அத்தியாயம் - 4
இறுகிய இதழ்களும்,சிவந்த கண்களுமாய் வெறி பிடித்துப் போய்.. அசுர வேகத்தில்.. தன்னைச் சுற்றி உலவிய காற்றைக் கிழித்தெறிந்தபடி.. விர்ரெனத் தன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் வெற்றி. நிதானமென்பது அவன் முகத்தில் மருந்துக்கும் இல்லை!
‘என்ன பேச்சு பேசுறா! எனக்கு... எனக்குப் பொறுப்பில்லையாம்! பொறுமையில்லையாம்! என் பொறுமையையும்,பொறுப்பையும் பத்தி உனக்கு என்னடி தெரியும்?, நல்ல அம்மா-அப்பாவுக்குப் பொறந்து, சிரிச்சு விளையாடி சந்தோசமா ஸ்கூலுக்குப் போய், படிச்சுப் பட்டம் வாங்குன உனக்கு என்னைப் பத்திப் பேச என்னடி தகுதியிருக்கு?, பொறந்ததுல இருந்து பேச்சு வாங்குறேன் ‘பெத்தவளைக் காவு வாங்குனவன், ராசியில்லாதவன்னு! எல்லாத்தையும் அமைதியாத் தான கடந்து வந்திருக்கேன்! இதுக்குப் பேரு பொறுமை இல்லாம என்னடி?, அப்பன் சரியில்லாதவன்னு தெரிஞ்சுக்கிட்டு அவன் குடுக்குற படிப்பு,பொழப்பு எதுவுமே வேணாம்ன்னு நானே சம்பாதிச்சு என் வயித்துப்பாட்டைப் பார்த்துக்கிறது, உன் கண்ணுக்குப் பொறுப்பாத் தெரியலயா?, அலட்டிக்காம சிரிச்சுப் பழகி, கெத்து காட்டாம நடந்துக்கிட்டா... சிறுபிள்ளைத்தனம்ன்னு சொல்லுவியா?, உனக்கு இந்த வெற்றியைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது டி’
பொறுமலும்,புலம்பலுமாய் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவன் விடாது வண்டி ஓட்டியதில் பெட்ரோல் தீர்ந்து... முக்கலும்,விக்கலுமாய் பாதியில் நின்றது அவனது பல்சர்.
“ப்ச்” – என்றபடி வண்டியை விட்டு இறங்கியவன் அதை ஓரம் கட்டி விட்டு நின்றிருந்த பாலத்தின் கைப்பிடியருகே சென்றான்.
நேரம் நிச்சயம் 12-ஐக் கடந்திருக்கும். ஆங்காங்கு சென்று கொண்டிருந்த வண்டிகளைக் கண்டபடி தெரு விளக்கு வெளிச்சத்தில்.. சிலுசிலுக் காற்றினால் நெற்றி முடி அசைந்தாட.. விரக்தியான பார்வையுடன் சிறிது நேரம் நின்றிருந்தான்.
‘இது சரியில்ல டா வெற்றி!, இப்டியே சோக ட்யூன் வாசிச்சின்னு இருக்கிறதால எதுவும் ஆகப் போறதில்ல’ – என்று தீர்மானித்துக் கொண்டு உடனே தன் நண்பனை செல்ஃபோனில் அழைத்தான்.
“டேய் கதிர்” - வெற்றி
“சொல்லுடா வெற்றி, நீ இன்னும் தூங்கலயா?”
“மச்சி, மாலதி வூட்ல குடுத்த மாங்காயை உங்கம்மா ஊறுகா போட்ருச்சா டா?”
“ஆமா, ஒரு பாட்டில் ஊறுகா! ஃப்ரெஷ்-ஆ போட்டு வைச்சிருக்கு. இதைக் கேக்கவா டா தூங்கினு இருந்தவனை எழுப்பி விட்ட?”
“நீ இப்போ என்ன பண்ற, உடனே எந்திரிச்சு முகத்தைக் கழுவிட்டு அந்த ஊறுகாய் பாட்டிலை லவட்டிக்கிட்டு நேப்பியர் பிரிட்ஜாண்ட வந்து சேர்றா! அப்டியே மறக்காம ஊறுகாய்க்கு சைட்-டிஷ்-ஆ சரக்கு வாங்கினு வந்துரு மச்சி”
“டேய்... சரக்கையே சைட்-டிஷ்-ஆ யூஸ் பண்ணுவியா நீ!, இந்நேரத்துக்கு என்னாத்துக்குடா நேப்பியர் பிரிஜ்ல குந்தினு இருக்கிற?”
“கேள்வி கேக்காம நான் சொல்றதை மட்டும் செய் டா”
“ஏய்.. இன்னாடா விளையாட்றியா?, மணி இப்போ என்ன தெரியுமா?, நடு ராத்திரி 1.50. நான் நல்லத் தூக்கத்துல இருக்கேன்!, நீ டிஸ்டர்ப் பண்ணாம ஃபோனை வை”
“.....................”
“டேய்.. என்னாடா?”
“கதிரு...”
“சொல்றா”
“உலகத்துலயே என் மேல உண்மையானப் பாசம் காட்டுறது ரெண்டே பேர் தான் டா”
“ஓஹோ!’
“ஒன்னு புகழ் மாமா. இன்னொன்னு நீ”
“அதனால?”
“சரக்கு வாங்கிட்டு வா டா”
-அடுத்த ஒரு மணி நேரத்தில் சரக்கு மற்றும் ஊறுகாயுடன் கதிர் வந்து சேர... இருவரும் பாலத்தின் ஓரத்திலேயே அமர்ந்தனர்.
“இங்க உட்கார்ந்தா டா அடிக்க சொல்ற?, ரோந்து போலீஸ் வந்தானுங்கன்னா பிரச்சனை ஆயிடும் டா”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது! வர்றவனுங்களுக்கும் ஒரு ‘பெக்’ ஊத்திக் கொடுப்போம்”
“அடப்பாவி, என்னா தான் டா பிரச்சனை உனக்கு?”
“................” – பதிலற்று பாட்டிலைத் திறந்த வெற்றி, கடகடவென ராவாக சரக்கை வாயில் ஊற்றிக் கொண்டு, கை நிறைய மாங்காய் ஊறுகாயை அள்ளி ‘அசக்,அசக்’ என மெல்லத் துவங்கினான்.
“ஊறுகா காரமா இருக்கா மச்சி?”
“.....”
“இல்ல, உன் கண்ணுல இருந்துத் தண்ணியா ஊத்துதே! அதான் கேட்டேன்”
“இது காரத்துனால வந்தக் கண்ணீர் இல்ல மச்சி! அ...அந்தக் கருமாந்திரம் புடிச்சவளால வந்தக் கண்ணீர்” – இண்ட்ஸ்டண்டாகக் குழறத் துவங்கிய வாயுடன் பதிலளித்தவன், கன்னத்தில் வழிந்து கொண்டிருக்கும் நீரைத் தன் சட்டையிலேயே துடைத்துக் கொண்டான்.
“யாரை டா சொல்ற?”
“வேற யாரைச் சொல்லப் போறேன்?, எல்லாம் அந்த டீச்சரைத் தான்”
“அந்தப் பொண்ணை ஏன் டா திட்டுற?, பாவம் டா அவ!”
“அப்போ நான்?, நான் பாவமில்லையா மச்சி?” – கோபக் குரலில் கேட்டவனைக் கண்டுப் பயந்து...
“நீயும் பாவம் தான் டா” – என்றான் கதிர்.
“ப்ச்!, நான் பாவமா இல்ல அவ பாவமா?, ஒழுங்கா உண்மையைச் சொல்லு”
“அ...அது.. அது வந்து மச்சி?, யார் பாவம்ன்னு நீயே சொல்லிட்றியா?”
“பொறந்ததுல இருந்து என் கூட வளர்ற உனக்கே நான் தான் பாவம்ன்னு தெரியல, அந்த டீச்சரைச் சொல்லி என்ன டா பிரயோஜனம்?”
-புலம்பியபடியே எழுந்தவன் கையில் பாட்டிலுடன் பாலத்தின் கைப்பிடியில் ஏறி நின்றான்.
“டேய் நன்னாரி! கீழ வுழுந்து செத்து,கித்துப் போயிராத டா!, இறங்கித் தொல டா” – பதறிய கதிரைக் கண்டு கொள்ளாது... கோணலாகப் புன்னகை புரிந்தவன்..,
“டேய் நண்பா!, நான் செத்தா யாரெல்லாம் அழுவாங்கன்னு உனக்குத் தோணுது டா?” –என்று வினவினான்.
“கண்டிப்பா நான் அழ மாட்டேன் டா” என்று முணுமுணுத்த கதிர் “இப்ப என்னாத்துக்கு சாவு,கீவுன்னு உளறினு இருக்குற?” எனக் கேட்டான்.
