நீ… சிங்கப்பூர்ல ஏதோ வேலை கிடைச்சிருக்கிறதாகவும்,வர்க் பர்மிட் வைச்சிருக்கிறதாகவும் அடிக்கடி சொல்லுவியே! உண்மை தானா?”
“ம்ம், ஆனா அதுக்கு ஒரு பெரிய தொகையை இனிஷியலா பே பண்ணனும் மாமா.”
“எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல. இருக்கிற நில,புலன்கள் அத்தனையும் வித்துத் தர்றேன். இன்னையோட இந்த ஹோட்டல் வேலைக்கு முழுக்குப் போட்டுட்டு உடனே சிங்கப்பூர் கிளம்புறதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணு”
“எ..என்ன சொன்னீங்க?, திரும்ப சொல்லுங்க”
“உடனடியா சிங்கப்பூர் கிளம்புன்னு சொல்றேன்!”
“நி..நிஜமாவா? நிஜமாவா சொல்றீங்க?, மாமா.. விளையாடாதீங்க?, நிஜமாவே நான் சிங்கப்பூர் போகட்டுமா?, வாவ்வ்வ்வ்!! என்னால நம்பவே முடியல! ஆனா ஏன் திடீர்ன்னு?, நோ நோ! எனக்கு ரீசன் எதுவும் வேண்டாம்! உங்களைப் பேச வைச்சா.. மறுபடி புளியமரம் ஏறுனாலும் ஏறுவீங்க. யார் உங்களை கண்வின்ஸ் பண்ணாங்களோ! அவங்க நல்லா இருக்கனும்.. தேங்க் யூ சோ மச் மாமாஆஆஆஆ” – என்று குதித்தவனைக் கண்டு குழம்பிப் போயினர் கிட்டுவும்,அம்புஜமும்.
சேத்ரனின் வரவிற்காக காத்துக் கொண்டு அமர்ந்திருந்த கிட்டு எதிர்பார்த்த காட்சியே வேறு! அவர் உடனடியாக நீ சிங்கப்பூர் கிளம்ப வேண்டுமென்று கூறியதும் முடியாது,நடக்காது, நான் நயனாவைக் காதலிக்கிறேன்,அது,இதுவென்று சொல்லி அவன் வாதாடுவான் என்று பார்த்தால்.. அவன் அவர் மாறியதற்கானக் காரணத்தைக் கூடக் கேட்க மனமில்லாமல், அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டான்!
“என்னடி அம்புஜம் இது?, இப்படி சொல்லிட்டுப் போறான்?”
“நேக்கும் ஒன்னும் புரியலண்ணா. போக மாட்டேன்னு அடம் பிடிப்பான்னு பார்த்தா.. இப்படி சொல்றான்?”
“மாமா… இப்பவே நான் என்னை செலக்ட் பண்ணின கம்பெனிக்கு மெயில் அனுப்புறேன். உங்களை நம்பி அனுப்பலாமில்லையா?, ஜஸ்ட் கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன்” – உள்ளறையிலிருந்து சத்தமிட்டான் சேத்ரன்.
“ம்ம்ம்” – என்ற கிட்டு அவனருகே சென்றார்.
முகத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் விரக்தி கலந்த கோபம் மாறி.. வெகு நாளைக்குப் பிறகு சிரிப்பும்,சந்தோசமுமாய் விசில் அடித்தபடி லேப்டாப்பைத் தட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டு மேலும் குழம்பினார்.
ஒருவேளை சேஷன் அண்ணா ஏதும் தப்பாப் புரிஞ்சுண்டு இருக்காரோ! 2 பேரும் காதலிக்கிறதா சொன்னாரே! இவனுக்காக அந்தப் பொண்ணு கல்யாணம் வேண்டாம்ன்னு அவங்கப்பாவை எதிர்க்கிற அளவுக்கு துணிஞ்சிட்டதா சொன்னாரே! சாதுவான அந்தப் பொண்னே இந்த அளவுக்கு தைரியமா சேஷூ அண்ணாவோட சண்டை போட்டிருக்கான்னா.. நிச்சயம் இந்தக் காதல் விவகாரம் உண்மையாத் தான் இருக்கும்! ஒரு வேளை பையனுக்கு இன்னும் கல்யாண விசயம் தெரியாதோ! – என்று யோசித்த கிட்டு “ம்க்க்க்கும்” என்று தொண்டையைக் கனைத்தார்.
“என்ன மாமா?, முடிவை மாத்திக்கிட்டேன்னு சொல்லி என் தலைல குண்டைப் போட்டுடாதீங்கோ”
“அது இல்லடா…”
“என்ன மாமா?”
“வ..வந்து.. சேஷன் அண்ணா பொண்ணு நயனா இருக்காளோண்ணோ..”
“ஆமா.. அவளுக்கென்ன?”
“அவ..அவளுக்குக் கல்யாணமாம்டா”
“அப்படியா?, ஹாஹா.. கால்குலேடிவ்வான ஆளு தான் மாமா அந்த சேஷன்! ஆறு மாச கோர்ஸ் முடிஞ்சு, ரெண்டே மாசத்துல நினைச்ச மாதிரியே மாப்பிள்ளையை இறக்கிட்டான் பாருங்க! ஓ காட்! முக்கியமான இ-மெயில் ஐடியை மிஸ் பண்ணிட்டேன் மாமா.. என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணி கேட்டுட்டு வரேன்.” – செல்ஃபோனுடன் நகர்ந்து விட்டவனைக் கண்டு விழித்தார் கிட்டு.
“காதலிக்கும் பெண்ணுக்குக் கல்யாணம் என்று தெரிந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறான்! என்ன மனிதன் இவன்?, ஒரு வேளை அந்தப் பெண் மட்டும் தான் இவனைக் காதலிக்கிறாளோ! எது எப்படியோ, இவன் அவளைக் காதலித்தாலும்,அவள் இவனைக் காதலித்தாலும் ஒடியப் போவது என்னவோ சேத்ரனின் கால் தான்! பெருமாளே! இந்தப் பையனை உடனே சிங்கப்பூர் அனுப்பியாகனும்!
மறுநாள் காலை வெளியே கிளம்பியவனை நிறுத்தினார் கிட்டு.
“எங்க போற?”
“ஏன்?, ஹோட்டலுக்குத் தான்”
“அங்கேயெல்லாம் இனி நீ போக வேண்டாம்.”
“ஏன்?”
