அத்தியாயம் - 4

ஒரு மின்சாரப் பார்வையின் வேகம்..

வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன்..

-நாங்க ரெண்டு பேரும் லவ் ப்ரபோஸ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி, அதாவது.. கடலை போட்டுட்டிருந்த சமயத்துல.. நைட் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு பழக்கம் வைச்சிருந்தோம்! ‘ஏதாவது பாட்டு பாடு ஜிங்க்ஸ்,தூக்கம் வருது’-ன்னு நம்மாளு ஸ்டார்ட் பண்ணுவான்! பாடுறதுன்னா.. வாயைத் திறந்து பாடுறது கிடையாது! (அப்படி நான் பாடியிருந்தா,எங்க லவ் அப்பவே புட்டுண்டிருக்கும்) மெசேஜ்லயே டைப் பண்றது! அவன் இப்படிச் சொன்னதும் நான் இந்த லைன்ஸை தான் பாடுவேன். உடனே ‘ஹாஹா..நீ இதைத் தான் பாடுவன்னு எனக்குத் தெரியும்’-ன்னு சொல்லி ஸ்மைலி போட்டுடுவான் அவன்! அந்த மெசேஜஸ் எல்லாத்தையும் ரொம்ப நாளா ஃபோன்ல சேவ் பண்ணி வைச்சிருந்தேன்! இப்போ மனசுக்குள்ள!!

வாழ்க்கைப் பாதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி!. சிலருக்கு கற்களும்,முட்களுமாய்! பாதங்கள் பொத்துப் புண்ணாகிப் போனாலும், மேலும் நடந்தாக வேண்டிய கட்டாயம்! சிலருக்கு பூக்களும்,புன்னகையுமாய்! தெளிந்த நீரோடையின் மீது படகு சவாரி போல சுகமான ஓர் பயணம்!

ஆனால் இந்த நெடு,நீண்ட பயணத்தின் ஏதோ ஒரு தருணத்தில் கற்கள் மீது நடப்பவனைத் திடீரென பூக்கள் மீதும், சுகமான படகுப் பிரயாணத்திலிருப்பவனை சுடு வாணலி மீதும் நிற்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை! நாம் உண்டு செரிக்கும் தோசைக்கே வெள்ளையும்,ப்ரௌனுமாய் இரண்டு பக்கங்கள் இருக்கும் போது! இந்த ஜீவிதத்திற்கு இருக்காதா என்ன? ஆனால்.. அந்த மாற்றம் எந்த நொடியில்,யாரால் நிகழ்கிறது என்பது தான் பரம ரகசியம்! மிகப் பெரிய சுவாரசியம்!

சேத்ரனும் கூட அப்படி ஒரு மாற்றத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான். அண்டசாசரங்கள் அவனது ஆசைகளுக்கு செவி மடித்து, அலாவுதீன் பூதமாக ஏதேனும் ஒரு ஜந்து கண் முன் தோன்றித் தன் விருப்பங்கள் நிறைவேறி உலகம் வியந்து பார்க்கும் பெரிய பேக்கர்-ஆக அவன் ஒரு நாள் உயர்ந்து நிற்பான் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் இந்த அலட்டல்கள் ஏதுமின்றி, வெகு சாதாரணமாக அவன் தலையெழுத்தை மாற்றி எழுதப் போகும் ‘அவள்’ அவனது வாழ்க்கையில் நுழைந்தாள். அவள் நயனா! நயனமோகினி! ஆதி சேஷன் ஐயங்காரின் தவப் புதல்வி!

ஹோட்டல் கன்யாவில் சேத்ரன் வேலை செய்யத் தொடங்கி சரியாக ஒரு மாதத்தில், ஒரு புதன் கிழமையன்றுத் தன் பெண்ணுடன் சமையலறைக்கு வருகை தந்தார் சேஷன். குட்டையாய்,ஒல்லியாய்,பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடியுடன், சேஷனின் பின்னே நடந்து வரும் பெண்ணைக் கண்டதும் அவனுக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘சப்ப ஃபிகர்’ என்பது தான்.

