அத்தியாயம் - 12

சிந்தும் வியர்வை தீர்த்தமாகும்…

சின்னப் பார்வை மோட்சமாகும்..

-காதலன் படத்தோட சாங்க்ஸ் இல்லாம யாரோட ப்ளே லிஸ்ட்டும் இருக்காது! Damn sure! ம்ஹ்ம்ம்-ன்னு எஸ்.பி.பி வாய்ஸ் ஸ்டார்ட் ஆகும் போதே கூடச் சேர்ந்து பாட ஆரம்பிச்சுடுவேன் நான்! இந்தப் பாட்டுல இசைக்கு ஏற்ற மாதிரி பிரபுதேவா இடுப்பை ஒடிக்கிறதை ட்ரை பண்ணாத ஆளே இருக்க மாட்டாங்க! நானும்,என் அக்காவுக்கும் இந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி விளையாடுனது தான் நியாபகத்துக்கு வருது! ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாடியும், ஒவ்வொரு நினைவுகள்,நிகழ்வுகள் இருக்கு! உங்களுக்கும் அப்படித் தானே?

அடுத்து வந்த நாட்கள் ‘N-கேக்ஸ்’ பணியாளர்களை மிகவும் பிஸியாகவே வைத்திருந்தது எனச் சொல்லலாம். அந்த வாரக் கடைசியில் க்ராண்ட் ரீ-ஓபனிங்கிற்கு ப்ளான் செய்திருந்த படியால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.

புது ரெசிப்பிக்களுடன் மக்களைக் கவர்வது அவர்களது நோக்கமாக இருந்ததினால்.. திட்டமிட்டபடி இப்போது ட்ரெண்டில் இருக்கும் கேக்குகளையும்,மஃபின்ஸ்,பேஸ்ட்ரிக்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர். ஹெல்தி,க்லட்டன் ஃப்ரீ,வீகன் எனத் தனித் தனி வகைகளும் அதில் அடங்கியிருந்தது! ஃப்ளையர்ஸ்களிலும்,விளம்பரங்களிலும் மாற்றப்பட்ட மெனுக்களை வெளியிட்டிருந்தபடியால் மக்கள் நிச்சயம் தேடி வருவார்களென நம்பினர்.

க்ளவுஸ் அணிந்த கரங்களால் ராக் அவனில் இருந்து மஃபின்ஸ்களை வெளியிலெடுத்துக் கொண்டிருந்த நயனாவின் அருகே வந்தான் சேத்ரன்.

“நயனா………”’

“நான் இப்போ பிஸி. என் கிட்ட வம்பு வளர்க்காதீங்கோ”

“ச்ச,ச்ச இது பர்சனல் இல்ல. அஃபிஷியல் தான்!”

“அப்ப சொல்லுங்கோ”

“இல்ல,புது ரெசிபிஸ்,மெனு சேஞ்ஜ் எல்லாம் ஓகே! ஆனா.. பார்த்ததும் ஈர்க்குற மாதிரி ஒரு செண்டர் பீஸ் வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கேன். நீ என்ன சொல்ற?”

“க்ரேட் ஐடியா! என்ன வைக்கறது?”

“ஒரு க்ராண்டியரான வெட்டிங் கேக் டிசைன் பண்ணலாம்”

“வாவ்வ்வ்!! சூப்பர் சேத்ரன்! என்ன மாதிரி டிசைன் எதிர்பார்க்கிறீங்க?”

“ரீசண்ட்டா ஒரு பேக்கரி வெட்டிங் நடக்குற சர்ச்சை கேக்கா டிசைன் பண்ணியிருந்தாங்க இல்லையா?, அந்த மாதிரி ஏதாவது??!”

“நீங்க எதுவும் யோசிச்சிருக்கீங்களா?”

“ஹ்ம்ம், ஆளுயுர வெட்டிங் கப்பிள் கேக் செய்தா என்ன?”