“போகாதன்னா.. போகாத.” – சிடுசிடுத்தபடி அவர் கூறவும் புருவத்தைச் சுருக்கிய சேத்ரன் “ஒரு காலத்துல போக மாட்டேன்னு அடம்பிடிச்ச என்னை மிரட்டியே அனுப்பி வைச்சேள். இப்போ நீங்களே போக வேண்டாம்ன்றேள்!, ஏன்?, அந்த அகங்காரன் உங்களோடயும் பிரச்சனை பண்ணிட்டானா?, என்ன நடந்தது மாமா?, உண்மையைச் சொல்லுங்கோ” என்று சிலிர்த்துக் கொண்டு நிற்க..
“டேய்.. நீ தெரிஞ்சு பேசுறியா?, தெரியாம பேசுறியான்னே நேக்கு விளங்கல. அந்த நயனா பொண்ணுக்குக் கல்யாணம் முடியற வரைக்கும் நீ எங்கேயும் வெளியே போக வேண்டாம்”
“அவ கல்யாணத்துக்கும் நான் வெளியே போறதுக்கும் என்ன சம்பந்தம்?, மாமா.. கொஞ்சம் புரியற மாதிரி பேசுங்கோ ப்ளீஸ்”
“உனக்குப் புரியாமலே இருக்கட்டும். அதான் நல்லது. சிங்கப்பூர் வேலை என்னாச்சு?”
“மெயில் அனுப்பியிருக்கேன். நாம பணம் ரெடி பண்ணிட்டா.. அவங்க டிக்கெட் அனுப்பிடுவாங்க”
“சரி. நிலத்தை விற்க நான் ஏற்பாடு பண்ணிட்டேன். உன் கையெழுத்து வேணும். நீ என்னோட வா” –என்று அவனை அழைத்துச் சென்று விட்டார்.
முழுதாக மூன்று மணி நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த நயனா.. தான் அறைக்குள் இன்னும் அடைபட்டிருப்பதைக் கண்டு பயமுற்றாள். வேகமாக ஓடிச் சென்று “அம்மா.. அம்மா…” என்று கதவைத் தட்டியும் யாரிடமிருந்தும் பதிலில்லை.
கிட்டுவின் வீட்டிலிருந்து சேஷன் திரும்பும் வரை மயானமாகிப் போயிருந்த வீடு, அவர் வந்ததும் மீண்டும் ஒரு போராட்டத்தைக் காணத் தயாரானது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தத் தந்தையைக் கண்ட நயனா.. என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து எழுந்தாள்.
“இன்னும் ஒரே வாரத்துல உனக்குக் கல்யாணம். பிடிச்சாலும்,பிடிக்காட்டியும் லட்சுமணன் தான் உன் மாப்பிள்ளை! அந்த சேத்ரன் பயலை நினைச்சுண்டு நீ ஏதாச்சும் திருகுதாளம் பண்ண நினைச்சா... அவன் கை,காலை உடைச்சு ஒரேடியா பரலோகத்துக்கு அனுப்பிடுவேன்! புரிஞ்சு நடந்துக்கோ”
“அய்யோ!, அ..அவரை ஒன்னும் பண்ணிடாதீங்கோ. தப்பு எல்லாம் என் மேல தான். அவரை விட்டுடுங்கோ ப்ளீஸ்.”
“ஓ! அவ்ளோ பாசம் அவன் மேல?, இருக்கட்டும்!. கல்யாண மண்டபதுக்கு போகிற வரை இந்த ஒரு வாரத்துக்கும் இந்த அறையில தான் நீ இருந்தாகனும்! வாசல்ல இரண்டு பேரைக் காவலுக்கு நிற்க வைச்சிருக்கேன். அதனால என்னை மீறி அவனோட தொடர்பு கொள்ள நினைச்சேனா.. உன்னைக் கொன்னு போடவும் தயங்க மாட்டேன்’ – என்று கர்ஜித்து விட்டுச் சென்றார்.
தலையில் கை வைத்து அமர்ந்து விட்ட நயனாவிற்குத் தன் கல்யாணத்தை எண்ணி கலங்குவதா.. அல்லது தேவையில்லாமல் இதில் சேத்ரனை இழுத்து விட்டத் தன் முட்டாள்தனத்தை எண்ணிக் கலங்குவதா என்றே புரியவில்லை. ஆனாலும்.. பிடிவாதமாக சேத்ரனின் குணத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டாள்!
அப்படியெல்லாம் அவன் மீது யாரும் கை வைத்து விட முடியாது! அவன் பெரிய ஹீரோ இல்லை தான்! ஆனால்.. எந்தச் சூழ்நிலையையும் கையாளத் தெரிந்தவன்! முக்கியமாக இந்த மாட்டு மூளை மனிதரை நன்றாக அறிந்தவன்! அதனால்.. அவன் உயிருக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்திருக்காது என்று சமாதானம் செய்து கொண்டாள்.
ஒரு முறை,ஒரே ஒரு முறை சேத்ரனிடம் பேசினால்.. இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க வழி கிடைக்கும். எப்படி?, எப்படி அவனைத் தொடர்பு கொள்வது?, மெல்ல வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். தந்தை கூறியபடி வாசலில் இருவர் நின்றிருந்தனர். நயனாவின் துணிமணி,சாப்பாடு அத்தனையும் அவர்கள் சோதித்த பின்பு தான் அறைக்கு வந்தது! நொந்து போனாள் அவள்!
நயனாவின் திருமணத்திற்கு முன் சேத்ரனை விமானம் ஏற வைத்து விடவேண்டுமென்று கிட்டு எடுத்த முயற்சி நிறைவேறாமல் போக.. அடுத்த ஒரு வாரத்திற்கு அவன் ஊரில் இருந்தாக வேண்டிய கட்டாயம் என்கிற நிலை வந்ததும் கலங்கிப் போனார்
“இவ்ளோ நாள் பொறுத்துட்டேன்! 1 வாரம் பொறுக்க மாட்டேனா?, போனா.. எப்போ திரும்பி வருவேனோ.. அதுவரை மாமி சமையலை ருசிச்சுக்கிறேனே” என்று அவன் கூறி விட்டாலும் கிட்டுவிற்குத் தான் உள்ளே உதறல்!
என்ன நடக்கப் போகிறதோ என்று அனைவரும் பதைபதைத்த நயனாவின் திருமணநாளும் வந்தது. பத்தரை மணி முகூர்த்தத்திற்கு எட்டு மணிக்கே தயாராகி விட்டவள், அங்கிருந்துத் தப்பிக்க வழி தேடிக் கொண்டிருந்தாள்.
