அத்தியாயம் - 6

ஐந்து வருடங்களுக்குப் பிறகு...

வேலூரின் பிரதான வீதியில் அமைந்துள்ள... இரண்டு படுக்கையறை கொண்ட அந்த ஒற்றை வீடு காலை நேர பரபரப்புடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என்ன தான்.. வருடங்கள் பல கடந்திருந்தாலும்.. வாழ்விலும், வயதிலும் பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும்.. இசையைப் பொருத்தமட்டிலும் வெற்றி,வெற்றி என்பவனின் ரசனை மட்டும் கொஞ்சமும் மாறவில்லை! ஏனெனில் இன்றும்.. அதே இளையராஜா அவன் வீட்டு டிவியில் முழுச் சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தார்.

‘என்னோடு பாட்டு பாடுங்கள்! எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்..

இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்....’

வீட்டிற்குள் நுழைந்ததும் இடது புறம் தெரிந்த சமையலறை வாசலில் சிறிய ‘சிலேட்’ ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதில் ‘இன்றைய மெனு’ என்கிற தலைப்புடன்..

ப்ரேக் ஃபாஸ்ட்: நெய் ரோஸ்ட்

லஞ்ச்: கார்ன் ரைஸ் வித் சாஸ் அண்ட் சாலட் – என்று எழுதப்பட்டிருக்க.. சற்று உள் நுழைந்து.. அடுக்களையை எட்டி நோக்கினால்.. நெய் வாசத்தின் மத்தியில்.. சுடச் சுட தோசைகளை வார்த்தெடுத்தபடி.. வெற்று மார்பும், ட்ராக் ஷூட்டுமாக நின்றிருந்தது நம் வெற்றியே தான்!!!

மீ........... என்ன செய்ற?, தோசை சுட்டு வைச்சு பத்து நிமிஷம் ஆச்சு, ஆறிப் போச்சுன்னா நீ சாப்பிட மாட்ட” – அடுப்பை அணைத்தபடியே குரல் கொடுத்த வெற்றிக்குப் பதிலாக...

“ஷூ மாட்டிட்டு இருக்கேன் வெட்டி” – தெளிவாய் உச்சரித்த மழலையைக் கேட்டு எரிச்சலுடன் வெளியே வந்தவன்..

“வீடு, ஹோட்டல்ன்னு முழு நேரமும் வேலை பார்த்து பிஸியாவே சுத்திட்டிருக்கிற என்னை, வெட்டி,வெட்டின்னு கூப்பிட்றியா நீ?” – என்ற படி லேசாக அதன் காதைத் திருக..

“எனக்குத் தான் வெற்றின்னு கூப்பிட வர மாட்டேங்குதே வெட்டி” – என்றவளை முறைத்து... “எனக்குத் தெரியும்! அந்தச் சீம சிறுக்கி, சீனாப் பருப்பி தான் என்னைய வெட்டின்னு கூப்பிடச் சொல்லி உன்னைத் தூண்டி விட்டிருப்பா-ன்னு! பாப்பா.. உனக்கு என்னைப் பிடிக்குமா இல்ல அவளைப் பிடிக்குமா?, இன்னிக்கு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகனும்”

“ப்ச், எனக்கு நெய் ரோஸ்ட்டைத் தான் ரொம்பப் பிடிக்கும் வெட்டி. பசிக்குது...” – என்று அவள் வயிற்றைத் தடவவும் ஓடிச் சென்று தோசையை ஒரு தட்டிலிட்டு அவள் முன்பு கொண்டு வந்து வைத்தான்.

“அம்மு... தோசையை சாப்பிட்டு முடிச்சப்புறம், ஒரு க்ளாஸ் பூஸ்ட் குடிக்கனும். காலைல என்னை ஏமாத்திட்ட!, இப்போ குடிக்கலேன்னா.. வாய்லயே ரெண்டு போடு போடுவேன்” – பக்கத்திலிருந்த அறையிலிருந்துக் கடகடவெனப் பேசியபடி வெளியே வந்த ஜமுனாவின் கையிலிருந்தவற்றைக் கண்டு அவள் குளிக்கச் செல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வெற்றி, அவளுக்கு முன்பாகத் தான் ஓடிச் சென்று பாத்ரூமுக்குள் நுழைந்துக் கதவைத் தாளிட்டான்.

“டேய்ய்ய்.... கசுமாலம்! அறிவு இருக்குதா இல்லையாடா உனக்கு?, கதவைத் தொற, கதவைத் தொற டா. எனக்கு லேட் ஆகுது” – டம்,டம்மென விடாது கதவைத் தட்டி அவனைத் திட்டித் தீர்த்தவளைக் கேட்டு வெற்றிச் சிரிப்பு சிரித்த வெற்றி.. அவள் தட்டுவதை நிறுத்தாததைக் கண்டு..

“பிக் பாஸ்! டோர் ஓபன் பண்ணுங்க பிக் பாஸ்! பிக் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” – என்று சத்தமிட... “ச்சை” என்றபடிக் கதவை மிதித்தவள்.. “வெளிய வாடா.. உன்னை வைச்சுக்கிறேன்” என்று கத்தவும், “வைச்சுக்க, வைச்சுக்க! அதுக்குத் தான் நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப வருஷமா காத்துனு இருக்குறேன்” என்று பதில் கூறினான்.

“பொறுக்கி” என்று முணுமுணுத்துவிட்டு.. இவையனைத்தும் எனக்கு வழக்கம் தான் என்பது போல் இவர்களிருவரையும் கண்டு கொள்ளாது தோசையை வாயிலடைத்தபடி அமர்ந்திருந்த சிறுமியின் அருகே சென்றுத் தானும் அமர்ந்தாள் ஜமுனா.

அவள் உண்கையில் கீழே விழும் சிறு சிறு தோசைத் துணுக்குகளை எடுத்துத் தட்டிலிட்டபடி “சிந்தாம சாப்பிடு தாஷி” என்றவள் தொடர்ந்து “தமிழ் - ஸ்டோரி டெல்லிங் இன்னிக்கு. நல்லாப் பண்ணிடுவேல பாப்பா?” என்று கேட்டாள்.

“காலைல இருந்து இதையே திரும்பத் திரும்பக் கேட்டு அவளை 4 தடவை ஸ்டோரி சொல்ல வைச்சுட்டடி டீச்சரு!, மீ... நீ ரொம்ப நல்லா படிக்கனும்ன்னு எந்த அவசியமுமில்ல! என்னை மாதிரி படிக்காத மேதைங்க எல்லாம் உலகத்துல வாழ்றது இல்ல?” – பாத்ரூமிற்குள்ளிருந்து வந்த குரலைக் கேட்டு எரிச்சலுற்றவள்.. “நீ கம்முன்னு இருடா!,” என்று அவனுக்குப் பதில் குரல் கொடுத்து விட்டு “அவன் சொல்றதைக் கேட்காத. நீ நல்லா படிக்கனும் என்ன பாப்பா?” என்றாள்.

“நல்லா படிக்கிறேன்! ஆனா.. இந்த பூஸ்ட் மட்டும் வேணாம்” – பேரம் பேசியப் பிள்ளையை முறைத்துப் பின் கெஞ்சியவள்.. அவள் வேண்டாம் என அடம் பிடித்து அழத் துவங்கவும்.. ஓடிச் சென்று லேப்டாப்பை எடுத்து வந்து அவள் முன்னே வைத்தாள்.

“பாப்பா வீடியோ போடட்டுமா?, வீடியோ பார்த்துக்கிட்டே பால் குடிப்பியாம். ஓகே?” – என ஜமுனா கேட்கவும் சரியெனத் தலையசைத்தது குழந்தை.

அதன் கையில் ஒரு நீள தம்ளரைக் கொடுத்து விட்டு.. மடிக்கணிணியில் பேபி-தாஷி என்ற ஃபோல்டரை ஓபன் செய்து முதல் வீடியோவை ‘ப்ளே’ செய்தாள்.

