அத்தியாயம் - 7

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து..

நிறைந்தால்.. வழிந்தால்.. மகிழ்ச்சி!

-விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல மெட்லி பர்ஃபார்மன்ஸஸ் அடிக்கடி பண்ணுவாங்க! அதுல சின்னப் பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து ஏ.ஆர்.ஆர் மெட்லி ஒன்னு கொடுத்தாங்க! நிறைய பாடல்களோட சில வரிகளை மட்டும் அவங்க பாடுவாங்க! ஒரு ஸ்டேஜ்ல சட்டுன்னு இந்தப் பாட்டு தொடங்கும்! முதல் சில வரிகளை கோரஸா பாடிட்டு… சுகன்யான்னு ஒரு பொண்னோட வாய்ஸ் மட்டும் ‘வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்.. உயிரை உடைப்பாள் ஒருத்தி’-ன்னு பாடும் பாருங்க! டிவைன்!! சீரியஸ்லி! அந்தக் குரல் உள்ளுக்குள்ள உண்டாக்குற ஃபீல் இருக்கே! வார்த்தையால விவரிக்கவே முடியாது!

விடிந்தும்,விடிந்திராத அந்தக் காலைப் பொழுதில் பெட்டி படுக்கை சகிதம் உச்சக்கட்ட கோபத்தில், நகங்களை ப்ரேக் ஃபாஸ்ட் ஆக்கிக் கடித்து மென்றபடி ப்ளாட்ஃபார்மில் அமர்ந்திருந்த நயனா பயங்கர கொதி நிலையிலிருந்தாள். ஸ்டுப்பிட்! இடியட்! பாஸ்டர்ட்! ஸ்கௌன்ட்ரல்! இன்னும் நாம் உச்சரிக்கக் கூட கூசும் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை அவள் மனம் விடாது கக்கிக் கொண்டிருந்தது.

கடும் குளிரில் கூட வெப்ப அலைகளைப் பரப்பியபடி அமர்ந்திருந்தவளின் உஷ்ணத்தை உணர்ந்தபடித் தன் காரிலிருந்து வேகமாக இறங்கினான் சேத்ரன்.

“சாரி,சாரி நயனா” என்றவனைக் கண்டு எரிச்சலுடன் எழுந்து நின்றவள் “வந்துட்டு கால் பண்ணியிருக்கலாமில்ல?, இந்தக் குளிர்ல என்னை வெயிட் பண்ண வைக்கிறதுல என்ன சந்தோஷம் உங்களுக்கு?, ம்?, அடிச்சதுக்குப் பழி வாங்குறீங்களா?” என்று கத்தினாள்.

“ஷ்ஷ், மெல்லப் பேசு நயனா. மயான அமைதியா இருக்குற ரோட்ல உன் கீச்சுக் குரலைக் கேக்குறது நாராசமா இருக்கு”

“என்ன நக்கலா?”

“சாரி. மறுபடி உன் வீட்டுக்கு வந்தா கிறிஸ்டினா ஜோன்ஸ் கிட்ட நான் உன் பாய் ப்ரெண்ட்ன்னு பொய் சொல்ல வேண்டி வருமேன்னு தான் ரோட்ல வெயிட் பண்ண சொன்னேன். வெர்ரி சாரி. போகலாமா?, இரு இரு.. பெட்டியை நான் தூக்கிக்கிறேன்” என்றவன் மறுபடி அவள் புறம் திரும்பி மேலிருந்து கீழ் வரை நோக்கினான்.

“இப்ப்ப்ப்ப்போ என்ன?”

“சாரி,டென்ஷன் ஆகாத. இல்ல, உனக்கு நல்ல லாங் ஹேர்ன்னு எனக்குத் தெரியும். ஏன் எப்போ பார்த்தாலும் அதை இந்த ஜிலேபி கொண்டைக்குள்ள அடக்கிடுற?”

“ஜி..ஜிலேபி கொண்டையா?, இது டோனட் பன் ஹேர் ஸ்டைல்.”

“ஓ! நீ ஒரு பேக்கர்-ன்னு ப்ரூவ் பண்றதுக்காக இந்த ஸ்டைல்ல இருக்கியோ?, பரவாயில்ல. இதுவும் நல்லாத் தான் இருக்கு. நைஸ்!”