கிடைத்தத் தனிமையில் அன்னையிடம் கதறியவள் “இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா.. என்னை நீ உயிரோட பார்க்க முடியாதும்மா!, அந்தக் குடும்பத்துல வாழ்றதும், நரகத்துல இருக்கிறதும் ஒன்னு தான்! உன்னை மாதிரி என் வாழ்க்கை ஆகனுமா?, உன்னையும்,என்னையும் மாதிரி இன்னொரு உயிரும் படனுமா?, அதுக்கு செத்தே போகலாம்” எனக் கூற பயந்து போன கலைவாணி யாரிடமிருந்தோ செல்ஃபோனை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்துச் சேத்ரனிடம் பேசச் சொன்னார்.
ஆர்வமாக செல்ஃபோனை வாங்கிய பின்பு தான் தன்னிடம் அவனுடைய செல்பேசி எண் இல்லாததையே புத்தி கூறியது. “காதலிக்கிறேன்னு சொல்ற?, அவன் ஃபோன் நம்பர் தெரியாதா நோக்கு?, என்னடி பொண்ணு நீ?, இப்போ என்ன தான் பண்ணச் சொல்ற என்னை?” என்று படபடத்தவரிடம் “இங்கிருந்து வெளியே போறதுக்கு எப்படியாவது ஏற்பாடு பண்ணும்மா"”என்று கெஞ்சினாள்.
“வெளியே போய்..?, எங்கடி போவ? உன் கல்யாண விசயம் அந்தப் பையனுக்கு இதுவரை தெரியாமலா இருக்கும்?, தெரிஞ்சும் கூட அவன் உன்னைத் தேடி வரல. அப்பேர்ப்பட்டவனை நம்பி எப்படிடி உன்னை அனுப்ப முடியும்?, விஷயம் வெளியே தெரிஞ்சா உன் அப்பா என்னைக் கொன்னு போட்டுடுவார்டி”
“அதுக்காக… உன் ஆத்துக்காரனாட்டம் ஒருத்தனோட என்னைக் குடும்பம் நடத்தச் சொல்றியா?, சரி!, உனக்குத் தான் உன் பொண்ணு உயிரை விட புருஷனோட மானம் முக்கியமாச்சே?, நீ எந்த உதவியும் பண்ண வேண்டாம்” – கோபத்துடன் திரும்பிக் கொண்டவளிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் கையைப் பிசைந்த கலைவாணி திடீரென உள்ளே நுழைந்த மாமியாரையும்,கணவனையும் கண்டு மேலும் விழித்தார்.
“என்ன இன்னும் தயாராகலையா?” – மிரட்டலாய் சேஷன்.
“ரெடி ஆயாச்சுண்ணா. நம்ம சம்பிரதாயப்படி, முகூர்த்தத்துக்கு முன்னாடி கற்பக விநாயகர் கோவிலுக்கு பொண்ணை அழைச்சிட்டுப் போறது வழக்கமில்லையா?, அதனால தான்.. நயனாவை கோவிலுக்குக் கிளம்பச் சொல்லிண்டிருக்கேன். என்ன மாமி நீங்களும் மறந்துட்டேளே?” – எப்படியேனும் வெளியேறியாக வேண்டுமென்று அவள் தீர்மானித்து விட்டபடியால் தானே வழி சொல்லிக் கொடுத்தார் கலைவாணி. ஒரே ஒரு முறை மகளுக்காகக் கணவனை எதிர்த்து விடலாமென அவர் முடிவு செய்து விட்டதைக் கண்டு கொண்ட நயனா.. விழிகள் பளிச்சிட அன்னையை நோக்கினாள்.
“அந்த சம்பிரதாயம் மற்ற பெண்களுக்குத் தான். இவளுக்கில்ல. இவளை நம்பி வெளியே அனுப்ப நான் தயாராயில்ல” – சேஷன்
“கல்யாணம் வரை வந்தாச்சு. இப்போ அவளால என்ன செய்துட முடியும்னு நீ நினைக்கிற?, ஏற்கனவே கண்ணீரும்,கம்பளையுமா வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறா அவ, இந்த நேரத்துல போய் கடவுளையும் அசட்டை பண்ணுனா எப்படிடா?, வேணும்னா நீயும் கூடப் போயிட்டு வா”-பாட்டி
“ஆமாம், வர்றவங்களை வரவேற்கிறதை விட்டுட்டு நான் இவ பின்னாடி சுத்திண்டிருக்கனுமாக்கும்?, வைத்தியை அனுப்பி வைக்கிறேன்.” – என்று அவர் முடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார்.
வீடு என்பதால் இரண்டு காவலாளிகளை அவரால் நிற்க வைக்க முடிந்தது. ஆனால் மண்டபம் அப்படியல்லவே! சொந்த,பந்தங்கள்,சம்பந்தி வீட்டார்கள் என அனைவரும் நிறைந்திருப்பதால்.. அவரால் வேற்று மனிதர்கள் யாரையும் காவலுக்கு வைக்க முடியவில்லை. தேவையில்லாத கேள்வி வரும்! ஆதிசேஷனுக்குத் தன் பொண்ணை ஒழுக்கமாக வளர்க்கத் தெரியவில்லையென ஊரார் ஏசுவார்கள்! அதற்கு அவரது கௌரவம் இடம் கொடுக்காது. அதனால் தவிர்க்க முடியாத இந்த சம்பிரதாயத்தை முடிக்க நயனாவுக்குத் துணையாக தன் அமெரிக்க மகனை அனுப்பி வைத்தார் சேஷூ.
கலைவாணி,நயனா,வைத்தி மூவரும் மண்டபத்திற்கு அருகே இருந்த கற்பக விநாயகர் கோவிலுக்குச் சென்றனர். முழு பதற்றத்துடன், நெஞ்சு நிறையக் கவ்வி நின்ற பயத்துடனும் கோவிலருகே சென்ற கலைவாணி “வைத்தி, நேக்கு லைட்டா தலையை சுத்திண்டு வர்றது. இளநீர் குடிப்போமா?” என்றார்.
“அய்யோ,என்னாச்சு?, என்னாச்சும்மா?” என்று பதறியவனிடம் “நைட் சரியா தூங்காததால சுத்தறது!, போறாததுக்கு பசி வேற! நயனா உள்ளே போய் பிரகாரத்தைச் சுற்றட்டும். நாம இங்க உட்கார்ந்து இளநீர் குடிப்போம்” என்றார்.
தயக்கத்துடன் தங்கையை நோக்கியவன் “அம்மா… மடிசாரும்,நகைகளுமா இருக்கிறவளைத் தனியா எப்படிம்மா அனுப்பறது?” எனக் கூற “நாம இங்கே தானேடா உட்காரப் போறோம்?, கோவில் காலியாத் தான் இருக்கு. அவ வந்துடுவா. நயனா.. நீ உள்ளே போடி” என்று விட்டு இளநீர் கடையருகே அமைதியாக அமர்ந்து விட்டார்.
