அத்தியாயம் - 3
“விவசாய நிலத்துல சாயக் கழிவு சேர்ந்துச்சுன்னா விளைச்சல் எப்படிய்யா பெருகும்?, சோத்துக்கு வழியில்லாம போயிட்டா… கழிவை எடுத்து அள்ளித் திம்பீங்களோ?, ஊர்,உலகத்துல எல்லாரும் ஓடி,ஓடி உழைக்கிறது ஒரு வேளை சோத்துக்குத் தானய்யா?, அதுக்கு வழி செய்ற விவசாயிங்களைத் தெய்வமா பார்க்க வேணாம்?, விவசாயம் நீங்க பார்க்குற கம்ப்யூட்டர் தொழில் மாதிரி கிடையாது! வம்ச,வம்சமா கலப்பையப் பிடிச்சக் கை இது!, ஃபேக்டரி கட்டுறோம்,அது,இதுன்னு விளை நிலத்தைக் குப்பைக் தொட்டியாக்குறதுல என்னங்க நியாயம் இருக்கு?”-ராசய்யன்
“அய்யா.. நான் பெத்தப் புள்ளைங்களையும், நான் விவசாயம் பண்ற நிலத்தையும் ஒரே மாதிரி தானுங்க பார்க்குறேன்!, பெத்தப் பிள்ளை செத்துப் போறதும், நான் பேணிக் காக்குற நிலம் தரிசாப் போறதும் ஒன்னு தான்-ங்க!, உசுற விட்ருவேன் சாமி! உசுரை விட்ருவேன்”-வெள்ளைச்சாமி
-செங்குளத்தை ஒட்டிய கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் சாயப்பட்டறை ஒன்றுத் தன் கழிவுகள் அத்தனையையும் செங்குளத்தின் விளை நிலங்களில் கொட்டுவதாகப் பல நாட்களாக ஊர் மக்கள் புகார் கூறியும், அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெடுஞ்சாலையில் அமர்ந்து பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தினசரி பத்திரிக்கைகளும்,ஊடகங்களும் ஊர் மக்களைப் பேட்டி எடுத்துக் கொண்டிருக்க.. அப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நன்மாறனிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
“மாறா.. இந்த முறை நிச்சயம் சாயக்கழிவு விசயத்துக்குத் தீர்வு சொல்றதா மினிஸ்டர் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கார். அதனால கூட்டத்தைக் காலி பண்ணிட்டுக் கிளம்பு!, இப்பிடி ஹை-வேஸ்ல உட்கார்ந்துக்கிட்டு பஸ்ஸை மறிக்கிறதெல்லாம் தப்பு”
“ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த விசயத்துக்காகக் கலெக்டர் ஆஃபிஸ்ல பெட்டிஷன் கொடுக்க வந்தப்பவும், இதே வசனத்தைத் தான் சொன்னீங்க!, ஆறு மாசமா என்ன நடவடிக்கை எடுத்தீங்க?, சுத்தி,சுத்தி விவசாய நிலங்களுக்கு மத்தில இருக்கிற கிராமத்துல ஃபேக்டரி கட்டுறதுக்கு எதுக்கு சார் பர்மிஷன் கொடுக்குறீங்க?, கழிவைக் கொட்டுறதுக்கு ப்ராப்பர் ஆன ஏற்பாடு இல்லாமலா ஃபேக்டரி கட்டியிருக்காங்க?, அப்படின்னா.. விளைநிலம்ன்னு தெரிஞ்சே தான் இங்கக் கொட்டுறாங்க. இல்லையா?, எங்களுக்கு உடனடியா ஃபேக்டரியை இழுத்து மூடியாகனும் சார்!, இல்லைன்னா நாங்க போராட்டத்தைக் கை விட மாட்டோம்!”
“அப்படியெல்லாம் எடுத்தோம்-கவுத்தோம்ன்னு முடிவு எடுத்துட முடியாது மாறா!, ஃபேக்டரியை இம்மிடியேட்டா க்ளோஸ் பண்றதெல்லாம் நடக்காத காரியம்”
“ஏன்?”
“என்ன ஏன்?, பணம் போட்டு ஃபேக்டரியைக் கட்டுனவன்!, அங்க வேலை பார்க்குற வர்க்கர்ஸ்!, எல்லாரைப் பத்தியும் யோசிக்க வேணாமா?”
“ஓஹோ! இத்தனை ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டு ஏகப்பட்ட விவசாயிங்க வயித்துல அடிச்சிருக்கீங்க!, ஏன்?, எங்களைப் பத்தியெல்லாம் யாரும் யோசிக்க மாட்டீங்களா?”
“மாறா.. மரியாதையா கூட்டத்தைக் களைச்சுட்டுப் போயிடு!, இல்லாட்டிப் பெரிய பிரச்சனை ஆயிடும்!”
“அதையே தான் நானும் சொல்றேன்! உடனடியா நடவடிக்கை எடுக்காட்டி, நாங்க இங்கேயிருந்து நகர மாட்டோம்!, உங்களுக்கேத் தெரியும், செங்குளத்தோட சுத்துவட்டாரத்துல இருக்கிற 18 கிராமங்கள்ல மெஜாரிட்டி எங்க சாதிசனத்தைச் சேர்ந்தவிங்கன்னு!, இந்தக் கூட்டத்துல நீங்க ஒருத்தன் மேல கையை வைச்சாலும், 18பட்டிக் கிராமத்துல இருக்கிறவனும் ஒன்னு கூடுவான்! பெரிய கலவரமாய்ப் போயிரும்!, இதையெல்லாம் தவிர்க்கனும்னு நினைச்சீங்கன்னா.. உங்க மினிஸ்டர்ட்டப் பேசி நல்லத் தீர்வாக் கொண்டு வாங்க” – என்று அவன் முடிக்கையில் பத்திரிக்கையாளர் ஒருவர்.. ராசய்யனிடம்…
“இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மிராசுதாரர் ஒருத்தருக்கும், இந்தச் சாயப்பட்டறை ஓனருக்கும் ஏதோ டீலிங் இருக்கிறதாகவும், அவர் சம்மதத்தின் பேரில் தான் சாயக்கழிவு இங்கேக் கொட்டப்படுறதாகவும் ஒரு பேச்சு இருக்கே!, அது எந்த அளவுக்கு உண்மை அய்யா?” – எனக் கேட்க..
“இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றேனுங்க” – என்று பதில் கொடுத்த மாறன் போலீசாரை முறைத்து விட்டு பத்திரிக்கையாளரின் அருகே செல்லப் பார்க்க.. அவனை முந்திக் கொண்டு பதறி ஓடிய கான்ஸ்டபிள் ஒருவர் “யோவ், எங்க வந்து என்ன கேள்வி கேட்டுட்டிருக்க?, பேசாம போ மாட்ட?, போய்யா.. போ-ன்றேன்ல?” எனத் திட்டி அனுப்பினார்.
நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மாறனின் தோளைப் பற்றியிழுத்த பாண்டி அவன் காதுக்குள் “அண்ணே!, நீங்கச் சொல்லச் சொல்லக் கேக்காம, புள்ளையைத் தூக்கிட்டாங்கண்ணே!” என்றான்.
