அத்தியாயம் - 3
ஆர்.பொன்னி,
பூப்புனித நீராட்டு விழா.
02.10.2013.
- தெர்மாகோலினால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பேனரைக் கடந்துத் தன் தோளில் பெரிய வாழைத் தாரைச் சுமந்தபடி அந்தப் பெரிய வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் வெற்றி.
“டேய் வெற்றி, பந்தி பரிமாற ஆள் பத்தலையாம்!, ஒட்டகச் சிவிங்கி மாதிரி உயரமும், காட்டெருமை மாதிரி பாடியையும் வெச்சுக்கிட்டு வெட்டியாத் தான சுத்துற நீ?, போய் ஒரு கை கொடுத்து உதவக் கூடாதா?” – நக்கல் குரலில் நண்பன் பிரசாத்.
“ஆமா டா! வேலை செய்ய ஆள் இல்லன்றப்போ மட்டும் என்னையக் கூப்பிடுங்க! மத்த நேரமெல்லாம் தீண்டத்தகாதவன் மாதிரி ஒதுக்கி வைச்சுடுங்க”
“அது...... உன் ராசி அப்டி மச்சி”
“டேய்....”
“ம்க்க்க்க்கும்!, டென்ஷன் ஆகாத டா!, என் தங்கச்சி விசேஷத்துல நீ வேலை பார்க்காம, யாரு டா வேலை பார்ப்பா?”
“பின்ன ஏன் டா போன வாரம் கதிர்க் கிட்ட, என் தங்கச்சிக்குக் கல்யாணம்ன்னு ஒன்னு வைச்சா கண்டிப்பா வெற்றியைக் கூப்பிட மாட்டேன்னு சொல்லிருக்க?”
“உளறிடுச்சா அந்த நாய்?, அவன் உனக்கு ரொம்ப நேர்மையா இருக்கான் மச்சி, அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றது தான் டா!, நீ இப்ப பரிமாறப் போவியா மாட்டியா?. அதைச் சொல்லு முதல்ல”
“போறேன் டா போறேன்! போய்த் தொலையுறேன்” – எரிச்சலுடன் மொழிந்தவன் நேராக பந்தி நடக்குமிடத்திற்குச் சென்றான்.
சாம்பார் வாளியுடன் பிஸியாகச் சுற்றி வந்தவனைக் கலாய்க்கவென்றே பந்தியில் அமர்ந்திருந்தனர் மாலதி மற்றும் குழுவினர்.
“வந்துட்டான் டி! ஆந்த்ராக்ஸ்” – ரேகா
“அவன் ஊத்துற குழம்பைத் தின்னா.. நாம குடல் வெந்து சாகுறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. பார்த்து சாப்பிடுங்க!, ஏன்னா.. நம்மாளு கை ராசி அப்பிடி” – அவன் காது படக் கத்திக் கூறினாள் மாலதி.
“மூடின்னு தின்னுங்கடி! கோபம் வந்து உங்க மூஞ்சிகளையெல்லாம் சாம்பார்ல முக்கி எடுத்துடப் போறேன்” – என்ற வெற்றி, தொடர்ந்து அடுத்த இலைக்கு நகர்கையில்... திடீரென இளையராஜா ஒலிக்கத் தொடங்கினார்.
‘போதும் இனிப் பேச்சு! அனல் வீசுது மூச்சு...
ஒரு மாதிரி ஆச்சுது! ஆஜா.. ஆஜா...’
‘காரணமில்லாம மனுஷன் வர மாட்டாரே’- என்றெண்ணியவன், ஒரு உள்ளுணர்வில் திரும்பிப் பார்க்க... எதிர் வரிசையில் கடைசி ஆளாக அமர்ந்திருந்த ஜமுனா நக்கல் சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதுவரை மனதில் மண்டிக் கிடந்த எரிச்சல் மறைந்து விட முழுப் புன்னகையுடன் அவளை நெருங்கினான் வெற்றி.
“டீச்சர்ர்ர்ர்ர்ர், சாம்பார் ஊத்தட்டுமா???” – ஏகத்துக்கும் புன்னகை நிறைந்தக் குரலுடன் ஹை-பிட்சில் கத்திக் கேட்டவனைக் கண்டு பல்லைக் கடித்தாள் ஜமுனா.
“ஏன் டா கத்துற?” – ஜமுனா.
“எல்லாம் உங்களைப் பார்த்த எக்ஸைட்மெண்ட் தான்!”
“சரி அடங்கு!”
“ஈஈஈஈஈஈ... சாம்பார் ஊத்தட்டுமா வேணாமா?, சொல்லுங்க டீச்சர்” – சிணுங்கிக் கொண்டு வழிந்தான்.
“ஊத்துறது சாம்பார், இதுல ஊ,ஊன்னு இளிப்பு வேற?, ஒன்னும் வேணாம், போடா”
-அவள் துரத்தியடித்தாலும் அசராமல் “டீச்சர், லட்டு!, டீச்சர், பூரி!, டீச்சர், சட்னி!” என்று அந்தப் பந்தியில் அமர்ந்திருந்தோர் அத்தனை பேரும் காண்டாகி முறைக்குமளவிற்கு அவளை ஏகத்துக்கும் கடுப்பேற்றினான் வெற்றி.
“என்ன ஆந்த்ராக்ஸூ!, அந்தப் பொண்ணு ஏரியாவுக்குப் புதுசுன்னதும் கவனிப்பெல்லாம் பலமா இருக்கு!” – மாலதி அண்ட் கோ.
“ஆமாடி! இன்னான்ற அதுக்கு?” - வெற்றி
“அம்மாடி ஜமுனா!, இந்த ஏரியாக்குள்ள உயிரோட நடமாடிட்டு இருக்குற கெட்ட்ட்ட்ட ஆத்மா இவன்! இப்போ உன் பின்னால சுத்தின்னு திரியுறான்! பார்த்து கேர்ஃபுல்-ஆ இருந்துக்க! அப்புறம், இந்த ஏரியாவுக்கு வந்ததால தான், என் வாழ்க்கை இப்பிடி ஆயிடுச்சுன்னு இந்தப் புனித ஸ்தலத்து மேல பழி போடக் கூடாது, புரிஞ்சதா?” – ஜமுனாவைக் கை நீட்டி அழைத்து, மாலதி கிண்டலடிக்க.. அவளோ பொறுமையாக வாயிலிருந்த வடையை மென்று முழுங்கி விட்டுப் பின்...
“ண்ணா... ஒரு பூரி” – என்றாள்.
என் பேச்சுக்கு இவ்ளோ தான் ரியாக்ஷனா ரீதியில் முகத்தை வைத்துக் கொண்ட மாலதியைக் கண்டு புன்னகைத்த வெற்றி, தன்னைக் கடந்து சென்ற நபரின் கையிலிருந்த அப்பளத்தில் ஒன்றை எடுத்து மாலதியின் முகத்தில் பட்டென அடித்து “இடத்தைக் காலி பண்ணுடி என் இசுக்கு” என்று விட்டு “டீச்சர், பாயாசம்?” என்றபடி ஜமுனாவின் அருகே சென்றான்.
அடுத்த மூன்று மணி நேரம் பந்தியில் பிஸியாகி விட்டவன், அங்குமிங்கும் ஓடி மற்ற வேலைகளையும் முடித்த போது அவனது நண்பர் பட்டாளம் உண்டு விட்டு வேறு வேலையாய் வெளியில் சென்றிருந்தனர்.
“டேய் வெற்றி, எவ்ளோ நேரம் டா வேலை பார்த்துட்டிருப்ப?, முதல்ல போய் சாப்பிடுடா” – பிரசாத்.
“போறேன் டா! பசங்க எவனையும் காணோம்?, எங்கடா போனானுங்க?”
