அத்தியாயம் - 11

நனைந்து கொள்ள வா… மழையில்லாமலே!

இணைந்து கொள்ள வா.. உடல் இல்லாமலே!!! Just like that!!!

-இந்த மாதிரி மியூசிக் எல்லாம் நமக்கு ரொம்பவும் புதுசு இல்ல?, ரஹ்மான் சாரை விட யாரால இதையெல்லாம் நமக்கு இண்ட்ரொடியூஸ் பண்ண முடியும்?, பறந்து செல்ல வா..-ன்னு கூப்பிட்டு.. கைப் பிடிச்சுப் பறக்க வைக்குற அந்தக் குரல்கள் கிட்ட மறுக்கவா முடியும்?, ஹெட்-செட்ல ஓடிட்டிருக்கிற பாட்டோட நானும் பறந்துட்டு தான் இருக்கேன்!!

தனக்கும்,சேத்ரனுக்கும் இடையே நடந்த சம்பவங்களை ஏதோ ஒரு வேகத்தில் காண்டீபனிடம் கடகடவென ஒப்பித்தாள் நயனா. அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன் உடனேத் தன் வேலையைக் காட்டினான்.

“ஹ்ம்ம், எப்படியோ விஷம் குடிச்சுத் தான் கல்யாணத்தை நிறுத்தியிருக்க?, பேசாம அதை முன்னமே செஞ்சிருக்கலாமே!, ஏன் சேத்ரனை வேற இதுல இழுத்து விட்ட?”

“தீபன்ன்ன்?” – கடுப்பாகியவளிடம் “சரி விடு! ஆக, நீ ஹீரோ இமேஜ் வைச்சிருந்த சேத்ரன், உனக்கு அவசியத்துக்கு உதவலைன்னதும் உங்கப்பா மேல இருக்கிற கோபத்தையும் சேர்த்து அவன் மேலேயே காட்டி.. அவன் மண்டையைப் பொளந்துட்ட! அப்படித் தான?” –என்று வினவினான்.

“…………”

“ஆனா.. ஒன்னு! நீ எப்போ வந்து மண்டைய உடைப்பன்னு இந்தப் பையன் காத்திட்டு இருந்திருக்கான்றது அவன் முகத்தைப் பார்த்தாளே நல்லா தெரியுது”

“எதை வைச்சு சொல்றீங்க?”

“அங்க பாரு, அவ்ளோ தூரம் நிற்கிறான். ஆனா பார்வையெல்லாம் உன் மேல தான் இருக்குது”

ஆட்-ஷூட்டிற்காக ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்த சேத்ரனின் பார்வை வாசலருகே நின்றிருந்த நயனாவின் மீதே பதிந்திருந்தது.

“என்னைப் பார்க்கிறார் சரி!, ஆனா இது அந்த மாதிரிப் பார்வை தான்னு ஏன் சொல்றீங்க?”

“எந்த மாதிரிப் பார்வை?”

“அதான்.. என்.. என் மேல.. அ..அவருக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கிற மாதிரின்னு சொன்னேளே”

“யெஸ்!, ஆமாவா இல்லையான்னு அவனைக் கூப்பிட்டே கேட்டுடலாம்”

“தீபன்ன்ன்ன்ன்” – பல்லைக் கடித்து அடிக்குரலில் மிரட்டியவளைக் கண்டு கொள்ளாமல் நண்பனை அழைத்தான்.

“என்னடா?” என்றபடி நண்பனின் அருகே வந்தவனது பார்வை மீண்டும் நயனாவையே சுற்றி வந்தது.

“நீ நயனாவை ‘அந்த’ மாதிரி பார்க்குறன்னு எனக்கு ஒரு கம்ப்ளைண்ட் இருக்கு. ஆமாவா,இல்லையான்னு நீயே சொல்லு”

“அந்த மாதிரின்னா?”

“ம்ம்ம்ம்.. மன்மத ரசம் சொட்டுற மாதிரியான ஒரு காதல் பார்வை!!! பாரு, க்யூபிட் அங்கங்கே பறந்துண்டிருக்கு!”

சேத்ரன் இதற்கு பதில் சொல்லும் முன் குறுக்கிட்ட நயனா “அப்படியே க்யூபிட் பறந்தாலும், புடிச்சு அவன்ல போட்டு வேக வைச்சிடுவேன். வார்ன் பண்றேன்” என்று விட்டு முன்னே நடந்தாள்.