நெற்றி வியர்வை கன்னத்தில் வழிய.. அவனது அகண்ட கண்கள் மேலும் அகலும் வேகத்திலேயே புரிந்தது அவன் முழுக்கோபத்தில் இருக்கிறான் என்பது! ஒரு கையை இடுப்பில் வைத்தபடி, இடது கையால் வியர்வையைச் சுண்டி எறிந்தவன், ஒரு காலைத் தூக்கி வேஷ்டியைப் பிடித்து மடித்துக் கட்டிக் கொண்டு விறுவிறுவென நடந்தான்.
நடந்து கொண்டே “எலேய் மாயாண்டி… போலீஸ்காரய்ங்க என்ன மிரட்டுனாலும் ஒருத்தன் நகரக் கூடாது!, நான் திரும்பி வர்ற வரைக்கும் ஊர்க்காரய்ங்க மேல ஒரு பய கையை வைக்கக் கூடாது! பார்த்துக்க” என்றவன் கூட்டத்தைக் கடந்து ஊருக்குள் நுழைந்தான்.
‘ஊராட்சி ஒன்றிய அலுவலகம்’ என போர்ட் போடப்பட்டிருந்த சிறியக் கட்டிடத்தின் அருகேயிருந்த ஆலமரத்தின் அடியில் நால்வர் புடை சூழ அமர்ந்திருந்த ஒருவன், பீடியை வாயில் வைத்து ஊதியபடி கலவர முகத்துடன் காட்சியளித்தான்.
வந்த வேகத்தில் நேரே அவனிடம் சென்ற மாறன், அமர்ந்திருந்தவனின் முதுகில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான். அலையகுலைய படாரெனக் கீழே விழுந்தவனைத் தூக்க இருவர் முனைய, மற்ற இருவரோ “மாறண்ணே! இருங்க!, இருங்க மாறண்ணே!” என்றபடி அவன் தோளைப் பற்றியிழுத்தனர்.
“எத்தனை தடவை படிச்சுப் படிச்சுச் சொன்னேன் டா?, பொட்டச்சி மேல கை வைக்க நினைக்காதன்னு!, ஆம்பளையா எதிர்த்து நிக்கனும்டா!, பொண்டுகப்பய மாதிரி முதுகுல குத்த நினைக்கக்கூடாது!,” – கருவறை சிற்பம் போலக் கருகருவென்ற நிறத்தில், நீண்டு வளர்ந்திருந்தத் தன் உயரத்தை மேலும் அதிகமாக்க, முழுதாய் நிமிர்ந்து நின்றிருந்தவன், உஷ்ண மூச்சை வெளியிட்டபடி.. கருப்புக்கயிறு அலங்கரித்திருந்தத் தன் வலது கையை உயர்த்தி மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.
தன் தோளைப் பற்றியிருந்தவனின் கையை உதறியவன், கீழே விழுந்து கிடந்தவனின் சட்டையைப் பற்றித் தூக்கி நிறுத்தினான்.
“மாறண்ணே!, மன்னிச்சுடுங்க, ஏ…ஏதோ ஒரு வேகத்துல தூக்கிட்டேன்!, மன்னிச்சுருங்கண்ணே!” – எழுந்து நின்றவன் பீதி நிறைந்த குரலுடன் கதற… “இனி நீ என் மூஞ்சிலயே முழிக்காத!, என் கூட்டத்துல நான் உன்னைப் பார்க்கவே கூடாது!” என்று மிரட்டியவன் மற்ற நால்வர் புறமும் திரும்பி “எங்கன டா அந்தப் புள்ளைய அடைச்சு வைச்சிருக்கீங்க?” என்று கோபக்குரலில் கிட்டத்தட்டக் கத்தினான்.
“வடக்கம்பட்டி தோப்பு வீட்லண்ணே!” என்று ஒருவன் நடுங்கிய குரலில் கூற.. நொடியும் தாமதிக்காமல் விறுவிறுவென நடந்தான்.
செல்லும் வழியிலேயே அவனை எதிர்கொண்ட பாண்டி “மாறண்ணே, கார்மேகம் உங்களைப் பார்க்கனுமாம், கையோடக் கூட்டி வரச் சொன்னார்” எனக் கூற அவனுடன் சென்றான்.
ஊர் எல்லையிலிருந்த வனதேவதை கோவிலின் அருகேத் தனது டிவிஎஸ் ஃபிஃப்டியுடன் நின்றிருந்தக் கார்மேகம் பேண்ட்,சட்டை அணிந்திருந்தார். அடிக்கடி மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டவர் டென்ஷனில் இருப்பது, அவரது உடல்மொழியிலேயே தெரிந்தது.
பாண்டியுடன் சைக்கிளில் வந்திறங்கிய மாறனைக் கண்டதும் விரைந்து அருகே ஓடி வந்தவர், அவன் சைக்கிளிலிருந்து இறங்குவதற்கு முன்பாகவே அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றியிருந்தார்.
“எலேய்! பேடிப் பயலே! ஊருக்கு நல்லது செய்றதா நினைச்சுக்கிட்டுப் பொம்பளைப் புள்ள மேல கையை வைச்சிருக்க?, நீயெல்லாம் என்னடா ஆம்பள?”- கோபத்துடன் கத்தியபடிக் கையை ஓங்கியவரைக் கண்டு அவன் இறுகிப் போய் நிற்க.. “சித்தப்பு..” என ஓடி வந்து அவரைத் தடுத்தான் பாண்டி.
“அண்ணனுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல. எப்பிடியாவது ஒண்டிவீரனை வழிக்குக் கொண்டு வந்து சாயப்பட்டறைக்கும்,அந்தாளுக்கும் இருக்கிற டீலிங்கை உடைக்கனும்ங்கிறதுக்காக இந்த மருதுப் பய செஞ்சு வைச்ச வேலை இது!, சத்தியமா.. மாறண்ணனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல!, இப்ப தான் அண்ணனுக்கு விசயமே தெரியும்! அந்தப் புள்ளையக் கூட்டி வரத் தான் ஓடிட்டிருக்காரு” என்றான்.
கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் நின்றிருந்தவனின் புறம் நோக்கிய கார்மேகம் “ஒண்டிவீரனுக்கும், சாயப்பட்டறை ஓனருக்கும் ஏதோ விசயம் ஓடுதுன்னு உன்ட்டக் கண்டுப் பிடிச்சு சொன்னவனே நான் தான?, என் அக்கா புருஷன் கொட்டத்தை அடக்கி, உள்ள தள்ளுனா.. இந்த ஊர்க்காரய்ங்களோட சேர்த்து… என் மருமவ கௌரி வாழ்க்கைலயும் ஒரு நல்லது நடக்கும்ன்னு தான் உன்னைய நம்பி அந்தாளுக்குத் தெரியாம, ஆதாரத்தை சேகரிச்சுக் கொடுத்தேன்! நீ… நீ என் அடிமடிலயே கையை வைச்சு என் மருமவளைக் கடத்துவியோ?, பொட்டப்பயலே!” என்று பொறிந்தார்.