“பதில் சொல்லு டா, இல்ல, கீழ குதிச்சுடுவேன்”
“ஏய்.ஏய்,ஏய்... ஸ்டெடியா நில்லுடா” என்றபடி அவன் காலைப் பற்றியவன் “நீ செத்தா நான் அழுவேன் மச்சி” என்றான் அழுகைக் குரலில் ‘சும்மா தூங்கினு இருந்தவனைக் கூப்பிட்டு வச்சுக் காவு வாங்குறானே!’
“அப்புறம்?”
“அப்புறம் புகழ் மாமா!”
“அப்புறம்?”
“அப்புறம்.... உங்கொப்பன்............”
“ம்ஹ்ம்! அந்தாளு அழ மாட்டான் மச்சி!, அவன்-லாம் நான் செத்தா சந்தோசம் தான் படுவான்”
“ப்ச், உனக்காக மறு கல்யாணம் கூடப் பண்ணிக்காதத் தியாகி டா அவுரு,”
“யாரு அவனா தியாகி?, அவனைப் பத்திப் பேசாத டா!”
“சரி டா பேசல!”
“ம்ம், இப்போ சொல்லு. வேற யாரு அழுவா?”
“வேற யாரு டா?, நம்ம டீக்கடை மீச!, மாமி அம்புஜம்! பிரசாத்தோட பாட்டி சௌந்தரம்மா!..” –வரிசையாகச் சொல்லிக் கொண்டே சென்றவனை இடைமறித்தவன்..
“டீ....டீச்சர்.. டீச்சர் அழுவாளா டா மச்சி?” – குரலில் ஏக்கம் தெறிக்க... பாவமாகக் கேட்டவனை வியப்புடன் நோக்கினான் கதிர்.
“வெற்றி, உனக்கும், அந்தப் பொண்ணுக்கும் என்ன டா பிரச்சனை?”
கதிர் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பாட்டிலை வாயில் சரித்தவன்.... மீண்டும் ஊறுகாயை வாயில் அடைத்துக் கொண்டு... எச்சில் ஒழுக.....
“அன்னக்கிளி உன்னைத் தேடுதே.....
ஆறு மாசம்,ஒரு வருஷம்.. ஆவரம் பூ மேனி வாடுதேஏஏஏஏஏஏ” – என கர்ண,கொடூரமானக் குரலில் பாடத் துவங்க... காதைப் பொத்திக் கொண்டுக் கீழே அமர்ந்தான் கதிர்.
“சா....ர்...... ராஜா சார்!!! அந்தக் கருமம் புடிச்சவளைப் பார்க்குறப்பல்லாம் பேக் க்ரவுண்ட்ல வருவீங்களே!, இப்பிடி ஏமாத்துவா-ன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா?, நீங்களும் எனக்கு எதிரா நடந்துக்கிறீங்களே!”
-அடுத்த இரண்டு மணி நேரம் விடாது புலம்பியும்,அழுதும் தன் மனக்கிலேசத்தைப் போக்க முயற்சித்தவன்.. கதிரின் உதவியால் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான்.
சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சரக்கை ஊற்றிக் கொண்டதாலும், ஒரு பாட்டில் மாங்காய் ஊறுகாயை ஒருமையாகத் தின்று தீர்த்ததாலும்.. மறுநாள் காலை முழுக்க.. வாந்தியும்,பேதியும் பாத்ரூமில் அடைபட்டுக் கிடந்தான் வெற்றி.
ஒரே ராத்திரியில் பாதி ஆள் ஆகி விட்டவனை இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று வந்தான் கதிர்.
அன்று மாலை பள்ளியிலிருந்துத் திரும்பி வந்த ஜமுனா, டீக்கடையருகே கதிரின் தோளைப் பற்றியபடி மெல்ல நடந்து வந்த வெற்றியைக் கண்டு புருவம் சுருக்கியபடி அருகே சென்றாள்.
“என்ன டா ஆச்சு?, அவன் தோள்ல தொங்கினு வர்ற?, அடி,கிடி பட்ருச்சா?” – அவனை மேலும்,கீழுமாய் ஆராய்ந்தபடி வினவினாள்.
அவள் முகத்தைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்ட வெற்றி “எனக்கு என்ன ஆனா... இவளுக்கு என்னவாம் டா?” என்று நண்பனிடம் வினவினான்.
கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தவள் “ஏன் சார் என் கிட்ட நேராப் பேச மாட்டாராமா?” என்றாள்.
“இவ கூட போராட எனக்கு எனர்ஜி இல்ல மச்சி!” என்றவன் தொடர்ந்து “மீச! ஒரு பூஸ்ட்! சுகர் தூக்கலா!, அப்டியே ரெண்டு ஃப்ரூட் பிஸ்கட் கொண்டா! பசியெடுக்குது” என்றான்.
வெளுத்த உதடுகளும், கலையிழந்த முகமுமாய்க் காட்சியளித்தவனைக் கண்டுக் கதிரிடம் திரும்பியவள் “ஆஸ்பத்திரில இருந்தா டா வர்றீங்க?, கைல ட்ரிப்ஸ் எல்லாம் போட்ருக்கான்?” என்று வினவினாள்.
“ஆமா” என்ற கதிர் நேற்றிரவு அவன் ராவாக அடித்தக் கதையை சென்சாருடன் சொல்லி முடித்தான்.
அவள் ஒருத்தி அங்கிருப்பதையே கண்டு கொள்ளாமல்.. மீசை கொடுத்த பூஸ்ட்டை ஊதிக் குடித்துக் கொண்டிருந்தான் வெற்றி.
நடந்த விசயத்தைக் கதிர் கத்திரியிட்டுக் கூறினாலும், எது அவனைக் குடிக்கத் தூண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஜமுனா, கோபத்துடன் அவன் புறம் திரும்பினாள்.
“நான் அப்டி என்ன சொல்லிட்டேன்னு நீ இவ்ளோ ஓவர்-ஆ பண்ற?” – ஜமுனா.
நிமிர்ந்து அவளை முறைத்தவன் “அடிச்சவனுக்கு எப்பவுமே வலி தெரியாதுடி! அடி வாங்குனவனுக்குத் தான் தெரியும்” என்றான்.
“அப்டின்னா இந்தப் பொண்ணுக்கிட்ட நீ அடி வாங்கினியா மச்சி?” –கதிர் வேறு இடையில்..
“ஏய்.... நீ கம்முன்னு இருக்க மாட்ட?” – கதிரை அதட்டிய ஜமுனா “அப்படி என்ன டா பெரிய வலி உனக்கு?” என்று வெற்றியிடம் கத்தினாள்.
“புடிக்கலன்னா, புடிக்கலன்னு சொல்லியிருக்கனும்டி! அதை வுட்டுட்டு பொறுப்பில்ல, பொறுமையில்லன்னு பெரிய பருப்பாட்டம் பேசி இன்சல்ட் பண்ணுவியா?” – தானும் கோபமாய்க் கத்தினான் வெற்றி.
“ஏன் டா நான் ஒருத்திப் பேசுனதையே நீ இன்சல்ட்-ன்றியே!, அந்த சுந்தரேசனை நீ அடிச்ச அன்னிக்கு, அவன் பொண்டாட்டி கனகா என்னல்லாம் பேசுனா-ன்னு தெரியுமா உனக்கு?, நான் புடவை கட்டிக்கிட்டு வாசலுக்கு வர்றதே, அவ புருசனை மயக்கத் தான்-ன்ற ரேஞ்சுக்கு... என்னைப் பத்தி அசிங்க,அசிங்கமா தெரு முழுக்கப் பேசி வைச்சிருக்கா! அந்த ஜெகதீஸ் கம்னாட்டியோட நீ போட்ட சண்டைல என் ஸ்கூல் பஸ்-ஸ்டாப்லயும் எனக்குக் கெட்ட பேரு!. நீ பண்ணுன கலாட்டாவுல, நான் தான் டா அவமானப்பட்டு நிக்குறேன்!”
ஏகத்துக்கும் பொங்கியவளைக் கண்டு கோபத்துடன் எழுந்து நின்றவன்..
“ஏன் டி படிச்சவ மாதிரியாடி பேசுற?, இந்த சுந்தரேசனோ, ஜெகதீஸோ நாளைக்கு உன் கையப் புடிச்சு இழுத்துத் தப்பா நடந்துக்கிட்டாலும், இப்டித் தான் அக்கம்,பக்கத்துல இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க, பஸ் ஸ்டாப்ல நிக்கிறவங்க என்ன பேசுவாங்கன்னு யோசிச்சுக்கிட்டு... அமைதியா போயிடுவியா?” – என்றான் பதிலுக்கு.
