அத்தியாயம் - 5

தொலைவில்… பார்த்தால்.. ஆமாம் என்கின்றாய்…

அருகில் வந்தால் இல்லை என்றாள்.. நகிடா நகிடா.. ஓஹோஓ..

-யாருக்குத் தான் இந்தப் பாட்டு பிடிக்காது?, பாஸ்ட் 20 இயர்ஸ்ல டீன்-ஏஜை க்ராஸ் பண்ணின பசங்களுக்கும்,பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொமாண்ட்டிக் சாங் என்னன்னு கேட்டா.. கண்டிப்பா இதைத் தான் சொல்லுவாங்க! நிறைய ரொமாண்டிக் மெலடிஸ் வந்து போயிட்டு தானிருக்கு! ஆனா யூத்ஃபுல்,யங்,மாடர்ன் இந்த மாதிரியான ஃபீலை கொடுக்கிறது இந்தப் பாட்டு மட்டும் தான்! எப்போ கேட்டாலும்.. அழகான சிரிப்பை உதட்டுல கொடுத்து.. ரொமாண்டிக்கான ஒரு லுக்கைக் கண்ணுலேயும் கொடுத்திடும்! எனக்கும் அப்படியே!!

இடதுபுற நெற்றி வீங்கி,புருவம் தடித்து அரைக் கண்ணுடன் பரிதாப தோற்றத்தில் காணப்பட்ட நண்பனைக் கன்னத்தில் கை வைத்தபடி ‘ஆ’-வென பார்த்துக் கொண்டிருந்தான் காண்டீபன். நடந்து முடிந்த சம்பவமும், இந்த ஆறடி ஆண்மகனை அசால்ட்டாகத் தாக்கி விட்டு ஓடிய அந்த ஒண்டர் உமனும் அவனது மனக்கண்ணை விட்டு அகலவேயில்லை. ஹாஸ்பிடல் சென்று விட்டு,கோர்ட் வேலையை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் இதுவரை இவன் வாயைத் திறக்கவில்லை. ஆர்வம் தாங்காமல் தானே பேச்சைத் தொடங்கினான் காண்டீபன்.

“யாருடா அந்த ஆக்ஷன் குயின்?”

“ஆக்ஷன் குயினா?, அவளா?, ச்சி,ச்சி உளறாத! பச்சைத் தயிர்சாதம்டா அவ! சரியான உளுந்த வட! நமத்துப் போன அரிசி வடகம்!”

“என்ன, இதுக்கு முன்னாடி ஐயர் ஹோட்டல்ல வேலை செஞ்சேன்னு ப்ரூவ் பண்றியா?”

“டேய்……”

“பின்ன என்ன?, சாதம்,சாம்பார்,வடைன்னு சாப்பாட்டு ஐட்டமா சொல்லிட்டிருக்க?, யாருடா அந்தப் பொண்ணு?, பார்க்க இந்த ஊர்க்காரி மாதிரி இருந்தாலே, முடியெல்லாம் கலர் பண்ணி,நோஸ் ரிங்கெல்லாம் போட்டுண்டு?, அவ கூட எப்படி பழக்கமாச்சு உனக்கு?, என்ன எனக்குத் தெரியாம டேட்டிங்கா?, கறி,கோழி திங்கிறவளுக திண்ணக்கமாத் தான் இருப்பாளுக! மண்டைலயே போட்டா பாரு,ஒரு போடு! ஹாஹாஹா…” – அடக்க முடியாமல் நகைத்தவனை பொறுமையாய் நோக்கினான் ஷேன்.

“எனக்கு இடது கண்ணு தான் போச்சு, நீ இன்னொரு முறை சிரிச்சா உன் இரண்டு கண்ணையும் ஒன்னுமில்லாம பண்ணிடுவேன்.”

“ம்க்க்க்க்கும், வேண்டாம். இனிமே நான் சமத்தா நடந்துக்கிறேன்”

“அவளைப் பத்தின டீடெயில்ஸ் வேணும் எனக்கு. எப்படி இங்க வந்தா? எங்க தங்கியிருக்கிறா எல்லாம்! எல்லாம் கண்டுபிடிக்கனும்.”

