அத்தியாயம் - 6

ஜில்லுன்னு ஒரு காதல்ல்ல்… ஹோ!!

ஜில்லென்று ஒரு காதல்!!!

-ஹாஹாஹா… கேட்டதும் சிரிக்கிறீங்களா?, ஜில்லுன்ன்னு ஆயிடுதுல்ல??? லவ் பண்றதுக்கு முன்னாடி நம்மாளும், நானும் அடிக்கடி இந்தப் படத்தைப் பத்தி தான் டிஸ்கஸ் பண்ணுவோம்! ஃப்யூச்சர்ல எனக்கும் பெண் குழந்தை தான் வேணும்னு சொல்லிட்டு அசால்ட்டா அவன் சிரிச்சிடுவான்! நமக்குத் தான் ‘குழந்தை ஓகே! பொண்டாட்டி யாரு’-ன்னு ஒரு கேள்வி எழுந்து ‘பே’-ன்னு முழிச்சிட்டிருப்பேன்! பட்.. அவன் நினைச்ச மாதிரியே இப்போ அவனுக்கு ஒரு குட்டி தேவதை வந்துட்டா! பொண்டாட்டி சாட்சாத் நானே தான்!!!

“இந்த ப்ரிண்ட்-அவுட்ஸ்ல பேக்கிங்,பேஸ்ட்ரி டூல்ஸ் அண்ட் யூஸஸ் பத்தின அத்தனை விளக்கமும் இருக்கு. கலினரி க்ளாஸஸ்ல ஜாயின் பண்ணினா இதையெல்லாம் நேர்லயே பார்க்கலாம். ஆனா உங்கப்பன் தான் விட மாட்டானே?, நீ இந்தப் படங்களைப் பார்த்துக் கத்துக்கோ. இன்னிக்கு ஐசிங் டெக்னிக்ஸ் பத்தியும்,கேக் டெக்கரேஷன் பத்தியும் பார்க்கலாம்” – சேத்ரன் நீட்டிய பேப்பர்களை கையில் வாங்கிக் கொண்ட நயனா ஆர்வத்துடன் அதைப் பிரித்துப் படித்தாள்.

பொதுவாகவே அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதும், ஆலோசனை கூறுவதும் சேத்ரனுக்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத ஒன்று! பிடிக்காத ஒன்றும் கூட! அதிலும் கற்ற கல்வி பிரயோஜனமற்றுப் போன இந்த சூழ்நிலையில், தனது பேக்கர்-கனவு கனவாக மட்டுமே போய் விடுமோ என்கிற குழப்பத்திலிருக்கும் இந்தத் தருணத்தில் இன்னொருவரின் குறை,நிறைகளைக் காது கொடுத்துக் கேட்கும் அளவிற்கு பொறுமையெல்லாம் அவனுக்கு கிடையாது.

ஆனால் விடாது கருப்பு ரீதியில், சனி பகவான் அவன் வாயில் மட்டுமில்லாது கை,கால்,இதயம்,மூளை என அனைத்திலும் வந்தமர்ந்து கொண்டு சதா சர்வ காலமும் நயனா கூறியதைப் பற்றியே சிந்திக்கும்படி செய்து விட்டான். ‘அதெப்படி, இந்தக் காலத்துல பன்னிரெண்டாங் க்ளாஸோட ஒரு பொண்ணு படிப்பை நிறுத்த முடியும்?, காசு பிரச்சனை, வசதியில்லைன்னு சொன்னா கூட பரவாயில்லை! கொழுத்த பணக்காரன் அவங்கப்பன்! படிக்க அனுப்புனா, என்ன பிரச்சனை வந்துடப் போகுது?, ஆனா.. இந்தப் பொண்ணு ஏன் அப்பாவுக்கு இப்படி பயப்படுது?, ஹ்ம்ம்!

ஆதிசேஷன் மீதிருக்கும் கோபத்திலும், ஆணாதிக்கவாதியான தந்தைக்கு அடங்கி, ஒருத்தி தன் படிப்பைப் பாதியில் நிறுத்துவதா என்கிற ஆதங்கத்திலும் மீண்டும் அவளிடம் பேச்சை வளர்த்தான் சேத்ரன்.