“நீங்க என்னை ரொம்பவும் இர்ரிடேட் பண்றீங்க சேத்ரன்”

“வா.. வா.. வந்து வண்டில ஏறு”

அடுத்த 30 நிமிடம் மௌனமாகப் பிரயாணித்தனர் இருவரும். தன் சிறிய முக வடிவத்தை மேலும் சுருக்கியபடி உம்மென்று அமர்ந்திருந்தவளைக் கண்டு என்ன தோன்றியதோ “பாட்டு கேட்குறியா நயனா?” என்றான்.

அவன் கேட்டதற்குப் பதில் கூறாமல் “இப்போ எங்க போறோம்?” என்றாள் அவள்.

“பேக்கரிக்குத் தான். வேற எங்க?”

“என்னை ஏன் அங்க அழைச்சிண்டு போறீங்க?”

“காரணமாத் தான்”

“என்ன காரணம்?, என் பேரை வைச்சதால, சினிமால வர்ற மாதிரி, உன்னை நினைச்சுக் கட்டுன வசந்த மாளிகை இது! உனக்குத் தான் சொந்தம். உனக்காகத் தான் இவ்ளோ நாளா காத்திட்டுருக்குன்னு சொல்லி நேரா போய் கல்லா-ல உட்கார வைக்கப் போறீங்களா?”

“ஹாஹாஹா… நல்லா ஹாஸ்யமா பேசுற நீ!, அது ஏன் வசந்த மாளிகை! உனக்கும்,எனக்குமான உறவை ஏன் அந்த மாதிரி நினைச்சுக்கிற எப்பவும்?, ஏழு வருஷத்துக்கு முன்னாடி என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டப்போ உனக்கு எந்த ஃபீலிங்க்ஸ்ம் இல்லை தான?, ஜஸ்ட் கன்ஃபர்மேஷனுக்குக் கேட்டேன். முறைக்காத”

“என் வயசு என்ன, உங்க வயசு என்ன?, என்னல்லாம் பேசுறீங்க? ம்?”

“ஏன் 34 வயசு தான எனக்கு?,ஏதோ நரை விழுந்த கிழமாயிட்ட மாதிரி பேசுற?”

“உங்க வயசு ஆம்பளைகளைப் பாருங்க! 5 வயசுப் பாப்பாவோட இருக்காங்க!, நீங்க தான் இன்னும் சிங்கிளா சுத்திண்டிருக்கேள்”

“கனவு,லட்சியம்ன்னு திரிஞ்சதால வயசு கொஞ்சம் ஆயிடுச்சு! ஒத்துக்கிறேன்! அதுக்காக.. ரொம்ப அசிங்கப்படுத்தாத நீ!”

“ப்ச், அநாவசியமா பேசாதீங்க. எதுக்கு பேக்கரிக்குப் போறோம்?, என் பேக்கர் ஆசையை ரெநியூ பண்ணுற ஐடியா எதுவும் வைச்சிருந்தீங்கன்னா, இப்படியே என்னை இறக்கி விட்டுடுங்க. ஏழு வருஷத்துக்கு முன்னாடி இருந்த மென்மையான நயனாக்குள்ள தான் அந்த ஆசையெல்லாம் இருந்தது! இப்போ இருக்கிற நடாஷாவுக்கு வெறும் வக்கிரக் குணங்கள் மட்டும் தான் இருக்கு! அது நீங்க அழிஞ்சு போறதைப் பார்க்கத் தான் காத்திட்டிருக்கு.”

“ஓஹோ!!! ஹ்ம்ம்ம்.. எக்ஸ்பயர் ஆகப் போற விசாவை வச்சுக்கிட்டு நீ எங்க நான் அழியறதைப் பார்க்கப் போற? ம்?, டையலாக்ல மட்டும் தான் ஃபயர் தெரியறது. மத்தபடி நீயெல்லாம் சும்மா மண்டையைப் பொளக்கத் தான் லாயக்கு!”

“சேத்ரன்ன்ன்ன்ன்!”

