அத்தியாயம் - 5

‘கண்கள் என்னும் சோலையில்... காதல் வாங்கி வந்தேன்..

வாங்கி வந்தபின்பு தான் சாபம் என்று கண்டேன்!

என் சாபம் தீரவே நீயும் இல்லையே..

என் சோகம் பாடவே ராகம் இல்லையே...!’

சென்னையிலிருந்து வேலூருக்குச் செல்லும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்.. தலை சாய்ந்தமர்ந்தபடி வெளியே தெரிந்த இருளை வெறித்துக் கொண்டிருந்தான் வெற்றிச் செல்வன். வழக்கம் போல்.. ஹெட்செட் வழியே.. காதுக்குள் இளையராஜா!

அன்றிரவு.. அவன் காட்டுத்தனமாய் அடித்த பின்பு.. கருமணிகள் வெளியே தெறித்து விழுமளவிற்கு அவனை நோக்கி உறுத்து விழித்து விட்டு... அந்த இடத்தை விட்டு ஓடியவள் தான்... அதன் பின்பு நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.

கதிர் வேறு தனது தந்தை வழிப் பாட்டி இறந்து போய் விட்டதாகக் கூறி மறுநாளே வெளியூருக்குச் சென்று விட.. அவளுடன் நெருங்கிப் பழகும் ஒரே ஆளான செல்வியை அனுப்பி அவளது நிலையைக் கண்டறியக் கூட வழியில்லாமல் போனது அவனுக்கு.

டீக்கடையில் அமர்ந்து கொண்டும், தன் வீட்டுப் பலகணியில் நின்று கொண்டும் அவள் வீட்டு வாசலையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். சரோஜாவிடமும் பேசிப் பழக்கமில்லாததால்.. அவரிடம் வாய் விட்டுக் கேட்பதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை!

இந்த உலகத்திலேயேத் தான் வெறுக்கும் தன் தந்தையுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதில் கொதித்துப் போய்... முதல் இரண்டு நாட்கள் வெறுப்பும்,முறுக்குமாய் விறைப்புடன் சுற்றிக் கொண்டிருந்தவன்.. ‘என்ன இருந்தாலும் ஒரு பெண்ணைக் கை நீட்டி அடிப்பதா?, யார் அந்த உரிமையைக் கொடுத்தது தனக்கு?, அர்த்தராத்திரியில் அள்ளிக் கொள்ளும் அழகுடன் அருகே நின்றவளை.. அடக்கமாய்ப் பேசி அனுப்பி வைப்பதை விட்டு விட்டு... அராஜகமாக நடந்து கொண்டு.... அவளைக் கஷ்டப்படுத்தி விட்டானே!’ – புலம்பிய மனதை சமாதானப்படுத்த முடியாமல் ஒரு முறையேனும் அவளை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென.. வேலைக்குச் செல்லாமல் சாப்பாடு,தூக்கமின்றி டீக்கடை பெஞ்சே கதியெனக் கிடந்தான்.

முழுதாக நான்கு நாட்களுக்குப் பின் தன் வீட்டு வாசலில் யாரையோ வழியனுப்ப வந்தவளைக் கண்டு.. மகிழ்ச்சியும்,ஆர்வமுமாய் அவன் அருகே வர.... அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல்.. அந்தப் பெண்மணியிடம் நின்று ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

ப்ரௌன் நிற சுடிதாரில், தூக்கிக் கட்டியக் கொண்டையும், வெற்று நெற்றியுமாய் இருந்தவளின் முகத்தில் அத்தனை சோர்வு! தடித்த இமைகளும்,வெளுத்த உதடுகளுமாய் நின்றவளைக் கண்டு மனம் வலித்தது அவனுக்கு! தன்னால் தானோ?? அவன் கூறிய ஒரு வார்த்தைக்காகவே இன்று வரை சுடிதாருடன் மட்டுமே வாசலுக்கு வருகிறாள்!

வலிக்க,வலிக்க இதயத்தில் குத்திய மனசாட்சியின் பொறுமலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.. தன்னைக் காணாது வீட்டுக்குள் செல்ல எத்தனித்தவளை “ஜமுனா......” என்றபடி அவசரமாய்த் தடுத்து நிறுத்தினான்.

அவன் முகம் காணாமல் மறுபுறம் திரும்பி நின்றவள் லேசாகத் தலையைத் திருப்பி என்ன என்பது போல் பார்த்தாள்.

“ஒரு நிமிஷம் என்னைப் பாரேன்...” - வெற்றி

“..........”

“ப்ளீஸ்....”

கையைக் கட்டிக் கொண்டு அவன் புறம் திரும்பி நின்றாள்.

தலை முதல் கால் வரை நேசத்துடன் அவளைப் பார்வையால் வருடியவன்... “ஏன் இப்பிடியிருக்க?” என்றான்.

“எப்பிடி இருக்கேன்?”

“நெத்தில பொட்டு இல்ல! காதுல தோடு இல்ல?”

வேக மூச்சுடன் அவன் கண்களை நோக்கியவள் “என்னைப் பேச வைக்காத வெற்றி” என்றாள்.

ஒரு நொடி அமைதியாய்த் தலை குனிந்தவன் பின் நிமிர்ந்து.. “சாரி ஜமுனா. என்னை மன்னிச்சுடு! நான் பண்ணது தப்பு தான்” என்றான்.

“..............”

“ப்ளீஸ்....”

படி மீது நின்றிருந்தவளின் அருகே நெருங்கி வந்து... அண்ணாந்து அவள் முகம் பார்த்துக் கெஞ்சியவனின் முகத்தைக் கண்டவளுக்கு, அவன் தலைமுடியைக் கோதி விடும் வேகம் பிறக்க... கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கினாள்.

“அழறியா?” – வெற்றி

“................”

“நான் தான் காரணமா?”

“................”

“நான் பொண்ணுங்கக்கிட்டக் கை ஓங்கி வீரத்தைக் காட்டுற ஆள் இல்ல ஜமுனா.. உனக்கேத் தெரியும் தான?”

“............”

“மன்னிச்சுட்டேன்னு சொல்லேன்”

“............”

“உன்னைக் காதலிக்கிறேன்,அது,இதுன்னு சொல்லி இனி உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்! நீ சொன்ன மாதிரி, மறுபடி நாம ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸா பழகலாமா?” – ஏக்கம் வழிந்த விழிகளுடன் தன்னிடம் கேள்வி கேட்டவனைக் கண்டு சிரிப்பு வந்தது அவளுக்கு.

“சிரிச்சுட்டியா?” – சாதித்த உணர்வுடன் அவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

கண்களைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தவளின் பார்வையில் இவர்களையே நோக்கியபடி எதிர் வீட்டு வாசலில் கனகாவும்,இன்னும் சிலரையும் கண்டு.. தான் இருக்கும் நிலையும்,கண் முன்னே வரிசை கட்டி நிற்கும் பிரச்சனைகளும் அடுத்தடுத்து நினைவிற்கு வர.. சட்டென முகம் திருப்பி.. வாசல் படியில் மேலேறியவள்...

“போயிடு வெற்றி” என்றாள்.

“................” – திடுக்கிட்டு அவள் முகம் நோக்கியவனிடம்...

“இனி என் பார்வைல படாம போயிடு!, இல்லேன்னா... நான் போயிடுவேன்! இந்த வீட்டை விட்டு! இந்த ஏரியாவை விட்டு” – முகத்திலடித்தாற் போல் கூறி விட்டு விறுவிறுவெனப் படியேறித் தன் வீட்டுக்குள் நுழைந்து விட்டாள்.

அவள் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தில்.. அவள் சென்று விட்டப் பின்பும் உறைந்து போய் நின்றவன், வெகு நேரம் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

எரிதணலாய் ஏதோ ஒன்று மூளைக்குள் அமர்ந்து கொண்டு.. அவன் உடல் முழுதையும் பற்றியெரியச் செய்ய.... இதயம் இருக்க வேண்டிய இடத்தில் பாறாங்கல்லை வைத்தது போல்.. மனது மிகவும் பாரமாகத் தெரிந்தது அவனுக்கு.

கடைசியாகப் பதினாறு வயதில்.. அவனது பாட்டி இறந்த போது தான் இப்படியொரு வெறுமையை உணர்ந்திருக்கிறான். இனி வாழ்வதற்குப் பிடிப்பெதுவும் இல்லையென்பது போல்... மொத்தமாய் சறுக்கி விழுந்து விட்ட உணர்வு...!

நொறுங்கிப் போன இதயத்துடன் நடை பிணமாய் வலம் வந்தவனுக்கு, அவளிருக்கும் தெருவுக்குள் தானும் இருப்பதே.. மூச்சு முட்டுவது போலிருந்தது. அவள் முகத்தில் கூட விழிக்காமல்.. விலகிப் போய் விடச் சொன்னாளே! ஒரேடியாகப் போய் விடுவோமா...??? யோசனையுடன் திரிந்தவனின் கைகளில் சிக்கியது அன்றைய செய்தித் தாளில் கொட்டை எழுத்துக்களுடனிருந்த ‘ஆட்கள் தேவை’ விளம்பரம்.

வேலூர் அருகே ஒரு புகழ்பெற்ற ஹோட்டலில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவையென செய்தி கொடுத்திருந்தனர். கணிசமான சம்பளம்! படிப்பைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாதது அவனுக்கு நல்லதாகப் பட்டது. உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு இதோ... நேர்முகத் தேர்வுக்காக சென்று கொண்டிருக்கிறான்.

அன்று வெற்றியைத் துரத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த ஜமுனாவிற்குத் தன் அன்னையின் நிலையைக் கண்டுத் துக்கம் பொங்கியது.

கடந்த இரண்டு,மூன்று நாட்களாக அன்னம்,ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ள முடியாமல்.. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுப் பாதி ஆளாக சுருங்கிப் போயிருந்தார் சுந்தரி.

இரண்டு வருடத்திற்கும் மேலாக படுக்கையேக் கதி எனக் கிடப்பவளுக்கு இப்பூமிக்குப் பாரமாய், தன் மகளுக்கு இடைஞ்சலாய் இதுவரை வாழ்ந்ததுப் போதுமென்று தோன்றி விட்டதோ என்னவோ! எடுத்துக் கொண்டப் பணியை முழுதாய் செய்து முடிக்க முடியாமல்.. பாதியில் சென்று விட்டக் கணவனோடு சேர்ந்துத் தானும் சென்று விட எண்ணி... தன் வாழ்வின் கடைசி நாட்களை வலியோடு கடத்திக் கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு வருடமாக அவரைக் குழந்தை போல் கவனித்துக் கொண்டு வரும் சரோஜா, கண்ணீர் விட்டபடியே... அவர் கை,கால்களை நீவுவதும், வாயோரம் வழியும் எச்சிலைத் துடைப்பதுமாக துக்கத்துடன் அமர்ந்திருந்தார்.

இரண்டு,மூன்று நாட்களுக்கு மேல் அவர் உயிர் தாங்காது, சொந்தக்காரர்களுக்குச் சொல்லியனுப்புமாறு அவரை செக் செய்த டாக்டர் சொல்லிச் செல்ல.. அவரை வாசலருகே வழியனுப்ப வந்த போது தான் அவள் வெற்றியைக் கண்டது!