“சித்தப்பு நான் தான் சொல்றேன்ல, அண்ணனுக்கு விசயமே தெரியாதுன்னு” – என்று இடைப்பட்டப் பாண்டியைத் தடுத்த மாறன்..
“உன் மருமக,உன் மருமகன்ற?, ஏன் மாரியத்த மக மேல எனக்கு அக்கறை கிடையாதா?,” என்று இடைவெளி விட்டவன்..
“பொம்பளைப்புள்ளய கடத்தி வைச்சு அவ அப்பனை மிரட்டுற அளவுக்கு மாறன் ஒன்னும் கோழை கிடையாது! நான் பொறந்ததுல இருந்து என்னையப் பார்க்குற!, நான் அப்பிடி செய்வேனான்னு கூட யோசிக்கத் தோணல உனக்கு??,” – கார்மேகத்தின் முன்னே கை நீட்டி எரிச்சலுடன் மொழிந்து “ராவுக்குள்ள கௌரி வீட்ல இருக்கும்!”என்று விட்டு பாண்டியுடன் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டான்.
அன்று காலையிலிருந்தே மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம், அவன் கார்மேகத்துடன் நின்று உரையாடிக் கொண்டிருக்கும் போதே தூறல் விட ஆரம்பித்திருந்தது. சிறு,சிறு துளியாய்த் தொடங்கிய மழை அடுத்த பத்தே நிமிடத்தில் சூறைக்காற்றுடன் வலுப்பெற்று விட.. தனது புல்லட்டில் வடக்கன்பட்டியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்த மாறன், அந்த மழையையும்,காற்றையும் பொருட்படுத்தியாகவேத் தெரியவில்லை.
அவனது போதாத காலம், அடுத்த அரைமணி நேரத்தில் வடக்கன்பட்டி அணை உடைந்து ஊர் முழுதையும் வெள்ளம் சூழ்ந்தது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் வேகத்தைக் கடந்து வண்டியைச் செலுத்த முடியாமல் திண்டாடியவன், தான் செல்லவிருந்த இடத்திற்குச் சில மைல்களுக்கு முன்னேயே வண்டியை நிறுத்தி விட்டு ஓடினான்.
தோப்பு வீட்டுக்குள் நிச்சயம் நீர் புகுந்திருக்கும். அங்கே எம்மாதிரியான நிலைமையில் கௌரி இருக்கிறாளோ என்ற பதைபதைப்பு அவனது தைரியத்தைக் குலைக்க, விடாமல் பெய்யும் அடைமழையைக் கண்டு கொள்ளாது.. முழங்காலை எட்டி விட்ட நீருக்குள் ஓடிக் கொண்டிருந்தான் அவன்.
ஒரு வழியாக அவன் தோப்பு வீட்டை அடைந்தபோது முழுவதுமாய்த் தொப்பலாக நனைந்திருந்தான். பூட்டப்பட்டிருந்த அந்த ஒற்றை வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதற்கானத் தடம் தெரிய.. அவன் விட்ட ஒரே மிதியில் கதவு பிளந்து கொண்டது.
உள்ளே.. நாற்காலின் மீது.. பள்ளிச்சீருடையில் இரண்டு கைகளும் கட்டப்பட்டு வாயில் அடைத்தத் துணியுடன், கண்களிரெண்டும்அப்பட்டமான பீதியை வெளிப்படுத்த.. இடை வரை சூழ்ந்து விட்டத் தண்ணீரிலிருந்துத் தப்பிக்கத் தெரியாமல்.. கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் கௌரி.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து நின்றவன் அவளை முழுதாகக் கண்டதும்.. கதவில் லேசாகச் சாய்ந்து ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டு விட்டு அவளருகே விரைந்தான்.
திடீரென உள்ளே நுழைந்தவனைக் கண்டவளின் கண்கள் முதலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், அடுத்த நொடி கண்ணீர் சூழ.. கோபமாய் அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவள் முகத்தையும்,முறைப்பையும் கண்டும் காணாமல், நேரே சென்று அவள் கைக்கட்டைப் பிரித்தான். பின் அவள் வாயில் கட்டப்பட்டிருந்தத் துணியைப் பிரிக்க எண்ணிக் கை வைக்க.. அவனைத் தன் இரண்டு கைகளாலும் ஒரே தள்ளாகத் தள்ளி விலக்கி நிறுத்தியவள்.. வாயிலிருந்தக் கட்டைப் பிரித்து எறிந்து…
“என்னடா பண்ணப் போற என்னைய?, எதுக்குடா என்னையக் கடத்தி வைச்சிருக்கீங்க?” – நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் கை,கால் கட்டப்பட்டு நாற்காலியில் அமர்ந்ததில் ஏற்பட்ட உடல் நோவும், பயம்,பயம் என்ற ஒரே ஹார்மோன் மட்டுமே இத்தனை நேரமாக சுரந்து கொண்டிருந்ததில் உண்டான பதட்டமும் அவள் கண்களில் கண்ணீரை விளைவிக்க… அழுகையும்,கோபமுமாய் அவன் முகம் நோக்கி வினவினாள் அவள்.
மழையிலும்,வெள்ளத்திலும் நனைந்ததில், முகத்தில் வழிந்து கொண்டிருந்தத் தண்ணீரை ஒற்றைக் கையால் துடைத்தெறிந்தவன், தலையைக் கோதியபடியே “ஊர் முழுக்க வெள்ளம் ஓடுது,இங்க நின்னு வாதம் பண்ணாம, மரியாதையா என் கூடக் கிளம்பி வா!” என்றான்.
அவன் பேச்சில் ஆத்திரமுற்றவள் “இன்னொரு முறை உன்னை நம்பி வர்றதா?, இப்போ எங்க என்னை அடைச்சு வைக்கப் போற?, என்னைய என்ன பண்ண திட்டம் போட்டிருக்கீங்க?” என்று கத்த..
எரிச்சலாகிப் போனவன்.. முட்டிக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்த வெள்ள நீரைப் பொருட்படுத்தாமல், நான்கடித் தள்ளி நின்றிருந்தவளின் கரத்தைப் பற்றித் தன் புறம் இழுத்தான்.
“என்னடி என்னப் பண்ணப் போறீங்க, என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டதையே கேக்குற?, அப்புடி என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்குற?, சமைஞ்ச புள்ள பக்கத்துல இருந்தா.. ஒரு ஆம்பள என்னடி பண்ணுவான்?” – அசால்ட்டாகக் கூறியவனைக் கண்டுப் பதறிப் போனவள், அவனிடமிருந்துத் திமிறி விலகி பத்தடித் தள்ளி நின்றாள்.
“ம…ம..மரியாதையா இங்கயிருந்து வெளிய போயிரு, இல்ல… இல்ல…” – திக்கித் திணறியவளிடம் பொறுமையாக “இல்லன்னா.. என்னடி பண்ணுவ?” என்று கேட்டபடி மீண்டும் அருகே வந்தான் அவன்.