அது.. தாட்சாயிணி என்கிற தாஷி முதன் முதலில் தவழத் துவங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ. டிவி,கட்டில்,மெத்தை,சோஃபா என எதுவுமின்றி.. இரண்டு பாய், நான்கு தலையணைகளுடன் காலியாக இருந்த வீட்டில் குழந்தை தவழ்கையில் எடுத்தது.

“கம் ஆன்... கம் ஆன்... கம் ஆன் பப்பு...” – என்று கைத் தட்டி அழைத்த ஜமுனாவை நோக்கிக் குழந்தை முகம் கொள்ளா சிரிப்புடன் ஆர்வமாய் முன்னே வந்ததை வெற்றி படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

தவழ்ந்து வந்து.. மண்டியிட்டு அமர்ந்திருந்தத் தன்னிடம் கை நீட்டியக் குழந்தையின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு “என் பட்டுக் குட்டி வளர்ந்துடுச்சு டா!, என் தங்கப்பிள்ள வளர்ந்துடுச்சு டா” என்று கொஞ்சிய ஜமுனாவிடம் “சரி,சரி ரொம்ப முத்தம் குடுக்காத! என் புள்ள கன்னம் தேய்ஞ்சுடப் போகுது!” – படம் பிடித்துக் கொண்டிருந்த வெற்றி மிரட்டுவதைக் கண்டு அவள் நிமிர்ந்து முறைக்கையில்... வீடியோ நின்று போனது.

அடுத்த வீடியோவில் பனியன்,கைலியுடன் நின்றிருந்த வெற்றி இடது கையில் தாஷியை ஏந்தியபடி, வலது கையில் தண்ணீர் செம்பை வைத்திருந்தான்.

“1.. 2.. 3.. ஸ்டார்ட்” என்று ஜமுனா கூறியதும் அவன் செம்பிலிருந்தத் தண்ணீரைப் பருக.. தாஷி இடை புகுந்து செம்பைப் பற்றியிழுத்து.. தன் வாய்க்குள் செலுத்திக் கொண்டிருந்தது.

“ஹாஹாஹா” –வென சிரித்த ஜமுனாவுடன் சேர்ந்துத் தானும் கலகலவென சிரித்த வெற்றி “நோ நோ மீ.. இது பச்சத் தண்ணீ” – எனக் கூறியபடியே செம்பைப் பிடுங்கியதும்.. அது உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழத் துவங்க... எதிரிலிருந்த டிவியைக் காட்டி “இதோ.. பாப்பாவுக்குப் பிடிச்ச ஆட் போட்றாங்க.. கிஸ் மீ... க்ளோஸ் யுவர் ஐஸ்...” என்று அதன் கையைப் பற்றிக் கொண்டு வெற்றி டான்ஸ் ஆடத் துவங்கவும்.. ஈ-யெனச் சிரித்தது குழந்தை.

அதற்கடுத்த வீடியோவில் மூங்கில் சோஃபாவின் கீழே வெற்றி அமர்ந்திருக்க.. அவனருகில் சோஃபாவைப் பற்றியபடி தாஷி நின்று கொண்டிருந்தாள்.

“காலைத் தூக்கி இப்டி வைக்கனும் பாப்பா....” என்றபடி அதன் காலைப் பற்றித் தூக்கி மேலே வைத்து ஷோஃபாவில் ஏறுவதற்கு அவன் கற்றுக் கொடுக்க.. மறுமுறை தானே ஏறி அமர்ந்து கொண்டு.. கைத் தட்டிக் கிளுக்கிச் சிரித்தது குழந்தை.

“ஹேஏஏஏஏஏஏஏ.... சூ......ப்பர்ர்ர்ர்ர்” என்று கூடச் சேர்ந்துக் கத்தினாலும் “அவளைக் கெடுக்குறதே நீ தான் டா வெற்றி, நீ வேலைக்குப் போனப்புறம் இவ இப்டி ஏறிட்டுத் திரிஞ்சா.. யார் டா சமாளிக்கிறது?, தனியா வீட்ல உட்கார்ந்துக்கிட்டு இவ கூட போராடவே எனக்கு நேரம் சரியா இருக்கு. இனி நான் வேலைக்குப் போறேன். நீ வீட்ல இருந்து இவ கூட மல்லுக்கட்டு” என்று புலம்பிய ஜமுனாவுக்குப் பதிலாக “கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க டீச்சர்!, பாப்பா வளர்ந்ததும் நீங்க வேலைக்குப் போலாம்” என்றதோடு முடிந்து போயிருந்தது வீடியோ.

அடுத்த வீடியோவில்.. அடர் நீல நிறத்தில் முழு நீள ஃப்ராக்குடன் நெற்றியில் கிரீடமும், உதடு முழுக்கப் புன்னகையுமாக ஜொலித்தபடி போஸ் கொடுத்த தாஷிக்கு அன்று முதலாவது பிறந்த நாள். அக்கம்,பக்கத்துப் பிள்ளைகளோடு சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தனர் வெற்றியும்,ஜமுனாவும்.

கேக்-ஐத் துண்டுகளாக்கிக் கொண்டிருந்த வெற்றியின் காலைப் பற்றியிழுத்த தாஷியை வாகாகக் கையில் ஏந்திக் கொண்டவன் க்ரீம்-ஐ அதன் நாக்கில் தடவ.. சப்புக் கொட்டிக் கொண்டு உண்டவளைக் கண்டு ஹாஹாஹாவென சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

“கேக் சூப்பர்-ஆ பண்ணியிருக்கடா வெற்றி! இன்னும் கொஞ்சம் தாயேன்” என்றபடி பேப்பர் ப்ளேட்டுடன் அருகே வந்த ஜமுனாவை முறைத்து... அவள் கன்னத்தில் க்ரீம்-ஐத் தடவியவனை அவள் கொலை வெறியுடன் நோக்குகையில் நின்றது வீடியோ.

அதன் பின்பு வந்த வீடியோக்கள்... மூவரும் திருப்பதிக்கு சென்று தாஷிக்கு முதல் மொட்டை எடுத்த போது, இரண்டாவது மொட்டை வேளாங்கண்ணியில் எடுத்த போது... மூன்றாவது மொட்டை நாகூரில் எடுத்த போது.. என வரிசையாக ஓடியது.

அவளது மூன்றாவது பிறந்தநாளின் போது.. நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு மெத்தையில் சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பியதிலிருந்துத் தொடங்கியது அடுத்த வீடியோ.

தாஷியின் அருகேக் கண் மூடி சாய்ந்திருந்த ஜமுனாவின் தோளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தான் வெற்றி. முகத்தில் ஃப்ளாஷ் அடித்ததும் விழித்தவளிடம் “ஏன் டி 12 மணிக்கு கேக் வெட்டலாம்ன்னு சொல்லிட்டுத் தூங்கிட்ட?, எந்திரிடி!” என்று அதட்டி எழுப்பினான்.

“ஃப்ரிட்ஜ்ல இருந்து கேக் எடுத்துக்கிட்டு, அப்டியே என் ரூம்ல இருந்து தீப்பெட்டி,மெழுகுவர்த்தியெல்லாம் எடுத்துட்டு வா” – என விரட்டியவனை முறைத்தவள் “இதையெல்லாம் எடுத்துட்டு வந்து, என்னை எழுப்ப வேண்டி தான?, நானே 50 மேத்ஸ் பேப்பரைத் திருத்திட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தூங்குனேன்” – வெற்றியின் முகம் வீடியோவில் தெரியாவிட்டாலும், விடாது புலம்பிய ஜமுனாவின் முசுட்டு முகத்தைக் கண்டு மூவரும் இப்போது சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவள் நகர்ந்ததும்.. உறங்கும் தாஷியை ஃப்ளாஷ் வெளிச்சத்தில் நோக்கியவன் “என் புள்ள தூங்கும் போது எவ்ளோ அழகு...!” எனக் கூறி முத்தமிடுகையில்.. கேக்குடன் வந்து சேர்ந்தாள் ஜமுனா.