“அவனுங்கள்லாம் எப்பவோ கொட்டிக்கிட்டானுங்க! நானும் வேற வேலையா வெளிய போறேன்! நீ போய்ச் சாப்பிடு!” என்ற பிரசாத் அங்கு நின்றிருந்தத் தன் தங்கையின் தோழியிடம் “மலரு, போய் அண்ணனுக்குப் பரிமாறும்மா” எனக் கூறிச் சென்று விட்டான்.
அந்தப் பெண் அவனை ஒரு மாதிரி நோக்கியதிலேயே ‘இவள் நிச்சயம் தனக்குப் பரிமாறப் போவதில்லை’ என்றுணர்ந்த வெற்றி, தானே பந்தி நடந்த இடத்திற்குச் சென்றமர்ந்தான்.
‘ஓடி,ஓடி வேலை பார்த்தவன் வயித்துக்குச் சோறு போடக் கூட ஆள் இல்லையா இங்க?’ – புலம்பியபடி இலையை விரித்தவன் இட்லி,பூரியென ஒவ்வொன்றையும் அதில் இட்டுக் கொண்டிருந்த நேரம் அவன் கையிலிருந்தக் கரண்டியைப் பறித்தபடி முன்னே வந்து நின்றாள் ஜமுனா.
“ஏய்ய்ய்” – என்றபடி எரிச்சலுடன் திரும்பியவன் அவளைக் கண்டதும் திகைத்து “என்ன?” என்றான்.
“நான் பரிமாறுறேன். நீ உட்கார்ந்து சாப்பிடு” – என்றாள்.
தானாகப் பிளந்து கொண்ட வாயை இரு கைகளாலும் பொத்திக் கண்களைப் பெரிதாக விரித்தவன் “என்ன டீச்சர் சொன்னீங்க?” என்று வினவினான்.
“ப்ச்” என்றபடி முகத்தைச் சுருக்கியவள் “ஓடி ஓடி வேலை செஞ்சியேன்னு பாவம் பார்த்து, நமக்கிருக்கிற முன் பகையைக் கூட மனசுல வைச்சுக்காம, பரிமாற வந்திருக்கேன்! மரியாதையா உக்காரு” என்றாள்.
“நீங்க சொன்னப்புறம் மறுப்பேனா?, இதோ உட்கார்ந்துட்டேன்” – என்றபடி சிரித்துக் கொண்டே அமர்ந்தவன்.. அவள் சாம்பார்,சட்னியை ஊற்றியதும் ஆர்வமாய் அள்ளி சாப்பிடத் தொடங்கினான்.
“புகழ் மாமாக்கு அப்புறம் எனக்குப் பாசமா சோறு பரிமாறுற முதல் ஆளு நீங்க தான் டீச்சர்”
“பரிமாறுறேன்னு மட்டும் சொல்லு. அதென்னா ‘பாசமா’-ன்னு ஒரு கொடுக்கு! ஆமா, யாரு புகழ் மாமா?”
“எங்கப்பன் கடைல வேலை செய்யுற ஒரு நல்ல மனுஷன்”
“ஆமாமா! உங்கப்பாவைப் பத்திக் கேள்விப்பட்டேன்! 3 ஹோட்டல் வைச்சு நடத்துறாராமே!, பெரிய பணக்காரன் தான் போல நீ”
“ஹோட்டல் நடத்துறது எங்கப்பன். நான் இல்ல”
“என்னிக்குன்னாலும் அதெல்ல்லாம் உனக்குத் தான சொந்தம்?”
“ம்ஹ்ம் சாகக் கிடந்தாலும், அந்தாளு காசுல பச்சத் தண்ணீ கூட குடிக்க மாட்டேன்”
“ஏன்?”
“அது ஒரு பெரிய கதை டீச்சர்”
“அதைக் கேட்கல்லாம் எனக்கு நேரமில்ல. குருமா வைக்கவா?”
“ம்ம்ம்” – என்றவன் அடுத்த இரண்டு நிமிடம் அமைதியாகச் சாப்பிட்டான்.
திடீரென தூரத்தில் சலசலத்தக் குரல்களைக் கேட்டு இருவரும் திரும்பி நோக்கினர். ஏதோ அதிசயத்தைக் காண்பவர்கள் போல இருவரையும் கண்ட மாலதி அண்ட் கோ தங்களுக்குள் குசு,குசுவென ஏதோ பேசிக் கொள்ள... தோள் குலுங்கச் சிரித்தபடி உணவை அடைத்துக் கொண்டிருந்தவனை சுருக்கியப் புருவங்களுடன் நோக்கினாள் ஜமுனா.
“ஒவ்வொரு தடவையும் உன்னைப் பார்க்கும் போது, மானக்கேடா பேசுறாளுங்களே! இதுங்களோடப் போய் நீ சிறுபிள்ளைத்தனமா வாய்ச்சண்டை போட்டுட்டுத் திரியுற?”
“ப்ச், பத்து வயசுல இருந்து இதுங்களைப் பார்க்குறேன்! தகராறு பண்ணியே பழகிப் போச்சு”
“என்ன ஜென்மமோ நீ!, இதுவே நானா இருந்திருந்தா பல்லைப் பேத்து இனி அவளுங்க பேசவே முடியாத படி செஞ்சிருப்பேன்”
“நீங்க ஏன் டீச்சர் கோவப்பட்றீங்க?, செருப்பு,கல்லுன்னு நீங்க என் மேல யூஸ் பண்ணின ஆயுதங்களுக்கு இவங்க எவ்ளவோ பெட்டர் தான?”
“என்ன நக்கலா?, ஆனா.. அதுங்களைக் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்ல! அவளுங்க இவ்ளோ காண்டாகுறாளுகன்னா... நீ.. கண்டிப்பா ஏதோ பெரிய சம்பவமா பண்ணியிருப்ப”
“ப்ச், இதுங்கள்லாம் சின்னப் பொண்ணுங்க டீச்சர்! இதுங்களை வைச்சு நான் சம்பவம் பண்ண நினைப்பேனா?, ஒன்றரை மாசமா உங்க பின்னாடி சுத்துறேன்! இன்னும், என்னைப் பத்தி உங்களுக்குச் சரியா புரியலையே!”
“யாரு சின்னப்பொண்ணு?, அந்த மாலதியா?, உன் கூடவே சுத்தினு இருப்பானே ஒரு பன்னாட! எந்நேரமும் முழங்கால் வரைக்கும் ட்ரௌசர் ஒன்னைப் போட்டுக்கிட்டு?”
“யாரைச் சொல்றீங்க?, கதிரையா?”
“ஆமாமா, அவன் தான்! இந்த மூதேவி, அந்தக் கஸ்மாலத்தோட சேர்ந்துக்கினு நம்ம சேட்டு வூட்டு மாடியில கொஞ்சினு உட்கார்ந்திருந்ததை, நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்! இவ, இவ சின்னப் பொண்ணா?”
“பார்றா! டீச்சர், இந்த ஏரியாக்கு நீங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது! ஆனா.. ஆல் இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்க!”
“பின்ன, உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் சமாளிச்சாகனுமே”
“அப்டின்னா, உங்கக் கீழ் வீட்டு கனகா-அக்காப் புருஷன் சுந்தரேசன், நீங்க நைட்டியைப் போட்டுக்கிட்டுத் தண்ணி பிடிக்கும் போது, கையில சுருட்டோடக் காமப் பார்வை பார்க்குறதையும், பக்கத்துத் தெரு ஜெகதீஸ், தினம் நீங்க பஸ் ஸ்டாப்ல நிற்கிற நேரமாப் பார்த்து, அவனோட பல்சர் பைக்ல ஸ்டண்ட் காட்டி சீன் போடுறதையும் தெரிஞ்சு தான் வைச்சிருக்கீங்க? இல்லையா?” – இட்லியை சாம்பாரில் ஊற வைத்தபடி அசால்ட்டாகக் கேள்வி கேட்டவனை...