“நயனா.. ஜஸ்ட் இன் கேஸ், மேற்படிப்புக்கு உனக்கு சான்ஸ் கிடைச்சா என்ன படிக்கலாம்ன்னு இருக்க?”

“ஹ்ம்ம்ம்ம்ம்” என யோசித்தவள் “எனக்கு 2 விசயத்துல ரொம்பவும் ஆர்வம். ஒன்னு பேக்கிங், இன்னொன்னு கம்ப்யூட்டர். இது ரெண்டு சம்பந்தப்பட்ட எந்தப் படிப்புனாலும் எனக்கு ஓகே!”

“ம்ம், உங்கப்பா கிட்ட அடம்பிடிச்சு காலேஜ் சேர்ந்துக்கிற திறமையெல்லாம் உனக்குக் கிடையாதா?”

“விளையாடாதீங்க. அந்தத் திறமையிருந்தா நான் எவ்வளவோ முன்னேறியிருப்பேனே”

“உனக்கு உங்கப்பாவைப் பிடிக்காது சரி, அந்தாளுக்கு ஏன் உன்னைப் பிடிக்கிறதில்லை?”

“என்னைன்னு இல்ல. பொதுவா பெண் பிள்ளைகளை எங்கப்பாவுக்குப் பிடிக்காது”

“பின்ன உங்கம்மாவை மட்டும் எப்படி பிடிச்சது உங்கப்பனுக்கு?”

“……….”

“பிடிக்காம தான் 2 பிள்ளைங்களைப் பெத்துக்கிட்டானாக்கும்?, பொம்பளைங்களைப் பிடிக்காது, ஆனா அவங்க கிட்டயிருந்து கிடைக்கிற மத்ததெல்லாம் மட்டும் வேணுமாக்கும்?, சரியான பாஸ்டர்ட்!”

“இப்படியெல்லாம் என் கிட்ட பேசாதீங்கோ ப்ளீஸ்”

“ஆமா, நீ ஒன்னுமே தெரியாத பச்சைக் குழந்தை!, ஏழு கழுதை வயசாகுது. உங்கப்பனோட சண்டை போட்டு காலேஜ் போகத் தெரியாது?”

“ஏன்?, உங்க மாமாவோட சண்டை போட்டு உங்களுக்கு வெளிநாடு போகத் தெரியாது?? வாழ்க்கையே போன மாதிரி விரக்தியா வலம் வர்ற மனுஷன் பெருசா எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டார்!, சும்மா என்னைத் திட்ற வேலையெல்லாம் வைச்சுக்காதீங்கோ சொல்லிட்டேன்”

“வாவ்வ்!, வெர்ரி குட்! கோபப்பட்டு எதிர்த்தெல்லாம் பேசுற?, இதை அப்படியே உங்கப்பன் கிட்ட ஃபாலோ பண்ணலாம்ல?”

“அவர் கிட்ட இப்படியெல்லாம் பேசுனா பெல்ட்டை வைச்சு விளாசித் தள்ளிடுவார்”

“நீயும் திருப்பி அடி”

“ப்ச்”

“ஒரு பெஸ்ட் ஐடியா இருக்கு. நான் சொல்றேன் கேளு”

“என்ன?”

“பேசாம ஒரு ப்ரஸ் மீட் வைச்சு ‘மேற்படிப்பு படிக்க விடாம எங்கப்பா என்னைக் கொடுமை பண்றார்’-ன்னு சொல்லி ஓ-ன்னு அழுதுடு. கோவை மாநகரத்தின் பிரபல உணவகங்களில் ஒன்றான ஹோட்டல் கன்யாவின் ஓனர் ஆதிசேஷனின் அக்கிரமங்கள்ன்னு நியூஸ் பேப்பர்ல ஃப்ரண்ட் பேஜ்ல கொட்டை எழுத்துல வரும்! உங்கப்பனோட அகங்காரமெல்லாம் அதோட காலி! என்ன சொல்ற?”

“நான் படிக்கிறதுக்கு வழி சொல்லச் சொன்னா.. எங்கப்பாவை மொத்தமா முடிச்சுக் கட்டுறதுக்கு வழி சொல்லிட்டிருக்கீங்க?, எங்கப்பா மேல எனக்குக் கோபம் தான். அதுக்காக அவர் நாசமா போகனும்னு நான் நினைச்சதேயில்ல. என்ன இருந்தாலும் அவர் என்னைப் பெத்தவர்!”