தங்கை திருமணம் என்றதும் முதல் நாள் வந்திறங்கிய வைத்திக்கு இந்தக் காதல் விவகாரம் எதுவும் தெரியாது. அதனால் சந்தேகம் எதுவும் கொள்ளாமல் சரியென்று விட்டான்.
விட்டால் போதுமென்று தலை தெறிக்கக் கோவிலுக்குள் ஓட்டமும்,நடையுமாய்ச் சென்ற நயனா கோவிலின் பின் வாசல் வழியாக ஆட்டோவில் ஏறி.. சேத்ரனின் வீட்டை அடைந்தாள்.
மாமாவும்,மாமியும் வெளியே சென்றிருக்க.. கையில் காஃபி டவராவுடன் ஹாலில் அமர்ந்திருந்த சேத்ரனுக்குக் கல்யாணக் கோலத்தில் தன் கண் முன்னே நிற்கும் நயனாவை நம்பவே முடியவில்லை! அதை விட அவள் கூறிய வார்த்தைகளை!
வீட்டுக்குள் பதறியடித்து ஓடி வந்தவள் சேத்ரனின் கையைப் பற்றிக் கொண்டு மூச்சு வாங்க “கா..காப்பாத்துங்க, என்னைக் காப்பாத்துங்க சேத்ரன்” என்று கதறவும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“நயனா.. நயனா.. ரிலாக்ஸ்!” என்று அவளைச் சமாதானப் படுத்த முற்பட்டவனிடம் தலையை இருபுறமும் ஆட்டி “சீக்கிரம்… சீக்கிரமா நாம இந்த இடத்தை விட்டுப்போகனும். எங்கப்பா கண்டுபிடிச்சார்ன்னா.. அவ்ளோ தான்.. வாங்க சேத்ரன்.. போயிடலாம் ப்ளீஸ்” என்று கத்தியவளிடம் “எங்க போறது?, என்ன சொல்ற நீ?, முதல்ல இந்தத் தண்ணியைக் குடி. குடிச்சுட்டு நிதானமா பேசு” என்றபடி தண்ணீர் சொம்பை நீட்டியவனின் கையைத் தட்டி விட்டு “இதுக்கெல்லாம் நேரமில்ல சேத்ரன். எங்கப்பா வந்துடுவார்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்று சொன்னதையே சொன்னவளிடம் “என்ன நடந்ததுன்னு உளறாம தெளிவா சொல்லு நயனா.” என்று அவன் அதட்டவும் கண்களை மூடி நிதானத்திற்கு வந்தாள்.
“எனக்கு இன்னிக்குக் கல்யாணம் சேத்ரன்”
“வா…வாட்?, கல்யாணத்தை வைச்சிக்கிட்டு நீ இங்க என்ன பண்ணுற?”
“எனக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிக்கல. அதான் ஓடி வந்துட்டேன்”
“பரவாயில்லையே!, அவ்ளோ தைரியமான பொண்னா நீ?, வெர்ரி குட். ஆனா என் வீட்டுக்கு எதுக்கு வந்த?”
“சேத்ரன்ன்ன்ன்… நீங்க தான் எனக்கு உதவி பண்ணி இந்த இக்கட்டிலிருந்து என்னைத் தப்பிக்க வைக்கனும்! தயவு செஞ்சு.. ப்ளீஸ்”
“என்னால என்ன பண்ண முடியும்?”
“எ..எ..என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்”
“வாஆஆஆஆட்?? சே இட் ஒன்ஸ் அகைன்”
“அது ஒன்னு தான் இப்போ இருக்கிற ஒரே வழி சேத்ரன். ஜஸ்ட் ஒரு மஞ்சள் கயிறு. எங்கப்பாக்கிட்டேயிருந்து தப்பிக்கிறதுக்காக! அதுக்கப்புறம் நான் உங்களை எந்த விதத்திலேயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!,”
“நயனா.. நீ தப்பு மேல தப்புப் பண்ணிண்டிருக்க. உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலேன்னா.. உங்கப்பாவை எதிர்த்து.. தெருவுல உட்கார்ந்தாவது ப்ரொடெஸ்ட் பண்ணியிருக்கனும். அதை விட்டுட்டு சம்பந்தமே இல்லாம,என் கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு அசால்ட்டா சொல்லிண்டிருக்க?”
“உங்க அட்வைஸ் எல்லாத்தையும் நான் அப்புறமா கேட்டுக்கிறேன். சேத்ரன்.. எங்கப்பா இந்நேரம் என்னைத் தேடி இங்கே வந்துண்டிருப்பார். நாம உடனடியா இங்க இருந்து போகனும். ப்ளீஸ் என்னோட வாங்க………”
“அவனை நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்……” – அடிக்குரலில் கர்ஜித்தபடி உள்ளே நுழைந்தார் கிட்டு.
“மாமா.. இதுல நீங்க தலையிடாதீங்கோ. உங்களுக்கு ஒன்னும் தெரியாது.”
“என்ன தெரியாது?, நீயும்,இவளும் காதலிச்சதும் தெரியும். நீ இப்போ இவளோட ஓடிப் போக ப்ளான் பண்ணிண்டிருக்கிறதும் தெரியும்”
“என்ன உளர்றீங்க? நான் இவளைக் காதலிச்சேனா?”
“இல்ல… இல்ல சித்தப்பா.. எங்கப்பாக் கிட்டேயிருந்துத் தப்பிக்க, நான்..நான் தான் அப்படியொரு பொய் சொன்னேன். மத்தபடி சேத்ரனுக்கும்,எனக்கும் இடையில எதுவும் இல்ல” – சின்னக் குரலில் தலை குனிந்தபடி கூறியவளைக் கண்டு மீண்டும் “வா…வாட்?” என்றான் அவன்.
“என்ன காரியம்மா பண்ணி வைச்சிருக்க நீ?, உன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்ன்றதுக்காக எத்தனை பேரை பலியாக்கப் பார்த்திருக்க?”
“எனக்கு வேற வழி தெரியல சித்தப்பா…..” முகத்தை மூடிக் கொண்டு அழுதவளைக் கண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை மூவருக்கும்.
தேவையில்லாத இடியாப்பச் சிக்கலுக்குள் அனைவரும் மாட்டிக் கொண்டு நிற்பதை உணர்ந்து கொண்ட கிட்டு “நீ இப்பவே என்னோட கிளம்பு. உன்னைக் கொண்டு போய் உங்கப்பாக் கிட்ட ஒப்படைச்சாத் தான் நான் உயிரோட இருக்க முடியும்” என்றார்.
