அத்தியாயம் - 3
தீ.. தீ.. தித்திக்கும் தீ.. தீண்டத் தீண்டச் சிவக்கும்…..
-இந்தப் படம் வரும் போது நான் ரொம்பச் சின்ன பாப்பாவா இருந்திருப்பேன்! ஆனா.. அப்பவே இந்த மியூசிக்.. அந்த நாயகன்,நாயகி, காட்சி அமைப்பு இதையெல்லாம் பார்த்து அய்யய்யோன்னு வேகமா டிவிலிருந்து பார்வையைத் திருப்பிடுவேன்! அப்போ எல்லாம் இதுவே செக்ஸிஸின்ற ஃபீலைக் கொடுத்திருக்கும் எல்லாருக்கும்! அந்த வயசுல யார் சொல்லிக் கொடுத்தா.. இப்படிலாம் பார்த்தா.. வெட்கப்படனும்னு? ஹாஹா… மனுஷப் படைப்பு அமானுஷ்யம் தான்!
சரியாக இரண்டு மணிக்குக் கோர்ட்டில் இருக்க வேண்டுமென்று காண்டீபன் கூறியிருந்தபடியால் மணி பன்னிரெண்டைத் தொட்டதும் உடையை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டான் ஷேன்.
அறையை விட்டு வெளியே வந்து நண்பனைத் தேடியவன் அவனைக் காணாமல், அவனது செல்ஃபோனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டுக் காத்திருந்தான். அப்படியும் அவன் வாராமல் போக பணியாள் ஒருவனை அனுப்பி அவனறையில் பார்க்கச் சொன்னான்.
எத்தனையோ முறை கதவைத் தட்டியும் தீபனிடமிருந்து பதிலில்லை என்று பணியாள் கூறி விட, “நேரெங்கெட்ட நேரத்துல தூங்கித் தொலைச்சுட்டான் ராஸ்கல், இவன் பண்ணின தப்பால நானும்,என் பேக்கரியும் தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கோம். இந்த நாய், எனக்கென்னன்னு திமிரா இருக்கான்”- பல்லைக் கடித்து கோபத்தை அடக்கியவன் பணியாளிடம் திரும்பி “எனக்கு ஒரு chauffeur அரேஞ்ச் செய்ய முடியுமா?, நான் இருக்கிற மூட்ல இப்போ என்னால ட்ரைவ் பண்ண முடியாது” என்றான்.
அடுத்த பத்தாவது நிமிடம் கடை வாசலின் முன்பு ட்ரைவருடன் நின்றிருந்த காரில் ஏறி பயணம் செய்யத் தொடங்கியிருந்தான் ஷேன்.
கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தவனின் நாசி உணர்ந்த நெடி, அவனது குடலைப் பிரட்டியது. என்ன கருமம் இது?, ட்ரைவர் குடித்திருக்கிறானா?, எரிச்சலுடன் ஜெர்மன் பாஷையில் அதை அவன் வினவிய போது ‘இல்லை’ எனத் தலையாட்டினான் ட்ரைவர்.
“ப்ச்” என்றபடி நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவனின் கண்கள் மீண்டும் ட்ரைவர் புறம் பாய்ந்தது. எப்படியோ இன்னும் ஒரு மணி நேரத்தைக் கடத்தியாக வேண்டும். வெளியே தெரியும் பனிப்பொழிவை வெறிப்பதற்கு இவனையேனும் பார்க்கலாம்.
பச்சையுமாய்,ப்ரௌனுமாய் ஃபர் கோட் அணிந்திருந்தான். ஸ்டியரிங் வீலில் பதிந்திருந்த நீளக் கை விரல்கள் அத்தனையிலும் மோதிரங்கள். ஆனால் இது ஆணுடைய கரங்களைப் போல் தெரியவில்லையே! தன்னையறியாமல் பார்வையில் ஆர்வம் தோன்ற, சற்றே நிமிர்ந்து அமர்ந்து கூர்ந்து நோக்கினான்.
சுருட்டை,சுருட்டையானத் தலைமுடி பரட்டையாய்ப் படர்ந்திருந்தது. விக்கா என்ன?, இரண்டு காது மடல்களிலும் வரிசையாய் வளையத் தோடுகள்! முகத்தில் பாதியை மறைக்குமளவிற்குப் பச்சை வண்ணக் மூக்குக் கண்ணாடி. மூக்கிலும் கூட சின்னதாய் ஒரு வளையம்! இதழில் சாயம் எதுவும் பூசப்படவில்லை. அலட்டலின்றி நேர் வெறித்தபடி சீராக வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்,இல்லை கொண்டிருந்தாள்.