“அடப்பாவி! இதெல்லாம் உனக்கு எப்பிடி டா தெரியும்?” – என்று வியப்புடன் வினவினாள்.
“இவனுங்க மட்டுமில்ல! நம்ம தெருவுல இன்னும் 2,3 பேரு உங்களை உஷார் பண்ணுறதுக்கோசரமே தினம் லைஃப்-பாய் சோப்புப் போட்டுக் குளிச்சுன்னு சுத்துரானுங்க! இந்த ‘பாடு’-களுக்கு மத்தில உங்க பின்னாடி ஜென்டிலா சுத்துற ஒரே ஆண்மகன் நான் மட்டும் தான்! நல்லாத் தெரிஞ்சுக்கோங்க”
“அதுல உனக்கொரு பெருமை வேற! பரதேசி!”
“பேச்சோட பேச்சா, அப்டியே அந்தப் பாயாசத்தை எடுங்க டீச்சர்! அந்த அப்பளத்தையும்!”
“என்ன காம்பினேஷன் இது?, கண்றாவி”
“நீங்க பூரிக்குத் தேங்காய்ச் சட்னி தொட்டு சாப்பிட்டீங்களே! அதை விட இது நல்ல காம்போ தான்”
“ம்க்கும்”
“அப்புறம், உங்களுக்கு வேற என்னல்லாம் பிடிக்கும் டீச்சர்?”
“வேற-ன்னா?”
“பொதுவா சொல்லுங்க!, ம்ம்ம்ம்ம், இளையராஜான்னா எனக்கு உயிர்! உங்களுக்கு?”
“ஓ!, அதான் ஏரியா-ல நீ அட்டெண்ட் பண்ற ஃபங்க்ஷன் அத்தனைலயும் வெறும் இளையராஜா பாட்டா ஓடுதா?”
“யெஸ்! நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க டீச்சர்”
“ப்ச், அவர் பாட்டைப் பிடிக்காதவங்க யாராவது உலகத்துல இருக்க முடியுமா?”
“ம்ம்ம், அப்புறம் எஸ்.ஜானகியைப் பிடிக்குமா?”
“பிடிக்கும்”
“எஸ்.பி.பி?”
“ரொம்பப் பிடிக்கும்” – இப்போது அவள் குரலிலும் குதூகலம்.
“கே.ஜே.யேசுதாஸ்?
“ம்ம்ம்”
“ஜென்சி?”
“ரொம்ப....”
“வெற்றிச்செல்வன்?”
“ம்ம்,ரொம்ப ரொம்ப! ஏய்,ஏய்,ஏய்.... இரு இரு! அப்டி ஒரு சிங்கர்-ஏ கிடையாதே! அடச்சீ பன்னாட! பேச்சு வாக்குல உன் பேரைக் கோர்க்குற இடைல?” – அவள் கோபமாய்க் கூறியதும் பொறுமையாக இலையை மூடி விட்டு எழுந்தவன்..
“இந்த நாளை உங்க டைரில நோட் பண்ணி வைச்சுக்கோங்க டீச்சர்! வெற்றிச் செல்வனை ரொம்ப,ரொம்பப் பிடிக்கும்ன்னு ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொல்லியிருக்கீங்க! நாளைக்கு மாத்திப் பேசுற வேலையெல்லாம் வைச்சுக்கக் கூடாது. சரியா?” – என்று தோரணையாகக் கூற.. வாயடைத்துப் போய் நின்று விட்டவள்... கைக் கழுவுவதற்காக முன்னே சென்றவனைத் தொடர்ந்து “டேய் கருமாந்திரம் பிடிச்சவனே” என்று கத்தியபடியே சென்றாள்.
“இதோ பாரு, நீ பண்ணது ஃப்ராடுத்தனம்! கண்டதைக் கேட்டு என் வாயைப் பிடுங்கிட்டு, என்ன டயலாக் அடிக்கிற?”
பதில் சொல்லாமல் சிரிப்புடன் கையிலிருந்தத் தண்ணீரை உதறினான் அவன்.
“என்னடா சிரிப்பு?, வாயைத் தொறந்து பதில் பேசுடா” – அவள் குதித்துக் கொண்டிருக்கையிலேயே.. வாசலில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரிலிருந்து எஸ்.பி.பி...
“பேசும் கிள்ளையே... ஈர முல்லையே! நேரமில்லையே இப்போது!” – எனப் பாட...
கடகடவென சிரித்தவன் “நான் சொல்ல நினைச்சத அவர் சொல்லிட்டார்! நீங்க சொன்னது சொன்னது தான் டீச்சர்!, அதுக்கு மேல நீங்க போட்ற சண்டைக்குப் பதில் சொல்ல எனக்கு நேரமில்ல. வேலையிருக்கு. வர்ட்டா?” – என்று ஸ்டைலாக சல்யூட் வைத்துக் கூறி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான் வெற்றி.
‘கண்ணாளனைப் பார்த்து... கன்னோரங்கள் வேர்த்து...
சாலையோரம் சோலை ஒன்று வாடும்... சங்கீதம் பாடும்..’ – ஜமுனாவின் பற்கள் நறநறத்துக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் எஸ்.பி.பி தொடர்ந்து பாடினார்.
‘மதுரையருகே நடந்த ஆணவப் படுகொலையினால் இளம் காதல் ஜோடி கழுத்தறுத்துக் கொல்லப்பட்டக் கொடூரச் சம்பவம்’
-ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஜமுனாவின் இல்லத்தில் ஒலித்த டி.வி சத்தம் அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் சேர்த்து செய்தி பரப்பிக் கொண்டிருந்தது.
“அடப்படுபாவிப் பயலுவளா! காதலிக்கிறதுக் குத்தமா டா?, உசுரை விட ஜாதி,மதம் பெருசாப் போச்சு! என்னத்த சொல்ல?” – வாய் விட்டுப் புலம்பியபடித் தனது வருத்தத்தைப் பதிவு செய்த சரோஜா, தன் தாய்க்கு உணவு புகட்டிக் கொண்டிருந்த ஜமுனாவைப் பரிவுடன் நோக்கினார்.
“ஏன் கண்ணு, உனக்குக் கிடைக்குறதே ஒரு நாள் லீவ் தான்! ரெஸ்ட் எடுக்காம, நீ ஏன் இதையெல்லாம் செய்யுற?, எப்பவும் போல நான் பார்த்துக்க மாட்டேனா உங்கம்மாவை?” – சரோஜா.
தன் தாயின் கடை வாயில் வழிந்த நீரைத் துடைத்தபடி சரோஜாவிடம் புன்னகைத்த ஜமுனா “ரெஸ்ட் எனக்கு மட்டும் தானா?, உனக்கு வேண்டாமா?” என்றாள்.
அதற்கு சரோஜா பதில் சொல்லும் முன்.. அவர்களின் வீட்டினுள் நுழைந்த செல்வி “ஏ ஜம்மு!, என்ன நீ அதிசயமா இன்னிக்கு வீட்ல இருக்கிற?, ஃப்ரீயா இன்னிக்கு?” என்று விசாரித்தாள்.
“ஃப்ரீ-ஆ தான் கண்ணு இருக்குறா. எங்கயாச்சும் வெளிய கூப்பிட்டுப் போயேன்! வயசுப் பொண்ணு மாதிரியா நடந்துக்கிறா?, வீட்டு வேலை,பள்ளிக்கூட வேலைன்னு முழு நேரமும் ஓய்வில்லாமத் திரியுறா! அவங்கப்பா இறந்து போனதிலிருந்து, இந்த 5 வருஷமா.. கால்-ல சக்கரத்தைக் கட்டிட்டு ஓடுது புள்ள!, தனக்குன்னு எந்த சந்தோசத்தையும் தேடிக்காம...”