சொந்தபந்தங்களென்றுப் பெரிதாக சொல்லிக் கொள்ள யாருமற்ற நிலையில் தன் தந்தையை இழந்த.. இந்த ஐந்து வருடங்களில், தானாக சொந்தக் காலில் நிற்க நன்றாகவே பழகியிருந்தாள். அதிலும் தாய்.. படுத்த,படுக்கையாகிய பின்புத் தனியாளாக வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிவு கூடுதலாகவே வந்திருந்தது அவளுக்கு.

எப்படியேனும் தன் தாயின் உடல்நிலையைச் சரிசெய்து விட வேண்டுமென்று இந்த இரண்டு வருடத்தில் அவள் செலவழித்த நேரம்,பணம் அத்தனையும் ஒரு முன்னேற்றத்தைக் கூடக் கொடுக்கவில்லை!

அவள் பட்ட பாடு அனைத்திற்கும் ஒரு பிரதிபலனுமின்றிக் கடைசியில்.. அன்னை,தந்தையற்ற அநாதையாகத் தன்னை நிற்க வைக்கப் போகும் விதியை எண்ணி நொந்து கொண்டு... சரோஜாவின் அருகில் தானும் அமர்ந்து.. அன்னையின் முகத்தை வருடினாள் ஜமுனா.

வேலூரில் நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பினான் வெற்றி. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வேலையில் சேரக் கோரிய நிர்வாகத்திடம் அந்த வாரமே சேர்வதாக வாக்களித்து விட்டு வந்தான்.

கதிர் ஊரிலில்லாததால் அவனது இருப்பைப் பெரிதாகக் கண்டு கொள்ள யாருமில்லை அங்கு. அவன் ஊரிலிருந்துத் திரும்பும் முன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வேலூருக்கு ஓடி விட வேண்டுமென்றுத் தீர்மானம் செய்து கொண்டான்.

கதிரிடம் விசயத்தைக் கூறினால்.. நிச்சயம் ஜமுனாவுடனானப் பிரச்சனையைக் கண்டுபிடித்து விடுவான். அத்தோடு நில்லாமல்.. நண்பனுக்காக அவளிடம் அவன் சண்டைக்கு நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவளுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக ஒதுங்கி விட வேண்டுமென்று எண்ணி வைத்திருந்தான்.

அதன் முதல் படியாக, வேலூர் சென்று திரும்பியதிலிருந்து மறந்தும் கூட ஜமுனா வீட்டின் மீது பார்வையைச் செலுத்தவில்லை அவன். டீக்கடை பெஞ்சில் அமர்வதைக் கூடத் தவிர்த்திருந்தான். அக்கம்,பக்கத்து வீட்டிலிருப்போர் அனைவரும் அவள் வீட்டின் முன்பு அவ்வப்போது கூடி நின்று பேசுவதைக் கண்டாலும்.. அவன் பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில் அவள் வீட்டின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் கனகாவைக் காண வேண்டி எப்போதும் புறணி பேசும் கூட்டமொன்று அவள் வீட்டு முன்பு அவ்வப்போது நிற்பது தான்! அதனால்.. சாகக் கிடக்கும் அவள் அன்னையைப் பற்றிய செய்தி அவன் காதுகளை எட்டாமலே போனது.

மறுநாளே வேலூருக்குக் கிளம்ப முடிவு செய்திருந்ததால்.. தன் உடைமைகளை ‘பேக்’ செய்து கொண்டிருந்தான் வெற்றி.

ஷெல்ஃபிலிருந்தத் தனது ஷேவிங் செட்,க்ரீம் என அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் சிக்கியது, அவன் முன்பொரு நாள் ஷண்முகத்தை அடித்து விரட்டிய போது கிடாசி எறிந்த புகைப்படக் கட்டு.

‘ப்ச், இத இன்னும் குப்பைல தூக்கிப் போடாம வைச்சிருக்கான் பாரு!, பரதேசி நாய்!’ எனத் தந்தையைத் திட்டி விட்டு.. ஃபோட்டோக்களை ஒரே தள்ளாகக் கீழே தள்ளினான்.

சிதறி விழுந்தப் புகைப்படங்களை மிதித்து நடந்தவன்.. கையிலிருந்தப் பொருட்களை பையினுள் திணித்து விட்டு மீண்டும் ஷெல்ஃபின் அருகே சென்றான். செல்ஃபோன் சார்ஜர், டிரைவிங் லைசன்ஸ்,பாஸ்போர்ட் என அனைத்தையும் சரி பார்த்தபடி நின்று கொண்டிருந்தவனின் பார்வை.. எதேச்சையாக.. சிதறிக் கிடந்தப் படங்களின் படிந்தது.

உள்ளங்கையால் கன்னத்துப் பருக்களை மறைத்தபடி காமப் பார்வையுடன் போஸ் கொடுத்திருந்தப் பெண்ணின் புகைப்படத்தைத் தொடர்ந்து... கருநீல நிற சர்வாரில், தோளில் வழிந்து கொண்டிருந்த மல்லிகைச் சரத்துடன்... சுவரில் சாய்ந்தபடி ஃபோட்டோவில் நின்றிருந்தது... சாட்சாத் ஜமுனாவே தான்!

ஒரு நிமிடம் மூளை செயல்பாட்டை நிறுத்தி விட... தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் காற்றை மீறி நெற்றியில் வியர்வை பொட்டு,பொட்டாகப் பூக்கத் துவங்கியது அவனுக்கு. அதிர்ந்து போன இதயத்துடன்.. சட்டெனக் குனிந்து அந்தப் புகைப்படத்தைக் கையில் எடுத்தான்.

ஜமுனா,வேளச்சேரி எனப் பெயர் குறிப்பிடப்பட்டு ஒரு ஃபோன் நம்பரைத் தன் கைப்பட எழுதி வைத்திருந்தான் ஷண்முகம்.

ரத்தத்தைச் சுமந்து கொண்டு இதயத்திற்குச் செல்லும் அத்தனை நரம்புகளிலும் கோப ஹார்மோன்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க, நெற்றியோரம் புடைத்தெழுந்த நரம்பு, அவன் ஆத்திரத்தின் அளவை எடுத்துச் சொல்லியது. ஜிவ்,ஜிவ்வெனத் தெறித்து வலித்த மொத்தத் தலையையும் தன் இரு கைகளால் பற்றியவன், சம்மட்டியால் அடித்தது போன்று அவள் கடைசியாகக் கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்து.... அளவற்ற ஆங்காரத்துடன் வெறி பிடித்துப் போய் அவள் வீடு நோக்கி விறுவிறுவென நடந்தான்.

முழு வேகத்துடன் அவள் வீட்டுக் கதவைப் படாரெனத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்... சமையலறையில்.. அடுப்பில் வெந்நீருடன்.... விரக்திப் பார்வையைச் சுமந்த படி நின்றிருந்தவளின் கையை வெடுக்கெனப் பற்றித் தன் புறம் திருப்பினான்.

அனிச்சை செயலாகத் தன் கையை உதறிய ஜமுனா.. அவனைக் கண்டதும் மகிழ்ச்சி கொண்டுப் பின்.. அவன் முகத்திலிருந்தக் கோபத்தைக் கண்டுப் புருவம் சுருக்கினாள்.

அவள் தன் கையை உதறியதில், அநியாயத்திற்குக் கோபம் கொண்டவன்.. அவள் கழுத்தை இறுகப் பற்றி.. அருகிலிருந்த சுவரில் சாய்த்து அழுத்தியிருந்தான்.

“அன்னிக்கும்.. அன்னிக்கும் இப்டித் தானடி என் கையத் தட்டி விட்ட?, பெரிய உத்தம பத்தினி மாதிரி?”

அடங்காத ஆத்திரத்துடன் அடிக்குரலில் சீறியவனைக் கோபத்துடன் நோக்கிய ஜமுனா.. அவன் கைகளில் நெரி பட்டுக் கொண்டிருந்தத் தொண்டையைக் கஷ்டப்பட்டுத் திறந்து.... “கையை எடுடா கேப்மாரி” எனப் பதிலுக்கு சீறினாள்.

“ஒருத்தன் உன்னைத் தப்பா பார்த்ததுக்கே... உடம்பு முழுக்கப் பத்தியெரிஞ்ச மாதிரி கொதிச்சுப் போன என்னை... இப்டி ஊர்ப் பரத்தைங்களுக்கு மத்தில உன் முகத்தைப் பார்க்க வைச்சுட்டியே டி?”

சத்தியமாக அவன் என்ன சொல்கிறானென்றேப் புரியவில்லை அவளுக்கு. அவன் இன்னும் ஒரு நொடித் தன் தொண்டையை அழுத்தினால்.. தாய்க்கு முன்னால் தான் இறைவனடி சேர்ந்து விடுவோமென எண்ணியவள்... முழு பலத்துடன் அவன் கைகளிருந்துத் தப்பிக்கப் போராடினாள்.

“ஏற்......க...னவே நீ.. நீ.. என்னை அடிச்சதுக்கே நான் இ..இன்னும் திருப்பிக் கொடுக்கல! என்னைக் கோபப்படுத்திப் பார்க்காத! அப்புறம் நான் என்ன செய்வேன்னே தெரியாது எனக்கு” – அவனுக்கு நிகரான கோபத்தில்.. நாக்குத் தள்ள மிரட்டியவளை மேலும் சுவற்றோடு அழுத்தியவன்...

“உன்னை அடிச்சதோடு நிறுத்தியிருக்கக் கூடாது டி! கொன்னுப் போட்டிருக்கனும். உனக்கும்,அந்த ஷண்முகத்துக்கும் என்னடி சம்பந்தம்?, உன் ஃபோட்டோ எப்பிடி அவன் கிட்ட வந்தது?, உத்தமி வேஷம் போட்டு, ஒன்னும் தெரியாதவ மாதிரி டீச்சர் உத்தியோகம் பார்க்குறியே! இன்னும் கை வசம் எத்தனை தொழில் வைச்சிருக்க?, போயும்,போயும் உன்னை நினைச்சா டி நான் பைத்தியமா சுத்திட்டிருக்கேன்?”

-நின்று நிதானமாக யோசிக்கும் திறன் என்பதைப் பிறப்பிலேயே பெற்றிராத வெற்றி.. அவள் புகைப்படம் எப்படி ஷண்முகத்தின் கையில் கிடைத்தது, அவன் எதற்காக ஐட்டம் லிஸ்ட்டில் இவளது ஃபோட்டைவை இணைத்திருக்கிறான் என்று ஆராய்ந்து பார்த்து... அவன் சட்டையைப் பிடித்து, அவனைக் கூறு போடுவதை விட்டு விட்டு... தான் காதலிக்கும் பெண்ணைச் சந்தேகம் கொண்டு.. அவன் மீதான அவள் உணர்வுகளைத் தானே சிதைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணமின்றி புத்தி கெட்டப் புண்ணாக்காக நடந்து கொண்டிருந்தான்.

அவன் கூறியதில் பாதி புரியா விட்டாலும், அவன் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஜமுனா.. ஆத்திரத்துடன் அவன் கைகளைப் பிரித்து பலத்துடன் ஒரு தள்ளு,தள்ளினாள்.

தடுமாறாமல் இரண்டடிப் பின்னே நகர்ந்தவனைக் கோபத்துடன் நோக்கி.. “நாக்கை இழுத்து வைச்சு அறுத்துடுவேன்.. பொறுக்கி!, என்ன டா பேசுற நீ?” என்று பொங்க.....