டோப் அடிக்கும் பார்ட்டி போலத் தெரிகிறாள். பாக்கெட் மணிக்காக வண்டி ஓட்டுகிறாள் போலும்! அவளையே நோக்கிக் கொண்டிருந்த ஷேனுக்கு மயக்கம் வருவது போல் தோன்ற அவன் அனுமதியின்றியே கண்கள் சொருகித் தலை தொங்கி விட்டது.
லேசாக அவனுக்கு விழிப்பு தட்டிய போது யாரோ அவனது தோள்களை இறுக்கமாகப் பற்றி வண்டியிலிருந்துத் தரத்தரவென வெளியே இழுத்துக் கொண்டிருந்தனர்.
பனிப்பொழிவு நின்று போயிருந்தது. ஆனாலும்,அணிந்திருந்த ஜாக்கெட்டைத் தாண்டி குளிர் தாக்க ஒரு நொடி தொங்கிய தலையுடனேயே இழுப்புக்கு ஏற்றபடித் தன்னை வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தவன், மறு நொடி ‘ப்ச்’ என்று உதட்டை சுழித்தபடி நிமிர்ந்து சுற்றி நோக்க முயன்றான்.
அடுத்த நொடி அவனை இழுத்துக் கொண்டிருந்த கரங்கள் நின்று.. பரபரவெனத் தன் ஜாக்கெட்டுக்குள்ளிருந்து எதையோ எடுத்து அவன் மூக்கில் வைக்க முற்பட்டது.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முகத்தைச் சுருக்கிய ஷேனுக்கு கார்ப்பயணமும், பச்சையும்,ப்ரௌனுமாய் இருந்த ட்ரைவரும் மசமசவென்று நினைவுக்கு வர, தலையை உலுக்கிச் சமன்படுத்திக் கொண்டவன் துளியும் யோசிக்காமல், தன் நாசியை நோக்கி நீண்ட மோதிர விரல்களை இறுகப் பற்றி முன்னே இழுத்துக் கீழே சாய்த்தான்.
அவன் தன்னைத் தாக்க முயல்வதை உணர்ந்து கொண்ட அந்த உருவம், தன் கால்களிரெண்டையும் அவன் தோளில் போட்டு கிடுக்குப் பிடியாக்கி, அவன் தலை முடியைப் பிய்க்காத குறையாகப் பற்றி அவனைச் சாய்த்தது.
சந்தேகமே வேண்டாம்! அந்த ட்ரைவர் பெண் தான்! ‘நாலு அடி உசரத்துல இருந்துக்கிட்டு ஆறடி ஆம்பளைய சாய்க்க பார்க்குறா! ஏய்,எந்த ஊர்டி உனக்கு!’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு சிரிப்பு பிய்த்துக் கொண்டு வர.. தலை முடியை வேறு பிடித்து வைத்திருக்கிறாளே! ஆண்டவா! என்றெண்ணியபடி தோளைச் சுற்றி இறுகப் படர்ந்திருந்த கால்களை முழு பலம் கொண்டு நகர்த்தித் தள்ளி, எழுந்து நிற்க முயன்றான்.
அவன் தலை முடியைத் தவிர எதைப் பற்றினாலும், தான் தோற்று விடுவோம் என்பதைப் புரிந்து கொண்டோ என்னவோ.. அத்தனை இறுக்கமாகப் பற்றியிருந்தாள் அவள்.
நடந்து கொண்டிருப்பது காமெடி சீனா, ஃபைட் சீனா என்பதையேப் புரிந்து கொள்ள முடியாத ஷேன் நிமிர்ந்து அவள் முகத்தைக் காண முயன்றான். நொடியில் அவளை வீழ்த்தித் தள்ளி விடலாம் தான்! கை,காலை ஒடித்துக் கொண்டாளானால் அதற்கு வேறு யார் செலவழிப்பது! ஏற்கனவே பெனால்ட்டி என்கிற பெயரில் கோர்ட்டில் வேறு இன்று பெரிய தொகையைக் கட்டியாக வேண்டும்! ஓ! யெஸ்! கோர்ட்டுக்குச் செல்ல வேண்டுமே! இந்த ராங்கியை…….