“ஓகே!, ஆனா… இதுல என்ன புதுசா இருக்கு”

“இருக்கு. சொன்னா நீ திட்டுவ”

“பரவாயில்ல. சொல்லுங்கோ”

“இங்க வெட்டிங் கப்பிளா நிற்கப் போறதே நாம ரெண்டு பேர் தான்”

“புரியல”

“அதாவது நயனா… நாம ரெண்டு பேரும் வெட்டிங் டிரெஸ்ஸைப் போட்டுண்டு போஸ் கொடுக்கப் போறோம். நம்மளை மாடலா வைச்சு கேக் டிசைன் பண்ணப் போறோம். சோ.. கேக்ல தெரியப் போற முகங்கள் நம்மளோடது! நேர்ல பார்க்குற முகங்களே கேக்கில் தெரியறச்ச.. கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும் இல்லையா?”

இடுப்பில் கை வைத்து முறைத்தவளைக் கண்டுத் தலையைச் சொறிந்தவன் “எல்லாம் பேக்கரியோட நன்மைக்காகத் தான். ப்ளீஸ் நயனா” என்றான்.

“சரி, ஆனா.. எக்ஸாக்ட்டா முகங்களை செதுக்க யாரால முடியும்?”

“முடியும். நம்ம ரிச்சர்ட் ஒரு முறை ட்ரை பண்ணினான். நல்லா வந்தது. அவனை வைச்சு ஃபேஸை கம்ப்ளீட் பண்ணிக்கலாம்.”

“ஹ்ம்ம்ம்… எனக்கு ஓகே!” – அதிகம் வாதாடாமல் அவள் ஒப்புக் கொண்டதும் மறுபேச்சின்றி நகர்ந்து விட்டான் அவன்.

விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பிரம்மாண்ட வெட்டிங் கேக் செய்வதற்கு திட்டமிட்டிருந்தபடியால் அன்று இருவரும் வெட்டிங் உடைகளில் மாடல் புகைப்படம் எடுத்துக் கொள்வதெனத் தீர்மானித்தனர்.

அதிகாலையிலேயே அவளது அறைக் கதவைத் தட்டிய சேத்ரன் ஒரு கையில் காஃபி கப்பும், மறு கையில் பெரிய பார்சல் ஒன்றையும் வைத்திருந்தான்.

“உள்ளே வரலாமா?”

“யா யா.. ஷ்யூர்..”

“இந்தா.. உனக்காகச் சுடச்சுட நம்ம பக்கத்து ஃபில்டர் காஃபி!”

“அடேங்கப்பா! நன்றி நன்றி!”என வாங்கிக் கொண்டவள் “அது என்ன கவர்?” என்றாள்.

“உனக்குத் தான். வெட்டிங் டிரஸ் போட்டுண்டு ஃபோட்டோ எடுத்திக்கிறதா ப்ளான் பண்ணியிருந்தோமே! மறந்துட்டியா?” – அவன் நீட்டிய கவரைத் திறந்து ஆடையை வெளியே எடுத்தவள்.. வியப்புடன் “ரொம்ப காஸ்ட்லியா தெரியறதே! வெறும் ஃபோட்டோவுக்கு இத்தனை மெனக்கிடனுமா?” என்றாள்.

“ப்ச், நயனா.. முதல்,முதல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு வாங்கிக் கொடுக்கிற டிரெஸ், வெட்டிங் டிரெஸ்ஸா எத்தனை பேருக்கு அமையறது சொல்லு?, எனக்குக் கிடைச்ச சான்ஸை நான் நல்லபடியா யூஸ் பண்ணிக்க வேண்டாமா?”

“அப்படிப் பார்த்தா.. நீங்க மடிசார் வாங்கிண்டு வந்திருக்கனும்”

“நோ,நோ. இடத்துக்குத் தக்க நம்ம பழக்கங்களை மாத்திக்கிறதுல எந்தத் தப்பும் இல்ல. சேத்ரன்ற என் பெயரை இங்க யாராலேயும் சரியா உச்சரிக்க முடியாதுன்ற காரணத்துக்காக நான் ஷேன்னு மாத்திக்கலையா?, அந்த மாதிரி!”