அதன் பின்பு அவளை எழுப்பி ஹாப்பி பர்த்டே பாடி சோட்டா-பீம்,சுட்கி பொம்மையைப் பரிசளித்து கேக் வெட்டியதும், தாஷி முகத்தில் தெரிந்த ஆச்சரியம் கலந்த கள்ளம்,கபடமற்ற சந்தோஷம்... வெற்றியையும்,ஜமுனாவையும் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.

“நீ அம்முவுக்குக் கேக் ஊட்டு டா வெற்றி” என்று ஜமுனா கூறியதும் கேக் துண்டத்தைக் கையில் எடுத்தவனிடம் “கேமராவை செல்ஃபி மோட்-க்கு மாத்து டா, அப்புறம் நீ தெரிய மாட்ட” என்று அவள் கூறியதும் மாற்றி விட்டு இப்போதுத் தானும் வீடியோவில் தெரிந்தான் வெற்றி.

அவனுக்கும்,தாஷிக்கும் இடையில் நின்றிருந்த ஜமுனாவையும் சேர்த்தணைத்துக் கொண்டு “பாப்பா.. ஆஆஆஆ” என்றபடி அருகே சென்று அவள் வாயில் கேக்கை ஊட்டாமல் முகத்தில் தடவியவனைக் கண்டு அவள் மெத்தையில் குதித்துச் சிரிக்க.. கையிலிருந்தக் கேக்கின் மீதியை ஜமுனாவின் முகத்தில் பாரபட்சம் பார்க்காமல் அப்பியிருந்தான்.

இப்படியாக அடுத்தடுத்த ஓடிய அத்தனை வீடியோக்களும் மூவரது வாழ்வின் வளர்ச்சியை எடுத்துக் காட்டியது. உடலளவில்,மனதளவில்,செல்வநிலையில் அவர்கள் கண்ட ஏற்ற,இறக்கங்களை நினைவு படுத்திக் கொள்ள உதவியது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னையிலிருந்து வேலூருக்கு வந்து சேர்ந்த வெற்றியும்,ஜமுனாவும் தங்களைச் சேர்ந்த ஒருவரிடமும் இதுவரைத் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. உற்ற நண்பர்கள்,உறவினர்கள் என யாரிடமும் ஒருமுறை கூடப் பேச முயற்சிக்கவில்லை. இருவரது வாழ்வின் பெரும்பகுதியையும் தாஷி,தாஷி என்கிற குட்டி ஜீவன் ஆக்கிரமித்துக் கொண்டது.

ஜமுனாவேனும் சென்னையிலிருந்த அக்கம்,பக்கத்தாரிடம் அன்னை இறந்த துக்கம் தாளாது, மாற்றம் வேண்டி வேறு ஊருக்குத் தன் வேலையை மாற்றிக் கொண்டுச் செல்வதாகச் சொல்லி வைத்து விட்டுக் கிளம்பியிருந்தாள். ஆனால் வெற்றி, தன் உயிர் நண்பன் கதிரிடம் கூடத் தன்னைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. சொன்னால்.. தாஷியைப் பற்றித் தேவையில்லாதக் கேள்விகள் வரும் என்பதாலோ என்னவோ, தன்னைப் பற்றிய சுவடே இல்லாத அளவிற்கு மொத்தமாய் ஒதுங்கி விட்டான்.

சரோஜாவிடமும் அதையே கூறி விட்டு சென்னையிலிருந்த வீட்டைக் காலி செய்யுமாறும், அங்கிருக்கும் பொருட்களை விற்று விடும்படியும் சொல்லி விட்டாள் ஜமுனா. அவரிடமும் அதன் பின்பு அவள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவளது அன்னை படுத்த படுக்கையானதிலிருந்து அவளுடன் இருந்த பெண்மணி சரோஜா! அவரிடம் கூடத் தொடர்பில்லாமல் இருப்பது அவளுக்கு உறுத்தலைக் கொடுத்தது தான்! ஆனாலும் தாஷிக்கு வேண்டி.. அவரது உறவையும் தவிர்த்தாள்.

மிகவும் அத்தியாவசியப் பொருட்களோடு ஒரு சிறிய வீட்டில் துவங்கியது இருவரது வாழ்க்கையும்! சேமிப்பு என்ற பெயரில் இருவரிடமும் பெரிதாக எதுவுமில்லாததால் ஆரம்ப காலக் கட்டத்தில் கையில் காசு தங்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.

வருமானம் என்கிற பெயரில் கணிசமான தொகை கைக்கு வந்தாலும், வரவை மீறிய செலவிருந்தது. முழு நேரமாகக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஜமுனாவிற்கும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை.

சம்பாதிக்கும் அத்தனை பணத்தையும் அவள் கையில் கொடுத்து விடுவான் அவன்! இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு அவள் போடும் பட்ஜெட்டில் தான் குடும்பம் நடக்கும்!

இருவரும் எத்தனையோ விஷயங்களை விட்டுக் கொடுத்தாலும், குழந்தையை மட்டும் எந்தக் குறையும் அண்டாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தைக்குப் போடப்படும் தடுப்பூசியைக் கூட அரசு மருத்துவமனையில் போட்டுக் கொள்ளாமல், ப்ரைவேட் ஹாஸ்பிடலில் செலவழித்தனர். இப்படியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அடித்தது லாட்டரியாக வெற்றியை அதிர்ஷ்டம் தேடி வந்தது.

வெற்றி நன்றாகச் சமைப்பவன் என்பது ஏற்கனவே ஜமுனாவிற்குத் தெரிந்தது தான் என்றாலும்.. அவன் கை தேர்ந்த செஃப்-களைப் போன்று இந்த அளவிற்கு சமையலில் கில்லாடியாக இருப்பான் என்பது அவள் சற்றும் அறியாதது. எளிமையான இன்க்ரிடியண்ட்ஸை வைத்துக் கொண்டு அவன் அசத்தும் வெரைட்டிகளைக் கண்ட போது.. அவன் திறமை, அவனை நிச்சயம் வேறு நிலைக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்பினாள். அவள் நம்பிக்கையை மெய்யாக்குவது போல.. அடுத்தடுத்த சம்பவங்கள் வெற்றியின் வாழ்வில் நடந்தேறின.

தன் தந்தையின் மெஸ்ஸில் செய்வது போன்று.. புதுவிதமான டிஷ்-கள் சிலவற்றை தான் வேலை பார்க்கும் ஹோட்டல் கஸ்டமர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தான் அவன். அதில் ஒருவர், இவன் செய்தது பிடித்துப் போய் தனது ஸ்டார் ஹோட்டல் செஃப் நண்பரை இங்கேக் கூட்டி வர.. அவரும் அதை உண்டு பார்த்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

அதன் பின்பு அவன் கண்டறிந்த மேலும் சில டிஷ்-களைச் சொல்லி.. இன்னும் அவன் மனதில் நினைத்திருக்கும் ஐடியாக்களை எல்லாம் கூறியதும்... அவர் முதலில் விசாரித்தது அவன் என்ன படித்திருக்கிறான் என்பதைத் தான்.

தலையைச் சொறிந்தபடிப் பத்தாவது கூடத் தேறவில்லை என்று அவன் தெரிவிக்கவும்.. ‘பின்னே எப்படி இந்த ஐடியாக்கள்’ எனக் கேட்டார் அவர்.

புத்தகம்,டிவி, இண்டர்நெட் என அனைத்திலும் தனது ஃப்ரீ டைம்-இல் பாதியை இது சம்பந்தமாகச் செலவழிப்பதாக அவன் கூறவும், ‘படிக்காத மேதை’ பட்டத்தை அவனுக்கு அள்ளி வழங்கியவர் தான் வேலை செய்யும் ஸ்டார் ஹோட்டலிலேயே அவனையும் சேர்த்துக் கொண்டார்.