“பார்ப்போம் நீ அவன்ல வைக்கிறியா இல்லை மனசுக்குள்ள வைச்சிக்கிறியான்னு!”-பின்னேயிருந்து கத்திய காண்டீபனை அவள் கண்டு கொள்ளவேயில்லை!

பேக்கரி ஆட்களுடனே ஆட் ஷூட்டிங் நடத்த முடிவு செய்திருந்ததால் சேத்ரன்,நயனா,காண்டீபனிலிருந்துத் தொடங்கி பணியாட்கள் அனைவரும் வெள்ளை நிற செஃப் உடையில் பளபளத்தனர்.

நடக்குமோ,நடக்காதோ என்று ஒரு காலத்தில் அவள் ஏங்கிய விஷயம்! செஃப் உடையில் தன்னைக் கண்ணாடியில் கண்டதும் உள்ளே தோன்றிய உணர்வுகளை அவளால் வரையறுக்க முடியவில்லை. எப்படியோ முடிந்திருக்க வேண்டிய விசயம், எங்கெங்கோ சென்று அலைந்து கடைசியில் இந்தக் கதியை அடைந்திருக்கிறது! வழக்கம் போல் மனம் ‘எல்லாம் இவனால தான்’என்று பின்னே நின்று கொண்டிருந்த சேத்ரனைக் கரித்துக் கொட்டியது.

அவள் பார்வையை உணர்ந்து அருகே வந்தவன் “என்ன?, கோபமா என்னை முறைச்சு பார்த்திண்டிருக்க?, எப்பவோ நடந்திருக்க வேண்டிய விசயம் இது!, இவனால தான் கெட்டுச்சுன்னு என்னைத் திட்டிண்டிருக்கியோ?” என்றான்.

“அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?, எல்லாம் கெட்டது உங்களால தான?”

“இப்போ எல்லாம் நடந்திட்டிருக்கிறதும் என்னால தான்! அதையும் சேர்த்துச் சொல்லேன்”

“………….”

“இதுக்கு மட்டும் பதில் வராது. ராட்சசி”

“என்ன திட்றேள்?”

“ஹேய்.. என்ன இது?, எப்பவும் என் இடுப்பளவு உயரம் தான் இருப்ப. இப்போ என்ன இவ்ளோ வளர்ந்திருக்க? ஓ! ஹை-ஹீல்ஸா?, ஹ்ம்ம்! அத்தியாவசியமான ஒன்னு தான்! இப்போ தான் சரியா இருக்கு” – என்று கூறியபடியே கண்ணாடியில் தெரிந்த இருவரது உருவங்களை நோக்கினான் அவன்.

தன்னருகேத் தோளை இடித்தபடி நின்றிருந்தவனை நிமிர்ந்து நோக்கியவள், அவளைக் காணும் போதெல்லாம் பளபளத்துக் கொண்டிருக்கும் அவன் விழிகளைக் கண்டபடி “ஏழு வருஷத்துக்கு முன்னாடி நீங்க இப்படி இல்ல! இப்போ ரொம்ப மாறிட்டீங்க” என்றாள்.

“நானா?,” என்றபடி மீண்டும் கண்ணாடியை நோக்கியவன் கன்னத்தைத் தடவிக் கொண்டு “ஹ்ம்ம்,அப்போ தாடி,மீசையெல்லாம் வைச்சிண்டு ரௌடியாட்டம் இருப்பேன். இப்போ க்ளீன் ஷேவ் பண்ணி ஹேண்ட்சமா இருக்கேன். கரெக்டா?” என்றான்.

“அடேங்கப்பா! ஹேண்ட்சம்??, அதை நாங்க சொல்லனும்.”

“நீயும் சொல்லு. அதனால என்ன குறைஞ்சிடப் போகுது?”

“ஆனா.. நான் சொல்ல வந்தது அது இல்ல. தோற்றத்தைப் பொறுத்தவரைக்கும் பெருசா எந்த மாற்றமும் இல்ல.”

“பின்ன?”

உதட்டைக் கடித்தபடி அவன் புறம் திரும்பி நின்றவள் கைகளைக் கட்டிக் கொண்டு “உங்க கண்ணுல ஏதோ மாற்றம் தெரியறது. இங்கே என்னை மீட் பண்ணுன டே 1-ல இருந்து நான் நோட் பண்ணிட்டிருக்கேன். பளிச்,பளிச்-ன்னு என்னைப் பார்க்கும் போதெல்லாம் மின்னிக்கிட்டே இருக்கு. ஏழு வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு க்ளாஸ் நடத்தும் போது நீங்க இப்படியெல்லாம் பார்த்தில்லை. என்ன? ம்? என்ன? க்யூபிட் பறக்கறதோ?” என்றாள்.