“ஓ!,அப்போ இந்த ஊர்ப் பொண்ணு இல்லையா?, நம்ம பக்கத்து மனுஷியா?, ஐயங்காரா?”

“ம்ம், ஆமாம்”

“ஐய்யர் ஆத்துப் பொண்ணுங்க கூட இப்போல்லாம் குங்-ஃபூ கத்துக்கிறதுகள்! நாம தான் அம்மாஞ்சியாவே காலத்தை ஓட்டுறோம்!”

“அநாவசியமா பேசாதடா தீபன்”

“யார்,என்னன்னு விவரம் சொன்னா, நான் ஏன் டா அநாவசியமா பேசப் போறேன்?, இந்தியால இருந்து இங்க தேடி வந்து உன்னை அடிச்சிட்டுப் போறான்னா, என்ன காரணம்?, நீ அப்படி என்ன அவளுக்கு துரோகம் பண்ணின?, காதலிக்கிறேன்னு கழட்டி விட்டுட்டியா?,இல்ல அதுக்கும் மேல ஏதாவதூஊஊஊஊஊ” – என்று இழுத்தவனின் இருக்கையை எட்டி உதைத்த ஷேன் “அடிச்சுப் பல்லைக் கழட்டிடுவேன் டா! நான் சொன்ன வேலையை மட்டும் நீ செய். தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணாத.” என்று மிரட்டியவன், மேலும் தொடர்ந்தான்.

“ஓடுறவளைப் பிடிடான்னு காட்டுக்கத்து கத்துனேனே!, கேட்டியா நீ?”

“டேய்… அவ ஏதோ ஆக்ஷன் ஃபில்ம் சூட் பண்ற ரேஞ்சுக்கு படார்ன்னு குதிச்சுட்டா, அடி வாங்கிட்டு நின்ன உன்னைக் கூட கண்டுக்காம, குதிச்சவ என்ன ஆனான்னு நானும் பாலத்திலிருந்து எட்டிப் பார்த்தேன்! ஆனா.. மச்சி! இட் வாஸ் அ மிராக்கில்டா. அவளுக்கு கை,கால் எதுவும் சேதமாகல. ரொம்ப அசால்ட்டா எதிர்ல வந்த வண்டியை நிறுத்தி லிஃப்ட் கேட்டு ஏறிப் போயிட்டா!, பவர் ரேஞ்சர்ஸ்ல தான் டா நான் இதெல்லாம் பார்த்துருக்கேன்”

“முட்டாள்!”

“நீ தான் டா முட்டாள்!, ஒரு கராத்தே கிட்-ஐ நீ தயிர்சாதம்ன்னு அப்பட்டமா புழுகுற”

“நிஜமாவே அவ தயிர்சாதம் டா!, 4 அடி உயரத்துல,கண்ணுல பெரிய புட்டி போட்டுண்டு, அவ அப்பாவுக்கு பயந்துண்டு பேக்கு மாதிரி தான் டா இருப்பா.”

“அப்படிப்பட்டவளை ஏமாத்தி வயித்துல பிள்ளைய கொடுத்திருக்க நீ”

“உளறாத நாயே!”

“அப்புறம் ஏன் டா அவ அவ்ளோ ஃபெரோசியஸா உன்னைத் தாக்கினா?”

“அதுக்கெல்லாம் வேற காரணமிருக்கு. அதை நீ தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்ல. போ, போய் நான் சொன்ன டீடெயில்ஸை தெரிஞ்சுக்கிட்டு வா!”

காண்டீபனின் கைங்கரியத்தில் அடுத்த நான்கே நாட்களில் நயனாவின் படுக்கையறை ஷோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி,கையைக் கட்டிக் கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து அமர்ந்திருந்தான் ஷேன்.

சந்தன நிற ஸ்வெட்டர், கருப்பு நிற பாட்டம் சகிதம் உயரத் தூக்கிப் போடப்பட்டிருந்த கொண்டையுடன் தூக்கக் கலக்கம் தீராதத் தன் முட்டைக் கண்களை மேலும் பெரிதாக விரித்து,எச்சில் விழுங்கியபடி கலங்கிய பார்வையுடன் படுக்கை மீதமர்ந்து அவனை நோக்கிக் கொண்டிருந்தாள் நயனா. இறுகப் பற்றியிருந்த போர்வை அவளது பயத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தது.