அவரது உதவியுடன் கேட்டரிங்கில் டிப்ளமா பட்டமும் வாங்கினான் வெற்றி (நிச்சயம் படித்து வாங்கிய பட்டமாய் இருக்காது). அதன் பின்பு டெல்லியில் நடந்த நேஷனல் ஃபுட் ஃபெஸ்டிவலிலும் இவனது ஹோட்டல் சார்பாக.. இவன் தயார் செய்த டிஷ்கள் நல்ல வரவேற்பைப் பெற.. அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்த நான்காவது வருடம் அஸிஸ்டெண்ட் செஃப்-ஆக பதவி உயர்வு பெற்றான்.

குழந்தையும் வளர்ந்து பள்ளிக்குச் செல்லத் துவங்கியதால்.. ஜமுனாவும் தனது டீச்சர் வேலையைத் தொடர்ந்தாள். ஐந்து வருடங்களில் அவர்கள் கடந்து வந்த பாதை ஃபேரி டேல் போன்றிருக்க.. இத்தகைய அழகிய மாற்றத்தைத் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுத்த அந்தக் குட்டி ராட்சசியை இருவரும் போற்றாத நாளே இல்லை!

நிழற்படத்தைத் தவிரத் தனது தாயை ஒரு முறை கூடக் கண்ணில் காணாத வெற்றி, குழந்தையின் அன்பில் தன் தாயைக் கண்டான். நாள் முழுவதும் ஜமுனா அவளைக் கொஞ்சி,மிஞ்சிச் செல்லமாகப் பார்த்துக் கொண்டாலும், இரவு வெற்றி வரும் நேரம்.. “வெட்றி, வெட்றி” என்றழைத்தபடி வாசலருகேயிலேயே தான் நின்றிருப்பாள்.

சிறு குழந்தையாய் இருந்த போதே.. தூரியில் படுத்திருந்தாலும் அவன் வருவது தெரிந்ததும் படபடவென எழுந்தமர்ந்து கொண்டு “பா, பா, பா” என்பாள்.

‘பாப்பா உம்மா’ – என அவன் கன்னத்தைக் காட்டினால் போதும்! அவனே போதும் பாப்பா என்கிற வரைக்கும் முத்தத்தால் அவனை மூழ்கடித்து விடுவாள். அந்த சமயம் ஜமுனாவிற்கு அவளிடமிருந்து ஒரு முத்தம் கூடக் கிடைக்காது. அவன் வீட்டிலிருக்கும் நேரம் அவன் பின்னால் தான் திரிவாளே தவிர.. ஜமுனா அழைத்தாலும் அவள் புறம் வர மாட்டாள்.

விடுமுறை நாட்களில்.. மதிய வேளையில் ஜமுனா உறங்கிய பின்பு.. அவனுடைய அறையில் அமர்ந்து கொண்டு இருவரும் குசு,குசுவென ஏதோ பேசியபடிச் சிரிக்கும் சத்தம் ஜமுனாவின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். அவன் அறைக்குள் எட்டிப் பார்த்தால், குழந்தையின் மடியில் தன் தலையை சாய்த்துக் கொண்டு.. கண் மூடியபடி ஏதோ பேசிக் கொண்டிருப்பான் அவன். ‘சின்னக் குழந்தைங்கப் பக்கத்துலக் கூடப் போனதில்ல’ எனக் கூறிய வெற்றியா இது! என்று ஆச்சரியப்படும் வகையில் குழந்தையின் தந்தையாகவே வாழ்ந்தான் வெற்றி. தாட்சாயிணி என்கிறப் பெயர் கூட அவன் வைத்தது தான்! அவனை வளர்த்தப் பாட்டியின் பெயராம்!

ரத்த சம்பந்தம் ஏதுமின்றி யாருக்கோ பிறந்து... விதியால் கைக்குக் கிடைத்து.. தங்கள் வாழ்வில் வரமாய் மாறிப் போன தேவதையை தங்களது சொந்தக் குழந்தையாகவே வளர்த்தனர் இருவரும்.

வீடியோ முடிந்த போது தாஷி பாலைக் காலி செய்திருக்க.. பாத்ரூமிலிருந்து வெற்றியும் வெளி வந்திருந்தான்.

“நீ தான் முதல்ல குளிச்சுட்டேல?, நீ போய் அவளை ஸ்கூல் பஸ் ஏத்தி விடு. எனக்கு நேரமாச்சு” – அவனிடம் கூறியபடியே அவனைச் சுற்றிக் கொண்டு சென்றவளிடம்..

“நீ இந்த வூட்ல அப்டி இன்னா தான் டி வேலை செய்ற?, விடிஞ்சதுல இருந்து இந்தப்பக்கமும்,அந்தப்பக்கமும் நடந்துனு தான் இருக்குற?” எனக் குறை கூறினான் வெற்றி.

“ம்ம், பிள்ளையக் குளிப்பாட்டி ரெடி பண்ணி, அவளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற வேலையெல்லாம் யார் பார்ப்பா?, நீயா பார்ப்ப?, உனக்கு சமைக்கிறதையும்,திங்குறதையும் தவிர ஒரு மண்ணும் தெரியாது”

“ஏய்ய்ய் யாராண்ட வம்புக்கு நிக்குற?” – சீறிக் கொண்டு கிளம்பிய வெற்றியின் கையைப் பற்றிய தாஷி “என்னை பஸ் ஏத்தி விட்டுட்டு வந்து நீ சண்டை போடு வெட்டி” என்று அவனைக் கிளப்பிக் கொண்டு முன்னே நடந்தாள்.

“குழந்தை முன்னாடி சண்டை போடாதடான்னு எத்தனை தடவை சொன்னாலும் மண்டைல ஏறாது! கசுமாலம்” – முணுமுணுத்துக் கொண்டே பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் ஜமுனா.

அதன் பின்பு அவள் தயாராகி சாப்பிட அமர்ந்த போது... பள்ளிப் பேருந்தில் தாஷியை அனுப்பி விட்டு வந்த வெற்றியும், அந்தச் சிறிய டைனிங் டேபிளின் மறு ஓரம் அமர்ந்துத் தோசையை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

தானும் சாப்பிடத் துவங்கிய ஜமுனா “ஆஹா ஆஹா!!! இதல்லவா நெய் ரோஸ்ட் என்பது! ஒரு ஹோட்டல்காரனை வூட்ல வைச்சிருக்கிறதுல இவ்ளோ நன்மை இருக்குன்னு எனக்குச் சத்தியமாத் தெரியாது டா வெற்றி. என்னமா சமைக்கிற?” என்றாள்.

“வாயை மூடின்னு தின்னுடி”

“வெற்றியின் வெங்காயச் சட்னிக்கு நிகர் உலகத்தில் எதுவுமில்லை” – அவன் அதட்டியும் அடங்காமல் அடுத்தடுத்து கமெண்ட்களை அள்ளி விட்டவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் வெற்றி.

“இன்னா டா அப்டி பார்க்குற?”

“ப்ச்” என்றவன் உதட்டை வளைத்தபடி அவளை ஒரு மாதிரி நோக்கியபடி பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு.. எதையோ எடுத்து அவள் உண்டு கொண்டிருந்தத் தட்டின் அருகே டொக் என வைத்தான்.

தோசையை வாய்க்குள் செலுத்தி விட்டு.. என்னவென்றுக் குனிந்து பார்த்த ஜமுனா.. அங்கிருந்த பொருளைப் கண்டுக் கண்களை அகல விரித்து.. தொண்டையடைக்க விக்கி.. அவசரமாகத் தன் கையருகே இருந்தத் தண்ணீர் ஜக்கை எடுத்து வாய்க்குள் சரித்துக் கொண்டு... அவன் முகத்தை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

அவள் அளித்த ரியாக்ஷன் எதையும் கண்டு கொள்ளாமல்.. அலட்டலின்றி அவள் முகத்தைப் பார்த்தபடியேப் பொறுமையாக தோசையை மென்று கொண்டிருந்தான் வெற்றி.