பயத்தில் விதிர்த்துப்போன நயனா “வே…வேண்டாம் சித்தப்பா.. ப்ளீஸ்.. எங்கப்பா என்னை உயிரோட கொழுத்திடுவார். வேண்டாம் ப்ளீஸ்…”
“இப்போ உன்னைக் கொண்டு போய் விடாட்டி, எங்க 3 பேரையும் கொழுத்திடுவாரேம்மா?”
“மாமா… என்ன நடக்குது இங்க?, என்னைக் காதலிக்கிறதா சொல்லி கல்யாணத்தை நிறுத்த நயனா நினைச்சது உங்களுக்கு முன்னமே தெரியுமா?”
“ஆமாம். சேஷூ அண்ணா.. நம்ம வீட்டுக்கே வந்து மிரட்டிட்டுப் போனார்”
“ஓ! அதனால தான் என்னை வெளிநாடு அனுப்ப அவசர,அவசரமா ஏற்பாடு பண்ணிட்டிருக்கீங்களா?, ஒரு வார்த்தை நீங்க அன்னைக்கே சொல்லியிருந்தா.. இந்த நிலைமை வந்திருக்காதுல்ல?”
“என்னடா பண்ணியிருப்ப?, ம்? என்ன பண்ணியிருப்ப?, அவங்கப்பன் கோடீஸ்வரனை மீறி உன்னால என்ன பண்ணியிருக்க முடியும்?, அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்?, நீ தான் அவளை காதலிக்கலன்னு சொல்றியே! பின்ன எதுக்குடா உனக்கு இந்தச் சிக்கலான விவகாரம்?”
“அதுக்காக.. எப்படியோ போ-ன்னு எப்படி மாமா விட முடியும்?”
“எப்படியோ போ-ன்னு விடல. அவங்கப்பாக்கிட்ட தான் விடப் போறேன்”
“அவளுக்குத் தான் அங்க போக விருப்பமில்லன்றாளே!”
“அதனால?, அவ கேட்ட மாதிரி அவளை நீயே கல்யாணம் பண்ணிக்கிறியா?, அப்பத் தான் அவங்கப்பன் நம்மை உயிரோட எரிக்க வசதியா இருக்கும்”
“முட்டாள் மாதிரி பேசாதீங்க மாமா..”
“சேத்ரன்.. ப்ளீஸ்.. கல்யாணம்ன்னு ஒன்னு நடந்துட்டா… எங்கப்பாவால நம்மை எதுவும் செய்திட முடியாது. இது வெறும் பொம்மைக் கல்யாணம் தான்! இந்த ஒரு நாளை கடந்துட்டா போதும் எனக்கு.. தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுங்கோ.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்”
“நீ என்னம்மா அறிவே இல்லாம பேசிண்டிருக்க?, அப்படி ஈசியா முடியற காரியமா இது?, கௌரவம் போயிடுச்சுன்னு உங்கப்பன் அவனைக் கொன்னுப் போட்டுடுவான். அப்படி பாதியில போறதுக்கா.. அவனை நான் பொத்தி,பொத்தி வளர்த்தேன்?”
“மாமா…..”
“நீ சும்மாயிருடா. கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமத் தன்னைப் பத்தி மட்டுமே சுயநலமா யோசிச்சிண்டிருக்கா!, அம்புஜம், அந்தப் பொண்ணை அழைச்சிண்டு வா,வராட்டி இழுத்துண்டு வா. இவளைக் கொண்டு போய் இவ அப்பணாண்ட சேர்த்தாத் தான் நாம உயிரோட இருக்க முடியும்”
“மாமா.. அவ தான் லூசு மாதிரி உளர்றான்னா.. நீங்க அதுக்கு மேல பேசிண்டிருக்கேள்?, நயனா.. நடந்ததை எடுத்துச் சொல்லி உங்கப்பாக்கிட்ட நான் பேசுறேன். வா போகலாம்..”
“உன்னை எங்கேயும் நான் அனுப்ப மாட்டேன்”
“மாமா…….”
“என்னடா மாமா?, அவங்கப்பனைப் பத்தி நோக்குத் தெரியாது?, தாலி கட்டுற நேரம் பொண்ணைக் காணோம்னு கோபத்தில இருக்கிறவன்,உன் கூட உட்கார்ந்து பேசுற அளவு பொறுமையா இருப்பான்னு நினைச்சியோ?, நீ இந்த வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைக்கக் கூடாது”
“ஓ! அப்படியா?, உங்கப் பேச்சை கேட்டுண்டு இந்தப் பொண்ணை இப்படியே தெருவுல விட்றதா?? நயனா.. நீ வா..” என்று முன்னே நடந்தவனைக் கண்டுக் கோபமுற்று அருகே டிவி மீது வைத்திருந்த ஃப்ளவர் வேசை எடுத்து சேத்ரனின் பின் தலையில் ஒரு போடு போட்டார் கிட்டு.
“ஆஆஆஆஆஆ”-என்று நயனாவும்,அம்புஜமும் கத்தி அதிர.. தலையைப் பிடித்தபடி மயங்கிச் சரிந்தான் சேத்ரன்.
“என்ன காரியம் பண்ணிட்டேள்?”-பதற்றத்துடன் நயனா.
“பரவாயில்ல. ரெண்டு மணி நேரத்துல முழிச்சுப்பான். உங்கப்பன் கிட்டப் போய் உயிரை விட்றதுக்கு, இவன் மயங்கிக் கிடக்குறதே நல்லது. இப்போ நீ என்னோட வரப் போறியா இல்லையா?”
“வேண்டாம்.. வேண்டாம் சித்தப்பா.. நா..நானே போய்க்கிறேன்” – அழுகையுடன் சென்று விட்டவளைக் கண்டு விட்டது சனி என்று விட்டுக் கதவை அடைத்தார் கிட்டு.
சற்று நேரத்தில் “கிட்டுடுடுடு” என்ற கர்ஜனையுடன் உள்ளே நுழைந்த சேஷனிடம் நயனா இங்கே வரவேயில்லையென்று சாதித்து சேத்ரன் அவளுடன் செல்லவில்லை,இங்கே தான் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று அவனைக் காட்டி நம்ப வைத்து அவரை வெளியேற்றியவர்.. சேத்ரனை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்னை நோக்கிப் பயணப்பட்டு விட்டார்.