இரண்டு மணி நேரமாகத் தண்ணீரில் ஊறிப் போய் சில்லிட்டிருந்த கால்கள் லேசாக நடுங்கத் தொடங்க.. விதிர்த்துப்போன உதடுகளைக் கடித்தவளுக்கு நாக்கு வரண்டு போனது.
அவள் பார்வையின் அச்சத்தை உணர்ந்தவன், வழக்கம் போல அவள் தலையில் ரெண்டு போடு போட்டு, “நினைப்பு.. நினைப்பு எப்பிடிப் போகுது பாரு… பன்னிரெண்டாங் க்ளாஸ் வந்துட்டா.. நீயெல்லாம் பெரிய மனுஷியாய்டுவியாடி?, பயாலஜில நீ நூத்துக்கு நூறு வாங்கிட்டன்னு சரவணன் சார் சொல்லும் போதே எனக்கு சந்தேகம்!, இந்த மாதிரி விசயத்தையெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்காகவே பயாலஜிய நல்லாப் படிக்கிற? என்னடி?” எனக்கூறக் கடுப்பாகிப் போனவள்..
“சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத மாமா!, பிஸிக்ஸ்ல கூடத் தான் செண்டம் வாங்கிருக்கேன்! தெரிஞ்சுக்க” என்றாள்.
“ஓஹோ!, அப்ப ஒரு ஆம்பளையும்,பொம்பளையும் தனியா இருந்தா என்ன பண்ணுவாங்கன்னு உனக்குத் தெரியவே தெரியாது?, எங்க என் தலைல அடிச்சுச் சத்தியம் பண்ணித் ‘தெரியாது’-ன்னு சொல்லு பார்ப்போம்“
எரிச்சலுடன் முகத்தைச் சுழித்தவள் “ஏன் என் கிட்ட எப்பவும் இந்த மாதிரி பேச்சா பேசுற?, எனக்குப் பிடிக்கவேயில்ல” என்றாள்.
“பிடிக்கனும்டி பிடிக்கனும்! என்னிக்கிருந்தாலும்.. உன் கழுத்துல தாலி கட்டப் போறவன், இந்த மாறன் தான்! மறக்காத” – மீசையை முறுக்கிக் கர்வத்துடன் கூறிக் கொண்டான் அவன்.
அவன் பேச்சைக் காதில் வாங்காமல் “என்னை ஏன் கடத்தி வைச்சிருக்கீங்க?, அதுக்கு பதில் சொல்லுங்க! என் அப்பன் மேலக் கோவம்ன்னா, அந்த ஆளை எதிர்த்து நின்னு சட்டையப் பிடிக்கனும்டா! அதை விட்டுட்டுப் பொம்பளை மேல உங்க வீரத்தைக் காட்டுறீங்க?, நீங்கள்லாம் மனுஷங்களாடா?, காலைல என் ஸ்கூல் பக்கத்துல நின்றிருந்த நம்மூர்க்காரய்ங்க 2 பேரு, நீ என் கூடப் பேசனும்ன்னு சொன்னதா என்னைக் கூப்பிட்டப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்!, மாரியத்த மக,மாரியத்தை மக-ன்னு நீ அப்பப்போ அக்கறை காட்டுறியேன்ற நம்பிக்கைல நான்.. நான்.. அவிங்க உன் பேரைச் சொன்னதும், கூட வந்தேன்! ஆனா.. நாதாரிப்பயலுக.. என் மூக்குல என்னத்தையோ வைச்சு, இங்க கொண்டு வந்து அடைச்சுப் போட்டு வைச்சிட்டாய்ங்க..” – ஆங்காரமாய் அழுகையுடன் அவனை நோக்கிக் கத்தினாள்.
“அடி.. பொட்டச்சிறுக்கி!!, டா,டான்னு ஏழு டா போட்ற?, அடிச்சுக் கன்னத்தைப் பேத்துறுவேன்!, எவன் வந்து என் பேரைச் சொன்னாலும் கூடப் போயிருவியா?, உன் கூடப் பேசனும்ன்னா நான் ஏன் டி ஆள் அனுப்பப் போறேன்?, முதல்ல.. உன் கூடப் பேசுறதுக்கு எனக்கு என்ன இருக்கப் போகுது?, அறிவு கெட்டத்தனமா நீ பண்ண காரியத்துக்கு என்னைக் குறை சொல்ற?”
“பொய் சொல்லாத!, எங்கப்பா ஏதோ சாயப்பட்டறைக் கழிவை நம்மூர் நிலத்துல கொட்டுறதாவும், அதைத் தடுக்க என்னை வைச்சு நீங்க எங்கப்பனை மிரட்டப் போறதாவும், உன் கூட்டாளிங்க இங்க வைச்சுப் பேசுனதை நான் கேட்டேன்!, எங்கப்பன் எனக்காக விரலைக் கூட அசைக்க மாட்டான்னு தெரிஞ்சும் கூறு கெட்டத்தனமா என்னையக் கடத்தி வைச்சிருக்க?!, கார்மேகம் மாமாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது, உன்னை வெட்டிக் கூறு போட்டுடுவார்..”
“ஏற்கனவே கூறு போட்டுட்டார்” – இறுகிய முகத்துடன் எரிச்சலாய் மொழிந்தவன் “இதோ பார்றி!, ஊரு முழுக்க வெள்ளம் வந்து தண்ணீல மிதந்துட்டிருக்கு!, அநாவசியமா இங்க நின்னு வெட்டி அரட்டை அடிக்காம, என் கூட வந்து சேரு!” என்றான்.
“நான் வர மாட்டேன்! அதுவும்.. உன்… உன் கூட நிச்சயம் வர மாட்டேன்! நீ போய் மேகம் மாமாவைக் கூப்பிட்டு வா.. அப்போ தான் நான் உன்னை நம்புவேன்”
முடிவுடன் கூறியவளை முறைத்தவன்… முட்டியைத் தாண்டி நீர்மட்டம் நிமிடத்திற்கொரு முறை உயர்வதைக் கவனித்து.. உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டியக் கட்டாயத்தை உணர்ந்து.. சட்டெனக் குனிந்து அவளை அலேக்காகத் தூக்கித் தோள் மீது போட்டுக் கொண்டான்.
கை,காலை உதறி அவனிடமிருந்து இறங்க முயற்சித்தவளை அனாயசமாய் அடக்கியவன் “இப்போ நீ பேசாம வர்ல, வெள்ளத்துல தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டே இருப்பேன்” என்றான்.
போராட்டத்தைக் கைவிட்டுச் சுற்றுப்புறம் நோக்கிய கௌரிக்கும் நிலைமையின் தீவிரம் புரிய.. “என்னை இறக்கி விடு மாமா.. நான் நடந்தே வர்றேன்” என்றாள்.
“ம்ஹூம், வெள்ளத் தண்ணி இது, பூச்சு,பாம்புன்னு எதுனாலும் வரலாம்!, நீ அமைதியா வா” என்றான்.
“ஏன், அதே பாம்பு உன்னைக் கடிக்காதா?”