“ஹ்ம்ம், இந்த செண்டிமெண்ட் தான் அந்தாளை இப்படி ஆட்டம் போட வைக்குது. பின்ன என்ன, உங்கப்பன் மேல இருக்குற பாசத்துல, மேற்படிப்பு ஆசையெல்லாத்தையும் கிடப்புல போட்டுட்டு, அந்தாளு கை காட்டுறவனைக் கல்யாணம் கட்டிக்கிட்டு பிள்ளை,குட்டிகளுக்கெல்லாம் பனியாரம் சுட்டுப் போட்டு வாழ்க்கையை ஓட்டு!, பாவமா முகத்தை வைச்சுக்கிட்டு என் கிட்ட புலம்புறதை இதோட நிறுத்திக்கோ!”

அவன் கூறிய விதத்தில் இயலாமையும்,கோபமும் போட்டி போட ஆத்திரத்துடன் அமர்ந்திருந்த இடத்திலிருந்துப் பட்டென எழுந்தவள் அழுகையுடனேயே “நான் உங்கக் கிட்ட புலம்பல. மேற்படிப்பைத் தொடரலையான்னு நீங்க கேட்டதுக்கு நான் பதில் மட்டும் தான் சொன்னேன். உங்களுக்கு உங்க மாமா மேல,எங்கப்பா மேல ஏன் பார்க்குற எல்லார் மேலயும் கோபம். உங்களோட ஆசைகளை நிறைவேத்திக்க முடியாம போன ஆத்திரம்! அதை என் கிட்ட காட்டி திருப்தி பட்டுக்கிறீங்க! என் அப்பாவுக்கும்,உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. இரண்டு பேருமே ஒரு வகையில் வக்ரம் பிடிச்ச ஆண்கள் தான்!” – என்று விட்டு விறுவிறுவென ஓடி விட்டாள்.

ஒரு கணம் ஸ்தம்பித்து மறு கணம் ‘யாரை யாரோட கம்பேர் பண்ணுறா’ எனக் கோபப்பட்டுப் பின் நிதானமாக யோசித்துத் தன் மேல் தவறிருப்பதைப் புரிந்து கொண்டான் சேத்ரன்.

இவன் யார்?, அவளிடம் கோபப்படுவதற்கு! உறவுக்காரப் பெண் தான்! ஆனால் அவள் அப்பன் இருக்கும் உயரத்திற்கு உறவென்ற பெயர் சொல்லி உரிமையுடன் அவளைத் திட்டுவதற்குக் கூட அவனுக்குத் தகுதி கிடையாது.

அப்பனைப் போலல்லாது அவள் சாது என்பதால்.. இஷ்டத்திற்குப் பேசி அவளை வதைப்பதா?, தப்பு! தப்பு! ரொம்பத் தப்பு! ஒருவருடைய பலவீனத்தைக் கேலி பேசுவது இயலாமையின் உச்சக்கட்டம்! இப்படியாக யோசித்து வருந்தியவனை, அடுத்த இரண்டு நாட்கள் வகுப்பிற்கு வாராமலிருந்து மேலும் வருந்தச் செய்தாள் நயனா.

மூன்றாம் நாளும் அவள் வரவில்லையென்றதும் தானே அவளைத் தேடிச் செல்வதென முடிவெடுத்தான் சேத்ரன்.

ஆதி சேஷனுக்கு ஒரு விசித்திரமான பழக்கம். அவர் மனைவி என்ன தான் வகை,வகையாக சமைத்துப் போட்டாலும், தினமும் இரவு உணவிற்கு இட்லியும்,அவர்களது ஹோட்டல் சாம்பாரும் தான்! இதற்காகவே மாலையானதும் தினம் ஒருவர் ஹோட்டலிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று சாம்பாரைக் கொடுப்பது வழக்கமாகியிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட சேத்ரன், அன்று செல்லவிருந்த பழனிச்சாமியை நிறுத்தி விட்டுத் தான் புறப்பட்டான்.

எதற்காக இவ்வளவு மெனக்கிடுகிறான் என்று இப்போதும் கூட அவனுக்குப் புரியவில்லை தான். ஆனாலும் உள்ளே தோன்றியிருக்கும் உறுத்தலைப் போக்கியாக வேண்டுமெனில் அவளை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்!