அங்குள்ளவர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவள் தான் போலும். அனைவரையும் கண்டு புன்னகை வேறு புரிந்தாள். பல்லைக் காட்டும் போது சுமாராக இருக்கிறாள் என்று அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனை அழைத்தார் சேஷன்.

“இவ என் பொண்ணு நயனா. நோக்கு தெரியும் தானே?, உங்கம்மா சாவுக்கு வந்திருந்தாலே?, இல்லைன்னாலும் இப்போ தெரிஞ்சுக்கோ. இவளும் உன்னை மாதிரி தான். பன்,கேக்ன்னு பிச்சு பிடிச்சுப் போய்த் திரியுறா. நோக்குத் தெரிஞ்சதை இவளுக்கும் கத்துக் கொடு. கழுதை,கல்யாணம் கட்டிண்டு போற வரைக்கும் எதையாவது செய்யட்டும். ஆனா.. முட்டை,கிட்டையெல்லாம் தொடப் படாது. சரியா?” – பேசிக் கொண்டே சென்றவரை நிமிர்ந்து நோக்கியவன்..

“உங்க ஹோட்டல்ல வேலை செய்ய ஆரம்பிச்சப்பவே நான் அதையெல்லாம் விட்டாச்சு மாமா. யாருக்கும் கத்துக் கொடுக்கிற மனநிலைலலாம் நான் இல்ல. புரிஞ்சுக்கோங்கோ. உங்க பொண்ணை வேற யார்கிட்டயாவது சேர்த்து விடுங்கோ” – என்றான்.

அவன் பதிலில் வெகுண்ட சேஷன் “இந்த மாதிரி எரிச்சல் டோன்ல பேசுறதையெல்லாம் உன் மாமனாண்ட வச்சுக்கோ. ஏதோ சொந்தக்காரப் பையனாச்சே,கிட்டு கெஞ்சுனானேன்னு வேலைக்கு சேர்த்துக்கிட்டா, என் கிட்டயே திமிரா பேசற நீ?” – என்றார்.

“என் டோனே அது தான். இதுல எங்க நீங்க எரிச்சலைக் கண்டீங்களோ தெரியல. மோர் ஓவர், கத்துத் தர்றியான்னு நீங்க கேக்கல. கத்துக் கொடுன்னு ஆர்டர் தான் போடுறீங்க. நான் உங்க எம்ப்ளாயி. அடிமையில்ல. ஒத்துக்கிறதும்,மறுக்கிறதும் என்னோட இஷ்டம்”

“படவா ராஸ்கல், விட்டா பேசிண்டே போற?, நீ எகத்தாளமாவே நடந்துக்கிறதா கிச்சன்ல இருந்து எல்லார்க்கிட்டயும் கம்ப்ளைண்ட். போனா போகுதுன்னு கிட்டுவுக்காக எதையும் கண்டுக்காம விட்டா, நீ என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்து நிற்கிற?, என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறவன், எனக்கு அடிமையாத் தான் டா இருக்கனும். என்னை விட்டா, வேற யார்கிட்ட உன்னால தொழில் கத்துக்க முடியும்?, ஒன்னுத்துக்கும் பிரயோஜனமில்லாத படிப்பைப் படிச்சுட்டு காசு சம்பாதிக்கத் துப்பில்லாம திரியுற ராஸ்கல், நீ… நீ இந்த ஆதிசேஷனை எதிர்க்கிறியா?, இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது. வெளியே போடா”

“அந்தப் பெருமாளுக்கு மெத்தையா இருக்கிற ஆதிசேஷன் கூட உங்க அளவுக்கு அகங்காரமா இருக்க மாட்டான். அடக்கமும்,பணிவும் இருக்கிறவன் தான் பெரிய மனுஷனா இருக்க முடியும். 4 காசு சம்பாதிச்சதும் 4 கால் முளைச்சிட்ட மாதிரி ஆடுறவனையெல்லாம் கடவுள் ஓங்கி மிதிச்சுக் கீழ தள்ளிடுவார். இத்தனை வருஷ வாழ்க்கை உங்களுக்கு இதைக் கூட கத்துத் தரலன்றது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” – பதிலுக்குக் கோபத்தில் கத்தியவனை அவர் அடிக்கக் கிளம்ப, அங்கிருந்தோர் இவனை இழுத்து வெளியே அனுப்பினர்.