“இன்னா டா இது?” – ஜமுனா.

“பார்த்தாத் தெரியல?? இது பேரு தான் தாலி.”

நக்கலாகக் கூறியவனைக் கண்டுப் பல்லைக் கடித்தவள்...

“அது எனக்கும் தெரியும்!, இத்த என்னாத்துக்கு என்னாண்ட குடுக்குற இப்ப?” – என்றாள்.

ஒரு நிமிடம் பதில் கூறாமல்... தோசையைப் பிய்த்து சட்னியில் தோய்த்துக் கொண்டிருந்தவன்.. பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து...

“இதை நீயாவே உன் கழுத்துல கட்டிக்கிட்டாலும் சரி! இல்ல, என் கையால நான் உன் கழுத்துல கட்டுறதுக்கு சம்மதிச்சாலும் சரி! எப்டியோ.. இது உன் கழுத்துல இருந்தாகனும்..” – என்றான் சட்டமாக.

“எதுக்கு?”

“புரியல”

“அப்படி என்னாத்துக்கு இது என் கழுத்துல இருந்தாகனும்?”

“நேத்துப் பக்கத்து வூட்டு வடுகநாதன் சம்சாரம் உன்னாண்ட இன்னாடி கேட்டுச்சு?”

“அ....அது...”

“தாலி கட்டிக்காம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து பிள்ளையும் பெத்துக்கிட்டீங்களான்னு கேட்டுச்சா.. இல்லையா?”

“ப்ச், அந்தம்மா மட்டுமா இப்டி கேட்குது?, இந்த 5 வருஷமா என் கிட்டப் பழகுற எல்லாரும் கேட்குற முதல் கேள்வி இது தான்”

“ஓஹோ! அதுக்கு மேடம் என்ன பதில் சொல்வீங்க?”

“நாங்க கிறிஸ்து முறைப்படி மோதிரம் மாத்திக்கிட்டோம்ன்னு விரலைக் காட்டிருவேன். எப்பூடி?” – கண்ணடித்துச் சிரித்தவளிடம்..

“கண்றாவியா இருக்கு டி. எத்தனை பேர் நீ சொன்னதை நம்பியிருப்பானுங்கன்னு நினைக்கிற?” என்றான்.

“நம்பலேன்னா போய்ட்டுப் போறானுங்க. நாம என்னாத்துக்கு டா அதை நினைச்சுக் கவலைப்படனும்”

“நீயெல்லாம் படிச்சு என்னடி பிரயோஜனம்?”

“ஏய்.. என்னாடா?”

“ப்ச், நம்மைப் பத்தி எவன் என்னா பேசுனா என்னன்னு தான் அக்கம்பக்கத்துல இருக்குறவனுங்க வுட்ற கேவலமான லுக்கையெல்லாம் டீல்-ல வுட்டு இத்தினி வருஷத்தையும் கடந்துருக்கோம்! ஆனா... இப்ப அப்டி இல்ல”

“ஏன், இப்ப மட்டும் என்ன வந்தது?”

“குழந்தை வளர்ந்துடுச்சுடி. அக்கம்,பக்கத்துல இருக்கிறவனுங்களுக்கு வர்ற கேள்வியெல்லாம் அவளுக்குத் தோணாதா?, அம்மா-அப்பான்னு அவ நம்மளைப் பேர் சொல்லிக் கூப்பிடாட்டியும், அவளைப் பொறுத்தவரை அந்த ஸ்தானத்துல இருக்கிறது, அவ கூட ஒரே வீட்டுக்குள்ள ஒன்னா இருக்கிற நாம ரெண்டு பேர் தான்! அந்த வடுகநாதன் சம்சாரம் மாதிரி ஏதாவது ஒரு பூட்டக்கேசு அம்முக் கிட்ட கண்டதையும் கேட்டு வைச்சா, அவ மனசு நோகாதா?. நாம இத்தனை வருஷமா அவளைக் கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பிரயோஜனம்?”

“...........” – பதிலற்று அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவள்.

“இது ஒத்துவராதுன்னு நினைச்சேனா.. நாம அவளோட அம்மா,அப்பா இல்லன்னு தாஷிக்குப் புரியுற மாதிரி நீயே எடுத்து சொல்லிடு”

அவன் கூறியதும் வெடுக்கென நிமிர்ந்தவள் “நீ ஒரு அநாதைன்னு என் புள்ளக் கிட்ட சொல்லத் தான் நான் அவளைக் கஷ்டப்பட்டு வளர்த்தேனாக்கும்?” என்று கூற...

“யாரோ சிலர் ஏதேதோ கேள்விக் கேட்டு அவளைக் குழப்பி விட்றதுக்கு.. நாமளே.. அவக்கிட்ட உண்மையை சொல்றது பெட்டர் தான?”

“................”

“இல்ல, கடைசி வரைக்கும் அவளுக்கு அவளைப் பத்தின எதுவுமே தெரியக் கூடாதுன்னு நினைச்சேனா... இந்தத் தாலியை எடுத்துக் கட்டிக்கிட்டு அவளோட அம்மாவாவே வாழ்ந்துடு. நானும் அவ அப்பாவாவே வாழ்ந்துட்றேன்”

“.......................”

“யோசிச்சு முடிவு பண்ணு” – என்றவன் கையைக் கழுவி விட்டு எழுந்து செல்ல.. சிறிது நேரம் அசைவற்று அமர்ந்திருந்த ஜமுனா.. பின் தானும் எழுந்தாள்.

யோசனை நிறைந்த முகத்துடன் அடுக்களையிலிருந்து வெளி வந்தவளை வாசலில் தடுத்து நிறுத்தினான் வெற்றி.

“என்ன?” – ஜமுனா

“.............”

“எதுக்கு டா வழியை அடைச்சுட்டு நிற்குற?, தள்ளு” – உர்ரென்ற முகத்துடன் வினவியவளிடம்..

“நான் கேக்குற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லுவியா?” –எனக் கேட்டான்.

“என்ன கேக்கப் போற?”

“உனக்கு எவனையாவது கன்னாலம் கட்டிக்கினு குழந்தை,குட்டின்னு வாழனும்ன்னு ஆசையிருக்கா?”

“............” – உஷ்ண மூச்சுடன் முறைத்தாள் அவள்.

“இல்ல, அப்டி எதுவும் ஆசையிருந்தா சொல்லிடு. நானும்,என் பொண்ணும் விலகிப் போயிட்றோம். உன் வாழ்க்கைக்கு நிச்சயம் நாங்கக் குறுக்க நிக்க மாட்டோம்” – அணிந்திருந்த ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு கீழ்க்கண்ணால் அவளை நோட்டம் விட்டபடி கூறியவனிடம்...

“ஓஹோஓஓஓஓ” என்றபடிப் பல்லைக் கடித்தவள்.. “உனக்கும் அந்த மாதிரி ஆசை இருந்தா சொல்லிடு. நானும்,என் பொண்ணும் எங்கயாவது கண் காணாத இடத்துக்குப் போய் பொழச்சுக்கிறோம் உனக்குத் தொந்தரவு இல்லாம” என்றாள்.

“எனக்கு ஆசையிருந்து என்ன பிரயோஜனம், நீ தான் ஒத்துக்க மாட்டேங்குறியே”

“ம்?????”

“ப்ச், அந்தத் தாலியை நான் உன் கழுத்துல கட்டனும்ன்றது தான் என் விருப்பம். அது உன் மரமண்டைக்குப் புரியுதா? புரியலையா?” – என்று எரிச்சலுடன் மொழிந்தவன்.. விழிகளைப் பெரிதாக விழித்துத் தன்னை நோக்குபவளைக் கண்டு கொள்ளாமல்.. விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

‘நீ வாழத் தானே வாழ்கின்றேன் நானே...