வீட்டினுள் நுழைந்ததும் “யாருப்பா?” என்றபடி வந்த பாட்டியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சாம்பார் தூக்கை நீட்டினான். பாக்கியத்தின் மகன் என்றதும் பாட்டியும்,நயனாவின் அன்னையும் பாசமாய் வரவேற்று அமரச் சொல்ல, உட்கார்ந்தவனின் கண்கள் நயனாவைத் தேடின.

தூக்கிக் கட்டிய கொண்டையுடன் பாவாடை,சட்டை சகிதம் அடுப்பாங்கரையிலிருந்து வெளி வந்த நயனாவிற்கு இவனைக் கண்டதும் கண்களில் பேராச்சரியம்! வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் நடந்து சென்றவளைக் கண்டுப் பல்லைக் கடித்த சேத்ரன்..

“நயனாவுக்கு கண்ணாடி போடாட்டி சரியா கண் தெரியாதோ மாமி?”-என்றான்.

“ஏன்டாப்பா அப்படி சொல்ற?”

“அவ பேக்கிங் கத்துக்கிறதுக்கு என் கிட்ட தான் மாமி தினம் வர்றா. கத்துக் கொடுக்கிற ஆசானுக்கு மரியாதை தராட்டியும் பரவாயில்ல!, இப்படி அலட்சியப் படுத்துறது தப்பில்லையோ?”

“அதான?, நயனா.. என்னடி? தம்பியைக் கண்டுக்காம நீ பாட்டுக்க உள்ளே போயிண்டிருக்க?”

“அதான் நீங்களே அவரை உட்கார வைச்சு காஃபியெல்லாம் கொடுத்துட்டேளே! இன்னும் என்ன? ம்? பனியாரம் சுட்டுக் கொடுக்கனுமா?” – முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கடுப்புடன் பேசியவளைக் கண்டு சிரிப்பு வந்தது சேத்ரனுக்கு.

முகத்தில் பாதியை மறைக்கும் அந்தக் கருமாந்திரக் கண்ணாடியை அணியாமலிருந்ததாலோ என்னவோ.. அவளது முக அம்சங்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.

வட்டமான சிறிய முக வடிவு தான்! பெயருக்கேற்றார் போல் அழகான விழிகள்! எடுப்பான மூக்கு! நல்ல இதழ் வடிவம்! சிரித்தால் முகம் முழுதையும் மலரச் செய்யும்! ஆனால் சிரித்தால் தானே!

“கத்துக் கொடுக்கறச்ச, தப்புப் பண்ணினா.. திட்டுறது சகஜம் தானே பாட்டி?, அதுக்காக கோச்சுண்டு ‘உன் கிட்ட நான் கத்துக்கவே மாட்டேன்’-ன்னு ஓடி ஒளியறது என்ன பழக்கம்?, சேஷூ மாமாவை சமாளிச்சு இவ்ளோ தூரம் வந்துட்டு, முட்டாள்தனமான காரணங்களுக்காக எதுவும் வேண்டாம்ன்னு ஒதுங்கி நிற்கிறா மாமி. நீங்களே அவளுக்கு புத்தி சொல்லுங்கோ”

‘சேஷூ மாமாவாம்! அடப்பாவி!’ – சிரிப்பு பீறிக் கொண்டு வந்தது நயனாவிற்கு.

“ஏன்டி தம்பி திட்டுனதுக்காகவா நீ இரண்டு நாளா வெளியே போகாம இருக்க?, அடி அபிஷ்டு” – தலையில் அடித்துக் கொண்ட பாட்டியிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

கைகளைப் பிசைந்து கொண்டு நின்றவளைக் கண்ட மாமி “அவ அப்படித் தான் தம்பி! சின்ன விஷயத்துக்கெல்லாம் பெருசா யோசிச்சுக் குழம்புவா, இரு, நான் உனக்குக் கொறிக்க ஏதாச்சும் எடுத்துண்டு வரேன்” எனக் கூறி விட்டு உள்ளே செல்ல.. டிவி சீரியல் பக்கம் திரும்பி விட்ட பாட்டியை நோக்கி விட்டு நயனாவின் புறம் திரும்பினான் சேத்ரன்.

“ஏன் 3 நாளா வரல?”