ஒன்றுமேயில்லாத விசயத்திற்கு,சாதாரண வாக்குவாதத்திற்குக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக, காட்டுக் கத்தலுடன் அவனை வெளியே துரத்தினார் சேஷன்.

“அப்பா ப்ளீஸ்ப்பா, அப்பா சண்டை வேண்டாம்ப்பா.. சொன்னா கேளுங்கோப்பா..”-என இடைவிடாமல் கெஞ்சிக் கொண்டிருந்த மகளையும் கிழித்துக் கூறு போட்டு விட்டார்.

“உன்னை மாதிரி உருப்படாத 4, வீட்டுக்கு வீடு இருக்கும் போல!, பொண்னா,லட்சணமா சாதம்,சாம்பார்ன்னு சமைச்சுப் பழகச் சொன்னா, பன்,ப்ரெட்ன்னு வெள்ளைக்காரன் சமையல் கேக்குது உனக்கு! தான்தோன்றிக் கழுதை! இன்னும் ஆறு மாசத்துலக் கல்யாணம் கட்டிண்டு போறவளாச்சேன்னு பாவம் பார்த்து அழைச்சிண்டு வந்ததுக்கு, இவனாண்ட நான் அசிங்கப் பட்டது தான் மிச்சம்! வீடு போய்ச் சேரு நீ! – பெருங்குரலெடுத்து விடாமல் கத்தியவரைக் கண்டு எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கண்ணீரைத் துடைத்தபடி வெளியே ஓடி விட்டாள் மகள்.

காலர் பட்டனைக் கழட்டியபடி மித மிஞ்சியக் கோபத்துடன் வாசலில் நின்றிருந்த சேத்ரன் பார்வையில் பட, நின்று அவனை நோக்கினாள். ‘சண்டாளப் பாவி! தனது சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, ஆணாதிக்கவாதியான தந்தையை பெரும்பாடுபட்டுச் சம்மதிக்க வைத்து, கடைசியில் தன்னிடம் வேலை பார்க்கும் சேத்ரனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டுமென்று தொங்கியவரிடம் தலையாட்டி, இதுவரை வந்து விட்டவளின் சாதனையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டான்!

நிராசையும்,வேதனையுமாய் அவள் பார்த்த பார்வை கொஞ்சம் கூட சேத்ரனை பாதிக்கவில்லை. கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவனுக்கு அவளது பார்வை மேலும் எரிச்சல் மூட்ட..

“என்ன முறைக்குற?,ம்ம்? உன் அப்பன் திட்டுனான். நீ என்ன அடிக்கப் போறியா?” – அதட்டியவனிடம் “கத்துத் தர விருப்பமில்லாட்டி பொறுமையா அதை எடுத்துச் சொல்ற பக்குவம் கூட கிடையாதா உங்களுக்கு?, அவரைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும் இப்படி நடந்துக்குறீங்க?..”-என்றாள்.

“பொறுமையா? உங்கப்பன் கிட்ட? நான் என்ன அந்தாளு வீட்டு நாய்க்குட்டியா?,இல்லை வேலைக்காரனா?, பணிஞ்சு போறதுக்கு?, என்னமோ உங்கப்பன் தயவு இல்லாம ஊர்,உலகத்துல யாருமே பிழைக்கலன்றது மாதிரி பேசுற?, சரியான அகங்காரி!, ஆமா, யார் நீ? ம்?, ரொம்ப உரிமையா என்னை வந்து கேள்வி கேட்டுட்டிருக்க?, உங்கப்பன் புத்தி தானே உனக்கும் இருக்கும்?, தனக்குக் கீழ தான் எல்லாரும்னு எண்ணம்!” – தன் போக்கில் பேசிக் கொண்டே சென்றவனை புரியாத பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென சென்று விட்டாள் நயனா.