“ப்ச், புலம்பாத சரோம்மா!, நான் சந்தோசமாத் தான் இருக்கேன்னு எப்பிடி காட்டச் சொல்ற?., முழு நேரமும் ஈ-ன்னு இளிச்சவாயா சுத்துனா.. நம்புவியா?”
“ஏய் ஜம்மு, சரோஜாம்மா சொல்றது சரி தான்! வா, நாம வெளியே போகலாம். இன்னிக்கு நம்ம ஏரியா பசங்களுக்கும், பக்கத்து ஏரியா பசங்களுக்கும் பெட் மேட்ச் நடக்குது! ஜாலியா இருக்கும்! வா.. போய்ப் பார்க்கலாம்” – என்று குதூகலமாகக் கூறிய செல்வி, வரவில்லையெனக் கூறிய ஜமுனாவிடம் வம்பு செய்து அழைத்துக் கொண்டு சென்றாள்.
அடிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாது, அந்தச் சிறிய மைதானத்தைச் சுற்றிக் கூட்டம் கூடியிருக்க, அங்கு நின்று கொண்டிருந்த ஐஸ் வண்டிக்காரரிடம் ஆளுக்கொரு குச்சி ஐஸ் வாங்கிக் கொண்டுக் கூட்டத்தோடு ஐக்கியமாயினர் செல்வியும்,ஜமுனாவும்.
அவர்கள் சென்ற நேரம் ஸ்ட்ரைக்கர் எண்ட்-இல் கைலியுடன் வெற்றி, ரன்னர் எண்ட்-இல் கதிர்! அம்பயர்,பௌலரிலிருந்துத் தொடங்கி ஃபீல்டிங்கிலிருந்த அத்தனை பேரும் வெற்றி செய்யும் களேபரத்தில் சுழித்த முகத்துடன் நின்றிருந்தனர்.
“டேய் கதிரு, உன் பேச்சைக் கேட்டு இவனை டீம்-ல சேர்த்துக்கிட்டதுக்கு நல்லா கைம்மாறு செய்ற டா!” – அடுத்துக் களமிறங்க வேண்டிய நபரான ரவி மைதானத்தின் மறு ஓரத்திலிருந்து முழுத் தொண்டையில் கதிரை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தான்.
அவனது பேச்சில் காண்டாகி நண்பனை முறைத்த கதிர் “டேய் வெற்றி, ஒரு ரன் எடு டா! ஒரே ஒரு ரன்! ப்ளீஸ்.. தொடர்ந்து 4-வது பால் டா இது! ஒரு தடவை கூட நீ கைல வச்சிருக்கிற பேட், பால்-ஐத் தட்டவே இல்ல டா!, அடுத்த பால்-ஐ விட்டா.. நாம ஜெயிக்கிறதுக் கஷ்டம் டா!” என்று கெஞ்சினான்.
“நானா டா வேணாம்ன்றேன்! இந்த மாங்கா மூஞ்சி ‘பாடு’ பால் போடுறதே சரியில்ல மச்சி” – மூக்கைச் சுருக்கியபடி வெற்றி.
“டேய் செருப்பால அடிப்பேன் டா! உனக்குத் தான் சுட்டு போட்டாலும் கிரிக்கெட் ஆட வராதுல்ல?, ஏன் டா மொட்டை வெயில்ல என் தாலியறுக்குற?” – என்ற கதிர் மேலும்,சில,பல கெட்ட வார்த்தைகளைக் கூச்சமின்றி உச்சரிக்க.. “இப்போ பார்றா, உங்கொப்பன்மவனே” என்று பொங்கியெழுந்த வெற்றி அடுத்த பால்-ஐ எதிர் கொள்ளத் தயாரானான்.
கடாயுதத்தை ஏந்திய புஜபலபராக்கிரமசாலியாகத் தன்னை உருவகித்து, இரு கைகளாலும் பேட்-ஐ தூக்கிக் கொண்டு நின்றவன், ‘மாங்கா மூஞ்சி’ எறிந்த அடுத்தப் பந்தையும் தவற விட.. “டேய்... கதிரு கம்னாட்டி! மவனே இன்னிக்கு உனக்கு சங்கூதி, நாளான்னைக்கு உன் சமாதி-ல பால் ஊத்தல, என் பேரு ரவி இல்லடா” – சூர காண்டில் சண்டைக்கு நின்ற ரவியைக் கண்டு விட்டு.. நண்பனை அழுகையும்,பொறுமலுமாய் நோக்கினான் கதிர்.
“சாரி மச்சி! மிஸ் ஆயிடுச்சு” – ஈயென்ற வாயுடன் வெற்றி.
“அடுத்த பால்-ல தயவு செஞ்சு அவ்ட் ஆயிடு டா!, நெக்ஸ்ட் ஓவர்-ல எப்படியாவது நான் சமாளிச்சுக்கிறேன்! ஒரே ஓவர்-ல என்ட்ரி குடுத்து சோலிய முடிச்சுக் கட்டிட்டேல?, நல்லா வருவ டா! நல்லா வருவ!”
சபித்த கதிர் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால், அடுத்தப் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியே வந்த வெற்றியின் முகத்தில் அத்தனை பெருமிதம்! சதம் அடித்து விட்ட சச்சினைப் போல் நடந்து வந்தான்.
மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் பேட்-ஐத் தூக்கிக் காட்டியபடி இண்டர்நேஷனல் ப்ளேயர் ரேஞ்ச்ஜிற்கு ஈ-யென வந்தவனின் மீதுக் கையிலிருந்த மாங்காயை விட்டெறிந்தாள் மாலதி “சாவுடா பரதேசி" என்று!.
தன்னை முறைத்தபடிக் கடந்து சென்ற ரவியின் தோளைத் தட்டிய வெற்றி “சாரி டா மச்சி!, I couldn't perform well, பட் நீ என் பேரைக் காப்பாத்துற மாதிரி விளையாடனும் மச்சி!, இன்னிக்கு ‘கப்’ நம்மது தான்!!” என்று கூற “அய்யோஓஓஓ” எனக் கண்களில் கை வைத்து அழுத ரவி “போயிட்றா டேய்... ப்ளீஸ் போயிட்றா!” என்று புலம்பியபடியே ஓடிச் சென்றான்.
“என்ன மாலதி! உங்கத் தோட்டத்துல விளைஞ்ச மாங்காயா இது?” – என்று கேட்டபடி ஒரு கடி,கடித்தவன்.. சிரிப்பை அடக்க முயற்சித்தபடித் தன்னையே நோக்கிய ஜமுனாவைக் கண்டு “நம்ம டீச்சரு!” என்றபடி ஹாய் எனக் கையசைத்தான்.
“கையில வச்சிருக்கிற தண்ணீர் பாட்டிலைக் கொஞ்சம் கடன் தர முடியுமா?”
மாங்காய்க் கொட்டையைத் தூக்கி எறிந்தபடி தன் முன்னே நின்று வினவியவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் ஜமுனா.
“கைலியைக் கட்டிக்கிட்டு கிரிக்கெட் ஆடுற முதல் மனுஷன் நீயாத் தான் டா இருப்ப” – ஜமுனா.
“அதனால என்னங்க டீச்சர்”
“அதான, நல்லா ஆடுறவனுக்குத் தான் அந்தக் கவலையெல்லாம் இருக்கனும்!”
“என்ன டீச்சர், கலாய்க்குறீங்களா?”
“ஏன் டா எல்லா இடத்துலயும் வாண்டட்-ஆ போய் அசிங்கப்பட்டுக்குற?”
“என்னைப் பார்த்து 4 பேர் சிரிச்சு சந்தோசமா இருக்கட்டுமேன்னு தான்!, உண்மையைச் சொல்லுங்க! நீங்களும் என்னைப் பார்த்து சிரிச்சுன்னு தானே நின்னுட்டிருந்தீங்க?”