“அப்போ கல்யாணம் கூட வேற மதத்து முறைப்படித் தான் பண்ணிப்பேளோ?”

“அதுல என்ன தப்பிருக்கு?, எம்மதமும் சம்மதமே! டாபிக்கை மாத்தாம.. டிரெஸ் நோக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு. அப்படியே இதை வாங்கிண்டு வந்தவனைப் பிடிச்சிருக்கான்னு சேர்த்துச் சொல்லு”

“டிரெஸ் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு… வாங்கிண்டு வந்தவரைப் பிடிச்சிருக்கான்னு இனிமே தான் யோசிக்கனும்!”

“பொறுமையா யோசி. ஜென்னி வருவா இப்போ, உன் மேக்-அப் எல்லாம் பார்த்துக்கிறதுக்கு!”

“மேக்-அப்பா?, இதெல்லாம் ரொம்ப ஓவர் சேத்ரன்”

“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, எனக்குக் கிடைச்ச இந்த சான்ஸை நான் மிஸ் பண்ண விரும்பல நயனா.. சோ.. கெட் ரெடி” – எனக் கூறி விட்டு அவன் சென்று விட.. கையிலிருந்த உடையைக் கண்டவளுக்கு ஏனோ உள்ளே சிலிர்த்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் கதவைத் தட்டிய காண்டீபன் டிரெஸிங் டேபிள் முன்பு கையில் பூங்கொத்துடன் வெட்டிங் உடையில் அமர்ந்திருந்த நயனாவைக் கண்டு விழி விரித்தான்.

“வாவ்வ்வ்வ்!!! இன்னிக்கு என் நண்பன் தூங்கின மாதிரி தான்” – என்று கேலி செய்தவனும் கோட்,சூட்டில் ஏதோ கல்யாணத்திற்கு வந்தவன் போல.. டீக்காக டிரெஸ் செய்திருந்தான்.

இடை வரைக் குனிந்து அவளிடம் ஸ்டைலாகக் கை நீட்டியவன் “நான் உங்களை எஸ்கார்ட் பண்ண வந்திருக்கேன் பிரின்சஸ். மே ஐ??” என்றதும் சிரிப்புடன் அவன் கையின் மீதுத் தன் கையை வைத்தவள் எழுந்து நடந்தாள்.

கருப்பு நிற கோட்-சூட்டில் தன் உயரத்தால் அனைவரையும் கவர்ந்தபடி.. கண்களில் வசீகரமும், உதட்டில் புன்னகையுமாய் அவள் புறம் திரும்பிய நோக்கிய சேத்ரன் விழிகளைப் பெரிதாக விரித்தான்.

ஏ-லைன் கவுன் எனப்படும் முழு நீள வெள்ளை நிற உடை அது! இரண்டு லேயரைக் கொண்ட உடை, உள்ளே வெள்ளைத் துணியிலும், வெளியே முழுக்க லேஸ் வேலைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. அகலமான கழுத்துடன் தொடங்கிய உடை ஆஃப் ஷோல்டருடன் அவளது வெள்ளை நிறத் தோள்ப்பட்டையை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

முன்னுச்சி முடியைத் தூக்கிச் சீவி பஃப் வைத்து, மீத முடிகளைக் கொண்டைக்குள் அடைத்திருந்தனர். கொண்டையிலிருந்து தொடங்கிய வெய்ல் இடையைத் தாண்டி வழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. காதில் ஒரு சிறிய முத்துத் தோடு, கழுத்தை ஒட்டிச் சிறிய ஒன்-லைன் முத்து நெக்லெஸ். அவ்வளவு தான்! சிம்பிள் அண்ட் எலிகெண்ட் என்று சொல்லுமளவிற்கு இருந்தது!