நீயின்றி ஏது பூ வைத்த மானே...

இதயம் முழுதும் எனது வசம்.... வா..வா.. அன்பே.. அன்பே....’

– கடந்து 5,6 வருடங்களாக அவர்களது வாழ்வில் ஒரு அங்கமாகி.. தனது இசைப் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கும் இளையராஜா பேக்-க்ரவுண்டில் டிவி வழியாக ஒலித்துக் கொண்டிருந்தார்.

அன்றைய நாள் முழுதையும் யோசனையுடன் கழித்தபடிப் பள்ளியில் நடமாடிக் கொண்டிருந்தாள் ஜமுனா.

இந்த ஐந்து வருடங்களில் குழந்தையைத் தவிர எதைப் பற்றியும் இருவரும் யோசித்துப் பார்த்ததேயில்லை. அதில் அவர்களதுத் தனிப்பட்ட வாழ்க்கையும் அடக்கம்.

ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தாலும்.. வெற்றியிடமிருந்து ஒரு தவறான பார்வையோ கூட வந்தது கிடையாது. வெள்ளிக்கிழமையானால்.. தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்து மல்லிப் பூ சூடும் போது மட்டும் ஆர்வமாய் அவள் முகத்தை ஒரு பார்வை பார்ப்பான். அவ்வளவு தான்! அதைத் தாண்டி எதையும் அவளிடம் அவன் வெளிப்படுத்தியதில்லை.

அக்கம்,பக்கத்திலிருப்போர் ‘உங்க ஹஸ்பண்ட், உங்க வைஃப்’ எனக் குறிப்பிடுவதையெல்லாம் இயல்பாய் ஏற்கவே பழகியிருந்தார்கள் இருவரும். ஒரே வீட்டில் குழந்தையுடன் ஒன்றாய்க் குடியிருப்பவர்களை கணவன்,மனைவி என்று நினைக்காதிருந்தால் தான் ஆச்சரியம் என்றெண்ணிக் கொண்டு.. அந்த மாதிரி குறிப்பிடல்களனைத்தையும் சாதாரணமாகக் கடந்து விட்டார்கள்.

அக்கம்,பக்கத்தாரைச் சமாளித்து இத்தனை வருடங்களைக் கழித்தாயிற்று. வெற்றி சொன்னது போல்.. இனியும் அப்படிக் கடத்த முடியாதே! ஒரே வீட்டில் உடன் இருக்கும் குழந்தை அவர்களது வித்தியாசத்தை உணரத் தொடங்கி விட்டால்.. பட்டக் கஷ்டம் அனைத்தும் பிரயோஜனமின்றிப் போய் விடும்,

திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழவில்லையே ஒழிய... இருவருக்குமிடையே நிலவும் ‘கெமிஸ்ட்ரி’-யை அவள் உணர்ந்தே இருந்தாள்.

கையைக் கடிக்கும் வருமானத்துடன் குழந்தையோடு வாழ்வைத் தொடங்கிய போது இருவருக்குமிடையே இருந்தத் திட்டமிடல் வருமானம் பெருகிய பிறகும் தொடர்ந்தது. அவள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த கால கட்டத்தில், கையில் பணமில்லையென அவனிடம் அவள் வாய் விட்டுக் கேட்டும் நிலையை அவன் ஏற்படுத்தியதேயில்லை. ஒவ்வொன்றையும் அவளிடம் கேட்டுக் கேட்டே செய்தான். ஆரம்பத்திலிருந்து இன்று வரை வீட்டில் சமையல் செய்வது அவன் தான். நீ பெண்,நான் ஆண் என்கிற வித்தியாசத்தை அவன் காட்டியதேயில்லை. ஐந்து வருடத்திற்கு முன்பு அவனிடம் பொறுப்பில்லை,பொறுமையில்லை என்று அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் பொய்யாக்கி... அவனைப் போல் ஒரு ஆணை உலகத்தில் எந்த மூலையிலும் காண முடியாது என்கிற அளவுக்கு மொத்தமாய் மாறிப் போயிருந்தான்.

ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்தபடி குழந்தையை அவள் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு மாலை வீடு வந்து சேர்ந்தாள் ஜமுனா. அதன் பின் அவளுக்கு உண்ணக் கொடுத்து, படிக்க வைத்து இரவு உணவை முடித்த போதும், வெற்றி வந்து சேரவில்லை.

எட்டரை மணியிலிருந்து நொடிக்கொரு முறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தாஷியைக் கண்டுத் தன் செல்ஃபோனில் அவனை அழைத்தாள்.

“என்ன டா இன்னும் வீட்டுக்கு வரல?” - ஜமுனா

“லேட் ஆகும்”

“ஏன் ஒரு மாதிரி பேசுற?”

“என்ன மாதிரி பேசுறேன்?”

“ப்ச், என்ன டா உன் பிரச்சனை?” – எரிச்சல் குரலில் அவள்.

“................”

“டேய்.....”

“நான் குடுத்தத் தாலிய என்ன செய்யலாம்ன்னு இருக்க?” – அவனது ஆழ்ந்த குரல் அவள் செவியை அடைந்து.. மனதை ஏதோ செய்தது.

“............”

“பதில் சொல்லுடி”

“இன்னும் எதுவும் முடிவு பண்ணல” – கெத்தாய்க் கூறினாள் அவள்.

“என்னிக்கு முடிவு பண்ணுவ?”

“ப்ச், எனக்குத் தோணும் போது முடிவு பண்ணுவேன், உனக்கென்ன டா?”

“..............”

“சரி, எப்போ வருவ-ன்னு சொல்லு”

“எனக்குத் தோணும் போது வருவேன். உனக்கென்னடி?” – தானும் எரிச்சலுடன் அவன் கூறிய பதிலில் கோபமுற்றவள்..

“நீ எப்ப வந்தா எனக்கென்ன டா!, உன் பொண்ணு வாசலுக்கும்,வூட்டுக்குமா உன்னைத் தேடி கால் தேய்ஞ்சு போற அளவுக்கு நடந்துனு கிடக்குறா! அதான் கேட்டேன்” – என்று நொடித்துக் கொண்டதும் “அதை முதல்ல சொல்றதுக்கென்ன?, புள்ளக் கிட்ட ஃபோனைக் குடுடி”எனக் கிழித்து விட்டுப் பின் தாஷியிடம் பேசி விட்டு ஃபோனைக் கட் செய்தான்.

இரவு வெகு நேரம் அவள் விழித்திருந்தும் அவன் வந்து சேரவில்லை. எனக்கென்ன என்பது போல் உறங்கிப் போனவள்.. நடுராத்திரியில் சன்னமாக ஒலித்தப் பாட்டுச் சத்தத்தில் எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

வீட்டு ஹாலின் கடைசியிலிருந்த சிறிய பால்கனியிலிருந்துச் சத்தம் வந்தது. அருகே சென்று அவள் கதவைத் திறந்து பார்த்த போது.. சிகரெட் ஊதியபடி பால்கனிக் கம்பியில் கை ஊன்றி நின்றிருந்தான் வெற்றி.

“அடப்பாவி! உனக்கு சிகரெட் பிடிக்குறப் பழக்கம் வேற இருக்கா?” – நடுநிசியில்.. முழு அமைதியுடன் இருளில் மிளிர்ந்தத் தெருவை வெறித்தபடி... இளையராஜா இசையில் மூழ்கியிருந்தவன்.. அவளது கரடிக் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினான்.

“இன்னாத்துக்குடி இப்டிக் கத்துற?”

“இது என்னடா பழக்கம்?, வூட்ல சிகரெட் பிடிக்கிறது? புள்ள பார்த்தா என்னாவும்?”