“ஹாஹாஹா! பின்ன! நீ பண்ற கூத்துக்கு சிரிக்காம இருந்தாத் தான் ஆச்சரியப்படனும்! அதுலயும் கங்குலி மாதிரி நின்னு ஒரு போஸ் குடுத்தியே! செத்துட்டேன் போ!” – வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தவளை விழிகளில் ஆர்வத்துடன் இமைக்காது நோக்கினான்.
“சிரிக்கும் போது ரொம்ப அழகாயிருக்க!” – அடிக்குரலில் கூறியவனை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் ஜமுனா.
“என்ன டா பார்வை,பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” – புருவத்தைத் தூக்கியவளிடம் மறுத்துத் தலையசைத்தபடிப் பின் தலையைக் கோதியவன்...
‘உன்னைப் போன்ற பெண்ணைக் கண்ணால் பார்த்ததில்லை....
உன்னையன்றி யாரும் பெண்ணாய்த் தோன்றவில்லை’
எங்கிருந்தோ செல்ஃபோனில் ஒலித்த இளையராஜாவைக் கேட்டுச் சிரித்து... “இன்னிக்கு சாயந்தரம் நீங்க ஃப்ரீ-ஆ டீச்சர்?” என்று வினவினான்.
“ஆமா, ஏன்?”
“படத்துக்குப் போலாமா?”
“என்னது?”
“ச்சி! பாடம் படிக்கப் போலாமான்னு கேக்க வந்தேன்! டங் ஸ்லிப் ஆயிடுச்சு!,எனக்குக் கணக்கு பாடம் சொல்லிக் குடுங்க டீச்சர்!, இந்த வருசமாவது நான் பத்தாவது பாஸ் ஆகனும்”
“என்ன கணக்கு படிக்கிறேன்ற பேர்ல என்னைய கணக்கு பண்ணப் பார்க்குறியா?, உன் திருட்டு முழியைப் பார்க்கும் போதே தெரியுது! நீ ஏதோ ப்ளான் வைச்சிருக்கன்னு! ‘சம்பவம்’ நடத்துறப் பழக்கத்தையெல்லாம் வேற எவக்கிட்டயாவது வைச்சுக்க”
“டீச்சர், 3,4 மாசமா பழகுறோம்! நான் ஹார்ம்-லெஸ்ன்றது உங்களுக்குப் புரியவேயில்ல பார்த்தீங்களா?”
“நான் உன்னை நம்ப மாட்டேன் டா”
“சரி தான் போடி!”
“பார்த்தியா, பார்த்தியா?, இது தான் நீ! அப்பப்போ சிரிச்சு,சிரிச்சுப் பேசுறதெல்லாம் வெறும் நடிப்பு”
“ஆமா, நீ பார்த்த! பேசாம போயிட்றி! ஏதாவது சொல்லிறப் போறேன்! தினம் நாய் மாதிரி உன் பின்னால சுத்துறேனே! என் கூட ஒரு பத்து நிமிஷம் டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுல என்னா கஷ்டம் உனக்கு?”
“என்ன டா?, ரொம்ப உரிமையா கேள்வி கேக்குற?”
“அப்டித் தான் பேசுவேன்! என்னடி செய்வ?, இத்தனை நாள் பழகியும், என்னைப் பத்தி ஒன்னும் தெரியல! உனக்கெல்லாம் குரு ஸ்தானத்துல இருக்கத் தகுதியே இல்லடி”
“ஏய்... என்ன ரொம்பப் பேசுற?, பல்லைத் தட்டிருவேன்”
“போடி சாத்திட்டு! திமிர்ப்பிடிச்ச ராங்கி!” – என முணுமுணுத்தவன்....
‘காத்துல சூடம் போல... கரையிறேன் உன்னால...’ – என மீண்டும் நான்-சிங்க்-இல் உள்ளே வந்த இளையராஜாவை சபித்து விட்டு அந்த இடத்தைக் காலி செய்தான்.
அன்று மாலை கதிர் வீட்டிற்கு ஏதோ வேலையாகச் சென்ற வெற்றி, அங்கு செல்வியுடன் அமர்ந்திருந்த ஜமுனாவைக் கண்டு கொள்ளாமல் “டேய் கதிர்...” என்று குரல் கொடுத்தான்.
“அண்ணன் வீட்ல இல்ல” – விறைப்புடன் பதிலளித்த செல்வியிடம் “என்னைய வரச் சொல்லிட்டு இந்த நாய் எங்க போச்சு” என்று முணுமுணுத்தவன் “சரி,சரி, போய் அண்ணனுக்குக் காபி போடு” என்றான்.
“எனக்குக் காபியெல்லாம் போடத் தெரியாது”
“ஆமா, திங்க மட்டும் தான் தெரியும்! எந்திரிச்சுப் போடி” – அவன் மிரட்டியதும் முறைத்தபடியே சமையலறைக்குச் சென்றாள் செல்வி.
“இப்ப என்னத்துக்கு அவசரமா அவளைக் காலி பண்ணுற?” – கையைக் கட்டிக் கொண்டுப் பொறுமையாய் கேள்வி கேட்டாள் ஜமுனா.
அப்போதும் அவளைக் கண்டு கொள்ளாமல் “செல்வி... காபி ரெடியா?” என்று மீண்டும் கத்தினான்.
“அடேங்கப்பா! சார் என் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டீங்களோ!”
“முகத்தைப் பார்த்துப் பேசுனாத் தான் முடிச்சவிக்கிப் பட்டம் குடுக்குறீங்களே! பின்ன என்ன?”
“இப்போ என்னாத்துக்கு மூஞ்சியத் தூக்குற?, கணக்குப் பாடம் தான?, நான் சொல்லிக் கொடுக்குறேன் வா...”
“ப்ச், இனிமே படிச்சு நான் என்ன ஐஏஎஸ் ஆகவாப் போறேன்?”
“பின்ன?”
“உன் கூடப் பேசலாம்ன்னு தான் அப்டி சொன்னேன்”
“சரி, அப்பப் பேசு”
“எ...எ...என்ன பேச?” – அவள் பட்டென ஒத்துக் கொண்டதில் தயங்கித் தடுமாறி நின்றவனிடம்.. “நீ தான டா என்னமோ பேசனும்ன்ன?” என்றாள்.
“க்கும்” எனத் தொண்டையைச் செறுமியவன் டீ-ஷர்ட்டின் காலரை எடுத்து விட்டுக் கொண்டான். பிடறி முடியைக் கோதியபடியே...
“நை... நைட் வூட்ல என்ன சாப்பாடு?” என்றான்.
அவன் முகத்தில் தெரிந்தத் தயக்கம், பயம், ஆசை,ஆர்வம் போன்ற அத்தனை உணர்ச்சிகளும் அவளுக்குச் சிரிப்பை வரவழைக்க.. ஆனாலும் முயன்று அடக்கி..
“வெண் பொங்கலும்,சட்னியும்” – என்றாள்.
“தேங்காய்ச் சட்னின்னா ரொம்ப இஷ்டமோ?”
“இல்லையே! வெங்காயச் சட்னி கூட நல்லா சாப்பிடுவேன்”
“வக்கணையாப் பேசுறீங்க! பேச்சு போலவே சமையலும் இருக்குமா?”
“ம்ஹ்ம், பசில காது அடைச்சாலும், அடுப்படிப் பக்கம் போகவே மாட்டேன்”
“ஓஹோ! அ...அப்போ, உன்னைக் கட்டிக்கிறவனுக்குக் கண்டிப்பா சமையல் தெரிஞ்சுருக்கனும் போல” – இதைக் கூறுகையில் வேறு புறம் பார்த்தவனைக் கண்டு அடக்க முடியாமல் புன்முறுவல் பூத்து....
“ஆமா!, ஆனா.. அதுக்கு வாய்ப்பில்ல” என்றாள்.
“ஏன்?”