“அது என் பிரச்சனை. நீ தலையிடாத”
“நான் தலையிடாம இருக்கனும்ன்னா நீ எனக்கு எவளோ ஒருத்தியா இருக்கனும்டி! நான் காதலிக்கிறப் பொண்ணா இருக்கக் கூடாது”
“எ...என்னாஆஆஆஆஆது காதலிக்கிறியா?” – வாயைப் பிளந்தக் கதிரை எரிச்சல் குறையாமல் நோக்கினான் வெற்றி. இவன் ராஜா சார்-ஐ விட நான்-சிங்க்ல இருக்கானே!
“என்னடா ஒன் சைட் லவ்வுக்கே ஓவர்-ஆ உரிமை எடுத்துக்கிற?” - கடுங்கோபத்தில் தன்னையே முறைத்தவளைப் பொருட்படுத்தாமல்.. திரும்பி வீடு நோக்கி நடக்கத் தொடங்கியவனிடம்..
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா! இன்னொரு தடவை இப்டிப் பாவமா மூஞ்சியை வச்சுக்கிட்டு என் முன்னாடி சீப்-ஆ சிம்பதி க்ரியேட் பண்ணப் பார்த்தேனா.. கேவலமா கிழிப்பேன் டா” – என்று மேலும் திட்டியவளைக் கண்டு ஒரு நொடி நின்றவன்... விறுவிறுவென அவளருகே வந்து....
“பெருசா அக்கறை இருக்கிற மாதிரி சும்மா இருந்தவன் கிட்ட வந்து என்னாச்சு,நொன்னாச்சுன்னு கேள்வி கேட்டுட்டு, நான் சிம்பதி க்ரியேட் பண்றேன்னு பழி போட்றியா?, நீ என்ன பேசுனாலும், அமைதியா கேட்டுனு இருப்பேன்னு நினைக்காதடி” – என்று கத்தியதும், இல்லாத மூக்கை விடைத்தபடி அவனைத் தாண்டி நடந்து சென்று விட்டாள் ஜமுனா.
தன் ஐந்தே அடி உயரத்தை விறைப்பாய் நிமிர்த்திக் கொண்டு விசுக்,விசுக்கென செல்பவளைக் கண் சிமிட்டாமல் நோக்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைக் கண்ட கதிர் அவனைக் கேள்வி கேட்டு நச்சரித்ததைக் கண்டு கொள்ளவேயில்லை வெற்றி.
அன்று அவர்களதுத் தெருவில் அமைந்துள்ள ‘பெரிய பாளையத்தம்மன்’ கோவிலில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் துவங்கியது. தெருவிலிருப்பவர்களிடம் பணம் வசூலித்துப் பந்தல், ஸ்பீக்கர் செட் என வருடம் தவறாமல் விழா எடுத்து அம்மனைக் குளிர்விக்கும் விசயத்தைப் பொறுப்பாய் நடத்தி வந்தனர் அத்தெருவைச் சேர்ந்த இளைஞர்கள்.
‘இனி வெள்ளிக்கிழமையானாலே தவறாம கூழ் ஊத்துவாளுங்க!, உனக்கு மதியச் சாப்பாட்டுக்குப் பஞ்சமிருக்காது டா வெற்றி’ – எனக் கலாய்த்த கதிரிடம் அவன் பதிலே சொல்லவில்லை.
கலகலப்பைத் தொலைத்து விட்ட முகத்துடன் எந்நேரமும் ஏதோ யோசனையில் வலம் வருபவனை மாற்ற, கதிர் எவ்வளவோ முயற்சித்து விட்டான்.
நண்பனின் ஒவ்வொரு அசட்டுத்தனமான செய்கைக்கும், சிரிப்புக்கும் முழுதாய் அர்த்தம் தெரிந்தவன் கதிர் ஒருவன் மட்டுமே! ‘ராசியில்லாதவன், பிறந்ததும் பெற்றத் தாயை முழுங்கியவன்’ என அவன் சுற்றமும்,உறவும் விடாது பழி கூறுகையில்.. முதலில் கலங்கினாலும்.. பின்பு மாறி.. வாய்ச்சண்டையும், கேலியுமாய் தன்னைக் குறை கூறுபவர்களை வம்பு செய்யத் துவங்கியவன் அவன்!
அவனைக் காணும் போதெல்லாம் கேலி செய்யும் மாலதியிடம் ஒரு முறை கூட அவன் முகம் திருப்பியதில்லை! யார் என்ன பேசினாலும்,மட்டம் தட்டினாலும்.. அவர்களனைவருடனும் சண்டை போட்டேனும் பேச்சு வளர்த்து உறவை நீட்டித்துத் தான் கொண்டானே தவிர, யாரையும் தவிர்த்ததில்லை. இந்த ஏச்சு,பேச்செல்லாம் ஒரு நாள் மாறி.. அனைவருடனும் சுமூகமான உறவுடன் என்றாவது வாழ்வோம் என்கிற நம்பிக்கையுடன் தானிருந்தான். ஒரு வேளை அவனது தந்தைத் தன் மகனிடம் அன்பும்,அக்கறையுமாய் நடந்து கொண்டிருந்தால்.. இப்படி சுற்றியிருப்போரிடம் ‘அட்டென்ஷன்’ தேடி ‘ஜோக்கர்’ ஆகியிருக்க மாட்டான்.
“என்னாப்பா வெற்றி, திருவிழா தொடங்கி ரெண்டு நாளாச்சு! ஒரு கலகலப்பும் இல்லையே?”
மரத்தடியிலிருந்த டீக்கடை பெஞ்சில் கண் மூடிப் படுத்திருந்தவனின் அருகே வந்து விசாரித்தார் பிரசாத்தின் பாட்டி சௌந்தரம்.
“இன்னா கெய்வி, வூட்டு வாசலைத் தாண்டி வெளிய-லாம் வந்துருக்க?, வெத்தளை தீர்ந்துடுச்சா?”
“ஹிஹிஹி ஆமாப்பா”
“அதான, 24- மணி நேரமும் டிவி சீரியல்லயே உட்கார்ந்திருக்காத கெழவி! கண்ணு பொட்டையாகி கண்ணம்மா பேட்டைல படுத்துறப் போற”
“கொறஞ்சது இன்னும் 15 வருசத்துக்காவது நான் உயிரோட தான் இருப்பேன். என் ஆயுசு அவ்ளோ கெட்டி”
“அதுசரி”
“சரி, திருவிழான்ற கலகலப்பே இல்லாம தெருவு ஏன் இப்புடி வெறிச்சுப் போய்க்கிடக்கு?, பாட்டு,டான்ஸூன்னு ஒரு அமர்க்களமும் இல்ல?, நீ தான வருசம் தவறாம இதையெல்லாம் எடுத்து செஞ்சின்னு இருந்த? இப்போ ஏன் கண்டுக்காம இருக்க?”
“பாட்டி!, அவன் காதல் தோல்வில சோகமா சுத்தினு இருக்குறான்! அவனாண்ட போய் பாட்டு,டான்ஸூன்னு பேசிட்டிருக்கிற?” – கதிர் இடைபுகுந்தான்.
“காதல் தோல்வியா?, அது வருசமெல்லாம் உனக்கு நடக்குறது தானய்யா?,” – வெள்ளந்தியாய்ப் பாட்டி.
“ஹாஹாஹாஹா” – கதிர்.
“மூட்றா மூதேவி! இன்னா கெய்வி, கலாய்க்கிறியா?” - வெற்றி
“உண்மையைத் தானய்யா சொல்றேன்?”
“நீ கூட என்னை புரிஞ்சுக்கலேல அப்பத்தா?” – ரோசத்துடன் வினவியவனிடம்..
“ச்ச,ச்ச” என்றபடி அருகே வந்த பாட்டி அவன் தலை முடியைக் கோதி “உன்னை வேணாம்ன்னு வுட்டுட்டுப் போனா அந்தச் சண்டாளிக்குத் தான் ராசா இழப்பு! நீ மகராசன் ஆச்சே’ என்று கூற..
“முடியைக் கலைக்காத கிழவி” என்றபடியே பாட்டியின் கையைத் தடுத்தவன் “நீ மட்டும் தான் என்னைய மகராசன்ற?, அவ,அவ எனக்கு மொல்லமாரிப் பட்டம் தான் குடுக்குறாளுங்க” என்று முணுமுணுத்தவன்... “டேய் கதிரு, பாட்டைப் போட்றா!, சிறுசு,பெருசுன்னு அத்தனையும் வீதிக்கு வரட்டும்” – எனக் கத்திக் கூற... அவனும் ஓடிச் சென்று பாட்டை ஒலிக்க விட்டான்.
ஸ்பீக்கர் சத்தம் தெருவெங்கும் ஒலிக்கத் துவங்க, விடுமுறையென வீட்டினுள் முடங்கிக் கிடந்தக் குழந்தைகள் அனைவரும் தெருவுக்கு வந்து.. கோவில் முன்பிருந்தப் பந்தலில் கூடி... டான்ஸ் ஆடத் தொடங்கினர்.