உதட்டை வளைத்து நக்கலாகச் சிரித்தவன் “நேக்கு பறக்கறதோ இல்லையோ!, நோக்கு ஏழு வருஷத்துக்கு முன்னாடியே பறந்துடுத்து போல” என்றான்.

“வாட்ட்ட்ட்??”

“ஆமாம்! பறக்காமலா… அந்த டைரியோட நடு பக்கத்துல என் முழு உயரத்தை அவ்ளோ அழகா வரைஞ்சிருந்த? இதோ.. பாரேன்.. இங்கே தெரியுற மச்சத்தைக் கூட சரியா கவர் பண்ணியிருந்த!” – தன் மூக்கு நுனியைச் சுட்டிக் காட்டிக் கூறியவனைக் கண்டு வாயடைத்துப் போனது அவளுக்கு! இதை எப்படி மறந்தாள்?, ப்ளடி ஹெல்!!!!

“எல்லாம் சரி! அது என்ன ‘மாஸ்டர்’??”

“…………”

“அதை விடு. ஏன் என் படத்தை வரைஞ்ச?, எதுக்கு வரைஞ்ச? அப்போ உனக்கு ஏழு வருஷத்துக்கு முன்னாடியே என் மேல ஏதோ ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கு. அப்படித் தான?”

“அந்த மாதிரி எந்த எழவும் இல்ல”- சிடுசிடுத்தவளிடம்..

“ப்ச், இதை நான் கேட்கும் போது, ஹய்யோ மாட்டிண்டோமேன்னு வெட்கப்பட்டுத் தலையைக் குனிவ, பொறுமையா விளக்கம் கொடுப்பன்னுலாம் நினைச்சுருந்தேன்! நீ என்ன முகத்தை உர்ருன்னு வைச்சிருக்க?”

“இந்தப் பேச்செல்லாம் அநாவசியம் சேத்ரன். உங்க பேக்கரி பழைய நிலைமைக்கு வந்தப்புறம் என்னை இங்க இருந்து அனுப்பிடுங்க ப்ளீஸ்”

“முடியாது. அப்படியே உன்னை அனுப்பி வைக்கத் தான் ஏழு வருஷமா காத்திண்டிருந்தேனாக்கும்?, இனி உன்னை விட்றதா ஐடியாவே இல்ல. இப்போ நீ யோசிக்க வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்”

“என்ன?”

“டேட் பண்ணிட்டு லவ் பண்ணலாமா?, இல்ல லவ் பண்ணிட்டு டேட் பண்ணலாமான்றது தான்”

“எ….எ…என்ன்ன்ன்ன்னனனனனன???”

“யோசிச்சு வை.” என்று விட்டு சின்ன சிரிப்புடன் முன்னே நடந்தவன் மீண்டும் அருகே வந்து “நேக்கு இந்தக் கொண்டை பிடிக்கலன்னு அன்னைக்கே சொன்னேன்ல?” எனக் கூறி தூக்கிக் கட்டியிருந்த அவளது கொண்டையை அவிழ்த்து விட்டு.. இடை வரை தொங்கிய அலை,அலையான கூந்தலை ரசனையுடன் நோக்கி விட்டுத் திரும்பி நடந்தான்.

அன்றைய ஷூட்டிங்கிற்கான கான்செப்ட் இது தான். கிட்சனில் மாவு பிசைவதிலிருந்துத் தொடங்கி ராக் அவனில் வேக வைப்பது வரை அனைத்தையும் காட்சியாக்கிக் கடைசியில் தயாரித்தவற்றைச் சிறுவர்கள் நால்வருக்குச் சுவைக்கக் கொடுப்பது!

மாவை உருட்டுவதையும்,வீசுவதையும் ஸ்லோ மோஷனில் காட்டி, செஃப்கள் அனைவரும் தயாரிப்பில் பிஸியாக இருப்பது போல் அவர்களை அங்குமிங்கும் ஓட வைத்து,தட்டுக்களையும்,கரண்டிகளையும் பறக்கச் செய்தனர்.