இனி இந்த ஆதிசேஷன் முகத்திலோ, இந்த ஹோட்டல் பக்கமோ தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது!, இது ஒத்து வாராதென்று கிட்டு மாமாவிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லி விட வேண்டும்! மாடு மேய்ப்பவனுக்குக் கூட இரக்க குணம் இருக்கும். இந்த ஆள் மாட்டை விடக் கேவலமாக மனிதர்களை நடத்துகிறான். இவரிடம் வேலை பார்த்தால், இவர் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டுமா?, இனியும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது – - ஆத்திரத்தில் ஏதேதோ முடிவெடுத்தான்.

ஆனால் அனைத்தையும் பீஸ்,பீஸாகப் பிய்த்தெறிந்த கிட்டு மாமா, வழக்கம் போல் ‘புளிய மரத்துல நானும்,மாமியும் தொங்கிடுவோம்’ என மிரட்டி ஆதிசேஷனின் காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டு மீண்டும் அவனை வேலைக்கு வரச் செய்து விட்டார்.

கடைசியில் இதோ இன்று அவர்களது ஹோட்டல் கிட்சன் மூலையொன்றில் நயனமோகினியுடன் சேர்ந்து சீஸ் கேக் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறான் சேத்ரன்.

க்ரீம் சீஸ் கட்டிகளுடன்,சர்க்கரையைச் சேர்த்து பீட் செய்து கொண்டிருந்தவள் உர்ரென்ற முகத்துடன் கிண்ணத்தையே பார்த்தவனை ஓரக் கண்ணில் நோக்கினாள்.

“தயவு செஞ்சு சைடு பார்வையெல்லாம் பார்க்காத. நீ போட்டிருக்கிற கண்ணாடி உன் முட்டக் கண்ணை ஏற்கனவே என்லார்ஜ் பண்ணித் தான் காட்டிட்டிருக்கு. இதுல உன் முழியை வேற நீ உருட்டுனேனா.. அய்யோ அம்மா!, முடியல. வேண்டாம்!,” என்றவன் தொடர்ந்து “அப்டியே அப்பன் மூஞ்சி” என்று முணுமுணுத்தான்.

“இல்ல, நீங்க அன்னிக்கு அப்பாவோட சண்ட போட்டதைப் பார்த்தப்போ, இனி இந்தப் பக்கமே வர மாட்டீங்கன்னு நினைச்சேன். எப்படி மறுபடி இங்க வேலைக்கு சேர்ந்தீங்க?”

“உங்கப்பன் அன்னிக்கு உன்னைக் கத்துனதுக்கு அப்புறமும் நீ எப்படி வந்த?, அந்த மாதிரி தான்.”

“உங்களுக்கு எங்கப்பாவைப் பிடிக்காதா?”

“பிடிக்கிறதுக்கு உங்கப்பன் என்ன ஃபிகரா?”

“என்ன இப்படி பேசுறேள்?,ச்ச,ச்ச”

“ஹ்ம், இவன் பிராமணனாட்டமில்ல. ரௌடி மாதிரி நடந்துக்கிறான்னு உங்கப்பன்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணி, நாளையிலிருந்து இங்க வர்றத நிறுத்திக்கோ”

“மாட்டேன்.”-என்று பட்டெனக் கூறியவள் முகத்தில் குறும்பு கூத்தாட “எனக்கும் கூட எங்கப்பான்னா சுத்தமா பிடிக்காது. நீங்க எங்கப்பாவையே எதிர்த்து பேசுனப்போ, எனக்கு அவ்ளோ சந்தோஷம்.ஆனா, உங்களுக்கு எங்கப்பாவைப் பார்த்தா கொஞ்சம் கூட பயமில்லையா?” எனக் கேட்டாள்

“உனக்கு இப்போ எத்தனை வயசாகுது?”

“19”

“ஹ்ம், என் வயசு வரும் போது உனக்கும் பயம் போயிடும்”

“நிஜமாவா?”