“நீங்க ஏன் எங்க வீட்டுக்கு வந்தீங்க?”

“நா… நான் உங்கப்பனுக்கு சாம்பார் கொடுத்துட்டுப் போக வந்தேன்”

“அடேங்கப்பா! எப்போ இருந்து எங்கப்பாவுக்கு சேவகனா மாறுனீங்க?, அவனுக்கு நான் என்ன அடிமையா,வேணும்னா எடுத்துட்டுப் போகத் தெரியாதான்னு அந்தப் பேச்சு பேசுவீங்க?”

“சரி, உன்னைப் பார்க்கத் தான் வந்தேன். ஒத்துண்டுட்டேன். ஹாப்பி?”

“உங்களுக்கு உறுத்தியிருக்கும். வந்துருப்பீங்க. இதுல நான் ஹாப்பியாக என்ன இருக்கு?”

“ஆமா. உறுத்தல் தான். ஏதோ ஒரு வகைல நீயும் என்னை மாதிரி ஒரு சூழ்நிலைக் கைதின்னு தோணுச்சு. நீ சொன்ன மாதிரி, என்னோட இயலாமையை உன் மேல கோபமாக் காட்டிட்டது தப்புன்னு புரிஞ்சதால நேர்ல வந்துட்டேன். போதுமா?”

“ம்ம்”

“அவ்ளோ தானா?, என் தன்மானத்தை விட்டு, உங்கப்பன் அகங்காரன் வீட்டு வாசப்படியை உனக்காக மிதிச்சிருக்கேன். ம்ம்-ன்ற?”

“வேற என்ன பண்ணனும்?, காஃபி,ஸ்நாக்ஸ்ன்னு அம்மா தான் கொடுத்தாங்களே!”

“ஆமா, சாப்பாட்டுக்கு வழி இல்லாம தான் நான் உன் வீட்ல வந்து உட்கார்ந்திருக்கேன்”

“பார்த்தேளா?, மறுபடி பழைய டோன்ல பேசறேள்?”

“சாரி!, மறுபடி க்ளாஸ்க்கு வர்றேன்னு நீ ஒரு வார்த்தை சொல்லுன்னு சொல்றேன்”

சிரிப்பில் முகம் மலர தலை சாய்த்து அவனை நோக்கியவள் “பாக்கியம் மாமியோட குணம் உங்களுக்கும் கொஞ்சம் இருக்கு.” எனக் கூற…

“எனக்கும் உங்கப்பாவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லைன்னு சொன்ன?” – என்றவனிடம்..

“ஹ்ம்ம், இப்படித் தேடி வந்து சாரி கேட்டு மறுபடி வா-ன்னு சொல்லும் போதே தெரிஞ்சுடுத்து. நீங்க எங்கப்பா மாதிரி இல்லன்னு!” – எனச் சொல்லி வரிசைப் பற்கள் தெரிய விரிந்த புன்னகையை அவன் மீது செலுத்தினாள் நயனா.

ஆச்சரியமாய் அவள் சிரிப்பை ‘ஆ’-வென நோக்கியவன் “ரொம்பவும் அழகான சிரிப்பு உனக்கு” – என்றான் ரசனையுடன்.

சட்டென முகம் மாறப் புருவத்தை சுருக்கியவள் “இப்படியெல்லாம் என் கிட்ட பேசாதீங்கோ. எனக்குப் பிடிக்காது” – என்றாள்.

கடுப்பாகி அவளை முறைத்தவன் “அம்மா மோகினி! ரொம்பவும் சாதாரணமான ஸ்டேட்மெண்ட் அது. உடனே என்னைத் தெருப்பொருக்கி ரேஞ்சுக்கு ப்ரமோட் பண்ணாத. உன் வயசு என்ன?, என் வயசு என்ன?, புத்தி எப்படிப் போகுது பாரு! அடிக்கடி இப்படி எகத்தாளமா பேசி உங்கப்பனோட மகள்ன்னு ப்ரூவ் பண்ற நீ!” எனக் கூறி விட்டு “மாமி, அவசர வேலையிருக்கு எனக்கு. இன்னொரு நாள் வர்றேன், வரேன் பாட்டி,வரேன் மாமி” எனச் சென்று விட்டான்.