“அடேங்கப்பா!, கட்டிக்கப் போற மாமன் மேல அக்கறைப்பட்றியாடி செவத்தச்சி?”
“தயவு செஞ்சு இன்னொரு தடவைக் கட்டிக்கப் போறவன் அது,இதுன்னு பேசாத மாமா!, உன்னை மாதிரி ஒரு காட்டுப்பய எனக்கு வேணவே வேணாம்”
தோளிலிருந்தவளைத் திருப்பி இரு கைகளில் ஏந்திக் கொண்டவன்.. அவள் முகத்தைப் பார்த்தபடியே “ஏன் டி செவத்தச்சி?, உனக்கு மாமனைப் புடிக்கலையா?” என்றான்.
இடையில் பதிந்த அவன் கரங்களால் எழுந்த இயல்பானக் கூச்சத்தை மறைக்க முயன்றபடி “நல்லா கரு,கருன்ன்னு கருப்பசாமி கலர்ல, சுருட்ட முடியும்,தாடி, மீசையுமா இருக்குற உன்னைய எவளுக்கு மாமா பிடிக்கும்?, அஜீத் தெரியுமா? அஜீத்?, அவரை மாதிரி இருக்கனும்”
“ஹாஹாஹா… அடியேய்… அதுக்கு நீ ஷாலினி மாதிரி இருக்கனும்டி! ஏன் டி ஆசைப்படுறதுக்கும் அளவில்லையாடி?, அஜீத் சுண்டு விரல் அழகுக்குக் கூட நீ பக்கத்துல வர முடியாது!, நல்லா முண்டக்கண்ணும்,உங்கொப்பனை மாறி முசுட்டு மூஞ்சியும் வைச்சிருக்கிற உனக்கு அஜீத் கேக்குதாக்கும்?, கிறுப்பய மவளே!”
-ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டவன் போலச் சிரித்து அவளைக் கேலி வேறு பேசவும் கடுப்பாகிப் போனவள் “அப்புறம் என்ன இதுக்கு என்னையக் கட்டிக்கிறேன், கட்டிக்கிறேன்னு போற,வர்றவனுக்கெல்லாம் சொல்ற?, இன்னொரு தடவ அப்பிடிச் சொல்லு! மூக்கை உடைக்கிறேன்” – எனக் கூறத் தொடங்கியவள் முடிப்பதற்குள் அவளை டொம்மென வெள்ள நீரில் எறிந்திருந்தான் அவன்.
தண்ணீரில் விழுந்ததில் முழுவதும் நனைந்து அலையக்குலையப் பதறி எழுந்து நின்றவள்.. முகத்தைத் துடைத்துக் கொண்டு ஆத்திரத்துடன் அவனை ஒரு பார்வை பார்க்க.. அவனோ பொறுமையாக முதுகைத் தடவிக் கொடுத்து “செவத்தச்சி, பாம்பு கடிச்சாலும் பரவாயில்ல, நடந்தே வர்றியா?, உனக்கென்ன உங்கப்பன் ஊரெல்லாம் கொள்ளையடிச்சு சம்பாரிக்குற காசுல நோகாமத் தின்னுப் பெருத்துப் போய்க் கிடக்குற!, என்னால உன்னைத் தூக்கிட்டே நடக்குறது கஷ்டம்டியாத்தா!, என் வண்டி இன்னும் ரெண்டு மைலுக்கு அங்கிட்டு நிக்குது, அதுவரை நாம நடந்து தான் போகனும்!” எனக்கூறினான் அவன்.
“அதைச் சொல்லிருந்தா.. நானே இறங்கிருப்பேன்ல?, எதுக்குக் கீழ போட்ட?” என்று குதித்தவளைக் கண்டு கொள்ளாமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் முன்னே நடக்கத் தானும் அவனைப் பின் தொடர்ந்தாள் கௌரி.
அவர்கள் செல்லும் வழியிலேயே எதிர் கொண்ட பாண்டி அவசரத்துடன் “அண்ணே!, இந்தப் புள்ளையத் தூக்க அந்த மருது பயலைத் தூண்டி விட்ட கருப்பன், கூட்டத்தோட உங்களையும்,இந்தப்புள்ளையையும் தேடிட்டிருக்கிறதாத் தகவல் வந்துருக்குண்ணே!, நீங்க இந்த வழியாப் போனா.. எப்படியும் அவிங்கக் கைல சிக்கிருவீங்க!, இந்தப் புள்ள இன்னும் வீடுப் போய்ச் சேரலன்றதைத் தெரிஞ்சு வைச்சிருக்காய்ங்கண்ணே! போராட்டம் நடக்குற விசயத்தைக் கேள்விப்பட்ட ஒண்டிவீரனும் ஊர்லயே இல்லன்னு பேசிக்கிறாங்க!, அதனால அந்தப்பயலுக, எப்பிடியாவது இந்தப் புள்ளையப் பிடிச்சிரனும்னு திரியிறாய்ங்கண்ணே!, ஊர்ப்பெரியவர் மயிலக்காளை எவ்வளவோ சொல்லியும் கூட அவிங்க கேக்கலண்ணே!”-என்றான்.
“நான் அவ்ளோ சொல்லியும், அவிங்க அடங்கலேல்ல?”என்றபடி மீசையை முறுக்கியவன் “வரட்டும்டா, எனக்கென்னப் பயமா?, நான் பார்த்துக்கிறேன் அவிங்கள!” எனக்கூற “அண்ணே!, இந்தப் புள்ளையப் பக்கத்துல வைச்சுக்கிட்டு எந்தச் சம்பவமும் வேண்டாம்!, மழையும்,வெள்ளமுமா ஊரே பதறிப் போய் நிற்குற இந்தச் சூழ்நிலைய அவிங்க பயன்படுத்திக் காரியத்தை சாதிக்கப் பார்க்குறாய்ங்க!, உண்மைல அவிங்க சாயக்கழிவு போராட்டத்துல நம்ம கூட கலந்துக்கிட்டதே நாம எப்பிடியும் ஒண்டிவீரனை உள்ள தள்ளுவோம்ன்ற நம்பிக்கைல தான்! அவிங்களுக்கும்,அந்தாளுக்கும் முன்னாடி இருந்தே ஏதோ தகராறு போல” என்றான் பாண்டி.
தாடியைச் சொறிந்தபடி அமைதியாக யோசித்த மாறன் “சரி, நான் தேனூர் வழியா சுத்துப்பாதைல இந்தப் புள்ளையக் கூட்டிட்டுப் போய் முதல்ல, பத்திரமா வீட்ல சேர்க்குறேன்!, அப்புறம் பார்ப்போம்! அந்தக் கருப்பனா.. நானான்னு” எனக் கூற நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டான் பாண்டி.
“இப்ப இருக்கிற நிலைமைக்கு நாம வண்டியை எடுக்க முடியாது போல!, இங்கயிருந்து ஒரு மணி நேரம் நடந்தா தேனூரை எட்டிரலாம்!, பாண்டி.. நீ சந்திரன் கிட்ட சொல்லி, தேனூர்ல எனக்கொரு வண்டி ஏற்பாடு பண்ணிரு! அங்க இருந்து செங்குளத்துக்கு வந்துட்றேன்!” என்றுத் தன் திட்டத்தைச் சொல்லி விட்டுத் திரும்பி கௌரியைப் பார்த்தான்.