‘இந்த இடத்தை எப்படிக் கண்டுபிடித்தான்?, அதுவும் படுக்கையறைக்குள் யார் இவனை அனுமதித்தது!, பாதகி கிறிஸ்டினா (ஹவுஸ் மேட் ) எங்கே தொலைந்தாள்?, ஏன் இப்படிப் பார்க்கிறான்?, லேசாக இடது கண் வீங்கியிருக்கிறதோ! பதிலுக்கு அடிக்கத் தான் வந்திருக்கிறானோ!, கையில் ஆயுதம் ஏதும் இருப்பது போல் தெரியவில்லையே! – நயனாவின் சிந்தனைகளை ‘ஹாஹாஹா’ என்றபடிக் சிரித்துக் களைத்தான் ஷேன்.

சுருக்கிய புருவங்களுடன் அவனை நோக்கியவளிடம் “நயனமோகினின்ற பேரு நடாஷா ஃப்ரடெரிக்கா மாறிடுச்சு போல?, உங்கப்பனுக்குத் தெரியுமா இந்த சேதி?” எனக் கேட்டு நக்கலாகச் சிரித்தான்.

“ஏன், சேத்ரன்ற உங்க பேரை ஷேன் நிக்கோலஸ்-ன்னு நீங்க மாத்திக்கல?, அந்த மாதிரி தான்.”

“நான் உங்கப்பனை மாதிரி கிடையாது. சாதி,மதம்,ஏழை,பணக்காரன்னு எதுவும் பார்க்க மாட்டேன்”

“நான் மட்டும் இதெல்லாம் பார்க்குற ஆள்ன்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க?”

“புலிக்குப் பிறந்தது பூனையாவா இருக்கும்?”

“எங்கப்பாவை புலின்னுல்லாம் சொல்லி பெரியாள் ஆக்காதீங்க”

“அப்டின்னா இன்னும் உங்கப்பனோட சண்டைல தான் இருக்கியா நீ?”

“அது என் சொந்த விஷயம். நீங்க தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்ல. எப்படி இங்க வந்தீங்க?, ஏன் வந்தீங்க?”

“ஏ…ஏன்ன்ன்ன் வந்தேனா???”- கடுப்பாகி இருக்கையை விட்டு எழுந்தவன் அவளருகே வந்து நெற்றியைக் காட்டி “அடிச்சு என் மண்டையைப் பொளந்துட்டு அசால்ட்டா எஸ் ஆயிட்ட?, குறைந்த பட்சம் என் ஹாஸ்பிடல் செலவையாவது நான் கலெக்ட் பண்ண வேண்டாம்?, அதனால தான் உன்னைத் தேடி வந்துட்டேன்” – கோபமாக ஆரம்பித்தவன் சிரித்தபடி நடந்து சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.

அறைக்குள் அவன் நுழைந்ததிலிருந்து பீதி குறையாமல் அமர்ந்திருக்கும் நயனாவிற்கு அவன் செய்கை,சிரிப்பு,பேச்சு ஒரு எழவும் புரியவில்லை.

குளிருக்கு சுகமாக க்வில்ட்டுக்குள் சுருண்டபடி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவள் அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் லேசாகக் கண் விழித்த போது சேத்ரனின் உருவம் உள்ளே நுழைவது மசமசவென்று தெரிந்தது. முதலில் கனவென்று நினைத்தவள், அவன் நடந்து வந்து எதிர் சோபாவில் அமர்வதைக் கண்டதும் பதறி அடித்து எழுந்து அமர்ந்திருந்தாள். மறுபடி அடித்து மண்டையை உடைக்கலாம் என்று பார்த்தால், ஆயுதம் எதுவும் கையில் இல்லை.

“எல்லாத்தையும் ஸ்ட்ரைட்டா பேசித் தீர்த்துக்கலாம் நயனா. நீ இந்த நாட்டுக்கு வந்தது, என் மண்டைய உடைக்க மட்டும் தானா?, இல்ல மொத்தமா தீர்த்துக் கட்டிடலாம்ன்ற ஐடியா எதுவும் இருக்கா?”