“ஏன்-னா நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்ல”
“ஏன்-வாம்?”
“நீ தான் அன்னிக்கு சொன்னியே! நான் கல்யாணம் பண்ணிப் போய்ட்டா, என் அம்மாவை யார் பார்த்துக்கிறதுன்னு?, அந்தக் காரணம் தான்!”
“ஹ்ம்ம்! அம்மா-ன்னா ரொம்ப இஷ்டமோ?”
“இதென்ன கேள்வி?, எல்லா ஜீவராசிக்கும் அம்மா-ன்னா இஷ்டமாத் தான இருக்கும்?, ஏன், உனக்கில்லையா?”
“ப்ச்!, பெத்தவளைக் காவு வாங்குனவன்னு பேர் வாங்கிக் குடுத்துட்டுப் போய்ச் சேர்ந்த பொம்பள மேல எங்கிட்டிருந்துப் பாசம் வரும்?” – அவன் கூறியதும் ஒரு நொடி அமைதியானவள்... “அது ஒன்னும் அவங்க தப்பில்லையே” என்றாள்.
“என் தப்பும் இல்லயே” – இறுகிய குரலில் கூறியவனைக் கண்டுத் திகைத்துப் பின் பேச்சை மாற்ற நினைத்து...
“ஹேய்.. உனக்கு சீரியஸா-ல்லாம் பேசத் தெரியுமா?” எனக் கேலி செய்தபடி சிரிக்க முயன்றாள்.
“பின்ன எந்நேரமும் பல்பு வாங்கிக்கிட்டு சிரிச்சுனே இருக்குற ஆளுன்னு நினைச்சியா?”
“அதுசரி”
“டீச்சர், அதே சீரியஸ்நெஸ்-ஓட இப்போ இன்னொரு விசயம் சொல்றேன். கேளு” – என்றவன், சொல்லத் தொடங்குகையில் “காபி..” எனக் கூறி இடைமறித்தபடி வந்து நின்றாள் செல்வி.
எட்டி அவள் கையிலிருந்ததை உற்றுப் பார்த்தவன், வாசலை நோக்கித் திரும்பி “மணிஇஇஇஇ...” என்று குரல் கொடுத்தான்.
அவன் கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வந்த நாயிடம் “தங்கச்சி உனக்காக காபி போட்டுக் கொண்டாந்துருக்கு. சமத்தா குடிச்சிட்டு வால் ஆட்டினே வாசல்ல படுத்துக்க. சரியா?” என்று விட்டு செல்வியின் கர்ணகொடூரப் பார்வையிலிருந்துத் தப்பித்து ஓடியே விட்டவனைக் கண்டு கலகலவெனச் சிரித்தாள் ஜமுனா.
‘என்ன விஷயம்ன்னு சொல்லாமலே போயிட்டானே’ என்று யோசித்தவளுக்கான பதிலை மறுநாள் கூறினான் அவன்.
அன்று காலை வழக்கம் போல் அவர்களது தெருவில் தண்ணீர் லாரி வந்து நிற்க.. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நான்,நீ எனப் போட்டி போட்டுக் கொண்டுக் குடத்துடன் வந்து வரிசையில் நின்றனர் நம் தமிழ்நாட்டு வீராங்கனைகள். சாரி! இல்லத்தரசிகள்.
பொதுவாக வெற்றியின் வீட்டில் மட்டும் சேவல் காலை 11 மணிக்குக் கூவுவதால், அப்போது தான் துயில் முடித்து எழுந்த வெற்றி ஒரு நீண்ட கொட்டாவியை வெளியிட்டபடி வாசலுக்கு வந்து நின்றான்.
அவனது அழகான காலை வேளையைக் கெடுப்பதற்காகவே அவன் கண்ணில் பட்டுத் தொலைத்தான் சுந்தரேசன், ஜமுனாவை நோக்கிக் காமப்பார்வையை செலுத்தியபடி!
அந்தக் காமுகனின் பார்வையைக் கண்டு ஏனென்றே புரியாமல் வெற்றியின் தலை,முதல் கால் வரை சுரு,சுருவெனக் கோபம் ஏற.. விறுவிறுவெனச் சென்று இடுப்பில் குடத்துடன் நடந்து கொண்டிருந்த ஜமுனாவின் முன்பு நின்றான்.
தன் முன்னே கோப முகத்துடன் நிற்பவனை சுருக்கிய புருவங்களுடன் நோக்கியவள் “என்னா டா குடத்தைக் கைல வாங்கி எனக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு இருக்கியா?” என்று வினவினாள்.
“இல்ல”
“பின்ன என்னாத்துக்கு இப்பிடி சிலை மாதிரி நிக்குற?, நவுரு (நகரு)”
“டீச்சர், நேத்து சீரியஸா ஒரு மேட்டர் சொல்லனும்ன்னு சொன்னேனே, நியாபகம் இருக்கா?”
“இருக்கு”
“மேட்டர் இது தான். இனிமே நைட்டி போட்டுக்கிட்டு வாசலுக்கு வராத” – பட்டெனக் கூறியவனை ‘நீ என்ன லூசா’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
“பெருசா ஏதோ சொல்லப் போற-ன்னு பார்த்தா... என்னாடா இப்பிடி சொல்ற?”
“ப்ச், நீ இனி நைட்டி போடாதன்னா போடாத”
“ஏய்... நான் என்ன டிரெஸ் போட்டா உனக்கென்ன?” – எரிச்சலுடன் பாய்ந்தவளிடம்...
“சொன்னாக் கேளு டீச்சர்! நானாவது அன்னிக்கு உன் இடுப்புல ரெண்டு இஞ்ச் மட்டும் தான் பார்த்தேன்! ஆனா இந்த சுந்தரேசன்... கண்ட,கண்ட இடத்தையெல்லாம் கண்றாவியாப் பார்க்குறான்”
“அவன் பார்க்குறான்றதுக்காக நான் என்னை மாத்திக்க முடியுமா?”
“அப்டின்னா.. அவன் உன்னை எப்பிடிப் பார்த்தாலும், உனக்குப் பரவாயில்லையா?”
“ப்ச், அவன் என்னை மட்டுமா பார்க்குறான்?, இதையெல்லாம் பெருசு படுத்த முடியுமா?, அப்டியே தட்டி விட்டுட்டுப் போய்ட வேண்டியது தான்”
“அப்போ நான் பார்த்ததுக்கு மட்டும் ஏன் டி பிரச்சனை பண்ணுன?”
“ஏய்... உனக்கு என்னாப் பிரச்சனை இப்போ?”
“அந்தாளு உன்னை இப்பிடிப் பார்க்குறது எனக்குப் பிடிக்கல. நீ இனிமே நைட்டியை மாட்டிக்கிட்டுத் தெருவுக்கு வராத” – சட்டமாய்க் கூறியவனைக் கண்டு கொதித்துப் போனவள், தன் வீட்டு வாசலில் குடத்தை இறக்கி வைத்து விட்டு...
“இன்னா டா?, நானும் பார்த்துனே இருக்குறேன்! ரொம்ப உரிமையா மிரட்டுற?, இவன் பார்க்குறான், அவன் பார்க்குறான்னு ஒவ்வொன்னையும் நான் பெருசா படுத்துனா.. வூட்டு வாசலைத் தாண்டி எங்கயும் போ முடியாது! இவனுங்களுக்காக நான், படுதா-வை மாட்டியினா சுத்த முடியும்?, நீ உன் வேலையைப் பார்த்துட்டுப் போ டா” – என்று கிழித்துக் கூறு போட்டு விட்டு நகர்ந்து விட்டாள்.