“நானா டி பொறுக்கி?, நீ தான் டி *****” – அவன் அந்த வார்த்தையை முடிப்பதற்குள் தன் முழு பலத்தையும் திரட்டி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

கடந்த நான்கு நாட்களாகச் சரியாக உண்ணாமல் உறங்காமல் இருந்ததில் உண்டான பலவீனம், சாகக் கிடக்கும் அன்னையை நினைத்த துக்கம், அன்னைக்குப் பிறகான வாழ்க்கையை எண்ணி உண்டான பயம்.... அனைத்தையும் தாண்டி.. ஆறுதல் சொல்ல எவருமின்றித் நிர்க்கதியாய் நிற்பவளைத் தேடி வந்து கைக் கொடுப்பானென்று அவள் நம்பிய ஒருவன்... அவளிருக்கும் நிலையை அறிந்து கொள்ளக் கூட முற்படாமல்.. ஏதோ உளறியபடி.. வாய் விட்டு உச்சரிக்கக் கூசும் வார்த்தைகளைத் தன் முன்னே நின்று கூறிக் கொண்டிருப்பதைக் கண்டு... வெம்பி,விரக்தியடைந்து அவள் பொல,பொலவெனக் கண்ணீரைச் சிந்தத் தொடங்கிய சமயம்...

பக்கத்து அறையிலிருந்து பலத்த சத்தத்துடன் வினோதமாய்க் கிளம்பிய ஒலியைக் கேட்டு.... விசுக்கென நிமிர்ந்தவள் “அம்மாஆஆஆஆ” என்று கத்தியபடியே முழு வேகத்துடன் ஓடிச் சென்றாள்.

ஒரு நொடி திகைப்புடன் நின்ற வெற்றியும், அவளைத் தொடர்ந்து ஓடி வர... மெலிந்த தேகம், மேலும் மெலிந்ததில் உருக்குலைந்தத் தோற்றத்துடன் கட்டிலில் கிடந்த அவள் அன்னையைக் கண்டுத் திடுக்கிட்டு நின்று விட்டான்.

“ம்மா... ம்மா....” என்று விடாமல் உச்சரித்த படி அவரது வலது கையைப் பற்றியிருந்த ஜமுனாவையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் கண்கள் விடாது கண்ணீரை சொரிந்து கொண்டிருந்தது. எதை நினைத்து அந்தக் கண்ணீரோ! அவருக்கே வெளிச்சம்!

அன்னையின் கண்களில் கண்ணீரைக் கண்ட ஜமுனா.. “நா.. நான் என்னைப் பார்த்துக்குவேன்ம்மா... நான் நல்லாயிருப்பேன்! நீ நினைச்ச மாதிரி! எ..என்னை நினைச்சு நீ கவலைப்படவே வேண்டாம்மா” என்று அவசர,அவசரமாகக் கூற அதைப் புரிந்து கொண்ட பெண்மணியும் லேசாய்க் கண்ணசைத்து அதை ஆமோதித்து விட்டு.... “சுந்தரிஇஇஇஇ...” என்றபடிக் கதறிக் கொண்டு அருகே வந்த சரோஜாவின் கையையும் பற்றிக் கொண்டு... சற்றுத் தள்ளி நின்றிருந்த வெற்றியை நோக்கினார்.

சத்தம் கேட்டு அதற்குள் அந்தத் தெருவைச் சேர்ந்த அனைவரும் ஜமுனாவின் வீட்டில் கூடி விட... அவர் பார்வை என்ன கூறியதோ... தானாய் நகர்ந்த அவனது கால்கள் அவரருகே செல்ல.... அவரது கையைப் பற்றியிருந்த ஜமுனாவின் கை மீதுத் தனது கையை வைத்து... அவரை நிமிர்ந்து பார்த்தான் வெற்றி.

தன் விரலில் வந்து விழுந்த ஒரு சொட்டுக் கண்ணீரைக் கண்டு நிமிர்ந்த ஜமுனா.. அவன் முகம் பார்க்கையில்.. விழிகளில் தேங்கியிருந்த நீருடன் அவள் அன்னையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இருவரது கையையும் ஒரு முறை இறுக அழுத்திய சுந்தரியின் கண்கள்.. அவர்கள் மீதே நிலைக்குத்தி நின்று விட்டது.

அதன் பின் சுற்றத்தாரின் உதவியுடன் சுந்தரியின் கடைசிக் காரியங்கள் விறுவிறுவென நடைபெற்றன. ஜமுனாவின் தந்தை இறந்த பின்பு, தாயும் படுத்த படுக்கையாகிய பிறகு எட்டிப் பார்க்காத சொந்தங்களனைத்தும் இன்று காரியத்திற்கு வந்திறங்கினர்.

வெற்றியின் நண்பர்களனைவரும் ஆளுக்கொரு வேலையை எடுத்துச் செய்தபடி அவளுக்கு உதவி புரிய.. வெற்றியின் பார்வையோ முழுக்க முழுக்க அவளையே சுற்றி வந்தது.

தேவதையாய் நினைத்துத் தான் காதலித்தப் பெண்ணை... புத்தி கெட்டுப் போய்.. எந்த அளவிற்குத் தரமிறக்கித் தவறாய்ச் சித்தரித்திருக்கிறோம் என்பது புரிந்த போது... நெஞ்சு உலர்ந்து போய்.. இனி உயிர் வாழ்வதே வீண் என்று தோன்றியது அவனுக்கு.

அறிவு இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு மட்டும் ஏன் ஆத்திரத்தை வைத்து விட்டான் ஆண்டவன்! நிதானமாக யோசித்து... புத்தியோடு செயல்படுவதை விட்டு.. விட்டு.. துக்கத்தில் இருந்தவளை.. எப்படியெல்லாம் பேசிக் காயப்படுத்தியிருக்கிறான்! சுந்தரியம்மாவோடு சேர்ந்து.. அவனும் எரிந்து சாம்பலாகிப் போனால் கூட தவறில்லை.

தன் காதல், அதற்கான அவளது பிரதிபலிப்பு என அவனைப் பற்றி மட்டுமே யோசித்திருக்கிறானே ஒழிய. அவளைப் பற்றிக் கொஞ்சமேனும் அறிந்து கொள்ள முயற்சித்தானா?

பக்கவாதம் வந்த அன்னையை வைத்துக் கொண்டு ஒற்றைப் பெண்ணாகப் பொறுப்பாய் வேலைக்குச் சென்று சம்பாதித்து.. கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தாய்க்கு மட்டுமே செலவழித்தாளே!, வாரக் கடைசியில் கூட டியூஷன்,டியூட்டரிங் எனச் செல்வாளே! அப்பேர்ப்பட்டவளை.... என்னவெல்லாம் பேசி விட்டான்! அவள் கூறியது சரி தான்! தெருவில் கிடக்கும் எச்சில் இலைகளைப் பொறுக்கித் தின்னும் நாய்க்கும், அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! சிவலிங்கத்தை செக்கோடு ஒப்பிடப் பார்த்தானே!

ஆறு மாதத்திற்கும் மேலாக அவளுடன் பழகியிருக்கிறான்! அவளைப் பற்றி என்ன தெரிந்ததென்று... என்ன புரிந்ததென்று காதல் சொல்லியிருக்கிறான்! வாழ்க்கையே வெறுத்தது அவனுக்கு!

அவள் முன் மண்டியிட்டு, மனதின் கதறல்களை எடுத்துச் சொல்லி... மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று உத்வேகம் பிறந்தது. நுரையீரல்கள் இரண்டும் காற்றுக்குத் தவிப்பது போல்... நெஞ்சு முழுதும் ரத்த ஓட்டமின்றி உறைந்து போனது போல்... மூச்சு விட சிரமப்பட்டுப் போனான்.

சுந்தரியின் உயிரற்ற உடலின் அருகே... அளவற்ற துக்கத்துடன்.. கண்ணீர் வற்றிப் போய்... பிரம்மை பிடித்தவள் போன்று அமர்ந்திருந்தவளைக் கண்டவனுக்குத் தான் செய்த தவறு பூதாகரமாய்த் தோன்றி.... மனதை மிரட்ட... தான் இந்த உலகில் உயிர் வாழ்வதற்குத் தகுதியே இல்லாதவன் போல் உணர்ந்தான் அவன்.

தலையைப் பிடித்தபடி தெரு கடைசியிலிருந்த முட்டுச் சந்துக்குள் அவன் ஒதுங்கிய சமயம் கண்ணில் பட்டான் ஷண்முகம். துக்க வீட்டிற்கு வருகை புரிந்திருப்பான் போலும்!

அவனைக் கண்டதும் ரௌத்திரம் பொங்கியெழ.. அவன் நின்றிருந்த சந்தைக் கடந்து செல்லப் பார்த்தவனின் தலையைக் கொத்தாகப் பற்றி முட்டுச் சந்தின் மூலைக்குக் கொண்டு சென்று நிறுத்தினான் வெற்றி.

நிலைகுலையத் தன் கண்ணாடியைப் பற்றிக் கொண்டு நிமிர்ந்தவனின் கழுத்தைப் பற்றிச் சுவரோடு அழுத்தித் தூக்கியவன்.. “ஜமுனா ஃபோட்டோ உன் கைல எப்பிடி டா வந்தது?” – உச்சகட்ட ஆத்திரத்தில் கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பினான்.

தன்னைக் கண்டாலே எப்போதும் சட்டையைப் பிடித்துச் சண்டையிடுபவன் தானே என்கிற எண்ணத்துடன், அந்தரத்தில் தொங்கிய போதும் அதுவரை அசால்ட்டாக இருந்த ஷண்முகம், அவள் ஜமுனாவைப் பற்றிக் கேட்டதும் விதிர்த்து “அ...அது அது.. வந்து.. அ..அந்தப் பொண்ணு ஃபோ...ஃபோட்டோ...” என்று உளற... பிடித்திருந்த அவன் கழுத்தைத் தூக்கி.. அவன் பின் மண்டையை சுவற்றிலேயே ஓங்கி அடித்தான் வெற்றி.

வலி தாளாமல் கத்திய ஷண்முகம் “என்னை விட்ரு... என்னை விட்ரு....” என்று கெஞ்சத் துவங்க.. “பதில் சொல்லுடா! பதில் சொல்லு” என்று மேலும் அடிக்க... “அவ அம்மாவைப் பழி வாங்கத் தான் அப்டி செஞ்சேன்! தெரியாம பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சுடு!” என்று புலம்பினான்.

“என்ன டா சொல்ற?” என்று கேள்வி கேட்டவனிடம் முழு பதிலையும் கூறினான் அவன்.

சிறு வயதிலேயே வேளச்சேரியில் அருகருகிலிருந்த வீட்டில் ஒன்றாக வளர்ந்தனராம் ஷண்முகமும்,சுந்தரியும். பதின் வயதைக் கடந்த பிறகு, பேருக்கேற்றார் போல் சுந்தரியாகவே இருந்த சுந்தரி மீது தீராக் காதல் கொண்டானாம் இந்த ஜிப்பா. இவன் அந்த வயதிலிருந்தேப் பெண்கள் விசயத்தில் ஒரு மாதிரியென்பதால் இவனிடமிருந்து ஒதுங்கியே இருந்த சுந்தரி மீது அவனுக்கு ஒரு வெறியே இருந்து வந்ததாம். அச்சூழ்நிலையில் அவர்களது வீட்டருகேப் புதிதாகக் குடி வந்த சுந்தரநாதனுடன் பழக்கம் ஏற்பட்டு சுந்தரி அவரையேத் திருமணம் செய்து கொள்ள.. ஷண்முகத்தின் காதல் ஆசையில் விழுந்தது ஒரு பெரிய அடி.