ஒவ்வொரு செயலுக்கும் செஃப்களின் முக பாவங்களை.. கண்களைப் பெரிதாக விரிப்பது போல், ஓ!!!! என்று காதுகளைப் பொத்துவது போல் இப்படி விதவிதமாகப் போஸ் கொடுக்கச் சொல்லி.. கடைசியில் கிடைத்த உணவை அனைவரும் சேர்ந்து சிறுவர்களிடம் நீட்டுவது போல் காட்டி.. அவர்களது பதிலுக்காக நகம் கடித்தபடிக் காத்திருக்கச் செய்து… அவர்கள் பெருவிரலைக் காட்டி ‘சூப்பர்’ என்றதும் “யெஸ்ஸ்ஸ்ஸ்!” என்றபடிச் சந்தோசத்தில் கைத்தட்டுவதையும் உற்சாகமாகக் குதிப்பதையும் ஒரு நிமிடப் படமாக எடுத்தனர்.

ஒவ்வொருவரின் அலம்பல்களையும்,குறும்புகளையும் சமாளித்த படிக் கடந்த அன்றைய படப்பிடிப்பு நயனாவிற்கு முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. பிறந்ததிலிருந்து இது வரை வீட்டாரைத் தவிர யாரிடமும் இவ்வளவு பேசிச் சிரித்தது கிடையாது. மனதில் எப்போதும் குடி கொண்டிருக்கும் சோகம் மாறி உற்சாகமாகக் கூட உணர்ந்தாள். அன்று மட்டுமல்லாது, எடிட்டிங் முடிந்துக் கிடைத்த ஒரு நிமிட வீடியோவை பேக்கரி பணியாட்களுடன் சேர்ந்து அமர்ந்து கண்டது, ஒருவரையொருவர் கலாய்த்தது அனைத்தும் அவளை வேறு ஒரு உலகத்துக்கு இழுத்துச் சென்றது.

அன்று க்ராண்ட் ரீ-ஓபனிங் தேதி பொறிக்கப்பட்ட ஃப்ளையர்ஸ்கள் கைக்கு வந்திருந்தது. ஆளாளுக்கு ஒன்றைத் தூக்கிக் கொண்டு செல்ல.. தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் நயனா.

ஃபோனில் உரையாடியபடி அருகே வந்த சேத்ரன், அவள் கையிலிருப்பதைப் பறித்து எதிர் இருக்கையில் அமர்ந்தான். ஃப்ளையரில் தெரிந்த அவள் முகத்தைக் கண்டுச் சிரித்தவன் “உனக்கு நல்ல ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் நயனா…” என்றான்.

“உனக்கு யார் மோகினின்னு பேர் வைச்சான்னு நக்கல் அடிச்சீங்க?”

“தப்புப் பண்ணிட்டேன்! மோகினின்ற பேர் உன்னைத் தவிர யாருக்கும் செட் ஆகாதுன்னு சொல்லிருக்கனும்.”

“இதுக்கு நான் வெட்கப்படனுமா?”

“ச்ச,ச்ச உன்னை வெட்கப்பட வைக்கிற விசயங்கள் எதையும் இன்னும் பேசவே நான் ஆரம்பிக்கலை. அதுக்குள்ள அவசரப்பட முடியுமா?” –

எரிச்சலுடன் காதோர முடியை ஒதுக்கியவள்.. “எப்போ இருந்து உங்களுக்கு இந்த ஃபீலிங்க்ஸ்?, எனக்குத் தெரிஞ்சு நீங்க என்னை ஆர்வமாப் பார்த்ததுக் கூட கிடையாது! இங்கே வந்ததுக்கப்புறம் தான் ஆரம்பிச்சதுன்னு சொல்லாதீங்கோ. சத்தியமா நான் நம்ப மாட்டேன்” என்றாள்.

“நான் பதில் சொல்றது இருக்கட்டும்!, நீ ஏன் என் படத்தை டைரில வரைஞ்ச?”

“அதுல எங்கப்பா படத்தைக் கூடத் தான் வரைஞ்சிருந்தேன்.”

“ஹாஹா.. பார்த்தேன்! டெவில் லுக்ல இருந்தார் அவர். ஆனா என் படம் அப்படி இல்லையே! ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு! கோட்-சூட் எல்லாம் போட்டு, முன்னுச்சி முடியெல்லாம் பறக்குற மாதிரி.. முழு சிரிப்போட..!ஹ்ம்ம், என்னை இஞ்ச்,இஞ்ச்-ஆ ரசிச்சிருந்தா மட்டும் தான் அந்த மாதிரி வரைஞ்சிருக்க முடியும்!”