“இது போதுமா கெழவி” – ஒலித்த பாடலை மீறி கத்திக் கேட்டவனிடம் “என்னாய்யா சொன்ன?” – என்று பதிலுக்குக் கத்தியது கிழவி.
“ம்ம்ம், கீழ வுழுந்து மண்ணைக் கவ்வாம ஒழுங்கா வூடு போய்ச் சேருன்னு சொன்னேன்” – என்று விட்டு... பந்தல் அருகே சென்றான் வெற்றி.
அதன் பின்பு கூழ் ஊற்றவென சட்டி,புட்டிகளுடன் பெண்கள் வந்து சேர.. பூஜை, படையலென கோவில் அமர்களப்பட்டது.
ஆளாளுக்கு வாளியுடன் வரிசையில் நின்று கூழை வாங்கிக் கொள்ள... பந்தல் கம்பத்தில் கைக் கட்டிச் சாய்ந்து நின்று கொண்டு.. போவோர்,வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.
“இன்னா வெற்றி, ஆளையே பார்க்க முடியல?, இந்த ஏரியால தான் இருக்கியா?” – நக்கல் குரலில் கேட்ட சுந்தரேசனைக் கேவலமாய் முறைத்தான்.
“வாய்லயே வாங்கியும் அடங்க மாட்றானே!” –முணுமுணுத்துக் கொண்டாலும் பதில் பேசவில்லை அவன்.
இவன் ஏதாவது பேசப் போய், மீண்டும் கைக்கலப்பாகி விட்டால், இதற்கும் வெற்றியின் மீது பழியைப் போடுவாள் அவள்! எக்கேடோ கெட்டுப் போய்த் தொலையட்டும்!
அவன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அவன் எண்ணத்தின் நாயகி கையில் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தாள்.
தூக்கிக் கட்டியக் கொண்டையுடனும்,நீல நிற காட்டன் சல்வாருடனும் பந்தலருகே வந்தவளைக் கண்டுப் பார்வையை வேறு புறம் திருப்பினான் வெற்றி.
‘காத்தோடு பூ உரச.... பூவ வண்டுரச...
உன்னோடு நான்.... என்னோடு நீ......
பூவா.. காத்தா... உரச......’
-ஷ்ஷ்ஷ்ஷ்... வந்துட்டாருய்யா! மனுஷன் அடங்கவே மாட்டாரு! சதி பண்றீங்க ராஜா சார் நீங்க! - முணுமுணுத்தவன் மனசு கேட்காமல் மீண்டும் அவள் புறம் திரும்பினான்.
மிகுந்தத் தயக்கத்துடன் மெல்ல,மெல்லப் பார்வையை உயர்த்தித் தடுமாற்றத்துடன் தன்னை நோக்கியவனை அவளும் பதிலுக்கு நோக்கினாள்.
ஒரு காலை மடக்கி நின்றும் கூட... அந்தக் கம்பத்தின் முக்கால்வாசி உயரத்தை அசால்ட்டாகத் தொட்டிருந்தான். கலைந்தத் தலை முடியும், இரண்டு நாள் தாடியுமாக.. துடிக்கும் இதழ்களுடன்.. தன் பெரிய கருமணிகள் இரண்டிலும் அவளை முழுதாக நிரப்பிக் கொண்டு.. ஒலித்துக் கொண்டிருந்தப் பாடலில் மயங்கி... அநியாயத்திற்குக் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனை வியந்து போய் நோக்கினாள் அவள். ரொம்ப அழகா இருக்கானோ!, ஒரு வேளை என் கண்ணுக்கு அப்படித் தெரியுறானா?-பெருத்த யோசனை அவளுக்கு!
“இப்டியே எவ்ளோ நேரம் டா பார்த்துக்கிட்டே இருப்பீங்க?” – இடையில் கதிர்.
“அவளா முகத்தைத் திருப்பிக்கிற வரைக்கும்” – பார்வை அவள் மீதிருந்தாலும் நண்பனுக்குப் பதிலளித்தான் வெற்றி.
“முன்னால போறியா என்னாம்மா?” – என்று அவள் நின்றிருந்த வரிசையில், அவள் பின்னே நின்ற பெண்மணி குரல் கொடுக்க... சட்டெனப் பார்வையைத் திருப்பி முன்னே சென்றவள் கையிலிருந்தப் பாத்திரத்தில் கூழை வாங்கிக் கொண்டு அவனருகே வந்தாள்.
அதுவரையிலும் கூடத் தன் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் நின்றிருந்தவன், அவள் தன்னருகே வந்ததும், ஆசையும்,ஆர்வமுமாய் நோக்கினான்.
பாத்திரத்தை அருகிலிருந்தத் திண்டில் வைத்தவள் கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள்.
“இன்னாத்துக்கு டா அப்பிடிப் பார்க்குற?”
“எப்பிடிப் பார்க்குறேன்?”
“இருட்டுக்குள்ள உட்கார்ந்திருக்கிறக் கோட்டான் மாதிரி!, இதோ பாரு.. அங்கங்க நின்னுக்கினு என்னையப் பார்த்து ரொமாண்ட்டிக்-ஆ லுக் வுட்ற வேலைய இத்தோட விடு! இதுக்கு, நீ என் பின்னாடி சுத்துனப்போக் குடுத்த டார்ச்சர்-ஏ பரவாயில்ல போல!”
-அங்கலாய்த்துக் கொண்டவளுக்குப் பதில் சொல்லாமல் ஒரு பார்வை பார்த்து விட்டு, அவளைத் தாண்டிக் கொண்டு முன்னே நடந்தான் அவன்.
“என்னடா நான் பேசிட்டே இருக்குறேன்?, நீ பாட்டுக்க போற?” – அவனைத் தொடர்ந்து புலம்பியபடிப் பின்னே வந்தவளைக் கண்டு கொள்ளாமல்.. கதிர் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்தான் வெற்றி.
எதிர் சுவருக்கும், வீட்டு வாசலுக்கும் இடையே நான்கே அடி இடைவெளியைக் கொண்ட அந்த காம்பவுண்டுக்குள் மொத்தமாய் ஐந்து வீடுகளிலிருந்தது.
அவனைத் தொடர்ந்து தானும் நுழைந்தவளைத் திரும்பி நோக்கியவன்...
“என்னடி பிரச்சனை உனக்கு?, எதுக்கு இப்போ சும்மா இருக்கிறவனை சொரிஞ்சு விடப் பார்க்குற?” – என்று பொறுமையாய் வினவினான்.
ஐந்து வீட்டு ஆட்களும் கோவில் முன்பு கூடியிருந்ததால்.. ஐந்து வீடுகளுமே சத்தமின்றி அமைதியாயிருந்தது. கோவில் வாசலில் விடாது ஒலித்த இளையராஜா.. சன்னமாய் இருவருக்கிடையில் வந்து,சென்று கொண்டிருந்தார்.
அடித்துக் கொண்டிருந்த வெயிலை மீறி.... ஆடி மாதக் காற்று.. அவனது முன் நெற்றி முடியுடன் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டிருக்க.. சுருக்கியப் புருவங்களுடன் தன்னை நோக்குபவனைப் புரியாத உணர்வுகளுடன் நோக்கினாள் ஜமுனா.
விரல்களைப் பிசைந்தபடிப் பார்வையைத் தழைத்தவள்..
“எனக்கு... என்னமோ... ரொம்ப அன்-கம்ஃபர்டபிளா ஃபீல் ஆகுது!” – என்றாள்.
“........” – பார்வை மாறாமல் நோக்கிக் கொண்டிருந்தவனைத் தயக்கத்துடன் ஏறிட்டு..
“நீ பார்க்குறது, பண்றது எல்லாத்தையும் தான் சொல்றேன்” – என்றாள்.
‘தேனோடை ஓரமே... நீராடும் நேரமே...
புல்லாங்குழல் தள்ளாடுமே... பொண்மேனி கேளாய் ராணி!’ – ராஜா சார் வேறு இடையில்! டிஸ்ட்ராக்ட் பண்ணாதீங்க சார்! என்றபடி அவரைத் துரத்தியவன்...
“புரியல எனக்கு” என்றான்.
“..................”
“புடிச்சிருக்குன்னு சொன்னவனை, இந்தப் பரந்த உலகத்துல, ஒரு வாய்த் தண்ணீ குடிக்கக் கூடத் தகுதியில்லாதவன் டா நீ-ன்னு சொல்லி அவமானப்படுத்தி அனுப்பிட்ட! நானும் உன் பின்னாடி வராம ஒதுங்கிப் போயிட்டேன்ல? அப்புறம் என்ன?” என்றவனை அவசரமாக இடைமறித்து......
“அது தான் பிரச்சனை” என்றாள்.