அவர்கள் அங்கே குடியிருந்த வரைப் பல தொல்லைகளைப் புரிந்து வந்தவன், அதன் பின்பு அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன பிறகு, சுந்தரி கண்ணில் படாமல் போன பிறகு, இவ்வுலகையே வெறுத்தான். அவளையே எண்ணி... வாழ்க்கையில் திருமணமென்ற ஒன்றை செய்து கொள்ளாமல் தவிர்த்தான். மதுவும்,மாதுவுமாகக் கேடு கெட்டுத் திரிந்தவன் ‘மாமா’ தொழிலை எடுத்து நடத்தத் தொடங்கினான்.

எதேச்சையாக மீண்டும் அவன் வேளச்சேரியில் குடியிருக்கும் சுந்தரியைக் கண்ட போது அவள் கணவனற்ற நிலையிலிருந்தாள் கூடவே ஒரு அழகான பெண்ணை மகளாகவும் பெற்றிருந்தாள். அவன் தனது பழைய ஆசையைப் புதுப்பித்துக் கொள்ள நினைத்த போது, அவள் கூடவே இருந்த சரோஜா.. அவனை விளக்குமாற்றால் அடித்துத் துவைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்.

அடி வாங்கியக் கோபத்தில்.. இருவரையும் பழிவாங்க விரும்பி சுந்தரியின் மகளான ஜமுனாவைப் பின் தொடர்ந்து, அவளது புகைப்படம் ஒன்றை ஐட்டம் லிஸ்ட்டுடன் இணைத்து ஊரில் உலவ விட்டு தாய்க்கும்,மகளுக்கும் குடைச்சலைக் கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தான்.

அவனிடமிருந்த அவளது புகைப்படத்தின் முதலும்,கடைசியுமான காப்பி வெற்றியின் வீட்டு ஷெல்ஃபில் குடிபுகுந்தது.

அன்று வெற்றியுடன் அவன் வம்பு செய்ததில், அவன் அந்த வாரக் கடைசியில்.. ஷண்முகம் தொழில் நடத்தும் கற்பகம் லாட்ஜில் போலீஸ் ரைட்-க்கு ஏற்பாடு செய்திருந்த படியால்.. அதன் பின்பு அவன் தொழில் பற்றியத் தலைவலியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டதில் சுந்தரியையும்,ஜமுனாவையும் பற்றிச் சுத்தமாக மறந்து போனான்.

அதன் பின்பு போலீஸில் சிக்கி 4,5 மாதங்கள் சிறையில் கழித்து விட்டுத் திரும்பி வந்தவனுக்கு ஜமுனா, வெற்றியிருக்கும் ஏரியாவில் குடிபெயர்ந்திருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்திருந்தது.

காறித் துப்புமளவிற்கிருந்த ஷண்முகத்தின் காதல் கதையைக் கேட்டு, கோபத்தில் அவன் செய்த காரியம் தன்னை எப்பேர்ப்பட்டச் சிக்கலில் மாட்டி விட்டிருப்பதை எண்ணி ஆத்திரம் கொண்டு “இப்பிடித் தான் நல்ல குடும்பத்துப் பொண்ணுங்க பேரைக் கெடுப்பியா டா” எனக் கேட்டு அடுத்த ஆறு மாதத்திற்கு அவன் வெளியே நடமாட முடியாத படி அவனை அடித்துத் துவைத்தான் வெற்றி.

அவனை என்ன அடித்து என்ன பிரயோஜனம்! எல்லையற்ற அன்புடன் அவளை ஏகத்துக்கும் காதல் செய்தவன், நொடியில் தன் காதலைத் தெருக்கோடியில் நிறுத்தி... அவளைச் சாக்கடையில் தள்ளி.. கொண்ட காதல் அத்தனையையும் குப்பை மேட்டில் கொட்டியிருக்கிறான்! இனி அவள் முன்னே சென்று நின்று.. நேசத்தை யாசிக்கும் அருகதை அவனுக்கு இருக்கிறதா?,

ஷண்முகத்தை அடித்து அவன் செய்து வைத்தக் காரியத்துக்குத் தண்டனை கொடுத்து விட்டான்! ஆனால்.. இவன் அறிந்தே செய்த பெருந்தவறுக்கு யார் தண்டனையளிப்பது!

ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த ஷண்முகத்தின் அருகிலேயேத் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்த வெற்றிக்குக் கண்ணீர் பெருகியது.

பின்னிருந்த சுவற்றில் பின் தலையை இடித்துக் கொண்டு... சத்தமில்லாமல் கண்ணீர் விட்டவனைக் கண்ட ஷண்முகம் கண்டிப்பாக மனதில் நினைத்திருப்பான் ‘பொரட்டி எடுத்தது என்னை! ஆனா... கம்னாட்டி இவன் ஏன் கண்ணீர் வுட்றான்!’.

ஆயிற்று! இத்தோடுப் பத்து நாட்களாயிற்று சுந்தரியம்மாள் இந்தப் பூவுலகை விட்டு நீங்கி! அன்று அவளைக் கண்டதோடு சரி! அதன் பின்பு ஜமுனா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.

கதிரின் குடும்பம் வெளியூரிலிருந்துத் திரும்பி விட்டதால், கதிரின் அம்மா வள்ளி தான் அவளுக்கு மூன்று வேளை சாப்பாடு கொடுத்துக் கவனித்துக் கொள்வதாக கதிர் கூறினான். எந்நேரமும் அன்னையின் படத்தின் முன்பு அமர்ந்து அவள் அழுது கொண்டே இருப்பதாகவும்,சரியாகச் சாப்பிடுவது,தூங்குவது கூட இல்லையென்றும் செல்வி கூறினாள்.

அவள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்து.. அவள் முகத்தைப் பார்த்து ஆறுதல் சொல்ல மனம் அநியாயத்திற்கு அடித்துக் கொண்டது. ஆனால்... மிகவும் பயமாக இருந்தது அவனுக்கு. இனி வாழ்நாளில் என் முகத்திலேயே முழித்து விடாதே, போ என அவனை விரட்டியடித்து விட்டாளானால்.. அதன் பின் அவளுடனான உறவென்பதே இல்லாமல் போய் விடுமோ என்றெண்ணிப் பயந்தான்.

டீக்கடை பெஞ்சில் அமர்ந்தபடி அவள் வீட்டை ஏக்கமும்,துக்கமுமாகப் பார்த்தே கழிப்பவனைக் கண்டு யோசனையில் ஆழ்ந்தான் கதிர்.

அவனுடன் சரியாகப் பேசுவதில்லை! சுந்தரியம்மாளின் கடைசி நிமிடங்களில் இவனும் அருகிலிருந்ததாக அக்கம்,பக்கத்தார் கூறியதைக் கேட்ட போது... இவன் எதற்காக அங்கே சென்றான் என்று யோசித்தான். அவன் எத்தனையோ முறை என்ன நடந்ததென்று நச்சரித்துப் பார்த்தும் கூட வெற்றி வாயே திறக்கவில்லை. மீண்டும் தாடியும்,சிவந்த விழிகளுமாகச் சுற்றியவனைப் பார்க்கச் சகிக்காமல்.. என்ன செய்வதென்றும் புரியாமல் நண்பனுடனே அலைந்தான் கதிர்.

அன்று மாலை ஐந்து மணியிருக்கும்! டீக்கடை பெஞ்சிலேயே தலை வைத்துப் படுத்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் வெற்றி.

“டேய்..... டேய்... நண்பா....” – அவனைத் தட்டி எழுப்பினான் கதிர்.

“டேய்.... டீச்சர் வெளியே வந்திருக்கு டா. எந்திரி டா”

கதிரின் பரபரப்புத் தனக்கும் தொற்றிக் கொள்ள.. அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் வெற்றி. சாம்பலும்,கருப்பும் கலந்த சுடிதாரில் கலையிழந்த முகத்துடன்... ரோபோ போல்.. நேரே பார்த்தபடி எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தாள் அவள்.

நெற்றியில் பொட்டில்லை, காது,கழுத்தில் அணிகலன்கள் இல்லை! ஒளியிழந்த பார்வையும்,உருக்குலைந்த தேகமுமாய்.. பத்து நாட்களில் பாதியாகி வெளி வந்தவளைக் கண்டவனுக்கு நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.

விறுவிறுவென எழுந்தவன்.. அவளைப் பின் தொடர்ந்துத் தானும் நடந்தான்.

நான்கடி இடைவெளியில் முன்னே சென்று கொண்டிருந்தவள்.. மனதின் வலிகளை நடந்தே தீர்க்க எண்ணினாலோ என்னவோ.. ஐந்து கி.மீ தூரத்தை அசால்ட்டாகக் கடந்திருந்தவள், கால்கள் ஓய்ந்து போய்.. அருகிலிருந்த பார்க் பெஞ்சில் பொத்தென அமர்ந்தாள்.

முழுதாக இருட்டியிருந்த மாலை வேளையில்.. பார்க்கிலிருந்த ஆட்களின் எண்ணிக்கைக் கம்மியாகியிருக்க.. எதிரேயிருந்த நீரூற்றைப் பார்த்தவண்ணம்... சிலையாய் அமர்ந்திருந்தாள்.

சற்று நேரம் அவளையே பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தவன் பின் மெல்ல நடந்து அவளருகே சென்று.. அவள் அமர்ந்திருந்த பெஞ்சின் மறுகோடியில் தானும் அமர்ந்தான்.

அவளுக்குத் தெரியும்! அவன் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறான் என்பது! டீக்கடையைக் கடந்த போதே ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது. அவன் தன்னைக் கண்டதும் பின்னே வருவானென்று!ஆனாலும் நீரூற்றிலிருந்துப் பார்வையைத் திருப்பாது சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“இப்போ ஏன் வந்திருக்க வெற்றி?” – ஜமுனா.

எவ்வித உணர்ச்சிகளுமின்றி ரோபோ குரலில் தன்னிடம் கேள்வி கேட்டவளின் புறம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவன்.

எப்படியும் காயப்படுத்தப் போகிறாள்! குண்டு துளைக்கப் போகிறதோ! அல்லது கத்தி நுழையப் போகிறதோ! வலி நிச்சயம்!

பதில் கூறாமல் நேர் வெறித்தபடி அமைதியாக அமர்ந்திருப்பவனை உணர்ந்துத் தானே பேசினாள் ஜமுனா.

“ஒரு நைட்க்கு எவ்ளோ வாங்குவேன்னு கேட்க வந்திருக்கியா?”

அவள் கூறியதும் சட்டெனத் திரும்பி அவளை நோக்கினான். கை முஷ்டி இறுக, பெஞ்சைப் பற்றியவனுக்குத் தன் மீதே ஆத்திரம் எழுந்தது. மூச்சு வாங்க அமர்ந்திருந்தப்பவனைத் திரும்பியும் பாராமல்..

“கேட்கப் பிடிக்கல. ஆனாலும்.. தெரிஞ்சுக்க விரும்புறேன். அன்னிக்கு ஏன் அப்டி சொன்ன?, ஃபோட்டோன்ன?, பரத்தைன்ன?, ஷண்முகம்ன்ன?, எத்தனை தொழில் பண்றேன்னு கேட்ட!, ஏன் அப்பிடிக் கேட்ட?, எது அப்டி உன்னை பேச வைச்சது?” – என்று வினவினாள்.

இப்போதும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

“ஓ!, இதுக்குண்டான பதிலைத் தெரிஞ்சுக்கக் கூட நான் தகுதியில்லாதவளா?”