“ஹ்ம்ம்”

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நீங்க ஆண் பிள்ளை. எதிர்க்குறதும், சண்டை போடுறதும் உங்களுக்கு சாதாரணமா வர்றது. நான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்கப்படுற பொண்ணு. அப்பாவுக்கு அடங்குனவ. என்னால அவரை எதிர்த்து எதுவும் பண்ண முடியும்னு தோணல.”

“அது உன் தலையெழுத்து. அத விடு, ஆமா, உன் பேர் என்ன சொன்ன?”

“நயனா. நயனமோகினி”

“உங்கப்பா வைச்ச பேரா?”

“இல்ல, என் மாமி வைச்சது”

“அதான, உங்கப்பனுக்கு இவ்ளோ நல்ல ரசனையோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். ஆனா மோகினின்ற பேருக்கும் உனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லையே!”

“நான் அழகா இல்லன்றேளா?”

“ப்ச்”

“பரவாயில்ல. எனக்கு அழகா இல்லன்னுல்லாம் எந்த வித வருத்தமுமில்ல. மனுஷனுக்குத் தேவை நல்ல குணமும்,வெள்ளை மனசும் தான். என் கிட்ட அது தாராளமா இருக்கு. அது போதும்”

“அடேங்கப்பா!, என்ன படிக்குற நீ?”

“ப்ளஸ் டூ முடிச்சிருக்கேன்”

“அப்டின்னா?, மேல படிக்கலையா நீ?”

“இல்ல. பெண் பிள்ளைங்களைப் பெருசா படிக்க வைச்சா தடம் மாறிப் போயிருவாங்கன்னு எங்கப்பாவுக்கு ஒரு எண்ணம்”

“சரியான கிராதகனா இருப்பான் போல உங்கப்பன்! பின்ன, இவ்ளோ சொத்து சம்பாதிச்சு வைச்சு என்ன செய்யப் போறான்?, உங்கண்ணன் யாரோ ஸ்டேட்ஸ்ல படிக்கிறதா கிட்டு மாமா சொன்னாரே?”

“அதான் சொன்னேனே! அவன் ஆண் பிள்ளை, நான் பாவப்பட்ட பெண் பிள்ளை”

“ஏய்.. எந்த காலத்துல இருக்கீங்க நீங்க?, அப்பாக்கு பிடிக்கல,ஆயாவுக்குப் பிடிக்கலன்னு காலேஜ் படிக்காம இருப்பியா நீ?, சுத்த முட்டாள்தனமா இருக்கு. உங்கப்பனுக்கு எடுத்துச் சொல்ல உன் வீட்ல யாருமே இல்லையா?, உங்கண்ணன் எதுவும் சொல்ல மாட்டானா?”

“ம்ஹ்ம், அம்மாவும்,பாட்டியும் எவ்ளவோ எடுத்துச் சொல்லியும் அப்பா ஒத்துக்கல. என் கஸின்ஸ் 2 பேருக்கு பதினேழு வயசுலயே கல்யாணம் பண்ணி வைச்சப் புண்ணியவான் எங்கப்பா. நான் என்னோட முயற்சியில இவ்ளோ நாளா எங்கப்பாவுக்குப் போக்குக் காட்டிட்டு இருக்கேன். எப்போ,யார் தலையில என்னைக் கட்டி வைப்பாரோ தெரியல. இதுல இருந்து என்னைத் தப்பிக்க வைக்க அந்தக் கிருஷ்ணன் தான் நேரில் வரனும். ஹ்ம்ம்ம்ம்” – பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டாள் அவள்.

“சரி,சரி புலம்பாத. என் வாழ்க்கையே அல்ரெடி சோகமாத் தான் போயிட்டிருக்கு. இதுல உன் கதைய வேற கேட்டிட்டுருக்கேன்! ஆனாலும் உங்கப்பனை மாதிரி மாட்டு மூளைக்காரனுக்கு மகளா இருக்குறது ரொம்ம்ம்ம்பக் கஷ்டம் தான்!, சரி, 1 ஹவர் அண்ட் டென் மினிட் செட் பண்ணு அவன்ல” என்று அவன் கூற அதைச் செய்து விட்டு மீண்டும் அவன் புறம் திரும்பினாள்.