“இன்னும் இரண்டு மாசத்துல விசா எக்ஸ்பயர் ஆகப் போகுது தான?, மறுபடி.. நீ எப்போ விசாவை ரெநியூ பண்ணி.. எப்போ வந்து நான் நாசமா போறதைப் பார்க்குறது! ஏற்கனவே ஏழு வருஷம் ஓடிடுச்சு! இன்னும் ஒரு ஏழுன்னா… எனக்குத் தெம்பு இருக்காதும்மா! கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி”

“உங்களுக்கு என் லைஃப் ஜோக் மாதிரி இருக்குல்ல சேத்ரன்?”

“நிச்சயம் இல்ல. நான் உன் வாழ்க்கையை ரொம்ப சீரியஸா பார்த்ததால தான் அன்னைக்குக் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. இப்போவும் சீரியஸா நினைக்குறதால தான் என்னோட கூட்டிட்டுப் போயிட்டிருக்கேன். உங்களுக்கென்ன அக்கறைன்னு கேட்காத. ஆனா ஒன்னு! நீ எப்ப எஸ்கேப் ஆக நினைச்சாலும் உன்னைக் கொண்டு போய் ஜெயில்ல தள்ளிடுவேன்! நன்னா ஞாபகம் வைச்சுக்கோ”

“……” – வாயை இறுக மூடிக் கொண்டு நேர் வெறித்தபடி அமர்ந்து விட்டவளைக் கண்டு மெல்லச் சிரித்த சேத்ரன் சாலையில் கவனம் செலுத்தினான்.

சட்டென்ற தொங்கி விழுந்த தலையினால் உறக்கம் களைந்துக் கண் விழித்த நயனா கார் நின்று விட்டதைக் கண்டு பக்கத்து இருக்கையை நோக்கினாள்.

அவனைக் காணாது அவள் விழித்த போது ஜன்னல் கண்ணாடியைத் தட்டிய சேத்ரன் “தூங்கி முடிச்சாச்சா?, வெளியே வர்றியா?” என்று வினவினான்.

“ரொம்பத் தான் அக்கறை!, எவ்ளோ நேரமாகத் தூங்கித் தொலைத்திருக்கிறேன்!” என்றபடி கைப்பேசியை நோக்கியவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்கினாள். வண்டி பேக்கரி முன்பு நின்றிருந்தது.

சேத்ரனுடைய பேக்கரியை அவள் ஏற்கனவே கண்டிருக்கிறாள் தான்! ஆனால் ஒரு முறை கூட உள்ளே சென்று பார்க்கும் தைரியம் இருந்ததில்லை! இது அவனைக் குறித்த பயமல்ல! தன்னைக் குறித்த பயம்!

ஒரு வகையில் இருவருடைய கனவுமே ஒன்று தான்! உலகத்திலேயே பெரிய பேக்கர்-ஆக உயராவிடினும் ஏதோ.. தன்னளவில்.. தன் வரையறைக்குள்.. சிறிய அளவிலான.. திருப்திகரமான.. ஒரு பேக்கரி! வித் லாட் ஆஃப் வெரைட்டிஸ்! விற்பனையும்,லாபமும் அவர்களுக்கு முக்கியமல்ல! இதை வைத்துப் பெரிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கமும் இல்லை! பொழுதுபோக்காகத் தொடங்கிய விஷயம் பேஷ்ஷனாக மாறும் போது.. அதுவே ப்ரஃபஷனாகவும் ஆகி விடும் போது.. உண்டாகும் ஒரு சுயதிருப்திக்கு ஈடு,இணை எதுவுமில்லை! அதை அனுபவிக்கும் ஆசை மட்டும் தான் இருவருக்கும்!

ஏழு வருடத்திற்கு முன்பு விதி செய்த சதியால் இருவரது வாழ்வும் தடம் மாறிப் போனது உண்மை தான்! ஆனால்.. சேத்ரன் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுத் தன் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டான். அவள் அப்படியல்லவே! அன்னை,தந்தை,சேத்ரன் என அனைவர் மீதிருந்த கோபத்திலும்,ஆத்திரத்திலும் தன்னையே அல்லவா அழித்துக் கொண்டாள்! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்.. உருப்படாத கழுதையாகி விட்டாத தான்.. வாழ்வில் சில,பல வெற்றிகளைக் கண்டு விட்ட சேத்ரனின் கனவுக்கோட்டைக்குள் நுழைவதா என்றெண்ணிச் சற்று அவமானமாக இருந்தது அவளுக்கு! கட்டிடத்தை நிமிர்ந்து நோக்கினாள்.