எரிச்சலுடன் அவன் செல்வதை நோக்கியவள் ‘இவருக்கும் எனக்கும் என்னைக்கும் ஒத்தே வராது போல’ என்று எண்ணிக் கொண்டாள்.

அதன் பிறகு தவறாமல் தினமும் வகுப்பிற்கு வந்தவளிடம் மேலும் எதுவும் வம்பு வளர்க்காமல் அமைதியாக நடந்து கொண்டான் சேத்ரன். பிடித்த படிப்பே ஆனாலும் கடனே என்று வந்து செல்லாமல் தனக்குக் கிடைத்த பொண்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டாள் அவள்.

முதலில் பற்றுதலின்றி ஆரம்பித்த சேத்ரனுக்கு அவளது ஈடுபாடு பிடித்துப் போக, தான் கற்ற நுணுக்கங்களையும்,தன் அனுபவங்களையும் அவளிடம் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டான். ‘சமையலைப் பொறுத்தவரைக்கும் தியரியை விட ப்ராக்டிகல் அனுபவங்கள் தான் நிறைய வேணும்’ என்று அவன் கூறியிருந்த படியால் வகுப்பில் மட்டுமல்லாது வீட்டிற்குச் சென்ற பிறகும் இண்டர்நெட்டில் புதுப் புது பேஸ்ட்ரிக்கள்,கேக்குகள் எனச் செய்து பார்த்து அதை மேலும் சுவையூட்ட என்ன சேர்க்கலாம் என்பதை அவனுடன் ஆலோசிக்கவும் செய்தாள். இதைக் கவனித்த சேத்ரனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“ஸ்கை அகாடமில பேக்கிங் & பேஸ்ட்ரி செஃப்க்கான ஆறு மாத டிப்ளமா கோர்ஸ் ஆரம்பிக்கப் போறாங்க நயனா. உனக்குத் தேவைப்படாது தான் ஆனாலும் நான் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்திருக்கேன். ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை உங்கப்பனோட சண்டை போட்டாவது முயற்சி பண்ணிப் பாரேன்” – ஒரு கணம் அவன் நீட்டிய விண்ணப்பத்தை ஆர்வத்துடன் நோக்கிய நயனாவின் முகம் அடுத்த கணமே கூம்பியது.

“இதெல்லாம் நடக்காது சேத்ரன். இதைக் கொண்டு போய் எங்கப்பாக் கிட்ட நீட்டினா.. இப்போ நான் உங்கக் கிட்ட கத்துக்கிட்டிருக்கிறதுக்குக் கூட தடை போட்டுடுவார். எனக்கு இதுவே போதும்”

“லூசு மாதிரி பேசாத நயனா. நீ சொல்லித் தர்றதை மட்டுமே கத்துக்கிற ஸ்டூடண்ட் மாதிரி இல்ல. ஒரு விஷயம் கத்துக் கொடுத்தா.. அதுக்கு ஈடான ஒன்பது மாற்று விஷயங்களைத் தானாவே கண்டு பிடிக்கிற. உன்னோட டைரியைப் படிச்சேன். நீ அதுல எழுதி வைச்சிருக்கிற குக்கீஸ்,பேஸ்ட்ரி வெரைட்டீஸ் எல்லாம் அமேசிங்கா இருந்தது. இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற என் கிட்ட கூட இவ்ளோ ஐடியா இல்ல. ப்ரஃபஷனலா கத்துக்கும் போது,இன்னும் கூட நீ நிறைய யோசிப்ப. உனக்கு இதுல நல்ல எதிர்காலம் இருக்கு நயனா. ப்ளீஸ்… ட்ரை பண்ணி பாரு”

“ஆண்பிள்ளை நீங்க! இதை ப்ரஃபஷனலா கத்துக்கிட்ட ஆள் தான்! உங்களால மட்டும் என்ன செய்ய முடிஞ்சது?, மாமா,மாமின்னு யாரை மீறியும் எதுவும் செய்ய முடியாத நிலைமைல இருக்கீங்க. எங்கப்பான்ற பெரும் பூதத்தைத் தாண்டி நான் இதைக் கத்துக்கிட்டாலும் என்ன பிரயோஜனம் இருக்கும்னு நினைக்கிறீங்க?”