“இல்ல!” – சட்டெனக் கூறியவன்.. “உன் கிட்ட உட்கார்ந்து சரிக்குச் சமமா பேசக் கொஞ்சமும் தகுதியில்லாதவன் நான் தான்” என்று விட்டு முழுக் கதையையும் கூறினான்.

“ஷண்முகம்ன்னா யாருன்னே எனக்குத் தெரியாது. நான் பார்த்ததுக் கூட இல்ல”

“எனக்குத் தெரியும். நீ.. நீ எதுவுமே சொல்ல வேண்டாம்”

“அதான், எனக்கும் சேர்த்து நீ எல்லாமே சொல்லிட்டியே’

“..........”

“ஆமா, எதை வைச்சு நான் அந்தத் தொழில் பண்றவ-ன்னு முடிவுக்கு வந்த?, அப்டி நான் உன்னை எத்தனை நைட்க்குக் கூப்ட்டேன்?”

“ஜமுனா....”

“இல்ல, எனக்குப் புரியல. எவனோ ஒருத்தன் வந்து என் ஃபோட்டோவைக் காட்டுனா.. அதை அப்படியே நம்பி, நான் அப்படிப்பட்டவளான்ற யோசனை கூட இல்லாம.. குருட்டுத்தனமாக் கோபப்படுவியா?”

“.................”

“நல்ல வேளை உங்கம்மா செத்துப் போச்சு! நீ இப்டி மூளை இருந்தும் மூடனா வளர்ந்து நிக்குறதைப் பார்க்குறதுக்கு, அது செத்துப் போனதே பெட்டர்”

முகம் இறுகத் தலை குனிந்து அமர்ந்திருந்தான் வெற்றி. அய்யோ! அம்மா இல்லாது போனாலே என்கிற நிலை மாறி, நல்ல வேளை அம்மா இல்லாது போனாள் என்று நினைக்க வைத்து விட்டாள்! இன்னும் எதற்கு இந்த மானங்கெட்ட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான் அவன்!

அவள் துப்பாக்கியையோ,கத்தியையோக் கையில் எடுக்கவில்லை! ஊசி கொண்டு கொஞ்சம்,கொஞ்சமாய்க் குத்தியே நரக வேதனைக்கு உள்ளாக்குகிறாள்.

அன்னை போன துக்கத்தில் மட்டுப்பட்டிருந்த அவன் மீதான அவளது கோபம், மீண்டும் அசுர வேகத்தில் முன்னே வர.. கோபத்தில் சிவந்து போன முகத்துடன் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.

“நான் உன் கிட்ட மன்னிப்புக் கேட்கப் பின்னாடி வரல” – மெல்லிய குரலில் வெற்றி.

“அதுக்கானத் தகுதியும் உனக்கு இல்ல” – வெடுக்கென்ற பதிலுடன் ஜமுனா.

“தெரியும்”

“அப்டின்னா... எழுந்து போ இங்கேயிருந்து.”

“மாட்டேன்”

“ஒரு காலத்துல என் கஷ்டத்தையெல்லாம் மறக்கடிச்சு நீ என்னை சிரிக்க வைக்குறன்னு ஒரு நினைப்பு வைச்சிருந்தேன்! அப்போ தெரியல எனக்கு! இப்டி ஒரேடியா அழ வைக்கத் தான் நீ என் வாழ்க்கைல வந்திருக்கன்னு”

“.......................”

“எழுந்து போ வெற்றி”

“போறேன்! அதுக்கு முன்னாடி உன் கிட்ட சொல்லனும்ன்னு நினைச்ச எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிட்றேன்! அதுக்கப்புறம், என்னிக்குமே உன் கண்ணு முன்னாடி வர மாட்டேன்”

“....................”

“சுந்தரியம்மாவையே நினைச்சு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்காத! மறுபடி வேலைக்குப் போ! வெளி உலகத்துக்கு வா...!”

“..............”

“உனக்குன்னு ஒரு வாழ்க்கையிருக்கு! அப்டி,இப்டின்னு நான் டையலாக் பேசப் போறதில்ல! ஆனா.. சாவுன்னு ஒன்னு வந்து இதயம் துடிக்கிறது நின்னு போற வரைக்கும், நாம வாழ்நாளைக் கடந்து தான் ஆகனும்! அதுக்கு.. மூணு வேளை சோறு திங்கனும், பொழுது சாய்ஞ்சா தூங்கி எந்திரிக்கனும்! அம்மாவை இழந்துட்டோம்ன்றதுக்காக.. நாம சராசரி மனுஷங்கள்ல இருந்து எந்த விதத்துலயும் மாறுபடப் போறதில்ல! நமக்கு எந்த ஸ்பெஷல் சலுகையும் இல்ல! சுத்துற பூமியோட சேர்ந்து நாமளும் சுத்தியாகனும்”

“...................”

“இனிமே எப்டி வாழ்க்கை இருக்கப் போகுதுன்னு யோசிக்காத! இது வரை எப்டி வந்தன்றதை மட்டும் மனசுல வை! நான் சொன்ன மாதிரி... சாவு தானாத் தேடி வர்ற வரைக்கும்... நல்ல படியா உயிர் வாழு!”

“.........................”

“ஜமுனா..........”

“...............”

“நான் சொன்னதைக் கேட்பியா?”

“..............”

“பதில் பேசு ப்ளீஸ்.......”

நீண்ட ஒரு நொடி அமைதிக்குப் பின்.... கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து நோக்கியவள்.... கோபமும்,அழுகையுமாய்....

“நீ என் கூட இருந்திருக்கனும். அட்லீஸ்ட் கூட இருக்கிற மாதிரி காட்டிக்கவாச்சும் செஞ்சிருக்கனும்!, எல்லாக் கஷ்டத்தையும் என்னைத் தனியா அனுபவிக்க விட்டு.. என் பார்வைல கூடப் படாம... ஒதுங்கி நின்னுட்ட!” எனக் கூறியவளின் கண்கள் அதுவரைத் தேக்கி வைத்திருந்தக் கண்ணீரை சரசரவென கன்னத்தில் இறக்க...

அவள் முகத்தைப் பார்க்கக் கூடத் தைரியமற்று உதட்டைக் கடித்தபடி நேர் வெறித்துக் கொண்டிருந்த வெற்றிக்குச் சத்தியமாகக் குற்ற உணர்வு கூறு போட்டது.

இரண்டடி இடைவெளியில் தள்ளி அமர்ந்திருப்பவளை அள்ளி அணைத்துக் கொண்டு... தனக்குள்ளே பத்திரமாகப் புதைத்துக் கொள்ளும் வேகம் பிறக்க... சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவன்...

“நீ தான போ-ன்னு சொன்ன?” என்றான் மெல்லிய குரலில்.

“போ-ன்னு சொன்னா போயிடுவியா?, நீ என் பின்னாடியே சுத்தித் திரிஞ்சப்ப போ,போன்னு விரட்டுனேனே! அப்போ-ல்லாம் போனயா?, இல்லை தான?”

“அப்போ நீ யாரோ ஒரு ஜமுனா. இப்போ நீ வெற்றியோட ஜமுனா.

“ஆமாமா! அதான் ***** பட்டம் கொடுத்து கழுத்தை நெரிக்க வந்த”

பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு.. அவளது அழுகைக் குரலே மிகப் பெரிய தண்டனையாகத் தெரிந்தது. அவள் சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரும், தன் முட்டாள்தனத்தின் வீரியத்தை எடுத்துச் சொல்லி... அவன் உயிரைக் கிழித்துத் தொங்க விட்டது.

வெகு நேரம் அழுதபடி அமர்ந்திருந்தவளைக் காணச் சகிக்காது.. விறுவிறுவென எழுந்தவன், அவள் குரல் கேட்காத தூரம் தள்ளி நின்றான்.

அழுது ஓய்ந்து மூக்கை உறிஞ்சியபடி அமர்ந்திருந்தவளின் அருகே வந்தவன்...

“வீட்டுக்குப் போகலாமா?” என்று வினவினான்.

“எனக்குத் தெரியும். நீ போ இங்கேயிருந்து”

“கைல காசு இல்லாம எப்டிப் போவ?. மறுபடி 5 கி.மீ நடக்கப் போறியா?, ஒழுங்கா வா என் கூட”

“இனி என் முகத்துல முழிக்க மாட்டேன்னு சொன்ன தான?, போ இங்கயிருந்து”

“உன்னை வீட்ல விட்டுட்டுப் போயிட்றேன். அதுக்கப்புறம் உன் முன்னாடி வர மாட்டேன்”

“நான் வரல. நீ போ”

-விடாது மாறி,மாறி இருவரும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது பார்க்கின் வெளியே சர,சரவென நான்கைந்து தடியன்கள் கையில் கத்தி,அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓடுவது தெரிந்தது.

சுற்றியிருந்த மக்களனைவரும் ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓட..... அந்தத் தடியன்களிடமிருந்துத் தப்பிக்க நினைத்து... உயிருக்குப் பயந்து முன்னே ஓடிக் கொண்டிருந்த ஒருவனை நான்கே எட்டில் வளைத்துப் பிடித்து சரமாரியாக வெட்டிப் போட்டனர்.

கண் முன்னே நடந்தேறியக் கொடூரத்தைக் கண்டு வெற்றியும்,ஜமுனாவும் உறைந்து போய் நிற்க... பார்க்கின் செக்யூரிட்டி இவர்களருகே அவசரமாய் வந்து.. பார்க்கை மூடப் போவதாகவும் உடனே இடத்தைக் காலி செய்யுமாறும் விரட்டினார்,

வெட்டிய ஐவரும் நிமிடத்தில் சுமோ ஒன்றில் சிட்டாய்ப் பறந்திருக்க.. வெட்டு பட்டவனோ.. இரத்த வெள்ளத்தில் அநாதையாய் நடு ரோட்டில்.. நாதியற்றுக் கிடந்தான்.

சற்று நேரத்திலேயே இறந்து கிடந்தவனைச் சுற்றிக் கூட்டம் கூடி விட.. தானும் அருகே செல்ல விழைந்த வெற்றியின் கையை இறுகப் பற்றி “போ....போகாத.. போகாத, எனக்குப் பயமாயிருக்கு” எனக் கூறித் தடுத்தாள் ஜமுனா.

“இரு டி! அந்தப் பையனுக்கு என்னாச்சுன்னு பார்த்துட்டு வர்றேன்! ஆம்புலன்சைக் கூப்பிடாம.. கூட்டம் கூடி என்ன பண்றானுங்க” என்றவன் தனது செல்ஃபோனில் உடனே ஆம்புலன்சை அழைத்தான்.

“நாம போயிடலாம் வெற்றி, ப்ளீஸ்.. வா... வா போலாம்” – விடாது நச்சரித்தவளின் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு மனம் மாறிய வெற்றி தூரத்தில் ஒலித்த ஆம்புலன்சின் சைரன்-ஐக் கேட்டு... “சரி, வா போகலாம்” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு முன்னே நடந்தான்.

போவோர்,வருவோர் அத்தனை பேரும் கண் முன்னே நடந்தேறிய பயங்கரத்தை எண்ணி அதிர்ச்சி மாறாமல் அதைப் பற்றியே பேசிக் கொண்டு செல்ல.. வெற்றியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு நடந்த ஜமுனாவிற்கோ... உடல் முழுதும் பயத்தில் வெட,வெடக்கத் துவங்கியது.