ஏற்கனவே நாற்காலியில் அமர்ந்திருந்த போது, வெள்ள நீர் சூழ்ந்ததில் ஒரு மணி நேரமாக நனைந்து ஊறிப் போயிருந்த கால்கள், இப்போது நடந்த வந்த நேரத்தில் மேலும் சில்லிட்டிருந்தது.
ஈரக்கால்களுடன் மேலும் வெள்ளத்தில் ஒரு மணி நேரம் நடப்பதா??? என்ற எண்ணமே கிலியூட்ட.. நிச்சயம் என்னால் முடியாது என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு மாறனை நோக்கினாள்.
“நீ கிளம்பு டா பாண்டி” என்று அவனை அனுப்பியவன் அவளிடம் “என்னடி யோசிக்கிற” என்றான்.
“என்னால நடக்க முடியாது மாமா”
“அப்ப இங்கனயே உட்காரு! அந்தக் கருப்பன் பய வந்து உன்னத் தூக்கிட்டுப் போக வசதியா இருக்கும்!அப்பாத சொன்னியே! ஆம்பள,பொம்பள சமாச்சாரம்!, பள்ளிக்கூடம் போகாமலேயே அவன் உன்ன வைச்சு பயாலஜி படிச்சிருவான்! பரவாயில்லயா?”
பயந்து போய் அவனருகே வந்தவள் “சு…சு..சும்மா பயமுறுத்தாத மாமா!” என்றுத் திக்கியபடிக் கூறினாள்.
“அப்ப கம்முன்னு நட!”
“அந்த வெட்டிப்பயலுக கட்டிப் போட்டதுல கையும்,காலும் எப்பிடி வலிக்குது தெரியுமா?, காலைல சாப்டது! பசி வேற!, என்னால இன்னும் 1 மணி நேரம் இந்த வெள்ளத்துல..” என்றவளுக்கு அழுகை எட்டிப் பார்த்தது.
“நானும் தான் டி திங்காம காலைல இருந்து உன்னைத் தேடி அலைஞ்சு திரியிறேன்!, வெள்ளம்ன்னு கூடப் பார்க்காம ஓடி வந்தேன் பாரு!, சும்மா பொலம்பிக்கிட்டு!, வீடு போய்ச் சேர்ற வரைக்கும் வாயைத் தொறக்கக்கூடாது சொல்லிட்டேன்! பசிச்சா பொறுத்துக்க! வலிச்சாத் தாங்கிக்க!!” என்றவன் பெரிய பெரிய எட்டுக்களாக வைத்துத் சலசலவெனத் தெறித்தத் தண்ணீரைக் கடந்து நடக்கத் தொடங்கினான்.
அழுகை முட்டிக் கொண்டு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள் கௌரி.
முழுதாகப் பதினைந்து நிமிடம் அமைதியுடன் கரைய.. திரும்பி பின்னே நடந்து வந்தவளை நோக்கினான் மாறன்.
பச்சையும்,வெள்ளையும் கலந்தப் பள்ளிச்சீருடையில், ரிப்பன் வைத்த ரெட்டை ஜடையுடன், முகம் ஏகத்துக்கும் வாடியிருக்க.. கால்களை சிரமப்பட்டுத் தூக்கி வைத்து நடந்தவளைக் கண்டு இரக்கம் வந்ததோ என்னவோ… அவள் முன்னே தண்ணீரில் மண்டியிட்டுத் திரும்பி அமர்ந்தான் அவன்.
திடீரென அவன் அமர்ந்ததும் விழி விரித்து “என்ன?” என்று விசாரித்தவளிடம் தன் தோளைத் தட்டி “என் கழுத்துல ரெண்டு பக்கமும் காலைப் போட்டு என் தோள்ல உட்காரு” என்றான்.
“நான் என்ன குழந்தையா?, நீ தல மேல தூக்கிட்டுத் திரியுறதுக்கு?” – கடுப்புடன் பதில் வந்தது அவளிடமிருந்து.
“பின்ன நீ என்ன குமரியா?, பள்ளிக்கூடம் தானடி படிக்கிற?, நான் மனசு மாறுறதுக்குள்ள ஏறு சொல்லிட்டேன்!, கொஞ்ச தூரம் தூக்கிட்டுப் போறேன்!, அப்புறம் இறங்கிக்க” என்றவனிடம் சரியெனத் தலையாட்டித் தயங்கி அவன் கூறியபடி ஏறி அமர்ந்தாள்.
அவளைத் தோள் மீது சுமந்து கொண்டு வேகமாக நடையைத் தொடர்ந்தான் அவன்.
மழை இப்போது நின்று விட்டிருந்தது. ஊர் முழுதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்க.. செம்மணலில் மெல்ல நீந்திக் கொண்டிருந்தப் பச்சை மரங்களையும், இருட்டத் தொடங்கியிருந்த மங்கிய வானத்தையும் கண்டவளுக்கு, அந்தச் சூழ்நிலையிலும் ரசிக்கத் தோன்றியது. குனிந்து அவனை நோக்கியவள்..
“ஏன் மாமா, நான் கனமா இருக்கேனா?”
“இல்லன்னு சொல்லுவேன்னாடி நினைக்கிற?, உன்னைத் தூக்குறதுக்கு ஒரு எருமமாட்டைத் தூக்கிரலாம் போலயேடி!, ஆமா, நீ மாரியத்தை இருந்தப்போக் கூட ஒல்லியாத் தான இருந்த?, இப்ப எப்பிடிடி பெருத்துப் போன?, அம்புட்டுக் கேவலமாவா சமைப்பா எங்கத்தை?”
அவன் தன் அன்னையை இழுத்ததில் கோபம் கொண்டவள், அவன் தலையில் நங்கெனக் குட்டி “எங்கம்மா வைக்குற வெள்ளாட்டங்கறிக் குழம்புக்கு நீ நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு வாசல்ல நின்ன கதையெல்லாம் எனக்கு நியாபகம் இல்லன்னா நினைக்குற?, அரைப்படி சோத்தையும் ஒருமைல திங்குற தின்னிப்பய நீயி! நீ… என்னைய சொல்றியாக்கும்?” எனக்கூறினாள்.
“ஆமா டி!, பின்ன செனப்பன்னி மாதிரி இருக்குற உன்னைய சுமந்துட்டு அரைமணி நேரமா நடக்கனும்ன்னா, நான் தின்னிப்பயலா இருந்து தான் டி ஆகனும்!”
எரிச்சல் மிகுதியில் அவனுக்குப் பதில் சொல்லாமல்.. கண்ணெதிரே தெரிந்த அவனது சுருட்டை முடியைப் பிடித்து ஆட்டி வைத்தாள்.