அத்தனை அலங்காரங்களையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வில்,பதட்டத்தில் படபடவென இமைகளை அடித்துக் கொண்ட அந்தப் பெரிய நயனங்களும், தயக்கமாய் கீழுதட்டில் பதிந்த பற்களும், மாசுமருவற்ற கன்னங்களும் அவனை அதிகம் ஈர்த்தது. அவன் அன்று கண்ட 19 வயதுச் சிறுமியல்ல இவள்! முழுமையடைந்த பெண்!

வியப்பு மாறாமல் தன்னையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டுத் தானாக தலை கவிழ்ந்து விட… ஆனாலும் பிடிவாதமாக நிமிர்ந்து அங்கிருந்தவர்களை நோக்கினாள்.

பேக்கரி முழுதும் க்ராண்ட்-ஓபனிங்கிற்காக அலங்கரிக்கப் பட்டிருந்தது என்னவோ சரி! ஆனால் இந்தச் சிவப்பு நிற ஹார்ட் பலூன்கள், ரோஜாக்கள் எதற்கு இடைச்செருகலாக??, அதிலும்… பணியாளர்கள் அனைவரும் எதற்காக திருமணத்திற்கு வந்தவர்கள் போல அழகழகான உடைகளில் மின்னுகிறார்கள்?? அவளை மேலும் யோசிக்க விடாமல் இடைமறித்தான் சேத்ரன்.

“நயனா.. இதுக்குப் பேரு தான் வெட்கப்படுறதா?”

“என்ன சொல்றீங்க?”

“நான் இந்தப் பக்கம்,இந்தப் பக்கம் இருக்கேன். என் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசலாம். தப்பில்ல” –புதிதாய்ப் பூக்கத் தொடங்கியிருந்தக் கன்னத்து ரோஜாக்களை மறைக்க எங்கோ பார்வையை பதித்துக் கொண்டுப் பதில் பேசியவளைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.

நேராக நிமிர்ந்து அவனை நோக்கியவள் “எனக்கு வெட்கமெல்லாம் இல்ல. உங்களை நேரா பார்த்து என்னாலப் பேச முடியும்” – என்று சட்டமாகக் கூற.. பதில் பேசாமல் அப்படியா என்பது போல் புருவம் உயர்த்தியவன் லேசாய்த் தலை சாய்த்து கண்ணைச் சுருக்கிச் சிரித்துக் காட்டவும், உள்ளுக்குள் சுருசுருவென ஏதோ ஒன்று தலை முதல் கால் வரை தறிகெட்டு ஓடியது அவளுக்கு.

“இதைப் புடிச்சு அவன்ல வேக வைச்சாத் தான் சரி வரும்” – பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்தவளைக் கண்டதும் “ஹாஹாஹாஹா”-வென வாய் விட்டுச் சிரித்தான் சேத்ரன்.

“சிரிக்காதீங்கோ. என்ன நடக்குது இங்க?, வெட்டிங் கேக் செய்ய ஃபோட்டோ எடுக்கிறோம்ன்னீங்க?, இங்கே ஏதோ ரியல் வெட்டிங் நடக்கப் போற மாதிரி எல்லாம் அலங்காரம் பண்ணிண்டு வந்திருக்காங்க?”

“ரியல் வெட்டிங் இல்ல. நம்ம ஸ்டைல் வெட்டிங்”

“அப்படின்னா?”

“எல்லாம் போகப் போகப் புரியும். ஃபோட்டோ எடுக்கிறாங்க பாரு. போஸ் கொடு” – புகைப்படக் கலைஞர்கள் இருவரையும் நிற்க வைத்து விதவிதமாக போஸ் கொடுக்கச் செய்து ஃபோட்டோக்களைக் க்ளிக்கித் தள்ளினர்.