“ஹ்ம், இப்போ தான் உங்க தலையை இரண்டாக்குற அளவுக்கு முன்னேறியிருக்கேன். மொத்தமா முடிக்கனும்னா இன்னும் கொஞ்சம் நாளாகும்”

“அப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்துற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்?”

“நீங்க ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல? அது தான் நீங்க பண்ண ஒரே தப்பு.” – பட்டெனக் கேள்வி கேட்டவளை ஆச்சரியத்துடன் நோக்கியவன்..

“ஏதோ என் மேல தீராக் காதல் கொண்டு கட்டிக்கக் கேட்ட மாதிரி பேசிட்டிருக்க?”

“தெரியுதுல்ல?, உங்க மேல எந்த விதமான ஈர்ப்பும் எனக்குக் கிடையாதுன்னு? ஒரு இக்கட்டான சூழ்நிலை, உங்களை விட்டா எனக்கு உதவி செய்ய யாருமில்லன்ற மாதிரியான நிலைமை. ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது நான் சொன்னபடி நீங்க கல்யாணத்திற்கு ஒத்துண்டு இருந்தீங்கன்னா.. எல்லாம் எவ்ளோ சுபமா முடிஞ்சிருக்கும்?”

“யாருக்கு சுபமான முடிவுன்ற?,நீ சொல்றபடி கேட்டிருந்தா, உங்கப்பன் என்னை ஓலப் பாடைல உயிரோடு ஏத்திருப்பான்!, ஒரு 30 நாள் பழகியிருப்போமா நாம இரண்டு பேரும்?, அதை வைச்சு நான் எப்டி இவ்ளோ பெரிய முடிவுக்கு ஒத்துப்பேன்னு நீ நினைச்ச?, நான் தான் சிக்குனேனா உனக்கும் உன் அப்பனுக்கும்?, உன்னையும்,உன் வாழ்க்கையையும் மட்டுமே யோசிக்கிறியே! என்னைப் பத்தி யோசிச்சியா?”

“உங்களைப் பத்தி என்ன யோசிக்கனும்?”

“நீயும் உன் அப்பாவைப் போல பச்சை சுயநலவாதி நயனா”

“சும்மா என் அப்பாவோட என்னைக் கம்பேர் பண்ணிண்டே இருக்காதீங்கோ ப்ளீஸ். நான் உங்க கூட குடும்பம் நடத்தவா கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன். கீழே விழுந்தவனைத் தூக்கி விடுற மாதிரி ஒரு சாதாரண உதவி. அடிச்சாலும்,மிதிச்சாலும் கடைசில எங்கப்பா தொலைஞ்சு போன்னு துரத்தி அடிச்சிருப்பார். அதுக்கப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்த்துருக்கலாம். நானும் என் வழியைப் பார்த்துண்டு போயிருப்பேன். உங்களால.. உங்களால மட்டும் தான் அத்தனையும் கெட்டது!”

“நீ சொல்ற மாதிரி எல்லாம் அவ்ளோ சுலபமா முடிஞ்சுருக்குமா நயனா?, கல்யாணம்ன்றது அவ்ளோ சாதாரண விசயமா?, ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், இந்த தர்ம காரியத்துக்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்த?, நாம இரண்டு பேரும் காதலிக்கிறதா வேற உங்கப்பன் கிட்ட சொல்லி வச்சிருந்திருக்க.”

அவமானத்தில் முகம் சிவக்கப் பல்லைக் கடித்தபடி இறுகிப் போய் அமர்ந்திருந்தவள் தீர்க்கமான மூச்சொன்றை உள்ளே இழுத்துக் கொண்டு பேசினாள்.