தந்தையிடமும் செல்ல முடியாமல்,உதவி கோரவும் யாருமில்லாமல் அலைந்த நயனா.. ஏற்கனவே மடிசாரில் செருகி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து விட்டு ரோட்டில் மயங்கி விழுந்தாள்.
மடிசாரும்,நகையுமாகத் திருமணக் கோலத்தில் சாலையில் கிடந்தவளை மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்க, கன்யா ஹோட்டல் ஓனர் ஆதி சேஷனின் புதல்வி அவள் என்று பரவிய செய்தி பத்திரிக்கையாளர்களைச் சென்றடைந்ததும் அனைவரும் மருத்துவமனையைச் சூழ்ந்தனர்.
உறவுக்காரர்கள்,ஊரார்கள் என அனைவரின் மத்தியிலும் மானம் போய் விட்ட நிலையில் கொதிகலனாய்ச் கொதித்துப் போயிருந்த சேஷன் அவளைத் தன் மகளே இல்லையென அறிவித்தார். அடுத்தடுத்த நிகழ்வுகளால் அதிர்ச்சி தாங்காமல் நயனாவின் பாட்டியும் நெஞ்சு வலியுடன் சொர்க்கம் சேர்ந்து விட… மருத்துவமனையில் அநாதையாக விடப்பட்டாள் நயனா.
மயக்கம் தெளிந்து சேத்ரன் கண் விழித்த போதுத் தான் காரில் அமர்ந்திருப்பதை உணர்ந்து முன் சீட்டிலிருந்த மாமாவிடம் விசாரித்தான். மெல்ல,மெல்ல காலையில் நடந்த சம்பவங்கள் நினைவிற்கு வர.. “நயனா எங்கே மாமா?,” என்றான்.
“அவ அவங்கப்பனோட போயிருப்பா”
“அப்டின்னா கல்யாணம் முடிஞ்சதா?”
“எனக்குத் தெரியாது. நீயும் தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்ல. இப்போ நாம சென்னை போயிண்டிருக்கோம். உன் சிங்கப்பூர் பயணம் கன்ஃபார்ம் ஆகுற வரை நீ அங்கே தான் இருக்கனும்! எதைப் பற்றியும் அனாவசியமா யோசிக்காம.. உன் வாழ்க்கையை வாழப் பார்! அந்தப் பொண்ணு வாழ்க்கையை அவளைப் பெத்தவங்க பார்த்துப்பாங்க! சின்னப் பொண்ணு அவ தான் மூளையில்லாம நடந்துக்கிறான்னா.. நீ அதை விட இருக்கியே டா! முழுசா உன்னை அவங்கப்பணாண்ட தூக்கிக் கொடுக்கத் தான் பாராட்டி,சீராட்டி வளர்த்தேனா.? உனக்கு நினைவு தெரியுறதுக்கு முன்னமே உங்கப்பன் போய்ச் சேர்ந்துட்டான்! அப்போ இருந்து தந்தைக்குத் தந்தையா உன்னை வளர்க்குறது நான் தான்! நோக்குத் தெரியுமோல்லியோ?”
“யாரு இல்லைன்னு சொன்னா?, இப்போ எதுக்காக அழறேள்?”
“இல்லடா. பெரிய இடத்து சமாச்சாரம் நமக்கெதுக்கு?, உன்னை ஏன் அவ இதுல இழுத்து விடனும்?, நீ காதலிச்சா கூடப் பரவாயில்ல!”
“சரி விடுங்கோ மாமா. எப்படியோ அவ அவங்கப்பன் கிட்ட சேஃபா போய்ச் சேர்ந்துட்டாயில்ல?,”
“ம்ம்ம்ம்”
“அப்போ நான் ஏன் அவசரமா சிங்கப்பூர் போகனும்?”
“இவ்ளோ நடந்ததற்கப்புறமும் நீ இங்கேயிருக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லடா.”
“அப்படி என்ன அவங்கப்பனால பண்ணிட முடியும்?, சினிமால வர்ற மாதிரி உடனே கொலையெல்லாம் பண்ணிட மாட்டார் மாமா. ஏன் இவ்ளோ பயப்படுறீங்க?”
“அவன் பணக்காரன் டா! என்னன்னாலும் பண்ணலாம்!,”
“கிழிப்பான்! நீங்க மட்டும் என் தலையில் அடிக்காம இருந்திருந்தா.. நான் அவளை நிச்சயம் இந்தக் கல்யாணத்துலேயிருந்து காப்பாத்தியிருப்பேன்! இப்போ பாவம், விருப்பமில்லாத பந்தத்துக்குள்ளே சிக்க வேண்டிய நிலைமை!”
“அவளைப் பத்தி நீ கவலைப்படனும்ன்னு அவசியமில்ல”
“நான் உங்களை மாதிரி சுயநலவாதியில்ல. பயந்தாங்கோழியும் இல்ல” – அவன் முறைத்துக் கொண்டாலும் கிட்டு அவர் முடிவிலிருந்து மாறவேயில்லை. ஆனால் நண்பர்கள் மூலம் விசயத்தைக் கேள்விப்பட்ட சேத்ரன் நயனாவைக் காண உடனே கோவைக்கு வந்தான்.
மருத்துவமனையில் உதவிக்கு யாருமின்றி.. விடாமல் அழுகையில் கரைந்ததில் கடும் ஜூரத்துடன் போக்கற்றுக் கிடந்தவளைக் கண்டவனுக்கு உள்ளே பதறியது.
ஆனால் அவனைக் கண்டதும் குரோதத்தைக் கக்கிய அவள் கண்கள் ‘நடந்தது அனைத்திற்கும் நீ தான் காரணம்’ என்றது.
அவன் மட்டும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு ஒரு முறை உதவி புரிந்திருந்தால்.. அவள் பாட்டியின் உயிர் பறி போயிருக்காது! அவள் தந்தை அடித்தும்,மிரட்டியும் தன் கோபத்தைக் காட்டுவதோடு நிறுத்தியிருப்பார்! அதன் பின்பு அன்னையிடமும்,பாட்டியிடமும் ஏதேனும் உதவியைப் பெற்று ஊர் விட்டு ஊரோ,மாநிலம் விட்டு மாநிலமோ சென்று கற்ற கல்விக்கேற்ப ஏதேனும் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு கொஞ்சம்,கொஞ்சமாகத் தன் இலக்கை நோக்கி முன்னேறியிருப்பாள்! அவள் தந்தையெனும் காட்டானின் கூண்டிலிருந்துத் தப்பித்து வந்த பறவையாய் சிறகை விரித்து பறந்திருப்பாள்! அனைத்தும்,அனைத்தும் இந்தச் சண்டாளனால் கெட்டது!