“அதான் அவ தூங்கிட்டிருக்கிற நேரமா பார்த்துக் குடிக்கிறேன்”

“டெய்லி குடிப்பியா?”

“ம்ஹ்ம்.. கடைசியா போன வருஷம் மார்ச் மாசம் 9-ந் தேதி குடிச்சது”

“ஏன் டா சிகரெட் புடிக்கிற தேதிய கூடவா நியாபகத்துல வைச்சிருப்ப?”

“ஆமா, ஏன்னா... அன்னிக்கு நீ உங்க ஸ்கூல் ஆண்டு விழான்னு பச்சைக் கலர் பட்டுப் புடவை கட்டிருந்த. அதனால நியாபகம் இருக்கு”

அலட்டிக் கொள்ளாமல் அவன் அளித்த பதிலில் திடுக்கிட்ட மனதை அடக்கி..

“டேய்... நான் பச்சைப் புடவை கட்டுனதுக்கு நீ ஏன் டா சிகரெட் புடிக்கிற?”

“அழகா இருந்தேல, அதான்” – மீண்டும் அலட்டிக் கொள்ளாத பதில்.

பல்லைக் கடித்தபடி அவனை நோக்கினாள் அவள்.

கடைசிப் புகையையும் இழுத்துக் கொண்டு சிகரெட்டைக் காலில் இட்டு நசுக்கியவன்.. அதை ஊதியபடியே.. அவளிடம் “நீ என்னாத்துக்கு தூங்காம நடமாடுற?” என்று விசாரித்தான்.

கையைக் கட்டிக் கொண்டு.. நிலப்படியில் சாய்ந்து நின்றபடி.. அவனையே தலை சாய்த்து நோக்கினாள் அவள்.

“இன்னா டி??”

“அன்னிக்கு ஏன் குடிச்ச-ன்றதுக்கு பதில் சொல்லிட்ட! இப்ப ஏன் குடிக்கிற-ன்னு சொல்லலயே” – என்றவளுக்குப் பதில் சொல்லாமல்.. ஒரு நிமிடம் அசைவற்று அவள் முகத்தை வெறித்தவன்.. பின் உதட்டைக் கடித்தபடி வேறு புறம் திரும்பினான்.

ட்ராக் ஷூட்டும், டீஷர்ட்டுமாக நின்றிருந்தவனின் கண்களில் ஏதோ ஒரு அலைப்புறுதல்! அழுத்தமாய் இதழ்களை மூடி வைத்திருந்தான்! கலைந்திருந்தத் தலை முடி.. லேசாகக் காற்றிலாடிக் கொண்டிருந்தது.

“எனக்குத் தெரியும்” - ஜமுனா

“என்ன தெரியும்?”

“இதை நான் என்ன பண்ணப் போறேன்னு உனக்குத் தெரியனும். அதான?” – என்றபடிக் கையிலிருந்தத் தாலியைக் காட்டினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவனும் மெல்ல ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

நிலப்படியிலிருந்து நகர்ந்து வந்து.. அவன் முன்னே நின்றாள்.

தீர்க்கமாகத் தன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி தன் மார்பருகே நின்றிருந்த அவள் முகத்தை குனிந்துத் தானும் நோக்கினான் அவன்.

கையிலிருந்தத் தாலியை அவனிடம் நீட்டியவள் “நான் முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.

“என்ன?”

“இ..இ..இதை.. நீயே என் கழுத்துல கட்டி விட்ரு..” – அவன் முகம் பார்க்காமல் எதிரே தெரிந்த சுவரை வெறித்தபடிக் கூறியவளைக் கேட்டு.. தலை முதல் கால் வரை ரத்தம் குபு,குபுவெனக் குதித்துக் கொண்டு ஓடியது அவனுக்கு.

“எவ்ளோ அசால்ட்-ஆ சொல்றா பாரு! இத்த இவ கைல குடுத்துட்டு ஒருத்தன், காலைல இருந்து ஒரு வேலையும் ஓடாம.. என்ன செய்யப் போறாளோன்னு நென்ச்சு,நென்ச்சு பைத்தியம் மாதிரி சுத்தினு இருக்குறான்! இவ பாரு, எவ்ளோ கூல்-ஆ.. நோவாம.. இதயத்துல ஓட்டையப் போட்றா!!’

அதுவரை அமைதியின்றி.. அலைப்புறுதலுடன்.. ஆட்டமாடிக் கொண்டிருந்த அவன் ஆன்மா.. சர்வமும் அடங்கி விட்ட... ஆசுவாசத்துடன்... நின்று நிதானமாய் மூச்சு விட்டது.

நிமிர்ந்து... அவளைப் பார்த்து.. ஒற்றை விரலால் அவள் கன்னத்தைத் திருப்பித் தன் முகம் நோக்கச் செய்தவன் “என்ன சொன்ன?” என்று அடங்காத ஆச்சரியத்துடன் வினவினான்.

“ப்ச், இது தான் உன் விருப்பம்ன்னு நீ தான சொன்ன?”

“அதுக்காக மட்டும் தானா?”

“இதோ பாரு, நீ அப்டி,இப்டிப் பேசி எதையும் ட்விஸ்ட் பண்ணப் பார்க்காத, நான் என் முடிவை மாத்திக்கிறதுக்கு முன்னாடி டக்குன்னு இதை என் கழுத்துல கட்டு” – தன் புறம் தாலியை நீட்டியவளைக் கண்டு தோள் குலுங்க.. லேசாக நகைத்து..

“இப்போவா?” – என்றான்.

“ஏன், நாள் குறிச்சு, நல்ல நேரம் பார்த்து.. ஊரைக் கூட்டி வைச்சுக் கட்டலாம்ன்னு நினைச்சிருந்தியா?”

“அ....ப்....டி இல்ல”

“பின்ன என்ன?”

“................”

“நீ ரொம்ப யோசிக்குற! நீ ஏற்கனவே சொன்ன மாதிரி நானே இதை என் கழுத்துலக் கட்டிக்கிறேன்” – என்றபடித் தாலியைப் பிரித்தவளை அவசரமாகத் தடுத்துத் தன் கையில் வாங்கி... அவளை நெருங்கி.. அவள் கழுத்தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டான். இல்லை, போட்டுக் கொண்டிருந்தான் அவன்.

“தாஷிக்காக மட்டும் தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். எனக்காகவும் தான் ஒத்துக்கிட்டேன்” – முதல் முடிச்சு...

“இதை நீ கட்டுறதால எதுவும் மாறப் போறதில்ல ” – இரண்டாவது முடிச்சு.

“5 வருஷத்துக்கு முன்னாடி நீ பேசுனது எதையும் நான் மறக்கல” – மூன்றாவது முடிச்சு.

-அவன் மார்பில் தன் நெற்றி உரசாத தூரம் தள்ளி நின்றிருந்தவள்... பேசிய பேச்சைக் கேட்டுக் கொண்டே சற்று எட்டித் தாலி கட்டி முடித்தவன்.. அவள் முகம் நோக்கினான்.

பாதித் தூக்கத்தில் எழுந்து வந்ததால் சற்று அதிகமாகவே கலைந்திருந்த அவள் தலை முடி ஆங்காங்கு பறந்து கொண்டு அவளுக்கொரு பஃபூன் லுக்-ஐக் கொடுத்திருந்தது. அதைக் கண்டதும் விரியத் தொடங்கியப் புன்னகையை அடக்கி அவன் பார்வையைக் கீழிறக்கினான்.

கொஞ்சம் கோபம், நிறைய பிடிவாதத்துடன் கலவை உணர்ச்சிகளைத் தேக்கி வைத்திருந்த அவளது மை-கலைந்த விழிகள் அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. என் மூஞ்சில இருந்து எதைக் கண்டுபிடிக்க.. இப்டி உத்துப் பார்க்குறா? கமெண்ட் அடித்தது அவன் மனசாட்சி.