ஒரு வெட்டிங் கேக்கிற்கு எதற்காக இத்தனை ஃபோட்டோக்கள் எனச் சத்தியமாக நயனாவிற்குப் புரியவேயில்லை. ஆனாலும் அருகே நின்றிருந்தவனின் முகத்திலிருந்த புன்னகை,அவனது அருகாமை, தனக்குள்ளேயே புதைத்து விடுபவன் போல.. அவள் கைகளைத் தன் கைகளுக்குள் அவன் பதித்திருந்த விதம், அனைத்தையும் மீறி அவனது பார்வை! அது காதலை யாசிக்கவில்லை! நெஞ்சு நிறைய அவன் அவள் மீது கொண்டிருந்த நேசத்தைக் கொட்டிக் கொண்டிருந்தது.

சுற்றியிருந்தவர்களின் முகங்களிலிருந்த சிரிப்பு,குசுகுசுவெனத் தங்களுக்குள் எதையோ அவர்கள் பேசிக் கொண்ட விதம், ஏனோ உள்ளே குறுகுறுப்பை ஏற்படுத்தினாலும், எதையும் வெளிப்படுத்தி, இருக்கும் மனநிலையை அவள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால்.. எதிர் கேள்வி எதுவும் கேட்காமல்.. சூழ்நிலையுடன் ஒத்துப் போனாள்.

இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும். பேக்கரியின் பின்புறமிருந்த கார்டனில் கடும்குளிரில் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென அவள் புறம் திரும்பி நின்று.. அவளையே நோக்கியவனை ‘என்ன’ என்பது போல் பதில் பார்வை பார்த்தாள் அவள்.

“நயனா….”

“ம்ம்?”

“எனக்கு 34 வயசாயிடுச்சுன்னு உனக்குத் தெரியும் தான?””

“ஆமா, அதனால என்ன இப்போ?”

“இல்ல,என் வயசு ஆண்களுக்கெல்லாம் கல்யாணமாகி ஐந்து வயசு குழந்தை இருக்கிறதா அடிக்கடி சொல்லுவியே?”

“…………”

“ஏன் சொல்றேன்னா, நாம இனிமே டேட் பண்ணி, லவ் பண்ணி அப்ப்ப்புறமா கல்யாணம் பண்ணுறதுக்குள்ள எனக்கு 40 வயசு ஆயிடும். என் இளமை முழுக்க இப்படியே கழிஞ்சுடுமோன்னு எனக்குப் பயமாயிருக்கு. அதுலேயும் நீ ரொம்ப அழுத்தக்காரியா வேற இருக்க. மனசுல இருக்குறதை அவ்ளோ சீக்கிரம் வெளியே சொல்ல மாட்டேங்குற. என் மேல லவ் இருக்குன்னு நீ ஒத்துக்கிறதுக்கே இந்த ஜென்மம் முடிஞ்சுடும் போல!”

“அதனால????”

“அதனால…. முட்டி போட்டுண்டு கையில மோதிரத்தோட.. வில் யூ மேர்ரி மீ-ன்னு கேட்குறதை விட.. இப்படி உன் கையைப் புடிச்சு இந்த மோதிரத்தை மாட்டி ‘லெட்ஸ் மேர்ரி’-ன்னு ஷார்ட்டா முடிச்சுக்கிறது சரின்னு தோன்றது!” – கூறி முடிக்கும் முன் அவள் இடது கையைப் பற்றி மோதிரத்தை அணிவித்து விட்டிருந்தான் அவன்.

அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்தை பேக்கரியின் உள் பகுதியிலிருந்த நீண்டக் கண்ணாடி ஜன்னல்களின் வழியேப் பார்க்க முடியும். இந்தக் காட்சிக்காகவே கூடியிருந்தது போல், அனைவரும் அந்த ஜன்னலருகே நின்றிருந்தனர். அவன் மோதிரம் அணிவித்து முடித்ததும் “ஊஊஊஊஊஊஊ” எனச் சத்தமிட்டு அனைவரும் கைத்தட்ட… நடந்து முடிந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து வெளி வராத நயனா.. திடுக்கிட்டுத் திரும்பி ஜன்னல் புறம் நோக்கினாள்.