கோபத்தில் அவனை உறுத்து விழித்தவள் திக்கற்ற நிலையில் நிற்கதியாய் இன்று தன்னை நிற்க வைத்ததற்காக என்றேனும் ஒரு நாள் அவனைத்தேடி வந்து நிச்சயம் பழி வாங்கப் போவதாக மிரட்டினாள்.
இதில் தன் தவறு என்ன இருக்கிறதென்று அவன் எவ்வளவோ வாதாடியும் அவள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் உன் தந்தையை எதிர்க்க முடியாத உன் கோழைத்தனம் தான் என் மீதான வஞ்சகமாகத் திரும்பியுள்ளதென்று கூறினான் அவன்.
அப்படியே அவளை விட்டு விட முடியாதென்று அம்புஜம் மாமியை அவளுக்குத் துணையாக அமர்த்தினான். இதைக் கண்ட கிட்டு மீண்டும் தன் புளியமர மந்திரத்தைச் சொல்லி அவனை சென்னைக்கு விரட்டினார். அதற்குள் நயனாவின் அண்ணன் வைத்தி அவளைத் தேடி வந்து விட்ட படியால் தைரியமாகச் சென்னை கிளம்பினான் சேத்ரன்.
ஆச்சரியத்தின் ஆச்சரியமாக ஆணாதிக்கவாதி ஆதி சேஷனால் வளர்க்கப்பட்ட வைத்தியநாதனை அமெரிக்காப் பயணம் பெண்ணினத்தை மதிக்கும் சுத்த ஆணாக மாற்றியிருக்க.. தந்தை அறியாமல்.. தங்கைக்கு உதவி புரிந்தவன்.. தன்னோடே அவளை யு.எஸ்க்கும் அழைத்துச் சென்று விட்டான்.
சேத்ரனின் நினைவாலேயே தனது பேக்கர் ஆசைக்கு முழுக்குப் போட்ட நயனா அமெரிக்கா சென்ற பின் கம்ப்யூட்டர் துறையில் தனது மேற்படிப்பை முடித்தாள்.
அதன் பின்பு தந்தை சொற்படி இந்தியா திரும்பிய வைத்தி, இங்கேயே திருமணத்தை முடித்துக் கொண்டு செட்டில் ஆகியதுடன் தங்கையையும் தாய்நாடு திரும்புமாறு வற்புறுத்தினான். மீண்டும் தந்தையின் முகம் காண்பதை விரும்பாததாலும்,பாட்டியின் சாவுக்குத் தான் காரணமாகி விட்டோமோ என்கிற உறுத்தலாலும், நாடு திரும்ப விரும்பாத நயனா, அங்கேயே வேலையைத் தேடிக் கொண்டு, தங்கியிருந்த இடம்,பெயர் எனத் தன்னைப்பற்றிய அத்தனை அடையாளங்களையும் மாற்றிக் கொண்டாள்.
வருடங்கள் கடந்தும் சேத்ரன் மீது மாறாமலிருந்த கோபமும், தனிமையும் ஏன் வாழ்கிறோம் என்கிற எதிர்மறை எண்ணத்தை மனதில் விதைத்து, வக்கிரத்தைத் தூண்ட.. இப்போதுத் தான் கை தேர்ந்து விட்ட கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கை வைத்து விபரீதமாக விளையாடத் தொடங்கினாள்.
போதாதற்கு அருகேயிருந்த பள்ளியொன்று ஏழை மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசிப்பதாகப் புகார் எழ, பள்ளி மாணவர்களும்,பெற்றோரும் புலம்புவதைக் கண்டவள், அந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கை ஹாக் செய்து பல்லாயிரம் டாலர்களைக் கொள்ளையடித்து மாணவர்களின் கணக்கில் போட்டு விட்டாள். தார்மீகப்படி பார்த்தால்,அவள் புரிந்தது நற்செயல் தான்! ஆனால்.. சட்டப்படி தவறென்பதால்.. அவள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் மூலமாக அந்தப் பள்ளி அதிகக் கட்டணம் வசூலிப்பது வெளி வந்து, போலீஸ் அந்தப் பள்ளியின் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் அவள் செய்தது தவறெனக் கூறி சில ஆயிரம் டாலர்களை அபராதமாக விதித்து,இனி இவள் ஹாக்கிங்கில் ஈடுபட்டால்.. அதிகபட்ச தண்டனை கிடைக்குமென்று எச்சரிக்கை செய்து அனுப்பியது.
அப்படியும் அடங்காமல் அவள் பணி புரியும் நிறுவனத்தின் வங்கிக் கணக்கையே ஹாக் செய்ய முயன்றாள். இது முழுக்க,முழுக்க பொழுது போகாமல் செய்த வேலை தான்! ஆனால் யாரோ ஹாக் செய்ய முயல்வதை அறிந்த நிறுவனம் சுதாரித்து கொள்ள, மாட்டிக் கொள்ளும் முன் வேலையை ராஜினாமா செய்து விட்டு நாடு பெயர்ந்தாள்.
ட்ரெஸ்டென் சிட்டிக்கு அவள் வருகை தந்தது மிகச் சாதாரணமாக நடந்த செயல் தான் என்றாலும், லோக்கல் பத்திரிக்கைகளில் சேத்ரனின் பேக்கரியையும், ஸ்டோல்லென் ஃபெஸ்டிவலில் சேத்ரனையும் கண்டு விட்டு அவனைப் பழிவாங்கிடத் திட்டமிட்டாள்!
மறுபுறம் சிங்கப்பூர் சென்ற சேத்ரனுக்கு வேலை செய்யுமிடம் திருப்தியற்றுப் போக, அச்சமயம் நடந்த மாஸ்டர்பேஸ்ட்ரிசெஃப் என்கிற சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டான். செமி ஃபைனல்ஸ் வரை வந்தவன் தயாரித்த கேக் ஒன்று, நடுவர்களில் ஒருவரான ஜெர்மனி செஃப்ஃபுக்குப் பிடித்துப் போக.. அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மனியில் தனது பேக்கரியிலேயே அவனை வேலைக்கு எடுத்துக் கொண்டார்.
அதன் பின்பு ஜெர்மனி வந்து சேர்ந்தவன், அந்த பேக்கரியில் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த நண்பன் காண்டீபனுடன் சேர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் சின்னதாக ஒரு பேக்கரியைத் தொடங்கி விட்டான்.