‘ம்ஹ்ம் இவ மேல கோபப்பட்றதால ஒரு பிரயோஜனமும் இல்ல டா வெற்றி!, இவ சொன்னா மாதிரி, முழுசா போர்த்தினு வந்தாக் கூட, இந்தக் கம்னாட்டி மூட் சாங் பாடத் தான் போகுது!, இவளைத் திட்றதுக்குப் பதிலா, இந்த நாய்க்கு ஆஸ்பத்திரிக்கேப் போகாம ஒரு குடும்பக் கட்டுப்பாடு பண்ணி விட்டா என்ன!’ – என்றெண்ணிக் கொண்டு “ண்ணா... சுந்தரேசன் ண்ணா...” என்றழைத்தபடி அருகே சென்றான்.
அன்று மாலை பஸ் ஸ்டாப்பில் அவன் மறுபடி ஜமுனாவைக் காண காத்துக் கொண்டிருக்கையில் பக்கத்துத் தெரு ஜெகதீஷ், தன் பல்சரை ஸ்டாப் அருகே பார்க் செய்து விட்டு, அதன் மீது சாய்ந்து நின்றபடி அவனை நோட்டம் விட்டான்.
‘என்னாவாமாம் இவனுக்கு?, பொதுவா ஸ்டண்ட் காட்டிட்டுத் தொலைஞ்சிடுவானே! இன்னிக்கு ஏன் பார்க் பண்ணிட்டு நிக்கிறான்?’ – என்று வெற்றி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஜமுனா வந்து நின்றாள்.
காலையில் வெற்றி, சுந்தரேசனை ‘சிகரெட்’ வாங்கிக் கொடுப்பதாகக் கூறித் தனியாக அழைத்துச் சென்று செமத்தையாகக் கவனித்து அனுப்பியதில்.. அவர் மூக்கு,வாயெல்லாம் வீங்கி ரத்தக்களறியாய் வீடு வந்து சேர்ந்திருந்தார்.
என்ன சொல்லி அடித்தானோ தெரியவில்லை! இவள் பள்ளிக்குச் செல்லக் கீழிறங்குகையில் ‘நீ என்ன பெரிய அழகியா?, கிளி மாதிரி நான் இருக்கையில... வெள்ளைக் குரங்காட்டம் இருக்குற உன் மேல என் புருஷன் கண்ணு படப் போகுதா?, அந்த ஆந்த்ராக்ஸைக் கைக்குள்ளப் போட்டுக்கிட்டு ஆட்டமாடி ஆடுற?,’ –என்று கத்திக் கூப்பாடு போட்டு விட்டாள் சுந்தரேசனின் மனைவி கனகா..
இந்த ஏரியாவிற்கு மாறி வந்த இத்தனை மாதங்களில் யாருடனும் சண்டை,சச்சரவின்றி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அதில் கல்லை எறிவதற்கென்றே வந்து சேர்ந்திருக்கிறான் இந்த வெற்றி!
அவன் மீது ஏகக் காண்டில் இருந்ததால்... முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தவளின் அருகே வந்த ஜெகதீஷ் “ஜமுனா” என்றழைத்துக் கையிலிருந்த ரோஜாப் பூவையும், ஒரு க்ரீட்டிங் கார்டையும் அவள் முன்பு நீட்டினான்.
அவனையே விடாது கவனித்துக் கொண்டிருந்த வெற்றி, வெறுப்புடன் ஒரு மூச்சை இழுத்து “நினைச்சேன்!, இவன் இப்பிடித் தான் ஏதாவது பண்ணுவான்னு! மொசை புடிக்கிற நாய் மூஞ்சியைப் பார்த்தா.. தெரியாது!, காலைல தான் ஒருத்தனை நொங்கெடுத்தேன்! அடுத்து இவனா?” என்றெண்ணிக் கொண்டு மெல்ல நடந்து... அவர்களருகே சென்றான்.
“என்ன இது?” – ஜெகதீஷை நோக்கி ஜமுனா.
“லவ் லெட்டர்”
“யார் குடுத்தா?”
“நான் தான்! உங்களுக்குக் கொடுக்கிறேன். ஐ லவ் யூ ஜமுனா”
“ஷ்ஷ்ஷ் கடுப்பேத்தாம போங்க சார்! எனக்கு நீங்க யாருன்னு கூடத் தெரியாது”
“நீங்க பொய் சொல்றீங்க”
“ஏய்ய்ய் அதான் பேசாம போ-ன்னு சொல்லுதுல்ல?, இன்னும் இன்னா டா பொய் சொல்ற, மெய் சொல்றன்னுட்டு?, கிளம்பு கிளம்பு! காத்து வரட்டும்” – திடீரென இடை புகுந்துக் கரடியாய்க் கத்தினான் வெற்றி.
“ஏய் நீ இதுல தலையிடாத” - ஜெகதீஷ்
“நான் தலையிடாம வேற யாருடா தலையிடுவா?”
“ப்ச், டேய்.. ஆறு மாசமா இவ பின்னால சுத்துறதால, நீ அவளோட லவர் ஆய்ட முடியாது. சரியா?”
“அதை அவ சொல்லட்டும்! நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு”
“ஜமுனா... இவன் ஒரு வெத்து வேட்டு!, இவனுக்குப் பயந்துக்கிட்டு நீங்க என் மனசை நோகடிக்காதீங்க” – ஜமுனாவிடம் ஜெகதீஷ் கூறியதும் “யாரு டா வெத்து வேட்டு?” எனப் பொங்கி எழுந்த வெற்றி, அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றினான்.
நொடியில் இருவரும் தரையில் விழுந்து..... ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு உருள.... கத்தி,கத்திப் பார்த்த ஜமுனா.. ‘ச்சை’ என்றபடி விறுவிறுவென அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
அதன் பின்பு ஜெகதீஷின் கடவாய்ப் பல்லை உடைத்து வெற்றிக் கொடியை நாட்டிய வெற்றி நேராக ஜமுனாவைத் தேடி தன் ஏரியாவிற்கு வந்தான்.
அவளது வீடு, கதிரின் வீடு, அம்புஜம் மாமி வீடு, பிள்ளையார் கோவில் என அவள் அடிக்கடி வந்து போகும் அனைத்து இடத்திலும் அவளைத் தேடிச் சலித்தவன்.. இருள் சூழ்ந்த வேளையில்.. அருகிலிருந்த பார்க்கில்... மரத்தடி பெஞ்சில்.. கொசுக்கடியில் அமர்ந்திருந்தவளைக் கண்டு.. நேரே அவள் முன்பு சென்று நின்றான்.
“ஏய்.. உன்ன எங்கல்லாம் தேடுறது?, இங்க என்ன பண்ணிட்டிருக்க?” - வெற்றி
“ம்ம், பார்த்தாத் தெரியல?, கொசு அடிச்சிட்டிருக்கேன்”
“என் வீட்டுக்கு வந்து அடிக்கிறியா?, அங்க நிறைய கொசு இருக்கு”
“டேய் பன்னாட, நீயெல்லாம் சோறு தான தின்னுற?”
பதில் சொல்லாமல் அவளை வெற்றுப் பார்வை பார்த்து வைத்தான்.
“இல்ல, இட்லி,தோசையெல்லாம் கூட தின்பேன்னு மொக்கை போட்ட, சாவட்ச்சிருவேன்”
“ஏய்ய் வாயைக் கொற-டி! காலைல இருந்து ரெண்டு பேர் வாயை உடைச்சிருக்கேன்! உன்னோடதையும் சேர்த்து உடைக்க வைச்சிடாத”
“உடைப்ப டா உடைப்ப! உனக்கு என்ன தான் டா பிரச்சனை?, கோபம் குறையுற வரைக்கும் தான் உன் பின்னாடி வருவேன்னு சொன்னேல?, நானும் அதுக்கு மேல வம்பு வேணாம்ன்னு உன் கூட சிரிச்சு,சிரிச்சுப் பேசி சமாதானமாப் போயிட்டேன்ல?, பிரச்சனை முடிஞ்சதுன்னு விட்டுத் தொலையாம, ஏன் டா இப்பிடி நான் போற,வர்ற இடத்துல-லாம் வம்பிழுத்து என் உயிரை வாங்குற?”