வட்ட வடிவக் குடிலைப் போன்ற அமைப்புக் கொண்ட அந்தக் கட்டிடம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெள்ளை,சிகப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணாடிக் கதவைத் திறந்ததும் கிணு,கிணுவென சத்தமிட்ட மணியைக் கண்டபடி உள்ளே நுழைந்த நயனாவின் கண்கள் ஏகத்துக்கும் விரிந்தது.

இது அவளுடைய கற்பனை! டைரியில் அவள் வரைந்து வைத்திருந்த அதே செட்-அப்!

பேக்கரியென்றால் கேக்,பன்,ப்ரெட்,பஃப்ஸைத் தவிர நம்மில் பலருக்கு என்ன தெரியும்?, இது வெறும் மைதா மாவில் முடிந்து போகிற சமாச்சாரம் அல்ல! அது ஒரு கலை! நா-ஊறச் செய்யும் விதவிதமான வகை,வகையான கலர்ஃபுல்லான சுவை மிகுந்த தின்பண்டங்கள் நிறைந்த இடம்! இனிப்பை விரும்புவோருக்கான சொர்க்க பூமி! பன்,ப்ரெட்,குக்கீஸ்,பிஸ்கட்ஸ்,டார்ட்ஸ்,பைஸ்,டோனட்ஸ்,மூஸ்,கேக்ஸ்,பேன்கேக்ஸ்,கப்கேக்ஸ், ஜார்கேக்ஸ்! இவை ஒவ்வொன்றுக்குமான ஆயிரம் ஃப்ளேவர்கள்! உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்… மனிதனாகப் பிறப்பெடுத்ததே இதையெல்லாம் உண்டு அனுபவிக்கத் தானே!

மூன்று புறமுமிருந்த கண்ணாடி அடுக்குகள் அத்தனையிலும் விதவிதமான டின்-கள்,டப்பாக்களில் அடைக்கப்பட்ட விதவிதமான குக்கீஸ்களும்,பிஸ்கட்டுகளும், பன்-களும் நிறைந்திருந்தது.

அதன் கீழே கண்ணாடி பெட்டியில் மூங்கில் பாஸ்கெட்டுகளிலும், தட்டுகளிலும் பெயர் சீட்டுடன் வைக்கப்பட்டிருந்த வகை,வகையான கேக்குகள், டோனட்ஸ்கள் இன்னும் ஏதேதோ பேஸ்ட்ரிக்கள்!. அதைத் தொடர்ந்த மூலையில் தட்டுக்களும்,டங்க்ஸ்களும் (tongs)!. விருப்பமானவற்றை நாமே எடுத்துக் கொண்டு அமர்ந்து உண்ணலாம்.

பேக்கரியின் மத்தியில் வட்ட வடிவ நகரும் பெல்ட் ஒன்றில் அன்றைய ஸ்பெஷல் என்கிற தலைப்புடன் செர்ரிக்களும்,பெர்ரிக்களும் நிறைந்த டார்ட்-கள், ஃப்ரிட்டர்கள் வரிசையாக ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. அதனுடைய நிறங்களைப் பளிச்சென எடுத்துக் காட்டும் விளக்கு அமைப்பு வேறு!

வலது புற மூலையில் பேட்டீஸ்,பஃப்ஸ்,பீட்சாஸ் என கார சமாராச்சங்கள்! அருகிலேயே குளிர் பானங்கள்,காஃபி,டீக்கள்! காஷியரை ஒட்டிய அடுக்கில் வகை,வகையான சாக்லேட்டுகளும், கேண்டீஸ்-களும்!