“ம்??”
“நீ பின்னாடி வராதது தான் பிரச்சனை”
-அது வரைக் கையை உயர்த்திக் கோபமாய்ப் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென இரண்டு கையையும் கீழிறக்கி, மூக்கு விடைக்க அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் பின் பல்லைக் கடித்தான்.
“மணி,மணி-ன்னு நாம பேர் சொல்லிக் கூப்பிட்றதால.. நாய் மனுஷனாயிடாது டி! அதே மாதிரி தான் நானும்! உன் பின்னாடியே திரிஞ்சதால... என்னைய ஐந்தறிவு ஜீவின்னு நினைச்சுக்காத! கை,கால்,மூளை,இதயம்ன்னு எல்லா பார்ட்டும் இருக்குற... நிறைஞ்ச மனுஷன் நானு”
“ப்ச், நான் என்ன சொல்ல வந்தா நீ என்ன பேசுற?, நான் போற இடத்துக்கெல்லாம் எப்பவும் பின்னாடி வருவ! இப்போ நீ இல்லாதது ஒரு மாதிரி இருக்குன்னு சொல்றேன்! இப்போ-ல்லாம் நீ வராததால, பிள்ளையார் கோவில் வாசல்-ல நெய் விளக்கு விக்குற அக்கா, தம்மதூண்டு நெய் இருக்கிற விளக்காப் பார்த்துக் குடுத்து என்னைய எப்பிடி ஏமாத்துது தெரியுமா?”
“ஓஹோ! அந்தக்கா நெய் நிறைய ஊத்திக் குடுக்காதது தான் உன் பிரச்சனையா இப்போ?”
“ச்ச,ச்ச நான் அப்டி சொல்லல! உன் ப்ரசன்ஸை மிஸ் பண்றேன்! நீயில்லாதது ஏதோ.. கை உடைஞ்ச மாதிரி இருக்கு....”
யோசித்து யோசித்து வார்த்தைகளைக் கோர்த்தவளிடம்..
“நீ இப்போ சொன்னதுக்கு என்னடி அர்த்தம்?? ம்? உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கேன் நான்! நீ என்னை மிஸ் பண்றதா சொல்ற?, இப்போ எனக்கு எப்பிடியிருக்குத் தெரியுமா?, இதயத்துல ஐஸ் கட்டி வைச்ச மாதிரி, உடம்பு முழுக்கக் குளிர்ந்து போய்... மூளை,மனசுன்னு அத்தனைலயும் அநியாயத்துக்கு ஆசை வருது... இப்போ உன்னைக் கட்டிப்பிடிச்சாக் கூடத் தப்பில்லன்னு தோணுது!”
-தீவிரமாய்க் கூறியவனைக் கேட்டு விழி விரித்துப் பின் பயந்து.. இரண்டடி பின்னே சென்றவள்..
“அப்டிலாம் எதுவும் பண்ணித் தொலைச்சுடாத! அவசரத்துல செருப்புப் போடாம வந்துட்டேன்! உன்னை அடிக்கிறதுக்குக் கூட எதுவுமில்ல என் கிட்ட” என்றாள்.
பதில் கூறாமல் வெறித்தவனிடம் “நான் சொல்ற எல்லாத்தையும் நீ ட்விஸ்ட் பண்ற!, நான் ஒரு நண்பனா... உன்னை மிஸ் பண்றேன்னு தான் சொன்னேன்! பார்க்கும் போதெல்லாம் வாயடிச்சு,வம்பு பேசி.. ஏதாவது செஞ்சு என்னை சிரிக்க வைப்ப! வேலை,அம்மா இது ரெண்டு மட்டுமே உலகம்ன்னு இருந்த எனக்கு, உன் கூடப் பழகுனது எவ்ளோ ரெஃப்ரஷிங்-ஆ இருந்தது தெரியுமா?, ஒரு நண்பனா... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் வெற்றி! அன்னைக்கு ஏதோ கோபத்துல நிறைய பேசிட்டேன்! இப்போ சாரி கேட்டுக்குறேன்! என்னை மன்னிச்சுடு! நாம பழையபடி.. நல்ல ஃப்ரண்ட்ஸா இருப்போம். என்ன சொல்ற?” – கண்ணை உருட்டிக் கொண்டு ஆர்வத்துடன் தன்னை நோக்குபவளைக் கண்டு மெல்லச் சிரித்தவன் அவளருகே நெருங்கி நின்று “என்னைப் பார்த்தா... ஈனா,வானா மாதிரி தெரியுதா டி உனக்கு?” – உச்சகட்ட கோபத்தில், அடிக்குரலில் அதட்டினான்.
“வெற்றி..............”
“ஆனா சும்மா சொல்லக் கூடாதுடி! என்னமா வார்த்தையைப் போட்ற?, உன்னை மாதிரி பொண்ணுங்களையெல்லாம் நான் சினிமா-ல தான் டி பார்த்திருக்கேன்! சிரிச்சு சிரிச்சுப் பேசி பழகிட்டுக் கடைசில ஃப்ரண்ட்ன்னு சிம்பிளா முடிச்சிடுவாளுங்க!”
“தேவையில்லாம ஓவர்-ஆ பேசாத டா!, அமைதியா இருக்க மாட்டேன் நான்”
“என்னடி பண்ணுவ?, ம்? என்ன பண்ணுவ?, ஆள் இல்லாத காம்பௌண்டுக்குள்ள தன்னந்தனியா நிக்கிறோம் ரெண்டு பேரும்! எக்குத்தப்பா என்னன்னவோ தோணுது! ஆனாலும் கட்டுப்படுத்திட்டு நிக்குறேன்! நான்... நான் உனக்கு ஜஸ்ட் ஃப்ரண்ட்-ஆ மட்டும் இருக்கனுமா?, போயிரு டி! பச்ச,பச்சையா மனசு நினைக்கிறதை, யோசிக்காம ‘பசக்,பசக்’-ன்னு கொடுத்துடப் போறேன்”
தன் முகத்தருகே நெருங்கி மூச்சு வாங்கக் கத்தியவனை இமை இடுங்க நோக்கியவள்.. அவனை விட்டு விலகி நின்றாள்.
“உலகத்துல இருக்கிற எல்லாப் பசங்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு தான் டா!, நீங்க காதலிக்கிறதா சொன்னவுடனே, நாங்க டப்புனு ஒத்துக்கிட்டு டூயட் பாடிடனும்ன்னு!”
“ஏய்ய்ய் மூடிட்டு போயிட்றி! வந்துட்டா... பெருசா வியாக்யானம் பேசிக்கிட்டு!”
“டேய்...” – மறுபடி ஏதோ பேசத் துவங்கியவளைத் தடுக்கும் பொருட்டு அருகிலிருந்த கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்தவன் “போறியா?, நடு மண்டைலயே நச்சுன்னு போடவா? போடி..... போ...” என்று மிரட்டி விரட்ட.... “நீயெல்லாம் உருப்படவே மாட்ட டா” என்ற கடைசி சாபத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
ஆளில்லாத காம்பவுண்டுக்குள்ளிருந்து எரிச்சலுடன் வெளியே வந்த ஜமுனாவையும்,அவளைத் தொடர்ந்து இறுகிய முகத்துடன் வந்த வெற்றியையும் கண்ட மாலதி அண்ட் கோ தங்களது வேலையைக் காட்டத் துவங்கினர்.
கோவிலருகேயிருந்தத் திண்டின் மீது தான் வைத்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வந்த ஜமுனாவின் அருகே வந்து நின்றாள் மாலதி.
“என்ன ஜம்மு!, ஆந்த்ராக்ஸூக்கும், உனக்கும் முட்டிக்கிச்சு போல! உன் முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு மூணு வேளையும் வலம் வர்றவன், தாடியும்,மீசையுமா.. தேவதாஸ் மாதிரி சுத்துறானே”
“....................” – இழுத்து மூச்சு விட்ட ஜமுனாவின் முகத்தில் கொஞ்சம்,கொஞ்சமாகப் பொறுமை போய்க் கொண்டிருந்தது.
“நான் தான் அன்னிக்கே சொன்னேனே!, அந்தப் பய ஒரு மாதிரின்னு! எங்களுக்குத் தெரிஞ்சு, அவன் சிரிச்சுப் பேசிப் பழகியும் கூட... கை,கால்ல சேதாரமில்லாம நல்லா சுத்தினு இருக்கீற ஒரே பொண்ணு நீ தான்! நமக்குத் தான் ஒன்னுமாகலையேன்னு நீ பாட்டுக்க அசால்ட்-ஆ இருக்காத!, இதையே சாக்கா வைச்சு அவன்-ட்ட இருந்து எஸ் ஆயிடு!, சரியான ராசி கெட்டப் பய அவன்” – நான்-ஸ்டாப்பாய் வளவளத்தவளை ஒரே வார்த்தையில் ஆஃப் செய்ய முடிவெடுத்து நிமிர்ந்து அவள் முகம் பார்த்தாள் ஜமுனா.