அவள் நடுங்குவதைக் கண்டவன் விரைவில் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று விட எண்ணி.. குறுக்குப் பாதையொன்றில் அவளை அழைத்துச் சென்றான்.

மங்கிய விளக்கொளியில் ஆள் அரவமற்றிருந்த அந்தத் தெருவில் இருவரும் நடந்து கொண்டிருந்த வேளை... இடது புறமிருந்தக் குப்பைத் தொட்டியின் பின்னே மெல்லிய முனகல் சத்தம் வந்தது.

ஒருமுறை நின்று ஒருவரையொருவர் நோக்கிக் கொண்ட இருவரும் தொடர்ந்து நடக்க.. அந்த முனகல் சத்தம் சற்று அதிகமாகக் கேட்டது இப்போது.

ஏற்கனவே பயத்தில் வெளிறிப் போயிருந்த ஜமுனா, சத்தம் எங்கிருந்து வருகிறதென்பதைக் காண நகர்ந்த வெற்றியின் கையை மேலும் இறுகப் பற்றி “எ...எங்க போற?” என்றாள்.

“குப்பத் தொட்டிக் கிட்டயிருந்து ஏதோ சத்தம் வருதுடி! என்னன்னு பார்த்துட்டு வரேன்"

“வே..வேணாம், வேணாம்! நாம முதல்ல வீட்டுக்குப் போலாம் டா” – அவள் கெஞ்சிக் கொண்டிருந்த வேளை சத்தம் அதிகமாக... “ப்ச்” என்றபடி அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொட்டியின் அருகே சென்றான்.

அருகே செல்லச் செல்ல.. அந்த மங்கிய விளக்கு சிந்திய ஒளியில்.. தொட்டியின் பின்னே தெரிந்த ஒரு பெண்ணின் கால்களைக் கண்டு திடுக்கிட்டு.. மேலும் அருகே விரைந்தனர் இருவரும்.

நெஞ்சிலும்,வயிற்றிலும் கத்திக் குத்துப் பட்டு முகம் மற்றும் உடல் முழுக்க ரத்த வெள்ளத்தில் பாதி உயிருடன்.. தனது இறுதி நிமிடத்தை எண்ணிக் கொண்டிருந்தப் பெண்ணின் கைகள் தன்னருகே ஒரு சிற்றுயிரை இறுக அணைத்துப் பிடித்திருந்தது.

முகம் முழுதும் ரத்தக்கறையுடன் முனகிய அப்பெண்ணைக் கண்டதும் ‘வீல்’ எனக் கத்தப் போன ஜமுனாவின் வாயை இறுகப் பற்றி மூடினான் வெற்றி.

பயத்தில் கிடுகிடுவென நடுங்கிய ஜமுனா அவன் தோளை இறுகப் பற்றி அவனோடு ஒன்ற... பாக்கெட்டுக்குள் கை விட்டு தன் செல்ஃபோனை எடுத்தவன், டார்ச்-ஐ ஆன் செய்து.. அந்தப் பெண்ணின் மீது வெளிச்சத்தைப் பரப்பினான்.

உடல் முழுக்க சரமாரியாகக் கத்திக் குத்துப் பட்டிருந்தது. வெற்றியின் செல்ஃபோன் வெளிச்சத்தைக் கொடுத்ததும் ஜமுனா முதலில் நோக்கியது அந்தப் பெண்ணின் கைக்கு அடியில் கிடந்த குழந்தையைத் தான்.

“வெ...வெற்றி.... கு..குழந்தை வெற்றி...” என்றவள் சட்டெனக் குனிந்துக் குழந்தையைத் தன் கையில் ஏந்திக் கொண்டாள்.

மயக்கமோ.. தூக்கமோ... கண் மூடிக் கிடந்தக் குழந்தையைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருந்தத் துணியைப் படபடவென நீக்கியவள், குழந்தைக்கு ஏதும் அடிபட்டிருக்கிறதாவென ஆராய.. சின்னக் காயம் கூட இன்றி.. அது அத்தனை பாதுகாப்பாய்த் தன் அன்னையால் காப்பாற்றப் பட்டிருந்தது.

“கு..குழந்தை மேல எந்தக் காயமும் இல்ல வெற்றி” – என்று ஜமுனா கூறுகையில் வெற்றி, அந்தப் பெண்ணைக் குப்பையிலிருந்து நிமிர்த்தி... அருகிலிருந்து சுவற்றில் சாய்வாக அமர வைத்திருந்தான்.

இழுத்துக் கொண்டிருந்தத் தொண்டையுடன் இருவரையும் நோக்கிய அந்தப் பெண் தன் குழந்தையைக் கைக் காட்டி ஏதோ சொல்ல முயன்றாள்.

“ரி....ரிலேக்ஸ்.... உங்களுக்கு ஒன்னும் ஆகாது. எப்படியாவது நாங்கக் காப்பாத்திடுவோம், ஜமுனா... என் செல்ஃபோன்ல ஆம்புலன்சுக்குக் கால் பண்ணு” – வெற்றிக் கத்திக் கொண்டிருக்கையில் தன் தோளைப் பற்றியிருந்த அவன் கையை இறுகப் பற்றிய அப்பெண், மறுத்துத் தலையசைத்து.. தன் உயிர் பலம் அத்தனையையும் திரட்டி...

“எ...எப்படியாவது எ...என் குழந்தையைக் காப்பாத்துங்க... என் குழந்தை உயிரோட இருக்கனும்.. எ..எப்படியாவது காப்பாத்துங்க!” என்று கெஞ்சினாள்.

“உங்கக் குழந்தையோடு சேர்ந்து.. உங்களையும் காப்பாத்துவோம், நீங்க இப்போ அதிகமா பேச வேண்டாம்” என்ற வெற்றி “ஜமுனா... கால் பண்ணு” என்று கத்தினான்.

ஒரு கையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு, நடுங்கிய கரங்களால் கஷ்டப்பட்டு அவன் செல்ஃபோனில் அவள் ஆம்புலன்சை அழைக்க முயல.. இருவரையும் தடுத்த அப்பெண்..

“நா.....ன்.... நான் உயிரோட இருக்க மாட்டேன்! எப்படியாவது என் குழந்தையைத் தூக்கிட்டு நீங்க இங்க இருந்துப் போயிடுங்க... எங்களைத் தேடி நிறைய பேர் சுத்துறாங்க.. என் குழந்தை அவங்கக் கைல மாட்டுனா.. கொன்னுப் போட்டுடுவாங்க.. போலீஸ் கிட்டப் போக வேண்டாம்.. எ..எங்கயாவது.. தூ..தூ...தூரமா... ஏ..ஏதாவது ஒரு ஆஸ்ரமத்துலக் குழந்தையை சேர்த்துடுங்க... என்.. என் குழந்தையைப் பத்தின விவரம்.. யா..யாருக்கும் தெரிய வேணாம்... ப்ளீஸ்....” – மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு... இழுத்துக் கொண்டிருக்கும் தொண்டைக்கு நடுவில்.. அந்தப் பெண் கூறியதைக் கேட்டு அதிர்ந்து நடுங்கிப் போயினர் இருவரும்.

“நாங்கக் கண்டிப்பா உங்கக் குழந்தையைக் காப்பாத்துறோம்! அதுக்கு முன்னாடி உங்களைக் காப்பாத்தியாகனும்!” – எனப் பேச முனைந்த வெற்றியை மீண்டும் தடுத்து... “த..தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேளுங்க... நா..நான் ரொம்ப நேரம் உயிரோட இருக்க மாட்டேன்.. என் குழந்தையைத் தூக்கிட்டு சீக்கிரம் இங்க இருந்து போங்க.. எங்களைத் தேடிட்டு இருக்கிற ஆளுங்க கண்ணுல பட்டா.. அவங்க என் குழந்தையைக் கொன்னுடுவாங்க!... சீக்கிரம் இங்கயிருந்துப் போங்க.. என் குழந்தையை நீங்க பாதுகாப்பான இடத்துல சேர்த்துடுவீங்கன்னு நா..நான் நம்புறேன்” என்றவள் பெரிதாகத் தொண்டை இழுத்து.. கண் சொருகி.. மயங்கி விழ...

“வெற்றி... வா.. வெற்றி.. போகலாம்.. அந்தப் பொண்ணு அவ்ளோ சொல்லுதில்லையா?, குழந்தையைக் காப்பாத்தியாகனும். வா வெற்றி...” என்று பதறினாள் ஜமுனா.

“போ.......போங்க..” என்று அந்தப் பெண் வெற்றியின் கையைப் பற்றித் தள்ள.. தூரத்தில் எங்கோ ஒலித்த கார் ஹார்ன் சத்தத்தில்... பயந்து... வெற்றியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு.. விறுவிறுவென முன்னே நடந்தாள் ஜமுனா. அந்தப் பெண்ணை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவள் இழுத்த இழுப்புக்குக் கூட நடந்தான் வெற்றி.

பத்து நாட்களுக்கு முன்பு அன்னையை இதே நிலையில் கண்டிருந்த ஜமுனாவிற்கு, மீண்டும் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பெண்ணைக் காண நேர்ந்ததும், அழுகை பொங்கியது. சென்று விட்ட உயிரையும், சென்று கொண்டிருக்கும் உயிரையும், கையிலிருக்கும் உயிரையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது. மனித வாழ்க்கை இத்தனைத் துயரங்கள் நிறைந்ததா?

அவள் எதை,எதையோ நினைத்துக் கண்ணீர் விட்ட படி நடக்க, வெற்றியின் மூளையோ பரபரவென வேலை செய்து கொண்டிருந்தது. பார்க்கின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டவனுக்கும், இந்தப் பெண்ணுக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது. இருவரையும் கொன்றது ஒரே கூட்டமாகத் தான் இருக்க வேண்டும்!, அப்படியிருக்கும் பட்சத்தில்.. இக்குழந்தையைத் தேடி அக்கூட்டம் நிச்சயம் இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கும். எப்படியேனும் அவர்கள் கண்ணில் படாமல் குழந்தையைக் காப்பாற்றியாக வேண்டும்.

யோசனையின் நடுவே இருவரும் பஸ் ஸ்டாப்-ஐ எட்டியிருக்க... கூட்டமாய் வந்த பஸ் ஒன்றில் ஜமுனாவை முன் ஏற்றி விட்டுத் தானும் ஏறினான் வெற்றி.

“இது நம்ம ஏரியாக்குப் போற பஸ் கிடையாதே” – ஜமுனா.

“குழந்தையோட வீட்டுக்குப் போனா.. அநாவசியமா எல்லாரும் கேட்குறக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம். முதல்ல நீ உட்காரு” – என்றவன் ஒரு சீட்-ஐ பிடித்து அவளை அமரச் செய்தான்.

அதுவரைக் கண் மூடியிருந்தக் குழந்தைத் திடீரென சிணுங்கத் தொடங்க... குழந்தையைச் சுற்றியிருந்தத் துணியினுள் இருந்த பால் பாட்டிலை எடுத்து அதன் வாயில் வைத்தாள்.

வெகுவாக ஆறிப் போயிருந்த அந்தப் பால், எப்படியோ குழந்தையின் அழுகையைக் கொஞ்சம் குறைத்தது.

குழந்தையுடன் வீட்டிற்குச் செல்வதென்பது இயலாத காரியம். அக்கம்,பக்கத்தார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துவங்கினால்.. அது நிச்சயம் குழந்தையின் பாதுகாப்பை சோதிக்கும்.