அந்த மருத்துவமனை நிகழ்வுக்குப் பிறகு நயனா என்ன ஆனாள் என்கிற விவரம் யாருமே அறியாத ஒன்றாயிருந்தது. அவளைப் பற்றிய பேச்செடுத்தாலே கிட்டு மாமா எரிந்து விழுந்ததால் அவன் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால்.. எப்போதும் மனதினுள்ளே அவனுக்கு ஒரு நமைச்சல் இருந்து கொண்டே தானிருந்தது.
அதற்குக் காரணம் அவன் கையிலிருந்த அவளது டைரி! ‘காலேஜில் ஒருவன் வம்பு செய்கிறான்’ என அவனைத் தேடி அவள் வந்த போது, அவனிடம் இந்த டைரியை விட்டுச் சென்றிருந்தாள். அவனுடனே சிங்கப்பூர் வரை பிரயாணித்த அந்த டைரியிலிருந்த ரெசிபி ஒன்றைச் செய்து கிடைத்தது தான் இந்த ஜெர்மனி வாய்ப்பு!
பேக்கரியைப் பொறுத்தவரை அவனுக்கு நிகராக… ஏன், அவனை விட அதிகமாகக் கனவு கண்டவள் அவள்! டைரியின் கடைசி பக்கங்களில் அவள் வரைந்து வைத்திருந்த செட்-அப் கிட்டத்தட்ட அவனுடையதைப் போல் தோன்ற.. அதை அப்படியே வடிவமைத்தான். அத்தோடு நில்லாமல்.. அவளுடைய பெயரின் முதல் எழுத்தையே பேக்கரியின் பெயராகவும் வைத்தான். அந்த டைரியிலிருந்த ரெசிப்பிக்கள் ஒவ்வொன்றையும் மெனுவில் இணைத்தான். பேக்கரி தொடங்கியதும் கிட்டு மாமாவையும்,மாமியையும் அவன் தன்னோடு ஜெர்மனிக்கு அழைத்துக் கொள்ள.. பேக்கரியின் பெயரைப் பார்த்த மாமாவுக்குப் பேராச்சரியம்!
“அவளை நினைச்சு வைச்சதாடா இந்தப் பெயர்??, லவ் பண்ணலைன்னு தானே டா சொன்ன?,” என்ற கிட்டு மாமாவிற்கு இந்த விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் தான்!
காதலா இது?, தெரியவில்லை! இந்த உணர்விற்கு அவன் பெயர் வைக்க விரும்பவில்லை! அவளைக் கண்ட போதோ.. பழகிய போதோ.. உண்டானதல்ல இது! தன் கனவுகளை, அவள் எழுத்துக்களின் வாயிலாக டைரியில் கண்ட போது உருவானது! இந்த ரெசிப்பியை நயனா இருந்திருந்தால் எப்படி மாற்றி யோசித்திருப்பாள்..! இந்த பூச்செடியை எந்த மூலையில் வைத்தால் அவள் ரசித்திருப்பாள்.. என்று பார்க்கும் ஒவ்வொரு விசயத்திலும் அவளை நினைத்து.. மானசீகமாக அவளுடன் அவன் வளர்த்துக் கொண்ட உறவு! X,Y குரோமோசோம்களைத் தாண்டி அவனுள் விதைக்கப்பட்ட உணர்வு!
அவன் எண்ணி வைத்த அளவு அவள் சிறு பெண் அல்ல! மனதளவில் அவனை விடப் பெரியவள்! தந்தைக்கு அடங்கி வளர்க்கப்பட்டதால்.. தோன்றும் விசயங்களைனைத்தையும் மனதினுள்ளேயே பூட்டி வைத்துப் பழகிப் போனவள்.. எண்ணுவதையெல்லாம் டைரியில் எழுதுவதை வழக்கமாய் வைத்திருப்பாள் போலும்!
ரெசிபிக்களுக்கும்,குறிப்புக்களுக்கும் மத்தியில் அவ்வப்போது எட்டிப் பார்த்த அவளது ரசனை பூக்களாகவும்,பொம்மைகளாகவும் இருந்தது! தந்தையின் முகத்தை ஏகத்துக்கும் நக்கலாக வரைந்திருந்த விதத்தில் அவளது குறும்புத்தனம் தெரிந்தது! வடிவமே இல்லாத கிறுக்கல்கள் நிறைந்த பக்கங்கள் அவளது கோபத்தையும், ஆதங்கத்தையும்,இயலாமையையும் காட்டியது! இவை அத்தனையையும் கண்டவனுக்கு அவளைப் பற்றிய முந்தைய எண்ணம் அடியோடு மாறிப் போனது!
அனைத்தையும் மீறி டைரியின் நடுப் பக்கத்தில் வரையப்பட்டிருந்த அவனுடைய முழு நீள உருவம்! அவனறிந்து ஷேவ் செய்யப்பட்ட அவன் முகத்தை ஒரு முறை.. ஒரே ஒரு முறை தான் கண்டிருப்பாள்! ஆனால் அதை அத்தனைத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.. சிரிப்பும்,உற்சாகமும் நிறைந்தத் தன் முகத்தைக் கண்டவனுக்கு உள்ளே ஜில்லென்ற உணர்வு தாக்கி விட்டது! ஏன் வரைந்தாள்?, எதற்காக வரைந்தாள்?, தெரியவில்லை! படத்தின் கீழே ‘மாஸ்டர்’ என்று எழுதப்பட்டிருந்தது.
புட்டி மறைத்த நொள்ளைக் கண்களை வைத்துக் கொண்டு எத்தனை நுணுக்கமாக அவனது மூக்கு நுனி மச்சத்தைக் கூட வரைந்திருக்கிறாள்! கண்களை மூடி அவளை நினைத்துப் பார்த்தான்! பஸ் ஏறுவதற்கு முன்பு அவனைக் கண்டு லேசான வெட்கச் சிரிப்பை உதிர்த்த முகமும்.. அவசரமாகத் திரும்பிக் கொண்ட போது முன்னே விழுந்த நீளக் கூந்தலுமே கண்ணில் நின்றது! அவனும் கூட அவளை ரசித்திருக்கிறான்! சப்ப ஃபிகர் என்று பெயர் வைத்து விட்டு.. மூக்குக் கண்ணாடிக்குள் அவள் மறைத்து வைத்திருந்த அழகைக் கண்டிருக்கிறான்!
எது எப்படியோ! பழி வாங்கியே தீருவேன் என்று சபதமிட்டவள் எங்கிருக்கிறாள்?, என்ன செய்கிறாள்! தனது பேக்கர் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாளா?, கல்யாணம் செய்து கொண்டாளா? எந்தக் கேள்விக்கும் பதிலில்லாமல்.. அவள் வரவுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கத் தொடங்கினான்.