“ஆ…..ஆஆஆ” என்றவன் கையை வைச்சுக்கிட்டுச் சும்மா இர்றி!, மறுபடி தண்ணீல தள்ளிருவேன்!” என்றான்.
இப்போது முழுதாக இருட்டியிருக்க.. மழை மறுபடியும் வெளுக்கத் தொடங்கியிருந்தது. விளக்கு வெளிச்சம் ஏதுமில்லாமல், வெள்ள நீரில் நடப்பது இருவருக்கும் சிரமமாகத் தெரிய.. வழியிலிருந்தக் கோவில் ஒன்றில் ஒதுங்கினர்.
உயரக் கட்டப்பட்டிருந்தக் கோவிலில் ஏறி நின்று… வெள்ள நீரிலிருந்து ஒதுங்கித் தங்களது ஈரக்கால்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தார்கள்.
கை,காலை உதறி, அணிந்திருந்த உடையைப் பிழிந்தவள், அதிலேயே முகத்தையும் துடைத்துக் கொண்டாள். பசி ஏகத்துக்கும் வயிறைக் குடைய, சமாளித்துக் கொண்டு நின்றவளை, மழைக்காற்று நடுங்கச் செய்து கொண்டிருந்தது.
‘சோ’-வென விடாது பெய்து கொண்டிருந்த மழையைக் கண்டபடி ஆளுக்கொரு தூணில் சாய்ந்து நின்றிருந்தனர் இருவரும்.
இருட்டு ஓரளவுக்குப் பழகிப் போயிருக்க.. திரும்பி அவனை நோக்கினாள் கௌரி. கைகளிரெண்டையும் உரசி ஊதிக் குளிருடன் போராடிக் கொண்டிருந்தான் அவன். இரவும்,மழையும்,காற்றும்.. ஏனோ மனதை லேசாக்க… அந்தச் சூழ்நிலையை மிகவும் ரசித்தாள் கௌரி.
பெரும்பாலான இரவுகளில் எவளுடனாவது களியாட்டம் போடும் அப்பனைக் கண்டு வெம்பி, விடாது புலம்பும் அவளது அன்னை வழிப் பாட்டி பேச்சியம்மாளின் கர்ணகொடூரக் குரல் கேட்காதிருந்ததாலோ என்னவோ…. அந்தப் புலம்பல்கள் தன் காதுகளை எட்டி விடக்கூடாதென்பதற்காகவே அறைக்கதவு,ஜன்னல் என அனைத்தையும் அடைத்து வைத்து,வெளிக் காற்றின் சுகத்தை அனுபவிக்காமல் மூச்சு முட்டிப் போய் துயில் கொள்ளத் திண்டாடும் நிலைமை இன்று இல்லாததாலோ… மனம் மிக,மிக லேசாகி… அந்த ஊதல் காற்றையும்,மழையையும் கண் மூடி மொத்தமாய் அனுபவித்தாள்.
அந்த ஏகாந்த மனநிலையின் விளைவாக.. உள்ளம் குதூகலித்துப் பாட்டுக் கூட வந்தது அவளுக்கு. மெல்ல முணுமுணுத்தபடி அவள் பாடத் துவங்கினாள்.
“மாலையிடக் காத்து அள்ளியிருக்கு…
தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு..
இது சாயங்காலமா.. மடி சாயும் காலமா..
முல்லைப் பூ சூடு… மெல்லப் பாய் போடு..
அட வாடைக் காத்தும் சூடு ஏத்துது…”
அவள் பாட ஆரம்பித்தும் கூட, அவள் புறம் திரும்பாமல் எதிரே பார்த்தபடி நின்றிருந்த மாறனின் முறுக்கு மீசை சற்றே சிரம் தாழ்த்த.. அவனது இதழ்கள் லேசாக வளைந்து அழகான புன்னகையை அவன் முகத்தில் தோற்றுவித்தது. அவள் பாடி முடிக்கும் வரை, மழையையே பார்த்தபடி புன்னகை மாறாமல் நின்றிருந்தவன், முடித்ததும் திரும்பி அவளை நோக்கினான்.
“இந்த மாதிரி பாட்டெல்லாம் வரும் போது, நாங்க தியேட்டரை விட்டு எந்திரிச்சு வெளிய போயிருவோம்”
கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்த கௌரி ‘ரசனைகெட்ட ஜென்மம்’ என்று முணுமுணுத்தாள்.
“என்னடி முறைக்கிறியா?, இருட்டுல கூடப் பளிச்சுன்னு தெரியிறயேடி! செவத்தச்சி!”
உதட்டைச் சுழித்து மறுபுறம் திரும்பிக் கொண்டாள் அவள்.
“அப்டில்லாம் உதட்டைச் சுழிக்காதடி, இருட்டா வேற இருக்கு,குளிரும் மழையுமா இருக்கிற நேரத்துல!, ஏடாகூடமான பாட்டெல்லாம் வேற பாடித் தொலைச்சிருக்க!, மாமன் உன்னைய வைச்சு பயாலஜி படிச்சிறப் போறேன்!,” – அவள் புறம் திரும்பியும் பாராமல் அவன் புலம்பியதைக் கேட்டவளுக்கு விதிர் விதிர்த்துப் போனது.
‘என்னப் பேச்சு பேசுறான் பாரு களவாணிப்பய’ என்று புலம்பி விட்டு அவன் பார்வை படாமல், பின்னே சென்று ஒரு தூணுக்கருகில் நின்று கொண்டாள்.
அடித்த காற்றுக்கு அவர்களது ஈரத்துணி காய்ந்து, அவர்களது கால்த்தடமும் காய்ந்து போயிருந்தது. மழை மட்டும் விடாது கொட்டிக் கொண்டிருக்க, திடீரென தூரத்தில் மினுக்,மினுக்கெனத் தெரிந்த வெளிச்சத்தைக் கண்டு உற்று நோக்கிய மாறனுக்கு, யாரோ வருவது தெரிய.. சட்டெனத் திரும்பி அவளருகே வந்தவன், அவள் கையைப் பற்றியிழுத்துக் கொண்டு கோவில் கருவறைக்குள் நுழைந்தான்.
என்னவோ,ஏதோவென்று அவன் பின்னே ஓடியவளைச் சுவரோடு சுவராக நிறுத்தி ஒளிந்து கொண்டு, கோவில் வாசலை நோக்கினான் மாறன்.
சற்று நேரத்தில் 4,5 பேர் டார்ச் லைட்டுடன் கோவிலில் ஒதுங்கினர். பக்,பக்கென அடித்துக் கொண்ட இதயத்துடன் மாறனின் பின்னே நின்றிருந்த கௌரிக்குப் பயத்தில் வாய் உலர்ந்து போனது. அவனை இறுகக்கட்டிக் கொண்டு முதுகில் ஒன்றிப் போய் நின்று விட்டவளுக்கு நிமிர்ந்து அவர்களைப் பார்க்கக் கூடத் திராணியில்லை.