“எனக்கு வேற வழி தெரியல சேத்ரன். எங்கப்பா முடிவு பண்ண கல்யாணத்துல இருந்து எப்படியாவது தப்பிக்கனும்னு நினைச்சேன்! என் அண்ணால இருந்து தொடங்கி,என்னை சுத்தியிருக்கிற அத்தனை ஆம்பளைங்களும் என் அப்பாவுக்கு அடங்கி போனப்போ,நீங்க ஒருத்தர் மட்டும் தான் அவரை எதிர்த்துப் பேசுற ஆளா இருந்தீங்க. அதுவும் எங்கப்பாவை கன்வின்ஸ் பண்ணி என் மேற்படிப்புக்கு நீங்க அவரை சம்மதிக்க வைச்சது, என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திருச்சு. என்னவோ, உங்ககிட்ட வந்தா என் பிரச்சனை எதுவானாலும் தீர்ந்துடும்ன்ற மாதிரியான ஒரு பிரமை தோணிடுச்சு. உங்களை விட்டா யாருமே உதவ மாட்டாங்கன்னு நினைச்சேன். அதனால தான்.. அவர் கிட்ட உங்களைக் காதலிக்கிறதா சொல்லி கல்யாணத்தைத் தள்ளிப் போட நினைச்சேன்”

“இதை நீ என் கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா, நான் வேற ஏதாவது யோசிச்சு ப்ளான் பண்ணியிருந்திருப்பேன். எந்தவித முன்னறவிப்புமில்லாம கல்யாணக் கோலத்துல என் முன்னாடி வந்து நின்னுட்டு ‘என்னைக் காப்பாத்துங்க, கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்சுனா, நான் சரின்னு ஒத்துப்பேன்னு எப்படி நினைச்ச?, நான் என்ன சினிமா ஹீரோவா?, எதிர்காலம் என்னன்னு தெரியாம நான் திண்டாடிட்டு திரிஞ்ச காலம் அது! உன் தேவைக்காக என்னை பலிகடா ஆக்க நினைச்சது எவ்வளவு சுயநலம் தெரியுமா?”

“ஹ்ம்,உங்க நிலைமையை யோசிச்சுப் பார்த்து,எங்கப்பா முகத்துக்கு பயந்து, அவர் காட்டுன தறுதலையை கட்டிண்டு நான் காலத்தை ஓட்டிருக்கனும். அப்படித் தான சொல்ல வர்றீங்க?, சுயநலவாதி நான் இல்ல. நீங்க தான்!”

“உன் பிரச்சனையை நீ தீர்த்துருக்கனும். என்னை இழுத்து விட்டது முட்டாள்தனம்னு சொல்றேன். உனக்கு அது புரியறதா இல்லையா?”

“காப்பாத்துங்கன்னு கதறிட்டு வந்து நிற்கிற ஒரு சின்ன பொண்ணை, மனசாட்சியே இல்லாம விரட்டி அடிச்சிட்டு இப்போ வந்து வியாக்யானம் பேசுறீங்க?, என்ன விளக்கம் சொன்னாலும் நீங்க பண்ணது தப்பு தான். மன்னிக்கவே முடியாத குற்றம்! என் வாழ்க்கைத் தடம் மாறிப் போனதுக்கு எங்கப்பன் ஒரு காரணம்னா, அவசியத்துக்கு உதவாம போன நீங்களும் ஒரு காரணம் தான். அந்த ஆளை ஆண்டவன் தண்டிக்கட்டும்!, ஆனா.. உங்க சாவு என் கைல தான்” – மூச்சு வாங்க எழுந்து நின்று முகம் சிவக்கக் கத்தியவளைக் கண்டு நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் சேத்ரன்.

இரண்டு நிமிடம் விடாது அவளையே நோக்கியவன் பின் அவள் தோள் பற்றி எதிரேயிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

தன் தோள் மீது படிந்த அவன் கைகளை எரிச்சலுடன் உதறியவள் முன் நெற்றியில் விழுந்த முடியைக் காதோரம் ஒதுக்கியபடி அவனை நிமிர்ந்து நோக்கினாள். இன்னும் என்ன சொல்லப் போகிறாய் என்பது போல்!

“சரி நயனா. என்னைக் கொன்னுட்டா, நான் செத்துட்டேன்னா.. உன் கோபமும்,பழிவாங்குற வெறியும் அடங்கிடுமா?”

“……..” – பதிலின்றி அவனை வெறித்தாள் அவள்.