“ஓ காட்!, நீங்க கடுகை மலையாக்குறீங்க சேத்ரன்”

“சரி, அது என்ன மாஸ்டர்?”

“மாஸ்டர்ன்னா மாஸ்டர்! கத்துக் கொடுக்கிற குருவை மாஸ்டர்ன்னு எழுதியிருப்பேன்”

“ப்ச்,போ நயனா! உன் விளக்கம் எதுவும் நம்புற மாதிரி இல்ல”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ”

“என்னக் கேட்ட?”

“எப்போயிருந்து என் மேல உங்களுக்கு லவ்ன்னு கேட்டேன்”

“ச்ச,ச்ச லவ்ன்னுலாம் பச்சையா சொல்லிட முடியாது”

“பின்ன?”

“என் வயசுக்கு நான் உன் மேல லவ்ன்னு சொல்லிட்டுத் திரிஞ்சேன்னா.. ஊரே சிரிக்கும்! பட்.. காதல்ன்ற வார்த்தை தான் ஃபேன்ஸியா இருக்கும்ன்னா.. அந்த வார்த்தை தான் உன்னைத் திருப்தி படுத்தும்னா அதையே சொல்றேனே! எனக்கு… அந்த டைரில ஒவ்வொரு பக்கத்திலும் தெரிஞ்ச நயனா மேல காதல்! நயனா எழுதி வைச்சிருந்த ரெசிபிஸ் மேல காதல்! வெறும் மாவு,சர்க்கரைன்னு எழுதாம, என்னை மாதிரியே ஒவ்வொரு இன்கிரிடியண்ட்டெயும் ஸ்பெஷலா ட்ரீட் பண்ற நயனாவோட சின்சியாரிடி மேல காதல்! உன் கனவு மேல காதல்.. உன் கற்பனை மேல காதல்.. உன் இன்னசென்ஸ் மேல காதல்.. எதையும் அவ்ளோ சீக்கிரம் வெளிப்படுத்தாத உன் குணத்து மேல காதல்… இப்போ கூட… அழுத்தமா.. என் மேல எந்த ஃபீலிங்க்ஸ்ம் இல்லேன்னு கெத்தா சொல்ற தைரியத்தின் மீது காதல்!” – அடுக்கிக் கொண்டே சென்றவனை “போதும்! போதும்!” என்று நிறுத்தியவள்…

“ட்ராமாட்டிக்கா பேசிண்டிருக்கீங்க சேத்ரன்” என்றாள்.

“ஏன் பிடிக்கலையா?, பிடிக்கலன்னா சொல்லு. மோடை மாத்துறேன்”

“எப்படி?” – அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன், முன்னே வந்து.. அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்று..

“ஒரே ஒரு கிஸ்ஸ்ஸ்! ரொம்ப்பபபப டீப்பாஆஆஆ! என் ஃபீலிங்க்ஸ் எல்லாத்தையும் அது சொல்லிடும்! – அவன் முடித்ததும் கண்களைப் பெரிதாக விரித்தவளுக்குத் தலை முதல் கால் வரை சிவந்து போனது.

கைகளால் அவன் முகத்தைத் தள்ளி “எ…எ..என்ன பேச்சு பேசுறீங்க?, ச்சி,ச்சி உங்களுக்கு வெட்கமே இல்ல கொஞ்சம் கூட” என்று பொறிந்தாள்.

“எனக்கு மட்டுமா இல்ல?, உனக்கும் தான் இல்ல. இவ்ளோ பேசறேன். நீ கொஞ்சம் கூட வெட்கப்படாம திட்ட மட்டும் தான் செய்யற?”

மீண்டும் காதோர முடியை ஒதுக்கியபடி அவனை முறைத்தவள் “உங்களோட பேச்சு வார்த்தை வைச்சுக்கிறதே தப்பு” எனக் கூற…

“ஹே… காது ஏன் இவ்ளோ சிவந்திருக்கு?, ஒரு வேளை நீ வெட்கப்படுறனால சிவக்குதோ?, ஹஹாஹா! கண்டுபிடிச்சிட்டேன்” – சட்டென இருக்கையை விட்டு எழுந்தவள் எங்கோ நோக்கியபடி “அது இந்த க்ளைமேட்னால சிவந்திருக்கு” என்று பொறிந்து விட்டு விறுவிறுவென நடந்து விட்டாள் பின்னே அவன் கலகலவென சிரிப்பதைக் கண்டு கொள்ளாமல்!