அந்தப் பெண் அவ்வளவு கேட்டுக் கொண்டதால்.. போலீஸ் ஸ்டேஷன் செல்வதென்பதும் சாத்தியமற்ற ஒன்று. இந்நேரத்திற்கு எந்த ஆசிரமத்தைத் தேடிச் செல்வது! எப்படியேனும் இந்த இரவைக் குழந்தையுடன் பாதுகாப்பாகக் கடத்தியாக வேண்டும்.

சட்டென யோசனை தோன்ற தன் செல்ஃபோனிலிருந்துப் பாண்டியனுக்கு அழைத்தான் வெற்றி.

“பாண்டியன் சார்”

“சொல்லு வெற்றி”

“நீங்க ஃபேமிலியோட இன்னிக்கு திருப்பதி போறதா சொன்னீங்கள்லயா?”

“ஆமாப்பா! ஆன் த வே! ஏன் கேட்குற? லட்டு வேணுமா?”

“சார்.. எனக்கு ஒரு ஹெல்ப்”

“சொல்லு வெற்றி”

“தெரிஞ்ச பொண்ணு ஒருத்தவங்க நைட் தங்க இடம் வேணும். கைல குழந்தை வேற இருக்கு. என் வீட்டுக்குக் கூட்டிப் போக முடியாத சூழ்நிலை. நா..நான் உங்க வீட்ல தங்க வைக்கலாமா?”

“தெரிஞ்ச பொண்ணு! கைல குழந்தை! வெற்றி.... என்னப்பா நடக்குது?”

“சார்...”

“சரி, சரி! எதுவும் கேட்கல. என் வீட்டு ஸ்பேர் கீ ஒன்னு மேல் வீட்டுல தங்கியிருக்கிறவங்கக் கிட்டக் கொடுத்திருப்பேன். அவங்கக் கிட்ட வாங்கிக்க”

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

“ம்ம், மேட்டர் என்னன்னு நான் நேர்ல வந்ததும் சொல்லு”

“ஓகே சார்” – என்றவன் ஃபோனை கட் செய்து.. அருகில் அமர்ந்திருந்த ஜமுனாவை நோக்கினான். அவள் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அதிக பட்சம் 4 மாதங்களிருக்கலாம். நல்ல நிறம்! நெற்றி,கன்னத்தில் கருப்பு மையுடன்.. அத்தனை அழகாயிருந்தது குழந்தை. என்ன விதியோ! பெருமூச்சுடன் ஜமுனாவின் தோளைத் தட்டினான் வெற்றி.

அன்றிரவு பாண்டியன் வீட்டில் அவளையும்,குழந்தையையும் தங்க வைக்கப் போவதாகவும், நாளை காலை சென்னையைக் கடந்து வேறு எங்கேனும் சென்று.. அங்கிருக்கும் ஆசிரமம் எதிலேனும் குழந்தையைச் சேர்த்து விடலாமென்றும் அவன் கூற.. பதிலின்றி சரியெனத் தலையாட்டியவள்.. மீண்டும் குழந்தையை நோக்கலானாள்.

மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு அவள் ஆளாகியிருப்பது அவள் முகத்திலிருந்தே தெரிந்தது. எத்தகைய நிகழ்விது! அடுத்தடுத்து அவர்கள் கண் முன்னே இரண்டு உயிர்கள் பறி போயிருக்கிறது. சற்றும் சம்பந்தமில்லாத இவர்களிருவரால் இந்தக் குழந்தைக் காப்பாற்றப்பட வேண்டுமென்பது தான் விதியா?

நினைவு வந்தவனாக சரோஜாவைப் பற்றி ஜமுனாவிடம் விசாரித்தான் வெற்றி. இரவு வெளியில் தங்குவதைப் பற்றி அவரிடம் என்ன கூறுவதென்று.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை, அவரது மகன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக அவள் கூறவும், சரியென்று தலையசைத்தான். அப்படியானால்... இப்போதைக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அக்கம்,பக்கத்தில் தங்கியிருப்போரை நாளை ஏதேனும் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!

பாண்டியனின் வீட்டில் அவர்களிருவரையும் தங்க வைத்த வெற்றி, குழந்தைக்குத் தேவையானவற்றை ஜமுனாவிடம் கேட்டு வாங்கி வந்து கொடுத்தான்.

அவளுக்கு குழந்தையைக் கவனித்துக் கொள்வது பழக்கமான ஒன்று தான்! ஆரம்ப காலத்தில் டே கேர்,ப்ளே ஸ்கூல் என அனைத்திலும் அவள் பணி புரிந்திருக்கிறாள். ஆனால், இத்தனை சிறிய குழந்தையைக் கவனிப்பது இது தான் முதல் முறை.

பழக்கமற்றக் கைகள் ஏந்திக் கொண்டிருப்பதில்... பயந்து.. அன்னையின் ஸ்பரிசம் வேண்டி அழுது தீர்த்தக் குழந்தையைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிப் போயினர் இருவரும். இரவு முழுதும் உறங்காமல் விழித்திருந்து... ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துச் சமாதானப்படுத்தி.. எப்படியோ உறங்க வைத்தனர்.

அதிகாலையில் குழந்தையோடு சேர்ந்து கண்ணசைந்து விட்ட ஜமுனாவைக் கண்டு விட்டு... வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றான் வெற்றி.

அவசர,அவசரமாக நியூஸ் பேப்பரைக் கையில் வாங்கியவன் பரபரவென நேற்றைய சம்பவம் பற்றி வந்த செய்தியைத் தேடினான்.

அவன் யூகித்தது சரி தான்! கொல்லப்பட்ட இருவரும் கணவன்-மனைவி. மேல்ஜாதிப் பெண் கீழ் ஜாதிப் பையனைக் காதலித்ததால் நடந்த ஆணவப் படுகொலை.

இருவரும் திருமணம் செய்து கொண்டு.. குழந்தையும் பெற்றுக் கொண்டு.. ஒளிந்து மறைந்து வாழ்ந்து இத்தனை நாட்களைக் கடத்தியிருந்த நிலையில்.. இருவரும் சென்னையில் வசிப்பதை எப்படியோ கண்டுபிடித்து.. பெண்ணின் தந்தை, தான் பெற்ற மகளென்றும் பாராமல்.. நடு ரோட்டில் வைத்து இருவரையும் ஓட,ஓட வெட்டிக் கொலை செய்திருக்கிறான்.

அடங்காத ஆத்திரத்துடன் பேப்பரைக் கீழே எறிந்தான் வெற்றி.

இது போன்ற ஜீவன்களையெல்லாம் மனித ஜென்மத்திற்குக் கீழ் கொண்டு வர முடியுமா என்ன?, மிருகத்தோடுக் கூட ஒப்பிடக் கூடாது. காட்டு விலங்குகள் இரைக்காக மட்டுமே மற்றொரு உயிரைக் கொல்லும். அது நியதி. ஆனால்.. இவர்கள்.. ஜாதி,மதம் என்கிற பெயரில் மனிதனை,மனிதனே கொன்று குவித்து... ச்சை!

பெற்றுப் பெயர் வைத்து... பாராட்டி,சீராட்டி வளர்ப்பதெல்லாம்.. நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொல்லத் தானா?, எங்கோ மூலையில்.. குப்பைத் தொட்டியின் பின்னே உயிர் துறக்கத் தானா?, அப்படியென்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறது? அப்படி கௌரவத்தைக் காப்பாற்றி வைத்து எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

இது போன்ற ஜென்மங்களெல்லாம்... சிறுநீரைத் தண்ணீராகக் குடித்து, மலத்தை உணவாக உண்டு.. வாழும் காலம் முழுக்க சிறைபட்டு நாறி,ஊசிப் போய் சாக வேண்டும்! சராசரி மனிதனாய் இந்த அண்டத்தைச் சுற்றி வர.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமும் தகுதி கிடையாது! ராக்கெட்டில் ஏற்றி.. தனிக் கிரகத்திற்குப் பார்சல் செய்து விட வேண்டும்! கௌரவத்தைக் காப்பாற்றியபடி வேற்று கிரகத்திலேயே வாழ்ந்து முடியுங்களென்று!

எரிச்சலும்,கோபமுமாய் வீடு வந்து சேர்ந்தவன், கேள்வியாக நோக்கிய ஜமுனாவிடம்.. தன் கையிலிருந்தப் பேப்பரை நீட்டினான். அவளும் படித்து விட்டுத் தன் வாயில் வந்த அத்தனைக் கெட்ட வார்த்தைகளாலும் பொறுமித் தீர்த்தாள்.

அதன் பின் குழந்தைக்குப் பாட்டிலில் அவள் பால் புகட்ட.. ஆர்வத்துடன் அதைக் குடித்தபடி மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தது.

உறங்கும் குழந்தையைப் பார்த்தபடி இருவரும் முழுதாய் ஐந்து நிமிடத்தைக் கடத்தினர்.

“இப்போ என்ன பண்றது வெற்றி?” – நிமிர்ந்து அவன் முகம் பார்த்து வினவினாள் அவள்.

“தெரியல...”

“............”

“இப்போ போய் நாம குழந்தையை ஆசிரமத்துல விட்டாலும்.. அது எந்த அளவுக்குப் பாதுகாப்பா இருக்கும்ன்னு சொல்ல முடியல. கல்யாணமாகி ஒன்றரை வருஷம் கழிச்சுத் தேடி வந்து வெட்டியிருக்கான் அந்தப் பொண்ணோட அப்பன்! நிச்சயம் அவ புருஷன் வழியா வந்த கீழ் ஜாதி வாரிசைக் கொன்னு போடனும்ன்னு வெறியோட தான் சுத்திட்டிருப்பான்! அவன் முதல்ல தேடுறது சென்னையைச் சுத்தியிருக்கிற ஆஸ்ரமமாத் தான் இருக்கும். அதனால தான் சொல்றேன். ஆசிரமம் நல்ல ஆப்ஷன் கிடையாதுன்னு”

“அப்போ என்ன பண்றது?, போலீஸ் கிட்டயும் போக முடியாது”

“ம்ம்”

“என்ன செய்யப் போறோம் வெற்றி?”

பெருமூச்சுடன் நெற்றியைத் தேய்த்தவனின் விழிகளிரெண்டும் அநியாயத்திற்குச் சிவந்து போயிருந்தது.

“நீ கொஞ்ச நேரம் கூடத் தூங்கவேயில்லையா?”

இல்லையெனத் தலையை மட்டும் ஆட்டினான் அவன்.

இருவரும் மறுபடிக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பேசாம இந்தக் குழந்தையை நானே வளர்த்தா என்ன?” – பட்டெனக் கேட்ட ஜமுனாவை வியப்புடன் நோக்கினான் வெற்றி.

“ஏன் அப்படிப் பார்க்குற?”

“இல்ல. இதே யோசனை தான் இப்போ என் மனசுலயும் ஓடுச்சு. இந்தக் குழந்தை நம்மக் கிட்ட.. ஐ மீன்.. என் கிட்டயிருந்தாப் பாதுகாப்பா இருக்கும்ன்னு தோணுச்சு”

“ப்ச், உன்னால தனியா.. 4 மாசக் குழந்தையை வைச்சுப் பார்த்துக்க முடியுமா?, என்ன தெரியும் உனக்கு?, நேத்து நைட் பார்த்தேல?, எவ்ளோ கஷ்டப்பட்டோம்?”

“உன்னால மட்டும் தனியாப் பார்த்துக்க முடியுமா?”