மஞ்சள் நிற வெளிச்சத்தைக் கொண்ட பேக்கரி! பின்னணியில் மிதமான இசை! நிறைய இருக்கைகளைக் கொண்டு கொச,கொசவென்று இல்லாமல்.. எளிமையான அமைப்பு! பியூட்டிஃபுல் அட்மாஸ்ஃபியர் என்று காண்போரை ரசிக்க வைக்குமளவிற்கு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொன்றையும் பொறுமையாகக் கண்டபடி மெல்ல வலம் வந்தவளிடம் ஒரு தட்டையும், டங்க்ஸையும் நீட்டினான் சேத்ரன். ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் கொண்டவள் நேராகச் சென்றுத் தன்னைக் கவர்ந்த ஐட்டங்களைத் தட்டிலிட்டுக் கொண்டாள்.

மேங்கோ பை, ஸ்ட்ராபெர்ரி டார்ட்,சினமன்-சுகர் டோனட்,க்ரீம் பன் என மனதில் பட்ட அத்தனையையும் எடுத்துத் தட்டை நிரப்பியவள், ஒரு பெரிய கப் நிறைய கருப்புக் காஃபியையும் எடுத்துக் கொண்டாள். அவனைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்று ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்தாள்.

ஜாக்கெட்டைக் கழட்டி நாற்காலியில் வைத்தவள் தன் ஜிலேபி கொண்டையை அவிழ்த்து முடியைத் தளர்த்திக் கொண்டாள். பின் தட்டிலிருந்த ஒவ்வொன்றையும் எடுத்து நிதானமாகச் சுவைக்கத் தொடங்கினாள். அவள் செயல்கள் அத்தனையையும் கைக்கட்டி வேடிக்கை பார்த்தவன் சிரித்தபடி நகர்ந்து விட்டான்.

அகத்தோடு சேர்ந்து புறமும் நிறைந்து விட்ட திருப்தியுடன் “ப்ப்ப்ப்” என ஏப்பம் விட்டு காஃபியைக் கையில் எடுத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவளைக் கண்டு அருகே சென்று அமர்ந்தான் சேத்ரன்.

கைகளிரெண்டையும் நாடியில் வைத்து அவளையே புன்னகை மாறாமல் நோக்கியவனைக் கண்டு உதட்டை சுழித்தவள்..

“பார்வையில என்ன ஒரு ஆணவம்!” என்றாள்.

“இருக்காத பின்ன?, இதெல்லாம் என்னோட எத்தனை வருஷக் கனவுன்னு நல்லா தெரிஞ்ச ஆளாச்சே நீ!”

“ஹ்ம், திருடியிருக்கீங்க! என் கற்பனைகள் எல்லாத்தையும்!”

“அப்டி மொத்தமா சொல்லிட முடியாது. என் கற்பனையோட சேர்த்து உன்னோடதை இணைச்சிருக்கேன். கொஞ்சம் நல்லா உத்துப் பாரு. சரியா தெரியாட்டி, கண்ணாடி போடு!”

“வெளிப்படையா சொல்லனும்னா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு!, ஆனா.. இது எல்லாத்தையும் தாண்டி நீங்க மட்டும் அன்னைக்கு என்னை கல்யாணம் பண்ணியிருந்தா.. என் லைஃப் ட்ராக்கே மாறியிருக்கும்னு தோணுற எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியல”

ஆட்டிய மாவையே திரும்பத் திரும்ப ஆட்டுபவளைக் கண்டு எரிச்சலுற்றவன்.. அதுவரை காத்து வந்த பொறுமை காற்றில் பறக்க.. “என்ன பெரிய கல்யாணம்,கல்யாணம்ன்ற?, கல்யாணம் ஆகியிருந்தா.. என்ன நடந்திருக்கும் தெரியுமா?” என்று தொடங்கினான்.

“உங்கப்பன் என் காலை ஒடிச்சுக் கட்டிலோட கட்டியிருப்பான். உன்னால தான் டி என் பையனுக்கு இப்படி ஆயிடுச்சு,கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்னு சொல்லி என் மாமா,மாமி ஒப்பாரி வைச்சு உன்னை அதே கட்டில்ல உட்கார வைச்சிருப்பாங்க! உங்கப்பன் தண்ணி தெளிச்சிட்டதால, நான் வேற ஏதாவது ஒரு ஹோட்டல்ல இடியாப்பம் சுட்டு வயித்துப் பொழப்பைப் பார்த்திருப்பேன்! நீ என் மாமியோட சேர்ந்து முறுக்கு சுட்டுக்கிட்டு எனக்கேத்த ஆத்துக்காரியா வாழ்ந்து காலத்தை ஓட்டியிருப்ப. உண்மை தான?”