“நீ கூழ் வாங்கிக் குடுச்சுட்டியா?” – ஜமுனா
“அதெல்லாம் அப்பவே ஆச்சுது!, ஏய், நான் எவ்ளோ சீரியஸ்-ஆ பேசிட்டிருக்கேன்! நீ என்ன கூழ்,கஞ்சின்னுட்டு?”
“கதிர் குடிச்சானான்னு கேட்டியா?”
வெடுக்கென அவள் புறம் நோக்கியவள் “அ...அவன் குடிச்சிட்டானா,இல்லையான்னு நான் என்னாத்துக்குக் கேட்கனும்?” – தானாகத் தந்தியடிக்கத் தொடங்கியப் பற்களுடன் வினவினாள்.
“ஓஓஓஓ.. அப்ப வாராவாரம் வெள்ளிக் கிழமை ராத்திரி பத்து மணிக்கு, சேட்டு வூட்டு மாடில ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கினு உட்கார்ந்திருக்கிறது வெறும் குஜால் மேட்டருக்குத் தானா?, நான் கூடப் புனிதமான காதல்ன்னு நினைச்சேனே”
“ஷ்,ஷ், சத்தமா பேசாத! உனக்கு எப்படித் தெரியும்?, ஆந்த்ராக்ஸ்க்குக் கூட எங்க லவ் மேட்டர் தெரியாதே”
“கதிர் கூடவே சுத்துறான்! அவனுக்குத் தெரியாமலா இருக்கும்?, ஆனா.. அவன் சொல்லல. சௌந்தரம்மா வூட்டு மொட்டமாடில ஆண்டனாவத் திருக வந்தப்போ நானே என் ரெண்டு கண்ணால பார்த்தேன்!”
“ஏய் ஏய்.. நீ.. நீ பார்த்ததை யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேல?, எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா.. அவ்ளோ தான்! கூவம் ஆத்துல நான் டெட்-பாடியாத் தான் மிதப்பேன்!”
“நான் உங்கம்மாக்கிட்ட வத்தி வைக்கிறதும், இந்தத் தெரு முழுக்க ஸ்பீக்கர் போட்டு சொல்லாம இருக்கிறதும் உன் கையில தான் இருக்கு”
“என்ன?”
“ஆமா! இன்னொரு தடவை வெற்றியைப் பார்த்து ராசியில்லாதவன்னு கேலி பண்றது, அவனுக்கும்,உனக்கும் இருக்கிற வயசு வித்தியாசத்தைக் கூட மதிக்காம, அவனை மரியாதையில்லாம பேசுறது,மட்டம் தட்டுறது இந்த மாதிரி வேலையெல்லாம் வைச்சுகிட்டன்னு வை, நேராப் போய்.. கனகா-க்கா கிட்ட உன் மேட்டரை பட்டுன்னு உடைச்சிடுவேன்! உனக்கேத் தெரியும், கனகா-க்கா கிட்ட சொன்னா.. மெட்ராஸூக்கே சொன்ன மாதிரி”
“ஏய்... இன்னா மிரட்டுற?”
“சரி வுடு!, உன் தலையெழுத்து அவ்ளோ தான் போல! கனகா-க்கா... உங்களுக்கு மாலதி விசயம் தெரியுமா?” – எனக் கத்தியவளின் வாயைப் பொத்திய மாலதி...
“பேச மாட்டேன்! இனி வெற்றியைப் பத்தித் தப்பா ஒரு வார்த்தைக் கூடப் பேச மாட்டேன்! ப்ளீஸ்.. நீ எதுவும் பண்ணிடாத! கதிருக்கு நல்ல இடத்துல வேலை கிடச்சதும் நாங்களே வீட்ல பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்! இப்போ விசயம் தெரிஞ்சதுனா... எல்லாம் கெட்டுடும்”
“அப்போ நீ வாயை அடக்கி வை”
“நான் வெற்றி இருக்கிறப் பக்கமே வர மாட்டேன் இனி”
“ம்ம், வெர்ரி குட்” என்றவள் தன் வீட்டை நோக்கி நடக்கத் துவங்க.. “ஏய் ஒரு நிமிஷம் இரு” என்ற மாலதி “நீ... நீ ஆந்த்ராக்ஸை... சாரி!, வெற்றியை லவ் பண்றியா?” என்று வினவினாள்.
“இப்போதைக்கு இல்ல. ஆனா... ஃப்யூச்சர்ல லவ் பண்ண மாட்டேன்னு சொல்ல முடியாது” – தோரணையாகக் கூறி விட்டு முன்னே சென்றவளை விரிந்த வாயுடன் நோக்கினாள் மாலதி.
அன்றிரவு சிறியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து.. கோவில் பந்தலிலேயே டிவி ஒன்றை வைத்து வரிசையாகப் படங்களை ஒலிபரப்ப.. அத்தெருவைச் சேர்ந்தப் பெண்களும், ஆண்களும் அதன் முன்னே கூடி விட்டனர்.
ஜமுனாவுடன் அமர்ந்திருந்த சரோஜா சிறிது நேரத்திலேயே சென்று விட செல்வியின் நச்சரிப்பால் வீட்டிற்குச் செல்ல வழியின்றிக் கொட்டாவியை வெளியிட்டபடி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜமுனா.
அருகில் அமர்ந்திருந்த மாலதி ஒரு மாதிரி நெளிவதை ஓரக்கண்ணால் நோக்கியவள்... என்னவென்று எதிரே பார்க்க... அவளிடம் சைகையில் ஏதோ பேச முயன்றபடி தூக்கியக் கைகளுடன் கதிர் நின்றிருந்தான்.
மாலதியின் இந்த அவஸ்தை தனக்கு விசயம் தெரிந்து விட்டதால் உண்டானதென்பதைப் புரிந்து கொண்ட ஜமுனா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“மாலதி...” – மெல்லிய குரலில் அவளை அழைத்தாள் ஜமுனா.
“என்ன?”
“உன் ஆளுக்குத் தைரியத்த பார்த்தியா?, எல்லாரும் கூடியிருக்கிறப்பவே, உன்னை சேட்டு வூட்டு மாடிக்குக் கில்மா பண்ணக் கூப்பிட்றான்?”
“ச்சி, அவன் ஒன்னும் அதுக்காகக் கூப்பிடல”
“பின்ன?”
“பசங்களோட சேர்ந்து தண்ணியடிக்கப் போறானாம்! அதான் என் கிட்ட பர்மிஷன் கேக்குறான்.” – மிடுக்காகக் கூறியவளிடம் “அடேங்கப்பா அவன் அவ்ளோ நல்லவனா” என்ற ஜமுனா.. கலகலவெனச் சிரிக்க.. “ஷ்ஷ்ஷ், பக்கத்துல செல்வி இருக்கா, நீ கொஞ்சம் அமைதியா இரேன் ப்ளீஸ்” என்று மாலதி கெஞ்சிய பின் அமைதியானாள்.
அதற்குப் பின்னும் இருவரும் பேசிய சைகை பாஷையை ஓரக்கண்ணில் கவனித்தபடி சிரித்துக் கொண்டிருந்தவள், திடீரென பிரசாத்தின் “டேய் வெற்றி....” என்ற அழைப்பில் சட்டெனத் திரும்பினாள்.
மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியும்,சிகப்புச் சட்டையுமாக நின்றவன், அவளது பார்வையை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் நண்பனிடம் என்னவென்று வினவினான் அவன்.
“உனக்குப் புடிச்ச ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் ஓடின்னு இருக்குது! வந்து உக்கார்றா”
“இல்ல மச்சி! மீச கடையை சாத்தினு இருக்காரு! நான் போய் ஹெல்ப் பண்றேன்!”
“ஹெல்ப்ன்னா?, பூட்டு துவாரத்துல சாவிய மாட்டித் திருகி விட்டுட்டு வருவியா?, டேய்.. நீ எந்த அழகுல உதவி செய்வன்னு எங்களுக்குத் தெரியும்?, உட்கார்றா”
‘இந்த ராங்கி மூஞ்சியைப் பார்க்க வேணாம்ன்னு ஒதுங்கிப் போக நினைச்சா... இவனுங்க வேற!’ முணுமுணுத்தபடி அமர்ந்தவன்... மாலதியைக் கண்டு...
“என்ன மாலதி, படம் பார்க்குறியா?” என்று வம்பு செய்தான்.
‘இல்ல, பாடை கட்டினு இருக்குறேன்’ – என்று பதில் சொல்ல... வாய் வந்தாலும், ஜமுனாவை நினைத்து நாவை அடக்கி... அவனைப் பார்த்து லேசாகச் சிரித்து வைத்தாள்.