“நான் சமாளிச்சுக்குவேன்”

“எப்படி சமாளிப்ப?, குழந்தை எப்படி வந்ததுன்னு கேட்டா.. என்ன சொல்லுவ?, குழந்தையை வைச்சுக்கிட்டு எப்படி வேலைக்குப் போவ?, எப்படி சம்பாதிப்ப?, எதை வைச்சுக் குழந்தையோட செலவைப் பார்த்துக்குவ?, சும்மா... யோசிக்காம லூசு மாதிரி பேசாத”

“இந்தக் கேள்வியெல்லாம்.. உனக்கும் சரிப்படும் தான?, உன் கிட்ட இதுக்கானப் பதில் இருக்கா?”

“.................” – யோசனையுடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான் அவன்.

“ப்ச், வெற்றி... ஒரு வகைல பார்த்தா.. இந்தக் குழந்தையோட நிலைமையும், என் நிலைமையும் ஒன்னு தான்! ரெண்டு பேருமே அம்மா,அப்பா இல்லாத அநாதைங்களா நிற்குறோம்!, எனக்கு என்னவோ.. நான் என் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ.. ஒரு பற்றுகோலா ஆண்டவன் இந்தக் குழந்தையை என் கிட்ட அனுப்பியிருக்கிறதாவே நம்புறேன்.. பெண் குழந்தை வேற! என் அம்மாவே எனக்குத் திருப்பிக் கிடைச்சிட்டதா நினைக்கிறேன்! ப்ளீஸ்... என் கிட்டக் கொடுத்துடு வெற்றி.. நான் எப்படியாவதுக் குழந்தையை வளர்த்துக்கிறேன்!”

“ம்ஹ்ம் இப்போ நீ எமோஷனல்-ஆ மட்டுமே யோசிக்கிற! ப்ராக்டிகல்-ஆ இதுல நிறைய பிரச்சனை இருக்கு. உங்கம்மா இறந்துட்ட நிலைல.. இன்னிக்கு உன் பாதுகாப்புக்கே உனக்கு ஒரு ஆள் தேவைப்படுது! இதுல.. நீ.. குழந்தையோட தனியா இருந்து.. அவளை வளர்க்குறது சாத்தியமில்ல. நீ கைக்குழந்தையோட நின்னா... உன்னைத் தான் ஊர் கேவலமா பேசும். இதுவே நான்-னா.. அவ்ளோ பேச்சுக் கேட்க வேண்டிய தேவை வராது.”

“ஏன் வராது?”

“ஏன்-னா நான் இந்தக் குழந்தையை என் குழந்தைன்னு சொல்லுவேன். யாருக்குப் பொறந்தது, அம்மா யாருன்னு கேள்வி கேட்குற ஆளுங்களை என்னால ஈசி-ஆ சமாளிச்சுட முடியும்! ஆனா... உனக்கு அப்டிக் கிடையாது. உன் நடத்தையையே கேள்விக் குறியாக்கி உன்னைக் காயப்படுத்துவாங்க! குழந்தை வளர்றதுக்கும் அமைதியான சூழலை உன்னால அமைச்சுக் கொடுக்க முடியாது”

“ப்ச், சரி! உன் லாஜிக் ஓகே தான்! ஆனா.. யார் நம்புவா? உன்னைச் சுற்றியிருக்கிற மத்தவங்களை விடு! இது உன் குழந்தைன்னு சொன்னா, கதிர் நம்புவானா?”

“நம்புறதென்ன?, அவன் கேள்வி கேட்குற அவசியம் கூட வராது. ஏன்-னா நான் இந்த ஊர்லயே இருக்கப் போறதில்ல” என்றவன் தொடர்ந்துத் தனக்கு வேலூரில் வேலை கிடைத்து விட்டதைப் பற்றித் தெரிவித்தான்.

“நீ என்னைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியையே நானும் கேக்குறேன்! வேலைக்கும் போயிட்டுக் குழந்தையையும் எப்படிப் பார்த்துக்குவ?,” - ஜமுனா

“குழந்தையைப் பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ண வேண்டியது தான்”

“ஓ! அது மட்டும் குழந்தை வளர அமைதியான சூழ்நிலையைக் கொடுக்குமா?, இது தான்... இது தான் குழந்தையைப் பெத்தவங்களுக்கும், அதை ஜஸ்ட் ஒரு பொறுப்பா நினைச்சு வளர்க்குறவங்களுக்கும் இருக்கிற வித்தியாசம்! நீ இதை ஒரு கடமையா பார்க்குற!, வெறும் பாலையும்,சோறையும் ஊட்டி வளர்த்தாப் போதுமா, அன்பு,பாசம்ன்றதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்க வேணாமா?”

“நான் குழந்தை மேல அன்பு காட்ட மாட்டேன்னு சொல்ல வர்றியா?, உனக்கு என் மேல எப்ப தான் நம்பிக்கை வரும்?”

“நம்பிக்கை வர்ற மாதிரி நீ என்ன பண்ணியிருக்க?”

“ப்ச்”

“குழந்தையைப் பத்திப் பேசும் போது, அவளைப் பத்தி மட்டும் பேசு! நம்ம விஷயம்ன்றது முடிஞ்சு போன ஒன்னு! அதைப் பத்தி நான் பேச விரும்பல”

“.............”

“முடிவா என்ன தான் சொல்ற?” – ஜமுனா.

“குழந்தையை உன் கிட்டக் கொடுத்து உன் வாழ்க்கையக் கேள்விக் குறியாக்க முடியாது ஜமுனா. நான் என் கூட குழந்தையை வேலூருக்குத் தூக்கிட்டுப் போறேன்”

“நான் சம்மதிக்க மாட்டேன்.”

“நீ சம்மதிக்கனும்னு இப்போ எந்த அவசியமுமில்ல”

“வெற்றி.. ஒரு ஆம்பள குழந்தையை வளர்க்குறதுக்கும், பொம்பள வளர்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு டா”

“................”

“அதுக்கு மிகச் சிறந்த உதாரணமா நீ நிற்குறியே!,”

“ஆமா! ஆம்பள எப்படி வளர்ப்பான்னு நல்லாத் தெரிஞ்சவன் தான் நான்!, அதனால தான் சொல்றேன்!, அம்மா,அப்பான்னு ரெண்டு பேரோட அன்பையும் சேர்த்து அந்தக் குழந்தை மேல காட்டி என்னால வளர்க்க முடியும்”

“நான் ஒத்துக்க மாட்டேன் டா”

“ஒத்துக்காத.. உன் சம்மதத்தை இங்க யாரும் கேட்கல” – அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே குழந்தை சிணுங்க.. வெற்றியை நோக்கிய ஜமுனா..

“பெருசா நானே வளர்ப்பேன்னு டயலாக் அடிச்சேல?, போ.. போய் பாட்டில்ல இருக்குற அந்தப் பாலைக் குழந்தைக்குக் கொடு” என்று கூறவும்.. சிறிது தயங்கியவன்.. பின் ரோஷத்துடன் பாட்டிலைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தையின் அருகே சென்றான்.

அவன் குழந்தையைப் பிடித்திருந்த விதமும், பாட்டிலைப் பற்றியிருந்த அழகும் பார்ப்பதற்கேக் கண்றாவியாக இருக்க.. ஒரு வாய்ப் பாலைக் கூடப் புகட்ட முடியாமல்.. அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தவும் முயலாமல்.. தடுமாறிப் போய் நின்றவனிடமிருந்துக் குழந்தையைப் பறித்துத் தானே புகட்டினாள்.

மடக்,மடக்கெனப் பாலைப் பருகும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “நீ எந்த லட்சணத்துல குழந்தையைப் பார்த்துக் கிழிக்கப் போறன்னு இப்பவே தெரிஞ்சுடுச்சு எனக்கு!” என்றாள் முறைப்புடன்.

“ஏய்ய்ய்.. இன்னாடி?, நான் என்ன இதுக்கு முன்னாடி பத்து,பதினைஞ்சு புள்ளைங்களையாப் பெத்து விட்ருக்கேன்?, சின்னக் குழந்தைங்களை தூர இருந்து பார்க்குறதோட சரி! பக்கத்துல போய் தொட்டுக் கூடப் பார்த்ததில்ல!”

“அப்புறம் ஏன் டா வீர வசனம் பேசுன?

“பின்ன?, உன் கைல குழந்தையைக் கொடுத்து உன் வாழ்க்கைய நாசம் பண்ணச் சொல்றியா?”

“இல்லேன்னாலும், என் வாழ்க்கை என்ன அவ்ளோ நல்லாவா போயிட்டிருக்கு?, ஆல்ரெடி நாறிப் போய்த் தான இருக்கு?”

“அப்டின்னா... என் கூட வாடி! ரெண்டு பேரும் சேர்ந்தே குழந்தையை வளர்க்கலாம்” – எரிச்சலும்,கோபமுமாக வாய்க்கு வந்ததைப் பட்டெனக் கூறி விட்டுப் பின்.. சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து.... அவசரமாக அவள் முகத்தில் பார்வயைப் பதித்து...

“ஏ..ஏ...ஏய்ய்ய்.. நா..நான் த...தப்பான அர்த்தத்துல சொல்லல. தெ..தெரியாம வாய்ல வந்துடுச்சு! மன்னிச்சுக்க” – திக்கித் தடுமாறி அவசரமாக மன்னிப்புக் கேட்டான்.

“.....................” – குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவள்.

“ஜமுனா.... சாரி.. அதான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன்ல?”

“...............”

“ஜமுனா......”

“ப்ச், பேசாம நாம ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தையை வளர்த்தா என்ன?”

“ம்??????????” – அநியாயத்திற்கு அதிர்ந்த நிலையில் வெற்றி.

“ஜஸ்ட் கார்டியன்ஸ்-ஆ?”

“.............”

“ஜோடி-ஆ இருந்துக் குழந்தையை வளர்த்தா.. அநாவசியமா எந்தக் கேள்வியும் வராது! குழந்தையும் பாதுகாப்போட இருக்கும்! பாலும்,சோறும் போட நீ இருக்க! அன்பும்,பாசமும் கொடுக்க நான் இருக்கேன்!”

“இ.....இன்னாடி சொல்ற?”

“இப்போதைக்கு நமக்கிருக்கிற ஒரே ஆப்ஷன் இது தான்! என்னால குழந்தையை விட முடியாது”

“என்னாலயும் தான்”

“நாம தனியாளா இருந்து வளர்த்தா.. ஏகப்பட்டப் பிரச்சனை வரும்”

“ஒன்னா இருந்தா... எல்லாம் சுலபமாயிடும்”

“அப்டின்னா.. நானும் உன்னோட வேலூருக்கு வர்றேன்” – தீர்மானம் செய்துவிட்டத் தீவிரமான முகபாவத்துடன் தன் விழிகளை நேராகப் பார்த்துத் தெளிவாய்க் கூறியவளை... அவன் இன்னதென்று புரியாத முகபாவத்துடன் நோக்கிக் கொண்டிருக்க.. நல்ல எதிர்காலம் அமையப் போகின்ற திருப்தியில்.. அவள் கைகளில் சொகுசாய்ப் படுத்திருந்தக் குழந்தை அழகாய்ச் சிரித்தது.

‘நம்மை யார் தான் கேட்பது.... விதி தானே சேர்ப்பது..

இந்தப் பாசம் பாவம் இல்லை! நேசம் மோசம் இல்லை..

கங்கை என்றும் காய்வது இல்லை...

இளஞ்சோலை பூத்ததா......................................................................