முழுச் சிரிப்புடன் “நன்றி! நன்றி மக்களே”- என இடை வரை குனிந்து நன்றி கூறியவனைத் திரும்பி நின்று முறைத்தாள் அவள்.

“என்ன.. என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கீங்க நீங்க?, எதுக்கு இந்த மோதிரத்தை என் விரல்ல போட்டு விட்டீங்க?”

“ஷ்ஷ்ஷ்ஷ்…… சும்மா கத்தக் கூடாது. இப்போவும் பிரச்சனை இல்லை. உனக்குப் பிடிக்காட்டி கழட்டிக் கொடுத்துடு. ரொம்பவும் சிம்பிள்!”

“என்ன?, கழட்ட மாட்டேன்னு தைரியமா?”

“ச்ச,ச்ச, எங்க கழட்டிடுவியோன்னு பயந்துண்டு இருக்கேன்டி”

“டி-யாஆஆஆஆ?”

“அதான் ஆத்துக்காரியாய்ட்டியே! இனி என்ன மரியாதை!”

“ஒரு மோதிரம் போட்டா… கல்யாணம் நடந்துட்டதா அர்த்தமா?, லீகலா நடக்குற வரைக்கும் இதெல்லாம் செல்லாது”

“நீ எப்போ ஓகே சொல்றியோ, அப்போ லீகலா ரெஜிஸ்டர் பண்ணலாம்”

“என்ன லூசு மாதிரி பேசிண்டிருக்கீங்க?”

“யெஸ்!!!! நான் லூசுன்னே வைச்சுக்கோ!, இப்போ எல்லாரும் நம்மையே பார்த்துண்டிருக்காங்க. அவங்களுக்காகவது இதைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“எதை”-என்று அவள் முடிப்பதற்குள் அருகே வந்தவன் அவள் கன்னத்தில் அழுந்தத் தன் இதழ்களைப் பதித்திருந்தான்.

மறுபடிக் கூட்டம் “ஓஓஓஓஓஓஓஓ” எனச் சத்தமெழுப்பிக் சந்தோசக் கூத்தாட.. விதிர்த்துப் போய் நின்றிருந்த நயனாவின் தோளைப் பற்றி அணைத்துக் கொண்டவன் “ரிலாக்ஸ் நயனா” என்றான்.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளின் தாக்குதலில் மொத்தமாய்த் திக்கு முக்காடிப் போன நயனாவுக்குத் தான் என்ன விதமாக உணர்கிறோம் என்றே புரியவில்லை. எதற்கென்றே தெரியாமல் அழுகை வந்தது.

கண்ணீர் கோர்த்து விட்ட விழிகளுடன் அவனை நிமிர்ந்து நோக்கியவள் “ச்ச” என்று விட்டு விறுவிறுவென அறையை நோக்கி நடந்தாள்.

வெடுக்கென அவள் சென்றதும் புன்னகை மாறாமல் கூட்டத்தை நோக்கிய சேத்ரன் “லிப்கிஸ் பண்ணாம, ஏன் கன்னத்துல கிஸ் பண்ணீங்கன்னு சொல்லிக் கோச்சுட்டுப் போறா” என்று கூற அனைவரும் ஹாஹாஹா என நகைத்தனர்.

அவர்களைச் சமாளித்து விட்டத் திருப்தியுடன் நயனாவின் பின்னே ஓடிய சேத்ரன், அறைக்குள் நுழைந்துக் கதவைச் சாத்தப் பார்த்தவளைத் தடுத்து அவள் கையைப் பற்றி “சாரி.. சாரி நயனா” என்றான்.

“கையை விடுங்கோ முதல்ல”

“சாரி.. சாரி.. உன்னைக் கிஸ் பண்ணது தப்பு தான். சாரி”

“இப்போ அதுவா பிரச்சனை?”

“அப்போ அது பிரச்சனை இல்லையா?”