“சிரிப்பைப் பார்றா!, என்ன அமைதியா இருக்க?, மதியம் குடிச்சக் கூழ்-ல கெய்வி எதையும் கலந்துருச்சா?” – என்று அவன் கேலி பேசியதற்கும் அவள் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்க.., என்னாச்சு இவளுக்கு என்றெண்ணியபடி நண்பர்களிடம் திரும்பினான் வெற்றி.
விடாது டிவி ஓடிக் கொண்டிருக்க.. சிலர் ஆர்வமாய்ப் படம் பார்த்தபடியும், சிலர் அங்கேயே படுத்துறங்கியபடியும், சிலர் கொட்டாவியை வெளியிட்டபடி ஊர்க்கதைகளைப் பேசியபடியும் அமர்ந்திருந்தனர்.
கண்கள் முழுக்கத் தூக்கத்துடன் தன் இரு கைகளால் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு, அதில் நாடியைப் பதித்து தூக்கியப் புருவங்களுடன் டிவியை பார்த்துக் கொண்டிருந்தவளின் மீது நிமிடத்திற்கொரு முறை படிந்து மீண்டது வெற்றியின் பார்வை..
‘ராதை மனம் ஏங்கலாமோ.... கண்ணன் மனம் வாடலாமோ..
வாழ்க்கை மாறுமோ... நெஞ்சம் தாங்குமோ....
மணி ஓசை கேட்டு எழுந்து... நெஞ்சில் ஆசை கோடி சுமந்து....’
-லொக்,லொக் என்ற இருமல்களுக்கிடையில் சோகம் ஏந்தி வந்த எஸ்.பி.பியின் குரல், ராஜாவின் இசை! வழக்கம் போல் அவன் உள் மனதின் ஏக்கங்களைத் தட்டி எழுப்ப.. கம்பத்தின் அருகே அமர்ந்திருந்தவன், அவளையே பார்த்தபடி அதில் மெல்லத் தலை சாய்த்தான்.
வெள்ளிக்கிழமையானாலே ஆளு ஒரு டைப்-ஆ இருப்பா! இன்னிக்கு ஆடி வெள்ளி வேற! உடம்பு முழுக்க பக்தி தாண்டவம் ஆடனும்ன்றதுக்காகவே.. ரெண்டு தடவை குளிச்சிருப்பா!, சோர்வை மீறிப் பளபளத்த அவள் கண்களில் மையல் நிறைந்தால்.. எப்படியிருக்குமென மனம் வேண்டாதக் கற்பனையில் இறங்க.. அந்த மெல்லிய வெளிச்சத்தில்.. சிவப்பு நிற சுடிதாரில்.. பதுமையாய் அமர்ந்திருந்தவளின் அருகே சென்றமர்ந்து... அவள் மடி சாயத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கினான்.
அவனது ஏக்கமும்,ஆசையும் காற்றோடு கலந்து அவளைத் தீண்டியதோ என்னவோ... மெல்லத் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
பார்க்குறதைப் பாரேன்! கோட்டானே தான்! முறைப்புடன் அவள் எண்ணுகையில்... அவளையே பார்த்தபடி கம்பத்தில் தலை சாய்த்தவன்.... விழிகள் முழுதிலும் அவளை நிரப்பியபடி மெல்லக் கண் மூடினான்.
அவன் செய்கையில் படபடத்த இதயத்தை மறைத்து.. சட்டென டிவியின் மீது பார்வையைப் பதித்தாள் ஜமுனா. ஏதோ... அவன், அவள் மீதே சாய்ந்துக் கண் மூடி விட்டதைப் போன்ற உணர்வு! என்ன பார்வை அது?, காதல் இல்லை நிச்சயமாக! பலூன் வேண்டுமெனக் கேட்டுப் பாவமாய் முகத்தை வைத்துக் கொள்ளும் பிள்ளை போல! ஏக்கமாய்...! என்ன கண்றாவியோ! என்ன தான் வேண்டுமாம் இவனுக்கு! காதலிப்பதாகச் சொன்ன போதும், காதலிக்கச் சொல்லிக் கேட்ட போதும்.. இத்தனை ஏக்கத்தை அவன் வெளிப்படுத்தவில்லை! ஆனால்.. அவளைக் காணும் போதெல்லாம்.. விழி வழியே ஏதோ செய்தி கடத்துகிறான்! யாரிடம் சென்று அந்த பாஷையை மொழி பெயர்ப்பது?, அவனே வாய் விட்டுக் கூறினால் தான் உண்டு!
யோசனையும்,குழப்பமுமாய் அவள் மறுபடித் திரும்பும் போது, அவன் அங்கில்லை.
கோவிலைக் கடந்தத் தெரு மூலையில் ஒரு குட்டிச் சந்துக்குள், ஆண்கள் சிலர்... குறிப்பாகக் குடி மகன்கள் சிலர் ஒன்று கூடி.. ஆடி வெள்ளியை சரக்கு,சைட்டிஷ் உடன் விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
குடிக்கக் கூடாதென்று மாலதி கூறியதற்காகவே மூக்கு முட்டக் குடித்தக் கதிர் போதையில் “மாலதி ஐம் சாரி மாலதி! நீ சொன்னதைக் கேட்காம.. மாமா குடிச்சுட்டேன் டா” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
அவனைச் சும்மா விட்டால் மேலே ஏதாவது உளறி வைத்து விடுவானெனப் பயந்து, அவன் வாயில் சிப்ஸைத் திணித்தான் வெற்றி.
“டேய்.. வெற்றி.. நீ குடிக்கலையா டா?” – குழறலுடன் பிரசாத்.
“அவன் ஒரு மே-மாசக் குடிகாரன் டா” – கதிர்.
“அப்டின்னா?”
“அவனுக்கு ஒரு வினோதப் பழக்கமிருக்கு டா! எங்கம்மா செஞ்ச மாங்கா ஊறுகா இருந்தா மட்டும் தான் அவன் சரக்கடிப்பான்! எங்கம்மா செஞ்சதைத் தவிர ஊர்ல எந்த மாங்கா ஊறுகாயையும் தொட்டுப் பார்க்க மாட்டான்!, ஏப்ரல்,மே-ல எங்கம்மா போட்ற ஊறுகா பாட்டில் எல்லாம் காலியாகுறது இவன் ஒருத்தனால மட்டும் தான்!” – கதிர்.
“போதும் வாயை மூட்றா” – வெற்றி
“மூட முடியாது போல டா வெற்றி”
“ம்????”
“வா....வாந்தி வர்றா மாதிரி இருக்குடா” என்றவன் தொடர்ந்து உவ்வேஏஏஏஏஏ என அவன் சட்டை மீதே வாந்தி செய்ய.. ‘அடச்சை’ என்றபடி சட்டையைக் கழட்டித் தூர எறிந்தான் வெற்றி.
வாந்தி எடுத்த நாய்.. அங்கேயே படுத்து விட..
“இவனுக்கு ஏன் டா இவ்ளோ ஊத்திக் குடுத்தீங்க?” என்று நண்பனைத் திட்டி விட்டு உடை மாற்ற வேண்டி அந்தச் சந்தின் மறு கோடிக்கு வந்தான்.
மங்கிய வெளிச்சத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவன், எதிரே வந்த ஜமுனாவைக் கண்டுத் திகைத்துப் பின்.. சுதாரித்து.. தன்னைக் கடந்து செல்ல முயன்றவளை வழிமறித்து நின்றான்.
“ஏய்.. எங்க போற?” - வெற்றி
“வூட்டுக்குத் தான்.”
“படம் பார்க்கல?”
“பார்க்கல.”
“ஏன்?”
“என்ன ஏன்?, தூக்கம் வருது. அதான் வீட்டுக்குப் போறேன்”
“இப்பப் போக முடியாது”
“ஏன்?”
“சந்துல உட்கார்ந்து எல்லாம் தண்ணியடிச்சுட்டு இருக்கானுங்க. முக்கியமா... உன் ஆளு சுந்தரேசனும் இருக்கான். நீ வேற மசாலா தடவுன சிக்கன் பீஸ் மாதிரி, சிகப்பு டிரெஸ் போட்டுக்கிட்டுக் கலரா இருக்க!, லெக் பீஸ் தான் வேணும்ன்னு அவன் பாட்டுக்க உன் காலைக் கடிச்சிடப் போறான்”
“டேய்... தண்ணியடிக்க உங்களுக்கு வேற இடமே கிடைக்கலயா?, என் வூட்டுப் பாதை தான் கிடைச்சதா?, கருமம், அதான் உன் மேல இப்பிடி கப் அடிக்குதா?, குடிகாரப் பன்னாட”
“ஏய்.. உன்னை திரும்பிப் போ-ன்னு சொன்னேன்”
“போக முடியாது டா!, நான் ஏன் போகனும்?, அவனுங்களைக் காலி பண்ணச் சொல்லு”
“அவனுங்கல்லாம் இப்போதைக்குப் போ மாட்டானுங்க”
“அப்புறம், நான் எப்போ வீடு போய்ச் சேர்றது?, அதெல்லாம் நான் போனா.. இடத்தைக் காலி பண்ணிடுவானுங்க”
“ஏய்.... அவனுங்க யாரும் நிதானத்துல இல்ல. சொன்னாக் கேளு”
“பரவாயில்ல! நான் தெளிவாத் தான இருக்கேன்?, பார்த்துப் போய்க்குவேன், நீ வழியை விடு முதல்ல! தண்ணியடிச்சுட்டு என் முன்னாடி நின்னு பேசுறதேத் தப்பு. இதுல அக்கறை இருக்கிற மாதிரி அட்வைஸ் வேற...” – முணுமுணுத்தபடி நகர்ந்தவளின் முன்னே கை நீட்டித் தடுத்தான் வெற்றி.