“உ…உங்களுக்கு என்னை நியாபகமில்லையா?”

“ஏன் இதுக்கு முன்னாடி நான் உன்னைப் பார்த்திருக்கிறேனா?, ஓ! எங்கம்மா இறந்தப்போ நீ வந்திருந்ததா சொன்னானே உங்கப்பன்”

“இல்ல, அதுக்கு முன்னாடியே நான் உங்க வீட்டுக்கு நிறைய தடவை வந்திருக்கேன். என் பாட்டி வீட்டுக்கு வரும் போதெல்லாம், நான் உங்க வீட்டுக்கு வருவேன். உங்க பக்கத்து வீட்டு பாட்டி ராஜாம்பாளை நினைவிருக்கா உங்களுக்கு?”

“ஆமா, அந்தப் பாட்டி 5 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்களே!”

“ஆமா, அவங்க என் அம்மாவோட அம்மா. பாட்டி இறக்குறதுக்கு முன்னாடி வரை அங்க அடிக்கடி வருவேன். பாக்கியம் மாமி செஞ்சு கொடுக்கிற பலகாரமெல்லாம் எனக்கு ரொம்பவும் இஷ்டம். மாமியோட குழிப்பனியாரத்தை அடிச்சுக்கவே முடியாது! பாவம்!,இவ்ளோ சீக்கிரம் இறந்து போவாங்கன்னு நான் நினைக்கவேயில்ல”

“எனக்கும் கூட எங்கம்மா சமையல்ன்னா இஷ்டம் தான்”-என மரத்த குரலில் கூறியவன் “தேவையில்லாத பேச்சு பேசாம, கேக்கை வெளியே எடு. இதை 4 ஹவர்ஸ் ரெஃப்ரிஜ்ரேட் பண்ணனும். வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் பண்ணிக்கோ”

“அய்யோ வேண்டாம். முட்டையெல்லாம் சேர்த்திருக்கோம். அப்பாவுக்குப் பிடிக்காது.”

“அந்தாளுக்குத் தெரியவா போகுது?, சும்மா எடுத்துட்டுப் போ”

“ம்ஹ்ம் வேண்டாம். அவர் எப்படியும் கண்டு பிடிச்சுடுவார்”

“ஆமாம், அவன் எமகாதகன்!, இப்போ என்ன பண்றது?, நீ செஞ்சதை நீ டேஸ்ட் பண்ண வேண்டாமா?”

“இல்ல பரவாயில்ல. நீங்களே வைச்சுக்கோங்கோ. இங்க வேலை பார்க்கிறவங்களுக்கு சாப்பிடக் கொடுங்கோ. எப்படியிருந்ததுன்னு நாளைக்கு சொல்லுங்கோ. நான் வரேன்.” – சரியெனத் தலையாட்டி அவளுக்கு விடை கொடுத்தவனுக்கு ‘இவளும் கொஞ்சம் பாவம் தான்’ என்று தோன்றியது.

ஆனாலும் பிடிவாதமாக அவளது தந்தையை நினைத்துக் கொண்டான். இன்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, பாவமாகக் காட்சி தரும் இவள்,நாளை தந்தை காட்டும் பணக்காரன் எவனையேனும் கல்யாணம் கட்டிக் கொண்டு இடுப்பில் கொத்துச் சாவியுடன் சீரியல் வில்லியைப் போல வலம் வரத் தான் போகிறாள். இவள் கூறிய அந்த 2 கஸின்ஸ்களைத் தான் அவன் கண்டிருக்கிறானே! தலை முதல் கால் வரை பணக்காரத் திமிருடனே வலம் வரும் குடும்பம் ஆதிசேஷனது! இவள் மட்டும் விதிவிலக்காகவா இருக்க முடியும்?இவள் அப்பன் சகவாசமும் வேண்டாம்! இவள் சகவாசமும் வேண்டாம்! பத்தே நாளில் வகுப்புகளை முடித்துக் கொண்டு துரத்தி விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.