“சேத்ரன்ன்ன்ன்ன்”

“முதல்ல கண்ல கோர்த்துண்டு நிற்கிற கண்ணீரைத் துடை. முன்னாடி எப்படியோ, இப்போ அழறதெல்லாம் உனக்கு செட்டே ஆகல.”

பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தவளிடம் “யெஸ்! இது தான் வேணும்!” என்றான்.

“என்னப் பிரச்சனை உனக்கு இப்போ?, என்னைப் பிடிக்கலையா?, நான் இன்னிக்குப் பண்ணுனது பிடிக்கலையா?, பிடிக்கலன்னா.. ரிங்கை கழட்டி என் முகத்துல எறி. ஏன் டா கிஸ் பண்ணன்னு.. மண்டையை உடை! அதை விட்டுட்டு ஏன் சீன் க்ரியேட் பண்ணுற?”

“கல்யாணம்ன்றது அவ்ளோ சிம்பிளா தெரியுதா உங்களுக்கு?”

“ஏழு வருஷத்துக்கு முன்னாடி இதையே நான் சொன்னப்போ கோபப்பட்ட நீ?”

“சேத்ரன்ன்ன்ன்ன்”

“நான் தான். சொல்லு”

“இப்போ… இப்போ இதுக்கான அவசியம் என்ன?, என்ன அவசரம் உங்களுக்கு?”

“அதான் சொன்னேனே! எனக்கு 34 வயசாயிடுச்சு. பயாலஜி படி பார்த்தா… பெண் துணை இல்லாம, இத்தனை வருஷத்தை நான் கடத்தினதே பெருசு! சில உணர்வுகளை, சில வயசுக்கு அப்புறம் அடக்கி வைச்சிக்கிறதெல்லாம் கஷ்டம்!”

“அதுக்காக உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா?”

“ஆமா! ஏழு வருஷமா.. உன் டைரியைப் படிச்சுப் பழகி.. நீ எதுக்காக என்னை வரைஞ்சிருக்கன்னு என்னையே கேள்வி கேட்டு… எனக்கேத் தெரியாம உன் மேல ஏதோ ஒரு ஃபீலிங்கை வளர்த்துண்டுட்டேன்! ஹானஸ்ட்டா சொன்னா.. அது லவ்ன்னுலாம் நான் நினைக்கல! ஒத்த எண்ணங்கள் இருக்கிற 2 பேர் வாழ்க்கை முழுக்க ஒன்னா இருந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைச்சேன்! மத்தபடி.. கிஸ் பண்ணுற ஆசையெல்லாம்.. உன்னை இங்க.. தினம்,தினம் பார்த்ததுக்கு அப்புறம் தான் வந்துச்சு”

-கொஞ்சம் கூடத் தயக்கமின்றி பட்,பட்டென மிகச் சாதாரணமாக அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை அவளால்! யோசிக்கக் கூட அனுமதிக்காமல்.. பேசியே கொல்கிறான்!

பதிலொன்றும் பேசாமல்.. அவன் தோளைப் பற்றி வெளியே தள்ளியவள் கதவைச் சாத்தி விட்டுத் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள்.

ஏழு வருடத்திற்கு முன்பு அவனை அவளுக்குப் பிடிக்கும்! பிடிக்கும் என்றால்.. காதல் என்று அர்த்தமல்ல! பெரிதாக ஆண்கள் யாரிடமும் அவள் பழகியதில்லை! அப்பா,அண்ணனிடம் அத்தனை நெருக்கமில்லை! உறவுக்காரர்கள் எவரிடமும் தந்தை பழகவிட்டதில்லை! ஆனால்.. தன் அன்னை வழிப் பாட்டி வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் சேத்ரனைக் கண்டிருக்கிறாள். சதா,சர்வ காலமும் அவன் அன்னை பாக்கியம் அவனைப் பற்றியே பேசுவதைக் கேட்டிருந்ததால் மனதுக்குள் அவனுடன் அவளறியாமலே ஒரு நெருக்கம் உருவாகியிருந்தது. அதனால் தான் ஹோட்டலில் அவன் பாடம் கற்றுத் தந்த போது அவனுடன் இயல்பாகப் பேச முடிந்தது.