“நயனா.. இன்னிக்கு மாதிரியேவா வாழ்க்கை எப்பவுமே இருந்துடப் போகுது?, நாளைக்கே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற ஹஸ்பண்ட் உங்கப்பனைப் போல இல்லாம, உன் விருப்பங்களை மதிக்கிற ஆளா வரலாம் இல்லையா?, உனக்கே,உனக்குன்னு ஒரு பேக்கரி வைச்சுத் தர்ற தாராள மனசு கொண்ட பையனா கூட இருக்கலாம்! அப்போ உன் கைல ப்ரஃபஷனல் செர்டிஃபிகேட் இருக்கும் போது எவ்ளோ நல்லா இருக்கும்?”

“ஹ்ம்ம், சுகமான கனவுன்னு சொல்வாங்களே! அந்த மாதிரி இதை நினைச்சுப் பார்க்கும் போது நல்லா தான் இருக்கு. ஆனா லைஃப்ல எதையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். நீங்க அடிக்கடி சொல்ற மாதிரி, கடைசில நான் புருஷனுக்கும்,பிள்ளைகளுக்கும் பனியாரம் சுட்டுப் போடுற ஆளா தான் இருக்கப் போறேன். வீணா எதுக்கு வம்பு?” – வழக்கம் போல் புலம்பித் தள்ளி விட்டு விண்ணப்பத்தை அவனிடமே கொடுத்து விட்டுச் சென்று விட்டாள்.

என்ன செய்தால் சேஷனை இதற்குச் சம்மதிக்க வைக்க முடியுமென்று யோசித்துக் கொண்டிருந்த சேத்ரனுக்கு ஒரு பொண்னான வாய்ப்பு கிட்டியது.

காலையும்,மாலையும் வேளை தவறாமல் கிட்சனுக்கு வருகை தந்து விடும் சேஷன் அன்று யாருடனோ கோபமாக செல்ஃபோனில் உரையாடியபடி உள்ளே நுழைந்தார்.

“நல்ல இடமாச்சே! பேசி முடிச்சிடலாம்ன்னு பார்த்தா.. இது என்னடா சோதனை?, படிச்ச பொண்ணைக் கட்டிண்டு அவன் என்ன கலெக்டர் உத்யோகத்துக்கா அனுப்பப் போறான்?, பொம்மனாட்டிக்கு சோறு சமைக்கச் சொல்லிக் கொடுத்தா போதாது?, வாசல் தாண்டி படிக்க வைச்சு வேற அனுப்பனுமோ?, பொண்ணு படிக்கலன்னு சொல்லி 4 இடத்துல ரிஜெக்ட் பண்ணிட்டா!, கன்யா ஹோட்டல் ஓனர் பொண்ணுன்ற பேர் போறாது?, படிக்க வேற வைக்கனுமாம்” – தன் போக்கில் கத்திக் கொண்டு நின்றவரைக் கண்ட சேத்ரனுக்கு மூளையில் மின்னல் வெட்டியது.

சட்னி கிண்ணத்தை நிரப்பிக் கொண்டிருந்தவன் மெல்லத் திரும்பி அவரைக் கண்டு லேசாகப் புன்னகை புரிய முயன்றான். செல்ஃபோன் உரையாடலை முடித்துக் கொண்டு திரும்பிய சேஷனும் அவனருகே வந்து “என்னடா தம்பி, எந்த வம்பு,தும்புக்கும் போகாம நல்ல படியா வேலை பார்க்கிறியா?” என்று விசாரித்தார்.

கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் அடக்கி “ம்ம், ஆமாம் மாமா” என்றான்.

“ம்ம்,வெர்ரி குட்! இப்போவேனும் உனக்கு கடவுள் நல்ல புத்தியைக் கொடுத்தானே! ஒரு பத்து வருஷம் என் கிட்ட வேலை பாரு. நானே உனக்கு புது ஹோட்டல் வைச்சுத் தர்றேன். நம்ம கிட்டயிருந்து வெளியே போனவா எல்லாரும் சிறப்பா முன்னே வந்துருக்கா. என்ன சொல்ற?”

‘பெரிய பாரி வள்ளல் பரம்பரை!, பத்து வருஷத்தோட நிப்பாட்டிக்கிட்டான் புண்ணியவான்! கிழட்டு நாயே! – உள்ளே வசை மாரி பொழிந்தாலும் வெளியே சின்ன சிரிப்புடன் தலையாட்டினான். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தவனை மகிழ்விக்கும் பொருட்டுத் தானே தொடங்கினார் சேஷன்.