அனைத்தையும் தாண்டி.. அவள் அணிந்திருந்த இத்துப் போனப் பழைய நைட்டியின் மீது பாந்தமாய்ப் படிந்திருந்தத் தாலியைக் கண்டவன், மீண்டும் விழியுயர்த்தி அவள் கண்களை நோக்கினான். எதையோ சாதித்து விட்டத் திருப்தியுடன் நிறைந்த பார்வையால் அவளை மூழ்கடிப்பவனின் விழிகள்.. வழக்கம் போல் ஏதோ சேதி கடத்த.. புரியாத பார்வையுடன் நின்றிருந்தாள் அவள்.

மெல்லத் தன் வலது கையை நகர்த்தி அவள் வலது கரத்துடன் இணைத்துக் கொண்டவன், தன் ஐவிரல்களையும் அவள் விரல்களோடுக் கோர்த்து அழுத்தமாய்ப் பற்றினான்.

“என் லைஃப்ல ரெண்டு தடவை தான் நான் உச்சகட்ட சந்தோசத்தை அனுபவிச்சிருக்கேன். ஒன்னு.... என் பொண்ணு முதல் தடவை ‘வெட்றி’-ன்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டப்போ! ரெண்டாவது.. இப்போ.. இந்த நிமிஷம்.. உன்னால....!” – ஆழ்ந்த குரலில் கூறியவனைக் கேட்டு...

மூச்சை உள்ளிழுத்து வேறு புறம் திரும்பியவள், அவன் கைகளிலிருந்துத் தன் கையை விடுவிக்க முயற்சித்தபடி “நீ அவ்ளோ ஃபீல் ஆவற அளவுக்கெல்லாம் இங்க ஒன்னும் பெருசா நடந்துடல!, ஆர்வத்தைக் கொற” என்றாள்.

“இனிமே.. எதையும் நான் குறைச்சிக்கிறதா இல்ல” – அவள் முயற்சியைத் தடுத்து அவள் கையை அழுந்தப் பற்றியபடி அவன்.

நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “இந்த சினிமால வர்றா மாதிரி, தாலி கட்டிட்டேன், இனி நீ எனக்குத் தான் சொந்தம்ன்னு டயலாக் பேசிட்டுப் பக்கத்துல வந்து.. கஜ,கஜா,கஜ,கஜான்னு எதுவும் ட்ரை பண்ணிடாத! அன்னிக்கு நீ தண்ணியப் போட்டுட்டு பண்ணுன கலாட்டாவுக்கு நான் குடுத்ததெல்லாம் நியாபகம் இருக்குல்ல?” என்றவளிடம்...

“அன்னிக்கு நான் தண்ணி அடிக்கவே இல்லடி! கதிரு மூக்கு முட்டக் குடிச்சிட்டு என் மேல வாந்தி எடுத்ததால வந்த கப்பு அது” – என்றான் வெற்றி

“நம்புற மாதிரியா டா இருக்கு?”

“ஏய்.. நம்பாட்டிப் போடி”

“எது எப்டியோ நாம இன்னிக்கு இருக்குற மாதிரி தான் என்னிக்கும் இருக்கப் போறோம். இதுல எதுவும் மாற்றம் வந்துச்சுன்னா.. பொட்டி,படுக்கையைத் தூக்கிட்டு நான் பாட்டுக்க வீட்டை விட்டு வெளிய போய்டுவேன். புரிஞ்சதா?”

“ஓஹோ”

“என்ன ஓஹோ?? நாளப் பின்ன எவனாவது சும்மா ரோட்ல போயினு இருக்குற என்னைய ஃபோட்டோ புடிச்சு பலான வெப்-சைட் எதுலயாச்சும் போட்டான்னு வை! அதைப் பார்த்துட்டு வந்து, இப்ப என்னாடி தொழில் பண்ற நீ-ன்னுக் கேட்டு என்னைய குற்றவாளிக் கூண்டுல நீ நிக்க வைச்சுட்டேனா?, எதுக்கும் சேஃபா இருக்கனும்ல? உன்னை ஒரு தடவை நம்பி நான் ஏமாந்ததே வாழ்க்கை முழுசுக்கும் போதும்ன்றப்ப, இன்னொரு தடவையா?, நம்மால முடியாது சாமி” - ஏகத்துக்கும் நக்கல் குரலில் ஆதங்கத்துடன் கூறிக் கொண்டிருந்தவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.

“இந்த 5 வருஷத்துல நான் எவ்ளோ மாறியிருக்கேன்னு உனக்குத் தெரியாதாடி?, அன்னிக்கு இருந்த மாதிரி முட்டாளாவே இப்பவும் இருப்பேனா?, முன்கோபம், நிதானமின்மை-ன்றதெல்லாம் என்னிக்கு என் பொண்ணை கைல தூக்கி வளர்க்க ஆரம்பிச்சேனோ.. அப்பவே விட்டொழிச்சுட்டேன்! ஒவ்வொரு தடவையும் கோபம் வரும் போதெல்லாம்.. நீ ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பன்! பொறுமையா யோசின்னு எத்தனையோ தடவை எனக்கு நானே சொல்லிருக்கேன் தெரியுமா?, ஏன், இத்தனை வருஷமா என் கூட தான இருக்க?, ஒரு தடவையாவது உன்னைத் தப்பா பார்த்துருக்கேனா? தப்பாப் பேசியிருக்கேனா?”

“சரி நீ மாறிட்ட! அதனால... ம்??, அதனால.. இப்ப என்ன பண்ணனும்ன்ற?” – எரிச்சலுடன் கத்தியவளிடம்..

“ஒன்னும் பண்ண வேணாம். என் கூட.. எனக்குப் பொண்டாட்டியா வாழு. போதும்” – என்று சட்டமாகக் கூறியவனை மூச்சு வாங்கக் கோபத்துடன் நோக்கினாள் ஜமுனா.

“அப்போ.. லவ் பண்றேன்னு சொல்லிட்டு, என் மேல நம்பிக்கை இல்லாம நீ பேசுன வார்த்தைக்கு.. என்னை அசிங்கப்படுத்துனதுக்கு, அவமானப்படுத்துனத்துக்கு, காயப்படுத்துனதுக்கு எந்தத் தண்டனையுமே கிடையாதா?”

“அதான்.. முழுசா 5 வருஷம் அனுபவிச்சிட்டேனே! நீ என் பக்கத்துல இருந்தும் மனசை மறைச்சு... எதையும் வெளிப்படுத்தாம... வாயிருந்தும் ஊமை மாதிரி! இது தண்டனையில்லையா?”

“.............” – பதில் பேசாமல் தலை குனிந்தபடி பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவளிடம்.. “நீ என்ன வேணா பேசிக்கோ” என்றவன்...

நெஞ்சு முழுக்க விறுவிறுவென நிறைந்து வழிந்தக் காதலுடன்.. ஆசையும்,ஆர்வமுமாய் அவளை நோக்கி... சற்று முன்புத் தான் கட்டியத் தாலியைப் பற்றியிழுத்து.. அவளைத் தன்னருகே வரச் செய்து... அவள் கோபமாய் அவனிடம் ஏதோ சொல்ல வருவதைக் கண்டு கொள்ளாமல்.. தன்னோடு சேர்த்து.. இழுத்தணைத்து.. அவள் காதில் அழுந்த இதழ் பதித்து......

“ஐ லவ் யூ.....” என்றான்.

‘வானம்பாடி பறவைகள் ரெண்டு... ஊர்வலம் எங்கோ போகிறது....

காதல்,காதல் எனும் ஒரு கீதம்.. பாடிடும் ஓசை கேட்கிறது........

நீ ஒரு காதல் சங்கீதம்...............’

-இளையராஜா இந்த நிமிடம் அவர்களருகே இல்லாது போனால் தான் நாம் ஆச்சரியம் கொள்ள வேண்டும்!