அதன் பின்பு, அவளுக்காக அவன் செய்த ஒவ்வொரு விஷயங்களும் அவனிடம் அவளைப் பாதுகாப்பாக உணர வைத்தது உண்மை! அதனால் தான் அவ்வளவு பெரிய இக்கட்டான சமயத்தில் அவனுடைய உதவியை அவள் தேடிச் சென்றது.

அப்போது அந்த உணர்வை காதல் என வரையறுக்கும் தைரியமெல்லாம் அவளுக்குக் கிடையாது. அதிலும் திருமண சம்பவத்திற்குப் பிறகு அவனைப் பற்றிய எண்ணங்கள் மாறிப் போய் விட்டதால்.. அந்த உணர்வு என்னவென்று தூசி தட்டிப் பார்க்கும் ஆவலும் தோன்றவில்லை!

கல்யாணம்,மாப்பிள்ளை,உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க- என்கிற பேச்செல்லாம் வீட்டில் எழும் போது.. வரப் போகும் கணவன் எப்படியிருக்க வேண்டுமென்று நினைத்துப் பார்த்து அவளையறியாமல் வரைந்தது தான் கோட்-சூட் அணிந்த சேத்ரனது உருவம்! அதன் பிறகு.. இவன் படத்தை ஏன் வரைந்தோம் என்று பதறிப் போய் அவள் மூடி வைத்ததெல்லாம் வேறு கதை! ஆனால்.. ஏனோ அதை அழிக்கத் தோன்றவில்லை!

எப்போதும் உர்ரென்று இருக்கும் அவன் சிரித்தால் நன்றாயிருக்குமே….! ஏற்றி சீவப்பட்டிருக்கும் அந்த முன்னுச்சி முடியை லேசாய்க் களைத்து விட்டால் கலையாய்த் தெரியுமோ.. எப்போ பார், ட்ராக் சூட்டில் இருப்பவனுக்கு கோட்-சூட் மாட்டினால் என்ன.. என்றெல்லாம் எண்ணி அவள் வரைந்து வைத்திருந்த படம் இது! அவன் சொன்னது போல்.. இஞ்ச்,இஞ்ச்சாக ரசித்து வரைந்தது தான்!

அன்று தோன்றிய உணர்வு, அதன் பின் ஆழ் மனதின் எங்கோ ஓர் மூலையில் புதைந்து போய் விட்டிருந்தது.அதை இன்று அவனது செய்கைகள் அத்தனை சுலபமாகத் தோண்டி எடுப்பது ஒரு வகையில் அவளுக்கு ஆச்சரியம் தான்!

அவளுக்கு ஏதோ ஒரு வகையில் அவனிடம் ஈர்ப்பு இருந்தது! தோற்றத்திலோ.. அவனது உதவும் மனப்பான்மையிலோ.. தவறு செய்தாலும்,தேடி வந்து மன்னிப்புக் கேட்கும் குணத்தின் மீதோ! ஏதோ ஒன்றில் அவள் தடுமாறினாள் சரி! ஆனால்.. இவனுக்கு எப்படி அதே மாதிரியான உணர்வுகள் தோன்றியிருக்கிறது?, 300 பக்க டைரியைப் படித்தால் அத்தனை நெருக்கமாக உணர முடியுமா?, அப்படியானால்.. அவனுக்கும் கூட அப்போதிருந்தே.. லேசான ஒரு ஈர்ப்பு இருந்திருக்கலாம்!

எந்நேரமும் அவனை எதிராளியாக உருவகப்படுத்த முற்படும் மனது, இப்போது அவன் புறம் சாய்ந்து அவனுக்காகவேத் தன்னுடன் வாதாடுவதைக் கண்டு நயனாவுக்கு வியப்பாக இருந்தது! மனித மனம் குரங்குக்குச் சமம்! சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்!