“ஏன்டாப்பா புலியகுளம் பார்த்தசாரதி மகன் கோவிந்தன் உன்னோட படிச்சவனா?”

“ம்ம்,ஆமாம் மாமா. ப்ளஸ் டூ வரை ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம்”

“ஹ்ம்ம், பையன் பெரிய அலட்டல் பேர்வழியோ?”

“அ..அப்படியெல்லாம் இல்லையே மாமா.”

“வாழத் தெரியாத ஆசாமியா இருப்பான் போலவே டா அம்பி! இந்த ஆதிசேஷன் பொண்ணையே வேண்டாம்ன்னு ரிஜெக்ட் பண்ணறான். கேட்டா.. பொண்ணு படிக்கலையாம்!”

“அவன் யு.எஸ் ல மைக்ரோசாஃப்ட்-ன்ற பெரிய ஐடி கம்பெனில வேலை பார்க்குற ஆள் மாமா. தனக்கு வரப் போற பொண்டாட்டி குறைஞ்சபட்சமா ஒரு டிகிரியாவது வைச்சிருக்கனும்னு எதிர்பார்க்குறது தப்பில்லையே!”

“என்னடா படிப்பு,படிப்புன்னு ஆளாளுக்கு துள்ளுறீங்க?, பொம்மனாட்டி படிச்சு என்னடா செய்யப் போறா?, இவளை இப்போ காலேஜ்க்கு அனுப்பி, 22 வயசு வரைக்கும் வீட்ல வைச்சிக்கிறதா?, வாய்ப்பே இல்ல”

“அப்போ நீங்க படிக்காத யாருக்காவது தான் நயனாவைக் கட்டி வைக்கனும். ஆனா.. அதுக்கு உங்க கௌரவம் இடம் கொடுக்காது.”

“என்னடா நக்கலா?, உன்னாண்ட வந்து புலம்புறேன் பாரு, என்னைச் சொல்லனும்”

“ச்ச,ச்ச நான் தப்பான சென்ஸ்ல சொல்லல மாமா. 3 வருஷம் படிக்க வைக்கிறது உங்களுக்குப் பிடிக்கலன்னா, நான் படிச்ச ஸ்கை அகாடமில 6 மந்தஸ் டிப்ளமா பேக்கிங் கோர்ஸ் வேணா சேர்த்து விடுங்கோ. வெளியே சொல்றச்ச, பெரிய படிப்பு படிச்ச மாதிரி ஃபேன்சியா இருக்கும்.”

“…….” – சொட்டைத் தலையை சொறியறான்!! எஸ்! சக்ஸஸ்!

“என்ன சில,பல லட்சங்கள் செலவாகலாம். அது உங்களுக்குப் பெரிய விசயமா இருக்காது! ஆனா.. இந்த ஆறு மாச படிப்பை முடிச்சுட்டா.. கோவிந்தன் மாதிரியான மாப்பிள்ளைங்க நிறைய பேர் வருவாங்க. இப்போல்லாம் பி.காம்,பி.எ-ன்னு படிக்கிறதை விட இந்த மாதிரி படிப்பைத் தேர்ந்தெடுக்கிறது தான் மாமா ஃபேஷன்!”

“ஹ்ம்ம்,காசு சம்பாதிக்கிறது தான் டா பிரதானம்! அதை விட்டுட்டு ஃபேஷனாம்! நீயும் ஃபேஷன்னு நினைச்சுத் தான் படிச்சியோ?”

வெகுவாக முயன்று கட்டுப்படுத்திய கோபம் காற்றில் பறந்து விட்டது சேத்ரனுக்கு.

“நீங்க கேட்டதால நான் ஐடியா தான் கொடுத்தேன். மத்தபடி நீங்க உங்க பொண்ணைப் படிக்க வைச்சாலும் சரி, சிறுவாணி ஆத்துல தள்ளி விட்டாலும் சரி! எனக்கென்ன வந்தது” – என்று விட்டு சட்னி பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு நகர்ந்து விட்டான்.

“சரியான அகராதி!” – என்று முணுமுணுத்த சேஷன் அவன் கூறியதை யோசிக்கத் தொடங்கினார்.