“ஏய்... வழியை விட்றா”
“ஒழுங்கா திரும்பிப் போடி”
“முடியாது டா!
“நான் எதைச் சொன்னாலும் செய்யக் கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டுத் திரியுறாயா? லூசுப்பய-ன்னு நினைச்சியா என்னைய?” – எரிச்சலும்,கோபமாய் வினவியவனைத் தாண்டி அவள் செல்லப் பார்க்க... அதுவரை வாய்ச்சண்டையாகப் பேசிக் கொண்டிருந்த இருவருக்கும்.. நொடியில் கைக்கலப்பாகி விட.. தன்னைத் தாண்டி முன்னே செல்லப் பார்த்தவளைக் கை நீட்டி அவன் தடுக்க முனைந்ததில்.. இயல்பாக.. அவன் கை நீண்டு.. அவள் இடையை இறுகப் பிடித்திருந்தது.
“போகாதன்னு சொல்றேன்ல?”
“கையை எடுடா பொறுக்கி!”
“மரியாதையா திரும்பிப் போடி”
“நீ கையை விட்றா முதல்ல!” – போராடித் திமிறியவள்.. அவன் வெற்றுத் தோளில் கை வைத்து அவனை விலக்கித் தள்ளினாள். இல்லை தள்ள முயற்சித்தாள்.
சந்தின் மறு கோடியிலிருந்த விளக்கு பாரபட்சத்துடன் சொற்பமான வெளிச்சத்தை மட்டுமே இவர்களிருந்தப் பக்கம் அளித்திருக்க... அதுவரை மனதினுள்.. அந்தரத்தில் ஆட்டமாடிக் கொண்டிருந்த அவன் உணர்வுகள்.. அவள் தொட்டதில்.. மேடை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்... கச்சேரி வைத்து ஆடத் துவங்கியது.
தன் தோளில் பதிந்திருந்த அவள் கை விரல்களைப் பேச்சின்றிக் குனிந்து நோக்கியவன்... தன் இடது கையால் அதைப் பற்றி... நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.
மீண்டும் அதே பார்வை! இம்முறை டன்,டன்னாய் காதலையும்,ஆசையையும் சேர்த்துக் கொண்டு!
விக்கித்துப் போய் பெரிதாய் விழி திறந்து.. இமைக்க மறந்து நின்றவளின் இடையை இறுகப் பற்றித் தன் புறம் இழுத்தான் அவன்.
காற்றின் உபயோகத்தில் பறந்து வந்து மோதிய அவளது முன்னுச்சி முடிகள்.. நறுமணத்தைப் பரப்பியதில் உண்டான கிறக்கத்தில்.. தன் நெற்றியை நோக்கிக் கண் மூடிக் குனிந்தவனை வெடுக்கென உதறித் தள்ளி நின்றாள் அவள்.
அவள் விலகியதும் தன் நிலை புரிந்தாலும்.. அதை ஏற்றுக் கொள்ளப் பிடிக்காமல்.. அவள் கையை மெல்லப் பற்றினான். பற்ற.. முயற்சித்தான் வெற்றி.
“ஜமுனா.........” – ஏக்கமும்,கிறக்கமுமாய் வெளி வந்த அவனது குரல், நெஞ்சை ஏதோ செய்தது அவளுக்கு.
முதல் முறையாகப் பெயர் சொல்லி அழைக்கிறான்! தாளம் தப்பித் துடித்த இதயத்தை சமன் செய்வதற்குக் கூட வாய்ப்பளிக்காமல்.. தன் புறம் கரம் நீட்டுபவனைக் கண்டு அவள் மேலும் பின்னடைய...
மீண்டும் “ஜமுனா...” என்றான்.
“எ....என்ன?” – குரல் நடுங்கக் கேள்வி கேட்டாள் அவள்.
“ரெண்டு நிமிஷம்.... ப்ளீஸ்....”
“................” – பதில் சொல்லாமல் ஏறெடுத்துப் பார்த்தவளிடம்..
“கட்டிப் புடிச்சுக்கட்டுமா?” – ஆழ்ந்த குரலில் அசால்ட்டாகக் கேட்டவனைக் கண்டு விக்கல் வந்தது அவளுக்கு. நா வறண்டு போய்... தண்ணீர் வேண்டுமென்றுத் தோன்றியது.
மூச்சு விட மறந்து.. கண்ணை விரித்தபடி... சிலையாய் நின்றவளைப் பார்த்துக் கொண்டு நிற்கத் தோன்றாமல்... எட்டி இருகைகளால் அவளை இறுக அணைத்திருந்தான் அவன்.
உடல் இறுக.. விறைத்துப் போய் நின்றவள், அவன் கன்னம் அழுத்தியதில் அவிழ்ந்து கொண்ட கூந்தல்... முதுகு முழுதும் சூடாகப் பரவுவதை உணர்ந்ததும்... திடுக்கிட்டு.. அவனை விலக்கித் தள்ளினாள்.
அவள் பலமாகத் தள்ளியதில் இரண்டடி நகர்ந்துத் தடுமாறி நின்றவனை... மூச்சு வாங்க நோக்கியவள்... ஆங்காரத்துடன் அவன் கன்னத்தில் அறைந்தாள்.
ஒன்று..... இரண்டு.... மூன்று....
முழுதாக மூன்று அடிகளைத் தன் இரண்டு கன்னத்திலும் மாறி,மாறி வாங்கியவன்... அவள் மீண்டும் கை உயர்த்துகையில்... அதைப் பற்றித் தடுத்து..
“போதும்! ஏற்கனவே 3-ஆயிடுச்சு” என்றான்.
“கையை விடு! என்னைத் தொடாத! தொடாத டா” – அவன் கையிலிருந்துத் தன் கரத்தை உதறி விலக்கியவள்..
“என் கிட்ட... என் கிட்டயே உன் பொறுக்கித்தனத்தைக் காட்டுறியா நீ?, ராஸ்கல்!, செருப்பால அடி வாங்கியும், மானக்கேடாத் திட்டு வாங்கியும் உனக்கு புத்தி வரலேல்ல?, உனக்கும் அந்த சுந்தரேசனுக்கும் என்ன டா வித்தியாசம்!, வக்கிரம் புடிச்ச நாயே!”
“என்ன வித்தியாசமா?, அவனா இருந்திருந்தா.. கண்ட இடத்துலக் கை வைச்சிருப்பான்! நான்-ன்றதால கட்டி மட்டும் புடிச்சிருக்கேன்”
-நாராசமாகப் பேசியவனைக் கேட்டுக் காதைப் பொத்திக் கொண்டவளிடம்..
“இனிமே வாழ்க்கைல நான் உன்னைத் தவிர வேற எவளையும் கட்டிப்பிடிக்க மாட்டேன்! ஆனா... அவன் அப்பிடி இல்ல! அதான் அவனுக்கும்,எனக்குமிருக்கிற வித்தியாசம்.” என்றான்.
“பண்றதையும் பண்ணிட்டு வசனம் பேசுறியா?, எப்போடா சான்ஸ் கிடைக்கும்ன்னு காத்துட்டிருப்பீங்களா டா?, உன் மேல எந்த விருப்பமும் இல்லன்னு சொன்ன பொண்ணுக்கிட்ட இப்டித் தான் நடந்துப்பியா?, நீயும் உங்கப்பனை மாதிரி தான் டா!, மேட்டர்-க்காக மட்டும் பொம்பளைங்களை சுத்துறத் தெரு நாய்ங்க!”
-அவன் தந்தையைப் பற்றி எதேச்சையாக அவள் அறிந்து வைத்திருந்த விசயம்... இன்று அடக்க முடியாத கோபத்தில்.. ஆங்காரமாய் வெளி வந்து விட.. விழி சிவக்கக் கொதித்துப் போய் ஒரு நொடி நின்ற வெற்றி... மறு நொடி... அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