“ஓஓ! நீ என்-ட்ட பல்லைக் காட்டுறதுக்குப் பின்னாடி இப்டி ஒரு லாஜிக் இருக்கா?, நீ சிரிச்சுப் பேசுனா, நான் உன் பின்னாடி வர்றதை நிறுத்திருவேன்னு நினைச்சியாக்கும்?”
“வெற்றி! போதும் டா! ஏரியாக்குள்ள என் பேரை நீ அதிகமாவே நாறடிச்சுட்ட! இதோட விட்ரு”
“இப்போ தான் முதன்முறையா நீ என் பேரை உன் வாயால உச்சரிக்கிறதைக் கேக்குறேன்”
“ரொம்ப முக்கியம்”
“நீ என் பேரைச் சொல்லிக் கூப்பிட்றது நல்லாயிருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால, இனி மிச்சமிருக்கிற காலம் முழுக்க நீ என் பேரை உச்சரிக்கிறதைக் கேட்டே என் வாழ்நாளைக் கடத்திடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்”
-அலட்டிக் கொள்ளாமல், போகிற போக்கில் வாயில் வந்ததை நிதானமாக உளறிக் கொட்டியவனைத் திகைத்து விழி விரித்து நோக்கினாள் ஜமுனா.
“என்ன டா சொல்ற நீ?”
“ஏன் புரியலயா?, ரோஜாப்பூ, க்ரீட்டிங் கார்டுன்னு அந்த ஜெகதீஷ் பய குடுத்த மாதிரில்லாம் எனக்கு வராது”
“சுத்தமாப் புரியல டா எனக்கு”
“எனக்கும் தான் புரியல! இதுக்கு மேல எப்பிடி ஓப்பன்-ஆ சொல்றதுன்னு”
“.................”
கலவர முகத்துடன் புருவங்களைச் சுருக்கியபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு வேக மூச்சுடன் திரும்பி நின்றான்.
இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, வலது கையினால் நெற்றியைத் தேய்த்தவன் ‘நெத்தி,கழுத்தோட சேர்த்து இதயத்துக்கும் வேர்க்குதோ!, இப்பிடிப் படபடன்னு வருதே!’ என்று புலம்பி விட்டு.... பரபரப்பில் வெடவெடத்தைக் கரங்களை இறுக்கிக் கொண்டு மீண்டும் அவள் முன்பு திரும்பினான்.
“அந்த சுந்தரேசனையும்,ஜெகதீஸையும் ஏன் அடிச்சேன்னு உனக்குப் புரியவேயில்லையா?”
“ஏன் அடிச்ச?”
“நடிக்காத டி! இந்த மாதிரி விசயத்துல-லாம் நீ கடைஞ்செடுத்தப் பருப்புன்னு எனக்கு நல்லாத் தெரியும்!”
“நான் பருப்பு தான் டா! ஒத்துக்கிறேன்! ஆனா.. உன் விசயத்துல என் பருப்பு தான் வேகுறதேயில்லையே! நீ எந்த நிமிஷம் என்ன பேசுவ,எப்பிடி நடந்துப்பன்னு சத்தியமா எனக்குப் புரியவேயில்ல”
“என்ன புரியல உனக்கு?”
“கில்மா போஸ்டர்ல இருக்குற ஐட்டம் மாதிரி இருக்க, அதனால உன் மேல லவ்வெல்லாம் எனக்கு வராதுன்னு நீ தான டா சொன்ன?”
“தப்பா சொல்லிட்டேன்! நம்ம மீசை – டீக்கடையாண்ட, அம்சமா சேலைக்கட்டினு குத்து விளக்கு ஏத்துற மாதிரி ஒரு பொண்ணு போஸ்டர் ஒட்டிருக்கானுங்கள்ல?, நீ அதுல இருக்குற பொண்ணு மாதிரி இருக்க”
“லவ் பண்ற அளவுக்கு எனக்கு வர்த் இல்லன்னு வேற சொன்ன!”
“ஆமா! ஏன்னா நீ... கல்யாணம் பண்றதுக்கு வர்த் ஆன ஃபிகர்”
“...................”
“ஏதாவது பதில் பேசு டி. அமைதியா இருந்து டென்ஷன் பண்ணாத என்னை”
“என்ன டா பதில் சொல்லச் சொல்ற?” – வள்ளென விழுந்தவள்... ஒரு நீண்ட பெருமூச்சுடன் கையைக் கட்டிக் கொண்டு, இருளை வெறித்தபடி “எனக்குக் காதல்,கல்யாணம்ன்னு எதுலயும் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல வெற்றி! நான் அந்த மாதிரி ஆசையெல்லாம் வளர்த்துக்க விரும்பல! என் அம்மா உயிரோட இருக்கிற வரைக்கும் அவங்கள நல்லபடியாப் பார்த்துக்கனும்! எனக்குன்னு வாழ்க்கை அமைச்சுக்கிற ‘தாட்’ எல்லாம் கிடையவே கிடையாது” என்றாள்.
“உங்கம்மாவைப் பார்த்துக்கக் கூடாதுன்னு யார் சொன்னா இப்போ?, என் கூட வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்”
எரிச்சலுடன் அவனை முறைத்துப் பார்த்து “யாரு? நீ?” என நக்கலாய்ச் சிரித்தவள் “தினம் அவங்களைக் குளிப்பாட்டி, 3 வேளை சோறு ஊட்டி, பெட் பேன் வைச்சு... நாள் பூரா வீட்ல உட்கார்ந்து நர்ஸ் மாதிரி பார்த்துக்குவியா?, ம்?, பொறுமைன்னா கிலோ எவ்ளோன்னு கேக்குற ஆள் நீ?, நீ எங்கம்மாவைப் பார்த்துக்குவியா?”
“.....................”
அவன் அமைதியில் மேலும் எரிச்சலுற்றவள், காலையில் கனகா திட்டியதில் உண்டான கோபம், ஜெகதீஸூம்,இவனும் சண்டையிட்ட போது பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் இவளைப் பற்றிப் பேசியதில் உண்டான ஆத்திரம் என அத்தனையையும் அவன் மீது காட்டி...
“ஏன் டா மூணு வேளை சோத்துக்கே முப்பது இடத்துல வேலை பார்க்குற?, நிலையான வேலை,வருமானம்ன்னு எதுவுமில்லாம.. என்னடா லவ்வு கேக்குது உனக்கு?, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரோஜாப்பூவை நீட்டுன அந்த ஜெகதீஸ் கம்னாட்டிக்கும், உனக்கும் என்னைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் கிடையாது! ஏதோ.. கொஞ்சம் நல்லவனா இருக்கியேன்னு... பக்கத்துல வந்து சிரிச்சுப் பேசுனா... உனக்கு வாழ்க்கைக் கொடுப்பேன், உங்கம்மாவைப் பார்த்துக்குவேன்னு வசனம் பேசுவியா நீ?, ஆளு தான்.. காட்டெருமை மாதிரி வளர்ந்திருக்க! பேசுறது,பண்றதுன்னு அத்தனைலயும் சிறுபிள்ளைத்தனம்! பொறுப்பு-ன்றது மருந்துக்கும் கிடையாது! இன்னொரு தடவை.. இப்பிடி எதுவும் லூசுத்தனமா உளறிக்கிட்டு என் பின்னாடி வந்த, செருப்புப் பிஞ்சிடும்” எனக் கூறி விட்டு விறு,விறுவென நடந்து சென்று விட்டாள்.
அவமானத்தில் முகம் கருக்க, இறுகிப் போன உடலுடன் விறைத்து நின்ற வெற்றிக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பொங்கிக் கொண்டிருப்பதை, அவனது சிவந்த விழிகளே கூறியது.