“………………”

“நயனா… உங்கப்பாக் கிட்டயிருந்து தப்பிச்சு வந்தப்புறம் வாழ்க்கையில எந்தப் பிடிப்பும் இல்லாம இருந்த நீ, அட்லீஸ்ட் என்னைப் பழிவாங்குற வெறியில இவ்ளோ தூரம் உன்னை மாத்திக்கிட்டியே!அதை நினைச்சு நான் பெருமை தான் படுறேன்.”

“…..”

“நடந்து முடிஞ்சதைப் பத்தி நான் பேச விரும்பல. இப்போ நான் கேக்குறதுக்கு நீ பதில் சொல்லு”

“என்ன?”

“நீ சாப்பிட்ட ஐட்டமெல்லாம் எப்படியிருந்தது?”

“நல்லாயிருந்தது.”

“ஓகே! நான் நேரா விஷயத்துக்கு வர்ரேன் நயனா. என் நண்பன் புண்ணியவானால, என் பேக்கரியோட மானம் காத்துல பறந்து வியாபாரம் மொத்தமா படுத்துடுச்சு! முன்னே மாதிரி நிறைய பேர் வர்றதில்ல.”

“அதான் தெரிஞ்ச விசயமாச்சே. மேல சொல்லுங்க”

“இப்போ அதலபாதாளத்துல கிடக்குற என் பேக்கரியைத் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பை நான் உன் கிட்ட ஒப்படைக்கப் போறேன். நீ தான் பெரிய ஐடியா மணியாச்சே!”

“……….” – பிளந்த வாயுடன் அவனையே பார்த்தவளைக் கண்டு சிரித்து விட்டு மேலும் தொடர்ந்தான் அவன்.

“உன்னை ஒரு பார்ட்னரா சேர்த்துக்கிறேன்! அப்போ தான் விசா ரெநியூ பண்ண உதவியா இருக்கும்!”

“நான் ஒத்துக்க மாட்டேன்!”

“என்னால தான் உன் வாழ்க்கை நாசமா போச்சுன்னு நீ அடிக்கடி சொல்ற ஸ்டேட்மெண்ட்டை உடைக்கிறதுக்கு எனக்குக் கிடைச்ச வாய்ப்பு இது. நான் உன்னை விட்றதா இல்ல. இது தான் உனக்கான இடம்! கொஞ்சம் சுற்றுப் பாதைல நடந்து வந்தாலும்.. சரியா நீ வர வேண்டிய இடத்துக்கு வந்துட்ட!”

“கம்ப்யூட்டரைத் தொட்ட கை இது, திரும்பவும் கரண்டி பிடிக்கவெல்லாம் சான்ஸ் இல்ல”

“யெஸ்! என்னோட அடுத்த கோரிக்கை அது தான்!, நீ இந்த ஹாக்கிங் எழவை இதோட விட்டாகனும்! ”

“முடியாதுன்னு சொன்னா?”

“சிம்பிள்! ஜெயில்ல புடிச்சுப் போட்டுடுவேன். என் கிட்ட ஸ்ட்ராங்கான ப்ரூஃப் இருக்கு. தெரியும்ல?”

பல்லைக் கடித்தவளைக் கண்டு கொள்ளாமல் “உன் பெட்டி,படுக்கையெல்லாம் மாடியில் இருக்கிற முதல் ரூம்ல வைச்சிருக்கேன். அங்க தான் நீ தங்க போற! என்னோட ரூம் அது, அதனால் என் திங்க்ஸ் கொஞ்சம் அங்க இருக்கும்! 2 நாள்ல க்ளியர் பண்ணிடுவேன். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” – தானாக ஏதேதோ பேசிக் கொண்டே சென்றவனை முழு எரிச்சலுடன் நோக்கிக் கொண்டிருந்தாள் நயனா.