தன் விழியருகே தெரிந்த அவள் இடையைப் பற்றிக் கீழே சாய்த்து அவள் கைகளிலிருந்துத் தன் தலைமுடியை விடுவித்துக் கொண்டவன் அவளது இரு கரங்களையும் பற்ற முயல்கையில் மீண்டும் அவன் தோள் மீது கால்களைப் போட எத்தனித்தவளிடம்…
“இனஃப் நயனா……. ஜஸ்ட் ஸ்டாப் இட்” என்றான்.
அவன் தன்னைக் கண்டு கொண்டதில் எரிச்சலுற்றவள் கடுப்புடன் அவனை அடிக்கக் கைகளை நீட்ட, அதை அனாயசமாக அடக்கியவன் அவள் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியையும், விக்கையும் கழட்டித் தூர எறிந்தான்.
நடுங்கும் குளிரில் ‘ஊஃப்.. ஊஃப்..’ என மூச்சு விட்டுக் கொண்டிருந்த இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடி விறைத்துப் போய் நின்றிருந்தனர்.
தலை முடியை அழுந்தக் கோதியபடி அவனை நோக்கியவளின் கண்கள் காளி ரூபம் எடுக்காத குறையாக குரோதத்தில் சிவந்து போயிருந்தது. தானும் சளைக்காமல் பதிலுக்கு அவளை நோக்கியவன்..
“4 அடி உயரமும், 45 கிலோ எடையுமிருக்கிற இந்த பாடியை வைச்சுக்கிட்டு நீ… நீ என்னை அடிச்சு சாய்ச்சிடுவியா?, முட்டாள்! எப்பவுமே எதையுமே ப்ளான் பண்ணி எக்ஸிக்யூட் பண்ணுற பழக்கமே கிடையாதுல்ல உனக்கு?,அப்படியே உங்கப்பனோட மாட்டு மூளை!,” – என்றதும் ஜாக்கெட்டில் கை நுழைத்தபடி நின்றிருந்தவளின் கண்கள் பட்டென நிமிர்ந்து அவனை நோக்கி மேலும் உஷ்ணத்தைக் கக்கியது.
“7 வருஷத்துக்கு முன்னாடி நீ என்னை மிரட்டுனப்பவே தெரியும், எப்படியும் ஒரு நாள் என்னைத் தேடி வருவன்னு!, இப்பவும் சொல்றேன், உன் லைஃப்ல நடந்த அத்தனைக்கும் முழுப் பொறுப்பு நீ தான். நீ மட்டும் தான். அநாவசியமா என் மேல வஞ்சம் வளர்த்துக்கிறது, உன் மாட்டு மூளைக்குத் தீனி போடுறதுக்கு சமம். கொஞ்சம் கன்ஸ்ட்ரக்டிவ்வா யோசி.” – தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவனைக் கண்டு கொள்ளாமல்.. அவளது கண்கள் பின்னே வந்து கொண்டிருந்த காரின் மீது பாய்ந்தது.
பனிப் பொழிவின் காரணமாக வானம் இருண்டு காணப்பட.. ஹெட் லைட்டின் வெளிச்சத்தைக் கக்கியபடி அவர்களை நெருங்கிய காரிலிருந்து காண்டீபன் இறங்கினான்.
“டேய் ஷேன்… ஏன் டா வண்டியை விட்டு இறங்கி நிற்குற? யாருடா இது” – என்ற நண்பனின் வியப்புக் குரலில், பேசுவதை நிறுத்தி விட்டு நண்பன் புறம் திரும்பினான் ஷேன். அந்த தேவ வினாடியைப் பயன்படுத்திக் கொண்டவளின் கைகளில் என்ன இருந்ததோ.. ஒரே போடாக.. ஷேனின் தலையைத் தாக்கி விட்டு அடுத்த நொடி அவர்கள் மூவரும் நின்றிருந்த பாலத்திலிருந்து பட்டெனக் கீழே குதித்திருந்தாள்.
“அய்யோ….. ஏழுமலையானேஏஏஏஏஏஏஏ” – என்ற தீபன் அவளிடம் அடிவாங்கிய ஷேனை நினைத்துக் கூவினானோ, இல்லை பட்டெனக் கீழே குதித்து விட்டவளை நினைத்துக் கூவினானோ அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!