பின் அணிந்திருந்த ஜாக்கெட்டின் வலது பாக்கெட்டிலிருந்து ரிவால்வர் ஒன்றை எடுத்து டீபாயின் மீது வைத்தான். மீண்டும் இடது பாக்கெட்டில் கை நுழைத்துக் கத்தி ஒன்றை எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்து அவளை நோக்கினான். இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி அவனைக் கொல்லலாம் என்கிறானாம்!

அவன் எண்ணம் புரிந்து நக்கலாகச் சிரித்தவள், “இதை விட ஒரு நல்ல ஐடியா என் கிட்ட இருக்கு” என்றாள்.

“என்ன?”

“4 முழக் கயிறு வாங்கிட்டு நேரா உங்க ஃப்ளாட்டுக்குப் போங்க. யாருமில்லாத நேரமா பார்த்துக் கதவை அடைச்சிட்டுத் தூக்குல தொங்கிடுங்க. உங்களைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போய் மீதி வாழ்க்கையையும் வேஸ்ட் ஆக்குறதுக்கு, நீங்களே தொங்கிட்டீங்கன்னா எனக்கு வேலை மிச்சம். பேக்கரி நஷ்டப்பட்டதால அவமானத்துல தூக்குப் போட்டுட்டீங்கன்னு நானே புரளியைக் கிளப்பி விட்டுடுவேன். என்ன சொல்றேள்?”

“நான் உன்னை ரொம்ப இன்னசெண்ட்ன்னு நினைச்சேன் நயனா. இந்த 4-அடி உயர பாடிக்குள்ள இவ்ளோ வக்ர எண்ணங்களா?”

பல்லைக் கடித்தபடி அவனைக் கோபமாக நோக்கியவள்..

“முதல்ல, நான் 4அடி,45கிலோ வெயிட்ன்னு சொல்றதை நிறுத்துங்கோ. என் உயரம் 5.2, ஐந்தடி இரண்டு அங்குலம். என் வெயிட் ஐம்பத்தைந்து கிலோ. அதோட, ஏழு வருஷத்துக்கு முன்னாடி நீங்க பார்த்த கேனக்…. இல்ல நான். 26 வயசான, படிச்சுப் பட்டம் வாங்கி,சுயமா சம்பாதிக்கிற இண்டிபெண்டண்ட் உமன்.”

“பரவாயில்லையே! கெட்ட வார்த்தையெல்லாம் பேசுற?, யார் கத்துக் கொடுக்கிறா?, பாய் ஃப்ரெண்டா?”

“செருப்புப் பிஞ்சுடும்”

“ஓ! அப்போ நீ சிங்கிள் தான்! பாய் ஃப்ரெண்ட் இல்ல! வெர்ரி குட்”

“ஏன் இல்லன்னு சொன்னா.. நீங்க என் பாய் ஃப்ரெண்ட் ஆகப் போறீங்களா?”

“ஆஹா!, இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!, எனக்கு ஓகே! நீ என்ன சொல்ற?”

“**** you! Bloody!”

“ம்ம்ம்ம்ம், அதெல்லாம் அடுத்த ஸ்டேஜ்! அதுக்குள்ள அவசரப்பட்டா எப்டி?”

“கடுப்பேத்தாதீங்க சேத்ரன் ப்ளீஸ்”

“நீ ஏத்துக்குறியோ இல்லையோ! உன் ஹவுஸ் மேட் கிறிஸ்டினா நான் உன் பாய் ஃப்ரெண்ட்ன்னு சொன்னதும் உடனே உன் பெட் ரூமுக்குள்ள என்னை அனுப்பி வைச்சுட்டா! ஆப்போசிட் ரூம் தாத்தா,பாட்டிக்குக் கூட நான் உன் பாய் ஃப்ரெண்ட்ன்னு தான் நினைச்சுட்டிருக்காங்க!”

“வா….வாட்?, ஏன் அப்படி சொன்னீங்க?”