“அவிங்க இந்த வழியாத் தான் வர்றாய்ங்கன்னு எவன் டா உனக்குத் தகவல் கொடுத்தது?” –கூட்டத்தில் ஒருவன்
“எலியார்பத்தி, எருமக்காரன்பட்டின்னு எந்த வழிலயும் மாறனைக் காணலன்றப்ப, கண்டிப்பா தேனூர் வழியாப் போகலாம்ன்னு தான்ணே முடிவெடுத்துருப்பான், அதான் இந்தப்பக்கமா போலாம்னேன்!” – என்றபடியே மற்றொருவன் ஒருவேளை இங்கே ஒளிந்திருந்தால்.. கால்தடம் ஏதும் பதிந்திருக்கிறதாவெனத் தேடினான்.
“எப்பிடியும் நம்ம அவிங்களைத் தேடுற சேதி எட்டுனதுல, அவன் எங்கயும் ஒதுங்காம அந்தப்புள்ளையக் கூப்பிட்டுக்கிட்டு ஊர் போய்ச் சேரப் பார்த்திருப்பான்ண்ணே!, நாம விரசாப் போய் அவிங்க ஊரை எட்டுறதுக்குள்ளப் புடிப்போம்” என்றொருவன் கூறியதும் ஐவரும் மழையில் இறங்கி நடக்கத் தொடங்கினர்.
சாற்றப்பட்டிருந்தக் கருவறையின் உள்ளே ஒளிந்திருந்த இருவரும் மூச்சுக் கூட விடாமல் பல்லியாகச் சுவரில் ஒட்டிப் போயிருக்க… வெளியே நடப்பதை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த மாறன்.. அவர்கள் சென்று விட்டதை உறுதி படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சை வெளியேற்றினான்.
அப்போது தான், தன் முதுகில் சாய்ந்து, வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டு ‘முருகா சரணம்’ என முனகிக் கொண்டிருந்த கௌரியைக் கண்டவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
“என்னடி செவத்தச்சி, மாமன் மேல அம்புட்டு ஆசையா?, இறுக்கமாக் கட்டிப்பிடிச்சிருக்க?”
வெடுக்கென கையைப் பிரித்துக் கொண்டவளின் முயற்சியைத் தடுத்துத் தன்னோடு இழுத்துக் கொண்டவன் முன்புறம் திரும்பி “அவிங்க இன்னும் போயிருக்க மாட்டாய்ங்க, இப்பிடியே நில்லு!” என்றான்.
வெளியே எட்டி எட்டிப் பார்த்தபடி, அவனை அண்ணாந்து நோக்கியவள் “டார்ச் வெளிச்சம் இல்ல மாமா, போயிட்டாய்ங்க போல” எனக் கூற.. “சொல்ல முடியாது, நாம இங்க ஒளிஞ்சிருக்கோமா,இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்காகவே, விளக்கை அணைச்சிட்டு நமக்காகக் காத்திட்டிருக்கலாம்” என்று வேண்டுமென்றே அவளை பயமுறுத்தினான் அவன்.
மருண்ட விழிகளால் மேலும் வெளியே தெரிந்த இருட்டைத் துழாவியவள், மீண்டும் அவன் புறம் திரும்பி “நிஜமாவ சொல்ற?” என்று வினவினாள்.
தன்னை இறுகக் கட்டிக் கொண்டு நின்றவளின் முகம் நோக்கிக் குனிந்தவன் “செவத்தச்சி…” என்றழைத்தான்.
“ம்?” – பயம் விலகாத கண்களுடன் அவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.
“பேசாம நீ என்னையேக் கட்டிக்கிறியா?”
இந்த நேரத்தில் இந்தக் கேள்வி அவசியமா என்பது போல் அவனை நோக்கியவளிடம்..
“மாமனுக்கு வெள்ளையா,கொழு கொழுன்னு ரெண்டு பொம்பளப்பிள்ளைங்க பெத்துக்கனும்னு ஆசைடி!, நம்மூர்ல எந்தச் சிறுக்கி வெள்ளையா இருக்குறா உன்னத் தவிர?, அதான் கேக்குறேன்! கட்டிக்கிறியா?”
“உன் மொகரைக்கு வெள்ளையா இருக்குற பொண்ணு வேணுமாக்கும்?”
“ஏன் எனக்கென்னக் குறை?, நான் மீசைய முறுக்குற அழகுக்கே, நீயெல்லாம் என்னைய வரிசைல நின்னு பார்க்கனும்டி”
“அடேங்கப்பா!, எனக்கு மீசை வைச்ச ஆம்பளைங்களையேப் பிடிக்காது! அதனால, நீ சொன்ன, வரிசைல நிற்குற வேற எவளையாவது பார்த்துக் கட்டிக்க!, உனக்கு வெள்ளையா பிள்ள வேணும்ன்னா அதுக்கு நான் தான் ஆளா?”
“அப்ப நீ என்னையக் கட்டிக்க மாட்ட?”
“மாட்டேன்”
“அப்புறம் என்னத்துக்குடி கட்டிப்புடிச்சுட்டு நிற்குற?, வாடைக்காத்து மட்டுமில்லடி, இந்த மாமனும் சூடேறிப் போய்த் தான் இருக்கேன்!, தள்ளிப் போ!” – தன்னிடமிருந்து அவளை விலக்கித் தள்ளியவனிடம் “அ..அவிங்க இன்னும் போயிருக்க மாட்டாய்ங்கன்னு சொன்ன?” என்றாள் அவள்.
“ஆமா, தூண் ஓரமா உட்கார்ந்துருப்பாய்ங்க, இந்த மழைல ஒதுங்கி உட்காராம, எவன் நடந்து போவான்?”
“அ…அ..அப்போ நான் போ மாட்டேன்” என்றவள் மீண்டும் அவனை ஒட்டி நிற்க.. மறுபடித் தள்ளியவன் “பக்கத்துல வராதடி, அதான் என்னையக் கட்டிக்க மாட்டேன்ட்டேல?, நான் வெளிய போறேன் டி!, அவிங்க 5 பேர். நான் ஒருத்தன்! எப்பிடியும் சுலபமா என்னைய அடிச்சுப் போட்டு உன்னையத் தூக்கிருவாய்ங்க! ஆனா.. நான் எதுக்கு அதப்பத்தியெல்லாம் கவலை பட்டுக்கிட்டு! நீ எப்பிடிப் போனா எனக்கென்ன.. நான் போறேன்” என்று பிகு செய்தபடி வெளியே செல்ல எத்தனிக்க..
“வேணாம்,வேணாம்.. மாமா.. மாமா… ப்ளீஸ் மாமா.. போகாத மாமா.. எனக்குப் பயமாயிருக்கு மாமா.. ப்ளீஸ் மாமா..” என்றவள் மீண்டும் அவனைக் கட்டிக் கொள்ள..
தன் மார்பில் சாய்ந்து முகத்தை மறைத்துக் கொண்டு விடாமல் கெஞ்சியவளைக் கண்டு வாய் விட்டுச் சிரித்து அவள் முகத்தைத் தன் இரு கைகளால் பற்றி நிமிர்த்தியவன் “செவத்தச்சி, உன்னை எனக்கு ரொம்பபபபப் பிடிச்சிருக்குடி” என்றான்.