“காரணமாத் தான்”

“என்ன பெரிய காரணம்?, உங்க பேக்கரிக்கு N-cakes-ன்னு என் பேரோட முதல் எழுத்தை வைச்சிருக்கீங்களே, அந்த காரணமா?, அது மட்டுமில்லாம நான் என் சொந்த மூளையோட யோசிச்சுத் தயாரிச்ச ரெசிப்பியை உங்க சிக்னேச்சர் கேக்கா யூஸ் பண்ணிட்டிருக்கீங்க?, அடுத்தவங்களோட கற்பனையைத் திருடுறது தான் உலகத்துலயே பெரிய பாவம்! தெரியுமா?, ஒரு சின்ன பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அவ்ளோ யோசிச்சீங்க?, இப்போ வரிசையா எத்தனை பொய்,பித்தலாட்டம்?, எனக்கு உங்களை சுத்தமா புரிஞ்சுக்க முடியல சேத்ரன். சீரியஸ்லி” – நெற்றியில் அடித்துக் கொண்டபடி கையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தவளின் விரல்களைப் பற்றியவன்..

“எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கிறேன். உன் கேள்விகள் அத்தனைக்கும் பதில் சொல்றேன். ஆனா இது எல்லாத்துக்கும் முன்னாடி நீ என் கூட வரனும்” – என்றான்.

மீண்டும் அதிர்ச்சி நிறைந்த குழப்பத்துடன் “வா…வாட்??” என்றாள் அவள்.

“நா..நான் ஏன் உங்க கூட வரனும்?, முடியாது. நான் ஒத்துக்க மாட்டேன்”

“ஏய்… நீ தான் என்னைக் கொல்லாம விட மாட்டேன்னு சபதம் எடுத்துருக்கியே!, குறைஞ்ச பட்சம் நான் தூக்குல தொங்குறதயாவது நீ பார்க்கனும் தான?, அதுக்காகவாவது வா”

“என்ன?, செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடுறீங்களா?”

“நான் செஞ்சதை பாவம்ன்னு இதுவரை நான் ஒத்துக்கல. மறந்துடாத”

“………….”

“ப்ளீஸ் நயனா.. உன் கிட்ட நான் நிறைய கடன் பட்டிருக்கேன். அதையெல்லாம் திருப்பிக் கொடுக்கனும். இந்த முறை நான் கெஞ்சுறேன். என்னோட வா. ப்ளீஸ்”

“இவ்ளோ நாளா நான் எங்கேயிருக்கேன், என்ன ஆனேன்னு எதுவுமே தெரியாது. நானா உங்க முன்னாடி வர்ற வரைக்கும் கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம சொகுசா வாழ்ந்துட்டு இப்போ வந்து கடன்,திருப்பிக் கொடுக்கனும்னு உளறிட்டு இருக்கீங்க?, என்னால எங்கேயும் வர முடியாது. அதுவும் உங்களோட! நோ சான்ஸ்!”

பெருமூச்சை வெளியிட்டபடி “ஓகே!’ என்று எழுந்து நின்றவன் தன் செல்ஃபோனைக் கையிலெடுத்து “அப்டின்னா இப்போவே நான் போலீஸ்க்கு கால் பண்றேன்” என்றான்.

“என்ன மிரட்டுறீங்களா?, உங்க மண்டையை உடைச்சதைக் காட்டிக் கொடுக்கப் போறீங்களா?, தாராளமா கம்ப்ளைண்ட் பண்ணுங்க! எனக்குத் துளி கூட பயமில்ல”

“ச்ச,ச்ச நீ இந்த மாதிரி சாதாரண விசயத்துக்குல்லாம் பயப்படுவியா?, நீ பெரிய,பெரிய வேலை பார்க்குற க்ரிமினல் ஆச்சே!”

“ப்ச்” – எரிச்சலாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“ஹ்ம்ம்ம்ம், இந்த கம்ப்யூட்டர் ஹாக்கிங் (hacking) பத்தி நீ என்ன நினைக்கிற நயனா?, நடாஷா ஃப்ரட்ரிக் ஒரு பெரிய ஹாக்கராமே!, நோக்குத் தெரியுமோ?”

–பட்டென எழுந்து நின்று வெளிறிய முகத்துடன் அதிர்ச்சி மாறாமல் நின்றவளைக் கண்டு நக்கலாகச் சிரித்தவன் விரிந்த வாயுடன் “யோசிச்சு சொல்லு. நாளைக்கு வர்ரேன். பாய் ஸ்வீட் ஹார்ட்” என்று விட்டு வெளியேறினான்.